இசைக்கவி ரமணன்

திலகமிட்டனள்…

abhirami

கங்கைக் கரையில், ஒரு
காலைப் பொழுதில், என்
அங்கமெங்கும் தங்கம்மின்னும் நீர்த்திவலை, நான்
அமர்ந்திருந்தேனொரு ஆனந்த நிலை

கண்கள் பனிக்க, நெஞ்சம்
களியில் துள்ள, உயிர்ப்
புண்க ளாறும் போதுவரும்
புதிய சுகம், கொஞ்சம்
புயல் கொஞ்சம் தென்றலெனப் புரண்டுவரும்

தொல்லை இருளை. ஒளி
அள்ளி விழுங்கும், பகல்
துள்ளிவிளை யாடிவரும்
தூய பொழுது, அது
தொட்டுமனம் வெட்கப்பட்டுத்
தேடும் விழுது

அந்தக் கணத்தில், துளி
அண்டக் கருப்பாய்
அந்தக்கரை யோரம்வந்தாள்
அக்கறை யின்றி,
அலட்சியத்தில் ஆள்விழுங்கும் சின்னஞ் சிறுமி

என்ன கருப்பு! அதில்
என்ன திருத்தம்! அதில்
மின்னல்துள்ளும் சின்னவிழி
என்ன பொருத்தம்!

என்ன மிடுக்கு! மூக்கில்
சின்ன மினுக்கு! நெஞ்சில்
ஏறிவிளை யாடும்பிள்ளைக்
கென்ன செருக்கு!

சின்னத் தட்டினில், ஒரு
சித்திரச் சுடர், அதன்
தெற்கு மூலைதன்னிலொரு
குங்குமக் கடல், அதைச்
சீண்டிவிளை யாடும் சின்னஞ்
சிறிய விரல்!

முன்னே நின்றவள், நெஞ்சில்
முரசறைந்தாள், ஒரு
முத்தத்தினில் முக்திதரும்
காளிநானென! தேவர்
முண்டித் தடுமாறிவிழும் சோதிநானென!

முறுவலில்லை, சிறு
முனைப்புமில்லை, தன்
முன்னந்தலை சாய்த்தபடிப்
“பொட்டு வைக்கவா?” என்று
மோக இதழ் வழிக் கிள்ளை மொழியில் சொல்லி

முன்பு வந்தனள், சற்றும்
மூச்சிடாமலே, என்
முன்னிதழில் வெப்பம்வர
மூச்சுமிட்டனள், கங்கை
மொத்தக்குளிர் மூண்டவிரல் நெற்றி தொட்டனள்

தொட்ட கணத்தில், உயிர்
தூர்ந்து கிளர்ந்தே, ஒரு
விட்டம்வரை இடியுண்டு
வெலவெலக்க, குளிர்
விரல்தொட் டுயிர்குடைந்து வெடவெடக்க

பட்டாம் பூச்சிக் கண், சற்றும்
பதறாமலே, எனைப்
பார்த்திருந்த பார்வையின்னும்
பார்த்திருக்கிறேன், அந்தப்
பார்வையின் நினைப்பில் உயிர் வேர்த்திருக்கிறேன்

சின்னப் பதங்கள், தம்மைச்
சேர்த்து வைக்கிறாள், நான்
செய்வ தறியாது வீழ்ந்து தீண்டி வீழ்கிறேன்

என்னைக் கடந்தாள், வார்த்தை
ஏதுமின்றியே, நான்
ஏங்கி நிற்கிறேன், வாழ்க்கை
ஏதுமின்றியே!

26.090.2014 / வெள்ளி / 20.25 / வள்ளியூர்-சென்னை ரயிலில்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *