திருமண வாழ்க்கை ஆண்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்குமா?
தேமொழி
திருமணம் செய்து கொண்ட ஆண்கள் நீண்ட ஆயுளை உடையவர்களாகவும், ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு ஆதாரமாகப் பல புள்ளிவிவரங்களும்(data) கொடுக்கப்பட்டன. இந்த ஆராய்ச்சி முடிவினைக் கேட்ட சிலர், “என்ன செய்வது? என் வாழ்க்கைத் துணையுடன் ஒரு நாளைக் கழிப்பதே ஒரு மாமாங்கம் போலத் தோன்றுகிறது. இது போன்ற எண்ணம் உள்ள மணமானவர்கள் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்று இருப்பார்கள் போலிருக்கிறது”, என்று கேலி செய்து வேடிக்கை பேச்சும் பேசுவது உண்டு.
தற்கால உலகில், திருமண வாழ்க்கைக்கு மதிப்பு குறைந்து வரும் கால கட்டத்தில், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை முறையினை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை ஆதாரமாகக் காட்டி, இளைஞர்களுக்கு திருமண வாழ்க்கையின் மேன்மையை எடுத்துச் சொல்லி போதிக்க முற்படுவார்கள்.
ஆனால், இந்த ஆராய்ச்சியின் முடிவு சரியா? இதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் புள்ளிவிவரங்களை அலசி சரியான முடிவை எடுத்தார்களா? என்ற சந்தேகக் கேள்விகள் பொதுவாக ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர்களுக்கு எழும். ஏனெனில், சற்று கவனம் இல்லாமல் ஆராய்ந்தால் புள்ளிவிவரங்களைக் கொண்டு தவறான முடிவுகளையும் எடுக்க வாய்ப்புள்ளது.
அதற்கு புள்ளியியல்(statistics) பயில்பவர்களுக்கு உதாரணப் பாடமாக சொல்லிக்கொடுக்கப் படுவதை முதலில் பார்ப்போம். இந்த உதாரணம் மிகவும் பிரபலமான ஒன்று. ஐஸ்க்ரீம் விற்பனை அதிகரிக்கும் நாட்களில் மக்கள் பலர் நீரில் மூழ்கி மரணமடைகிறார்கள் என்பதனைக் குறிக்கும் புள்ளிவிவரங்கள் உள்ளன. இதனை மேலோட்டமாகப் பார்த்து “அதிக ஐஸ்க்ரீம் சாப்பிடுவது நீரில் மூழ்கி மரணமடைவதற்கு காரணமாகிறது” என்ற கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களைக் கொண்டு முடிவெடுப்பது தவறு.
இதனை ஆராய்ச்சியாளர்கள் கூறும் மொழியினை உபயோகித்திச் சொல்வோமானால், “ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்கும் நீரில் முழுவதற்கும் இடையே தொடர்பு/’இடைத்தொடர்பு’ (correlation) உள்ளது. இதனால் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதுதான் நீரில் மூழ்கி மரணமடைவதற்கு காரணம் என்ற ‘காரண காரியத் தொர்பினை’ (causality) முடிவாகக் கொள்ளுவது அபத்தமாக முடியும்.”
இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும்; அதாவது ஐஸ்க்ரீம் விற்பனை மற்றும் நீரில் மூழ்குதல், இவற்றிக்கு வேறு ஒரு ‘பொதுவான காரணம்’ (underlying factor) உள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் உள்ள பொதுவான காரணம்; நல்ல தட்பவெட்ப நிலை உள்ள கோடை காலம். மாணவர்கள் விடுமுறையில் கடல், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று உல்லாசமாக நீந்தி விளையாடுவது கோடை காலத்தில்தான். அதுபோன்றே, இந்த இடங்களில் கூடும் கூட்டத்தினரின் தேவைக்கேற்ப வெயில் காலத்தில் ஐஸ்க்ரீம் விற்பனையும் அதிகரிக்கும். இது இயல்பான ஒன்று. இந்நாட்களில் அதிக மக்கள் நீரில் விளையாடுவதால் நீரில் மூழ்கி மரணமடையும் நிகழ்வுகளும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இந்தப் பொதுவான காரணத்தைக் கருத்தில் கொள்ளாமல் முடிவுக்கு வருவது தவறாக அமையும்.
இரண்டு நிகழ்வுகளுக்கிடையில் தொடர்பு இருப்பதாகத் தெரிந்தால், இது நிகழ இதுதான் காரணம் என்று உடனே அவசர முடிவுக்கு வருவது, ஆராயாமல் கொள்ளும் தவறான முடிவாகும்.
இப்பொழுது நாம் அறிந்து கொள்ள விரும்பும், திருமணத்திற்கும் ஆண்களின் நீண்ட ஆரோக்கிய வாழ்க்கைக்கும் உள்ளத் தொடர்பைக் கண்டறிந்த ஆராய்ச்சியின் முடிவைப் பற்றி மேலும் விளக்கமாக அறிந்து கொள்வோம்.
உண்மையில் என்ன நிகழ்கிறது என்றால், நல்ல கல்வியும் உடல் ஆரோக்கியமும் உள்ள செல்வந்தர்களால் அதிக நாள் வாழ முடிகிறது. அவர்களுக்கு வாழ்க்கைத்துணை கிடைப்பதும் இக்காரணங்களால் சுலபமாகிவிடுகிறது. ஆண்களுக்கு மட்டுமின்றி, இதே காரணங்கள் பெண்களுக்குத் திருமண வாழ்க்கை அமைவதிலும் உதவி புரிகின்றன என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.
இதற்கு மாறாக கல்வித் தகுதி குறைவாகவோ, அதனால் வருமானம் குறைவாகவோ இருப்பவர்களுக்கு இதே காரணங்களால் திருமணம் தள்ளிப் போகிறது. அத்துடன் நோய் ஏற்படும்பொழுது அதற்கு மருத்துவம் பார்ப்பதோ,ஆரோக்கிய உணவு, வாழ்க்கைமுறைகளைக் கடைபிடித்து உடலைப் பேணிக் காப்பதோ இயலாது போகிறது. இக்காரணங்களினால் அதிக நாட்கள் அவர்களால் உயிர் வாழ முடிவதில்லை.
நீண்ட ஆயுளைப் பெறும் வாய்ப்புள்ள சமூக சூழ்நிலை உள்ளவர்களுக்கு விரைவில் திருமண வாழ்க்கை அமைவதும், அத்தகுதி அற்றவர்களுக்கு திருமணம் நிகழ தடைகள் ஏற்படுவதுமே சரியான காரணம் என்று பின்னாளில் மேலும் பல ஆராய்ச்சி முடிவுகள் உணர்த்தின. அதனால் மணவாழ்க்கை நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்பது சரியல்ல. நிம்மதியற்ற திருமண வாழ்க்கை நேர் மாறான விளைவைத் தருவதையும் நாம் அறிவோம்.
இது போன்று மேலோட்டமாக உள்ள தொடர்புகளை மட்டும் கவனித்துவிட்டு, முற்றிலும் தவறாக வெளியிடப்படும் ஆராய்ச்சி முடிவுகளுக்கு உதாரணமாக புள்ளியியல் துறையில் இருந்து பல ஆதாரங்களைக் கொடுக்க இயலும். சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் வெளியான ஒரு ஆராய்ச்சியானது தன்னம்பிக்கை உள்ள பிள்ளைகளுக்கும் அவர்கள் பள்ளியில் நன்கு பயின்று நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கும் உள்ள தொடர்பினைக் கண்டறிந்தது. அதனால் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகள் வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்க அறிவுரைக் கூறப்பட்டது.
தொடர்ந்து பின்நாளில் நிகழ்த்தப் பட்ட ஆராய்ச்சி, இது தவறு, உண்மையில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் தங்களால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெறுகிறார்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதே தன்னம்பிக்கைக்யை அதிகரித்து தொடர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறக் காரணமாகிறது. நல்ல மதிப்பெண்கள்தான் தன்னம்பிக்கையைத் தருகிறது, மாறாக தன்னம்பிக்கை நல்ல மதிப்பெண்களைப் பெற வழி செய்வதில்லை என்று கண்டறிந்தார்கள்.
ஆகவே, நிகழ்வுகளுக்கு இடையில் தொடர்பு உள்ளது என்று புள்ளி விபரங்கள் குறிப்பிட்டாலும், அந்த தொடர்புக்கு இதுதான் காரணமா என்ற நாம் கவனமாக ஆராய வேண்டும். இது நிகழ்ந்தால் நிச்சயம் இதுவும் நிகழ்ந்தே தீரும், ஆகவே இது நிகழ இதுவே காரணம் என அவசரப்பட்டு எந்த முடிவெடுக்கக் கூடாது. காரணம் எதுவாகவும் இருக்க வாய்ப்புள்ளது,
எனவே, இடையே உள்ளத் தொடர்பு மட்டும் எதனையும் ஆணித்தரமாக சொல்ல உதவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வேண்டுமானால் அத்தொடர்புகள் சிற்சில குறிப்புகளைக் கொடுத்து யூகிக்க வாய்ப்பளிக்கலாம். அதனை அடிப்படையாகக் கொண்டு இது ஏன் நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது? என்ன காரணம்? என்று ஆராய வேண்டியது நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவி. சந்தேகம் வரும் சமயங்களில் ‘ஐஸ்க்ரீம் விற்பனை ஆராய்ச்சி’ உதாரணத்தையும் நினைவு படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
நன்றி: TED X – The danger of mixing up causality and correlation
படம் உதவி: http://lh5.ggpht.com/_hEtlcZt0xFs/S9Ytx3wPSpI/AAAAAAAAD5Y/P7fE1IYDG54/bengali%20wedding%20doll%5B7%5D.jpg
திருமண வாழ்க்கை ஆண்களுக்கு நீண்ட ஆயுளைத் தருமா எனும் தேமொழியின் கட்டுரை படிக்க சுவையாக இருந்தது. இது சர்ச்சைக்குரிய விவாதமாகும்.எந்தவிதமான மக்களிடம் எத்தகைய விதமான ஆராய்ச்சி நடத்தப்பட்டது என்பது சரிவர கூறப்படவில்லை. ஒருவேளை திருமணம் மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதால் அதை ஒரு காரணமாக வைத்து இப்படி முடிவு எடுக்கப்பட்டதா என்பதும் புரியவில்லை. அப்படியே மகிழ்ச்சி என்றாலும் அது எங்கே நீடித்து உள்ளது?
மகிழ்ச்சி நீண்ட ஆயுளைத் தருவது எப்போது? உணவு உண்பதிலும், நல்ல பழக்கவழக்கங்களால் உடல் நலத்தைப் பராமரிப்பதிலும், வேலைக்குச் செல்வதிலும், செல்வம் சேர்ப்பதிலும் , குடும்பத்தில் நிலவும் நிம்மதியான வாழ்க்கை அமைந்தால்தான் ஒருவனின் ஆயுளும் கூடுகிறது. அதற்கு மாறாக அவனின் ஆயுள் ரேகை பலமானது என்று கூறுவதும்கூட ஏற்புடையதன்று!
இதற்கு மாறாக என்னதான் மணமானாலும் சண்டையும் சச்சரவும், தீய பழக்கங்களால் உடல் நலத்தையும் மனநலத்தையும் கெடுத்துக்கொண்டு வாழ நேரிடும்போது ஒருவனின் ஆயுள் எவ்வாறு நீளும்?
ஆதலால் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு வாழ்க்கைத்துணை ஒரு ஊன்றுகோலாக உள்ளதேயன்றி அதுவே முழுமையான காரணமாகிவிடாது.
ஆகவே பதினாறும் பெற்றால்தான் பெருவாழ்வு வாழலாம்!…டாக்டர் ஜி.ஜான்சன்.
டாக்டர் ஜி.ஜான்சன் நன்றி.
நீங்கள் முன்னிறுத்திய கருத்துக்களை அலசும் விதம் கண்டு நான் பலமுறை வியந்துள்ளேன்.
ஒரு ஆராய்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டவுடன் அதன் முடிவை நாமும் ஆராயாமல் ஏற்றுக்கொள்வது தவறு – என்ற கட்டுரையின் கருத்தை ஆதரிக்கும் வண்ணம் உள்ள உங்கள் கருத்து மீண்டும் அதனையே வலியுறுத்துகிறது.
கருத்துரைக்கு என் அன்பான நன்றிகள்.
அன்புடன்
தேமொழி
இருண்டு பாயிண்டும் கரீக்ட், மேடம்.
1.புள்ளியியலை பொயுரைக்கச் செய்வது எளிது. Statistics and Damned Lies. என்ற நூல் அந்தக்காலத்தில் பிரபலம். ஆனால் இடைத்தொடர்பு யோக்கியமாக அமைந்து விட்டால், ஆரூடமே கூறலாம். அடுத்த தஃபா பெல் கர்வை பற்றி எழுதுங்கள்.
2.’…நீண்ட ஆயுளைப் பெறும் வாய்ப்புள்ள சமூக சூழ்நிலை உள்ளவர்களுக்கு விரைவில் திருமண வாழ்க்கை அமைவதும், அத்தகுதி அற்றவர்களுக்கு திருமணம் நிகழ தடைகள் ஏற்படுவதுமே சரியான காரணம் என்று பின்னாளில் மேலும் பல ஆராய்ச்சி முடிவுகள் உணர்த்தின. அதனால் மணவாழ்க்கை நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்பது சரியல்ல. நிம்மதியற்ற திருமண வாழ்க்கை நேர் மாறான விளைவைத் தருவதையும் நாம் அறிவோம். ..’
~ ரைட் யூ ஆர்.
உங்கள் கருத்துரைக்கு நன்றி இன்னம்பூரான் ஐயா. பெல் கர்வைப் பற்றி எழுத வேண்டும் என்பதைக் குறிப்பில் கொள்கிறேன். தங்கள் அறிவுரைக்கு நன்றிகள்.
பணிவன்புடன்
தேமொழி