மேக் இன் இந்தியா!
பவள சங்கரி
தலையங்கம்
நம் இந்தியப் பிரதமர் திரு மோடி அவர்களின் பொருளாதார வளர்ச்சித் திட்டம் வாழ்த்தி வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அகில உலக மதிப்பீட்டாளர்கள், எஸ் & பி எதிர்மறை மதிப்பீட்டிலிருந்து நிலையான பொருளாதாரம் என்ற மதிப்பீட்டை அளித்திருப்பது, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மேக் இன் இந்தியா என்று பெருமையுடன் தலை நிமிர்ந்து சொல்லும்போது நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, ஜெர்மனி என்றால், ‘Work excellence’, ஜப்பான் என்றால் தொழில்நுட்பங்களும், பிரித்தானியர் என்றால் கடுமையான தரக்கட்டுப்பாடுகளும், ஜப்பான், கொரியா என்றால், புதிய பரிமாணங்களும் (Innovation) கொண்டது என்று ஒவ்வொரு நாட்டு தயாரிப்புகளுக்கும் ஒரு பொதுக்கருத்து இருப்பதுபோல, மேக் இன் இந்தியா என்றால் மிகுந்த தரக்கட்டுப்பாட்டுடன், புதுமையும், புத்தாங்கங்களும் கொண்டதாகவும், அற்புத நேர்த்திகளுடன், நம் தயாரிப்புகள் இருக்க வேண்டும். இவையனைத்துடனும், சந்தைப்படுத்தும்போது, அதன் விலை நிர்ணயங்கள் மற்ற நாட்டுத் தயாரிப்புகளுடன் போட்டியிடத்தக்கவையாக இருத்தல் அவசியம். அப்படி இருந்தால் நம்முடைய மேக் இன் இந்தியா என்ற புதிய பொருளாதாரக் கோட்பாடு வெற்றியடையும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இதற்கு நாம் செய்ய வேண்டியவைகள் கற்பனையான விளம்பரங்களை விடுத்து, உண்மையான அக்கறையுடன் ஒவ்வொரு இந்தியரும் தன்னை இதில் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்றால் தரம் மிகுந்தது, மலிவானது, செயல் திறனுடையது என்று உலக மக்களை உணர வைத்தால் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஒரு வல்லரசாகும் என்பதில் ஐயமில்லை. மேலே குறிப்பிட்ட எஸ் & பி பொருளாதார நிலைப்பாட்டில், நாமும் ++ அடையும் காலம் வெகு தொலைவில் இல்லை. இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும், தரக்கட்டுப்பாட்டை வலியுறுத்த வேண்டியதும் அவசியம். தரத்தில் சிறு விலகல் ஏற்பட்டாலும், அப்பொருட்கள் முழுவதுமாக நிராகரிக்கப்படவேண்டும்.
நம் உரூபாயின் மதிப்பை அதிகப்படுத்துதல் மிகவும் அவசியம். இதற்காக, நமது நாட்டில் கிடைக்கக்கூடிய எண்ணெய் எரிவாயு வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதலும், நிலம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசு போதிய கவனம் செலுத்தி, குதிரை பேரங்களைத் தவிர்த்து, சரியான இடம் மற்றும் கட்டிட மதிப்பீடுகளையும் வெளியிட வேண்டியதும் அவசியம். சமீபத்திய செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது போல, அரசு ஒவ்வொரு நகரங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் விலை நிர்ணயம் செய்து, அதை வங்கிகள் மூலமாக உறுதிப்படுத்தினால் நம்முடைய பொருளாதாரம் சீரடையும். உரிய சேவைக்கு, உரிய கூலி என்ற கோட்பாடை அரசு கடைப்பிடிப்பது நலம். சரியான முறையில் அரிய இக்கோட்பாடு வழிநடத்தப்பெறுமாயின், நம் கனவு நனவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அந்நிய நாடுகளின் முதலீடுகளை நாம் எவ்வாறு வரவேற்கிறோமோ அது போல நாமும் அந்நிய நாடுகளில் முதலீடு செய்வதையும் ஊக்கப்படுத்த வேண்டும். இந்த வகையில் சில முதலீட்டாளர்கள் தற்போது வெளிநாடுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்திருப்பதும் நம்பிக்கையூட்டுவதாகவே உள்ளது.
வெல்க பாரதம்!