Category: பொது

  • குறளின் கதிர்களாய்…(251)

    -செண்பக ஜெகதீசன்

    படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

    மாண்பய னெய்த லரிது.

    -திருக்குறள் -606(மடியின்மை)

     

    புதுக் கவிதையில்…

    மண்ணாளும்

    மன்னரின் செல்வம்

    தானே வந்து கிடைத்தாலும்,

    சோம்பலுடையோர்

    அதனால் எவ்வித

    சிறப்புப் பயனும்

    அடைதல் அரிதாகும்…!

     

    குறும்பாவில்…

     

    அரசர் செல்வம் கிடைத்தாலும்,

    அதனால் மாண்புடை பயனெதுவும்

    பெறலரிது சோம்பலுடையார்க்கே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    மண்ணை யாளும் மன்னர்தம்

    மதிப்பு மிக்க செல்வமதும்

    எண்ணம் போலக் கிடைத்தாலும்

    எந்தச் செயலும் செய்யாத

    கண்ணிய மில்லா மடியுடையோன்,

    கிடைத்த வரிய பொருளாலே

    கண்ணிய மிக்க பயனெதுவும்

    கண்டிப் பாகப் பெறலரிதே…!

     

    லிமரைக்கூ..

     

    மன்னர்தம் செல்வத்துடன் உறவே

    தானேவந்து கிடைத்தாலும் சோம்பேறிக்கதனால்

    நற்பயனெதுவும் கிடைக்காது அறவே…!

     

    கிராமிய பாணியில்…

     

    சோம்பப்படாத சோம்பப்படாத

    வாழ்க்கயில சோம்பப்படாத,

    சொகுசுவந்து கெடச்சாலும்

    சோம்பேறியா மாறிப்புடாத..

     

    ராசாவூட்டுச் செல்வமும் ஒறவும்

    தானேவந்து சேந்தாலும்,

    ஒண்ணுஞ் செய்யா

    சோம்பேறிக்கு அதுனால

    நல்ல பயனா

    எதுவும் கெடைக்காதே..

     

    அதுனால

    சோம்பப்படாத சோம்பப்படாத

    வாழ்க்கயில சோம்பப்படாத,

    சொகுசுவந்து கெடச்சாலும்

    சோம்பேறியா மாறிப்புடாத…!

    Share
  • மௌனம் எதற்கு, சண்டை போடலாமே!

    -நிர்மலா ராகவன்

    நலம்.. நலமறிய ஆவல் – 152


    மௌனம் எதற்கு, சண்டை போடலாமே!

    மூன்று வயதுக் குழந்தைகள் அடிக்கடி தாயை அழைத்துப்பார்க்கும். அவள் வீட்டிலேயேதான் இருப்பாள். இருந்தாலும், அவர்களுக்கு என்னவோ பயம் – தனியாக விட்டுவிடுவார்களோ என்று.

    `நான் எப்பவும் உன்கூட இருப்பேன். பயப்படாதே!’ என்று சில முறை சொன்னால் ஆறுதலும், தாய்மீது நம்பிக்கையும் பிறக்கும். (தந்தை வேலை நிமித்தம் அல்லது நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க வீட்டைவிட்டு அடிக்கடி வெளியே போய்விடுவதால் இப்படியோர் அச்சம் பிறக்கிறதோ?)

    சிறு குழந்தைகளுக்கு மட்டுமில்லை, எந்த வயதிலும், எவர்மீதிலும் அவநம்பிக்கை எழலாம்.

    கதை

    காதலிக்கும்போது தன்னையே சுற்றிச் சுற்றி வந்து கைப்பிடித்த கணவன் திருமணத்திற்குப்பிறகு தான் ஒருத்தி இருப்பதையே மறந்தவன்போல் நடப்பது கண்டு ரேணுவுக்குத் துக்கம் பெருகியது. அழுகையுடன், பிற பெண்களிடம் முறையிடத்தான் அவளால் முடிந்தது.

    வீட்டிலேயே சில நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு சீட்டாட்டத்தில் தன்னையும் உறவுகளையும் மறந்துபோனான் வேணு. எப்போதாவது மனைவி அதைப்பற்றி முறையிட்டால், `உன் தொணதொணப்பு தாங்க முடியாதுதான் நண்பர்களை நாடுகிறேன்!’ என்ற ரீதியில் விவாதித்து பேச்சை முடிப்பான்.

    பெண் தன் கணவன் எப்போதும் தன்னருகில் இருந்தால்தான் அன்பு என்று நினைக்கிறாள். அவளுக்கு அந்த அருகாமை வேண்டியிருக்கிறது. ஆணுக்கோ, நீண்டகால நெருக்கம் மூச்சை அடைப்பதுபோல் இருக்குமாம்.

    நம்பிக்கை எழ

    வேலை, நண்பர்களுடன் உல்லாசம், தனக்கென ஒரு பொழுதுபோக்கு — இதெல்லாம் அவசியம் என்று ஆண்களுக்குத் தோன்றினாலும், குடும்பத்தினருக்கும் சிறிதளவாகிலும் நேரத்தை ஒதுக்கி, தன் வாழ்க்கையில் நடந்ததை அவ்வப்போது பகிர்ந்துகொண்டால்தான் உறவு பலக்கும்.

    ஒருவருக்கு நேர்ந்தது நல்லதோ, கெட்டதோ, அதைப் பகிர்ந்துகொண்டாலே போதும். இதனால் சில சமயம் சிறு சர்ச்சைகள் எழலாம். ஆனால், வெளிக்காட்டமுடியாத கோபத்துடன் மௌனம் சாதிப்பதைவிட சண்டையாவது போடலாமே! ஒருவர் மனம் மற்றவருக்குப் புரிய வேறு வழி ஏது!

    யாரைத்தான் நம்புவது!

    நம் நம்பிக்கையைப் பெற நல்லவர்கள்மாதிரி நடித்து, வலிய வந்து உதவி செய்பவர்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் யாரைத்தான் நம்புவது என்ற அவநம்பிக்கைதான் எவருக்கும் எழுகிறது.

    `நம்மிடமிருந்து ஏதோ காரியத்தைச் சாதித்துக்கொள்ளத்தான் இவர் நல்லவர்போல் நடிக்கிறார்!’ என்று முதலில் அவநம்பிக்கை ஏற்படும்.

    கதை

    சீனப்பெருநாளன்று, `அங் பௌ’ என்று, திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களும், பெற்றோரின் நண்பர்களும் பணம் கொடுப்பது வழக்கம்.

    அப்படிக் கிடைத்த பணத்தை எப்படிப் பத்திரப்படுத்துவது என்று அந்த பத்து வயதுச் சிறுமிக்கு தெரியவில்லை.

    `நான் வைத்துக்கொள்கிறேன், கொடு!’ என்று வீட்டிலிருந்த பெரியவர் கைநீட்ட, கொடுத்தாள். ஆனால், அடுத்த சில நாட்கள், “என் காசை எடுத்தீர்களா?” என்று அடிக்கடி கேட்கத் தவறவில்லை!

    அவளுடைய அவநம்பிக்கை புரிந்து அவருக்குச் சிரிப்புதான் வந்தது. `என்னிடமே நிறைய பணம் இருக்கிறது. நான் ஏன் உன்னுடையதை எடுக்கப்போகிறேன்!’ என்று அலட்சியமாகக் கூற, அவளுக்கு அவரிடம் நம்பிக்கை பிறந்தது.

    பிறர் நமக்குத் தீங்கு இழைக்க மாட்டார்கள், மாறாக, அவர்கள்தாம் நம் நலனையே விழைபவர்கள் என்று தோன்றும்போதுதான் நம்பிக்கை எழ, அவர்களை ஏற்கிறோம்.

    நம்பிக்கை துரோகிகள்

    ராஜன் படித்து, பெரிய வேலையில் இருந்தார். எந்தவித தீயபழக்கத்தையும் விட்டுவைக்கவில்லை. அவருக்குக்கீழ் வேலை பார்ப்பவர்களைத் தன் வசம் இழுத்து, அவர்களையும் குடிபோதைக்கு அடிமையாக்க பெரும் பிரயத்தனம் செய்வார். மேலதிகாரியைப் பகைத்துக்கொள்ள முடியாது, அவர்களும் அவர் காட்டிய தீய வழிகளில் நடப்பார்கள். விலைமாதர்களை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் ராஜனைப்போல் ஒருவரை எந்தப் பெண்தான் ஏற்பாள்?

    அவரது குணத்தைப் புரிந்து, கணவன்மார்களை எச்சரித்த மனைவிகளிடம் மனக்குறையுடன், “என்னை நீங்கள் நம்பவில்லை என்று தெரியும்!” என்று பிரலாபிப்பார். தான் செய்துவருவது தவறு என்று அவர் கருதாததுதான் வியப்பு.

    நம்பிக்கையே ஆயுதமாக

    சந்தித்த உடனேயே அதிக நட்புடன், நைச்சியமாகப் பேசுகிறவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும்.

    `என்னை நம்பு!’

    `ஐயோ! என்மேல் உனக்கு நம்பிக்கை வரவில்லையே!’

    இளம்பெண்களை வசப்படுத்த முயற்சி செய்பவர்கள் அடிக்கடி பிரயோகிக்கும் வசனங்கள் இவை.

    அப்படி ஒருவர் வெளிப்படுத்தும் போலியான தன்னிரக்கத்தைப் பார்த்து இரங்கி, `அன்புக்கு ஏங்குகிறார். அவரை என்னால் திருத்த முடியும்!’ என்று இரக்க குணம் படைத்த பெண்கள் ஏமாறலாம்.

    ஆனால், கீழே இருப்பவர்கள் பிறரையும் கீழே இழுக்கத்தான் பார்ப்பார்கள். அவர்களைத் திருத்த முயல்வது துர்லபம். அப்படி ஒரு நிலையில் இருப்பதுதான் அவர்களுக்குப் பிடிக்கிறது என்றால், விட்டுத்தொலைக்க வேண்டியதுதான். `சவால்’ என்று நம்மையே வாட்டிக்கொள்வானேன்! அவர்களைவிட்டு விலகினால் ஆரோக்கியமான உறவுகள் அமைய வாய்ப்புண்டு.

    துஷ்டர் என்று கண்டும் தூர விலக முடியாதவர்கள்

    அது ஏன், சிலர் தகாத நட்பு என்று தெரிந்தாலும், அதிலிருந்து விலக முடியாது தவிக்கிறார்கள்?

    சிறு பிராயத்தில் பெற்றோரை நம்பி, அவர்களால் ஏமாற்றம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.

    கதை

    மனைவியை ஒதுக்கிவிட்டு, இளமையான இன்னொரு பெண்ணை மணந்தார் ஒரு சுயநலக்காரர். குழந்தைகளுடன் தம்பியின் வீட்டில் தஞ்சம் புக நேரிட்டது முதல் மனைவிக்கு. வேண்டாத இச்சுமையால் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தினார் அந்த உறவினர்.

    `இருக்கும் ஆதரவையும் பகைத்துக்கொண்டால், குடும்பத்துடன் எங்கு போவது!’ என்று தாய் கண்டும் காணாததுபோல் இருந்தாள். உடனுக்குடனே அவள் ஆதரவாக ஏதாவது குழந்தைகளிடம் சொல்லியிருந்தால் அவர்களுக்கு அவ்வளவு மனக்கிலேசம் ஏற்பட்டிருக்காது.

    ஆண் குழந்தைகள் முடிவெடுத்தது: எல்லா ஆண்களுமே அப்பாவைப்போல்தான்! கைவிட்டுவிடுவார்கள். நம்பமுடியாது.

    பெண்களின் முடிவு: ஆண்கள் அனைவரும் பெண்பித்தர்கள்! எந்த விதத்திலாவது பெண்களைக் கஷ்டப்படுத்துகிறவர்கள்.

    வளர்ந்ததும், பெண்கள் தந்தையைப் போன்றவரையே கணவனாக வரித்தார்கள். மகிழ்ச்சியாக இருப்பதைப்போல் காட்டிக்கொண்டார்கள். ஏனெனில், அவர்களுக்குத் தெரிந்த வாழ்க்கைமுறை அதுதான்.

    ஆண்பிள்ளைகளோ, `எனக்கு நல்ல நண்பர்களே கிடைக்க மாட்டார்கள்!’ என்று எண்ணியதுபோல், தம்மையும் அறியாது, தந்தையைப் போன்றவர்களையே உற்ற நண்பர்கள் என்று எண்ணி ஏமாந்தார்கள். அவர்களிடம் தந்தை தமக்கிழைத்த அநீதியைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தார்கள்.

    நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டியவரே துரோகம் செய்கிறார் என்று புரியும்போது, முதலில் அதிர்ச்சியும், பிறகு, `ஏமாந்துவிட்டோமே!’ என்ற ஆத்திரமும் எழுகின்றன.

    ஆத்திரம் தணியாமலே இருந்தால் நம் உடல்நிலைதான் கெடும். பாம்பு தன் சட்டையை உரிப்பதுபோல், பழையனவற்றை நம் நினைவிலிருந்து அகற்றிவிட்டு, அதிலிருந்து கற்ற பாடத்தை நினைவில் வைத்துக்கொண்டாலே போதும். அதே குணத்தைக்கொண்ட வேறொருவரைச் சந்திக்கும்போது, ஜாக்கிரதையாகப் பழக முடியுமே!

    Share
  • கோலன் ஹைட்ஸ்: இஸ்ரேலின் நயவஞ்சகம்

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேல் என்ற நாடு 1948-இல் உருவானதே பல பாவக் காரியங்களின் விளைவால்தான். யூதர்கள் கிறிஸ்துவுக்கு முன்னால் (கி.மு.) பல நூற்றாண்டுகள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்துவந்த போதிலும் பல நாடுகளைச் சேர்ந்த அரசர்களின் ஆதிக்கத்தில் இருந்துவந்தனர். ஜெருசலேமிலிருந்த அவர்களுடைய முதல் கோவில் முழுவதும் இடிக்கப்பட்டது. அதன் பிறகு அதே இடத்திலேயே இரண்டாவது கோவிலையும் கட்டிக்கொண்டனர்.மேலும் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் ரோமானியர்கள் அவர்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்தபோது அந்தக் கோவிலும் இடிக்கப்பட்டது. ரோமானியர்களை எதிர்த்துப் போர்புரிந்த யூதர்கள் அவர்களால் நசுக்கப்பட்டதால் ஜெருசலேமை- அதாவது பாலஸ்தீனத்தை- விட்டே புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயினர். கி.பி. 132-இல் பாலஸ்தீனத்தை விட்டு ஐரோப்பாவில் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த யூதர்கள் எல்லா நாடுகளிலும் அங்குள்ள மக்களோடு கலவாமல் தனித்தே வாழ்ந்துவந்தனர். தாங்கள் பெரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்ததே அவர்கள் மற்ற இனத்தவர்களோடு ஒட்டாமல் இருந்ததற்கும் மற்ற இனத்தவர்கள் இவர்களை ஒதுக்கிவைத்ததற்கும் முக்கிய காரணம். எல்லா நாடுகளிலும் இவர்கள் மருத்துவம் போன்ற பல தொழில்கள் செய்துவந்தாலும் நிறைய வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலையும் செய்துவந்தனர். இந்தத் தொழிலும் இவர்கள்மேல் மற்றவர்களுக்கு வெறுப்பு ஏற்படவும் அவர்களைப் பிரித்துவைக்கவும் காரணமாயிற்று.

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஹெர்ஸல் என்னும் வியன்னாவைச் சேர்ந்த யூதர் ஒருவர் பிரான்சில் பத்திரிக்கை நிருபராக வேலைசெய்தபோது அங்கு ஒரு யூதருக்கு நேர்ந்த அநியாயத்தைக் கண்டு மிகவும் மனம் வருந்தி யூதர்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்று விரும்பி அதற்கான திட்டங்களில் ஈடுபட்டார். உலகெங்கிலுமுள்ள யூதர்களை ஒன்றுதிரட்டி அதற்கான வழிகளைக் கண்டறிய முற்பட்டார். அப்போது முதல் உலக யுத்தம் முடிந்து ஆட்டோமான் பேரரசு கவிழ்ந்து பல துண்டுகளாகப் பிரிந்திருந்தது. யுத்தத்தில் வென்ற நாடுகள் துண்டாகிப் போன அந்த நாடுகளைத் தங்கள் வசம் ஆக்கிக்கொண்டன. ஆட்டோமான் அரசின் ஒரு பகுதியாக இருந்த பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆட்சிப் பொறுப்பின் கீழ் வந்தது. சுமார் 1800 வருஷங்களுக்கு முன் பாலஸ்தீனத்திலிருந்து ரோமானியர்களால் விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாலஸ்தீனத்தைத் தங்கள் புண்ணிய பூமி என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டு அங்கு குடியேற ஆரம்பித்தனர்.

    முதல் உலகப் போரில் பிரிட்டனுக்கு உதவிய,அப்போது பிரிட்டனில் வாழ்ந்துவந்த வெயிஸ்மேன் என்னும் யூதர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனத்தில் ஒரு பகுதியில் யூதர்களுக்கு ஒரு நாடு அமைக்க உதவுவதாக வாக்களித்தது. இதற்கு முன்பே பாலஸ்தீனத்திற்குள் ஐரோப்பாவின் பல இடங்களிலுமிருந்து பாலஸ்தீனத்திற்குள் யூதர்கள் வர ஆரம்பித்திருந்தனர். இவர்கள் தங்களோடு கொண்டுவந்திருந்த பணத்தினாலும் புதிய தொழில் நுணுக்கங்களாலும் பாலஸ்தீனர்களிடமிருந்து நிலங்களை வாங்கிப் போட்டு பாலஸ்தீனத்தை வளப்படுத்தியதோடு தங்களையும் அங்கு நிலைப்படுத்திக்கொண்டனர். யூதர்களின் வரவால் தங்கள் நலன்களுக்குப் பங்கம் வந்ததைக் கண்ட பாலஸ்தீனர்கள் அவர்களோடு மோதத் துவங்கினர். தான்ங்கள் அமைத்துக்கொண்ட ஒரு குடிப்படையால் யூதர்கள் பாலஸ்தீனர்களை எளிதாக வென்றனர். பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதால் பிரிட்டன் பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் கொடுக்க முடிவுசெய்துபீல் என்னும் ஒரு அதிகாரியை பாலஸ்தீனத்திற்கு அனுப்பியது. பாலஸ்தீனத்தைப் பிரிப்பது அவ்வளவு எளிதல்ல என்று பீல் அறிக்கை கொடுத்தார். பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்குமிடையே மோதல்கள் தொடர்ந்தன.

    இனி தன்னால் பாலஸ்தீனத்தை நிர்வகிக்க முடியாது என்று எண்ணிய பிரிட்டன் பாலஸ்தீனத்தைக் கண்காணிக்கும்பொறுப்பை ஐ.நா.விடம் ஒப்படைத்துவிட்டு பாலஸ்தீனத்தை விட்டுச் சென்றுவிட்டது. ஐ.நா. பாலஸ்தீனத்தின் 55 சதவிகிதத்தை யூதர்களுக்கும் 45 சதவிகிதத்தை பாலஸ்தீனர்களுக்கும் பிரித்துக் கொடுக்க முடிவுசெய்தது. தாங்கள் நினைத்ததற்கு மேலேயே தங்களுக்குக் கிடைத்திருப்பதால் யூதர்கள் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டுச்சென்ற அன்றே இஸ்ரேல் என்ற தங்கள் நாட்டைப் பிரகடனப்படுத்திக்கொண்டனர். தங்கள் நாட்டை யூதர்களோடு பங்கு போட்டுக்கொள்வதா என்ற குமுறலோடு பாலஸ்தீனர்கள் ஐ.நா.வின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் முழுப் பாலஸ்தீனத்தையும் பெற்றுவிடலாம் என்று நம்பினார்கள். அன்று அவர்கள் செய்த தவறு இன்றுவரை பாலஸ்தீனர்களுக்கென்று ஒரு நாடு கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

    இஸ்ரேல் நாடு உருவானதை எதிர்த்து சிரியா, எகிப்து,லெபனான் ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது போர்தொடுத்தன. பாலஸ்தீனர்களுக்கு முழுப் பாலஸ்தீனத்தையும் பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள் என்பதைவிட ‘எரிகிற நெருப்பில் கிடைத்தது லாபம்’ என்ற எண்ணத்திலும் அவர்கள் இஸ்ரேலோடு போர்புரியத் தயாராகினர். ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறியிருந்த யூதர்களின் பணபலத்தாலும் அமெரிக்காவின் உதவியாலும் பாலஸ்தீனத்தில் குடியேறியிருந்த யூதர்கள் தங்களுக்கென்று ஒரு குடிப்படையை அமைத்துக்கொண்டிருந்தனர். அதுவே இஸ்ரேலின் ராணுவமும் ஆனது. பலம் பொருந்திய ராணுவத்தின் மூலம் அரபு நாடுகளை எளிதாகப் போரில் வென்றதோடு ஐ.நா. பாலஸ்தீனத்தில் பாலஸ்தீனர்களுக்கென்று கொடுத்த சில நிலங்களையும் பிடித்துக்கொண்டனர்.

    அதன் பிறகு இஸ்ரேலோடு அரபு நாடுகள் ஆறு முறை போர் புரிந்தன. எல்லாப் போர்களிலும் இஸ்ரேல் வென்று பாலஸ்தீனத்திலும் சிரியா, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளிலும் அந்த நாடுகளுக்குச் சொந்தமான இடங்கள் சிலவற்றையும் பிடித்துக்கொண்டது. அப்படி 1967-ஆம் வருடப் போரில் சிரியாவிடமிருந்து பிடித்துக்கொண்டதுதான் கோலன் ஹைட்ஸ் என்னும் இடம். இந்த இடத்தை 1981-இல் இஸ்ரேல் ஆக்கிரமித்துக்கொண்டது. ஜோர்டானிடமிருந்து பிடித்துக்கொண்ட கிழக்கு ஜெருசலேமிலும் வெஸ்ட் பேங்கிலும் தன்னுடைய குடியிருப்புகளைக் கட்டிப் புதிதாக இஸ்ரேலுக்கு வந்த யூதர்களைக் குடியமர்த்தியது. இதற்கிடையே 1995-இல் நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பயனால் வெஸ்ட் பேங்கிலும் காஸாவிலும் பாலாஸ்தீனர்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்குவதென்று முடிவாகியது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அளவாவது கிடைத்ததே என்று பாலஸ்தீனர்களும் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டனர். ஆனால் அதன் பிறகு இஸ்ரேல் பிரதம மந்திரியாகப் பதவியேற்ற நேத்தன்யாஹு ஆஸ்லோ ஒப்பந்தத்தைப் பின்பற்றாததோடு வெஸ்ட் பேங்கில் குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டே போனார். ஒபாமா அமெரிக்க ஜனத்திபதியாக இருந்தபோதாவது நேத்தன்யாஹு பாலஸ்தீனர்களுக்குச் செய்துவந்த அநியாயங்களைக் கொஞ்சமாவது பயந்துகொண்டு செய்துவந்தார். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி ஆன பிறகு எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், அமெரிக்கா தன் பக்கம் இருக்கிறது என்ற பலத்தில் தடித்தனமாகக் காரியங்கள் செய்துவருகிறார். அடுத்த மாதம் நடக்கப் போகும் தேர்தலில் ஜெயிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க எண்ணி சிரியாவில் தான் ஆக்கிரமித்துக்கொண்ட கோலன் ஹைட்ஸ் பகுதியை இஸ்ரேலோடு இணைத்துக்கொள்ள முயன்று அதற்கு ட்ரம்ப்பின் ஆதரவையும் கேட்டார். ட்ரம்ப்பும் இஸ்ரேல் சிரியாவின் கோலன் ஹைட்ஸைத் தன்னோடு இணைத்துக்கொண்டதை அமெரிக்கா அங்கீகரிப்பதாகக் கூறும்ஜனாதிபதி ஆணை ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார். உடனேயே அதற்கு நன்றி தெரிவித்து நேத்தன்யாஹு ட்விட்டும் அனுப்பிவிட்டார். தான் செய்திருக்கும் இந்த அநியாயத்திற்கு அமெரிக்காவின் அங்கீகாரம் கிடைத்துவிட்டதால் வரப் போகும் தேர்தலில் தான் ஜெயித்துவிடுவோம் என்று நேத்தன்யாஹு நம்புகிறார்.

    இந்த இரண்டு கயவர்களும் (crooks)சேர்ந்து செய்திருக்கும் இந்தக் காரியத்தால் சிரியா தன்னுடைய நிலத்தில் ஒரு பகுதியை இழந்திருக்கிறது. அதற்குமேல் இனி என்னென்ன விளைவுகள் ஏற்படப் போகின்றனவோ. இதையடுத்து வெஸ்ட் பேங்கிலும் நிறைய இடங்களை (ஏற்கனவே அங்கு யூதக்குடியிருப்புகள் நிறைய இருக்கின்றன) சேர்த்துக்கொள்ளப் போவதாக நேத்தன்யாஹு கோடி காட்டியிருக்கிறார். அங்கு வாழும் பாலஸ்தீனர்கள் மூன்றாம்தரக் குடிமக்களாக இஸ்ரேலால் நடத்தப்படுவார்கள்.

    உலகில் ஒரு இனம் இன்னொரு இனத்திற்குச் செய்த பெரிய அநீதிகளில் இதுவும் ஒன்று.

    Share
  • வாழியே தமிழே நீயும் !!

    உலக கவிஞர்கள் தினமென்று
    தொலைக்காட்சி படித்தது
    உலக கவிஞர்கள் தினமின்று
    மனசாட்சி இடித்தது
    உலக கவிஞர்கள் தினம்-என்று
    வல்லமை விரைந்தது – மனம்
    உலக கவிஞர்கள் தினமென்றும் (என)
    தனைத் தேற்றி கொண்டது

    என்ன செய்திங்குக் கிழித்து விட்டேனென‌
    பாவலர் வரிகள் மீறும்
    இன்றும் களைக்க மாட்டோ மென்றென‌
    காவலர் வரிகள் கூறும்
    படக் கவிதைப் போட்டிக்கு வாருமென‌
    அண்ணாவின் அழைப்பில் சேரும்
    படக் கவிதைப் பாராட்டு பாருமென‌
    மேகலையின் தேர்வில் தேறும்

    ஓயாது ரேஸில் ஓடும் புரவிகளாய்
    கிரேஸியின் வெண் பாக்கள்
    தேயாது வானில் பாடும் மீன்களாய்
    செண்பகப் புது கவிகள்
    பாயாது பெருக்கு எடுத்து பாயும்ஜெய‌
    பாரதன் தரும் வரிகள்
    சாயாது சாய்ந்து கொண்டு ரசிக்க‌
    ஜெயசர்மா மரபு கவிகள்

    எத்தனை எத்தனைக் கவிகள் வாழும்
    இத்தகு வல்லமை இணையம்
    அத்தனை அத்தனைச் சிறப்பில் ஆளும்
    வாழியே தமிழே இனியும்

    Share
  • திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [1]

    -இன்னம்பூரான்

    சான்றோர்களைத் தற்காலத் தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் போது, அவர்களின் பிறந்து, வளர்ந்து, மறைந்த கதையை விட அவர்களின் வாழ்நெறியைக் கூறுவது முக்கியம். அத்தருணம் சில நிகழ்வுகளை முன்னிறுத்தி அலசுவது தான் வாழ்க்கைப்பாடங்களை அளிக்கும் வழி. அவ்வாறு தொகுக்கும்போது அட்டவணை போட்டு கட்டை விரல் சப்பியதில் தொடங்கி மரணாவஸ்தை வரை வரிசைப்படுத்துவது தேவையல்ல. சில சம்பவங்கள் அந்த சான்றோர்களின் பெருமைக்குக் கட்டியம் கூறும். சில அவர்களின் தர்மசங்கடங்களை பூடகமாகத் தெரிவிக்கும் – திறந்த மனதுடன் தேடினால். நான் என்னவோ என் மனம் அழைத்துச்செல்லும் ராஜபாட்டையில் தான் உங்களை அழைத்துச்செல்வேன். எனக்கு தெரிந்தது அவ்வளவு தான். பொறுத்தாள்க.

    மஹாத்மா காந்தியின் ஜன்மதினம் அன்று உலகெங்கும் அவரது நினைவாக விழாக்கள் எடுக்கப்படும். அவரது சிலைகளுக்கு மாலை மரியாதை நடக்கும். சொற்பொழிவுகள் நிகழும். இந்தியாவில் விடுமுறையல்லவா! சிறார்கள் விளையாடுவார்கள். வயது வந்தோர் ஓய்வு எடுப்பார்கள். காந்திஜியை நினைவு கூர்பவர்கள் சொற்பம். அது கூட இல்லை. ‘தமிழ் காந்தி’ ‘தமிழ்தென்றல்’ திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரம் அவர்களை தமிழர்கள் அறவே மறந்துவிட்டார்கள். ஏதோ விருது அளிக்கும் தினத்தில் ஒரு வரி உதட்டளவு புகழுரை. அத்துடன் சரி. அங்கும், இங்கும், எங்கும் இறைவனின் சிலாரூபத்தைப் பழிப்பவர்கள் எழுப்பிய மானிடஜன்மங்களில் சிலைகள் மலிந்த நம் நாட்டில், எனக்குத் தெரிந்து மூவருக்கு மட்டும் தான் ஆளுக்கு ஒரே ஒரு சிலை, பொது மக்களே முன் வந்து ஆர்வத்துடன் சந்தா அளித்து எழுப்பபட்டவை. அவர்களில் ஒருவர் திரு.வி.க. அவர்கள். மாஜி பி & ஸி மில் முன் நிற்கிறார், அஃறிணை ஆகி விட்ட திரு.வி.க. மற்ற இருவரை பற்றி யாராவது கேட்டால் சொல்கிறேன். இது நிற்க.

    கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரிஜனல் காந்தியிடம் செல்வோம். காந்திஜிக்கு ராமன் இஷ்டதெய்வம். இந்து-முஸ்லிம் ஒற்றுமை அவருக்கு இஷ்ட மந்திரம். ‘ரஹம்’ என்ற இஸ்லாமியத்தின் நங்கூரசொல்லின் பொருள் கருணை. அதையும் இணைத்தல்லவோ, அவருடைய பஜனை அமைந்தது. அண்ணலின் விருப்பம் இனியாவது நிறைவேற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அந்த கனிவை ந்யூஸிலாந்தில் காண்கிறோம். அங்கு ஒரு பயங்கரவாதி பலரை சுட்டுத்தள்ளி விட்டான். அந்த நாட்டு வெள்ளையர் மக்கள் இஸ்லாமியர்களை தேடி அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்கள். அவர்களுக்கு காந்தி மஹான் அறிமுகம் இருக்கிறது. நமக்குத்தான் இல்லை.

    “ஒரு தனிமனிதன், தன்னுடைய மனசாட்சியை மட்டுமே, பாற்கடலை கடையும் மத்தாக, வாய்மை என்ற கயிறை, கடைவதற்கான சாதனமாக வைத்துக்கொண்டு, அஹிம்சை என்ற பிரணவ உச்சாடனத்துடன், ஸ்வதேச அபிமானம் என்ற அமிர்தத்தை எடுத்து அளித்ததும், அடிமைமோஹத்திலிருந்து விடுபட்டு, இந்திய மக்கள், இந்த நோன்பில், ஒரே திரளாக திரண்டு வந்து வடம் பிடித்ததும், அமிர்தம் பருகியதும் வரலாறு. அத்தருணம், இந்த உலகமே ஆட்டம் கண்டதும் வரலாறு. அந்த தனிமனிதன்: அண்ணல் காந்தி.” -இன்னம்பூரான்.

    நோன்பு தினம்: ஏப்ரல் 6, 1919. நாமகரணம்: ஸத்யாக்கிரஹ தினம். தனித்தழில் சொன்னால், ‘உண்மை மேலாண்மை ஏற்றுக்கொண்டது’. இடம்: இந்தியா முழுதும். குறிப்பாக இங்கு சென்னை நிகழ்வுகளின் அணி. அதற்கு முன் ஒரு பின்னணி. அரசு, நீதி மன்றத்தை புறக்கணித்து, மக்களில் சிலரை சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், மார்க்கம் ஒன்று வேண்டாமோ? காந்திஜி மீது குறை காண்பது தற்கால நாகரீகம். அவர் மறைந்து எழுபது வருடங்கள் ஆயின. இரண்டு/மூன்று தலைமுறைகளுக்கு அவர் ஐநூறு ரூபாய் நோட்டின் சித்திரம் மட்டும்! எனினும், ஒரு வகையிலாவது அவரை போற்றவேண்டும். கறார் மேனேஜர், அவர்.

    சட்டம் அமலுக்கு வரும் தினம் முன்பே யாவருக்கும் தெரியும் என்பதால், முன்கூட்டியே, ஏபரல் 6 தான் சத்யாக்ரஹ தினம் என்று அறிவித்து, நாடு முழுதும் பயணித்து, யாவரிடமும், ஒரு பிரதிஞ்ஞை பெற்றுக்கொண்டார் – ‘சட்டத்தை மீறவும் வேண்டும். நன்னடத்தையையும் வெளிப்படையாக காட்டவும் வேண்டும்.’ இந்த மந்திரம் காட்டுத்தீ போல் பரவியது என்கிறார், திரு.வி.க.

    சென்னையில் பலத்த ஏற்பாடு. ராஜாஜியின் தலைமையில், ஒரு கண்காணிப்புக்குழு. அக்காலம் ஃப்ளெக்ஸ்போர்ட் கலாச்சாரம் கிடையாது. போஸ்டர்களும், துண்டறிக்கைகளும் மட்டும் தான். ராயப்பேட்டையும், [உறுதுணை: காமத்] தொழிலாளர்கள் பேட்டைகளும், [உறுதுணை: தண்டபாணி பிள்ளை] திரு.வி.க. அவர்களின் பொறுப்பு. ராஜாஜிக்குழுவில், திரு.வி.க.வும், கே.வி. ரங்கசாமி ஐய்யங்காரும். பெரம்பூரில் ஒரே கலவரம், முதல் நாளே. வ.உ.சி. யாலேயே தொழிலாளர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. ‘தமிழ் காந்தி’ திரு.வி.க. அவர்கள் மேடை ஏறி பேசினார் -வசிஷ்டர், பிரஹ்லாதன், ஏசு கிறிஸ்து,, அப்பர்! ‘வீட்டுக்கு போய், நாளை வருக.’ என்றார். கட்டுப்பட்டார்கள்.

    கல்கி சொல்லுவார். திரு.வி.க. வுக்கு அடி பணிய, அவர் சொன்னதெல்லாம் புரிந்துகொள்ள தேவையில்லை என்று.

    (தொடரும்)

     

     

    Share
  • நம்மைப் பிறருக்குப் பிடிக்க

    -நிர்மலா ராகவன்

    நலம்.. நலமறிய ஆவல் – 150

    நம்மைப் பிறருக்குப் பிடிக்க

    சிலருக்குப் பிறரைப் புகழ்ந்துதான் பழக்கம். தம்மை யாராவது புகழ்ந்தால் அவர்களுக்குத் தர்மசங்கடமாகிவிடும். என்ன சொல்வது என்று புரியாது விழிப்பார்கள். ஏனெனில், அவர்களுக்கே தம்மிடம் ஏதாவது திறமை இருப்பது தெரியாது.

    எத்தனை சிறு சமாசாரமாக இருந்தாலும், பிறரிடம் இருக்கும் திறமையையோ, நல்ல குணத்தையோ பாராட்டுவது ஒருவரது நற்குணத்தை, இரக்கத்தை, காட்டுகிறது. ஒருவரது நற்பண்பு செவிப்புலன் அற்றவர்களாக இருந்தாலும், அவர்களுக்குக் கேட்கும்; பார்வை இல்லாதவர்களுக்கும் தெரியும் எனப்படுகிறது.

    நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டவர்கள் பிறரையும் நல்லவிதமாகவே எடைபோடுவார்கள்.

    நம் மனம்போனபடி நடந்தால் என்ன? ஏன் பிறரிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டும்?

    இப்படியெல்லாம் கேட்கத் தோன்றுகிறதா?

    அப்போதுதான், `என்னைப் பிறருக்குப் பிடிக்கிறது. நான் நல்லவன்தான்!’ என்ற நிறைவு உண்டாகும். வீட்டிலும் வெளியிலும் நம் உறவுகள் பலப்படுவது நம் பண்பால்தான்.

    தாம் பெற்ற அன்பை யாரும் சேமித்து வைத்துக்கொள்வது கிடையாது. தமக்குக் கிடைத்ததை மேலும் பரப்புகிறார்கள்.

    கதை

    கோலாலம்பூரிலுள்ள ஒரு நாட்டியப்பள்ளியில் வசதிகுறைந்த மாணவிகளுக்கு என்று ஆரம்பித்து, பயில வரும் அனைவருக்கும் இலவசமாகப் போதிக்கப்படுகிறது. முறையாகப் பயின்றதால் கட்டொழுங்கும், தன்னம்பிக்கையும் பெருக, பத்து ஆண்டுகளுக்குமேல் அங்கு பயின்றவர்கள் தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற வேண்டும் என்று உறுதி பூண்டார்கள். நகரின் பல பாகங்களில் வசித்த ஏழை மாணவிகளுக்கு இவர்கள் போதிக்கிறார்கள்.

    எல்லாரும் இந்தியப்பெண்கள். `இந்தியர்கள் முட்டாள்கள்!’ என்று பள்ளிக்கூடங்களில் ஒயாத வசவு வாங்கியிருப்பார்கள். இது புரிந்து, தடுமாறி நிற்கும் சிறுமிகளைத் திட்டாது, ஆனால் மிகுந்த கண்டிப்புடன் நடத்த, வட்டம் பெருகிவருகிறது.

    அமைதியோ, மகிழ்ச்சியோ இல்லாதிருக்கும் குடும்பத்திலிருந்து வருகிறவர்களுக்கு எதையும் கற்றுக்கொடுப்பது எளிதல்ல. தமக்கு உதவ வருகிறார்கள் என்பது புரியாது, `எங்களைவிட்டால் உங்களுக்கு வேறு கதியில்லை!’ என்பதுபோல் திமிராக நடப்பவர்களும் உண்டு. அக்கம்பக்கத்தினர், சகமாணவியர் ஆகியோரைப்பற்றி அவதூறாகப் பேசுகிறவர்களும் உண்டு. சிறிது காலம் இவர்களிடம் பராமுகமாக நடந்துகொண்டால், தானே மாறிவிடுவார்கள்.

    இதெல்லாம் புரிந்து நடந்த ஆசிரியரைப்போலவே, அவரது மூத்த மாணவிகளும் பிறரை வழிநடத்திச் செல்லும் தலைமைக்குணத்தைப் பெற்றுவிட்டார்கள்.

    இவர்கள் சுயமாக நாட்டிய வகுப்பு என்று ஆரம்பித்தால், சேரப் போகும் ஒரு மாணவியிடமிருந்தே நாற்பது, ஐம்பது என்று ஒரு மாதத்தில் பல ரிங்கிட்டுகளைக் கறக்கலாம். சலங்கை பூஜை நடத்தினால் ஆயிரக்கணக்கில்! ஆனால், பணத்தைவிட தம்மைப்போல் இருக்கும் பிறரை மேலே தூக்கிவிடுவதே இவர்களது குறிக்கோளாக இருக்கிறது.. நிலைத்திருக்கும் மகிழ்ச்சி என்னவென்று இவர்களுக்குப் புரிந்திருக்கிறது.

    பிறருக்கு நன்மையே செய்பவர்களை ஏமாளிகள் என்று உலகம் நினைக்கலாம். இத்தகைய எண்ணப்போக்கால் சிறிதும் பாதிக்கப்படாத உறுதியும், சுதந்திரமான மனப்போக்கும் பலனை எதிர்பார்க்காது நன்மை செய்பவர்களுக்குக் கிட்டுகிறது. (`பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று எப்போதும் அஞ்சுகிறவர்கள் சுதந்திரமாக நடக்கும் திறனை இழந்து, பிறரை நாடிக்கொண்டே இருக்கிறார்கள்).

    கதை

    `என் சிறுவயதில், பெற்றோர் என்னிடம் அன்பு காட்டவில்லை. ஒழுக்கம் போதிப்பதாக எண்ணி, வன்முறையைப் பிரயோகித்தார்கள். இப்போது அவர்களுக்கு வயதான நிலையில், என்னால் அவர்களிடம் இரக்கம் காட்ட முடியவில்லை. முதியோர் இல்லத்தில் விட்டதில் என்ன தவறு?’ என்று நியாயம் கேட்டு ஒருவர் தினசரியில் எழுதியிருந்தார்.

    இவரைப்போல் கடந்த காலத்தின் கசப்புக்களிலேயே வாழ்ந்துகொண்டிருந்தால் நிம்மதிதான் கெடும். `பெற்றோரின் காலமே வேறு. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று தோன்றிப்போனால், அவர்களிடம் பணிவாக நடக்க முடியும்.

    அதிகாரத்தால் சாதிக்க முடியாததை அன்பினால் வெல்லலாம் என்பதைப் பலரும் அறிவதில்லை.

    கதை

    பாலர் பள்ளியில் சேர்க்கப்பட்ட சுந்தர் காலையில் புறப்படும் முன் தினமும் கதறி அழுவான் — அப்படியாவது, பெற்றோர் மனமிளகி வீட்டிலேயே விளையாடிக்கொண்டிருக்க அனுமதி கொடுப்பார்கள் என்று நம்பிக்கையால்தான்! அவர்களே இப்படித்தானே செய்திருப்பார்கள்! அதனால் மசியவில்லை.

    வேண்டாவெறுப்பாக பள்ளிக்குப் போக நேரிட்டபிறகு, அங்கு அளிக்கப்பட்ட எந்த வேலையையும் செய்ய மறுத்தான். அது என்ன, அவனுக்குப் பிடிக்காததையெல்லாம் செய்யச் சொல்லிப் பிறர் வற்புறுத்துவது!

    ஏதாவது எழுத்துவேலை கொடுத்தால், (தான் விரும்பிப் பார்க்கும் கார்ட்டூன் படங்களில் வரும் மிருகங்களைப்போல்) முகத்தில் இறுக்கத்தைக் காட்டிய பையனை எப்படிச் சமாளிப்பது என்று புரியவில்லை அவன் வகுப்பாசிரியைக்கு.

    தன் இயலாமையை ஒத்துக்கொண்டு, தலைமை ஆசிரியை மாலாவிடம் கொண்டுவிட்டாள். அவள் கனிவுடன், `என் மடியில் உட்கார்ந்து எழுதுகிறாயா?’ என்று கேட்க சிறுவனும் சம்மதித்தான்.

    சில நாட்கள் மாலாவின் மடியில் உட்கார்ந்து எழுதியதில், எழுதுவது அப்படி ஒன்றும் கடினமான வேலை இல்லை என்று தோன்றிப்போயிற்று சுந்தருக்கு. அதன்பின், வகுப்பில் நடப்பவைகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டான்.

    அன்பினால் எதையும் வெல்லலாம் என்று சிறுபிராயத்தில் கற்கும் பாடம் எப்போதும் மறக்காது.

    கதை

    திருமணமாகி வெளிநாடு வந்திருந்தாள் சுபத்ரா. புதிய சூழ்நிலை. புக்ககத்தினரும் அனுசரணையாக நடக்கவில்லை.

    அப்போது, பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு அம்மாள், `குழந்தைக்காகப் பண்ணினேன்!’ என்று மைசூர்பாகு செய்து கொண்டுவந்து கொடுத்தாள். அவள் `குழந்தை’ என்று குறிப்பிட்டது சூல்கொண்டிருந்த தாயை.

    எதிர்பார்ப்பின்றி வழங்கப்பட்ட அந்த அன்பினால் சுபத்ராவின் மனம் நெகிழ்ந்துபோயிற்று.

    கருவாக இருந்தபோது அம்மாவின் மனதைக் குளிரச்செய்த அந்த நிகழ்ச்சி பிறந்த குழந்தையின் உள்ளத்திலும் பதிந்துபோயிருக்கவேண்டும். இல்லாவிட்டால், பாலில் சர்க்கரை சேர்த்தால் துப்பிவிடும் குழந்தை வளர்ந்தபிறகு மைசூர்பாகை மட்டும் விரும்பிச் சாப்பிடுமா?

    ஈகை என்பது வசதியானவர்களுக்கு மட்டுமே உரிய குணமல்ல.

    கதை

    நங்கநல்லூர் கோயில் வாசலில் இருந்த பூக்கடையில் ஆசையுடன் ஒரு ரோஜாவைக் கையில் எடுத்தேன். என்னிடமிருந்த காசை பூக்காரியிடம் நீட்டியபோது, “சில்லறை இல்லே!” என்றாள்.

    நான் சிறிது வருத்தத்துடன் பூவை அது இருந்த கூடையிலேயே திரும்பப் போட்டேன்.

    “தலையில் வச்சுக்கத்தானே கேக்கறே? எடுத்துக்கோ!” அவள் என் கையில் திணிக்காத குறை.

    பிரமிப்புடன் நான் அதைப் பெற்றுக்கொண்டேன். என்னால் அவளுக்கு அன்று ஐந்து ரூபாய் நஷ்டம்.

    எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி பரீட்சை எழுதிவிட்டோ, வேலை பார்த்துவிட்டோ களைத்து வருகிறவர்களின் கால்விரல்களை நக்கிக்கொடுத்து, அவர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும்!

    மனிதனோ, மிருகமோ, ஒருவரது செய்கைகளும் சொற்களும் பிறருக்கு ஆறுதலாக, ஊக்கம் அளிப்பதாக இருந்தால் மகிழ்வை அளிக்கிறது.

    Share
  • அமெரிக்க ஜனநாயகத்தின் வலிமை

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அமெரிக்கச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவு வெளிப்படையாகத் தெரிய வந்திருக்கிறது. எல்லாச் சமூகங்களிலும்போல் அமெரிக்காவிலும் இடதுசாரிகள், வலதுசாரிகள், பழமை விரும்பிகள், புதுமைவாதிகள் என்று பல பிரிவுகள் உண்டு. ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதுவரை அரசல் புரசலாக இருந்த இந்தப் பிளவுகள் இப்போது வெளிப்படையாகத் தோன்றியிருக்கின்றன. வெள்ளை இனவாதிகளின் கை மிகவும் ஓங்கியிருப்பதாகத் தெரிகிறது.

    இவர் சொல்லும் பொய்களுக்கு அளவேயில்லை. தினமும் பொய்களாகக் கூறிக்கொண்டு நடுநிலை வகிக்கும் பத்திரிக்கைகளை மக்களின் எதிரிகள் என்கிறார். நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் அடிக்கடி உண்மையே வெல்லும்,உண்மையை மறைக்க முடியாது என்ற வாக்கியங்கள் அடங்கிய ஒரு பக்க விளம்பரங்களை வெளியிட்டாலும் ட்ரம்ப் பொய்களை உதிர்ப்பதை நிறுத்துவதில்லை. மற்றவர்கள் என்னென்ன பொய்கள் சொல்லுகிறார்கள் என்று இவர் சொல்கிறாரோ அந்தப் பொய்களை இவர்தான் தினமும் கூறிவருகிறார். அமெரிக்காவில் ஜனாதிபதிகள் தங்கள் நெருங்கிய உறவினர்களைத் தங்களுடைய ஆலோசகர்களாகவோ பெரிய அரசுப் பதவிகளிலோ வைத்துக்கொள்ளுவதில்லை. எங்கேயோ ஒரு சிலர்தான் அப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள். ஜான் கென்னடி தன்னுடைய தம்பி ராபர்ட் கென்னடியை அட்டர்னி ஜெனரலாக வைத்துக்கொண்டார் என்பது உண்மைதான். ஆனால் அப்படிப்பட்ட ஜனாதிபதிகள் மிகவும் குறைவு. ட்ரம்ப்போ தன் மகள், மருமகன், மகன் என்று நெருங்கிய உறவினர்களைத் தனக்கு அரசியல் ஆலோகசகர்களாக அரசாங்கச் செலவில் வைத்துக்கொண்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்தும் அவர்களை வற்புறுத்தித் தன் மருமகனுக்கு மிகவும் ரகசியமான அரசாங்க ஆவணங்களைப் பார்க்கும் உரிமையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்க்கும் அமெரிக்க நடுவராக மருமகனை நியமித்திருக்கிறார். இவர் இந்தத் தீர்வுக்குப் பாலஸ்தீனத்தில் நிறையத் தொழில்களைத் தொடங்கி பால்பஸ்தீனர்களின் வாழ்க்கையை மேம்படுத்தினால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார். இந்தச் சாக்கில் பாலஸ்தீனத்தில் நிறைய முதலீடு செய்து கொள்ளை கொள்ளையாகப் பணம் சம்பாதிக்க நினைக்கிறார். இதுதான் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இவருடைய தீர்வு!

    உலகில் சர்வாதிகாரிகள் உள்ள நாடுகளைப்போல் அமெரிக்காவில் தானும் சர்வாதிகாரியாக விளங்க வேண்டும் என்று ட்ரம்ப்ஆசைப்படுகிறார். பதவிக்கு வரும் முன் ஒரு வியாபாரியாக இருந்த இவர் ஒரு ஜனநாயக நாட்டில் அரசை நடத்துவதற்குப் பல checks & balances இருக்கின்றன என்பதை அடியோடு புறக்கணித்துவிட்டுத் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்கிறார்.தான் பொய்களாகச் சொல்வதோடு தன்னைச் சார்ந்த மற்றவர்களையும் பொய்கள் சொல்லவைக்கிறார். பதவி ஆசையால் இவருடைய மந்திரிசபையில் பதவி ஏற்ற சிலர் இவருடைய அட்டகாசம் தாங்காமல் பதவியைத் துறந்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்; இவர் கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்பவர்களைப் பதவியிலிருந்து தடித்தனமாக விலக்கியிருக்கிறார்.

    சமீபத்தில் சென்ற பத்து வருடங்களாக ட்ரம்ப்புக்கு வழக்கறிஞராக இருந்த மைக்கேல் கோகன் என்பவர் ட்ரம்ப் தன்னை நடத்திய விதத்தையும் பொய்கள் சொல்லவைத்ததையும் தாங்க முடியாமல் அவருக்கு எதிராகப் பல உண்மைகளை அமெரிக்கப் பாராளுமன்ற கீழவை உறுப்பினர்களிடம் கூறியிருக்கிறார். அரசு ஒழுங்காகக் காரியங்கள் செய்கின்றதா என்பதைக் கண்காணிக்க கீழவை அங்கத்தினர்கள் யாரையும் விசாரிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு விசாரணையின்போது தான் ட்ரம்ப்பால் எப்படி ஏமாற்றப்பட்டோம் என்பதை விலாவாரியாக கோகன் விளக்கினார். மேலும் ஒரு பெரிய எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார். 2020-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் தோற்றுவிட்டால் அதை ஏற்றுஅவர் எளிதில் பதவி விலக மாட்டார் என்றும் நாடுபலாத்காரத்தில் இறங்கலாம் என்றும்ட்ரம்ப்பிற்காகத் தான் வேலைசெய்தபோது ஏற்பட்ட தன்னுடைய அனுபவத்திலிருந்து இதைக் கூறுவதாகவும் கூறியிருக்கிறார். இவருடைய எச்சரிக்கை அப்படியொன்றும் நடப்புக்கு அப்பாற்பட்டதல்லவென்றும் ட்ரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தின் தன்மையைக் குறைப்பதோடு அதை அழித்துவிடவும் கூடும் என்று பல பத்திரிக்கையாளர்கள் பயப்படுகிறார்கள். கிளின்டனின் வெளியுறவு மந்திரியாக இருந்த மேடலின் ஆல்பர்ட் எழுதிய ‘Fascism: A Warning’ என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளதுபோல் நாஜிக்கள் ஜெர்மனியைக் கைப்பற்றியது போலவோ ஃபாஸிஸம் இத்தாலியில் தலையெடுத்தது போலவோஅமெரிக்காவிலும் நடக்கலாம் என்றும் பலர் பயப்படுகிறார்கள். கலிபோர்னியா மாநிலகீழவை அங்கத்தினர் அமெரிக்க ஜனநாயகம் பெரிய ஆபத்தில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒருவர் அமெரிக்கக் குடியரசின் ஸ்தாபனங்கள் (institutions)– எஃப்.பி.ஐ, நீதித்துறை, பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள் – மிகவும் வலுவாக இருப்பதாகவும் ட்ரம்ப்பிற்கு எதிராகச் செயல்படத் தயங்காது என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

    ‘ஜனநாயக அரசுகள் எவ்வாறு தங்கள் முடிவை எதிர்கொள்கின்றன’(How Democracies Die)என்னும் புத்தகத்தை எழுதிய ஸ்டீவன் லெவிட்ஸ்கியும் டேனியல் ஸிப்லாட்டும் அமெரிக்க ஜனநாயகத்தை அப்படி எளிதாக ட்ரம்ப்பால்அழித்துவிட முடியாது என்கிறார்கள். 1930-களில் இருந்த ஜெர்மனி போலவோ இப்போதுள்ள துருக்கி, வெனிஸுவேலா, ஹங்கேரி போலவோ அமெரிக்கா இல்லையென்றும் அமெரிக்காவில் ஜனநாயக ஸ்தாபனங்களும் எதிர்க் கட்சியும் மிகவும் வலுவாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். இருந்தாலும், அமெரிக்க விழுமியங்கள் மாறிக்கொண்டு வந்ததாலேயே ட்ரம்ப் போன்றவர்கள் பதவிக்கு வந்ததாகவும், இன்னும் மாறிய எண்ணங்கள் தொடர்ந்து இருப்பதாகவும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எச்சரிக்கிறார்கள். 2018 தேர்தலில் ஜனநாயக் கட்சியின் அங்கத்தினர்கள் பெரும்பான்மையராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ட்ரம்ப்பின் ஏகாதிபத்தியத் தோரணைக்கு மக்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள் என்று இவர்கள் கூறுகிறார்கள். இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

    நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒரு பத்திரிக்கையாளர் ட்ரம்ப்பின் ஏகாதிபதியாக (autocrat) வேண்டும் என்ற ஆசைக்குத் தடைபோடத் தேர்தல்களும் எதிர்க்கட்சியும் இருக்கும்வரை ட்ரம்ப்பால் அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்த முடியாது என்கிறார்.

    இதே மாதிரி நாம் இந்தியாவைப் பற்றியும் சொல்ல முடியுமா என்று எண்ணிப் பார்த்தேன். இந்திய ஜனநாயகம் அமெரிக்க ஜனநாயகத்தின் அளவு வலிமை பொருந்தியதாக இருக்கிறதா என்ற கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்ல முடியவில்லை. இந்து மதத்தையும் அதன் அங்கமாக விளங்கும் ஜாதிகளையும் அறவே ஒழிக்க வேண்டும் என்று பறைசாற்றிய பெரியார் வழியில் வந்த திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க.வும் இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிக்கும் பி.ஜே.பி.யும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றுசேர்ந்திருப்பதைப் பார்த்தால் இந்தியாவில் அரசியல் விழுமியங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டன என்று சொல்ல வேண்டும். அதன் விளைவாக இப்போது இருக்கும் ஜனநாயகத்தின் கொஞ்சநஞ்ச சாயலையும் முழுவதுமாக அழித்துவிட்டு, சந்தர்ப்பவாத அரசியல் மோதியை ஏகாதிபதி ஆக்கிவிடும்போல் தெரிகிறது.

    Share
  • 2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்

    –சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    1. https://youtu.be/CPeN7GhTpz4
    2. https://www.thegreenage.co.uk/cos/nuclear-power-in-france/
    3. https://youtu.be/4YgmCu7dfS4
    4. https://www.dw.com/en/france-sticking-with-nuclear-power/av-38397323
    5. https://www.businessinsider.com/countries-generating-the-most-nuclear-energy-2014-3
    6. https://www.youtube.com/watch?v=TZV2HRKNvao
    7. https://www.youtube.com/watch?v=HMrQJoN-Ks4
    8. https://www.youtube.com/watch?v=kr4mFLws3BM
    9. https://www.youtube.com/watch?v=YfulqRdDbsg
    10. https://www.youtube.com/watch?v=Hn-P3qnlB10

    ++++++++++++++++++++++++

    பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப் படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

    BBC News (June 23, 2011)

    Image result for nuclear power in france

    ஈரோப்பியன் கூட்டுறவு நாடுகளில் உள்ள 143 அணுமின் நிலையங்களில் பிரென்ச் அணுமின் நிலைய எண்ணிக்கை : 53 (40%). அவற்றின் மின்சக்தி பரிமாற்றம் : 75% பங்கு.  பிரென்ச் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி “பிரான்சில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தி லும் புகுஷிமா விபத்துக்களை முன்னிட்டு ஆழ்ந்த பாதுகாப்பு இயக்க உளவுகள் செய்யப் படும்.  ஆயினும் ஜெர்மனி, இத்தாலி, சுவிட்ஜர்லாந்து ஆகிய அண்டை நாட்டு அரசாங்கங்கள் போன்று பிரான்ஸ் இயங்கும் அணுமின் நிலையங்களை நிரந்தரமாய் மூடத் தடை விதிக்காது,” என்று அறிவித்தார்.

    BBC News (May 30, 2011)

    Image result for nuclear power in france

    பிரான்ஸ் நாட்டு அணுமின்சக்தி இயக்கத் திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள்.

    2018 நவம்பர் அறிப்பின்படிக் கடந்த 50 ஆண்டுகளாக

    1. பிரான்ஸ் தேசம் தற்போது தேவையான மின்சக்தி உற்பத்தியில் 75% அணுசக்தி மூலமாக பாதுகாப்பு முறையில் வெற்றிகரமாகப் பெற்று வருகிறது.  2035 ஆண்டுக்குள் அது 50% ஆகக் குறைக்கப்படும்.  அதாவது பிரான்ஸில் 17 பழைய அணுமின்சக்தி நிலையங்கள் 2035 ஆண்டுக்குள் நிறுத்தப் படும்.
    2. உலகத்திலே பேரளவு மின்சக்தி ஏற்றுமதி தொடர்ந்து செய்யும் நாடுகளில் பிரான்ஸ் முன்னணியில் நிற்கிறது. காரணம் மலிவான நிதியில் மின்சக்தி உற்பத்தியை பிரான்ஸ் செய்ய முடிகிறது.  அதலால் ஆண்டுக்கு மூன்று பில்லியன் ஈரோ [ 3.4 பில்லியன் டாலர் : ] பிரான்சுக்கு வருமானம் வருகிறது.
    3. கடந்த 50 ஆண்டுகளாக பிரான்ஸ் அணுவியல் துறை நுணுக்க சாதனங்கள் விருத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளது.  குறிப்பாக அணுவியல் எரிக்கரு உற்பத்தி ஏற்றுமதியில் செல்வாக்கு அடைந்துள்ளது.
    4. அத்துடன் சுமார் 17% பங்கு மின்சக்தி அணுவியல் எரிக்கரு மீள் சுழற்சியில் [Recycled Nuclear Fuel] கிடைக்கிறது.

    +++++++++++++

     

    French nuclear power reactors

    பிரான்ஸ் எரிசக்தி உற்பத்தி மூல எருக்கள் [Energy Sources] 

    2016 ஆண்டில் பிரான்சின் மின்சக்தி ஆற்றல் உற்பத்தி 556 TWh [ terra watt hours [Gross].

    1. அதில் அணுமின்சக்தியின் பங்கு : 72% [403 TWh].
    2. நீரழுத்த மின்னாற்றல் : 12%  [65 TWh],
    3. இயல்வாயு + நிலக்கரி வெப்ப மின்சக்தி 8% [45 TWh];
    4. சூரியக்கதிர் + காற்றாற்றல் :  5% [ 31 TWh ]
    5. அதாவது பிரான்ஸ் மொத்தத் தேவை மின்சக்தி : 442 TWh [6,600 KWh/cappit] : கி.வாட் ஹவர் / காப்பிட்டா.
    6. 2013 இல் வீட்டு மின்சார விலை அளவு : 8 சென்ட்/கிலோவாட் ஹவர்.  [cents/Kwh]

    French nuclear power reactors

    Class Reactor MWe net, each Commercial operation
    900 MWE BLAYAIS 1-4
    910
    12/81, 2/83, 11/83, 10/83
    BUGEY 2-3
    910
    3/79, 3/79
    BUGEY 4-5
    880
    7/79-1/80
    CHINON B 1-4
    905
    2/84, 8/84, 3/87, 4/88
    CRUAS 1-4
    915
    4/84, 4/85, 9/84, 2/85
    DAMPIERRE 1-4
    890
    9/80, 2/81, 5/81, 11/81
    FESSENHEIM 1-2
    880
    12/77, 3/78
    GRAVELINES B 1-4
    910
    11/80, 12/80, 6/81, 10/81
    GRAVELINES C 5-6
    910
    1/85, 10/85
    SAINT-LAURENT B 1-2
    915
    8/83, 8/83
    TRICASTIN 1-4
    915
    12/80, 12/80, 5/81, 11/81
    1300 MWE BELLEVILLE 1 & 2
    1310
    6/88, 1/89
    CATTENOM 1-4
    1300
    4/87, 2/88, 2/91, 1/92
    FLAMANVILLE 1-2
    1330
    12/86, 3/87
    GOLFECH 1-2
    1310
    2/91, 3/94
    NOGENT S/SEINE 1-2
    1310
    2/88, 5/89
    PALUEL 1-4
    1330
    12/85, 12/85, 2/86, 6/86
    PENLY 1-2
    1330
    12/90, 11/92
    SAINT-ALBAN 1-2
    1335
    5/86, 3/87
    N4 – 1450 MWE CHOOZ B 1-2
    1500
    12/96, 1999
    CIVAUX 1-2

    1495

    1999, 2000
    Total (58)
    63,130

    Differences in net power among almost identical reactors is usually due to differences in cold sources for cooling

    “இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

    பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)     


    “மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங் களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

    ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

    ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.

    ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.

    நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவதென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்தி ருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல் களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப் பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவை யும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

    லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

    “விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

    விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

    உலக நாடுகளுக்கு 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்கள் ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடம்.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.

    கட்டுரை ஆசிரியர்

    முன்னுரை:  2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

    தற்போது முப்பது உலக நாடுகளில் 440 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

    புகுஷிமா அணுமின் உலைகளின் தற்போதைய நிலை (ஜூன் 20, 2011)

    புகுஷிமா : 1  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது.

    புகுஷிமா : 2  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது.  அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கம் பரவி விட்டதாக ஐயப்பாடு.

    புகுஷிமா : 3  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  அரணில் பிளவு ஏற்பட்டு உள்ளதாக ஐயப்பாடு.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், இணைக்கப் பட்ட குகையிலும் காணப் பட்டது.  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் (Spent Fuel Storage Pool) நீர் மட்டம் குறைந்து பிறகு நீர் நிரப்பப் பட்டது.

    புகுஷிமா : 4  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்ததால்,
    தீயும் வெடிப்பும் நேர்ந்தன.

    புகுஷிமா : 5 & 6  அணு உலைகள் சுயமாய் நிறுத்தமாகின.  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்து எரிக்கோல்களின் உஷ்ணம் ஏறியது.

    மொத்தக் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு 110,000 டன் என்று கணிக்கப் படுகிறது.  அது மீள் சுற்றியக்க வடிகட்டு முறையில் நீண்ட காலம் சுத்திகரிக்கப் பட வேண்டும்.

    அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்

    புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன ஆயிரம் ஆயிரம் பொது மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் வேறு.  அணுசக்தி உற்பத்தி மீது அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் பல்லாண்டுகள் ஒரு மனதாய் அவற்றை எதிர்த்தாலும் இப்போது உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது அதற்கு நிதியின்றேல் நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.

    இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும்  இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும்.  அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும்.  சேமிப் பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும்.  அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும்.  தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும்.  திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம்.  அல்லது புறக்கணிக்கப் படலாம்.

    அணுமின் நிலைய ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுகள் வற்புறுத்தும் புதிய பாதுகாப்பு விதிகள்

    21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான உளவு விதியை வெளியிட்டுள்ளது.  அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சிபோன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங்களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளு வது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப் படும்.  புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணுசக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்துள்ள முடிவுகளைக் கீழே காணலாம் :

    புகுஷிமா அணுமின் உலை விபத்துச் சிக்கல்கள் போல் மீண்டும் நேராதிருக்க ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுத் தலைவர், யுகியா அமானோ (Yukiya Amano, Head of UN Watchdog) அகில உலக அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்புகளை ஆழ்ந்து உளவி 18 மாதங்களுக்குள் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.  இந்த அறிவிப்பை முன்னிட்டு 150 உலக நாடுகள் வியன்னா அகில் நாட்டு அணுசக்திப் பேரவை (IAEA) நிறுவகத் தளத்தில் கூடப் போகின்றன. மேலும் அவர் கூறியது: புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துகள் பொது மக்களைப் பேரளவில் பயமுறுத்தி உள்ளதால், அவருக்கு நேர்மையாய்ப் பதிலளிக்க வேண்டிய கடமையும் IAEA வுக்கு நேர்ந்திருக்கிறது.  அணுமின் நிலையங்களின் அபாயப் பாதுகாப்பு முறைகள் மீது பொது நபருக்கு நம்பிக்கை போய்விட்டது.  ஆதலால் IAEA அணுமின் நிலைய இயக்க அதிகாரிகளுக்குக் கடுகையான கண்காணிப்பு விதிகளை விடுத்து அவற்றை எல்லா அணுமின் நிலையங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளது.

    சென்ற வாரத்தில் எதிர்கல அணுமின் சக்தி உற்பத்தி பற்றிய 10 உலக நாடுகளின் முடிவுகள் :  (1. அர்ஜென்டைனா, 2. பிரேசில், 3. ஆர்மீனியா 4. கனடா, 5. சைனா, 6 பின்லாந்து, 7. பிரான்ஸ், 8. ஜெர்மனி, 9. இந்தியா, 10 ஜப்பான்) தெரிவிக்கப்பட்டன.  இக்கட்டுரையில் மற்ற 11 உலக நாடுகளின் முடிவுகள் கூறப்படுகின்றன.

    11. மெக்ஸிகோ :  துணை எரிசக்தி அமைச்சர் கார்லோஸ் பீடர்சன் புகுஷிமா அணு உலை விபத்துகள் மெக்ஸிகோ திட்டமிட்டிருக்கும் அணுமின் நிலைய நிறுவ ஆலோசனைகளை நிறுத்த வில்லை என்று அறிவித்துள்ளார்.

    12. நெதர்லாந்து :  டச் அரசாங்கம் திட்டமிட்டுள்ள புதிய அணுமின் நிலைய ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போகிறது.

    13. ருமேனியா :  அணுமின் உலைகள் ஆதரவு பற்றி அரசாங்கக் கொள்கையில் மாறுதல் எதுவும் இல்லை.

    14.  ரஷ்யா :  ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடிவ் அகில நாடுகளில் சுனாமிப் பேரலைத் தாக்க எதிர்பார்ப்பு உள்ள அணுமின் நிலையங்களின் நீண்ட காலப் பாதுகாப்பு நிலை விதிகளின் தேவையை வற்புறுத்தினார்.  நிலநடுக்கப் பழுதுக் கோடுகளுக்கு (Seismic Fault Line) அப்பால் அமைக்கப் பட்டுள்ள ரஷ்ய அணுமின் நிலையங்களில் உடனடிக் கவனம் செலுத்தும் அவசியம் இல்லை என்றும் வலியுறுத்தி னார்.

    15. தென் ஆப்ரிக்கா :  தென் ஆப்ரிக்காவின் அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகம் கடற்கரையில் அமைந்துள்ள கோபெர்க் அணுமின் நிலையம் நீண்ட கால அபாய வெப்பத் தணிப்பு நீர் வசதி ஏற்பாடுகளை உடையது என்று அறிவித்தது.  ஒன்றே ஒன்றான இந்த இரட்டை அணுமின் நிலையம் 1800 MWe மின்சார உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளது.  2011 மார்ச் 16 ஆம் தேதி தென் ஆப்ரிக்க அரசு 2030 ஆண்டுக்குள் 13% தகுதி மின்சாரப் பங்கு ஏற்றுக் கொள்ள 9600 MWe ஆற்றல் உள்ள அணுமின் நிலைய திட்டங்களைக் கட்ட அனுமதி அளித்திருக்கிறது.

    16 தென் கொரியா :  2011 மார்ச் 21 ஆம் தேதி தென் கொரியா கல்வி அமைச்சகம் தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையப் பாதுகாப்பு இயக்கங்களை மீளாய்வு செய்ய ஆணை இட்டது.  இப்போது 21 அணுமின் நிலையங்கள் 40% பங்கு மின்சாரம் அனுப்பி வருகின்றன. 2020 ஆண்டுக்குள் இன்னும் 35 புதிய அணுமின் நிலையங்களைத் தென் கொரியா நிறுவத் திட்ட மிட்டுள்ளது.

    17 சுவீடன் :  2009 ஆம் ஆண்டு செய்த முடிவின்படி தற்போதுள்ள அணுமின் நிலையங்கள் ஆயுட் கால இறுதியில் முற்றிலும் புதுப்பிக்கப் பட்டு மாற்றப் படும்.  2011 ஆண்டு இறுதிக்குள் ஈரோப்பியன் அணுசக்திப் பேரவைக்கு உலோக அழுத்தச் சோதனை விளைவு களை (Stress Tests) அனுப்ப வேண்டும்.

    18. சுவிட்ஜர்லாந்து :  2011 மே மாத இறுதியில் சுவிஸ் அரசாங்கம் ஆயுள் முடியும் அணுமின் நிலையங்கள் மூடப்படும் என்று முடிவு செய்தது.  அதாவது 2034 ஆண்டுக்குள் அனைத்து அணுமின் நிலையங்களும் நிறுத்தம் அடையும் என்றும் அறிவித்தது.

    19. டெய்வான் :  டெய்வான் ஜனாதிபதி தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு மீளாய்வு செய்யப்படும் என்று அறிவித்தார்.  அத்துடன் புதிதாய்க் கட்டத் திட்டமிட்ட அணுமின் நிலையங்கள் தாமதப் படாமல் அமைக்கப் படும் என்றும் கூறினார்.

    20. பிரிட்டன் :  பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப் படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

    21 அமெரிக்கா :  2011 மே மாதம் 17 ம் தேதி அமெரிக்க அணுசக்தி நெறிப்பாடு ஆணையகம் (US Nuclear Regulatory Commission – NRC) இன்னும் ஆறு மாதங்களுக்குள் அமெரிக்க அணுமின் உலைகளின் அபாயப் பாதுகாப்பு இயக்க முறைகளை மீளாய்வு செய்து தமக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நியமிக்கப் பட்ட ஆய்வு வினைக் குழுவுக்கு (A Task Force) அறிவித்தது.  ஜப்பான் அணு உலை வெடிப்புகள், அவற்றின் நேரடித் தொலைக்காட்சித் தரிசனம், ஜப்பானி யரின் நீண்ட காலத் தவிப்பு, அணு உலை இயக்க நிபுணரின் கட்டுப்படுத்த முடியாத தடுமாற்றம் அமெரிக்கர் உட்பட உலக மக்களின் வயிற்றைப் பெரிதாகக் கலக்கி இருக்கிறது.  1979 இல் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் நிறுத்தமான புதிய அணுமின் நிலையத் திட்டங்கள் எல்லாம் மீண்டும் உயிர்தெழும் என்ற நம்பிக்கை மிகவும் தளர்ந்து போயுள்ளது.  அத்தகைய வெறுப்பும், அவநம்பிக்கை யும் இருந்தாலும் அமெரிக்கா வில் (2011) தற்போது அணுமின் உலைகள் அவசியத் தேவை என்பதற்கு 43% மக்கள் ஆதரவு அளிக்கிறார்.  இப்போது அமெரிக்கா வில் 104 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன.  1977 இல் அணுமின் உலை ஆதரவாளர் 77%.  திரிமைல் தீவு, செர்நோபில் விபத்துக்களுக்குப் பிறகு ஆதரவு 59% ஆகக் குறைந்தது.  ஜப்பான் புகுஷிமா விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் 2011 இல் அணுமின் நிலைய ஆதரவு 43% ஆகக் குன்றி விட்டது !

    முடிவுரை:   பெரும்பான்மையான உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரிய வில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவ தோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

    (தொடரும்)

    ***************

    தகவல்:

    1.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

    2. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

    3. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

    4.  Nuclear {Power in Japan (March 30, 2011)

    5. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

    6 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

    7. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

    8.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

    9.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

    10. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

    11. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

    12. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

    13. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

    14. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

    15 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant(Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

    16. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

    17. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

    18. BBC News : Europe, French Nuclear Policy  (May 31, 2011)

    19 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

    20. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

    21. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

    22 Wikipedea http://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors (List of World Nuclear Reactors) (June 8, 2011)

    23 http://www.world-nuclear.org/info/reactors.html (World Nuclear Opeations) (June 14, 2011)

    24. Nuclear Watchdog wants new safety checks after Fukushima (June 20, 2011)

    25. BBC News : New UK Nuclear Plant Sites Named  (June 23, 2011)

    26. https://www.japantimes.co.jp/news/2018/03/09/national/fukushima-no-1-cleanup-continues-radioactive-water-rumors-also-prove-toxic/#.XI0k

    27.  https://www.theguardian.com/environment/2018/jun/03/was-fallout-from-fukushima-exaggerated

    28. https://www.iaea.org/newscenter/focus/fukushima/status-update  [March 14, 2019]

    29. https://www.fairewinds.org/fukushima-latest-updates  [January 18, 2019]

    30. http://www.world-nuclear.org/information-library/country-profiles/countries-a-f/france.aspx  [November 2018]

    31http://www.nuclearpowerdaily.com/reports/Glowing_results_for_nuclear_power_at_Frances_EDF_999.html  [February 15, 2019] 

    32. https://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_France  [March  10, 2019]

    ************************
    S. Jayabarathan  (jayabarathans@gmail.com)  March 16, 2019  [R-1]
    http:jayabarathan.wordpress.com/

    Share
  • பெண் காவலர்கள் படும் பாடு!

    -சேஷாத்ரி பாஸ்கர்

    சென்ற வாரம் நாரத கான சபாவில் காபி குடிக்கும் போது திடீரென நான்கு பெண் காவலர்கள் வேகமாக வந்து காபி வேண்டும் எனச் சொல்லி அதனை வேகமாகத் தரச் சொன்னார்கள்.

    அவர்கள் அனைவரும் பந்தோபஸ்து வேலைக்காக வந்தவர்கள். ஆளுநர் அந்தப் பக்கம் வருவதாக அறிந்தேன். நடுவில் ஒருவர் அந்தக் காபிக்கு பணமும் கொடுத்துவிட்டார். ஒரு சின்ன பேச்சும் ஒரு குட்டி இளைப்பாறலும் கிடைத்த சந்தோஷம் அவர்கள் முகத்தில்.

    அவர்கள் குடித்துக்கொண்டுடிருந்த போதே திடீரென அவர்கள் மேலதிகாரியின் விசில் சத்தம் கேட்டு எல்லோரும் கடகடவென எழுந்து எதிர்த்திசைக்குப் போய்விட்டார்கள். அந்தச் சின்ன ஓய்வும் போய்விட்டது. அதுவும் பெண் காவலர்கள் பாடு மிகக் கஷ்டம். சிறுநீர் கழிக்கக் கூட அவர்கள் ஒரு அலுவலகமோ,  உணவு விடுதியோ தேட வேண்டிய நிலை.

    குறைந்த பட்சம் அவர்கள் நிற்கும் அந்த இடத்தில் பாதை ஓரத்தில் ஒரு சின்ன பெஞ்ச் போல ஒரு சிமெண்ட் பலகை செய்து கொடுத்தால் அவர்கள் மேலும் சிறப்பாக பணியாற்றலாம். வெரிகோஸ் ஒரு பெரும் தொல்லை. இந்தக் கஷ்டப் பணியில் அவர்கள் சலிப்பு அடையாமல் இருக்கச் சில சலுகைகள் தேவை தான்.

    இதை எல்லாம் தாண்டி அவர்கள் பொது மக்களிடம் கனிவுடன் இருப்பது சாதாரண செயல் அல்ல. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அவர்கள் அந்த குடித்த நான்கு காபிக்கும் காசு கொடுத்தவர்கள். இனாமாக அதைப் பெறவில்லை. இங்கு பெண்ணாய் பிறக்க மட்டும் இல்லை வாழவும் மாதவம் செய்ய வேண்டும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 20

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 20 – பயனில சொல்லாமை

    குறள் 191:

    பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
    எல்லாரும் எள்ளப் படும்

    கேக்கவங்க வெறுக்குத மாதிரி ஒண்ணுத்துக்கும் ஒதவாத சொல்ல சொல்லுதவன் எல்லாராலையும் எளக்காரமா நெனைக்கப்படுவான்.

    குறள் 192:

    பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
    நட்டார்கட் செய்தலிற் றீது

    பலபேருக்கு முன்ன ஒதவாக்கர பேச்சு பேசுதது சேக்காளிக்கு கெட்டது செய்யுததக் காட்டிலும் கொடும.

    குறள் 193:

    நயனில னென்பது சொல்லும் பயனில
    பாரித் துரைக்கும் உரை

    உப்புபெறாத விசயத்த விரிச்சு பேசினாம்னா அவன ஒதவாக்கரை னு தெரிஞ்சிக்கிடலாம்.

    குறள் 194:

    நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
    பண்பில்சொல் பல்லா ரகத்து

    ஒண்ணுத்துக்கும் ஒதவாத கொணங்கெட்ட சொல்ல பல பேர்கிட்ட சொல்லுதவனுக்கு அந்த சொல்லே நியாயங்கெட்ட வழியகாட்டி நல்ல கொணத்த கெடுத்து உட்ரும்.

    குறள் 195:

    சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
    நீர்மை யுடையார் சொலின்

    நல்ல கொணம் உள்ளவங்க ஒதவாத சொல்ல சொன்னாங்கன்னா அவங்களோட பெருமயும் புகழும் இல்லாம போயிடும்.

    குறள் 196:

    பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
    மக்கட் பதடி யெனல்

    ஒதவாத சொல்ல பலகாலம் சொல்லுதவன மனுசன்னு சொல்லுததவிட பதர் னு சொல்லணும்.

    குறள் 197:

    நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
    பயனில சொல்லாமை நன்று

    படிச்ச பெருமக்க அறமில்லாத சொல்லக்கூட சொல்லலாம். ஆனா ஒண்ணுத்துக்கும் ஒதவாத சொல்ல சொல்லாம இருக்குதது நல்லது.

    குறள் 198:

    அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
    பெரும்பய னில்லாத சொல்

    அரும்பயன்களை ஆஞ்சு அறியும் திறம உள்ளவங்க ஒதவாத சொல்ல சொல்லமாட்டாங்க. .

    குறள் 199:

    பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
    மாசறு காட்சி யவர்.

    களங்கமில்லாத புத்திசாலிங்க நெனப்பு மறந்து கூட ஒதவாத சொல்ல சொல்ல மாட்டாங்க.

    குறள் 200:

    சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல்

    சொற்கள்ல வாழ்க்கைக்கு ஒதவுதத மட்டும் சொல்லணும். ஒதவாதத சொல்லக்கூடாது.

    Share
  • உலகத் தொல்காப்பிய மன்றம் சிறப்புரை & தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா

    -மு.இளங்கோவன்

    புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் சிறப்புரையும், தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழாவும் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் (09.03.2019) நடைபெற்றது. ஆய்வறிஞர் கு. சிவமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் முன்னைப் பேராசிரியர் எஸ். ஆரோக்கியநாதன் கலந்துகொண்டு மொழியியல் நோக்கில் தொல்காப்பியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் தெ.முருகசாமி சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியப் பதிவுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

    புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அமெரிக்காவிலிருந்து வருகைபுரிந்த அறிவியல் அறிஞர் நா.க.நிதி அவர்களுக்குத் தொல்காப்பியத் தொண்டர் என்ற விருதினை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.

    தூ. சடகோபன் வரவேற்புரையாற்றினார். முனைவர் ப.பத்மநாபன் அறிமுகவுரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் நோக்கவுரையாற்றினார். முனைவர் இரா. கோவலன் நன்றியுரையாற்றினார். புதுச்சேரியில் வாழும் தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    படத்தில்: புதுவை அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், அமெரிக்கா நாட்டில் வாழும் அறிவியல் அறிஞர் நா.க.நிதிக்குத் தொல்காப்பியத் தொண்டர் என்ற விருது வழங்கிப் பாராட்டுதல்.அருகில் பேராசிரியர்கள் மு.இளங்கோவன், எஸ்.ஆரோக்கியநாதன், கு.சிவமணி.

    Share
  • பாட்டி பெயர்

    -நிர்மலா ராகவன்

    முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்ததில் கொள்ளை மகிழ்ச்சி கோபுவுக்கு. ஆண்பிள்ளையானால், பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கொண்டு வயதானகாலத்தில் பெற்றோர்களைத் தனியே தவிக்க விடுவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு.
    எல்லாரும் தன்னைப்போல் இருக்க முடியுமா? எவ்வளவோ வற்புறுத்தியும், அப்பா தான் வாழ்ந்த வீட்டைவிட்டு இவனுடன் வர மறுத்துவிட்டார். அதனால் என்ன? அவன் மனைவி தன் அம்மாவை மட்டுமின்றி, பாட்டியையும் அவர்களுடனேயே தங்க வைத்திருந்தாள்.

    பெண்களுக்குத்தான் இப்படி அரவணைத்துப் போகும் குணம் என்று யோசித்த கோபு மனைவி கர்ப்பமாக இருந்தபோதே அவள் வயிற்றுக்கருவிற்குப் பெயரும் நிச்சயித்துவிட்டான்.

    “குழந்தைக்கு என்ன பேருடா வைக்கப்போறே?” அப்பா கேட்டார்.

    ”பாட்டி பேருதான்!”

    அப்பாவுக்கு லேசான அதிர்ச்சி. “அந்தப் பேரையா வெக்கப்போறே!”

    “போங்கப்பா. ஒங்களுக்கு எப்பவுமே பாட்டியைக் கண்டா ஆகாது”.

    “அதுக்குச் சொல்லலேடா,” என்று எதுவோ சொல்ல ஆரம்பித்த அப்பாவை மேற்கொண்டு பேச விடவில்லை கோபு. “பாட்டி இத்தனை வயசாகியும் அவங்கம்மாவை தன்கூட வெச்சுப் பாத்துக்கறாங்க. ஏன், அம்மாகூடத்தான்! என் பொண்ணும் நாளைக்கு அப்படி இருப்பா!”
    மகள் வளர, வளர, அவளுக்கு எந்த குறையுமில்லாது பார்த்துக்கொண்டான் கோபு.

    மேல்படிப்புக்கு வெளிநாட்டுக் கல்லூரியில் உபகாரச்சம்பளத்துடன் இடம் கிடைத்தபோது அவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. ஒரே மகளின் நிழலில் எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தை வசதியாகக் கழிக்கலாம்.

    “ஒன் பொண்ணு எப்போ திரும்பி வராளாம்?”

    சோகமாக கணினியை முதியவர்பக்கம் திருப்பினான் கோபு. “எனக்கு அவ அனுப்பி இருக்கிற ஈ-மெயில். படிச்சுப்பாருங்கப்பா!”
    `எனக்கு இங்கேயே நல்ல வேலை கிடைத்துவிட்டது. இங்கு ரொம்ப குளிர். அம்மாவாலும் உன்னாலும் தாங்க முடியாது. அதனால என்ன! எப்போ வேணுமானாலும் ஸ்கைப்பில பாத்து பேசிட்டாப் போச்சு!

    இங்க என் பேர் ஒருத்தர் வாயிலேயும் நுழையறதில்லே. அதனால சுருக்கி வெச்சுக்கிட்டேன். லவ் யூ.
    ஸாம்’.

    படித்து முடித்த அப்பாவின் முகத்தில் சிறு புன்னகை. மகனைப் பார்த்துப் பரிதாபப்படாமலும் இருக்க முடியவில்லை.

    “ஏம்பா? ரெண்டு மூணு குழந்தை இருந்தா, யாராவது ஒருத்தரோட இருந்திருக்கலாம், இல்லியா? இப்போ அதுக்கும் வழியில்லாம போச்சு. நானும் அவளும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பாத்துக்கிட்டு..!” பெருமூச்செறிந்தான் கோபு.”

    “அதுக்குத்தான் நான் மோதல்லேயே கேட்டேன், எதுக்கு பாட்டி பேருன்னு”.

    அவனுக்குப் புரியவில்லை.

    “பாட்டி பேரு என்ன, சொல்லு!” அவனை மடக்கிவிட்ட பெருமிதத்துடன் அப்பா கேட்டார்.

    “சம்பூர்ணம். தெரியாத மாதிரி கேக்கறீங்களே!”

    “ஒங்க பாட்டி அவங்க அப்பா அம்மாவுக்கு பதிமூணாவது குழந்தை. அவங்களுக்கு முன்னாடி பிறந்த ஏழெட்டு சின்ன வயசிலேயே செத்துப் போச்சு. குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுக்கவும் அவங்களுக்குத் தோணலே. இனிமே குழந்தையே வேண்டாம்னு சம்பூர்ணம்னு பேரு வெச்சாங்க. அதாவது, முழுமை அடைஞ்சிடுச்சு அப்படின்னு. பாட்டிதான் கடைசி!”

    சம்பூர்ணம் என்ற பெயர் வைத்தால், அதற்குப்பின் குழந்தைகளே பிறக்காதா?

    முதல் குழந்தைக்கே அப்பெயரை வைத்து, வேறு குழந்தைகள் பிறக்கவே வழியில்லாது செய்துவிட்டது தன் தவறோ?

    `நீங்க ஏம்பா மொதல்லேயே என்னை எச்சரிக்கலே?’ என்று அப்பாவைக் கேட்க நினைத்து, பின் வாயை மூடிக்கொண்டான்.

    `நான் சொல்ல வந்ததை நீ எங்கே முழுசா கேட்டே?’ன்னு அவன் மேலேயே பழியைத் திருப்புவார்!

    “ஸாம் என்கிற பேருதான் நாகரீகமா இருக்கு. இல்லேப்பா?” என்றான் கோபு.

    Share
  • அழியாத பிளாஸ்டிக்

    -நாகேஸ்வரி அண்ணாமலை

     

    அடுத்த அறுபது நொடிகளில், அதாவது ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதுமுள்ள மக்கள் பத்து லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களையும் இருபது லட்சம் பிளாஸ்டிக் பைகளையும் வாங்குவார்களாம். இவையெல்லாம் முற்றிலும் அழிந்து போவதற்கு ஆயிரம் வருஷங்களுக்கு மேல் ஆகுமாம். இது இப்படி நடந்துகொண்டிருக்க அவற்றில் சில மிகவும் நுண்ணிய துகள்களாக உடைந்து எண்ணிலடங்காத அளவில் கடலில் கலந்துவிடுகின்றன. இவை கடல் நீரிலும் குடிநீரிலும் நாம் தினமும் உபயோகிக்கும் உப்பிலும் காணப்படுகின்றன. மேலே குறிப்பிட்டவற்றோடு அவை போய்ச் சேரும் இன்னொரு இடம் மனிதனின் குடலுமாகும்.

    ஃபின்லாந்து, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, போலந்து, ரஷ்யா, பிரிட்டன், ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகளிலிருந்து எட்டு பேரின் மலத்தைச் சோதித்தபோது எல்லோர் மலங்களிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருந்தனவாம். இப்போதைக்கு மனிதனின் ஆரோக்கியத்திற்கு எந்தவித ஆபத்தும் இவற்றால் இல்லையென்றாலும் இன்னும் நிறையப் பேர்களைப் பரிசோதித்து விபரம் சேகரிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுசெய்திருக்கிறார்கள்.

    பிளாஸ்டிக் நுண்துகள்களால் மனிதனுக்கு ஆபத்து எதுவும் இல்லையென்று இப்போதைக்கு முடிவுசெய்யப்பட்டிருந்தாலும் எத்தனையோ மிருகங்கள் பிளாஸ்டிக்கினால் பாதிக்கப்படுகின்றன. கடல்வாழ் மீன்கள் எத்தனையோ இந்த பிளாஸ்டிக் பைகளை விழுங்கி உயிர் இழந்திருக்கின்றன.

    சமீபத்தில் பதினேழு பவுண்டு எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் ஒரு திமிங்கலத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக்கின் கெடுதல்கள் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். போப் பிரான்சிஸ், இந்த பூமி கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டது. இதை மாசுபடுத்தினால் கடவுளை நிந்திப்பதற்குச் சமம் என்கிறார். உலகில் எல்லோருக்கும் பிளாஸ்டிக்கின் இன்னொரு பக்கம் தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் அதன் உபயோகத்தால் பல வசதிகள் இருப்பதால் தொடர்ந்து உபயோகித்து வருகிறோம். சிலர் அது மறு சுழற்சி செய்யப்பட்டால் வீணாவதில்லை என்று நினைக்கிறார்கள். இது மிகவும் தவறு. மறுசுழற்சி செய்யப்படும்போது எத்தனை பொருள்கள் வீணாகின்றன. மேலும் ஒரு குறுகிய சதவிகிதமே மறுசுழற்சி செய்வதன் மூலம் திரும்பக் கிடைக்கிறது. அதனால் reduce, reuse, recycle என்ற மந்திரத்தை நாம் பின்பற்ற வேண்டும். முதலில் கூடியவரை பிளாஸ்டிக் பொருள்களின் (எல்லாப் பொருள்களையும் என்றுகூட நான் சொல்லுவேன்) உபயோகத்தைக் குறைக்க வேண்டும். இயற்கை வளங்களைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். அதற்குமேல் வாங்கித்தான் தீர வேண்டுமென்றால் அந்தப் பொருளைத் தாங்கிவந்த டப்பாக்களை மறுபடி உபயோகப்படுத்துங்கள். அதற்கு மேலும் தேவையென்றால் இவற்றை மறுசுழற்சி செய்யும் இடங்களில் சேர்த்துவிடுங்கள்.

    அமெரிக்காவில் இப்போது பால், தயிர், வெண்ணெய் ஆகிய எல்லாம் பிளாஸ்டிக்கில் அல்லது பிளாஸ்டிக்கோடு இன்னொரு பொருள் சேர்த்துச் செய்யப்பட்ட டப்பாக்களில்தான் கிடைக்கின்றன. அமெரிக்கர்கள் இவற்றையெல்லாம் உபயோகித்துவிட்டுக் கீழே தூக்கி எறிவதைப் பார்த்தால் என் நெஞ்சமெல்லாம் வலிக்கும். சில சூப்பர்மார்க்கெட்டுகளில் சொந்தப் பைகளைக் கொண்டுவருபவர்களுக்கு ஒரு பைக்கு ஏழு சென்ட் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த மாதிரி உத்திகள்கூட அதிகப் பலனை விளைவிக்கவில்லை. அமெரிக்காவில் எல்லா நகரங்களும் பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைக்கத் தங்களாலான முயற்சிகளைக் கடைப்பிடிக்க முயன்று வருகின்றன. எதுவும் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைத்த மாதிரி தெரியவில்லை.

    அமெரிக்காவில் எதையும் sterilize பண்ணுவதால் அமெரிக்கர்களுக்கு நோய்தடுப்புச் சக்தி மிகவும் குறைந்துபோய்விட்டது. யாரும் குழாயிலிருந்து தண்ணீர் குடிப்பதில்லை. எல்லாம் பாட்டில்கள்தான்.

    அமெரிக்காவில் வசித்தாலும் நாங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைத்து வருகிறோம். பார்ட்டிகளுக்குப் போனால் எங்கள் சொந்தப் பிளேட்டுகளையும் டம்ளர்களையும் எடுத்துச் செல்கிறோம். பிரயாணம் செய்யும்போதோ வேறு எங்காவது வெளியில் செல்லும்போதோ கையோடு உணவை எடுத்துச் சென்றால் திரும்ப உபயோக்கிக்கக் கூடிய பிளேட்டுகளில்தான் எடுத்துச் செல்கிறோம். அவற்றைத் திரும்பக் கொண்டுவந்து கழுவி உபயோகப்படுத்துகிறோம். பிளாஸ்டிக்கில் கொண்டுபோயிருந்தால் அங்கேயே குப்பைக் கூடையில் எறிவதற்கு வசதியாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் அப்படிச் செய்வதில்லை.

    அமெரிக்காவில் ஓட்டல்களில் நாம் உண்டதுபோக மீதியை வீட்டிற்கு எடுத்து வந்துவிடலாம். அதனால் நம்மை யாரும் குறைவாக நினைக்க மாட்டார்கள். இப்போது இது எல்லோரும் ஒப்புக்கொண்ட பழக்கமாகிவிட்டது. ஓட்டல் சர்வர்களே doggie bag-ல்போட்டுக் கொடுக்கவா என்று நம்மிடம் கேட்பார்கள். இப்படி மிஞ்சிய உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் பைகளுக்கு doggie bag என்று பெயர். (அமெரிக்கர்கள் தாங்கள் உபயோகிக்கும் உணவில் 40 சதவிகிதத்தை வீணடிக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விபரம் கூறுவது இன்னொரு விஷயம்.)

    ரொட்டித் துண்டுகளோடு சாப்பிடும் peanut butter என்னும் நிலக்கடலை வெண்ணெயைச் சூப்பர் மார்க்கெட்டுகளில் பாட்டில்களிலோ பிளாஸ்டிக் டப்பாக்களிலோ விற்கிறார்கள். இப்போது கடைகளில் தினமும் மெஷினில் அரைத்து விற்கிறார்கள். தினமும் தயாரிக்கப்படும் இதில் preservative எதுவும் சேர்ப்பதில்லை. ஆனால் இப்படித் தினமும் தயாரிக்கப்படுவதையும் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்கிறார்கள். பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைக்க எண்ணிய நாங்கள் எங்கள் வீட்டிலிருந்து கண்ணாடி பாட்டில்களைக் கொண்டுபோய் கடையிலேயே அரைத்து எங்கள் பாட்டில்களில் போட்டுத் தரச் சொன்னோம். நாங்கள் அப்படிக் கேட்டவுடன், “ஷெல்பில் நிறைய இருக்கிறது. அதில் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்கள். திரும்பத் திரும்ப உபயோகிக்கக் கூடிய பாட்டில்களையே நாங்கள் விரும்புவதால் பிளாஸ்டிக் வேண்டாம் என்றும் எங்கள் பாட்டில்களிலேயே மெஷினில் அரைத்ததைப் போடும்படியும் சொன்னோம். கடை ஊழியர்களுக்கு அது புரியவே இல்லை. பிளாஸ்டிக்கை விட கண்ணாடி பாட்டில் கனமாக இருக்கும், அதனால் எங்களுக்குக் கொஞ்சம் குறைவாகவே கடலை வெண்ணெய் கிடைக்கும் (பிளாஸ்டிக் டப்பாக்களில் கடலை வெண்ணெயை நிரப்பி அதன் எடையைக் கணக்கிட்டு விலையைக் குறிப்பார்கள்) என்று கூறிப் பார்த்தார்கள். நாங்கள், “அதனால் பரவாயில்லை. பாட்டில்களில் அதைப் பெறுவதுதான் எங்கள் முக்கிய நோக்கம்” என்று எவ்வளவோ கூறிப்பார்த்தும் அவர்களுக்கு விளங்கவில்லை. பின் கடை மேனேஜரை வரவழைத்துப் பல முறை அவருக்கு விளக்கிய பிறகு வேண்டா வெறுப்பாக எங்கள் பாட்டில்களில் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள்.

    சென்ற ஒரு வருஷமாகக் கடை ஊழியர்களுக்கு எங்களுடைய இந்தப் பழக்கம் பழகிவிட்டதால் போனவுடனேயே எந்தத் தகராறும் செய்யாமல் எங்கள் பாட்டில்களிலேயே கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கடை இப்போது மூடப்பட்டுவிட்டது. இன்னொரு கடையிலும் இதே மாதிரி அன்றன்றே செய்து விற்கிறார்கள் என்று அறிந்து அங்கு போய் வாங்க முயன்றோம். இந்தக் கடையிலும் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் அதற்குச் சொன்ன காரணம் எங்களிடம் சிரிப்பை வரவழைத்துவிட்டது. அவர்கள் கொடுக்கும் பிளாஸ்டிக் டப்பாக்கள் சுத்தமானவையாம் (sterilized); எங்கள் பாட்டில்கள் சுத்தம் செய்யப்படாதவையாம் (unsterilized); இதனால் எங்களுக்கு ஏதாவது உடல் உபாதை ஏற்பட்டு நாங்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்துவிடுவோமாம்! “எங்கள் பாட்டில்களில் நீங்கள் கொடுத்தாலும் நாங்கள் உங்கள் மீது வழக்குப் போட மாட்டோம் என்று எழுதிக் கொடுத்தால் எங்கள் பாட்டில்களில் நிரப்பிக் கொடுப்பீர்களா?” என்று கேட்டும் அந்தப் பகுதியில் இருந்த ஊழியர் ஒத்துக் கொள்ளவில்லை. பின் கடை மேனேஜரிடம் கேட்டு, அவரிடம் நிறைய பேசி அவரை இதற்குச் சம்மதிக்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. கடைசியாக அவர் சம்மதித்தாலும் கடலை வெண்ணெயின் எடையையும் விலையையும் கடையின் பெயரையும் குறிக்கும் ‘ஸ்லிப்பை’ பாட்டிலின் மேல் ஒட்டக் கூடாது என்று கூறிவிட்டார்கள். அந்த ‘ஸ்லிப்பை’க் கையில் வைத்திருந்து எல்லாச் சாமான்களுக்கும் விலைபோட்டு மொத்த பில்லையும் தயாரிப்பவரிடம் அதைக் காட்டிவிட்டு அதைக் கீழே போட்டுவிடுமாறு கூறினார்கள். எங்கள் பாட்டில்களில் அவர்கள் போட்டுக் கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இருக்கக் கூடாதாம்!

    சுத்தம் என்ற பெயரில் அமெரிக்கா எவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்று பாருங்கள்!

    அமெரிக்கா இருக்கட்டும். இப்போது தமிழ்நாட்டில் 2019 ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் உபயோகத்திற்குத் தடை வந்திருப்பதாக அறிந்தோம். ஊழலுக்கு ஒரு உதாரணமாகத் திகழும் தமிழ்நாட்டில் இந்தத் தடை எப்படி அமுல்படுத்தப்படுகிறது என்றும் மக்கள் எவ்வளவு தூரம் ஒத்துழைக்கிறார்கள் இருக்கிறார்கள் என்றும் அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 14

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை

     

    குறள் 131:

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்

    ஒழுக்கம் அத உடையவங்கள ஒசத்தியா காட்டுததால அத நம்ம உயிர விட மேம்பட்டதா நெனைச்சி போற்றுதோம்.

    குறள் 132:

    பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
    தேரினும் அஃதே துணை

    எதனாலயும் அழிஞ்சி போவாத ஒழுக்கத்த விரும்பி காத்துக்கிடணும். ஏம்னா எல்லா அறத்திலயும் வாழ்க்கைக்கு தொணையா நிக்குதது ஒழுக்கம் மட்டுந்தான்.

    குறள் 133:

    ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்

    ஒழுக்கம் ஒடையவரா வாழுதது தான் ஒசந்த குடிப்பிறப்புக்கு பெருமை. ஒழுக்கம் தவறினவங்கல்லாம் இழிந்த குடில பொறந்ததாவே நெனைக்கப்படுவாங்க.

    குறள் 134:

    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

    பார்ப்பான் தான் கத்துகிட்ட வேதத்த மறந்தாக்கூட பொறவு இன்னொருக்க படிச்சிக்கிடலாம். ஆனா அவன் பொறந்த ஒசந்த குலத்துக்குண்டான ஒழுக்கத்திலேந்து பிசகினாம்னா குலத்திலயும் தாழ்ந்துட்டதாவே நெனைப்பாங்க.

    குறள் 135:

    அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு

    பொறாமைல புழுங்குதவனுக்கு செல்வம் இல்லாம போகுதது போல ஒழுக்கம் இல்லாதவனுக்கு ஒசந்த வாழ்க்க இல்லாம போவும்.

    குறள் 136:

    ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் படுபாக் கறிந்து

    ஒழுக்கம் தவறினா குத்தம் கொற உண்டாவும்னு அறிஞ்சி நெஞ்சுறுதி இருக்க படிச்ச பெரியவங்க எத்தன சங்கடம் வந்தாலும் ஒழுக்கமா நடந்துகிடுவாங்க.

    குறள் 137:

    ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவ ரெய்தாப் பழி

    ஒழுக்கத்தினால ஒருதங்களுக்கு ஒசத்தி உண்டாவும். ஒழுக்கம் இல்லாதாவங்கள வேண்டாத பழி பாவம் அண்டும்.

    குறள் 138:

    நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும்

    நல்லொழுக்கம் சந்தோசமா நல்லா வாழுததுக்கு தொணையா நிக்கும். தீயொழுக்கம் எப்பமும் தீராத துன்பத்த மட்டுமே கொடுக்கும்.

    குறள் 139:

    ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்

    மறதியால கூட தீய சொல்ல தங்க வாயால சொல்லுதது ஒழுக்கம் ஒடையவங்களால ஏலாது.

    குறள் 140:

    உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
    கல்லா ரறிவிலா தார்

    ஒலகத்து ஒசந்தவங்க ஏத்துக்கிட்ட ஒழுக்கம் ங்குத கொணத்தோட வாழ கத்துக்கிடாதவங்க எத்தன படிச்சிருந்தாலும் புத்தியில்லாதவங்க தான்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • இந்த வார வல்லமையாளர் (300) – ‘கின்னரக் கலைஞர்’ சீர்காழி இராமு

    இந்த வார வல்லமையாளர் எனக் ‘கின்னரக் கலைஞர்’ சீகாழி ராமுவை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. கின்னரம் என்பது தமிழரின் மிகப் பழைய நரம்பிசைக் கருவி. தமிழ்நாட்டில் இக்கருவியை வில்லகம் (violin’s bow) கொண்டு மீட்டும் தமிழிசை மரபு அழிந்தொழிந்தது. கின்னரத்தின் இன்றைய பெயர் ‘கொட்டாங்கச்சி வயலின்’. இந்த அரிய கலையைக் கற்று, தமிழ்நாட்டில் மேடைகளிலும், பிளாட்பாரங்களிலும் இசைத்த சீர்காழி ராமு அண்மையில் மறைந்துவிட்டார். அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது கின்னர வாசிப்புகள் தேடப்பெற்று காணொளிகளும், கேட்பொலிகளும் (ஆடியோ) இணையத்தில் வலையேற வேண்டும். அவரது 8 மக்களிடமோ, நண்பரிடமோ ராமுவின் கின்னர இசைப் பதிவுகள் கட்டாயமாய் இருக்கும். 10 பேராவது ஒவ்வொரு பழைய முழவு, துளை, நரம்பு, கஞ்சம் என்னும் சங்கீதக் கருவிகளைக் கற்று வாசிக்கும் திறன் பெறவேண்டும். சீகாழி தமிழிசையின் தலைமை ஸ்தானம். சம்பந்தர் பிறந்த ஊர். கர்நாடக மூவருக்கும் முன்பிருந்த தமிழிசை மூவர்களும் வாழ்ந்த ஊர். அவர்களில் மூத்தவர் 16ஆம் நூற்றாண்டினர் ஆகிய முத்துத்தாண்டவர் என்னும் இசைவேளாளர். அவர்தான் தில்லைக் கூத்தபிரானை முதன்முதலில் கீர்த்தனை என்னும் வடிவை அமைத்துப் பாடித் தொழுதவர் (ஆதாரம்: மு. அருணாசலம், திருச்சிற்றம்பலம் (மயிலாடுதுறை) எழுதிய நூல்கள்). ராமு என்ற இசைவாணரின் எளிய வாழ்வினைப் பற்றி அவரது நண்பர் எழுதிய ‘தீக்கதிர்’ கட்டுரையை முழுமையாகத் தருகிறேன். பலரும் அறிந்துகொள்ள வேண்டியவர், குடும்பத்தாருக்கும் உதவலாம். கின்னரத்தை ராவணஹஸ்தம் என்றும் அழைப்பதுண்டு. ராவணன் கின்னரம் தன் நரம்பால் செய்து மீட்டியதைத் தேவாரம் பாடும். கின்னரம் வாசிக்கும் இராவணனைக் காளமேகப் புலவர் பூசணிக்கும், சிவலிங்கத்துக்குமான சிலேடை  வெண்பாவில்
    அழகுறப் பாடியுள்ளார் [1].

    ஜோயப் போர் (Dr. Joep Bor) போன்ற இசையியல் அறிஞர்கள் நரம்பிசைக் கருவிகளைத தேய்த்து வாசிக்கும் வில்நாண் உடைய ‘வில்லகம்’ பற்றி இன்னும் சரியாக ஆராயவில்லை என்றே தோன்றுகிறது. அவர் போன்றவர்கள் இந்த வில்லகக்கருவி கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் முன் கிடைக்கவில்லை என்கின்றனர். ஆனால் தமிழகத்தின் சிவாலயங்களில் – குடைவரைகள், கட்டுமானக் கோவில்கள் இன்னும் பார்க்கவில்லை. திருச்சி டாக்டர் இரா. கலைக்கோவன், அவரது மாணவி அர. அகிலா எழுதிய கட்டுரைகளில் சிரட்டைக் கின்னரி கொண்ட சிற்பங்களைப் பற்றி நிறைய 20 ஆண்டு முன்னரே எழுதியுள்ளனர். நடேசப் பெருமானின் கீழே கின்னரம் வாசிக்கும் சிவ கணங்கள் உள்ள முக்கியக் குடைவரையாக திருமலைப்புரம் என்னும் 7-ஆம் நூற்றாண்டின் பாண்டியர் குடைவரையைக் குறிப்பிடலாம். 8-ஆம் நூற்றாண்டிலே காஞ்சிபுரத்தில் இராஜசிம்மேசுவரம் என்னும் முதல் கற்றளியில் உள்ள கின்னரம் வாசிக்கும் பூத கணங்கள் இரண்டு இடங்களில் இருப்பது சிறப்பு. சோழர் காலப் படைப்புகள் என்று பார்த்தால் சுமார் 30 சிரட்டைக் கின்னரங்கள் தேறும் எனலாம். திருமலாபுரம், காஞ்சியில் உள்ள மூன்றுமே வில்லால் மீட்டும் சிரட்டைக் கின்னரி தான். சிரட்டை என்பது கொட்டாங்கச்சி. இதற்கு பதிலாகக் கச்சம் என்ற ‘நட்சத்திர ஆமை’ ஓட்டையும் பயன்படுத்தல் உண்டு. அந்தவகை நரப்பிசைக் கருவி கச்சபி என்றும், சரஸ்வதி கையில் உள்ளது இந்தக் கச்சக் கின்னரி என்றும் இந்திய சங்கீத நூல்கள் குறிப்பிடுகின்றன. பிற்காலத்தில் எல்லாவகை வீணைகளும் இந்தக் கின்னரத்தின்றும் பிறந்ததே. கூர்மவீணை என்றும், கூர்மி என்றும் குறிப்பிடும் ஆமையாழ் தோன்றி மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரபாப்/ரெபெக் என்ற பெயரில் இந்தியாவில் இருந்து பரவிற்று. இதே போல, தும்புரு யாழ் என்பதும் பரவியது. ரபாப்/ரெபெக் மத்திய கிழக்கில் இருந்து இத்தாலி சென்று ஐரோப்பாவின் வயலினாக உருவெடுத்தது. பாலுஸ்வாமி தீட்சிதரும், தஞ்சை நால்வரில் வடிவேலுவும் திரும்பவும் கர்னாடக சங்கீதத்திற்கு வயலினை பிரிட்டிஷார் காலத்தில் மீளறிமுகம் செய்கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியும், சரஸ்வதி வீணையைவிடச் சிறிதானதாகவும் இருப்பதால் கச்சேரிகளில் வயலின் சிலமாற்றங்களுடன் இடம்பெறலாயிற்று.

    சிரட்டைக் கின்னரி (கொட்டாங்கச்சி வயலின்):
    https://www.youtube.com/watch?v=BQQ2lSbdotY
    https://www.youtube.com/watch?v=5Sa_SStKP40
    https://www.youtube.com/watch?v=D52s7LlJwiA
    https://www.youtube.com/watch?v=NOfUoSOqHnU
    https://www.youtube.com/watch?v=48TR0tBPAxk
    https://www.youtube.com/watch?v=zfoF_WAQEkw
    https://www.youtube.com/watch?v=gJFRKZ-Q2Uc

    திருக்கோவில்களில் தேவாரம் கின்னரம் கொண்டு இசைக்கப்பட்டதாகத் தெரிகிறது. கின்னரி என்னும் இந்த Pre-violin நரம்புக் கருவிக்குச் சங்க இலக்கியத்தில் இருந்து மூன்று எடுத்துக்காட்டுகள் தருகிறேன். இவை இல்லாமல்தான் மேலையாசிரியர் இந்திய இசைக்கருவிகள் பற்றி இதுகாறும் ஆய்ந்துளர்.

    (1) பெரும்பாணாற்றுப்படை 493-495:
    இன்சீர்க்
    கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல்
    மஞ்ஞை ஆலும் மரம்பயில் இறும்பின். – பெரும்பாணாற்றுப்படை 493-495.

    கின்னரம் வாசிக்கும் ஆந்தை ஜோடிகளை நிறைய அர்ஜுனன் தபசு சிற்பத்தில் மாமல்லையில் காணலாகும். பல்லவர் காலச் சிற்பங்கள். அதற்கு முன்னரே வரும் சங்கச் சான்று மேலே காணும் பெரும்பாண் வரிகள். இனிய தாளத்துடன் கின்னர மிதுனங்கள் கின்னரியாழை மீட்ட, அதற்கேற்றபற்றபடி மரங்கள் அடர்ந்த சோலையில் மயில்கள் நடமாடும். ஆங்கே அச்சுறுத்தும் அணங்கு என்னும் தெய்வங்கள் வாழும். கின்னரம் வில்லகவிரல் என்னும் நாணுடை வில்லாலோ, பாணன் கையின் விரலாலோ மீட்டலாம்.

    (2) பெரும்பாணாற்றுப்படை 180-182
    குமிழின் புழற் கோட்டுத் தொடுத்த மரல் புரிநரம்பின்
    வில்யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும்பாண்.

    மரல் கயிறாகிய விரலாலே தெறித்து வாசிக்கும் (நச்சினார்க்கினியர் உரை). இங்கே விரல் என்பது அதன் தொழிலால் கயிறுக்கு ஆகி வந்த உவமையாகு பெயர்.

    பெரும்பாணாற்றுப் படையின் பழைய உரையில் கை விரலால் மீட்டுதற்குப் பதிலாக வில்லில் பொருத்திய மரல்கயிறு ஆகிய விரலாலே தெறித்து வாசிப்பது என்பதால் கின்னரத்தை வில்லால் மீட்டினர் என்பது அறியலாகும். கின்னரம் வயலின் போல இருப்பதும், மிகப் பழையதான ஒரு வில்லிசைக் கருவி. வில்லிசைக் கருவிகளே (Bowed Chordophones) உலகத்திற்கு  இந்தியாவின் கொடை. அதில் கின்னரம் பற்றி முவ்விடங்களில் (முத்தமிழ் போல!) சங்கப் புலவர்கள் பதிவு செய்திருப்பதும், தமிழகத்தின் சிற்பக்கலை தோன்றுகிறபோதே கின்னரம் சிவகணங்கள் கையில் காட்டுவதும் அருமையிலும் அருமை. எங்கே பார்த்தாலும், காரைக்கால் அம்மை கைத்தாளத்துடன் இருப்பார். அபூர்வமாக, திருப்புகலூரில் சிரட்டைக் கின்னரியுடன் இருப்பதை முனைவர் இரா. கலைக்கோவன் தம் ஆய்வேட்டில் எழுதியுள்ளார்.

    இதனைப் பாண்டியர், பல்லவர் சிற்பங்களில், சிவகணங்களில் காட்டியுள்ளனர் என்பது வயலின் வரலாற்றின் மேலையுலக ஆய்வாளர்கள் இன்னும் அறியாத செய்தி ஆகும். இந்த இடத்தில் செங்கோட்டியாழ், கருங்கோட்டியாழ் என்பன பற்றிச் சில சொற்கள் குறிப்பிடல் பொருந்தும். செங்கோடு என்பது வளைவில்லாத வீணாதண்டம். இதனை stick zither என்பர் இசையியலார். கருங்கோடு என்பது எருமையின் கொம்பு எனச் சங்க இலக்கியம் காட்டும். எருமைக் கொம்பைப் போல் வளைந்த கோடு உடைய யாழ் என்பது கருங்கோட்டியாழ். வில் போன்று வளைந்த தண்டம் உடையது கருங்கோட்டியாழ் (வில்யாழ்). விபுலானந்தர் காட்டிய மகரயாழ், சகோட யாழ் போன்றவை காண்க. இவை harp எனப்படுபவை.

    பெரும்பாணாற்றுப்படையிலே “விரல்” என்பது ஓர் இசைநுட்பக் கலைச்சொல். இதனைக் குறுந்தொகை 370 கொண்டும் வில்லகவிரல் என்பது Violin’s bow-with-cord என்பது அறியலாம்.

    (3) குறுந்தொகை 370

    (“பரத்தை தலைவனைப் புறம்போகாவாறு பிணித்துக் கொண்டாள்” என்று தலைவி கூறியதாக அறிந்த பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்ப, “தலைவன் ஈண்டு இருப்பின் அவனோடு பொருந்தியும் அவன் பிரியின் யாம் தனித்தும் இருப்பேம்” என்று கூறியது.)

    பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை
    வண்டுவாய் திறக்குந் தண்டுறை ஊரனொடு
    இருப்பின் இருமருங் கினமே கிடப்பின்
    வில்லக விரலிற் பொருந்தியவன்
    நல்லகஞ் சேரி னொருமருங் கினமே.
    – வில்லக விரலினார்.

    வில்லின் நாணினால் வாசிக்கும் கின்னரக் கருவியைப் பற்றிய அரிய பாடல் இது. முதலில் ஒன்று சொல்லவேண்டும்: அண்மைக்கால உரையாசிரியர்கள் இதனைப் பகைவனொடு உடற்றும் போரில் அம்பு எய்து கொல்லும் வில் என்று எடுத்த உரை செய்துள்ளனர். அது புறத்துறை ஆதலின், அகப்பாடலுக்கு போர்வில் உவமையாக வாராது என்பது திண்ணம்.

    மிகச் சிறிய பாட்டாக தமிழிசையின் உலகப் பங்களிப்பைத் தருகிறார் இந்தச் சங்கச் சான்றோர். Red Earth and Pouring Rain என்ற ஏ. கே. ராமாநுஜனின் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு வரியால் செம்புலப்பெயல் நீரார் பாடல் உலகமெல்லாம் பரவியது. வட இந்தியரான விக்ரம் சந்திரா இத்தலைப்பில் நாவல் செய்தார். தமிழில் உவமையால் பெயர்பெற்ற புலவர்கள் பலர். “வில்லக விரலினார்” என்பது சீகாழி ராமு போன்றோர் இசைத்த கின்னரக் கருவியின் வில்லின் நாணால் பெற்ற பெயர் ஆகும். பழைய தமிழிசைக் கருவி என்பதால் இவ்வரிய பாடலைச் சங்கத் தொகைப்பாட்டாகத் தெரிந்தெடுத்துச் சேர்த்துள்ளனர். நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றவர்களின் உரை குறுந்தொகைக்குக் கிட்டியிருந்தால் கின்னரம் என்னும் செங்கோட்டியாழ், அதை மீட்டும் வில்லகம் என விளக்கியிருப்பர். ஆனால், குறுந்தொகைக்குப் பண்டைய உரை ஏதும் கிடைக்கவில்லை.

    தமிழிசைக் கருவி உவமையாகப் பயன்படுத்துவதால், முன்னுரையே இசையின் தொடர்பாக அமைத்துள்ளார் சங்கக் கவிஞர். ஆம்பல் மலர் எங்கும் போவதில்லை. வண்டு தான் ஆம்பலைத் தேடி வருகிறது. அதுபோல், பரத்தை தன் நல்லகத்தில் தான் இருக்கிறாள். அவளைத் தேடி வந்து துய்க்கிறான் தலைவன் என்பது உள்ளுறை உவமம். ஆம்பல் என்பது மருதத் திணையின் பண். தற்காலச் சுத்த தன்யாசி ராகம். சீகாமரம் (ஸ்ரீகாமரம்) என்பது தேவார காலப் பண்ணின் பெயர். ‘காமரு தும்பி காமரம் செப்பும்’ (சிறுபாண். 77). ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி (சிலம்பு). ‘ஆபெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ’ (அகம்).

    பாண்வாய் வண்டு நேர்திறம் பாடக்
    காண்வரு குவளை கண்மலர் விழிப்ப (சிலம்பு)

    பொய்கையிலே உள்ள ஆம்பலினது அழகிய நிறத்தையுடைய கொழுவிய அரும்பில் வண்டுகள் இதழைத் திறக்கும் தண்ணிய நீர்த்துறைகளை உடைய ஊருக்கு உரியனாகிய தலைவனோடு நாம் இருந்தால் இரண்டு உடலையுடையேம்; இது பகல் வேளையிலே எனலாம். அவரோடு துயின்றால் எம் இல்லத்தில் கின்னரத்தின் செங்கோட்டுடன் இணையும் வில்லக-விரல் ( violin’s bowstring) போல ஓர் உடலை யுடையேம்.

    முடிபு: ஊரனொடு ஊரார் இருப்பின் இருமருங்கினம்; இரவில் கிடப்பின் பொருந்தி ஒரு மருங்கினம். இப்பாடலில் தமிழிசையின் மூத்த கருவிகளில் ஒன்றாகிய கின்னரம் என்னும் நரப்பிசைக்கருவி சொல்லப்பட்டுள்ளது. வில்லகவிரல் என்பது ஒரு இசைத்துறைக் கலைச்சொல் (technical vocabulary). வில்லகவிரல் = Kinnari’s bow-string. கையினால் மீட்டும்போது அது கையக விரல். இதனைப் பாரதியார் “வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு” என்று சரசுவதி வீணை வாசிப்பைப் பேசுகிறார். 2000 ஆண்டுக்கு முன் இருந்த வில்லகவிரலினார் கின்னரத்தை மீட்டும் வில்நாணை (=வில்லக விரல்) உவமையாகச் சொல்லியுள்ளார். வில்லகவிரல் என்பது உவமையாகுபெயராய் வில்நாணைக் குறிப்பது. இதனை பெரும்பாணாற்றுப்படையின் பண்டை உரையினால் அறிக. அற்புதமான தமிழிசை வரலாறு காட்டும் சங்கச் செய்யுள் இஃது. வில்லகவிரலால் கின்னரம் மீட்டும் பாணனின் 1810-ஆம் ஆண்டு ஓவியம் இணைத்துள்ளேன்.

    நா. கணேசன்
    [1] கின்னரம் ~ ராவணஹஸ்தம் (Pre-Violin History) https://groups.google.com/d/msg/santhavasantham/aMK2Pa10Wvc/50g4ci83CQAJ

    https://theekkathir.in/2018/12/03/ஒரு-கொட்டாங்கச்சி-வயலின்/
    ஒரு கொட்டாங்கச்சி வயலின் கண்ணீர் வடிக்கிறது…!
    ===ந.காவியன்=== இசையால் புகழ்பெற்ற நகரம் சீர்காழி… இதுதான், சைவத் திருமுறை 12 ல் மூன்று திருமுறைகளைத் தன் தேவாரப் பதிகங்களால் நிறைவு செய்த திருஞான சம்பந்தரும், தமிழிசை மூவரும், இசைமாமணி சீர்காழி கோவிந்த ராஜனும் இன்னும் பல நாதஸ்வரக் கலைஞர்களும் தவில் கலைஞர்களும் இசைக் கலைஞர்களும் தோன்றிய இன்னிசை பூமி. இங்குதான் 72 ஆண்டுகளுக்கு முன்பு ராமு பிறந்தான். பின்நாளில் இவன்தான் கொட்டாங்கச்சி வயலின் சீர்காழி இ.எம்.ராமுவாகப் பரிணாமம் பெற்றவன்.

    சீர்காழி நகரையொட்டிய ஊழியக்காரன் தோப்புப் பகுதியில் பூந்தோட்டம் தெருவில், ஒரு தலித்துக்குரிய வீடு எப்படி இருக்க வேண்டுமோ அப்படிப்பட்ட ஒரு குடிசையில் தான் ராமு பிறந்தான். கல்வி, தொடக்கப் பள்ளியைத் தாண்ட வில்லை. அப்பா கூலி வேலை செய்பவர். ராமுவும் படிப்பை விட்டுவிட்டு, அப்பாவோடு விறகு வெட்டுதல், செருப்புத் தைத்தல் போன்ற வேலைகளைச் செய்து வந்தான்…

    கர்நாடகாவில் அறிமுகமான வயலின்
    அப்போது, கர்நாடகா கோலார் தங்கச் சுரங்கத்திலும் மற்ற பகுதிகளிலும் தமிழகத்திலிருந்து பலர் வேலை பார்க்கச் சென்றனர். ராமுவும் அங்கு சென்று கிடைத்த வேலைகளைப் பார்த்து வந்தான். வாரத்தில் ஒருநாள் பக்கத்து ஊரில் சந்தை கூடும். அப்படி ராமு சென்றபோது, ஒருவன், கொட்டாங்கச்சி வயலின்களை வைத்துக் கொண்டு, ஒரு வயலினில் மிக இனிமையாக ஒரு ராகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். வேடிக்கை பார்த்த ராமு, அந்த இசையில் மயங்கிப் போய், காசு கொடுத்து ஒரு கொட்டாங்கச்சி வயலினை வாங்கிக் கொண்டு, தான் தங்கியிருந்த பகுதியில் ஆசையோடு அந்த வயலினை வாசிக்க ஆரம்பித்தான்.

    ராகமும் வரவில்லை, எந்த சப்தமும் வரவில்லை. அடுத்த வாரம் அந்தச் சந்தைக்குச் சென்று, வயலின் விற்பவனைப் பார்த்து, ‘‘நீ மட்டும் இசை வாசிக்கிறாய், என்னுடைய வயலினில் எதுவும் வரவில்லையே’’ என்று சொன்னதற்கு, ‘‘இதில் பல வாரங்கள் பழக வேண்டும், ஒரு வித்வானிடம் போய் வாசிக்கக் கற்றுக் கொள்’’ என்றான் வயலின் விற்பவன்.

    வயலின் வசப்பட்டது
    எப்படியோ ஒரு வயலின் வித்வானைக் கண்டுபிடித்து, அந்தக் கொட்டாங்கச்சி வயலினக் கொடுத்து, கற்றுக் கொடுக்கச் சொன்னான் ராமு. அவருக்கோ அதை வாசிக்கத் தெரியாது. இருந்தாலும், தனது வயலின் அனுபவத்தில் நரம்பில் எப்படி விரல்களை வைப்பது, வாசிப்பது எனச் சொல்லி, சில ராகக் குறிப்புகளையும் கொடுத்தார் வித்வான். அவ்வளவுதான், எல்லாவற்றையும் மறந்து, இரவும் பகலுமாக அந்தக் கொட்டாங்கச்சி வயலினோடு போராடிக் கொஞ்சம் கொஞ்சமாக அதில் ராகம் வாசிக்கக் கற்றுக் கொண்டான் ராமு.

    அப்போது ராமுவுக்குக் கர்நாடகாவில் இருப்புக் கொள்ளவில்லை. தான் கொட்டாங்கச்சி வயலினில் பாட்டுகள் வாசிப்பதைத் தன் ஊரில், தன் நண்பர்களுக் கெல்லாம் காட்ட வேண்டும் என்று சீர்காழிக்கு வந்தான் ராமு. சில நாட்களில் தந்தையும் இறந்து விட்டார்.

    சோறுபோட்ட கொட்டாங்கச்சி வயலின்
    கூலி வேலை செய்வதில் அவனுக்கு நாட்டமில்லை. சாப்பாட்டுக்கு வழி? சீர்காழி சந்தைப்பேட்டையில் ஒரு முஸ்லிம் பக்கிர்சா, தப்(ஸ்) அடித்துக் கொண்டு, கெளரவமாகக் காசுகள் சேர்ப்பதைப் பார்த்து, அவரோடு ஒரு சிறுமியும் உடன் இருப்பதைக் கண்டு அவள் அவரின் மகள் என்பதைத் தெரிந்து கொண்டான். அவனும் தனது வயலினை எடுத்துக் கொண்டு வந்து, சீர்காழி சந்தையில் வாசித்தான். உணவுக்குக் காசுகள் சேர்ந்தன.

    அவ்வளவுதான், சீர்காழி சந்தை, பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் என்று வாசிக்க ஆரம்பித்தான், அந்த பக்கிர்சா, ராமுவிடம் ஒரு யோசனை கூறினார், ‘‘இப்படி நாம் தனித் தனியாக வாசிப்பதைவிட, நீ வயலின் வாசிக்க நான் தப்ஸ் வாசித்தால் இன்னும் கூட்டம் கூடும் இல்லையா?’’ என்றார். நல்ல யோசனையாக இருக்கிறதே என்று சம்மதித்த ராமு, அதுமுதல் இருவரும் சேர்ந்து வாசிக்கத் தொடங்கினார்கள். இந்த இசைப் பயணம் பக்கத்து ஊர்களுக்கும் செல்ல ஆரம்பித்தது.

    மும்தாஜோடு பயணம்
    ஒருநாள், சீர்காழி பேருந்து நிலையத்தில் அந்த பக்கிர்சா ராமுவிடம் கூறினார், ‘‘தம்பி, நான் அறிந்தவரை நீ நல்ல பையனாக இருக்கிறாய். இந்தப் பெண் மும்தாஜ் என்னுடைய மகள், தாய் இறந்துவிட்டாள். எனக்கு இப்போது இவள் கவலையாகத்தான் இருக்கிறது. நான் இன்னும் எத்தனை நாள் இருப்பேன் என்று தெரியாது. இதோ, என் மகளை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ வாழ வை’’ என்று கூறி விட்டு, ஒரு பேருந்தில் ஏறிச் சென்றவர்தான், அதற்குப் பின் அவர் வரவே இல்லை.

    14 வயதுடைய பெண்னை அழைத்துக் கொண்டு, ராமு, கர்நாடகா சென்றான், பிறகு பம்பாய் சென்றான். பம்பாய் ரயில்வே ஜங்ஷன் பெஞ்சில் இருவரும் அமர்ந்திருக்கும் போது, பெஞ்சில் ரத்தச் சிவப்பைப் பார்த்து அதிர்ந்து போய்,பின்னர், மும்தாஜ் வயதுக்கு வந்து விட்டதைப் புரிந்து கொண்டு, பைப்பில் தண்ணீர் கொண்டுவந்து பெஞ்சைக் கழுவி, மும்தாஜையும் குளிப்பாட்டி வைத்துவிட்டு, வெளியே ஓடிப்போய் புதிய உடைகள் வாங்கி வந்தான்.

    மும்தாஜூடன் இருப்பதைக் காலிகள் ஒரு மாதிரியாகப் பார்ப்பதை உணர்ந்து, பெண்ணுடன் ரயிலேறி தில்லிக்குச் சென்றான், ராமுவுக்கு இந்தியில் அப்போது பிரபலமான ஆராதனா, பாபி, நாகின் திரைப்படப் பாடல்களின் மெட்டுகள் நன்கு தெரியும். தில்லி மாநகரில் இந்திப் பாடல்களின் மெட்டுகளை அற்புதமாக வாசித்துக் கொஞ்ச காலம் வாழ்க்கையை ஓட்டினான். இனியும் அங்கிருந்தால் பாதுகாப்பில்லை என்பதால், தமிழகத்திற்கு வந்து, பின் தனது ஊரான சீர்காழிக்கு வந்தான்.

    கலை இலக்கிய இரவு – கண்டெடுத்த கலைஞன்
    மும்தாஜ் ‘விஜயா’ என்று மாற்றப்பட்டாள். தொடர்ந்து ராமு, சந்தைகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் வயலின் வாசித்துக் காசுகள் சேர்த்துத் தன் மனைவியோடு வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டி வருகையில், குழந்தைகள் பிறந்தனர். ராமுவிற்கு 5 பெண்கள், 3 ஆண்கள்.
    அப்பொழுது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளராக நாகைமாலி இருந்தார். 1996-ஆம் ஆண்டு, கீழ்வேளூரில் கலை இலக்கிய இரவு நடைபெற்றது. சந்தைப் பேட்டைகளிலும், பேருந்து நிலையங்களிலும் ராமு என்ற கலைஞர்
    கொட்டாங்கச்சி வயலின் வாசித்து வருகிறார். அந்த வீதிக் கலைஞனை நம் கலை இலக்கிய இரவில் அறிமுகப்படுத்தினால் என்ன? என ஒரு தோழர் சொல்ல, உடனே, நாகைமாலி ராமுவைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கீழ்வேளூர் கலை இலக்கிய இரவில் மேடையில் ஏற்றினார்.

    தமிழகமெங்கும்
    அதன்பின், தமிழகமெங்கும் நடைபெறும் கலை இலக்கிய இரவுகளில் மேடையேறிய ராமுவிற்குப் புகழ் பெருகியது. சீர்காழி ராமு இல்லாமல் கலை இலக்கிய இரவுகள் இல்லை என்னும் நிலை ஏற்பட்டது. இப்படி, வீதிகளில் தன் இசையை விற்று ஒரு இரவலராக வாழ்ந்த ராமுவைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கெளரவமான ஒரு மேடைக் கலைஞராக மாற்றியது.

    கலைஞனும் வறுமையும்
    ஆண்டு முழுவதும் கலை இலக்கிய இரவுகளும் நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. 7 பிள்ளைகள், மனைவி… சோறு போடவேண்டும். மீண்டும் வெட்கம் பாராது, மக்கள் கூடும் இடங்களில் ராமு வயலின் வாசிக்க ஆரம்பித்தார்.
    கோயில் நிகழ்ச்சிகள் மற்றும் பல இல்ல விழா நிகழ்ச்சிகளுக்கு ராமுவை வரவழைத்து, வாசிக்க வைத்த பின் சீர்காழிக்குப் போக்குவரத்துச் செலவுக்கு மட்டும் பணம் கொடுத்து அனுப்பிய கொடுமைகளும் நடந்தன.

    மனைவி விஜயாளுக்கு (மும்தாஜ்)க் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்பார்வை பறிபோனது. சிகிச்சை செய்யக்கூடப் பணம் இல்லை. ராமுவும் அடிக்கடி நோய்வாய்ப் பட்டார். பார்வை இழந்த மனைவியோடு பிற ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்தார்.

    கலைஞனுக்குக் கிடைத்த கைத்தட்டல்கள்
    நாகைக் கலை இலக்கிய இரவில் நான் தொகுப்புரையாற்றுவேன், ராமு மேடை ஏறும்போது, பெரிய கைத்தட்டல்கள் கிடைக்கும். சில பாடல்களை மிக அற்புதமாக வாசிப்பார். அப்படிப்பட்ட பாடல்களாகக் கூறி வாசிக்கச் சொல்லுவேன். ‘‘மச்சானப் பாத்தீங்களா?’’ ‘‘கொட்டப் பாக்கும்’’, ‘‘உன் கண்ணில் நீர் வழிந்தால்…’’ ‘‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’’ போன்ற பாடல்களைத் துவக்கும் போதே, ஆர்வலர்கள் பலத்த கைத்தட்டல்களை வழங்கி உற்சாகமூட்டுவார்கள்.

    ஈடில்லாக் கலைஞன்
    ஈடு இணையற்ற அந்த இசைக் கலைஞனுக்கு திடீரென மூளையில் கட்டி ஏற்பட்டுப் பேசமுடியாமல் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். இரண்டு ஆண்டுகளாக கலை இலக்கிய இரவிற்கு ராமுவை அழைக்க முடிய வில்லை. ஆர்வலர்கள் ‘ஏன் சீர்காழி ராமு வரவில்லை?’ என்று கேட்க ஆரம்பித்தார்கள். அடிக்கடி, சீர்காழி தமுஎகச தோழர்கள் அவர் வீட்டுக்குச் சென்று பார்த்து வருவார்கள்.

    அப்படி ‘நன்னானே’ சு.ரமேஷ் பார்த்துப் படுக்கையில் அவரைப் படம் பிடித்து வந்து எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார். அதைப் பார்க்கச் சகிக்கவில்லை. எப்படிப் பட்ட கலைஞன்! மேடையேறி தனது கொட்டாங்கச்சி வயலினை எடுத்துக் கம்பீரமாக நின்று இசையமுதைக் கொட்டியவர்…

    இறுதிப் பயணம்
    உடல்நிலை மிகவும் மோசமாகி சென்னை மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். திடீரென எங்களுக்கு அதிர்ச்சியான செய்தி வந்தது. டிசம்பர்-2, ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை மருத்துவமனையிலேயே ராமு இறந்து விட்டார்.. அவரது உடல் சீர்காழிக்குக் கொண்டு வரப்படுகிறது என்று…

    டிசம்பர்-3 அன்று, பிற்பகலில் சீர்காழி பூந்தோட்டம் தெருவில் உள்ள ராமுவின் இல்லத்திலிருந்து இறுதிப் பயணம் புறப்பட்டது. பிள்ளைகள், ‘‘அப்பா அப்பா’’ என்று கதறினார்கள்; ‘‘ஐயோ! ஐயோ!’’ என்று கண் இழந்த மனைவி கதறினார்; ‘‘ராமு! ராமு!’’ என்று தோழர்கள் புலம்பினார்கள்.. ஆனால், வீட்டின் உள்ளே ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கொட்டாங்கச்சி வயலின் மட்டும் மெளனமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

    **********************************

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share