புதிய பிள்ளைப்பருவங்கள் – 1
மீனாட்சி பாலகணேஷ்
1. கோலம் வரையும் பருவம்
(பெண்பால் பிள்ளைத்தமிழ்)
அனைத்துக் குழந்தைகளின் வளர்ச்சியிலும் அழகான சுவையான பல பருவங்களும், நிகழ்வுகளும் உண்டு. இந்தத் தொடரில் என் கருத்தில் தோன்றிய, பாடல் பெறாத ஒருசில பருவங்களை நாம் காணப்போகிறோம். பெரிதளவில் பிள்ளைத்தமிழ் நூல்களை பெண்பாற் புலவர்கள் பாடாமையாலோ என்னவோ, சில அழகான குழந்தைப்பருவத்து நிகழ்வுகள் பாடல்பெறாமலே போய்விட்டன. பெண்பாற் புலவர்களால் பாடப்பட்ட ஓரிரு பிள்ளைத்தமிழ் நூல்களும் இன்றுவரை தேடியும் என் கைக்குக் கிட்டவில்லை.
பெண்களுக்கும் ஆடவருக்கும் குழந்தையின் ஒரு செயலைக் காணும்போழ்தில் தோன்றும் கற்பனைகள் வேறுபடும் அல்லவா? மேலும் தாய்மாரே குழந்தையுடன் பெரும்பொழுதுகளைக் கழிப்பதனால், அவர்கள் தத்தம் குழந்தைகளுடன் செய்து மகிழும் செயல்களும் பாடப்பட வேண்டும் அல்லவா?
ஆகவே இவற்றைப் பதிவுசெய்யலாம் எனும் ஆர்வத்தினால் எழுந்த கட்டுரைகள் இவை. இக்கட்டுரையைப் பேராசிரியர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்) அவர்களுக்கு அனுப்பிவைத்து, அவர் பார்த்தபின்பே பதிப்பிற்கு அனுப்புகிறேன். பேராசிரியர் ஐயா, இனி இப்பருவங்களையும் பிள்ளைத்தமிழ் பாடுவோர் தமது நூல்களில் சேர்த்துப் பாடப் பரிந்துரைக்கலாம் எனத் தமது கருத்தைக் கூறியுள்ளார்.
—————————————
ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில், ‘தையொரு திங்களும்,’ எனத்துவங்கும் பாசுரத்தொகுப்பில் கோலம் வரைவதனைப் பற்றிக் கூறுகிறாள்.
தை மாதம் முழுவதும் (எல்லா நாட்களிலும்) கண்ணபிரான் வரும் இடம் முழுவதிலும், தரையைத் தூய்மை செய்து, அலங்கரித்து, அழகாக உள்ள மண்டலவடிவில் (வட்டவடிவில்) கோலம் இட்டு, அவன் வரும்வழியினை அழகுபடுத்தி வைத்தேன்,’ என்கிறாள். ‘கண்ணனோடு என்னைச் சேர்த்துவை,’ என அனங்கனான காமவேளையும் அவன் தம்பியையும் வேண்டுவன இப்பாடல்கள்.
‘தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
…………………………………..‘ என்பது பாடல்.
–—————————-&————————-
இனி, பிள்ளைத்தமிழில் எவ்வாறு இப்பாடல்களை அமைக்கலாம் எனக் காணலாம்.
அதிகாலை நேரத்தில் வீட்டின்முன் பசுஞ்சாண நீர்தெளித்துக் கூட்டி, கோலமாவினால் அழகான கோலங்களை வரைந்து வைப்பது நம் மிகப்பழைய வழக்கம். பெண்குழந்தைகள் அரிசிமாவையோ அல்லது வெண்கற்களையும் நுண்ணிய வெண்மணலையும் பொடித்து, இடித்துச் சலித்துச் செய்த கோலப்பொடியையோ கொண்டு சாணநீரால் தெளித்துக் கூட்டிய வீட்டு முன்வாசலில் கோலமிடுவதில் ஐந்தாறு வயது முதலே ஆர்வம் காட்டுவார்கள்.
அவ்வாறு இச்சிறுபெண், பத்துவயதுப் பைங்கிளி, வட்டிலில் கோலமாவை எடுத்துவந்து அன்னை அருகிருக்கப் பிஞ்சுவிரல்களால் மாவினை எடுத்து முதலில் புள்ளிகளை வைக்கின்றாள். தாய் அவள் வயதுக்கேற்ற சிறிய கோலங்களைக் கற்றுக் கொடுத்துள்ளாள். இவளோ தாயும் அறியாமல் பாட்டியிடமும் மற்றவர்களிடமும் தன் திறமைக்கும் மிஞ்சிய பெரிய கோலங்களை வரையக் கற்றுக் கொண்டுள்ளாள்.
அதுவும் மகளிர் விரும்பும் மார்கழிமாதம் வந்துவிட்டால் போதும்! எங்கு நோக்கினும் தெருவெங்கும் கோலங்கள்! விதவிதமான கற்பனைகள்! ஓரிடத்தில் ஒரு மங்கை அவளுடைய இல்லத்தின் முன்பு நீராழி மண்டபம் கோலம் வரைகின்றாள். புள்ளிகளைக் கணக்கிட்டு வைத்து, இரு விரல்களிடையே அள்ளிய வெண்மையான கோலமாவை அழகான இழைகளாக்கி அப்புள்ளிகளை இணைத்தும் வளைத்தும் அவளிடும் கோலம் கண்ணுக்கு விருந்தாகிறது.
‘எதற்காக இன்று இவ்வளவு பெரிய கோலம்? மார்கழிமாதம் கூட இல்லையே!’ எனப் பெண்டிர் வியக்கின்றனர். அவள் இழைக்கும், வரையும் கோலத்தின் அழகைக் காண பெரியவர்களும் சிறுவர்களுமாக பெண்கள் கூட்டம். அவள் கோலம்வரையும் நளினமான அழகைக்காணப் பல பாட்டிமார்கள்! சாட்டைபோலவந்து முன்னே விழும் அழகான கருநாகம்போலும் பின்னல். அதனை பின்னால் தள்ளிக் கொண்டபடியே மும்முரமாகக் குனிந்து புள்ளிவைப்பதிலும் கோலத்தில் இழைகளைச் சேர்ப்பதிலும் முனைந்திருக்கிறாள்.
“மங்கையை உள்ளே அழைத்துக்கொண்டுபோய் சுற்றிப்போடடி அம்மா!” என ஒரு முதியவள் ‘அறம்வளர்க்கும் மங்கை’ எனப்பெயர் கொண்ட அப்பெண்ணின் தாயிடம் கரிசனத்துடன் கூறுகிறாள். அவளருகேயும் வந்து, “மங்கை, இங்குவா,”என அவளை அழைத்த பக்கத்து வீட்டம்மாள், உரிமையோடு அவளுடைய நீண்ட பின்னலைப் பிடித்துச் சுற்றிச் சுருட்டி ஒரு கொண்டையாக்கி விடுகிறாள். அவளைப் பார்த்துக் கன்னங்குழியப் புன்னகைக்கும் மங்கையை ஆசைதீரக் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்து, விரல்களைச் சொடுக்கிக் கொள்கிறாள். அறம்வளர்க்கும்மங்கை ஊரில் எல்லாருக்கும் செல்லப்பெண்!
இன்று பஞ்சநதீஸ்வரர் எனும் ஐயாறப்பர் திருவீதி ஊர்வலம் வரப்போகிறாராம். கோவிலும் அதனைச் சூழ்ந்த தெருக்களும் அமளிதுமளிப்படுகின்றன. தெருக்களில் நீர் தெளிக்கப்பட்டு, கோலங்களிழைக்கப்படுகின்றன. மங்கையின் அண்ணன் மணிவண்ணனும் அவர்கள் இல்லத்தின் முன்பு அழகான தோரணங்களைக் கட்டிவைத்துள்ளான். ஐயாறப்பர் வலம்வரும் பிரதான வீதியிலன்றோ அவர்கள் இல்லம் அமைந்துள்ளது!
கோலமிழைக்கும் இப்பெண் யார்? அந்த அறம்வளர்த்த நாயகியே சிறுபெண்ணாக வந்துதித்தாளோ?கண்டு மயங்குகிறோம்!
விநாயகப்பெருமான், மயிலேறி உலவும் முருகன், ஆலமரத்தடி அமர்ந்து மௌனகுருவாகி உபதேசிக்கும் அண்ணல் சிவபிரான், மாலவனாம் மாயவனாகிய திருமால் அனைவரும் மனம் மகிழும் மங்கை இந்த அறம்வளர்க்கும் நங்கை.
அத்தன் சிவபிரானளித்த இருநாழி நெல்லினைக்கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் சலியாது செய்து உலக மக்களைப் புரப்பவள் அறம்வளர்த்த நாயகி அம்மை!
நாதசுரம் எனும் மங்கள வாத்தியத்தினின்று எழும் இன்னிசையுடனும், பின்னால் மறையோதும் அந்தணர்கள் வேதவொலி முழக்கி வர, வீதித் திருவுலா வருகின்ற ஐயாறப்பனின் வரவுக்காக, அனைவரும் தத்தம் மனைகள்முன்பு, நீர்தெளித்து, அழகான பெரிய கோலங்களை வரைந்து அவன் வருகையை ஆவலாக எதிர்நோக்கியுள்ளனர்.
சிறுபெண்ணான அன்னையே! அவனை வரவேற்க நீயும் அழகழகான கோலங்களை இழைத்தருளுக.
குறும்பும் உற்சாகமும், மகிழ்வும் மலர்ச்சியும், அழகும் நளினமும் கூத்தாடும் இளம்சிறுமியான அன்னையே! அறம்வளர்க்கும் நாயகியே! எம்மை ஆண்டருள்கவே!
இதோ எமது எளிய காணிக்கை உன் திருவடிகளுக்குத் தாயே!
ஞாலமுதல் வனாவேழமுகத் தனுநீல மயிலேறி
உலவும் சமர்த்தனு
மாலமரத்தடி யில்நாளும மர்ந்து அருள்மழை
வழங்கிடு மண்ணலு
மாலவன் மாயவனு முளமகிழு மங்கையே
அறம்வளர்க்கு நாயகியே!
கோலமயில் நீயுந் தோழியருட னிணைந்து
கோலம்வரைந் திடுவாயே! (1)
நாழியிரண்டு நெல்லளித்து நல்லறம்நீ
ஆற்றுகென நாதன்பணித்திட
ஆழிசூழகில மெலாந்தாவி யணைத்தரு
ளுந்தேவியான வாதிசத்திதாயும்நீ
வாழிவளமுட னெண்னான்கு அறமியற்றி
வழுவாதுவர மருளுந்தேவி
கோழிகூவுங் காலைப்போதில் கன்னியருடன்
கூடிக்கோலமி ழைத்திடுவாயே! (2)
நாதசுர முழங்க கீதவொலி யெழும்ப
வேதமறை யொலிக்கவுன்
நாதனை யாறப்பன் வீதிவல(ம்) வருங்கால்
காதலுடன் காந்தள்
போதனைய கையால் கோலப்பொ டியதனை
யள்ளிப்புள்ளி களிட்டு
மாதரசே! மனமிக மகிழ்ந்து மாடக்குள
சித்திரமாம் கோலமிடுவாயே! (3)
(இவை திருஐயாறு அறம்வளர்த்த நாயகி மீது இயற்றப்பட்ட பாடல்கள்)
சித்திரம் வரைந்தது: டாக்டர் சுப்பையா புகழேந்தி.
(புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)