இசைக்கவி ரமணன்

7

 

தன்னிதயக் கமலத்தில் லயித்திருப்பாள்1
தண்ணொளியைத் தான்பருகும் தரிசனத்தைப்
புன்முறுவ லாயிதழில் விரித்திருப்பாள்
போதாந்த மெளனத்தில் பொருந்தி நிற்பாள்
கன்மமெனும் அரக்கன்மேல் காலை வைத்துக்
கர்ச்சிக்கும் சிங்கத்தில் தங்கி நிற்பாள்
புன்மைகள் தீர்க்கின்ற புஷ்டி மாதா
புத்தியினில் வந்தாட்சி புரிக தாயே!

தாயுனக்கு நான்செல்லப் பிள்ளை யாயின்
தரணிக்கே நானுற்ற பிள்ளை; என்றும்
வாயினிக்க உன்பெயரே வழங்கும்; சொல்லும்
வார்த்தைகள் சத்தியமாய் முழங்கும்; வெற்றுக்
காயினிக்க வைக்கின்ற கனியே! காணும்
கண்ணுக்குள் வந்துகொஞ்சும் களியே! நின்று2
நீயிருக்கும் ஜேகேச்வரத்தில், என்றன்
நிழலாடும் பேறென்னே புஷ்டி மாதா!

எனக்கொன்று தெரியவில்லை என்றிருந்தேன்
எனக்கொன்றும் புரியவில்லை என்றறிந்தேன்
தினம்கொல்லும் மனதோடு திசைதிரிந்து
தெருப்புழுதி மிகப்படியத் தேம்பி நின்றேன்
உனக்கேநான் உனக்கேயென் றுணர்ந்தபின்னே
எனக்கினியும் என்னவேண்டும் இயம்பு தாயே!3
வினாக்குறியை வியப்பாக்கும் புஷ்டி மாதா!
விதிமாற்றிக் கதிசமைக்கும் விந்தை நீயே!

தினந்தோறும் உன்பாதம் கழுவிக்கொண்டு
தீர்த்தத்தைப் பரவசமாய் அருந்திக்கொண்டு
வனந்தோறும் வளையவரும் காற்றைப் போல
உனைச்சுற்றி உனைச்சுற்றி ஓடிக்கொண்டு
நினைந்தாலும் உன்புகழைப் பாடிக்கொண்டு
நெஞ்சார உன்னோடு பேசிக்கொண்டு
வனப்பான கன்னத்தை வருடிக்கொண்டு
வாழுமிந்தப் பேறார்க்கு வாய்க்கும் தாயே?

தொட்டுவிட முடியாத நிலகளெல்லாம்
தோகைவிரித் தாடவைத்தாய் கண்ணின் முன்னே4
விட்டுவிட முடியாத வீண்மையெல்லாம்
விலகிநின்று பார்க்கின்ற வித்தை தந்தாய்
சுட்டுவிட முடியாத வினைக்கூட்டத்தைச்
சொக்கட்டான் காய்களாக்கிச் சொல்லித் தந்தாய்
பட்டமரம் எங்குமிங்கே பாரிஜாதம்!
பாதம்போல் மிக மென்மை ஏது தாயே!

பால்தெளித்த குங்குமப்பூப் பாதம்; நூறு
பெளர்ணமியைக் கடைந்தெடுத்த வதனம்; எண்ணில்
மால்தருமோரு உடைகொண்ட வண்ணம்; நோக்கின்
மயலழித்து வாழ்த்துமந்தஜாசம்
கால்சதங்கை சலசலக்கக் கலகலத்தாய்
கன்னத்தே காதணியை மின்னச் செய்தாய்
வேல்பழிக்கும் விழியாளே புஷ்டி மாதா!
நீயிருக்கும் நினைவொன்றே நிறைவு தாயே!

மூவேளை மாறுமிவள் கோலம்; அன்னை5
முழுமேனி அறியாது ஞாலம் ; கோடி
தேவாதி தேவர்தொழும் தெய்வம்; எட்டுத்
திசையெங்கும் எழில்வீசும் கருவம்! சின்னப்
பாவாடை கட்டிவரும் பாலை; எந்தப்
பாலையிலும் இவள்பசுமைச் சோலை; சற்றும்
கூவாமல் உதவிக்கு வருவாள்; எந்தன்
குறைதீர்க்க வரவழைத்தாள் புஷ்டி மாதா!

பரிசுத்தம் இவள்காட்டும் பாவம்; எந்தப்
பதவிக்கும் முடிவான பாதம்; அந்தத்
துரியநிலை பெரியநிலை அன்று! கைகள்
தொழுதழுது நிற்கட்டும் முன்பு; மிக்க
அருகிலுள தாய்த்தோன்றும் காட்சி; ஆனால்
அரிதெதிலும் அரிதிவளின் மாட்சி; யாவும்
புரிகின்ற புரியாத புதிரே! நெஞ்சைப்
புடம்போடும் என்புஷ்டிக் கருணைத் தாயே!

நீயுறவு நீசிறகு நீபரிவின் சிகரம்6
நின்நினைவு முக்தி: நினை மறப்பதே மரணம்
நீ உலவும் உண்மை; நீ நிறமற்ற வெண்மை
நினைவுகன வூடுருவும் நிகரற்ற தன்மை
நீ சரிவில் கரமே! நெஞ்சிலெழும் ஸ்வரமே!
நின் உள்ளங் கையிலென்றன் பிஞ்சு விரலே!
நினதுகடன் எனது சுகமே புஷ்டி மாதா!

என்றும்நான் உன்செல்லப் பிள்ளை எனும்போது
இதைமிஞ்சும் பதவியிவ் வண்டத்தில் ஏது?
உன்மடியில் எனது சிம்மாசனம் தாயே!
உலகாளும் போது, அமுது ஊட்டுவது நீயே!
என்றுமுள தாருக வனத்திலுறை தீயே!
எஞ்ஞான்றும் என்னுயிரின் உயிர்ச்சோதி நீயே
பொன்றாத வரமருளும் புஷ்டியுமைத் தாயே!
போற்றியுன் புகழ்பாடப் புவியில் பிறந்தேனே!

(நவம்பர் 2007, தனிமையில் இருந்தபோது)

படங்களுக்கு நன்றி

http://vedantavaibhavam.blogspot.in/2012/03/2012.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *