படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 2

முனைவர் ச. சுப்பிரமணியன்

கரடி குளத்தில் ஒரு காளமேகம்!

‘சொல்லேர் உழவர்’ என்று ஒரு தொடர் திருக்குறளில் வரும். ‘சீரிய கூரிய தீஞ்சொல்’ என்பது கம்பராமாயணம். நீங்களும் நானும் பேசுகிறபோது இந்தச் சொற்கள் இப்படி அமையா. காரணம் நமக்குச் சீரிய சொல்லும் தெரியாது. கூரிய சொல்லாக்கவும் இயலாது. அதனால் அது தீஞ்சொல்லாகவும் அமையாது. சிந்தனைச் செல்வர்கள் செந்தமிழ் வித்தகர்கள் பயன்படுத்துகிறபோது அவர்கள் ஆற்றல் காரணமாகச் சாதாரண சொற்களும் கூர்மை பெறும். சிந்திக்க வைக்கும். திகைக்க வைக்கும். சில நேர்வுகளில் சிரிக்கவும் வைக்கும். கம்பதாசனும் கண்ணதாசனும் வாணிதாசனும் நாம் பேசுகிற தமிழைத்தான் பேசினார்கள் எழுதினார்கள். அவர்களுக்குத் தீஞ்சொல்லாக அமைகிறது. நமக்குத் தீய்ந்த சொல்லாகிவிடுகிறது. என்ன செய்வது? விதியை மாற்ற முடியுமா என்ன? அவ்வாறு திகைக்கவும் வியக்கவும் சிரிக்கவும் வைக்கின்ற சொல்லாடல்கள் அமைந்ததொரு இலக்கியத்தைச் ‘சிலேடை’ என்று வழங்கினார்கள். தமிழிலக்கிய வரலாற்றில் இடைக்காலம் வரை இவ்வாறான கவிதைக் கூறு இருந்ததற்கான இலக்கிய வரலாற்று ஆவணங்கள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. இந்த இலக்கிய வித்தையில் விருதுகள் பெற்ற சிலருள் ஒருவர் காளமேகம்.

மரபிலக்கிய வடிவங்களில் சிலேடை

மரபிலக்கிய வடிவங்களில் சிலேடைக்குத் தனியிடம் உண்டு. அந்த வடிவத்தால் பேரிலக்கியமோ காவியமோ அமையாவிடினும் தேநீர் அருந்தி மகிழ்வதுபோல ஒருவகையான தற்காலிக இன்பத்தைத் தருகின்ற வகையில் அதற்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. சிலேடை பெரும்பாலும் நேரிசை வெண்பாவில் அமைந்துவிடுவதாலும் வெண்பாவை மரபுக்கவிதை எனக் கருதிவிடும் மயக்கத்தாலும் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பு. ‘சிலேடை’ என்பது பெரும்பாலும் வெண்பா யாப்பினால் அமைந்த மரபுக்கவிதை. சிலேடை என்பது உள்ளடக்கம். வெண்பா என்பது உருவம். உருவமும் உள்ளடக்கமும் அத்வைதம் அடைந்தால்தான்  அது மரபுக்கவிதை. சரியா?

விருத்தத்திலும் சிலேடை அமையலாம்.

ஒரே பொருளுக்கான பல சொற்களையும் இருபொருட்களின் அதாவது இரண்டு எழுவாய்களின் வினைகளாக ஒரே வினைச்சொல்லையும் சாதுரியமாகக் கையாளும் கவிதைத் தொழில் நுட்பக்கலைக்குச் சிலேடை என்று பெயர். ‘சிலேடித்தல்’ என்னும் சொல்லுக்கு இருவகையாக நோக்குதல் என்பது தண்டியலங்கார உரைப்பகுதி.

“இம்பர்வான் எல்லைரா மனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணாநீ?’ என்றாள் பாணி!
‘வம்பதாம் களபம்’ என்றேன் ‘பூசும்’ என்றாள்!
‘மாதங்கம்’ என்றேன்யாம் ‘வாழ்ந்தேம்’ என்றாள்!
‘பம்புசீர் வேழமெ’ன்றேன் ‘தின்னும்’ என்றாள்!
‘பகடெ’ன்றேன் ‘உழும்’ என்றாள் பழனந்தன்னை!
‘கம்பமா’ என்றேன்’நற் களி’யாம் என்றாள்!
‘கைம்மா’ என்றேன் சும்மா கலங்கினாளே!”

என்று ஒரு பாட்டு அந்தகக்கவி வீரராகவ முதலியார் எழுதியது. முற்றிலும் வேடிக்கை மிகுந்து காணப்படினும் தமிழின் மொழிவளம் சிறக்க நின்ற சிலேடைப் பாடல் இது. இது எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம் என்னும் யாப்பில் அமைந்தது. வெண்பாவில்தான் சிலேடை அமையும் என்பதற்கு எதிரான கருத்தியல் கொண்டது. எந்தப் பாவிலும் இனத்திலும் அமையலாம். பாட்டில் சிலேடை இப்படி அமைகிறது.

 1. இராமன் என்னும் செல்வந்தனைப் பாடி யானையைப் பரிசாகப் பெற்று வந்தான் பாணன். ‘அவனைப் பாடி ‘என்ன கொண்டு வந்தாய்?’ என்று பாணன் மனைவி பாணினி வினவுகிறாள். அதற்குப் பாணன் ‘களபம்’ கொண்டு வந்தேன் என்கிறான். ‘களபம்’ என்பது சந்தனத்திற்கும் யானைக்குமான பொதுச்சொல். பாணினி சந்தனம் எனக் கருதி தனக்குப் பூசிவிடச் சொல்கிறாள்.
 2. பாணினிக்குத் தெளிவாகப் புரிதல் வேண்டி ‘மாதங்கம்’ என்றான் பாணன். ‘மாதங்கம்’ என்பது யானைக்கு மற்றொரு பெயர். பாணினி என்ன நினைத்துவிட்டாள்? மா தங்கம் எனப் பிரித்துத் தங்கக் குவியல் என எண்ணி ‘வாழ்க்கைக்குப் போதும்’ என்கிறாள்.
 1. குழப்பத்தைத் தீர்க்க எண்ணிய பாணன் தொடர்ந்து ‘பம்புசீர் வேழம்’ என்றான். ‘வேழம்’ என்றால் யானைக்கும் கரும்புக்கும் பொதுச்சொல். பாணினி அதனைக் ‘கரும்பு’ எனக் கருதி ‘தின்னலாம்’ என்கிறாள்.
 1. தன் முயற்சியில் சளைக்காத பாணன் மீண்டும் தான் பெற்று வந்தது ‘பகடு’ என்றான். பகடு என்பது யானைக்கும் உழுமாட்டிற்கும் பொதுச்சொல். பாணினி அதனை ‘உழுமாடு’ எனக் கருதிப் ‘பழனத்தை உழலாம்’ என்றாள்.
 1. எப்படியாவது பாணினிக்குப் புரியவைத்துவிட வேண்டும் என எண்ணிய பாணன் ‘கம்பமா’ என்றான். ‘கம்பம்’ என்றால் கட்டுத்தறி. ‘கட்டுத்தறியில் கட்டக்கூடிய விலங்காகிய யானை’ என்று அவன் கூறினான். அப்போதும் இவள் ‘கம்பு மாவு’ எனக் கருதி அதனைக் கொண்டு களிசெய்து உண்ணலாம் என்றாள்.
 1. இறுதியாகப் பாணன் சொன்னான் தான் பெற்றுவந்தது ‘கைம்மா’ என்றான். ‘கைம்மா’ என்பதற்கு ஒரு பொருள்தான் உண்டு. ‘கையை உடைய விலங்கு’ யானை மட்டுமே. அப்போதுதான் தன்னுடைய மொழியறிவின் பற்றாக்குறையை எண்ணி வருந்தினாளாம் பாணினி.

இது ஒரு கற்பனை. சொற்களால் நெய்து காட்டப்படும் கவிதைப் பட்டு. கிட்டுவது தற்காலிக இன்பமாக இருந்தாலும் தமிழ்மொழியின் சொற்களஞ்சியத்தைக் கவித்துவம் குறையாமல் வெளிப்படுத்தி நிற்கிறது என்பதை உணரமுடியும். இதில் களபம் என்பதைச் சந்தனத்திற்கும் ஆக்கியது செம்மொழிச் சிலேடை. மாதங்கம் என்பதை மா தங்கம் எனப் பிரித்து நிறைய தங்கம் எனப் பொருள் கொண்டது பிரிமொழிச் சிலேடை. பிரிக்காமலேயே இருபொருள் தருமானால் அது செம்மொழிச் சிலேடை. பிரித்து இருபொருள் தருமானால் அது பிரிமொழிச் சிலேடை. சரியா?

விடுகதை வேறு! சிலேடை வேறு!

விடுகதைக்கும் சிலேடைக்கும் வேறுபாடு தெரியாது மயங்குவதும் உண்டு. விடுகதையை ஆங்கிலத்தில் ‘RIDDLE’ என்பர். ஒன்றுக்கான பல பரிமாணங்களை அல்லது அடையாளங்களை நிரல்படச் சொல்லி இறுதியில் விடையை வரவழைப்பது விடுகதை அல்லது புதிர். ஒரே பொருளை அல்லது அப்பொருளுக்கான செயலை இருபொருட்களில் ஒரே வகையாக நோக்கி எழுதுவது சிலேடை.

விடுகதை அல்லது புதிர்

அந்தக் கால மன்னன் ஒருவனுக்கு உள்ளங்காலில் அரிப்பு வந்ததாம். மருந்து காணாமல் திரிந்த மன்னனுக்கு மருந்தறிந்த புலவர் மருந்தின் பெயரைச் சொன்னாராம். தற்கால மருத்துவர் எழுதும் குறிப்புச் சீட்டையாவது முயன்றால் புரிந்து கொள்ளலாம். அந்த மருந்துப் பெயரோ மன்னனுக்கும் புரியவில்லை. மற்றவருக்கும் புரியவில்லை. காரணம் அது முன்பே சொல்லியதுபோலச் ‘சொல்லேர் மருத்துவர்’ சொல்லிய மருந்து அது. அவர் என்ன சொன்னார்?

“பத்துரத மன்னவனின்
புத்திரனின் மித்திரனின்
சத்துருவின் பத்தினியின்
காலை வாங்கித் தேய்!”

எதுகை இருந்தாலே கவிதை என்பது அந்த மருத்துவருக்கும் தெரிந்திருக்கிறது. தமிழ்க்கவிதைகளின் கேட்டின் தொடக்கக்காலம் அதுவாக இருக்கலாமோ? எல்லாரும் குழம்பினார்கள். மருந்தின் பெயரும் தெரியவில்லை. இறுதியில் பாட்டை எழுதியவனே உரை சொல்வது போல, அந்த மருத்துவரே மருந்தை விளக்கினார்.

“தசம் என்றால் வடமொழியில் பத்து. பத்து ரதம் இருந்ததால் அயோத்தி மன்னனுக்குத் ‘தசரதன்’ என்று பெயர். ‘புத்திரன்’ என்றால் மகன். தசரதனுக்கு மகன் இராமன். மித்திரன் என்றால் நண்பன்  இராமனுக்குப் நண்பன் சுக்ரீவன். சத்துரு என்றால் பகை. சுக்ரீவனுக்குப் பகையானவன் வாலி. சத்துருவாகிய வாலியின் பத்தினி தாரை. தாரையை என்ன செய்வது? காலை வாங்க வேண்டுமாம்? இன்றைய சட்டம் இடங்கொடுக்குமா? ஆனால் அன்றைக்குக் காலை எடுத்தார்கள். விளைவு? ‘தாரை’ தரையானாள்!  காலை எடு! தேய்! அரிப்பு அடங்கும். தரையில் அடியை நன்கு தேய்த்தால் அரிப்பு அடங்கும்”

இதுதான் மருத்துவப் புலவர் சொன்னது. இதனை ஆய்வாளர் பலரும் சிலேடைக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். அது பொருந்தாது. இது புதிர்!

பூரி பிடிக்காத ஜெகந்நாதன் உண்டா?

அனந்தவர்மன் சோதங்கதேவன் என்னும் சோழமன்னனால் கட்டப்பட்டது தற்போதைய ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி செகந்நாதர் ஆலயம். இங்கே பெருமாள் மூலவர் அறிவியலுக்குப் புலப்படாத பல மர்மங்களைத் தன்னகத்தே கொண்டிலங்கும் இந்தக் கோயில் கோபுர நிழலும் தஞ்சை பெரியகோயிலைப் போலவே மண்ணில் விழாது. கோயில் கொடி காற்றுக் எதிர்த்திசையில் பறக்கும். அந்தக் கோயிலில் வீற்றிருப்பவர் செகந்நாதர். அது  அமைந்திருக்கும் இடம் பூரி. ஒருமுறை வாகீச கலாநிதி ஒரு சொற்பொழிவுக்காக அங்கே சென்றிருந்தார். காலைச் சிற்றுண்டிக்காகப் பூரி செய்திருந்தார்கள். அவரைப் பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் “ஐயா, தங்களுக்குப் பூரி பிடிக்குமா?” என்று வினவ, அடுத்த நொடியே கி.வா.ஜ. “செகந்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?” என்றாராம்.

இதுதான் சிலேடை. இந்தச் சொல்லாடலில் ‘பூரி’ என்பது ஊரையும் உணவையும் குறிக்க ஜெகநாதன் என்பது கலைமகள் ஆசிரியரையும் திருக்கோயில் மூலவரையும் குறித்தது காண்க.  இந்தச் சிலேடையின் பயன்கள் வெகு குறைவுதான். அதனாலேயே இதனை எளிமையாகப் பாடிவிடலாம் என்பது அறியாமை. சொற்களஞ்சியப் பெருக்கமும் ஆழ்ந்த புலமையும் பாடல் புனைவதில் பேராற்றலும் வடிவத்தில் தெளிவும் நோக்கில் கூர்மையும் இருந்தாலேயொழிய இந்த இலக்கிய வித்தையில் அகரம் வரும். அடுத்த எழுத்து வராது.

செருப்பைச் சிறப்பித்த வள்ளிமுத்து

‘கண்ணீர்ப்பூக்கள்’ என்னும் தமது கவிதை நூலில் கவிஞர் மேத்தா செருப்பை நேர்காணல் செய்திருப்பார். வள்ளிமுத்து செருப்பை நாயோடும் ஒப்பிடுகிறார். நிலவோடும் ஒப்பிடுகிறார். இரட்டைக்கிளவி என்னும் இலக்கணத்தோடும் ஒப்பிடுகிறார்.

“சேர்ந்திருக்கும் சீரளவைக் கொள்ளும் அடியொற்றி
ஊர்ந்து நடப்பின் ஒலிக்குறிப்பும் உண்டாம்
பிரித்தால் பொருள்தராத பாதணியைப் பேசு
இரட்டைக் கிளவிதான் என்று”

செருப்பு இணையானது. இரட்டைக் கிளவி இரட்டையாகவே வரும். அடுக்குத் தொடர்போல மூன்றாக நான்காக அமையாது. குறுகுறு மொறுமொறு என்பனபோல அளவோடு அமையும். இணை செருப்புக்கள் ஒரே அளவாகவே அமையும். இரட்டைக் கிளவி செய்யுளடிக்குரியது. செருப்பு பாதத்திற்குரியது. இரட்டைக்கிளவி குறிப்புப் பொருளைத் தரும். நடக்கிறபோது செருப்பு ‘கீரீச்’ ஒலி எழுப்புவது உண்டு. இரட்டைக் கிளவியைப் பிரித்தால் பொருள் தராது. ஒற்றைச் செருப்பை வைத்து ஒன்றும் செய்ய இயலாது.

இந்தப் பாடலில் செருப்பின் இணை, இணையளவு, இருசொல்லாகவே வருதல், ஒலியெழுப்புதல், ஒற்றைச் செருப்பால் பயனின்மை ஆகியவை நோக்கப்பட்டிருக்கின்றன. இரட்டைக் கிளவியோடு ஒப்பிட்ட கவிஞர், அடுத்து செருப்பை முழுமதியோடு ஒப்பிடுகிறார்.

“கோல உடல்தேயும் கூடவரும் கால்நடக்க
நீலகண்டன் சென்னியிலும்  நின்றதுண்டாம் — நாளும்
கறைபடியும் நீர்மிதக்கும் காணவெளி நிற்கும்
நிறைநிலவும் காலணியும் நேர்”

செருப்பின் அழகு தேய்வதனால் குறையும் முழுநிலாவிலிருந்து தேய்பிறை தொடங்கும். செருப்போடு நாம் நடப்போம். நாம் நடக்கும்போது நிலவும் கூடவருவதுபோல் தோன்றும். ‘பிறைசூடீ’ என்று சிவனுக்குப் பெயர். கண்ணிடந்தப்ப கண்ணப்பன் சிவலிங்கத்தின் மீது தன் செருப்பணிந்த காலை வைத்தார். நிலவில் முயலுண்டு. செருப்பில் கறையுண்டு. நீர்நிலைகளில் நிலவு தோன்றும். காதலர்கள் அதனைக் கையில் பிடித்து விளையாடுவார்கள். செருப்பு நீரில் மூழ்காது. மிதக்கும். செருப்பு இல்லத்தின் வெளியே கிடக்கும். நிலவும் வான் வெளியில் திரியும்.

இந்தப் பாட்டில் செருப்பு தேய்தல், அடியொடு நடத்தல், கண்ணப்பன் செருப்பு, கறையும் அழுக்கும் படிதல், தோலிலே ஆனதால் நீரிலே மிதத்தல், வீட்டுக்கு வெளியில் ஆதரவின்றிக் கிடத்தல் என்பனவற்றைக் கவிஞர் நோக்கியிருக்கிறார். தொடர்ந்து நாயோடு செருப்பினை ஒப்பிட்டு இப்படி எழுதுகிறார்.

“கட்டிவைத்த வாரணியும் காப்பவர் தாள்பணியும்
எட்டுமட்டும் ஊர்சுற்றி வீடேகும் – ஒட்டி
உறவாடார் கால்கடிக்கும், ஒப்பென்றே சொன்னேன்
சிறப்புடன் நாயும் செருப்பு”

செருப்பில் வார் உண்டு. நாய் கழுத்தில் வார் அணியும். அணிந்தவர்  தாளில் அடங்கிக் கிடக்கும். புரப்பவர் கண்டால் .வாலைச்சுருட்டிப் படுத்துக் கொள்ளும். செருப்பு, கால் செல்லும் வழியெல்லாம் சென்று வீடு திரும்பும். நாயும் ஊரெல்லாம் சுற்றி வீடு திரும்பும். புதுசெருப்பு கடிக்கும். அறியாதாரை நாய் கடிக்கும்.”

கூந்தலைப் பாடிய கவிஞர்

தமிழிலக்கியத்தில் நான் அறிந்தவரை ‘‘மயிர்நீப்பின்’ என்ற குறட்பாவிலும் ‘குஞ்சியழகும்’ எனத் தொடங்கும் நாலடியார் பாடலிலுந்தான் ஆண்களுக்கான தலைமயிர் பாடுபொருளாகியிருக்கிறது. அதனைக் கூடப் பால்பிரித்துப் பார்க்கக் கூடாது என்பர். அதனை ஏற்றால், எல்லா இடங்களிலும் தோகையரின் கூந்தலே பாடுபொருளாகியிருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும். கூந்தலுக்கு ‘ஐம்பால்’ என்பது  இலக்கிய வழக்கு. முடி, கொண்டை, குழல், பணிச்சை, சுருள் என ஐந்துவகையாக அள்ளி முடிவதால் அதற்கு அத்தனைப் பெயர். இன்னொரு வகையாகவும் கவிஞர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். கருமை, மென்மை, திரட்சி, நீளம், நெளிவு என்னும் ஐந்து பண்புகள் இருந்ததால் ஐம்பால் என்றும் அழைத்தார்கள் என்பாரும் உண்டு. எது எப்படியாயினும் இந்த அனுமானங்கள் எல்லாம் தற்காலத்தில் காட்டலாகாப் பொருள்! கழிந்ததற்கு இரங்கலே!.

கூந்தலும் சிலந்தியும்

இந்தக் கூந்தலைச் சிலந்தியோடும் முல்லையோடும் ஒப்பிடுகிறார் கவிஞர்.

“நேருச்சி மேலெடுக்கும் நீள் பின்னல் கொள்வதுண்டாம்!
சீரெழிலால் பூச்சிக்கும் நூல் சேர்க்கும்! தேர்ந்திடுவீர்!
காலெட்டும் கண்வளர்ப்பார் ஒட்டடையும் வன்சிலந்தி
கோலப்பெண் கூந்தலொப்பாய்க் கொண்டு”

என்னும் பாட்டில் சிலந்தியோடு ஒப்பிடுவதைக் காணலாம். கூந்தலில் உச்சியில் வகிடு எடுப்பர். சிலந்தி வீட்டின் உச்சியில் வலை பின்னும். பின்னல் ஜடை உண்டு. சிலந்தி வலையில் பின்னல்கள் உண்டு. நூலால் கட்டப்பட்ட பூக்களைக் கூந்தலில் சூடுவர். சிலந்தி வலையில் பூச்சிகள் சிக்கிக் கொள்ளும். கூந்தல் அடிப்பாதம் வரை நீளும். எட்டுக்கால்கள் உண்டு சிலந்திக்கு! கூந்தலில் ஈரும் பேனும் ஒட்டும் அடையும். சிலந்திவலையால் ஒட்டடை பெருகும். இப்போது அந்தக் கூந்தலை முல்லையோடு ஒப்பிடுகிறார்.

கூந்தலும் முல்லையும்

“வெட்ட முளைத்தலால் மொட்டை எடுத்தலால்
கட்டி முடித்தலால் கொட்டி உதிர்தலால்
பின்னிப் படர்தலால் பெண்கூந்தல் முல்லையுடன்
ஒன்றெனவே ஊரோர்க்கு உணர்த்து”

“கூந்தல் வெட்ட வெட்ட வளரும். முல்லைக்கொடி வெட்ட வெட்ட வளரும். கூந்தலை மொட்டையடிப்பர். மொட்டுக்களைக் கட்டி முடிப்பார்கள். கூந்தலைக் கட்டி முடிப்பார்கள். முல்லைச் சரத்தைக் கட்டி முடிப்பார்கள். கொய்யாத பூக்கள் உதிரும். கூந்தல் கொட்டுவதும் உண்டு. காற்றில் முல்லை படர்ந்தாடும். மகளிர் கூந்தல் காற்றில் ஆடும்.

வள்ளிமுத்து நோக்கும் காளமேகத்தின் நோக்கும்

கூந்தலை இருவேறு பொருள்களுடன் ஒப்பிடுகிறபோது கூந்தலைப் பற்றிய ஆழமான பார்வை கவிஞனுக்கு இருந்திருக்கிறது. வகிடு எடுத்தல், பின்னல் ஜடை, பூக்களைக் கூந்தலில் சூடுதல், அடிப்பாதம் வரை நீளும். கூந்தலில் ஈரும் பேனும் ஒட்டும் அடைதல், வெட்ட வளரும். கட்டி முடித்த கூந்தலை மொட்டையடித்தல், உதிர்தல், காற்றில் ஆடுதல் என்னும் கூந்தலின் அத்தனை அழகியல் பரிமாணங்களையும் கவிஞர் நோக்கியிருக்கிறார்.

இவற்றுள் முதலில் காட்டிய மூன்று பாடல்களில் பாராட்டுக்குரியது. செருப்பின் அத்தனைப் பரிமாணங்களையும் உற்றுத் தொகுத்து அவற்றை மூன்று பொருள்களோடு ஒப்பிட்டுக் காட்டியிருப்பதுதான். பிந்தைய இரண்டு பாடல்களில் கூந்தலின் தோற்றம், வினை உள்ளிட்ட அத்தனைப் பரிமாணங்களையும் உற்றுத் தொகுத்து அவற்றை வேறு இரண்டு பொருள்களோடு ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார். இதுதான் மரபின் தாக்கம் அல்லது வெளிப்பாடு! கிளியை வானவில்லோடும் வெற்றிலையோடும் குதிரையைப் பாசியோடும் மத்தளத்தோடும் கோழியை மண்புழுவோடும் பெண்ணோடும் சிவனைத் தேங்காயோடும் விளக்குமாற்றோடும் ஆற்றோடும் சிலேடித்திருக்கிறார் வள்ளிமுத்து.

காளமேகம் பாடிய பரத்தையும் பாம்பும்

இது எப்படி மரபாகும்? காளமேகம் என்ன செய்திருக்கிறார் என்றால் வேசியின் பல்வேறு சாகசங்களை உற்று நோக்கித் தொகுத்து அவற்றைப் பனை, தென்னை மற்றும் வெற்றிலையோடு ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார். அவற்றை விரித்தால் பெருகும். பரத்தையரைப் பல்வகைப் பொருளோடு ஒப்பிட்டுப் பாடியதைப் போலவே காளமேகம் பாம்பையும் பல்வகைப் பொருட்களோடு ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார்.

“நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது”

எனப் பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும் சிலேடை கண்டிருக்கிறார்.

“ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித் திறக்கில் முகம் காட்டும்  —  ஓடி மண்டை
பற்றிற் பரபரெனும் பாரில் பிண்ணாக்கும் உண்டாம்”

எனப் பாம்புக்கும் எள்ளிற்கும் பொருத்தம் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.

“பெரிய விடமே சேரும் பித்தர் முடியேறும்
அரியுண்ணும் உப்புமேலாடும் – எரிகுணமாம்”

என்னும் வரிகளில் பாம்பின் விடத்திற்கும் வாழைப்பழத்தின் சிறப்புக்கும் ஒப்புமைக் கண்டிருக்கிறார்.

மேற்கண்ட மூன்று பாடற்பகுதிகளிலிருந்து பாம்பைப் பற்றிய காளமேகத்தின் உற்று நோக்கல் மிகத் தெளிவாகும். படைப்புக்கு அடிப்படையே உற்றுநோக்கலே. சாதாரண பொருளைச் சாதாரணமானவன் பார்ப்பதற்கும் படைப்பாளன் அதிலும் கவிஞன் பார்ப்பதற்குமான வேறுபாடே கவிதைக்கான மூலம். விடமிருக்கும், தோலுரிக்கும், சிவன் முடிமீது இருக்கும், பல்பட்டால் கடிபட்டவன் பிழைப்பதரிது, ஆடும், குடத்துக்குள் சென்றுவிடும், ஆடும் போது இரையும், குடத்தைத் திறந்தால் சீறி எழுந்து முகம் காட்டும்,  கடித்தால் மண்டை எரியும், பிளவுபட்ட நாக்கு, காற்றை உண்ணும், உப்பும், மேல்நோக்கியாடும் எனப் படமெடுக்கும் பாம்பைப் படம்பிடித்துக் காட்டுவது காளமேகத்திற்குக் கைவந்த கலை. அந்தக் கலை கரடி குளத்தாருக்கும் வந்திருக்கிறது என்பதுதான் கட்டுரையின் சாரம்!

இந்தக் கட்டுரை திறனாய்வுக் கட்டுரையன்று, கவிதை அனுபவத்தின் களிப்பான வெளிப்பாடு. சிலேடை வேடிக்கையானது என்பதாலேயே சிலேடை பாடுவதும் வேடிக்கையானது என்று பொருளன்று. படைப்பாளரின் வித்தகம் அனைத்தும் வெளிப்படும் பாட்டுத்தளம். வித்தகம் இல்லாதார் இதனைப் படைக்க முயலலாம். வெற்றி பெறுவது அவ்வளவு எளிதன்று. இந்தப் படைப்பாற்றல் எல்லாருக்கும் கைவராது. வள்ளிமுத்துக்கு வந்திருக்கிறது. செந்தமிழ்த்தாயின் புன்னகையில் வள்ளிமுத்து சிலேடைக்கும் காப்புரிமை உண்டு! ‘கரடி குளத்தில் ஒரு காளமேகம்’ என்பது மோனைத் தொடரன்று’ என்பது ஓரளவு புரியக் கூடும்!

 

சிலேடைக்குச் சிக்கெடுத்த பேச்சிமுத்து வள்ளிமுத்து

‘நீரால் நிரம்பும் பல குளங்களுக்கு நடுவே தான் பிறந்த கரடி குளத்தைச் சீரால் நிரப்பியவர் இவர்! கழுகுமலை முருகன் மீது காவடிச் சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியார் இவருக்கு அடுத்த  ஊர்க்காரர்!

தானாகத் தமிழ் படித்துத் தேனாகக் கவிபாடுபவர். ‘நகுமோமு’ ஆலாபனை பாடி முடித்த களைப்பு நீங்க ‘என்ன கவி பாடினாலும்’ எனத் தொடங்குவாரே மதுரை சோமு, அவர் போலக், ‘காக்கைக்குத் தூது’ விட்ட களைப்பு நீங்கப் பாடிய சிலேடைகள் பல.

‘தெள்ளுதமிழில் இசைத்தேனைப் பிழிந்தெடுத்துத் தின்னும் தமிழ் மறவர் கூட்ட’த்தின் தென்திசைத் தளபதி! வகுப்பறைகளில் பாடநூற்பகுதிகளோடு பண்பாட்டுக் கூறுகளையும் பக்குவமாகப் பந்திவைப்பவர்.

கவிதை மாதிரி எழுதிக் கொண்டு ‘கவிஞர்’ எனத் தம்மைக் காட்டி என்னை நடுங்க வைத்தவர் நடுவே சித்திரக் கவிதைகளால் ஒத்தடம் கொடுத்தவர். இந்தச் சிலேடைகள் இவரது குடியிருப்பு முகவரி அன்று. பாடிவீட்டுத் தற்காலிக முகவரி. தமிழ்க்கவிதை உலகம் தனது நம்பிக்கை வலையை விரித்தபோது சிக்கிய சுறா மீன்கள் சிலவற்றில் இவரும் ஒருவர்! மரபு என்பது யாப்பு மட்டுமன்று என்னும் உண்மையை இவருடைய கவிதைகளும் இவைபோன்ற சிலேடைகளும் புரிய வைக்கக்கூடும். கரடிகுளத்தில் பிறந்து தாரமங்கலத்தில் பணியாற்றும் இவருக்குக் கனவுகளில் நம்பிக்கை உண்டு! ஆம்! கவிதைக் கனவுகள்! கனவு மெய்ப்பட வேண்டும்!

(தொடரும்…)

1 thought on “படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 2

 1. வணக்கம்! எழுதியவன் எழுதுகிறேன்.! நான் எழுதிய இந்தத் திறனாய்வுபுக் கட்டுரையை மிகச சிறப்பான முறையில் பதிப்பித்து வெளியிட்டிருக்கும ‘வல்லமை’ மின்னிதழ் குழுமத்திற்கும் அதன் நிர்வாக ஆசிரியர் திரு. அன்னா கண்ணன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக கொள்கிறேன்.
  ‘அரிய கற்றும் ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு’ என்னும் ஆன்றோர் வாக்கை நான் கவனத்திற் ;கொள்ளவில்லை என்றே கருதுகிறேன்.
  அதாவது கட்டுரையில் பாம்பை ஒப்பிடும் மூன்றாவது ஒப்பீடாகிய ‘பெரிய இடமே சேரும்’’ என்னும் பகுதி எலுமிச்சைப் பழத்திற்கே பொருந்:தும். அவ்விடம் வாழைப்பழம் என்பது பொருந்தாது. அது நஞ்சிருக்கும் தோலுரிக்கும் என்ற பகுதியில் அமைந்துள்ள்து.
  தவறுக்குக் காரணத்தையும் விளக்கத்தையும் சொல்வது எனக்கு உடன்பாடன்று. ஒப்புக்கொள்வதே உயர்பண்பு.!. அன்பர்கள் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.
  தவறுக்கு வருந்துகிறேன். வல்லமைக்கு வாழ்த்துக்கள்!
  முனைவர் ச. சுப்பிரமணியன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க