நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.3
சஞ்சீவினி
இன்னம்பூரான் & தேமொழி
ஒரு வருடம் முன்னால் இன்னம்பூரான் ‘வல்லமை’யில் எழுதிய இந்தத் தொடரின் முதல் பகுதியை 1640 வாசகர்கள் படித்திருக்கிறார்கள், இன்னும் சிலர் படித்து வருகிறார்கள் என்பதும், அடுத்த பகுதியும் வாசிக்கப்படுகிறது என்ற குறிப்பும், தேமொழியின் ‘வலி நிவாரணி வேலை செய்யும் விதம்’ என்ற கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களும், இந்த தொடருக்கு சஞ்சீவினி மூலிகையாக வருகை புரிந்து, அதை உயிர்ப்பததற்கு நன்றி. வாசகர்களுக்கு நன்றி நவிலவேண்டும்; தலைப்பை ‘சஞ்சீவினி’ என்று மாற்றியமைத்து, அதை செய்தோம்.
முன்பகுதிகளின் ரத்னசுருக்கம்:
நோயாளிகளின் அணுகுமுறையை முன்னிறுத்தி அமையும் என்று இந்த தொடரை அறிமுகம் செய்தார், ‘வல்லமை’ ஆசிரியர். முதல் கட்டுரை சர்வ கலா வல்லமை பொருந்திய நீரழிவு நோயை பற்றிய அறிமுகம். ” நீங்கள் தான் உங்களுக்கு முதல் டாக்டர் ” என்ற படிப்பினையின் மகாத்மியத்தை உணர்த்தியது. மிதமான சத்து உணவு, உடற்பயிற்சி, நேரம் தவறாத மருந்து என்ற நீரழியா வேதம் ஓதியது. அடுத்த பகுதி ‘ஒரு அரசு மருத்துவமனையுடன் உரிமையுடன் உறவு வைத்துக்கொள்வது’ பற்றி குறிப்பால் உணர்த்தியது. இங்கிலாந்தின் இலவச மருத்துவ சேவையின் பின்னணியையும், ஆதாரமுள்ள அறிவுரைகள் இலவசமாக கிடைப்பதையும் கூறியது. அங்குள்ள டாக்டரிடம் இது பற்றி பிரஸ்தாபித்த போது, அவர் இந்த முயற்சியை வரவேற்றார். ‘நாங்கள் டாக்டரல்ல.’, ‘டாக்டரிடம் ஆலோசனை பெற இவை உதவலாம். இவற்றை படித்து உரிய நேரத்தில் டாக்டரிடம் போவதைத் தவிர்க்கக்கூடாது’ என்பதை விளக்கி விடுங்கள் என்றார். [Disclaimer ஐ படிக்கவும்.] PCO (patient complaining of) + HPC (history of the present complaint) + PMH (previous medical history).” என்ற மும்மந்திரங்களின் மர்மமும் அறிந்தோம். வலி என்ற சொல் அந்தாதியாக அமைந்து விட, தேமொழி வலி நிவாரணிகள் வேலை செய்யும் விதத்தை விளக்கினார். இன்னம்பூரானின் ‘அபாய சங்கு’ இருவரும் இணைந்து ‘சஞ்சீவினி’ மருத்துவத் தொடரை பரிபாலனம் செய்யவேண்டும் என்று அன்புகட்டளை விடுத்தது. இணைந்து வருகிறோம். கருத்து, வினா, ஆலோசனை, பின்னூட்டங்கள், தனி மடல்கள் எல்லாம் நல்வரவு ஆகுக. நீரழிவு நோய், மன அழுத்தம் ஆகிவற்றை பற்றி பிறகு எழுதுகிறோம்.
இந்த பகுதியில் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் வாழ்வியலை எவ்வாறு சிறப்புற செய்யும் என்பதை பற்றிய ஒரு நூலின் சுருக்கம். மேலதிக விவரங்கள், உங்கள் வினாக்களை பொருத்து அமையும். சில அமெரிக்க மருத்துவ ஆலோசனைகளும் இடம் பெறுவது நலன் தரும். தெளிவு முக்கியம். அதனால், இனி அவரவர் பெயரில்:
இன்னம்பூரான்:
சோம்பலை முறியடிப்பது எளிது. சில அன்றாட வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அடிக்கடி நடை, படி ஏறுவது, கடைக்கு நடந்து போவது, அதிக நேரம் அமர்ந்து இருப்பதைக் குறைத்து விடுவது, நண்பர்களுடன் பழகுவது என்று ஆரம்பியுங்கள். அதை வழக்கமாக செய்யுங்கள்.
ஏன் இப்படி? சோம்பல் (physical inactivity) உடல் வலிமையை தளர்த்தி விடும். விரைவில் உயிரை மாய்த்து விடும். இதய நோய்க்கு (coronary heart disease: chd) இந்த சோம்பல் தான் வித்திடுகிறது. இது வளர்ந்த நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலும் கண்டெடுத்த உண்மை. சுறுசுறுப்பு ஆசாமிகளை விட சோம்பேறிகளுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கினால், இதய நோய்/இரத்த அழுத்த நோய்/ டைப் 2 நீரழிவு நோய்/பெருங்குடல் புற்றுநோய்/பருமன்/ ஞாபக மறதி ஆகியவற்றின் தாக்கம் குறையும்.
அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கினால், மேற்படி வியாதிகளை தடுக்கக்கூட முடியலாம்; மேலும் எலும்பு வியாதிகள் எளிதில் அணுகா.
அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கினால், மூட்டு அசைவும், திறனும் அதிகரிக்கும்.
அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்கினால், சக்தி கூடும்; மன அழுத்தம் குறையும்; இளைப்பாறுதல் இனிமையாக அமையும்; உறக்கம் நன்றாக வரும்; களைப்பு தீரும்; ஏகாக்ரஹசக்தியுடன் இயங்கலாம். வாழ்க்கையின் சுவை கூடும். வேறு என்ன வேண்டும், பராபரமே!
மேலும் சொல்ல நிறைய இருக்கிறது. அவை வினா-விடை பகுதியில் இருப்பதால், கேட்க, கேட்க பதில் வரும். அதற்கு முன், கட்டுரை முடிவில் கொடுக்கப்பட்ட உசாத்துணைகளை படியுங்கள். மற்றவர்களிடம் அது பற்றி பேசுங்கள். சுறுசுறுப்புக்கு சுறுசுறுப்பு ஆச்சு. நாலு பேருக்கு நல்ல விஷயம் சொன்னதாகவும் ஆச்சு. கேள்விக்கணை தொடுக்கவும் வசதியாச்சு.
நன்றி.
*
தேமொழி:
உடல் நலம் பேணிக் காப்பதற்கு நம் தமிழர்களுக்கு காலம் காலமாகத் தகுந்த அறிவுரைகள் கிடைத்துள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் வழங்கிய திருக்குறளிற்கு மேல் நாம் ஆதாரம் தேடத் தேவையில்லை. “மருந்து” என்று ஒரு அதிகாரமே அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது வள்ளுவரால்.
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.”
இக்குறளைப் படிக்காத தமிழ் மாணவர்கள் இருக்க வாயிப்பில்லை.
“நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்”, என்று இக் குறளுக்குப் பொருள் உரைக்கிறார் மு. வரதராசனார்.
“நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.”
“மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.”
“மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.”
இவ்வாறாக ஒரு நான்கு குறள்களில் மருத்துவம் பற்றி பொதுவில் குறிப்பிட்ட வள்ளுவம், மருந்து அதிகாரத்தின் மற்ற ஆறு குறள்களில் முக்கியத்துவம் அளித்திருப்பதோ நம் உணவுப் பழக்கத்திற்கு.
“முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.”
“முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.”
“முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.”
“மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.”
“குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.”
“பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டு விடும்.”
(~மற்ற பொருளுரைகளும் மு. வரதராசனார் வழங்கியவையே)
இதிலிருந்து மருத்துவமும் பத்தியமும் இணைந்து செயல் படுபவை என்பது உணர்த்தப்படுகிறது. அத்துடன், வரும்முன் காப்பதின் அவசியத்தை உணர்த்தும் முகமாக, உட்கொள்ளும் உணவில் கடைபிடிக்க வேண்டிய இன்றியமையாமையை உணர்த்த அதிக குறள்கள் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இச்செயலினால் உணவுக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவமும் நன்கு உணர்த்தப் படுகிறது.
நம் நலனினில் அதிக அக்கறை கொள்ள வேண்டியவர்கள் நாம்தான். சிறந்த சுகாதார வழிகளைக் கடைப்பிடித்தும், ஆரோக்கியமான உணவுகளை உண்டும் நம் நலம் பேணிக்காப்போம். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அதனை மருத்துவரிடம் விளக்குவதற்கு உதவும் வகையில் மேலும் பல தகவல்களைத் தேடி அறிந்து கொள்வது நம் கடமை என்பதை நினைவில் கொள்வோம். அதற்கு வகை செய்யும் வகையில் இணையத்திலும் பல தளங்கள் சுகாதாரத் துறை வல்லுனர்ககளின் அறிவுரைகளை தொகுத்து வழங்குகின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கவைகள் பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.
நன்றி.
(தொடரும்)
இன்னம்பூரான் & தேமொழி
கவனம்:
நாங்கள் டாக்டர்கள் அல்ல. நட்புரிமையுடன், பொறுப்புணர்ச்சியுடன்,ஆதாரங்களை தமிழில் விளக்கி, அவற்றை சுட்டிக்காண்பித்து அறிமுகம் தரும் சுகாதாரம் பற்றிய தொடர் இது, டாக்டரிடம் ஆலோசனை பெற இவை உதவலாம். இவற்றை படித்து உரிய நேரத்தில் டாக்டரிடம் போவதைத் தவிர்க்கக்கூடாது. அவரவர் மருத்துவம், சிகிச்சை, நிவாரணம் ஆகியவற்றை நாடும் செயல்களுக்கு அவரவர்கள் தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.
இன்னம்பூரான் & தேமொழி
உசாத்துணை:
உசாத்துணை:
www.bhf.org.uk/heartmatters
சித்திரத்துக்கு நன்றி: http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2009/01.06.09/suchamam.jpg
Tags: சஞ்சீவினி, இன்னம்பூரான், தேமொழி, வாழ்வு, செல்வம், டாக்டர்