இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (34)

 

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

ஆணும், பெண்ணும் உலகில் சமநிலை கொண்டவர்கள் எனும் கருத்தை நிலைநாட்டுவதற்காக சிவன் அர்த்தநாரீசுவரராக தன்னைக் காட்டியதாகப் புராணங்களில் அறிகிறோம்.

வாழ்வும் சமயமும் பிணைந்து இருப்பது உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதா? இல்லையா என்னும் விவாதம் பல்வேறு நாட்டவர்களிடமும், பல்வேறு வகைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதே சமயம் விடை தெரியா வினாக்கள் , விளக்கமில்லா நிகழ்வுகள் இப்பிரபஞ்சத்தில் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன.

உள்ளத்தூய்மை, உள்ள ஒழுக்கம் என்பனவற்றின் முக்கியம் உலக சமுதாயத்தின் அமைதியான வாழ்க்கைக்கு எத்துணை இன்றியமையாதது என்பது பல வழிகளில் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நாகரீக வளர்ச்சி எனும் பெயரால் கலாச்சார விழுமியங்கள் தமது இருப்பினை இழந்து கொண்டிருக்கின்றன.

கலாச்சார பாரம்பரியம், சமுதாயக் கோட்பாட்டினைக் கட்டிக் காக்கும் வரம்பு என்பனவற்றின் எல்லை என்ன என்று நிர்ணயிக்க முடியாமல் நவீன கால மாற்றங்கள் தத்தளித்துக் கொண்டிருப்பது போலத் தென்படுகிறது.

மதங்களைத் ஸ்தாபித்தவர்களின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களால் மதம் போதிக்கப்படும் போது அங்கே மதங்களின் பெயரால் அநியாயமாக மனித உயிர்கள் காவு கொள்ளப்படுக்கின்றன.

மதத்தைக் கண்மூடித்தனமாக பின்பற்றுவர்கள் சமுதாயத்தில் முன்னணி நிலைகளை எடுப்பதைக் காட்டிலும் மதங்களைப் பற்றிய உண்மையான புரிந்துணர்வு கொண்டவர்கள் சமுதாயத்தின் முன்னோடிகளாக இளைய சமுதாயத்தை வழி நடத்துவது ஒன்றே இன்றைய அவசர உலகில் அமைதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதுவே யதார்த்தமாகும்.

என்ன இது ?  எதற்காக இந்த தத்துவ விளக்கம் இப்போது எனும் கேள்வி உங்கள் மனங்களிலே விளைவது தவிர்க்க முடியாதது.

சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்திலே “சர்ச் ஆப் இங்கிலாந்து ( Church of England) எனும் அமைப்பிலே எழுந்த சர்ச்சைகளும், விவாதங்களும் அதைத் தொடர்ந்த வாக்கெடுப்பின் முடிவுகள் கொடுத்த சமுதாய அதிர்வுகளைப் பற்றிய அலசலுக்காகவே மேற்கூறிய கருத்துக்கள்.

கடந்த 12 வருடங்களாக இங்கிலாந்து சர்ச்க்குள் நடந்த விவாதங்களும் அதன் பயனாக ஏற்பட்ட விழிப்புணர்வுகளும் திரும்பவும் பழைய குருடி கதவைத் திறவடி எனும் நிலைக்குத் தள்ள‌ப்பட்டு விட்டது.

என்ன விஷயம் இது ? என்று அங்கலாய்ப்பது போலத் தெரிகிறது.

ஆண்டவனின் தேவாலயத்தில் ஆணும் பெண்ணும் சமனாகக் கருதப்படுகிறார்களா ? என்று தேவாலய நிர்வாகத்தினரின் முன்னால் வைக்கப்பட்ட கேள்வியின் மீதான விவாதங்களே அவை.

சாதாரண் மதகுரு எனும் ஸ்தானத்திற்கு பெண்களும் வரலாம் எனும் நிலையிலிருந்து பெண் “பிஷப்(Bishop)”  எனும் பதவிக்கு பெண்கள் தகுதியானவர்களா ? அவர்கள் அப்பதவிக்கு நியமிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? எனும் விவாதம் பல வருடங்களாக நடைபெற்று வந்தது.

அவ்விவாதங்கள் முதிர்வடைந்த நிலையிலும், பெண்கள் பிஷப்பாக வரவேண்டும் அதுவே சமுதாயத்தில் பெண்கள் சம உரிமையுடன் கணிக்கப்படுவதை ஊர்ஜிதப்படுத்தும் செயல் எனும் அரசியல்வாதிகளும், பெண்ணுரிமையை முன்னெடுப்பவர்களும் ஆதரித்துக் கோஷமெழுப்பியதாலும் தேவாலய திருச்சபையின் நிர்வாகக் குழுக்களின் முன்னால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆறு வாக்குகளினால் இப்பேரரணை தோற்கடிக்கப்பட்டதையடுத்து பல அரசியல், சமூக விவாதங்கள் ஊடகங்களில் நடைபெற்ற வண்ணம் இருக்கிறது.

சரி இதன் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போமா?

இந்த சர்ச் ஆப் இங்கிலாந்து எனும் இங்கிலாந்து மக்களுக்கான தனியான தேவாலய மத அமைப்பு இங்கிலாந்தின் மன்னனான  8வது ஹென்றி என்பவரால் 1534ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தனக்கு ஆண் வாரிசைக் கொடுக்காத காரணத்தால் தனது மனைவியான “கத்தரின் ஆப் அராகன் (Catherine of Aragon)” அவர்களை விவாகரத்துச் செய்து விட்டு தனது காதலியான “ஆன் பேலின்(Anne Boleyn.) என்பவரை மணமுடிக்க எண்ணியபோது அதற்கு அப்போதைய கத்தோலிக்கப் பெரியவரான போப் அனுமதி கொடுக்காத காரணத்தினால் இங்கிலாந்து நாட்டிற்கான தனியான தேவாலய அமைப்பை இம்மன்னன் உருவாக்கினார்.

இத்தகைய பின்னணியைக் கொண்ட இவ்வமைப்பு தேவாலயத்தில் பெண்கள் கர்த்தரை நோக்கிய வழிபாட்டில் ஒரு பகுதியை வாசிக்கும் தகுதியை 1861ம் ஆண்டு பெற்றார்கள். முதலாவது உலக மகாயுத்தத்தின் போது சில பெண்கள் “பிஷப்பின் தூதர்களாக”  நியமிக்கப்பட்டார்கள்.

அதைத்தொடர்ந்து பெண்களுக்கான நியமனம் எதுவும் 1969ம் ஆண்டு வரை நடைபெறவில்லை. பெண்கள் சமய சம்பந்தமான சேவைகளுக்காக தெரிவு செய்யப்படலாம் எனும் சட்டம் 1986ல் இயற்ற‌ப்பட்டது. இதன் பிரகாரம் முதன் முறையாக 1987ம் ஆண்டு பெண்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இங்கிலாந்தின் சர்ச் அமைப்பை நிர்வகிக்கும் சர்ச் அசெம்பிளி எனும்  1850களில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பை “ஜெனரல் சினோட்(General Synod) எனும் அமைப்பு 1970ம் ஆண்டு இடம் பெயர்த்தது. இவ்வமைப்பு பெண்கள் தேவாலய நிர்வாகங்களிலும் மற்றைய மதகுருமாருக்கு உதவிப் பணிகளில் ஈடுபடுவதற்குமான அதிகாரத்தை 1994ம் ஆண்டே வழங்கியது.

2005ம் ஆண்டு யூலை மாதம் சர்ச் ஆப் இங்கிலாந்து பெண்கள் “பிஷப்” எனும் பதவியை வகிப்பதற்கான அதிகாரத்தை வழங்குவது பற்றி ஆலோசிக்கத் தொடங்கியது. 2006ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் அதே அமைப்பு பெண் பிஷப் கீழ் வழிபட விரும்பாத பக்தர்களுக்காக மாறுபட்ட வழிமுறைகளைச் சிந்திக்க வேண்டும் எனும் தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

2008ம் ஆண்டு யூலை மாதம் 8ம் திகதி அதே அமைப்பு பெண்களை “பிஷப்” பதவிக்கு அமர்த்தலாம் என்றும், அதை விரும்பாதவர்களுக்கு மாறுபட்ட வழிகளைக் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்றும் பெரும்பான்மையாக வாக்களித்தது.

ஆனால் அதைத் தொடர்ந்து பல இழுபறிகள் இது சம்பந்தமான அதிகார நிறைவேற்றலில் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஏறத்தாழ 6 வாக்குகளினால் பெண்களுக்கு “பிஷப்” அதிகாரம் வழங்கும் பிரேரணை தோல்வியுற்றது.

இது பல முன்ன்ணி அமைப்புகளுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சட்டத்தில் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படக்கூடாது எனும் நிலை இருக்கையில் எப்படி கிறீஸ்தவ தேவாலயம் இங்கிலாந்து நாட்டில் இத்தகைய வேறுபடுத்தலைக் கடைப்பிடிக்கலாம் எனும் கேள்வி பலமுனைகளில் இருந்து எழுந்துள்ளது.

அனைத்து மக்களும் வேறுபாடின்றி நடத்தப்ப்பட வேண்டும் எனும் நிலையை உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்லும் பிரித்தானிய நாட்டில் இத்தகைய ஒரு நிலை இருப்பது உலக அரங்கில் எமது நாட்டைப் பற்றிய மதிப்பீட்டைக் குறைத்து விடாதா என அரசியல் தலைவர்கள் கட்சிப் பாகுபாடின்றி விமர்சிக்கிறார்கள்.

இங்கிலாந்தின் பிரபுக்கள் சபையில் இங்கிலாந்து கிறீஸ்துவ அங்கத்துவம் பேணப்படும் நிலையில் ஏன் அரசாங்கம் கிறீஸ்தவ நிர்வாகத்தினரிடம் இவ்வேற்றுமை களையப்படக்கூடாது எனும் அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியாது எனும் கோஷமும் எழுந்துள்ளது.

அதே சமயம் மத சம்பந்தமான விடயத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது, தனி மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் இங்கிலாந்து நாட்டில் பெண் “பிஷப்” ஜ ஏற்றுக் கொள்ளாத கருத்து கொண்டவர்களின் உரிமையை எபவ்வாறு உதாசீனம் செய்யலாம் என்று மற்றொரு பக்கத்தில் வாதம் எழுகிறது.

இறைவனின் கண்களில் ஆணும், பெண்ணும் சம உரிமை கொண்டவர்களாகவே கருதப்படுகிறார்கள். தேவாலயத்தில் இறை சம்பந்தமான வகையில் சேவைபுரிய விரும்பும் பெண்களைத் தடை செய்வது என்பது நியாயமற்ற செய்கையாகவே தெரிகிறது.

அதே சமயம் கால மாற்ற‌த்துக்கு உட்படுத்தப்படமுடியாத பல நடைமுறைகள் மத சம்பந்தமான விடயங்களில் இருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியே இருக்கிறது.

இவ்விரண்டையும் அனுசரித்துக் கொண்டு போகக்கூடிய ஒரு சமநிலையான வழிமுறையை ஏற்படுத்த மதத் தலைவர்கள் முனைவதற்கு அரசியல் தலைவர்களின் அழுத்தம் தேவைப்படுகிறது போலவே தெரிகிறது.

இந்த விடயத்தில் 2013 கொண்டு வரப்போகும் மாற்றத்தை இங்கிலாந்து முழுவதும் மிக ஆவலாக எதிர்பார்த்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

விடை காலத்தின் கையில்

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
லண்டன்
 
 

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (34)

  1. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டில் தோன்றிய சமண சமயம் பெண்களுக்கு கல்வியிலும் சமயத்திலும் சம உரிமை அளித்தது.
    நாகரீகம் என்று சொல்லப்படுவது வளர வளர பிற்போக்கான சிந்தனைகளும் அதிகமாகிறது.
    இந்தக் காலத்திலும்இங்கிலாந்தில் இந்த நிலை என்பதை செரிமானம் செய்யச் சிரமமாக இருக்கிறது.

  2. 1861லிருந்து 1987 வரை இருந்த ஜவ்வுமிட்டாய் இழுபறி! 1987 -2012 வரையும் இழுபறியில் பெண்ணியம் தோற்றது. அதாவது இறைவனுக்கும், பரமபிதாவுக்கும், ஏசு பிரானுக்கும் இருக்கும் சம்பந்தம், தேவாலய நிர்வாகங்களுக்கு அளிக்கபடவில்லையோ என்ற ஐயம் எழுகிறது.

Leave a Reply

Your email address will not be published.