Category: தலையங்கம்

தலையங்கம்

  • புதிய நிதிநிலை அறிக்கையும், மக்கள் எதிர்பார்ப்பும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை, உயர்திரு மோடி அவர்களின் அரசாங்கத்தின் முதல் நிதி அறிக்கை. மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் அறிக்கை. முந்தைய அரசு செய்த பல தவறுகளை சரி செய்தாலே நம் பொருளாதாரம் ஏற்றம் பெறலாம் என்ற நிலை இருப்பதையே வல்லுநர்களின் கருத்து தெளிவாக்குகிறது.

    1.. இன்றைய ரூயாயின் மதிப்பு குறைந்துள்ளதால் வருமான வரி பிடித்தம் என்பதற்குரிய வரம்புகளை மாற்றியமைத்தல் அவசியம். அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை, பால், காய்கறி மற்றும் விளை பொருள் விற்பனையாளர்களால் ஏற்படும் விலை ஏற்றங்கள் மக்களுக்கு சுமையாகிறது. இதுவரை அரசாங்கம் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியல்லை. வியாபாரிகள், இடு பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், தங்களுக்குக் கட்டுப்படியாகவில்லை என்று சொல்லி விலையேற்றம் செய்கிறார்கள். இதற்குத் தீர்வாக தங்கள் இடு பொருட்களின் விலையைக் குறைக்கக் கோர வேண்டுமே தவிர அந்தச் சுமையை மக்களின் மேல் திணிப்பது சரியாகாது. பண வீக்கம் அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. அரசு பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி, ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்தினால் இந்த வருமான வரி வரம்புகளை மாற்றம் செய்யத் தேவையிருக்காது. மத்திய அரசின் இந்த நிதி நிலை அறிக்கை ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்த ஆவண செய்ய வேண்டும்.

    2. பண வீக்கத்திற்கான மூல காரணம் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிதான் என்று முந்தைய அரசுகள் கூறிக்கொண்டிருந்தன. 35 ரூபாய்க்கு இருந்த பெட்ரோல் விலை இன்று ரூ. 74.45 ஆக உள்ளது. ஒரு புறம் வாகன உற்பத்தி இலட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆட்சியில் வாகன உற்பத்தி மந்த நிலையை அடைந்துள்ளது என்று கூறி சில சலுகைகளை அறிவித்தனர். இதனால் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கக் கூடிய இயற்கை எரி வாய்வு மற்றும் திரவ பெட்ரோலிய வாய்வு போன்றவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய வாகனங்களுக்கும் வரிச் சலுகைகள் அளித்திருந்தால் அன்னிய செலாவனி கையிருப்பு அதிகரித்திருக்கும். ஆயிரம் அல்லது 1200 சி.சி. களுக்குள்ளான அனைத்து வாகனங்களுக்கும் இயற்கை எரிவாய்வு மற்றும் திரவ பெட்ரோலிய வாய்வு பயன்பாட்டையும் கட்டாயப்படுத்தினால் நலம் பயக்கும். அதேபோல் இரு சக்கர வாகனங்களிலும் எரி பொருளாக இந்த இயற்கை எரி வாய்வுகளைக் கொண்டு வந்தால் நமக்கு பல லட்சம் கோடி அன்னிய செலாவணி மீதியாகலாம். இதற்கு ஏதுவாக அனைத்து பெட்ரோலிய நிலையங்களிலும் எரி வாய்வு நிரப்புதலை கட்டாயமாக்கினால் நன்றாக இருக்கும். மிகப் பெரிய நகரங்களில் கூட திரவ எரிவாய்வு நிரப்பும் நிலையங்கள் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய செய்தி. இதைத் தவிர்த்து இரு சக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் மின்சாரத்தை எரி பொருளாகப் பயன்படுத்துவோருக்கு வரிச்சலுகைகள் மூலமாக ஊக்கப்படுத்தலாம் . அரசு இதை கவனத்தில் கொண்டால் நலம் விளையக் கூடும்.

    3. படித்த இளைஞர்கள் ஆய்வகங்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்றாற் போல பெரு நகரங்களில், குறைந்தபட்சம் மாவட்ட தலை நகரங்களிலாவது இந்தக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

    4. விற்பனை வரி மற்றும் VAT என்ற மதிப்புக் கூட்டுவரி முறையை மாற்றம் செய்ய வேண்டியதும் அவசியம். விற்பனை வரி, மத்திய விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி இவையனைத்தையும் ஒருங்கிணைத்து அல்லது தவிர்த்து வரி (TURN OVER TAX) என்ற வரி விதிப்பு முறையைக் கொண்டுவந்தால் எளிமையான கணக்கு வழக்குகளும், நேர்மையான கணக்கும் கிடைக்கும். இதன் மூலமாக முன்பு கிடைத்த வரி வருமானங்களை விட பல ஆயிரம் கோடி வருமானங்கள் ஒவ்வொரு மாதமும் அரசுக்குக் கிடைக்கும் வாய்ப்பாகவும் அமையும். இதனால் கருப்புப் பண புழக்கமும் கட்டுக்குள் வரும்.

    5. தங்க இறக்குமதியை கட்டுப்படுத்துவதைத் தவிர்த்து ஏற்றுமதியை ஊக்கப்படுத்தி சதவிகிதத்தை அதிகப்படுத்தினால் அன்னிய செலாவனி கையிருப்பு அதிகமாகக் கூடும்.

    6. அன்னிய செலாவனி அதிகம் அளிக்கக் கூடிய ஜவுளித் துறையில் சரியான கவனம் இதுவரை செலுத்தப்படவில்லை. இந்தியாவிலிருந்து மூலப் பொருட்களை அதாவது பருத்தியை ஏற்றுமதி செய்துவிட்டு துணியாகவோ, ஆயத்த ஆடையாகவோ இறகுமதி செய்கிறோம். இதைத் தவிர்த்து ஆயத்த ஆடைகளாவோ அல்லது துணியாகவோ ஏற்றுமதி செய்தால் மிக அதிகமான வருமானம் பெறலாம்.

    அன்னிய செலாவனி அதிகம் கையிருப்பு வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தினால் பொருளாதார நிலை சீரடையலாம் என்பது வல்லுநர்களின் கருத்து.

    அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பதிவுகளுக்குரிய சேவை வரி விகிதங்கள் கட்டிடங்களுக்குரிய எண்ணிக்கையை வைத்து வரி விதித்திருப்பதைத் தவிர்த்து கட்டுமானங்களின் மதிப்பின் அடிப்படையில் இந்த வரி விதிப்பு இருக்குமானால் அரசு ஊழியர்களும் மத்தியதர மக்களும் பெரும் பயன் அடைவார்கள். பதினொரு வீடுகளுக்குக் குறைவாக கட்டக்கூடிய நிறுவனங்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு வீட்டின் மதிப்பு 1 கோடியோ, 2 கோடியோவாகா இருந்தாலும் அதற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.குறைந்த மதிப்புள்ள வீடுகளுக்கு அதாவது 25 லட்சம் மதிப்புள்ள 100 வீடுகள் கட்டும் போது எண்ணிக்கையின் அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பால் பாதிக்கக் கூடியவர்கள் மத்திய தர பிரிவினரும், அரசு ஊழியர்கள் மட்டுமே. ஆகவே அரசு தங்களுடைய நிதி நிலை அறிக்கையில் வீட்டின் மதிப்பின் அடிப்படையில் இந்த வரிவிதிப்புகளை விதிக்க முன் வந்தால் நலம்.

    Share
  • ஜனநாயகம்

    பவள சங்கரி

    தலையங்கம்

    1989ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி, பெய்ஜிங், டியானமென் (Tiananmen) சதுக்கத்தில் மாபெரும் போராட்டம் நடந்தது. சுதந்திரத்திற்கு ஆதரவாகப் போராடிய பல ஆயிரம் மாணவர்களை தங்களுடைய இரும்புக் கரம் கொண்டு கொன்று குவித்து அந்தச் சுதந்திரப் போராளிகளை நசுக்கினர். அதன் பிறகு இந்த 25 ஆண்டு காலத்தில் எந்த விதமான போராட்டங்களோ, ஜனநாயகம் பற்றிய பேச்சோ இல்லாமல் கவனமாக பார்த்துக்கொண்டனர். ஜனநாயகத்திற்காகப் போராடிய அந்த மாணவர்களை நினைவுகூர வேண்டிய காலமிது. அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் விடுதலைக்காகப் போராடி ஜனநாயகத்தை மீட்டுக் கொண்டு வந்து தலைவரானவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள். இன்று பாரக் ஒபாமா அவர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். இவ்வாறு ஒரு சாதாரண தனி மனிதனும் தலைமைப் பொறுப்பில் வர முடியும் என்று காட்டிய அமெரிக்காவின் ஜனநாயகம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களால் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் ஆட்சி நடைமுறையில் இருப்பினும், அங்கு இருப்பது மன்னராட்சி முறை. அதாவது, மகாராணி, அவருடைய மகன், பேரன் என்று பரம்பரையாக ஆட்சி செய்யும் முறையே உள்ளது. அதனுடைய காமன்வெல்த் நாடாகிய ஆஸ்திரேலியாவில், இங்கிலாந்து அரசியாரின் பிரதிநிதி தலமையில்தான் ஆட்சி நடைபெறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கும் சுய ஆட்சி போராட்டங்கள் நடந்து அது தோல்வியைக் கண்டது. தாங்கள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வாழ்வதையே விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.

    மாபெரும் ஜனநாயக நாடான நம் இந்தியாவிலும் ஜனநாயக ஆட்சி என்ற பெயரில் பரம்பரை ஆட்சி நடைபெற்றது. காந்தியடிகள் கைகாட்டுதலால் பிரதமரான நேரு, அவர்களுக்குப் பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி, அவருடைய மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி என்று வரிசையாக ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டம் முடிந்த பிறகு இந்த காங்கிரசு கட்சியை கலைத்துவிடலாம், ஒவ்வொரு தலைவரும் அவரவர்கள் கொள்கையின் மூலம் மக்களுக்குப் பணி செய்து ஆட்சி செய்ய வரட்டும் என்ற நிலையை தொடராமல் விட்டதால் பரம்பரை ஆட்சி வந்தது. ஆனால் இன்று நம்முடைய இந்திய ஜனநாயகம், மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தி ஒரு சாதாரண தனி நபர் இந்தியாவை ஆட்சி செய்யும் அளவிற்கு வளர முடியும் என்பதை நிரூபித்துள்ளது. அதற்காக நம் இந்திய ஜனநாயகத்திற்கும், உயர்திரு மோடி அவர்களுக்கும் நம் பாராட்டுகள். பாராளுமன்றத்தில் இரண்டே உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஒரு கட்சி இன்று ஆலமரமாக வளர்ந்து வரலாறு படைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. இந்த ஜனநாயகத்தால் பிரதமர் மோடி அவர்களுக்குக் கிடைத்த இந்த மாபெரும் வெற்றியை மனதில்கொண்டு மக்களுக்காகப் பணியாற்றினால் மக்கள் அவர்களை காலத்திற்கும் மறக்காமல் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் வாய்ப்பை அளிப்பார்கள் என்பது உறுதி. காங்கிரசு பேரியக்கமே என்றாலும் இன்றைய மோசமான தோல்வியால் துவள வேண்டியதில்லை. உடனடியாக, நல்ல மக்கள் தலைவரை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதும் உண்மை. மீண்டும் அடி மட்டத்திலிருந்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய இந்த நேரத்தில் தோல்விக்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் மக்களுக்குப் பணியாற்ற ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் காங்கிரசு கட்சியின் நிலை கேள்விக்குறி ஆகிவிடும் அபாயம் உள்ளது என்பதே நிதர்சனம்.

    Share
  • வென்றிடும் பாரதம்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    031810_1447_narendradam1 (1)

    16 வது மக்களவைக்கான தேர்தல் திருவிழா நிறைவடைந்து, மக்கள் பெருவாரியாக வாக்களித்து நிலையான ஆட்சிக்குத் தோதான ஒரு தலைமையைத் தேர்ந்தெடுத்து தங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றியுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்! தனிப்பெருங் கட்சியாகத் தலை நிமிர்ந்து ஆட்சியைப் பிடித்து, பிரதமர் இருக்கையை அலங்கரிக்கப்போகும் உயர்திரு நரேந்திர மோடி அவர்கள் தம்முடைய மகத்தான வெற்றிக்குப் பிறகு ஆற்றியிருக்கும் உரையில், எந்தப் பாகுபாடுமின்றி அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவானதொரு பிரதமராகச் செயல்படப் போவதாகக் கூறியிருப்பது நம் இந்திய மக்களுக்கிடையே பெரும் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிலையானதொரு ஆட்சியை அமைத்து சரித்திரம் படைக்கும் பி.ஜே.பி. அரசு போலி மதச்சார்பின்மைவாதிகளின் பொய்யானப் பிரச்சாரத்திற்கு அழுத்தமான முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அரசும், கட்சியும் இணைந்து மிகச் சிறந்ததொரு ஆட்சியை வழங்கமுடியும் என்று நிரூபிக்கும் அந்த பொற்காலத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள் கூட்டம். கட்சியின் வண்ணம் காவியாக இருப்பினும் எண்ணம் பசுமையாக வளமான வாழ்க்கையை அளிக்கப்போவதாக இருப்பதும் உறுதியாகத் தெரிகிறது.

    ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையைப் பின்பற்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயரிய கொள்கையை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையும் துளிர்விட ஆரம்பித்துள்ளது. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஒரே இந்தியா, ஒரே சட்டம், என்ற நிலை ஏற்படுத்தப்படவேண்டும். நம் நாடு, நம் மக்கள் என்ற நிலை இருந்தால் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்ட சட்டங்கள் தேவையில்லை. கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு தமிழன் காஷ்மீரிலோ அல்லது இமாசலப் பிரதேசத்திலோ, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சென்று குடியேறி தனி மனித சுதந்திரத்திற்குப் பங்கம் வாராத நிலையை எட்டக்கூடிய உரிமையைப் பெற வேண்டும். 370 வது சட்டப்பிரிவுகள் தேவையில்லை என்ற நிலை வர வேண்டும்.

    பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் போல பிற்படுத்தப்பட்ட மாநிலங்களும் முதல்நிலை மாநிலங்களாக மாறும் வகையில் தெளிவான அணுகு முறைகளும், அதற்கு ஏற்றாற்போலத் திட்டங்களும் அமைத்தால், இந்தியா வல்லரசாக ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதே சத்தியம். அதற்கான அனைத்து வளங்களும் நம் நாட்டில் கொட்டிக்கிடப்பதும் மறுக்க இயலாத உண்மை.

    கடுமையாக உழைக்கக்கூடிய மக்களும், சரியான வழிகாட்டுதலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் எந்த குழப்பமும் இல்லாமல், எவருக்கும் அடிபணிய வேண்டிய தேவையில்லாமல் தனிப்பெரும் சக்தியாக, தன்னிச்சையாக நல்ல ஆட்சியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் உயர்திரு மோதி அவர்களின் சரியான வழிகாட்டுதலால் விரைவில் இந்தியா வல்லரசாகும் என்று நம்பும் காலம் வந்துவிட்டது. சிதைந்து கிடக்கும் பொருளாதாரத்தைச் சீர் செய்வதும், சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டியதும் போன்ற மிகப்பெரும் பொறுப்புகள் அவசரகால நடவடிக்கைகளாகக் காத்துக்கிடக்கிறது.

    சோசலிசம் என்றால் அனைவரும் ஏழையாவது அல்ல, அனைவரும் வளமாக வாழ்வது என்பதை நிரூபிக்கப்போகும் அரசை வாழ்த்தி வரவேற்போம்! அனைவருக்கும் இலவசக் கல்வி, ஆய்வகங்களைப் பயன்படுத்தும் உரிமை போன்றவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். 30 கோடி மக்கள் முகமுடையாய் என்று பாரதி பாடினான். இன்று 130 கோடி மக்களுக்கும் ஒரே தலைவராக இருந்து வழி நடத்தப்போகும் உயர்திரு மோதி அவர்களை மனமார வாழ்த்தி வரவேற்போம்! வெல்க பாரதம்.

    படத்திற்கு நன்றி:

    Narendra Damodardas Modi: The man who gets “famous” for EVERYTHING he does …

    Share
  • அட்சய திருதியையும், மூட நம்பிக்கைகளும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    அட்சய திருதியை என்ற இந்நாளை நம் இந்துக்கள் மற்றும் சமணர்கள் புனித நாளாகக் கருதுகின்றனர். இந்த அட்சய திருதியை பஞ்சாங்கம் கணிக்கப்பட்ட காலத்திலிருந்து இருக்கக்கூடிய ஒரு சிறப்பான நாள். ஆனால் இந்த ஐந்தாறு வருடங்களாகத்தான் மிக அதிகமான விளம்பரங்கள் மூலமாக மக்கள் மனதைக் கெடுத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளவர்கள் நகைக் கடைக்காரர்கள். இதனை வியாபார யுக்தியாகப் பயன்படுத்தியவர்கள், இரண்டு கிராம் தங்கம் வாங்கி வீட்டில் வைத்தால் கூட அது 200 கிராமாக விரைவில் வளரும் என்று பாமரர்களை எளிதாக மூளைச்சலவை செய்கிறார்கள். இதை நம்பி தங்கள் வாழ்வும் வளமாக மாறும் என்ற ஆசையில் தங்களுடைய கடைசி பைசாவைக் கூட குறிப்பிட்ட அந்த நாளில் நகைக் கடையில் சென்று கொட்ட ஆரம்பித்துள்ளார்கள்.. கொட்டியவர்களின் வாழ்க்கை வளமானதோ இல்லையோ, நகைக் கடைக்காரர்களின் வாழ்க்கை வளமானது. மக்கள் மணிக்கணக்காக நீண்ட வரிசையில் நின்று நகை வாங்க கையிருப்பைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த வெள்ளி வியாபாரிகளும் தங்கள் பங்கிற்கு, வெள்ளி என்றால் ‘சுக்கிரன்’ அதனால் அன்று வெள்ளி வாங்கினால் சுக்கிர திசை தேடி வந்து செல்வந்தனாக்கும், அதனால் அட்சய திருதியையில் வெள்ளி வாங்குங்கள் என்று விளம்பரம் செய்ய அங்கும் மக்கள் கூட்டம்! இதே போல துணிக் கடை, மின் சாதனங்கள், தொழில்நுட்பச் சாதனங்கள் போன்ற அனைத்தையும் பாரபட்சமில்லாமல் அட்சய திருதியையில் சேர்த்துவிட்டார்கள், அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையையும் வளர்க்கிறார்கள். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் ஊக்குவிக்கிறார்கள். அந்த வகையில் நில விற்பனையாளர்களும் இதில் பங்குபெற்றுள்ளனர்.

    இதையெல்லாம்விட மோசமான கொடுமை ராஜஸ்தானில், ஜெய்ப்பூர் அருகிலுள்ள பாகான் – கி- தானி என்ற கிராமத்தில் மக்கள் இதை நியாயப்படுத்துவதோடு அவர்கள் மேற்கொண்ட செயலைக் கேட்கும்போது உள்ளம் பதறுகிறது. பால் மனம் மாறாத பச்சிளம் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார்கள். காரணம் அட்சய திருதியையில் திருமணம் செய்தால் வாழ்க்கை பூத்துக் குலுங்கும் என்று எவரோ கிளப்பி விட்டதைக் கேட்டு, பலர் அவசர அவசரமாக, சட்டத்திற்குப் புறம்பாக, தங்கள் வீட்டுச் சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். எட்டு வயது சிறுவனுக்கும், 5 வயது சிறுமிக்கும் உள்பட இது போன்று பல திருமணங்கள் நடந்தேறியுள்ளன. ஜெய்ப்பூர் மாட மாளிகைகள் மற்றும் அரண்மனைகள் என்று ஒரு புறம் செல்வச் செழிப்போடு காணப்பட்டாலும், மறு புறம் மக்கள் பொருளாதாரச் சூழல்களைக் கருத்தில்கொண்டு, திருமணச் செலவை குறைப்பதாக எண்ணிக்கொண்டு, 7 வயது சிறுமிக்குத் திருமணம் செய்வதே தவறு என்ற போதிலும், அவளுடைய இளைய சகோதரிகளான 4, 5 வயது நிரம்பாத இளம் குழந்தைகளுக்கும் அதே மேடையில் திருமணம் செய்திருக்கிறார்கள்.

    காலச் சூழலில் சிக்கி அல்லாடும் மக்கள் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருப்பவர்களின் மன உணர்வுகளை விலை பேசும் ஒரு கூட்டம் புதிது புதிதாகத் தங்கள் வியாபார யுக்திகளைப் பெருக்குகிறார்கள். பிரதோசக் கால வழிபாடு, பௌர்ணமி பூசை, கிரிவலம் போன்ற அனைத்து ஆன்மீக நம்பிக்கைகளும் இன்று வியாபார நோக்கிலேயே செயல்படுவது நல்லதொரு மாற்றம் அல்ல. மனித உணர்வுகளைப் பணயம் வைத்து தங்கள் சுய இலாபங்களைக் கருதி திட்டம் போட்டு மக்களை ஏமாற்றுபவர்கள் மனித நேயத்தோடு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். நாமும் மூட நம்பிக்கைகளில் சிக்காமல் சுய உணர்வுடன், சிந்தித்து செயல்பட விழித்துக் கொள்ள வேண்டும். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். சேமிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்றுதான் என்றாலும், அது நம்மைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். அவரவர், தத்தம் சூழ்நிலைகளுக்கேற்ப அமைவதாக இருந்தால்தான் வளமான வாழ்வு கிடைக்குமேயொழிய விளம்பரத்தைக் கண்டு மயங்கி நின்று ஏமாந்தால் அதனால் வளம் பெறப் போகிறவர்கள் விளம்பரதாரர்கள் மட்டுமே என்ற விழிப்புணர்வும் வேண்டும்.

    Share
  • குண்டு வெடிப்பும் நம் மெத்தனமும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    சென்னை இரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்ட பிறகு மிக விரைவாக நமது ஆய்வினைத் துவக்கியுள்ளோம். பெங்களூரூ இரயில் நிலையத்தில் குறிப்பிட்ட அந்தப் பயணி ஏறியிருக்கலாம் என்று முதல் தகவல் அறிக்கை மூலம் அறிய முடிகிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே உளவுத் துறையின் மூலமாக நமக்குக் கிடைத்த தகவலின்படி, தென்னிந்தியாவில் இது போன்ற தீவிரவாதம் நிகழ்வுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை செய்துள்ளனர். அதை அலட்சியப்படுத்தாமல் இருந்திருந்தால் இன்றைய இந்த இழப்பைச் சந்திக்காமல் இருந்திருக்கலாம். மற்றுமொரு தகவல் அறிக்கையின்படி தினசரி ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் மக்கள் பயனிக்கக்கூடிய இது போன்ற மிகப்பெரும் இரயில் நிலையங்களில், பயணிகளைச் சோதிப்பது எங்கனம் சாத்தியம் என்கின்றது. சென்னை இரயில் நிலையத்தில் ஒளிவருடிகள் (ஸ்கேனர்கள்) மற்றும் கண்காணிப்புக் கருவிகள் இருந்தபோதிலும் அவைகள் பயன்படுத்தப்படுவதில்லை. சாலைப் போக்குவரத்தில் ஒரு வழிப்பாதை அமைப்பது போல இந்த கண்காணிப்பான் வழியாகத்தான் பயணிகள் அனைவரும் செல்ல வேண்டுமென்பதை கட்டாயமாக்க வேண்டியது அவசியம். இரயில் நிலையத்தின் உள்ளே வருபவர் மட்டுமன்றி வெளியேறுபவர்களும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்தான். பெரும் திரளாக மக்கள் வெளியேறக்கூடிய சூழலில் அவர்களையும் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. இரயில் நிலையங்கள் சிறியதோ அல்லது பெரியதோ அவைகள் ஒரு முனைப்படுத்த வேண்டியது அவசியம். மக்கள் பெருமளவில் கூடுகின்ற இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், நீதி மன்றங்கள், மருத்துவமனைகள், போன்ற இடங்களிலும் இத்தகையக் கட்டுப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். கண் கெட்ட பிறகு சூரிய வழிபாடு பயன் தராது! பொது இடங்களிலும், உள் கட்டமைப்புகளை அதிகப்படுத்தி, அமைதிப்பூங்காவான நம் தமிழ் நாட்டையும், இந்தியாவையும் காப்பாற்றும் முயற்சியில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். . தனி நபராக இருப்பினும், மத்திய, மாநில கூட்டமைப்புகள் தனித்தனி அமைப்புகளாக இருப்பினும் நாட்டின் பொது நலன் கருதி அவைகளின் உதவிகளையும் கோரிப் பெற்று தீர்வு காண்பதில் தயக்கம் காட்ட வேண்டியதில்லை. .  ஜெய்ஹிந்த்!

    Share
  • மே தின வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மே தினம் என்றால் பொதுவுடமைக் கட்சி போன்ற ஒரு சில கட்சிகளின் பாற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிறோம். இதையும் தவிர்த்து சில அரசியல் கட்சிகள் மே தினத்தைக் கொண்டாடுகின்றன. வழக்கம் போல ‘ஒரு நாள் விடுமுறை மறுநாள் பணி’ என்ற நிலையே இன்றும் இருக்கிறது. இன்று நாம் தொழிலாளர்கள் நல்வாழ்வைப் பற்றி சிந்திப்பதே இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள கட்சிகளிலும் கூட தொழிலாளர் நலம் பற்றியும் அவர்தம் சிரமங்கள் பற்றியும் அதிகம் அக்கறை கொள்ளாத சூழ்நிலையே காணப்படுகிறது. இந்தியா போன்ற கீழ்திசை நாடுகளில் மே 1ம் தேதி மே தினமாகவும், அமெரிக்காவில் செப்டம்பர் 1 ம்தேதி தொழிலாளர் தினமாகவும் கொண்டாடப்படுகின்றன. முதலாளித்துவ நாடாகிய அமெரிக்காவில் கூட ஒபாமா தலைமையில் இயங்கக் கூடிய அமெரிக்க அரசு ஒரு மணி நேரத்திற்கு 10. 1 டாலராக ஊதியம் நிர்ணயம் செய்துள்ளது. இது முந்தைய நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைக் காட்டிலும் 30 சதவிகிதம் அதிகமான ஊதியமாக நிர்ணயம் செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் நமது கீழ்திசை நாடுகளிலோ தொழிலாளர்களுடைய நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வே இருப்பதாகத் தெரியவில்லை. வங்காள தேசத்தின் தலை நகரில் சமீபத்தில் நடந்த தீ விபத்தில் பல நூறு தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி மாண்டுள்ளனர் என்பது வேதனைக்குரிய விசயம். பாதுகாப்பற்ற சூழ்நிலையே தொழிலாளர்களின் வாழ்வில் உள்ளது. இது அங்குமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் நாடான சீனாவிலும், கொரியாவிலும், நம் இந்தியாவிலும்கூட இது போன்ற நிலையே காணப்படுகின்றன. அது வெறும் உதாரணம் மட்டும்தான். இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் சூழ்நிலைகளின்பால் சென்றுள்ள நாம் தனி மனித வளங்களை மட்டுமே, பேணுகின்றோம். அந்த ஒரு சில மனிதர்களின் வாழ்விற்கு அடித்தளமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களின் நிலை இன்றும் அவலமாகவே உள்ளது. கனிம வளங்கள் நிறைந்த சுரங்கங்களில் பணிபுரிபவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் போன்றோரின் நிலையும் போற்றப்படுவதாக இல்லாதிருப்பது வேதனைக்குரியது. மழை பொய்த்தால் உயிர் மாய்த்தலும், சுரங்கங்களில் மாட்டிக்கொண்டால் மடிதலும் வெளி உலகிற்குத் தெரியாமலே நடைபெற்றுக் கொண்டிருக்கிற தினசரி அவலங்கள். இந்த நிலையிலிருந்து நாம் மாறி, ஆட்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கியக் காரணமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைக் காப்போம், அதனைப் பெருமளவில் பெருக்குவோம். இன்று இந்தியா பொருளாதாரத்தில் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே மூன்றாவது பெரும் பொருளாதார நாடாக மாறி தனிப்பெரும் சிறப்புப் பெற்றுள்ளது. நாம் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால் இதற்குக் காரணமான நம் தொழிலாளர் சகோதரர்களின் உழைப்பைப் போற்றும் வகையில் உழைப்பாளர் தினத்தைப் போற்றுவோம். உழைப்பவருக்கு உரிய பங்கினை மறுக்காது அளிப்போம். காகங்களைப் போல பகிர்ந்து உண்டு வாழ்வோம். ஜெய்ஹிந்த்!

    Share
  • தமிழ்நாட்டில் சுபமாக முடிந்த தேர்தல் திருவிழா!

    பவள சங்கரி

    தலையங்கம்

    தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா சுபமாக முடிந்துள்ளது. அடுத்த வானவேடிக்கை தேர்தல் முடிவுகள் வந்தவுடன் கோலாகலமாகத் தொடரும்! சென்ற முறையைவிட இந்த முறை தேர்தலில் பங்களிப்புகள் அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 14 சதவிகிதம் அதிகப்படியான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. பின் தங்கிய மாவட்டங்களில்தான் அதிகப்படியான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 81 சதவிகித வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. தனித் தொகுதிகளிலும் அதிகப்படியான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. வட மாவட்டங்கள் என்று குறிப்பிடப் படக்கூடிய சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வாக்குப் பதிவுகள் குறைந்துள்ளன. குறிப்பாக படித்த மத்தியதர மக்கள் அதிகம் வாழக்கூடிய தென் சென்னையில் தமிழ்நாட்டிலேயே மிகக் குறைவான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. இது படித்த சமுதாயத்தின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது. பல்வேறு ஊடகங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவைகளின் தனிப்பட்ட முறையிலான வேண்டுகோள்களுக்குப் பிறகும் இந்த அளவிற்குக் குறைவான வாக்குப் பதிவுகள் தென் சென்னையில் நடைபெற்றுள்ளது வெட்கத்திற்குரிய விசயம்.

    இந்தத் தேர்தலின் முக்கியமான அம்சமாக அதிகப்படியான வாக்குப் பதிவுகள் இளைய சமுதாயத்தினரிடமிருந்து வந்துள்ளது என்பதுதான். நல்லதொரு மாற்றமான இதனால் தேர்தலின் கணிப்புகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இவ்வளவு விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்குப் பிறகும் பணப் பரிமாற்றங்கள் மிக அதிக அளவில் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மக்கள் தெளிவான சிந்தனையில் இருக்கிறார்கள் என்பதும் விளங்குகிறது. முடிவுகளும் அவ்வாறே வரும் என்று நம்பலாம். மும்பையில் நடைபெற்ற தேர்தலில் எல்லோரும் பாராட்டும் வகையில் 55 சதவிகித வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. இதுவரை 40 முதல் 44 சதவிகித வாக்குப்பதிவுகளே நடைபெற்றிருக்கிறது. இதுவும் அவமானகரமான விசயம். பாண்டிச்சேரியில் 82 சதவிகிதமும், மேற்கு வங்காளத்தில் 80 சதவிகிதமும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் என்று 100 சதவிகித வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றதோ அன்றுதான் அது நமது ஜனநாயகத்திற்குக் கிடைத்த முழு வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியும். பணப் பரிமாற்றங்கள் அறவே இல்லாத ஒரு தேர்தலாகவும் அது இருக்க வேண்டும். இன்றுவரை அது சிம்ம சொப்பனமாகவே இருந்து வருவதும் வேதனைக்குரிய விசயம். வாழ்க ஜனநாயகம்!

    ஜனநாயகம் வேரூன்ற வேண்டுமென்றால் வாக்களிப்பதில் இளைய சமுதாயத்தினரின் பங்களிப்பு அதிகரித்துள்ளது போலவே அரசியலிலும் அவர்களுடைய பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்!

    ஜெய்ஹிந்த்

    Share
  • இயேசு கிறித்து உயிர்த்தெழுந்த நாள் வாழ்த்துகள் – நோட்டா ஒரு விளக்கம்

    பவள சங்கரி

    தலையங்கம்

    இயேசு கிறித்து உயிர்த்தெழுந்த நாள் வாழ்த்துகள். மக்களுக்காக வாழ்ந்த மதபோதகர் இயேசு நாதர் மீண்டும் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் நல்வாழ்விற்காகச் சிலுவையைச் சுமந்து, கல்லடிபட்டு மரித்த இயேசு பிரான் மக்கள் நல்வாழ்வு வேண்டி மீண்டும் உயிர்த்தெழுந்த நாள் இந்நாள். அவரை நினைவுகூர்ந்து போற்றுவோம். அன்றிலிருந்து இன்றுவரை கிறித்துவம் என்றால் சேவை என்ற மனப்பான்மையுடன் வாழுகின்ற கிறித்துவ சகோதர, சகோதரிகளுக்கு நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

    சுண்ணாம்புக் காளவாயில் நாவுக்கரசரைப் போட்டபோதும், கல்லோடுக் கட்டி கடலில் தூக்கிப் போட்டபோதும் இறையருளால் அந்தக் கல்லே தெப்பமாக மிதந்து வந்து அவரைக் காத்தது. அவரும்  மக்கள் நல்வாழ்விற்கு வழிகாட்டினார்.

    அரியணையைத் துறந்த புத்தர் அன்பே இறைவன் என்று கூறியதால் மாபெரும் மத போதகரானார். எந்தச் சமயமாக இருப்பினும் ‘சமயம்’ என்றால் ‘வழிகாட்டுதல், நன்னெறிப்படுத்துதல்’ என்றே பொருள் கொள்ளப்படுகிறது.

    நோட்டா ஒரு விளக்கம்

    நோட்டா என்பது நமக்கு விருப்பமில்லையென்றாலும், நம் கடமையிலிருந்து தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவும் நமது தொகுதியில் நிற்கக்கூடிய வேட்பாளர்கள் நம் கொள்கைகளுக்கு உடன்பாடாக இல்லாமல் இருப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு வாக்களிப்பதில் நமக்கு விருப்பமில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் மற்றும் நமது தொகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் மக்களுடைய பிரச்சனை, எந்தவொரு கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது அப்படியே தீர்க்கப்படாமலே இருக்கும் பட்சத்தில் நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவதற்காகவும் நோட்டோவைப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட ஒரு தொகுதியியில் நோட்டோ பதிவு முறையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு மேல் பதிவு ஏற்பட்டிருப்பின், அந்தத் தொகுதிக்கு மீண்டும் மறு தேர்தல் வைக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவர வேண்டியது அவசியம்.

    தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தலில், ஐந்து தனித் தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் வேட்பாளர்களாக இருப்பதால் மற்ற சாதியைச் சார்ந்தவர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்திருக்கிறார்கள் என்ற செய்தி வருத்தத்திற்குரியது. டாக்டர் அம்பேத்கார் போன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த தலைவர்களின் சாதனைகளையும் மனிதாபிமானச் சேவைகளையும் நாம் நினைவுகூர வேண்டியது அவசியம். அந்தக் குறிப்பிட்ட ஐந்து தொகுதிகளிலும் 7 முதல் 11 சதவிகிதம் வரையிலான மக்கள் வாக்களிப்பதைத் தவிர்த்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெத்தப் படித்த மேதாவிகளே வாக்களிக்கும் கடமையிலிருந்து தவறுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மனப்பான்மை மாறி, அனைவரும் சமம் என்ற உணர்வுடன் தேர்தலைச் சந்தித்து நமது கடமையை நிறைவேற்றுவோம்.

    ஜெய் ஹிந்த்!!!

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • தேர்தல் நிகழ்வுகளும், அவசியமான சீர்திருத்தங்களும்

     பவள சங்கரி

    தலையங்கம்

    தேர்தல் நெருங்க, நெருங்க, நடந்து கொண்டிருக்க, அரசியல் கட்சிகளின் வேகங்களும், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற துடிதுடிப்பும், ஒருவர் மீது மற்றொருவர் சேற்றை வாரி எரிதலும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் அதிகாரிகளால் பல நூறு கோடி ரூபாய்கள் கைப்பற்றப்படுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. காந்தியடிகள் கண்ட ராமராஜ்யம் இதுதானா.. இதுதான் ஜனநாயகத் தேர்தல் முறையா? இன்று காந்தியடிகள் உயிரோடு இருந்து அவர் தேர்தலில் நின்றால்கூட அவரால் இவ்வளவு செலவுசெய்து வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகம்தான். பல கோடி ரூபாய்களைச் செலவழித்து, தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் அவர்கள் மக்களுக்கு நல்லாட்சி தருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். பொது மக்கள் பேசுவது போல, “இவ்வளவு செலவு பண்ணிபோட்டு, சும்மா வேலை செய்ய முடியுமா.. தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருக்க முடியுமா.. போட்ட முதலுக்கு லாபம் எடுக்கத்தானே செய்வாங்க” என்று ஊழல் செய்பவரை நியாயப்படுத்தி அவர்களுக்குத் துணை போகும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

    நமக்கு ஊழலற்ற அரசாங்கம் வேண்டுமென்றால் அதற்கு ஆரம்பத்திலிருந்தே நாம் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். தேர்தல் முறைகளில் சில சீர்திருத்தங்கள் செய்வதன் மூலம் இது போன்ற தவறுகளை நியாயப்படுத்துதலை தவிர்க்க முடியும். அதில் முக்கியமாக, அனைத்துத் தேர்தல் செலவுகளையும் அரசே எற்க முன்வர வேண்டும். தனிப்பட்ட செலவுகள் எதையும் வேட்பாளர்கள் செய்யக்கூடாது. அப்படி இருந்தால் தான் நியாயமானவர்களும், சீரிய சிந்தனை உள்ளவர்களும், நாட்டிற்காக உண்மையாக உழைப்பவர்களும் தேர்தலில் போட்டியிட முடியும். மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களும், மக்களுக்காகப் பணியாற்றுவதற்காக தன்னையே முழுமையாக அர்ப்பணிப்பவர்களும் தேர்தலில் போட்டியிட முடியும்.

    இன்றைய செய்தித் தாள்களில் மிகப் பெரிய அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 58 மற்றும் 62 சதவிகிதங்களே பதிவாகியுள்ள நிலையில் மிக அதிகமான வாக்குப் பதிவு என்று சொல்ல வேண்டியதாக உள்ளது. அதாவது 31 சதவிகிதம் வாக்குப் பெற்றவர் 69 சதவிகித மக்களையும் சேர்த்தல்லவா ஆட்சி செய்வார்கள். ஜனநாயக முறைப்படியான தேர்தலாக இதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? ஆகவே வாக்குப் பதிவு 100 சதவிகிதம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வாக்களிப்பது மக்களுடைய உரிமை, கடமை என்று சொல்வதோடு நிற்காமல் மக்களை வாக்களிக்க கட்டாயப்படுத்துதல் வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் வாக்களிக்கத் தவறுபவர்களின் குடியுரிமை அட்டை, கடவுச்சீட்டு, பொருளாதார அட்டை (பேன் கார்ட்) போன்றவைகள் முடக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயலலாம். இதன் மூலம் நியாயமான, நேர்மையான வல்லமையுள்ள ஆட்சியாளர்களையும் பெற முடியும். லோக்பால் போன்ற மசோதாக்களின் அவசியம்கூட இருக்காது. நல்ல முறையில் தேர்தல் நடந்து, மக்கள் நல்ல ஆட்சியாளரைத் தேர்வு செய்வதால் இந்தியா வல்லரசாவதை நம் கண் முன்னாலேயே காண வாய்ப்பாகவும் அமையும்.

    ஜெய் ஹிந்த்!!!

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • மக்களுக்காக, மக்களின் கேள்வி (10)

    பவள சங்கரி

    தலையங்கம்

    மரியாதைக்குரிய இந்திய தேசத்தின் மக்களே,

    பல தன்னலமற்ற தலைவர்களால், குண்டடிபட்டு, தடியடிபட்டு இரத்தம் சிந்தி பல போராட்டங்களுக்குப் பிறகு நமக்குக் கிடைத்ததே இந்த சுதந்திரம். நம்மை நாமே ஆள்வதற்குக் கிடைத்த ஒரு அத்தாட்சி. மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக, மக்கள் ஆளும் ஆட்சி. மிகப் பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள் கூட அரசியல் ஆதாயங்களுக்காகவும், அதிகாரத்தின் மேல் உள்ள ஆசையாலும், தாங்கள் இருந்த உயரிய நிலையை மறந்து இன்று தேர்தலில் நின்றுள்ளார்கள். இந்தப் பதவி தரக்கூடிய சுகத்திற்காக ஆங்கிலேயர் போல மக்களைப் பிரித்தாவது தங்கள் வாக்குகளை சேகரித்து வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முனைகின்றனர். தனி மனித ஒழுக்கம், சேவை மனப்பான்மை, உயரிய இலட்சியங்கள் போன்ற அனைத்தும் காற்றில் பறக்க விடப்படுகின்றன. ’வெற்றி வெற்றி’ என்ற ஒன்றுதான் அரசியல்வாதிகளின் தாரக மந்திரங்களாக இருக்கின்றது. அந்த வெற்றியை அறுவடை செய்வது ஒன்றையே தங்கள் இலட்சியமாக வைத்துக்கொண்டு செயல்படுபவர்களும் இருக்கிறார்கள். வாக்குகள் வாங்கப்படுகின்றன.. விற்கப்படுகின்றன. இந்தச் சந்தையில் காந்தி கண்ட ராமராஜ்ஜியம் கிடைக்குமா? சுயராஜ்ஜியம் நிர்ணயிக்கப்படுமா. சிந்தித்து செயல்படுவோம்.. நமக்கானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வல்லமை நம் கைகளில்தான் இருக்கிறது.

    நேர்மையானவர்களையேத் தேர்ந்தெடுப்போம்
    திறமையானவர்களை அங்கீகரிப்போம்
    நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்பவர்களுக்கு ஆதரவளிப்போம்

    வாக்களிப்பது நமது கடமை
    தவறாமல் வாக்களிப்போம்

    ஜெய்ஹிந்த்

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (9)

     பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்திரு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் / பிரதம வேட்பாளர் திரு மோதி அவர்களே,

    இதுநாள் வரை தங்கள் தேர்தல் அறிக்கை வரவில்லையே என்று காத்திருந்தோம். அறிக்கையுடன் சேர்ந்து குழப்பமும் வந்துள்ளது. நிறம் மாறிவிடுவீர்களோ என்ற அச்சமும் வந்துள்ளது. தெளிவற்ற பொருளாதாரச் சிந்தனையே வெளிப்படுகிறது. உங்களிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது முன்னாள் பிரதமர் மேதகு வாஜ்பாய் அவர்களின் அணுகுமுறையை ஒட்டி உங்கள் ஆட்சி முறை இருக்குமா என்பதுதான். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தலைவர் அவர். பொருளாதாரம் மற்றும் சமூகவியல்களிலும் உங்களுடைய செயல்பாடுகள் அவரையொட்டியதாக அமையுமா? அமைதியான ஆட்சியை தங்களிடமிருந்து எதிர்பார்க்க இயலுமா?

    அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும்,

    ’காந்தியவாதியாக நடப்பேன்’ என்று கூறிக்கொண்டிருக்கிற ஒரு தலைவர் இந்த ஒரு மாதத்தில் ஐந்து முறை தாக்கப்பட்டுள்ளார். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியா? அவருடைய வளர்ச்சிக்குக் கிடைத்த பரிசா? அல்லது அவருடைய தேர்தல் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளபடி, தான் ஊழலை 100 சதவிகிதம் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியதற்கான பரிசா?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • மக்கள் கேட்கும் கேள்வி (8)

    பவள சங்கரி

    தலையங்கம்

    பெருமதிப்பிற்குரிய, திரு ராகுல் காந்தி, திரு நரேந்திர மோடி, திரு அரவிந்த் கேஜரிவால் அவர்களே,

    ஆளும் கட்சியின் உதவித் தலைவரும், கட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பவரான தாங்கள் பல ஆண்டுகளாக அமேதி தொகுதியின் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதியாக இருந்து வருகிறீர்கள். தேர்தல் நெருங்கி வருகின்ற இந்நாள் வரை உங்கள் தொகுதிக்காகவோ அல்லது இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவோ தாங்கள் செய்துள்ள சாதனைகள் என்று ஏதாவது இதுவரை வெளியிட்டிருக்கிறீர்களா? பாராளுமன்றத்தில் அதைப்பற்றி ஏதாவது பேசியிருக்கிறீர்களா? அடுத்த ஐந்தாண்டிற்கு உங்களுடைய கட்சி ஆளும் கட்சியாகப் பொறுப்பேற்கும்போது இதையெல்லாம் நாங்கள் செய்யப் போகிறோம் என்று இதுவரை நீங்கள் எதையும் கூறவில்லையே?

    குஜராத் மாநிலத்தின் தற்போதைய முதல்வரும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளருமாகிய திரு மோடி அவர்களே, தங்களுடைய ஆட்சிக் காலத்தில் குஜராத் மாநிலம் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் சமீபத்தில் வெளிவந்துள்ள புள்ளி விவரங்களின்படி குஜராத் மாநிலம் பதினாறாவது இடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமுதாய வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி இவைகளைக் கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இது. உங்களுடைய் இத்தனைஆண்டுகால ஆட்சியில் உங்களுடைய மாநிலத்தை 16 வது இடத்தில் வைத்துள்ள தாங்கள் நம் இந்தியாவை எப்படி முதல் இடத்திற்குக் கொண்டுவரப் போகிறீர்கள்? தேர்தல் அறிக்கைகளே ஒரு சடங்காக மாறிவிட்ட இன்றைய நிலையில் நாட்டினுடைய வளர்ச்சிக்காகத் தாங்கள் அளிக்கக்கூடிய ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் என்று தெளிவாகத் தங்களால் ஏதும் அறிவிக்கப்படவில்லையே? இதற்கு என்ன காரணம்?

    முன்னாள் தில்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமாகியத் தாங்கள் பல வகையில் சிறந்த செயல்பாடுகளைக் கொண்டிருந்தாலும், தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை 48 நாட்களில் உதறித் தள்ளியது சரியா? தங்களுக்கு பாரதப் பிரதமர் ஆகும் வாய்ப்பை மக்கள் அளித்தால் இதையும் தாங்கள் பாதியிலேயே விட்டுச் செல்ல மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் ? ஒரு சிறந்த நிர்வாகியாக, பிரச்சனைகளை எதிர்கொண்டு நிலைத்து நின்று ஆட்சி செய்யாமல் நீங்கள் பதவியை விட்டு விலகியது சரியா?

    பாரதப் பிரதமர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேர்தல் களத்தில் பணியாற்றும் தங்கள் மூவரிடமும் மக்கள் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்.

    தங்கள் செயல்பாடுகள் மற்றும் தங்கள் நலத் திட்டங்களை முன்வைத்து அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளர்கள் தொலைத் தொடர்பு ஊடகங்கள் மூலமாக நேரடி விவாதம் நடத்துவது போன்று ஏன் நம் நாட்டிலும் நடத்தக்கூடாது? இது போன்ற விவாதங்களை தாங்கள் நேரடியாக நடத்துவதன் மூலமாக மக்கள் சிறந்த நிர்வாகிகளை நம் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பாக அது அமையக்கூடும் அல்லவா? நாங்கள் இதை எதிர்பார்க்கலாமா?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

     

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (7)

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்திரு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு,

    நம் குடியரசு இந்தியாவின் தேர்தல்களை விருப்பு வெறுப்பற்ற முறையில், எந்த ஒரு அமைப்பையும் சாராமல் நேர்மையாக நடத்தும் தங்களுடைய சமீபத்திய அறிவிப்பின்படி தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம் என்பது எந்த வகையில் சரியாகும்? இது பற்றி சட்ட ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசனை செய்த பிறகுதான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்களா? நீங்கள் எடுத்த முடிவு சரியானது என்றால் இத்தனை ஆண்டுகள் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் தவறான ஒன்றா? இப்படி தேர்தலுக்கு முன்பாகவே வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் மக்களை திசை திருப்பிவிடாதா? அன்பளிப்பு அளித்து செய்திகள் வெளியிடக்கூடிய இந்த காலகட்டத்தில் நீங்கள் அறிவிப்பு வெளியிட்டு வெகு சில நாட்களுக்குள் இந்தியா முழுவதும் செய்தி சேகரித்து இவ்வளவு விரைவாக கருத்துக் கணிப்பை எப்படி வெளியிடமுடியும் என்ற ஐயம் வராதா? மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கும் தங்களைப் போன்றோரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக அல்லவா இருக்கவேண்டும்?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (6)

    பவள சங்கரி

    தலையங்கம்

    மதிப்பிற்குரிய ஐயா அன்னாஅசாரே அவர்களே,

    நீங்கள் புவனேசுவரத்தில் ஆரம்பித்துள்ள இரண்டாவது சுதந்திரப் போரட்டம் மூலமாக 2024 இல் மிக அதிகமாக விவசாயிகளையே பாராளுமன்ற உறுப்பினர்களாக அனுப்பப்போவதாகக் கூறியுள்ளீர்கள். உங்களுடைய முதல் போராட்டத்தின் தற்போதைய நிலை என்ன? முடிவுற்றதா? வெற்றி பெற்றுவிட்டீர்களா? ஊழலுக்கு எதிரான உங்களுடைய போராட்டத்தின் இன்றைய நிலை ஆளும் கட்சியும் எதிர் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஊழல்வாதிகளை தங்களுடைய வேட்பாளர்களாக அறிவித்துள்ளனரே. இந்த அரசியல்வாதிகளை நீங்கள் மன்னித்துவிட்டீர்களா? அன்றாடம் மக்கள் உங்களை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது இப்படி ஏதாவது புதிய போராட்டம் அறிவிக்கிறீர்களா?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

     

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (5)

    பவள சங்கரி

    தலையங்கம்

    மதிப்பிற்குரிய பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு ராஜ்நாத் சிங் அவர்களுக்கு,

    தங்கள் கட்சியைச் சார்ந்த, பல பொறுப்புகளில் இருந்த திரு யசுவந்த் சின்கா அவர்கள் என்ன தவறு செய்தார்? நாங்கள் அறிந்த வகையில் எதிர் கட்சிகளும் பாராட்டும் வகையிலேயே அவருடைய பாராளுமன்ற நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அவர் தன்னுடைய தொகுதி மக்களுக்கோ அல்லது கட்சிக்கோ என்ன தவறு செய்தார் என்று புரியவில்லை. ஆறு ஆண்டுகளில் கட்சியை விட்டு அவரை நீக்கியிருக்கிறீர்களே? காங்கிரசு கட்சியிலிருந்து கட்சி மாறி வந்தவரை வேட்பாளராக அறிவித்திருப்பதற்கு என்ன காரணம்? இது போல கட்சி மாறி வருபவர்களை ஊக்குவிக்கும் தங்களால் ஊழலற்ற ஆட்சி எப்படி தர முடியும்? முதல் கோணல் முற்றும் கோணல் அல்லவா?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

     

    Share