Category: தலையங்கம்

தலையங்கம்

  • ஏமாற்றமளிக்கும் புதிய நிதிநிலை அறிக்கை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    நம்முடைய நிதியமைச்சர் அறிவித்துள்ள புதிய நிதிநிலை அறிக்கை மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துமா, ரூபாயின் மதிப்பையும் வேலை வாய்ப்பையும் அதிகப்படுத்துமா. இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லுமா என்றால், அதற்கான பதிலாக முழு மன நிறைவுடன் ‘ஆம்’ என்று சொல்லும் நிலையில் இல்லை என்பதே நிதர்சனம்.

    இன்றைய நிலையில், பெட்ரோல் விலையில் ரூ. 3 விலையேற்றம், மேலும் சரிந்துள்ள ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் மத்தியில் ‘இவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ’ என்ற சந்தேகம் வலுவாகிறது. மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப் பணம் நாட்டு நலனுக்காக பல வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. இராணுவத்திற்கான செலவுகளை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்வது நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையான ஒன்று என்றாலும், அதில் எத்தனை சதவிகிதம் தளவாடங்கள் உற்பத்திக்காகவும், வெளிநாட்டு கொள்முதலுக்காகவும் செலவிடப்படுகிறது என்பது தெரியவில்லை. வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் தளவாடங்களுக்காக நாம் செலவிடும் தொகையும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் தளவாடங்களுக்காக எத்தனை சதவிகிதம் ஒதுக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் எத்தனை இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறது, என்பதைப் பற்றியெல்லாம் குறிப்புகள் இல்லை. கல்வி வளர்ச்சி, ஆய்வுப் பணிகள் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்காக எத்தனை சதவிகிதம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதற்கான பதிலுமே மிகப்பெரிய கேள்விக்குறிதான். பாரதப் பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ என்ற ஆக்கப்பூர்வமான திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கான ஒதுக்கீடும், அதன் பலாபலன்களும் கடைக்கோடியில் வாழுகின்ற இந்தியனுக்கும் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது இந்த நிதிநிலை அறிக்கையில் தெளிவாக இல்லை. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்காகவும், சிறு முதலீட்டாளர்களுக்காகவும் துவக்கப்பட்டுள்ள ரூபாய் 20,000 கோடி அளவில் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படவுள்ள ‘முத்ரா’ என்ற இந்த வங்கி கடைக்கோடியில் உள்ள தாழ்த்தப்பட்ட சகோதரருக்கு சென்றடையுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ‘மகிளா’ என்ற மகளிருக்கான நலவாழ்விற்காக பெண்களால் நடத்தப்படும் வங்கி, ஏழை மாணவர்களுக்கான கல்விக் கடன் திட்டம் போன்றவைகள் போல இதுவும் ஏட்டுச் சுரைக்காய் ஆகிவிடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது.

    பெரிய நிதி நிறுவனங்களும், மிகப்பெரும் தொழிலதிபர்களும் பயன் பெறும் வகையில் மட்டுமே இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என்பதே மறுக்கவியலாத உண்மை. மிகப்பெரும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்த நம் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் அரசு கீழ்த்தட்டு மக்களுக்கு அந்த நம்பிக்கையை இழக்கச் செய்திருப்பதோடு, பத்தோடு இதுவும் ஒன்று என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட திட்டங்களுக்கு பாராட்டுகளை அள்ளி வழங்கி, கீழ்த்தட்டு மக்கள் நிரம்பியுள்ள நம் இந்திய நாட்டின் பொருளாதார நிலை நின்ற இடத்திலேயே நிலையாக நிற்பதற்கு வழியமைக்காமல் இருப்பதும் நமது முக்கிய கடமையாகிறது.

    Share
  • ராம்லீலா மைதானத்தில் ஒரு வெற்றி விழா!

    பவள சங்கரி

    தலையங்கம்

    images (1)சிறுபான்மை அரசின் முதல்வராகப் பதவி வகித்த, அரவிந்த் கேஜரிவால் அவர்கள் 6-ஆவது தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, நம் இந்தியச் சரித்திரத்தில் நிலையான ஓரிடத்தைப் பெற்றுள்ளார். ‘ஆம் ஆத்மி’ என்றால் மக்களுக்கான கட்சி என்ற பொருளுக்கேற்ப மக்களால் பெருவாரியாக வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி கட்சியில் உள்ள 67 சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 43 என்ற வகையில் எப்போதும் வயதானவர்களே அரசியலில் இருக்கிறார்கள் என்ற நிலையில் மாற்றம். அடுத்ததாக 67 சட்ட மன்ற உறுப்பினர்களில் 43 பேர் பட்டதாரியாகவும், அதற்கு மேலும் படித்தவர்கள். 24 பேர் மட்டும் 12ம் வகுப்பு வரை படித்தவர்களாக உள்ளார்கள். 67 சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதும் மிகப்பெரிய குற்றப்பின்புலம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம். கேஜரிவால் உள்பட பலர் மீது கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்பட்ட போதும் அந்தக் குற்றங்கள் மக்களுக்காகப் போராடியதற்காகச் சுமத்தப்பட்டவையே. மேலும் ரூ18,000 மட்டுமே சொத்து உள்ளவரும் இன்று சட்ட மன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டுள்ளார். பலருடைய சொத்து மதிப்பு 2 கோடி ரூபாயும், அதற்கு சற்று அதிகமாகவும் உள்ளது. ஒரே ஒருவரின் சொத்து மதிப்பு மட்டும் 80 கோடியாக உள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய கருத்து என்னவென்றால், 2013 -2015,இல் இவர்களுடைய சொத்து மதிப்பும், வருமானமும் 4 சதவிகித வளர்ச்சியே கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் அறிக்கை – 2013இல் குறிப்பிட்டதை தங்களுடைய 49 நாட்கள் ஆட்சியிலேயே நிறைவேற்ற முயன்றார்கள். பொது விநியோகத்தில் மேம்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் விநியோகம், உணவு எண்ணை மற்றும் பருப்பு இணைக்கப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன, தினசரி ஒவ்வொரு இணைப்பிற்கும் 700 லிட்டர் இலவச குடிநீர் வழங்குதலும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். குறைக்கப்பட்ட அல்லது மானிய விலையில் தட்டுப்பாடற்ற யூரியா மற்றும் உரங்களும், விவசாயப் பெருமக்களுக்குக் கிடைக்க வழி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். பேருந்துகளுக்கு, இயற்கை எரிவாயுவை உபயோகப்படுத்துவதை நடைமுறைப்படுத்துவது, அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளை ஒழுங்குபடுத்துவது என்று அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டால், தில்லி மட்டுமன்றி நாடே வளமான ஆட்சியை மகிழ்ந்து கொண்டாடலாம். இதேநேரத்தில் மாநில உரிமை பெறாத சமயத்தில் இந்திய அரசின் ஒன்றியமாக இருக்கும்பொழுது ஆட்சியில் அமர இருக்கும் இக் கட்சி எதிர்கொள்ள இருக்கும் சவால்களை சந்தித்து களைந்து வெற்றி பெறும் என்று நம்புவோம். வெல்க பாரதம்!

    Share
  • இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    1

    இருபெரும் ஜனநாயக நாடுகளின் கைகோர்ப்பு தினம் இன்று. டில்லி ராஜ்பாத்தில் நடைபெற்ற இந்தியாவின் 66 வது குடியரசு தின விழாவிற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அழைக்கப்பட்டுள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு , அணுசக்தி, இரு நாடுகள் இடையே வர்த்தகம், பருவநிலை மாற்றம், தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாநில பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள், நடனம் போன்றவற்றை ஒபாமா, மோடி இருவரும் கண்டு களித்தனர். இதில் முதன்முறையாக முப்படையான ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றில் பெண் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    25-1422174041-obama-indiad-600

    இன்றைய அணிவகுப்பு மரியாதையின்போது பெண் அதிகாரி ஒருவர் தலைமையில் அமெரிக்க அதிபருக்கு மரியாதை கொடுக்கப்பட்டது அனைவரையும் கவர்ந்ததோடு, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் நம் இந்தியப் பிரதமர் மோடி என்பதையும் உறுதி செய்தது . இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் பூஜா தாக்கூர் அவர்கள் தலைமையில் நம் இந்திய வீரர்கள் அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்டதன் மூலம், அணிவகுப்பு மரியாதைக்கு பெண் அதிகாரி ஒருவர் தலைமை தாங்கியது இதுவே முதல் முறை என்ற வரலாற்றுச் சிறப்பும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    26-1422272498-a-marching-contingent-at-th

    ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியாவிற்குக் கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார். அணு சக்தி பயன்பாட்டிலிருந்த தடையை நீக்கியதாக அறிவித்துள்ளது, இன்றைய நம்முடைய தேவைக்கு பயனுள்ளதோர் அறிவிப்பு. அமெரிக்க மண்ணில் மின்வெட்டு, மின்தடை என்பதே இல்லை என்பதைப்போன்ற நிலை நம் இந்திய மண்ணிலும் ஏற்படுத்துவதற்குரிய இந்த அறிவிப்பை மனமார வரவேற்கும் இதே நேரத்தில் நம் அறிவியல் விஞ்ஞானிகளின் நிலைப்பாட்டை அறிய வேண்டியதும் அவசியம். கிழக்குக் கடற்கரையில் கொட்டிக்கிடக்கும் தோரியம் சொரிந்த மணல்களிலிருந்து அணு சக்தியை எடுத்தால் இதைவிட குறைவான செலவில் அணு சக்தி பெற முடியும் என்று கூறிய முன்னாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் விஞ்ஞானியுமான மேதகு அப்துல் கலாம் அவர்களுடைய கருத்திற்குரிய நிலைப்பாடு மற்றும் நம்முடைய ஆய்வரங்கங்களில் இவைகள் ஆய்வு செய்யப்படுகின்றனவா என்பதும் தெரியவில்லை. தோரியம் சொரிந்த கடற்கரை மணல்கள் அந்நிய நாட்டினரால் எதற்காக கடத்தப்பட வேண்டும் என்பதும் ஆய்விற்குட்பட்டது.

    அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகள் வணிக ஒப்பந்தங்கள் நம் நாட்டின் முன்னேற்றம் கருதி, வாழ்த்தி வரவேற்கப்படவேண்டியவையே. நம் பழம்பெருமையை மட்டுமே பேசுவதை விடுத்து செயல்வடிவில் நம் வளர்ச்சியைக்கூட்டும் விதமாக அந்நிய மண்ணில் நம் முதலீடுகளை வெகு விரைவில் செய்யவேண்டியதும் அவசியம். அமெரிக்காவின் பெருமுயற்சியால் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவினால் அவர்களுடைய பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி குறைந்ததால் உலகளாவிய வகையில் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் சீர்பெற்று வருகிறது. நமது இயற்கை எரிவாயுக்கள் பல கிணறுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டும் இன்னும் செயல்பாட்டிற்குக் கொண்டுவராமல் இருப்பதும் வருத்தத்திற்குரிய விசயம். இதனை சரிசெய்யும் வகையில் நம் இந்தியப் பொருளாதாரம் மேலும் பன்மடங்கு சீர்படும் . அமெரிக்காவில் ஒரு லிட்டருக்கு முப்பது உரூபாய் அளவிற்கு பெட்ரோல் விற்பனை செய்ய முடிகிறது எனும்போது நமது நாட்டில் மட்டும் அதன் விலை இரட்டிப்பாக இருப்பதன் காரணமும் புரியவில்லை. இந்தியாவிலேயே முன்பு கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 110 டாலருக்கு  இருந்தபோது, பெட்ரோல் லிட்டருக்கு 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பாதிக்கும் கீழே, அதாவது 48 டாலருக்கு வந்திருக்கும்போதும், ஏன் இவ்வளவு விலையேற்றம்? நமது இந்தியாவிலேயே கிடைக்கக்கூடிய இயற்கை எரிவாயுவை அனைத்துப் பேருந்துகள் மற்றும் தொடர் வண்டிகளுக்கும் பயன்படுத்தினால் நம் பொருளாதாரத்தில் மிகப்பெரும் எழுச்சி ஏற்படுவதோடு , ‘தரமே, தாரக மந்திரம்’ என்ற வகையில் இந்தியப் பொருட்களின் தயாரிப்பு இருந்தால் நமது பாரதப் பிரதமரின் , ‘மேக் இந்தியா’ என்ற வாசகமும் உயிர் பெறும். . அறிவியல் வளர்ச்சியின் பயன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்று இந்த குடியரசு தின நாளில் உறுதி கொள்வோம். வெல்க பாரதம்!

    படங்களுக்கு நன்றி

    Share
  • தமிழ் ஈழம் மலருமா? தமிழரின் நிலை உயருமா?

    பவள சங்கரி

    ராஜபட்சே 45 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி கண்டிருக்கிறார். தம் பதவிக்காலம் முடிய இரண்டாண்டுகள் இருக்கும்போதே தேர்தலில் நின்று தம் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியவர், தோல்வி கண்டிருக்கிறார். இதற்காக சட்டத் திருத்தங்களெல்லாம் செய்தார். அந்நாட்டு சட்டப்படி அதிபராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்பதைக்கூட திருத்தியமைத்து தேர்தலைச் சந்தித்தார். அவருடைய அரசவையில் பணியாற்றிய மைத்ரிபாலா சிறீசேனா அவர்கள், இவரைவிட 6 சதவிகிதம் அதிகமாக வாக்குகள் பெற்று ஏழாவது அதிபராக பதவியேற்றுள்ளார். சிறீசேனா அவர்களுக்கு ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஆதரவு அளித்தார்கள் என்று கூற முடியாவிட்டாலும், பெரும்பாலான தமிழர்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உடைய விக்கிரம சிங்கே அவர்கள் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இருவரின் நிலைப்பாடும் தமிழர்களுக்கு மேன்மையான வாழ்வைத் தரவல்லது என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழர்களுக்கு நல்வாழ்வு அமைந்தால் அது இந்தியாவிற்கும் பெரும் உதவியாக இருக்கும். வாழ்வொழிந்த தமிழர்களின் வாழ்வு பெருமளவில் மேம்படும் என்ற நம்பிக்கையில் தமிழ் கூட்டமைப்பினர் சிறீசேனா அவர்களின் வெற்றிக்காக பாடுபட்டுள்ளனர். மலையகத்து மக்களும், கிளிநொச்சி, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம், வவுனியா பகுதியில் உள்ள தமிழ், முஸ்லிம் பெருமக்களுக்கும் சிறந்த நலமான வாழ்வை அளிப்பார் என்று ஈழ மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இந்திய மண்ணில் அகதிகளாக உள்ள தமிழர்கள் தங்கள் தாயகம் சென்றடையும் வகையில் தமிழ் ஈழத்தை உருவாக்குவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். இந்தியாவில் உள்ள மீனவர்கள் பிரச்சனையும் தீரும் என்று இரு நாடுகளில் உள்ள மீனவ மக்களும் எதிர்பார்த்து உள்ளனர். அதிபர் சிறீசேனா அவர்கள் வளமான வாழ்க்கையைத் தருவார் என்று எதிர்பார்த்து வாக்களித்த ஈழத் தமிழர்களுக்கும், அதிபர் பதவியேற்றுள்ள சிறீசேனா அவர்களுக்கும், பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள விக்கிரமசிங்கே அவர்களையும் வாழ்த்துவோம். புத்தாண்டு, புதிய அரசு, எழுச்சியான வாழ்க்கை ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு. மைத்ரிபாலா சிறீசேனா தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மிக முக்கியமான செய்தி, தாம் பதவிக்கு வந்த நூறு நாட்களில் ராஜபட்சவால் கொண்டு வரப்பட்ட அதிபரின் சர்வாதிகார ஆட்சி முறையை அகற்றுவதோடு, காவல் துறை, நீதித் துறை, நிர்வாகம் போன்ற அனைத்தும் சுதந்திரமாகச் செயல்படும் நாடாளுமன்ற ஜனநாயக முறையை நிறுவுவது என்பதுதான். மைத்ரிபாலா சிறீசேனா உள்நாட்டுப் போரின்போது கடைசி இரண்டு வாரங்கள் ராணுவ அமைச்சராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • இனிய கிறித்துமசு தின நல்வாழ்த்துகள்

    பவள சங்கரி

    christmas

    உண்மை, அன்பு மனித நேயம் போன்ற அனைத்தையும் போதித்தவர் இயேசுபிரான். இயேசுபிரான் பிறந்த தினம் கிறித்துமசு விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தேவ குமாரன் அவதரித்த இந்நன்னாளில் நாமும் நம் சக மனிதர்களிடம் அன்பு பாராட்டி, ஒற்றுமையும், நல்லிணக்கமும் வளர்த்து நாட்டில் போட்டி, பொறாமைகள் அகன்று, பூரண அமைதி நிலவவும் உறுதி எடுப்போம். மகிழ்ச்சிகரமான இந்த கிறித்துமசு நாளில் தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறித்துவ பெருமக்களுக்கும் நம் வல்லமையின் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மனித நேயத்தை வளர்க்கும் இணைப்புச் சங்கிலி அன்பு ஒன்றுதான் என்பதே இயேசுபிரானின் அவதார நோக்கம் மற்றும் அவருடைய போதனையும் அதுதான். நம் மனங்களில் அன்பும் அமைதியும் தழைத்தோங்கி பிரிவினைகளும், பேதங்களும் மறைந்து சமத்துவமும், சகோதரத்துவமும் தழைத்தோங்க மனமார பிரார்த்திப்போம்.

    Share
  • மேக் இன் இந்தியா!

    பவள சங்கரி

    தலையங்கம்

    நம் இந்தியப் பிரதமர் திரு மோடி அவர்களின் பொருளாதார வளர்ச்சித் திட்டம் வாழ்த்தி வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அகில உலக மதிப்பீட்டாளர்கள், எஸ் & பி எதிர்மறை மதிப்பீட்டிலிருந்து நிலையான பொருளாதாரம் என்ற மதிப்பீட்டை அளித்திருப்பது, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மேக் இன் இந்தியா என்று பெருமையுடன் தலை நிமிர்ந்து சொல்லும்போது நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, ஜெர்மனி என்றால், ‘Work excellence’, ஜப்பான் என்றால் தொழில்நுட்பங்களும், பிரித்தானியர் என்றால் கடுமையான தரக்கட்டுப்பாடுகளும், ஜப்பான், கொரியா என்றால், புதிய பரிமாணங்களும் (Innovation) கொண்டது என்று ஒவ்வொரு நாட்டு தயாரிப்புகளுக்கும் ஒரு பொதுக்கருத்து இருப்பதுபோல, மேக் இன் இந்தியா என்றால் மிகுந்த தரக்கட்டுப்பாட்டுடன், புதுமையும், புத்தாங்கங்களும் கொண்டதாகவும், அற்புத நேர்த்திகளுடன், நம் தயாரிப்புகள் இருக்க வேண்டும். இவையனைத்துடனும், சந்தைப்படுத்தும்போது, அதன் விலை நிர்ணயங்கள் மற்ற நாட்டுத் தயாரிப்புகளுடன் போட்டியிடத்தக்கவையாக இருத்தல் அவசியம். அப்படி இருந்தால் நம்முடைய மேக் இன் இந்தியா என்ற புதிய பொருளாதாரக் கோட்பாடு வெற்றியடையும் வாய்ப்பு அதிகரிக்கும்.

    இதற்கு நாம் செய்ய வேண்டியவைகள் கற்பனையான விளம்பரங்களை விடுத்து, உண்மையான அக்கறையுடன் ஒவ்வொரு இந்தியரும் தன்னை இதில் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்றால் தரம் மிகுந்தது, மலிவானது, செயல் திறனுடையது என்று உலக மக்களை உணர வைத்தால் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஒரு வல்லரசாகும் என்பதில் ஐயமில்லை. மேலே குறிப்பிட்ட எஸ் & பி பொருளாதார நிலைப்பாட்டில், நாமும் ++ அடையும் காலம் வெகு தொலைவில் இல்லை. இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும், தரக்கட்டுப்பாட்டை வலியுறுத்த வேண்டியதும் அவசியம். தரத்தில் சிறு விலகல் ஏற்பட்டாலும், அப்பொருட்கள் முழுவதுமாக நிராகரிக்கப்படவேண்டும்.

    நம் உரூபாயின் மதிப்பை அதிகப்படுத்துதல் மிகவும் அவசியம். இதற்காக, நமது நாட்டில் கிடைக்கக்கூடிய எண்ணெய் எரிவாயு வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதலும், நிலம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசு போதிய கவனம் செலுத்தி, குதிரை பேரங்களைத் தவிர்த்து, சரியான இடம் மற்றும் கட்டிட மதிப்பீடுகளையும் வெளியிட வேண்டியதும் அவசியம். சமீபத்திய செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது போல, அரசு ஒவ்வொரு நகரங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் விலை நிர்ணயம் செய்து, அதை வங்கிகள் மூலமாக உறுதிப்படுத்தினால் நம்முடைய பொருளாதாரம் சீரடையும். உரிய சேவைக்கு, உரிய கூலி என்ற கோட்பாடை அரசு கடைப்பிடிப்பது நலம். சரியான முறையில் அரிய இக்கோட்பாடு வழிநடத்தப்பெறுமாயின், நம் கனவு நனவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அந்நிய நாடுகளின் முதலீடுகளை நாம் எவ்வாறு வரவேற்கிறோமோ அது போல நாமும் அந்நிய நாடுகளில் முதலீடு செய்வதையும் ஊக்கப்படுத்த வேண்டும். இந்த வகையில் சில முதலீட்டாளர்கள் தற்போது வெளிநாடுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்திருப்பதும் நம்பிக்கையூட்டுவதாகவே உள்ளது.

    வெல்க பாரதம்!

    Share
  • வாழ்வது ஒரு முறை, வாழ்த்தட்டும் தலைமுறை!

    பவள சங்கரி

    தலையங்கம்

     உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
    எழுவாரை எல்லாம் பொறுத்து.  குறள் 1032

    பொருள்
    உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர். 

    இயற்கைச் சீற்றங்கள், நீராதாரம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகள் இயல்பானது. இதற்காக அரசாங்கமும் உடனடியாக கடன்களையோ, வட்டியையோ ரத்து செய்தோ அல்லது இலவசமாக உரங்களை அளித்தும், மானிய விலையில் விதைகளை அளித்தும் விவசாயத்தைப் பாதுகாக்க ஆவண செய்ய முற்படுகின்றனர்.விளைச்சல், அறுவடை, அதனால் வரக்கூடிய இலாபம், இவைகளை மட்டுமே கருத்தில் கொண்டு தங்களுடைய தொழிலை நடத்துவது என்பது ஏனைய தயாரிப்பாளர்கள் போன்று விவசாயம் செய்பவர்களுக்கும் பொருந்தும் என்றாலும், விவசாயம் என்பது மற்ற தொழில்களைப் போன்றது அல்ல. இது நம் வாழ்வாதாரம். அதனாலேயே மற்ற அனைத்துத் தொழில்களைக்காட்டிலும் விவசாயம் உன்னதமானது என்று தெய்வப் புலவர்களும் அறுதியிட்டு கூறிச்சென்றுள்ளனர். அந்த உன்னத நிலையைத் தக்க வைத்துக்கொள்வதும் அவரவர் கைகளில்தான் உள்ளது.

    ஆனால் பெரும்பாலான விவசாயிகள் சமுதாய அக்கறையின்றி, அதிக இலாபம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு விளைச்சல் பார்ப்பது வருத்தத்திற்குரிய விசயம். உதாரணமாக, தக்காளிப் பழத்திற்கு எடை கூடவேண்டும் என்று சில யுக்திகளை கையாளுகின்றனர். தண்ணீர் தாகத்திற்காக சாப்பிடக்கூடிய கோசாப் பழத்திற்கு (தர்பூசணி) சாராயம் ஊற்றி விளைவிப்பதாகக் கூறுகின்றனர். நம்முடைய முக்கிய உணவுப் பொருளான நெல்லை விளைவிக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்தியும், தேவையறியாமலே அவ்வப்போது உயிர்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. இப்பொழுதெல்லாம், முதல் நாள் தயாரித்த சாதத்தை பழைய சாதமாக அடுத்த நாள் சாப்பிடும் சுகம், பெரும்பாலான வகை அரிசியில், அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பினும் கிடைப்பதில்லை. பொதுவாக பழைய சாதமென்றால் தேவாமிர்தமாக இருந்த நிலை மாறிவிட்டது.

    அநேகமாக, இந்த பத்தாண்டுகளில்தான், முன்பு பயன்படுத்திய பசுந்தளை இயற்கை உரம் மற்றும் மறு சுழற்சி விவசாய முறைகள் போன்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்தப்படுவதில்லை. இதனால் விவசாயப்பெருமக்களின் பொருளாதார நிலை வேண்டுமானால் உயரலாம். ஆனால் இதை உண்ணும் மக்களின் நிலை பற்றி சிந்திப்பார் இல்லை. தற்போது கிடைத்துள்ள சில புள்ளி விவரங்களின் படி இது போன்ற வேதிப் பொருட்கள் பயன்படுத்துவதால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், இதைவிட அதிர்ச்சிகரமான மற்றொரு தகவல் வாழையடி, வாழையாக நம் சந்ததிகள் தளைப்பதற்கான வாய்ப்பே அற்றுப் போவதற்கான சூழ்நிலை உருவாகி வருகின்றன என்பதும் வல்லுநர்களின் கவலையாக உள்ளது. சக்கரை நோய்களின் தலையிடமாகவும், நம் இந்தியா, உலக அரங்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமாராக ஏழு கோடி மக்கள் சக்கரை வியாதி பாதிக்கப்பட்டவர்களாகவும், 14 கோடி மக்கள் சக்கரை நோய் வருவதற்கான விளிம்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெருவாரியான வழக்குகள் ஆண்மை குறைபாடு உள்ள காரணத்தினால் விவாகரத்து நாடி நீதி மன்றம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வு அறிக்கைகள் வெளியிடுகின்றன. விலை பொருட்கள் அனைத்தும் விலைக்காக மட்டுமல்லாமல் மக்கள் நோய் நொடியின்றி வாழும் வகையில் விவசாய உத்திகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகிறது. நன்கு ஆய்வு செய்து தேவையென்றால் மட்டுமே பூச்சுக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும்.

    சமீபத்தில் ஈரோடு அருகில், சித்தோடு எனும் இடத்தில், நாட்டுச் சக்கரை, வெல்லச் சந்தையில் நடந்த நிகழ்வு இது. வெல்ல உருண்டைகள் வெளிர் மஞ்சளில் இருந்தால் நல்ல விலை கிடைக்கும் என்பதால், ஏதோ இரசாயணப் பொருட்களைப் பயன்படுத்தி பழுப்பு நிறத்தை நீக்கிவிட முயன்றிருக்கின்றனர். இதனை அறிந்த, கொள்முதல் பண்ணுவதற்காக வந்திருந்த அனைவரும் 15 டன் பொருட்களையும் வாங்க மறுத்துவிட்டனர். இது அடிக்கடி தொடரும் நிலையாகவே உள்ளது. அதேபோல் ஆலைக் கரும்பின் எடை கூடுவதற்காக பயன்படுத்தும் பொருட்களையும் தவிர்க்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

    இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு, நம் அரசு ஆய்வகங்களின் மூலமாக ஆய்வு செய்து, அதன் பின் விளைவுகளை கணக்கில்கொண்டு எந்த விதமான உரங்களை, எவ்வளவு அளவிற்கு பயன்படுத்தலாம் என்பதற்கான அறிக்கைகளை வெளியிட்டால். விவசாய பெருமக்களுக்கும் பேருதவியாக இருக்கலாம். அறியாமையால் செய்யப்படும் தவறுகளும் திருத்தம் பெறலாம். நம் வருங்காலச் சந்ததியினர் நோயற்ற வாழ்வை வாழ முடியும் என்ற உத்திரவாதமும் இருக்கும் என்பதே நிதர்சனம்.

    Share
  • முந்திரிக்கொட்டை ……

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஒரு காலத்தில் முந்திரி பேர ஊழல் பிரசித்தி பெற்றது. அது போல நம் சமையலிலும் முந்திரி பருப்பு முக்கியமான இடம் பிடித்துள்ளது. துடுக்குத் தனமாகவோ அல்லது முந்திக் கொண்டோ, எதையேனும் செய்பவர்களை முந்திரிக் கொட்டை என்று விளையாட்டாகச் சொல்வார்கள். காரணம், பெரும்பாலான பழங்களில் பழத்திற்குள்ளே இருக்கும் கொட்டை, முந்திரிப்பழத்தில் மட்டும் பழத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

    பிரேசில் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டதாக இருந்தாலும், உலகளவில் முந்திரி அதிக பரப்பளவில் பயிரிடப்படுவது நம் இந்தியாவில்தான். நம் இந்தியாவில், ஒரு ஆண்டிற்கு சராசரியாக 60,000 டன் முந்திரி விளைவிக்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரள மாநிலம்தான் முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. அவை தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டு உள் நாட்டுச் சந்தைக்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    images (1)ஆரம்பத்தில் பச்சை நிறமாகத் தோன்றி, பின் பழுக்கும்போது மஞ்சள் அல்லது சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தை அடையும் இதன் பழங்கள் உண்ணப்படக் கூடியதாகவும், இனிப்பான சுவையுடன் இனிய மணமும் உடையதாக இருப்பதுடன், சிறந்த மருத்துவ குணமும் உடையதாக இருக்கிறது. மிக மெல்லிய தோலுடையதாகவும், சதைப்பகுதி மிகவும் சாறு நிறைந்ததாகவும் இருக்கும் இவைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதில் சற்று சிரமம் இருக்கலாம். இதிலிருந்து தயாரிக்கப்படும் சாறு பல வகையில் பயனுள்ளது. போலிப் பழம் என்று சொல்லக்கூடிய இந்த முந்திரிப் பழத்திற்கு வெளியே, சிறுநீரக வடிவில் காணப்படும் கடினமான ஒரு வெளி ஓட்டுப்பகுதியும், அதனுள்ளே ஒரு விதையையும் கொண்டிருக்கும். அந்த விதையே முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகிறது. இந்த முந்திரிக்கொட்டையின் மேலுள்ள கடினமான இரட்டை ஓட்டில் ஒவ்வாமையால், தோலில் நமைச்சலை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது. அதனால் இதை மிகுந்த கவனத்துடன் சரியான முறையில் வறுத்து பதப்படுத்தப்படுத்த வேண்டியதும் அவசியம்.

    இந்த முந்திரிப்பழங்களை நம் நாட்டில் பெரும்பாலும் சரியான முறையில் பயன்படுத்துவது இல்லை. முந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு முந்திரிப் பழங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. வைட்டமின் சி செறிந்துள்ள இப்பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப்பொருளின் தன்மையால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்புத் தன்மை ஏற்படுகிறது. இதனைப் போக்க பழத்தை ஒரு பத்து நிமிடங்கள் நீராவியில் வேகவைத்தோ அல்லது உப்புநீரில் ஊறவைத்தோ உண்ணலாம். ஆரஞ்சுப் பழத்தை விட, முந்திரிப்பழத்தில் வைட்டமின் ‘சி’ சத்து ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதோடு, பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு நோயைக்கூட குணமாக்கும் தன்மை கொண்டுள்ளது என்றும், ‘ஸ்கர்வி’ என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குவதோடு, கிருமி நாசினியாகவும் செயல்பட்டு தொற்று நோய்களை குணமாக்கவும் பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதோடு, டானின் எனும் வேதிப் பொருளும் உள்ளதால் அவை ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படவும் செய்கிறது என்கின்றனர் வல்லுநர்கள். கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வை துலங்கும்.

    இத்துனைச் சிறப்புமிக்க பழத்திலிருந்து பழச்சாறு, சிரப், பழக்கூழ், மிட்டாய் போன்ற பல வகையான மதிப்புக் கூட்டிய பொருட்களை தயாரித்துப் பயன்படுத்த முடியும் என்றாலும், நம் நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரிப் பழங்களில் 10 சதவிகிதம்கூட பயன்படுத்துவதில்லை என்பதுதான் நாம் இப்போது முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டிய விசயம்.

    இப்பழங்களிலிருந்து பழ ரசம் எடுக்கப்பட்டு சந்தைப்படுத்தினால், பல ஆயிரம் கோடி ரூபாய்கள் விவசாயப் பெருமக்களுக்கு ஊடு பணமாகக் கிடைக்கக் கூடும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை செழிப்பாக்கக் கூடிய ஒரு வரப்பிரசாதம் எனலாம். இதன் மூலமாக வரியாக அரசாங்கத்திற்கு பல நூறு கோடி ரூபாய்களும், நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கக்கூடும். முந்திரிக்கொட்டையின் மேல்புறம் உள்ள நிலக்கடலை தொப்பி போன்ற ஓட்டுப்பகுதியையும் நாம் சரிவர பயன்படுத்துவதில்லை. இதன் பயன்கள் குறித்து நம் அரசு ஆய்வுத் (R&D) துறை ஆய்வு செய்து அதையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால், விவாசாயிகளின் வாழ்வாதாரம் மேலும் சிறப்படையும். சமீபத்தில் பெப்சி கம்பெனியின் மேலதிகாரி ஒருவர் இப்பழத்தைச் சுவைத்துவிட்டு, இதனை அவர்களின் கம்பெனி சார்பாக சந்தைப்படுத்த எண்ணுகின்றனர். நாம் விழிப்படைய வேண்டிய அவசரத் தருணமிது!

    இப்படி நமது தமிழ்நாட்டில் பல வகையான இயற்கை வளங்கள் அனைத்துப் பகுதியிலும் நிரம்பியிருக்கின்றன. அவைகளை சரியான முறையில் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தால் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும், நம் இந்தியா உலக அரங்கில் பொருளாதாரத்தில் தலை சிறந்த நாடாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, வரட்சி மிகுந்த தென் மாவட்டங்களில், சுவை மிகுந்த பதநீர் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டன. அந்தப் பதநீரோ, சுவை மிகுந்தது. வயிற்றுப் புண்ணை ஆற்றுவிக்கக் கூடியது. கரிசல் மண்ணில் , கண்ணீருடன் வாழக்கூடிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடியது. விளம்பர யுகமாகிய இக்காலங்களில், அங்கு கிடைக்கக்கூடிய, பனை வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, போன்றவைகளை அரசாங்கம் மூலமாக சிறந்த முறையில் விளம்பரப்படுத்தி, சந்தைப்படுத்தினால் சிறப்பாகும். மருத்துவக் குணம் கொண்ட இவைகளை அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நம் வருமானமும் கனிசமாகக் கூடும்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், மாவட்டங்களில் 10, 15 தறிகளே வைத்திருப்பவரும் துணி தயாரிப்பது போல, கடலையே நம்பி வாழக்கூடிய கடற்கரை மாவட்ட மக்களுக்கு அங்குள்ள உப்பளங்கள் வழியாக உப்பு மற்றும் இரசாயண உரங்களையும், உப்பையும், நவீனமான எளிய முறையில், தயாரித்து சந்தைப்படுத்தினால், விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் கிடைக்கும். கண்ணீரில் வாழும் மீனவ மக்களுக்கு வளமான வாழ்வும் கிடைக்கும். ஒரு காலத்தில் பிரசித்தமாக இருந்த இறால் வளர்ப்புப் பண்ணைகள் நாளடைவில் அழிந்துவிட்டன. ஆர் & டி துறையினரின் வழிகாட்டுதலின் பேரில், இந்தப் பண்ணைகளை அமைத்து, மீண்டும் இறால்களைப் பதப்படுத்தி, ஏற்றுமதி செய்தால் அவர்களுடைய பொருளாதாரமும் வளர்ச்சியடையும் வாய்ப்பு கூடும். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் மலிந்துள்ள எண்ணற்ற வளங்களை சரியான முறையில் நெறிப்படுத்தினால், நம் இந்தியப் பொருளாதாரம் சீரடைவதோடு, நம் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்பது சத்தியம்.

    Share
  • நம் இந்தியாவில் அந்நிய முதலீடுகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்தியாவில் அந்நிய முதலீட்டை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், இன்றைய தேசிய முற்போக்குக் கூட்டணியும் சிவப்புக் கம்பளம் விரித்து, வரவேற்கின்றன. இது சரியான அணுகுமுறையா? அந்நிய முதலீடுகளை எந்தெந்தத் துறையில் அனுமதிக்கலாம் மற்றும் அதன் எல்லை எதுவரை என்பதை வரையறுக்கவேண்டியது அவசியம். அந்நிய முதலீடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்திய சந்தையில் விற்கப்படும் அளவு மற்றும் வெளிநாட்டுச் சந்தைக்கு ஏற்றுமதியாகும் அளவையும் வரையறுக்கவேண்டும். இதன் மூலம் ஏற்படும் பரிவர்த்தனைகள் முழுதும் இந்திய ரூபாயில் இருந்தால் நன்மை பயக்கும். இதற்கு மாறான நிலையில் அந்நிய முதலீடுகளை வரவேற்கும் பட்சத்தில் பின்னாளில் நம்முடைய பொருளாதாரம் கேள்விக்குறியாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

    காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு எந்த வகையில் பயனுள்ள வகையில் இருக்கும் என்பதும் சிந்திக்கத்தக்கவை. உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் 1000 கோடி டாலருடன் இந்தியாவிற்குள் நுழைவதாக வைத்துக்கொண்டால், அந்தத் தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் அப்படியே இருக்கும். காப்பீடு செய்பவர்களின் தொகையும் அவர்களுடைய கணக்கில்தான் ஏற்றம் பெறும். பின்னொரு நாளில் காப்பீடு செய்தவருக்கு இழப்பு ஏற்பட்டால் அவரால் காப்பீடு செய்யப்பட்ட தொகையிலிருந்தே அதைக் கொடுக்க முடியும். அப்படியிருக்க காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு நமக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்? 57 ஆண்டுகள் கடந்துள்ள பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சொத்து மதிப்பு, இன்றைய தேதியில் பல லட்சம் கோடிகளைத் தாண்டிவிட்டது என்பது நிதர்சனம் இப்படியிருக்க காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை வரவேற்பது எந்த வகையில் பயனுடையதாக இருக்கும் என்பதைக் குறித்துக் ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியமாகிறது.

    அடுத்து, பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டின் தலையீடு பற்றி பார்த்தோமானால், அனு ஆயுத ஆய்விலிருந்து விமான உதிரிப்பாகங்கள் வரை அந்நிய முதலீட்டைக் கொண்டுவந்தால் அது இந்திய இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாகவல்லவா அமையும்? நம்முடைய நாட்டின் பாதுகாப்பு வேற்று நாட்டவரின் கைகளில் செல்வது சரியானதாக இருக்குமா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. முதலீடு செய்தவர்கள் வருமானம் போதவில்லை என்ற காரணமோ. அல்லது வேறு ஏதோ காரணமோ காட்டி திடீரென்று ஒரு நாள் தங்கள் தொகையைத் திருப்பி எடுத்தால் நம் நாட்டின் பாதுக்காப்புத் துறை உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்படலாம். அதோடு மிக முக்கியமான ஒன்று நம்முடைய இராணுவ இரகசியங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படலாம். பாதுகாப்புத் துறை உற்பத்திகள் எதிர்பாராத சூழலில் நிறுத்தப்படும் அபாயமும் ஏற்படலாம்.

    உலகிலேயே மிக நீண்ட இரயில் பாதைகளையும், அதிகமான பயனீட்டாளர்களையும் கொண்டுள்ள ஒரே நாடு நம் இந்தியா மட்டும்தான் என்கிற நிலையில், இத்துறையில் அந்நிய முதலீடு தேவையா என்பதையும் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. புல்லட் ரயில் என்று சொல்லக் கூடிய அதிவேக ரயிலுக்காக சுமாராக 40,000 கோடி ரூபாய் ஒதுக்குவதும் அவசியமற்றது. சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில், அவர்கள் தங்கள் சொந்த பொருளாதாரத்தைக்கொண்டே இதனை செயல்படுத்தினார்கள். ஒரு நாளில் ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய இரயில்களுக்கு இவ்வளவு பெரிய தொகை செலவு செய்வது தேவையற்றது. அவ்வளவு விரைவாக செல்ல வேண்டியவர்கள் விமானத்தில் பயணம் செய்யலாம். இரயில்வேத் துறையை சரியான முறையில் நிர்வாகம் செய்தால் இன்னும் இலாபகரமாக இயக்க முடியும் என்பதே வல்லுநர்களின் கருத்து.

    அந்நிய முதலீட்டை உற்பத்தித் துறையில் அனுமதித்தும், ஏற்றுமதியை ஊக்கப்படுத்தியும், இறக்குமதிக்கான பரிவர்த்தனை இந்திய ரூபாயிலும், இருந்தால் சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவைப் போன்று நம் இந்திய பொருளாதாரமும் தலை நிமிர்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை!

    Share
  • பிரதமரின் மனிதாபிமானமிக்க புதிய நிதித் திட்டம்!!

    பவள சங்கரி

    தலையங்கம்

     ‘ஜன் தன் யோஜனா’ என்கிற அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டம் மூலமாக நம் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தம் சுதந்திர தினச் செய்தியை நடைமுறைப்படுத்தியுள்ளார். புதிய சேமிப்புத் திட்டங்களின் மூலமாக எளிமையான முறையில் சேமிப்பு வங்கிக் கணக்குகள் துவக்கப்படும் என்றும் முதல் நாளிலேயே சுமாராக ஒரு கோடி வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைப்பற்றி மிகப்பெரிய அளவில் விளம்பரங்களும் செய்யப்பட்டுள்ளன. நம் நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு வங்கிக் கணக்கு என்பதே சிம்ம சொப்பனமாக இருந்து வந்திருக்கிறது. அதனாலேயே மக்கள் தங்கள் சேமிப்புப் பணத்தை நகைச் சீட்டுத் திட்டங்கள், பொய்யான விளம்பரங்கள் மூலமாக அதிக வட்டி தருவதாகக் கூறி கொள்ளையடிக்கப்படும் பல்வேறு திட்டங்கள், தேக்கு மரத் திட்டம், ஈமு கோழி வளர்ப்புத் திட்டம் போன்ற பல திட்டங்கள் மூலமாக ஏமாந்து வருவது வாடிக்கையாக நடந்து கொண்டிருப்பதை நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். விவசாயிகளின் தற்கொலை, கந்துவட்டிக்காரர்களின் அராஜகம் இப்படி பல கொடுமைகளுக்கு நம் பிரதமரின், மனிதாபிமானம் நிறைந்த இத்திட்டம் தீர்வு சொல்லியிருக்கிறது என்றே கொள்ளலாம். ஆனாலும் நடைமுறையில் இதனை அமல்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்படலாம். வங்கிப் பணியாளர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்த்தப்பட வேண்டியதும் அவசியமாகிறது.

    தற்போது சி.பி.ஐ. விசாரணையில் இருக்கும், சாரதா சிட்பண்ட் நிறுவனம். கவர்ச்சிகரமான சேமிப்புத் திட்டங்களை அறிவித்து, மக்களிடையே கோடிக்கணக்கில் நிதி திரட்டி பின் முறைகேடுகளில் ஈடுபட்டதை அடுத்து, அந்நிறுவனம் மூடப்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதுதான் கண்ட பலன். உழைத்து சம்பாதித்த பணம் கொள்ளையடிக்கப்படுவதும் பின்னாட்களில் மக்கள் அலறுவதும் வாடிக்கையாகிவிட்ட சமயத்தில் பிரதமரின் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதற்கு, ஒரு சில திட்டங்கள் அறிவித்த கொஞ்ச நாட்களிலேயே நீர்த்துப் போனதை மனதில் கொண்டு செயல்பட வேண்டுமென்றால், மக்கள் வங்கிகளில் சேமிப்பதை தங்கள் வழக்கமாகக் கொள்ள வேண்டும். இத்திட்டம் நன்முறையில் வெற்றி பெற வேண்டுமென்றால் சேமிப்புக் கணக்குகளுடன் ஆதர்ச அட்டையை இணைக்க வேண்டியது அவசியமாகிறது. கல்விக்கடன் திட்டங்கள், விவசாய மானியங்கள் போன்ற அனைத்து அரசு மானியங்களும், இந்த சேமிப்பு கணக்குகளுடன் இணைக்கப்பட வேண்டியதும் அவசியமாகிறது. உயிரில்லாத கணக்குடையவர்களின் அனைத்து மானியங்களும், அரசு சலுகைகளும் நிறுத்தப்பட அறிவிக்க வேண்டும். சற்று சிரமமான காரியம் என்றாலும் இதைச் சரியான முறையில் செயல்படுத்துவதன் மூலம் காலப்போக்கில் இத்திட்டம் செயலிழந்துவிடாமல் காக்கவும் முடியும். இந்தச் சேமிப்புகள் மூலமாக குறைந்தபட்சம் ரூ. 10,000 கோடி சேமிப்பாக வங்கிகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களை மேலும் சற்று கூட்டி அறிவிப்பதன் மூலமாக அதிக வட்டிக்காக ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்பதும் நிதர்சனம்.

    Share
  • நம் இந்தியப் பொருளாதாரமும் தலை நிமிர்ந்து நிற்குமா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டின் போக்குவரத்து, தொழில் வளம், தொழிலாளர் வளம், தொழில்நுட்ப தொழிலாளர்களின் எண்ணிக்கை, தங்கம், மற்றும் மக்களின் வாங்கும் சக்தி, இவைகளைக் கொண்டுதான் நிர்ணயம் செய்யப்படுகிறது. நாட்டின் எந்த ஒரு வளர்ச்சிக்கும், அடிப்படை, பிரச்சனை இல்லாத சிறந்த போக்குவரத்து வசதிகள். ஆனால் பொது மக்களுக்கு சுமையைக் கூட்டும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், பயணம் செய்வதற்கான கட்டணங்கள் எந்த முன்னறிவிப்புமின்றி 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கச் சாவடிகள் பெரும்பாலும் தனி நபர்களால் நடத்தப்படுகின்றன. இப்போது இந்தச் சுங்கச் சாவடிகளில் திடீரென்று இவ்வளவு அதிகமாகக் கட்டண உயர்விற்கான காரணம் என்ன என்பதே விளங்கவில்லை. நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தயாரிக்கப்படும் பொருள் அந்நிய செலாவணி ஈட்டித் தருவதாகவோ அல்லது மக்களின் பயன்பாட்டில் இருப்பதாக இருந்தாலும் இந்தச் சுமை விதிக்கப்படுகிறது. இது பொது மக்களையோ அல்லது உற்பத்தியாளர்களையோ சென்று அடைவதை நாமறிவோம். எப்பொழுதோ போட்ட சாலைக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் கப்பம் கட்ட வேண்டும்.. இன்னும் எவ்வளவு முறை இது உயர்த்தப்படும் என்றும் தெரியவில்லை. சில காலம் முன்பு மராட்டிய மாநிலத்தில் நடந்தது நினைவிருக்கும். நவநிர்மான் சமிதியைச் சார்ந்தவர்கள் திடீரென்று ஒரு நாள் ‘சுங்க வரி இனி ஒருவரும் செலுத்தப் போவதில்லை’ என்று கூறி சுங்கச் சாவடிகளை உடைத்து எறிந்தார்கள். உடனே மராட்டிய மாநில அரசு பேச்சு வார்த்தை நடத்தி, சுங்கச் சாவடிக் கட்டணங்களை பெருவாரியாகக் குறைத்தது. அப்படியிருக்க இப்பொழுது மீண்டும் இந்தியா முழுவதும் சுங்கக் கட்டணங்களை எதற்காக அதிகப்படுத்த வேண்டும்? ஒரு சில தனி நபர்கள் மட்டுமே இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பயன் பெறப்போகிறார்களே தவிர, இதனால் நாட்டிற்கு வேறு என்ன நன்மை விளையப்போகிறது?

    போக்குவரத்திற்கும், நாட்டிற்கும் முதுகெலும்பாக இருக்கக்கூடிய பெட்ரோலியப் பொருட்களுக்களின் விலைகள், சந்தை விலைக்கும், ரூபாயின் மதிப்பிற்கும் ஏற்றவாறு லிட்டருக்கு குறைந்தபட்சம் 15 ரூபாய் குறைக்கப்பட வேண்டும். ஆனால் அது குறைக்கப்படவில்லை. வெறும் 2 அல்லது 3 ரூபாய்தான் குறைக்கப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயுவைப் பிரபலப்படுத்தாததன் காரணத்தினால் அந்நிய செலாவணியைக் குறைக்க முடியாமல் போகிறது. ரிலையன்சு நிறுவனத்தினர் மற்ற எரிவாயு கிணறுகளிலிருந்து உற்பத்தியை எப்போது அதிகப்படுத்துவார்கள்? உற்பத்தியை அதிகப்படுத்துவதைவிட்டு ஆண்டிற்கு ஆண்டு உற்பத்தி அளவு குறைந்துகொண்டே வருவதற்கான காரணமும் விளங்கவில்லை. இதற்கான புள்ளிவிவரங்கள் மிகக் குறைவான உற்பத்தியையே காட்டுவதும் வருத்தத்திற்குரிய விசயம். இயற்கை எரிவாயுவின் உற்பத்தியை இந்திய நவரத்தின குழுமங்களின் ஒன்றான எண்ணெய் உற்பத்திக் கழகமே உற்பத்தி செய்தால் பலன் கூடும் என்பதே வல்லுநர்களின் கருத்து.

    நாள்தோறும் தங்கம் பெருமளவில் சுங்க வரி செலுத்தப்டாமலே நாட்டிற்குள் கள்ளத்தனமாக வருவதை அரசு முறைப்படுத்தினால் நலம். நகை உற்பத்தியாளர்கள் தங்கள் தேவைக்காக வாங்கக்கூடிய தங்கத்தின் அளவில் 50 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்வதோடு, தங்கள் தேவைக்கு வேண்டியதை கட்டுப்பாடின்றி இறக்குமதி செய்ய அனுமதிப்பதன் மூலமாக நமக்கு அந்நிய செலாவணி அதிகமாகக் கிடைப்பதோடு சுங்க வரியும் பெற முடியும். மறைமுகமாகத்  தங்கம் வாங்கி விற்கக்கூடிய தவறுகளையும் கட்டுப்படுத்த இயலும்.

    இந்திய ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்துவதற்கான குறிப்பிட்ட எந்த நடவடிக்கையும் இதுவரை அரசினால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. விவசாய விலை பொருட்களாகட்டும், உற்பத்திப் பொருள்களாகட்டும், இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகரித்தால் மட்டுமே இந்திய பொருளாதாரம் தலை நிமிர முடியும். மூலப் பொருட்களின் ஏற்றுமதியைக் குறைத்து, உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகப்படுத்துவதை ஊக்குவித்தால் நாட்டின் பொருளாதாரம் சீரடைவதோடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கூடும் வாய்ப்பும் அதிகரிக்கலாம்.

    அதிக வட்டிச் சுமையினால் கல்விக் கடன் வாங்குவோரின் எண்ணிக்கை சதவிகிதம் இன்று வெகுவாகக் குறைந்துள்ளது. கல்விக் கடன் முதலில் வாங்கியவர்களின் சதவிகிதத்தைவிட இன்று 25 % குறைந்து 9 சதவிகிதமாக உள்ளது. இது நாட்டின் வளர்ச்சியை மிகவும் பாதிக்கக்கூடிய ஒரு விசயம். இது போல வீட்டு கட்டுமானத்திற்கு கடன் பெறுவோர் மற்றும் அதற்கான தொகையும் கனிசமாகக் குறைந்துள்ளது. அதே சமயம், consumer durables என்று கூறக்கூடிய மக்கள் பயன்பாட்டிற்கு வாங்கக்கூடிய பொருட்களின் சதவிகிதமும், தொகையும் அதிகரித்துள்ளது. கடன் அட்டைகளுக்கான வாராத கடன் தொகையின் சதவிகிதமும் அதிகமாக உள்ளது. இவையனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தை கேள்விகுறியாக்கிக் கொண்டிருக்கிறது. அரசு, கல்விக் கடனை ஊக்குவித்து பொருளாதாரத்தை சீர் தூக்கினால் நாடே நலமடையும் என்பது உறுதி.

    Share
  • சுதந்திரம் என்பது….

     

    பவள சங்கரி

    தலையங்கம்

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

    10551014_706107949437000_8473909052027307686_nசுதந்திரம் என்பது அடிமைத் தளைகளிலிருந்து விடுபடுவது என்று பொதுவாகக் கூறுகிறோம். பசித்தவனுக்கு உணவு கிடைத்தால் அது சுதந்திரம் அவனுக்கு. துரத்தி வரும் புலிகளிடமிருந்து தப்பிக்கும்  மான்களுக்கு அதுதான் சுதந்திரம், வயல்வெளிகளிலும், காடுகளிலும்,  கூவித்திரியும் குயில்களுக்கு அந்த கானமே சுதந்திரம். நமக்கு எது சுதந்திரம்?  எந்த நாடாக இருந்தாலும், பொருளாதாரத்தில் விடுதலை பெற்றாலே அது உண்மையான சுதந்திரமாகக் கருதப்படும். 67 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15இல்  கொடியேற்றிவிட்டு சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று, மகிழ்ச்சியுடன்  ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பாடியும்விட்டு,  பின் அவரவர்  கடமைகளுக்குச் சென்றுவிடுகிறோம்.  சிந்திக்க வேண்டிய நேரம் இது. நம் இந்திய நாடு பொருளாதாரத்தில் சீர்பட மிகப் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  முந்தைய ஆட்சிக்கும்  இன்றைய ஆட்சிக்கும் சீர்திருத்த செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் ஏதும் காணமுடியவில்லை.  ரிசர்வ் வங்கி ஆளுநரின் கருத்துப்படி கடன் வாங்குவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பினும் கடன் பெற்று தொழில்களையும், தொழிற்சாலைகளையும் விரிவுபடுத்தத் தயங்கக்கூடிய நிலையே இன்று உள்ளது. தொழில் வளர்ச்சியும், மேம்படுத்தப்பட்ட பொருளாதாரமுமே தனி மனித சுதந்திரத்தை அளிக்க இயலும். 67 ஆண்டுகளுக்குப் பின்பும், மத்திய தொகுப்பு மற்றும் மாநில தொகுப்பிலிருந்தும் நுகர்வுப் பொருட்களை அதாவது உணவுப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் முண்டியடித்துச் செல்லும் நிலை இருக்கும் போது நாம் எப்படி சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் நிறைவு பெற்றன என்று பெருமைப்பட முடியும்.. உலக வங்கியின் அறிக்கை மற்றும் ஐ. நா. சபையின் அறிக்கையின்படியும், உலக மக்கள் தொகையில் 33 சதவிகிதத்தினர், இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால் இந்திய மக்கள் தொகையில் 66 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இதனை கவனத்தில்கொண்டு செயல்பட்டாலொழிய நாம் பூரண சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று பெருமைப்பட முடியாது!

    Share
  • வெகுமதிகள் தேவைதான்…..

    பவள சங்கரி

    தலையங்கம்

    மும்பை மாநகரில் இணையத் தொடர்பு அனைத்துப் பகுதிகளிலும் இலவசமாக கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது நல்ல செய்தி என்றால் அதைவிட நல்ல செய்தி அனைத்துக் கட்சியினரும் இணைந்து இந்த நல்லதொரு பணியை செய்திருப்பதுதான். வாக்குகளுக்காக இலவசங்களும், வெகுமதிகளும் வழங்குவதைக்காட்டிலும் இது போன்று ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவது வரவேற்புக்குரியது. இந்தியாவிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் இது போன்ற மாற்றம் ஏற்பட்டால் அதுதான் நம் நாட்டின் பொன்னான காலம். . நாடும் வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடும் என்பதும் உறுதி..

    பத்தாண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் ஏற்பட்ட சோக நிகழ்விற்கு இப்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காலங்கடந்த தீர்ப்பு.. இனிமேலும் இது போன்ற அவலங்கள் தொடராமல் இருக்க வேண்டும் என்ற உண்மையான நல்லெண்ணம் கொண்டவர்களாக இருப்பின், பொதுப்பணியில் இருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் சேர்ந்தோ அல்லது தனித்தோ அந்தப் பள்ளி மற்றும் இது போன்ற மோசமான நிலைகளில் இருக்கும் மற்ற கல்வி நிலையங்களையும் தத்து எடுத்துக்கொண்டு நிலையான கட்டிடங்களைக் கட்டிக்கொடுத்தால் எவ்வளவு சிறந்த செயலாக அது இருக்கும். ”தேர்தலுக்கு முன்பே நாங்கள் செய்து காட்டிவிட்டோம் தேர்தலில் எங்களைத் தேர்ந்தெடுத்தால் நாங்கள் இன்னும் உற்சாகமாகப் பணியாற்றுவோம்” என்று இப்படி ஆதாரப்பூர்வமாகக் கூறினால் மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்காமல் விடுவார்களா என்ன?

    மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டு உள்ள, மனதை உலுக்கும் சோக சம்பவம் நடந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 82 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இன்னும் எத்தனை சடலங்கள் கிடைக்குமோ தெரியவில்லை. ஒரு நாளில் மாற்றம் ஏற்பட்டு சரிவை ஏற்படுத்தக்கூடிய தன்மையுடைய மண் அல்ல அது. இலகுவான தன்மை கொண்ட மண் என்பதால் எப்போதும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்கும்போது மழைக் காலம் வருவதற்கு முன்பே அந்தப் பகுதியைச் சார்ந்த அரசியல் கட்சிகள் அந்த கிராமத்தின் மீது தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி, நிலையான கட்டுமானப் பணிகளைச் செய்திருந்தால் இந்த கோரச் சம்பவம் நிகழாமல் தடுத்திருக்கலாம். எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இந்த கோரச் சம்பவத்தால் உயிர் சேதம் ஏற்பட்டதை தவிர்த்திருக்கலாம்.

    kosi_PTI_2036476hஇந்த நிகழ்வுகளின் சோகம் மறைவதற்கு முன்பே அடுத்த நிகழ்வும் தயாராகிவிட்டது. கோசி நதியின் வெள்ளப் பெருக்கால் பீகாரில் 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு 1 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேபாள நாட்டில் உற்பத்தியாகும் கோசி நதியில், அங்கு பெய்யும் தொடர் மழை காரணமாக திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது கோசி ஆற்றில் 12 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் வந்து கொண்டு இருக்கிறது. கோசி நதி, பீகார் மாநிலத்தின் 6 மாவட்டங்கள் வழியாக மேற்கு வங்காளத்தில் சென்று வங்கக் கடலில் கலக்கிறது. கோசி நதியின் குறுக்கே உள்ள பிர்பூர் அணையில் இருந்து இப்போது வினாடிக்கு 2½ லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    கோசி நதியின் வெள்ளப்பெருக்கும், இதே போன்ற நிலச் சரிவும் நேபாளத்தையும், நமது பீகார் மாநிலத்தையும் பெரிதும் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 13 கரையோர மாவட்டங்களைச் சார்ந்த ஒரு இலட்சத்து முப்பதினாயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் களையும் குழுக்கள் நேபாளத்திற்கு ஒன்றும், பீகாருக்கு ஆறு குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன. கங்கைக்கு 2500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது போன்று இந்த மாவட்டங்களின் புனரமைப்பிற்கும் அந்த நதியை சீரமைப்பதற்கும் சில கோடிகள் ஒதுக்கினால் வருமுன் காக்க முடியும். கடந்த 2008–ம் ஆண்டு நேபாளத்தில் பெய்த மழையால் கோசி நதியில் இதே போல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பீகாரில் பேரழிவும் ஏற்பட்டது. அதில் நூற்றுக் கணக்கானோர் பலியானதும், 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதோடு, 8 லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

    மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லக்கூடிய மலைப்பாதையும் இது போன்ற இலகுவான மண் அமைப்பைக் கொண்டதே. மழைக் காலம் என்றால் பாதையில் சரிவு ஏற்படுவதும், மரங்கள் வேரோடு சாய்வதும், ஆண்டுதோறும் ஏற்படக்கூடிய நிகழ்வுகள் தான் என்று அனைவருக்கும் தெரியும். இருப்பினும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட்ட பின்புதான் நாம் அதைப்பற்றி கவனம் கொள்கிறோம். இது போன்ற மண் அமைப்புதான் மூணாறிலும் உள்ளது. மக்களுக்காகச் சேவை செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும், தொண்டர்களும் சிந்திக்க வேண்டிய விசயம் இது. மக்களுக்கான இது போன்ற பாதுகாப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை வெகுமதியாகத் தருபவர்களுக்கு வாக்களிக்க மக்களுக்கு என்ன தடை இருக்கப் போகிறது. எந்தக் கட்சியாக இருந்தால் என்ன.. உண்மையான சேவை செய்யும் கட்சி மட்டுமே மக்களைக் கவர முடியும் என்பதே சத்தியம். வருமுன் காக்க வாருங்கள் நல்லுள்ளங்களே!

    Share
  • அடுக்குமாடி குடியிருப்புகளும், ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    சென்னையில் மீண்டும் ஒரு அவலம். நில அதிர்வாலோ அல்லது சுனாமியாலோ ஏற்பட்ட பேரழிவு அல்ல. அரசு அலுவலர்களின் அலட்சியப் போக்கால் ஏற்பட்ட அவலமே இது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பாதுகாப்புச் சட்டங்கள் பல இருக்கின்றன. அவைகள் சட்ட அளவில் மட்டும் இருக்கும் போல் உள்ளது. கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்பு முறையான மண் பரிசோதனை, நில ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா என்று தெரியவில்லை. அந்த இடத்தில் ஆறு மாடிகள் கட்டலாம் என்று வல்லுநர்களின் அத்தாட்சி பெற்ற பின்புதான் பதினொரு மாடி கட்டப்பட்டது என்றால் பதினொரு மாடி கட்டி முடிக்கும் வரை அரசு பொறியாளர் எங்கு சென்றுவிட்டார். அவருடைய கவனத்திற்கு இந்தச் செய்தி எப்படி எட்டாமல் இருந்திருக்கும்? அவருடைய அலட்சியப்போக்கின் விலையாக இன்று எத்தனை உயிர்களை பலி வாங்கிவிட்டது. இந்தக் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்ட பொருட்களுக்கான தரச் சான்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இது மாநகராட்சி அலுவலர்களின் அலட்சியப் போக்கால் ஏற்பட்ட அவலம். குடியிருக்க ஒரு வீடு சொந்தமாக வேண்டும் என்ற ஆசையில் எங்கோ இருந்துகொண்டு சிரமப்பட்டு, வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி ஒரு வீட்டை வாங்குபவர்களும், இந்த கட்டுமானப் பணிகளுக்காக, வயிற்றுப்பாட்டிற்காக பீகார், ஆந்திரா, மத்திய பிரதேசம் போன்ற இடங்களிலிருந்து குடும்பத்துடன் வேலைக்கு வந்தவர்கள் என இரு சாராரும் இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டு வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள். இறந்த பிறகு அவர்களுடைய பிணங்களை வந்துப் பார்த்து ஆறுதலளிப்பதைவிட, அமைச்சர் பெருமக்கள் தங்களுக்குக் கீழ் உள்ள நிர்வாக அதிகாரிகளை சரியான முறையில் பணியாற்றச் செய்திருந்தாலே இந்த கோர சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம். கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்யாமல், இனியாவது சென்னை மாநகரைச் சுற்றி கட்டிக்கொண்டிருக்கும் குடியிருப்புகளை ஆய்வு செய்து, தரச் சான்றிதழ்கள் தருவார்களா மாநகராட்சி அலுவலர்கள் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    10514583_1459257254331310_1997140068682654040_n

    தமிழக அரசும், கட்டுமான நிறுவனங்களும், கட்டிடங்கள் கட்டுவதற்காக தங்களுடைய வயிற்றுப்பாட்டிற்காக வெளியூரிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு, உயிர் காப்பீடும், மருத்துவக் காப்பீடும் உறுதி செய்ய மனதுவைக்க வேண்டும். பல லட்சம் மதிப்புள்ள இந்தக் கட்டிடங்களை வாங்குபவர்களின் பாதுகாப்பிற்காகவும் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு காப்பீடு செய்யப்பட வேண்டும். இதில் பயன்படுத்தப்படக்கூடிய சிமெண்ட், மின்பொருட்கள், இரும்புப் பொருட்கள் போன்றவைகளின் தரம் பரிசோதிக்கப்பட வேண்டும். இனியாவது இது போன்ற மோசமான அழிவுகள் ஏற்படாமல் இருக்க அரசு ஆவண செய்ய வேண்டும். தமிழக அரசு நியமித்துள்ள ஒரு நபர் ஆணையம் இதன் போக்கில் எந்த அளவிற்கு ஆக்கப்பூர்வமாகச் செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Share
  • விலைபோகும் விளை நிலங்களும், தொடரும் தவறான அணுகுமுறைகளும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    வாய்க்கால் பாசனம் பெறக்கூடிய விளை நிலங்கள் இன்று விற்கப்பட்டு அவைகளில் உயர்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டோ அல்லது மாற்று வழி பயன்பாட்டிற்கோ கொண்டுவரப்படுகின்றன. குளங்களும், வாய்க்கால்களும் தூர் வாரப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தும் நிலை மாறி அவைகள் அழிக்கப்பட்டு மனை நிலங்களாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. நல்ல குளப் பாசனங்கள் பெறும் ஒரு சில விளை நிலங்களும் மனைகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இந்த நிலை பாரபட்சமில்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுகின்றன. இதனை எந்த அதிகாரிகளும், கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு விவசாய விளை நிலங்கள் மாற்று வழிகளுக்குப் பயன்படுத்தப் பட்டால் இன்னும் குறுகிய காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்பதில் ஐயமில்லை. அரசு இதில் கவனம் செலுத்தி விலை நிலங்கள் காக்கப்பட்டு வருங்காலத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் காக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது. அரசு, இந்த விற்பனையை உறுதி செய்பவர்கள், ஆவண பதிவாளர்கள் போன்றவர்கள் மூலமாகவோ அல்லது கிராம நிர்வாக அதிகாரிகள் மூலமாகவோ விளை நிலங்கள் பாழ்படுவதைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டியது உடனடித் தேவை.

    ரயில்வே நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே இன்று பயணிகள் கட்டணம் 14.2 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சரக்குக் கட்டணமும் 6.5 சதவிகிதம் கூட்டப்பட்டுள்ளது. இதற்கு நிர்வாகம் கூறக்கூடிய காரணம் நிதி பற்றாக்குறை என்பதே. ஒவ்வொரு அரசும் நிதிநிலை பற்றாக்குறை என்று கூறி பயணிகள் கட்டணத்தையும், சரக்குக் கட்டணத்தையும் உயர்த்துவதே வழமையாகக் கொண்டுள்ளது. பற்றாக்குறையை சரி செய்வதற்கு மாற்று வழியை சிந்திக்க வேண்டியதை விடுத்து கட்டணத்தைக் கூட்டி மக்களின் தலையில் சுமையை அதிகரிப்பது வருத்தத்திற்குரிய விசயம். பயணிகளுக்குப் பயன்படும் தனியார் உணவகங்கள் அனைத்து புகைவண்டி நிலையங்களிலும் கொண்டுவருதலும், அங்கு பயன்படுத்தாமல் இருக்கக்கூடிய பரந்த இடங்களில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் கொண்டு வருதலும், மின்சார ரயில் அதிகமாகப் பயன்படுத்தும் நேரங்களில் சூரிய ஒளி மின்சாரம் பயன்பாட்டிற்குக் கொண்டு வருதலும், நவீன முறையில் விளம்பரங்கள் செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் கிடைக்கும் அதிகப்படியான வருமானம் மூலமாக இந்தப் பற்றாக்குறையை சரி செய்ய முடியும் . இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் அரசு ஈடுபடுவதால் மக்கள் சுமை ஏறாமல் இருப்பதோடு, வேலை வாய்ப்புகளும் கூடுகிறது.

    மற்ற ஆட்சிகளைப் போலவே பாரபட்சமே இல்லாமல் விலை உயர்வுக்கு வரி விதிப்பே இந்த ஆட்சியிலும் காரணமாகியிருக்கிறது. சர்க்கரை ஆலைகளில் 4000 கோடி ரூபாய் வட்டி இல்லாத கடனாக அளித்து விவசாயிகளின் பாக்கிகளை நேர் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதுவுமின்றி அவர்கள் கட்ட வேண்டிய சுங்க வரி செலுத்துதலையும் ஐந்து ஆண்டுகள் வரை காலக்கெடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆலைகளுக்கு கரும்பு வந்தவுடன், அதிலிருந்து சர்க்கரை எடுக்கப்பட்டு, ஆலைகளை விட்டு அது வெளியேறும்போது சுங்க வரியுடனும், அவர்களுடைய இலாபத்துடனும், பணமாகப் பெற்றுக்கொண்டு அதற்குப் பிறகே சர்க்கரை வெளியேறுகிறது. இது ஒரு கிலோ சர்க்கரையாக இருப்பினும் அல்லது 120 மூட்டை (12 டன்) ஏற்றக்கூடிய அளவாக இருப்பினும் ஆலை முதலாளிகள் பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகே சர்க்கரை வெளியேறுகிறது. இப்படி ஒரு நிலையில் 4000 கோடி ரூபாய் வட்டியில்லாத கடன் அளித்தும், சுங்கவரி கட்டுவதற்கும் காலக்கெடுவை நீட்ட வேண்டிய தேவை என்ன என்ற ஐயமும் எழுகிறது. ஏழை விவசாயிகளின் கரும்புக்குத் தர வேண்டிய தொகையைக் கொடுக்காமல் இயங்கக் கூடிய ஆலைகளின் நிர்வாகத்தை சீர் செய்யவேண்டியதும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டியதும் அரசின் கடமை. அது போலவே ஆலைகளில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களைக் காப்பதும் அரசின் கடமை. நிர்வாகங்கள் செய்யக்கூடியத் தவறுகளால் வறுமையின் காரணமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகளைக் காக்க வேண்டியது அவசியம். திரு மோடி அவர்களின் அரசு மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில் இது போன்ற முக்கிய பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தி நம் பொருளாதார நலிவுகளுக்கு முக்கிய காரணமாக இது நாள் வரை இருந்த நிர்வாகச் சீர்கேடுகளை சீர் செய்து வளமான பொருளாதாரத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இறக்குமதி செய்யக்கூடிய சர்க்கரைக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தியதால், ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் விலை ஏற்றம் மக்களுக்குச் சுமையாகியுள்ளது. விலை ஏற்றத்தைத் தவிர்க்காமல் விலை ஏற்றத்திற்கு அரசு துணை போவதால் பண வீக்கம் அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாமல் போகும்.

    Share