உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணும் வழி

2

 

தேமொழி

 

மனித இனத்தினர் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதைப் பற்றிச் சில தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர் என்கிறார் ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ். நெதர்லாந்தில் இருக்கும் ‘டச்சு’ ஆராய்ச்சி நிறுவனமான ‘ப்ளாண்ட் லாபில்’ தோட்டயியல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார் ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ் (Gertjan Meeuws, Horticultural Engineer at Dutch based group called PlantLab, Netherlands).

 

Gertjan Meeuws

 

பல்கிப் பெருகி வரும் மனித இனத்திற்குத் தேவையான உணவுத் தேவைகளைத் தற்பொழுது இருக்கும் விவசாயத் தொழில் நுட்பத்தை வைத்தே சமாளித்துவிட முடியும் என்பது தவறான கருத்துகளில் முதன்மையானது என்கிறார் இந்த ஆராச்சியாளர்.

உலக மக்கட்தொகை இப்பொழுது ஏழு பில்லியனில் இருந்து ஒன்பது பில்லியன்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் பெரும்பான்மையான மக்கள் நகரங்களில் வசித்து வருகிறார்கள். மக்கள் அனைவர்க்கும் தேவையான உணவை உற்பத்தி செய்ய மிக முக்யமாகத் தேவைப்படுவது நீர். எதிர்காலத்தில் பெட்ரோலை விட நீர்தான் ஒரு நாட்டின் முக்கிய சொத்து எனக் கருதப்படும் நிலை வந்துவிடும்.

அத்துடன் அனைவரது உணவுத் தேவையையும் நிறைவு செய்வதற்காக விவசாயத்திற்கு பொருத்தமற்ற நிலங்களையும் விளைநிலமாக மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இது போன்ற ஒவ்வாத வளரும் சூழ்நிலைகளில் உள்ள விளைநிலங்களில் வளரும் தாவரங்கள் பூச்சிகளினாலும், நோய்களினாலும் எளிதில் பாதிக்கப்படும். இதனை நிவர்த்தி செய்ய நாமும் வேதிப்பொருட்களில் தயாரிக்கப்பட்ட உரங்களையும், பூச்சிக்கொல்லி இரசாயன மருந்துகளையும் உபயோகிக்க வேண்டிவரும். மேலும், இவ்வாறு பயிர் செய்த உணவை தேவையான இடத்திற்கு கொண்டுசென்று சேர்க்கவும், மீண்டும் விளைநிலங்களுக்கு கொள்முதல் செய்ய வரும் செய்கைகளே 35 சதவிகித போக்குவரத்து ஊர்திகளின் வேலையாகவும் இருக்கும். இவை போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு நாம் உணவு உற்பத்தி முறையில் பலப் புதுமைகள் செய்யவேண்டும்.

 

விவசாயத்தைப் பற்றிய மற்றொரு தவறான கருத்து: பயிர் வளர்ப்பு இயற்கை முறையைச் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று கருதுவது. இக்கருத்தும் உணமையல்ல என்பது ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ் அவர்களின் கருத்து.

இயற்கையிலோ அல்லது சிறந்த சோதனைக்கூட சூழ்நிலையிலோ தாவரங்கள் தங்களுக்குத் தேவையாக 9% திறனை மட்டுமே உபயோகித்துக் கொள்கின்றன. தாவரங்கள் எந்த சுற்றுப்புற சூழலுக்கும் ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்டு உயிர் வாழும் தன்மை வாய்ந்தவை. தாவரங்களின் இந்தப் பண்பினை நமக்கு சாதகமாக்கி விவசாயத்தில் புதுமைகளை நாம் புகுத்தலாம்.

 

தாவரம் நன்கு வளர நல்ல சூரிய ஒளி தேவை என்பதும் மற்றொரு தவறான கருத்து என்கிறார் ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ்.

தாவரங்கள் சூரிய ஒளிக்கற்றையில் உள்ள சிவப்பு, நீலம் மற்றும் ஊதா வண்ண (Purple) ஒளிக்கதிர்களை மட்டுமே உபயோகிக்கின்றன. இதனால் செயற்கைமுறையில் கட்டிடங்களின் உட்புறம் விவசாயம் செய்து உணவு உற்பத்தியைப் பெருக்க நம்மால் முடியும். நகரங்களில் ஊர்திகளை நிறுத்துவதற்கு கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டிடங்கள் போன்றவற்றில் பயிர் செய்யத் தகுந்த சூழ்நிலையை உருவாக்கி ஊதாக்கதிர்களையும், குறைந்த அளவு நீரையும் பயன்படுத்தி உணவு உற்பத்தியைப் பெருக்க முடியம். பயிர் செய்ய சூரிய ஒளியை உபயோகிக்கத் தேவையில்லை என்ற காரணத்தால் அடுக்குமாடிக் கட்டிடங்களைப் பயன்படுத்துவது ஏதுவாகிறது.

ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு உணவாக 200 கிராம் காய் மற்றும் பழங்களை உற்பத்தி செய்ய ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பளவு போதுமானது. எனவே ஒரு லட்சம் மக்களுக்கு தேவையான தாவரங்களைப் பயிரிட நூறு மீட்டர் நீள அகலமுள்ள, பத்து அடுக்குகளைக் கொண்ட அடுக்கு மாடிக்கட்டிடம் போதுமானது.

plant lab production unit

indoor farming

Plant lab product

 

இந்த முறையைப் பயன்படுத்தினால், தாவரங்களின் மரபணுக்களில் எந்த ஒரு மாற்றமும் செய்யத் தேவையில்லாமலே, சுத்தமான சுகாதாரமான முறையில், ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த தாவரங்களைக் குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி, இரசாயன பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல், குறைந்த செலவில் விளைவிக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த பயிராக வளர்வதால் நோயை எதிர்க்க மருந்துகள் தேவையில்லை. தோட்டங்களில் அல்லது வயல்வெளிகளில் பயிரிடுவதைவிட 40% அதிக மகசூலை 90% குறைந்த அளவு நீரை உபயோகித்துப் பெற முடியும். அதனால், இந்த விவசாய முறை, பயிரிட நிறைய நிலப்பரப்பும், நீரும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் தேவை என்பது எவ்வளவு தவறான கருத்து என்பதையம் புலப்படுத்துகிறது.

 

indoor farming benefits

 

எந்த ஒரு தாவரத்தையும் இந்த உட்புறப் பண்ணை முறையைப் பயன்படுத்தி பயிரிட முடியும். தக்காளி, ஸ்டராபெர்ரி, கீரைவகைகள், வெள்ளரிக்காய், அவரை, மருத்துவத்திற்கான மூலிகைகள், என எந்தப் பயிரையும் பயிரிடலாம். இதனால், தாவரங்கள் நன்கு வளரக்கூடிய தட்பவெப்ப நிலை உள்ள இடங்களில் பயிரடப்பட்டு, அதிக தொலைவில் வசிப்பவர்களுக்கு ஊர்திகளில் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும் என்ற கருத்தும் தவறானக் கருத்தாகிறது. ஆனால் தற்பொழுது அதிக தொலைவு பயணத்திற்கு ஏற்றவாறு காய்கனிகள் அவைகள் பக்குவம் பெரும் முன்னரே பறிக்கப்பட்டு அவை அழுகி வீணாகும் நிலை குறைக்கப்படுகிறது. சரியான தருணத்தில் அறுவடை செய்யாத காய்கனிகள் சுவையற்றும் இருக்கின்றன.

தட்பவெட்பத்தைக் கட்டுப்படுத்திப் பயிரிடப்படும் உட்புறப் பண்ணை முறை இந்த நிலையை மாற்றியமைக்கும். நுகர்வோர்கள் இருக்கும் இடத்திலேயே பயிரிட்டு, பக்குவமான நேரத்தில் தேவையானவற்றை மட்டும் பறித்துப் பயன்படுத்தலாம், இதனால் வீணாவதும் தவிர்க்கப்படும்.பழங்காலத்தில் மக்கள் எவ்வாறு தங்கள் தேவைக்கேற்ப சுவையான காய்கனிகளை உடனே பறித்துப் பயன்படுத்தினார்களோ, அது போலவே நாமும் பயன் பெறலாம். தட்பவெட்பத்தைக் கட்டுப்படுத்திப் பயிரிடப்படும் உட்புறப் பண்ணை முறையினால் எக்காலத்திலும், இரவோ பகலோ, கோடையோ மழைக்காலமோ எந்தக் காலத்திலும் பயிரிடலாம். அது போலவே எந்த ஒரு இடத்திலும், துருவப் பிரதேசம், பாலைவனம், பெரிய நகரங்கள் என எந்த இடங்களிலும் பண்ணைகள் அமைக்கப்பட்டு பயிரிடமுடியும்.

 

பொதுவாக விவசாயத்தைப் பொறுத்தவரை உள்ள மற்றொரு தவறான கருத்து பெரிய அளவில் பயிரிடப்பட வேண்டும் என்பது. இந்த உட்புறப் பண்ணை முறையினால் அந்தக்கருத்தும் பொய்யாகிறது.

உட்புறப் பண்ணை முறையில் பயிரிட சிறிய இடங்கள் கூடப் போதுமானது. எனவே, காய்கறி அங்காடிகளின் ஒரு பகுதியிலோ, உணவகங்களின் ஒரு பகுதிகளிலோ, ஏன் நமது வீட்டின் சிறிய சமயலறைகளிலோக் கூட நம் தேவைக்கேற்ப பயிரிட முடியும். நமக்குத் தேவையான தக்காளிகளை நம் சமயலறையிலேயே அலமாரியைத் திறந்தும் பறித்துக் கொள்ளலாம். உன் சமையலறையில் நான் கீரையா? புதினாவா? என்றும் பாடலாம்.

 

அனைத்தையும்விடத் பெருந்தவறான கருத்து இதுபோன்ற முறையில் பயிரிடத் தயாராவதற்குப் பல்லாண்டுகள் ஆகும் என்பது. உட்புறப் பண்ணை முறையில் பயிரிடுவதை இன்றே எந்த நாட்டிலும், இந்தியா உட்பட, தொடங்க முடியும். அதிக மூலதனம் தேவை இல்லை.

 

சிந்தனைக்கு: முதற்படியாக சென்னை மாநகரின் கடற்கரையை ஒட்டி (நீரில்லாவிட்டால் கடற்கரை ஊற்று நீரைக்கொண்டு பயிரிடும் வகையில்) அரசு ஒரு அடுக்கு மாடியைக் கட்டி உட்புறப் பண்ணையை அமைக்கலாம். அதனை ஆர்வமுள்ளவர்களுக்கு குத்தகைக்கு விட்டு வருமானமும் ஈட்டலாம். வெளிப்புறம் காய்கனிகளை விற்க அங்காடியும் துவங்கலாம். அது உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற முதல் கட்டப் பரிசோதனை நடவடிக்கையாக இருக்கும்.

 

“பண்ணையெல்லாம் பொன் கொழிக்கச் செய்திடுவோம், அதில் பன்மடங்கு உற்பத்தியைப் பெருக்கிடுவோம்”

 

ஆதாரம்: TEDxBrainport 2012 – Indoor planting
படங்கள் உதவி: PlantLab, Netherlands
காணொளி சுட்டி: http://www.youtube.com/watch?v=Ct3dK2_ksvk

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணும் வழி

  1. தேமொழியின் கட்டுரையில் உள்ள உண்மை நடை முறையில் வர வெகு நாட்கள் இல்லை. தேமொழி சொன்ன அந்த நெதர்ன்லாதின் இன்னொரு கம்பெனியாயான shell கம்பெனியில்தான் நான் இருக்கிறேன் . இந்த ஷெல் கம்பெனி செய்வது பெட்ரோல் எடுப்பது. அதன் ஒரு பிரிவு கடலில் பெட்ரோல் எடுப்பது. கடலில் பெட்ரோல் கினறுகளை பராமரிக்க பெரிய பெரிய கப்பல்களை பயன்படுத்துவார்கள். இந்த பிரிவில்தான் நான் வேலை செய்கிறேன்.

    இந்த கப்பல்களில் அவசர கால உணவு என்று சில மாத்திரைகள் இருக்கும். ஏதேனும் காரணங்களால் உணவு தட்டுப்பாடு நடந்தால் இந்த மாத்திரைகளை சாப்பிடலாம். சாதாரன மாத்திரை அளைவில் இருக்கும் இந்த உணவு மாத்திரை, ஒன்றை சாப்பிட்டால் அது சாப்பிட்டப்பின் வயிறில் ஊறி அது சுமார் 1.200 கிராம் உணவாக மாறும்..நமக்கு பசி தெரியாது. தாகம் தெரியாது. அது மட்டுமல்லாமல் அந்த மாத்திரையின் ஆயுட்காலம் 5 வருடங்கள்.(EXP DATE).

    எதிர் காலத்தில் இந்த உணவு முறை கப்பலில் மட்டுமல்ல உலகம் முழுக்க உணவுப்பொருட்களின் பற்றாக்குறையால் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன் இந்த யோசனைகளை ஏற்று திட்டமிட்டு நடந்தால் மட்டுமே எதிகால சந்ததிகள் பிழைக்க வழியுண்டு.

  2. படித்து கருத்துரை வழங்கியதற்கு நன்றி தனுசு.
    ஹா..தனுசு என்ன சொல்றீங்க?  ஒரு மாத்திரை மட்டும் சாப்பிட்டா போதுமா?
    பசி, தாகம் எடுக்கதா?  எங்கே கிடைக்கும் என்பதையும் சொன்னால்  நான் சமைப்பதையே  நிறுத்தி விடலாமே :)))
    அன்புடன்
    தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.