தலையங்கம்

தேர்தல் நிகழ்வுகளும், அவசியமான சீர்திருத்தங்களும்

 பவள சங்கரி

தலையங்கம்

தேர்தல் நெருங்க, நெருங்க, நடந்து கொண்டிருக்க, அரசியல் கட்சிகளின் வேகங்களும், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற துடிதுடிப்பும், ஒருவர் மீது மற்றொருவர் சேற்றை வாரி எரிதலும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் அதிகாரிகளால் பல நூறு கோடி ரூபாய்கள் கைப்பற்றப்படுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. காந்தியடிகள் கண்ட ராமராஜ்யம் இதுதானா.. இதுதான் ஜனநாயகத் தேர்தல் முறையா? இன்று காந்தியடிகள் உயிரோடு இருந்து அவர் தேர்தலில் நின்றால்கூட அவரால் இவ்வளவு செலவுசெய்து வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகம்தான். பல கோடி ரூபாய்களைச் செலவழித்து, தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் அவர்கள் மக்களுக்கு நல்லாட்சி தருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். பொது மக்கள் பேசுவது போல, “இவ்வளவு செலவு பண்ணிபோட்டு, சும்மா வேலை செய்ய முடியுமா.. தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருக்க முடியுமா.. போட்ட முதலுக்கு லாபம் எடுக்கத்தானே செய்வாங்க” என்று ஊழல் செய்பவரை நியாயப்படுத்தி அவர்களுக்குத் துணை போகும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

நமக்கு ஊழலற்ற அரசாங்கம் வேண்டுமென்றால் அதற்கு ஆரம்பத்திலிருந்தே நாம் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். தேர்தல் முறைகளில் சில சீர்திருத்தங்கள் செய்வதன் மூலம் இது போன்ற தவறுகளை நியாயப்படுத்துதலை தவிர்க்க முடியும். அதில் முக்கியமாக, அனைத்துத் தேர்தல் செலவுகளையும் அரசே எற்க முன்வர வேண்டும். தனிப்பட்ட செலவுகள் எதையும் வேட்பாளர்கள் செய்யக்கூடாது. அப்படி இருந்தால் தான் நியாயமானவர்களும், சீரிய சிந்தனை உள்ளவர்களும், நாட்டிற்காக உண்மையாக உழைப்பவர்களும் தேர்தலில் போட்டியிட முடியும். மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களும், மக்களுக்காகப் பணியாற்றுவதற்காக தன்னையே முழுமையாக அர்ப்பணிப்பவர்களும் தேர்தலில் போட்டியிட முடியும்.

இன்றைய செய்தித் தாள்களில் மிகப் பெரிய அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 58 மற்றும் 62 சதவிகிதங்களே பதிவாகியுள்ள நிலையில் மிக அதிகமான வாக்குப் பதிவு என்று சொல்ல வேண்டியதாக உள்ளது. அதாவது 31 சதவிகிதம் வாக்குப் பெற்றவர் 69 சதவிகித மக்களையும் சேர்த்தல்லவா ஆட்சி செய்வார்கள். ஜனநாயக முறைப்படியான தேர்தலாக இதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? ஆகவே வாக்குப் பதிவு 100 சதவிகிதம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வாக்களிப்பது மக்களுடைய உரிமை, கடமை என்று சொல்வதோடு நிற்காமல் மக்களை வாக்களிக்க கட்டாயப்படுத்துதல் வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் வாக்களிக்கத் தவறுபவர்களின் குடியுரிமை அட்டை, கடவுச்சீட்டு, பொருளாதார அட்டை (பேன் கார்ட்) போன்றவைகள் முடக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயலலாம். இதன் மூலம் நியாயமான, நேர்மையான வல்லமையுள்ள ஆட்சியாளர்களையும் பெற முடியும். லோக்பால் போன்ற மசோதாக்களின் அவசியம்கூட இருக்காது. நல்ல முறையில் தேர்தல் நடந்து, மக்கள் நல்ல ஆட்சியாளரைத் தேர்வு செய்வதால் இந்தியா வல்லரசாவதை நம் கண் முன்னாலேயே காண வாய்ப்பாகவும் அமையும்.

ஜெய் ஹிந்த்!!!

வாக்களிப்போம்!

ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

விலை போகாமல் வாக்களிப்போம்!!!

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

 1. Avatar

  1952 முதல் சுத்தமான அரசியல்வாதியோ ,அதிகாரியோ இந்தியாவில் இல்லை என்பது ஹசாரா வின் வாக்குமூலம்.

  இந்தியாவில் எந்த கட்சியும் கட்சியின் அடி மட்ட தொண்டனுக்கு வேட்பாளர் அந்தஸ்த்து தரவில்லை. மாறாக செலவு செய்ய காசு வைத்திருப்பவரை வேட்பாளாராக்கியுள்ளது அவர்கள் அனைவரும் மிகப்பெரும் செல்வந்தர்கள் மட்டுமே . இந்த லட்சணத்தில் ஊழலை ஒழிப்பேன் என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொள்கிறார்கள் .

  கட்டுரையில் சொன்னது போல் “நமக்கு ஊழலற்ற அரசாங்கம் வேண்டுமென்றால் அதற்கு ஆரம்பத்திலிருந்தே நாம் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்”.

  அதை இந்த தேர்ததிலிருந்தாவது செய்வோமா .

 2. Avatar

  நல்லாட்சி நாம் காண இன்றைய நிலையில் வழியில்லை என்று தெரிந்தும் வாக்குரிமை பெற்றிருக்கிறோம் என்பதே வருத்தத்திற்குரிய சேதிதான். அடிப்படையில் மாற்றங்கள் அவசியமாய்  வேண்டும். அதற்குள்ள வழிகளை எல்லாம் மூடிவிட்டுத்தான் இன்றைய அரசியல்வாதிகள்.. சுயநல முதலைகள் மக்கள் பணத்தை விழுங்கும் அவலங்கள் தொடர்கின்றன. நல்லவர்கள் வல்லவர்களாக இருப்பதில்லை.. வல்லவர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை..  கர்மவீரர் காமராஜர் வாழ்ந்துகாட்டியிருக்கிறார்.  சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கிறார்.   படிக்காத அந்த மேதை தமிழகமே கல்வியில் முன்னணி வகிக்க அவர்தந்த திட்டங்கள்..  ஆரம்பித்த நிறுவனங்கள்..   ஒன்றல்ல.. இரண்டல்ல..  அண்ணா பல்கலைக்கழகம் முதலாக..   (கிண்டி பொறியியல் கல்லூரியாக)  அடுத்துவந்த அனைவருமே பெயர்சூடிக்கொண்டார்களே தவிர பெரிதாக ஒன்றுமில்லை.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க