பரிமேலழகர் உரைத்திறன் – 18

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
மனங்கோணா மறுப்பு
முன்னுரை
உள்ளங்களின் எண்ணிக்கையும் கருத்து வேறுபாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. அவை ஒன்றே போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தல் ஆகாது. இலக்கிய உரை பற்றிய சிந்தனைகளில் உள்ளங்களின் எண்ணிக்கை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டதால் இலக்கிய உரைவளர்ச்சி தடைபட்டதுதான் கண்ட பயன். அறிவும் புலமையும் சார்ந்த அறிஞர்கள் தம் சிந்தனைக்கேற்ப உரைமாற்றம் காண்பது ஏற்கத்தக்கதே. பரிமேலழகரைப் பொருத்தவரையில் அரசியல் கொள்கை, குறுகிய மனப்பான்மை, குறைந்த புலமை, உரைப்பொருள் தவிர வேறுபிற காரணிகள் இவற்றின் அடிப்படையில் மறுப்புக்கு ஆளானவர். பரிமேலழகரின் உரையை மறுப்போர்கள் அவர்தம் உரைமறுப்புக் கோட்பாடுகளையும் உரைமறுப்புத்திறனையும் வகைகளையும் உணர்ந்திருந்தால் இத்தகைய நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். முன்னோர் கண்ட உரைகளை அவர் மறுக்கும் முறைகளே ஒரு ஆய்வுப்பட்டத்திற்கு உரிய பொருளாம். ‘அடிப்பது தெரியாமல் அடிக்க வேண்டும்’ என்றாற்போல மறுப்பது தெரியாமல் மறுக்க வேண்டும் என்ற கொள்கையையும் பரிமேலழகர் பின்பற்றியிருக்கிறார் என்பதை நிறுவுவதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.
சொல்லக் கூடாததும் செய்ய வேண்டியதும்
‘ஈகை’ என்னும் அதிகாரத்தில் நல்ல குடி பிறந்தவனிடத்தில் இருக்கின்ற இரண்டு பண்புநலன்களைக் கூறுவதாக ஒரு பாட்டு இருக்கிறது.
“‘இலன்’ என்னும் எவ்வம் உரையாமை, ஈதல்
குலன் உடையான் கண்ணே உள” (223)
இந்தப் பாட்டுக்குப் பரிமேலழகர்,
“யான் வறியன் என்று (இரப்பான்) சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும் அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும் இவையிரண்டும் உளவாவன குடிப்பிறந்தான் கண்ணே”
என்று பொழிப்புரை எழுதி,
“மேல் ‘தீது’ என ஒழிதற்கும் ‘நன்று’ என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி, ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்’ என்பதற்கு, ‘அவ்விளிவரவை (ஒருவன் தனக்குச்) சொல்வதற்கு முன்னே (அவன் குறிப்பறிந்து கொடுத்தல்)’ எனவும், அதனைப் பின்னும் பிறன் ஒருவன் பால் சென்று அவன்) உரையாவகையால் கொடுத்தல்’ எனவும், ‘(யான் இது பொழுது) பொருளுடையேனல்லேன்’ எனக் ‘கரப்பார் சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல்’ எனவும் உரைப்பாருமுளர். அவர் ‘ஈதல்’ என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பார்”
என்று விளக்கவுரையும் தந்திருக்கிறார்.
பரிமேலழகர் உரை விளக்கத்திற்கு விளக்கம்
“நல்ல குடியில் பிறந்தவனிடத்தில் இருக்கின்ற இரண்டு பண்புகளாவன, ஒன்று தான் எந்த நிலையிலும் தனது இளிவரவைப் பிறரிடம் சொல்லாத தன்மை. இரண்டு அவ்வாறு தன்னிடம் வந்து தமது இளிவரவைச் சொல்லி இரப்பார்க்கு இல்லையென்னாது கொடுக்கும் இயல்பு.”
பரிமேலழகர் உரை அமைந்த காரணம்
இந்தத் தொடரின் பல நேர்வுகளில் சொல்லியவாறு பரிமேலழகர் எந்தக் குறட்பாவையும் தனி அலகாகக் கொள்வதில்லை. அதாவது ஒரு குறட்பா (இன்றைக்குப் பேராசிரியர்கள் உட்பட பலரும் கருதியுரைப்பதுபோல்) தனிப்பட்ட நீதியினைக் கூறுவதாகக் கருதிலர். குறட்பாவின் பொருளமைதியை அதிகாரம், அதிகாரத்தின் பொருண்மை, பகுப்பின் முழுமை, குறட்பா இடம்பெறும் இயல், பால் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நோக்கி உரையெழுதுவதைக் குறித்திருந்தோம். இந்தக் குறட்பாவையும் அங்ஙனம் நோக்கித்தான் உரையெழுதுகிறார். இந்தப் பாட்டுக்கு முந்தைய பாடல்,
“நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று” (222)
இந்தப் பாட்டில் ‘கொளல்’, ‘ஈதல்’ என்னும் தொழில் இடம்பெற்றிருக்கின்றதேயன்றி எழுவாய் இல்லை என்பதை அறியலாம். அதாவது யார் கொள்ளுவது தீது? யார் ஈதல் நன்று? என்னும் வினாவிற்குப் பாட்டில் விடையில்லை. பொதுப்படையான நீதியுரைப்பதாகவே அமைந்திருக்கிறது. ஈகையாகிய உயர்பண்பு பொதுப்படையாக அமைய வாய்ப்பில்லை. இதனை அவர் எழுதிய விளக்கவுரையில்,
“மேல் தீது என ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு”.
எனத் தெளிவுபடுத்துகிறார். ‘உரியவன்’ என்னும் சொல் பொதுமைப்பண்பு கொண்டதன்று. எனவே இந்தப் பாடலுக்கான வினைமுதல் அல்லது எழுவாய் அடுத்த பாட்டில் அமைந்திருப்பதை அவர் நோக்கியிருக்கிறார். அதனால் அடுத்த பாட்டுக்கு உரையெழுதுகிறபோது பாட்டின் அமைப்பைப் பற்றி ஆராயமுடிகிறது. முதல் பாட்டில் எழுவாய் இல்லாமல் எழுதிய திருவள்ளுவர் அடுத்தபாட்டில் எழுவாயோடு (குலனுடையான்) எழுதுகிறார். பரிமேலழகர் இதனை (இரண்டுக்கான தொடர்பை)த் தம் புலமையாற்றலால் கண்டறிகிறார்.
எஞ்சிய உரைகளும் பரிமேலழகர் பார்வையும்
ஒரே குறட்பாவிற்குக் கற்பார் புலமைக்கும் சிந்தனையாற்றலுக்கும் ஏற்பப் பல உரைகளைக் காண முடியும். ஆனால் ஒரே உரையாசிரியர், பிற உரையாசிரியர் கூறும் உரைக்கருத்துக்களை முன்மொழிந்து கற்பார் முன் வைப்பது என்பது அரியது. அரியவற்றுள் அரியனவற்றை இயல்பாகச் செய்துகாட்டும் அழகர் இதனையும் செய்துகாட்டியிருக்கிறார். ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை, ஈதல்” என்பதற்குக் குலனுடையானுக்கு இருக்கும் இருவேறு சிறப்பியல்புகள் என உரைகண்ட தன் கருத்துக்கு மாற்றாக உரையாசிரியர்கள் பிறர் கூறும் கருத்துக்களை அவர் முன்மொழிகிறார். அழகர் முன்மொழியும் பிறருடைய கருத்துக்களையும் அவர் உரைகொண்ட பாங்கினையும் தொடர்ந்து காணலாம். இனி ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை’ என்பதற்கு,
- ‘(ஒருவன் தனக்குச்) சொல்வதற்கு முன்னே (அவன் குறிப்பறிந்து) கொடுத்தல் எனவும்’ கண்ட உரையினை முன்மொழிகிறார். இந்த உரையால் ‘எவ்வம் உரையாமை’ என்பதற்கு இரப்பவன் இளிவரவைச் சொல்லுதற்கு முன்பாக’ என்பது பெறப்படுகிறது. படவே ‘உரையாமை’ என்பது இரப்பவனுக்கு ஆகிறது.
- ‘அதனைப் பின்னும் பிறன் ஒருவன் பால் சென்று அவன்) உரையாவகையால் கொடுத்தல் எனவும் கண்ட உரையினை அடுத்ததாக முன்மொழிகிறார். இதிலும் ‘உரையாமை’ என்பது இரப்பவனுக்கே ஆகி வருகிறது. வரினும் பொருள் பெற்றவன் அதன் பற்றாக்குறை கருதி மற்றொருவனிடம் சென்று (போதவில்லை என்று) ‘உரையாமை’ என்ற பொருளைத் தருகிறது. கொடுக்கின்ற அளவு நோக்கிய அவன் வருத்தத்தைக் குறிப்பதாக இது அமைந்திருக்கிறது என்பதை அறிதல் வேண்டும்.
- (யான் இது பொழுது) பொருளுடையேனல்லேன் எனக் கரப்பார் சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் கண்ட உரையினையும் முன்மொழிகிறார். முன்னிரண்டு உரைகளில் உரையாமை என்பது இரப்பவனுக்கு ஆக, இந்த உரையில் அது ஈதலைச் செய்பவனுக்கு ஆகி வருகிறது. முந்தைய இரண்டு உரைகளிலும் ‘உரையாமை’ என்பதை மற்ற இரு உரையாசிரியர்களும் தொழிற்பெயராகக் கொள்ள இவ்வாசிரியர் இதனை வினையெச்சமாகக் கொண்டு உரையெழுதியுள்ளார்.
பரிமேலழகரின் பண்பாட்டு முதிர்ச்சி
‘என்னுடைய பார்வை இது’ என்பதில் உறுதியாயிருக்கும் பரிமேலழகர் தவறு கண்ட இடத்துச் சுட்டிக்காட்டத் தயங்கினாரல்லர். ஆனால் இந்தக் குறட்பாவுக்கான உரைவேற்றுமைகளை மனமுவந்து முன்மொழிகிறார். ‘‘இப்படியும் சொல்லுகிறார்கள்’ எனப் பிற உரைகளுக்குப் பாசத்தோடு பரிந்துரைக் கடிதம் தருகிறார். அந்தக் கடிதத்தில் ‘அவர்கள் ஏன் அப்படி உரைசொன்னார்கள்?’ என்பதற்கான காரணத்தையும் விளக்குகிறார். அவர்தம் புலமைத்திறத்தை மெச்சுகிறார். எப்படி? உரையாமை என்பதற்குப் பொருள் காண்பதில் தொழிற்பெயராகவும் வினையெச்சமாகவும் உரைகண்ட சான்றோர்கள். ‘ஈதல்’ என்பதை தொழிற்பெயராகக் கருதாது பொருட்பன்மையாகவே கருதி உரையெழுதியிருக்கின்றனர். இவ்வாறு பொருட்பன்மையாகக் கருதலாம் என்பதுதான் பரிமேலழகர் கருத்தும். ஆனால் அவர் அதனைப் பொருட்பன்மையாகக் கருதாதற்குக் காரணம் பின்னர் உரைக்கப்படும்.
பொருட்பன்மை என்றால் என்ன?
‘உரையாமை’, ‘ஈதல்’ ஆகிய இரண்டனையும் பரிமேலழகர் எதிர்மறை மற்றும் உடன்பாட்டுத் தொழிற்பெயர்களாகக் கொண்டு உரையெழுதினார். அவர் சுட்டிய ஏனைய உரைகளில் ‘ஈதல்’ என்பது பொருட்பன்மையாக்கி உரைக்கப்பட்டிக்கிறது என்று அவர் கூட்டுகிறார். நம் உள்ள வினா ‘பொருட்பன்மை என்றால் என்ன?’ என்பதுதான். ஈதல் என்பது தொழில். அது ஒருதன்மைத்து ஆகாது. பலவகையாக விரியும். தானம் என்பதும் அது. தானம் பல வகைப்படும். ஈதல் தொழில் ஒன்றாயினும் இரப்பவர்க்குக் கொடுக்கப்படும் பொருட்களால் பலவாகும். அன்னதானம், கன்னிகாதானம், சொர்ணதானம், பூதானம், கோதானம், வித்யாதானம் என்பதனைக் காண்க. எனவே பிறர் உரைகளில் இந்த ‘ஈதல்’ என்பது பால்பகா அஃறிணைப் பன்மைப் பெயராகக் கொண்டு ‘உள’ என்னும் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிந்தது. ‘உரையாமை’ என்பதற்குப் பிறரெல்லாம் கண்ட உரைகள் மேலே சுட்டப்பட்டன. ‘ஈதல்’ என்பதற்கான விளக்கம் இங்கே குறிக்கப்பட்டு,
‘அவர் ‘ஈதல்’ என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பார்’
என்னும் பரிமேலழகரின் விளக்கத்திற்கான காரணம் தரப்பட்டது.
பரிமேலழகர் மறுக்கிறாரா? ஏற்கிறாரா?
‘ஈதல்’ என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைக்கும் பரிலேழகர் அதனைப் பன்மைப் பொருட்பெயராக உரைப்பார் கருத்துக்களை முன்னெடுக்கிறார். ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்கிறாரா என்பது தெளிவாகவில்லை. பல இடங்களில் ‘உரைப்பாரும் உளர். இன்ன காரணத்தினால் அதனை ஏற்கவில்லை’ என்பார். முரண்பாடுகளைச் சுட்டி ‘அஃது உரையன்மை அறிக’ என்பார். ‘அதிகாரப் பொருளோடு இயையாமையின் உரையன்று’ என்பார் இவற்றுள் எதனையும் குறிப்பிடாது வாளாச் சுட்டிக் கற்பாருக்கு ஒரு சிக்கலையும் உண்டாக்கி விடுகிறார். பிறர் உரைகளைப் பரிமேலழகர் சுட்டுவதனின்றும் அவற்றை மதித்துப் போற்றுகிறார். சரி. இவர் ஏன் அவ்வாறு உரையெழுதவில்லை? அல்லது இவர் ஏன் இவ்வாறு (உரையாமையை எதிர்மறைத் தொழிற்பெயராகவும் ஈதலை உடன்பாட்டுத் தொழிற்பெயராகவும் கொண்டு) உரையெழுதியிருக்கிறார் என்ற வினா தோன்றுகிறது.
பரிமேலழகரின் உரை நுட்பம்
பரிமேலழகரின் உரை விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் முந்தைய குறட்பாவின் (222) கருத்தினை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
“நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று” (222)
என்பது அந்தக் குறட்பா.
“ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது. ஈந்தார்க்கு அவ்வுலகம் எய்துதல் இல்லை என்பார் உளராயினும் ஈதலே நன்று”
என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,
‘எனினும்’ என்பது இருவழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களில் ஈதல் சிறந்ததென்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.
என்ற விளக்கவுரையையும் தந்திருக்கிறார்.
உரை மதிப்பீடு
தன்னுரை தருகிறார். பிறர் உரைகளைச் சுட்டுகிறார். பிறர் உரைக்கான காரணத்தையும் பதிவு செய்கிறார். அவற்றை மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை. அதனால் ஆய்வுச் சிந்தனைக்கு அழகர் வழிவிடுகிறார். பரிமேலழகர் உரையெழுதுங்கால் இரண்டு உண்மைகளைக் கருத்திற் கொள்கிறார்.
- அதிகாரத் தலைப்பு
- அதிகாரப் பொருண்மை.
அதிகாரத் தலைப்பு ஈகை என்பது. ‘ஈகை’ என்பது கொடுப்பவனைச் சார்ந்தது. இரப்பவனுக்கும் ஈகைக்கும் தொடர்பேதும் இல்லை. ‘ஈகை’ என்பது தொழிற்பெயர். அந்தத் தொழில் கொடுப்பவனுக்கே உரியதன்றிப் பெறுபவனுக்குப் பொருந்தாது. அதிகாரத்தின் எந்த இடத்திலும் இரப்பவனைப் பற்றிய குறிப்பேதும் இல்லை. அதிகாரப் பொருண்மை பகுப்பிலும் இது எதிரொளிக்கிறது.
- ஈகையின் இலக்கணம் (1)
- ஈதலின் சிறப்பு (2-7)
- ஈயாமையின் குற்றம் (8-10)
இந்தச் சிந்தனை பிற உரையாசிரியப் பெருமக்களிடம் இருந்திருக்குமாயின் ‘உரையாமை’ என்பதை இரப்பவனுக்கு ஏற்றி இடர்ப்பட்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் ‘உரையாமை’ என்பது கொடுப்பவனுக்குரியது. அதிகாரம் அவனைப் பற்றியே பேசுகிறதாதலின். ‘ஏற்பது இகழ்ச்சி’ என்பது ஔவை மொழியாலும் ‘இரவச்சம்’ என்னும் நாயனார் அதிகாரத்தாலும் பெறப்படும். காட்டப்பட்ட உரைகளில் மூன்றாவது உரையிலும் ‘உரையாமை’ என்பதைக் கொடுப்பவனுக்கே உரித்தாக்கியுரைத்திருப்பதையும் காண்க. எனவே ‘உரையாமை’ என்பதை இரப்பவனுக்கு ஆக்கி உரைப்பது அதிகாரத்தின் குறட்பாக்களின் பொருண்மையோடும் மையக்கருத்தோடும் பொருந்தவில்லை என்பதைப் பரிமேலழகர் உணர்கிறார்.
இரண்டாவதாக முன்பே சுட்டியபடி ‘நல்லாறு எனினும்’ எனத் தொடங்கும் குறட்பாவில் வினைமுதல் இல்லை. ‘தீச்செயல்’ ஒன்றும் ‘நற்செயல்’ ஒன்றும் என இரண்டு செயல்கள் குறிக்கப்படுகின்றனவேயன்றி அவை யாருக்கு உரியது என்பது தெளிவாகவில்லை. செய்யக் கூடாத செயலைத் தவிர்க்க வேண்டியவன் யார்? என்பதற்கும் ‘செய்ய வேண்டிய செயலைச் செய்பவன் யார்? என்பதற்கும் குறட்பாவில் (222) விளக்கமில்லை. ‘மாட்டேறு’ என்பது அழகர் அறிந்த உரை உத்தியாதலின் முந்தைய குறட்பாவையும் இந்தக் குறட்பாவையும் மாட்டேற்றி குறட்பாக்களின் கருத்துக்களை ஒன்றிணைத்துக் காட்டுகிறார். ‘உரையாமை’ என்பதையும் ‘ஈகை’ என்பதனையும் இனம் பற்றியும் ஒருவனுக்கே உரிய குணம் பற்றியும் தொழிற்பெயராகவே கொண்டு தமது கருத்தினைக் குறிப்பால் புலப்பட வைக்கிறார்.
மனங்கோணா மறுப்பும் தெளிவும்
பரிமேலழகரைத் தவிர மற்றவர்கள் ‘உரையாமையை’ இரவலனுக்கு ஆக்கியதால் ஈகை செய்வானுக்கு இருக்கக் கூடாத பண்பும் இருக்க வேண்டிய பண்பும் வெளிப்படவில்லை. இதனால் ‘நல்லாறு எனினும் ‘கொளல் தீது’ என்னும் நீதி ‘கேட்பாரின்றித்’ தவிக்கிறது. ஈதலைப் பொருட்பன்மையாகக் கருதி உரைத்ததால் குறட்பாவுக்குக் கூடுதல் பொருட்சிறப்பு வந்ததாகக் கருத முடியவில்லை. மாறாகப் பரிமேலழகரின் உரையால் முந்தைய குறட்பாவின் வினைமுதல் தெளிவாகிறது. ‘எல்லாரும் ஈகை செய்ய இயலாது. குலனுடையானுக்குரிய ஒழுக்கம் அது’ என்னும் தெளிவு கிட்டுகிறது. அவ்வொழுக்கமும் இருபகுதிகளை உள்ளடக்கியது என்பதும் புலனாகிறது. பிறருடைய உரைகளை மதித்துப் போற்றும் பரிமேலழகர் ‘தானாஅட்டித் தனது நிறுத்தல்’ என்னும் உத்தியை மிகவும் இலாவகமாகப் பயன்படுத்திப் பிற சான்றோர்களின் கருத்துக்களைச் சுட்டுவதோடு அமைகிறார். அவர் உரைநெறி பற்றிய தமது கருத்துக்களைத் தவிர்த்துவிடுகிறார். விளைவு? தம்மைப் பற்றிய பரிமேலழகர் கருத்து என்ன என்பது அறியாமலேயே அவ்வுரைகள் அமைதியாகின்றன.
நிறைவுரை
மாற்றுரை காணும் நேர்வுகளில் (583, 1001, 1116) ‘உரைப்பினும் அமையும்’ என்று ஏற்றுக் கொள்கிற பரிமேலழகர் இங்கே அவ்வாறு குறிக்காதது நோக்குதற்குரியது. அவ்வுரைகளால் குறட்பாவின் பொருண்மைப்பகுதி முழுமை பெற்றதாக அவரால் கருத இயலவில்லை போலும்! “உரையாமையையும் ஈதலையும்” தொழிற்பெயராக்கி உரைகண்ட தமது நெறியையும், ஈதலைப் பொருட்பன்மையாக்கிப் பிறர் கண்ட உரைநெறியையும் பந்தி வைக்கும் பரிமேலழகர் சீர் தூக்கும் பொறுப்பினைக் கற்பாருக்கு விட்டு ஒதுங்கிக் கொள்கிறார். ஏற்றுக் கொள்ளாததை மறுக்காமல் மறுக்கிறார். பிறர் மனம் கோணாமல் மறுக்கிறார். பரிமேலழகரின் உரை மட்டும் மாட்சியுடையதன்று. அவரும் மாட்சிமை உடையவரே என்பது இதனால் புலனாகலாம்.
(தொடரும்…)