கதையும் மொழிதலும் – 8 பி.எஸ். ராமையாவின் ‘பணம் பிழைத்தது’

0

முனைவர் ம. இராமச்சந்திரன்

சி.சு.செல்லப்பாவால் கொண்டாடப்பட்ட சிறுகதை எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. இவரின் சிறுகதைகளை ஆய்வு செய்து ‘பி.எஸ்.ராமையாவின் சிறுகதை பாணி’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறார். ‘மணிக்கொடி முதல்வர்கள்’ என்ற நூலிலும் பி.எஸ். ராமையாவின் சிறுகதைப் போக்குகளைப் பற்றி விரிவாக விவாதித்துள்ளார். அந்த அளவிற்கு பி.எஸ். ராமையாவின் சிறுகதைப் பங்களிப்பு வியக்கத்தக்கது. மணிக்கொடி இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுச் சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்டவர் பி.எஸ். ராமையா. தமிழ்ச் சிறுகதையின் தொடக்கக்கால ஆளுமைகளில் மிகவும் போற்றத்தக்கவராகப் பலரால் கருதப்பட்டவர் இவர். அதே நேரத்தில் இவரின் கதைகள் காலத்தைக் கடந்து நிற்கும்  ஆற்றலோ, நவீனத்துவமோ இல்லை என்று விமர்சிக்கப்பட்டவரும் இவரே. இவ்வாறு பி.எஸ்.ராமையாவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிடைத்து வந்தன. ஆதரவாளர்களில் முக்கியமானவராகச் சி. சு. செல்லப்பாவும் எதிர்க் கருத்துக் கொண்டவர்களில்  முக்கியமானவராகக் க.நா.சு.வும் விளங்கினார்கள்.

மணிக்கொடி இதழ் காந்தியச் சிந்தனையைப் பின்புலமாகக் கொண்டு வெளிவந்தது. அதே போல தமிழ்ச் சிறுகதை எப்படி அமையவேண்டும் என்ற கோட்பாட்டு வரையறையோடு நவீனச் சிறுகதைகளை வரவேற்றது. தமிழக மரபில் பரவலாகப் பேசப்பட்ட, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடுநிலையான வாழ்க்கைச் சூழலை மையமாகக் கொண்ட கதைகள் (மணிக்கொடி எழுத்தாளர்கள்) இவர்களால் எழுதப்பட்டன. பழமைக்கும் புதுமைக்குமான போராட்டத்தில் பழமையின் சிறப்புகளை வெளிப்படுத்தும், போற்றும் வகையில் இவர்களின் கதையமைப்பும் கதைக்கருவும் இருந்தன. இதே காலகட்டத்தில் நவீனத்துவத்தின் வரவும் நகர வாழ்க்கையின் போதாமையும் சிக்கல்களும் பரவலாகக் கதையாக்கப்பட்டன. இவ்வாறு இரண்டு

போக்குகளுக்கும் ஆதரவும் மறுப்பும் இருந்து கொண்டே வந்தன. பி.எஸ்.ராமையா மரபான வாழ்வியல் கூறுகளையும் மக்கள் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதைகளை எழுதினார். இவரின் கதைகள் அக்காலத்தில் பரவலாகப் படிக்கப்பட்டன. பாராட்டப்பட்டன. இவரின் முக்கியமான கதைகளில் ஒன்று ‘பணம் பிழைத்தது’.

பிழைப்புத் தேடி சென்னைக்குச் சென்ற முதலியாரின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. முதலியார் வியாபாரத்திற்காகச் சென்னைக்கு இடம்பெயர்ந்து பெரும் பணக்காரராக மாறுகிறார். முப்பது ஆண்டு வியாபாரத்தில் பெரும் செல்வந்தராக மாறுகிறார். முதுமையின் அறிகுறிகள் அவ்வப்போது தலை காட்ட தொடங்கின. ஒரு கட்டத்தில் இவரின் உழைப்பும் சுறுசுறுப்பும் தேக்கம் அடைகின்றன. காலத்தின் கைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள எண்ணுகிறார். ஆனால் முதுமையும் நோயும் இவரை ஆட்கொள்கின்றன. தொழிலில் ஏற்படும் மன நெருக்கடிகளும் உடலின் முதுமையும் இவரை மனதளவிலும் முதுமை ஆக்குகின்றன. முப்பது ஆண்டு கால வாழ்க்கையில் இத்தகைய நெருக்கடிகளைச் சந்தித்தவர் இல்லை முதலியார்.

ஒருகட்டத்தில் உடலும் மனமும் ஒத்துழைக்காத அளவிற்கு நோய் தீவிரமடைந்தது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொழிலிலிருந்து சற்று விலகி ஓய்வு எடுக்குமாறு கூறுகின்றனர். பலரின் ஆலோசனைகளைக் கேட்ட பிறகு வழக்கம்போல அவற்றைப் பின்பற்றாமல் தனது போக்கில் முடிவெடுக்கிறார். முப்பது ஆண்டுகால உழைப்பில் சேர்த்த சொத்துக்களைத் தனது சொந்த கிராமத்திற்குச் சென்று பராமரிக்கலாம் என்று முடிவெடுக்கிறார். ஆனால் சொந்த கிராமத்திற்குச் சென்ற சில நாட்களிலேயே அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது.

முப்பது ஆண்டுகளாகச் சேர்த்து வைத்த நிலபுலன்களைப் பார்த்துத் தனது வளர்ச்சியின் வேகத்தை எண்ணுகிறார். இவற்றையெல்லாம் முறையாக எதிர்காலத்தில் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் தேவையான செயல்களைச் செய்ய எண்ணுகிறார். ஆனால் இவரின் உடல் நிலை மோசமடைகிறது. மருத்துவர்களின் வருகையும் மருத்துவமும் கிராமத்திலேயே நடைபெறுகின்றன. என்றாலும் சில நாட்கள் உடல்நிலை தேறுவதாக இருந்தாலும் பிறகு மீண்டும் மோசமடைந்து விடுகிறது. ஒரு கட்டத்தில் முதலியாரின் மனமும் மரணத்தை நோக்கியே எண்ணுகிறது. அப்பொழுது தெரு நாயின் ஊளைச் சத்தம் வீட்டில் இருப்பவர்களை அச்சம் கொள்ள செய்கின்றது. உறவினர்கள் நாயைக் கல்லெறிந்து விரட்டும் ஓசை கேட்கிறது. முதலியார் படுக்கையில் படுத்தபடியே நடப்பவை எல்லாவற்றையும் உற்று நோக்குகிறார். தனக்கு மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வீட்டின் வாசலில் எமன் வந்து நிற்கிறான். எப்படியாவது அவனிடமிருந்து தப்பிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் கிடைத்தால் தனது சொத்துக்களையெல்லாம் முறைப்படுத்தி விடலாம் என்று எண்ணிக்கொண்டே இருக்கிறார். திடீரென்று அவருக்கு யோசனை தோன்றுகிறது. தனக்குப் பதிலாக யாராவது மரணத்தைத் தழுவிக் கொண்டால் அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக எண்ணுகிறார்.

இதனைச் செயல்படுத்துவதற்குத் தனது செக் புக்கை எடுத்து வருமாறு கூறுகிறார். அந்தநேரத்தில் கிராமத்தில் ஒரே கலவரமாக இருக்கிறது. வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் ஓடிச்சென்று என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து வந்தவர்கள் பேசிக்கொண்ட பேச்சொலி முதலியாரின் காதில் விழுகிறது. பக்கத்துத் தெருவில் இருக்கக்கூடிய ஒருவரின் வீட்டிற்குத் திருடன் வந்து, வீட்டில் உள்ள நகைகளை எல்லாம் திருடிச் சென்றுவிட்டான். அப்படி செல்லும்போது அருகில் இருப்பவர்கள் அவர்களைத் துரத்திச் சென்றனர். துரத்தி சென்ற ஒருவனுக்கும் திருடனுக்கும் ஏற்பட்ட மோதலில் திருடனால் குத்தப்பட்டு அதே இடத்தில் இறந்து விட்டான் அவனைத் துரத்தி சென்றவன் என்ற செய்தியும் இறந்தவன் மிகவும் நல்லவன் என்றும் இப்பொழுதுதான் அவனுக்குத் திருமணம் ஆகியிருக்கிறது என்றும் அவர்களின் பேச்சிலிருந்து முதலியார் அறிந்துகொள்கிறார்.

இதனைக் கேட்ட உடனே முதலியாருக்கு உடலில் புதுத்தெம்பு கூடுகிறது. கண்களைத் திறக்க முயற்சிக்கிறார். எளிமையாகத் திறக்க முடிகிறது. கை கால்களுக்கு ஒரு வலிமை வந்தது போல் உணர்கிறார். அவரது மனம் சொல்லியது, ‘எமன் எனது வீட்டிற்கு வரவில்லை. பக்கத்து வீட்டிற்குத் தான் வந்திருக்கிறான். இப்பொழுது எனக்கு மரணமில்லை’ என்று எண்ணுகிறார். உடனே தனது உறவினரிடம் எழுதிக் கொடுத்த செக்கைக் ‘கிழித்துப் போடு’ என்று கூறுகிறார். உறவினர் ‘செக் புக்கில் எதுவுமே எழுதவில்லை, எதற்காகக் கிழித்துப் போட வேண்டும்’ என்று கூறுகிறார். இதனைக் கேட்டவுடன் முதலியாருக்கு மனதிலே தோன்றிய எண்ணமே பணம் பிழைத்தது. அதுமட்டுமல்லாமல் தனது முப்பதாண்டுக் கால வாழ்க்கையில் முதலியார் நஷ்டம் அடையும் எந்தத் தொழிலையும் செய்ததில்லை. ஆகையால் தனக்குப் பதிலாக இரண்டு லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியது, தன் வீட்டிற்கு எமன் வரவில்லை என்பதால் அத்தொகையை வழங்க வேண்டாம் என்ற எண்ணம் இங்கே முதலியாரின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

கதையைப் படிக்கும் வாசகர்களுக்கு முதலியார் அந்த இரண்டு லட்ச ரூபாயை இறந்தவனுக்குக் கொடுக்கப்போவதுபோல ஒரு எண்ண உணர்வைத் தோற்றுவித்து விடுகிறார் பி.எஸ்.ராமையா. இறந்தவனின் குடும்ப வாழ்க்கையும் அவனது துன்பங்களும் இவரால் துடைக்கப்பட்டுவிடும் என்ற ஒரு உணர்வைக் கதையின் ஊடாக எடுத்துச் சென்றாலும் இறுதியில் முதலியாரின் மனப்போக்குத் தனது பணத்தைப் பாதுகாப்பதில் இருப்பதைக் கதை ஆசிரியர் பதிவு செய்யும்போது வாசகனுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்ற உணர்வையும் சிந்தனைச் சிக்கலையும் ஏற்படுத்தி விடுகிறார். இங்கே கதை தொடர்ந்து சிந்திப்பதற்கான சூழலை அமைத்துத் தருகிறது. அந்தவகையில் இக்கதையின் முக்கியத்துவம் வாசகர் மனதில் சிறு பாதிப்பை ஏற்படுத்தி செல்கிறது.

மரணத்திற்கும் வாழ்க்கைக்குமான போராட்டத்தில் மனித மனமானது தனது கடந்த கால வாழ்க்கையை எப்படி எல்லாம் அசை போடுகிறது என்பதையும் இவ்வளவு காலத்தில் கட்டமைத்த ஒரு பொருளாதார வாழ்க்கை சிதையாமல் அதைப் பாதுகாப்பதற்கான எண்ண ஓட்டங்களும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏற்படும் எதார்த்தமான சூழல் தான். அத்தகைய ஒரு எதார்த்த சூழலை இக்கதையில் பதிவு செய்திருக்கிறார் பி.எஸ்.ராமையா. ஆனால் கதையின் முடிவானது மனித இயல்பை லட்சியவாத போக்கிற்குக் கொண்டு செல்லாமல் எதார்த்த நிலைக்கு ஏற்றவகையில் முடித்திருப்பது சிறப்பானதாக அமைந்துள்ளது. பி.எஸ்.ராமையா இக்கதையை முடிக்கும்போது முதலியாரை ஒரு தியாகச் செம்மலாக மாற்றியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் ஒரு வியாபாரியின் என்ன போக்கிற்கு ஏற்ப இக்கதையை நிறைவு செய்திருப்பது கதாபாத்திரங்களின் செயல்பாடுகளில் கதையாசிரியர் தலையிடக்கூடாது என்கிற செயல்பாடு இங்கே சிந்திக்கத்தக்கது.

கதையின் கட்டமைப்பு மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. வாசகனை எந்த இடத்திலும் விலகிச் செல்லாமல் கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் சூழலோடு கதை நகர்ந்து செல்கிறது. மரபான சிந்தனைப் போக்கில் வாசகனைக் கதையோடு கட்டிப்போடும் ஆற்றல் இக்கதைக்கு இருக்கிறது. இவரின் மொழிநடையும் வாசகனுக்கு எந்த வாசிப்புத் தடையும் இல்லாமல் நீரோடையாகச் செல்வதை உணர முடிகிறது.

பி.எஸ்.ராமையா மணிக்கொடியில்  அதிகமான கதைகளை எழுதியிருக்கிறார். ஆனால் இவரின் பல கதைகள் இன்றைய சிறுகதை வாசிப்பிற்கு ஏற்றதாக அமையவில்லை என்றாலும் சிறுகதை வளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் அக்கதைகளின் இருப்புக் காத்திரமான பங்களிப்பைச் செய்திருப்பதை மறுப்பதற்கில்லை. ஒரு காலகட்டத்தின் சிறுகதை வெளிப்பாட்டுப் பண்பை அறிந்து கொள்ள முயலும்போது பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப் பங்களிப்புத் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *