Category: பத்திகள்

பத்தி

  • நான் அறிந்த சிலம்பு – 49 (10.12.12)

     

    மலர்சபா

     

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

    மாதவி கோவலனுடன் வீற்றிருத்தல்
    ஆங்கே,
    கடலின் புலால் நாற்றம்…
    அதை மாற்றி
    நறுமணமாக்கிய
    மடல்கள் அவிழும்
    பூக்களை உடைய
    தாழை மரங்கள்
    வேலியெனச் சூழ்ந்திருந்து
    காவல் புரிந்த
    ஓர் இடத்தினில்……….
    ஓர் ஒப்பற்ற புன்னை மர நிழலில்
    அழுக்கேதும் அற்ற புதுமணற்பரப்பில்
    சித்திர வேலைப்பாடுக்ள் அமைந்த
    திரையதனைச் சுற்றிலும்
    வளைத்துக் கட்டப்பட்ட
    கூடாரம் ஒன்று அமைந்திருந்தது..
    அதனுள்
    மேற்கட்டு விதானத்துடன் கூடிய
    வெண்மையான தந்தத்தால் செய்த
    கட்டில் ஒன்று இடப்பட்டிருந்தது.
    பயணக்களைப்பால்
    வருந்தியிருந்த வாடியிருந்த
    வசந்தமாலையின் கையில் இருந்த
    திருந்திய நரம்பினையுடைய
    நல்யாழ் அதனை,
    மலர்நெடுங்கண் மாதவி
    செவ்வனே வாங்கிக்கொண்டு,
    அக்கட்டிலில் முன்கூட்டியே அமர்ந்திருந்த
    கோவலன் அவனொடு சேர்ந்து அமர்ந்தனள்.
    வெண்பா
    கடற்கரையிலுள்ள
    மடலவிழ் தாழையின் உள்ளே செறிந்த
    வெண்மையான இதழ்களில்,
    மாலைப்பொழுதில் தேனுண்டு உறங்கிய
    நீலநிற வண்டுகள்,
    காலைப் பொழுதில்
    களிப்பு தரும்
    தேனையும் பூந்தாதினையும்
    ஊதும்படியாக
    அழகிய தெளிந்த நிறத்தையுடைய
    காலைக்கதிரவனின் தேர் அதுவும்
    இளங்கதிர்களை வீசியே
    கீழ்திசையில் மெல்ல எழுந்தது.
    (கடல் ஆடு காதை முற்றிற்று.)
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 166 – 178
    படத்துக்கு நன்றி:
    Share
  • இஸ்ரேல் பயணம் 2

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை இஸ்ரேல் 1948-இல்  உருவாக்கப்பட்டதிலிருந்து இருந்து வருகிறது.  சுமார் 3000 வருட யூதர்களின் சரித்திரத்தைப் புரிந்துகொண்டால்தான் இப்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையின் பின்னணி விளங்கும்.  யூதர்களின் பழைய சரித்திரத்தை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

    மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் யூதர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.  அப்போது அவர்கள் சிறு சிறு பழங்குடிகளாக வாழ்ந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.  இவர்கள்தான் முதன் முதலில் ஒரே கடவுள் (monotheism) என்ற கோட்பாடுடைய மதத்தைப் பின்பற்றினார்கள் என்று சொல்லப்படுகிறது.

    இவர்கள் வாழ்ந்த இடம் கிட்டத்தட்ட பாலைவனம் போன்றிருந்தது.  செழிப்பான நிலம் இல்லையாதலால் பலர் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.  தண்ணீருக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் மீன் பிடிப்பவர்களாக தொழில் நடத்தினர்.  ரோம், எகிப்து, கிரீக் போன்ற நாட்டு மன்னர்கள் இவர்களை வென்றபோது யூதர்கள் அவர்களின் ஆதிக்கத்தில் இருந்திருக்கின்றனர். ஒரு முறை நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது இவர்கள் இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர்.

    ஒரு காலத்தில் எகிப்தின்  அரசர்களான ஃபேரோக்களின் அடிமைகளாக யூதர்கள் வாழ்ந்தனர் என்றும்   ஃபேரோவின் கொடுமைக்கு இலக்காகி இவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த போது இவர்களின் தலைவரான மோசஸ் இறைவன் இவருக்குக் கட்டளையிட்டபடி இவர்களை இப்போதைய இஸ்ரேல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றும் கதை உண்டு.  Ten Commandments என்னும் ஆங்கிலப் படத்தின் கதை இதுதான்.  இஸ்ரேல் அவர்களுக்குக் கடவுள் அருளிய இடமாகக் கருதப்பட்டது.  அன்றிலிருந்து அதைத் தங்கள் புனித பூமியாக (Holy Land) யூதர்கள் கருதுகின்றனர்.  யூதர்களைப் புனித பூமிக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே மோசஸ் இறந்துவிட்டார்.  நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கனான் என்று அப்போது அழைக்கப்பட்ட, இப்போது இஸ்ரேல் இருக்கும், இடத்தை யூதர்கள் அடைந்தனர்.  இயேசு பிறப்பதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது நடந்ததாகக் கூறப்பட்டாலும் இதற்குச் சரித்திர ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை.  எகிப்தின் பிரமிடுகளைக் கட்டியதில் யூதர்களின் உழைப்பு எந்த விதத்திலும் இல்லை என்கிறார்கள் சில சரித்திர ஆசிரியர்கள்.  ஆனால் மேலே கூறிய படத்தில் இவை உண்மை என்று சித்தரிக்கப்படுகிறது.

    யூதர்களின் மூதாதையர்  ஆபிரகாம், ஐசக் மற்றும் ஜேக்கப் என்றும் ஜேக்கப்பின் பன்னிரண்டு மகன்களின் வாரிசுகள்தான் யூதர்கள் என்றும் பழைய ஏற்பாடு பைபிள் (Old Testament) சொல்கிறது.  (இந்த ஆபிரகாம்தான் தங்களுடைய மூதாதையர் என்று கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் கூறுகிறார்கள்.)  ஆபிரகாமின் சந்ததியினர் என்று கருதப்படும் யூதர்கள் இப்போதைய ஜெருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் வாழ்ந்தனர்.  இவர்களுடைய மன்னர்களில் டேவிட் அரசரும் அவருடைய மகன் சாலமனும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.  ரோமானியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள் ஆகிய அந்நியர்களின் படையெடுப்பால் பல முறை அவர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்தனர்.

    சாலமன் காலத்தில்  ஜெருசலேமில் கட்டப்பட்ட யூதர்கள் கட்டிய முதல் கோவில் கி.மு. 587-இல் அவர்களுடைய பகைவர்களால்  அழிக்கப்பட்டது.  அதன் பிறகு  கட்டிய இரண்டாவது கோவில் கி.பி. 70-இல் ரோமானியர்களால் அழிக்கப்பட்டது.  அதனுடைய கிழக்குப் பகுதியில் இருந்த ஒரு வெளிச்சுவரின் ஒரு பகுதி மட்டும் இப்போது இருக்கிறது.

    கிறிஸ்துவர்கள் கடவுளின் குமாரர் என்று கருதும்  இயேசு, யூத சமுதாயத்தில் ஒரு யூதராகப் பிறந்தார்.  அவர் ஜெருசலேமில் இருந்த யூதர்களின் இரண்டாவது கோவிலில் மதகுருமார்களும் செல்வந்தர்களும் ஏழைகளையும் எளியவர்களையும் தங்கள் நலத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டதையும் அவர்களைச் சுரண்டிப் பிழைத்ததையும் கண்டித்தார்.  அவர்களுக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டித்தார்.  இவர்களை அவர்களிடமிருந்து காப்பாற்றப் பல சமூக சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்றார்.  அப்போதைய யூத சமூகத்தில் இருந்த குறைகளைக் களைந்து அதை நேர் வழியில் திருப்ப முயன்றார்.    இவருடைய சீர்திருத்தங்களினால் தங்கள் நலன்கள் பாதிக்கப்படலாம் என்று எண்ணிய செல்வந்தர்கள் மற்றும் சமூகத்தில் மேல்மட்டத்தில் இருந்தவர்கள் இவரைச் சதிசெய்து ரோமானிய அரசன் பிலாத்துவின் உதவியோடு சிலுவையில் அறைந்தனர்.  அந்தக் காலத்தில் சமூக விரோதிகளைச் சிலுவையில் அறைந்து கொல்வதுதான் பழக்கமாக இருந்தது.  சமூக சீர்திருத்தவாதியான இயேசு ஒரு சமூக விரோதியாகக் கருதப்பட்டார்.  அதனால் அப்போதைய யூத சமூகம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றது.  இயேசுவின் போதனைகளை ஏற்றுக்கொண்ட சில யூதர்கள் கிறிஸ்துவ மதத்தை நிறுவினர்.  இயேசு கடவுளின் உண்மையான தூதர் என்றும் இறந்த மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்தது உண்மையென்றும் நம்பினர்.  தங்களிடையே கடவுளின் தூதர் ஒருவர் தோன்றித் தங்களில் நல்லவர்கள் எல்லோரையும் ஒரு நாள் இறைவனிடம் அழைத்துச் செல்வார் என்று நம்பிக்கொண்டிருந்த யூதர்கள், அந்தத் தூதர் இயேசு என்பதையோ, இயேசு இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதையோ  நம்பத் தயாராக இல்லை.  இயேசு ஒருவரை மட்டும் கடவுள் கல்லறையிலிருந்து உயிர்த்தெழவைத்தார் என்று இயேசுவின் ஆதரவாளர்கள் கூறியது அவர்களுக்கு வினோதமாக இருந்தது.  நல்லவர்கள் எல்லோரையும் இறைவன் கல்லறையிலிருந்து உயிர்த்தெழ வைத்திருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.  ஆனால் இயேசுவைப் பின்பற்றிய யூதர்கள் கடவுளின் தூதர் இயேசுதான் என்றும் அவர் வருவார் என்று வேதங்களில் இருப்பதாகவும் கூறினர்.

    தங்கள் சமூகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்ற இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டபோதிலும், ரோமானியர்களோடு யூதர்களின் உறவு நலிந்துகொண்டே போனது.  தங்கள் சுதந்திரத்திற்காக இவர்கள் ரோமானியப் பேரரசிற்கு எதிராகப் போராடிய போதெல்லாம் நசுக்கப்பட்டனர்.  கடைசியாக கி.பி. 132-இலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறி ஐரோப்பாவின் பல நாடுகளிலும் குடியேறினர்.   இவர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற நேர்ந்த போதும், அவர்களுடைய இரண்டாவது கோவில் ரோமானியர்களால் கி.பி. 70-இல் இடிக்கப்பட்ட போதும் இயேசுவைக் கொன்ற குற்றத்திற்காகக் கடவுள் இவர்களைத் தண்டித்தார் என்று பின்னால் வந்த சில கிறிஸ்துவ போதகர்கள் எழுதினர்.

    கடவுளால் அனுப்பப்பட்ட அவருடைய தூதரைக் கொன்றதன் மூலம் யூதர்கள் மிகுந்த  பாவத்தைச் செய்தவர்கள்  ஆகிறார்கள் என்றும் அவர்களுடைய மதமும் வேதங்களும் உண்மையானவை அல்ல என்றும் அவர்களோடு  கிறிஸ்துவர்கள் எந்த உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கிறிஸ்துவ மத போதகர்கள்  கூற ஆரம்பித்தனர்.  இதைத்தான் யூத எதிர்ப்பு (Anti-Semitism) என்கிறார்கள்.  இது உலக சரித்திரத்தில் அன்றிலிருந்து இன்று வரை இருக்கிறது.  அமெரிக்காவில் கூட இது இன்று வரை இருக்கிறது என்று சொல்லலாம்.

    கிறிஸ்துவிற்குப்  பிறகு கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளுக்கு கிறிஸ்துவ  மதம் தழைக்கவில்லை.  அது  மட்டுமல்ல கிறிஸ்துவர்கள் மற்றக் குடிமக்களாலும் மன்னர்களாலும்  பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.  மூன்றாம் நூற்றாண்டு வரை  கிறிஸ்துவர்கள் பல தொல்லைகளுக்கு  ஆளாயினர்.  ஆனால் ரோமானிய அரசன் கான்ஸ்ட்டாண்டினின் தாய்க்குக் கனவில் ஒரு சிலுவை காட்சி அளித்ததோடு இறைவன் அவளிடம் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றும்படியும் அதைப் பரப்பும்படியும் கட்டளையிட்ட பிறகு கிறிஸ்துவ மதத்திற்கு எதிர்ப்பு இல்லாமல் போனதோடு அது வேகமாகவும் பரவியது.

    கான்ஸ்ட்டாண்டின்  தன்னுடைய கடைசிக் காலத்தில்  கிறிஸ்துவனாக மாறினான்.  அவனுக்குப் பின் வந்த முதல்  தியோடிசியஸ் கிறிஸ்துவ  மதத்தை நாட்டின் அதிகாரபூர்வ  மதமாக அறிவித்தது யூதர்களின் சரித்திரத்தில் பெரிய மாற்றமாக அமைந்தது.  கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை கூடியது.  தியோடிசியஸ்  யூதர்களின் குடியுரிமைகளுக்குப்  பங்கம் எதுவும் விளைவிக்கவில்லை  என்றாலும் கிறிஸ்துவ குருமார்கள்  யூதர்களையும் அவர்களுடைய மதத்தையும் தீவிரமாக விமர்சித்தனர்.  இருப்பினும் கிறிஸ்துவிற்குப் பிறகு சுமார் 600 ஆண்டுகளாக  ரோமானியர்களின் பல கடவுள்களைக்  கொண்ட பேகன் மதம்தான் கிறிஸ்தவர்களுக்கும்  யூதர்களுக்கும் பொது எதிரியாக விளங்கியது.  பக்கத்தில் பக்கத்தில் வாழ்ந்த அவர்களுக்கிடையே  சிற்சில சச்சரவுகள் தோன்றினாலும், யூதர்களின் நலன்கள் பாதிக்கப்படாமலேயே இருந்தன.  முதல் கிரிகிரி என்னும் போப் காலத்தில் யூதர்களை வற்புறுத்திக் கிறிஸ்துவ மதத்தில் சேர்ப்பதை அவர் கண்டித்தார்.  ஆயினும் யூதர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆதரவு தொடர்ந்து நீடிக்கவில்லை.

    ஹிரக்லியஸ் என்னும்  ரோமானிய அரசன் பாரசீகர்களோடு நடத்திய யுத்தத்தில் ஜெருசலேமை இழந்த பிறகு அந்த இழப்பிற்கு யூதர்கள் பாரசீகர்களோடு சேர்ந்து செய்த சதிதான் காரணம் என்று நினத்ததால் யூதர்களின் மதப் பழக்க வழக்கங்களை அடியோடு நிறுத்தினான்.  அவர்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டன.  அதே சமயம் பிரான்ஸிலும் ஸ்பெயினிலும் யூதர்கள் வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.  ஸ்பெயினில் 694-இல் யூதர்களுக்குக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ வேண்டும் அல்லது அடிமைகளாக வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.  பின்னால் பல நாடுகளிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டதற்கு அரசியல் காரணங்கள், அந்நியர் வெறுப்பு, தங்கள் பிரச்சினைகளுக்கு அவர்களைப் பலிகடா ஆக்குவது போன்ற பல காரணங்கள் இருந்தாலும், தங்களுடைய இறைவனின் தூதரான இயேசுவைக் கொன்றவர்கள் என்ற காரணத்தால் கிறிஸ்துவர்கள் யூதர்களை வெறுத்ததுதான் முதன்மைக் காரணம்.

    வரலாற்றின் இடைக்  காலமான 600-1500-இல் யூதர்கள் பல நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்; பல கிறிஸ்துவ போப்கள் அவர்கள் மீது பல அவதூறுகளைக் கிளப்பினர்.  பல யூதர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்கினர்.  வியாதிகள் மனிதர்கள் செய்த தவறுகளால் வருபவை, மத குருமார்களிடம் சென்றுதான் அதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் யூத மருத்துவர்களிடம் வைத்தியம் செய்துகொள்ள வேண்டாம் என்றும் கிறிஸ்தவ போப்புகள் மக்களிடம் கூறினர்.  யூதர்கள் வணிகம், வியாபாரம் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினர்.  அதிலிருந்தும் இவர்கள் விலக்கிவைக்கப்பட்டதால் யூதர்கள் வட்டிக்குக் கடன் கொடுக்கும் பழக்கத்தை ஆரம்பித்தனர்.  அதிக வட்டி வசூலிக்கிறார்கள் என்னும் குற்றமும் யூதர்கள் மேல் சுமத்தப்பட்டது.  (அதிக வட்டி வாங்கும் பழக்கம் யூதர்களிடம் இருந்ததால் இயேசு அவர்களைக் கண்டித்திருக்கிறார்.)

    ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி, இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்த பிறகு முஸ்லீம் அரசர்கள் பாலஸ்தீனத்தைப் பிடித்துக்கொண்டனர்.  அவர்களை வென்று பாலஸ்தீனத்தை மீட்கச்சென்ற, பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த சிலுவைப் போராளிகள் (crusaders) (கிறிஸ்துவ மதத்தைக் காப்பாற்ற வந்தவர்கள்) வழியில் பல யூதர்களுக்கும் நிறைய தீமைகள் விளைவித்தனர்.  முஸ்லீம் அரசர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது ஸ்பெயின் அரசு யூதர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் அதிக வரி விதித்தது என்றாலும் யூதர்களை பலவந்தமாக மதம் மாறச் சொல்லவில்லை.  ஆனால் மறுபடி கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் ஆட்சியைப் பிடித்த பிறகு யூதர்கள் மீது 1265-இல் மத விசாரணையை (Inquisition) ஆரம்பித்தனர்.  கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய யூதர்களின் வாரிசுகளில் பலர் மத போதகர்களாக, துறவிகளாக மாறிய போதிலும் விசாரணை அவர்களையும் விட்டு வைக்கவில்லை; அவர்கள் உண்மையிலேயே மதம் மாறிவிட்டார்களா என்று பரிசோதித்தனர்.  1492-இல் போப் வெளியிட்ட ஆணை, கிறிஸ்தவர்கள் அல்லாத முஸ்லீம்களும் யூதர்களும் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலொழிய நாட்டை விட்டுக் கடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது.  (இதே போப்தான் ஸ்பெயின் அரசியால் அமெரிக்கக் கண்டத்திற்கு அனுப்பபட்ட கொலம்பஸ் செல்லும் இடங்களில் கிறிஸ்துவரல்லாதவர்களைச் சந்தித்தால் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் அவர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொள்ளலாம் என்றும் அனுமதி கொடுத்தார்.  இப்படி போப்பின் ‘ஆசீர்வாதத்தைப்’ பெற்ற கொலம்பஸும் அவரைப் பின்பற்றிச் சென்றவர்களும் அமெரிக்கக் கண்டங்களில் பல பழங்குடி மக்களைக் கொன்று குவித்தனர்.)

    பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஜெர்மனியிலும் யூதர்கள் பல கொடுமைகளுக்கு ஆளாயினர்.  இந்தக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கப் பலர் போலந்து போன்ற நாடுகளுக்குச் சென்றனர்.  போலந்தில் யூதர்களின் வணிகத் திறமையைக் கற்றுக்கொள்வதற்காக பல செல்வந்தர்கள் இவர்களை ஆதரித்தனர்.  யூதர்கள் அங்கு அவர்களுடைய கல்வி நிறுவனங்களை நிறுவினர்.  ஆனால் மறுபடி பதினேழாம் நூற்றாண்டில் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களினால் யூதர்கள் பாதிக்கப்பட்டனர்.

    ரஷ்யப் பேரரசி கேத்தரின்  பத்து லட்சம் யூதர்களை ரஷ்யாவில்  குடியேற அனுமதித்தார்.  அரசி இவர்களுக்கு ஆதரவு  அளித்தாலும் அவர்களை மண்ணில்  பாடுபடும் விவசாயிகளாகவே  அனுமதித்திருந்தார்.  யூதர்களைத் தொழில்களில் அனுமதிக்கவில்லை.  இவருக்குப் பின் வந்த முதலாம்  அலெக்ஸாண்டர், முதலாம் நிக்கலஸ் காலத்தில் யூதப் பையன்கள் பன்னிரெண்டு முதல் இருபத்தைந்து வயது வரை ராணுவத்தில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர்.  யூதர்களுக்குப் பாதுகாப்பில்லாமல் இருந்ததால் பெரிய வெள்ளி போன்ற நாட்களில் (அன்றுதான் இயேசு சிலுவையில் அறையப்பட்டதைக் கிறிஸ்துவர்கள் நினைவுகூருவார்கள்) யூதர்கள் வெளியே வராமல் வீட்டிலேயே அடைந்துகிடந்தனர், சில கிறிஸ்துவர்கள் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம் என்பதால்.

    பதினாறாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த, புராடஸ்டெண்ட் கிறிஸ்துவப் பிரிவைத் தோற்றுவித்த மார்ட்டின் லூத்தர் யூதர்களைப் பற்றிப் படித்திருந்ததால் ‘இயேசு ஒரு யூதராகப் பிறந்தார்’ என்னும் நூலை எழுதி யூதர்களை கிறிஸ்துவ மதத்திற்கு இழுக்கலாம் என்று நினைத்தார்.  ஆனால் அப்படி நடக்காததால் யூதர்களையும் அவர்கள் மதத்தையும் தூற்ற ஆரம்பித்ததோடு வங்கித் தொழில், வர்த்தகம் ஆகியவற்றிலிருந்து யூதர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், முடிவாக பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டதைப் போல் ஜெர்மனியிலிருந்தும் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்தார்.

    பல நாடுகளில் யூதர்கள் தங்கள் திறமையினால் செல்வந்தர்களாகவும் அரசியலில் அதிகாரம் உள்ளவர்களாகவும்  விளங்கினாலும் அவர்களுடைய இந்த வாழ்க்கை வெற்றியே மற்றவர்களுக்கு அவர்கள் மேல் பொறாமையையும் வெறுப்பையும் உண்டாக்கியது.  மேலும் யூதர்கள் தாங்கள்  மற்றவர்களை விட உயர்ந்தவர்கள்  என்ற எண்ணத்தையும் எப்போதும்  கொண்டிருந்தனர்.  பல நாடுகளில்  மற்றவர்களிடமிருந்து தனித்தே  வாழ்ந்திருக்கிறார்கள்.  குடியேறிய எல்லா இடங்களிலும்  அந்தந்தச் சமுதாயங்களோடு  அவர்களால் இணைய முடியவில்லை.  இதனாலோ என்னவோ அந்தச் சமுதாய மக்களும் இவர்களைச் சரியாக நடத்தவில்லை.  தங்கள் யூத மதத்தையும் அதன் கோட்பாடுகளையும் இவர்களுடைய மதத்தலைவர்கள் தவறாமல் கடைப்பிடித்திருக்கிறார்கள்.  குடியேறிய நாடுகளில் பேசப்பட்ட மொழிகளைக் கற்றுக்கொண்டாலும் மதச் சடங்குகளில் தங்கள் மொழியான ஹீப்ருவைத் தொடர்ந்து உபயோகித்திருக்கிறார்கள்.  ஜெர்மனியில்தான் யூதர்களின் எண்ணிக்கை மற்ற எல்லா நாடுகளையும் விட அதிக அளவில் இருந்தது.  இங்கு ஜெர்மன் மொழியிலிருந்து உருவாகிய யிட்டிஷ் (Yiddish) மொழியைப் பேசினர்.

    ரஷ்யா, போலந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின் என்று பல நாடுகளிலும் யூதர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் ஜெர்மனியில் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்த ஹிட்லர் இவர்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்தது ஐரோப்பாவில் இருந்த யூத எதிர்ப்பின் உச்சக் கட்டம் எனலாம்.  டிசம்பர் ஆறாம் தேதியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் கூறியிருப்பது போல் ஹோலகாஸ்ட் (Holocaust) என்று அழைக்கப்படும், ஹிட்லர் நடத்திய, யூதர்களின் படுகொலையைத் தொடர்ந்து தப்பிய யூதர்கள் ஜெர்மனியை விட்டு அகதிகளாக ஓடிவராமல் இருந்திருந்தால் இஸ்ரேல் என்ற நாடே உருவாகியிருக்காது.

    பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்தே தங்களுக்கென்று ஒரு நாடு இருந்தால்தான் தங்களுடைய  நலன்களைக் காத்துக்கொள்ள  முடியும் என்று நினைக்க  ஆரம்பித்த யூதர்கள் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று அப்போதிலிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

    யூதர்கள் முதலிலிருந்தே – அதாவது பல ஆயிரம் ஆண்டுகளாகவே – தங்கள் எல்லோரையும் தங்களுடைய பழைய சொந்த நாடான பாலஸ்தீனத்தில் ஒன்று சேர்க்கக் கடவுளின் தூதர் ஒருவர் வருவார் என்று காத்திருந்தார்கள்.  இருந்தாலும் ஐரோப்பாவில் நிலவிய யூத எதிர்ப்பு கடவுளின் தூதர் வருவதற்காகக் காத்திருப்பதை விட தாங்களாக முயன்று தங்களுக்கென்று தனி நாடு ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இவர்களிடம் தோற்றுவித்தது.  மேலும் அந்த நாடு அவர்களின் பழைய புண்ணிய ஸ்தலமான பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினர்.  இவர்கள் அங்கு வாழ்ந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன என்பதையும் அங்கு இப்போது வேறு இன மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்பதையும் துரதிருஷ்டவசமாக (தங்களின் வசதிக்காக) அவர்கள் மறந்துவிட்டிருந்தனர்.  இவர்களின் இந்த ஆசையின் (பேராசை என்று கூடச் சொல்லலாம்) விளைவே இப்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்கு வித்திட்டது என்று கூறலாம்.  (இந்தப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லையென்றும் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இயேசு பூமிக்கு மறுபடி வந்து உலகம் பூராவையும் தன் ஒரே குடையின் கீழ் பாரபட்ச முறையில் ஆள்வார் என்றும் அப்போது உலகில் நேர்மை, நியாயம் கோலோச்சும் என்றும் பைபிளில் கூறப்பட்டிருக்கிறதாம்.  காஷ்மீர் பிரச்சினை போல் இப்போதைக்குத் தீர்வு காண முடியாத பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.  இந்த இரண்டு பிரச்சினைகளும் பிரிட்டிஷ் அரசால் ஏற்படுத்தப்படவை என்று கூறினால் அது மிகையாகாது.  இந்தப் பிரச்சினை உருவான கதையைப் பின்னால் பார்ப்போம்.)

    (தொடரும்)

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-22

    பெருவை பார்த்தசாரதி

    அன்றாடம் அதிகாலை எழுந்தவுடன், தேனீர் அருந்திவிட்டு, தினசரிகளை முழுவதும் படிக்காமல், தலைப்புச் செய்திகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவசரமாக ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பி, மனதுக்குப் பிடித்த விஷயங்களில் ஓரளவுக்கு கவனம் செலுத்தும் போது, முழுவதும் படிக்க முடியாமல் அலுவலகத்துக்கு நேரம் ஆகிவிடுகிறது. அவசர அவசரமாக குளித்து முடித்துவிட்டு உடலில் துவளும் தண்ணீர்த் துளிகளைக் கூட துவட்டாமல் அப்படியே நின்று கொண்டு சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அவசரகதியில் அலுவலகம் சென்று விடுகிறோம். அவரவர் வேலைக்கேற்றபடி அயறும் வரை உழைத்துவிட்டு மறுபடி பசியாறுகிறோம். அந்திசாயும் வேளையில் சிற்றுண்டி அருந்திவிட்டு, மறுபடி கணிணியின் மானிட்டரில் முகத்தை நுழைத்து, மெளஸைக் (mouse) கையில் பிடித்துக்கொண்டு, காதில் ஹெட்போனுடன் நேரம் தெரியாமல் எதையோ, யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டேயிருக்கிறோம். அலுவலகப் பணி முடிந்தவுடன் வாகனத்தை வேகமாக ஓட்டி, வீடு வந்து சேர்கிறொம். என்ன சாப்பிடுகிறோம் என்றுகூடத் தெரியாமல், காதைப் பிளக்கும் சத்தத்துடன் டிவி பார்த்துவிட்டு, பத்து பதினோரு மணிக்கு நித்திரா தேவி அருளால் கண்ணைமூடி, உண்ட களைப்பில் கிடந்து உறங்குகிறோம். அடுத்த நாள் காலை அதிகாலையில் எழுந்திருப்பதற்கு அலாரம் வைத்துவிட்டு, மணி ஒலித்ததும் நிதானமாக அணைத்துவிட்டு, மீண்டும் தூங்குவதற்கு எத்தனிக்கிறோம். இதுதான் இன்றய வாழ்க்கை முறை என்பது பொதுவாக அனைவருக்குமே பொருந்தும் விஷயமாக ஆகிவிட்டது.

    இயல்பாக நம்முடைய வாழ்க்கை முறையை நாம் சிந்தித்துப் பார்த்தோமானால், நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் நாம் எதற்காகச் செய்கிறோம் என்று கூடத் தெரியாமல் அதைச் செய்துகொண்டே இருக்கிறோம். இவற்றையெல்லாம் தீர ஆராய்ந்து பார்த்தால், பல விஷயங்கள் நமக்குப் புலப்படாது. இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்த நமது முன்னோர்கள் பின்வரும் சந்ததியினருக்கு சூட்சுமமான விஷயங்களை எளிதில் புரியும்படி ஏட்டில் எழுதிவைத்துச் சென்றிருக்கிறார்கள். இதையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ளவோ?..சிந்தித்துப் பார்க்கவோ நேரமில்லாமல் எதை எதையோ தேடி அலைந்து கடைசியில் மனிதப் பிறவி எடுத்த வாழ்க்கை முற்றுப் பெறாமலேயே முடிந்து விடுகிறது. நம்முடைய உடலும் உள்ளமும் சில நாள் சுறு சுறுப்பாக இயங்குகிறது, மறுநாள் உழைக்க மறுக்கிறது. நமது வயிறும் நான்கு வேளை உண்டதை, ஒரு சில நாள் ஒரு வேளை போதும் என்று மறுக்கிறது. சுறுசுறுப்பாக இயங்கிய மூளை சில நேரம் மக்கர் செய்து, சிந்தனையை மழுங்கச் செய்து, தேவையில்லாத கற்பனை உலகத்துக்குள் அழைத்துச் சென்று விடுகிறது. அமைதியாக இருந்த மனதுக்குள் புயலை உண்டாக்குகிறது. ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு பயம் வந்து, எதிர்காலத்தை நம் கண்முன் காட்டி நம்மை ஆட்டிப்படைக்கிறது. ஒரு வீடுதானெ இருக்கிறது, இரண்டு குழந்தைகள் ஆயிற்றே, இன்னமும் அலுவலகத்தில் அசிஸ்டண்டாகவே (&) இருக்கிறோமே, நம்மோடு சேர்ந்தவர்கள் அனைவரும் வானில் பறக்கும் (&) போது, நம்மிடம் கார் மற்றும் ஏசி இல்லையே, என்றெல்லாம் மனம் அலைபாய்கிறது. அடுத்த ஐந்து வருடத்தில் ரிடையர்மெண்ட் (&) வரப்போகிறது, அதற்குப் பிறகு எந்த அலுவலகத்தில் ‘கன்சல்டண்ட்’ (&) ஆகப்போகிறோம்?…………….மனது இன்றிலிருந்தே கணக்குப் போடத் தொடங்குகிறது. பன்னெடுங்காலத்திற்கு நல்ல வாழ்க்கை வாழ பட்ஜெட் போட்டுக்கொண்டே ஓவ்வொரு நாளையும் கூட்டி அதை மாதமாக்கி, வருடமாக்கி காலம் கழிந்து கொண்டே இருக்கிறது.

    இப்படியாக, சிறுவயது முதல் யாரோ ஒருவரது வழிகாட்டுதலின் உதவியுடன், பல இன்னல்களைக் கடந்து படிப்படியாக முன்னேறி, பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து, 25 வயது நிரம்பிய வாலிபனாக மனதில் பலவித ஆசைகளுடன் வேலைதேடிச் செல்லும்போது சிந்தனையும், செயலும் சுறுப்பாக செயல்படுகிறது. விருப்பப்பட்ட வேலை கிடைத்தவுடன் மனது மகிழ்ச்சியில் தாண்டவமாடுகிறது. முழு குதூகலத்துடன் எட்டாவது மாடியில் உள்ள அலுவலகத்துக்கு, லிஃப்டைத் தவிர்த்து மாடிப்படிகளை  வேகமாகக் கடந்து சென்றடைகிறோம். பால்ய வயதில் நடந்த சம்பவங்கள் அவ்வப்போது நினைவுக்கு வருகிறது. வேகமாக ஓடும் ஆற்றிலே எதிர் நீச்சல் போட்டதெல்லாம் நினைவுக்கு வரும். எங்கும் எதிலும் வேகம்தான். பல மைல் தொலைவில் உள்ள பள்ளிக்கு, சைக்கிளில் பத்து நிமிடத்தில் சென்றடைந்தோம். சைக்கிள் இல்லையேல் நடையும் ஓட்டம்தான். அன்றைக்குத் தொடர்ந்த ஓட்டம் இன்று வரையில் தொடர்கிறது. ஒவ்வொரு நாளாக ஓட்டமெடுத்து,  பல வருடங்கள் கடந்து விட்டதை நினைக்கும்போது மனதுக்கு மலைப்பாகக் தோன்றும். இன்றும் ஓய்வில்லாமல் ஓடி ஓடி உழைத்து, நாம் நினைத்தையெல்லாம் அடைந்து விட்டோம். சாதிக்க நினைத்தை சாதித்துவிட்டோம். இன்று நம் வயதைக் கேட்டால், ஓட்டமாக ஓடிய அனுபவங்களை முன்வைத்து 45, 50, 60 என்று நம் வயதைச் சொல்லிவிட்டு, மீண்டும் வாழ்க்கைப் பாதையில் ஓட எத்தனிக்கிறோம். ஆனால் முடியவில்லை, நடை தளர்ந்து, வேகம் குறைந்து, தள்ளாமையால் ஓடமுடியாமல் நிதானத்தை அடைந்து விடுகிறோம்.

    பாதை முடிந்துவிட்டாலும் பயணம் முடியவில்லை என்பது போல ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி தினமும் கவலையுடனோ, கவலை இல்லாமலோ, ஒரு நாள் என்பது, ஒரு நிமிடம் போல் கழிந்து விடுகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் எங்கு நாம் ஓடிக்கொண்டிருகிறோம், எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று கூடத் தெரியாமல், வாழ வேண்டிய வாழ்க்கையேல்லாம் சட்டெனக் கழிந்து கொண்டே வருகிறது. ‘நாளை’ என்பதே நிச்சமில்லாமல் இருக்கும்போது, அடுத்த ஐந்து, பத்து ஆண்டுகள் என்றில்லாமல், நூற்றாண்டுகளை நல்ல முறையில் கடக்க நம் மனம் எந்நேரமும் கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறது. ஓய்வில்லாமல் மனதில் எழும் கேள்விகளுக்கு விடை தேடி எண்ண அலைகள் விரிவடைந்து கொண்டே செல்கிறது.

    குடியிருக்கும் வீடு பழுதடைந்து, கூரை எந்த நேரமும் விழக்கூடிய நிலையில் இருந்தால், அந்தவீட்டில் குடியிருப்போமா, இதைப்போலவே, இந்த உடம்பு நன்றாக இருக்கும் வரையில், நம்மால் இயன்றவரை பொருள் ஈட்டுகிறோம். இங்கிருப்பது போதாதென்று சீமை தேடி ஓடுகிறோம். மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், பார்க்கும் இடமெல்லாம் விலையுயர்ந்த பொருட்கள், மார்பில் தவழும் முத்து மாலைகள் இவையெல்லாம் நமது உடம்பு நன்றாக இருக்கும்போது ஓடி, ஓடி சம்பாதித்தவை. வசதியாக வாழும்போது, உற்றார், உறவினர், நண்பர்கள், சுற்றத்தார் போன்றோர்களின் கூட்டம் நம் அருகே என்றுமே உண்டு.  வசதி இல்லாதபோதோ அல்லது கடைசி காலத்தில் யார் நம்மோடு கூட வருவார்கள் போன்ற எண்ண அலைகள் வரும்போது, ‘வீடு வரை உறவு, காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ’?…………….என்ற கவியரசர் பாட்டுதான் நம் நினைவுக்கு வரும். அந்திமகாலத்தில் உயிர்பிரியும்போது இவையெல்லாம் கூட வருமா?  என்றால், “எதுவுமே கூடவராது” என்பதுதான் நமக்கு முன் வாழ்ந்த ஞானிகளின் கூற்று. இத்தொடரில் இடம்பெற்ற அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைப்பது போல், சிறந்த சிவனடியார்கள் என்ற பெயர்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரும், திருமாலே சரணாகதி என்று வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரும் நமது சிந்தனைக்கு விருந்தாக, செவிக்கு இனிதான பாடல் மூலம் மனதில் எழும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக நமக்கெல்லாம் நல் வழிகாட்ட வருகிறார்கள்.

    ஒன்றே ஒன்றைத்தவிர, நாம் வாழ்ந்த காலத்தில்  சம்பாதித்தது எதுவுமே இறந்த  பிறகு நம்முடன் வராது என்கிறார் திருமூல நாயனார். நம்முடன் காலம் பூராவும் வாழ்ந்து, நம்மோடு ஒட்டி உறவாடிய மனைவி மற்றும் நாம் சம்பாதித்தையெல்லாம் அனுபவித்து வாழ்ந்த நம் மக்களும் கூட வரமாட்டார்கள்.  அப்படியென்றால் எதுதான் நம்முடன் கடைசி வரையில் வரும்?…என்ற வினாவுக்கு அருமையான பதிலை இங்கே நம் முன் வைக்கிறார் நாயனார். வாழ்க்கையின் அனுபவத்தில் நாம் பெறுகின்ற ஞானமும், நாம் கற்றுக்கொண்ட நல்லொழுக்கம் தவிர வேறொன்றும் கூட வராது என்பதை நான்கே வரிகளில் பின் வருமாறு விளக்குகிறார்:-

    பண்டம்  பெய் கூரை பழவி விழுந்தக்கால்
    உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
    கொண்ட விரதமும் ஞானமும் அன்றி
    மண்டி அவ்வழி நடவாதே.

    நாயனாரை ஆழ்வாரோடு  ஒப்பிட்டு நோக்கையில், வாழ்க்கை அனைத்தையும் பெருமானிடத்தில்  சமர்ப்பித்து விட்டு, இப்பூவுலக  வாழ்க்கையில் கிடைக்கும் பணம், பதவி, புகழ் எதுவுமே  வேண்டாமென்கிறார் ஆழ்வார்களில் ஒருவரான விப்ர நாராயாணர். வாழ்க்கையில் வழிதவறும் போது, உறவினர்கள் அல்லது நண்பர்கள் போன்றோர் நமக்குதவ முன்வருவார்கள். ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து, வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த ஆழ்வாருக்கு உதவ அரங்கனே வந்தான் என்கிறது வரலாறு. ஒவ்வொரு மனிதனும் நிம்மதி தேடி, அது எங்குமே கிடைக்காமல் கடைசியில் இறைவனைச் சரணடைவது இயற்கை. துன்பம் வரும்போது இறைவனை நினைந்து பிறகு மகிழ்ச்சியில் திளைக்கும்போது மறந்து விடுவது மனித இயல்பு. உலகத்திலேயே உயர்ந்த பதவியினால் கிடைக்கும் சுகத்தைவிட இறையுணர்வுதான் மிகப்பெரியது என்கிறார் ஆழ்வார். அடியார்களின் காலடி பட்ட மண்ணை தன் தலையில் சுமந்து தொண்டரடிப்பொடி என்ற பெயர் பெற்ற இவர் இறைவனிடம் பின்வருமாறு வேண்டுகிறார்.

    பச்சைமா மலைபோல்  மேனி, பவளவாய்க் கமலச்  செங்கண்
    அச்சுதா அமரர்  ஏறே, ஆயர்தம் கொழுந்தே என்னும்
    இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

    வாழ்க்கைப்  பயணத்தில் சாதாரண மனிதன் அனுபவிக்கின்ற இன்ப துன்பங்கள் அனைத்தையும் சமாளிக்கும் திறனையும், கடைபிடிக்க வேண்டிய அறநெறிகளையும் மேற்கூறிய ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமல்ல, அரிய பெரிய பல்லாயிரம் பாடல்கள் (ப்ரபந்தம்-4000, திருமந்திரம்-3000) மூலம் நாம் எளிதில் அறிந்துகொள்ளுமாறு நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

    தொடரும்…….

    Share
  • உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணும் வழி

     

    தேமொழி

     

    மனித இனத்தினர் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதைப் பற்றிச் சில தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர் என்கிறார் ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ். நெதர்லாந்தில் இருக்கும் ‘டச்சு’ ஆராய்ச்சி நிறுவனமான ‘ப்ளாண்ட் லாபில்’ தோட்டயியல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார் ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ் (Gertjan Meeuws, Horticultural Engineer at Dutch based group called PlantLab, Netherlands).

     

    Gertjan Meeuws

     

    பல்கிப் பெருகி வரும் மனித இனத்திற்குத் தேவையான உணவுத் தேவைகளைத் தற்பொழுது இருக்கும் விவசாயத் தொழில் நுட்பத்தை வைத்தே சமாளித்துவிட முடியும் என்பது தவறான கருத்துகளில் முதன்மையானது என்கிறார் இந்த ஆராச்சியாளர்.

    உலக மக்கட்தொகை இப்பொழுது ஏழு பில்லியனில் இருந்து ஒன்பது பில்லியன்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் பெரும்பான்மையான மக்கள் நகரங்களில் வசித்து வருகிறார்கள். மக்கள் அனைவர்க்கும் தேவையான உணவை உற்பத்தி செய்ய மிக முக்யமாகத் தேவைப்படுவது நீர். எதிர்காலத்தில் பெட்ரோலை விட நீர்தான் ஒரு நாட்டின் முக்கிய சொத்து எனக் கருதப்படும் நிலை வந்துவிடும்.

    அத்துடன் அனைவரது உணவுத் தேவையையும் நிறைவு செய்வதற்காக விவசாயத்திற்கு பொருத்தமற்ற நிலங்களையும் விளைநிலமாக மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இது போன்ற ஒவ்வாத வளரும் சூழ்நிலைகளில் உள்ள விளைநிலங்களில் வளரும் தாவரங்கள் பூச்சிகளினாலும், நோய்களினாலும் எளிதில் பாதிக்கப்படும். இதனை நிவர்த்தி செய்ய நாமும் வேதிப்பொருட்களில் தயாரிக்கப்பட்ட உரங்களையும், பூச்சிக்கொல்லி இரசாயன மருந்துகளையும் உபயோகிக்க வேண்டிவரும். மேலும், இவ்வாறு பயிர் செய்த உணவை தேவையான இடத்திற்கு கொண்டுசென்று சேர்க்கவும், மீண்டும் விளைநிலங்களுக்கு கொள்முதல் செய்ய வரும் செய்கைகளே 35 சதவிகித போக்குவரத்து ஊர்திகளின் வேலையாகவும் இருக்கும். இவை போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு நாம் உணவு உற்பத்தி முறையில் பலப் புதுமைகள் செய்யவேண்டும்.

     

    விவசாயத்தைப் பற்றிய மற்றொரு தவறான கருத்து: பயிர் வளர்ப்பு இயற்கை முறையைச் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று கருதுவது. இக்கருத்தும் உணமையல்ல என்பது ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ் அவர்களின் கருத்து.

    இயற்கையிலோ அல்லது சிறந்த சோதனைக்கூட சூழ்நிலையிலோ தாவரங்கள் தங்களுக்குத் தேவையாக 9% திறனை மட்டுமே உபயோகித்துக் கொள்கின்றன. தாவரங்கள் எந்த சுற்றுப்புற சூழலுக்கும் ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்டு உயிர் வாழும் தன்மை வாய்ந்தவை. தாவரங்களின் இந்தப் பண்பினை நமக்கு சாதகமாக்கி விவசாயத்தில் புதுமைகளை நாம் புகுத்தலாம்.

     

    தாவரம் நன்கு வளர நல்ல சூரிய ஒளி தேவை என்பதும் மற்றொரு தவறான கருத்து என்கிறார் ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ்.

    தாவரங்கள் சூரிய ஒளிக்கற்றையில் உள்ள சிவப்பு, நீலம் மற்றும் ஊதா வண்ண (Purple) ஒளிக்கதிர்களை மட்டுமே உபயோகிக்கின்றன. இதனால் செயற்கைமுறையில் கட்டிடங்களின் உட்புறம் விவசாயம் செய்து உணவு உற்பத்தியைப் பெருக்க நம்மால் முடியும். நகரங்களில் ஊர்திகளை நிறுத்துவதற்கு கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டிடங்கள் போன்றவற்றில் பயிர் செய்யத் தகுந்த சூழ்நிலையை உருவாக்கி ஊதாக்கதிர்களையும், குறைந்த அளவு நீரையும் பயன்படுத்தி உணவு உற்பத்தியைப் பெருக்க முடியம். பயிர் செய்ய சூரிய ஒளியை உபயோகிக்கத் தேவையில்லை என்ற காரணத்தால் அடுக்குமாடிக் கட்டிடங்களைப் பயன்படுத்துவது ஏதுவாகிறது.

    ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு உணவாக 200 கிராம் காய் மற்றும் பழங்களை உற்பத்தி செய்ய ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பளவு போதுமானது. எனவே ஒரு லட்சம் மக்களுக்கு தேவையான தாவரங்களைப் பயிரிட நூறு மீட்டர் நீள அகலமுள்ள, பத்து அடுக்குகளைக் கொண்ட அடுக்கு மாடிக்கட்டிடம் போதுமானது.

    plant lab production unit

    indoor farming

    Plant lab product

     

    இந்த முறையைப் பயன்படுத்தினால், தாவரங்களின் மரபணுக்களில் எந்த ஒரு மாற்றமும் செய்யத் தேவையில்லாமலே, சுத்தமான சுகாதாரமான முறையில், ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த தாவரங்களைக் குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி, இரசாயன பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல், குறைந்த செலவில் விளைவிக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த பயிராக வளர்வதால் நோயை எதிர்க்க மருந்துகள் தேவையில்லை. தோட்டங்களில் அல்லது வயல்வெளிகளில் பயிரிடுவதைவிட 40% அதிக மகசூலை 90% குறைந்த அளவு நீரை உபயோகித்துப் பெற முடியும். அதனால், இந்த விவசாய முறை, பயிரிட நிறைய நிலப்பரப்பும், நீரும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் தேவை என்பது எவ்வளவு தவறான கருத்து என்பதையம் புலப்படுத்துகிறது.

     

    indoor farming benefits

     

    எந்த ஒரு தாவரத்தையும் இந்த உட்புறப் பண்ணை முறையைப் பயன்படுத்தி பயிரிட முடியும். தக்காளி, ஸ்டராபெர்ரி, கீரைவகைகள், வெள்ளரிக்காய், அவரை, மருத்துவத்திற்கான மூலிகைகள், என எந்தப் பயிரையும் பயிரிடலாம். இதனால், தாவரங்கள் நன்கு வளரக்கூடிய தட்பவெப்ப நிலை உள்ள இடங்களில் பயிரடப்பட்டு, அதிக தொலைவில் வசிப்பவர்களுக்கு ஊர்திகளில் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும் என்ற கருத்தும் தவறானக் கருத்தாகிறது. ஆனால் தற்பொழுது அதிக தொலைவு பயணத்திற்கு ஏற்றவாறு காய்கனிகள் அவைகள் பக்குவம் பெரும் முன்னரே பறிக்கப்பட்டு அவை அழுகி வீணாகும் நிலை குறைக்கப்படுகிறது. சரியான தருணத்தில் அறுவடை செய்யாத காய்கனிகள் சுவையற்றும் இருக்கின்றன.

    தட்பவெட்பத்தைக் கட்டுப்படுத்திப் பயிரிடப்படும் உட்புறப் பண்ணை முறை இந்த நிலையை மாற்றியமைக்கும். நுகர்வோர்கள் இருக்கும் இடத்திலேயே பயிரிட்டு, பக்குவமான நேரத்தில் தேவையானவற்றை மட்டும் பறித்துப் பயன்படுத்தலாம், இதனால் வீணாவதும் தவிர்க்கப்படும்.பழங்காலத்தில் மக்கள் எவ்வாறு தங்கள் தேவைக்கேற்ப சுவையான காய்கனிகளை உடனே பறித்துப் பயன்படுத்தினார்களோ, அது போலவே நாமும் பயன் பெறலாம். தட்பவெட்பத்தைக் கட்டுப்படுத்திப் பயிரிடப்படும் உட்புறப் பண்ணை முறையினால் எக்காலத்திலும், இரவோ பகலோ, கோடையோ மழைக்காலமோ எந்தக் காலத்திலும் பயிரிடலாம். அது போலவே எந்த ஒரு இடத்திலும், துருவப் பிரதேசம், பாலைவனம், பெரிய நகரங்கள் என எந்த இடங்களிலும் பண்ணைகள் அமைக்கப்பட்டு பயிரிடமுடியும்.

     

    பொதுவாக விவசாயத்தைப் பொறுத்தவரை உள்ள மற்றொரு தவறான கருத்து பெரிய அளவில் பயிரிடப்பட வேண்டும் என்பது. இந்த உட்புறப் பண்ணை முறையினால் அந்தக்கருத்தும் பொய்யாகிறது.

    உட்புறப் பண்ணை முறையில் பயிரிட சிறிய இடங்கள் கூடப் போதுமானது. எனவே, காய்கறி அங்காடிகளின் ஒரு பகுதியிலோ, உணவகங்களின் ஒரு பகுதிகளிலோ, ஏன் நமது வீட்டின் சிறிய சமயலறைகளிலோக் கூட நம் தேவைக்கேற்ப பயிரிட முடியும். நமக்குத் தேவையான தக்காளிகளை நம் சமயலறையிலேயே அலமாரியைத் திறந்தும் பறித்துக் கொள்ளலாம். உன் சமையலறையில் நான் கீரையா? புதினாவா? என்றும் பாடலாம்.

     

    அனைத்தையும்விடத் பெருந்தவறான கருத்து இதுபோன்ற முறையில் பயிரிடத் தயாராவதற்குப் பல்லாண்டுகள் ஆகும் என்பது. உட்புறப் பண்ணை முறையில் பயிரிடுவதை இன்றே எந்த நாட்டிலும், இந்தியா உட்பட, தொடங்க முடியும். அதிக மூலதனம் தேவை இல்லை.

     

    சிந்தனைக்கு: முதற்படியாக சென்னை மாநகரின் கடற்கரையை ஒட்டி (நீரில்லாவிட்டால் கடற்கரை ஊற்று நீரைக்கொண்டு பயிரிடும் வகையில்) அரசு ஒரு அடுக்கு மாடியைக் கட்டி உட்புறப் பண்ணையை அமைக்கலாம். அதனை ஆர்வமுள்ளவர்களுக்கு குத்தகைக்கு விட்டு வருமானமும் ஈட்டலாம். வெளிப்புறம் காய்கனிகளை விற்க அங்காடியும் துவங்கலாம். அது உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற முதல் கட்டப் பரிசோதனை நடவடிக்கையாக இருக்கும்.

     

    “பண்ணையெல்லாம் பொன் கொழிக்கச் செய்திடுவோம், அதில் பன்மடங்கு உற்பத்தியைப் பெருக்கிடுவோம்”

     

    ஆதாரம்: TEDxBrainport 2012 – Indoor planting
    படங்கள் உதவி: PlantLab, Netherlands
    காணொளி சுட்டி: http://www.youtube.com/watch?v=Ct3dK2_ksvk

     

    Share
  • ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1

     

                                                                                                         (1819-1892)


                                                                                  (புல்லின் இலைகள் -1)

                                                                                மூலம் : வால்ட் விட்மன்


                                                               தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

    வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு:

    அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன் 1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார்.  தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார்.  அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார்.  ஆகவே அவர் சிறு வயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டிதாயிற்று.  பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ்களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.  அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27 ஆவது வயதில் புரூக்லின் தின இதழின் ஆசிரியரானார். புரட்சிகரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேச உணர்ச்சியில் எழுதப் பட்டவை.  அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடியவர்.  படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்ட சிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது.

    வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப்படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத் தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன !  அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்ட வசன நடைக் கவிதைகளாய் [Free Verse] எழுதப் பட்டவை.  அவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டி யவருள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் [Ralph Waldo Emerson].  1855 இல் 12 பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார்.  பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு ஆரம்பத்தில் அமெரிக்கர் ஆதரவு கிடைக்க வில்லை.

    1848 இல் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார்.  அவர் அங்கேதான் முதன் முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப்படும் அருவருப்பு வாணிபத்தையும், அடிமைக் கறுப்பர் படும் கொடுமைகளையும் கண்டு மனவேதனை அடைந்தார்.  ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட் விட்மன் 1848 இல் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி“ [Free Soil] என்பதை வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார்.  மின்சார உடல் பற்றி என் பாடல் [I Sing the Body Electric] & என்னைப் பற்றிய எனது பாடல் [Song of Myself] ஆகிய இரண்டு நூல்களும் மனித உடம்பைப் பற்றியும், உடல் நலம், பாலுறவு பற்றியும் எழுதப் பட்டவை.

    தென்னக மாநிலங்களில் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகளை விடுவிக்க ஆப்ரஹான் லிங்கன் கடுமை யான போர் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அதுவே சகிக்க முடியாத “சிவில் போர்” [Civil War] எனப்படும் உள்நாட்டுப் போரானது. அரசாங்க ஐக்கியப் படைக்கும், “கூட்டு மாநிலங்கள்” என்னும் கன்ஃபெடரேஷன் படைக்கும் யுத்தம் உண்டானது.  இறுதியில் இருபுறமும் சமப்போர் புரிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 30,000 மேற்பட்டது. அப்போது ஐக்கியப் படைகளுடன் போர் புரிந்த வால்ட் விட்மன் சகோதரன் ஜார்ஜ் விட்மன் காய முற்றதால் அவரைக் குணப்படுத்த வால்டயர் வாஷிங்டன். D.C.. வர வேண்டியதாயிற்று. அவர் சுயப்பணி யாளராய்ச் சேர்ந்து காயமுற்ற சுமார் 100,000 நபர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது.  வாஷிங்டன் D.C., மருத்துவ மனைக்கு பணிபுரிய வால்ட் விட்மன் 600 தடவை வந்ததாக அறியப் படுகிறது.

    சிவில் போர் வெற்றியில் முடிந்து, ஆப்ரஹாம் லிங்கன் இரண்டாம் முறையாக நின்று, ஜனாதிபதி தேர்வு வெற்றி பெற்ற விழாவில் வால்ட் விட்மன் கலந்து கொண்டவர் என்று அறியப் படுகிறது.  போர் முடிந்து சட்ட மூலமாக அடிமை வைப்பு முறை அமெரிக்காவில் நீக்கப் பட்டது.  போர் நின்ற ஐந்தாம் நாள், அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் பலியானார்.  லிங்கன் சுடப்பட்டு மரித்ததைப் பற்றி வால்டர் விட்மன் எழுதிய இரங்கற்பா “ஓ காப்டன், என் காப்டன்” படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவது. 19 ஆம் நூற்றாண்டில் கவிதைப் படைப்புகள் எழுதிய வால்ட் விட்மனுக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின் உன்னதம் வெளியாகிப் பரவியது. அவருடைய படைப்புகளின்  செல்வாக்கு, மேன்மை புகழ்பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அல்லன் கின்ஸ்பெர்க், [அமெரிக்கா] ஃபெர்னான்டோ பெஸ்ஸோவா [போர்ச்சுகல்] ஆகியோர் ஆக்கங்களில் தெரிகிறது.  வால்ட் விட்மன் கவிதைப் படைப்புகள் சில : அடிமை ஒழிப்புப் போர் பற்றி “டிரம் டாப்ஸ்”, “பீட் பீட் டிரம்ஸ்”, “இரங்கற்பா ஆப்ரஹாம் லிங்கனுக்கு”, குடியாட்சித் திறப்புகள்,” “இந்தியா நோக்கிப் பாதை.” [Drum-Taps, Beat ! Beat ! Drums !” “When Lilacs Last in the Dooryard Boom’d”, Democratic Vistas,” “A Passage to India.”].

    1873 இல் மூளை அடிப்பில் [Stroke] அவர் பாதிக்கப் பட்டு ஒரு பகுதி உடலுறுப்புகள் பயன்படுத்த இயலாது போயின. அதோடு ஒன்பது ஆண்டுகள் காலந் தள்ளி 1892 இல் அமெரிக்கக் கவிதை மேதை வால்ட் விட்மன் தனது 73 ஆம் வயதில் காலமானார்.

    +++++++++++++++++++++++++++++

    தன்னைப் பற்றி

    [வால்ட் விட்மன்]

     

    வாவென அழைத்த தென் ஆத்மா

    எழுதுவோம் அவ்விதப் பாக்கள்

    எனது உடல் நலத்துக்கு.

    (ஏனெனில் நாம் இருவரும் ஒருவரே)

    மரணத் துக்குப் பின் நானிங்கு

    மறைவாய், அல்லது வேறு அண்டங்களில்

    நீண்ட காலம் வாழ

    வேண்டி வந்தால், அங்கே சில

    தோழர் குழுவுக்கு இவை

    சுலோகங் களாய் மீண்டும் கேட்கும்

    (இப்பூமி, மரங்கள், காற்றும் கொந்தளிக்கும்

    அலைகளுக் கேற்ப)

    எனதினிய புன்னகையில் நான்

    எப்போதும் நீடிக்கலாம்

    அடுத்தடுத்து

    எனது சொந்தப் பாக்கள் மூலம் !

    இப்போது முதலில் நான்,

    இங்கு இடுகிறேன்

    எனது கையொப்பம்

    என் உடலுக்கும், ஆத்மா வுக்கும்

    என் பெயரை இட்டு !

    ++++++++++++++++++++

    ஒருவர் சுயத்தனம் பற்றி

    எனது பாடல்    

    ஒருவன் சுயத்தனம் பற்றி

    ஒரு பாட்டு பாடுகிறேன்.

    எளிய தனி மனிதன் ஒருவன் பற்றி

    எனினும் உரைப்பேன் ஒரு வார்த்தை

    அது குடியாட்சி !

    ஒருமித்து ஓங்கிச் சொல்லும்

    ஒரு வார்த்தை.

    தலை முதல் கால் வரை

    உடலியல் பற்றிப் பாடுவேன் !

    உறுப்பமைப்பு, மூளை மட்டுமல்ல

    என் வழிகாட்டி

    குருவாய்த் தகுதி பெற !

    கூறுவேன் நான் :

    பூரணத் தோற்றம் பெறுவது

    நேர்மை உடையது !

    ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும்

    நான் பாடுவேன்

    ஒரே சமத்துவ முறையில் !

    உணர்ச்சி யோடு துடிப்போடு,

    உன்னத சக்தி யோடு, உற்சாக மோடு

    உரிமை இயக்கத்தை

    உருவ மாக்கும் தெய்வீக விதியில்.

    நான் பாடுவேன்

    நவீன மனிதன் பற்றி !

    +++++++++++++

    தகவல்:

    1.   The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2.   Penguin Classics : Walt Whitman  Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3.   Britannica Concise Encyclopedia [2003]

    4.   Encyclopedia Britannica [1978]

    5.  http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6.  http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/ [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 6, 2012)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (35)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    கலாச்சாரமும், மதமும் எவ்வகையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது? ஒரு ஆழமான கேள்வி மனதில் எழுகிறது.

    குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் கலாச்சாரம் மிகவும் வலுவானது.

    என்னடா இவன் ?

    நாகரீகத்தின் உச்சியில் ஓடிக்கொண்டிருக்கின்ற இங்கிலாந்து தேசம் கலாச்சாரத்தில் வலுவானது என்கிறானே ! சக்தி லூசுப் பயல் போல பேசுகிறானே ! என்று எண்ணுகிறீர்களா?

    உண்மைதான் நாகரீகம் எனும் பெயரில் கலாச்சார மாற்றங்களுக்கு முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் தான் கலாச்சார வலிமையும் இருக்கிறதென்பது எனது அபிப்பிராயம்.

    குறிப்பாக அவர்கள் தங்கள் நாட்டு அரச பரம்பரைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கும் பண்பு, பழைய ஏடுகள். கவிஞர்களைப் போற்றும் வகை என்பன இந்நாட்டின் அப்பண்புக்கு உகந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.

    இங்கிலாந்து நாட்டின் நிதியமைச்சர் இன்று தனது இலையுதிர்கால பட்ஜெட் அறிக்கையைச் சமர்ப்பிக்கிறார். அவரது முந்தைய கணிப்புகளின் படி இங்கிலாந்து நிதி நிலைமைகள் 2015ம் ஆண்டுக்குள் சரிசெய்யப்படுவது முடியாத காரியம் என்பது போன்ற சமிக்ஞைகள் தென்படுகின்றன.

    சே ! மீண்டும் ஒரே இடர் மிகுந்த செய்திகளா என்று மக்கள் அங்கலாய்க்கும் வேளையிலே எங்கிருந்தோ அவர்கள் காதில் ஒரு நற்செய்தி விழுகிறது.

    அடேங்கப்பா ! அது என்ன அப்படிப்பட்ட நற்செய்தி ? உங்கள் ஆர்வம் புரிகிறது.

    இங்கிலாந்தின் இளவரசர் “பிரின்ஸ் சார்ல்ஸ் “

    என்னடா இவன் 60பதுகளில் அல்லாடுபவரை இளவரசர் என்கிறானே என்று கோபப்படாதீர்கள்.. . . . என்ன செய்வது அதுதான் அவரது அந்தஸ்து அழைத்துத்தானே ஆக வேண்டியிருக்கிறது !

    அவர் மன்னர் ஆவாரோ? மாட்டாரோ ? ஆண்டவனுக்குத்தான் . . . . இல்லையில்லை மகாராணியாருக்குத்துத்தான் வெளிச்சம் !

    ஆமாம் இளவரசர் சார்ல்ஸ் அவர்களின் மூத்த மைந்தன் இளவரசர் வில்லியம் அவர்களுக்கும் அவரது மனைவி கேட்டி அவர்களுக்கும் ஒரு வாரிசு வரப்போகிறது எனும் மகிழ்வான செய்திதான் அது.

    மோசமான பொருளாதாரச் சுழலுக்குள் சிக்கி அழுந்திக்கொண்டிருந்த இங்கிலாந்து மக்கள் “ஒலிம்பிக்” எனும் கட்டையைப் பற்றிக்கொண்டு சிறிது நேரம் கழுத்தளவு தண்ணீரில் தததளித்துக் கொண்டிருந்தார்கள்.

    அவ்வொலிம்பிக் கட்டையும் காலவெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டதும் மீண்டும் மூழ்கத் தொடங்கும்போது இதோ அவர்களை நோக்கி மற்றுமொரு கட்டை வீசப்பட்டிருக்கிறது இனி ஒரு வருடம் அக்கட்டையைப் பிடித்துக் கொண்டு தத்தளிக்க வேண்டியதுதான்.

    இரண்டே இரண்டு மாதக் கர்ப்பிணியான இளவரசி கேட்டி அவர்கள் கருவுற்ற செய்தியை இவ்வளவு சீக்கிரம் வெளியிட்ட காரணம் யாது என்று பார்க்கையில் கர்ப்பம் அடைந்த பெண்கள் மிகவும் அரிதாக அல்லலுறும் “தொடர் வாந்தி” நிலையினால் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்தச் செய்தியை அவசரமாக ஊடகங்களுக்கு அறிக்கை வடிவில் வெளியிட வேண்டி நேர்ந்தது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள் (யார் அவர்கள் ? அயல் வீட்டுக்காரரோ ! )

    இளவரசியாரின் இக்கர்ப்பந்தரிப்புச் செய்தியறிந்தவுடன் உலக ஊடகங்களின் இந்தியப் பிரதிநிதிகள் தமது உபகரணங்கள் சகிதம் இவ்வைத்திய்ச்சாலையின் முன்னால் படையெடுத்து விட்டார்கள் போங்கள் . . .

    என்ன ஒரு சாதாரண கர்ப்பந்தரிப்புச் செய்திக்கு ஏனிந்த ஆர்ப்பாட்டம் ? புரிகிறது உங்கள் யதார்த்தமான கேள்வி . . .

    கர்ப்பந்தரித்தவர் என்ன சாதாரணமானவரா ? அன்றிப் பிறக்கப் போகும் குழந்தைதான் சாதாரணமான குழந்தையா?

    கர்ப்பந்தரித்தவர் இங்கிலாந்தின் முடுசூட்டும் வரிசையில் இரண்டாவது தகமையுள்ள இளவரசரின் மனைவி, பிறக்கப் போகும் குழந்தையோ அதே வரிசையில் மூன்றாவது இடத்தைப் பெறப் போகிறது .

    அதுவுமின்றி பொதுநல்வாய நாடுகளின் தலைமைத்துவ நாடான இங்கிலாந்து தேசத்தின் எதிர்கால ராஜ சரித்திரத்தில் இடம்பெறப்போகும் ஒரு நிகழ்வல்லவா? இது.

    சரி இங்கிலாந்து அரசியல் சட்டத்தின் படி ஒரு ராஜாவுக்கோ ராணிக்கோ பிறக்கும் வாரிசுகளில் மூத்த ஆண் வாரிசுக்கே முடிசூட்டும் அந்தஸ்தும் தகமையும் கிடைப்பது எனும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

    அதுசரி அப்படியாயின் பிரின்ஸ் வில்லியம் அவர்களின் வாரிசு பெண்குழந்தையாக இருந்து விட்டால் . . . . ஓ அப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா ?

    அங்கேதான் இங்கிலாந்து நாட்டின் ஆண்,பெண் சம உரிமைக் கொள்கை ஓங்காரமிடுகிறது. அது என்ன அப்படிப்பட்ட ஓங்காரம் . . . எங்களுக்குக் கேட்கவில்லையே ! அவசரப்படாதீர்கள் அன்பு உள்ளங்களே !

    அவசரம், அவசரமாக இங்கிலாந்து நாட்டின் அரசியல் சட்டத்தில் உள்ள இச்சமத்துவமற்ற சட்டம் மாற்றியமைக்கப்படவிருக்கிறது.

    ஆமாம் இதற்கான அதிகாரத்தினை இங்கிலாந்து மகாராணியர் தலைவியாக இருக்கும் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 16 நாடுகளின் தலைவர்களும் ஏகமனதாக அளித்து விட்டார்கள்.

    மேலும் ஒரு சிறிய கருத்துப் பரிமாறலின் பின்னால் இதற்கான முழு அதிகாரமும் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அளிக்கப்படும்

    இம்மாற்றம் ஏறத்தாழ 300 ஆண்டுகளின் முன்னால் அமைக்கப்பட்ட இங்கிலாந்து சட்டத்தை மாற்றியமைக்கும் அதிகாரத்தை இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்கு அளிக்கிறது. இம்மாற்றத்தைக் கொண்டுவரும் முகமாக 1689ம் ஆண்டு நிறுவப்பட்ட “உரிமைகளுக்கான சட்டம்”, 1701ம் ஆண்டு நிறுவப்பட்ட வதிவுரிமைச் சட்டம், 1772ம் ஆண்டு நிறுவப்பட்ட அரச குடும்பத் திருமணச் சட்டம் என்பனவற்றிலும் திருத்தங்கள் கொண்டு வரப்படவிருக்கின்றன.

    எமது நாட்டின் பிரதமரின் கூற்றுப்படி இளவரசர் வில்லியத்திற்கு பிறக்கும் குழந்தை பெண்குழந்தையானால் எதிர்காலத்தில் எமது நாட்டின் ராணியாக ஆகும் உரிமை அவருக்கு அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படுகிறது.

    அதுசரி என்ன பிதற்றுகிறாய் ? இங்கிலாந்து நாட்டிற்கு ராணியாக இருப்பது இப்போதும் பெண்தானே ? உங்கள் கேள்வி புரிகிறது.

    இப்போதய ராணியாரின் தந்தை கிங் ஜந்தாவது ஜார்ஜ் அவர்களின் குழந்தைகள் இரண்டும் பெண் குழந்தைகள் ஆனதினால் தான் அவர்களுள் மூத்தவரான எலிசபெத் அவர்கள் ராணியாகும் தகுதி பெற்றார்.

    அது என்ன ஆண்குழந்தைதான் நாட்டிற்கு ராஜாவாக முடியுமா? ராணியான விக்டோரியா மகாராணி, தற்போதைய எலிசபெத் மகாராணி அவர்கள் இருவரும் சிறந்த வகையில் தமது பதவியை நிர்வகிக்கவில்லையா?

    ஏன் இந்த வேறுபாடு ?

    நியாயமான கேள்விதான் இவ்வேறுபாட்டின் நியாயமற்ற தன்மையை மனதில் கொண்டுதான் இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் இச்சட்டம் இப்போது மாற்றியமைக்கப்படுகிறது.

    ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என்னும் உண்மையை பல முன்னேற்றமான மாற்றங்களை உள்வாங்கிச் செயல்படுத்திவரும் இங்கிலாந்து சட்டமூலம் அங்கீகரிக்கிறது எனும் செய்தி மனதுக்கு இதமாக இருக்கிறது.

    தமக்குப் பிறக்கும் முதல் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு உலகில் பல சமுதாயங்களின் மத்தியில் நிலவி வருகிறது. இக்காரணத்தினாலேயே பிறக்கும் பெண்குழந்தைகளை வெறுக்கும் நிலை கூட சிலசமயங்களில் நிகழ்கிறது.

    இப்படிப்பட்ட அர்த்தமற்ற அநாகரீக செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனது பல முன்னேற்றமான முயற்சிகளுக்கு இத்தகைய முன்னோடிகளான நிகழ்வுகள் உந்து சக்தியாக விளங்கும் என்பதில் எதுவித ஜயமுமில்லை.

    உங்களை நோக்கி நான் இம்மடலின் ஆரம்பத்திலே ஒரு கேள்விக் கணையைத் தொடுத்திருந்தேன். அதாவது மதத்திற்கும், கலாச்சாரத்திற்கும் உள்ள பிணைப்பு என்ன? என்ப்துவே அது.

    அந்தக்கேள்வியின் காரணத்தை இப்போது விளக்குகிறேன். நான் போனவாரம் எழுதிய மடலில் இங்கிலாந்து நாட்டினில் பெண்களை “பிஷப்” பதவிக்கு நியமிப்பதை சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று எழுதியிருந்தேன்.

    ஆனால் அதே சமுதாயம் இன்று முடிசூட்டிக் கொள்ளும் தகமைக்கு பெண்களும் சம உரிமை பெறவேண்டும் என்பதை சட்டமூலமாக்க முயல்கிறது என்று வரைந்திருக்கிறேன்.

    மதம் ஒரு மனிதனுக்கு அணிகலனே அன்றி ஆடையல்ல அது அணியப்படுவதன் காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    அதேசமயம் சட்டமூலம் இயற்றப்பட்ட கலாச்சாரச் சம்பிரதாயம் ஆணுக்குப் பெண் சமமற்ற தன்மையைக் கொண்டிருக்குமானால் அதை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் இது அனைத்து மக்களாலும் பின்பற்றப்படும் காரணத்தினால் .

    மனதைப் பண்படுத்திக் கொள்ள மதத்தைப் புரிந்து கொள்வோம் . . . எமது அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்ள கலாச்சாரத்தை வலுப்படுத்திக் கொள்வோம்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    Share
  • தமிழார்வம் திரிகடுகம்: அபாயம் தவிர்

    இன்னம்பூரான்

    8. அபாயம் தவிர்


    வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப
    விழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து
    விருந்தினனாய் வேற்றூர் புகலும்,-இம் மூன்றும்
    அருந் துயரம் காட்டும் நெறி.              
            [5]

    8.1. Look before you leap. பெருக்கெடுத்தோடும் நதிகளில் அபாயம் இருக்கலாம். -நீர்ச்சுழல்/ பொதி மணல்/ அதி வேகம்/ முதலை போன்றவை. கவனமில்லாமல், புழக்கத்தில் இல்லாத  ஆற்றின் துறைகளில் இறங்குவது அபாயத்தை ஆசிரியர் நல்லாதனார் எடுத்துரைத்திருக்கிறார். நான் இந்த ‘தமிழார்வம்’ துறையில் இறங்கியது கூட எனக்கு வழங்காத்துறையில் இறங்கிவிட்டேனோ என்ற ஐயம் தலை தூக்க, சற்றே கரையோரம் ஒதுங்கி நின்றேன். ஆன்ரே கைட் (Andre Gide) என்ற ஃபிரென்ச் தத்துவ ஞானி ‘கரையிலே நின்று கொண்டிருந்தால், புது சமுத்திரங்களை காண்பது எவ்வாறு?(“Man cannot discover new oceans unless he has the courage to lose sight of the shore.”) என்று கேட்கிறார். அதுவும் நியாயமாகத்தான் படுகிறது. தவிர, இதையெல்லாம் பத்தாம் பசலி என்று தமிழகத்தில் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இறங்கியாச்சு. நல்லாதனாரின் எச்சரிக்கையை கவனத்தில் வைத்துக்கொண்டு பயணம் தொடர்கிறது.

    8.2. ‘ஒப்ப விழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும்…’
    : ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் நெறியை இல்லறம் என்று பல இடங்களில் போற்றும் நல்லாதனார், வாழ்வியலின் மென்மை ஒன்றை உணர்த்துகிறார்.  விருத்தியுரையில் ‘ஒப்ப விழைவு இலாப் பெண்டிர்’ வேசையர் என்று கூறப்பட்டிருக்கிறது. அன்பும், காதலும் இல்லாத போது இணைந்து வாழ்வது எளிதல்ல என்று பொருள் கொள்ளலாம். காஞ்சனையின் கனவு என்று ஒரு திரைப்படத்தை பல வருடங்களுக்கு முன்னால் பார்த்த ஞாபகம். அதில் விலைமாது என்று சித்திரிக்கப்பட்டவர் உண்மையில் கதாநாயகனை நேசிக்கிறாள்; தியாகம் செய்கிறாள்; அவரின் குடும்பத்தால் மதிக்கப்படுகிறாள் என்று ஞாபகம். தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ என்ற புதினத்தில் ‘ஆசைக்கிழத்தி’ உறவும் அதன் பின்விளைவும் நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது.

    பரத்தையிடம் சென்று வந்தால் ஊடல் தான் தலை தூக்கும் என்றொரு பக்கமும், பரத்தையிடம் சென்று வந்த சின்னங்களை பட்டியலிட்டுத் தலைவனை கேலி செய்து, அவனுக்கு காதற்பரத்தையாக இருந்த மாதை, தலைவி ‘நீடூழி வாழ்க’ என்று வாழ்த்துவதாக ஒரு பக்கமும் வருணிக்கிறது, நற்றிணை 20: (பின்னத்தூர்.அ.நாராயணசாமி ஐயர் அவர்கள் எழுதிய உரையும் விளக்கமும்).

    20 மருதம் – ஓரம்போகியார்


    ஐய குறுமகட் கண்டிகும் வைகி 
மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர்த் 
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் 
துளங்குஇயல் அசைவர கலிங்கம் துயல்வர 
செறிதொடி தௌ ர்ப்ப வீசி மறுகில் 
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி 
சென்றனள் வாழிய மடந்தை நுண் பல் 
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள் 
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை 
பழம் பிணி வைகிய தோள் இணைக் 
குழைந்த கோதை கொடி முயங்கலளே

    ஒரு இலக்கிஅய சுவைக்கு இவற்றையெல்லாம் சொன்னேன். நல்லாதனார் கூறும் வகையில் இல்லறம் போற்றுவது சாலத்தகும்.

    8.3. ‘…உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலும்…’: வேற்றூர் என்றாலே பொதுவாக, அது ஒரு பிரச்னை தான். முதலில் வழி தெரியாது. மொழி தெரியாது. மாந்தர்களின் மரபு வேறு படலாம். எனினும் சாமி சிதம்பரனார் கூறிய படி எல்லா அறிவுரைகளையும் காலத்துக்கேற்ப கடை பிடித்தால் நலம். ‘When in Rome, do as the Romans do.’ இருந்தாலும், பல பிரச்னைகள் தொக்கி நிற்கலாம். ‘மதியாதார் தலைவாசல் மிதியவேண்டாம்’ என்றார், மயிலேறும் பெருமானை போற்றும் உலகநாதர். அது என்னமோ சரி தான்.
    (தொடரும்)
    இன்னம்பூரான்
    06 12 2012
    உசாத்துணை:

    திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf
    தமிழ் இணையக் கல்விக்கழகம்
    திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

    நற்றிணை: http://www.tamilvu.org/library
    சித்திரத்துக்கு நன்றி:http://img249.imageshack.us/img249/7429/im0021334mg.jpg
    Share
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்: 4

     

    இன்னம்பூரான்

    1 + 1 = 3!

    இந்த தலைப்பில் நான் ஒரு வருடத்துக்கு முன்னால் துவக்கிய அறிமுகக்கட்டுரையை ஆயிரத்துக்கு மேலான வாசகர்கள் படித்திருப்பதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. அடுத்து வந்த நீரிழிவு நோயை பற்றிய கட்டுரைக்கு அந்த வரவேற்பு தென்படவில்லை. சமீபத்தில் வலி நிவாரணத்தைப் பற்றி திருமதி. தேமொழி எழுதிய கட்டுரை பல நல்ல செய்திகளை அளித்தது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உள்ள மருத்துவ விழிப்புணர்ச்சி, சமூகத்தில் பகிர்வுகள், ஆதாரமுள்ள இணைய தளங்கள் ஆகியவை நமக்கு உதவும் என்ற அடிப்படையில், இருவரும் இணைந்து எழுதத் தொடங்கியுள்ளோம். சில இதழியல் கோட்பாட்டுக்கு உட்பட்டு, அது ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.3: சஞ்சீவினி’என்ற தலைப்பில் இங்கே http://www.vallamai.com/paragraphs/29306/

     டிசம்பர் 3, 2012 அன்று மறு பகிர்வு என்ற பகுதியில் பிரசுரம் ஆகியிருக்கிறது.படித்து பயன் பெறுக. எமக்கும் சொல்லுக. ஆர்வம் கூடும்.

    ஒத்த சமுதாய நோக்கு உடைய இருவர் இணைந்து பணி செய்தால் 1+1=3.

    உலகெங்கும் சாதிமத பேதமில்லாமல் கொண்டாடப்படும் புத்தாண்டு விழா நெருங்குகிறது. வாசகர்களுக்கு எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    (தொடரும்)
    இன்னம்பூரான்
    03 12 2012

    படத்துக்கு நன்றி: http://coe.jmu.edu/LearningToolbox/images/oswald5.gif

    Share
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.3

     

    சஞ்சீவினி

     

    இன்னம்பூரான் & தேமொழி

    ஒரு வருடம் முன்னால் இன்னம்பூரான் ‘வல்லமை’யில் எழுதிய இந்தத் தொடரின் முதல் பகுதியை 1640 வாசகர்கள் படித்திருக்கிறார்கள், இன்னும் சிலர் படித்து வருகிறார்கள் என்பதும், அடுத்த பகுதியும் வாசிக்கப்படுகிறது என்ற குறிப்பும், தேமொழியின் ‘வலி நிவாரணி வேலை செய்யும் விதம்’ என்ற கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களும், இந்த தொடருக்கு சஞ்சீவினி மூலிகையாக வருகை புரிந்து, அதை உயிர்ப்பததற்கு நன்றி.  வாசகர்களுக்கு நன்றி நவிலவேண்டும்; தலைப்பை ‘சஞ்சீவினி’ என்று மாற்றியமைத்து, அதை செய்தோம். 

    முன்பகுதிகளின் ரத்னசுருக்கம்:

    நோயாளிகளின் அணுகுமுறையை முன்னிறுத்தி அமையும் என்று இந்த தொடரை அறிமுகம் செய்தார், ‘வல்லமை’ ஆசிரியர். முதல் கட்டுரை சர்வ கலா வல்லமை பொருந்திய நீரழிவு நோயை பற்றிய அறிமுகம். ” நீங்கள் தான் உங்களுக்கு முதல் டாக்டர் ” என்ற படிப்பினையின் மகாத்மியத்தை உணர்த்தியது. மிதமான சத்து உணவு, உடற்பயிற்சி, நேரம் தவறாத மருந்து என்ற நீரழியா வேதம் ஓதியது. அடுத்த பகுதி ‘ஒரு அரசு மருத்துவமனையுடன் உரிமையுடன் உறவு வைத்துக்கொள்வது’ பற்றி குறிப்பால் உணர்த்தியது. இங்கிலாந்தின் இலவச மருத்துவ சேவையின் பின்னணியையும், ஆதாரமுள்ள அறிவுரைகள் இலவசமாக கிடைப்பதையும் கூறியது. அங்குள்ள டாக்டரிடம் இது பற்றி பிரஸ்தாபித்த போது, அவர் இந்த முயற்சியை வரவேற்றார். ‘நாங்கள் டாக்டரல்ல.’, ‘டாக்டரிடம் ஆலோசனை பெற இவை உதவலாம். இவற்றை படித்து உரிய நேரத்தில் டாக்டரிடம் போவதைத் தவிர்க்கக்கூடாது’ என்பதை விளக்கி விடுங்கள் என்றார். [Disclaimer ஐ படிக்கவும்.] PCO (patient complaining of) + HPC (history of the present complaint) + PMH (previous medical history).” என்ற மும்மந்திரங்களின் மர்மமும் அறிந்தோம். வலி என்ற சொல் அந்தாதியாக அமைந்து விட, தேமொழி வலி நிவாரணிகள் வேலை செய்யும் விதத்தை விளக்கினார். இன்னம்பூரானின் ‘அபாய சங்கு’ இருவரும் இணைந்து ‘சஞ்சீவினி’ மருத்துவத் தொடரை பரிபாலனம் செய்யவேண்டும் என்று அன்புகட்டளை விடுத்தது. இணைந்து வருகிறோம். கருத்து, வினா, ஆலோசனை, பின்னூட்டங்கள், தனி மடல்கள் எல்லாம் நல்வரவு ஆகுக. நீரழிவு நோய், மன அழுத்தம் ஆகிவற்றை பற்றி பிறகு எழுதுகிறோம். 

    இந்த பகுதியில் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் வாழ்வியலை எவ்வாறு சிறப்புற செய்யும் என்பதை பற்றிய ஒரு நூலின் சுருக்கம். மேலதிக விவரங்கள், உங்கள் வினாக்களை பொருத்து அமையும். சில அமெரிக்க மருத்துவ ஆலோசனைகளும் இடம் பெறுவது நலன் தரும். தெளிவு முக்கியம். அதனால், இனி அவரவர் பெயரில்:

    இன்னம்பூரான்:

    சோம்பலை முறியடிப்பது எளிது. சில அன்றாட வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அடிக்கடி நடை, படி ஏறுவது, கடைக்கு நடந்து போவது, அதிக நேரம் அமர்ந்து இருப்பதைக் குறைத்து விடுவது, நண்பர்களுடன் பழகுவது என்று ஆரம்பியுங்கள். அதை வழக்கமாக செய்யுங்கள்.

    ஏன் இப்படி? சோம்பல் (physical inactivity) உடல் வலிமையை தளர்த்தி விடும். விரைவில் உயிரை மாய்த்து விடும். இதய நோய்க்கு (coronary heart disease: chd) இந்த சோம்பல் தான் வித்திடுகிறது. இது வளர்ந்த நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலும் கண்டெடுத்த உண்மை. சுறுசுறுப்பு ஆசாமிகளை விட சோம்பேறிகளுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

    அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கினால், இதய நோய்/இரத்த அழுத்த நோய்/ டைப் 2 நீரழிவு நோய்/பெருங்குடல் புற்றுநோய்/பருமன்/ ஞாபக மறதி ஆகியவற்றின் தாக்கம் குறையும்.

    அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கினால், மேற்படி வியாதிகளை தடுக்கக்கூட முடியலாம்; மேலும் எலும்பு வியாதிகள் எளிதில் அணுகா. 

    அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கினால், மூட்டு அசைவும், திறனும் அதிகரிக்கும்.

    அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கினால், சக்தி கூடும்; மன அழுத்தம் குறையும்; இளைப்பாறுதல் இனிமையாக அமையும்; உறக்கம் நன்றாக வரும்; களைப்பு தீரும்; ஏகாக்ரஹசக்தியுடன் இயங்கலாம். வாழ்க்கையின் சுவை கூடும். வேறு என்ன வேண்டும், பராபரமே! 

    மேலும் சொல்ல நிறைய இருக்கிறது. அவை வினா-விடை பகுதியில் இருப்பதால், கேட்க, கேட்க பதில் வரும். அதற்கு முன், கட்டுரை முடிவில் கொடுக்கப்பட்ட உசாத்துணைகளை படியுங்கள். மற்றவர்களிடம் அது பற்றி பேசுங்கள். சுறுசுறுப்புக்கு சுறுசுறுப்பு ஆச்சு. நாலு பேருக்கு நல்ல விஷயம் சொன்னதாகவும் ஆச்சு. கேள்விக்கணை தொடுக்கவும் வசதியாச்சு.

    நன்றி.

    *

    தேமொழி:

    உடல் நலம் பேணிக் காப்பதற்கு  நம் தமிழர்களுக்கு காலம் காலமாகத்  தகுந்த அறிவுரைகள் கிடைத்துள்ளன.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் வழங்கிய திருக்குறளிற்கு மேல் நாம் ஆதாரம் தேடத் தேவையில்லை.  “மருந்து” என்று ஒரு அதிகாரமே அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது வள்ளுவரால்.

     

    “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

    வாய்நாடி வாய்ப்பச் செயல்.”

    இக்குறளைப் படிக்காத தமிழ் மாணவர்கள் இருக்க வாயிப்பில்லை.  

     

    “நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்”, என்று இக் குறளுக்குப் பொருள் உரைக்கிறார் மு. வரதராசனார். 

     

    “நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.”

    “மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.”

    “மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.”

     

    இவ்வாறாக  ஒரு நான்கு குறள்களில் மருத்துவம் பற்றி பொதுவில் குறிப்பிட்ட வள்ளுவம், மருந்து அதிகாரத்தின் மற்ற ஆறு குறள்களில் முக்கியத்துவம் அளித்திருப்பதோ நம் உணவுப் பழக்கத்திற்கு.

     

    “முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.”

    “முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.”

    “முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.”

    “மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.”

    “குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.”

    “பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டு விடும்.”

    (~மற்ற பொருளுரைகளும் மு. வரதராசனார் வழங்கியவையே)

     

    இதிலிருந்து   மருத்துவமும் பத்தியமும் இணைந்து செயல் படுபவை என்பது உணர்த்தப்படுகிறது.  அத்துடன், வரும்முன் காப்பதின் அவசியத்தை உணர்த்தும் முகமாக, உட்கொள்ளும் உணவில் கடைபிடிக்க வேண்டிய இன்றியமையாமையை உணர்த்த அதிக குறள்கள் அதற்காக  ஒதுக்கப்பட்டுள்ளது. இச்செயலினால் உணவுக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவமும் நன்கு உணர்த்தப் படுகிறது.   

     

    நம் நலனினில் அதிக அக்கறை கொள்ள வேண்டியவர்கள் நாம்தான்.  சிறந்த சுகாதார வழிகளைக் கடைப்பிடித்தும், ஆரோக்கியமான உணவுகளை உண்டும் நம் நலம் பேணிக்காப்போம்.  உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அதனை மருத்துவரிடம் விளக்குவதற்கு உதவும் வகையில் மேலும் பல தகவல்களைத் தேடி அறிந்து கொள்வது நம் கடமை என்பதை நினைவில் கொள்வோம். அதற்கு வகை செய்யும் வகையில் இணையத்திலும் பல தளங்கள் சுகாதாரத் துறை வல்லுனர்ககளின் அறிவுரைகளை தொகுத்து வழங்குகின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கவைகள் பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.

    நன்றி.

     

    (தொடரும்)

    இன்னம்பூரான் & தேமொழி

    கவனம்: 

    நாங்கள் டாக்டர்கள் அல்ல. நட்புரிமையுடன், பொறுப்புணர்ச்சியுடன்,ஆதாரங்களை தமிழில் விளக்கி, அவற்றை சுட்டிக்காண்பித்து அறிமுகம் தரும் சுகாதாரம் பற்றிய தொடர் இது, டாக்டரிடம் ஆலோசனை பெற இவை உதவலாம்.  இவற்றை படித்து உரிய நேரத்தில் டாக்டரிடம் போவதைத் தவிர்க்கக்கூடாது.  அவரவர் மருத்துவம், சிகிச்சை, நிவாரணம் ஆகியவற்றை நாடும் செயல்களுக்கு அவரவர்கள் தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.

    இன்னம்பூரான் & தேமொழி

    உசாத்துணை: 

    உசாத்துணை: 

    www.bhf.org.uk

    www.bhf.org.uk/heartmatters

    www.wfh.naturalengland.org.uk

    www.sustrans.org.uk

    www.webmd.com

    www.medicinenet.com

    www.mayoclinic.com

    www.emedicinehealth.com

    www.nlm.nih.gov/medlineplus

     

     

    சித்திரத்துக்கு நன்றி: http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2009/01.06.09/suchamam.jpg

     

     

     Tags: சஞ்சீவினி, இன்னம்பூரான், தேமொழி, வாழ்வு, செல்வம், டாக்டர்

    Share
  • HEALTHY BODY MAKES HEALTHY MIND (13)

     

    Sangeetha

     

                                         13. GINGER

     

    Whether in tea, ginger ale or eaten with food, ginger has been used to treat nausea, indigestion and diarrhea for thousands of years. In addition to its traditional use as a digestive aid, ginger is a good source of some vitamins and minerals that are essential to men’s health. Potentially helping to prevent colorectal cancer, heart disease and diabetes, ginger can play a vital role in ensuring that men live long, healthy lives.

     

     


     

    Ginger Benefits for Weight Loss

     

    • Ginger increases the PH value of stomach acids, thus reducing the rates of gastric secretions and accelerating the activity of the enzymes necessary for digestion. Ginger reduces the feeling of vomiting and nausea by directly acting on the stomach, rather than impeding nausea in the brain. Ginger also triggers metabolism which helps in burning the fat.
    • Assimilating ginger in tea form or using it as an addition in the form of a culinary spice in various dishes can restrict fat accumulation in your body.
    • Ginger produces heat in the body and dilates blood vessels just like Cayenne pepper, garlic or mustard. Low fat dairy products, avocado or citrus fruit make healthy foods to eat with ginger root tea.
    • Ginger reduces Triglyceride and Cholesterol levels and thus helps in improving cardiovascular health. It elevates the levels of high density Lipo-proteins and lowers the risks of stroke and heart attack by improving the blood circulation.

    • Ginger Tea

      Sipping ginger tea can help calm an upset stomach, as well as ease congestion when you’ve got a cold.Ginger tea has a spicy, invigorating taste. It’s used as a home remedy for indigestion, nausea, and to ward off colds, flu, and sore throats.

      Ginger tea is very easy to make. Here is a recipe for you to try.

    • Ginger Tea Recipe

    • water, 4 cups
    • 2-inch piece of fresh ginger root
    • optional: honey and lemon slice
    • milk(if needed)

      Peel the ginger root and slice it into thin slices. Bring the water to a boil in a saucepan. Once it is boiling, add the ginger. Cover it and reduce to a simmer for 15-20 minutes. If needed boil the milk seperately and mix with it.Strain the tea. Add honey and lemon to taste.But i like to have it with sugar.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 48 (03.12.12)

     

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை


     
     
    வைகறையில் கடற்கரைக் காட்சி
     
     
    இடிக்கப்பட்டுச் சலிக்காத
    மாவினைப் போல
    நுண்மையாக விளங்கியது
    கடற்கரை மணற்பரப்பு.
     
    அவ்விடத்தில் வெண்சிறு கடுகு
    இட்டாலும் கூட
    கண்ணுக்குப் புலப்படும்படி
    பரவியிருந்தது வெளிச்சம்.
     
     
    நீர் மிகுந்த பரப்பதனில்
    தாமரையை வேலியாகக் கொண்ட
    அழகிய மருதநிலம்போல்,
    அழகுறத் தோன்றும்
    தாழையை வேலியாக உடைய
    நெய்தல் நிலத்தில்
    கானலின் மருங்கில்
    கோவலனுடன் வந்த மாதவி
    தனது தோழியர் கூட்டத்துடன்
    விளையாடி மகிழ்ந்தனள்.
     
     
     
    நகரமக்கள் கடற்கரையில் களித்திருக்கும் காட்சி
     
     
    நிரைநிரையாகக் குவித்த
    குற்றமற்ற காட்சியையுடைய
    மலைதரும் பல பொருட்களும்…
    கடல்தரும் பல பொருட்களும்…
    இவ்வளம் கொழிக்கும்
    மரக்கலங்கள் அசைகின்ற கடற்கரை.
     
     
    ஆங்கே,
    சோலைகள் சூழ்ந்த இடத்தில்
    அரசிளங்குமாரரும்
    அவர்தம் உரிமை மகளிரும்
    வணிக குமாரரும்
    அவர்தம் பல்வேறு வகைப்பட்ட
    காமக்கிழத்தியரும்,
    ஆடல் மகளிரும்
    பாடல் மகளிரும்
    கூட்டம் கூட்டமாகத் தங்கியிருந்தனர்.
    அவர்களைச் சூழ்ந்திருந்தன
    திரைச்சீலைகள்.
     
     
    அக்காட்சியானது,
    விண்ணை எட்டும் புகழினையுடைய
    கரிகால் வளவன் தானும்
    புதுப்புனல் விழவு கொண்டாடும்
    தலைநாள் அதனை ஒத்திருந்தது.
     
     
    வேறு வேறு கோலங்களுடனூம்
    வேறு வேறு ஆரவாரங்களுடனும்
    விழாக்காணும் களம் போல
    அப்பூம்புனல்துறை சிறப்புற்றுப் பொலிந்தது.
     
     
    கடலின் கரையைக்
    குத்தியெடுத்துப் பெயர்த்து வந்து
    கடலதனுடன் கலக்கும்
    காவிரியாற்றின் புகார் முகமெங்கும்
    சிறிது கூட இடமின்றி
    நால்வகை வருணத்தவரின்
    அடங்காத ஆரவாரம்
    ஒருங்கு கூடி
    ஓர் ஒத்த ஓசையாய்
    ஒலித்துக் கொண்டிருந்தது.
     

    அடிப்படையாய் அமைந்த சில்ப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 146 – 150
     
     
    அடிப்படையாய் அமைந்த சில்ப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 151 – 165
     

    படத்துக்கு நன்றி:
    http://www.colourlovers.com/group/Artist_Palette_Challenge/conversations/10646/APC_16_Raja_Ravi_Varma

     

    Share
  • வாதாபி பூத நாதம் தேவார வைப்புத்தலம்

     


    நமசிவாய

    18 திருமுறை பாடல்களில் பெயர்வழி குறிக்கப் பெற்ற   ‘பூத நாத-வாதாபி’ ஓர் தேவார வைப்புத்தலம்

     

    நூ.த.லோகசுந்தரமுதலி

    மயிலை

     

    பாதாமி=வாதாபி, வடகருநாடகம், ஆதி  பூதநாதர்

     

                                                    பூத நாதனைப் பூம்புக லூரனைத்

                                                    தாதுஎனத் தவழும் மதி சூடியை

                                                    நாதனை நல்ல நான்மறை ஓதியை

                                                    வேதனை நெருநல் கண்டது வெண்ணியே

                                                                திருநாவுக்கரசர் – குறுந்தொகை 5.17.6

     

              புகுமுன்

    தமிழக சித்தாந்த சைவநெறியின் மறைகளாம் தேவாரம் திருவாசகம் எனும் தொடக்கத்தின வான நூற்களின் 18000+ பாடல்களில் பதிகம் ஏதும் பெறாமல் சிவபெருமான் உறையும் திருஊர்களாக குறிக்கப்பட்ட பெருமை மட்டும் உடைய சிவத்தலங்கள் ‘வைப்புத் தலங்கள் என வழங்கப்படும் மரபினை சிலரே அறிவர்.

     

              சிவபெருமான் பல்பெயர்த்தவன்

    சிவபெருமான் சீர்மை பாடும் இத்திருமுறைப் பதிகப் பாடல்கள் தன் தலைவரின் பண்பு களை பற்பல பெயர் கொண்டு ஒவியப்படுத்தியுள்ளன. ஆலநீழலான், பசுபதி, பாசுபதன், பிறைசூடி, நெய்யாடி, பிஞ்ஞகன், ஆதி, அவிநாசி, மணாளன், மாதொருபாகன், மணவா ளன், விகிர்தன், கபாலி, தாயுமானவன், கோளிலி, பிறப்பிலி, சடைமுடியன், காரோணன், ஆனேறி எனப் பல்வேறு  பெயர்களால் வழங்கி போற்றப் பெற்றமை காணலாம்.

     

              சிவபெருமான் பூத நாதன்

    அவ்வழி பூதநாதன் என்பது சிவபெருமானுக்கு வழங்கும் நூற்றுக்கணக்கான பெயர்களில் ஒன்று. நிலம், நீர், தீ, காற்று, வானம் எனும் ஐம்பெரும் பூதங்களை அடக்கி  பேணும் ‘நாதனாக விளங்குவதாலாகும்.  ஐந்துபூதங்களின்-நாதன் எனக்காட்டும் சிறப்பு வழிபாட்டிற்கென தனித்தனியே திருஆரூர், திருஆனைக்கா, திரு அண்ணாமலை, காளத்தி, தில்லை என 5 பூதத்தலங்களை அமைத்து போற்றுகிறோம். பூத நாதன் என பெயர் விளி காணும் 18 பாடல்களுடைய ‘பெயர்வழித் திருமுறை’ தொகுப்பு உள்ளது.

     

              பூத நாதன் பரந்தவன்

    இந்தியாவில் பூதநாதன் என மூர்த்திப் பெயர்கொண்ட தலங்கள் நூற்றுக்கும் மேலுள்ளதாக அறிகிறோம் காசி இராமேச்சுரம், கயிலாயம் எனும் புகழ்பெற்றவை தன் பெருமையால் பற்பல இடங்களில் விசுவநாதர், இராம நாதர், கயிலாய நாதர் என தல இறைவன் பெயரிட்டு வழிபட வழி கோலியது போல்

    பூத் நாத்’ மந்திர்கள் (பூத நாதர் கோயில்கள்) வடக்கே பாட் டியாலா முதல் கிழக்கே அசாம், மேற்கே ஜுனாகாட், தெற்கே காஞ்சி வரை உள்ளமை இணையதள பதிவுகள்வழி அறியமுடிகின்றது. எனவே பூத நாதம் எனும் ஆதியும் மூலமும் ஆன தொன்மைத்தலம் ஒன்று பழங்காலத்தில் புகழுடன் விளங்கியுள்ளமை வரலாறாகின்றது.

     

              பூத நாதன் திருவூர்கள்

    குனுபூர் (ஒரிசா); மண்டி (இ.பி); கானாபூர், வாதாபி, தோர்கல் கோட்டை (கருநாடகம்); பகாடி, பூர்ணியா (பீகார்); மகுவா, மந்துவா (ம.பி); லக்மண்கர், பிகானீர், ஜோத்பூர், ஜுனாகாட், பிலானி, அபு (இராஜஸ்தான்); பகாரா, பல்பிபூர், சோர்வட், பரூஷ், படகளா, நவசாரி, போர்பந்தர், பவநகர் (குஜராத்); கோனால், சந்திரேஷ்வர் (கோவா); நவாடி(ஜார்கண்ட்) கோலாகோகர்நாத், ரிஷ்கேஷ், (உ.பி.); சிந்துதுர்க், நேரூர், (மகாராஷ்டிரா); பொகரோ (சத்தீஷ்கர்); ஜிண்டு(அரியாணா); பர்துவான் (மே.வ) பாடியாலா, அமிர்தசரஸ் (பஞ்சாப்); முதலிய பற்பல ஊர்களில் பூத் நாத் கோயில்கள் பரந்து காணப்படுகின்றன.

     

    வளர்ந்த பூத நாதர் பெருமையால் பம்பாய், டில்லி, கல்கத்தா, லக்னோ, சிம்லா போன்ற மக்கள் பெருகி இடம் பெயர்ந்து வாழும் பெருநகரங்களிலும் புதிது புதிதாக பூத் நாத் என பெயர் தாங்கிய சிவபெருமான் கோயில்கள் பல தோன்றியுள்ளன. மேலும் பற்பல தலங்கள் (108) நிறுவப்பெற்ற காசி, பர்டுவான் புவனேசுவர் காஞ்சிபாலி  போன்ற புண்ணிய தலங்களிலும் ஓர் பூத் நாத் கோயிலைக் காணலாம். ஈங்கு சிவராத்திரி’விழா மிகச்சிறப்பாக நடைபெறுவதாகவும் இமாசலப்பிரதேச மண்டி’யிலும் கொங்கண  கோவா வில் மலைமீதமைந்த பூதநாதர் கோயிலும் அக்கம்பக்கத்து மக்களால் பெரிதும் போற்றப்படு கின்றதாம். மகாதேவ் எனும் பெயர் சிவனைக் குறிப்பதுபோல் பலஇடங்களில் பூத் நாத் என்பதே பொதுநிலையில் சிவபெருமான் என பொருள் படவே பயன்படுகின்றமையும் காணப்படுகின்றது.

     

               வாதாபி ஆதிமூல பூத நாதம்

    பழங்காலத்து கருநாடகத்தில் சீரும்சிறப்பும் பெற்றிருந்து இந்நாள் ஓர் சிற்றூராகும் பாதாமி யில் அதாவது முன்னாள் வடுகநாட்டு வாதாபி யில் எழில்மிகு அகத்தியர்’ ஏரிக்கரையில் அமைக்கபட்டுள்ள பூத நாதர்’ கோயிலே மிக்கபழமை உடையதாகத் தெரிகின்றது. சம்பந்தர் அப்பரடிகளின் காலம் 7ஆம் நூற்றாண்டில் சிறப்புற்றிருந்துள்ளது. இங்குகாணும் பலஅடுக்கு களில் அமைந்த குடைவரைக் கோயில்கள் இந்நாள் சீர்குலைந்து வழிபாடின்றி புராதன சின்னங்களாக நிற்கின்றன. தொல்லியல் துறையினர் ஆய்ந்த ஏழாம் நூற்றண்டு கல்வெட்டு களாலும் அடுத்தடுத்த குகைகளில் சிவபெருமானுடையதைத் தவிர அருகு திருமா லுக்கும் ஜைன தீர்தங்காரருக்கும் அமைந்த தனித்தனி குகைக் கோயில்கள் பழமைக்குச் சான்று பகர்கின்றன.

     

    ‘வாதாபியே மிகப்பழமையான பூதூர் எனவும், அதன் நடுநாயகமான பூத நாதர் கோயிலும் ஐயமின்றி சால பழமை உடையது. இக்குடைவரைக் கோயில்கள் மகேந்திரவர்ம பல்லவன் காலத்து சாளுக்கிய மன்னன் புலிகேசியின் ஆணைவழி ஏழாம்நூற்றாண்டில் கட்டப் பட்டவைகள் என ஆய்வாவணங்கள் உள்ளன. சேக்கிழாரின் பெரிய புராணக் கருத்துவழி சிறுத்தொண்டர் பல்லவப் போர்த் தலைமை ஏற்று வடுகநாட்டுப் போரில் வென்று திரும்பிய பழமைஉடைய வாதாபி இதுவே. இணையவழி கண்ட மற்ற கோயில்கள் எவற்றிற்கும் அவற்றின் தோற்றம், கிட்டிய ஆவணம்வழி இவ்வகை பழமை காணப்படவில்லை. பற்பல மிகமிக பிற்காலத்தவை. ஓருசில சென்ற நூற்றாண்டில் தொடரும் பழங்கீர்த்தியில் கிளைத்தவை ஆகும்

     

              வாதாபி வைப்புத்தலம்

    தேவாரம் குறித்த ஓங்காரம், திரியம்பகம், சோமேச்சுரம், நாகேச்சுரம், மாகாளேச்சுரம்என்பன ஓர்வகையில் நிரல்பட்டு போற்றப் பெறும் அம் ஈற்று வடநாட்டுத் தலங்கள் போன்று பூத நாதன் என ஓர் தல இறைவன் 18 பாடல்களில் போற்றப்பெற்ற பெயர்வழி பெறப்படும் தலம் ‘பூநாம்‘. வாதாபியில் உள்ள ஆதி பூத நாதர் கோயிலே என அதனை ஓர் தேவார வைப்புத்தலம் எனக் கொள்ளலாம்.

     

                பூத நாயகன், பூ தேச்சுரம்

    தேவார திருமுறைகளில் பூத நாதன் போன்று பூத நாயகன்‘ எனஓர் பெயரும் மேலும் 10 பாடல்களில் காணப்படுகின்றது. வடநாட்டிலும் பூத் நாத் உடன் ‘பூ தேஷ்வர்’ என பெயர் வழங்கும் ‘மந்திர்கள் நூற்றுக்கும் மேலுள்ளன. நுணிகிய நிலையில் இவ்விரு சொற்களுக்கு இடையுள்ள ஒற்றுமையும் வேற்றுமை, பூதம் எனும் சொல்லின் மாற்றுப் பொருள்கள், பூதகண-பதி’ வழிபாடு, அதன் வாதாபித் தொடர்பு முதலியன அடுத்து தொடரும் ஓர் கருத்துரையில் காண்போம்.

     

    கீழ்காணும் படங்களின் தொகுப்பினில், இந்தியாவில் பரந்துள்ளசில பூத் நாத் மந்திர் களைக் காண்க. இவற்றில் மிகச்சிலவே பழமையான. பற்பல மிகமிகப் புதியன. 

     

     

    திருச்சிற்றம்பலம்

    <><><><><>

     

     

    3 attachments — Download all attachments   View all images  
      endimage.jpg
    214K   View   Download  
      imageatstart.jpg
    110K   View   Download  
    Share
  • திருமண வாழ்க்கை ஆண்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்குமா?

     

    தேமொழி

     

    திருமணம் செய்து கொண்ட ஆண்கள் நீண்ட ஆயுளை உடையவர்களாகவும், ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு ஆதாரமாகப் பல புள்ளிவிவரங்களும்(data) கொடுக்கப்பட்டன. இந்த ஆராய்ச்சி முடிவினைக் கேட்ட சிலர், “என்ன செய்வது? என் வாழ்க்கைத் துணையுடன் ஒரு நாளைக் கழிப்பதே ஒரு மாமாங்கம் போலத் தோன்றுகிறது. இது போன்ற எண்ணம் உள்ள மணமானவர்கள் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்று இருப்பார்கள் போலிருக்கிறது”, என்று கேலி செய்து வேடிக்கை பேச்சும் பேசுவது உண்டு. 

     

     

    தற்கால உலகில், திருமண வாழ்க்கைக்கு மதிப்பு குறைந்து வரும் கால கட்டத்தில், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை முறையினை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை ஆதாரமாகக் காட்டி, இளைஞர்களுக்கு திருமண வாழ்க்கையின் மேன்மையை எடுத்துச் சொல்லி போதிக்க முற்படுவார்கள்.

    ஆனால், இந்த ஆராய்ச்சியின் முடிவு சரியா? இதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் புள்ளிவிவரங்களை அலசி சரியான முடிவை எடுத்தார்களா? என்ற சந்தேகக் கேள்விகள் பொதுவாக ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர்களுக்கு எழும். ஏனெனில், சற்று கவனம் இல்லாமல் ஆராய்ந்தால் புள்ளிவிவரங்களைக் கொண்டு தவறான முடிவுகளையும் எடுக்க வாய்ப்புள்ளது.  

    அதற்கு  புள்ளியியல்(statistics) பயில்பவர்களுக்கு உதாரணப் பாடமாக சொல்லிக்கொடுக்கப் படுவதை முதலில் பார்ப்போம். இந்த உதாரணம் மிகவும் பிரபலமான ஒன்று. ஐஸ்க்ரீம் விற்பனை அதிகரிக்கும் நாட்களில் மக்கள் பலர் நீரில் மூழ்கி மரணமடைகிறார்கள் என்பதனைக் குறிக்கும் புள்ளிவிவரங்கள் உள்ளன. இதனை மேலோட்டமாகப்  பார்த்து “அதிக ஐஸ்க்ரீம் சாப்பிடுவது நீரில் மூழ்கி மரணமடைவதற்கு காரணமாகிறது” என்ற கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களைக் கொண்டு முடிவெடுப்பது தவறு.

    இதனை ஆராய்ச்சியாளர்கள் கூறும் மொழியினை உபயோகித்திச் சொல்வோமானால், “ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்கும் நீரில் முழுவதற்கும் இடையே தொடர்பு/’இடைத்தொடர்பு’ (correlation) உள்ளது. இதனால் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதுதான் நீரில் மூழ்கி மரணமடைவதற்கு காரணம் என்ற ‘காரண காரியத் தொர்பினை’ (causality) முடிவாகக்  கொள்ளுவது அபத்தமாக முடியும்.”

    இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும்; அதாவது ஐஸ்க்ரீம் விற்பனை மற்றும் நீரில் மூழ்குதல், இவற்றிக்கு வேறு ஒரு ‘பொதுவான காரணம்’ (underlying factor)  உள்ளது.  இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் உள்ள பொதுவான காரணம்; நல்ல தட்பவெட்ப நிலை உள்ள கோடை காலம்.  மாணவர்கள் விடுமுறையில் கடல், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று உல்லாசமாக நீந்தி விளையாடுவது கோடை காலத்தில்தான். அதுபோன்றே, இந்த இடங்களில் கூடும் கூட்டத்தினரின் தேவைக்கேற்ப வெயில் காலத்தில் ஐஸ்க்ரீம்  விற்பனையும் அதிகரிக்கும். இது இயல்பான ஒன்று.  இந்நாட்களில் அதிக மக்கள் நீரில் விளையாடுவதால் நீரில் மூழ்கி மரணமடையும் நிகழ்வுகளும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இந்தப்  பொதுவான காரணத்தைக் கருத்தில் கொள்ளாமல் முடிவுக்கு வருவது தவறாக அமையும்.

    இரண்டு நிகழ்வுகளுக்கிடையில் தொடர்பு இருப்பதாகத் தெரிந்தால், இது நிகழ இதுதான் காரணம் என்று உடனே அவசர முடிவுக்கு வருவது, ஆராயாமல் கொள்ளும் தவறான முடிவாகும். 

     

    ப்பொழுது நாம் அறிந்து கொள்ள விரும்பும், திருமணத்திற்கும் ஆண்களின்  நீண்ட ஆரோக்கிய வாழ்க்கைக்கும் உள்ளத் தொடர்பைக்  கண்டறிந்த ஆராய்ச்சியின் முடிவைப் பற்றி மேலும் விளக்கமாக அறிந்து கொள்வோம்.  

    உண்மையில் என்ன நிகழ்கிறது என்றால், நல்ல கல்வியும் உடல் ஆரோக்கியமும் உள்ள செல்வந்தர்களால் அதிக நாள் வாழ முடிகிறது.  அவர்களுக்கு வாழ்க்கைத்துணை கிடைப்பதும் இக்காரணங்களால் சுலபமாகிவிடுகிறது. ஆண்களுக்கு மட்டுமின்றி, இதே காரணங்கள் பெண்களுக்குத் திருமண வாழ்க்கை அமைவதிலும் உதவி புரிகின்றன என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

    இதற்கு மாறாக கல்வித் தகுதி குறைவாகவோ, அதனால் வருமானம் குறைவாகவோ இருப்பவர்களுக்கு இதே காரணங்களால் திருமணம் தள்ளிப் போகிறது.  அத்துடன் நோய் ஏற்படும்பொழுது அதற்கு மருத்துவம் பார்ப்பதோ,ஆரோக்கிய உணவு, வாழ்க்கைமுறைகளைக் கடைபிடித்து உடலைப் பேணிக் காப்பதோ இயலாது போகிறது. இக்காரணங்களினால் அதிக நாட்கள் அவர்களால் உயிர் வாழ முடிவதில்லை. 

    நீண்ட ஆயுளைப் பெறும் வாய்ப்புள்ள சமூக சூழ்நிலை உள்ளவர்களுக்கு விரைவில் திருமண வாழ்க்கை அமைவதும், அத்தகுதி அற்றவர்களுக்கு திருமணம் நிகழ தடைகள் ஏற்படுவதுமே சரியான காரணம் என்று பின்னாளில் மேலும் பல ஆராய்ச்சி முடிவுகள் உணர்த்தின. அதனால் மணவாழ்க்கை நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்பது சரியல்ல.  நிம்மதியற்ற திருமண வாழ்க்கை நேர் மாறான விளைவைத் தருவதையும் நாம் அறிவோம்.  

     

    correlation

     

    து போன்று மேலோட்டமாக உள்ள தொடர்புகளை மட்டும் கவனித்துவிட்டு, முற்றிலும் தவறாக வெளியிடப்படும் ஆராய்ச்சி முடிவுகளுக்கு உதாரணமாக புள்ளியியல் துறையில் இருந்து பல ஆதாரங்களைக் கொடுக்க இயலும்.   சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் வெளியான ஒரு ஆராய்ச்சியானது தன்னம்பிக்கை உள்ள பிள்ளைகளுக்கும் அவர்கள் பள்ளியில் நன்கு பயின்று நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கும் உள்ள தொடர்பினைக் கண்டறிந்தது.  அதனால் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகள் வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கையை  ஊட்டி வளர்க்க அறிவுரைக் கூறப்பட்டது.

    தொடர்ந்து பின்நாளில் நிகழ்த்தப் பட்ட ஆராய்ச்சி, இது தவறு, உண்மையில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் தங்களால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெறுகிறார்கள்.  நல்ல மதிப்பெண்கள் பெறுவதே தன்னம்பிக்கைக்யை அதிகரித்து தொடர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறக் காரணமாகிறது.  நல்ல மதிப்பெண்கள்தான் தன்னம்பிக்கையைத் தருகிறது, மாறாக தன்னம்பிக்கை நல்ல மதிப்பெண்களைப் பெற வழி செய்வதில்லை என்று கண்டறிந்தார்கள்.

     

    கவே, நிகழ்வுகளுக்கு இடையில் தொடர்பு உள்ளது என்று புள்ளி விபரங்கள் குறிப்பிட்டாலும், அந்த தொடர்புக்கு இதுதான் காரணமா என்ற நாம் கவனமாக ஆராய வேண்டும். இது நிகழ்ந்தால் நிச்சயம் இதுவும் நிகழ்ந்தே தீரும், ஆகவே இது நிகழ இதுவே காரணம் என அவசரப்பட்டு எந்த முடிவெடுக்கக் கூடாது.  காரணம் எதுவாகவும் இருக்க வாய்ப்புள்ளது,

    எனவே, இடையே உள்ளத் தொடர்பு மட்டும் எதனையும் ஆணித்தரமாக சொல்ல உதவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வேண்டுமானால் அத்தொடர்புகள் சிற்சில குறிப்புகளைக் கொடுத்து யூகிக்க வாய்ப்பளிக்கலாம். அதனை அடிப்படையாகக் கொண்டு இது ஏன் நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது? என்ன காரணம்? என்று ஆராய வேண்டியது நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவி.  சந்தேகம் வரும் சமயங்களில் ‘ஐஸ்க்ரீம் விற்பனை ஆராய்ச்சி’ உதாரணத்தையும் நினைவு படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

     

     

    நன்றி: TED X – The danger of mixing up causality and correlation
    படம் உதவி: http://lh5.ggpht.com/_hEtlcZt0xFs/S9Ytx3wPSpI/AAAAAAAAD5Y/P7fE1IYDG54/bengali%20wedding%20doll%5B7%5D.jpg

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (34)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    ஆணும், பெண்ணும் உலகில் சமநிலை கொண்டவர்கள் எனும் கருத்தை நிலைநாட்டுவதற்காக சிவன் அர்த்தநாரீசுவரராக தன்னைக் காட்டியதாகப் புராணங்களில் அறிகிறோம்.

    வாழ்வும் சமயமும் பிணைந்து இருப்பது உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதா? இல்லையா என்னும் விவாதம் பல்வேறு நாட்டவர்களிடமும், பல்வேறு வகைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    அதே சமயம் விடை தெரியா வினாக்கள் , விளக்கமில்லா நிகழ்வுகள் இப்பிரபஞ்சத்தில் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன.

    உள்ளத்தூய்மை, உள்ள ஒழுக்கம் என்பனவற்றின் முக்கியம் உலக சமுதாயத்தின் அமைதியான வாழ்க்கைக்கு எத்துணை இன்றியமையாதது என்பது பல வழிகளில் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    நாகரீக வளர்ச்சி எனும் பெயரால் கலாச்சார விழுமியங்கள் தமது இருப்பினை இழந்து கொண்டிருக்கின்றன.

    கலாச்சார பாரம்பரியம், சமுதாயக் கோட்பாட்டினைக் கட்டிக் காக்கும் வரம்பு என்பனவற்றின் எல்லை என்ன என்று நிர்ணயிக்க முடியாமல் நவீன கால மாற்றங்கள் தத்தளித்துக் கொண்டிருப்பது போலத் தென்படுகிறது.

    மதங்களைத் ஸ்தாபித்தவர்களின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களால் மதம் போதிக்கப்படும் போது அங்கே மதங்களின் பெயரால் அநியாயமாக மனித உயிர்கள் காவு கொள்ளப்படுக்கின்றன.

    மதத்தைக் கண்மூடித்தனமாக பின்பற்றுவர்கள் சமுதாயத்தில் முன்னணி நிலைகளை எடுப்பதைக் காட்டிலும் மதங்களைப் பற்றிய உண்மையான புரிந்துணர்வு கொண்டவர்கள் சமுதாயத்தின் முன்னோடிகளாக இளைய சமுதாயத்தை வழி நடத்துவது ஒன்றே இன்றைய அவசர உலகில் அமைதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதுவே யதார்த்தமாகும்.

    என்ன இது ?  எதற்காக இந்த தத்துவ விளக்கம் இப்போது எனும் கேள்வி உங்கள் மனங்களிலே விளைவது தவிர்க்க முடியாதது.

    சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்திலே “சர்ச் ஆப் இங்கிலாந்து ( Church of England) எனும் அமைப்பிலே எழுந்த சர்ச்சைகளும், விவாதங்களும் அதைத் தொடர்ந்த வாக்கெடுப்பின் முடிவுகள் கொடுத்த சமுதாய அதிர்வுகளைப் பற்றிய அலசலுக்காகவே மேற்கூறிய கருத்துக்கள்.

    கடந்த 12 வருடங்களாக இங்கிலாந்து சர்ச்க்குள் நடந்த விவாதங்களும் அதன் பயனாக ஏற்பட்ட விழிப்புணர்வுகளும் திரும்பவும் பழைய குருடி கதவைத் திறவடி எனும் நிலைக்குத் தள்ள‌ப்பட்டு விட்டது.

    என்ன விஷயம் இது ? என்று அங்கலாய்ப்பது போலத் தெரிகிறது.

    ஆண்டவனின் தேவாலயத்தில் ஆணும் பெண்ணும் சமனாகக் கருதப்படுகிறார்களா ? என்று தேவாலய நிர்வாகத்தினரின் முன்னால் வைக்கப்பட்ட கேள்வியின் மீதான விவாதங்களே அவை.

    சாதாரண் மதகுரு எனும் ஸ்தானத்திற்கு பெண்களும் வரலாம் எனும் நிலையிலிருந்து பெண் “பிஷப்(Bishop)”  எனும் பதவிக்கு பெண்கள் தகுதியானவர்களா ? அவர்கள் அப்பதவிக்கு நியமிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? எனும் விவாதம் பல வருடங்களாக நடைபெற்று வந்தது.

    அவ்விவாதங்கள் முதிர்வடைந்த நிலையிலும், பெண்கள் பிஷப்பாக வரவேண்டும் அதுவே சமுதாயத்தில் பெண்கள் சம உரிமையுடன் கணிக்கப்படுவதை ஊர்ஜிதப்படுத்தும் செயல் எனும் அரசியல்வாதிகளும், பெண்ணுரிமையை முன்னெடுப்பவர்களும் ஆதரித்துக் கோஷமெழுப்பியதாலும் தேவாலய திருச்சபையின் நிர்வாகக் குழுக்களின் முன்னால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆறு வாக்குகளினால் இப்பேரரணை தோற்கடிக்கப்பட்டதையடுத்து பல அரசியல், சமூக விவாதங்கள் ஊடகங்களில் நடைபெற்ற வண்ணம் இருக்கிறது.

    சரி இதன் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போமா?

    இந்த சர்ச் ஆப் இங்கிலாந்து எனும் இங்கிலாந்து மக்களுக்கான தனியான தேவாலய மத அமைப்பு இங்கிலாந்தின் மன்னனான  8வது ஹென்றி என்பவரால் 1534ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தனக்கு ஆண் வாரிசைக் கொடுக்காத காரணத்தால் தனது மனைவியான “கத்தரின் ஆப் அராகன் (Catherine of Aragon)” அவர்களை விவாகரத்துச் செய்து விட்டு தனது காதலியான “ஆன் பேலின்(Anne Boleyn.) என்பவரை மணமுடிக்க எண்ணியபோது அதற்கு அப்போதைய கத்தோலிக்கப் பெரியவரான போப் அனுமதி கொடுக்காத காரணத்தினால் இங்கிலாந்து நாட்டிற்கான தனியான தேவாலய அமைப்பை இம்மன்னன் உருவாக்கினார்.

    இத்தகைய பின்னணியைக் கொண்ட இவ்வமைப்பு தேவாலயத்தில் பெண்கள் கர்த்தரை நோக்கிய வழிபாட்டில் ஒரு பகுதியை வாசிக்கும் தகுதியை 1861ம் ஆண்டு பெற்றார்கள். முதலாவது உலக மகாயுத்தத்தின் போது சில பெண்கள் “பிஷப்பின் தூதர்களாக”  நியமிக்கப்பட்டார்கள்.

    அதைத்தொடர்ந்து பெண்களுக்கான நியமனம் எதுவும் 1969ம் ஆண்டு வரை நடைபெறவில்லை. பெண்கள் சமய சம்பந்தமான சேவைகளுக்காக தெரிவு செய்யப்படலாம் எனும் சட்டம் 1986ல் இயற்ற‌ப்பட்டது. இதன் பிரகாரம் முதன் முறையாக 1987ம் ஆண்டு பெண்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

    இங்கிலாந்தின் சர்ச் அமைப்பை நிர்வகிக்கும் சர்ச் அசெம்பிளி எனும்  1850களில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பை “ஜெனரல் சினோட்(General Synod) எனும் அமைப்பு 1970ம் ஆண்டு இடம் பெயர்த்தது. இவ்வமைப்பு பெண்கள் தேவாலய நிர்வாகங்களிலும் மற்றைய மதகுருமாருக்கு உதவிப் பணிகளில் ஈடுபடுவதற்குமான அதிகாரத்தை 1994ம் ஆண்டே வழங்கியது.

    2005ம் ஆண்டு யூலை மாதம் சர்ச் ஆப் இங்கிலாந்து பெண்கள் “பிஷப்” எனும் பதவியை வகிப்பதற்கான அதிகாரத்தை வழங்குவது பற்றி ஆலோசிக்கத் தொடங்கியது. 2006ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் அதே அமைப்பு பெண் பிஷப் கீழ் வழிபட விரும்பாத பக்தர்களுக்காக மாறுபட்ட வழிமுறைகளைச் சிந்திக்க வேண்டும் எனும் தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

    2008ம் ஆண்டு யூலை மாதம் 8ம் திகதி அதே அமைப்பு பெண்களை “பிஷப்” பதவிக்கு அமர்த்தலாம் என்றும், அதை விரும்பாதவர்களுக்கு மாறுபட்ட வழிகளைக் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்றும் பெரும்பான்மையாக வாக்களித்தது.

    ஆனால் அதைத் தொடர்ந்து பல இழுபறிகள் இது சம்பந்தமான அதிகார நிறைவேற்றலில் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஏறத்தாழ 6 வாக்குகளினால் பெண்களுக்கு “பிஷப்” அதிகாரம் வழங்கும் பிரேரணை தோல்வியுற்றது.

    இது பல முன்ன்ணி அமைப்புகளுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சட்டத்தில் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படக்கூடாது எனும் நிலை இருக்கையில் எப்படி கிறீஸ்தவ தேவாலயம் இங்கிலாந்து நாட்டில் இத்தகைய வேறுபடுத்தலைக் கடைப்பிடிக்கலாம் எனும் கேள்வி பலமுனைகளில் இருந்து எழுந்துள்ளது.

    அனைத்து மக்களும் வேறுபாடின்றி நடத்தப்ப்பட வேண்டும் எனும் நிலையை உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்லும் பிரித்தானிய நாட்டில் இத்தகைய ஒரு நிலை இருப்பது உலக அரங்கில் எமது நாட்டைப் பற்றிய மதிப்பீட்டைக் குறைத்து விடாதா என அரசியல் தலைவர்கள் கட்சிப் பாகுபாடின்றி விமர்சிக்கிறார்கள்.

    இங்கிலாந்தின் பிரபுக்கள் சபையில் இங்கிலாந்து கிறீஸ்துவ அங்கத்துவம் பேணப்படும் நிலையில் ஏன் அரசாங்கம் கிறீஸ்தவ நிர்வாகத்தினரிடம் இவ்வேற்றுமை களையப்படக்கூடாது எனும் அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியாது எனும் கோஷமும் எழுந்துள்ளது.

    அதே சமயம் மத சம்பந்தமான விடயத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது, தனி மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் இங்கிலாந்து நாட்டில் பெண் “பிஷப்” ஜ ஏற்றுக் கொள்ளாத கருத்து கொண்டவர்களின் உரிமையை எபவ்வாறு உதாசீனம் செய்யலாம் என்று மற்றொரு பக்கத்தில் வாதம் எழுகிறது.

    இறைவனின் கண்களில் ஆணும், பெண்ணும் சம உரிமை கொண்டவர்களாகவே கருதப்படுகிறார்கள். தேவாலயத்தில் இறை சம்பந்தமான வகையில் சேவைபுரிய விரும்பும் பெண்களைத் தடை செய்வது என்பது நியாயமற்ற செய்கையாகவே தெரிகிறது.

    அதே சமயம் கால மாற்ற‌த்துக்கு உட்படுத்தப்படமுடியாத பல நடைமுறைகள் மத சம்பந்தமான விடயங்களில் இருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியே இருக்கிறது.

    இவ்விரண்டையும் அனுசரித்துக் கொண்டு போகக்கூடிய ஒரு சமநிலையான வழிமுறையை ஏற்படுத்த மதத் தலைவர்கள் முனைவதற்கு அரசியல் தலைவர்களின் அழுத்தம் தேவைப்படுகிறது போலவே தெரிகிறது.

    இந்த விடயத்தில் 2013 கொண்டு வரப்போகும் மாற்றத்தை இங்கிலாந்து முழுவதும் மிக ஆவலாக எதிர்பார்த்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

    விடை காலத்தின் கையில்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
     
     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இஸ்ரேல் பயணம்-1

     

    நாகேஸ்வரி அண்ணாமலை

    விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே அது போல் நான் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன்.  அந்த ஆசையை நான் வெளிப்படையாகச் சொல்லும் பொழுதெல்லாம் என் மகள், ‘இஸ்ரேலுக்கா, இப்போதைக்கு நாம் அங்கு போக முடியாது’ என்று வீட்டோ செய்துவிடுவாள்.  அவள் சொல்வது சரிதான் என்று எனக்கும் தோன்றும்.  அதனால் இஸ்ரேல் போகும் ஆசையை அப்போதைக்கு விட்டுவிடுவேன்.

    என் கணவரோடு சிகாகோ பல்கலைக் கழகத்தில் வேலை பார்த்த துணைப் பேராசிரியர்  ஒருவர் யூத இனத்தைச் சேர்ந்தவர்.  இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்.  ஆறு வருடங்கள் சிகாகோவில் வேலை பார்த்துவிட்டு ஒராண்டு  ஆய்விற்காக இஸ்ரேலின் நகரங்களுள் ஒன்றான ஜெருசலேம் நகரில் இருக்கும் ஹீப்ரூ பல்கலைக் கழகத்திற்குச் சென்றார்.  அங்கிருக்கும் போது ஒரு முறை அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கிற்கு வந்தவர் சிகாகோவிற்கும் வந்திருந்தார்.

    சிகாகோவில் அவரைச் சந்தித்துப் பேசிய போது இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்ற என்னுடைய நெடுநாளைய  ஆசையை சும்மா கேஷுவலாகக் கூறினேன்.  அவர், ‘நீங்கள் இஸ்ரேலுக்குப் போவதற்கு இது நல்ல தருணம்’ என்றார்’  ‘ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?  இப்போது அங்கு அமைதி நிலவுகிறதா?’ என்றேன்.  ‘நான் இப்போது அங்கு இருக்கிறேன்.  அதனால்தான் இது நல்ல சமயம் என்றேன்’ என்றார்.

    அப்போதே என் கணவரிடம் இஸ்ரேல் போவது பற்றிப்  பேச ஆரம்பித்தேன்.  அவருக்கும் என்னுடைய வெகுநாளைய ஆசையை நிறைவேற்றுவதற்கு இது சரியான சமயமாகத் தெரிந்தது.  அடுத்ததாக எப்போது போவது என்று எண்ண ஆரம்பித்தோம்.  நண்பர் ஜூனில் வந்தால் தனக்கும் சற்று ஓய்வு இருக்கும் என்றும் மேலும் அப்போது பல்கலைக் கழகத்தில் என் கணவருக்கு ஒரு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்வதற்குத் தகுந்த நேரம் என்றும் கூறினார்.  வருடா வருடம் ஜூனில் இந்தியாவிற்கு வருவோம்.  இந்த முறை அப்படிச் செல்லும்போது வழியில் இஸ்ரேலில் ஒரு வாரம் கழிக்கலாம் என்று முடிவு செய்தோம்.  தற்செயலாக இன்னொரு அமெரிக்க நணபர் ஒருவர் – இவரும் யூதர் – நாங்கள் போவதாகத் திட்டமிட்ட தினங்களில் அங்கு இருப்பதாகக் கூறியதும் இப்படி எல்லாம் கனிந்து வந்ததில் எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்.  (போன வாரம் நடந்தது போல் காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏவுகணைத் தாக்குதல் அப்போது நடந்திருந்தால் போயிருப்போமா என்பது சந்தேகமே.  நல்ல வேளையாக அப்போது எதுவும் நடக்கவில்லை.)

    பல நூற்றாண்டுகளுக்கு  முன்பே அமெரிக்காவில் குடியேறி அங்கு செட்டிலாகிவிட்ட  அமெரிக்க யூதர்கள் பலர் இஸ்ரேல் என்ற நாடு 1948-இல் உருவாக்கப்பட்ட பிறகு அந்த நாட்டிற்குச் சென்று அங்கு சில நாட்களாவது தங்கி வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  யூதர்களுக்காக உருவாக்கப்பட்ட நாட்டில் யூதர்களாகிய தாங்கள் பங்குகொள்ள வேண்டும் என்று பிரியப்படுகிறார்கள்.  மேலே கூறிய நண்பரும் இந்த வகையைச் சேர்ந்தவர்.

    இஸ்ரேலில் உதவுவதற்கு இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தி  கொடுத்த தெம்பில் மளமளவென்று என் மகள் டிக்கெட் வாங்குவது, ஜெருசலேமில் தங்குவதற்கு ஏற்பாடு செய்வது என்று எல்லாக் காரியங்களையும் செய்ய ஆரம்பித்தாள்.

    அமெரிக்காவும் இஸ்ரேலும்  நண்பர்கள் ஆதலால் இஸ்ரேலுக்குப்  போவதற்கு அமெரிக்கக் குடிமக்களும் குடியுரிமை பெற்றவர்களும்  விசா எதுவும் இல்லாமல் போகலாம்.  இந்தியர்கள் என்றால் விசா வாங்க வேண்டும்.  அன்கு போவதற்கு ஒரு மாதமாவது இருக்கும் போதுதான் விசா கொடுக்கிறார்கள்.  இஸ்ரேலுக்குப் போய் வந்தவர்களை பல அரபு நாடுகள் தங்கள் நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை ஆதலால் இஸ்ரேல் விசாவை ஒரு தனித் தாளில் பெற்று இஸ்ரேலுக்குப் போய்வந்த பிறகு அதைப் பாஸ்போர்ட்டிலிருந்து பிரித்து எடுத்துவிடலாம் என்று ஒரு நண்பர் யோசனை கூறினார்.  அதனால் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது இஸ்ரேல் தூதரகத்திடம் அந்த வேண்டுகோளைக் கூறுங்கள் என்றார்கள்.  ஆனால் அதை அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை.  பாஸ்போர்ட்டிலேயே குத்திக் கொடுத்துவிடுகிறார்கள்.

    இஸ்ரேலின் தலைநகரமான டெல் அவிவ் ஒரு மாடர்ன் நகரம்.  அங்கு எங்களைப் போன்றோர்களுக்குப் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.  எங்களுடைய விருப்பம் எல்லாம் பழமை வாய்ந்த ஜெருசலேம் நகரையும் அதைச் சுற்றியிருக்கும் மற்ற பழைய நகரங்களையும் பார்க்க வேண்டும் என்பதுதான். ஜெருசலேமில் விமான நிலையம் இல்லையாதலால் டெல் அவிவிற்குச் சென்று அங்கிருந்து சாலை வழியாக ஜெருசலேம் செல்ல வேண்டும்.  நாங்கள் சிகாகோவிலிருந்து கனடா நாட்டிலுள்ள டொரொண்டோ விமான நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து டெல் அவிவிற்குச் செல்லத் திட்டமிட்டோம்.

    சிகாகோவிலிருந்து  டோரண்டோ செல்ல ஒன்றரை மணி  நேரம்தான்.  அதற்குப் பிறகு  டெல் அவிவ் செல்லும் விமானம்  கிளம்ப ஐந்து மணி நேரத்திற்கு மேல் இருந்தது.  இத்தனை மணி நேர இடைவெளி இருந்ததால் டெல் அவிவ் செல்லும் விமானம் கிளம்பும் இடத்திற்கு அப்போது எங்களைச் செல்ல அனுமதிக்கவில்லை.  விமான நிலையத்தில் வேலை பார்த்த பல தமிழர்கள் – டோரண்டோவில் இலங்கையிலிருந்து குடியேறிய பல தமிழர்கள் இருக்கிறார்கள் – நாங்கள் தமிழர்கள் என்று தெரிந்துகொண்டு நன்றாக உதவினர்.

    டோரண்டோ-டெல் அவிவ்  விமானப் பயணம் பன்னிரெண்டு  மணி நேரம் எடுத்தது.  வழியில் மூன்று தடவை உணவு கொடுத்தார்கள்.  நாங்கள்  எப்போதும் விமானப் பயணத்தின்  போது சைவ, ஆசிய உணவையே கொடுக்குமாறு விமானக் கம்பெனியிடம் கேட்பதுண்டு.  இங்கும் அம்மாதிரிக் கேட்டிருந்தும் மூன்று முறையில் இரண்டு முறை பாலஸ்தீன உணவைக் கொடுத்தார்கள்.  பாலஸ்தீனத்திற்குப் போகும் முன்பே எங்களுக்குப் பாலஸ்தீன உணவு கிடைத்தாலும் விமான உணவு பாலஸ்தீனத்தில் கிடைத்த உணவு போல் இல்லை.  எல்லா விமான உணவுகளைப் பொறுத்த வரையிலும் இப்படித்தான்.  நம் இந்திய உணவு இந்திய உணவு போல் இருக்காது.

    இஸ்ரேலுக்குப் போவதாக நண்பர்களிடம் கூறியதுமே  அங்கு மிகவும் கெடுபிடியாக  இருக்கும், விமான நிலையத்தில் உங்களிடம் பல கேள்விகள் கேட்பார்கள் என்று பலர் எச்சரித்திருந்தனர்.  அதிலும் அந்த நாட்டை விட்டு வெளியேறும் போது இன்னும் அதிகக் கேள்விகள் கேட்பார்கள் என்று கூறியிருந்தனர்.  ஆனால் அப்படி ஒன்றும் இல்லை.  விமான நிலைய அனுபவத்தைப் பொறுத்த வரை குறிப்பிடத் தகுத்தாற் போல் எதுவும் நடக்கவில்லை.  எங்களில் யாரும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையென்பதும் மிகக் குறைந்த வயது இளைஞர் இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.  குடிபுகல் பகுதியில் இருந்த ஊழியர்கள் எல்லா நாட்டிலும் போல் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டிருந்தார்கள்.  குடிபுகல் பகுதியில் வேலை பார்க்கும் எல்லா ஊழியர்களுக்கும் எல்லா நாடுகளிலும் மறந்தும் சிரித்துவிடாதீர்கள் என்று பயிற்சியின் போது அறிவுரை கூறியிருப்பார்கள் போலும் என்று நான் நினைத்துக்கொள்வேன்.

    டெல் அவிவ் விமான  நிலையம் டெல் அவிவ் நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில்  இருக்கிறது.  ஜெருசலேம்  நகரம் டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.  விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் விமான நிலையத்திற்கு வெளியே நின்ற டாக்சி ஒன்றில் ஜெருசலேம் நோக்கிக் கிளம்பினோம்.  டாக்சி டிரைவர் ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் பேசினார்.  ஜெருசலேமிலும் டாக்சி டிரைவர்கள் ஏமாற்றுவார்கள் என்று நண்பர்கள் எச்சரித்திருந்ததால் விமான நிலையத்திலிருந்து ஜெருசலேமில் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் செல்ல சுமாராக எவ்வளவு ஆகும் என்று நண்பர்களிடம் கேட்டு வைத்திருந்தோம். மேலும் விமான நிலையத்திற்கு வெளியே சில ஊர்களுக்குச் செல்வதற்குரிய கட்டண அறிவிப்புப் பலகை இருந்தது.  டாக்சி டிரைவர் கேட்ட தொகை அதை அடுத்து இருந்ததால் அதற்கு ஒத்துக்கொண்டு அவர் காரில் ஏறினோம்.

    மைசூரில் ஆட்டோக்காரர்கள்  பக்கத்து இடத்திற்கு வருவதற்குத்  தயங்குவார்கள்; அல்லது குறைந்த கட்டணமான இருபது ரூபாயை விட அதிகம் கேட்பார்கள்.  ஜெருசலேமில் டாக்சி டிரைவர்களைப் பொறுத்தவரை இதே கதைதான்.  ஜெருசலேம் தெருக்கள் மேடும் பள்ளமுமாக இருந்ததாலும் சில இடங்களில் படிகளோடு இருந்ததாலும் என்னால் நடக்க முடியவில்லை.  போனில் டாக்சியைக் கூப்பிட்டு நாங்கள் தங்கியிருந்த இடத்தைக் குறிப்பிட்டு போக வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டால் வர முடியாது என்று கூறிவிடுவார்கள்.  அதனால் கூடியவரை போகும் இடத்தைக் கூறுவதை முடிந்தால் தவிர்த்துவிடுவோம்.  சில சமயங்களில் எங்களால் முடியாவிட்டால் நாங்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரரிடம் உதவி கேட்டால் அவர் தவறாமல் டாக்சியை வரவழைத்துவிடுவார்.  அவர்கள் மொழியில் அவர் பேசியது ஓரளவிற்கு உதவியிருக்கும் என்று நினைக்கிறேன்.

    நாங்கள் ஜெருசலேம்  சென்ற அன்று நல்ல வெயில் அடித்தது.  பகலில் அங்கு ஜூனில் நல்ல வெயில் அடிக்கிறது.  பொழுது சாயும் போது வெப்பம் குறைந்து கொஞ்சம் குளிர ஆரம்பித்துவிடுகிறது.  நாங்கள் விருந்திற்குப் போன இரண்டு நண்பர்கள் வீட்டிலும் இரவு உணவைத் தோட்டத்தில் மேஜை, நாற்காலி போட்டுப் பரிமாறினார்கள்.  வெளியில் உணவருந்துவது இஸ்ரேல் நாட்டவர்களுக்குப் பிடித்தமான விஷயம் போல் தெரிகிறது.

    ஜெருசலேமில் ஓட்டல்களிலும்  தங்கலாம்.  நாங்கள் அபார்ட்மெண்ட்டில்  தங்குவது என்று முடிவு செய்தோம்.  வீட்டின் ஒரு பகுதியை சில  வீட்டுச் சொந்தக்காரர்கள்  சுற்றுலாப் பயணிகளுக்காக வாடகைக்கு விடுகிறார்கள்.  இவற்றில் ஓட்டல்களில் இல்லாத சமைக்கும் வசதி உண்டு.  எங்கள் அபார்ட்மெண்ட்டில் நிறையச் சமையல் சாமான்கள் இருந்தன.  ஒரு மின்சார அடுப்பும் இருந்தது.  சிறிய சமையலறை இருந்தது.  ஒரு குளிர்சாதனப் பெட்டியும் இருந்தது.  பால், ரொட்டி, சீஸ், பழங்கள் என்று வாங்கிவைத்துக்கொண்டு காலை உணவை நாங்களே தயாரித்துக்கொண்டோம். ஒட்டலில் இல்லாத இன்னொரு வசதி துணிகளைத் துவைத்துக் காயப் போட அபார்ட்மெண்ட்டிற்கு வெளியே கொடி இருந்தது.  மூன்று நாட்களுக்கு ஒரு முறை அபார்ட்மெண்டைச் சுத்தம் செய்து கொடுப்பதற்கு ஒரு பெண் வந்தார்
     

    நாங்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரர் எங்கள் அபார்ட்மெண்டிற்கு  மேலே உள்ள பகுதியில் குடியிருந்தார்.  அபார்ட்மெண்ட்டிற்குப் போவதற்கு இருநூறு அடிகள் இருக்கும்போதே படிகள் இருந்ததால் டாக்சியால் அதற்கு மேல் போக முடியவில்லை.  அங்கிருந்து மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு அபார்ட்மெண்ட்டிற்கு நடந்தோம்.  அபார்ட்மெண்ட் சொந்தக்காரரைச் சந்தித்துச் சாவியைப் பெற்றுக்கொண்டோம்.  ‘உங்களைப் பார்க்க நண்பர் ஒருவர் ஏற்கனவே வந்திருந்தார்.  இந்தப் பழங்களையும் இனிப்புகளையும் என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்’ என்று கூறி அவர் கொடுத்துவிட்டுப் போயிருந்த பொருள்களை எங்களிடம் கொடுத்தார்.

    எங்களோடு எங்கள் அபார்ட்மெண்ட்டிற்கு வந்து எப்படி அதைத் திறப்பது என்று காட்டிவிட்டு, என்ன உதவி வேண்டுமானாலும் அவரிடம் கேட்கலாம் என்றும் எப்போதும் அவராவது அல்லது அவருடைய மனைவியாவது வீட்டில் இருப்பதாகவும் கூறிவிட்டுச் சென்றார்.  எங்கள் அபார்ட்மெண்ட் அவர் அபார்ட்மெண்ட்டிற்குக் கீழேதான் என்றாலும் எங்கள் அபார்ட்மெண்ட் வாசல் கிழக்குப் பார்த்தும் அவருடைய பகுதியின் வாசல் மேற்குப் பார்த்தும் இருந்ததாலும் பல வீடுகளைக் கடந்து சுற்றிக்கொண்டுதான் எங்கள் அபார்ட்மெண்ட்டிற்கு வர வேண்டியிருந்தது.  எங்கள் அபார்ட்மெண்ட் ஜெருசலேமின் பழைய நகரத்தில் இருந்தது.  இதை old city என்கிறார்கள்.  இது ஒரு பழைய கோட்டைச் சுவருக்குள் இருக்கிறது.  இதில் பல பகுதிகள் இருக்கின்றன.  இங்குதான் யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மூன்று மதத்தினரும் தங்கள் இடம்தான் என்று தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ளும் பல இடங்கள் இருக்கின்றன.  அங்குள்ள ஒரு மசூதியின் கூண்டு எங்கள் அபார்ட்மெண்ட்டிலிருந்தே தெரிந்தது.  எங்களை எங்கள் அபார்ட்மெண்ட்டிற்குக் கூட்டி வந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரர் ‘இதோ தெரிகிறதே, இதற்குத்தான் மூன்று மதத்தினரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்’ என்று கூறினார்.  இவர் பெயர் யோசி (Yossi).  இவர் யூத மதத்தைச் சேர்ந்தவர்.

    (தொடரும்)

    படத்திற்கு நன்றி :

    http://www.jewishvirtuallibrary.org/jsource/vie/Telaviv.html

     

     

    Share