மாதவியின் மாண்பமை மடல்!
-மேகலா இராமமூர்த்தி
இந்திர விழாவின் இறுதிநாள் அது! புகார் நகரக் கடலில் மகிழ்ச்சியாய் நீராடிவிட்டுக் கடற்கரையில் இன்பப்பொழுது போக்கிக் கொண்டிருந்தனர் மக்கள். அவ்வாறே தாமும் பொழுதை இன்பமாய்க் கழிக்கவிரும்பிய கோவலனும் மாதவியும் ஏவலரும் தோழியரும் உடன்வரக் கடற்கரைச் சோலைக்குச் சென்று ஆங்கே ஓர் புன்னை மர நிழலில் விதானம் அமைத்து வெண்கால் கட்டிலில் அமர்ந்தனர். மாதவி தன்னிடமிருந்த யாழைக் கோவலனிடம் நீட்ட, அவன் அதில் சுதி கூட்டி, யாழ் மீட்டிக் கானல்வரிப் பாடல்களைப் பாடினான்.
ஆடவரின் குற்றங்களைப் பெரிதுபடுத்தாதிருத்தல் மகளிரின் கடமை எனும் பொருள்பட அவன் பாடல்கள் அமைந்திருந்தன. அத்தோடு, தானொரு நெய்தல் நில மங்கையிடம் மையல் கொண்டது போன்ற உட்குறிப்புள்ள பாடல்களையும் பாடினான்.
அடுத்து மாதவியின் முறை வந்தது. அவள் கோவலனின் கருத்தை மறுத்துரைக்கும் வகையில், ஆண்களின் நற்செயல்களே பெண்களுக்குப் பெருமை தருவன எனும் பொருளமையப் பாடினாள். அத்தோடு, தானும் ஓர் ஆடவனிடம் உள்ளத்தைப் பறிகொடுத்திருப்பது போன்ற குறிப்புத்தோன்ற அவள் பாட, கோவலனுக்குக் கோபம் வந்துவிடுகின்றது. ”பொழுதாயிற்றுப் புறப்படுவோம்!” என்று சொல்லிவிட்டு அவள் எழுவதற்கு முன்பாகவே ஏவலர் பின்தொடர எழுந்து போய்விடுகின்றான் அங்கிருந்து.
இவ்விடத்தில் கானல்வரிப் பாடல்கள் குறித்தொரு செய்தியைச் சொல்ல விழைகின்றேன். கோவலனும் அவனைத் தொடர்ந்து மாதவி மடந்தையும் பாடிய கானல்வரிப் பாடல்கள் அருமையான இசைத்தமிழ்ப் பாடல்களாகும். இவற்றிற்குப் பண், தாளம் போன்றவையும் உள. எனவே, இப்பாடல்களை இசையரங்குகளில் இசைவாணர்கள் பாடிக்காட்டி இவற்றின் சிறப்பையும் சொல்நயத்தையும் தமிழ்மக்களுக்கு உணர்த்துதல் வேண்டும்.
இனி நாம் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்…
தான் கிளம்புவதற்கு முன்பாகவே விரைந்து சென்றுவிட்ட கோவலன் செயலால் மாதவி வருத்தமுற்றாலும், அதனைத் தன் தோழியரிடம் காட்டிக்கொள்ளாமல் வீட்டுக்குச் சென்றாள். கோவலன் வீடுவந்து சேராதது அவளுக்கு வேதனையளிக்கவே, தாழை மடலொன்றை எடுத்து, ”இளவேனிலரசனும் அவனுக்குத் துணையாய் வரும் திங்கட்செல்வனும் அளிக்கும் வாட்டத்திலிருந்து என்னை மீட்டெடுக்க வாரீர்! இல்லையேல் அவ்வரசன் தன் மலர்வாளியால் என்னுயிரைக் கொள்வன்!” என்று கோவலனுக்கு மடல் தீட்டினாள். அதனைத் தோழி வசந்தமாலையிடம் கொடுத்துக் கோவலனிடம் காட்டி அவனைக் கூட்டிவரச் சொன்னாள். மாதவி கோவலனுக்கு வரைந்த முதல் மடல் இது!
கூலங்கள் விற்கும் கடைத்தெருவில் கோவலனைக் கண்டுபிடித்த வசந்தமாலை, அம்மடலை அவனிடம் நீட்ட, அப்போது மாதவிபால் மிகுந்த சினத்தோடும் சீற்றத்தோடும் இருந்த கோவலன், ”அந்த ஆடல்மகளின் நடிப்பை இனியும் நான் நம்பத் தயாரில்லை” என்று காட்டமாய்ச் சொல்லி அம்மடலை ஏற்க மறுத்துவிட்டான். வருத்தத்தோடு திரும்பிவந்த வசந்தமாலை அதனை மாதவியிடம் தெரிவித்தாள்.
அதனைக் கேட்ட மாதவி, மாலை வரவில்லையாயினும் நாளைக் காலை எப்படியும் அவர் வந்துவிடுவார்; நாம் காண்போம் என்று அவளிடம் சொன்னாள் நம்பிக்கையோடு.
“மாலை வாரா ராயினும் மாணிழை
காலைகாண் குவம்” (சிலப்: வேனிற் காதை – 115-116)
ஆனால் யாழிசைமீது வந்தமர்ந்து கோவலனையும் மாதவியையும் பிரித்த ஊழ்வினையானது மீண்டும் அவ்விருவரும் சந்திக்கக்கூடிய வாய்ப்பில்லாமல் செய்துவிட்டது.
மாதவியை நீங்கிய கோவலன், கண்ணகி மனைக்குச் சென்று அவளையும் அழைத்துக்கொண்டு மதுரைக்குப் புறப்படுகின்றான். அப்பயணத்தின் நோக்கம், அவள் சிலம்புகளை விற்று அப்பொருள்கொண்டு வாணிகஞ்செய்து தான் இழந்த பொருள்களை மீட்டெடுத்தலாகும். வழிநடைப் பயணத்தில் கௌந்தியடிகள் எனும் சமணப் பெண்துறவியார் அவர்களுக்குத் துணை ஆகின்றார். முதுவேனிற் காலத்தின் மூர்க்கமான வெப்பத்தை எதிர்கொண்டு, கடும்பயணம் மேற்கொள்கின்றனர் மூவரும்.
மதுரைக்கு அணித்தே வந்துவிட்ட அவர்கள், வேலிசூழ்ந்த ஓரிடத்தில் இளைப்பாறுகின்றனர். அப்போது அவர்களை அங்கே விட்டுவிட்டுத் தான்மட்டும் அருகிலிருந்த நீர்நிலைக்குச் செல்கின்றான் கோவலன். அவனைக் கண்டான் மாதவியிடமிருந்து வந்திருந்த தூதுவனான கோசிகன் என்ற அந்தணன். வெயிலில் வாடிவதங்கி உருமாறிப் போயிருந்த கோவலனைக் கோசிகனுக்கு அடையாளம் தெரியவில்லை.
அவன் கோவலன் தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பிய அவன், ஒரு யுக்தி செய்தான். அங்கே அருகிலிருந்த பந்தலில் வாடிக்கிடந்த மாதவி (குருக்கத்தி) கொடியைப் பார்த்து, “கோவலன் பிரிவால் வருந்தி வாடிய மாதவிபோல் நீயும் வேனிலால் வாட்டமுற்றிருக்கிறாயோ மாதவி?” என்று கோவலன் காதில் விழுமாறு அக்கொடியிடம் அவன் கேட்கவே, அதைக் காதில்வாங்கிய கோவலன், ”நீ சொன்னதன் பொருள் என்ன?” என்று கோசிகன் அருகில்வந்து கேட்கவும், ”ஆகா! கண்டேன் கோவலனை” என்று தெளிந்த கோசிகன், கோவலன் புகாரைவிட்டு நீங்கியதால் அவன் பெற்றோரும் சுற்றத்தாரும் படும் துன்பத்தையும், மாதவியடைந்த மாளாத் துயரத்தையும் தெரிவித்தான். ஏவலர்கள் பல இடங்களில் கோவலனைத் தேடி அலைவதையும், இராமனைப் பிரிந்த அயோத்திபோல் புகார் நகரமக்கள் வருந்தியிருக்கும் அவலத்தையும் எடுத்துரைத்தான். அதன்பின்னர், மாதவி அவனுக்கு எழுதிய மடலை அவனிடம் நீட்டினான்.
இது மாதவி கோவலனுக்கு எழுதிய இரண்டாவது மடல். இம்முறை கோவலன் அதனை மறுக்காமல் வாங்கிக்கொண்டான். மாதவியைப் பிரிந்து நீண்ட நாட்கள் ஆனபடியால் அவள் மீதிருந்த கோபம் அவனுக்குத் தணிந்திருந்தது. மடலிலிருந்து வீசிய அவள் கூந்தலின் நெய்வாசம் அவனைப் பழைய நினைவுகளுக்குள் மூழ்கவைத்தது. மடலைப் பிரித்துப் படித்தான்…
”அடிகளே! உங்கள் திருவடிகளில் நான் வீழ்ந்து வணங்குகின்றேன். குழப்பத்தோடு நான் எழுதுகின்ற இந்தப் புன்மொழிகளை தாங்கள் மனத்திலே கொள்ளவேண்டும். பெற்றோரைப் பேணும் பெரும்பணியைக் கைவிட்டதோடல்லாமல், நற்குடியிலே பிறந்த மனையாட்டியோடு, பூம்புகாரில் யாரும் அறியாவண்ணம், இரவிலே புறப்பட்டுப் போகும்வண்ணம் நிகழ்ந்த தவறு என்ன? அதனை அறியமுடியாமல், அத்தவறு என்னுடையதாக இருக்குமோ? பிறருடையதோ? என ஐயுற்று என் நெஞ்சம் கையற்றுக் கலங்கி நிற்கின்றது. ஒருவேளை, தவறு என்னுடையதாய் இருக்குமானால் அதனைத் தாங்கள் பொருட்படுத்தாது விடுதல் வேண்டும். மயக்கந் தீர்ந்த காட்சியுடைய மெய்யறிவாளரே, உம்மைப் போற்றுகின்றேன்!”
”அடிகள் முன்னர் யான்அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர்பணி அன்றியும் குலப்பிறப் பாட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி” (சிலப்: புறஞ்சேரியிறுத்த காதை – 87-92)
இம்மடலைப் படித்ததும் மாதவி குற்றமற்றவள்; அவளைப் பற்றித் தவறாக எண்ண வைத்தது தன் தீவினையே என்று தெளிந்தான் கோவலன். இம்மடல், தன் தந்தைக்குக் கொடுத்தனுப்புவதற்கும் பொருத்தமான செய்திகளைக் கொண்ட பொற்புடைய மடல் என்று முடிவுசெய்தவன், மாதவியின் மடலையே தன் தந்தைக்குத் தான் எழுதிய மடலாக அவரிடம் சேர்ப்பித்து அவரைத் தேற்றுமாறுக் கோசிகனிடம் கொடுத்தனுப்புகின்றான் என்கின்றது சிலம்பு.
மாதவியின் இந்த மடல் அவளின் மாண்பை மட்டுமல்லாது தேர்ந்த சொற்களில் மடல் புனையும் அவளின் திறனையும் நமக்குத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது அல்லவா?
*****
கட்டுரைக்குத் துணைசெய்தது:
சிலப்பதிகாரம் மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும்.
படம் விக்கிபீடியாவிலிருந்து எடுத்தது.