இசைக்கவி ரமணன்

 

பராசக்தி! (கேட்டு மகிழ)

10530681_820952731257554_5883851054705537964_n

 

அறிந்தவர்க்கே புதிராய், ஆனந்த வெள்ளமாய்
முடிந்தெரிந்து போனபின்னும் மூங்கில் தளிர்போலே

தெரிந்து முளைப்பவளாய், தேசத்து நாயகியாய்,

திசைகளாய் வாழ்வில் திகழ்பவளின் தாள்போற்றி!

 
தன்னந் தனியளாய்த் தனித்திருந்தும், உயிர்மீட்டும்

சின்னஞ் சிறிய சிரிப்புச் சிரிப்பவளாய், ஆங்கோர்

வன்னக் கடற்கரை வாசலிலே நின்றிருக்கும்

வாலையே உன்றன் வசந்தப் பதம் போற்றி

 
செம்மைத் தமிழுக்குத் தெம்புதரும் மதுரையில், என்

பிள்ளைக் கவிதைகளை இடையொசிந்து கேட்டிருக்கும்

அம்மே! அலங்காரி! அனற்புயலைப் புன்னகையில்

அமைதிசெயும் ராஜ மாதங்கி அடி போற்றி!

 
பரந்து கிடக்குமிந்தப் பார்வெளியில், நிலவாய்

பவனிவரும் உறவு எங்கள் பராசக்தி! துன்பமே

விரிந்திருக்கும் பாழில் நான் விழுந்து தவிக்கையிலே

விசைத்துச் சிலிர்க்கவைக்கும் வீரகீதம் பராசக்தி!

 
ஒற்றைப் பொய்க்கும் ஒருநூறு சவுக்கடிக்கும்

உண்மையின் தாயெங்கள் பராசக்தி! மானத்தை

விற்றுவிட்டுப் பற்றிலார்போல் விரவிக் கிடக்குமந்த

வீணருக்கோ கொள்ளிப் பேயெங்கள் பராசக்தி!

 
சின்னக் குழந்தையிடம் சிரிப்பாக, ஞானத்

திகிரியிலே கனலும் நெருப்பாக, அந்தக்

கன்னற் கணுக்களிலே ரசமாக, உயிர்க்

கவிதையிலோர் சாயைமட்டும் வசமாக

 
கட்டவிழ்ந்த காட்டாற்று வெள்ளமாக, மெத்தக்

கற்றவர்க்கும் கால்தடுக்கும் பள்ளமாக, புத்தி

முட்டமுட்ட முழைக்கின்ற பாறையாக, எங்கோ

முணுமுணுத்துக் கொல்லுகின்ற தேரையாக

 
ஓட ஓடச் சரியும் தொடுவானாக

உந்த உந்த விலகும் நிலவாக

பாடப் பாடப் பணிய மறுக்கும்

பரவசம் அதிசயம் பொய் எங்கள் பராசக்தி!

 
பிடரியுள் குடியிருக்கும் பீதியுள் புகுந்து ஏதோ

பிதற்றுகின்ற பேதையிவள்! பெரும்புதிர் இவள் தாதை! பனி

படர்ந்திருக்கும் இமயத்தின் பயம்சரிந்த சரிவுகளில்

பல்லவி மறந்து அலையும் பசுமழலை பராசக்தி!

 
உலகிலே இருக்கின்ற உயிரெலாம் கொன்று

உயரப் பறக்கின்ற ஒருகோடித் தீக்குழம்பை

உலையிட்டுக் கொதிக்கவைத்து உதிரமாய்க் கொட்டினாலும்

நிலைகொணாது தவிக்கின்ற நீலி எங்கள் பராசக்தி!

 
ஓடுகின்ற ஒருகோடி நரம்பெல்லாம் துடித்தாலும்

ஒவ்வோ ரணுவுமிவளை ஓஹோ என் றழைத்தாலும்

ஓடிக்கொண் டேயிருந்து ஒருநோக்கில் நகைவெட்டி

ஒளிசிதறி மறைந்துவிடும் ரெளத்திரமே பராசக்தி!

 
தீக்குழம்பில் தோணிவிட்டு, திமிர்பிடித்த கரிகளிடம்

திமில்தேடித் தலைதிருகித் திண்மைக்கு மலையுடைத்து

போக்குக்கே புரியாத போக்கில், புவியதிரப்

புறப்பட் டுலாவுகின்ற பெளருஷமே பராசக்தி!

 
கவிதையாம்! பக்தியாம்! இவளைக் கண்டாராம்! கொண்டாராம்!

கதையிலெத்தனை கதைகள்! காளியடா காளியிவள்!!

சிவிகையிலே புயலமர்ந்து திருவுலா வருமோடா?

சிற்றெறும்பு தின்வடுத்தால் யானைகளைத் தேடுமோடா?

 
அம்மா! என்றே அலறி, அகம் சிதறிச் சிதறி

அதோ அந்தத் தரைமீது தலைபிளந்து வீழ்ந்திருப்போம்!

தம்மால் ஆகாததெல்லாம் தயவில்தான் சாத்தியம், இந்தத்

தழலுக்குத் தனையறியாச் சரணம்தான் பாத்திரம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *