சுதந்திரம் என்பது….

2

 

பவள சங்கரி

தலையங்கம்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

10551014_706107949437000_8473909052027307686_nசுதந்திரம் என்பது அடிமைத் தளைகளிலிருந்து விடுபடுவது என்று பொதுவாகக் கூறுகிறோம். பசித்தவனுக்கு உணவு கிடைத்தால் அது சுதந்திரம் அவனுக்கு. துரத்தி வரும் புலிகளிடமிருந்து தப்பிக்கும்  மான்களுக்கு அதுதான் சுதந்திரம், வயல்வெளிகளிலும், காடுகளிலும்,  கூவித்திரியும் குயில்களுக்கு அந்த கானமே சுதந்திரம். நமக்கு எது சுதந்திரம்?  எந்த நாடாக இருந்தாலும், பொருளாதாரத்தில் விடுதலை பெற்றாலே அது உண்மையான சுதந்திரமாகக் கருதப்படும். 67 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15இல்  கொடியேற்றிவிட்டு சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று, மகிழ்ச்சியுடன்  ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பாடியும்விட்டு,  பின் அவரவர்  கடமைகளுக்குச் சென்றுவிடுகிறோம்.  சிந்திக்க வேண்டிய நேரம் இது. நம் இந்திய நாடு பொருளாதாரத்தில் சீர்பட மிகப் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  முந்தைய ஆட்சிக்கும்  இன்றைய ஆட்சிக்கும் சீர்திருத்த செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் ஏதும் காணமுடியவில்லை.  ரிசர்வ் வங்கி ஆளுநரின் கருத்துப்படி கடன் வாங்குவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பினும் கடன் பெற்று தொழில்களையும், தொழிற்சாலைகளையும் விரிவுபடுத்தத் தயங்கக்கூடிய நிலையே இன்று உள்ளது. தொழில் வளர்ச்சியும், மேம்படுத்தப்பட்ட பொருளாதாரமுமே தனி மனித சுதந்திரத்தை அளிக்க இயலும். 67 ஆண்டுகளுக்குப் பின்பும், மத்திய தொகுப்பு மற்றும் மாநில தொகுப்பிலிருந்தும் நுகர்வுப் பொருட்களை அதாவது உணவுப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் முண்டியடித்துச் செல்லும் நிலை இருக்கும் போது நாம் எப்படி சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் நிறைவு பெற்றன என்று பெருமைப்பட முடியும்.. உலக வங்கியின் அறிக்கை மற்றும் ஐ. நா. சபையின் அறிக்கையின்படியும், உலக மக்கள் தொகையில் 33 சதவிகிதத்தினர், இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால் இந்திய மக்கள் தொகையில் 66 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இதனை கவனத்தில்கொண்டு செயல்பட்டாலொழிய நாம் பூரண சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று பெருமைப்பட முடியாது!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சுதந்திரம் என்பது….

  1. சுதந்திர நாட்டில் பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத் தரம் உயர்வு அறிவியல் முன்னேற்றம், நாட்டின் பாதுகாப்பு இவை அனைத்தும் முதல் தரமாக அமைதல் அவசியம். இதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. உங்கள் தலையங்கம் அவற்றை வலியுறுத்துகிறது. அரசியல் சுதந்திரம் மட்டும் நாட்டு முன்னேற்றத்துக்கு உதவாது; உளரீதியாக மனத்தளவில் நாம் சுதந்திரம் பெற்றோம் என உணர்வதற்கு சரியான புரிதல் வேண்டும். இன்னமும் அடிமை புத்தியை வளர்த்துக் கொண்டு, அரைகுறை ஞானத்துடன் சுதந்திரத்தை அணுகும் சுயநலக்காரர்களை மக்கள் இனம் கண்டு கொண்டு ஒதுக்கிட வேண்டும். சுதந்திரத்துக்குப் போராடியவர்கள் ஊருக்கு ஒருசிலர் மட்டுமே. அப்போது ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்றிருந்தவர்கள் கையில் நாடு அகப்பட்டுக் கொண்டதன் வினைப்பயன் இன்று பல அல்லல்களுக்கு ஆளாகியிருக்கிறோம். சுயநலமில்லாத நாட்டுப் பற்று, உண்மையான தேசபக்தி, ஊழலற்ற பொது வாழ்க்கை இவை இருந்தால் நிச்சயம் நம் நாடு உலகில் தலைசிறந்த நாடாக விளங்குமென்பதில் ஐயமில்லை. உங்கள் தலையங்கம் இதுபோன்ற சிந்தனைகளைத் தூண்டுவதாக அமைந்தது குறித்துப் பாராட்டுக்கள்.,,

  2. pl register in mygov.nic.in a new portal for citizen government interface and share your national welfare thought . it is direct citizen interface designed by us  for citizen participating in framing new policies . earn credit points and prises too 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *