கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 36
-மேகலா இராமமூர்த்தி
சுக்கிரீவனின் படைகளின் அளவையும் படைத்தலைவர்களைப் பற்றியும் அவனிடம் கேட்டறிந்த இராமன், இனி அடுத்துச் செய்யவேண்டியது குறித்துச் சிந்திப்போம் என்றான். அதை ஏற்றுக்கொண்ட சுக்கிரீவன், அனுமனைப் பார்த்து, ”சீதையைக் கடத்திச் சென்ற இராவணனின் இலங்காபுரி தென்திசையில் இருப்பதாய் என் அறிவு சொல்கின்றது. அனுமனே! வலிமை வாய்ந்த அத்திசைக்குச் சென்று அங்குள்ள அரக்கரை வென்று புகழ்பெறுவதற்கு உனையன்றி வேறொருவன் வேண்டுமோ?” என்று அனுமனைப் புகழ்ந்தான்.
தென் திசைக்கண்
இராவணன் சேண் நகர்
என்று இசைக்கின்றது என்
அறிவு இன்னணம்
வன் திசைக்கு இனி
மாருதி நீ அலால்
வென்று இசைக்கு உரியார்
பிறர் வேண்டுமோ. (கம்ப: நாடவிட்ட படலம் – 4559)
”தாரையின் மைந்தனான அங்கதனும், கரடிகளின் அரசனான சாம்பவானும் நின்னோடு வரட்டும். இரண்டு வெள்ளம் சேனைகளோடு நீங்கள் புறப்படுங்கள்” என்று அனுமனிடம் கூறிய சுக்கிரீவன், விந்த மலை, நருமதை ஆறு, வடபெண்ணை, கோதாவரி என்று அவர்கள் கடந்துசெல்ல வேண்டிய வழிகளையும் விரித்துரைத்து, ”தென்திசையின்கண் தமிழ்நாடான பாண்டிய நாட்டிலுள்ள அகன்ற பொதிய மலையிலே நிலைபெற்ற அகத்திய முனிவனது தமிழ்ச்சங்கத்தைச் சேர்வீர்களாயின், அப்பொதிய மலை அம்முனிவன் என்றும் வாழும் உறைவிடம் ஆனபடியால் அதனை வணங்கி அப்பால் செல்லுங்கள். பொன் நிரம்பிய நீர் பெருகுகின்ற பொருநை நதியை (தாமிரபரணி) கடந்துசென்றால் யானைக் கன்றுகள் வாழும் பெரிய தாழ்வரைகளையுடைய மயேந்திர மலையையும் தென்கடலையும் காண்பீர்கள்” என்றான்.
தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு
முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்
என்றும் அவன் உறைவிடம் ஆம் ஆதலினால்
அம்மலையை இறைஞ்சி ஏகி
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
திரு நதி பின்பு ஒழிய நாகக்
கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா
நெடு வரையும், கடலும் காண்டிர். (கம்ப: நாடவிட்ட படலம் – 4583)
”அந்த இடத்தை (மயேந்திர மலை) தாண்டிச்சென்று அப்பகுதிக்கு அப்புறத்திலும் இப்புறத்திலும் ஒரு திங்கள் முழுவதும் அலைந்து திரிந்து தேடிச் சீதையைக் கண்டுபிடித்து வாருங்கள்; விரைந்து புறப்படுங்கள்!” என்று கட்டளையிட்டான் சுக்கிரீவன்.
அப்போது இராமன் அனுமனை அருகழைத்து, கருணையொடு நோக்கி, ”நீதி நூல்களில் வலவனே! சீதையைக் காண்பாயாகில், இவள்தான் சீதை எனத் தெளியும்பொருட்டு அவளுடைய அங்க அடையாளங்களைக் கூறுகின்றேன் கேட்பாயாக” என்று அவனைத் தனியிடத்திற்கு அழைத்துச் சென்று சீதையின் அடி தொட்டு முடிவரை விவரிக்கின்றான்.
அனுமனால்தான் சீதையைக் கண்டுபிடிக்க முடியும் எனும் நம்பிக்கை சுக்கிரீவனுக்கும் இராமனுக்கும் அழுத்தமாய் இருந்ததையே இப்பாடல்களால் நாம் அறிகின்றோம்.
எனினும், இப்பகுதியில் சீதையின் அங்க அடையாளங்கள் குறித்து அந்நிய ஆடவனும், மாணியுமான அனுமனிடம் இராமன் வருணிப்பது வரம்புகடந்த வகையில் அமைந்திருப்பது சற்று நெருடலாகவே உள்ளது. இந்த வருணனைகளைக் கொஞ்சம் குறைத்திருந்தால் காப்பியத்தின் சிறப்பு மேலும் கூடியிருக்கும்.
சீதையின் உடல் வருணனைகளை விலாவாரியாக விளம்பிமுடித்த இராமன், இராமனிடமிருந்துதான் அனுமன் வருகின்றான் என்று சீதை நம்பும்பொருட்டு வேறுசில செய்திகளையும் அவனிடம் சொல்லுகின்றான்.
”வளமிகு அயோத்திநகர் நீங்கிச் சந்திரனைத் தீண்டுகின்ற நெடிதுயர்ந்த அதன் மதிலின் அழகிய வாயிலைக் கடக்குமுன்னே எல்லையில்லாக் கொடிய காடு எதுவோ? என்று கேட்டாள் சீதை; அதை அவளிடம் நினைவுபடுத்து!” என்றான் இராமன்.
மல்லல் மா நகர் துறந்து
ஏகும் நாள் மதி தொடும்
கல்லின் மா மதிள்
மணிக் கடை கடந்திடுதல்முன்
எல்லை தீர்வு அரிய வெங்
கானம் யாதோ எனச்
சொல்லினள் அஃது எலாம்
உணர நீ சொல்லுவாய். (கம்ப: நாடவிட்ட படலம் – 4624)
அரண்மனையைத் தாண்டி வெளியில் எங்கும் சென்றவள் இல்லை சீதை. அதனால்தான் அயோத்தி மதிலின் வாயிலைக் கடப்பதற்குமுன், காடு அருகிலிருக்கும் என்று எண்ணிக்கொண்டு, காடு எங்கே என்று இராமனைப் பார்த்துக் கேட்டாள்.
இதே போன்றதொரு காட்சியைச் சிலப்பதிகாரத்திலும் நாம் காணலாம். வண்ணச் சீறடிகளை மண்மகளுக்குக்கூடக் காட்டாமல் வீட்டிலேயே அடைந்துகிடந்த கண்ணகி, கோவலனோடு மதுரைக்குப் புறப்பட்டபோது புகார் நகர எல்லையிலேயே, ”மதுரை மூதூர் யாது?” (மதுரை எங்கே?) என்று கேட்டதன் எதிரொலியாகவே சீதையின் இவ்வினா அமைந்திருக்கின்றது. சிலம்பில் கம்பருக்கிருந்த காதலும் ஈடுபாடும் இராமகாதையில் ஆங்காங்கே பொருத்தமாய் வெளிப்படுகின்றன.
சீதையைப் பற்றிய அடையாளங்களையும் அவளுரைத்த மொழிகளையும் அனுமனுக்குச் சொன்ன இராமன், அழகிய இரத்தினங்கள் பதிக்கப்பட்ட தன் மோதிரத்தையும் (கணையாழி) சீதைக்கு அடையாளமாய்க் காட்டுமாறு அனுமனிடம் தர, அதனைப் பெற்றுக்கொண்ட அனுமன் அங்கிருந்து புறப்பட்டான் ஏனைய வானர வீரர்களோடு.
தொண்டு எனும் குணத்திற்கோர் ஒப்பற்ற இலக்கணமாய் அனுமனைத் தம் காப்பியத்தில் படைத்திருக்கின்றார் கம்பர். அங்கதனும் சாம்பவானும் துணைவர, அனைத்து இடங்களிலும் சீதையைத் தேடிக்கொண்டும் வீரச்செயல்கள் புரிந்துகொண்டும் செல்கின்றான் அனுமன். பல இடங்களில் தேடியும் சீதையைக் காணாமையால் சோர்வோடு தென்கடலை ஒட்டிய மயேந்திரமலைக்கு வருகின்றனர் வானர சேனையர்.
அப்போது அப்பகுதியில் வாழ்ந்துவந்த கழுகரசன் சடாயுவின் அண்ணனான சம்பாதியின் வாயிலாய்ச் சீதை இராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருப்பதை அறிகின்றனர்.
இலங்கைக்குச் செல்லவேண்டுமானால் நீண்டு பரந்த கடலைத் தாண்டவேண்டும். அந்த அரிய செயலைச் செய்யப்போவது யார் எனும் வினா அங்கே எழுந்தபோது, தன் பெருமையும் திறனும் அறியா அனுமனுக்கு அவன் பெருமையை எடுத்துரைக்கின்றான் சாம்பவான்.
ஓர் உயிர் கீழ்நிலைக்குச் செல்லாமல் மேல்நிலைக்கு உயரவேண்டுமானால் அதற்கான அடிப்படைத் தேவை புலனொழுக்கம். அந்தப் புலனடக்கம் முழுதாய்க் கைவரப் பெற்றவன் அனுமன். அவனுடைய சாற்றரும் ஆற்றலைப் பதினொரு பாடல்களில் அவனுக்கு நினைவூட்டிய சாம்பவான், அனுமன் குறித்த மிக நுட்பமான கருத்தைப் பேசுகின்றான்.
”நீர் நீதிநெறியில் நிலைபெற்றுள்ளீர்; வாய்மை பொருந்தியுள்ளீர்; மகளிர் இன்பத்தை மனத்தாலும் எண்ணாது வளர்ந்துள்ளீர்; வேதங்களையெல்லாம் அவற்றின் பொருளொடு ஓதி உணர்ந்துள்ளீர்; ஊழியையும் கடந்த நெடிய ஆயுளை உடையீர்; உலகங்களைப் படைக்கின்ற முதற் கடவுளாம் பிரமதேவனே நீரென்று யாவரும் சொல்லும் அளவிற்கான சிறப்புடையீர்” என்று புகழ்கின்றான்.
நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும்
மாதர் நலம் பேணாது வளர்ந்தீர் மறையெலாம்
ஓதி உணர்ந்தீர் ஊழி கடந்தீர் உலகு ஈனும்
ஆதி அயன்தானே என யாரும் அறைகின்றீர். (கம்ப: மயேந்திரப் படலம் – 4725)
மதுவிலும் மாதர் இன்பத்திலும் வரம்பின்றிப் பொழுதைக் கழிக்கும் தன்மையுடைய இலங்கையில் ஒரு பெண்ணைத் தேடிச் செல்கின்றவன் புலனடக்கம் உடையவனாய் இருத்தல் அவசியம். அத்தகு உயர்குணம் நிரம்பப் பெற்றவன் அனுமன் என்பதையே “நினைவாலும் மாதர் நலம் பேணாது வளர்ந்தீர்” எனும் தொடர் நமக்கு உணர்த்துகின்றது. அனுமன் பண்புகளுள் உச்சமான உயர்பண்பும் அதுதான்!
சாம்பவானின் மொழிகளால் ஊக்கம்பெற்ற அனுமன், நூறு யோசனை தூரம் நீண்டுள்ள கடலைத் தாண்டிச் சென்று இலங்கையில் சீதையைத் தேட ஒப்புக்கொள்கின்றான்.
அனுமன் கடலைத் தாவிக் கடப்பதிலிருந்து தொடங்குகின்றது, கிட்கிந்தா காண்டத்திற்கு அடுத்து அமைந்துள்ள, சுந்தர காண்டம். இக்காண்டம் முழுமையும் நீக்கமற நிறைந்திருப்பவன் அனுமனே. அவனைப் பற்றிய சிறப்பான முன்னுரையாக அமைகின்றது சாம்பவானின் மொழிகள்.
கம்பராமாயணத்தின் ஒவ்வொரு காண்டமும் காப்பியக் கதை எந்தப் பகுதியில் நடக்கின்றதோ அல்லது எதனை அடிப்படையாக வைத்து நடக்கின்றதோ அதையொட்டியதாகவே பெயர்பெற்றிருக்க, ஐந்தாவது காண்டமான ’சுந்தர காண்டம்’ மட்டும் இந்தப் பொதுவிதிக்கு மாறுபட்ட வகையில் பெயர் பெற்றிருப்பது ஆழ்ந்த ஆராய்ச்சிக்குரியதாய் அமைந்திருக்கின்றது.
இக்காண்டத்தில் வீர சௌந்தரியம், பக்தி சௌந்தரியம், புலனடக்கம் எனும் சௌந்தரியம் ஆகியவை மிளிரும் சுந்தரனாகக் காட்சியளிக்கின்றான் அனுமன். காப்பியத் தலைவியான சீதையும் இக்காண்டத்தில் மீண்டும் கதைக்குள் வருகின்றாள். அவளின் தவவொழுக்க சௌந்தரியமும் காண்டத்துக்கு அழகூட்டுகின்றது. எனவே, இக்காண்டம் சுந்தர காண்டம் எனும் பெயர் பெறுவதற்கு அனுமனும் சீதையும் காரணமாகின்றனர் என்பது கம்பனில் தோய்ந்தவர்கள் ஆய்ந்துகண்ட முடிபாகும்.
தன் ஆற்றலையெல்லாம் ஒன்றுதிரட்டிய அனுமன், பேருருக் கொண்டவனாய் (விசுவரூபம்) தன்னை மாற்றிக்கொண்டு, மயேந்திர மலையின் மீதிருந்து தாவிக் கடலின்மேல் பறக்கத் தொடங்குகின்றான். அப்போது கடலில் பல இடையூறுகளைச் சந்திக்கும் அவன், அவற்றை வெற்றிகரமாய் முறியடித்து இலங்கையிலுள்ள பவள மலையில் இறங்குகின்றான்.
சொர்க்கத்தையே நரகம் எனச் சொல்லத் தகும் வகையில் அமைந்திருக்கும் பொன்னகரமாம் இலங்கையின் வனப்பு கண்டு வியப்படைகின்றான். சந்திர மண்டலத்தை முட்டும் மாடி வீடுகளும் அவற்றின் ஒளியும் அவனை வாய்பிளக்க வைக்கின்றன.
”இராவணன் கோபிப்பான் என்பதனால் இலங்கையின் மேலே செல்ல மாட்டான் கதிரவன்” என்று புகன்ற புலவோரின் கருத்து அனுமனின் நினைவுக்கு அப்போது வருகின்றது. பிறரால் பற்றமுடியாத இலங்கை மதில்களின் ஒளியைக் கண்டால் தன் கண்கள் கூசுமே என்று அஞ்சியே அங்கிருந்து அகன்று செல்லுகின்றான் பகலவன் என்பதை அவர்கள் அறியவில்லை என எண்ணுகின்றது அவன் உள்ளம்.
முன்னம் யாவரும் இராவணன் முனியும் என்று எண்ணி
பொன்னின் மாநகர் மீச்செலான்கதிர் எனப்புகல்வார்
கன்னி ஆரையின் ஒளியினில் கண்வழுக்குறுதல்
உன்னிநாள் தொறும் விலங்கினன் போதலை உணரார். (கம்ப: ஊர்தேடு படலம் – 4962)
இருட்டும்வரை ஊரை நோட்டம் விட்டபடி மலைமேல் காத்திருந்த அனுமன், இருட்டியதும் தன் உருவத்தைச் சுருக்கிக்கொண்டு மெல்ல ஊருக்குள் நுழைந்தான். அவனை எதிர்த்துத் தடுத்த இலங்கையின் காவல்தெய்வமான இலங்காதேவியைத் தாக்கித் தோல்வியுறச் செய்துவிட்டுச் சீதையைத் தேடும் பணியைத் தொடங்கினான்.
ஒவ்வொரு வீடாய்ப் புகுந்து தேடிக்கொண்டு போனவன், இராவணன் இளவலாகிய கும்பகருணன் வீட்டையடைந்தான். அங்கே அமளிமிசை ஆதிசேடனைப் போலவும், கடலினைபோலவும், பேரிருள் போலவும் தன் பிரம்மாண்ட உருவத்தால் காட்சிதந்து உறங்கிக் கிடந்த கும்பகருணனைக் கண்டு இவன் இராவணனோ என்று ஐயுற்றுச் சினந்தான்.
கும்பகருணனை இன்னும் சற்று நெருங்கிச்சென்று பார்த்து, இவனுக்குப் பத்துத் தலைகளுமில்லை; இருபது திண்புயங்களுமில்லை; ஆதலால் இவன் இராவணன் இல்லை என்று தெளிந்து, பெருகிவரும் வடவைத் தீயையொத்த தன் சினத்தை அறிவென்னும் கடல் நீரினால் அவித்தான் அனுமன்.
குறுகிநோக்கி மற்று அவன்தலை ஒருபதும் குறித்த
இறுகு திண்புயம் இருபதும் இவற்குஇலை என்னா
மறுகிஏறிய முனிவுஎனும் வடவைவெங் கனலை
அறிவு எனும்பெரும் பரவைஅம் புனலினால் அவித்தான். (கம்ப: ஊர்தேடு படலம் – 5072)
மாட மாளிகைகள், மகளிரின் ஆடரங்குகள், கடவுளர் கோயில்கள், பட்டி மண்டபங்கள் எனப் பல இடங்களிலும் தன் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்த அனுமன் அடுத்து நுழைந்தது வீடணனின் இல்லத்தில்.
[தொடரும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.