பிரதமரின் மனிதாபிமானமிக்க புதிய நிதித் திட்டம்!!
பவள சங்கரி
தலையங்கம்
‘ஜன் தன் யோஜனா’ என்கிற அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டம் மூலமாக நம் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தம் சுதந்திர தினச் செய்தியை நடைமுறைப்படுத்தியுள்ளார். புதிய சேமிப்புத் திட்டங்களின் மூலமாக எளிமையான முறையில் சேமிப்பு வங்கிக் கணக்குகள் துவக்கப்படும் என்றும் முதல் நாளிலேயே சுமாராக ஒரு கோடி வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைப்பற்றி மிகப்பெரிய அளவில் விளம்பரங்களும் செய்யப்பட்டுள்ளன. நம் நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு வங்கிக் கணக்கு என்பதே சிம்ம சொப்பனமாக இருந்து வந்திருக்கிறது. அதனாலேயே மக்கள் தங்கள் சேமிப்புப் பணத்தை நகைச் சீட்டுத் திட்டங்கள், பொய்யான விளம்பரங்கள் மூலமாக அதிக வட்டி தருவதாகக் கூறி கொள்ளையடிக்கப்படும் பல்வேறு திட்டங்கள், தேக்கு மரத் திட்டம், ஈமு கோழி வளர்ப்புத் திட்டம் போன்ற பல திட்டங்கள் மூலமாக ஏமாந்து வருவது வாடிக்கையாக நடந்து கொண்டிருப்பதை நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். விவசாயிகளின் தற்கொலை, கந்துவட்டிக்காரர்களின் அராஜகம் இப்படி பல கொடுமைகளுக்கு நம் பிரதமரின், மனிதாபிமானம் நிறைந்த இத்திட்டம் தீர்வு சொல்லியிருக்கிறது என்றே கொள்ளலாம். ஆனாலும் நடைமுறையில் இதனை அமல்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்படலாம். வங்கிப் பணியாளர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்த்தப்பட வேண்டியதும் அவசியமாகிறது.
தற்போது சி.பி.ஐ. விசாரணையில் இருக்கும், சாரதா சிட்பண்ட் நிறுவனம். கவர்ச்சிகரமான சேமிப்புத் திட்டங்களை அறிவித்து, மக்களிடையே கோடிக்கணக்கில் நிதி திரட்டி பின் முறைகேடுகளில் ஈடுபட்டதை அடுத்து, அந்நிறுவனம் மூடப்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதுதான் கண்ட பலன். உழைத்து சம்பாதித்த பணம் கொள்ளையடிக்கப்படுவதும் பின்னாட்களில் மக்கள் அலறுவதும் வாடிக்கையாகிவிட்ட சமயத்தில் பிரதமரின் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதற்கு, ஒரு சில திட்டங்கள் அறிவித்த கொஞ்ச நாட்களிலேயே நீர்த்துப் போனதை மனதில் கொண்டு செயல்பட வேண்டுமென்றால், மக்கள் வங்கிகளில் சேமிப்பதை தங்கள் வழக்கமாகக் கொள்ள வேண்டும். இத்திட்டம் நன்முறையில் வெற்றி பெற வேண்டுமென்றால் சேமிப்புக் கணக்குகளுடன் ஆதர்ச அட்டையை இணைக்க வேண்டியது அவசியமாகிறது. கல்விக்கடன் திட்டங்கள், விவசாய மானியங்கள் போன்ற அனைத்து அரசு மானியங்களும், இந்த சேமிப்பு கணக்குகளுடன் இணைக்கப்பட வேண்டியதும் அவசியமாகிறது. உயிரில்லாத கணக்குடையவர்களின் அனைத்து மானியங்களும், அரசு சலுகைகளும் நிறுத்தப்பட அறிவிக்க வேண்டும். சற்று சிரமமான காரியம் என்றாலும் இதைச் சரியான முறையில் செயல்படுத்துவதன் மூலம் காலப்போக்கில் இத்திட்டம் செயலிழந்துவிடாமல் காக்கவும் முடியும். இந்தச் சேமிப்புகள் மூலமாக குறைந்தபட்சம் ரூ. 10,000 கோடி சேமிப்பாக வங்கிகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களை மேலும் சற்று கூட்டி அறிவிப்பதன் மூலமாக அதிக வட்டிக்காக ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்பதும் நிதர்சனம்.
நான் எழுத நினைத்து, நேரமின்மையால் எழுதாதை தெளிவாக சொன்ன ஆசிரியருக்கு ஜே.
பாமரர்களுக்கும் நன்மை; வங்கிகளுக்கும் நன்மை; பொருள் ஆதாரத்துக்கும் நல்வழி. இது வரை இந்த சீர்திருத்தம் வராததற்குக் காரணம் கறுப்புப்பண காதல். தேர்தல் காலகட்டத்தில் சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் கரன்சி புரண்டது. அது நகைக்கடைக்கு, அது, இது, லொட்டு, லொசுக்கு என்று சால்ஜாப்பு சொன்னார்கள். அவர்களுக்கு, இது வேலியாக அமையும், அடுத்த அறிக்கை மூலமாக.
வாழ்த்துக்கள்.