Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 36

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 36

    -மேகலா இராமமூர்த்தி

    சுக்கிரீவனின் படைகளின் அளவையும் படைத்தலைவர்களைப் பற்றியும் அவனிடம் கேட்டறிந்த இராமன், இனி அடுத்துச் செய்யவேண்டியது குறித்துச் சிந்திப்போம் என்றான். அதை ஏற்றுக்கொண்ட சுக்கிரீவன், அனுமனைப் பார்த்து, ”சீதையைக் கடத்திச் சென்ற இராவணனின் இலங்காபுரி தென்திசையில் இருப்பதாய் என் அறிவு சொல்கின்றது. அனுமனே! வலிமை வாய்ந்த அத்திசைக்குச் சென்று அங்குள்ள அரக்கரை வென்று புகழ்பெறுவதற்கு உனையன்றி வேறொருவன் வேண்டுமோ?” என்று அனுமனைப் புகழ்ந்தான்.

    தென் திசைக்கண்
          இராவணன் சேண் நகர்
    என்று இசைக்கின்றது என்
          அறிவு இன்னணம்
    வன் திசைக்கு இனி
          மாருதி நீ அலால்
    வென்று இசைக்கு உரியார்
          பிறர் வேண்டுமோ. (கம்ப: நாடவிட்ட படலம் – 4559)

    ”தாரையின் மைந்தனான அங்கதனும், கரடிகளின் அரசனான சாம்பவானும் நின்னோடு வரட்டும். இரண்டு வெள்ளம் சேனைகளோடு நீங்கள் புறப்படுங்கள்” என்று அனுமனிடம் கூறிய சுக்கிரீவன், விந்த மலை, நருமதை ஆறு, வடபெண்ணை, கோதாவரி என்று அவர்கள் கடந்துசெல்ல வேண்டிய வழிகளையும் விரித்துரைத்து, ”தென்திசையின்கண் தமிழ்நாடான பாண்டிய நாட்டிலுள்ள அகன்ற பொதிய மலையிலே நிலைபெற்ற அகத்திய முனிவனது தமிழ்ச்சங்கத்தைச் சேர்வீர்களாயின், அப்பொதிய மலை  அம்முனிவன் என்றும் வாழும் உறைவிடம் ஆனபடியால் அதனை வணங்கி அப்பால் செல்லுங்கள். பொன் நிரம்பிய நீர் பெருகுகின்ற பொருநை நதியை (தாமிரபரணி) கடந்துசென்றால் யானைக் கன்றுகள் வாழும் பெரிய தாழ்வரைகளையுடைய மயேந்திர மலையையும் தென்கடலையும் காண்பீர்கள்” என்றான்.  

    தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு
         முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்
    என்றும் அவன் உறைவிடம் ஆம் ஆதலினால்
          அம்மலையை இறைஞ்சி ஏகி
    பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
          திரு நதி பின்பு ஒழிய நாகக்
    கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா
          நெடு வரையும், கடலும் காண்டிர். (கம்ப: நாடவிட்ட படலம் – 4583)

    ”அந்த இடத்தை (மயேந்திர மலை) தாண்டிச்சென்று அப்பகுதிக்கு அப்புறத்திலும் இப்புறத்திலும் ஒரு திங்கள் முழுவதும் அலைந்து திரிந்து தேடிச் சீதையைக் கண்டுபிடித்து வாருங்கள்; விரைந்து புறப்படுங்கள்!” என்று கட்டளையிட்டான் சுக்கிரீவன்.

    அப்போது இராமன் அனுமனை அருகழைத்து, கருணையொடு நோக்கி, ”நீதி நூல்களில் வலவனே! சீதையைக் காண்பாயாகில், இவள்தான் சீதை எனத் தெளியும்பொருட்டு அவளுடைய அங்க அடையாளங்களைக் கூறுகின்றேன் கேட்பாயாக” என்று அவனைத் தனியிடத்திற்கு அழைத்துச் சென்று சீதையின் அடி தொட்டு முடிவரை விவரிக்கின்றான்.

    அனுமனால்தான் சீதையைக் கண்டுபிடிக்க முடியும் எனும் நம்பிக்கை சுக்கிரீவனுக்கும் இராமனுக்கும் அழுத்தமாய் இருந்ததையே இப்பாடல்களால் நாம் அறிகின்றோம்.

    எனினும், இப்பகுதியில் சீதையின் அங்க அடையாளங்கள் குறித்து அந்நிய ஆடவனும், மாணியுமான அனுமனிடம் இராமன் வருணிப்பது வரம்புகடந்த வகையில் அமைந்திருப்பது சற்று நெருடலாகவே உள்ளது. இந்த வருணனைகளைக் கொஞ்சம் குறைத்திருந்தால் காப்பியத்தின் சிறப்பு மேலும் கூடியிருக்கும்.

    சீதையின் உடல் வருணனைகளை விலாவாரியாக விளம்பிமுடித்த இராமன், இராமனிடமிருந்துதான் அனுமன் வருகின்றான் என்று சீதை நம்பும்பொருட்டு வேறுசில செய்திகளையும் அவனிடம் சொல்லுகின்றான்.

    ”வளமிகு அயோத்திநகர் நீங்கிச் சந்திரனைத் தீண்டுகின்ற நெடிதுயர்ந்த அதன் மதிலின் அழகிய வாயிலைக் கடக்குமுன்னே எல்லையில்லாக் கொடிய காடு எதுவோ? என்று கேட்டாள் சீதை; அதை அவளிடம் நினைவுபடுத்து!” என்றான் இராமன்.  

    மல்லல் மா நகர் துறந்து
          ஏகும் நாள் மதி தொடும்
    கல்லின் மா மதிள்
          மணிக் கடை கடந்திடுதல்முன்
    எல்லை தீர்வு அரிய வெங்
         கானம் யாதோ எனச்
    சொல்லினள் அஃது எலாம்
          உணர நீ சொல்லுவாய். (கம்ப: நாடவிட்ட படலம் – 4624)

    அரண்மனையைத் தாண்டி வெளியில் எங்கும் சென்றவள் இல்லை சீதை. அதனால்தான் அயோத்தி மதிலின் வாயிலைக் கடப்பதற்குமுன், காடு அருகிலிருக்கும் என்று எண்ணிக்கொண்டு, காடு எங்கே என்று இராமனைப் பார்த்துக் கேட்டாள்.

    இதே போன்றதொரு காட்சியைச் சிலப்பதிகாரத்திலும் நாம் காணலாம். வண்ணச் சீறடிகளை மண்மகளுக்குக்கூடக் காட்டாமல் வீட்டிலேயே அடைந்துகிடந்த கண்ணகி, கோவலனோடு மதுரைக்குப் புறப்பட்டபோது புகார் நகர எல்லையிலேயே, ”மதுரை மூதூர் யாது?” (மதுரை எங்கே?) என்று கேட்டதன் எதிரொலியாகவே சீதையின் இவ்வினா அமைந்திருக்கின்றது. சிலம்பில் கம்பருக்கிருந்த காதலும் ஈடுபாடும் இராமகாதையில் ஆங்காங்கே பொருத்தமாய் வெளிப்படுகின்றன.

    சீதையைப் பற்றிய அடையாளங்களையும் அவளுரைத்த மொழிகளையும் அனுமனுக்குச் சொன்ன இராமன், அழகிய இரத்தினங்கள் பதிக்கப்பட்ட தன் மோதிரத்தையும் (கணையாழி) சீதைக்கு அடையாளமாய்க் காட்டுமாறு அனுமனிடம் தர, அதனைப் பெற்றுக்கொண்ட அனுமன் அங்கிருந்து புறப்பட்டான் ஏனைய வானர வீரர்களோடு.

    தொண்டு எனும் குணத்திற்கோர் ஒப்பற்ற இலக்கணமாய் அனுமனைத் தம் காப்பியத்தில் படைத்திருக்கின்றார் கம்பர். அங்கதனும் சாம்பவானும் துணைவர, அனைத்து இடங்களிலும் சீதையைத் தேடிக்கொண்டும் வீரச்செயல்கள் புரிந்துகொண்டும் செல்கின்றான் அனுமன். பல இடங்களில் தேடியும் சீதையைக் காணாமையால் சோர்வோடு தென்கடலை ஒட்டிய மயேந்திரமலைக்கு வருகின்றனர் வானர சேனையர்.

    அப்போது அப்பகுதியில் வாழ்ந்துவந்த கழுகரசன் சடாயுவின் அண்ணனான சம்பாதியின் வாயிலாய்ச் சீதை இராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருப்பதை அறிகின்றனர்.

    இலங்கைக்குச் செல்லவேண்டுமானால் நீண்டு பரந்த கடலைத் தாண்டவேண்டும். அந்த அரிய செயலைச் செய்யப்போவது யார் எனும் வினா அங்கே எழுந்தபோது, தன் பெருமையும் திறனும் அறியா அனுமனுக்கு அவன் பெருமையை எடுத்துரைக்கின்றான் சாம்பவான்.

    ஓர் உயிர் கீழ்நிலைக்குச் செல்லாமல் மேல்நிலைக்கு உயரவேண்டுமானால் அதற்கான அடிப்படைத் தேவை புலனொழுக்கம். அந்தப் புலனடக்கம் முழுதாய்க் கைவரப் பெற்றவன் அனுமன். அவனுடைய சாற்றரும் ஆற்றலைப் பதினொரு பாடல்களில் அவனுக்கு நினைவூட்டிய சாம்பவான், அனுமன் குறித்த மிக நுட்பமான கருத்தைப் பேசுகின்றான்.

    ”நீர் நீதிநெறியில் நிலைபெற்றுள்ளீர்; வாய்மை பொருந்தியுள்ளீர்; மகளிர் இன்பத்தை மனத்தாலும் எண்ணாது வளர்ந்துள்ளீர்; வேதங்களையெல்லாம் அவற்றின் பொருளொடு ஓதி உணர்ந்துள்ளீர்; ஊழியையும் கடந்த நெடிய ஆயுளை உடையீர்; உலகங்களைப் படைக்கின்ற முதற் கடவுளாம் பிரமதேவனே நீரென்று யாவரும் சொல்லும் அளவிற்கான சிறப்புடையீர்” என்று புகழ்கின்றான்.

    நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும்
    மாதர் நலம் பேணாது வளர்ந்தீர் மறையெலாம்
    ஓதி உணர்ந்தீர் ஊழி கடந்தீர் உலகு ஈனும்
    ஆதி அயன்தானே என யாரும் அறைகின்றீர்.
    (கம்ப: மயேந்திரப் படலம் – 4725)

    மதுவிலும் மாதர் இன்பத்திலும் வரம்பின்றிப் பொழுதைக் கழிக்கும் தன்மையுடைய இலங்கையில் ஒரு பெண்ணைத் தேடிச் செல்கின்றவன் புலனடக்கம் உடையவனாய் இருத்தல் அவசியம். அத்தகு உயர்குணம் நிரம்பப் பெற்றவன் அனுமன் என்பதையே “நினைவாலும் மாதர் நலம் பேணாது வளர்ந்தீர்” எனும் தொடர் நமக்கு உணர்த்துகின்றது. அனுமன் பண்புகளுள் உச்சமான உயர்பண்பும் அதுதான்!

    சாம்பவானின் மொழிகளால் ஊக்கம்பெற்ற அனுமன், நூறு யோசனை தூரம் நீண்டுள்ள கடலைத் தாண்டிச் சென்று இலங்கையில் சீதையைத் தேட ஒப்புக்கொள்கின்றான்.

    அனுமன் கடலைத் தாவிக் கடப்பதிலிருந்து தொடங்குகின்றது, கிட்கிந்தா காண்டத்திற்கு அடுத்து அமைந்துள்ள, சுந்தர காண்டம். இக்காண்டம் முழுமையும் நீக்கமற நிறைந்திருப்பவன் அனுமனே. அவனைப் பற்றிய சிறப்பான முன்னுரையாக அமைகின்றது சாம்பவானின் மொழிகள்.

    கம்பராமாயணத்தின் ஒவ்வொரு காண்டமும் காப்பியக் கதை எந்தப் பகுதியில் நடக்கின்றதோ அல்லது எதனை அடிப்படையாக வைத்து நடக்கின்றதோ அதையொட்டியதாகவே பெயர்பெற்றிருக்க, ஐந்தாவது காண்டமான ’சுந்தர காண்டம்’ மட்டும் இந்தப் பொதுவிதிக்கு மாறுபட்ட வகையில் பெயர் பெற்றிருப்பது ஆழ்ந்த ஆராய்ச்சிக்குரியதாய் அமைந்திருக்கின்றது.

    இக்காண்டத்தில் வீர சௌந்தரியம், பக்தி சௌந்தரியம், புலனடக்கம் எனும் சௌந்தரியம் ஆகியவை மிளிரும் சுந்தரனாகக் காட்சியளிக்கின்றான் அனுமன். காப்பியத் தலைவியான சீதையும் இக்காண்டத்தில் மீண்டும் கதைக்குள் வருகின்றாள். அவளின் தவவொழுக்க சௌந்தரியமும் காண்டத்துக்கு அழகூட்டுகின்றது. எனவே, இக்காண்டம் சுந்தர காண்டம் எனும் பெயர் பெறுவதற்கு அனுமனும் சீதையும் காரணமாகின்றனர் என்பது கம்பனில் தோய்ந்தவர்கள் ஆய்ந்துகண்ட முடிபாகும்.

    தன் ஆற்றலையெல்லாம் ஒன்றுதிரட்டிய அனுமன், பேருருக் கொண்டவனாய் (விசுவரூபம்) தன்னை மாற்றிக்கொண்டு, மயேந்திர மலையின் மீதிருந்து தாவிக் கடலின்மேல் பறக்கத் தொடங்குகின்றான். அப்போது கடலில் பல இடையூறுகளைச் சந்திக்கும் அவன், அவற்றை வெற்றிகரமாய் முறியடித்து இலங்கையிலுள்ள பவள மலையில் இறங்குகின்றான்.

    சொர்க்கத்தையே நரகம் எனச் சொல்லத் தகும் வகையில் அமைந்திருக்கும் பொன்னகரமாம் இலங்கையின் வனப்பு கண்டு வியப்படைகின்றான். சந்திர மண்டலத்தை முட்டும் மாடி வீடுகளும் அவற்றின் ஒளியும் அவனை வாய்பிளக்க வைக்கின்றன.

    ”இராவணன் கோபிப்பான் என்பதனால் இலங்கையின் மேலே செல்ல மாட்டான் கதிரவன்” என்று புகன்ற புலவோரின் கருத்து அனுமனின் நினைவுக்கு அப்போது வருகின்றது. பிறரால் பற்றமுடியாத இலங்கை மதில்களின் ஒளியைக் கண்டால் தன் கண்கள் கூசுமே என்று அஞ்சியே அங்கிருந்து அகன்று செல்லுகின்றான் பகலவன் என்பதை அவர்கள் அறியவில்லை என எண்ணுகின்றது அவன் உள்ளம்.

    முன்னம் யாவரும் இராவணன் முனியும் என்று எண்ணி
    பொன்னின் மாநகர் மீச்செலான்கதிர் எனப்புகல்வார்
    கன்னி ஆரையின் ஒளியினில் கண்வழுக்குறுதல்
    உன்னிநாள் தொறும் விலங்கினன் போதலை
     உணரார். (கம்ப: ஊர்தேடு படலம் – 4962)

    இருட்டும்வரை ஊரை நோட்டம் விட்டபடி மலைமேல் காத்திருந்த அனுமன், இருட்டியதும் தன் உருவத்தைச் சுருக்கிக்கொண்டு மெல்ல ஊருக்குள் நுழைந்தான். அவனை எதிர்த்துத் தடுத்த இலங்கையின் காவல்தெய்வமான இலங்காதேவியைத் தாக்கித் தோல்வியுறச் செய்துவிட்டுச் சீதையைத் தேடும் பணியைத் தொடங்கினான்.

    ஒவ்வொரு வீடாய்ப் புகுந்து தேடிக்கொண்டு போனவன், இராவணன் இளவலாகிய கும்பகருணன் வீட்டையடைந்தான். அங்கே அமளிமிசை ஆதிசேடனைப் போலவும், கடலினைபோலவும், பேரிருள் போலவும் தன் பிரம்மாண்ட உருவத்தால் காட்சிதந்து உறங்கிக் கிடந்த கும்பகருணனைக் கண்டு இவன் இராவணனோ என்று ஐயுற்றுச் சினந்தான்.

    கும்பகருணனை இன்னும் சற்று நெருங்கிச்சென்று பார்த்து, இவனுக்குப் பத்துத் தலைகளுமில்லை; இருபது திண்புயங்களுமில்லை; ஆதலால் இவன் இராவணன் இல்லை என்று தெளிந்து, பெருகிவரும் வடவைத் தீயையொத்த தன் சினத்தை அறிவென்னும் கடல் நீரினால் அவித்தான் அனுமன்.

    குறுகிநோக்கி மற்று அவன்தலை ஒருபதும் குறித்த
    இறுகு திண்புயம் இருபதும் இவற்குஇலை என்னா
    மறுகிஏறிய முனிவுஎனும் வடவைவெங் கனலை
    அறிவு எனும்பெரும் பரவைஅம் புனலினால்
     அவித்தான். (கம்ப: ஊர்தேடு படலம் – 5072)

    மாட மாளிகைகள், மகளிரின் ஆடரங்குகள், கடவுளர் கோயில்கள், பட்டி மண்டபங்கள் எனப் பல இடங்களிலும் தன் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்த அனுமன் அடுத்து நுழைந்தது வீடணனின் இல்லத்தில்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • இந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம், லக்னோவில் உற்பத்தி ஆலை அமைப்பு

    இந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம், லக்னோவில் உற்பத்தி ஆலை அமைப்பு

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    லக்னோவில் பிரமாஸ் எறிகணை தயாரிப்பு நிறுவகம்

    2021 ஆகஸ்டு 24 ஆம் தேதி இந்திய பிரமாஸ் வான்வெளி நிறுவகம், [BrahMos Aerospace] 300 கோடி ரூபாய்ச் செலவில் லக்னோவில் ஒரு பெரும் எறிகணை உற்பத்தி தொழிற் சாலை நிறுவப் போவதாய் அறிவித்துள்ளது. பிரமாஸ் வான்வெளி நிறுவகம் ஈரிணைப்பு தொழில் முயற்சி [Defence Research & Development Organization and Russia’s NPO Mashinostroyenia which produces the world’s fastest supersonic Cruse Missiles] (BrahMos) .

    பிரமாஸ் ஆளுநர் சுதீர் மிஸ்ரா உத்தர் பிரதேஸ் முதல் மந்திரியை அணுகித் தன் திட்டங்களைக் கூறித் தலைநகரில் 200 ஏக்கர் பரப்பு நிலம் ஒதுக்கும்படி வேண்டினார். அடுத்து மூன்று மாதங்களில் திட்டம் ஆரம்பம் ஆகும் என்றும் கூறினார். அத்திட்டம் 5500 உயர் தொழில் நுணுக்க வாதிகளுக்கும், 10,000 பொதுத் தொழிலாளிகளுக்கும் வேலை தரும் என்றும் அறிவித்தார்.

    Image result for Indian BrahMos Extended Range missiles

    பிரமாஸ் கட்டளை எறிகணை

    +++++++++++++++++++++++++++++

    ஈர்த்துக் கொள் என்னை உன்னிதயத் துக்கு.
    பூர்வப் புதிர்களை வெளிப்படுத் தெனக்கு
    விடை தேடுகிறேன் நானொரு வினாவுக்கு
    எங்கோ உள்ளது என்னுள்ளே ஆழத்தில்
    எனக்குத் தெரியும் இங்கு காணேன் என்று
    ஏற்கனவே இருக்கிற தெந்தன் மனதில்
    என்னிதயப் போக்கில் போக வேண்டும் நான்,
    எங்கெலாம் எனை யிழுத்துச் சென்றாலும்
    என்னிதயப் போக்கில் போக வேண்டும் நான்,
    எப்போது நான் அழைக்கப் பட்டாலும்
    என்னிதயப் போக்கில் போக வேண்டும் நான்,
    ஈதோ என்னிதயம் இல்லம் நோக்கி ஏகுது
    ஓம், ஓம், ஒம்.

    ஜான் லெனன், பீட்டில்ஸ் பாடகர்.

    [இந்திய கீதம்] [John Lennon, Song India (1940-1980)]

    பிரமாஸ் தாக்குகணை -1
    BrahMos Missile -1

    “பிரமாஸ் ராணுவ ஏவுகணை குறிப்பிட்ட தளப்பகுதியைத் திட்டமிட்டபடித் தாக்கியது. மேலும் ஒலிமிஞ்சிய வேகத்தில் ஏவுகணையை முடுக்கு வளைவுகளில் [Sharp Manoeuvers] செலுத்த முடியுமா வென்னும் சோதனையும் நடத்தப் பட்டது. ஏவுகணை அப்பணிகளைச் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு அதன் அசாத்திய போர்த்திறன் உறுதியானது.”

    சிவதாணு பிள்ளை தலைவர், பிரமாஸ் வான்வெளி லிமிடெட்.

    “விண்ணை நோக்கு! நாம் மட்டும் ஏகாந்தமாக இல்லை. மாபெருமிந்த பிரபஞ்சம் நம்முடன் நட்புடன் உள்ளது. கனவு கண்டு உழைப்போருக்கு மட்டும் உன்னத வெகுமதி அளிக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

    Image result for Indian BrahMos Extended Range missilesImage result for india test fires brahmos extented range missile

    “என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன்.  வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும்.  பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”

    டாக்டர் அப்துல் கலாம்.

    “கனவு காண், கனவு காண், கனவு காண்,  பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு.  சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”

    டாக்டர் அப்துல் கலாம் (இளைஞருக்குக் கூறியது )

    Image result for india test fires brahmos extented range missile

    Image result for balasore, odisha

    பலேஷ்வர், ஒரிசா [Balasore, Odisha]

    “இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து வலுவோடு நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை! இந்த உலகில் அச்சத்துக்கு இடமில்லை! வல்லமையே வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் ஒருங்கே பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.”

    டாக்டர் அப்துல் கலாம், முன்னாள் பாரத ஜனாதிபதி

    இந்தியாவுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திப்பீர்.
    இந்தியா மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்திப்பீர்,
    அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள
    மேம்பாடு களை நாமும் பெற வேண்டுமானால்!

    டாக்டர் அப்துல் கலாம்.

    இந்தியக் கட்டளை எறிகணைகள் 

    “3000 ஆண்டுகளாய் இந்திய வரலாற்றில் உலக முழுவதிலுமிருந்து அன்னியர் படையெடுத்து, எங்கள் நாட்டையும், எங்கள் மனத்தையும் பறித்துக் கொண்டது ஏனென்று கூறுவாயா? அலெக்ஸாண்டர் முதலாக கிரேக்கர், போர்ச்சுகீஸ், பிரிட்டீஷ், பிரெஞ்ச், டச் ஆகிய அன்னியர் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து எங்களுக்கு உரிமையானவற்றைக் கைப்பற்றினார். நாங்கள் அதுபோல் யார் மீதும் படையெடுக்க வில்லை. எந்த நாட்டையும் கைபற்ற வில்லை. யாருடைய நாட்டையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் மாற்றி எங்கள் வாழ்க்கை முறைகளை அங்கே திணிக்க வில்லை.”

    டாக்டர் அப்துல் கலாம், முன்னாள் பாரத ஜனாதிபதி

    ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்!
    ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்! ……
    வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!

    மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

    “முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

    டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).

    பிரமாஸ் தாக்குகணைத் திட்டம், டாக்டர் அப்துல் கலாம் பார்வை

    பிரமாஸ் தொலைநீட்சி எறிகணைச் சோதிப்பில் நாங்கள் வெற்றி பெற்றது, 248 மைலுக்கு அப்பால் உள்ள எதிர்ப்புப் பகைவரைத் தாக்கி வீழ்த்தும், அரிய படைப்பலத்தை இந்திய இராணுவ வீரருக்கு அளித்துள்ளது. பிரமாஸ் ஒலிவேகம் மிஞ்சிய தொலைநீட்சி எறிகணை உலகிலே சிறந்த ஓர் தயாரிப்பு என்று நிரூபித்திருக்கிறது.

    டாக்டர் சுதீர் மிஸ்ரா [CEO, BrahMos Aerospace]

    இந்தியா சோதித்த ஒலிவேகம் மிஞ்சிய பிரமாஸ் தாக்குகணை

    இந்தியா இதுவரைச் சோதித்த பிரிதிவி, அக்கினி, சூரியா போன்ற கட்டளை எறிகணைகளில், ரஷ்யக் கூட்டுறவில் ஆக்கிய பிரமாஸ் தாக்கு கணையே [BrahMos Supersonic Cruise Missile] ஒலிவேகம் மிஞ்சிய [மாக் -2.8 (Mach -2.8)]  அதிவேகத்தில் தற்போதைய நீட்சி 180 மைலுக்கு மிஞ்சி, முதன்முதல் 248 மைல் தூரத்தைத் தாண்டிச் சென்றுள்ளது.  இதில் ஈடுபட்டுப் பங்கு பெற்றவர் இரு குழுவினர் : இந்தியாவின் படைத்துறை ஆய்வு & விருத்தி ஆணையகம்  [Defense Research & Development Organization (DRDO) & Russia – Owned NPO] ரஷ்யாவைச் சேர்ந்த பொறிநுணுக்கரோடு இணைந்து செய்தது.  இந்திய படைத்துறை ஆய்வாளர் பிரமாஸ் ஒலிமிஞ்சிய எறிகணையைச் சோதித்து வெற்றி பெற்றது மாபெரும் வரலாற்றுச் சாதனையாய், வாஷிங்டனைச் சேர்ந்த ரயான் மாஸ் 2017 மார்ச் 14 இல் அறிவித்துள்ளார்.  இது ஏவப்பட்ட ஏவுதளம் : பலேஷ்வர், ஒரிசா [Balasore, Odisha]

    பாரதத்தில் எழுந்த விண்வெளி ஏவுகணைப் புரட்சி

    2007 ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று, அக்கினி-III ஏவுகணையின் முதல் தோல்விப் போக்கிற்குப் பிறகு 9 மாதங்கள் கழித்து, ராணுவ ஆராய்ச்சி விருத்தி துறையகத்தின் [The Defence Research & Development Organization (DRDO)] வெற்றிகரமாக ஏவுகணைப் பயிற்சி நிகழ்ந்தேறியது. அதுவே பாரதத்தின் நீள் பயண ராணுவ ஏவுகணைப் படைப்பலப் படைப்புக்கு [Long Range Missile Capability] அடித்தள மிட்டது. அக்கினி-III இரண்டாம் ஏவுகணை முயற்சி எவ்விதப் பழுதின்றி எளிதாக நிறைவேறிற்று. முதல் முயற்சி தோல்வி அடைந்ததற்கு மிகச் சிறிய பழுதே காரணம் என்று அறியப் படுகிறது. அக்கினி-III ஏவுகணையின் பயண நீள்போக்கு 3500 கி.மீடர் [2100 மைல்] தூரம். ஒருகட்ட அக்கினி-I ஏவுகணை [Single Stage Missile] செல்லக் கூடிய பயணத் தொலைவு: 700 கி.மீடர் [420 மைல்], இருகட்ட அக்கினி-II ஏவுகணையின் [Two Stage Missile] தூரம்: 2500 கி.மீடர் [1500 மைல்].

    BrahMos Weapon Missiles

    மூர்க்க ஆற்றல் படைத்த இருகட்ட ஏவுகணை அக்கினி-III முதல் கட்டத்தின் விட்டம் இரட்டையான SLV-3 ராக்கெட்டைக் கொண்டு புதுவித திடச்சக்தி உந்து நுணுக்கத்தில் DRDO துறைக்குழுவினரால் படைக்கப் பட்டது. திடச்சக்தி உந்து ராக்கெட்டுகள், திரவச்சக்தி உந்து ராக்கெட்டுகளை விட எளிதாகவும், விரைவாகவும், யந்திரக் கருவி உதவி குறைவான சாதனங்களால் ஏவிட வசதியாக உள்ளன. 1980 ஆம் ஆண்டில் திட எரிசக்தியில் இயங்கும் நான்கு கட்ட SLV-3 ராக்கெட் [Solid Propellant Four Stage Rocket] முதன்முதலாக வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு, அதற்கும் மிஞ்சிய உந்தாற்றல் கொண்ட ராக்கெட்டுகளும், கட்டளை ராணுவ ஏவுகணைகளும் [Ballistic Military Missiles] பாரதத்தில் படைக்கப்பட்டன. 1994 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வுத் துறையகம் [Indian Space Research Organization (ISRO)], திட எரிசக்தியில் ஏவப்படும் மாபெரும் துருவத் துணைக்கோள் ஏவு ராக்கெட்டை [Polar Satellite Lauch Vehicle (PSLV)] வெற்றிகரமாக ஏவியது. பாரதத்தின் SLV-3 ஏவுகணையின் முதற் கட்ட ராக்கெட்டே பிறகு அக்கினி ராணுவக் கணைகளின் அடிப்படை ஆனது.

    Image result for india test fires brahmos extented range missile

    BrahMos Truck Missiles

    சைனாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதம் ஏந்தித் திடச்சக்தியால் உந்தும் ராக்கெட்டுகளைக் கொண்டுள்ளன. சைனா 13000 கி.மீடர் [7800 மைல்] தூரம் ஏகும் பேராற்றல் வாய்ந்த திரவச்சக்தி உந்தும் DF-5 ராக்கெட்டை விருத்தி செய்துள்ளது. மேலும் பல்வேறு அணு ஆயுதக் குண்டுகளைத் தூக்கிச் செல்லும் உன்னத வலுவுடைய திடச்சக்தி உந்தும் ஒற்றை ராக்கெட்டைச் சைனா விருத்தி செய்து வருவதாக அறியப்படுகிறது. ஆழ்கடல் கப்பல் மூலமாக [Submarine-borne Missile] ஏவப்படும் JL-2 ராக்கெட் சைனாவிடம் உள்ளது. பாகிஸ்தானும் அதுபோல் திடச்சக்தி உந்து ராக்கெட் துறையில் முன்னேறி யுள்ளது. சைனாவின் M-11 ராக்கெட்டை ஒத்த நுணுக்கத்தில் பாகிஸ்தானின் கஸ்னாவி [Ghaznavi] ஏவுகணை தயாரிக்கப் பட்டுள்ளது. ஒற்றைக் கட்ட ஷாஹீன்-I, [Shaheen-I] இருகட்ட ஷாஹீன்-II [Shaheen-II] ராக்கெட்டுகளைப் பாகிஸ்தானே உள்நாட்டில் தயாரிக்க முடியும். 2004 ஆம் ஆண்டில் பயிற்சிப் பயணம் செய்த ஷாஹீன்-II 1100 கி.மீடர் [660 மைல்] தூரம் செல்லக் கூடியது.

    ரஷ்யாவும், பாரதமும் சேர்ந்து படைத்த பிரம்மாஸ்திரம்

    2007 பிப்ரவரி 4 ஆம் தேதி தரைப் படைக்கு உதவும் “ஒலி மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய பிரமாஸ்” ஏவுகணை [A Supersonic Russian-Indian Built BrahMos Missile] ஒரிஸா ஏவு தளத்தில் தூண்டப்பட்டு வெற்றிகரமாகத் தன் முதல் பயிற்சிப் பயணத்தைச் செய்தது. எட்டு மீடர் நீளமுள்ள [27 அடி] இரு கட்ட ஏவுகணை மூன்று டன் எடைக்கு மேற்பட்ட பளுவைச் சுமந்து 290 கி.மீடர் [180 மைல்] தூரம் செல்லக்கூடியது! தளத்திலிருந்து தளத்தைத் தாக்கும் [Ground-to-ground Missile] அந்த அசுர பிரம்மாஸ்திரம் 2.8 மடங்கு ஒலி வேகத்தில் [2.8 Mac Speed] << S >> வளைவில் வங்காள விரிகுடா மீது பாய்ந்து சென்றது! பிரமாஸ் ராணுவக் கணைத் திட்டத்தின் தலைவர் [Head, BrahMos Air Space Ltd.] சிவதாணு பிள்ளை, ஏவுகணை குறிப்பிட்ட தளப்பகுதியைத் துல்லியமாக அடித்த திறமையைப் பெருமையாக வெளியிட்டார். “மேலும் ஏவுகணை ஒலிமிஞ்சிய வேகத்தில் முடுக்கு வளைவுகளில் [Sharp Manoeuvers] செலுத்த முடியுமா வென்னும் சோதனையும் நடத்தப் பட்டது. ஏவுகணை அப்பணிகளைச் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப் பட்டு அதன் அசாத்திய போர்த்திறன் உறுதியானது,” என்றும் கூறினார்.

    Image result for Indian BrahMos Extended Range missiles

    ரஷ்ய-இந்திய பிரமாஸ் கணை கூட்டுத் திட்டம், ராணுவப் பயனுக்காக 1998 பிப்ரவரி மாதம் இரண்டு அரசாங்களிடையே ஒப்பந்தமானது. முதலில் முடிவான பிரமாஸ் திட்டம் கப்பலைத் தாக்கும் கடற்-பீடத்து ஏவுகணையாக [Sea-Based Anti-Ship Missile] ஆக்கத் திட்டமிடப் பட்டது. தற்போது மூழ்கப்பல், ஆகாயக் கப்பல் மூலமாக [Submarine, Air Launch Versions] ஏவப்படும் ஏவுகணைகளாகப் படைக்கப் படுகின்றன. பிரமாஸ் தளப்-பீடத்து ஏவுகணை, வான்-பீடத்து ஏவுகணைகள் [Surface-Based & Air-Based] 10 மீடர் [30 அடி] உயரத்திலிருந்து 2.8 மடங்கு ஒலி வேகத்தில் பாய்ந்து தாக்குபவை. வான் பீடத்துக் கணை 300 கி. கிராம் பளுவைத் தூக்கும் வலுவுடையது. தளப் பீடத்துக் கணை 200 கி.கிராம் பளுவைத் தூக்கும் தகுதி உடையது. பிரமாஸ் ஏவுகணைகளைச் செங்குத்தாகவோ, சாய்வாகவோ, 360 டிகிரி வட்டத் திருப்பத்தில் நகர்த்தி ஏவிட முடியும்.

    பிரமாஸ் அசுரத் தாக்குகணைகள்

    BrahMos Large Missiles

    பிரமாஸ் ஏவுகணை பல்வேறு திசைமாற்றுப் போக்குகளில் மேலும், கீழும் ஏறி யிறங்கித் தாக்கும் பொருளின் தூரத்துக்குத் தகுந்து செம்மைப் படுத்திச் செல்லக் கூடியது! ரேடாரின் கழுகுக் கண்களின் பிடிக்குத் தப்பி விடுபவை! தாக்கப்படும் பகைக் குறிச் சாதனங்களுக்கு ஒரு பெரும் சவாலாய்ப் பாய்கிறது, விரைவாகப் போகும் பிரமாஸ் கணை! தற்போது பிரமாஸை எதிர்த்தடிக்கும் ரஷ்யாவின் மாஸ்கிட் [Russia’s Moskit] போன்ற தடுப்புக் கணைகளும் [Counter Missiles] தயாராகி வருகின்றன. ஆயினும் வேகத் தாக்குக் கணைகள் ஒலி மிஞ்சிய விரைவில் பாய்ந்து செல்வதால், குறியிடத்தின் இருப்பை அறிந்து கொள்வதற்குக் போதிய காலம் கிடைப்பதில்லை! மேலும் அத்தகைய அசுர வேகத்தில் செல்லும் ஏவுகணையின் திசை மாற்றலோ, மேல் கீழிறக்குதலோ, வேகக் குறைப்போ புரிவது அத்தனை எளிய கட்டுப்பாடல்ல!

    2001 முதல் 2003 வரை கப்பல் மீதும், வாகனம் மீதும், கரை மீதும் சாய்வாகவும், செங்குத்தாகவும் அமைக்கப்பட்டு ஆறு பிரமாஸ் ஏவுகணைகள் பயிற்சி செய்யப் பட்டன. 2004 ஆண்டு டிசம்பரில் இரு பிரமாஸ் கப்பல்-தாக்கு ஏவுகணையும், தளப்-பீடத்து ஏவுகணையும், கடல்-பீடத்து [Sea-to-Sea] ஏவுகணையும் பயிற்சி செய்யப்பட்டு, கடற்படைக் கப்பல்களில் அமைக்கப் பட்டன. விமானப்படை ஊர்தியில் [Su-30] அமைக்க வேண்டிய வானப்-பீடத்து பிரமாஸ் ஏவுகணைகளின் பயிற்சிகள் 2007 ஆண்டில் முடிவு பெறும்.

    Image result for Indian BrahMos Extended Range missiles

    இந்தியாவின் போர்க்களத் தாக்குகணைத் திட்டங்கள்

    1974 மே மாதம் இந்தியா முதன்முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்பைச் சோதித்த பிறகு அந்த ஆயுதத்தைத் தாங்கிக் கொண்டு தாக்கச் செல்லும் ஏவுகணைகளை ஆக்கும் இராணுவ முற்பாடுகளில் முனைந்தது.  கடந்த மத்திய ஆசிய கல்ஃப் நாட்டுப் போர்களில் தாக்குகணைகள்தான் பெருமளவில் பங்கேற்றன.  எதிர்காலத்தில் எழும் போர்களும் இனிமேல் கட்டளைத் தாக்குகணைகளைத்தான் பேரளவில் பயன்படுத்தப் போகின்றன.  சென்ற சில ஆண்டுகளாய் இந்தியா தனது இராணுவத் தேவைகளுக்கு உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நம்பத் தகுந்த கட்டளைத் தாக்குகணைத் தயாரிப்பில் ழ்ந்து முற்பட்டு வருகிறது. 1994 இல் இந்தியப் பொறியியல் விஞ்ஞானிகள் 1500 கி.மீ. [900 மைல்] நீட்சித் தூரம் செல்லும் அக்கினித் தாக்குகணைகளை மூன்று முறை ஏவிச் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.  சமீபத்தில் 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அபார ஆற்றல் கொண்ட அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்தது.

    டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்

    1982 ம் ஆண்டில் இராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defence Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, 1993 இல் கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] செயற்பட அவர் பொறுப்பில் விடப்பட்டது.  அத்திட்டமே இந்திய இராணுவத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது.  அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின. அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ரம்பமாயின.  அந்த ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

    Image result for Indian BrahMos Extended Range missiles

    1. நாக தாக்குகணை – இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG – An Anti-Tank Guided Missile (ATGM)] அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). எதிரி டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது.  உலகிலே முற்போக்கானத் தாக்குகணை அது.

    2. பிரித்வி தாக்குகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம்.  வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் : 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின.  அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்).  சோவியத் யூனியன் ராக்கெட் பொறிநுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது.

    Image result for india test fires brahmos extented range missileImage result for Indian BrahMos Extended Range missiles

    பிரித்வி-1 நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ரம்பமாயின.  பிரித்வி-2 நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன. பிரித்வி-3 நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம்.  அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும்.  அல்லது 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.

    3. ஆகாஷ் தாக்குகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile).  எல்லாவற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது.  அதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது.  நீட்சித் தூரம் 25 கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயனாகிறது.  ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.

    4. திரிசூல் தாக்குகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) – A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த் துறைகளிலும் பயன்படுகின்றன. தணிவாக அருகில் பறப்பனவற்றைத் தாக்கும் கணைகள் அவை.  அவற்றின் பயண நீட்சி தூரம் : 5-9 கி.மீ. (3 முதல் 5 மைல்)

    5. அக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest),  அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்].  உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப்படுகிறது.  1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது.  2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது..

    Image result for india test fires brahmos extented range missile

    பாரதத்தின் அண்டை நாடேகும் கட்டளைத் தாக்குகணை சூரியா

    இந்தியாவின் முதல் “அகிலக் கண்டம் தாக்கும் கட்டளைக் கணை” சூரியா [Intercontinental Ballistic Missile, (ICBM) Surya] தயாரிக்கும் பொறியியல் இராணுவப் பணிகள் ரம்பமாகி சூரியா-1 சோதனைப் பயிற்சி 2005 இல் திட்டமிடப்பட்டது.  தனிப் பயிற்சி இயக்கப்பாடுகள் முடிந்து முதல் சோதனை 2008 இல் திட்டமிடப் பட்டுள்ளது.  2015 ஆண்டில்தான் கட்டளைக் கணைப் படைப்பு முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சூரியா-1 நீட்சித் தூர எதிர்பார்ப்பு : 10,000 கி.மீ. (சுமார் 6000 மைல்), சூரியா-2 இன் நீட்சித் தூர எதிர்பார்ப்பு 20,000 கி.மீ. (சுமார் 12000 மைல்).  சூரியா-1 கட்டளைக் கணை 40 மீடர் நீளம் [130 அடி நீளம்], 80 டன் எடை, திட-திரவ உந்துசக்தி எரிப்பொருள் பயன்படும் மூவடுக்கு ராக்கெட்டுகளைக் கொண்டது.  முதல் அடுக்கு ராக்கெட் திரவ எரிசக்தியும், மற்ற ஈரடுக்கு ராக்கெட்டுகள் திடப் பொருள் எரிசக்தியும் பயன்படுத்தும்.   ஐசிபியெம் ராக்கெட்டுகளின் பொறிநுணுக்கம் அக்கினி-2,  துருவத் துணைக்கோள் ஏவு வாகனத்தின் [Polar Satellite Launch Vehicle (PSLV)] கூட்டு யந்திர அமைப்புகளே.

    (தொடரும்)

    +++++++++++++++++++

    தகவல்

    1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
    2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
    3. Indian Space Program By: Subhajit Ghosh
    4 Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
    5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
    6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
    7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer]
    9. Indian Space Program By: Wikipedia
    10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
    11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
    12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
    13 Dr. Abdul Kalam : India’s Missile Program http://www.geocities.com/siafdu/kalam.html
    14 India’s 2005 Republic Day Parade Archive – Military Photos [www.militaryphotos.net/forums/archive]
    15 Increasing Indian Missile Reach, Opinion & Editorials By: The Hindu Editorial [April 14, 2007]
    16 Missile Test By India [February 5, 2007]
    17 Defence Update, International Online Defence Magazine [Posted Nov 30, 2006]
    18 Defense Update, New Pissile Program at Aero India (2007)
    19 BrahMOs, Missiles, Weapon Systems, India Defense
    20 Indo-Russian Bilateral Equation Including Military [2001 ?]
    21 A Perennial Dream By: Dr. Abdul Kalam [http://sindhu.nomadlikfe.org/]
    22 AllIndidianSite.com – Dr. Abdul Kalam-It’s All About People.
    23 History of Indian Space Program -1 [www.bharat-rakshak.com/SPACE/space-history1.html]
    24 History The Tiger of Mysore & His Rocket Barrages By: Rajivlochan, Dept of History, Punjab University.
    25 India Successfully Tests Trisul Missile [www.spacewar.com/reports/India_Successfully_Tests_Trisul_Missile.html]
    26 India’s Missile Program By: John Cherian [www.hinduonnet.com/fline/]
    27 Indian ICBM Surya Missiles – India Defence Weapon Systems.
    28. Missiles in Indian History. (Agni, Prithvi, Akash, Trishul, Nag, Astra, Surya,
    29. https://indiandefencereview.wordpress.com/category/indian-missiles/
    30. http://www.mensxp.com/special-features/today/26061-10-indian-military-weapons-that-will-make-the-enemies-tremble-with-fear.html
    31. https://en.wikipedia.org/wiki/Indian_Ballistic_Missile_Defence_Programme [March 11, 2017]
    32.http://www.spacedaily.com/reports/India_test_fires_BrahMos_Extended_Range_missile_999.html [March 14, 2017]
    33. https://en.wikipedia.org/wiki/India_and_weapons_of_mass_destruction  [March 15, 2017]
    34. https://wordpress.com/post/jayabarathan.wordpress.com/23881
    35.https://brahmos.com/
    36. https://en.wikipedia.org/wiki/BrahMos

    Share
  • மாதவியின் மாண்பமை மடல்!

    -மேகலா இராமமூர்த்தி

    இந்திர விழாவின் இறுதிநாள் அது! புகார் நகரக் கடலில் மகிழ்ச்சியாய் நீராடிவிட்டுக் கடற்கரையில் இன்பப்பொழுது போக்கிக் கொண்டிருந்தனர் மக்கள். அவ்வாறே தாமும் பொழுதை இன்பமாய்க் கழிக்கவிரும்பிய கோவலனும் மாதவியும் ஏவலரும் தோழியரும் உடன்வரக் கடற்கரைச் சோலைக்குச் சென்று ஆங்கே ஓர் புன்னை மர நிழலில் விதானம் அமைத்து வெண்கால் கட்டிலில் அமர்ந்தனர். மாதவி தன்னிடமிருந்த யாழைக் கோவலனிடம் நீட்ட, அவன் அதில் சுதி கூட்டி, யாழ் மீட்டிக் கானல்வரிப் பாடல்களைப் பாடினான்.

    ஆடவரின் குற்றங்களைப் பெரிதுபடுத்தாதிருத்தல் மகளிரின் கடமை எனும் பொருள்பட அவன் பாடல்கள் அமைந்திருந்தன. அத்தோடு, தானொரு நெய்தல் நில மங்கையிடம் மையல் கொண்டது போன்ற உட்குறிப்புள்ள பாடல்களையும் பாடினான்.

    அடுத்து மாதவியின் முறை வந்தது. அவள் கோவலனின் கருத்தை மறுத்துரைக்கும் வகையில், ஆண்களின் நற்செயல்களே பெண்களுக்குப் பெருமை தருவன எனும் பொருளமையப் பாடினாள். அத்தோடு, தானும் ஓர் ஆடவனிடம் உள்ளத்தைப் பறிகொடுத்திருப்பது போன்ற குறிப்புத்தோன்ற அவள் பாட, கோவலனுக்குக் கோபம் வந்துவிடுகின்றது. ”பொழுதாயிற்றுப் புறப்படுவோம்!” என்று சொல்லிவிட்டு அவள் எழுவதற்கு முன்பாகவே ஏவலர் பின்தொடர எழுந்து போய்விடுகின்றான் அங்கிருந்து.

    இவ்விடத்தில் கானல்வரிப் பாடல்கள் குறித்தொரு செய்தியைச் சொல்ல விழைகின்றேன். கோவலனும் அவனைத் தொடர்ந்து மாதவி மடந்தையும் பாடிய கானல்வரிப் பாடல்கள் அருமையான இசைத்தமிழ்ப் பாடல்களாகும். இவற்றிற்குப் பண், தாளம் போன்றவையும் உள. எனவே, இப்பாடல்களை இசையரங்குகளில் இசைவாணர்கள் பாடிக்காட்டி இவற்றின் சிறப்பையும் சொல்நயத்தையும் தமிழ்மக்களுக்கு உணர்த்துதல் வேண்டும்.

    இனி நாம் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்…

    தான் கிளம்புவதற்கு முன்பாகவே விரைந்து சென்றுவிட்ட கோவலன் செயலால் மாதவி வருத்தமுற்றாலும், அதனைத் தன் தோழியரிடம் காட்டிக்கொள்ளாமல் வீட்டுக்குச் சென்றாள். கோவலன் வீடுவந்து சேராதது அவளுக்கு வேதனையளிக்கவே, தாழை மடலொன்றை எடுத்து, ”இளவேனிலரசனும் அவனுக்குத் துணையாய் வரும் திங்கட்செல்வனும் அளிக்கும் வாட்டத்திலிருந்து என்னை மீட்டெடுக்க வாரீர்! இல்லையேல் அவ்வரசன் தன் மலர்வாளியால் என்னுயிரைக் கொள்வன்!” என்று கோவலனுக்கு மடல் தீட்டினாள். அதனைத் தோழி வசந்தமாலையிடம் கொடுத்துக் கோவலனிடம் காட்டி அவனைக் கூட்டிவரச் சொன்னாள். மாதவி கோவலனுக்கு வரைந்த முதல் மடல் இது!

    கூலங்கள் விற்கும் கடைத்தெருவில் கோவலனைக் கண்டுபிடித்த வசந்தமாலை, அம்மடலை அவனிடம் நீட்ட, அப்போது மாதவிபால் மிகுந்த சினத்தோடும் சீற்றத்தோடும் இருந்த கோவலன், ”அந்த ஆடல்மகளின் நடிப்பை இனியும் நான் நம்பத் தயாரில்லை” என்று காட்டமாய்ச் சொல்லி அம்மடலை ஏற்க மறுத்துவிட்டான். வருத்தத்தோடு திரும்பிவந்த  வசந்தமாலை அதனை மாதவியிடம் தெரிவித்தாள்.

    அதனைக் கேட்ட மாதவி, மாலை வரவில்லையாயினும் நாளைக் காலை எப்படியும் அவர் வந்துவிடுவார்; நாம் காண்போம் என்று அவளிடம் சொன்னாள் நம்பிக்கையோடு.

    “மாலை வாரா ராயினும் மாணிழை
    காலைகாண் குவம்”
    (சிலப்: வேனிற் காதை – 115-116)

    ஆனால் யாழிசைமீது வந்தமர்ந்து கோவலனையும் மாதவியையும் பிரித்த ஊழ்வினையானது மீண்டும் அவ்விருவரும் சந்திக்கக்கூடிய வாய்ப்பில்லாமல் செய்துவிட்டது.

    மாதவியை நீங்கிய கோவலன், கண்ணகி மனைக்குச் சென்று அவளையும் அழைத்துக்கொண்டு மதுரைக்குப் புறப்படுகின்றான். அப்பயணத்தின் நோக்கம், அவள் சிலம்புகளை விற்று அப்பொருள்கொண்டு வாணிகஞ்செய்து தான் இழந்த பொருள்களை மீட்டெடுத்தலாகும். வழிநடைப் பயணத்தில் கௌந்தியடிகள் எனும் சமணப் பெண்துறவியார் அவர்களுக்குத் துணை ஆகின்றார். முதுவேனிற் காலத்தின் மூர்க்கமான வெப்பத்தை எதிர்கொண்டு, கடும்பயணம் மேற்கொள்கின்றனர் மூவரும்.

    மதுரைக்கு அணித்தே வந்துவிட்ட அவர்கள், வேலிசூழ்ந்த ஓரிடத்தில் இளைப்பாறுகின்றனர். அப்போது அவர்களை அங்கே விட்டுவிட்டுத் தான்மட்டும் அருகிலிருந்த நீர்நிலைக்குச் செல்கின்றான் கோவலன். அவனைக் கண்டான் மாதவியிடமிருந்து வந்திருந்த தூதுவனான கோசிகன் என்ற அந்தணன். வெயிலில் வாடிவதங்கி உருமாறிப் போயிருந்த கோவலனைக் கோசிகனுக்கு அடையாளம் தெரியவில்லை.

    அவன் கோவலன் தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பிய அவன், ஒரு யுக்தி செய்தான். அங்கே அருகிலிருந்த பந்தலில் வாடிக்கிடந்த மாதவி (குருக்கத்தி) கொடியைப் பார்த்து, “கோவலன் பிரிவால் வருந்தி வாடிய மாதவிபோல் நீயும் வேனிலால் வாட்டமுற்றிருக்கிறாயோ மாதவி?” என்று கோவலன் காதில் விழுமாறு அக்கொடியிடம் அவன் கேட்கவே, அதைக் காதில்வாங்கிய கோவலன், ”நீ சொன்னதன் பொருள் என்ன?” என்று கோசிகன் அருகில்வந்து கேட்கவும், ”ஆகா! கண்டேன் கோவலனை” என்று தெளிந்த கோசிகன், கோவலன் புகாரைவிட்டு நீங்கியதால் அவன் பெற்றோரும் சுற்றத்தாரும் படும் துன்பத்தையும், மாதவியடைந்த மாளாத் துயரத்தையும் தெரிவித்தான். ஏவலர்கள் பல இடங்களில் கோவலனைத் தேடி அலைவதையும், இராமனைப் பிரிந்த அயோத்திபோல் புகார் நகரமக்கள் வருந்தியிருக்கும் அவலத்தையும் எடுத்துரைத்தான். அதன்பின்னர், மாதவி அவனுக்கு எழுதிய மடலை அவனிடம் நீட்டினான்.

    இது மாதவி கோவலனுக்கு எழுதிய இரண்டாவது மடல். இம்முறை கோவலன் அதனை மறுக்காமல் வாங்கிக்கொண்டான். மாதவியைப் பிரிந்து நீண்ட நாட்கள் ஆனபடியால் அவள் மீதிருந்த கோபம் அவனுக்குத் தணிந்திருந்தது. மடலிலிருந்து வீசிய அவள் கூந்தலின் நெய்வாசம் அவனைப் பழைய நினைவுகளுக்குள் மூழ்கவைத்தது. மடலைப் பிரித்துப் படித்தான்…

    ”அடிகளே! உங்கள் திருவடிகளில் நான் வீழ்ந்து வணங்குகின்றேன். குழப்பத்தோடு நான் எழுதுகின்ற இந்தப் புன்மொழிகளை தாங்கள் மனத்திலே கொள்ளவேண்டும். பெற்றோரைப் பேணும் பெரும்பணியைக் கைவிட்டதோடல்லாமல், நற்குடியிலே பிறந்த மனையாட்டியோடு, பூம்புகாரில் யாரும் அறியாவண்ணம், இரவிலே புறப்பட்டுப் போகும்வண்ணம் நிகழ்ந்த தவறு என்ன? அதனை அறியமுடியாமல், அத்தவறு என்னுடையதாக இருக்குமோ? பிறருடையதோ? என ஐயுற்று என் நெஞ்சம் கையற்றுக் கலங்கி நிற்கின்றது. ஒருவேளை, தவறு என்னுடையதாய் இருக்குமானால் அதனைத் தாங்கள் பொருட்படுத்தாது விடுதல் வேண்டும். மயக்கந் தீர்ந்த காட்சியுடைய மெய்யறிவாளரே, உம்மைப் போற்றுகின்றேன்!”

    ”அடிகள் முன்னர் யான்அடி வீழ்ந்தேன்
    வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
    குரவர்பணி அன்றியும் குலப்பிறப் பாட்டியோடு
    இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது
    கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
    பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி”
    (சிலப்: புறஞ்சேரியிறுத்த காதை – 87-92)  

    இம்மடலைப் படித்ததும் மாதவி குற்றமற்றவள்; அவளைப் பற்றித் தவறாக எண்ண வைத்தது தன் தீவினையே என்று தெளிந்தான் கோவலன். இம்மடல், தன் தந்தைக்குக் கொடுத்தனுப்புவதற்கும் பொருத்தமான செய்திகளைக் கொண்ட பொற்புடைய மடல் என்று முடிவுசெய்தவன், மாதவியின் மடலையே தன் தந்தைக்குத் தான் எழுதிய மடலாக அவரிடம் சேர்ப்பித்து அவரைத் தேற்றுமாறுக் கோசிகனிடம் கொடுத்தனுப்புகின்றான் என்கின்றது சிலம்பு.

    மாதவியின் இந்த மடல் அவளின் மாண்பை மட்டுமல்லாது தேர்ந்த சொற்களில் மடல் புனையும் அவளின் திறனையும் நமக்குத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது அல்லவா? 

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தது:

    சிலப்பதிகாரம் மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும்.

    படம் விக்கிபீடியாவிலிருந்து எடுத்தது.

     

    Share
  • கதையும்  மொழிதலும் – 8 பி.எஸ். ராமையாவின் ‘பணம் பிழைத்தது’

    கதையும் மொழிதலும் – 8 பி.எஸ். ராமையாவின் ‘பணம் பிழைத்தது’

    முனைவர் ம. இராமச்சந்திரன்

    சி.சு.செல்லப்பாவால் கொண்டாடப்பட்ட சிறுகதை எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. இவரின் சிறுகதைகளை ஆய்வு செய்து ‘பி.எஸ்.ராமையாவின் சிறுகதை பாணி’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறார். ‘மணிக்கொடி முதல்வர்கள்’ என்ற நூலிலும் பி.எஸ். ராமையாவின் சிறுகதைப் போக்குகளைப் பற்றி விரிவாக விவாதித்துள்ளார். அந்த அளவிற்கு பி.எஸ். ராமையாவின் சிறுகதைப் பங்களிப்பு வியக்கத்தக்கது. மணிக்கொடி இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுச் சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்டவர் பி.எஸ். ராமையா. தமிழ்ச் சிறுகதையின் தொடக்கக்கால ஆளுமைகளில் மிகவும் போற்றத்தக்கவராகப் பலரால் கருதப்பட்டவர் இவர். அதே நேரத்தில் இவரின் கதைகள் காலத்தைக் கடந்து நிற்கும்  ஆற்றலோ, நவீனத்துவமோ இல்லை என்று விமர்சிக்கப்பட்டவரும் இவரே. இவ்வாறு பி.எஸ்.ராமையாவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிடைத்து வந்தன. ஆதரவாளர்களில் முக்கியமானவராகச் சி. சு. செல்லப்பாவும் எதிர்க் கருத்துக் கொண்டவர்களில்  முக்கியமானவராகக் க.நா.சு.வும் விளங்கினார்கள்.

    மணிக்கொடி இதழ் காந்தியச் சிந்தனையைப் பின்புலமாகக் கொண்டு வெளிவந்தது. அதே போல தமிழ்ச் சிறுகதை எப்படி அமையவேண்டும் என்ற கோட்பாட்டு வரையறையோடு நவீனச் சிறுகதைகளை வரவேற்றது. தமிழக மரபில் பரவலாகப் பேசப்பட்ட, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடுநிலையான வாழ்க்கைச் சூழலை மையமாகக் கொண்ட கதைகள் (மணிக்கொடி எழுத்தாளர்கள்) இவர்களால் எழுதப்பட்டன. பழமைக்கும் புதுமைக்குமான போராட்டத்தில் பழமையின் சிறப்புகளை வெளிப்படுத்தும், போற்றும் வகையில் இவர்களின் கதையமைப்பும் கதைக்கருவும் இருந்தன. இதே காலகட்டத்தில் நவீனத்துவத்தின் வரவும் நகர வாழ்க்கையின் போதாமையும் சிக்கல்களும் பரவலாகக் கதையாக்கப்பட்டன. இவ்வாறு இரண்டு

    போக்குகளுக்கும் ஆதரவும் மறுப்பும் இருந்து கொண்டே வந்தன. பி.எஸ்.ராமையா மரபான வாழ்வியல் கூறுகளையும் மக்கள் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதைகளை எழுதினார். இவரின் கதைகள் அக்காலத்தில் பரவலாகப் படிக்கப்பட்டன. பாராட்டப்பட்டன. இவரின் முக்கியமான கதைகளில் ஒன்று ‘பணம் பிழைத்தது’.

    பிழைப்புத் தேடி சென்னைக்குச் சென்ற முதலியாரின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. முதலியார் வியாபாரத்திற்காகச் சென்னைக்கு இடம்பெயர்ந்து பெரும் பணக்காரராக மாறுகிறார். முப்பது ஆண்டு வியாபாரத்தில் பெரும் செல்வந்தராக மாறுகிறார். முதுமையின் அறிகுறிகள் அவ்வப்போது தலை காட்ட தொடங்கின. ஒரு கட்டத்தில் இவரின் உழைப்பும் சுறுசுறுப்பும் தேக்கம் அடைகின்றன. காலத்தின் கைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள எண்ணுகிறார். ஆனால் முதுமையும் நோயும் இவரை ஆட்கொள்கின்றன. தொழிலில் ஏற்படும் மன நெருக்கடிகளும் உடலின் முதுமையும் இவரை மனதளவிலும் முதுமை ஆக்குகின்றன. முப்பது ஆண்டு கால வாழ்க்கையில் இத்தகைய நெருக்கடிகளைச் சந்தித்தவர் இல்லை முதலியார்.

    ஒருகட்டத்தில் உடலும் மனமும் ஒத்துழைக்காத அளவிற்கு நோய் தீவிரமடைந்தது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொழிலிலிருந்து சற்று விலகி ஓய்வு எடுக்குமாறு கூறுகின்றனர். பலரின் ஆலோசனைகளைக் கேட்ட பிறகு வழக்கம்போல அவற்றைப் பின்பற்றாமல் தனது போக்கில் முடிவெடுக்கிறார். முப்பது ஆண்டுகால உழைப்பில் சேர்த்த சொத்துக்களைத் தனது சொந்த கிராமத்திற்குச் சென்று பராமரிக்கலாம் என்று முடிவெடுக்கிறார். ஆனால் சொந்த கிராமத்திற்குச் சென்ற சில நாட்களிலேயே அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது.

    முப்பது ஆண்டுகளாகச் சேர்த்து வைத்த நிலபுலன்களைப் பார்த்துத் தனது வளர்ச்சியின் வேகத்தை எண்ணுகிறார். இவற்றையெல்லாம் முறையாக எதிர்காலத்தில் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் தேவையான செயல்களைச் செய்ய எண்ணுகிறார். ஆனால் இவரின் உடல் நிலை மோசமடைகிறது. மருத்துவர்களின் வருகையும் மருத்துவமும் கிராமத்திலேயே நடைபெறுகின்றன. என்றாலும் சில நாட்கள் உடல்நிலை தேறுவதாக இருந்தாலும் பிறகு மீண்டும் மோசமடைந்து விடுகிறது. ஒரு கட்டத்தில் முதலியாரின் மனமும் மரணத்தை நோக்கியே எண்ணுகிறது. அப்பொழுது தெரு நாயின் ஊளைச் சத்தம் வீட்டில் இருப்பவர்களை அச்சம் கொள்ள செய்கின்றது. உறவினர்கள் நாயைக் கல்லெறிந்து விரட்டும் ஓசை கேட்கிறது. முதலியார் படுக்கையில் படுத்தபடியே நடப்பவை எல்லாவற்றையும் உற்று நோக்குகிறார். தனக்கு மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வீட்டின் வாசலில் எமன் வந்து நிற்கிறான். எப்படியாவது அவனிடமிருந்து தப்பிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் கிடைத்தால் தனது சொத்துக்களையெல்லாம் முறைப்படுத்தி விடலாம் என்று எண்ணிக்கொண்டே இருக்கிறார். திடீரென்று அவருக்கு யோசனை தோன்றுகிறது. தனக்குப் பதிலாக யாராவது மரணத்தைத் தழுவிக் கொண்டால் அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக எண்ணுகிறார்.

    இதனைச் செயல்படுத்துவதற்குத் தனது செக் புக்கை எடுத்து வருமாறு கூறுகிறார். அந்தநேரத்தில் கிராமத்தில் ஒரே கலவரமாக இருக்கிறது. வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் ஓடிச்சென்று என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து வந்தவர்கள் பேசிக்கொண்ட பேச்சொலி முதலியாரின் காதில் விழுகிறது. பக்கத்துத் தெருவில் இருக்கக்கூடிய ஒருவரின் வீட்டிற்குத் திருடன் வந்து, வீட்டில் உள்ள நகைகளை எல்லாம் திருடிச் சென்றுவிட்டான். அப்படி செல்லும்போது அருகில் இருப்பவர்கள் அவர்களைத் துரத்திச் சென்றனர். துரத்தி சென்ற ஒருவனுக்கும் திருடனுக்கும் ஏற்பட்ட மோதலில் திருடனால் குத்தப்பட்டு அதே இடத்தில் இறந்து விட்டான் அவனைத் துரத்தி சென்றவன் என்ற செய்தியும் இறந்தவன் மிகவும் நல்லவன் என்றும் இப்பொழுதுதான் அவனுக்குத் திருமணம் ஆகியிருக்கிறது என்றும் அவர்களின் பேச்சிலிருந்து முதலியார் அறிந்துகொள்கிறார்.

    இதனைக் கேட்ட உடனே முதலியாருக்கு உடலில் புதுத்தெம்பு கூடுகிறது. கண்களைத் திறக்க முயற்சிக்கிறார். எளிமையாகத் திறக்க முடிகிறது. கை கால்களுக்கு ஒரு வலிமை வந்தது போல் உணர்கிறார். அவரது மனம் சொல்லியது, ‘எமன் எனது வீட்டிற்கு வரவில்லை. பக்கத்து வீட்டிற்குத் தான் வந்திருக்கிறான். இப்பொழுது எனக்கு மரணமில்லை’ என்று எண்ணுகிறார். உடனே தனது உறவினரிடம் எழுதிக் கொடுத்த செக்கைக் ‘கிழித்துப் போடு’ என்று கூறுகிறார். உறவினர் ‘செக் புக்கில் எதுவுமே எழுதவில்லை, எதற்காகக் கிழித்துப் போட வேண்டும்’ என்று கூறுகிறார். இதனைக் கேட்டவுடன் முதலியாருக்கு மனதிலே தோன்றிய எண்ணமே பணம் பிழைத்தது. அதுமட்டுமல்லாமல் தனது முப்பதாண்டுக் கால வாழ்க்கையில் முதலியார் நஷ்டம் அடையும் எந்தத் தொழிலையும் செய்ததில்லை. ஆகையால் தனக்குப் பதிலாக இரண்டு லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியது, தன் வீட்டிற்கு எமன் வரவில்லை என்பதால் அத்தொகையை வழங்க வேண்டாம் என்ற எண்ணம் இங்கே முதலியாரின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

    கதையைப் படிக்கும் வாசகர்களுக்கு முதலியார் அந்த இரண்டு லட்ச ரூபாயை இறந்தவனுக்குக் கொடுக்கப்போவதுபோல ஒரு எண்ண உணர்வைத் தோற்றுவித்து விடுகிறார் பி.எஸ்.ராமையா. இறந்தவனின் குடும்ப வாழ்க்கையும் அவனது துன்பங்களும் இவரால் துடைக்கப்பட்டுவிடும் என்ற ஒரு உணர்வைக் கதையின் ஊடாக எடுத்துச் சென்றாலும் இறுதியில் முதலியாரின் மனப்போக்குத் தனது பணத்தைப் பாதுகாப்பதில் இருப்பதைக் கதை ஆசிரியர் பதிவு செய்யும்போது வாசகனுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்ற உணர்வையும் சிந்தனைச் சிக்கலையும் ஏற்படுத்தி விடுகிறார். இங்கே கதை தொடர்ந்து சிந்திப்பதற்கான சூழலை அமைத்துத் தருகிறது. அந்தவகையில் இக்கதையின் முக்கியத்துவம் வாசகர் மனதில் சிறு பாதிப்பை ஏற்படுத்தி செல்கிறது.

    மரணத்திற்கும் வாழ்க்கைக்குமான போராட்டத்தில் மனித மனமானது தனது கடந்த கால வாழ்க்கையை எப்படி எல்லாம் அசை போடுகிறது என்பதையும் இவ்வளவு காலத்தில் கட்டமைத்த ஒரு பொருளாதார வாழ்க்கை சிதையாமல் அதைப் பாதுகாப்பதற்கான எண்ண ஓட்டங்களும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏற்படும் எதார்த்தமான சூழல் தான். அத்தகைய ஒரு எதார்த்த சூழலை இக்கதையில் பதிவு செய்திருக்கிறார் பி.எஸ்.ராமையா. ஆனால் கதையின் முடிவானது மனித இயல்பை லட்சியவாத போக்கிற்குக் கொண்டு செல்லாமல் எதார்த்த நிலைக்கு ஏற்றவகையில் முடித்திருப்பது சிறப்பானதாக அமைந்துள்ளது. பி.எஸ்.ராமையா இக்கதையை முடிக்கும்போது முதலியாரை ஒரு தியாகச் செம்மலாக மாற்றியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் ஒரு வியாபாரியின் என்ன போக்கிற்கு ஏற்ப இக்கதையை நிறைவு செய்திருப்பது கதாபாத்திரங்களின் செயல்பாடுகளில் கதையாசிரியர் தலையிடக்கூடாது என்கிற செயல்பாடு இங்கே சிந்திக்கத்தக்கது.

    கதையின் கட்டமைப்பு மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. வாசகனை எந்த இடத்திலும் விலகிச் செல்லாமல் கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் சூழலோடு கதை நகர்ந்து செல்கிறது. மரபான சிந்தனைப் போக்கில் வாசகனைக் கதையோடு கட்டிப்போடும் ஆற்றல் இக்கதைக்கு இருக்கிறது. இவரின் மொழிநடையும் வாசகனுக்கு எந்த வாசிப்புத் தடையும் இல்லாமல் நீரோடையாகச் செல்வதை உணர முடிகிறது.

    பி.எஸ்.ராமையா மணிக்கொடியில்  அதிகமான கதைகளை எழுதியிருக்கிறார். ஆனால் இவரின் பல கதைகள் இன்றைய சிறுகதை வாசிப்பிற்கு ஏற்றதாக அமையவில்லை என்றாலும் சிறுகதை வளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் அக்கதைகளின் இருப்புக் காத்திரமான பங்களிப்பைச் செய்திருப்பதை மறுப்பதற்கில்லை. ஒரு காலகட்டத்தின் சிறுகதை வெளிப்பாட்டுப் பண்பை அறிந்து கொள்ள முயலும்போது பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப் பங்களிப்புத் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

    Share
  • இலக்கியங்களில் உயிரினங்கள்

    இலக்கியங்களில் உயிரினங்கள்

    கௌசி, ஜெர்மனி

    மனிதன் மட்டுமே அறிவார்ந்த பிறவி என்று எம்மில் பலர் நினைத்திருக்கின்றோம். விலங்குகள், பறவைகள் தமக்கென கொள்கை, அறிவார்ந்த தன்மைகள் கொண்டுள்ளன. Olympian bats என்று சொல்லப்படும் வெளவாள்கள் பிரித்தானியாவில் இருந்து ரஷ்யாவுக்கு 2018 கிலோ மீற்றர் பறந்து போயிருக்கின்றதாம். இவை காலநிலை பாரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றன என அறிவியலாளர்கள் எடுத்துரைக்கின்றார்கள். ஒரு பறவை மனிதன், விலங்குகளுடைய தலைமயிரை எடுத்து பிறக்கப் போகும்  குஞ்சுக்காக கூடு கட்டுகின்றது. பஞ்சுமெத்தை தேடிக் குஞ்சுக்குப் பஞ்சணை அமைக்கின்றது.  இதேபோல் புலி இறந்த உடலை உண்ணாது. பசித்தாலும் புல்லைத் தின்னாது. யானை பசித்தாலும் மாமிசம் உண்ணாது. சிங்கம் தன் பசிக்கு மேலதிகமாக வேட்டையாடிய மிருகத்தை உண்ணாது. மிகுதியை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடும். ஆனால், புலி வேட்டையாடி கொன்ற தன்னுடைய இரையை இழுத்துச் சென்று தன்னுடைய குகையில் வைத்திருந்து அழுகிப் புழுத்துப் போனாலும் திரும்பத் திரும்ப அதை உண்ணும்.

    “ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்
     ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய
     இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை
     நாம நல்லராக்  கதிர்பட உமிழ்ந்த
     மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும்
     வாள்நடந் தன்ன வழக்கருங் கவலை
     உள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி”  

    என்னும் அகநானூற்று 72 ஆவது பாடல் தெளிவுபடுத்துகின்றது.

    இவ்வாறு பண்புகள் கொண்ட உயிரினங்களை இலக்கியங்கள் மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கின்றன. புலவர்கள் தாம் எடுத்துக் கொண்ட பொருளை விளக்குவதற்கு உவமையாக பிற பொருளை எடுத்துக் காட்டுவது வழக்கம். அவற்றில் பல இரசனைகளும், அறிவியல், தகவல்களும் காணக்கிடக்கின்றன.

    சங்க காலப் புலவர்களில் ஒருவர் சத்திமுத்தப் புலவர்;. சத்திமுத்தம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வறுமையால் தளர்வுற்று பாண்டியமன்னனை கண்டு அவரைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற மதுரைக்கு வந்தார். வருகின்ற வழியிலே குளத்தங்கரையில் குளிரில் வாடிக் கொண்டிருந்தபோது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல இப்பாடலைப் பாடுகின்றார். இப்பாடல் சங்கப்பாடல்களில புறநானூற்றுத் தொகுப்பிலே காணக்கிடக்கிறது.

    “நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
    நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
    வடதிசைக்கு ஏகுவீராயின்
    எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
    நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
    பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
    எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
    ஆடையின்றி வாடையில் மெலிந்து
    கையது கொண்டு மெய்யது பொத்தி
    காலது கொண்டு மேலது தழீஇப்
    பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
    ஏழையாளனைக் கண்டனம் எனுமே”

    முதலிலே ஒரு ஏவல் செய்ய வேண்டும் என்றால், அவர்களை புகழ்ந்து தள்ள வேண்டும். அந்தப் பாணியிலேயே நாரைக் கொக்கின் வாய் பனங்கிழங்கைப் போன்று நுனிப்பகுதி கூராக இருக்கின்றதாகவும் பவளம் போன்ற நிறத்தில் இருப்பதாகவும், கால்கள் சிவந்த நிறத்தில் அழகு செய்வதாகவும் புகழ்ந்து தள்ளுகின்றார். அதன் பின் நீ போகின்ற பாதை தானே என்பது போலவும் திருத்தல யாத்திரை செல்பவர்கள் தம்முடைய மனைவியுடன் தெப்பக் குளங்களிலே நீராடிச் செல்வது வழக்கம். அதனால், நீ உன் மனைவியுடன் தென் திசையில் உள்ள கன்னியாகுமரியில் நீராடிய பின் வட திசைக்கு வந்து காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி அம்மையாரையும் வணங்கி தலயாத்திரை முடிக்கும் சமயத்திலே திரும்பும் போது மதுரையில் மழைநீர் வடிந்த ஓலை வீட்டுச் சுவரிலே பல்லி எப்போது நல்ல செய்தி சொல்லும் என்று காத்துக் கிடக்கின்ற என் மனைவியிடம் ஆடை இல்லாமல் வாடைக்காற்றிலே மெலிந்து கைகளால் உடம்பைப் பற்றிக் கொண்டு கால்களால் உடலைத் தழுவியபடி பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும் உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள். என நாரையைத் தூது அனுப்புவதாக இப்பாடல் வருகின்றது.

    பல்லி சொல்லுதல் நல்ல சகுனம் என்பது தமிழர்கள் நம்பிக்கை. இந்நம்பிக்கையையும், நாரை நீண்ட தூரப் பயணம் செய்யும் என்னும் செய்தியையும், சிறிய துளையூடாக பார்வையைச் செலுத்தக்கூடிய திறனை நாரைக் கொக்கு பெற்றிருக்கின்றது என்னும் அறிவியல் உண்மையையும் இப்பாடல் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.  இதனாலேயே வீட்டினுள் கூரையைப் பார்த்திருக்கும் தன் மனைவியை இந்நாரை கண்டு கொள்ளும், இச்செய்தியைக் கொண்டு சொல்லும் என்று தூதாக நாரையை சத்திமுத்தப் புலவர் அனுப்புகின்றார்.

    குறிஞ்சி நிலத்திலே விலங்காக குரங்கும், பறவையாக மயிலும். முல்லைநிலத்திலே விலங்காக கரடி, முயல் போன்றனவும், பறவையாகக் கிளியும். மருத நிலத்து விலங்காக எருமை பறவையாக நாரை, நெய்தல் நிலத்து மீன், கடற்காகம், பாலை நிலத்து யானை, கழுகு போன்ற உயிரினங்களை வகைப்படுத்திய பாடல்களை நாம் காணக்கூடியதாக இருக்கின்றன. இதேபோல சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும் உயிரினங்களை தம்மிடம் பாடற்சுவையூட்ட பாவலர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

    நளன், தமயந்தியைக் காட்டில் விட்டுச் செல்கின்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதைப் பாடப்புகுந்த புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாக தற்குறிப்பேற்ற அணியிலே கூறுகிறார்.

    “தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
    கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை
    வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
    கூவினவே கோழிக் குலம்”

    மூவேந்தர் சேர,சோழ, பாண்டியனைப் பற்றி மூன்று தொள்ளாயிரம் பாடல்களைப் பாடியதாக முத்தொள்ளாயிரம் சொல்லப்படுகின்றது. இப்பாடல்கள் முழுவதும் வெண்பாக்களால் ஆனவை. அதில் ஒரு பாடல்

    “அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
    வெள்ளந் தீப்பட்டதென வெரீஇப் புள்ளினந்தம்
    கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ!
    நச்சிலைவேற் கோக்கோதை நாடு!”

    சேர மன்னன் நாட்டிலே போரே ஏற்படுவதில்லை. ஒரு நாட்டுடன் போரிடும் வீரர்கள் அந்த நாட்டைக் கொளுத்தி அதாவது தற்போது அணுகுண்டு வீசி அழிப்பது போல் அந்நாட்டு ஊர்களை, வயல்களை அழித்து, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி ஆரவாரம் செய்ய வைப்பார். ஆனால், சேர மன்னன் ஆளுகின்ற நாட்டிலே இவ்வாறான ஆரவாரம் ஏற்படுவதில்லை. அம்மன்னன் நச்சுத் தோய்த்த இலைப்பரப்பை உடைய வேலேந்தியவன். அதனால், அவனுக்குப் பயந்த எதிரிகள், கொள்ளையர்கள் அந்நாட்டில் இல்லை. அதனால், அச்சத்தால் எந்தவித ஆரவாரமும் இருந்ததில்லை. ஆனால், அங்குள்ள வயல்நீரிலும், அதன் கரைகளிலும் வாழுகின்ற பறவைகள் அந்த வயல்களிலே பூத்திரிக்கும் ஆம்பல் மலர்களைக் கண்டு வயலிலே தீப்பிடித்து விட்டது என்று பயந்து ஆரவாரத்துடன் அலைந்தனவாம். அதுமட்டுமல்ல இதனால், தம் குஞ்சுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று அஞ்சி அவற்றைத் தம்முடைய கை போன்ற சிறகுகளால் அணைத்து மறைத்துக் கொள்ளுமாம்.

    மனித இனங்கள் மட்டுமல்ல பறவை விலங்குகள் கூட தம்முடைய பிள்ளைகளை பாதுகாத்து வளர்த்தெடுக்கின்றன. இங்கிலாந்தில் Dover என்னும் இடத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய தொடர்வீட்டு மாடியிலே ஒரு Gull என்னும் பறவை கூடுகட்டியிருந்தது. அந்த வீட்டை வாங்கிய மனிதர்களை வரவிடாமல் துரத்திக் கொத்தியபடி விரட்டியது. அங்குள்ள முட்டை குஞ்சி பொரித்து குஞ்சுப் பறவை பறந்த பின்தான் அங்கு செல்லக்கூடியதாக இருந்தது.

    குரங்குக்கும் மனிதர்களுக்கும் இடையிலே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. குரங்கில் இருந்தே மனிதன் வந்தான் என்று பரிணாமக் கோட்பாடு கூறுகின்றது. ஜெர்மனி வூப்பற்றால் நகரத்து மிருகக்காட்சிச்சாலையிலே ஒரு குரங்கு தான் இருக்கும் இடத்திற்கு ஒரு சாக்குத் துணியை எடுத்துக் கொண்டு போய் போட்டு அதன்மேலேதான் இருக்கும். குரங்கு தன் குட்டிக்கு பேன் பார்க்கும் காட்சியை நாம் இலங்கையில் அதிகமாகக் கண்டிருக்கின்றோம். இக்குரங்குகள் பற்றிய பல இலக்கியச் சுவை மிகுந்து பாடல்கள் எம்மால் அறியக்கிடக்கின்றன.

    நற்றிணை 151 ஆவது பாடலிலே

    மிளகுக் கொடி படர்ந்திருக்கும் மலையடுக்கத்தை, பெண் குரங்கும், ஆண்குரங்குக்கும் புணரும் இடமாக சங்க இலக்கியத்திலே காட்டப்பட்டுள்ளது. ஆண்குரங்கும் மந்தியும் களவியில் ஈடுபட்டுக் கொண்ட பின் குரங்குக் கூட்டங்கள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக, மரத்தின் மீது ஏறி அங்கே இருக்கும் ஆழமான சுனைநீரில் தன் உருவத்தைப் பார்த்துக் கலைந்து கிடக்கும் தன் தலை முடியைப் பெண்குரங்கு திருத்திக்கொள்ளுமாம். இக்காலப் பெண்கள் கண்ணாடி பார்க்கும் பழக்கத்தைப் போல் அக்காலப் பெண்குரங்குகள் சுனைநீரைக் கண்ணாடியாகப் பாவித்திருக்கின்றன.

    “கடுவன், முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்
    கறிவளர் அடுக்கத்து கள்வினிற் புணர்ந்த
    செம்முக மந்தி செல்குறி கருங்காற்
    பொன்னினர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்
    குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கி கவிழ்ந்து தன்
    புன்தலைப் பாறு மயிர் திருத்தும்”

    காதல் கணவன் இறந்தால் தற்கொலை செய்கின்ற மனிதர்களைக் காணுகின்றோம். ஆனால், தன் கணவன் இறந்த பின் குட்டிகளைத் தன்னுடைய சுற்றத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு மலையேறித் தற்கொலை செய்து கொண்ட ஒரு குரங்கு பற்றி குறுந்தொகை 66 ஆவது பாடலிலே காணுகின்றோம்.

    “கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
    கைம்மை உய்யாக் காமர் மந்தி,
    கல்லா வன்புறழ் கிளைமுதற் சேர்த்தி
    ஓங்குவரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும்”

    திருக்குற்றாலக்குறவஞ்சியிலே ஒரு பாடல் குரங்குகளின் காதலை எடுத்துக்காட்டுகின்றது. ஆண் குரங்குகள் பெண்குரங்குக்கு பழங்களைப் பறித்து வந்து கொடுத்துத் தழுவுகின்றன. இச்சமயத்திலே பெண்குரங்கு சில பழங்களை கீழே சிந்துகின்றன. அச்சிந்தும் கனிகளை தேவர்கள் கேட்பார்கள் வேடர்கள் தேவர்களை கண்களால் பார்ப்பார்கள். என்று இப்பாடல் செல்கின்றது.

    “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
    மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
    கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
    தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
    செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
    கூனல் இளம்பிறை முடித்த வேணி அலங்காரர்
    குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே”

    இவ்வாறு மனிதர்களை விட பிற உயிரியங்கள் எவ்வாறு சிறப்புடையவை என்பதனை ஒளவையார் சோழ மன்னனிடம் பாடிய பாடல் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

    “வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்
    தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
    வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண்
    எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.”

    குருவியின் கூடு, கறையான் புற்று, தேன்கூடு, சிலந்திவலை போன்றவை யாராலும் செய்ய முடியாது. அதேபோல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. எனவே அறிவில் குறைந்தோர் என்று  எண்ணும் யாம் உயிரினங்களின் சிறப்புக்கள் பற்றி அறியப் புகுந்தால் எண்ணிலங்காத சான்றுகள் கடலிலும், வானிலும், தரையிலும் அறியக்கூடியதாக இருக்கின்றன.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 3

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 3

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    கடவூர் மணிமாறன் கவிதைகளில் கையறுநிலை

    முன்னுரை

    மரபுசார்ந்த தமிழ்க்கவிதைகளின் பாடுபொருள் அகம், புறம் என இரண்டேயாயினும் ‘பாடுகளங்கள்’ பல. தமிழ் பொருளிலக்கணத்தில் அகத்திணை, புறத்திணை ஆகிய இரு திணைகளுக்கும் துறைகள் உண்டு. அகத்திணைப் பாடல்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமானால் துறை விளக்கம் இன்றியமையாதது. துறைகள் தம்முள் மயங்குவதோடு கற்பாருக்கும் மயக்கத்தை ஏற்படுத்தும். சில பாடல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட துறை வகுத்திருப்பதற்கு இதுதான் காரணம். புறத்திணைப் பாடல்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமானால் பாட்டின் அடிப்பகுதியில் திணை, துறை பதிவுகளோடு கூடிய ‘கொளு’ மிகவும் இன்றியமையாத ஒன்று. வரலாற்றுக் குறிப்போடு அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் கொளுவே பாடுகளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் வழிகாட்டியாகச் செயல்படும். பொருள் துறைகள் பல. அவையனைத்தும் திணைவாரியாக விளக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஒரு திணைக்குரிய துறைகள் ஏனைய திணைக்குள் அடங்குவதில்லை. திணை என்பதை ஆறாகக் கொண்டால் துறை என்பது படித்துறை என்பது புலனாகும். ‘படித்துறை’ என்றாலும் ‘நீர்த்துறை’ என்றாலும் ஒன்றே. புறத்திணைகளில் ஒன்றாகிய காஞ்சித்திணையில் அமைந்துள்ள கையறுநிலைத் துறையில் தற்காலத் தமிழ்க்கவிஞருள் ஒருவராகிய கடவூர் மணிமாறன் அவர்களால் பாடப்பெற்றுள்ள சில பாடல்களை ஆராய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    இழப்பும் அதன் இலக்கிய மதிப்பீடும்

    இன்பம் முதலிய பல்வகை உணர்ச்சிகளும் இலக்கியப் படைப்பில் இடம் பெறினும் இழப்பினால் ஏற்படுகிற அவலம், இலக்கியச் சித்திரிப்பில் தலையாய இடம் பெறுகிறது. நடப்பியல் வாழ்வில் அவலம் தாங்குதற்குரியது. இலக்கியத்தில் அது சுவைத்தற்குரியது. கணவனை நிரந்தரமாகப் பிரியும் முதுபாலை, பாலைவழியில் மனைவியை இழந்த கணவன் துயர் கூறும் சுரநடை, மனைவியை இழந்த கணவனின் தபுதார நிலை, கணவனை இழந்த மனைவியின் தாபத நிலை, தாயை இழந்த பிள்ளையின் துன்பம் பாடிய தலைப்பெயல் நிலை, மாறாகப் பிள்ளையை இழந்த தாயின் துயரத்தையும் மன்னனை இழந்த மக்கள் வேதனையையும் பாடும் பூசல்மயக்கு, கணவனோடு எரிபுக நிற்கும் மகளிர் நிலைபாடும் மாலை நிலை, கணவனோடு மனைவியும் உடன்கட்டை ஏற, அதனைக் கண்டோர் கலங்கிப் புலம்பிய மூதானந்தம், விரிச்சிக்கு மாறுபட்டுத் தீய சகுனம் கண்ட மனைவிபடும் துன்பமாகிய ஆனந்தம், கணவன் இறந்த பின்னும் தான் இன்னும் உயிரோடு இருப்பதற்கு நாணி வருந்தும் ஆனந்தப் பையுள், புரந்தார் சாகவும் புரக்கப்பட்டார் வருந்தவுமான கையறு நிலை என இழப்புக்கள் பல. அவற்றைப் பதிவு செய்திருக்கும் இலக்கியங்களும் பல.

    ‘கையறு நிலை’ — ஒரு விளக்கம்

    இழப்பு ஏற்படுத்தும் துன்பத்தை வெளிப்படுத்தும் நிலையைக் ‘கையறுநிலை’என இலக்கணம் சுட்டும். ‘கலங்கிக் கையற்று’ என்பது தமிழிலக்கியத்தில் பெருவழக்கு.

    “கை விதிர்த்துக் கலங்கும் நிலை, கையறு நிலை எனப்பட்டது”

    என்பது பேராசிரியர் ச.பாலசுந்தரனார் தரும் சொற்பொருள் விளக்கம். இவ்வாறு கையற்று நிற்கும் நிலையைத் தமிழின் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் காஞ்சித்திணையில் வைத்துக் கூறுகிறது. தொல்காப்பியக் காஞ்சித்திணை, போரொழுக்கம் பற்றிக் கூறாது, வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றியது என்பது,

    “பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்
    நில்லா உலகம் புல்லிய நெறித்தே”

    என்னும் நூற்பாவால் பெறப்படும். மரணம் நிலையாமை உணர்த்தும் கருவி.  இவ்வடிப்படையில்,

    “கழிந்தோர் தேஎத்து கழிபடர் உறீஇ
    ஒழிந்தோர் புலம்பிய கையறுநிலை”

    என்னும் காஞ்சித்திணைத் துறைகள் பற்றிய நூற்பாப் பகுதியை நோக்கினால், தம் வாழ்நாள் கழிந்து மரணமடைந்த நிலையில், அவர்தம் துணையும் பாதுகாப்பும் இழந்த மற்றவர்கள் அவ்வாறு இழந்தவற்றை எண்ணிப் புலம்புவதே கையறுநிலையாகும் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த நூற்பாவில் பயின்றுவரும் ‘ஒழிந்தோர்’ என்னும் சொல், சுற்றத்தார், பெற்றோர், உடன்பிறந்தார், புரப்போர்  என யாவரையும் குறித்து நிற்கிறது.

    ‘இழந்ததற்கிரங்கல்’ என்னும் பொருண்மையை உள்ளடக்கிய இத்துறையைப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் பொதுவியல் திணையில் அடக்கிக் காட்டுவார்.

    “செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்
    கையற உரைத்துக் கைசோர்ந்தன்று”

    “கழிந்தோன் தன்புகழ் காதலித்து உரைப்பினும்
    மொழிந்தனர் புலவர் அத்துறை யன்ன”

    என்னும் இரண்டு கொளுக்களைக் கொண்டு இத்துறையை விளக்குவார் அவர். முதற்கொளு ‘மன்னன் இறந்த நிலையில் மற்றவர் புலம்பலைச்’சுட்டியும், இரண்டாவது கொளு ‘அன்பிற்குரிய எவர் இறப்பினும் அவர் புகழை எடுத்துக் கூறும் பிறர் புலம்பலையும்’சுட்டி நிற்கின்றன.

    இழப்புக்களும் புலம்பல்களும்

    இழப்புக்கள் பலவானால் புலம்பல்களின் எண்ணிக்கையும்  பலவாகும். உள்ளங்கவர் நண்பனை இழந்து புலம்புவது, ஆசைமிகு கணவனை இழந்து புலம்புவது, பாசமிகு மனைவியை இழந்து புலம்புவது, பிள்ளைகளை இழந்து பெற்றோரும் பெற்றோர்களை இழந்து பிள்ளைகளும் புலம்புவது எனப் பல்வகைப்படும்.  மனைவிக்கு முன்னால் மனைவியும், பெற்றோர்களுக்குப் பின்னால் பிள்ளையும், இளைஞர்களுக்கு முன்னால் முதியோரும் மறைவது இயற்கை. இந்த இயற்கை மரபு சில பொழுதுகளில் ஊழ்வினை காரணமாகத் தம்முள் முரண்படுகிறது. அத்தகைய நேர்வுகளில் இழப்பின் துன்ப வெளிப்பாடு இதயத்தைப் பிழிவதாக அமைந்துவிடுவதைக் காணலாம். கணவனை இழந்து மனைவி புலம்புவதைவிட மனைவியை இழந்த கணவன் புலம்புவது எண்ணிப்பார்க்க முடியாத இயற்கை முரண். இந்த முரணுக்கு ஆட்பட்ட மன்னன் ஒருவன் தன் மனைவியை இழந்து பாடிய கையறு நிலைப்பாடலைப் புறநானூறு பதிவு செய்திருக்கிறது.  ‘நண்ணாரும் உட்கும் பீடு’அவனுடையது. களத்திலே கலங்காத ஒருவன் தன் காதலிக்காகக் கலங்கித் துடிப்பது கற்பார்தம் உள்ளம் உருக்குவதாம்.

    “யாங்குப் பெரிதாயினும் நோயளவு எனைத்தே
    உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்”

    “கள்ளி அம் போகிய களரியம் பறந்தலை
    வெள்ளிடை பொத்திய விளை விறகுஈமத்தீ
    ஒள்ளழல் பள்ளிப் பாயல் சேர்த்தி
    ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
    இன்னும் வாழ்வல்! என்னிதன் பண்பே?”

    என்று நெருப்பிலே தன் மனைவியாகிய பெருங்கோப்பெண்டு கிடத்தப்பட்டது கண்டு கதறுகிறான் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை. ‘இருவரும் ஓருயிர்’ என்பது உண்மையானால் அவள் இறந்து தான் இன்னும் இருப்பது விந்தையாக அல்லவா இருக்கிறது? அவ்வாறு சொன்னதெல்லாம் இன்று பொய்யாகியிருக்கிறது என்பது கருத்து.

    கலைஞர் பாடிய கையறுநிலை

    தமிழ்க்கவிதை உலகில் கையறு நிலைத்துறையில் பேரறிஞர் அண்ணா மறைந்தபோது கலைஞர் பாடிய இரங்கற்பா தனிச்சிறப்புக்குரியது. அவருடைய கம்பளிக் குரலில் வானொலியில் அவர் வாசித்தபோது கலங்காதவர் இல்லை. அண்ணாவின் பெருமைகளை,

    “நாத இசை கொட்டுகின்ற
    நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
    விரலசைத்து எழுத்துலகில்
    விந்தைகளைச் செய்தாயே? அந்த
    விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
    கண் மூடிக்கொண்டு நீ சிந்திக்கும்
    பேரழகைப் பார்த்துள்ளேன்! இன்று
    மண்மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
    தடுப்பதென்ன கொடுமை?
    கொடுமைக்கு முடிவு கண்டாய்! எமைக்
    கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?”

    என நிரல்பட அடுக்கி அவர் புலம்பியது இன்றைக்கும் இணையத்தில் இருக்கிறது.

    பாவேந்தரும் பன்னீர் செல்வமும்

    இருபதாம் நூற்றாண்டில் தமிழின் எல்லாத் ‘துறை மரபுகளையும்’ கையாண்டு கவிதை படைத்தவர் பாவேந்தர். அவற்றுள் ‘கையறு நிலை’ என்னும் புறத்துறையும் ஒன்று. பாரதியார் உட்படச் சான்றோர் பலரின் மறைவுக்கு அவர் கையறுநிலை பாடியிருக்கிறார்.  எனினும் தமிழர்தம் வழிகாட்டிகளில் ஒருவராக விளங்கிய கே.டி.பன்னீர்செல்வம் மறைந்தபோது அத்துறையில் அவர் பாடிய பாட்டு அவர்தம் தனிப்பாடல்களில் தனித்து விளங்கும் சிறப்புடையது.

    “பண்கெட்டுப் போன தான
    பாட்டுப்போல் தமிழர் வாழும்
    மண்கெட்டு போமே என்னும்
    மதிகெட்டும், மானம் கெட்டும்
    எண்கெட்ட தமிழர் பல்லோர்
    பாரப்பனர்க் கேவ லாகிக்
    கண்கெட்டு வீழும் போதோ
    கடல்பட்ட தெங்கள் செல்வம்?”

    விமான விபத்தில் சிக்கிக் கடலில் வீழ்ந்து, பன்னீர் செல்வம் மறைந்தார்  என்பதனை இலக்கியமாக்கும் போது, ‘முன்பே பல்வகைச் செல்வங்களைக் கொண்ட கடல் பன்னீர் செல்வத்தின் பெருமை கண்டு அவரையும் தன்னுடைய செல்வமாகக் கொண்டதோ’எனத் தற்குறிப்பேற்றமாகக் கருதுமாறு அமைந்திருப்பதைக் காணலாம். ‘இருக்க வேண்டிய நேரத்தில் இல்லாமற் போனாரே’ என்னும் ஏக்கத்தைக், ‘கண்கெட்டு வீழும்போதோ கடல்பட்டது எங்கள் செல்வம்?’ என்னும் தொடர் எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

    கவிமணியும் கையறுநிலையும்

    புகழேந்திக்குப் பிறகு வெண்பாவால் விருந்து வைத்தவர் கவிமணி. யாப்பில் மிகக் கடுமையானதாகக் கருதப்படும் நேரிசை வெண்பாவை ‘எடுப்பார் கைப்பிள்ளையாக’மாற்றிக் கொண்டவர் அவர். செப்பலோசையில் அமைந்தாலும் உணர்ச்சியின் வேகம் குறையாமல் கையறுநிலைக்கு அதனைப் பயன்படுத்திக் காட்டியிருக்கும் கவிமணியின் கவிநேர்த்தி போற்றுதலுக்குரியது  ரசிகமணி டி.கே.சி. அவர்கள் மறைந்தபோது அவர் பாடிய கையறுநிலை பாடலொன்று இப்படி அமைந்திருக்கிறது.

    “என்னருமை நண்பா! இனிய கலைரசிகா!
    தன்னிகர் இல்லாத் தமிழ்ச்செல்வா! – மன்னுமுளம்
    தத்தளித்து நின்றன் சரமகவி பாடுதற்கோ
    இத்தனைநாள் வாழ்ந்திருந்தேன் யான்?”

    சரமகவி பாடுதற்கோ இத்தனைநாள் வாழ்ந்திருந்தேன் யான்?’ என்னும் வினாவில் பொங்கிவழியும் கையறுநிலை உணர்ச்சி மனத்தைப் பிழிகிறது. ‘நண்பன், ‘கலைரசிகன், ‘தமிழ்ச்செல்வன்’என முன்னிரண்டு அடிகளில் இழந்தோரின் பெருமை கூறிப், பின்னிரண்டு அடிகளில் அவ்விழப்பின் ஆழத்தைப் பதியவைக்கும் கவிமணியின் மரபியல் பார்வை  மதிக்கத்தக்கது.

    எமனுக்குக் கொள்ளி வைத்த கண்ணதாசன் 

    கவிஞர் கண்ணதாசனின் கருத்துக்களில் முரண்படுவோர்  உண்டு. அவருடைய முரண்பட்ட பார்வைகள் பற்றி முன்னெடுத்து மொழிவோர் உண்டு. ஆனால் அவர்தம் கவிதைகள் பல்வகை உணர்ச்சிகளின் பிழிவாக உள்ளன என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை. கவிதைக் கூறுகளில் உணர்ச்சிக்கு முதலிடம் கொடுத்த பெருமை கண்ணதாசனுக்கு உண்டு. அதிலும் இழப்புப் பற்றிய அவருடைய கவிதைகள் கற்பார்தம் நெஞ்சைக் கரைய வைப்பன. கையறுநிலையில் அவா படைத்த பாடல்கள் பல இருப்பினும் பதச்சோறாக ஒருசில இவண் சுட்டப்படுகின்றன.

    “சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ?
    சஞ்சலமே நீயுமொரு சஞ்சலத்தைக் காணாயோ?
    தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ?”

    என்று பண்டித ஜவகர்லால் நேரு மறைந்தபோது அவர் உகுத்த கண்ணீர் கையறுநிலைக்கு ஓர் அழியா எடுத்துக்காட்டு.

    “தன்னுயிரைத் தருவதனால் தங்கமகன் பிழைப்பானா?
    என்னுயிரைத் தருகின்றேன், எங்கே என் மாகவிஞன்?”

    என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மறைந்தபோது அவர் வடித்த கண்ணீர் கவிஞனுக்கு மற்றொரு கவிஞன் பாடிய கையறுநிலையின் தொடர்ச்சியாகலாம்.

    மணிமாறன் கவிதைகளில் கையறுநிலை

    தமிழிலக்கியப் புறத்துறைகளில் தனித்து விளங்கும் இத்தகைய கையறுநிலைப் பாடல்கள் அவல உணர்ச்சியின் ஆழமான வெளிப்பாடுகளாகவே அமைந்திருக்கின்றன. மணிமாறனும் தமது கவிதைப்படைப்புக்களில் அத்துறைப் பாடல்கள் பலவற்றைப் படைத்துக் காட்டியிருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தமிழிலக்கியப் ‘பொருள்மரபு’ அவர் படைப்புக்களில் ஊடுருவி நிற்கும் பாங்கை அறியலாம். உள்ளங்கவர் நண்பர்கள் இழப்பு, உரிமையான உறவுகள் இழப்பு, சமுதாய நலன் நாடும் சான்றோர்கள் இழப்பு எனக் கையறுநிலைக்கான கருப்பொருள் நிகழ்வுகள் பலவாயினும், தன் மகனையே இழந்து புலம்பிய கையறுநிலை கண்ணீர் மல்க வைப்பதாக உள்ளது.

    வெந்தழலுக்கு இரையான வீரப்பன்

    தமிழக அரசியலை முற்றிலும் தடம்மாறச் செய்த நிகழ்வு 1965இல் நடந்தேறியது. ‘மொழிப்போர்’ என்னும் சொல் உலக வரலாற்று அகராதியில் அப்பொழுதுதான் முதன்முறையாகப் பதிவுசெய்யப்பட்டது. ‘செந்தமிழுக்குத் தீமை வந்தபின்னும் இந்தத் தேகத்தினால் நமக்கென்ன பயன்?’ என்னும் சிந்தனை, உயிரைத் துரும்பென மதிக்க வைத்தது. தாய்மொழி அழிவைத் தாங்கிக் கொள்ள இயலாத இளைஞர்கள் தங்கள் உயிரைத் தாங்களே தீவைத்துக் கொண்டு இறந்தனர். அவர்களுள் ஆசிரியராகப் பணியாற்றிய வீரப்பனும் ஒருவர். அவர் கவிஞருக்குக் கெழுதகை நண்பரும் ஆவார். அன்னாருக்குப் பாடிய கையறுநிலைப் பாடல் வருமாறு,

    “என்னென்று அறைகுவன்? என்னென்று அறைகுவன்?
    அன்னைத் தமிழின் அழிவினைப் பொறாஅது
    புன்மொழி இந்தியின் போக்கறு நிலைக்கே
    தன்னுயிர் ஈந்த தறுகண் அம்மா!
    நானிலம் போற்றும் நல்லிசை நாட்டிய
    மேனிலைச் சிறப்பை என்னென்று அறைகுவன்? 
                ……………………………………..
    உரமும் திறமும் உணர்வும் மிகுந்திட
    உடலம் துகளாய் உருக்குலைந்து ஓய்ந்திடப்
    பொடிபடச் சிதைந்து பொசுங்கிய ஞான்றும்
    இடியென ஆர்த்தனன்”

    என்னும் இப்பாடல் ‘நண்பன், ஆசிரியன், மொழிகாக்கும் வீரன்’ என்னும் முத்திறம் தாங்கிய ஒருவரின் இழப்புக்கு ஆற்றாத நெஞ்சத்தின் வெளிப்பாடாகக் கருதலாம்.

    “1965இல் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டுத் தீந்தமிழ்க் காக்கத் தீக்குளித்து மாண்ட ஆசிரிய நண்பர் வீரப்பனின் அழியா ஈகத்தை வியந்து பாடியது”

    என்னும் பின்குறிப்போடு பதிக்கப்பட்டிருக்கும் இப்பாடல் பொருண்மையால் மரபு சார்ந்தும் பொருண்மைக்கான காரணம் புதுமை சார்ந்தும் அமைந்துள்ளது நோக்கத்தக்கது. இழப்புக்கான களம் போர்க்களமோ, நோயோ, விபத்தோ என்றில்லாமல் மொழிப்போர் காரணமாக அமைந்திருப்பது பொருண்மையில் புதிய போக்காகக் கருதப்படலாம்.

    தனித்தமிழ் கண்ட கனிச்சாறு கவிஞர்

    பாவேந்தருக்குப் பிறகு பாடுபொருளாகிய கவிதைக் களங்கள் அனைத்திலும் மரபு சார்ந்த தமிழ்க்கவிதைகளைப் படைத்த கவிஞர் சிலருள் பெருஞ்சித்திரனாரும் ஒருவர். தனித்தமிழ்ப் பாவலரான அன்னார் வடித்தெடுத்த பாடல்களில் பிறமொழிச் சொற்கள் ஒன்றுகூட இல்லை என்பது வியப்பிற்குரியது. தனித்தமிழில் அமைந்தாலும் கவிதைக்குரிய கற்பனை, உணர்ச்சி முதலிய கூறுகள் அவர் பாடல்களில் குறைந்ததாக அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது. காட்சியையும் பொருளையும் கவிதையாகவே நோக்கி அவை பற்றிய கற்பனைகளையும் சிந்தனைகளையும் கவிதையாகவே சிந்திக்கத் தெரிந்த கவிஞராக அவர் தனித்து விளங்குகிறார். அவருடைய இழப்பு ‘தென்மொழியை’மட்டுமன்றித் தமிழன்பர்கள் பலரையும் பாதித்தது. அவருள் மணிமாறனும் ஒருவர். அன்னாருடைய இழப்புக்கு மணிமாறன் பாடிய கையறுநிலைப் பாடல்களில் அவலச்சுவையின் அடர்த்தியை உணர முடிகிறது.

    “பன்னூறு முறை ‘தம்பி’என்ற ழைப்பீர்
    பாசமழை பொழிவீரே! பறந்ததெங்கே?”

    எனத் தன்னைத் ‘தம்பி’ என அழைத்த பாசமிகு அண்ணன் மறைந்துபோனதை எண்ணிப் புலம்புவதைச் சுட்டுகிறார்.

    “மூவேந்தர்அக்காலம் காத்து வந்த
                                        மூவாத சீர்த்திமிகு தமிழன் மாண்பைச்
    சாவேந்தும் வேளையிலும் நிலைக்கச் செய்தீர்
                            சான்றாண்மை எந்நாளும் காத்து வந்தீர்!
    கூவிவந்த தமிழ்க்குயிலே! விடியும் முன்பே
                            குரலொடுங்கிப் போயினையே!”

    தமிழின் மரபுசார்ந்த பெருமையை முன்னர்ச் சுட்டித், தமிழனுடைய மாண்பு காப்பதில் பெருஞ்சித்திரனார் இறுதிவரையில் உறுதியாக இருந்தார் என்னும் நிலைப்பாட்டைப் பின்னர்ச் சுட்டுகிறார். தமிழும் தழிழ்நாடும் தமிழர்களும் அடையவேண்டிய பெருமையை அடையும் முன்பே அவர் மறைந்து போனதை, ‘விடியும்’ முன்பே என்னும் தொடரால் குறிப்பாகப் பெறவைக்கின்றார்.

    “துஞ்சாமல் தோளுயர்த்திக் கிளர்ந்த  வேழம் 
    தூய்தமிழை மறந்திந்நாள் சென்ற தெங்கே?

    “……………………………………..எங்கள்
    எழுச்சிக்குப் பண்ணிசைத்த முரசே! வாழை
    குருத்தொன்று முறிந்ததுபோல் விழிகள் மூடிக்
    கும்மிருட்டில் எமைஆழ்த்திச் சென்றீர் அய்யா!”
    தூய்தமிழை மறந்திந்நாள் சென்றதெங்கே?”

    என்றும், ‘கும்மிருட்டில் எமை ஆழ்த்திச் சென்றீர் ஐயா’என்றும் பயின்று வந்துள்ள கவிதைத் தொடர்கள் பெருஞ்சித்திரனாரை இழந்து கலங்கிக் கையற்ற கவிஞர்தம் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

    ஆசிரியருக்குக் கையறுநிலை

    மகாகவி பாரதியின் நண்பராகப் பழகத் தொடங்கி, அவரைக் குருவாக வரித்துக் கொண்டவர் பாரதிதாசன். நட்பு, குருவான கதை இது. குருவாக திகழ்ந்தவர் நண்பரான கதை மணிமாறன் வாழ்க்கையில் நிகழ்ந்தது. வெள்ளமுத்து என்பார் கவிஞர் மணிமாறனின் உயர்நிலைப்பள்ளிக் கணித ஆசிரியர். காலம், வெள்ளமுத்து கணித ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே மணிமாறனையும் தமிழாசியராகக் கொண்டு வந்து அவரோடு சேர்த்தது. தனக்கு ஆசிரியராக இருந்தவருடன் தானும் ஆசிரியராகப் பணியாற்றும் பேறு மணிமாறனுக்குக் கிட்டியது. ஆசிரியர் நண்பரானதால் மதிப்போடு உரிமையும் கூடி இழைவது தவிர்க்க இயலாதது. நண்பராகப் பழகிய ஆசிரியர் வெள்ளமுத்து மறைந்தபோது,

    “பற்றுடனே பாசமழை பொழிந்தீர் வெள்ளைப்
    பாற்சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தீர்! எங்கள்
    சுற்றத்தைப் புலவர்களை மறந்து சென்றீர்!
    சொல்லவொணாத் துயர்தந்தீர்! அய்யா இங்கே
    கற்றவர்கள் பாராட்டும் நல்லீர்! உங்கள்
    கற்கண்டு சொல்லமிழ்தை என்று கேட்போம்?”

    என்று பாடினார் கவிஞர். ‘பாசமழை பொழிந்தது, ‘வெள்ளைச் சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தது, ‘கற்றவர்களால் பாராட்டப்பட்டது’, ‘கற்கண்டு சொல்லமிழ்து’என வெள்ளமுத்தின்  சிறப்புக்களையெல்லாம் சிந்தனையில் தேக்கி, ‘என்று கேட்போம்?’ எனக் கலங்கி முடித்திருப்பது, கையறுநிலையைக் காட்சிப்படுத்துவதில் கவிஞர் பெற்ற இலக்கிய வெற்றியைக் குறிக்கிறது.

    விடியலின் பனி நீரான மகன் 

    கம்பராமாயணத்தின் எதிர்நிலைத் தலைவனாகிய இராவணன், புலம்பலையே அறியாதவன். அத்தகையவன் தன் பாசமிகு மகன் இந்திரசித்தன், இலக்குவனால் வீழ்த்தப்பட்டபோது கலங்கிக் கையற்றுப் புலம்புகிறான்.

    “சினத்தொடும் கொற்றம் முற்றி
    இந்திரன் செல்வம் மேவி,
    நினைத்ததை முடித்து நின்றேன்.
    நேரிழை ஒருத்தி நீரால்,
    எனக்கு நீ செய்யத் தக்க
    கடனெல்லாம் ஏங்கி ஏங்கி
    நினக்கு யான் செய்வ தானேன்,
    என்னின்யார் உலகத் துள்ளார்?”

    என்னும் இராவணன் புலம்பலில் ஒரு தந்தையின் பாசம் பொங்கி வழிவதைக் காணமுடிகிறது. ‘தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கடனையெல்லாம் தந்தை தான் பெற்ற மகனுக்கே செய்ய நேர்ந்ததே?’ என்னும் இலங்கை வேந்தனின் உணர்ச்சிக் குமுறல், கவிஞர் மணிமாறன் தன் மகன் இறந்த வேளையில் பாடிய,

    “கொள்ளிக்கண் பாய்ச்சும் இந்தக்
    கொடியதோர் உலகைக் காண
    பிள்ளை நீ வெறுத்தாய் போலும்!
    பெரும்பழி நேரும் என்றோ
    கள்ளமில் மழலை நீயும்
    கையறு நிலையைத் தந்து
    வெள்ளமாய் விரைந்து போனாய்?
    விடியலின் பனிநீர் ஆனாய்?” 

    என்னும் பாடலில் எதிரொலிக்கிறது. ‘உலகத்தின் பார்வை அஞ்சி’ என்னாமல் ‘உலகத்தைக் காண வெறுத்து’ என்னும் நுண்ணோக்குக் கையறுநிலையின் பொருளடர்த்தியைக் கூடுதலாக்குகிறது.

    “இன்பத்தைப் பாடுவதைவிடத் துன்பத்தைப் பாடுவதில் புலவர்கள் முனைந்துள்ளனர். காதலைப்பாடும் புலவர்கள் காதலரின் இன்ப நிலையைப் பாடுதல் மிகக் குறைவாக உள்ளது. காதலரின் பிரிவாற்றாத் துயரத்தைப் பாடுதலே மிகுதியாக உள்ளது…………… ஏக்கத்திலும் துன்பத்திலும் துயரத்திலுமே பாட்டுக்கு உரிய உணர்ச்சி மிகுந்து நிற்கிறது. மாறுதலுக்கு இடையே நிலைபேற்றையும், அலைவுக்கு இடையே அமைதியையும், அழிவுக்கு இடையே என்றுமுள தன்மையையும் நாடி ஏங்கி உணர்தலே பாட்டின் இயல்பாக உள்ளது”

    என்பார் அறிஞர் மு.வ. மானுட உணர்ச்சிகள் அனைத்தும் வலிமை வாய்ந்தன எனினும் ‘பிரிவு’அல்லது ‘இழப்பு’என்னும் உணர்ச்சியே கவிதை ஆக்கத்தில் பெரும் செல்வாக்குடையது என்னும் அறிஞர் மு.வ. அவர்களின் கருத்து, மணிமாறனின் கையறுநிலைப் பாடல்கள் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிசெய்யப்படுகிறது எனலாம்.

    முனைவர் கடவூர் மணிமாறன்! ‘ஐயாயிரம் தமிழர் ஆம் உரிமை காக்க நான் பொய்யர்தமை எதிர்த்தபோது பொய்வழக்கால் சேர்த்த சிறை எனக்குத் தென்றல் வரும் சோலையன்றோ?’ என்று பாடிய பாவேந்தர் பட்டறையில் கூர் தீட்டப்பட்ட கவிதைப் போர்வாள்!. ‘அறம் பொருள் இன்பம் வீடு அடைதல்’ அக்கால நூற்பயன்! இனம், மொழி, நாடு ஆகியவற்றின் எழுச்சிக்காகப் பாடுவது இக்காலக் கவிஞர் கடமை! இவர் அக்காலத்தை மறக்காத இக்காலத்துக் கவிஞர். அதனால் இவர் படாத இடர் இல்லை! அந்த நாள்  அகத்திணையும் தெரியும். இவர் இந்த நாள் சமூக நிலையும் அறிவார். அறுபது நூல்களுக்கு ஆசிரியர். ஐந்தாறு நாடுகளுக்குப் பார்வையாளர். உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராகத் தொடங்கி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி முதல்வராக ஓய்வு பெற்றவர். பன்னிரண்டாயிரம் நூல்களைத் தன் வீட்டு மாடியில் வைத்திருக்கும்  இவர் மடியில் வைத்துக் கொஞ்சுபவை மரபுக்கவிதைகளையே!. கரந்தை புலவர் கல்லூரி கண்ட கந்தகக் கவிஞருள் ஒருவர். இவர் துறந்தது இன்பம்! துறக்காதது தமிழ்த்தொண்டு! தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். தமிழாசிரியருக்கு இலக்கணம் வகுத்தவர் சிலர். இவர் அவருள் ஒருவர்!

    (தொடரும்…)

    Share
  • ஆலாலசுந்தரரை அகத்தினில் இருத்துவோம்!

    ஆலாலசுந்தரரை அகத்தினில் இருத்துவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    இறைவன் மீது தோழமை உணர்வுடன் இப்பூவுலகில் வாழ்ந்தவர் தான் ஆலாலசுந்தரர் என்று அழைக்கப்படும் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரர் பூமியில் பிறந்த வரலாறு தேவ உலகுடன் , எம்பெருமான் சிவனுடன் இணைந்த வரலாறாகக் கருதப்படுகிறது. இறைவனுக்குத் தேவ உலகில் அணுகு தொண்டராக இருந்தவர் – மனந்தடுமாறி பேரின்பச் சூழலை மறந்து சிற்றின்பத்துக்குள் மனதினைச் செலு த்திய காரணத்தால் பூவுலகில் பிறவி எடுக்கும் நிலைக்கு ஆளா கிறார். தேவ உலகில் இவரின் சிந்தையினைக் கலைத்த பெண்களும் பூவுலகில் பிறக்கும் நிலை ஏற்படுகிறது. சிற்றின்ப ஆசைகளுக்கு உரிய இடம் பூவுலகமே ஆனதால் சுந்தரரின் சிற்றின்ப உணர்வு களைப் பகிர்வதற்கு – அவருக்குச் சலனத்தை ஏற்படுத்திய பெண் களே துணையாகவும் வந்து அமைகிறார்கள். அவர்களை மணந்து சுந்தரர் – தான் வந்தவேலை முடிந்தவுடன் – எங்கு முன்னர் இருந் தாரோ அங்கேயே போகிறார் என்பதுதான் ஆலாலசுந்தரரின் வரலா றாய்ப் படிக்கின்றோம்.

    கதைகளை நம்பலாமா என்று எண்ணத் தோன்றுகிறது. கதைகள் எப்படி இருந்தாலும் கதைகளூடாகப் புலப்படுகின்ற கருத்துக்களை த்தான் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளல் வேண்டும். காமனையே தகனம் செய்த இடத்தில் காதலுக்கு இடமே இல்லை. காதல் கொண் டால் தண்டனை அனுபவிக்க வேண்டும், தண்டனைதான் பூவுலகில் வந்து பிறப்பது. பூவுலகுதான் காதலுக்கும் , சிற்றின்பத்துக்கும் ஏற்ற இடமாகும்.சிற்றின்பத்தை அனுபவிக்கும் வேளை பேரின்பம் பற்றிய புரிதல் வரும். வருவதற்கு பேரின்ப மயமான அந்தப் பெரும் பொ ருளை , பரம்பெருளைப் பற்ற வேண்டும். பற்றும் நிலையும் பல இருக்கிறது. அதில் ஒரு நிலை நட்பு நிலையாகும். அதாவது அந்தப் பரம்பொருளை நண்பனாகக் கொண்டு அவனிடம் அடைக்கலம் புகுவ தேயாகும். அதைத்தான் ஆலாலசுந்தரர் இப்பிறவியில் கையாண்டார்.

    சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
    தாதாமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
    நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
    நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர்

    என்று சிவஞானசித்தியார் – இறைவன்மீது அடியார் கொள்ளும் பக்தி நிலை பற்றிக் காட்டுவது நோக்கத்தக்கது.

    அந்தணராய் பிறந்தார். அரசனாய் வளர்ந்தார். ஆடம்பரமான வாழ் வினை வாழ்ந்தார். அப்பரைப் போலவோ, மணிவாசகரைப் போல வோ ஆலாலசுந்தரர் வாழ்ந்தவராகத் தெரியவில்லை. சுந்தரரைக் காட்டும் அத்தனை படங்களுமே அவர் அணி மணிகளுடன் ஆட ம்பரமாய் அரசிளங்குமரனாகவே இருப்பதாகவே அமைந்திருக்கி ன்றன. அப்பரையோ மணிவாசகரையோ காட்டும் படங்கள் அத்த னையும் எதுவுமே இல்லாத துறவுக் கோலத்தில் இருப்பதாகவே அமைந் திருப்பதையும் காணமுடிகிறது.ஆனாலும் சுந்தரர் இறை வனின் நண்பனாக விளங்கி – தான் விரும்பிய அனைத்தையும் உரிமையுடன் கேட்டுப் பெற்றுக் கொண்டார் என்றும் அவரின் வரலாற்றால் அறிந்து கொள்ளுகின்றோம்.

    சுந்தரருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவர் மணக்கோலத்தில் வருகிறார். பெண்வீட்டாரும் வருகிறார்கள். அந்த ஆனந்தமான வேளையில் சிவபூஜையில் கரடி புகுந்தாற்போல – ஒரு கிழப்பிரா மணர் உள்ளே வந்து விடுகிறார். புதிய புரட்சியை அவர் உருவாக்கி விடுகிறார். “திருமணம் செய்ய இருக்கும் மணமகன் சுந்தரன் – தனக்கு அடிமை” என்று ஒரு குண்டைப் போட்டு விடுகிறார். திருமணத்தை காண வந்தவர்கள் திகைக்கிறார்கள்! மணமகன் அடிமையா ? என்ன வினோதம் என்று யாவரும் முணுமுணுக்கி றார்கள். வந்த கிழப்பிராமணரோ பிடித்த பிடியாக “சுந்தரன் எனக்கு அடிமை” என்று அடித்துச் சொல்லி – அதற்கான எழுத்து ஆதார த்தையும் காட்டுகிறார். சபையினரால் எதுவுமே செய்ய முடிய வில்லை. மணமகன் கோலத்தில் இருந்த சுந்தரர் “நீர் என்ன பித்தனா அல்லது பேயனா – மனிதனுக்கு மனிதன் அடிமையா?” இது முறையற்றது என்று துள்ளிக் குதிக்கிறார்.ஆனாலும் கிழப்பிரா மணரின் பக்கம் வலுவாய் இருப்பதால் யாவரும் அவரையே பார்த்தபடி செயலற்று நிற்கிறார்கள். உஷாரான கிழப்பிராமணர்” இந்த வழக்கினைத் தீர்க்க இந்த இடம் பொருத்தம் அல்ல – நான் இருக்கும் திருவெண்ணை நல்லூர்தான் பொருத்தம் என்று கூறி “சுந்தரர் பின் தொடர திருவெண்ணை நல்லூர் செல்கிறார். அங்குள்ள கோவிலுக்குள் சென்ற அந்தணர் மறைகிறார். அனைவரும் திகைக் கின்றனர். எம்பெருமான் காட்சி தருகிறார். சுந்தரர் தெளிவு பெறு கிறார். “என்னை எப்படிப் பேசினாயோ அப்படியே சொற்றமிழால் சுந்தரா பாடு – உன் பாட்டே எனக்கு உகந்த அர்ச்சனை ஆகும்” என்கிறார் இறைவன். சுந்தரர் வாயிலிருந்து செந்தமிழ் அருவியாய் பெருக்கெடுக்கிறது. இறைவனை எந்தவார்த்தையால் திட்டினாரோ அதே வார்த்தையையே வைத்து

    பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
    எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
    வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணை நல்லூர் அருட்துறையுள்
    அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே

    என்று மனங்கசிந்துருகிப் பாடிப்பரவி நின்றார். நாயேன் பலநாளும் உன் நினைப்பின்றி இருந்தேன். அதனால் பேயாய் திருந்தேன், நீ பொன்னாய், மணியாய், வயிரமாய் இருக்கின்றாய் நானோ உன்னை மறந்தே இருந்திருக்கிறேன். ஊனாய், உயிராய், உடலாய், உலகாய், வானாய், நிலனாய், கடலாய், மலையாய், நீயே இருக்கிறாய். நானோ உனை அறியாமல் இருந்து விட்டேன்.

    என்று தம்மைத் தடுத்தாட்கொண்ட நிலையில் சுந்தரர் மெய்யுருகிச் செந்தமிழால் பரம்பொருளைப் பாடி நிற்கிறார். உனக்கு நான் ஏற்க னவே அடியவன் என்பதை மறந்துவிட்டேன் . நீ வந்து தெளிவு படுத்தி என்னை உனது மீளா அடைமையாய் ஆக்கி – என்னை மீட்டெடுத்தாயே பரம் பொருளே என்று ஏங்குவதும், இரங்குவதும் சுந்தரர் நிலையால் வெளிப்பட்டு நிற்கிறது எனலாம். ஆண்டவனின் பரீட்சை அடியவனைக் கடைத்தேற்றியதை இங்கு கண்டு தெளிகி றோம்.

    திருமணம் தொடக்கத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று கேள்விகள் கேட்டு குழம்புவதில் பயனில்லை. தனது அடியானைத் தடுத்தாட் கொள்ள நடந்த ஒரு அற்புதம் என்றுதான் இதனைக் கொள்ள வேண்டும். எங்களுக்கும் இப்படி வாழ்க்கையில் பல சந்தர்ப் பங்களை அந்தப் படைத்தவன் செய்து காட்டியிருப்பான் என்பதை நினைத்துப் பார்த்தால் சுந்தர் கதை நன்றாகவே விளங்கும் என எண் ணுகிறேன்.

    இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தர் பின்னர் சங்கிலியார், பரவையார் என்னும் பெண்களை மணமுடிக்கிறார். பூவுலகில் அனுபவிக்கும் இன்பங்களை அனுபவிக்கிறார். அவரின் விருப்பங் களுக்கு ஆண்டவனும் நண்பனாய் இருந்து அருள்பாலிக்கிறார் என்பதும் சுந்தரர் வரலாற்றால் அறிந்து கொள்ளுகின்றோம்.

    சுந்தரர் பற்றிய கதைகள் பலவற்றைக் கேட்கும் நாம் – சுந்தரரின் முக்கியத்துவம் பற்றி நோக்குவதுதான் மிகவும் அவசியமாகும். அவற்றையே அகம் இருத்துவதுதான் முறையானதாகும் என்று கருதுகிறேன்.சுந்தரரின் தடுதாட் கொண்ட கதையில் மனம் லயிக்கும் நாங்கள் சுந்தரரின் பங்களிப்பை பற்றிப் பெரிதும் பார்ப்பதே இல்லை. “பித்தா பிறை சூடி” என்னும் பதிகத்தையும் “மீளா அடிமை உனக்கே ஆளாய்” என்னும் பதிகத்தையும் பாடி நிற்கும் அளவிலேயே சுந்தரரை விட்டு விடுவோம்.ஆனால் அதற்கு அப்பாலும் சென்று சுந்தரரை நாம் பார்க்க வேண்டும் என்பதுதான் எனது மனக்கிடக் கையாகும்.

    சம்பந்தர், அப்பர் காலம் போல் சுந்தரர் காலம் அமையவில்லை. சம்பந்தருக்கும் அப்பருக்கும் புறச்சமயங்களின் எதிர்ப்பலைகள் நிறையவே இருந்தன. அவர்களின் பணிகள் அனைத்துமே – புறச்சமயங்களின் எதிர்ப்பினின்று சைவத்தை “மேன்மை கொள் சைவமாக” மிளிர்ந்திடச் செய்ய வேண்டும் என்னும் வகையிலே அமைந்தது எனலாம். அதற்காகவே அவர்கள் அடியவர்கள் புடைசூழ பக்தியென்னும் புரட்சியை சமூகத்தில் நடத்திக் காட்ட வேண்டிய வர்களாகவே செயற்பட்டார்கள். ஆனால் சுந்தரர்காலம் அப்படி இல்லாத காரணத்தால் சுந்தரரின் பக்திப் பாடல்கள் நோக்கும், போக் கும் வித்தியாசமாய் அமைந்தது என்பது கருத்திருத்த வேண்டியது முக்கியம் எனலாம்.

    சுந்தரர் இக இன்பங்களில் திளைத்தவராகவே இருந்திருக்கி ன்றார்.ஆனால் எந்த நிலையிலும் இறைவனை மறவாதவராக, இறைபுகழ் பாடுபவராக, இருந்திருக்கிறார் என்பதும் நோக்கத் தக்கது. துறவையோ, வெறுப்பையோ அவரது பக்திப் பனுவல்கள் காட்டுவதாக இல்லை எனலாம். இயற்கையினை மிகவும் நேசித்துப் பாடுகிறார். இரந்து நின்று பாடிப் பரிசில் பெறும் நிலையினை அவர் சாடுகிறார். தனக்கு வேண்டியவற்றை இறைவனிடம் நண்பனாய் கேட்டே பெறுகின்றவராய் சுந்தரர் இருக்கின்றார்.

    தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
    சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
    பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
    இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்
    ஏத்த லாம்இடர் கெடலுமாம்
    அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே

    என்று வித்தியாசமாய் சிந்தித்துப் பாடுவது சுந்தரரின் முக்கியத்துவம் எனலாம். அதாவது “தம்மையே புகழ்ந்து இச்சையான முறையில் பேசினாலும், சார்ந்து நின்றாலும், பொருள்தர மனம் வராத பொய்மைமயான வாழ்வு உடைய செல்வரைப் பாடாமல், சிவனுடைய கோவிலைப் பாடுங்கள், இந்தப் பிறப்புக்கு உரிய உணவும் உடையும் பெறலாம்; மறுமையில் சிவகதியும் கிடைக்கும். ஐயம் இல்லை” என்பதேயாகும்.

    “வீரத்தின் மிடுக்கு இல்லாத செல்வனை – வீமன், அருச்சுனன் என்று புகழ்வதில் எந்தப் பயனுமில்லை; கொடுக்க மனம் இல்லா தவனைப் பாரி என்று புகழ்ந்து கூறினாலும் கொடுபவர் இல்லை. மூத்துத் தளர்ந்து உடல் நடுங்கும் கிழவனாகிய செல்வனை – மலை போன்ற தோள் உடையவன் என்று புகழ்ந்து வாழ்த்துவதால் பயன் இல்லை.வஞ்ச நெஞ்சனை, கொடியவனை, பாவியை, கெட்டவனை, சாது என்று கூறிப் பாடுவதால் பயன் இல்லை.ஈயாத உலோபியை வள்ளல் என்றும், கல்வி இல்லாதவனைக் கல்வி வல்லவன் என்றும், புகழ்ந்து காலம் கழிக்காதீர். எம்பெருமான் சிவனைப் பாடிப் பயன் பெறுங்கள்” என்று காட்டும் பாங்கு சுந்தரரின் வித்தியாசமான சிந்தனையினையினை வெளிக்காட்டி நிற்கிறதல்லவா !

    சம்பந்தர், அப்பர், மணிவாசகர் செய்யாத ஒரு காரியத்தைச் சுந்தரர் செய்து தமிழ்ப் பக்திப் பரப்பில் முக்கியத்துவத்தைப் பெற்று நிற்கிறார். தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் எனத்தொடங்கும் “திருத்தொண்டத் தொகையினை” அளித்தமை எனலாம்.சுந்தரரின் இந்தக் கொடை மட்டும் கிடைக்கா விட்டிருந்தால் – நாங்கள் ஏற்றிப் போற்றிக் கொண்டாடும் சைவத்தின் அறுபத்து மூவரும் வந்திருக்கவே மாட்டார்கள். அவர்களின் இறை அனுபவங்களையும் நாம் அறியும் வாய்ப்பும் எமக்கு வாய்த்திருக்காது. அந்த பெருவாய்ப்பினை நாம் இன்று பெற்றிருப்பதற்கு அத்திவாரமே சுந்தரர்தான் என்பதை மனமிருத் துதல் அவசியமாகும்.

    சுந்தரரின் திருத்தொண்டர் தொகை இல்லையேல் – பெரியபுராணம் வந்திருக்காது. சேக்கிழார் என்னும் தெய்வப்புலவர், செந்தமிழ் புலவர் – இறை அடியார்களை எங்கள் கண்முன்னே கொண்டுவந்து காட்டி யிருக்கும் நிலையும் ஏற்பட்டிருக்காது. சிந்தாமணியில் மூழ்கிய சோழ மன்னனும் சிவனின் திருவருளை அறிந்திருக்க மாட்டான்.

    பெரியபுராணம் என்னும் சைவத்தமிழ் காப்பியம் இன்று சைவவ த்துக்கே பெரும் பொக்கிஷமாய் திகழ்கிறது என்றால் அதற்கு மூலகாரணமே ஆலாலசுந்தரர் தான் என்பதை மறுத்துரைத்துவிட முடியாது. ஆலயங்கள் தோறும் அடியார்களின் திருவுருவச் சிலைகள் வைக்கப்பட்டு , உரிய காலங்களில் குருபூஜை செய்யப்பட்டு, திருவீதி உலா வருவதற்கும் ஆலாலசுந்தரப் பெருமானே அடித்தளம் இட்டார் என்பது பெரு முக்கியத்தைத்தை உணர்த்து கிறதல்லவா !

    தேன்படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
    நான்படிக்கும் போதுஎன்னை நான்அறியேன் நாஒன்றே
    ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்கு உயிரும்
    தான்படிக்கும் அனுபங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே

    “வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி“

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 35

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 35

    -மேகலா இராமமூர்த்தி

    மாரிக்காலம் முடிவுற்றும் சுக்கிரீவனின் படைகள் இராமனுக்கு உதவியாய் வந்துசேரவில்லை. சுக்கிரீவனின் இந்த நன்றிகொன்ற செயலை எண்ணிச் சினந்த இராமன், அவன் தவற்றைச் சுட்டிக்காட்டுமாறு இளவல் இலக்குவனைக் கிட்கிந்தைக்கு அனுப்பினான்.

    தமையனின் ஆணையையேற்று விரைந்து கிட்கிந்தை மலைக்குச் சென்ற இலக்குவன் அதன் உச்சியில் நின்ற தோற்றம் மலையின்மீது பொன்னிறமானதோர் ஆண்சிங்கம் நிற்பதைப் போன்றிருந்தது.

    சீற்றத்தொடு சீயமென இலக்குவன் குன்றின் உச்சியில் நிற்பதைக் கண்ட வானரர்கள், காலனைக் கண்டவர்கள்போல் கதிகலங்கி, அங்கதனை அடைந்து இலக்குவன் கிட்கிந்தைக்கு வந்துகொண்டிருக்கும் செய்தியை அறிவித்தார்கள்.

    அங்கதன் மறைவாக நின்று இலக்குவனின் கோப முகக்குறியைக் கண்டுகொண்டான். விரைந்து தன் சிறிய தாதையான சுக்கிரீவனிடம் சென்றான். விசுவகர்மாவின் மகனான நளன் எனும் வானரன் உருவாக்கிய அரண்மனையில் பஞ்சணையின்மீது இளமகளிர் தன் பாதம் வருட இன்துயிலில் ஆழ்ந்திருந்தான் சுக்கிரீவன்.

    அங்குவந்த அங்கதன் பதற்றத்துடன், ”எந்தையே…நான் சொல்வதைக் கேள்! இராமனின் இளவல் இலக்குவன் தன் மனத்திலுள்ள பெருங்கோபத்தை முகம் எடுத்துக்காட்ட, யாரும் தடுக்கவியலா வேகத்தொடு கிட்கிந்தைக்கு வந்து சேர்ந்துள்ளான். அதுகுறித்து உன்னுடைய உள்ளக் கருத்து என்ன?” என்று கேட்டான்.

    எந்தை கேள் அவ்
          இராமற்கு இளையவன்
    சிந்தையுள் நெடுஞ்
          சீற்றம் திரு முகம்
    தந்து அளிப்ப தடுப்ப
          அரும் வேகத்தன்
    வந்தனன் உன் மனக்
          கருத்து யாது என்றான். (கம்ப: கிட்கிந்தைப் படலம் – 4397)

    ஆனால், கள்ளருந்திய களிப்பிலும், இளமங்கையர் அருகிருந்து செய்யும் பணிவிடையிலும் மயங்கிக் கிடந்த சுக்கிரீவனிடமிருந்து எந்த விடையும் கிடைக்கவில்லை அங்கதனுக்கு.

    வாலி கணித்தபடியே சுக்கிரீவன் பூவியல் நறவம் மாந்திப் புந்தி வேறுற்றவனாகவும், கொடுத்த வாக்கை மறந்த பொறுப்பற்றவனாகவும் நடந்துகொண்டமைக்கு இந்தக் காட்சி நல்ல சாட்சி!

    சுக்கிரீவனின் நிலையைக்கண்ட அங்கதன், இனி இவனிடம் யோசனை கேட்டுப் பயனில்லை என்பதையுணர்ந்து அறிவிற் சிறந்த அனுமனைத் தேடிச்சென்று அவனையும் திறல்மிகு வீரர்களையும் அழைத்துக்கொண்டு தன் தாய் தாரை தங்கியிருக்கும் மாளிகைக்கு வந்தான்.

    இலக்குவனின் வருகை பற்றி அவளுக்கு அறிவித்து, மேலே நாம் செய்ய வேண்டியது என்ன என்று அவளை வினவினான் அங்கதன். சுக்கிரீவனின் நன்றியற்ற செயலால் ஏற்கனவே வெறுப்படைந்திருந்த தாரை, ”இராமன் சொன்ன கெடுவுக்குள் படைதிரட்டிக்கொண்டு செல்லுங்கள் என்று நான் பன்முறை சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை; இப்போது அதன் விளைவைச் சந்திக்கின்றீர்கள்; வாலியைக் கொன்று அரசாட்சியை உங்களுக்கு (சுக்கிரீவனுக்கு) அளித்த பேராற்றல் உடைய அவர்கள் உங்கள் அலட்சியச் செயலைப் பொறுத்துக்கொண்டிருப்பார்களா? அவர்கள் உங்களோடு போருக்கு வந்தால் நீங்கள் மாளவேண்டியதுதான்” என்றாள் கோபத்தோடு.

    அந்த நேரத்தில் இலக்குவன் எளிதில் நகருக்குள் நுழையாதபடி வானரர்கள் நகரின் வாயிற்கதவைத் தாழிட்டுப் பாறைகளை வைத்து அடைத்தனர். இலக்குவன் உள்ளேவந்தால் அவனை நையப் புடைப்போம் என எண்ணிக் கையில் பெரும் மரங்களையும் பாறைகளையும் வைத்துக்கொண்டு தயாராக நின்றனர்.

    தன்னிடமிருந்து தப்புவதற்காக வானரர்கள் செய்த வேடிக்கையான செயல்களைக் கண்டு எள்ளலோடு நகைத்த இலக்குவன், தன் தாமரைபுரை தாளினால் அவ்வாயிற் கதவினை மிக எளிதாகத் தள்ளினான். அதனால், பெரும் பாறைகளால் முட்டுக்கொடுக்கப்பட்ட வாயிற்கதவோடு மதிலும் சேர்ந்து சிதைந்துபோனது. இந்நிகழ்வு, தெய்வத்தின் திருவடிபட்ட அளவில் தீர்த்தற்கரிய தீவினைகளும் அழிந்துபோவதை ஒத்திருந்தது என்கின்றார் கம்பர்.

    காவல் மா மதிலும் கதவும் கடி
    மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும்
    தேவு சேவடி தீண்டலும் தீண்ட அரும்
    பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால்.
    (கம்ப – கிட்கிந்தைப் படலம் – 4409)

    அரணைத் திரணமாய் மதித்து இலக்குவன் தள்ளியது கண்டு உயிரச்சம் கொண்ட வானரர்கள், கிட்கிந்தை மலையைவிட்டு விரைந்தோடிக் கானடைந்ததால் விண்மீனிலா வானம்போல் வெறுமையாய்க் காட்சியளித்தது கிட்கிந்தை.

    நிலைமையின் விபரீதத்தை அறிந்த தாரை, மகளிர்குழாத்தோடும் சென்று இலக்குவன் வரும் வழியில் நின்றாள். சினத்தோடு சீறி வந்துகொண்டிருந்த இலக்குவன், மகளிர்குழாம் எதிர்நிற்பது கண்டு வேகந்தணிந்து அவர்களை நேர்நோக்க நாணித் தலைகவிழ்ந்துகொண்டான். அவன் தன் வில்லினை நிலத்தில் ஊன்றி, வானர மகளிரை நிமிர்ந்துநோக்கத் தயங்கிநின்ற அக்காட்சியானது, ”மாமியர் கூட்டத்தினிடையே நாணிநின்ற மருமகனை ஒத்திருந்தது” என்று நகைச்சுவை தோன்றக் கூறுகின்றார் கவிவலாரான கம்பர்.

    இலக்குவனின் அருகில்வந்த தாரை, ”ஐய! நீ சீற்றதோடு வருவதுகண்ட வானரர்கள் நீ வந்த காரணம் அறியாது உன்னைக் கண்டு அஞ்சுகின்றனர். இராமனின் திருவடிகளை நீங்காதவனாகிய நீ இங்குவந்த காரணத்தை எமக்கு அறியத்தருவாய்” என்று அன்போடு வினவினாள்.

    பகலில் தோன்றிய நிலவுபோல் வந்துநின்ற தாரையைச் சற்றே நிமிர்ந்து நோக்கினான் இலக்குவன். மங்கல அணிகளற்று, கூந்தலில் மலர்களற்று, உடலை ஆடையால் முழுவதும் போர்த்துக்கொண்டு நின்ற அவளின் கைம்மைக் கோலம் தயரதனைப் பிரிந்த தம் தாயரின் கோலத்தை அவனுக்கு நினைவூட்டவே, அதனைக் காண ஆற்றாது அவன் நயனங்கள் பனித்தன; நெஞ்சம் வேதனையில் ஆழ்ந்தது.

    மனத்தைத் தேற்றிக்கொண்டு தாரையை நோக்கிய இலக்குவன், ”சுக்கிரீவன் படைகளோடு சீதையைத் தேட உதவிக்கு வருவேன் என்று சொல்லியிருந்தான்; ஆனால் சொன்னதை மறந்துவிட்டான்; அவன் நிலையை அறிந்துவர அண்ணனிட்ட கட்டளையை ஏற்று இங்கு வந்தேன்! அதுகுறித்து விளம்புக!” என்றான்.

    சமயோசித அறிவு நிரம்பிய தாரை, ”செம்மையான உள்ளத்தோடு சுக்கிரீவனின் பெரும்பகையை மாற்றி (வாலியை அழித்தமை), அவனுக்கு அரசாட்சியை அளித்திருக்கின்றீர்கள். நீர் செய்த பேருதவியைச் சுக்கிரீவனும் அவனுடைய கூட்டத்தாரும் சிறுமையாய்க் கருதிப் புறக்கணிப்பரேல் இப்பிறவியிலேயே வறுமையடைந்து செல்வத்தோடு புகழும் அழிந்து, மறுமையிலும் நற்கதி பெறாது நரகெய்துவர்” என்று பதிலிறுத்தாள்.

    செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த
          பேர் உதவி தீரா
    வெம்மை சேர் பகையும்
          மாற்றி அரசு வீற்றிருக்கவீட்டீர்
    உம்மையே இகழ்வர் என்னின்
          எளிமையாய் ஒழிவது ஒன்றோ
    இம்மையே வறுமை எய்தி
         இருமையும் இழப்பர் அன்றே.  (கம்ப: கிட்கிந்தைப் படலம் – 4431)

    இராமன் சுக்கிரீவனுக்குச் செய்த உதவியின் சிறப்பு குறித்துத் தாரை சொன்ன சொற்கள், அமுத தாரையென இலக்குவனின் காதில் விழுந்தன; அவன் சினம் தணிந்தான். அதுதான் இலக்குவனைச் சந்திக்கச் சரியான சமயம் என்றுணர்ந்த மாருதி, மெல்ல இலக்குவனின் அருகில் வந்தான்.

    வந்தவன் இலக்குவனின் அடிபணிய, அவனை நோக்கிய இலக்குவன், ”கேள்வி ஞானத்தில் வரம்பில்லாதவனாகிய நீயும் முன்பு நடந்தவற்றையெல்லாம் மறந்துவிட்டாய் அல்லவா?” என்று மாருதியைப் பார்த்து ஏமாற்றத்தோடு வினவ, அதனை உடனே மறுத்த மாருதி,

    ”ஐயனே! அன்புமிகு தாயையும் தந்தையையும் குருவையும் தெய்வத்தின் இடத்திலுள்ள அந்தணர்களையும் பசுக்களையும் குழந்தைகளையும் பாவையரையும் கொலை செய்தவர்க்கும் அந்தப் பாவங்களைப் போக்குதற்குரிய கழுவாய் உண்டு. ஆனால், காலத்தினாற் செய்த அழியாத பேருதவியை மறந்தவர்க்கு அப்பாவத்திலிருந்து மீளும் வழி ஒன்றேனும் உண்டோ? இல்லை!” என்றான்.

    சிதைவு அகல் காதல் தாயை
          தந்தையை குருவை தெய்வப்
    பதவி அந்தணரை ஆவை
          பாலரை பாவைமாரை
    வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல்
          ஆம் ஆற்றல் மாயா
    உதவி கொன்றார்க்கு ஒன்றானும்
          ஒழிக்கலாம் உபாயம் உண்டோ. (கம்ப: கிட்கிந்தைப் படலம் – 4435)

    எத்தகைய நன்மையை மறந்தவர்க்கும் அப்பாவத்திலிருந்து தப்பிப் பிழைக்கும் வழியுண்டு; ஆனால் காலத்தினாற் செய்த நன்மையை மறந்தவர்க்கு அப்பாவத்திலிருந்து விடுபட வழியே இல்லை என்பதுதானே வள்ளுவரின் வாய்மொழியும்?

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
    (110)

    வள்ளுவரின் இக்கருத்தை விரிவான சான்றுகளோடு விளக்குகின்றது சங்கப் புலவர் ஆலத்தூர்கிழாரின் புறநானூற்றுப் பாடல்.

    ”பசுவின் முலையறுத்த தீவினையாளர்களுக்கும், சிறந்த அணிகலன்களை அணிந்த மகளிரின் கருவைச் சிதைத்தவர்களுக்கும், பெற்றோர்களுக்குத் தவறிழைத்தவர்களுக்கும்கூட அவர்கள் செய்த கொடுந் தீவினைகளிலிருந்து விடுபடக் கழுவாய் (பரிகாரம்) உண்டு. ஆனால், உலகமே தலைகீழாய்ப் பெயர்ந்தாலும் ஒருவன் செய்த நன்மையைப் போற்றாது புதைத்தோர்க்கு அப்பாவத்திலிருந்து விடுபட வழியில்லை என்று அறநூல் தெரிவிக்கின்றது” என்பது அப்பாடல் நமக்குத் தரும் செய்தி.

    ”ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
    மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
    குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
    வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன
    நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்

    செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என
    அறம் பாடிற்றே ஆயிழை கணவ…”
      (புறம்: 34)

    ஈண்டு அறம் பாடிற்று என்று புலவர் குறிப்பிடுவது திருக்குறளைத்தான் என்பது தி.வை.சதாசிவ பண்டாரத்தார் உள்ளிட்ட பல இலக்கிய ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

    ஆலத்தூர்கிழாருடைய பாடலின் பிரதிபலிப்பாகவே, மாருதியின் வாக்காக அமைந்த, மேற்கண்ட கம்பரின் பாடலும் விளங்குவது கண்கூடு. சங்கப் பாடல்களில் கம்பருக்கிருந்த பற்றையும் பயிற்சியையும் இது தெற்றெனப் புலப்படுத்துகின்றது.

    தொடர்ந்து இலக்குவனிடம் பேசிய மாருதி, ”ஆண் தகையே! வானர அரசனாகிய சுக்கிரீவன் உம் ஆணையை மறக்கவில்லை. வலிமையுள்ள வானரப் படைகளைத் திரட்டிச் சேர்ப்பதற்கு எல்லாத் திசைகளிலும் அவன் தூதர்களை அனுப்பியுள்ளான். அவ்வானர வீரர்கள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருப்பதால் சற்றுக் காலதாமதம் ஆகிவிட்டது. நீங்கள் அளித்த அரசச் செல்வத்தையும் அதனைப் பெற்றுவக்கும் சுக்கிரீவனையும் நாம் காணச் செல்வோம் வாருங்கள்!” என்று பணிவோடு தெரிவிக்கவும் இலக்குவனின் கோபம் அடங்கியது.

    மாருதியோடு இலக்குவன் சென்றான். வழியில் வாலி மைந்தனான அங்கதன் எதிர்வந்து இலக்குவனை வணங்கவே, ”என் வரவினை உன் தந்தைக்குத் தெரிவி” என்றான் இலக்குவன்.

    அங்கதன் சுக்கிரீவனின் அரண்மனைக்கு மீண்டும் சென்று அவனைத் துயிலெழுப்பினான். மெல்லக் கண்விழித்த சுக்கிரீவனிடம், சொல்லிய காலக்கெடு முடிந்தபின்னும் வானரர்கள் சேனையொடு இராமனைக் காணச் செல்லாததால் இலக்குவன் சீற்றத்தோடு கிட்கிந்தைக்கு வந்திருப்பதையும், சேனை திரட்டச் சுக்கிரீவன் தூதர்களை அனுப்பியிருப்பதால்தான் காலதாமதம் ஆகிறது என்று கூறி தாரையும் அனுமனும் நிலைமையைச் சமாளித்து இலக்குவனின் சினத்தீயைத் தணித்திருப்பதையும் தெரிவித்தான்.

    அதனைக்கேட்ட சுக்கிரீவன், நறவின் பிடியில் தான் சிக்கியதால் நேர்ந்த அவலமே இது என்று தன்பால் கழிவிரக்கம் கொண்டான். இனி நறவைத் தொடுவதில்லை எனச் சூளுரைத்து, “இலக்குவனை நீயே இங்கு அழைத்து வருக!” என்று அங்கதனை அனுப்பிவிட்டு இலக்குவனை வரவேற்கும் வகையில் தன் அரண்மனைத் தலைவாயிலில் சுற்றஞ்சூழ வந்துநின்றான்.

    இலக்குவன் அங்கே வர, அரச குலத்தவரை வரவேற்பதற்குரிய முறைப்படி அவனை வரவேற்ற சுக்கிரீவன், இலக்குவனை அரண்மனைக்குள் அழைத்துச்சென்று உணவுண்ணும்படி உபசரிக்க, ”சீதையின் இருப்பிடத்தை நீ காட்டுவதே எங்களுக்கு அமுதம் ஊட்டுவதற்கு ஒப்பாகும்” எனவுரைத்து இலக்குவன் உணவுண்ண மறுத்துவிட்டான்.

    ”சுக்கிரீவன் அதுகண்டு மனம் வருந்தி, ”நம் சேனைகளையெல்லாம் திரட்டிக்கொண்டு நீ இராமனிடம் விரைவில் வந்துசேர்” என்று மாருதியிடம் கூறிவிட்டு இலக்குவனோடு சென்று இராமனைச் சந்தித்தான்; உரிய காலத்தில் படையுடன் வராததற்குத் தன் வருத்தத்தைத் தெரிவித்தான்.     

    மறுநாள் காலை வெள்ளம்போல் வானர சேனைகள் நாலா பக்கமிருந்தும் வந்து குவிந்தன. அதனைக் கண்ட இராமன் இலக்குவனிடம், ”கடலினைக் கண்டோம் என்று சொல்பவர் யாரும் அதனை முழுமையாய்க் கண்டவர் இல்லை; அஃதொப்ப இந்த வலிமைமிகு சேனையின் உடலை (அதன் நடுப்பகுதியை) மட்டுமே நாமும் காணமுடிகின்றது; இதன் முடிவைக் காண இயலவில்லை” என்றான் வியந்து!

    அடல்கொண்டு ஓங்கிய சேனைக்கு
          நாமும் நம் அறிவால்
    உடல் கண்டோம் இனி முடிவு
          உள காணுமாறு உளதோ
    மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய்
         மண்ணிடை மாக்கள்
    கடல் கண்டோம் என்பர் யாவரே
          முடிவு உறக் கண்டார். (கம்ப: தானைகாண் படலம் – 4547)

    அதனை ஆமோதித்த இளவல் இலக்குவன், ”ஆம், எதனையும் எளிதில் முடிக்கவல்ல இந்தச் சேனையின் துணையால் அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்றான் அழுத்தமாக.

    [தொடரும்]

    *****

    1. கம்பராமாயணம் – கோவைக் கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • இந்தியாவின் முதல் ரேடியோ விஞ்ஞானி ஸர் ஜகதிஷ் சந்திர போஸ் (1858-1937)

    இந்தியாவின் முதல் ரேடியோ விஞ்ஞானி ஸர் ஜகதிஷ் சந்திர போஸ் (1858-1937)

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Engg Nuclear, Canada

    https://youtu.be/DSYT49CsucA

    பாரத தேசத்தின் முதல் வானலை ஆராய்ச்சி விஞ்ஞானி

    பதினெட்டாம் நூற்றாண்டில் மின்சக்தி யுகம் [Electricity Age] தோகை விரித்ததும் கம்பியில்லாத் தொடர்பைப் [Wireless Communication] பற்றி வேட்கை உண்டாகி அடுத்து நூறாண்டுகள் விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணர்களும் முயன்று வந்திருக்கிறார்கள்! 1795 டிசம்பர் 16 ஆம் தேதி ஸ்பெயின் தேசத்து விஞ்ஞானி, ஸால்வா [Salva] ஸ்பெயின் விஞ்ஞானக் கழகத்தில் [Spanish Academy of Sciences] தொலை வரைவுக்கு மின்சக்தி உபயோகம் [On the Application of Electricity to Telegraphy] என்னும் புதிய கருத்து வெளியீட்டைச் சமர்ப்பித்து ரேடியோ சாதனத்திற்கு முதலில் விதை ஊன்றினார். ஆனால் தீவிர முயற்சிகள் 1830 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ஆரம்பமாயின! விஞ்ஞான வல்லுநர்கள் பலர் அத்துறையில் மூழ்கி 1895 ஆம் ஆண்டில் ஓரளவு வெற்றி பெற்று முதலில் சிறிதளவு தூரத்துக்கு ரேடியோ வானலையை அனுப்பிக் காட்டினர்!

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நான்கு சிறப்பான நிபுணர்கள் கம்பியில்லாத் தொடர்பை உலகில் ஏற்படுத்த இராப் பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள்! இத்தாலியில் பொறியியல் வல்லுநர், மார்கோனி [Marconi Guglielmo (1874-1937)]. ஜெர்மனியில் பெளதிக விஞ்ஞானி கார்ல் பிரெளன் [Karl Braun(1850-1918)]. ரஷ்யாவில் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் போபாவ் [Alexander Popov (1859-1905)]. இந்தியாவில் பெளதிக விஞ்ஞானி ஜகதிஷ் சந்திர போஸ் [Jagadis Chandra Bose]. போட்டியில் எல்லோரையும் முந்திக் கொண்டதாகக் கருதப்பட்டு மார்க்கோனியும், கார்ல் பிரெளனும் 1909 இல் நோபெல் பரிசைத் தட்டிக் கொண்டு போய்ப் பகிர்ந்து கொண்டார்கள்! மெய்யாக போஸ்தான் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அனைவருக்கும் முன்பாக அமைத்துக் காட்டியவர். அதிர்ஷ்ட தேவதை அருட்கண் திறந்து ஆசீர்வதிக்கா விட்டாலும், இந்தியாவின் விஞ்ஞான நிபுணர் ஜகதிஷ் சந்திர போஸ்தான் வானொலித் தொடர்பு ஆய்வில் முதலில் வெற்றி பெற்றவர் என்பது விஞ்ஞான வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சியாகும்! அமெரிக்காவின் மின்துறை மின்னியல் பேரவை IEEE [The Institute of Electrical & Electronics Engineers] J.C. போஸ் ரேடியோ சாதனத்தைக் கண்டு பிடித்த முன்னோடிகளில் [Pioneers of Radio] ஒருவர் என்று மட்டுமே சமீபத்தில் சான்றிதழ் கொடுத்துள்ளது!

    மார்கோனி

    image.png

    ரேடியோ ஆய்வு செய்த இத்தாலிய விஞ்ஞானி மார்கோனி

    இந்தியாவில் நவீன விஞ்ஞான ஆராய்ச்சியின் தந்தை என்று சிலரால் போற்றப்படுவர் ஜகதிஷ் சந்திர போஸ்! 1930 இல் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெற்ற ஸர்.சி.வி. ராமன் (1888-1970) காலத்துக்கும் சிறிது முற்பட்டு விஞ்ஞான வளர்ச்சிக்கு பாரதத்தில் விதை யிட்டவர், J.C. போஸ். செடி, கொடி, மரம், புல், பூண்டுக்கும் மனிதர், விலங்குகளைப்போல் உணர்ச்சிகள் உண்டு என்று முதலில் அறிவித்தவர் போஸ்! தாவரவியல் விஞ்ஞானத்தில் ஆழ்ந்து பயிர் இனங்களின் நுண்ணுணர்ச்சியைக் கருவிகள் மூலம் பதிவு செய்து மனிதர், விலங்குகளைப் போன்ற உயிர் இனங்களை ஒத்துள்ளது என்று கண்டு பிடித்தவர் போஸ்! விலங்குகளின் தசைகளுக்கு இணையாக தாவரவியல் தசைகளும் [Plant Tissues] உள்ளன என்று எடுத்துக் காட்டியர், போஸ்! ரேடியோ மார்கோனியைத் தெரிந்த அளவுக்கு, ஸர் சி.வி. ராமனை அறிந்த அளவுக்கு, தேசீய வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் புரிந்த கொண்ட அளவுக்கு இந்தியருக்கும், உலகினருக்கும் பாரதத்தின் முதல் பெளதிக விஞ்ஞானி, ஸர் ஜகதிஷ் சந்திர போஸைப் பற்றிப் பூர்வமாகத் தெரியாது!


    போபாவ் & மார்கோனி

    ஜகதிஷ் சந்திர போஸின் ஆரம்ப வாழ்க்கை வரலாறு

    1858 நவம்பர் 30 ஆம் தேதி வங்காளத்தில் மைமென்சிங் [Mymensigh, Bengal] என்னும் ஊரில் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்தார். இருபத்திரண்டு வருடங்கள் இந்தியாவின் பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பாகக் கல்வி கற்று மேற்கொண்டு லண்டன் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயில, 1880 இல் இங்கிலாந்துக்குச் சென்றார். ஓராண்டுக்குள் போஸ் இயற்கைவியல் விஞ்ஞானத்திற்கு [Natural Science] உபகாரச் சம்பளம் பெற்றுக் கிறித்துவக் கல்லூரியில் படிக்கக் கேம்பிரிடிஜ் பல்கலைக் கழகத்திற்குத் தாவினார். அங்குள்ள அவரது ஆசிரியர்களில் குறிப்பிடத் தக்கவர், பேராசிரியர் ஜான் ராலே [John W.S. Rayleigh (1842-1919)]. அவரிடம் கற்ற கல்விப் பயிற்சி போஸின் பிற்கால விஞ்ஞானப் படைப்புகளுக்கு மிகவும் பேராதரவாய் இருந்தது. போஸ் 1884 இல் கேம்பிரிட்ஜில் B.A. பட்டத்தையும், லண்டன் பல்கலை கழகத்தில் B.Sc. பட்டத்தையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு மீண்டார். கல்கத்தாவில் பிரசிடென்ஸிக் கல்லூரியில் பெளதிகத்தில் நுழைவுப் பேராசிரியர் பதவியை 1885 இல் ஒப்புக் கொண்டு வேலையில் சேர்ந்தார். அப்பணியில் இருந்த போது, அவரது முன்னாள் பிரிட்டிஷ் பேராசிரியர் ஜான் ராலேயின் சீரிய கல்வி முறைகளைக் கையாண்டு, விஞ்ஞானக் காட்சிச் சாதனங்களை மாணவர்களுக்கு இயக்கிக் காட்டி, கைதேர்ந்த ஆசிரியர் என்று பெயர் பெற்றார். அவரிடம் மாணவராகப் படித்தவர்களில் பலர் பின்னால் பெரும் பெளதிக மேதையாக பெயர் பெற்றனர்.

    ஸர் ஆலிவர் லாட்ஜ் [Sir Oliver Lodge] எழுதிய ஹையன்ரிச் ஹெர்ட்ஸ் & பின்வந்தவர்கள் [Heinrich Hertz & His Successors] என்னும் நூலை ஆழ்ந்து படித்து, மின்காந்தக் கதிர்வீச்சின் [Electromagnetic Radiation] தன்மைகளைப் படித்து, ஹெர்ட்சியன் அலைகளைப் [Hertzian Waves] பற்றி விபரமாக அறிந்து கொண்டார். அதன் பிறகு 1894 இல் கல்லூரியில் ஒர் ஒதுக்குப் புறத்தை அறையாக மாற்றிக் கதிரலை ஆய்வுச் சோதனைகள் [Refraction, diffraction, & Polarization] பலவற்றைத் தனியாகச் செய்ய ஆரம்பித்தார். ரேடியோ சிற்றலைச் சோதனைகளுக்கு அலையீர்ப்பியை [Receiver] உண்டாக்க காலினாப் படிகத்தை [Galena Crystal] விருத்தி செய்து முதன் முதலில் பயன்படுத்தினார். கல்கத்தாவில் 1898 இல் ஜெ.சி. போஸ் தான் முதலில் மில்லி மீட்டர் நீளலைகளை [Millimeter Wavelengths] உண்டாக்கிப் புரிந்த ஆராய்ச்சியை லண்டன் ராஜீய விஞ்ஞானக் கூடத்திற்கு [Royal Institution, London] எழுதி அனுப்பினார். 1904 ஆம் ஆண்டு அவரது, முதல் ‘மின்காந்தக் கதிரலை உளவிப் [Detection of Electromagnetic Radiation] படைப்புக்குக் காப்புரிமை [Patent Rights] வழங்கப் பட்டது!

    கல்லூரியில் 1915 வரைப் பேராசிரியராகப் பணி புரிந்து விலகி, 1917 இல் கல்கத்தாவில் போஸ் ஆய்வுக் கூடத்தை ஆரம்பித்து, அவர் இறக்கும் வரை [1937] அதன் ஆணையாளராக இருந்தார். 1920 இல் இங்கிலாந்து ஸர் பட்டத்தையும், F.R.S. [Fellow of Royal Society] கெளரவ அங்கீகாரத்தையும் J.C. போஸூக்கு அளித்தது.

    ஜகதிஷ் சந்திர போஸ் புரிந்த விஞ்ஞானச் சாதனைகள்

    (1894-1899) உலகின் பல்வழித் தொடர்பு [Multimedia Communication] முறையைத் துவக்கிய முன்னோடிகளில் ஒருவர் ஜகதிஷ் சந்திர போஸ். முதலில் இந்தியாவில் ஹெர்ட்ஸியன் அலைகளைப் [Hertzion Waves] பற்றிய சோதனை ஆராய்ச்சிகளை ஆரம்பித்து, மிகச் சிறிய 5 மில்லி மீட்டர் ரேடியோ அலைகளை [Radio Waves] உண்டாக்கிக் காட்டியவர், போஸ். தொடர்புக் கம்பமுடன் தூக்கிச் செல்லும் சாதனத்தைச் [Portable Apparatus with Antenna] செய்து, 5 mm அலைகளின் ஒளிக்காட்சித் [Optical Properties] தன்மைகளைக் கண்டு ஆராய்ந்தவர். தற்கால நுண்ணலைப் பொறியல் துறைக்கு [Microwave Engineering] அது அடிகோலியது. முதல் கம்பியில்லாத் தொலைத் தொடர்பைப் போஸ் 1895 ஜனவரியில் கல்கத்தாவில் செய்து காட்டினார். மின்காந்த அலைகளைப் பயன்படுத்தித் தூரத்திலிருந்து தூண்டி, கம்பி யில்லாமல் ஒரு மின்சார மணியை அடிக்கச் செய்தார்! அடுத்து அம்முறையில் வெடி மருந்தை வெடிக்கச் செய்தார்! 1896 இல் இங்கிலாந்தின் தினச் செய்தித்தாள் [Daily Chronicle], ‘ஆக்க நிபுணர் J.C. போஸ் ஏறக்குறைய ஒரு மைல் தூரம் கம்பி யில்லாமல் மின்னலைச் சமிக்கைகளை அனுப்பித் தொலைத் தொடர்பு செய்துள்ளார்! இது முதலில் செய்த ஓர் ஒப்பற்ற உயர்ந்த சாதனை! ‘ என்று பறை சாற்றியது! அரைக்கடத்தியைப் [Semiconductor] பயன்படுத்தி முதலில் அமைக்கப் பட்ட அவரது காலினா உளவியும் [Galena Detector] ஒளி மின்னழுத்தச் சிமிழும் [Photovoltaic Cell] 1904 இல் அமெரிக்கக் காப்புரிமை [U.S. Patent No.755840] பெற்றன.

    (1899-1907) கோஹெரர் உளவி [Coherer Detector] பற்றி முதற்படி ஆய்வு செய்து விலங்கினம், தாவர இனம், தாதுக் கலப்புத் திரவங்கள் [Inorganic Compounds] ஆகிய வற்றில் எழும் எல்லா விதத் தூண்டலையும் நுகர்ந்து அவை மின்சாரப் பதிவு [Electric Response to Stimulation] செய்வதைக் கண்டு பிடித்தார். உயிரினப் பெளதிக [Biophysical Phenomena] நிகழ்ச்சிகளின் தாது மாதிரிகளைத் [Inorganic Models] தயாரித்துத், தாவர இனம், விலங்கினத்தின் சதைகள் [Tissues] அனுப்பும் தூண்டலை மின்சார, யந்திரவியல் முறைகளில் பதிவு செய்தார். அம்முறையில் மனிதரின் கண்ணொளி, மூளையின் நினைவுச் சரங்கள் [Vision & Memory Units of Brain] ஆகியவற்றில் எழும் அதிர்வு அலைகளையும் ஆராய்ந்தார்.

    (1907-1933) தாவர இனங்களின் உணர்ச்சி முறைகளை ஆராய்ந்து, தாதுப் பண்டம், விலங்கினம் ஆகிய இரண்டின் உணர்ச்சிகளுக்கும் அவை இடைப்பட்டது என்று கண்டு பிடித்தார். போஸ் தனது ஆராய்ச்சிகளைச் செய்ய பலவிதக் கருவிகளை ஆக்கினார். மிக நுணுக்கமான நகர்ச்சிகளைப் பதிவு செய்யும் சுய இயக்கக் கருவிகள் காயம் பட்டத் தாவரப் பயிர்கள் உண்டாக்கும் மென்மையான உணர்ச்சியை வரைந்து காட்டின. J.C. போஸ் 1917 நவம்பர் 30 ஆம் தேதியில் தனது போஸ் ஆய்வுக் கூடத்தை [Bose Institute] ஆரம்பித்து வைத்தார். அன்று ‘உயிரினத்தின் கூக்குரல் ‘ [The Voice of Life] என்னும் சொற்பொழிவை நிகழ்த்தி, போஸ் ஆய்வுக் கூடத்தை பாரத நாட்டிற்கு அர்ப்பணம் செய்தார்.

    நூறாண்டுகளுக்கு முன்பே கல்கத்தாவில் J.C. போஸ் மில்லி மீட்டர் மின்னலையை உண்டாக்கி, அவற்றை உளவிக் காணும் [Generation & Detection of Millimeter Waves] ஆய்வுகளைச் செய்து, அவ்வலை களின் மூலம் பொருள்களின் குணாதிசயங் களையும் குறிப்பிட்டு எழுதினார். இக்காலத்தில் பயன்படும் நமக்குப் பழக்கமான நுண்ணலைச் சிறு கலன்கள் [Microwave Components], அலை வழிகாட்டி [Waveguide], கொம்பு மின்கம்பம் [Horn Antenna], போலரைஸர் [Polarizers], மின்தடுக்கி லென்ஸ் [Dielectric Lenses], முப்பட்டை [Prisms], மின்காந்த அலைவீச்சை உளவும் அரை மின்கடத்திகள் [Semconductor Detectors of Electromagnetic Radiation] ஆகிய யாவற்றையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் போஸ் தன் ஆராய்ச்சிகளுக்குப் பயன் படுத்தி யிருக்கிறார். அவை யாவும் இப்போது அவர் அமைத்த போஸ் ஆய்வுக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

    போஸ் அமைத்த ரேடியோ சாதனங்களின் கண்காட்சி மாளிகை

    போஸ் தான் அமைத்த கருவிகளைக் கல்கத்தாவின் காட்சி மாளிகையில் [Bose Museum] பலர் காண வைத்துள்ளார். 1986 இல் காட்சி மாளிகை புதிய இடத்திற்கு மாறியது. அங்கே அடிக்கடி நுண்ணலைப் பொறியியல் [Microwave Technology] பற்றிப் பேரவைச் சொற்பொழிவுகள் நிகழ்ந்து வருகின்றன. இந்திய அரசின் மின்னியல் துறையின் [Dept of Electronics] ஆதரவில் இயங்கும், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் மின்னியல் பொறியியல் கூடத்தின் வானலைப் பெளதிக மாணவர்கள் செய்முறைப் பயிற்சிக்காக போஸ் காட்சி மாளிகைக்குப் போய் வருகிறார்கள்.

    போஸ் எழுதிய விஞ்ஞான நூல்கள்: உயிருள்ள, உயிரில்லாப் பிறவிகளின் உணர்வெழுச்சி [Response in the Living & Non-Living (1902)], தாவரங்களின் நரம்பு இயக்க முறைகள் [The Nervous Mechanism of Plants (1926)].

    அவரிடம் மாணவராக இருந்தவர்களில் சிலர் பின்னால் பெரும் பெளதிக மேதைகளாக உலகப் புகழ் அடைந்தனர். சிறப்பாக போஸான் [Boson] என்னும் அடிப்படைத் துகளைக் கண்டு பிடித்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களுடன் இணைந்து புகழ் பெற்ற ‘போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் ‘ [Bose-Einstein Statistics] கோட்பாடை உண்டாக்கிய சத்யேந்திர நாத் போஸ் [Satyendra Nath Bose (1894-1974)] அவரிடம் கற்ற விஞ்ஞானி. போஸான் போஸ் [Boson Bose] என்றும் உலகில் அழைக்கப்படும் எஸ். என். போஸ், பேராசிரியர் ஜகதிஷ் சந்திர போஸின் ஒப்பற்ற மாணவர்!

    குடத்து விளக்காய் ஒளி வீசிய தீபம் அணைந்தது!

    1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஜகதிஷ் சந்திர போஸ் தனது 79 ஆவது வயதில் பீஹாரில் கிரிடி [Giridih, Bihar] என்னும் ஊரில் காலமானார். அவர்தான் ரேடியோ அலைகளைத் தேட முதன் முதலில் மின்னியல் அரைக்கடத்தி இணைப்பைப் [Electronic Semiconductor Junction] பயன் படுத்தியவர். 1977 இல் திடப் படிக மின்னியல் [Solid-state Electronics] துறைக்கு நோபெல் பரிசு பெற்ற ஸர் நெவில் மாட் [Sir Neville Mott], ‘ஜகதிஷ் சந்திர போஸ் P-type, N-type அரை மின்கடத்திகள் [P-type, N-type Semiconductors] தோன்றப் போவதை எதிர்நோக்கி, அவரது காலத்திற்கும் முன்பாக அறுபது ஆண்டுகள் முன்னேறி இருந்தார் ‘ என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.

    https://youtu.be/4RCzuLPBBk0

    நோபெல் பரிசு பெற்ற ஸர் சி.வி. ராமனுக்கும் முன்பாகவே விஞ்ஞான ஆய்வுகளில் மூழ்கிக் கம்பியில்லாத் தொலைத் தொடர்பை உலகில் உண்டாக்கிய நான்கு முன்னோடி வல்லுநர்களில் ஒருவராகப் பெயர் எடுத்தவர் ஜகதிஷ் சந்திர போஸ். அத்துடன் பொது வினை புரியும் அநேக நுண்ணலைச் சிறு சாதனங்களைப் [Microwave Components] படைத்தவர். அவர் மில்லி மீட்டர் நீளலைகளில் [Millimeter Wavelengths] ஆய்வு செய்து பிறரை விட 50 ஆண்டுகள் முன்னதாக இருந்தார்! ரஷ்ய விஞ்ஞானி போபாவுக்கும் முதலாக, இங்கிலாந்தில் மார்க்கோனி [மே மாதம் 1897] படைப்பதற்கு முன்பாக, போஸ் கம்பியில்லாத் தொடர்பை ஜனவரி 1897 இல் அமைத்துக் காட்டினாலும், இறுதியில் நோபெல் பரிசு பெற முடியாது சரியான சமயத்தில் J.C. போஸின் உன்னத விஞ்ஞான ஆக்கம் உலகின் கண்களுக்குத் தென்படாமலே போனது!

    Information

    !. Jagadish Chandra Bose – Wikipedia
    2. Jagadish Chandra Bose – Biography, Facts and Pictures (famousscientists.org)

    Share
  • கதையும் மொழிதலும் – 7:  சங்கர ராமின் ‘தனிப்பிறவி’

    கதையும் மொழிதலும் – 7: சங்கர ராமின் ‘தனிப்பிறவி’

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran78.blogspot.com
    9360623276

    “உழைப்பும் வறுமையும் ஒன்றிணையும் பொழுது அன்பும் கருணையும் அழையா விருந்தாளியாக நெஞ்சம் புகுந்து உள்ளம் உணர்த்தி வினை புரிகின்றன”

    தொடக்கக்கால தமிழ்ச் சிறுகதை முயற்சிகளை உற்றுநோக்கும் போது சங்கர ராமின் எழுத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத் தனது ஆளுமையை உருவாக்கிக் கொண்டவர். இவரின் சிறுகதைப் பங்களிப்பும் முயற்சிகளும் எண்ணத்தக்கவையே. இதனைக் க.நா.சு. இவ்வாறு பதிவு செய்கிறார். “நாவலாசிரியராகப் பெயர் பெற்ற சங்கர ராம், பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இன்று விமர்சன ரீதியாக எனக்குத் தோன்றுவது, அவர் சிறுகதையில் சாதித்த அளவுக்கு நாவல்களில் சாதிக்கவில்லை என்பதுதான். இதற்குக் காரணம் தேடிக்கொண்டு வெகுதூரம் போக வேண்டியதில்லை. மண்ணாசைக்குப் பின்னால் வந்த அவர் நாவல்கள் எல்லாமே தொடர்கதைகளாக வந்தவை தான். பத்திரிக்கை தேவையையும் பணத்தேவையையும் காரணமாகக் கொண்டு எழுதப்பட்டவை. சிறுகதைகள் உள்ளே உள்ள உந்துதலால் எழுதப்பட்டவை. அவர் முதல் முதலில் எழுதிய நூலும் ஒரு சிறுகதைத் தொகுப்புத் தான்” என்ற அடிப்படையிலும் சங்கர ராமின் சிறுகதைகளை இங்கே எண்ணிப் பார்க்கத் தேவை எழுந்துள்ளது.

    ஆனந்த விகடன் 1964ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளிவந்த இவரின் கதை ‘தனிப்பிறவி’. நேரடிக் கதை மொழியில் எழுதப்பட்ட இக்கதை பலவிதங்களில் சிறப்புகளைக் கொண்டது. காந்தியச் சிந்தனையும் சுதந்திரப் போராட்ட உணர்வும் தனிமனித ஒழுக்கமும் மேலோங்கிய காலக்கட்டத்தின் மனப்போக்கைக் கொண்டவர் இவர். கிராம வாழ்க்கையும் நகர வாழ்க்கையும் சந்திக்கும் வாழ்வாதாரப் புள்ளியில் இக்கதை நகர்ந்து செல்கிறது.

    மரம் ஏறும் தொழில் செய்து வந்த ஒரு குடும்பத்தின் பொருளாதாரப் போராட்டமே இக்கதை. கிராமங்களின் வாழ்வாதாரம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை, நகரங்களைச் சார்ந்து மாற்றப்படும் போக்கை மையமாகக்கொண்டு பின்னப்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்புக்கு உள்ளான ஒரு குடும்பம் வளர்ந்து வரும் நகரமயமாக்கலின் ஒருவித சூழலில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறது. நகரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தென்னை மரங்கள் இருப்பதும் அதனை ஒழுங்குபடுத்த ஏற்படும் தேவையும் இவனுக்கு ஒரு வாழ்வியல் இருப்பைத் தருகிறது. இதைச் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான்.

    அன்றாடம் கிடைக்கும் கூலியை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறான். இவனின் வாழ்க்கைநெறி, இங்கே சிந்திக்கத்தக்கது. உழைத்து வாழ வேண்டும், தன்மானத்துடன் இருக்க வேண்டும், உதவியைக் கேட்டுப் பெறக் கூடாது என்ற ஏழ்மையின் இலட்சியவாதச் சிறப்புகள் இவனிடம் காணப்படுகின்றன.

    ஒருநாள் உழைப்பின் கூலியாக ஐந்து ரூபாய் கிடைக்கிறது. இதனை எடுத்துக்கொண்டு களைப்புடன் மனைவியைப் பார்க்க வீட்டுக்கு வருகிறான். ‘இன்று ஓரளவு வருமானம் கிடைத்துள்ளது. ரேஷன் கடையில் புழுங்கலரிசி போடுகிறார்கள். வாங்கி வந்துவிடு’ என்று கூறுகிறான். இதனைக் கேட்ட மனைவி உடனே, கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்து வேகமாகக்  கிளம்புகிறாள். நடந்து சென்றால் நேரமாகும் என்பதால் பேருந்தில் சென்று ரேஷன்  கடையை அடைகிறார்.

    கடையில் நின்று அரிசி வாங்கும் போது அவள் வைத்திருந்த ஐந்து ரூபாய் காணாமல் போய்விட்டது தெரிகிறது. கண்களில் கண்ணீருடன் அருகில் இருப்பவர்களிடம் இதனைக் கூறுகிறார். இவளின் பரிதாபத்தைக் கண்டு அனைவரும் ஆறுதல் கூறுகின்றனர். ஆனால் இவளது மனம் வீட்டில் கணவனுக்கு என்ன பதில் சொல்வது என்று எண்ணுகிறது. ‘கடின உழைப்பில் பெற்ற கூலியை இப்படி கவனமில்லாமல் தொலைத்துவிட்டோமே’ என்று எண்ணும்போது, அவளது மனம் வேதனை அடைகிறது. வருகின்ற காலங்களில் வயிறு நிறைய சாப்பிடலாம் என்று எண்ணிய எண்ணத்தில் இடி விழுந்தது போல ஐந்து ரூபாய் காணாமல் போய்விட்டது. அரிசி இல்லாமல் வீட்டிற்குச் செல்வதை நினைத்துத் தயங்கி நிற்கிறார். இவளின் துன்பத்தைக் கண்ட பெண்கள் அனைவரும் தங்கள் அரிசியில் இருந்து ஒரு பகுதியை இவளுக்குத் தந்துவிடலாம் என்று முடிவு செய்கிறார்கள். ஆனால் இதனைக் கணவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதால் அவர்களின் உதவியை ஏற்க மறுத்துவிடுகிறாள்.

    இதனைக் கேட்டு மற்ற பெண்கள் வியந்து விடுகிறார்கள். அந்த வரிசையில் ரேஷன் கடையில் பொருள் வாங்கக் காத்திருக்கும் நண்பர்கள் இருவர், இதனைக் கண்டு அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் நேரடியாகக் கொடுத்தால் கண்டிப்பாக இவள் வாங்க மாட்டாள் ஆகையால் ஏதேனும் வேறு வகையில் உதவ எண்ணினார்கள். இதன்மூலம் அவளிடம் பேச்சுக் கொடுத்து நடந்தவற்றைக் கேட்டறிந்தனர். பின்னர் நண்பர்களில் ஒருவன் அவளிடம் கூறுகிறான், ‘உன்னிடம் ஐந்து ரூபாய் திருடிவிட்டுப் போனவனை எனக்கு நன்றாகத் தெரியும், அவனிடம் நான் அந்த ஐந்து ரூபாயைக் கேட்டு வாங்கிக்கொள்கிறேன். இதோ என்னிடம் உள்ள வாரக் கூலியிலிருந்து ஐந்து ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறுகிறான்.

    அவளுக்கு மனது சமாதானம் அடைந்தாலும் அவனிடம் அவள் ‘உங்கள் பணத்தைத் தராமல் போய்விட்டால் என்ன ஆகும்’ என்று கேட்கிறாள். அவளின் மன ஓட்டத்தைக் கணித்துவிட்டு, ‘அவன் பாவம் ஏதோ தெரியாமல் செய்துவிட்டான், அவனை மன்னித்து விடவேண்டும் அவன் தராமல் இருக்கமாட்டான், இல்லை என்றால் அவர் ஜெயிலுக்குப் போக வேண்டும் எனவே கண்டிப்பாகத் தந்து விடுவான்’ என்று கூறி, அவளிடம் ஐந்து ரூபாயைத் தந்து அரிசி வாங்க சொல்கிறான். அவளும் கண்களைத் துடைத்துக்கொண்டு அரிசியை வாங்கி நன்றியுடன் பார்த்துக்கொண்டே செல்கிறாள்.

    நண்பனின் செயலைக் கண்டு வியந்து பாராட்டுகிறான். ‘எப்படி நீ இவ்வாறு சிந்தனை செய்தாய்’ என்று கேட்கிறார். அதற்கு ‘மற்றவர்கள் அரிசி தருவதாகக் கூறியும் மறுத்துவிட்டவள் பணம் தருவதாகச் சொன்னால் கேட்க மாட்டாள். அதனால் இப்படி ஒரு கதையைச் சொல்லி அவளுக்கு உதவி செய்தேன்’ என்றான். உடனே அவனது நண்பன் நீ மற்றவர்களைவிட ‘தனிப்பிறவி’டா என்று பாராட்டுகிறான். இவ்வாறு கதை முடிகிறது.

    வறுமையிலும் செம்மையாக வாழ வேண்டும் என்ற சிந்தனை கதை முழுவதும் வந்து போகிறது. மக்கள் உழைக்கத் தயாராக இருந்த போதிலும் அவர்களின் உழைப்பு இங்கே நிலையற்றதாகப் போய்விடுகிறது. மனிதச் சாரம் மக்கள் மனத்திலிருந்து நீங்கி, பணத்தின் முக்கியத்துவமும் பணமதிப்புமே மனித மதிப்பு என்ற புதிய வாழ்வியல் கொள்கை மக்களை எவ்வாறு திக்குமுக்காட செய்கிறது என்பதை நேரடிக் கதைகூறல் மூலமாகக் கூறிச் செல்கிறார். தொடக்கக் காலத்தில் கதையின் மையப் பாத்திரங்கள் பெயரையோ, குணநலன்களையோ கொண்டு கதையின் தலைப்பு அமையும். ஆனால் இக்கதையில் இடையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் செயல்பாடுகளைக் கொண்டு கதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார் இவர்.

    அதேபோல கதைக் கட்டமைப்பிலும் கதை தொடக்கத்தில் வரும் முதன்மைக் கதாபாத்திரங்களைத் தாண்டி, பிறகு வரும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவமும் கதையின் மையத் தன்மையும் கொடுக்கப்பட்டுக் கதை நிறைவடைவது புதிய அணுகுமுறையாகும். எளிமையான சொற்கள், நேர்த்தியான கதைப்போக்கு, வாழ்க்கையின் இருபெரும் கூறுகளை முன்வைத்தல், சரிக்கும் தவறுக்குமான மென்மையான பகை, இயலாமையின் உச்ச கழிவிரக்கம், கருணையின் அவசியம், கண்ணியத்தின் இயல்பு என்று கதை நகர்ந்து செல்கிறது.

    நீண்ட நிலவுடைமைச் சமூகத்தின் அனைத்து உறுப்புகளும் இல்லாமல் போவதும் தனக்குத் தொடர்பில்லாத வேறு ஒரு நகரச் சமூகம் தன்னைப் பொருட்படுத்தாமல் நகர்ந்து தன்னை நிர்க்கதியாக நிறுத்துவதும் பணமே வாழ்வியல் தத்துவம் என்ற உள்ளுணர்வும் அதனை நோக்கிய வாழ்க்கைப்போக்கும் இவர் கதைகளில் மையமாக விளங்குகின்றன. தனிப்பிறவியும் அப்படிப்பட்ட கதைகளில் ஒன்றே. இன்றைக்கும் இவரின் கதைகளைத் தேடினாலும் கிடைக்காத அவலமே தொடர்கிறது. பேராசிரியர் பெருமாள் முருகனை நெறியாளராகக் கொண்டு ராஜசேகர் என்ற ஆய்வாளர் இவரின் படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளது இவருக்கான முக்கியத்துவத்தை உணர உதவக்கூடும்.

    Share
  • தமிழகம் கண்ட தலைசிறந்த வரலாற்றறிஞர்

    தமிழகம் கண்ட தலைசிறந்த வரலாற்றறிஞர்

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழக வரலாற்றின்மீது புத்தொளி பாய்ச்சி, இருண்டுகிடந்த பகுதிகளை வெளிச்சப்படுத்திய ஆராய்ச்சியாளர்களுள் குறிப்பிடத்தக்கவர், கும்பகோணத்துக்கு  அருகிலுள்ள திருப்புறம்பயத்தில் 1892ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள், வைத்தியலிங்கம் மீனாட்சி இணையருக்கு மகனாய்ப் பிறந்த சதாசிவ பண்டாரத்தார்.

    தொடக்கக் கல்வியையும் நடுநிலைக் கல்வியையும் திருப்புறம்பயத்திலும் புளியஞ்சேரியிலும் பயின்றார் பண்டாரத்தார். இயல்பிலேயே தமக்கிருந்த தமிழ் ஈடுபாட்டின் காரணமாய்த் தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தாமே முயன்று கற்று நல்ல புலமை பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போது, நற்றிணை உள்ளிட்ட சங்க நூல்களுக்குச் சிறந்த உரைவரைந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி சு. பாலசுப்பிரமணியப் பிள்ளை போன்ற தமிழறிஞர்களின் தொடர்பு சதாசிவ பண்டாரத்தார்க்குக் கிட்டியது. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தமிழ் இலக்கியத்தில் மட்டுமன்றித் தமிழ்க் கல்வெட்டுத்துறையிலும் மிகுந்த புலமையும் ஈடுபாடும் கொண்டவர் என்பது குறிக்கத்தக்கது. அவரோடு ஏற்பட்ட பழக்கத்தால் பண்டாரத்தார்க்கு இலக்கியத்திலும் கல்வெட்டுத்துறையிலும் நல்ல ஈடுபாடு ஏற்பட்டது.

    குடந்தை வாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 1917ஆம் ஆண்டு தலைமைத் தமிழாசிரியராய்ப் பொறுப்பேற்ற சதாசிவ பண்டாரத்தார், அங்கே 25 ஆண்டுகள் பணிபுரிந்து மாணாக்கர்களுக்கு நற்றமிழறிவை ஊட்டி வந்தார். அதன்பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனர் அரசர் அண்ணாமலையாரின் அழைப்பிற்கிணங்க, அண்ணாமலைப் பல்கலைக்கழத் தமிழாராய்ச்சித் துறையில் 1942 முதல் பணியாற்றத் தொடங்கினார். அப்பணி 1960 வரை நீடித்தது.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தே ஆங்கு ஆராய்ச்சித்துறைத் தலைவராயிருந்த சிதம்பரநாதன் செட்டியாரின் விருப்பத்திற்கிணங்கத் தமிழிலக்கிய வரலாற்றை எழுதும் பெரும்பணியை மேற்கொண்டு கி.பி. 250 முதல் கி.பி. 600 வரையிலான காலக்கட்டத்தில் எழுந்த தமிழ்நூல்கள் குறித்து ஆராய்ந்து எழுதியுள்ளார் பண்டாரத்தார்.

    தமிழிலக்கிய வரலாற்றைத் தொடர்ந்து விரிவாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாகவும், தமிழிலக்கிய வரலாறு கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பாடமாக அப்போது இருந்தமையாலும் கி.பி. 13, 14, 15ஆம் நூற்றாண்டுகளில் படைக்கப்பட்ட தமிழிலக்கியங்களின் வரலாற்றையும் தாம் ஆய்ந்து எழுதியதாய்த் தம் நூற்பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடுகின்றார் பண்டாரத்தார்.

    மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான ’செந்தமிழ்’, கரந்தைத் தமிழ்ச்சங்க வெளியீடான ’தமிழ்ப்பொழில்’ ஆகிய இரண்டு திங்களிதழ்களிலும் சதாசிவ பண்டாரத்தாரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொடர்ந்து இடம்பெற்றுவந்தன. ’பாண்டியர் வரலாறு’ என்ற நூல் முதலில் செந்தமிழிலும், தமிழ்ப்பொழிலிலும் தொடர்கட்டுரைகளாக வெளிவந்து பின் நூல்வடிவம் பெற்றதாகும்.

    சதாசிவ பண்டாரத்தாரின் இலக்கிய ஆராய்ச்சி நூலின் வாயிலாய் நாம் அறியும் அரிய செய்திகள் பல. அவற்றில் சிலவற்றை ஈண்டுக் குறிப்பிட விரும்புகிறேன்.

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகத் திருக்குறள் இடம்பெற்றிருந்தபோதிலும் இந்நூல் கடைச்சங்க காலத்தின் இறுதிக்குச் சில நூற்றாண்டுகள் முன்பு எழுதப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில், திருக்குறள் கருத்துக்கள் பல சங்க நூல்களில் காணக் கிடைக்கின்றன.

    ”பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
    நாகரிகம் வேண்டு பவர்”
    என்ற குறள் கருத்து,

    ”முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்” என்று நற்றிணையில் இடம்பெற்றிருப்பதையும்,

    ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
    என்ற வள்ளுவர் வாய்மொழி,

    ஆலத்தூர்கிழாரின் புறநானூற்றுப் பாடலில்,

    ”செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென அறம் பாடிற்றே
    ஆயிழை கணவ”
    என்று வந்திருப்பதையும் சுட்டிக்காட்டித் திருக்குறள் கடைச்சங்க கால நூலே என்று உறுதிபடத் தெரிவிக்கின்றார் பண்டாரத்தார்.

    இவ்வாறே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இணைக்கப்பட்டுள்ள மற்றொரு நூலான நாலடியார், 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது சதாசிவ பண்டாரத்தாரின் கருத்தாகும்.  முத்தரையர் என்ற பட்டத்தோடு ஆட்சிபுரிந்த குறுநில மன்னர்களின் சிறப்பை நாலடியாரின் 200 மற்றும் 296ஆம் பாடல்கள் குறிப்பிடுகின்றன. முத்தரையர் பற்றிய குறிப்புகளை நாம் 8ஆம் நூற்றாண்டில்தான் அறியமுடிகின்றது; எனவே நாலடியார் 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகவே இருக்கமுடியும் என்பதைக் கல்வெட்டுச் சான்றுகளோடு நிறுவுகின்றார் அவர்.

    திருமூலர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் ஆறாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் வாழ்ந்தவர் என்பதையும் சான்றுகளுடன் மெய்ப்பிக்கின்றார் சதாசிவ பண்டாரத்தார். தில்லையம்பலத்தையும் பொன்னம்பலத்தையும் புகழ்ந்து பாடியுள்ளார் திருமூலர். தில்லையம்பலத்தில் ஆடவல்லானுக்குப் பொன்கூரை வேய்ந்த பல்லவ வேந்தன் சிம்மவர்மன், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டினன். ஆதலால், இவனுடைய காலமே திருமூலர் காலமாகும். சைவ சித்தாந்தம் என்ற வடசொல்லை முதலில் தமிழில் பயன்படுத்தியவர் திருமூலரே ஆவார் என்று குறிப்பிடும் பண்டாரத்தார், பின்னர் இச்சொல்லைச் சமயக் குரவர்கள் தம் பாடல்களில் கையாண்டனர் என்கிறார்.

    கடைச்சங்கத்தின் அழிவு எவ்வாறு நேர்ந்தது என்பதை ஆராய்ந்து சதாசிவ பண்டாரத்தார் முன்வைக்கும் கருத்துக்களாவன:

    மதுரை மாநகரில் நடைபெற்றுவந்த கடைச்சங்கம் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அழிந்தமைக்குக் காரணம், பாண்டிய நாட்டில் ஏற்பட்ட பஞ்சம்தான் என்று இறையனார் அகப்பொருளுரையும், மணிமேகலைக் காப்பியத்தின் வரிகளும் தெரிவிக்கின்றன. அப்பஞ்சத்தினாலேயே பாண்டி நாட்டுப் புலவர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று உயிர்வாழ நேர்ந்தது என்கின்றது இறையனார் அகப்பொருளுரை. ஆனால் பஞ்சம் ஏற்பட்டதால்தான் கடைச்சங்கம் வீழ்ச்சியுற்றது எனும் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இல்லை. கி.பி. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டிய நாடு வலிகுன்றிக் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்டது. அதேவேளை தொண்டைநாடு பல்லவர் ஆளுகைக்கு உட்பட்டது.

    இவ்வாறு தமிழகம் தமிழரல்லாத அயலார் ஆட்சிக்கு உட்பட்டதால் தமிழும் தமிழ் மக்களும் பாதிப்புக்கும் வீழ்ச்சிக்கும் பல வகைகளில் ஆளாயினர். களப்பிரர் எழுச்சி, பாண்டிய நாட்டில் பல மாறுதல்களை உண்டுபண்ணிவிட்டது.  அவர்களுடைய பாலி மொழியும் பிராகிருத மொழியும் அரியேணையேறி ஆட்சிசெய்யத் தொடங்கின. இதன்விளைவாய்த் தமிழ்மொழி, தமிழ்க்கலைகள், தமிழர் நாகரிகம் ஆகியவை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தமையை வேள்விக்குடிச் செப்பேடுகள் வாயிலாய் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. எனவே கி.பி. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட களப்பிரர் எழுச்சியாலேயே கடைச்சங்கம் அழிந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பது சதாசிவ பண்டாரத்தார் ஆய்ந்துகண்ட முடிபாகும்.  [களப்பிரர் காலத்தை இருண்ட காலமென்று இயம்புவது பொருந்தாது; அது பொற்காலமே என்பதை நிறுவ நாம் அக்காலத்திய அறநூல்களைச் சான்றுகாட்டினாலும், புதிய பாவினங்கள் தோன்றின என்று தாழிசையையும் விருத்தத்தையும் பட்டியலிட்டாலும், களப்பிரர் கால நூல்கள், கருத்துச் செறிவிலோ மொழிவளத்திலோ, சங்க நூல்களுக்கு இணையாகாத எளிய நூல்களாகவே இருப்பது கண்கூடு. இஃது அக்காலத்தில் நிலவிய தமிழிலக்கிய வறட்சியைத் துலக்கமாய்ப் புலப்படுத்தவே செய்கின்றது.]

    பண்டாரத்தாரின் குறிப்பிடத்தக்க நூலான பாண்டியர் வரலாறு கல்வெட்டுகள், செப்பேடுகள், தமிழிலக்கிய நூல்கள், பிற ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். கடைச்சங்க காலத்திற்கு முன்னர்த் தொடங்கி, கி.பி. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பாண்டிய நாட்டில் ஆட்சிபுரிந்த மன்னர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள இந்நூல் உதவுகின்றது. பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த மன்னர்களின் பெயர்கள், ஆட்சிக் காலம், ஆட்சி எல்லை, அரசியல் நிலை, மெய்க்கீர்த்தி என அனைத்தும் தெளிவாய்ப் வகுத்தும் பகுத்தும் இந்நூலில் உரைக்கப்பெற்றுள்ளன.

    தமிழகத்தைப் பொறுத்தவரை, சோழர்களுக்கென்று தனித்த பீடும் பெருமையும் உண்டு. காவிரி புரக்கும் சோழநாட்டின் வற்றாப் பெருவளத்தைச் சங்கப்பாடல்கள் பலவும் வாயூறிப் பேசுகின்றன.

    பல்லவர்களைத் தொடர்ந்து தமிழகத்தில் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஆட்சியமைத்தவர்கள் பிற்காலச் சோழர்கள். இவர்களின் வரலாற்றை நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவ பண்டாரத்தார், மு. அருணாசலம் ஆகியோர் ஆராய்ந்து எழுதியிருக்கின்றனர்.

    பிற்காலச் சோழர்களின் ஆட்சியை நிறுவிய விசயாலயச் சோழன் காலம் தொடங்கிச் சோழர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த மூன்றாம் இராசேந்திர சோழனின் காலம் வரையிலான சோழர்களின் ஆட்சிமுறை, அரசர்கள் மேற்கொண்ட அரும்பணிகள், அவர்களிடம் அரசியல் அதிகாரிகளாய்ப் பணியாற்றியோர், அவ் அரசர்கள் ஈடுபட்ட போர்கள், சூட்டிக்கொண்ட விருதுப்பெயர்கள் என அனைத்தையும் தம்முடைய ’பிற்காலச் சோழர் சரித்திரம்’ என்ற நூலில் தக்க சான்றுகளோடு விளக்கியுள்ளார் சதாசிவ பண்டாரத்தார். இதற்காக, சோழர் காலத்தைச் சேர்ந்த சுமார் 8,000 கல்வெட்டுகளை ஊர் ஊராய்த் தேடிச்சென்று படித்தார்; அந்தத் தரவுகளின் அடிப்படையில் சோழர் சரித்திரத்தைத் தமிழில் எழுதி முடித்தார் என்று அறிகின்றோம். மூன்று தொகுதிகளாக எழுதப்பட்ட இந்நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

    இந்நூலில் சோழர் ஆட்சிமுறை, சோழர்காலச் சமுதாயம் பற்றிப் பண்டாரத்தார் குறிப்பிட்டிருக்கும் சுவையான செய்திகளில் சில நம் கவனத்திற்கு…

    சோழமன்னர்கள் தங்கள் ஆட்சியிலிருந்த பகுதிகளை மண்டலங்களாகவும் வளநாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரித்து ஆட்சிபுரிந்து வந்தனர். அரசியல் நிர்வாகத்திற்குத் துணைபுரிந்தவர்கள் ’உடன்கூட்டத்ததிகாரிகள்’ என்று அழைக்கப்பட்டனர். சோழ மன்னர்களின் ஆட்சி சிறப்பாக அமைந்ததற்குக் காரணம், ஊராட்சி மன்றங்களின் தன்னலமற்ற தொண்டேயாகும். ஊராட்சிகளை நடாத்துதற்கு நான்கு விதமான சபைகள் அன்று இருந்தன. அவை கிராம சபை, தேவதானத்துச் சபை, ஊர்ச் சபை, நகர சபை ஆகியன.

    தங்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகளின் விளைநிலங்களைக் கோல்கொண்டு அளந்து வரிவிதித்தனர் சோழ மன்னர்கள். நிலங்களை இவ்வாறு அளவிட்டு நிலவரி விதித்ததுபோல் மக்கட்தொகையினை அளவிட்டு அறிவதில் அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை எனத் தெரிகின்றது.

    வேந்தர்கள், குறுநில மன்னர்கள், செல்வந்தர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டிருந்தபோதினும், பொதுமக்கள் ஒருவனுக்கு ஒருத்தியாகவே வாழ்ந்துவந்தனர். உடன்கட்டை ஏறும் வழக்கமும்கூட உயர்குடியினரிடம் குறிப்பாக அரசர்குடிப் பெண்டிரிடம் இருந்ததே தவிர அது சமூக வழக்கமாய்ப் பின்பற்றப்படவில்லை என்று தெரிவிக்கின்றார் பண்டாரத்தார்.

    பண்டாரத்தாரின் மற்றொரு வரலாற்று நூல், ’முதற்குலோத்துங்க சோழன்’ என்பதாகும். இந்நூலைப் பாராட்டிய தமிழ்த்தாத்தா உ.வே.சா., பின்வருமாறு குறிப்பிடுகின்றார்…

    ”கும்பகோணம் வாணாதுறை ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் சிரஞ்சீவி சதாசிவ பண்டாரத்தார் இயற்றிய முதற்குலோத்துங்க சோழன் சரித்திரத்தை முற்றும் படித்துப் பார்த்தேன். இயற்றியவர் நெடுங்காலமாகச் சிலாசாசனங்கள், சங்கச் செய்யுட்கள் முதலியவற்றை ஆராய்ந்தவரென்பதை இது புலப்படுத்துகின்றது. தமிழ்மொழி இக்காலத்தில் பல துறைகளிலும் வளர்ச்சியுற்று வருகின்றதென்பதற்கு இந்நூலாசிரியரது கல்வி முறையையே ஓர் இலக்காகக் கூறலாம். தமிழ் அரசர்களுடைய சரித்திரங்களை அறிந்துகொள்வது இன்றியமையாதது ஆகையால், எளிய நடையில் நன்றாக முறைப்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் பொதுவாக யாவருக்கும், சிறப்பாகப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கும் மிகப் பயன்படுமென்று எண்ணுகின்றேன்” என்கிறார்.

    அறிஞர் சதாசிவ பண்டாரத்தாரின் அயராத உழைப்பாலேயே நம் தமிழ்நாட்டு வரலாறு நன்கு விளக்கமுற்றது. இலக்கியங்களில் விளக்கம்பெறாத இடங்களையும், இலக்கியங்களின் காலத்தையும் அவர் கல்வெட்டுகளின் துணைகொண்டு விளக்கிக் காட்டினார். தமிழ்மொழியின்பால் அவருக்குக்கிருந்த ஈடுபாடு அவருடைய ஆராய்ச்சிகளில் தென்பட்டதென்றாலும் அவருடைய ஆராய்ச்சி நேர்மையை அது சற்றும் குலைத்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சதாசிவ பண்டாரத்தாரின் ஆராய்ச்சிப் பணிகளைச் சிறப்பிக்கும் வகையில், பேராசிரியர் கார்மேகக் கோனார், பண்டாரத்தார்க்கு ’ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்னும் பட்டத்தை மார்ச் 29, 1956இல் வழங்கினார்.

    தம் வாழ்க்கையை முற்றாக ஆராய்ச்சிக்கும் எழுத்துக்குமே அளித்துவிட்ட சதாசிவ பண்டாரத்தார், 1960ஆம் ஆண்டுத் தொடக்கத்தில், தம்முடைய 67ஆம் அகவையில் சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை நகரில் காலமானார்.  

    கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு அமைந்திருக்க வேண்டிய வரலாற்றறிவு, ஆராய்ச்சித்திறன் ஆகியவற்றோடு தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் பயிற்சியும், இடையறா முயற்சியும் கொண்டவராய்த் திகழ்ந்து,  காய்தல் உவத்தலின்றி உண்மைகளை மட்டுமே வரலாறாக ஆவணப்படுத்தியிருக்கும் சதாசிவ பண்டாரத்தார் போன்ற பேரறிஞர்களைத் தமிழக இளைஞர்களுக்கு இன்று யாரென்றே தெரியவில்லை என்பதுதான் வருந்தத்தக்க உண்மைநிலை!

    இந்த அவலம் இனியும் நீடித்தல் கூடாது. நம் தமிழக வரலாற்றை – தமிழ்க்குடியின் பெருமையை அரிதின் முயன்று வெளிப்படுத்திய சதாசிவ பண்டாரத்தாரின் ஆராய்ச்சிப் பணிகள் வெளிச்சம் பெறவேண்டும். கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களின் பாடத்திட்டத்தில் அவருடைய வரலாற்று நூல்கள் இடம்பெற வேண்டும். பண்டாரத்தாரின் சொந்த ஊரான திருப்புறம்பயத்தில் அவருக்கோர் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். இச்செயல்கள் பண்டாரத்தாரின் மெய்வருத்தம் பாராப் பேருழைப்புக்கும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் நாம் காட்டும் சிறிய கைம்மாறாய் அமையும்.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, செனை – 600 113

    2. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=880

    3. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2017/dec/31/வரலாற்றுப்-பேரறிஞர்-திவை-சதாசிவப்-பண்டாரத்தார்-2836124.html

    4. https://www.hindutamil.in/news/blogs/231349-10-2.html

     

     

    Share
  • புத்தக மதிப்புரை : Astrophysics for People in a Hurry

    புத்தக மதிப்புரை : Astrophysics for People in a Hurry

    முனைவர் நடராஜன் ஸ்ரீதர்
    ஆற்றல் அறிவியல் துறை
    அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி
    natarajangravity@gmail.com

    Astrophysics for People in a Hurry என்ற புத்தகம் (தமிழில்  அவசரமாய் செல்வோருக்கு வான இயற்பியல்  என்று சொல்லலாம்) மிகப்பெரும் இயற்பியலாளர் நீல் டீகிரீஸ் டைசன் என்பாரால் எழுதப்பட்டுள்ளது. புத்தகம் வானியல் குறித்த பல்வேறு விஷயங்களை அலசுகிறது. பிரபஞ்சத்தின் முதல் நிமிடங்கள், விண்மீன்கள், விண்மீன் கூட்டங்கள், கோள்கள், வானத்திலுள்ள வேதியியல் மூலக்கூறுகள் ஆகியவற்றைப் பற்றி இந்நூல் விரிவாக அலசுகிறது.

    இப்புத்தகத்தில் என்னென்ன விஷயங்கள் அலசப்பட்டுள்ளது என்பது குறித்து இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

    காமா கதிர்கள் முதல் ரேடியோ அலைகள் ஈறாக ஒட்டுமொத்த மின்காநத அலைகளைப் பற்றி மிக விரிவாக விளக்குகிறார் டைசன். எந்தெந்த அலை நீளங்களைக் கொண்டு எந்தெந்த வானியற்பியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்பதைக் குறித்தும் தெளிவுற விளக்குகிறார். உதாரணமாக மைக்ரோ அலைகளைக் கொண்டு பிரபஞ்சத்தின் பின்புல  வெப்பநிலையைக் கணக்கிடலாம் என்றும், ரேடியோ அலைகளைக் கொண்டு துடிப்பு விண்மீன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் எனவும் விரிவாக விளக்குகிறார். நமது கண்கள் எவ்வகையான ஒளிகளைத் தெரிந்துகொள்ளும் மற்றும் நாம் கண்ணால் காணும் ஒளிகளைத் தவிர பிரபஞ்சம் எந்த அளவு மின்காந்த அலைகளால்

    நிரப்பப்பட்டுள்ளது என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய முறையில் விளக்கியுள்ளார்  டைசன்.

    இந்நூலின்  முதல் அத்தியாயம் பிரபஞ்சம் தோன்றிய ஆரம்ப நிமிடங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறது. முதல் மூன்று நிமிடங்களில் பிரபஞ்சம் எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்பதில்  ஆரம்பித்து பூமியின் உருவாக்கம் வரை முதல் அத்தியாயம் தெளிவாக விளக்குகிறது. முதல் எலக்ட்ரான் தோன்றியதிலிருந்து பிரபஞ்சத்தில் இன்றைய நிலை வரை சற்று விரிவாகவே அலசுகிறது முதல் அத்தியாயம்.

    இரண்டாவது அத்தியாயம் பூமியைப் பற்றி விளக்குகிறது. பூமியில் உள்ள சிறப்புமிக்கத் தனிமங்கள் மற்றும் பூமியிலிருந்து நாம் செய்த சாதனைகள், விண்வெளிப் பயணத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து விவரிக்கிறார் டைசன்.  நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே உள்ள வெளியைப் பற்றி மிக விரிவாகப் பின்வரும் அத்தியாயங்களில் விளக்குகிறார்.  மேலும் நட்சத்திரக் கூட்டங்களின் இயக்கங்கள் பற்றியும் மற்றும் அவற்றின் வடிவங்கள் பற்றியும் தெளிவாக அந்தந்த அத்தியாயத்தில் விளக்குகிறார்.

    பல விந்தையான செய்திகளையும் இந்த புத்தகத்தில் அள்ளித் தெளிக்கிறார். உதாரணமாக பிரபஞ்ச பின்புல வெப்ப நிலையைக் கண்டறிய செய்யப்பட்ட ஆய்வில் ஆரம்பகட்டத்தில் ஒரு சில குறிப்பிட்ட மாற்றங்கள் அதன் தரவுகளில் கிடைத்தனவாம். இது பெல் ஆய்வுகூடத்தில் நிகழ்ந்தது. இதை ஆரம்பத்தில் கண்டறிந்த பொறியிலாளர்கள் மீண்டும் மீண்டும் இவ்வகையான தரவு மாறுதல்கள் இருப்பதைக் கண்டறிந்தனராம்.  அது  என்னவென்று தேடிப் பார்த்தபோது அந்த அலைவாங்கியில் புறாவின் எச்சங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாம். அதுவே அந்த தரவுகளில் சில மாறுதல்களை கொடுத்தது என்றும் அவர் விந்தையாக சில வரலாற்றுத் தகவல்களை தெரிவிக்கிறார்.

    இந்த பிரபஞ்சத்தின் விந்தையான விஷயங்களில் ஒன்று டார்க் மேட்டர் என்று அழைக்கப்படக்கூடிய இருள் பொருள்.  இதன் கண்டுபிடிப்பு  மற்றும் இது எவ்வாறு ஈர்ப்பியல் ரீதியாக விண்மீன் பேரடைகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைக் குறித்தும் அத்தியாயம் ஐந்தில் விவரிக்கிறார் டைசன். இருள் பொருள் கண்டுபிடிக்கப்பட்ட விந்தையான வரலாற்றுச் செய்தியையும் விளக்குகிறார்.

    எந்தெந்தத் தனிமங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறித்து விரிவாக அலசுகிறார் நீல் டிகிரீஸ் டைசன். பூமிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் தனிமம் என்பது ஹீலியம் எனத் தெரிவிக்கிறார். ஐன்ஸ்டைனின் பெயரில் கூட ஒரு தனிமம் இருக்கிறதாம். மேலும் எவ்வாறு இத்தகைய தனிமங்கள் பூமிக்கு வந்திருக்கக் கூடும் என்பதையும் அவர் தெரிவிக்கிறார். பிரபஞ்சம் முழுவதும் ஹைட்ரஜன் நிறைந்திருந்தாலும் எவ்வாறு பூமியில் இத்தகைய அதிகமான உலோகங்கள் செறிந்துள்ளன என்ற கேள்விக்கு பதிலாக இவையெல்லாம் நட்சத்திரங்களின் வெடிப்பிலிருந்து வந்திருக்கக் கூடும் எனத் தெரிவிக்கிறார். கதிரியக்கத் தனிமங்களின் விசித்திரமான பண்புகளையும் டைசன் இப்புத்தகத்தில் பட்டியலிடுகிறார்.

    ஐன்ஸ்டைன் தனது புலக் கொள்கையை வெளியிட்ட பிறகு அவர் தனது தத்துவத்தில் உள்ள மிகப்பெரும் தவறு என்று குறிப்பிட்ட பிரபஞ்சவியல் மாறிலி எவ்வாறு தற்போது இருள் ஆற்றலாக ஆய்வாளர்களால் விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்று அத்தியாயம் ஆறில் விரிவாக எழுதுகிறார். இருள் ஆற்றல் மற்றும் பிரபஞ்சத்தின் விரிவு ஆகியவற்றை அலசுகிறது இந்த அத்தியாயம்.  எவ்வாறு நெபுலாக்களைக் கொண்டு பிரபஞ்சம் விரிவடைவதையும் மற்றும் இருள் ஆற்றலின் இருப்பு குறித்தும் விளக்கம் தரப்படுகிறது என்பதை இந்த அத்தியாயம் மிக விரிவாகவே விளக்குகிறது.

    ஒன்று தெரியுமா நீல் டிகிரீஸ் டைசனின் பெயரில் எரிகல் ஒன்று உள்ளது. 2000மாவது ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு எரிகல்லுக்கு 13123-டைசன் என்று நீல் டிகிரீஸ் டைசனின் பெருமைகளைப் பறைசாற்றும் விதமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    நாம் வேற்றுக்கிரக உயிரினங்களை அறிவியலின் வளர்ச்சியின் நீட்சியாகத் தேடி வருகிறோம். வேற்றுகிரகத்தில் ஏதாவது உயிர் இருக்குமா அல்லது வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்திருப்பார்களா என்பது போன்ற கேள்விகளை முன்னிறுத்தி அறிவியல்  தமது தேடலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.  இந்நூலின் பத்தாவது அத்தியாயத்தில் அத்தகைய தேடல் குறித்தும்

    டைசன் விளக்குகிறார். வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்குத் தகுதியானவை என்பதை எவ்வாறு கண்டறிவது என்றும் மேலும் எத்தகைய அறிவியலை அடிப்படையாகக் கொண்டு வேற்று கிரகங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம் என்பது குறித்தும் விரிவாக எழுதுகிறார் டைசன். உதாரணமாக ஒரு  நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஒரு கிரகத்தைக் கண்டறிய, அதன் பிரகாசம் குறைவதை வைத்து கணக்கீடுகள் செய்து ஒரு கிரகத்தில் இயங்கியலைக் கணக்கிட முடியும் என்று தெரிவிக்கிறார். மேலும் ஒரு கிரகத்தில் பட்டு பிரதிபலிக்கும் ஒளியைக் கொண்டு அக்கிரகத்தின் என்னென்ன வேதியல் மூலக்கூறுகள் இருக்கக்கூடும் என்பதையும் விரிவாக விளக்குகிறார். இவையெல்லாம் வைத்து ஒரு வேளை அறிவார்ந்த வேற்று கிரக உயிரினங்கள் பூமியைத் தேடினால் அவைகள் பூமியை எந்தெந்த வகையில் பூமியின் இருப்பைக் கணக்கிட முடியும் என்பதையும் டைசன் மிக விரிவாக விளக்குகிறார். வேற்றுக்கிரக உயிரினங்களின் பார்வையில் பூமியை ஒரு அறிவார்ந்த உயிரினங்கள் வாழும் கோளாகக் கணக்கிட்டு அதன் இருப்பிடத்தைப் பற்றி விளக்குகிறார்.

    இப்புத்தகத்தின் பதினோராவது அத்தியாயத்தில் உலகில் சமநிலையற்றத் தன்மையை விவரிக்கிறார். நாமெல்லாம் வானத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் போது பூமியில் பல்வேறு குழப்பமான சூழல்கள் நிகழ்கின்றன என்பதை அவர் மறுக்கவில்லை. சமூக வாழ்வில் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும் அவர் கடுமையாகச் சாடுகிறார்.

    இந்த அற்புதமான புத்தகம் அறிவியலை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளவும் மற்றும் பிரபஞ்சவியலின் வரலாற்றைப் புரிந்துகொள்ளவும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். வாங்கிப் படித்துப் பயன்பெறுங்கள்.

    Share
  • செஞ்சி தமிழினியனின் ‘ஊராகாலி’ சிறுகதைகள் காட்டும் மனிதம் மாறா கிராமங்கள்

    செஞ்சி தமிழினியனின் ‘ஊராகாலி’ சிறுகதைகள் காட்டும் மனிதம் மாறா கிராமங்கள்

    முனைவா் அரங்க. மணிமாறன்
    முதுகலைத் தமிழாசிரியா்
    அரசு மேனிலைப்பள்ளி பரமனந்தல்-606710
    செங்கம்-திருவண்ணாமலை மாவட்டம்          
    Mail: maranvmctamil@gmail.com

    முன்னுரை

    “ஒரு ஊர்ல ஒரு ராஜா” என்று ராசாக்களின் கதைகளே பெரும்பாலும் எழுதப்பட்டு வந்தன. குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரமும் விலையுயா்ந்த முத்துமாலையை மிக அதிக விலை கொடுத்து வாங்குமளவு வசதிப் படைத்த வாணிக குடும்பத்தினரின் வாழ்வையே பேசுகிறது. ஆனால் அடித்தட்டு மக்களின் வாழ்வை பேசினார் மிகக்குறைவே.

    “கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு” என்கிறார் மகாத்மா காந்தியடிகள். கிராமங்களில் வாழ்ந்தோர் படித்து முன்னேறி நகர்ப்புறங்களில் வாழ்ந்தாலும் அவா்களின் மனங்களில் அவா்களது கிராமமும் நினைவுகளும் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலும் என்றும் அழியா ஓவியங்களாய் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

    செஞ்சிதமிழினியன்

    விவேகானந்தன் என்ற இயற்பெயரையுடைய செஞ்சிதமிழினியன் வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சிக்கருகிலுள்ள பென்னகர்  என்னும் சிற்றூரில் சாதாரண விவசாய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவா். பொறியியல் கற்று கட்டடப் பொறியாளராக பணியாற்றி வருபவா். ஆரம்பத்தில் கவிதைகள் எழுதி ‘ராக்காச்சி பொம்மை’ ‘சொப்புக் கடை’ ‘மரத்தின் நிழல்’(ஐக்கூ) என மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.

    முதன்முதலில் துப்பறியும் சாகசக்கதைகளை எழுதினார். அதனையடுத்து தான் சந்தித்த மனிதா்களின் வாழ்வியலை கதைகளாக சித்தரித்து சிற்றிதழ்கள் பலவற்றில் வெளியிட்டுள்ளார்.  பரவலாக பாராட்டப்பட்ட இக்கதைகளை 2019 ஆம் ஆண்டு  ‘ஊராகாலி’ என்ற சிறுகதை நூலாக வெளியிட்டுள்ளார்.தற்போது ‘மொடாக்குடியன்’ எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட இருக்கிறார்.

    “எந்த ஒரு உணர்ச்சியை அல்லது கருத்தை அது தன்னகத்தே கொண்டிருக்கிறதோ அதைப் படிப்பவரின் நெஞ்சில் மின்வெட்டைப் போல் பாய்ச்சும் ஆற்றல் சிறுகதைக்கு வேண்டும்”1 எனும் அகிலனின் கூற்றுக்கிணங்க சிறந்த கதைகளை இவா் படைத்துள்ளார் .

    கதைகளுக்குரிய தொடக்கம், வளர்ச்சி, முடிவு முதலிய முதலிய கட்டமைப்பு இலக்கணங்கள், நெகிழ்ச்சித் தன்மை, கணத்தன்மை முதலிய கூறுகளில் அதிக அக்கறைப்படாமல் தம் கிராமிய உணா்வுகளை தனக்கேயுரிய பாணியில் கதைப்படுத்தி இருக்கிறார் செஞ்சிதமிழினியன் அவா்கள்.

    அழிந்து வரும் வேளாண்மை

    இந்திய நாட்டில் குறிப்பாக தமிழகம் வேளாண்மையை முதுகெலும்பாகக் கொண்ட பூமி. இங்கு வாழும் மக்களுக்கு மண்ணும் மானமும் இரு கண்ணாக மதிக்கத்தக்கவைகளாக உள்ளன. வேளாண்மை என்பது ஒரு பொருளீட்டும் வெறும் தொழில்மட்டுமல்ல.உயிரோடும் உணர்வோடும் கலந்துவிட்ட வாழ்வு. தனக்கும் தன் குடும்பத்திற்கும் மட்டுமின்றி ஊருக்கே சோறு போடும் தவவாழ்வு வேளாண்மைத்தொழில்.

    நாகரிக மாற்றம், சரியான மழைவளம் இன்றிப் போனதால் ஏற்பட்டுள்ள நீர்வளக் குறைவு, சரியான விளைச்சல் இன்மை, ஆட்கள் பற்றாக்குறை, விளைபொருட்களுக்கான சரியான விலையின்மை இடைத்தரகு போன்றவை மூலம் பெருமுதலாளிகளுக்கே இலாபம் கிடைத்தல் வேளாண்மைத்தவிர மற்ற தொழில்களில் குறுகிய காலங்களில்  கிடைக்கும் அதிக வருவாய் போன்றவை வேளாண்மைத்தொழில் குறைந்து வருவதற்கு காரணிகளாக உள்ளன. கிடைக்கின்ற வேளாண்பொருட்களைக் மூலப்பொருட்களாகக் கொண்டு பல்வேறு உபரித் தொழில்கள் செய்வதற்கான வசதிகள் இன்மை ஆகியவையும் வேளாண்மை மீது இளையத் தலைமுறைக்கு அக்கறையும் நாட்டமும் இல்லாமைக்கான காரணங்களாக அமைகின்றன. இதில் உழைப்பு அதிகம் வருவாய்க் குறைவு. ஆனால் நம் மண்ணின் விவசாயிகள் அத்தனைத் தடைகளையும் தயக்கங்களையும் தாண்டி வேளாண்மையை தம் உயிராகக் கருதி செய்து வருகின்றனா். வேளாண்மையை நம்பினோர் கெடுவதில்லை என்பது கண்கூடு.

    “பொன்னேரு” சிறுகதையில் பொன்னேறு கட்டி புதுநெல்லை விதைக்கும் பாரம்பரிய நிகழ்வுகளை அழகாக நம் மனக்கண்ணில் ஓட்டிக்காட்டியுள்ளார்.

    கந்தாயப்பலன் பார்த்தல், விதைநெல் ஊறவைத்தல், நாற்றங்கால் ஓட்டி தெளியவைத்தல், மறுநாளில் முளைக்கட்டிய விதைநெல்லை சுமந்து சென்று விதைத்தல், அவல் இடித்தல் போன்ற நிகழ்வுகளை படம்பிடித்துள்ளார். பொன்னேறு பூட்டி உழுதல் நிகழ்வை

    “சித்திரையில் புதுமழை பொழிஞ்சா பொன்னேரு கட்டுவாங்க. ஈரம் பதமா இருக்கும்போது நல்லநாள் பார்த்து கலப்பைக்கு புது கொழு மாட்டி மாடுகளை குளிப்பாட்டி மஞ்சள் குங்குமம் வச்சி சனி மூலைக் கழனியில புள்ளையார புடிச்சி தயாராய் இருக்கும் தேங்கா உடைச்சி ஏர் பூட்டுவாங்க”2 என்று ஒவ்வொன்றையும் பண்பாட்டு முறைகளோடு செய்து ஏற்றம் இறைத்து நீர்பாய்ச்சி பயிர்விளைவித்து வந்த நிலம் தாத்தாவிற்குப்பின் அப்பாவும் பெரியப்பாவும் பாடுபட்டு நெல்லும் மணிலாவும் தானியங்களும் விளைந்த பூமி.

    காலமாற்றத்தில் விளைச்சல் குறைந்து வேளாண்மையே அருகிப்போன நிலையில் கம்பெனிகள் விளைநிலங்களை ஆக்கிரமிப்பு செய்து அழித்து வரும் அவலநிலையைச் சுட்டி  கதையை முடிக்கிறார். கம்பெனிகளின் முள்வேலிக்குள் அகப்படாமல் பிடிவாதமாய் நிற்கும் நிலம் காலத்தின் கையில் புதிராய் நிற்கிறது என்று வேளாண்மையின் இன்றைய அவல நிலையை இக்கதையில் உணர்த்தியிருக்கிறார்.

    கிராமத்து மனிதர்கள்

    செஞ்சிதமிழினியன் தன் கதைகளில் கிராமத்தையும் அதில் வாழும் மனிதர்களையும் அவா்களது வாழ்வியலையும் மிக நுணுகிப் பார்த்து எழுதியுள்ளார்.

    “கதைகளுக்கான கருவைத் எங்கும் தேடி அலையவேண்டியதில்லை. காதுகளையும் கண்களையும் திறந்து வைத்திருந்தாலே போதுமானது.வாழ்வில் நடக்கும் அத்தனையும் கதைக்கு உரியதாகும்”3 என்கிறார் மா.இராமலிங்கம்.

    கிராமத்து மக்கள் மண்ணை நேசிப்பவா்களாகவும் மற்ற மனிதர்களோடு அன்பும் பாசமும் கொண்டவா்களாகவும் சக மனிதர்களுக்கு உதவக்கூடியவா்களாகவும் நேர்மையாளா்களாகவும் இருப்பதை தமதுக் கதைகளில் எடுத்துக் காட்டியுள்ளார்.

    ‘செத்துப்போன பூமி’ சிறுகதையில் வரும் பழமலை தாத்தா, விதைநெல் தாத்தாவாகவே அறியப்படுகிறார். செஞ்சி தமிழினியனின் சிறுகதைத் தொகுப்பில் முடிமணியாக இக்கதை அமைகிறது.

    பழமலை தாத்தாவுக்கு மகன்கள் இருந்தாலும் பணிநிமித்தமாக நகரங்களில் குடும்பத்தோடு தங்கிவிட தாத்தா மட்டும் தன் தம்பி மகள் உதவியோடு தன் ஊரோடே இருந்துவிடுகிறார். தன் ஊரையும் தன் நிலத்தையும் விட்டுப் பிரிய அவருக்கு மனமில்லை.

    தன் மகனின் நகரத்தில் உள்ள அடுக்கக குடியிருப்பின் புதுமனை புகுவிழாவிற்கு சென்றாலும் விழா முடிந்தததும் உடனடியாக கிராமத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்று பிடிவாதமாக கிளம்பிவிடுகிறார்.

    பிள்ளைகளும் பேத்திகளும் எவ்வளவு வற்புறுத்தியும் பிடிவாதமாக ஊரோடே தங்கி வாழ்கிறார். பாசி படிந்த குளத்தில் குளிப்பது, இரண்டு வேளை உணவே உண்பது, தன் தம்பி மகள் மலரின் மகள் அம்முவைக் கொஞ்சுவது எல்லாவற்கும் மேலாய் விதைநெல் கேட்டுவரும்  அனைவருக்கும் அளந்து கொடுத்து வேளாண்மையை அழியாமல் காப்பது ஆகியவை  வாழ்வியலாகக் கொண்டு வாழ்பவா். நாகரிக மாற்றத்தில் விளைநிலங்கள் எல்லாம் வீட்டு  மனைகளாகவும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆக்கிரப்பிலும் செல்வதைக்கண்டு மனம்பதைக்கிறார். படுத்த படுக்கையாகிறார். உயிரையே விட்டுவிடுகிறார்.

    “அவரை சுத்தி மூட்டை முடிச்சுகளாய் நிறைய இருந்தது. எல்லாம் நெல்லு கெவுரு வரகு தெனைன்னு வெதைங்க. விதைகளை நடை பாவாடை மேலே கொட்டினாங்க. வெத நெல்லு மேல மேல தாத்தா நடந்து போனாரு”4

    என்று தன் மண்ணையும் விவசாயத்தை உயிராக எண்ணி வாழ்ந்த மனிதர் தன் தலைமுறையிலேயே தன் கண்முன்னாலேயே கலர் கொடிகள் ஆடி வீட்டு மனைகளாகி

    அருகுவதைப் எண்ணி மனம்நொந்து உயிரைவிடும் நிலையினை படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியா்.

    “இரக்கம்” சிறுகதையில் ஈச்சூா் நாமக்கார தாத்தா  சட்டை அணியாதவராகவும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு தூய்மையாக குளித்து முடித்து நாமம் இட்டு பூஜை செய்த பிறகே உண்பவராகவும் பக்கத்து வீட்டாரின் சொந்தக்காரராக இருந்தாலும் நாயகனை பாசத்துடனும் பரிவுடனும் நேசிப்பவராகவும் இருக்கிறார். பஜனைப்பாடுதல், படைத்த

    உணவுப்பொருட்களை  அண்டையிலுள்ள குழந்தைகளுக்கு வழங்குகிறார்.

    பொய்பேசாதவராகவும் மாமிசம் உண்ணாதவராகவும் ஊரில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவராகவும் இருக்கிறார். அத்தகு மனிதர் வாழ்வு முடிந்து இறந்துவிடுகிறார். நாயகன் இறப்புச் செய்தியறிந்து ஊருக்குச் செல்கிறார். அவரின் இறுதிச் சடங்கில் சனிக்கிழமை என்பதால் பாடையில் அறுப்பதற்கு கோழிக்குஞ்சு கட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதனை மற்றோர் அறியாதவாறு பறக்கவிட்டுவிடுகிறார் நாயகன்.

    “சாவுறதுக்கு முன்ன வரைக்கும் ஒரு உயிருக்கும் தீங்கு நெனைக்காம வாழ்ந்தவரு அமைதியா பாடையில போய்க்கொண்டு இருந்தாரு”5.

    கிராமத்தில் எவ்வுயிர்க்கும் தீங்கு நினைக்காத ஈகைகுணத்தோடும் வைதீகத்தோடும் வாழக்கூடிய எளிய மனிதர்களை அடையாளங் காட்டுகிறார் ஆசிரியா்.

    “கைமாறும் ஈச்சங் குச்சிகள்” கதையில் பச்சைத்துண்டுக்காரா், மனைவி இறந்துவிட்டபின் பிள்ளைகள் நகரங்களில் சென்று தங்கிவிடுகின்றனா். தனியொரு மனிதராக சோர்ந்து

    உக்கார்ந்துவிடாமல் விஷேசங்களில் நேர்மையான சமையல் மேற்பார்வையாளராகவும் சந்தைக்கு ஆடுகளையும் மாடுகளை ஓட்டிச்சென்று உதவுபவராகவும் இருக்கிறார்.வலிவும் இளமையும் சுறுசுறுப்பும் இருந்தும் வீணாகச் சுற்றித் திரியும் இளைஞர்களுக்கு மத்தியில்  எந்த வேலை செய்தாலும் சுறுசுறுப்பாகவும் நேர்மையாகவும் பொய் சொல்லாதவராகவும் எளிய உணவுமுறை கடைபிடிப்பராகவும் தனக்குக்கிடைத்த உணவை பிறா் உயிர்களுக்கும் கொடுத்து ஈகைகுணம் மிக்கவராகவும் ராமசாமி தரகா் போன்ற ஏமாற்றுக்காரர்களை மன்னிப்பவராகவும் உள்ளார்.

    “வெள்ளை வேட்டி பலராம நாயுடு” கதையில் வரும் நாயுடு நகரத்து பட்டு ஜவுளிக்கடைகளுக்கு வாடிக்கையாளா்களை அழைத்துச் சென்று உதவும் வேலை செய்கிறார். அதன் மூலம் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி பெண்பிள்ளைகளை கரை சேர்ப்பவராகவும் தன் உழைப்பில் சேர்த்த பணமென்றாலும் அதை முதலாளிக்குத் தெரியாமல் எடுக்கக்கூடாது என்ற எண்ணம்கொண்டவராகவும் உள்ளார்.காலமாற்றத்தில் கடை ஊழியா்கள் தன்னை அவமானப்படுத்தும்போதும் அதை பொறுத்துக்கொள்பவராகவும் படைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு கிராமத்து மனிதர்கள் நேர்மையும் உழைப்பும் அன்பும் எளிய வாழ்வும் கொண்ட மனிதர்களாக வாழ்ந்து உலகையும் வாழ வைக்கும் பாங்கை தனது கதைகளில் வடித்து கதைகளை அழகுப்படுத்துகிறார் செஞ்சிதமிழினியன்

    பெண்ணியம்

    செஞ்சி தமிழினியன் கதைகளில் வரும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக உழைப்பும் நேர்மையும் வாழ்ந்து காட்டும் துணிவும் கொண்டவா்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.

    “மாற்றம்” சிறுகதையில் சரசு தன் வீட்டுக்கு மூன்றாவது தெருவில் இருக்கும் முறைப்பையனான சங்கருக்கு பெண்பேசி நிச்சயதார்த்த நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது.

    நிகழ்வில் பெண்ணுக்கு எத்தனை சவரன் போடுவீா்கள் எனவும் வண்டி வாங்கித்தரவேண்டும் என்று நிர்பந்திக்க சரசு சங்கரைப் பார்க்கிறாள். அவனும் மௌனமாக இருக்க அணிந்திருந்த மாலையை கழட்டிவிட்டு துணிந்து வந்து சபையில் பேசுகிறாள்.

    ”பெண் உரிமை என்பது என்னவெனில் ஆண்களைப்போலவே பெண்களுக்கு வீரம், வண்மை, கோபம், ஆளுந்திறன் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும்”6 என்கிறார் தந்தை பெரியார்.

    தன் தகப்பனால் நகைநட்டு மட்டுமே போடமுடியும்.அதற்கே கடன்வாங்கிதான் போடமுடிகிறது.

    இதில் வண்டி வேறு வாங்கித்தர முடியாது எனவும் அப்படியே வாங்கினாலும் அக்கா வீட்டுக்காரருக்கும் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறாள். அப்படியென்றால் என் அண்ணன் மகளையே கட்டிவைப்பேன் என சங்கரின் அம்மா கூற சங்கர் எதுவும் கூறாமல் நிற்கிறான்.

    “இன்னும் மூணு வருஷத்துக்குப் பிறகு கல்யாணத்தை வெச்சிக்கலாம். கே.வி தியேட்டர்ல புதுசா செல்போன் தயாரிக்கிற கம்பெனி வந்திருக்குதாம். மாசம் ஐயாயிரம் ௹பா தர்றாங்கலாம். நானும் நாளைக்கு போய் சேர்ந்துட்றேன் என்றதும் கண்கள் ஈரமானது”7

    சொந்தமாக இருந்தாலும் நகைநட்டும் வண்டியும் கொடுத்தால்தான் திருமணமென்றதும் அதை நிறுத்திவிட துணிகிறாள். ஆனால் சங்கரின் அன்புக்கும் தந்தையின் வண்டி வரதட்சணை கொடுக்க முடியாத நிலைக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் சரசு தான் உழைத்து பொருளீட்டிய பின் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என துணிந்து வேலைக்குப் புறப்படும் புதுமைப் பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ளாள்.

    “கைம்மாறு” சிறுகதையில் குடிகார கணவனுக்கு வாக்கப்பட்ட கிழவி பெருமாத்தா அடிக்கடி கணவனோடு ஏற்படும் சிறுசிறு சண்டைகளிலும் அவனிடம் அடிபட்டாலும் கணவனை விட்டுக்கொடுக்காது வாழ்கிறாள். மளிகை கடை அண்ணாச்சிக்கு முதன்முதலாக கடைவைக்க இடம்பிடித்துக் கொடுத்துதவினாள். அவள் கைராசி மளமளவென அண்ணாச்சி வளர்ந்துவிடுகிறார். அவா் கடையை கூட்டி வாருவது, கோலம் போடுவது கடைப்பொருட்களை முறத்தில் புடைத்து சுத்தம் செய்து தருவது, அவா் வீட்டு சுபநிகழ்வுகளில் பொறுப்பாக பொருட்களை பாதுகாப்பது என எல்லாவற்றையும் மிக்க நேர்மையுடனும் அர்பணிப்புடனும் செய்கிறாள்.அவள் கணவனால் அடிபட்டு உடல்நலமின்றி வேலைக்கு வராததை அறிந்து அண்ணாச்சி மருத்துவ உதவி பண உதவி செய்து கைம்மாறு செய்கிறார்.

    பெருமாத்தா போன்ற பெண்கள் தனது கணவன்மார்கள் எவ்வளவு துன்புறுத்தினாலும் தன் பொறுமையெனும் பெருமை குணத்தால் குடும்ப வாழ்வில் நிலைத்து வெற்றிபெறுபதை

    “எவ்வளவுதான் இன்னமும் வம்பு பன்னிக்கிட்டு கிழவன் முனியன் திரிஞ்சாலும் மன்னிக்கிற பக்குவந்தா பெருமாத்தா கிழவியோட மனசு”8 என்று அழகாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியா்.

    வைராக்கியத்தோடு சாதித்துக்காட்டியவள்

    “அங்கீகாரம்” சிறுகதையில் மலர் தன் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி தன் மாமனான கணேசனை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறாள். தன் வாழ்வுக்கு அடையாளமாக பழனியை பெறுகிறாள்.

    மாமன் தன்னோடு சண்டைப்போட்டுக் கொண்டு ஊரைவிட்டும் மலரை கைவிட்டும் சென்றுவிட ஊரார் சொந்தம் பந்தம் என அத்தனையும் கைவிட தன் உழைப்பொன்றே துணையாய் வாழ்கிறாள்.சித்தாள் வேலை, பாத்திரம் கழுவும் வேலை, மண்டபங்களில் இலை எடுக்கும் வேலை, பள்ளி ஆயா வேலை என எத்தனையோ வேலைகளை செய்து தானும் பிழைத்து மகன் பழனியையும் காப்பாற்றி வருகிறாள்.

    தள்ளுவண்டியில் இட்லிக்கடை போட்டவள் தண்டல்காரனிடம் வட்டிக்கு பணம் வாங்கி ரோட்டோரமாக பழனி ஓட்டல் நடத்துகிறாள். அதற்கும் மாநகராட்சி மூலம் சாலை ஆக்கிரமிப்பு என சோதனை வந்து காலி செய்கின்றனர். எனினும் பதிமூன்று ஆண்டுகளாக வைராக்கியமாக அவள் கணவனுக்குச் சொந்தமான பூக்கார தெருவில் இருக்கும் காலி இடத்திற்குச் செல்லாதவள் தன் மகனுக்காக சென்று அங்கு குடிசைப்போட்டு கடை நடத்துகிறாள். மீண்டும் கலெக்டா் மாறிவிட்டதாகவும் ஓட்டல் நடத்திய பழைய இடத்திலேயே ஓட்டல் நடத்தவும் வாய்ப்பு கிடைக்கிறது என கதையை முடிக்கிறார் ஆசிரியா்.

    ஏழ்மையிலும் செம்மையாக வாழநினைத்தவள் கணவனால் கைக்குழந்தையோடு நிர்கதியாகவிடப்படுவதும் தன் உழைப்பால் முயற்சியால் பல்வேறு வேலைகளையும் செய்து முன்னேறுவதும் வாழ்வில் ஏற்படும் பல்வேறு தடைகளையும் தாண்டி முன்னேறியதை

    “எனக்கென்ன தலையெழுத்தா? அவன் ஒழுங்கா இருந்திருந்தா இப்படி எல்லாம்

    கேக்க வேண்டியதில்லை.

    அம்மா வீட்டு ஆதரவும் மாமியார் வீட்டு ஆதரவும் இல்லை. தனிக்குடித்தனம்தான் என்பொழப்பு.

    பதிமூணு வருஷமா தனியெ இருந்திருக்கன்னா சும்மாவா? எப்படி எல்லாம தப்பிச்சி வந்திருக்கேன் தெரியுமா?

    கணேசன் நடந்து வர்ற மாதிரியே இருக்கு அப்படியே உன் அப்பன உரிச்சி வச்சிருக்குறடா” என்று சொன்னதும் மலரு கண்கலங்கினாள்.கணேசன் கூட வாழ்ந்த வாழ்க்கைக்கு அங்கீகாரம் கெடச்சது போல இருந்தது.”9. என்று கணவனின் துணையின்றி தனியொருவளாக வாழ்ந்துகாட்டும் வைராக்கியமான பெண்ணைப் படைத்துக்காட்டியுள்ளார்.

    பழங்குடியினா் வாழ்வு

    தொல்குடியினரான பழங்குடியினா் வாழ்வு இருபத்தோராம் நூற்றாண்டிலும் விடியாமல் இருப்பதை தனது கதைகளில் விவரித்துள்ளார் செஞ்சிதமிழினியன். அவா்கள் அன்றாடங் காய்ச்சிகளாய் உணவுக்காய்  மட்டும் அலைய வேண்டியுள்ளது. கல்வி போன்ற உரிமைகளும் சரிவர வழங்கப்படவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, அரசின் சலுகைகள் ஆகியவை பெற சாதிசான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் இலஞ்சம் கொடுக்க முடியாத காரணத்தால் கிடைக்காமல் இருப்பதால் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வண்டுவின் மகன் மாரி பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியாத நிலையை விவரித்துள்ளார்.

    “ஒரு குறிப்பிட்ட காலத்துச் சமூக நிலைமையின் பிரத்தியேகமான பண்புகளமைந்த பாத்திரங்களைக் கண்டறிந்து படைப்பவனே சமூக நாவல் ஆக்குகிறான்”10 என்கிறார் கைலாசபதி.

    ‘சில்லாக்கோல்கள்’ கதையில் ஊர்த்தலைவரின் வீட்டில் பாம்பு புகுந்துவிட மீசைக்காரா் வண்டுவும் அவரது மகன் மாரியும் சென்று பாம்பை பிடித்து அவா்களை பேராபத்திலிருந்து காக்கின்றனா். அப்பேருதவிக்குப் பிறகு அவா்கள் கொடுக்கும் மரியாதையும் பொருளும் அவா்களை திகைக்க வைக்கிறது.அவா் வீட்டை முதன்முதலாக உள்ளேச் சென்று பார்க்கின்றனா். அவா்கள் அடகு வைத்த அண்டா உள்ளே இருப்பதை காண்கின்றனா்.

    “இத்தினி நாளா ஏண்டான்னு கூப்பிட்டாங்க. இன்னிக்கு வாப்பா வண்டுன்னு கூப்பிட்டதுல பழைய காயத்துக்கெல்லாம் மருந்து போட்ட மாதிரி இருந்தது”11

    என்று அவா்களின் வலிகளை பதிவு செய்கிறார்.

    “ஒண்டி தச்ச ஒத்த கதவு கதை” இக்கதையின் தொடர்ச்சியாக அமைந்து அவா்களின் உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காத நிலையையும் எலி வளைகளை புகைப்போட்டு வளைகளில் இருக்கும் கழனி நெல்லை எடுத்தும் அதனையும் எங்க நிலத்து நெல்தானே என பறித்துக் கொள்ளும் கயவா்களின் நிலையையும் விளக்கியுள்ளார்.

    “லுங்கி முனையை அவிழ்த்து கொட்ட நெல்லோடு வண்டுவின் கண்ணீர் துளிகளும் சேர்ந்தே கூடைக்குள் விழுந்தன.” 12 என்று பழங்குடியினா்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டுகிறார்.

    விலங்குகள்

    கிராமத்தில் எல்லோர் வீடுகளிலும் பசு, எருது, பூனை, நாய்  என விலங்குகள் இருக்கும்.அவை அவா்களது வீடுகளில் ஓர் உறுப்பினராகவே வாழும்.குழந்தைகளில் பெண்களை வெறுப்பவா்கள் விலங்குளில் ஆணினத்தை வெறுப்பார்கள். பசுவும் ஆடும் பெண்ணாக இருப்பதால் குட்டி ஈனும் பால் தரும். இலாபம் தரும்.

    ஊருக்கு ஊர் தமட்டைகள் எனும் ஆண் இனமான எருதுகள் இனவிருத்திக்குப் பயன்படும்.

    இன்று அவை இல்லாத காரணத்தாலே செயற்கை முறையில் ஊசிகள் போட்டு கருவுற செய்ய வேண்டியுள்ளது. இதனால் நாட்டுவகை மாடுகள் கிடைப்பது அரிதாகிறது.

    “ஊராகாலி” சிறுகதையில் தன் இஷ்டப்படி சுற்றித்திரிந்து மேய்ந்து தண்ணீர் குடித்துவாழும் தமட்டை ஊரார்க்கு பயிரை மேய்தல் கொட்டகை மாடுகளை பாய்தல் போன்ற பெருந்தொல்லைகளை கொடுக்கிறது.

    “அது பொலியெருது. அதுக்கு கட்டுதலையே கெடையாது. யார் வீட்டு தொட்டியிலயும் தண்ணிக் குடிக்கும். அது மேய்ஞ்சா வெள்ளாம அதிகமா வெலையுமுன்னு நம்புவாங்க”13

    சில இளைஞா்கள் கூடி அதனை பிடித்து மூங்கணாங்கயிறு குத்தி பட்டியில் அடைப்பதும் இறுதியில் அது பூம்பூம் மாட்டுக்காரனிடம் தலையாட்டிக் கொண்டிருக்கும் சூழலையும் விவரிக்கிறார்.

    “டைகர் இருந்த சில நாட்கள்” கதையில் மகள் ராஜியின் விருப்பத்திற்காக நாய்க் குட்டி வாங்கி வளா்கிறார்கள். அதற்கு  டைகர் என பெயரிட்டு கழுத்துச் சங்கிலி பால் பிஸ்கட் வாங்கி கொடுக்கின்றனா். அது ஒரு நாள் தங்கை மகன் கார்த்தியை அது கடித்துவைக்க அதனை தூரத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு வருகின்றனா். கிராமங்களில் ஒரு உறவாகவே இருக்கும் நாய் நகரங்களில் தேவையற்ற தொல்லையாவதை விளக்கிக்காட்டுகிறார் ஆசிரியா்.

    “வெத்தல பாக்கு பையி” கதையில் தன் பையில் வைத்திருந்த ஒற்றை ஐம்பது ௹பாயை நடத்துநரிடம் கொடுக்கும் காற்றில் பறக்கவிட்டு நிர்தாட்சண்யமாக நடுத்தெருவில் இறக்கிவிடப்படும் மூதாட்டியின் நிலையை விளக்கியுள்ளார்.

    தன் முந்திரிக்கொட்டை அறிவினால் கோபப்பட்டு தன்னை அடித்துவிட்ட ஆசிரியைக்கு முருங்கைக்காயை கொண்டு வந்து கொடுக்கும் சிறுமியின் மூலம் ஆசிரியா் மாணவா் உறவின் பெருமையை “உன்னத உறவுகள்” கதை மூலம் விளக்கியுள்ளார்.

    முடிபுகள்

    1.இன்றைய நாகரிக வளர்ச்சியினால் கிராமமும் விவசாயமும் அழிந்து வருவதையும் தொழிற்சாலைகளும் நகரமயமாதலினால் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகவும் மாறி வருவதன் வேதனையை வெளிப்படுத்துகிறார்.

    2.விதைநெல் தாத்தா, ராமசாமிக்கவுண்டா், ஈச்சூா் நாமக்கார தாத்தா போன்ற பெரியோர்கள் கிராமியமும் விவசாயமும் நெறிப்பட்ட வாழ்வும் அருகி வருவதை எண்ணி வருந்துவதாகப் படைத்து அவா்களின் ஆதங்கத்தின் வழி தன் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    3. பழங்குடியினா் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கை நிலை ஆகியவற்றில் முன்னேற்றம் பெற்று வாழ்வில் உயர வேண்டும் என விழைகிறார்.

    4. பெண்களில் சரசு, பெருமாத்தா, மலர் போன்றோர் ஆண்வர்க்கத்தால் வஞ்சிக்கப்பட்டாலும் தங்களது விடாமுயற்சியாலும் உழைப்பாலும் சாதித்துக் காட்டுவதை படைத்து பெண்கள் எந்த சூழலிலும் நெருக்கடியிலும் துவண்டு விடாமல் மன உறுதியோடு உழைத்து முன்னேற வேண்டும் என்று விழைகிறார்.

    5. பச்சைத்துண்டுக்காரா், வெள்ளை வேட்டி பலராம நாயுடு போன்ற பெரியோர்கள் உறவுகளால் கைவிடப்பட்டாலும் ஏமாற்றப்பட்டாலும் உண்மையும் உழைப்பும் கொண்டு வயதான காலத்திலும் தன் சொந்தக்காலில் நின்று வாழ்வதை உணர்த்தி இன்றைய இளைஞர்களில் சிலர் தற்காலிமாக ஏற்படும் தோல்விகளாலும் ஏமாற்றங்களாலும் நெறி தவறி தீய வாழ்வையும் குறுக்கு வழிகளையும் பின்பற்றி வாழக்கூடாது. நெருக்கடியான நேரங்களிலும் உழைத்து வாழவேண்டும் என வலியுறுத்துகிறார்.

    6. தாம் வாழ்ந்த கிராமத்தையும் சந்தித்த மனிதர்களையும் நன்கு அனுபவித்து உள்வாங்கி இருப்பதால் அவா்களது உணர்வுகளையும் வாழ்வியலையும் குணாதிசயங்களையும் முரண்களையும் எளிதாக கதைகளாக்கி தந்து படிக்கும் வாசகர் மனங்களை செம்மையுறுத்தியுள்ளார் செஞ்சிதமிழினியன் என்பது தெளிவாகிறது.

    சான்றெண் விளக்கம்

    1. அகிலன்- கதைக்கலை ப.23 பொற்கொடி வெளியீடு சென்னை-1987
    2. செஞ்சி தமிழினியன்-ஊராகாலி சிறுகதை நூல்-பொன்னேரு-ப.18- விதைநெல் எண்.1,பாரதிதாசன் தெரு, பெரியகரம், செஞ்சி- மே 2019.
    3. இராமலிங்கம் மா.-இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் ப.63 தமிழ் புத்தகாலயம்- சென்னை-1972.
    4. செஞ்சி தமிழினியன்-ஊராகாலி சிறுகதை நூல்-செத்துப்போன பூமி ப.32 விதைநெல் எண்.1,பாரதிதாசன் தெரு, பெரியகரம், செஞ்சி- மே 2019.
    5. மேற்கூறிய நூல்-இரக்கம் ப.73
    6. பெரியார் ஈ.வெ.ரா பெண் ஏன் அடிமையானாள் ப.24- பெரியார் சுயமரியாதை பிரசுர நிறுவனம்-சென்னை-21 ஆம் பதிப்பு-2001.
    7. செஞ்சி தமிழினியன்-ஊராகாலி சிறுகதை நூல்-மாற்றம் ப.103- விதைநெல் எண்.1,பாரதிதாசன் தெரு, பெரியகரம், செஞ்சி- மே 2019.
    8. மேற்கூறிய நூல்-கைம்மாறு ப.120.
    9. மேற்கூறிய நூல்-அங்கீகாரம் பக்கங்கள் 37-39-41.
    10. கைலாசபதி.க தமிழ் நாவல் இலக்கியம் ப.224- குமரன் பப்ளிஷர்ஸ்- சென்னை-1999.
    11. செஞ்சி தமிழினியன்-ஊராகாலி சிறுகதை நூல்-சில்லாக்கோல்கள் ப.61 விதைநெல் எண்.1,பாரதிதாசன் தெரு, பெரியகரம், செஞ்சி- மே 2019.

        12 மேற்கூறிய நூல்-ஒண்டி தச்ச ஒத்த கதவு ப.96

    1. மேற்கூறிய நூல்- ஊராகாலி- பக்கங்கள் 45-46.

    ஆய்வறிஞர் கருத்துரை 

    கட்டுரையாளர் சிறுகதைத் தொகுப்பைப் படித்து முழுமையாக உள்வாங்கியுள்ளார். நகர வளர்ச்சி காரணமாக விளைநிலங்கள் வீணாக்கப்படும் சூழலையும் விவசாயம் சிறுக சிறுக அழிந்து வரும் சூழலையும் இக் கதைகள் மூலமாக சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். இன்றைய நவீன உலகமும் கிராம வாழ்க்கையும் எண்ணெயும் தண்ணியும் கலந்ததுபோல ஒட்டாமல் இணைந்திருப்பதும் மனிதர்கள் போலிமையான உறவு நிலையே தேவையானது என்ற வாழ்க்கைப் போக்கும் இன்றைய மனிதனைக் கேள்விக்குறியாக மாற்றியுள்ளதை இக்கட்டுரை சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளது. இன்றைய காலத்தின் இருவேறு உலகங்களை இதன்மூலம் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடிகிறது. கதைகளை விளக்கமுறையில் எடுத்துக்கூறுவதே பெரும்பாலும் நிகழ்ந்துள்ளது. சூழலியல் மாற்றம் (Climate change) சார்ந்த ஆய்வுத் தளத்திற்குப் பல கதைகளைக் கொண்டுசெல்ல முடியும். எனவே, இதை இலக்கியக் கட்டுரையாக வெளியிடலாம்.

     

    Share
  • கதையும் மொழிதலும் – 6 கு.ப.ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’

    கதையும் மொழிதலும் – 6 கு.ப.ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran78.blogspot.com
    9360623276

    “அணுக்களின் ஆக்ரோஷ செயல்பாட்டில் வினையாற்றும் உடலங்களின் இயக்கமே காமம். ஏற்றுக்கொள்ளுதலுக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலும் நடைமுறைக்கும் ஒவ்வாமைக்கும் இடையிலும் ஏற்படுகின்ற உணர்வு இடைவெளியில் மொழி ஆளுமை செலுத்துகிறது. சொற்களால் கட்டமைக்கப்படும் எண்ணங்கள் ஆண் பெண் உறவு நிலையில் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.”

    சி.சு.செல்லப்பா, க.நா.சு ஆகியோரால் பாராட்டப்பட்ட சிறுகதை எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன். கு.ப.ரா.வும் ந.பிச்சமூர்த்தியும் நெருங்கிய நண்பர்கள். மணிக்கொடி கால எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான தனித்தன்மையில் இயங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தனர். சிறுகதை அமைப்பு அக்காலத்தில் முக்கிய இலக்கிய வடிவமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த வகையில் ஆண் பெண் உறவுச் சிக்கலை மையமாக வைத்துக் கதைகள் எழுதி, வியப்பில் ஆழ்த்தியவர் கு.ப.ராஜகோபாலன்.

    மனித வாழ்க்கையில் அடிநாதமாக ஒலித்துக்கொண்டே இருப்பது காமமும் காதலும். இதன் விசையிலேயே அனைத்துச் சமூகப் பண்பாட்டு அரசியல் பொருளாதாரக் கூறுகள் பின்னப்படுகின்றன. மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தருவது பெண் சார்ந்த இல்லற வாழ்க்கை. குடும்பம் என்ற நிறுவனம் மனிதர்களை ஒரு கட்டுக்கோப்பில் இயங்கச் செய்து சமூக வினையாற்றுகிறது. அந்தக் குடும்ப அமைப்பில் ஆண் பெண் சார்ந்த உறவுச் சிக்கல்கள் பேசாப் பொருளாக மனத்தின் ஆழத்தில் பொதிந்து கிடக்கின்றன. அந்த மறைபொருளை விவாதப் பொருளாகத் தனது கதைகள் மூலம் கொண்டு வந்தவர் கு.ப.ராஜகோபாலன்.

    இவரின் பெரும்பாலான கதைகள், இத்தகைய உள்ளடக்கம் கொண்டவையாகவே இருக்கின்றன. இவரின் கதைக் களமானது, ஆண் பெண் உறவுச் சிக்கலை மையமாகக் கொண்டதாக இருக்கிறது. இந்தச் சிக்கல், இரண்டு சமூகக் கட்டமைப்புகளைக் கொண்ட நமது சமூகத்தில் எவ்வாறு உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை இவரின் கதைகள் மூலமாக உணர முடிகிறது. கிராமம் சார்ந்த பழைய பண்பாட்டுச் சமூக விழுமியங்களுக்கும் இன்றைய அறிவொளி கால முற்போக்கு எண்ணங்களுக்கும் இடையில் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நடைமுறை யதார்த்தங்களை இவரின் பல கதைகள் எடுத்துரைக்கின்றன. அத்தகைய கதைகளில் ஒன்றே கனகாம்பரம்.

    புதிதாகத் திருமணமாகி வந்திருக்கக்கூடிய தம்பதிகள் வாழ்ந்து வரும் சூழலில், கணவன் படித்தவனாக இருக்கிறான். இன்றைய நவீன நாகரிகத் தன்மையுடன் தன் மனைவி நடந்துகொள்ள வேண்டும் என்று பல நடைமுறைகளை அவளுக்குக் கற்றுத் தருகிறான். கிராமத்தில் பண்ணையார் மகளாக வளர்ந்து வந்த அவளுக்கு நாகரிகச் சூழலைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. குறிப்பாகத் தன் கணவனின் விருப்பத்திற்கு மற்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும்  என்ற உணர்வு இருக்கிறது. எனவே கணவனின் நடத்தை அறிவுரைகளைக் கவனமாகக் கடைப்பிடிக்க எண்ணுகிறாள். கணவன் படித்தவன் நகர வாழ்க்கையில் இருக்கக் கூடியவன் அவனைத் தேடி நண்பர்களும் வேண்டியவர்களும் வருவார்கள், நாம் நலம் விசாரித்து அவர்களிடம் முறையாகப் பேச வேண்டும், கிராமத்துப் பெண் போல கூச்சப்படக் கூடாது என்பன போன்ற வழிகாட்டல்களை, அறிவுரைகளை அவளின் மனது கணவனின் எண்ணங்களை நிறைவுசெய்யும் வகையில் இருக்கவேண்டும் என்று கவனமாகச் செயல்படுகிறது.

    ஒருநாள் கணவரின் நண்பன், அவனைத் தேடி வீட்டிற்கு வந்துவிட்டான். அடுப்படியில் வேலையாக இருந்த இவள், நண்பரை வரவேற்று மிகவும் பழக்கப்பட்ட அறிமுகமான நபரைப் போல பேசுகிறாள். அது அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதே நேரத்தில் அவள் ‘வீட்டிற்குள் வாங்க’, ‘அவர் சற்று நேரத்தில் வந்துவிடுவார்’ என்றும் ‘வந்து உட்காருங்கள்’ என்றும் கூறுகிறாள். இது அவனுக்கு மேலும் வியப்பைத் தருகிறது. ‘எந்தத் தைரியத்தில் கணவன் இல்லாத நேரத்தில் தன்னை உள்ளே வந்து உட்காருங்கள்’ என்று கூறுகிறாள் எனத் தயங்கி பிறகு வருவதாகக் கூறிச் சென்று விடுகிறான். அவளுக்கு மனநிறைவு. கணவனின் நண்பரை நாகரிகமாக வரவேற்றோம், இதனைக் கேட்டால் கணவன் மகிழ்ச்சி அடைவார் என்று எண்ணி அடுப்படியில் விட்டு வந்த வேலையில் மும்முரமானாள்.

    கணவன் வந்ததும் நடந்தவற்றை விரிவாகச் சொன்னாள். அவன் யாராக இருக்கும் என்ற குழப்பம் அவனுக்கு. அதுமட்டுமல்ல, வந்தது யார் என்று தனக்குத் தெரியவில்லை. இந்த நிலையில் அவனை வீட்டிற்குள் அழைத்து உட்காரச் சொல்லி இருக்கிறாள் என்ற மன நெருடல் அவனை நிலைகுலைய செய்துவிட்டது. என்னதான் இருந்தாலும் என் நண்பனாகவே இருந்தாலும் வீட்டில் தான் இல்லாத போது வேறு ஒருவனை உள்ளே அழைப்பது அவனது மனத்தளவில் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. தனது செயல்பாடுகளைக் கேட்டு தன்னைப் பாராட்டுவார் என்று எண்ணிய அவளுக்குச் சற்று மனக்குறையாக இருந்தது. அவனும் நடந்தவற்றைப் பற்றிப் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. கனகாம்பரப்பூ வைத்துக்கொண்டு அதனை நூலில் கட்டுவதற்காகச் செயல்பட்டுக் கொண்டிருந்த அவளிடம் ‘இதை தலையில் யார் சூட்டுவார்கள்?’ என்று கூறுகிறான்.

    அவளும் மற்றவர்கள் தலையில் கொத்துக்கொத்தாக வைத்துக்கொண்டு வருகிறார்கள் என்று கூறுகிறாள். சினிமா நடிகைகள் கூட தலை முழுவதும் இதைத்தான் சூடிக்கொள்வதையும் சுட்டிக் காட்டினாள். பேச்சின் போக்கில் அவன் ‘முன்ன பின்ன தெரியாத நபர்களை, யாராவது வீட்டிற்குள் அழைப்பார்களா’ என்று நேற்று நடந்த நிகழ்வின் சிக்கலைக் கூறிவிட்டான். இப்போது அவளுக்குப் புரிந்துவிட்டது கணவன் முக மாறுபாட்டுக்கு இது தான் காரணம் என்று. தன் மேல் நம்பிக்கை இல்லாமல் இப்படி அவன் கூறியதில் அவளுக்கு மிகவும் மனவருத்தம். அவனிடம் தனது கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டு சென்றுவிட்டாள்.

    இவனின் நண்பன் பிறகு சந்தித்துக் கொள்ளும்போது, நண்பனின் மன உணர்வின் மூலமாக ஒரு சமூக இயக்கப் போக்கையே உளவியல் ரீதியாகப் பின்னிச் செல்கிறார் கதையாசிரியர். அவனைப் பார்க்கச் சென்று அவனது மனைவி தன்னிடம் கூறியதை எப்படிச் சொல்வது என்று அதனைச் சொன்னால் அவளுக்கு ஏதேனும் குடும்பச் சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்றும் நண்பன் சிந்திக்கிறான். ஒருவேளை நடந்ததை அவள் இவனிடம் கூறியிருக்கலாம் என்றும் யோசிக்கிறான். பிறகு வேறு வழியில்லாமல் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். அன்று வீட்டிற்கு வந்தது இவன் தான் என்றும் தன் மனைவி அவ்வாறு பேசியதும், மன நெருடலும், எப்படி இதனைப் புரிந்துகொள்வது என்ற சிக்கலும், ஆக இவர்களின் நட்பு தொடர்கிறது. அதேவேளையில் ஆசிரியர் கதையை நிறைவு செய்கிறார்.

    கதையின் பின்புலம் பிராமணக் குடும்பச் சூழ்நிலையில் பின்னப்பட்டுள்ளது. ஆண்கள் வீட்டிற்குள் வந்தால் வீட்டின் உள்ளறையின் கதவு இடுக்கு வழியாகப் பார்த்துப் பேசும் நிலையில், அறிமுகம் இல்லாத ஒருவனை இவள் வீட்டிற்குள் வந்து உட்காரச் சொல்லும் துணிவும் மரபு மீறலும் இங்கே சமூகம் மாறிக்கொண்டே வருவதை உணர்த்துவதாக இருக்கிறது. என்றாலும் உபதேசங்கள் கூறினாலும் நடைமுறையில் அதனை மனம் ஏற்றுக்கொள்ள மறுப்பது, இதனால் ஏற்படும் அவநம்பிக்கை, குடும்பச் சிக்கல், ஆண்-பெண் புரிதல் என்று நுண்மையான கூறுகளைச் சற்று மேலோட்டமாகத் தொட்டுச் செல்கிறார்.

    பெண் என்பவள் ஆண்களால் எப்படிப் பார்க்கக் கற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதும் இங்கே உற்று நோக்க வேண்டிய பண்பு நிலை. பெண் காமத்தின் உருவம், சதைகளின் வடிவம், இச்சையின் தூண்டுதல் என்று சமூகக் கற்பிதங்களும் பெண்வெளி மறுக்கப்பட்ட அல்லது தவிர்க்கப்பட்ட ஒரு காலக்கட்டத்தில் குடும்பச் சூழல் இங்கே நமக்கு உணர்த்தப்படுகிறது. இன்றைய காலப்போக்கில் இதனைப் படிக்கும் போது மிகச் சாதாரண ஒரு நிகழ்வாகத் தெரியும் நிலையில், இது நிகழும் தொடக்கக் காலங்களை எண்ணும்போது இக்கதை தனது முக்கியத்துவத்தைப் பெற்று நிற்கிறது.

    இக்கதையில் பெண்ணைப் பயிற்றுவிப்பு நிலையில் உருவாக்கி, இத்தகைய பயிற்றுவிப்பு, ஆண் மனத்தில் எத்தகைய எதிர்வினையை உருவாக்கும் என்ற கண்ணோட்டம் வெளிப்படுகிறது. கதை முழுவதும் அவளின் சொற்களால், பாதிக்கப்படும் ஆண்கள் என்ற போக்கில் மிகுந்து நிலவுகிறது. கணவன் மனைவியின் சிக்கல், மனச்சிக்கல், இதுபோன்று பெண்கள் நடந்துகொள்ளக் கூடாது என்று கதையாசிரியர் வலியுறுத்துவதாகப் படுகிறது. பிற்போக்குத்தனத்தின் சார்பாளராகக் கு.ப.ரா இங்கே வெளிப்படுகிறார். காலமாற்றத்தால் சிதைந்து அழிந்து வருகிற குடும்பப் பெண் அடிமைத்தனத்தின் பிரதிநிதியாகத் தன்னை வரித்துக்கொண்டு ஆணின் மனச்சிக்கலை இங்கே வெளிப்படுத்தியிருக்கிறார். பயிற்றுவிப்புகள் எப்போதும் சுயச் சிந்தனையை, சுதந்திரத் தன்மையை உருவாக்கும் என்பதற்கு இக்கதை சான்றாகும். அதே நேரத்தில் இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது தவிக்கும் மனப்போக்கையும் இங்கே சிந்திக்க முடிகிறது. எளிமையான கதை. அதே வேளையில் முக்கியமான கதையும் கூட.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 2

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 2

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    கரடி குளத்தில் ஒரு காளமேகம்!

    ‘சொல்லேர் உழவர்’ என்று ஒரு தொடர் திருக்குறளில் வரும். ‘சீரிய கூரிய தீஞ்சொல்’ என்பது கம்பராமாயணம். நீங்களும் நானும் பேசுகிறபோது இந்தச் சொற்கள் இப்படி அமையா. காரணம் நமக்குச் சீரிய சொல்லும் தெரியாது. கூரிய சொல்லாக்கவும் இயலாது. அதனால் அது தீஞ்சொல்லாகவும் அமையாது. சிந்தனைச் செல்வர்கள் செந்தமிழ் வித்தகர்கள் பயன்படுத்துகிறபோது அவர்கள் ஆற்றல் காரணமாகச் சாதாரண சொற்களும் கூர்மை பெறும். சிந்திக்க வைக்கும். திகைக்க வைக்கும். சில நேர்வுகளில் சிரிக்கவும் வைக்கும். கம்பதாசனும் கண்ணதாசனும் வாணிதாசனும் நாம் பேசுகிற தமிழைத்தான் பேசினார்கள் எழுதினார்கள். அவர்களுக்குத் தீஞ்சொல்லாக அமைகிறது. நமக்குத் தீய்ந்த சொல்லாகிவிடுகிறது. என்ன செய்வது? விதியை மாற்ற முடியுமா என்ன? அவ்வாறு திகைக்கவும் வியக்கவும் சிரிக்கவும் வைக்கின்ற சொல்லாடல்கள் அமைந்ததொரு இலக்கியத்தைச் ‘சிலேடை’ என்று வழங்கினார்கள். தமிழிலக்கிய வரலாற்றில் இடைக்காலம் வரை இவ்வாறான கவிதைக் கூறு இருந்ததற்கான இலக்கிய வரலாற்று ஆவணங்கள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. இந்த இலக்கிய வித்தையில் விருதுகள் பெற்ற சிலருள் ஒருவர் காளமேகம்.

    மரபிலக்கிய வடிவங்களில் சிலேடை

    மரபிலக்கிய வடிவங்களில் சிலேடைக்குத் தனியிடம் உண்டு. அந்த வடிவத்தால் பேரிலக்கியமோ காவியமோ அமையாவிடினும் தேநீர் அருந்தி மகிழ்வதுபோல ஒருவகையான தற்காலிக இன்பத்தைத் தருகின்ற வகையில் அதற்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. சிலேடை பெரும்பாலும் நேரிசை வெண்பாவில் அமைந்துவிடுவதாலும் வெண்பாவை மரபுக்கவிதை எனக் கருதிவிடும் மயக்கத்தாலும் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பு. ‘சிலேடை’ என்பது பெரும்பாலும் வெண்பா யாப்பினால் அமைந்த மரபுக்கவிதை. சிலேடை என்பது உள்ளடக்கம். வெண்பா என்பது உருவம். உருவமும் உள்ளடக்கமும் அத்வைதம் அடைந்தால்தான்  அது மரபுக்கவிதை. சரியா?

    விருத்தத்திலும் சிலேடை அமையலாம்.

    ஒரே பொருளுக்கான பல சொற்களையும் இருபொருட்களின் அதாவது இரண்டு எழுவாய்களின் வினைகளாக ஒரே வினைச்சொல்லையும் சாதுரியமாகக் கையாளும் கவிதைத் தொழில் நுட்பக்கலைக்குச் சிலேடை என்று பெயர். ‘சிலேடித்தல்’ என்னும் சொல்லுக்கு இருவகையாக நோக்குதல் என்பது தண்டியலங்கார உரைப்பகுதி.

    “இம்பர்வான் எல்லைரா மனையே பாடி
    என்கொணர்ந்தாய் பாணாநீ?’ என்றாள் பாணி!
    ‘வம்பதாம் களபம்’ என்றேன் ‘பூசும்’ என்றாள்!
    ‘மாதங்கம்’ என்றேன்யாம் ‘வாழ்ந்தேம்’ என்றாள்!
    ‘பம்புசீர் வேழமெ’ன்றேன் ‘தின்னும்’ என்றாள்!
    ‘பகடெ’ன்றேன் ‘உழும்’ என்றாள் பழனந்தன்னை!
    ‘கம்பமா’ என்றேன்’நற் களி’யாம் என்றாள்!
    ‘கைம்மா’ என்றேன் சும்மா கலங்கினாளே!”

    என்று ஒரு பாட்டு அந்தகக்கவி வீரராகவ முதலியார் எழுதியது. முற்றிலும் வேடிக்கை மிகுந்து காணப்படினும் தமிழின் மொழிவளம் சிறக்க நின்ற சிலேடைப் பாடல் இது. இது எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம் என்னும் யாப்பில் அமைந்தது. வெண்பாவில்தான் சிலேடை அமையும் என்பதற்கு எதிரான கருத்தியல் கொண்டது. எந்தப் பாவிலும் இனத்திலும் அமையலாம். பாட்டில் சிலேடை இப்படி அமைகிறது.

    1. இராமன் என்னும் செல்வந்தனைப் பாடி யானையைப் பரிசாகப் பெற்று வந்தான் பாணன். ‘அவனைப் பாடி ‘என்ன கொண்டு வந்தாய்?’ என்று பாணன் மனைவி பாணினி வினவுகிறாள். அதற்குப் பாணன் ‘களபம்’ கொண்டு வந்தேன் என்கிறான். ‘களபம்’ என்பது சந்தனத்திற்கும் யானைக்குமான பொதுச்சொல். பாணினி சந்தனம் எனக் கருதி தனக்குப் பூசிவிடச் சொல்கிறாள்.
    2. பாணினிக்குத் தெளிவாகப் புரிதல் வேண்டி ‘மாதங்கம்’ என்றான் பாணன். ‘மாதங்கம்’ என்பது யானைக்கு மற்றொரு பெயர். பாணினி என்ன நினைத்துவிட்டாள்? மா தங்கம் எனப் பிரித்துத் தங்கக் குவியல் என எண்ணி ‘வாழ்க்கைக்குப் போதும்’ என்கிறாள்.
    1. குழப்பத்தைத் தீர்க்க எண்ணிய பாணன் தொடர்ந்து ‘பம்புசீர் வேழம்’ என்றான். ‘வேழம்’ என்றால் யானைக்கும் கரும்புக்கும் பொதுச்சொல். பாணினி அதனைக் ‘கரும்பு’ எனக் கருதி ‘தின்னலாம்’ என்கிறாள்.
    1. தன் முயற்சியில் சளைக்காத பாணன் மீண்டும் தான் பெற்று வந்தது ‘பகடு’ என்றான். பகடு என்பது யானைக்கும் உழுமாட்டிற்கும் பொதுச்சொல். பாணினி அதனை ‘உழுமாடு’ எனக் கருதிப் ‘பழனத்தை உழலாம்’ என்றாள்.
    1. எப்படியாவது பாணினிக்குப் புரியவைத்துவிட வேண்டும் என எண்ணிய பாணன் ‘கம்பமா’ என்றான். ‘கம்பம்’ என்றால் கட்டுத்தறி. ‘கட்டுத்தறியில் கட்டக்கூடிய விலங்காகிய யானை’ என்று அவன் கூறினான். அப்போதும் இவள் ‘கம்பு மாவு’ எனக் கருதி அதனைக் கொண்டு களிசெய்து உண்ணலாம் என்றாள்.
    1. இறுதியாகப் பாணன் சொன்னான் தான் பெற்றுவந்தது ‘கைம்மா’ என்றான். ‘கைம்மா’ என்பதற்கு ஒரு பொருள்தான் உண்டு. ‘கையை உடைய விலங்கு’ யானை மட்டுமே. அப்போதுதான் தன்னுடைய மொழியறிவின் பற்றாக்குறையை எண்ணி வருந்தினாளாம் பாணினி.

    இது ஒரு கற்பனை. சொற்களால் நெய்து காட்டப்படும் கவிதைப் பட்டு. கிட்டுவது தற்காலிக இன்பமாக இருந்தாலும் தமிழ்மொழியின் சொற்களஞ்சியத்தைக் கவித்துவம் குறையாமல் வெளிப்படுத்தி நிற்கிறது என்பதை உணரமுடியும். இதில் களபம் என்பதைச் சந்தனத்திற்கும் ஆக்கியது செம்மொழிச் சிலேடை. மாதங்கம் என்பதை மா தங்கம் எனப் பிரித்து நிறைய தங்கம் எனப் பொருள் கொண்டது பிரிமொழிச் சிலேடை. பிரிக்காமலேயே இருபொருள் தருமானால் அது செம்மொழிச் சிலேடை. பிரித்து இருபொருள் தருமானால் அது பிரிமொழிச் சிலேடை. சரியா?

    விடுகதை வேறு! சிலேடை வேறு!

    விடுகதைக்கும் சிலேடைக்கும் வேறுபாடு தெரியாது மயங்குவதும் உண்டு. விடுகதையை ஆங்கிலத்தில் ‘RIDDLE’ என்பர். ஒன்றுக்கான பல பரிமாணங்களை அல்லது அடையாளங்களை நிரல்படச் சொல்லி இறுதியில் விடையை வரவழைப்பது விடுகதை அல்லது புதிர். ஒரே பொருளை அல்லது அப்பொருளுக்கான செயலை இருபொருட்களில் ஒரே வகையாக நோக்கி எழுதுவது சிலேடை.

    விடுகதை அல்லது புதிர்

    அந்தக் கால மன்னன் ஒருவனுக்கு உள்ளங்காலில் அரிப்பு வந்ததாம். மருந்து காணாமல் திரிந்த மன்னனுக்கு மருந்தறிந்த புலவர் மருந்தின் பெயரைச் சொன்னாராம். தற்கால மருத்துவர் எழுதும் குறிப்புச் சீட்டையாவது முயன்றால் புரிந்து கொள்ளலாம். அந்த மருந்துப் பெயரோ மன்னனுக்கும் புரியவில்லை. மற்றவருக்கும் புரியவில்லை. காரணம் அது முன்பே சொல்லியதுபோலச் ‘சொல்லேர் மருத்துவர்’ சொல்லிய மருந்து அது. அவர் என்ன சொன்னார்?

    “பத்துரத மன்னவனின்
    புத்திரனின் மித்திரனின்
    சத்துருவின் பத்தினியின்
    காலை வாங்கித் தேய்!”

    எதுகை இருந்தாலே கவிதை என்பது அந்த மருத்துவருக்கும் தெரிந்திருக்கிறது. தமிழ்க்கவிதைகளின் கேட்டின் தொடக்கக்காலம் அதுவாக இருக்கலாமோ? எல்லாரும் குழம்பினார்கள். மருந்தின் பெயரும் தெரியவில்லை. இறுதியில் பாட்டை எழுதியவனே உரை சொல்வது போல, அந்த மருத்துவரே மருந்தை விளக்கினார்.

    “தசம் என்றால் வடமொழியில் பத்து. பத்து ரதம் இருந்ததால் அயோத்தி மன்னனுக்குத் ‘தசரதன்’ என்று பெயர். ‘புத்திரன்’ என்றால் மகன். தசரதனுக்கு மகன் இராமன். மித்திரன் என்றால் நண்பன்  இராமனுக்குப் நண்பன் சுக்ரீவன். சத்துரு என்றால் பகை. சுக்ரீவனுக்குப் பகையானவன் வாலி. சத்துருவாகிய வாலியின் பத்தினி தாரை. தாரையை என்ன செய்வது? காலை வாங்க வேண்டுமாம்? இன்றைய சட்டம் இடங்கொடுக்குமா? ஆனால் அன்றைக்குக் காலை எடுத்தார்கள். விளைவு? ‘தாரை’ தரையானாள்!  காலை எடு! தேய்! அரிப்பு அடங்கும். தரையில் அடியை நன்கு தேய்த்தால் அரிப்பு அடங்கும்”

    இதுதான் மருத்துவப் புலவர் சொன்னது. இதனை ஆய்வாளர் பலரும் சிலேடைக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். அது பொருந்தாது. இது புதிர்!

    பூரி பிடிக்காத ஜெகந்நாதன் உண்டா?

    அனந்தவர்மன் சோதங்கதேவன் என்னும் சோழமன்னனால் கட்டப்பட்டது தற்போதைய ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி செகந்நாதர் ஆலயம். இங்கே பெருமாள் மூலவர் அறிவியலுக்குப் புலப்படாத பல மர்மங்களைத் தன்னகத்தே கொண்டிலங்கும் இந்தக் கோயில் கோபுர நிழலும் தஞ்சை பெரியகோயிலைப் போலவே மண்ணில் விழாது. கோயில் கொடி காற்றுக் எதிர்த்திசையில் பறக்கும். அந்தக் கோயிலில் வீற்றிருப்பவர் செகந்நாதர். அது  அமைந்திருக்கும் இடம் பூரி. ஒருமுறை வாகீச கலாநிதி ஒரு சொற்பொழிவுக்காக அங்கே சென்றிருந்தார். காலைச் சிற்றுண்டிக்காகப் பூரி செய்திருந்தார்கள். அவரைப் பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் “ஐயா, தங்களுக்குப் பூரி பிடிக்குமா?” என்று வினவ, அடுத்த நொடியே கி.வா.ஜ. “செகந்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?” என்றாராம்.

    இதுதான் சிலேடை. இந்தச் சொல்லாடலில் ‘பூரி’ என்பது ஊரையும் உணவையும் குறிக்க ஜெகநாதன் என்பது கலைமகள் ஆசிரியரையும் திருக்கோயில் மூலவரையும் குறித்தது காண்க.  இந்தச் சிலேடையின் பயன்கள் வெகு குறைவுதான். அதனாலேயே இதனை எளிமையாகப் பாடிவிடலாம் என்பது அறியாமை. சொற்களஞ்சியப் பெருக்கமும் ஆழ்ந்த புலமையும் பாடல் புனைவதில் பேராற்றலும் வடிவத்தில் தெளிவும் நோக்கில் கூர்மையும் இருந்தாலேயொழிய இந்த இலக்கிய வித்தையில் அகரம் வரும். அடுத்த எழுத்து வராது.

    செருப்பைச் சிறப்பித்த வள்ளிமுத்து

    ‘கண்ணீர்ப்பூக்கள்’ என்னும் தமது கவிதை நூலில் கவிஞர் மேத்தா செருப்பை நேர்காணல் செய்திருப்பார். வள்ளிமுத்து செருப்பை நாயோடும் ஒப்பிடுகிறார். நிலவோடும் ஒப்பிடுகிறார். இரட்டைக்கிளவி என்னும் இலக்கணத்தோடும் ஒப்பிடுகிறார்.

    “சேர்ந்திருக்கும் சீரளவைக் கொள்ளும் அடியொற்றி
    ஊர்ந்து நடப்பின் ஒலிக்குறிப்பும் உண்டாம்
    பிரித்தால் பொருள்தராத பாதணியைப் பேசு
    இரட்டைக் கிளவிதான் என்று”

    செருப்பு இணையானது. இரட்டைக் கிளவி இரட்டையாகவே வரும். அடுக்குத் தொடர்போல மூன்றாக நான்காக அமையாது. குறுகுறு மொறுமொறு என்பனபோல அளவோடு அமையும். இணை செருப்புக்கள் ஒரே அளவாகவே அமையும். இரட்டைக் கிளவி செய்யுளடிக்குரியது. செருப்பு பாதத்திற்குரியது. இரட்டைக்கிளவி குறிப்புப் பொருளைத் தரும். நடக்கிறபோது செருப்பு ‘கீரீச்’ ஒலி எழுப்புவது உண்டு. இரட்டைக் கிளவியைப் பிரித்தால் பொருள் தராது. ஒற்றைச் செருப்பை வைத்து ஒன்றும் செய்ய இயலாது.

    இந்தப் பாடலில் செருப்பின் இணை, இணையளவு, இருசொல்லாகவே வருதல், ஒலியெழுப்புதல், ஒற்றைச் செருப்பால் பயனின்மை ஆகியவை நோக்கப்பட்டிருக்கின்றன. இரட்டைக் கிளவியோடு ஒப்பிட்ட கவிஞர், அடுத்து செருப்பை முழுமதியோடு ஒப்பிடுகிறார்.

    “கோல உடல்தேயும் கூடவரும் கால்நடக்க
    நீலகண்டன் சென்னியிலும்  நின்றதுண்டாம் — நாளும்
    கறைபடியும் நீர்மிதக்கும் காணவெளி நிற்கும்
    நிறைநிலவும் காலணியும் நேர்”

    செருப்பின் அழகு தேய்வதனால் குறையும் முழுநிலாவிலிருந்து தேய்பிறை தொடங்கும். செருப்போடு நாம் நடப்போம். நாம் நடக்கும்போது நிலவும் கூடவருவதுபோல் தோன்றும். ‘பிறைசூடீ’ என்று சிவனுக்குப் பெயர். கண்ணிடந்தப்ப கண்ணப்பன் சிவலிங்கத்தின் மீது தன் செருப்பணிந்த காலை வைத்தார். நிலவில் முயலுண்டு. செருப்பில் கறையுண்டு. நீர்நிலைகளில் நிலவு தோன்றும். காதலர்கள் அதனைக் கையில் பிடித்து விளையாடுவார்கள். செருப்பு நீரில் மூழ்காது. மிதக்கும். செருப்பு இல்லத்தின் வெளியே கிடக்கும். நிலவும் வான் வெளியில் திரியும்.

    இந்தப் பாட்டில் செருப்பு தேய்தல், அடியொடு நடத்தல், கண்ணப்பன் செருப்பு, கறையும் அழுக்கும் படிதல், தோலிலே ஆனதால் நீரிலே மிதத்தல், வீட்டுக்கு வெளியில் ஆதரவின்றிக் கிடத்தல் என்பனவற்றைக் கவிஞர் நோக்கியிருக்கிறார். தொடர்ந்து நாயோடு செருப்பினை ஒப்பிட்டு இப்படி எழுதுகிறார்.

    “கட்டிவைத்த வாரணியும் காப்பவர் தாள்பணியும்
    எட்டுமட்டும் ஊர்சுற்றி வீடேகும் – ஒட்டி
    உறவாடார் கால்கடிக்கும், ஒப்பென்றே சொன்னேன்
    சிறப்புடன் நாயும் செருப்பு”

    செருப்பில் வார் உண்டு. நாய் கழுத்தில் வார் அணியும். அணிந்தவர்  தாளில் அடங்கிக் கிடக்கும். புரப்பவர் கண்டால் .வாலைச்சுருட்டிப் படுத்துக் கொள்ளும். செருப்பு, கால் செல்லும் வழியெல்லாம் சென்று வீடு திரும்பும். நாயும் ஊரெல்லாம் சுற்றி வீடு திரும்பும். புதுசெருப்பு கடிக்கும். அறியாதாரை நாய் கடிக்கும்.”

    கூந்தலைப் பாடிய கவிஞர்

    தமிழிலக்கியத்தில் நான் அறிந்தவரை ‘‘மயிர்நீப்பின்’ என்ற குறட்பாவிலும் ‘குஞ்சியழகும்’ எனத் தொடங்கும் நாலடியார் பாடலிலுந்தான் ஆண்களுக்கான தலைமயிர் பாடுபொருளாகியிருக்கிறது. அதனைக் கூடப் பால்பிரித்துப் பார்க்கக் கூடாது என்பர். அதனை ஏற்றால், எல்லா இடங்களிலும் தோகையரின் கூந்தலே பாடுபொருளாகியிருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும். கூந்தலுக்கு ‘ஐம்பால்’ என்பது  இலக்கிய வழக்கு. முடி, கொண்டை, குழல், பணிச்சை, சுருள் என ஐந்துவகையாக அள்ளி முடிவதால் அதற்கு அத்தனைப் பெயர். இன்னொரு வகையாகவும் கவிஞர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். கருமை, மென்மை, திரட்சி, நீளம், நெளிவு என்னும் ஐந்து பண்புகள் இருந்ததால் ஐம்பால் என்றும் அழைத்தார்கள் என்பாரும் உண்டு. எது எப்படியாயினும் இந்த அனுமானங்கள் எல்லாம் தற்காலத்தில் காட்டலாகாப் பொருள்! கழிந்ததற்கு இரங்கலே!.

    கூந்தலும் சிலந்தியும்

    இந்தக் கூந்தலைச் சிலந்தியோடும் முல்லையோடும் ஒப்பிடுகிறார் கவிஞர்.

    “நேருச்சி மேலெடுக்கும் நீள் பின்னல் கொள்வதுண்டாம்!
    சீரெழிலால் பூச்சிக்கும் நூல் சேர்க்கும்! தேர்ந்திடுவீர்!
    காலெட்டும் கண்வளர்ப்பார் ஒட்டடையும் வன்சிலந்தி
    கோலப்பெண் கூந்தலொப்பாய்க் கொண்டு”

    என்னும் பாட்டில் சிலந்தியோடு ஒப்பிடுவதைக் காணலாம். கூந்தலில் உச்சியில் வகிடு எடுப்பர். சிலந்தி வீட்டின் உச்சியில் வலை பின்னும். பின்னல் ஜடை உண்டு. சிலந்தி வலையில் பின்னல்கள் உண்டு. நூலால் கட்டப்பட்ட பூக்களைக் கூந்தலில் சூடுவர். சிலந்தி வலையில் பூச்சிகள் சிக்கிக் கொள்ளும். கூந்தல் அடிப்பாதம் வரை நீளும். எட்டுக்கால்கள் உண்டு சிலந்திக்கு! கூந்தலில் ஈரும் பேனும் ஒட்டும் அடையும். சிலந்திவலையால் ஒட்டடை பெருகும். இப்போது அந்தக் கூந்தலை முல்லையோடு ஒப்பிடுகிறார்.

    கூந்தலும் முல்லையும்

    “வெட்ட முளைத்தலால் மொட்டை எடுத்தலால்
    கட்டி முடித்தலால் கொட்டி உதிர்தலால்
    பின்னிப் படர்தலால் பெண்கூந்தல் முல்லையுடன்
    ஒன்றெனவே ஊரோர்க்கு உணர்த்து”

    “கூந்தல் வெட்ட வெட்ட வளரும். முல்லைக்கொடி வெட்ட வெட்ட வளரும். கூந்தலை மொட்டையடிப்பர். மொட்டுக்களைக் கட்டி முடிப்பார்கள். கூந்தலைக் கட்டி முடிப்பார்கள். முல்லைச் சரத்தைக் கட்டி முடிப்பார்கள். கொய்யாத பூக்கள் உதிரும். கூந்தல் கொட்டுவதும் உண்டு. காற்றில் முல்லை படர்ந்தாடும். மகளிர் கூந்தல் காற்றில் ஆடும்.

    வள்ளிமுத்து நோக்கும் காளமேகத்தின் நோக்கும்

    கூந்தலை இருவேறு பொருள்களுடன் ஒப்பிடுகிறபோது கூந்தலைப் பற்றிய ஆழமான பார்வை கவிஞனுக்கு இருந்திருக்கிறது. வகிடு எடுத்தல், பின்னல் ஜடை, பூக்களைக் கூந்தலில் சூடுதல், அடிப்பாதம் வரை நீளும். கூந்தலில் ஈரும் பேனும் ஒட்டும் அடைதல், வெட்ட வளரும். கட்டி முடித்த கூந்தலை மொட்டையடித்தல், உதிர்தல், காற்றில் ஆடுதல் என்னும் கூந்தலின் அத்தனை அழகியல் பரிமாணங்களையும் கவிஞர் நோக்கியிருக்கிறார்.

    இவற்றுள் முதலில் காட்டிய மூன்று பாடல்களில் பாராட்டுக்குரியது. செருப்பின் அத்தனைப் பரிமாணங்களையும் உற்றுத் தொகுத்து அவற்றை மூன்று பொருள்களோடு ஒப்பிட்டுக் காட்டியிருப்பதுதான். பிந்தைய இரண்டு பாடல்களில் கூந்தலின் தோற்றம், வினை உள்ளிட்ட அத்தனைப் பரிமாணங்களையும் உற்றுத் தொகுத்து அவற்றை வேறு இரண்டு பொருள்களோடு ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார். இதுதான் மரபின் தாக்கம் அல்லது வெளிப்பாடு! கிளியை வானவில்லோடும் வெற்றிலையோடும் குதிரையைப் பாசியோடும் மத்தளத்தோடும் கோழியை மண்புழுவோடும் பெண்ணோடும் சிவனைத் தேங்காயோடும் விளக்குமாற்றோடும் ஆற்றோடும் சிலேடித்திருக்கிறார் வள்ளிமுத்து.

    காளமேகம் பாடிய பரத்தையும் பாம்பும்

    இது எப்படி மரபாகும்? காளமேகம் என்ன செய்திருக்கிறார் என்றால் வேசியின் பல்வேறு சாகசங்களை உற்று நோக்கித் தொகுத்து அவற்றைப் பனை, தென்னை மற்றும் வெற்றிலையோடு ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார். அவற்றை விரித்தால் பெருகும். பரத்தையரைப் பல்வகைப் பொருளோடு ஒப்பிட்டுப் பாடியதைப் போலவே காளமேகம் பாம்பையும் பல்வகைப் பொருட்களோடு ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார்.

    “நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
    வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது”

    எனப் பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும் சிலேடை கண்டிருக்கிறார்.

    “ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
    மூடித் திறக்கில் முகம் காட்டும்  —  ஓடி மண்டை
    பற்றிற் பரபரெனும் பாரில் பிண்ணாக்கும் உண்டாம்”

    எனப் பாம்புக்கும் எள்ளிற்கும் பொருத்தம் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.

    “பெரிய விடமே சேரும் பித்தர் முடியேறும்
    அரியுண்ணும் உப்புமேலாடும் – எரிகுணமாம்”

    என்னும் வரிகளில் பாம்பின் விடத்திற்கும் வாழைப்பழத்தின் சிறப்புக்கும் ஒப்புமைக் கண்டிருக்கிறார்.

    மேற்கண்ட மூன்று பாடற்பகுதிகளிலிருந்து பாம்பைப் பற்றிய காளமேகத்தின் உற்று நோக்கல் மிகத் தெளிவாகும். படைப்புக்கு அடிப்படையே உற்றுநோக்கலே. சாதாரண பொருளைச் சாதாரணமானவன் பார்ப்பதற்கும் படைப்பாளன் அதிலும் கவிஞன் பார்ப்பதற்குமான வேறுபாடே கவிதைக்கான மூலம். விடமிருக்கும், தோலுரிக்கும், சிவன் முடிமீது இருக்கும், பல்பட்டால் கடிபட்டவன் பிழைப்பதரிது, ஆடும், குடத்துக்குள் சென்றுவிடும், ஆடும் போது இரையும், குடத்தைத் திறந்தால் சீறி எழுந்து முகம் காட்டும்,  கடித்தால் மண்டை எரியும், பிளவுபட்ட நாக்கு, காற்றை உண்ணும், உப்பும், மேல்நோக்கியாடும் எனப் படமெடுக்கும் பாம்பைப் படம்பிடித்துக் காட்டுவது காளமேகத்திற்குக் கைவந்த கலை. அந்தக் கலை கரடி குளத்தாருக்கும் வந்திருக்கிறது என்பதுதான் கட்டுரையின் சாரம்!

    இந்தக் கட்டுரை திறனாய்வுக் கட்டுரையன்று, கவிதை அனுபவத்தின் களிப்பான வெளிப்பாடு. சிலேடை வேடிக்கையானது என்பதாலேயே சிலேடை பாடுவதும் வேடிக்கையானது என்று பொருளன்று. படைப்பாளரின் வித்தகம் அனைத்தும் வெளிப்படும் பாட்டுத்தளம். வித்தகம் இல்லாதார் இதனைப் படைக்க முயலலாம். வெற்றி பெறுவது அவ்வளவு எளிதன்று. இந்தப் படைப்பாற்றல் எல்லாருக்கும் கைவராது. வள்ளிமுத்துக்கு வந்திருக்கிறது. செந்தமிழ்த்தாயின் புன்னகையில் வள்ளிமுத்து சிலேடைக்கும் காப்புரிமை உண்டு! ‘கரடி குளத்தில் ஒரு காளமேகம்’ என்பது மோனைத் தொடரன்று’ என்பது ஓரளவு புரியக் கூடும்!

     

    சிலேடைக்குச் சிக்கெடுத்த பேச்சிமுத்து வள்ளிமுத்து

    ‘நீரால் நிரம்பும் பல குளங்களுக்கு நடுவே தான் பிறந்த கரடி குளத்தைச் சீரால் நிரப்பியவர் இவர்! கழுகுமலை முருகன் மீது காவடிச் சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியார் இவருக்கு அடுத்த  ஊர்க்காரர்!

    தானாகத் தமிழ் படித்துத் தேனாகக் கவிபாடுபவர். ‘நகுமோமு’ ஆலாபனை பாடி முடித்த களைப்பு நீங்க ‘என்ன கவி பாடினாலும்’ எனத் தொடங்குவாரே மதுரை சோமு, அவர் போலக், ‘காக்கைக்குத் தூது’ விட்ட களைப்பு நீங்கப் பாடிய சிலேடைகள் பல.

    ‘தெள்ளுதமிழில் இசைத்தேனைப் பிழிந்தெடுத்துத் தின்னும் தமிழ் மறவர் கூட்ட’த்தின் தென்திசைத் தளபதி! வகுப்பறைகளில் பாடநூற்பகுதிகளோடு பண்பாட்டுக் கூறுகளையும் பக்குவமாகப் பந்திவைப்பவர்.

    கவிதை மாதிரி எழுதிக் கொண்டு ‘கவிஞர்’ எனத் தம்மைக் காட்டி என்னை நடுங்க வைத்தவர் நடுவே சித்திரக் கவிதைகளால் ஒத்தடம் கொடுத்தவர். இந்தச் சிலேடைகள் இவரது குடியிருப்பு முகவரி அன்று. பாடிவீட்டுத் தற்காலிக முகவரி. தமிழ்க்கவிதை உலகம் தனது நம்பிக்கை வலையை விரித்தபோது சிக்கிய சுறா மீன்கள் சிலவற்றில் இவரும் ஒருவர்! மரபு என்பது யாப்பு மட்டுமன்று என்னும் உண்மையை இவருடைய கவிதைகளும் இவைபோன்ற சிலேடைகளும் புரிய வைக்கக்கூடும். கரடிகுளத்தில் பிறந்து தாரமங்கலத்தில் பணியாற்றும் இவருக்குக் கனவுகளில் நம்பிக்கை உண்டு! ஆம்! கவிதைக் கனவுகள்! கனவு மெய்ப்பட வேண்டும்!

    (தொடரும்…)

    Share