குறளின் கதிர்களாய்…(365)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(365)

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
லறங்கூறு மாக்கந் தரும்.

– திருக்குறள் – 183(புறங்கூறாமை)

புதுக் கவிதையில்…

பிறரைக் காணாதபோது
இகழ்ந்து பேசியும்,
கண்முன்னே
பொய்யாய்ப் புகழ்ந்தும்
பொருள் பெற்று
உயிர் வாழ்வதைவிட,
அவ்வாறு செய்யாமல்
இறந்திடுதல்
அறநூற்கள் சொல்லும்
ஆக்கம்
அவனுக்குத் தருமே…!

குறும்பாவில்…

பிறர் இல்லாதபோது இகழ்ந்தும்
நேரில் புகழ்ந்தும் பொருள்பெற்று வாழ்வதைவிடச்
சாதலே அறநூலார் ஆக்கந்தருமே…!

மரபுக் கவிதையில்…

கண்முன் பிறரைக் காணாமல்
கசப்புடன் இகழ்ந்தும் நேரினிலே
விண்ணின் அளவாய்ப் புகழ்ந்துரைத்தும்
விரும்பிடும் பொருளைப் பெற்றேதான்
மண்ணில் உயிராய் வாழ்வதைக்கால்
மரணம தெய்திப் போவதுதான்
உண்மை சொல்லும் அறநூற்கள்
உரைத்திடும் ஆக்கம் அவனுக்கே…!

லிமரைக்கூ…

பிறர்மேல் புறங்கூறி, நேரில்
புகழ்ந்துயிர் வாழ்தலைவிட அறநூல் ஆக்கம்பெற
இறந்து போகலாம் பாரில்…!

கிராமிய பாணியில்…

சொல்லாத சொல்லாத
பொறஞ்சொல்லு சொல்லாத,
பெறரக் கெடுத்து
பொறஞ்சொல்லு சொல்லாத..

அடுத்தவனக் கெடுத்து
அவன் இல்லாதபோது
கீழ்த்தரமாப் பேசியும்,
நேருல நயந்து பேசியும்
அவங்கிட்ட
வாங்கித் தின்னு உசிரு
வாழுறதவிட
அது இல்லாமச்
செத்துப்போறதுதான் அவனுக்குப
பெரும்படிப்பு படிச்சவுங்க சொல்லுற
பெரும தருமே..

அதால
சொல்லாத சொல்லாத
பொறஞ்சொல்லு சொல்லாத,
பெறரக் கெடுத்து
பொறஞ்சொல்லு சொல்லாத…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க