-நிர்மலா ராகவன்

நலம்.. நலமறிய ஆவல் – 150

நம்மைப் பிறருக்குப் பிடிக்க

சிலருக்குப் பிறரைப் புகழ்ந்துதான் பழக்கம். தம்மை யாராவது புகழ்ந்தால் அவர்களுக்குத் தர்மசங்கடமாகிவிடும். என்ன சொல்வது என்று புரியாது விழிப்பார்கள். ஏனெனில், அவர்களுக்கே தம்மிடம் ஏதாவது திறமை இருப்பது தெரியாது.

எத்தனை சிறு சமாசாரமாக இருந்தாலும், பிறரிடம் இருக்கும் திறமையையோ, நல்ல குணத்தையோ பாராட்டுவது ஒருவரது நற்குணத்தை, இரக்கத்தை, காட்டுகிறது. ஒருவரது நற்பண்பு செவிப்புலன் அற்றவர்களாக இருந்தாலும், அவர்களுக்குக் கேட்கும்; பார்வை இல்லாதவர்களுக்கும் தெரியும் எனப்படுகிறது.

நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டவர்கள் பிறரையும் நல்லவிதமாகவே எடைபோடுவார்கள்.

நம் மனம்போனபடி நடந்தால் என்ன? ஏன் பிறரிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டும்?

இப்படியெல்லாம் கேட்கத் தோன்றுகிறதா?

அப்போதுதான், `என்னைப் பிறருக்குப் பிடிக்கிறது. நான் நல்லவன்தான்!’ என்ற நிறைவு உண்டாகும். வீட்டிலும் வெளியிலும் நம் உறவுகள் பலப்படுவது நம் பண்பால்தான்.

தாம் பெற்ற அன்பை யாரும் சேமித்து வைத்துக்கொள்வது கிடையாது. தமக்குக் கிடைத்ததை மேலும் பரப்புகிறார்கள்.

கதை

கோலாலம்பூரிலுள்ள ஒரு நாட்டியப்பள்ளியில் வசதிகுறைந்த மாணவிகளுக்கு என்று ஆரம்பித்து, பயில வரும் அனைவருக்கும் இலவசமாகப் போதிக்கப்படுகிறது. முறையாகப் பயின்றதால் கட்டொழுங்கும், தன்னம்பிக்கையும் பெருக, பத்து ஆண்டுகளுக்குமேல் அங்கு பயின்றவர்கள் தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற வேண்டும் என்று உறுதி பூண்டார்கள். நகரின் பல பாகங்களில் வசித்த ஏழை மாணவிகளுக்கு இவர்கள் போதிக்கிறார்கள்.

எல்லாரும் இந்தியப்பெண்கள். `இந்தியர்கள் முட்டாள்கள்!’ என்று பள்ளிக்கூடங்களில் ஒயாத வசவு வாங்கியிருப்பார்கள். இது புரிந்து, தடுமாறி நிற்கும் சிறுமிகளைத் திட்டாது, ஆனால் மிகுந்த கண்டிப்புடன் நடத்த, வட்டம் பெருகிவருகிறது.

அமைதியோ, மகிழ்ச்சியோ இல்லாதிருக்கும் குடும்பத்திலிருந்து வருகிறவர்களுக்கு எதையும் கற்றுக்கொடுப்பது எளிதல்ல. தமக்கு உதவ வருகிறார்கள் என்பது புரியாது, `எங்களைவிட்டால் உங்களுக்கு வேறு கதியில்லை!’ என்பதுபோல் திமிராக நடப்பவர்களும் உண்டு. அக்கம்பக்கத்தினர், சகமாணவியர் ஆகியோரைப்பற்றி அவதூறாகப் பேசுகிறவர்களும் உண்டு. சிறிது காலம் இவர்களிடம் பராமுகமாக நடந்துகொண்டால், தானே மாறிவிடுவார்கள்.

இதெல்லாம் புரிந்து நடந்த ஆசிரியரைப்போலவே, அவரது மூத்த மாணவிகளும் பிறரை வழிநடத்திச் செல்லும் தலைமைக்குணத்தைப் பெற்றுவிட்டார்கள்.

இவர்கள் சுயமாக நாட்டிய வகுப்பு என்று ஆரம்பித்தால், சேரப் போகும் ஒரு மாணவியிடமிருந்தே நாற்பது, ஐம்பது என்று ஒரு மாதத்தில் பல ரிங்கிட்டுகளைக் கறக்கலாம். சலங்கை பூஜை நடத்தினால் ஆயிரக்கணக்கில்! ஆனால், பணத்தைவிட தம்மைப்போல் இருக்கும் பிறரை மேலே தூக்கிவிடுவதே இவர்களது குறிக்கோளாக இருக்கிறது.. நிலைத்திருக்கும் மகிழ்ச்சி என்னவென்று இவர்களுக்குப் புரிந்திருக்கிறது.

பிறருக்கு நன்மையே செய்பவர்களை ஏமாளிகள் என்று உலகம் நினைக்கலாம். இத்தகைய எண்ணப்போக்கால் சிறிதும் பாதிக்கப்படாத உறுதியும், சுதந்திரமான மனப்போக்கும் பலனை எதிர்பார்க்காது நன்மை செய்பவர்களுக்குக் கிட்டுகிறது. (`பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று எப்போதும் அஞ்சுகிறவர்கள் சுதந்திரமாக நடக்கும் திறனை இழந்து, பிறரை நாடிக்கொண்டே இருக்கிறார்கள்).

கதை

`என் சிறுவயதில், பெற்றோர் என்னிடம் அன்பு காட்டவில்லை. ஒழுக்கம் போதிப்பதாக எண்ணி, வன்முறையைப் பிரயோகித்தார்கள். இப்போது அவர்களுக்கு வயதான நிலையில், என்னால் அவர்களிடம் இரக்கம் காட்ட முடியவில்லை. முதியோர் இல்லத்தில் விட்டதில் என்ன தவறு?’ என்று நியாயம் கேட்டு ஒருவர் தினசரியில் எழுதியிருந்தார்.

இவரைப்போல் கடந்த காலத்தின் கசப்புக்களிலேயே வாழ்ந்துகொண்டிருந்தால் நிம்மதிதான் கெடும். `பெற்றோரின் காலமே வேறு. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று தோன்றிப்போனால், அவர்களிடம் பணிவாக நடக்க முடியும்.

அதிகாரத்தால் சாதிக்க முடியாததை அன்பினால் வெல்லலாம் என்பதைப் பலரும் அறிவதில்லை.

கதை

பாலர் பள்ளியில் சேர்க்கப்பட்ட சுந்தர் காலையில் புறப்படும் முன் தினமும் கதறி அழுவான் — அப்படியாவது, பெற்றோர் மனமிளகி வீட்டிலேயே விளையாடிக்கொண்டிருக்க அனுமதி கொடுப்பார்கள் என்று நம்பிக்கையால்தான்! அவர்களே இப்படித்தானே செய்திருப்பார்கள்! அதனால் மசியவில்லை.

வேண்டாவெறுப்பாக பள்ளிக்குப் போக நேரிட்டபிறகு, அங்கு அளிக்கப்பட்ட எந்த வேலையையும் செய்ய மறுத்தான். அது என்ன, அவனுக்குப் பிடிக்காததையெல்லாம் செய்யச் சொல்லிப் பிறர் வற்புறுத்துவது!

ஏதாவது எழுத்துவேலை கொடுத்தால், (தான் விரும்பிப் பார்க்கும் கார்ட்டூன் படங்களில் வரும் மிருகங்களைப்போல்) முகத்தில் இறுக்கத்தைக் காட்டிய பையனை எப்படிச் சமாளிப்பது என்று புரியவில்லை அவன் வகுப்பாசிரியைக்கு.

தன் இயலாமையை ஒத்துக்கொண்டு, தலைமை ஆசிரியை மாலாவிடம் கொண்டுவிட்டாள். அவள் கனிவுடன், `என் மடியில் உட்கார்ந்து எழுதுகிறாயா?’ என்று கேட்க சிறுவனும் சம்மதித்தான்.

சில நாட்கள் மாலாவின் மடியில் உட்கார்ந்து எழுதியதில், எழுதுவது அப்படி ஒன்றும் கடினமான வேலை இல்லை என்று தோன்றிப்போயிற்று சுந்தருக்கு. அதன்பின், வகுப்பில் நடப்பவைகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டான்.

அன்பினால் எதையும் வெல்லலாம் என்று சிறுபிராயத்தில் கற்கும் பாடம் எப்போதும் மறக்காது.

கதை

திருமணமாகி வெளிநாடு வந்திருந்தாள் சுபத்ரா. புதிய சூழ்நிலை. புக்ககத்தினரும் அனுசரணையாக நடக்கவில்லை.

அப்போது, பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு அம்மாள், `குழந்தைக்காகப் பண்ணினேன்!’ என்று மைசூர்பாகு செய்து கொண்டுவந்து கொடுத்தாள். அவள் `குழந்தை’ என்று குறிப்பிட்டது சூல்கொண்டிருந்த தாயை.

எதிர்பார்ப்பின்றி வழங்கப்பட்ட அந்த அன்பினால் சுபத்ராவின் மனம் நெகிழ்ந்துபோயிற்று.

கருவாக இருந்தபோது அம்மாவின் மனதைக் குளிரச்செய்த அந்த நிகழ்ச்சி பிறந்த குழந்தையின் உள்ளத்திலும் பதிந்துபோயிருக்கவேண்டும். இல்லாவிட்டால், பாலில் சர்க்கரை சேர்த்தால் துப்பிவிடும் குழந்தை வளர்ந்தபிறகு மைசூர்பாகை மட்டும் விரும்பிச் சாப்பிடுமா?

ஈகை என்பது வசதியானவர்களுக்கு மட்டுமே உரிய குணமல்ல.

கதை

நங்கநல்லூர் கோயில் வாசலில் இருந்த பூக்கடையில் ஆசையுடன் ஒரு ரோஜாவைக் கையில் எடுத்தேன். என்னிடமிருந்த காசை பூக்காரியிடம் நீட்டியபோது, “சில்லறை இல்லே!” என்றாள்.

நான் சிறிது வருத்தத்துடன் பூவை அது இருந்த கூடையிலேயே திரும்பப் போட்டேன்.

“தலையில் வச்சுக்கத்தானே கேக்கறே? எடுத்துக்கோ!” அவள் என் கையில் திணிக்காத குறை.

பிரமிப்புடன் நான் அதைப் பெற்றுக்கொண்டேன். என்னால் அவளுக்கு அன்று ஐந்து ரூபாய் நஷ்டம்.

எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி பரீட்சை எழுதிவிட்டோ, வேலை பார்த்துவிட்டோ களைத்து வருகிறவர்களின் கால்விரல்களை நக்கிக்கொடுத்து, அவர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும்!

மனிதனோ, மிருகமோ, ஒருவரது செய்கைகளும் சொற்களும் பிறருக்கு ஆறுதலாக, ஊக்கம் அளிப்பதாக இருந்தால் மகிழ்வை அளிக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *