முந்திரிக்கொட்டை ……

0

பவள சங்கரி

தலையங்கம்

ஒரு காலத்தில் முந்திரி பேர ஊழல் பிரசித்தி பெற்றது. அது போல நம் சமையலிலும் முந்திரி பருப்பு முக்கியமான இடம் பிடித்துள்ளது. துடுக்குத் தனமாகவோ அல்லது முந்திக் கொண்டோ, எதையேனும் செய்பவர்களை முந்திரிக் கொட்டை என்று விளையாட்டாகச் சொல்வார்கள். காரணம், பெரும்பாலான பழங்களில் பழத்திற்குள்ளே இருக்கும் கொட்டை, முந்திரிப்பழத்தில் மட்டும் பழத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

பிரேசில் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டதாக இருந்தாலும், உலகளவில் முந்திரி அதிக பரப்பளவில் பயிரிடப்படுவது நம் இந்தியாவில்தான். நம் இந்தியாவில், ஒரு ஆண்டிற்கு சராசரியாக 60,000 டன் முந்திரி விளைவிக்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரள மாநிலம்தான் முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. அவை தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டு உள் நாட்டுச் சந்தைக்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

images (1)ஆரம்பத்தில் பச்சை நிறமாகத் தோன்றி, பின் பழுக்கும்போது மஞ்சள் அல்லது சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தை அடையும் இதன் பழங்கள் உண்ணப்படக் கூடியதாகவும், இனிப்பான சுவையுடன் இனிய மணமும் உடையதாக இருப்பதுடன், சிறந்த மருத்துவ குணமும் உடையதாக இருக்கிறது. மிக மெல்லிய தோலுடையதாகவும், சதைப்பகுதி மிகவும் சாறு நிறைந்ததாகவும் இருக்கும் இவைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதில் சற்று சிரமம் இருக்கலாம். இதிலிருந்து தயாரிக்கப்படும் சாறு பல வகையில் பயனுள்ளது. போலிப் பழம் என்று சொல்லக்கூடிய இந்த முந்திரிப் பழத்திற்கு வெளியே, சிறுநீரக வடிவில் காணப்படும் கடினமான ஒரு வெளி ஓட்டுப்பகுதியும், அதனுள்ளே ஒரு விதையையும் கொண்டிருக்கும். அந்த விதையே முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகிறது. இந்த முந்திரிக்கொட்டையின் மேலுள்ள கடினமான இரட்டை ஓட்டில் ஒவ்வாமையால், தோலில் நமைச்சலை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது. அதனால் இதை மிகுந்த கவனத்துடன் சரியான முறையில் வறுத்து பதப்படுத்தப்படுத்த வேண்டியதும் அவசியம்.

இந்த முந்திரிப்பழங்களை நம் நாட்டில் பெரும்பாலும் சரியான முறையில் பயன்படுத்துவது இல்லை. முந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு முந்திரிப் பழங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. வைட்டமின் சி செறிந்துள்ள இப்பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப்பொருளின் தன்மையால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்புத் தன்மை ஏற்படுகிறது. இதனைப் போக்க பழத்தை ஒரு பத்து நிமிடங்கள் நீராவியில் வேகவைத்தோ அல்லது உப்புநீரில் ஊறவைத்தோ உண்ணலாம். ஆரஞ்சுப் பழத்தை விட, முந்திரிப்பழத்தில் வைட்டமின் ‘சி’ சத்து ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதோடு, பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு நோயைக்கூட குணமாக்கும் தன்மை கொண்டுள்ளது என்றும், ‘ஸ்கர்வி’ என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குவதோடு, கிருமி நாசினியாகவும் செயல்பட்டு தொற்று நோய்களை குணமாக்கவும் பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதோடு, டானின் எனும் வேதிப் பொருளும் உள்ளதால் அவை ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படவும் செய்கிறது என்கின்றனர் வல்லுநர்கள். கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வை துலங்கும்.

இத்துனைச் சிறப்புமிக்க பழத்திலிருந்து பழச்சாறு, சிரப், பழக்கூழ், மிட்டாய் போன்ற பல வகையான மதிப்புக் கூட்டிய பொருட்களை தயாரித்துப் பயன்படுத்த முடியும் என்றாலும், நம் நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரிப் பழங்களில் 10 சதவிகிதம்கூட பயன்படுத்துவதில்லை என்பதுதான் நாம் இப்போது முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டிய விசயம்.

இப்பழங்களிலிருந்து பழ ரசம் எடுக்கப்பட்டு சந்தைப்படுத்தினால், பல ஆயிரம் கோடி ரூபாய்கள் விவசாயப் பெருமக்களுக்கு ஊடு பணமாகக் கிடைக்கக் கூடும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை செழிப்பாக்கக் கூடிய ஒரு வரப்பிரசாதம் எனலாம். இதன் மூலமாக வரியாக அரசாங்கத்திற்கு பல நூறு கோடி ரூபாய்களும், நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கக்கூடும். முந்திரிக்கொட்டையின் மேல்புறம் உள்ள நிலக்கடலை தொப்பி போன்ற ஓட்டுப்பகுதியையும் நாம் சரிவர பயன்படுத்துவதில்லை. இதன் பயன்கள் குறித்து நம் அரசு ஆய்வுத் (R&D) துறை ஆய்வு செய்து அதையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால், விவாசாயிகளின் வாழ்வாதாரம் மேலும் சிறப்படையும். சமீபத்தில் பெப்சி கம்பெனியின் மேலதிகாரி ஒருவர் இப்பழத்தைச் சுவைத்துவிட்டு, இதனை அவர்களின் கம்பெனி சார்பாக சந்தைப்படுத்த எண்ணுகின்றனர். நாம் விழிப்படைய வேண்டிய அவசரத் தருணமிது!

இப்படி நமது தமிழ்நாட்டில் பல வகையான இயற்கை வளங்கள் அனைத்துப் பகுதியிலும் நிரம்பியிருக்கின்றன. அவைகளை சரியான முறையில் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தால் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும், நம் இந்தியா உலக அரங்கில் பொருளாதாரத்தில் தலை சிறந்த நாடாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, வரட்சி மிகுந்த தென் மாவட்டங்களில், சுவை மிகுந்த பதநீர் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டன. அந்தப் பதநீரோ, சுவை மிகுந்தது. வயிற்றுப் புண்ணை ஆற்றுவிக்கக் கூடியது. கரிசல் மண்ணில் , கண்ணீருடன் வாழக்கூடிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடியது. விளம்பர யுகமாகிய இக்காலங்களில், அங்கு கிடைக்கக்கூடிய, பனை வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, போன்றவைகளை அரசாங்கம் மூலமாக சிறந்த முறையில் விளம்பரப்படுத்தி, சந்தைப்படுத்தினால் சிறப்பாகும். மருத்துவக் குணம் கொண்ட இவைகளை அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நம் வருமானமும் கனிசமாகக் கூடும்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், மாவட்டங்களில் 10, 15 தறிகளே வைத்திருப்பவரும் துணி தயாரிப்பது போல, கடலையே நம்பி வாழக்கூடிய கடற்கரை மாவட்ட மக்களுக்கு அங்குள்ள உப்பளங்கள் வழியாக உப்பு மற்றும் இரசாயண உரங்களையும், உப்பையும், நவீனமான எளிய முறையில், தயாரித்து சந்தைப்படுத்தினால், விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் கிடைக்கும். கண்ணீரில் வாழும் மீனவ மக்களுக்கு வளமான வாழ்வும் கிடைக்கும். ஒரு காலத்தில் பிரசித்தமாக இருந்த இறால் வளர்ப்புப் பண்ணைகள் நாளடைவில் அழிந்துவிட்டன. ஆர் & டி துறையினரின் வழிகாட்டுதலின் பேரில், இந்தப் பண்ணைகளை அமைத்து, மீண்டும் இறால்களைப் பதப்படுத்தி, ஏற்றுமதி செய்தால் அவர்களுடைய பொருளாதாரமும் வளர்ச்சியடையும் வாய்ப்பு கூடும். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் மலிந்துள்ள எண்ணற்ற வளங்களை சரியான முறையில் நெறிப்படுத்தினால், நம் இந்தியப் பொருளாதாரம் சீரடைவதோடு, நம் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்பது சத்தியம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.