அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 24 (முதுவாய்ப் பெண்டிர்)
ச. கண்மணி கணேசன் (ப.நி.),
முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.
முன்னுரை
‘முதுவாய்’ என்னும் அடைத்தொடர் தொகையிலக்கியத்தில் பல பெயர்களுக்கு முன்னர் பயின்று வருவதைக் காண்கிறோம். ‘முதுவாய் வேலன்’, ‘முதுவாய்க் குயவன்’, ‘முதுவாய்ப் பெண்டிர்’ என்றெல்லாம் வழங்கியுள்ளது. இக்கட்டுரை முதுவாய்ப் பெண்டிர் பற்றியதாக மட்டும் அமைகிறது.
கட்டுவிச்சியின் வாழ்க்கை நிலை
முதுவாய்ப் பெண்டிர் என அழைக்கப் படுபவர் கட்டுவிச்சிகள் ஆவர். இவர்களது தொழில் கட்டுப் பார்த்துக் குறி சொல்வதாகும். வாய்விட்டுக் கூறும் அத்தொழிலைப் பன்னெடுங் காலமாகச் செய்து வந்தவர் ஆதலால்; அவர்கட்கு ‘முதுவாய்’ என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டது எனலாம். இத்தொழிலைப் பாரம்பரியமாகப் பெண்களே பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் கட்டுப் பார்க்கும் ஆண்களைத் தொகை இலக்கியத்துள் காண இயலவில்லை. அத்துடன் இவர்கட்குக் கொடுக்கப் பட்டிருக்கும் ‘முதுவாய்’ என்னும் அடைமொழியின் காரணம் இவர்கள் திணைமாந்தர் என்று சொல்லாமல் சொல்கிறதோ எனும் ஐயமும் எழுகிறது. ஏனெனில் இவ்அடைமொழி திணைமாந்தனாகிய வேலனுக்கும் உரியதாகிறது. ஆநிரை கவரும் மறவர் சீறூரில் அவளது குடில் இருந்தது எனப் பாடியிருப்பதால் அவள் திணைமாந்தருள் அடங்குகிறாள் (அகம்.- 63).
‘முதுமை வாய்த்தலை உடைய பெண்டு’ என ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் கரந்தைக் கவியரசு ரா.வேங்கடாசலம் பிள்ளையும் உரை கூறியிருப்பது முற்றிலும் பொருத்தமற்றது (அகம்.- 63). அதே உரையாசிரியர்கள் அதே தொடர்க்கு ‘அறிவு வாய்த்தலை உடைய பெண்டிர்’ எனவும் கூறி உள்ளனர் (அகம்.- 22). ‘முதுமை வாய்ந்த கட்டுவிச்சி’ என்ற அவர்களது உரையும் (அகம்.- 98) வயதான கட்டுவிச்சி என்று பொருள்படுவதால் முழுமையாக ஏற்க இயலாதது ஆகிறது. ‘பேசி முதிர்ந்த வாய்’ என்ற விளக்கமும் தொடர்கிறது. மூன்று பாடல்களில் இடம்பெறும் ஒரே தொடருக்கு நான்கு பொருள்கள் சொல்லி இருப்பது தொடக்க காலத்துத் தெளிவற்ற நிலையைக் காட்டுகிறதே அன்றி வேறில்லை.
முதுவாய்ப் பெண்டிரின் வாழ்வு நிலையைப் பற்றிய குறிப்பு அவர்களது ஏழ்மை நிலையைக் காட்டுகிறது.
“முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை” (அகம்.- 63)
எனும் அடி வலியற்ற காலை உடைய குடிலே அவளுக்கு உரியதென்கிறது. அதனால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தனர் என்பதில் ஐயமில்லை.
கட்டுப்பார்த்தல்
கட்டுப் பார்க்கும் நிகழ்வைத் தொகையிலக்கியம் காட்சிப்படுத்தி உள்ளது. சுளகில் நெல்லை எடுத்து வைத்து; யாருக்காகக் கட்டுப் பார்க்கிறார்களோ; அவரை முன்னர் நிறுத்தித்; தெய்வத்திற்குப் பலிப் பொருட்களைப் படைத்து வழிபட்டுப்; பின்னர் நான்கு நான்காக நெல்லை எண்ணி எடுத்து இறுதியில் எஞ்சிய நெல்மணிகள் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றாக இருப்பின் முருகு அணங்கியதால் நேர்ந்த நோய் எனவும்; நான்காக இருப்பின் வேறு நோய் எனவும் குறித்துச் சொல்வதே கட்டுப்பார்த்தல் என்கிறார் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (நற்.- 288).
சிறுபாத்திரத் தகுதி
கட்டுவிச்சி பாடல் காட்சியில் நேரடியாக இடம் பெறாத போதும் அவள் கட்டுப்பார்த்துக் கூறிய குறி பற்றித் தலைவியும் தோழியும் பேசுகின்றனர் (நற்.- 288). முருகு அணங்கியதால் உண்டான நோய் என்று கட்டுவிச்சி கூறியதால்; அன்னை வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்வாள் என்ற எதிர்பார்ப்பினைச் சிறைப்புறத்து நிற்கும் தலைவன் காதுபடப் பேசுகிறாள் தோழி.
வேலன் வெறியாட்டு முடிந்த நாளின் நள்ளிரவில் தலைவனைக் களவில் கூடி மகிழ்ந்த தலைவியின் கூற்றில்; முதுவாய்ப் பெண்டிர் குறி சொன்ன செய்தி இடம் பெற்றுள்ளது.
“நெடுவேள் பேணத் தணிகுவள் இவள் என
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற…
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்… …” (அகம்.- 22)
என வேலன் வெறியாட்டிற்கு மூலமாக அமைந்து வழி வகுத்தது கட்டுவிச்சியின் குறி என்கிறாள் தலைவி.
தலைவியின் வளை நெகிழ்ந்தவுடன் கட்டுவிச்சியிடம் குறி கேட்ட தாய்க்கு; முருகணங்கியதாக உரைத்த முதுவாய்ப் பெண்டு பற்றிய பாடலும் உள்ளது (அகம்.- 98).
நையாண்டியும் நாடகமுரணும்
மேற்சுட்டிய பாடல்கள் எல்லாம் பண்டைத் தமிழகத்தில் நிலவிய நம்பிக்கையை அங்கதத்துடன் எடுத்துச்சொல்கின்றன. முதுவாய்ப் பெண்டு தலைவியின் பேச்சில் குறிப்பான கிண்டலுக்கு உரியவள் ஆகிறாள். அவள் சொல்லும் குறியின் மேல் நம்பிக்கை வைக்கும் தாயும் வேலன் வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்வதால்; வேலனுடன் சேர்த்தே குறிப்பாகக் கேலிக்குரியவள் ஆகிறாள். ஏனெனில் தலைவி தனது களவு வெளிப்படா வண்ணம் மறைக்கும் திறம் பெற்றவளாக உள்ளாள். தாயின் நம்பிக்கை தலைவியின் நகைப்பொருள் ஆகிறது.
கட்டுப் பார்த்து; முருகு அணங்கியது என்று நம்பி; வேலனை அழைத்து வெறியாடச் செய்து; வழிபாடு நிகழ்த்திய நாளின் இரவில் பிரிந்து சென்றிருந்த தலைவன் தலைவியைச் சந்திக்கின்றான். அவனோடு கூடி இன்புற்ற தலைவி நோய் நீங்கி மகிழ்கிறாள். நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்துச் சிரிக்கிறாள்.
“இன்னுயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து
நக்கனன் அல்லனோ யானே எய்த்த
நோய்தணி காதலர் வர ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே“ (அகம்.- 22)
என்கிறாள். யாரோ ஒருவனாகிய வேலன் வெறியாட; அந்த ஆட்டத்திற்கு ஆட்பட்ட தலைவி; தன் உயிர் குழையக் காதலனைத் தழுவி; உடல் பூரித்தமை பற்றிச் சொல்லும் போது; உண்மை தெரியாது கட்டுவிச்சி கூறிய குறி, வேலன் ஆடிய வெறி, நம்பிய தாய் அனைவரும் அறியாமையின் உச்சத்தில் இருப்பது ஒரு நாடக முரண் போல அமைந்து இலக்கியச்சுவை பயக்கிறது. இது கவிதையே ஆயினும்; நாடகச்சுவை பொதுளிய பாடலாக அமைந்துள்ளது.
அகவன்மகளும் முதுவாய்ப் பெண்டும்
இத்தொடரில் முன்னர் அகவன்மகள் குறி சொல்வது பற்றிப் பார்த்தோம். முதுவாய்ப் பெண்டும் அகவன்மகளும் குறி சொல்லும் ஒரே தொழில் தான் செய்கின்றனர். ஆயினும் இருவரும் வெவ்வேறு திறத்தவர் என்பது கண்கூடு. ஏனெனில் அகவன்மகள் கையில் கோலுடன் காட்சியளிக்கிறாள். தலைவியின் முகம் பார்த்துப் பாடிக் கொண்டே குறி உரைக்கிறாள். ஆனால் முதுவாய்ப் பெண்டின் கையில் கோல் கிடையாது. அவள் பாடுவதாகவும் குறிப்பில்லை. தெய்வத்திற்குப் பலிப்பொருள் வைத்து வழிபட்டு; சுளகின் நெல்லை எண்ணிக் கணக்கிட்டுக் குறி உரைக்கிறாள். எனவே இருவரும் வெவ்வேறானவர்; தொழிலையும் மிஞ்சிய வேறுபாடு ஒன்று உள்ளது என்பதில் ஐயமில்லை. கட்டுவிச்சி என்ற பெயருக்கு உரியவள் முதுவாய்ப் பெண்டு மட்டுமே ஆவாள்.
முடிவுரை
கட்டுவிச்சி பாடல் காட்சியில் நேரடியாக இடம் பெறாத போதும் அவள் கட்டுப்பார்த்துக் கூறிய குறி பற்றித் தலைவியும் தோழியும் பேசுகின்றனர். முதுவாய்ப் பெண்டிரது குடில் மறவர் குடியிருப்பில் இருந்தது. அவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த திணைமாந்தர் ஆவர். முதுவாய்ப் பெண்டு இடம் பெறும் பாடல்கள் பண்டைத் தமிழகத்தில் நிலவிய நம்பிக்கையை அங்கதத்துடன் எடுத்துச் சொல்கின்றன. முதுவாய்ப் பெண்டும் அகவன்மகளும் குறி சொல்லும் ஒரே தொழில் செய்யினும் இருவரின் நடைமுறையும் வெவ்வேறு ஆகக் காணப்படுகிறது. தொழிலையும் மிஞ்சிய வேறுபாடு ஒன்று இருந்தது எனத் தெரிகிறது. அதுவே அழுத்தமான சாதி வேறுபாட்டிற்கு ஆதாரமாகி இருக்கலாம்.