தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 30

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

உவமப் பொருளில் உற்றது உணர்தல்

முன்னுரை

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என நில அடிப்படையில் வகுத்து, அவற்றுக்குப் பூக்களைக் குறியீடாக்கி, அகத்திணை வாழ்க்கையைப் பாடுபொருளாக்கிய சங்கச் சான்றோர், புறத்திணையைப் பாடுகிறபோதும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை எனப் பூக்களையே குறியீடாகக் கொண்டிருக்கிறார்கள். ‘அங்கிங்கெனாதபடி’ இயற்கையே ஊடிழையாகவே சென்ற வாழ்வியலின் எதிரொளியான இலக்கியங்களிலும் அவற்றின் கூறுகளில் ஒன்றாகிய உவமப் பயன்பாட்டிலும் இவ்வியற்கை எதிரொளிக்கிறது. ‘கால் கிளர்ந்தன்ன கதழ்பரிப் புரவி’ என்று குதிரையின் பாய்ச்சலுக்குக் காற்றினை உவமமாக்கினார்கள். ‘அரக்கத்தன்ன நுண்மணல் கோடு’ என மணல் மேட்டிற்குச் செவ்வரக்குப் பூவின் நிறத்தை உவமமாக்கினார்கள். இதன் தொடர்ச்சியாக பல உவமங்களை ஒரே தொடரியில் கோக்கவும் செய்தனர். இவை பற்றிய செய்திகளை இக்கட்டுரை ஆராய்கிறது.

பருந்தின் சிறகும் கந்தலாடையும்

பாடாண் திணையில் வைத்து மன்னரைப் பாடுகின்ற புலவர் பெருமக்கள் இலக்கியச் சிந்தனையோடுதான் பாடியிருக்கிறார்கள் என எண்ண வேண்டியதிருக்கிறது. புறநானூறு முதலிய தொகுப்பு நூல்களானாலும் பதிற்றுப்பத்தாகிய திட்டமிட்டுப் பாடப்பட்ட நூலானாலும் இந்தக் கருத்து பொருந்துவதாகவே தோன்றுகிறது. மன்னனை நேரில் பாடுகிறார் புலவர். அவன் தோற்றத்தைப் பாடித்தான் அவனைப் பற்றிச் செவிமடுத்த பெருமைகளைப் பாட வேண்டும். மன்னனின் திருவோலக்கம் புலவரைத் தடுமாறச் செய்ததால் கேட்டதை முதலில் பாடிக் கண்டதைத்  தொடர்ந்து பாடுகிறார்.

“தார் அணி எருத்தின் வாரல் வள்ளுகிர்
அரிமான் வழங்கும் சாரற், பிறமான்
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு”
முரசு  முழங்கு நெடுநகர் அரசு துயில் ஈயாது
மாதிரம் பனிக்கும் மறம் வீங்கும் பல்புகழ்
கேட்டற்கு இனிது” (பதி. 2)

என்னும் வரிகளில் அரிமா வாழும்  காட்டில் அதன் முழக்கத்தைக் கேட்டு அங்கே வாழுகின்ற பிற இன விலங்குகளின் தொகுதி அச்சத்தால் நெஞ்சு அதிர்ந்து நடுங்குவதுபோலச் சேரலாதனைக் கண்டு பகைவர்கள் நடுங்கிய சேதி கேட்டற்கு இனிதாம்.

அவனை நாடி வந்த தனக்கும் தன்னையொத்த பாணர்களுக்கும் வறியோர்க்கும் அவருடைய வறுமை தீருமாறு உணவளித்துப், புத்தாடை அணிவித்து, அவர்களோடும் அவர்தம் சுற்றத்தோடும்  மன்னனும் அமர்ந்து காணும் காட்சி கண்ணுக்கினியதாம்.

“வந்தவண் இறுத்த இரும்பே ரொக்கல்
தொல்பசி உழந்த பழங்கண் வீழ
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை
மையூண் பெய்த வெண்ணெல் வெண்சோறு
நனையமை கள்ளின் தேறலொடு மாந்தி
நீர்ப்படு பருந்தின் ஈர்ஞ்சிற கன்ன
நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ
வணர் இரும் கதுப்பின் வாங்கமை மென்தோள்
வசையில் மகளிர் வயங்கிழை அணிய
அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்கு இனிது”  (பதி.2)

என்று எழுதுகிறார் புலவர். இந்தப் பகுதியில் வறுமையுழன்று வந்தவர் அணிந்திருந்த கந்தலாடைக்கு ஈரத்தால் நனைந்த பருந்தின் சிறகை உவமித்திருப்பதுதான் வியப்பினும் வியப்பு. பாட்டுக்களம் அரண்மனை. புலவருடைய உவமச் சிநதனை பருந்தைத் தேடிப் பறக்கிறது என்பதோடு வந்திருந்த தனது சுற்றத்தாரின் வறுமைநிலையையும் எண்ணுகிறது. மண்மாசு படிந்து கிழிந்து கந்தலாகிய உடைக்கு நனைந்த பருந்தின் சிறகு உவமமாவதைக் “கூதிர்ப்பருந்தின் இருஞ்சிறகன்ன பாறிய சிதாஅரேன்” என்னும் (புறம்.150) பரணர் பாட்டாலும் அறியலாம்.

இந்தப் பாட்டையும் விளக்கப்பட்ட உவமங்களையும் நோக்குவார்க்கு மன்னனைப் பரவுதலையும் ஒரு படைப்பிலக்கியக் களமாகவும் அவனைப் பாராட்டுவதை ஓர் இலக்கிய உத்தியாகவும் கருதியிருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

வனத்தில் சிங்கம்! வானத்தில் கதிரவன்!

‘அரிமா திரியும் காட்டில் பிற மாக்களுக்கு இடமில்லை’ என்று புலவர் ஒருவர் பாட மற்றொரு புலவர் அதே உணர்வுக்கு வேறொரு உவமத்தை உள்ளங்கொள்ளுமாறு புனைந்துத் தன்னைப் புரந்த மன்னனைப் பாடுகிறார்.

“மாயிரு விசும்பில் பன்மீன் ஒளிகெட
ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்
உறுமுரண் சிதைத்த நோன்தாள் வாழ்த்திக்
காண்கு வந்திசின் கழல்தொடி அண்ணல்!” (பதி. 64)

“கரிய பெரிய வானிடத்தே ஞாயிறு எழுந்துத் தோன்றிப் பலவாகிய விண்மீன்களின் ஒளியைக் கெடுத்தாற்போன்று சேரர் குடியில் தோன்றிப் பகைவரது மிக்க மாறுபாட்டைக் கெடுத்த கழலுமாறு அணிந்த தொடியினையுடைய அண்ணலே!” என விளிக்கின்றார் புலவர். ஞாயிற்றின் தோற்றமும் அதற்குரிய இடமும் கூறியதற்கேற்ப வாழியாதன் தோற்றமும் அதற்கிடனாகிய சேரர்குடியும் வருவிக்கப்பட்டன. ‘பன்மீன்’ என்றதனால் மாற்றாரது பன்மை பெறப்பட்டது. பலரும் ஒருங்கு திரண்டு இகல் செய்தமையின் “உறுமுரண்” என்கிறார் புலவர். பாட்டில் ‘ஞாயிறு தோன்றியாங்கு’ என்று இருக்கிறது. ஆனால் பொருள் ‘ஞாயிறு தோன்றி விண்மீன்களின் ஒளியை அழித்தது போல’ என்று இருக்க வேண்டும். ‘நேரடியாகக் கதிரவனைப் போல விண்மீன்களாகிய பகைவனை அழித்தவனே!’ என்று கூறாமல் ‘பகைவனை அழிக்கத் தோன்றிய கதிரவன் போல’ என வினையை முன்னிறுத்தாது தோற்றத்தை முன்னிறுத்தியது மன்னனுடைய திருவோலக்கத்தில்  அவன் பொலிவு நோக்கிய மயக்கம் என்க.

உவம வினைகள் பொருளுக்கும் பொருந்தும்

பொருளுக்கான வினைகளை உவமத்திற்கு ஆக்கியும் உவமத்திற்கான வினைகளைப் பொருளுக்காக்கியும் குறிப்பாகச் சொல்லுவதும் தமிழ் உவமக்கோட்பாடுகளில் ஒன்றாகும். அவ்விரண்டைத் தழுவி நிற்கும் அடைச்சொற்களுக்கும் இது பொருந்தும். ‘இனிய உளவாக இன்னாத கூறல்’ என்னும் குறட்பாவில் பொருளுக்கு அடைபுணர்த்த திருவள்ளுவர் ‘கனியிருப்பக் காய்கவர்ந்தற்று’ என்னும் உவமத்திற்கு அடை புணர்க்காமை அறிக. ‘தலையின் இழிந்த மயிர் அனையர்’ என உவமத்தின் வினையையும் விளைவையும் கூறிய வள்ளுவர், ‘நிலையின் இழிந்த மாந்தரின்’ வினையையும் விளைவையும் குறிப்பாகப் பெற வைத்தது காண்க.

“மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா!”

‘எம் காரியம் ஆராய்ந்து அருள்க’ என்னும் பாசுரத்துள் (பெருமாளுக்கு) உவமமாகிய சிங்கத்தின் செயல்களைக், கிடந்து, உறங்கும், அறிவுற்று, விழித்து, பொங்க, பேர்ந்து, உதறி, நிமிர்ந்து, முழங்கி, புறப்பட்டு, போதரும்’ என்று அடுக்கிப் பொருளாகிய பெருமாளுக்கான வினைகளைக் குறிப்பாகப் பெற வைத்தமை காண்க. இவ்வுவம வினைகள் பெருமாளின் தோற்றத்திற்கேயன்றிப் பண்பாகிய அருள்நோக்கிற்குப் பொருந்தாது என்பதைப் ‘பூவைப்பூ வண்ணா!’ என்னும் மென்மலர் விளியால் உணரவைத்த நுட்பம் உணர்க.

இந்தப் பாசுரத்தில் அவன் எழுந்திருக்கும் அழகைத், தன் பெடையொடு குகையிலே படுத்திருக்கும் சிங்கம் எழுந்து வருவதை உவமமாகச் சொல்லி ரசிக்கிறார்கள். வீரம் வெளிப்பட எழுவதை மழைக்காலம் முடிந்த நிமித்தங்கள் கண்டு, அறிவுற்று – அதுவரை அசையாமல் இருந்தது – திடீரென்று உயிர் வந்ததுபோல் அசைந்து, தீவிழித்து, – உறங்கிய பின் பார்க்கிற முதல் பார்வையாகையால் சிறிது சிவந்து, விழித்து, – வேரிமயிர் பொங்க, – மணம் கமழ, – தனது வாசனையுள்ள பிடரி மயிர்களை உதறி, நிமிர்ந்து – உடம்பில் இன்னமும் ஒட்டியிருக்கும் சோம்பலை உதறுகிறதாம். முன்னங்கால்களை நீட்டி உடம்பை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்துப், பின் பின்னங்கால்களை நீட்டி மறுபடியும் உடம்பை இழுத்துச் சோம்பலை உதறுகிறதாம். பிறகு முழங்கிப் புறப்பட்டு வேட்டையாடக் கிளம்பும் சிங்கத்தைப்போலே சபா மண்டபத்திற்கு வரச்சொல்லுகிறார்கள். இதுவரைப் பள்ளியெழுச்சி பாடியவர்கள் இப்போது சிங்காசனத்திற்கு வரச்சொல்லிப் பாடுகிறாராதலின் அரியணைக்கேற்பப் பெருமாளைச் சிங்கத்தோடு உவமித்தனர் என்பதாம். ஆண்டாளின் இந்த உவமக் கோட்பாடு பழந்தமிழ்க் கவிதைகளின் உவமக் கோட்பாட்டை ஒட்டியே அமைந்திருக்கிறது.

“பகல் நீடாகாது இரவுப் பொழுது பெருகி
மாசி நின்ற மா கூர் திங்கள்
பனிச்சுரம் படரும் பாண்மகள் உவப்ப
புல்லிருள் விடிய புலம்புசேண் அகலப்
பாயிருள் நீங்கப் பல்கதிர் பரப்பி
ஞாயிறு குணமுதல் தோன்றி யாங்கு” (பதி.59)

என்பது சங்க இலக்கியப் பாடல்களில் ஒன்று. இங்கே காலையில் உதிக்கும் கதிரவனின் வினைகளாக அல்லது விளைவுகளாகப்  பாண்மகள் உவப்ப, புல்லிருள் விடிய, புலம்பு சேண் அகல, பாயிருள் நீங்க, பல்கதிர் பரப்பி என்னும் ஐந்து வினைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. கதிரவனைப் போல இத்தகைய சிறப்புடைய ஆடுகோட்பா ட்டுச் சேரலாதனைக் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடுகிறார். குணதிசையில் கதிரவன் தோன்றியதால் உயிர்த்தொகுதிகள் புலம்பு நீங்கி இன்பம் எய்துதலும் வறுமையாகிய இருள் கழிதலும், இரவிலும் பனியிலும் அலைந்து திரிந்து வருத்தம் நீங்குதலும் சேரலாதனின் அருட்கதிர்கள் உலகெங்கும் பரவுதலும் உவமமாகிய கதிரவனின் வினையடைகளால் பெறப்படும்.

முன் திணை முதல்வர் போல

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் என்னும் சான்றோர் பாடிய பத்துப்பாடல்கள் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒரு பாட்டு இப்படி அமைந்திருக்கிறது.

“நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின்
அளப்பரியையே!
நாள் கோள் திங்கள் ஞாயிறு கனையழல்
ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத்தனையை!
போர் தலை மிகுத்த ஈர் ஐம் பதின்மரோடு
துப்புத் துறை போகிய துணிவுடைமை ஆண்மை
அக்குரன் அனைய கைவண்மையையே!
……………………………………………………………………………………
இலங்குமணி மிடைந்த  பொலன்கலத் திகிரிக்
கடலக வரைப்பின்  இப்பொழில் முழுதாண்ட நின்
முன்திணை முதல்வர் போல! நின்று நீ
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவா அலியரோ இவ்வுலகமொடு உடனே”  14

‘சேரலாதனின் முன்னோர்கள் எப்படிச் சிறப்பாக ஆண்டு இசையொடு வாழ்ந்தார்களோ அதுபோலப் பெரும்புகழ் பெற்று வாழ்வாயாக!’ என்று வாழ்த்துகிறார் புலவர். சேரலாதனுக்கு அவனுடைய முன்னோர்களையே உவமமாக்கும் கண்ணனார், அவனுடைய பேராற்றலைச் சொல்லுகிறபோது உவமங்களாலேயே காட்சிப்படுத்துகிறார்.

அவனுடைய பெருமை அளத்தற்கரியது என்பதை ‘நிலம் நீர் வளி விசும்பு’ என்னும் அளக்க முடியாத நான்கினை உவமமாக்கியிருக்கிறார். “இரு முந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத்து அகலமும், வளிவழங்கு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றாங்கு அவை அளந்தறியினும் அளத்தற்கரியை” (புறம். 20) எனச் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் குறுங்கோழியூர் கிழார் பாடியிருப்பதை நோக்கினால் மன்னனுடைய வியத்தகு ஆற்றலுக்குக் குறிப்பிட்ட இத்தகைய பொருட்களை உவமமாக்குவது ஓர் உவமக் கோட்பாடு என்பது பெறப்படும்.

அவனுடைய புகழொளியை அளவிடுகிறபோது “விண்மீன், கோள்கள், கதிரவன், திங்கள், நெருப்பு ஆகிய ஐந்தின் ஒருங்கிணைப்பான ஒளி என்று உவமத்திற்காக ஓர் புதிய ஒளியைப் படைத்துக் கொள்கிறார்.

அவனுடைய வள்ளன்மையைப் பாரதப்போரில் நூற்றுவருக்குத் துணைபுரிந்த அக்குரன் என்பவனின் வள்ளன்மையோடு ஒப்பிடுகிறார். இந்த அக்குரன் தலையெழு வள்ளல்களில் ஒருவன் என்பதாகவும் பாண்டவருள் மூத்தவனாகிய கர்ணனாகவும் இருவேறு வகையாகக் கொள்ளப்படுவான்.

இவ்வாறு அளப்பரிய தன்மைக்கும், புகழொளிக்கும் வள்ளன்மைக்கும் புதிய புதிய உவமத் தொகுப்புக்களைப் பயன்படுத்திப் படைத்துக்காட்டும் புலவர் இறுதியாக “அவனுடைய முன்னோர் போல வாழ்க” என முன்னோரையே உவமமாக்கி முடித்துக் காட்டுகிறார்.

உவமக் காட்சி

ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை ஒப்புமைப்படுத்திக் கூறுவது முதல் நிலை என்றால் படைப்பாளன் தான் கண்ட அல்லது மனக்கண்ணால் உணர்ந்த காட்சியை முழுமையாகச் சித்திரிப்பதற்கும் உவமங்கள் பயன்பட்டுள்ளன.

“மலையுறழ் யானை வான்தோய் வெல்கொடி
வரைமிசை அருவியின் வயின்வயின் நுடங்கக்
கடல்போல் தானை கடுங்குரல் முரசம்
கால் உறு கடலின் கடிய உரற
எறிந்து சிதைந்த வாள்
இலை தெரிந்த வேல்
பாய்ந்தாய்ந்த மா
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு
படுபிணம் பிறங்க நூறி பகைவர்
கெடுகுடிபற்றிய கொற்ற வேந்தே! ” (பதி.69)

மன்னனைப் பாடும் முன்னிலைப் பரவல் இது. சொல்ல வந்த சேதி  இது தான். “படையொடு சென்று பகைவரை வீழ்த்திப் பகைநாட்டில் கெட்டழிந்தோரையும் புரந்த மன்னன்’ என்பதுதான். பாட்டு ஒரு தொடரில் சொல்லியிருக்க வேண்டிய செய்தியில் பகைமுடிக்கச் சென்ற மன்னனது படைச்சிறப்பை உவமங்கள் வழியாகக் காட்சிப்படுத்தியிருப்பதுதான் உவமக்காட்சி என்னும் தலைப்புக்குக் காரணமாயிற்று. பின்னிருந்து காட்சிகளை அளந்தால் பகைமுரசு கடலைப் போல் முழுங்கியது. காரணம் படை கடல் போல் இருந்தது. யானைப் படையில் தாங்கிய கொடிகள் மலையுச்சியிலிருந்து வீழும் அருவிகளைப் போன்று இருந்தன. யானை மலைபோல் இருந்தது. இந்த உவமத்தொடரியில் எள்ளின் முனையளவும் தொடர்ச்சி அறவில்லை என்பதை நோக்குதல் வேண்டும்.

அகநானூற்றில் இந்தக் காட்சியைப் “பெருவரை இழிதரும் நெடு வெள் அருவி ஓடை யானை உயர்மிசை எடுத்த ஆடு கொடி கடுப்பத் தோன்றும்” (358) என்று உவமத்தைப் பொருளாக்கிக் கூறுதல் காண்க. யானை தாங்கிய கொடி அருவி போல் இருந்தது என்பது இந்தப் பாட்டின் உவமம் கொடி கொட்டுகிற அருவிபோல் இருந்தது என்பது அகநானூற்றின் சித்திரிப்பு. கடல்போல் தானை என்பது மரபுவழி உவமம். “உரவுக்கடல் அன்ன தாங்கரும் தானை” என்பது பதிற்றுப்பத்து (90) மன்னனைப் பாடுகிற பாடாண்திணைப் பாடலில் கற்பனையில் கொண்டு வந்த போர்க்களத்தை உவமத் தோரணங்களால் சித்திரித்துக் காட்டியிருக்கும் பாங்கு இது.

அயிரை நெடுவரை போல

இலக்கண நூல்களில் நல்லாசிரியருக்கு இருக்க வேண்டிய பண்புநலன்களுக்கு நிலம், மலை, மலர், துலாக்கோல் முதலியவற்றை உவமமாக்கி உரைப்பர்.

‘நிலம் மலை நிறைகோல் மலர்நகர் மாட்சி’ என்னும் நன்னூல் வரிகளில் இதனைக் காணலாம். இவை முறையே பொறுமை, வியத்தகு தோற்றம் மற்றும் ஆற்றல், மங்கலம் மற்றும் மென்மை, நடுவுநிலை என்னும் பண்புகளை ஆசிரியருக்கு ஏற்றி உரைப்பதாகக் கொள்ள வேண்டும். இந்த நூற்பாவின் தொடக்கத்திலேயே குலன், அருள், தெய்வம், கொள்கை எனப் பகுத்துச் சொல்லியும் உவமஅளவையால் விரித்துச் சொல்லியும் ஆசிரியரின் பண்புகளின் இன்றியமையாமையை உணர்த்தியிருப்பர். இவற்றுள் சொல்லப்பட்ட மலையை ஒரு மன்னனின் புகழுக்கு உவமமாகச் சொல்லியிருக்கிறார் புலவர் ஒருவர்.

“மாடேர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறைக்குரல் அருவி
முழுமுதல் கோடுதொறும்  துவன்றும்
அயிரை நெடுவரை போல” (பதி. 70)

‘வரைபோல வாழ்க’ என்றால் கருத்து முடிந்தது. ஆனால் கவிதை முடியுமா? அதனால் புலவர் ஒரு சொல்லோவியம் தீட்டுகிறார். எந்த மலை போல? அயிரை என்னும் உயர்ந்த மலைபோல! அயிரை என்பது மேற்கு மலைத் தொடர்ச்சியில் உள்ளதொரு மலை. வறட்சி காரணமாக அந்த மலையருவி வறண்டாலும் அயிரை மலை அசையாது நிற்குமாம். அருவி துவன்றும் துவறாத அயிரை மலைபோல! அந்த அருவியொலி எதனை ஒத்திருக்கிறது? பறையொலியை ஒத்திருக்கிறதாம். பறைபோல ஒலிக்கும் அந்த அருவியோசை பொன்னுலகத்திலும் கேட்கிறதாம். பொன்னுலகத்தில் கேட்கிறதெனவே மண்ணுலகத்தில் கேட்பது சொல்ல வேண்டாவாயிற்று. இப்போது கூட்டிப் பொருளுரைத்தால் உவம அடைகளின் அழகும் நயமும் புரியக் கூடும்.

“பொன்னுலகமாகிய தேவர் உலகத்திலும் கேட்கக் கூடிய பறையொலியை ஒத்திருக்கும் மலைப்பக்கங்களில் வீழும் எண்ணற்ற அருவியானது ஒழுகுவதை நிறுத்திக் கொண்டாலும் நிமிரந்து நிற்கின்ற அயிரை என்னும் உயர்ந்த மலைபோல நின்புகழ் நிலைக்கட்டும்””

இந்த உவமத் தொகுப்பையும் சித்திரிப்பையும் நோக்கினால் அருவியின் ஒலியைக் கேட்கிறபோதே படைப்பாளன் நினைவுக்குப் பறையொலி வருகிறது. முன்னது இயற்கை. பின்னது சமுதாயம். இயற்கையையும் சமுதாயத்தையும் இணைக்கின்ற பாலமாக உவமங்கள் செயல்பட்டுள்ளன என்பதாகக் கருத வேண்டியதிருக்கிறது.

நிறைவுரை

உவமம் பொருள் விளக்கக் கருவி அல்லது கருத்து விளக்கக் கருவி என்பதே தமிழ்க் கவிதைகளின் உவமக் கோட்பாடு. உவமத்திற்கும் பொருளுக்குமான அடைகளை ஒன்றினைச் சொல்லி மற்றொன்றைச் சொல்லாமல் விடுவதற்கும் இதுதான் காரணம். ஒப்புமை உணர்வால் ஒன்று மற்றொன்றினுள் அடங்குதலின் கற்பார் இரண்டின் பண்புகளையும் வினைகளையும் பொருத்திக் காண வேண்டும். உவமத்திற்கே மற்றொரு உவமத்தைச் சொல்வதும் மன்னனின் திருவோலக்கத்தில் இருந்தாலும் மக்களையே எண்ணி உவமம் புணர்ப்பதும் தமிழ்க்கவிதைகளின் உவமக் கோட்பாடுகளாகவே இருந்திருக்கின்றன.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *