கதையும் மொழிதலும் – 6 கு.ப.ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’
முனைவர் ம. இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
ramachandran78.blogspot.com
9360623276
“அணுக்களின் ஆக்ரோஷ செயல்பாட்டில் வினையாற்றும் உடலங்களின் இயக்கமே காமம். ஏற்றுக்கொள்ளுதலுக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையிலும் நடைமுறைக்கும் ஒவ்வாமைக்கும் இடையிலும் ஏற்படுகின்ற உணர்வு இடைவெளியில் மொழி ஆளுமை செலுத்துகிறது. சொற்களால் கட்டமைக்கப்படும் எண்ணங்கள் ஆண் பெண் உறவு நிலையில் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.”
சி.சு.செல்லப்பா, க.நா.சு ஆகியோரால் பாராட்டப்பட்ட சிறுகதை எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன். கு.ப.ரா.வும் ந.பிச்சமூர்த்தியும் நெருங்கிய நண்பர்கள். மணிக்கொடி கால எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான தனித்தன்மையில் இயங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தனர். சிறுகதை அமைப்பு அக்காலத்தில் முக்கிய இலக்கிய வடிவமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த வகையில் ஆண் பெண் உறவுச் சிக்கலை மையமாக வைத்துக் கதைகள் எழுதி, வியப்பில் ஆழ்த்தியவர் கு.ப.ராஜகோபாலன்.
மனித வாழ்க்கையில் அடிநாதமாக ஒலித்துக்கொண்டே இருப்பது காமமும் காதலும். இதன் விசையிலேயே அனைத்துச் சமூகப் பண்பாட்டு அரசியல் பொருளாதாரக் கூறுகள் பின்னப்படுகின்றன. மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தருவது பெண் சார்ந்த இல்லற வாழ்க்கை. குடும்பம் என்ற நிறுவனம் மனிதர்களை ஒரு கட்டுக்கோப்பில் இயங்கச் செய்து சமூக வினையாற்றுகிறது. அந்தக் குடும்ப அமைப்பில் ஆண் பெண் சார்ந்த உறவுச் சிக்கல்கள் பேசாப் பொருளாக மனத்தின் ஆழத்தில் பொதிந்து கிடக்கின்றன. அந்த மறைபொருளை விவாதப் பொருளாகத் தனது கதைகள் மூலம் கொண்டு வந்தவர் கு.ப.ராஜகோபாலன்.
இவரின் பெரும்பாலான கதைகள், இத்தகைய உள்ளடக்கம் கொண்டவையாகவே இருக்கின்றன. இவரின் கதைக் களமானது, ஆண் பெண் உறவுச் சிக்கலை மையமாகக் கொண்டதாக இருக்கிறது. இந்தச் சிக்கல், இரண்டு சமூகக் கட்டமைப்புகளைக் கொண்ட நமது சமூகத்தில் எவ்வாறு உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை இவரின் கதைகள் மூலமாக உணர முடிகிறது. கிராமம் சார்ந்த பழைய பண்பாட்டுச் சமூக விழுமியங்களுக்கும் இன்றைய அறிவொளி கால முற்போக்கு எண்ணங்களுக்கும் இடையில் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நடைமுறை யதார்த்தங்களை இவரின் பல கதைகள் எடுத்துரைக்கின்றன. அத்தகைய கதைகளில் ஒன்றே கனகாம்பரம்.
புதிதாகத் திருமணமாகி வந்திருக்கக்கூடிய தம்பதிகள் வாழ்ந்து வரும் சூழலில், கணவன் படித்தவனாக இருக்கிறான். இன்றைய நவீன நாகரிகத் தன்மையுடன் தன் மனைவி நடந்துகொள்ள வேண்டும் என்று பல நடைமுறைகளை அவளுக்குக் கற்றுத் தருகிறான். கிராமத்தில் பண்ணையார் மகளாக வளர்ந்து வந்த அவளுக்கு நாகரிகச் சூழலைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. குறிப்பாகத் தன் கணவனின் விருப்பத்திற்கு மற்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வு இருக்கிறது. எனவே கணவனின் நடத்தை அறிவுரைகளைக் கவனமாகக் கடைப்பிடிக்க எண்ணுகிறாள். கணவன் படித்தவன் நகர வாழ்க்கையில் இருக்கக் கூடியவன் அவனைத் தேடி நண்பர்களும் வேண்டியவர்களும் வருவார்கள், நாம் நலம் விசாரித்து அவர்களிடம் முறையாகப் பேச வேண்டும், கிராமத்துப் பெண் போல கூச்சப்படக் கூடாது என்பன போன்ற வழிகாட்டல்களை, அறிவுரைகளை அவளின் மனது கணவனின் எண்ணங்களை நிறைவுசெய்யும் வகையில் இருக்கவேண்டும் என்று கவனமாகச் செயல்படுகிறது.
ஒருநாள் கணவரின் நண்பன், அவனைத் தேடி வீட்டிற்கு வந்துவிட்டான். அடுப்படியில் வேலையாக இருந்த இவள், நண்பரை வரவேற்று மிகவும் பழக்கப்பட்ட அறிமுகமான நபரைப் போல பேசுகிறாள். அது அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதே நேரத்தில் அவள் ‘வீட்டிற்குள் வாங்க’, ‘அவர் சற்று நேரத்தில் வந்துவிடுவார்’ என்றும் ‘வந்து உட்காருங்கள்’ என்றும் கூறுகிறாள். இது அவனுக்கு மேலும் வியப்பைத் தருகிறது. ‘எந்தத் தைரியத்தில் கணவன் இல்லாத நேரத்தில் தன்னை உள்ளே வந்து உட்காருங்கள்’ என்று கூறுகிறாள் எனத் தயங்கி பிறகு வருவதாகக் கூறிச் சென்று விடுகிறான். அவளுக்கு மனநிறைவு. கணவனின் நண்பரை நாகரிகமாக வரவேற்றோம், இதனைக் கேட்டால் கணவன் மகிழ்ச்சி அடைவார் என்று எண்ணி அடுப்படியில் விட்டு வந்த வேலையில் மும்முரமானாள்.
கணவன் வந்ததும் நடந்தவற்றை விரிவாகச் சொன்னாள். அவன் யாராக இருக்கும் என்ற குழப்பம் அவனுக்கு. அதுமட்டுமல்ல, வந்தது யார் என்று தனக்குத் தெரியவில்லை. இந்த நிலையில் அவனை வீட்டிற்குள் அழைத்து உட்காரச் சொல்லி இருக்கிறாள் என்ற மன நெருடல் அவனை நிலைகுலைய செய்துவிட்டது. என்னதான் இருந்தாலும் என் நண்பனாகவே இருந்தாலும் வீட்டில் தான் இல்லாத போது வேறு ஒருவனை உள்ளே அழைப்பது அவனது மனத்தளவில் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. தனது செயல்பாடுகளைக் கேட்டு தன்னைப் பாராட்டுவார் என்று எண்ணிய அவளுக்குச் சற்று மனக்குறையாக இருந்தது. அவனும் நடந்தவற்றைப் பற்றிப் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. கனகாம்பரப்பூ வைத்துக்கொண்டு அதனை நூலில் கட்டுவதற்காகச் செயல்பட்டுக் கொண்டிருந்த அவளிடம் ‘இதை தலையில் யார் சூட்டுவார்கள்?’ என்று கூறுகிறான்.
அவளும் மற்றவர்கள் தலையில் கொத்துக்கொத்தாக வைத்துக்கொண்டு வருகிறார்கள் என்று கூறுகிறாள். சினிமா நடிகைகள் கூட தலை முழுவதும் இதைத்தான் சூடிக்கொள்வதையும் சுட்டிக் காட்டினாள். பேச்சின் போக்கில் அவன் ‘முன்ன பின்ன தெரியாத நபர்களை, யாராவது வீட்டிற்குள் அழைப்பார்களா’ என்று நேற்று நடந்த நிகழ்வின் சிக்கலைக் கூறிவிட்டான். இப்போது அவளுக்குப் புரிந்துவிட்டது கணவன் முக மாறுபாட்டுக்கு இது தான் காரணம் என்று. தன் மேல் நம்பிக்கை இல்லாமல் இப்படி அவன் கூறியதில் அவளுக்கு மிகவும் மனவருத்தம். அவனிடம் தனது கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டு சென்றுவிட்டாள்.
இவனின் நண்பன் பிறகு சந்தித்துக் கொள்ளும்போது, நண்பனின் மன உணர்வின் மூலமாக ஒரு சமூக இயக்கப் போக்கையே உளவியல் ரீதியாகப் பின்னிச் செல்கிறார் கதையாசிரியர். அவனைப் பார்க்கச் சென்று அவனது மனைவி தன்னிடம் கூறியதை எப்படிச் சொல்வது என்று அதனைச் சொன்னால் அவளுக்கு ஏதேனும் குடும்பச் சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்றும் நண்பன் சிந்திக்கிறான். ஒருவேளை நடந்ததை அவள் இவனிடம் கூறியிருக்கலாம் என்றும் யோசிக்கிறான். பிறகு வேறு வழியில்லாமல் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். அன்று வீட்டிற்கு வந்தது இவன் தான் என்றும் தன் மனைவி அவ்வாறு பேசியதும், மன நெருடலும், எப்படி இதனைப் புரிந்துகொள்வது என்ற சிக்கலும், ஆக இவர்களின் நட்பு தொடர்கிறது. அதேவேளையில் ஆசிரியர் கதையை நிறைவு செய்கிறார்.
கதையின் பின்புலம் பிராமணக் குடும்பச் சூழ்நிலையில் பின்னப்பட்டுள்ளது. ஆண்கள் வீட்டிற்குள் வந்தால் வீட்டின் உள்ளறையின் கதவு இடுக்கு வழியாகப் பார்த்துப் பேசும் நிலையில், அறிமுகம் இல்லாத ஒருவனை இவள் வீட்டிற்குள் வந்து உட்காரச் சொல்லும் துணிவும் மரபு மீறலும் இங்கே சமூகம் மாறிக்கொண்டே வருவதை உணர்த்துவதாக இருக்கிறது. என்றாலும் உபதேசங்கள் கூறினாலும் நடைமுறையில் அதனை மனம் ஏற்றுக்கொள்ள மறுப்பது, இதனால் ஏற்படும் அவநம்பிக்கை, குடும்பச் சிக்கல், ஆண்-பெண் புரிதல் என்று நுண்மையான கூறுகளைச் சற்று மேலோட்டமாகத் தொட்டுச் செல்கிறார்.
பெண் என்பவள் ஆண்களால் எப்படிப் பார்க்கக் கற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதும் இங்கே உற்று நோக்க வேண்டிய பண்பு நிலை. பெண் காமத்தின் உருவம், சதைகளின் வடிவம், இச்சையின் தூண்டுதல் என்று சமூகக் கற்பிதங்களும் பெண்வெளி மறுக்கப்பட்ட அல்லது தவிர்க்கப்பட்ட ஒரு காலக்கட்டத்தில் குடும்பச் சூழல் இங்கே நமக்கு உணர்த்தப்படுகிறது. இன்றைய காலப்போக்கில் இதனைப் படிக்கும் போது மிகச் சாதாரண ஒரு நிகழ்வாகத் தெரியும் நிலையில், இது நிகழும் தொடக்கக் காலங்களை எண்ணும்போது இக்கதை தனது முக்கியத்துவத்தைப் பெற்று நிற்கிறது.
இக்கதையில் பெண்ணைப் பயிற்றுவிப்பு நிலையில் உருவாக்கி, இத்தகைய பயிற்றுவிப்பு, ஆண் மனத்தில் எத்தகைய எதிர்வினையை உருவாக்கும் என்ற கண்ணோட்டம் வெளிப்படுகிறது. கதை முழுவதும் அவளின் சொற்களால், பாதிக்கப்படும் ஆண்கள் என்ற போக்கில் மிகுந்து நிலவுகிறது. கணவன் மனைவியின் சிக்கல், மனச்சிக்கல், இதுபோன்று பெண்கள் நடந்துகொள்ளக் கூடாது என்று கதையாசிரியர் வலியுறுத்துவதாகப் படுகிறது. பிற்போக்குத்தனத்தின் சார்பாளராகக் கு.ப.ரா இங்கே வெளிப்படுகிறார். காலமாற்றத்தால் சிதைந்து அழிந்து வருகிற குடும்பப் பெண் அடிமைத்தனத்தின் பிரதிநிதியாகத் தன்னை வரித்துக்கொண்டு ஆணின் மனச்சிக்கலை இங்கே வெளிப்படுத்தியிருக்கிறார். பயிற்றுவிப்புகள் எப்போதும் சுயச் சிந்தனையை, சுதந்திரத் தன்மையை உருவாக்கும் என்பதற்கு இக்கதை சான்றாகும். அதே நேரத்தில் இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது தவிக்கும் மனப்போக்கையும் இங்கே சிந்திக்க முடிகிறது. எளிமையான கதை. அதே வேளையில் முக்கியமான கதையும் கூட.

புதிய தகவல், நன்றி!