கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 20
-மேகலா இராமமூர்த்தி
சீதையைக் கவர்தல் உனக்கும் உன் குடிக்கும் கேடாய் முடியும் என்றுரைத்த மாரீசனைக் கடுஞ்சொற்களால் நிந்தித்த இராவணன், ”உன் அறிவுரை எனக்குத் தேவையில்லை மாமனே! எனக்கு நீ உதவினால் பிழைப்பாய்; இல்லையேல் என் வாளால் உனைக் கூறாக்கிவிட்டு யான் எண்ணியதை முடிப்பேன்” என்று உறுமவும், ”மனச் செருக்கோடு தருக்கித் திரிபவர் அழிவது உறுதி என்பது தத்துவ வார்த்தையன்றோ” என்று தன்னுள் எண்ணி, உருக்கிய செம்பின்மீது வார்த்தநீர் அடங்குதல்போல் அடங்கிய மாரீசன், ”இராவணா! உன்னுடைய நன்மைக்காகவே இத்தனையும் சொன்னேன்; என்னுடைய சாவுக்காக அஞ்சியன்று! என்ன செய்வது? அழிவு நெருங்கிவரும் காலத்தில் பிறர் நல்லது சொன்னாலும் அது தீமையாகத்தான் தோன்றும்; தீய நெறியில் செல்லத் தலைப்பட்டுவிட்டவனே! நான் என்ன செய்யவேண்டும்? புகல்வாய்!” என்றான்.
உன்வயின் உறுதி நோக்கி உண்மையின்
உணர்த்தினேன் மற்று
என்வயின் இறுதி நோக்கி அச்சத்தால்
இசைத்தேன் அல்லேன்
நன்மையும் தீமை அன்றே நாசம்
வந்து உற்ற போது
புன்மையின் நின்ற நீராய்
செய்வது புகல்தி என்றான். (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3366)
அதைக் கேட்ட இராவணன் சினம் மாறி மாரீசனைத் தழுவிக்கொண்டு, மாமனே! காமன் அம்பால் சாவதைவிட இராமன் அம்பால் சாவதே மேல் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். காரணம், கட்டழகி சீதையின் நினைவால் இனிய தென்றலும் என்னைச் சுட்டிடுதே! ஆகவே, சீதையை எனக்காகக் கொண்டுவந்து தருவாய்!” என்றான்.
என்றலும் எழுந்து புல்லி
ஏறிய வெகுளி நீங்கி
குன்று எனக் குவிந்த தோளாய்
மாரவேள் கொதிக்கும் அம்பால்
பொன்றலில் இராமன் அம்பால் பொன்றலே
புகழ் உண்டு அன்றோ
தென்றலைப் பகையைச் செய்த
சீதையைத் தருதி என்றான் (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3367)
இந்தப் பாடலிலேயே இராமனை எதிர்த்தால் தனக்குச் சாவு நேர்வது உறுதி என்பதை இராவணன் வாக்காலேயே உணர்த்திவிடுகின்றார் கம்பநாடர் என்பது கருதத்தக்கது.
தன்னுடைய கட்டளையை நிறைவேற்றக் காத்திருந்த மாரீசனைப் பார்த்து, ”நாம் வஞ்சனையால்தான் அந்த வஞ்சியாளை வௌவ வேண்டும்; ஆதலால், நினைத்த வடிவெடுக்கும் ஆற்றல்வாய்ந்த நீ, மாயப் பொன் மானாய் மாறவேண்டும்; சீதையை மயக்க வேண்டும்” என்றான் இராவணன்.
”எப்படியும் தான் சாகப்போவது உறுதி! பிறன்மனை விழையும் இழிபிறப்பினனான இராவணன் கையால் சாவதைவிட இராமபாணம் பட்டுச் சாவதே மேல்; அஃது என்னை உயர்கதிக்கு எடுத்துச்செல்லும்” என்று எண்ணிய மாரீசன், இராவணனின் யோசனைக்கு இணங்கினான். காண்போர் சிந்தைகவர் விந்தை மானுருக் கொண்டு இராம இலக்குவரும் சீதையும் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் சென்றான்.
அப்போது வைதேகி மலர்வனத்தில் பூக்கொய்து கொண்டிருந்தாள். அவள் பார்வையில் படும்வகையில் அந்தப் பொன்மான் அங்குமிங்கும் துள்ளி விளையாடிற்று. அந்த மாயமானின் வண்ணத்தையும் வடிவையும் கண்டுவியந்த சீதை, அதைப்பற்றிச் சொல்வதற்காக இராமனை நாடிச் சென்றாள். அவனைக் கண்டு,
”அன்பரே! நான் ஒரு மானைக் கண்டேன். அஃது ஆணிப் பொன்னால் ஆனது; அதன் மேனியொளியால் தொலைவில் நிற்கும்போதும் பளபளக்கின்றது; அதன் வலிய காதுகளும் கால்களும் சிவந்த மாணிக்கத்தால் ஆனவை; காண இனிய அழகுடையது” என்றுரைத்து இராமனை வணங்கினாள், அவன் தனக்கு அம்மானைப் பிடித்துத் தரவேண்டும் எனும் உளக் குறிப்போடு.
ஆணிப் பொனின் ஆகியது
ஆய் கதிரால்
சேணில் சுடர்கின்றது திண்
செவி கால்
மாணிக்க மயத்து ஒரு
மான் உளதால்
காணத் தகும் என்றனள்
கை தொழுவாள். (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3383)
சீதையோடுவந்து அம்மானைக் கண்ட பெம்மானும் அதன் தோற்றத்தால் கவரப்பட்டான்; அதைப் பிடித்துவர ஆவல்கொண்டான்.
இராமன் மானின் அழகில் மடம்பட்டிருந்த வேளையில் இலக்குவன் அவன் சிந்தையைத் தெளிவிக்க விரும்பி, ”அண்ணா! இந்த மானின் நிறமும் வடிவும் இயற்கையானதாக இல்லை; இது ஒருவகை மாயை என்றே எனக்குத் தோன்றுகின்றது” என்றான்.
அவன் கருத்தை மறுத்த இராமன், ”இளையவனே! அறிவில் வல்லாரும் உணர்ந்துகொள்ள இயலாத வகையில் எண்ணிலாக் கோடிகளாய் உலகத்து உயிர்கள் விரிந்து பரந்துள்ளன. ஆகையால் இவ்வுலகில் இல்லாததொன்றில்லை என்றறிக” எனப் பதிலிறுத்தான்.
நில்லா உலகின் நிலை நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்தாம்
பல் ஆயிரம்கோடி பரந்துளதால்
இல்லாதன இல்லை இளங்குமரா! (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3387)
அதன் பிறகும் இலக்குவன் அதனை ஒப்பவில்லை. ”இந்த விசித்திரமான மானைப் பார்த்தால் விசுவாமித்திரர் தவத்துக்கு ஊறுசெய்ய முற்பட்ட வேளையில் உம்முடைய பாணத்தால் தாக்குண்டு கடலில் வீழ்த்தப்பட்ட மாரீசனே மானுருவில் வந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகின்றது. எனவே, மானைப் பிடிக்கவேண்டும் என்றால் நானேசென்று பிடித்து வருகின்றேன்; நீங்கள் செல்லவேண்டாம்!” என்று அண்ணனைத் தடுத்துப் பார்த்தான்.
அவ்வேளையில் சீதையோ சிறுபிள்ளைத்தனமாய்த் தன் கணவனே மானைப் பிடித்துத் தரவேண்டும் என்று வற்புறுத்தினாள். இராமனும் மனையாளின் விருப்பத்துக்கு உடன்பட்டுப் புறப்பட்டான். போகும்போது இலக்குவனைச் சீதைக்குக் காவலாக இருக்கும்படிச் சொல்லிவிட்டு மானைப் பின்தொடர்ந்தான்.
அந்த மாரீச மானோ இராமனுக்கு வசப்படுவதாயில்லை. ஒரு சமயம் அது மலையின் மீதேறும்; அடுத்த நொடி வான்முகில்களிடையே சென்று பாயும்; அருகில் சென்றால் விலகி ஓடும்; மெதுவாகச் சென்றால் அண்மையதாக வந்துநிற்கும். கொடுத்த பணத்துக்கேற்ப அன்புகாட்டும் மணமிகு மாலைசூடிய விலைமகளிரைப் போல் நிலையில்லா மனத்தோடு சென்றது அம்மான்!
குன்றிடை இவரும் மேகக் குழுவிடைக்
குதிக்கும் கூடச்
சென்றிடின் அகலும் தாழின் தீண்டல்
ஆம் தகைமைத்து ஆகும்
நின்றதே போல நீங்கும்
நிதிவழி நேயம் நீட்டும்
மன்றல் அம் கோதை மாதர் மனம்
எனப் போயிற்று அம்மா. (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3407)
ஓரிடத்தில் நில்லாது அங்குமிங்கும் தாவிச்செல்லும் மானுக்கு நிலையில்லா மனங்கொண்ட விலைமகளிரை உவமையாக்கினார் கம்பர்.
இவ்விலைமகளிரை, ”அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்” என்று அடையாளப்படுத்துவார் வள்ளுவர்.
உண்மையான மானின் இயல்புக்கு மாறாக அம்மான் இயங்குவதையும், களைப்பென்பதையே அறியாத அது தன்னை வெகுதொலைவு இழுத்துக்கொண்டு வந்துவிட்டதையும் அறிந்த இராமன், இலக்குவன் சொன்னதுபோல் அது மாயமானே எனத் தெளிந்தான்.
இராமன் சிந்தனை செய்வதைக் கவனித்த மான் வடிவினனான மாரீசன், அவன் இனித் தன்னைப் பற்ற முற்படமாட்டான்; பகழியால் கொல்லவே முற்படுவான் என்றுணர்ந்து வானை நோக்கி உயரப் பாய்ந்தான்.
உடனே இராமன் தன் கணையை மானின் மார்பை நோக்கிச் செலுத்தவே மாரீசன், ”சீதா…! இலக்குவா…!” என்று இராமன் குரலில் கதறியபடித் தன் இயற்கை வடிவத்தோடு மலை வீழ்வதுபோல் கீழே வீழ்ந்திறந்தான்.
தரையில் வீழ்ந்துகிடந்த மாரீசனின் உடலத்தைக் கண்ட இராமன், இலக்குவனின் நுண்மாண் நுழைபுலத்தை எண்ணி வியந்தான். அடுத்த கணம், மாரீசன் என் குரலில் அலறிக்கொண்டு வீழ்ந்தமையால் சீதை எனக்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்றெண்ணிக் கவலுவாளே என வருந்தினான். இலக்குவன் துணையிருப்பதால் அவளைத் தெளிவிப்பான் என்ற எண்ணம் தோன்றியதால் சற்று ஆறுதலடைந்தான்.
மாரீசனின் செயலைப் பார்த்தால் அவன் சாவதற்காக இங்கே வந்ததாகத் தெரியவில்லை; இதன் பின்னணியில் வேறு ஏதேனும் தீயநோக்கம் இருத்தல்கூடும் என்று சிந்தித்த இராமன், அதனைத் தடுக்கும் நோக்குடன் தன் இருப்பிடம் நோக்கி விரைந்தான்.
[தொடரும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
- கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
- கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
- கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
- கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17