தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 25

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

உவமக் கோட்பாடுகளில் மரபின் தாக்கம்

முன்னுரை

ஒரு பொருளுக்குப் பல பொருட்களையும் ஒரு வினைக்குப் பலவினைகளையும் ஒரு பண்புக்குப் பல பண்புகளையும் ஒரு பயனுக்குப் பல பயன்களையும் உவமிப்பது உவமத்தின் தொடக்க நிலை. ‘நிலை’ என்றால் படைப்பாளனின் சிந்தனைப் பெருக்கும் அழகியல் உணர்ச்சியின் விரிவும் எனக் கருத வேண்டும். ‘தாமரைபோன்ற முகம்’ என்பது வளர்ந்து ‘தாமரையோ? செவ்வந்தியோ? நிலவோ?’ என்றெல்லாம் எழுதினார்கள். இவ்வாறு எழுதுவது ஏனைய உவமங்களுக்கும் பொருந்தும். இது பற்றிச் சென்ற கட்டுரைகளில் ஆராயப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக வேறு இரண்டு நிலைகளும் காணப்படுகின்றன. ஒன்று ஒரே நிகழ்வுக்குப் பல காரணங்களைக் கற்பித்து உவமமாக்குவது. இரண்டு கருத்து, கற்பனை, நிகழ்வு இவற்றின் மாறுபடுகளுக்கேற்ப ஒரு பொருளின் நிகழ்வை அதாவது எழுவாயின் வினையை இடம் மாற்றி உவமித்துக் காட்டுவது. இவை பற்றிய சில கருத்துக்கள் இந்தக் கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

அசலும் நகலும்

சில நேர்வுகளில் ஆர்வக் கோளாறு காரணமாக ஏடு கற்கும் சிலர் தாமே சில பாடல்களை எழுதி அதாவது மூலநூல் ஆசிரியர் நடையிலேயே எழுதி அவற்றையும் சுவடிகளில் இணைத்துவிடுவர். இது காலங்காலமாக நடந்துவரும் தமிழ்த்திருத்தொண்டு. இராவணன் முதல்நாள் போரில் தோல்வியுற்று வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்க’ நிலையைக் கம்பன் மிகச்சிறப்பாகப் பல பாடல்களில் பாடியிருக்கிறான். ஒரு பாடலில் சீதை சிரிப்பாளே என்று ‘நாணத்தால் சாம்புகின்றான்’ என்றும் கம்பர் எழுதுகிறார். இதுபோன்ற சூழல்களில் மனம் பறிகொடுத்த ஒருவர்,

“விடங்கொண்ட  மீனைப் போலும்
வெந்தழல் மெழுகு போலும்
படங்கொண்ட பாந்தள் வாயில்
பற்றிய தேரை போலும்
திடங்கொண்ட இராம பாணம்
செருக்களத் துற்ற போது
கடன் கொண்டான் நெஞ்சம் போலும்
கலங்கினான் இலங்கை வேந்தன்”

என்று இவராகவே ஒரு பாடலை எழுதி அதனையும் கம்பராமாயணத்தில் சேர்க்க, நம்முடைய சான்றோர்களும் அதனைக் கம்பன் பாட்டே என எண்ணியும் சொல்லியும் வந்திருக்கிறார்கள். இப்பொழுது இங்கே சொல்ல வருவது படித்தவர் எழுதிய அந்தப் பாட்டில் கூட இராவணனின் துன்பத்திற்கு ஒரே உவமம் சொல்லப்படாமல் ஒன்றுக்கு மேற்பட்ட உவமங்களைப் பந்தி வைப்பதைக் காணலாம். படைப்பாளனுக்கு மட்டுமன்று படைப்பைப் படிப்பவனுக்கும் இத்தகைய உணர்வு வந்திருக்கிறது என்பதை நோக்க வேண்டும். இதற்கு அடுத்த நிலையில்தான் ஒரே நிகழ்வுக்குப் பல காரணங்களைக் கண்டறியும் உவமச் சிறப்பைக் காணமுடிகிறது.

கதிரவன் தோற்றமும் கவிஞன் உள்ளமும்

பொருளையே உவமமாகச் சொல்லும் கவிதை மரபு தமிழில் இன்றும் தொடர்கிறது.  அத்தகைய உவமைகளில் மனிதநேய உணர்வுகளும் மானிட மதிப்புக்களும் அழகியல் வெளிப்பாடுகளும் கலந்தமைந்திருப்பது சுட்டுதற்குரியது. நிகழ்வு ஒன்று. அதற்கான காரணங்களைப் படைப்பாளன் நிரல்படுத்துகிறபோது கவிஞனின் அழகியல் உணர்வு, பன்முக நோக்கு, சமுதாயச் சிந்தனை, மனித நேயம் முதலிய அனைத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. காலைக்கதிரவன் தோற்றத்தை முடியரசன் பாடுகிறார்.

“இன்னலுறும் பிணியாளன் துயரம் தீர்க்க
இனியமொழி வழங்கவரும் நண்பன் போலத்
பன்னரிய பெருங்காதல் பிணிப்புண் டாங்கண்
பைதலுறும் மாவேழன் நிலைமை காணத்
துன்னுமிருள் செகுத்தெழுந்து கீழை வானில்
சுடர்க்கதிரோன் முகங்காட்டி விரைந்து வந்தான்”.

காப்பியத்தின் நாயகன் மாவேழன். அவனுக்கு உற்ற தோழர் பலரிருப்பினும் உயிர்த்தோழர் சிலர் களத்தில் தம் நண்பனுக்கு உற்ற துன்பத்தை அறிந்து கொள்ளத் துடித்து வருவார் போலக் கதிரவன் கீழ்த்திசையில் விரைந்து வந்ததாக உவமிக்கிறார். இதே கதிரவன் உதயத்திற்குத்,

“தினவெடுத்த திண்டோளர்  தருக்கி நின்று
செயும்போரை எதிர்நின்று காண்பான் போல
முனமடுத்த இருளென்னும் திரையை நீக்கி
முகங்காட்டிச் செங்கதிரோன் எழுந்து வந்தான்”

களக்காட்சியை நேரில் மற்றும் அருகில் காண்பதற்காகச் செங்கதிரோன் எழுந்து வந்தான் என்று பாடுகிறார்.

“ஆயிழையின் மனத்தகத்தே அடக்கி வைத்த
ஆர்வமெலாம் திரண்டுருண்டு வடிவு கொண்டு
மாயிருநீர்க் கடற்பரப்பில் உருவுகாட்டி
வருவதுபோல் செங்கதிரோன் கீழை வானில்
ஞாயிறென முகங்காட்டித் தோன்றி வந்தான்”

என்னும் வரிகளில் மனத்துள் அடக்கிவைத்த ஆர்வத்தையே உருண்டை வடிவத்தில் தேக்கிவைத்த கதிரவன் காலைப்பொழுதில் கீழ்த்திசையில் எழுந்து வந்ததாக எழுதுகிறார்.

காலைக் கதிரவன் கீழ்க்கடலில் எழுகின்ற ஒரே காட்சியை நண்பன் போல வந்தான் என்றும், போர்க்களத்தை விருப்பத்துடன் காண்பவன் போல வந்தான் என்றும், ஆர்வமே உருக்கொண்டு வந்ததைப் போல் வந்தான் எனவும் பலபட உவமத்தால் விளக்குவதையும் அவ்வுவமங்களெல்லாம் நட்பு, வீரம், உணர்ச்சி  ஆகியவற்றைச் சார்ந்து அமைந்திருப்பதையும் காணமுடிகிறது.

மழையும் வைரமுத்தும்

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில்  இயற்கையைப் பாடுவதில் பாவேந்தருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் வைரமுத்து என்பது தரவுகளால் உறுதி செய்யப்பட்ட உண்மையாகும். மழைத்துளியை வைரமுத்து அனுபவித்துப் பாடும் கவிநேர்த்தியை அவருடைய கவிதைகளில் பரக்கக் காணலாம். இங்கே மழையையும், அதன் துணைவினைகளையும் கவிதைகளில் உவமமாக்கும் அவருடைய தனித்திறன் ஆராயப்படுகிறது. போலிக்காதலுக்கு மயங்கிச் சீரழிந்த ஒரு பெண்ணின் புலம்பலில்,

“மழையூறிய காகிதமானேன்”

என்னும் உவமத்தை வைத்துக் காட்டுகிறார். மழை விழுந்து காகிதம் ஊறிவிடுமானால் சேதாரம் காகிதத்திற்கேயன்றி மழைக்கன்று. ஆணின் பசப்பலுக்குப் பெண்மை ஏமாறும் பொழுது அழிவு பெண்மைக்கன்றி ஆணுக்கன்று என்னும் உண்மையை விளக்குதற்குக் காகிதத்தை ஊறச் செய்யும் மழையின் துணைவினை ஈண்டு உவமமாக்கப்பட்டுள்ளதை அறியலாம். இதனை ‘நீரூரிய காகிதம்’ என்னாது, மழையூறிய  காகிதம் எனக் கூறியது காகிதம் நீருக்குள் விழுந்தால் அது நீரூரிய காகிதம்! கிடந்த காகிதத்தின் மேல் மழைபெய்து நனைந்தழியுமானால் அது மழையூறிய காகிதம். கிடந்த காகிதம் என்பது பெண் என்பதைக் கற்பித்துக் கொண்டால் நுட்பம் புரியும்.

மழைபெய்த களிமண் நிலமும் மனித மனமும்

மழையூறிய காகிதத்தைத் தடமாறிய பெண்ணுக்கு உவமமாக்கிய வைரமுத்து அதே மழைபெய்த களிமண் நிலத்தை மனிதனின் மனத்துக்கு உவமமாக்கியிருக்கிறார்.

“மழைக்கு வெளியே நின்று
மழையை ரசியுங்கள்
மழை பெய்த களிமண் நிலமாய்
மனம் எப்போதும் நெகிழ்ந்திருக்கட்டும்”

மழை பெய்து நனைத்த இடங்களாக காகிதத்தையும், களிமண்ணையும் கொண்டு, சீரழிந்த பெண்ணுக்கும் சிந்தையின் நெகிழ்ச்சிக்கும் உவமமாக்கிக் கொள்கிறார். மழைபெய்த ‘செம்புலத்தைச்’ சங்க இலக்கியம் காட்டுகிறது. மழைபெய்த களிமண் நிலத்தைப் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ காட்டுகிறது. முன்னது காதல் கலப்பிற்கு உவமை. பின்னது மாந்தர் மனம் இருக்க வேண்டிய நிலைக்கு உவமை. மழைபெய்து கலக்கும் மணலை விடச், செம்மண்ணை விட, வேறு மண்வகையை விட இளகி நெகிழ்ந்து கிடக்கும் நிலம் களிமண் என்பது உண்மை. இரக்கம், அன்பு, பாசம், நேசம் ஆகிய மாந்த உணர்வுகளின் குறியீடாகவும் இதைக் கொள்ளலாம். சிற்றூர் வாழ்க்கையில் திளைத்தவராதலின் மழைபெய்த களிமண் நிலம் கவிஞர்தம் உள்ளத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது என்பது,

“மழைபெய்த களிமண் நிலமாய்
புலவர்  மனம் பொசுக்கென்று நெகிழ்ந்தது”

என இதே உவமையைத் தமது புதினமொன்றிலும் நெகிழ்ச்சிப் பொருண்மையை விளக்கக் கையாண்டிருப்பதால் உணர்ந்து கொள்ள முடியும். மேலும்,

“கள்ளமனம் நமைவெற்றிக் கொள்வ தில்லை!
கடல் நீரை மழைபெய்து நனைத்த தில்லை”

என்னும் கவிதை வரிகளில் மழை பெய்தும் நனையாத இடமாகக் கடலைச் சுட்டிக்காட்டுகிறார்.  மழைநீரால் கடலை நனைக்க முடியாதது போலவே கள்ள மனத்தால் நல்ல மனத்தை வெற்றி கொள்ள இயலாது என்னும் வாழ்வுண்மையையும் விளக்கிக் காட்டுகிறார்.

இடம் மாறி விழுந்த மழை!

இதே மழைத்துளி நனவு கனவானதற்கும் உவமமாகப் பயன்பட்டிருப்பதை வைரமுத்து கவிதைகளில் காணமுடிகிறது. தன் எழுத்துக்களையெல்லாம் அச்சில் ஏற்றி நூலாக்கி அதன் மூலம் வருவாய் ஈட்டலாம் என்னும் மகாகவி பாரதியின் கனவு,

“கடலில் விழுந்த மழைத்துளியாய்க் காணாமல் போயின”

என உவமத்தால் விளக்குவார் வைரமுத்து. கடலென்னும் பரந்துபட்ட நீர்நிலையையும், அதில் விழும் ஒரு சொட்டு மழைத்துளியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உவமையின் ஆளுமை புரியக்கூடும். பாரதியின் ஆசை உருவம் இழந்து ஒன்றுமில்லாமல் போனதற்குத்தான் இந்த உவமை பயன்படுத்தப்படுகிறது. உருவமில்லாமல் போவதைச் சுட்டுதற்குப் பயன்பட்ட இந்த உவமத்தில் சிறிது மாற்றம் செய்து,

“சுடுமணலில் கொட்டிய மழைத்துளி போல”

எனப் பயன்படுத்தியிருப்பதையும் காணமுடிகிறது. சுடுமணலில் கொட்டிய மழைத்துளி, விரைந்து மண்ணுக்குள் வடிந்துவிடும். பாரதியின் வாழ்க்கையில் சுவை குறைந்து போய்விட்டதைக் குறிப்பதற்குச் சுடுமணலில் விழுந்த மழைத்துளியைப் பொருத்தமாகப் பயன்படுத்துகிறார் வைரமுத்து. புலப்படுத்தும் பொருண்மைகளுக்கேற்பக் ‘கடல்’, ‘சுடுமணல்’ என மழைத்துளி விழும் இடத்தையும் மாற்றிக் கொள்ளும் படைப்புத் திறன் குறிப்பிடத்தக்கது.

சிதறும் மழைத்துளியால் சிதறும் சிந்தனைகள்

தான் கண்ணீர் விட்ட சூழ்நிலைகளை நினைவுக்குக் கொண்டு வரும் வைரமுத்து உறவுகளால் தான் கைவிடப்பட்டதைச் சுட்டுகிறார்.

“சிகரத்தில் விழுந்த மழையாய்ச்
சிதறிய உறவுகளின்
சேராத பாசத்தில்”

தான் விட்ட கண்ணீரில் வங்கக்கடல் மூழ்கியதாகக் கற்பனை செய்கிறார். கடல், சுடுமணல் ஆகிய இரண்டோடு, சிகரமும் மழைத்துளி விழுந்த இடமாகக் கவிஞரால் கண்டறியப்படுகிறது. அழிதல், இறங்குதல், சிதறுதல் ஆகிய வினைகளோடு வழிதல் ஆகிய வினைக்கேற்பவும் மழைத்துளி உவமமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் அரவிந்தருடைய வரலாறும் வ.வே.சு. அய்யரின் வரலாறும் கொஞ்சம் வேறுபட்டது. அவர்கள் விடுதலை வீரர்களாய்த் தோன்றி ஆன்மீகச் செல்வர்களாய் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். அப்பெருமக்களைப் பாரதி சந்தித்ததன் விளைவு அவர் உள்ளத்தில் உணர்ச்சித் தீ கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.

“கொதித்துக் கொதித்துக்
கொப்புளித்த உணர்ச்சி
வாழைமரத்தில் விழுந்த
மழைத்துளியாய்
வழியத் தொடங்கியது”

கதிரவனின் வெப்பத்தைத் தனது கவிதைகளில் தேக்கிய பாரதியின் பிற்காலச் செயல்பாடுகள் வேகம் குறைந்ததற்கு அரவிந்தர், அய்யர் ஆகியோரைச் சந்தித்ததுதான் காரணம் என்னும் கருத்தை முன்மொழியும் வைரமுத்து, வாழைமரத்தில் விழுந்த மழைத்துளியை உவமமாக்குகிறார். மழைத்துளி மற்ற மரங்களில் விழுவதற்கும் வாழை மரத்தில் விழுவதற்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. வாழை மரத்தில் எந்தப் பக்கம் நீர் விழுந்தாலும் தேங்கி நிற்பதற்கான வழியே கிடையாது. வழிந்து விடும். பாரதியின் உணர்ச்சி மளமளவென்று குறைந்து போனதற்கு மழைத்துளி விழுந்த இடமாக வாழை மரத்தைக் கண்டது நுட்பமான சிந்தனையாகும்.

இயற்கையைப் பாடும்பொழுது சமுதாயச் சிந்தனைகளையும் சமுதாயச் சிந்தனைகளைப் பதிவு செய்கிறபோது இயற்கைக் கூறுகளையும் உவமமாக்குவது கவிஞர்களுக்கு இயல்பு. இயற்கையோடு கவிஞர்கள் கொண்டிருந்த உறவும், சமுதாயத்தோடு அவர்கள் கொண்டிருந்த நேசமும் இத்தகைய ஆற்றலை அவர்களுக்குத் தந்திருக்கக் கூடும். தமிழிலக்கிய வரலாற்றில் முதிர்கன்னிகளைப் பற்றிய சிந்தனை திருவள்ளுவர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. கவிதைகள் தொடர்கின்றன. அவர்கள் கண்ணீர்தான் காயவில்லை. வைரமுத்து தமது கவிதையொன்றில் காலம் கடந்த முதிர்கன்னிகளின் திருமணத்தைக் கூறும் பொழுது,

“கழிந்து போனது காலம்.
இனி மறந்து மழை பெய்தாலும்
அது
வேரில் விழும் மழையா?
விறகில் விழும் மழையா?”

என உவமத்தால் வினவுகிறார். ‘வேர்’ என்பது பருவத்தில் மணம் செய்ய வேண்டிய கன்னி. ‘விறகு’ என்பது பருவந்தவறி மணம் செய்து கொள்ளும் கன்னி. மழை திருமணம். மழை வேரிலே விழுந்தால் பயிர் தழைக்கும். அதே மழை விறகிலே விழுந்தால் விறகும் தழைக்காது. மழையாலும் பயனில்லை. பருவம் கழிந்து நடைபெறும் திருமணத்தால் கன்னிக்கும் பயனில்லை., கணவனுக்கும் பயனில்லை. மழை பெய்கிற இடத்தைப் பசுமையான வேராகவும், காய்ந்த மரமாகவும் மாற்றித் தான் சொல்ல வந்த கருத்தைத் தெளிவுபடப் பதிவு செய்யும் திறன் நோக்கத்தக்கது.

பாலைவனப் புல்லில் விழுந்த மழைத்துளி

மழைத்துளி ஒன்றானாலும் அது விழுகின்ற இடங்களின் மாற்றங்களுக்கேற்பக் கவிதையின் பொருண்மைகளில் ஏற்படும் மாற்றம் தொடர்ந்து ஆராயப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மழைத்துளி பாலைவனத்துப் புல்லில் விழுவது அவரது உரைநடைப்பகுதியிலும் உவமமாக்கப்பட்டுள்ள திறன் ஒப்பீட்டுக்காகச் சுட்டப்படுகிறது.

“ஒரு பாலைவனப் புல்லின் மீது எப்போதாவது ஒரு மழைத்துளி விழுந்தால் அந்தப் புல் எப்படிப் புளகிக்குமோ அந்தச் சிலிர்ப்பை என் ஜீவன் உணர்கிறது.”

கவிதை எழுதுங்கால் ஏற்படுகிற உணர்ச்சி  மெய்யுணர்ச்சி எனவும் திரைப்படப் பாடல் எழுதுங்கால் ஏற்படுகிற உணர்ச்சி பொய்யுணர்ச்சி என்றும் முன்வைக்கும் கருத்தை நளினமாக மறுத்துரைக்கிறார் வைரமுத்து. திரைப்படப் பாடல்களிலும் கவிதைக் கூறுகள் அரிதாக அமைந்துவிடும். அந்த அருமையையே பாலைவனப் ‘புல்லின் மீது பெய்த மழைத்துளி’ என்று உவமிக்கிறார். இந்த உவமையால் திரைப்படங்கள் இலக்கியச் சோலைகள் அல்ல என்பதும்  திரைப்படப் பாடல்கள் அனைத்துமே இலக்கியத்தரம் வாய்ந்ததல்ல என்னும் உண்மையும், அவற்றுள்ளும் இலக்கியத் தரமுடைய உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் அரிதாக  அமைவதுண்டு என்பதும் விளக்கமாகின்றன.

பாலைவனத்தில் விழுந்த மழைத்துளியைப் போலவே பாறையில் விழுந்த மழைத்துளியையும் கருத்து விளக்கத்திற்காகத் தனது வரலாற்றுப் புதினமொன்றில் உவமமாகப் பயன்படுத்தியிருப்பதையும் அறியமுடிகிறது. ‘வில்லோடு வா நிலவே’ என்னும் தமது வரலாற்றுப் புதினத்தில் ‘மாமூலர்’ என்னும் புலவர் பாத்திரம், மாறுவேடத்தில் வந்த சேரலாதனை அடையாளம் கண்டு வணங்கியபோது சேரனுடைய பதற்றத்தைப் பதிவு செய்யும் வைரமுத்து,

“பாறையில் விழுந்து சிதறும் மழைத்துளியாய்ப்”

பதறி எழுந்ததாகக் கூறுகிறார். பாலைவனத்து மழைத்துளி மணலின் உள்ளிறங்கப், பாறையில் விழும் மழைத்துளி சிதறும் என்னும் உண்மையை முன்னிறுத்தி, அதனைச் சேரலாதனின் பதற்றத்திற்கு உவமமாக்கியிருப்பது (கட்டுரை கவிதை உவமங்களைப் பற்றியதாக இருப்பினும்) ஒப்பீட்டுக்காக ஈண்டுச் சுட்டப்படுகிறது.

இவ்வாறு சுடுமணல், சிகரம், வாழைமரம், வேர், விறகு, கடல், பாலைவனம், பாறை என மழைத்துளி விழும் இடங்களின் அடிப்படையில் அதன் விளைவுகளையும் பயன்களையும் கருத்திற் கொண்டு கையாளப்படும் உவமைகள் பொருண்மைகளை ஆளும் திறத்தை அளவிடமுடிகிறது.

நிறைவுரை

ஒரே நிகழ்வுக்குப் பல உவமங்களை நிரல்படுத்தும் நிலையிலிருந்து ஒரே நிகழ்வுக்குப் பல காரணங்களைக் கற்பித்து அவற்றை உவமமாக்குவதும், மழை முதலிய எழுவாய்களின் வினைபடு களத்தை மாற்றி அமைப்பதன் மூலம் சொல்லவரும் கருத்துக்களுக்குக் கூடுதல் தெளிவு தர முயல்வதும் தமிழ்க்கவிதை உவமக்கோட்பாடுகளின் நுண்ணியமாகும். திருவள்ளுவர் பிறர்க்குப் பயன்படும் செல்வம் உள்ளவனைப் ‘பழுமரம்’ என்றும் மக்கட் பண்பில்லாதவனை ‘மரம் போல்வர்’ என்றும் பாடியிருக்கிறார். இதனால் மேலே சுட்டிய உவமத்தின் பிற்காலப் பரிணாமம் மரபு சார்ந்ததே என்பது பெறப்படும்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.