மறக்க முடியாதுதான்! (சிறுகதை)
நிர்மலா ராகவன்
“முப்பது வருஷத்துக்கு மேல ஆச்சு! இன்னும் என்ன, அவனைப்பத்திப் பேச்சு?” சாருவின் குரலில் எரிச்சலும், பொறாமையும் கலந்திருந்தன.
மகளுக்கு என்ன பதில் கூறுவது!
தம்பி நான்கு வயதாக இருந்தபோது, அவன் தாயின் மடியில் அமர்ந்ததைப் பார்த்து, “என்னடா, நீ இன்னும் சின்னக் குழந்தையா?” என்று கேலி செய்தவள்தானே!
அதன்பின், ஏதோ தவறு செய்பவன்போல், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அக்கா அருகில் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, தாயின் மடியில் வந்து மெல்ல அமர்வான் கடைக்குட்டி பாபு.
`எனக்கு இந்தப் பாக்கியம் அதிக நாள் நிலைக்காது!’ என்று அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அம்மாவின் – மடியில் இல்லை – பக்கத்தில்கூட யார் அமர்ந்தாலும், “என் அம்மா!” என்று சண்டை போடுவானா?
அந்த நினைப்பு எழுந்தபோதே, அவ்வளவு துக்கத்திலும் சிரிப்பு வந்தது சாந்தாவுக்கு.
ஒரு முறை, அவளுடைய கணவர் அவள் பக்கத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்தார்.
வீம்புடன், “என் அம்மா!” என்று சொந்தம் கொண்டாடியபடி, அவரைத் தள்ள முயற்சித்தான் பாபு.
அவரும் விடாப்பிடியாக, “என் ஒய்ஃப்!” என்றபோது, அர்த்தம் புரியாது, அவனும் அதே வார்த்தைகளைத் திருப்பிச்சொல்ல, எப்படிச் சிரித்தாள் சாந்தா!
இரு ஆண்களும் மாறி மாறி அவளது அண்மைக்காக போட்டி போட்டார்கள்.
“அவன்தான் குழந்தை! ஒண்ணும் புரியல. நீங்க எதுக்கு அவனுக்குச் சரியா சண்டை போட்டு, அழவிடறேள்!” என்று கணவரை விரட்டியடித்தது மறக்கக்கூடியதா!
அப்பாவை எப்படி எதிர்ப்பது என்று புரியாது, பெரிதாக அழ ஆரம்பித்திருந்தான் பாபு. அக்காவாக இருந்தால் கடிக்கலாம். அப்பாவைக் கடிக்கவோ, அடிக்கவோ முடியாதே!
அப்பாவும் ஒரு பையனாக இருந்தவராம். அம்மாதான் சொல்லி இருக்கிறாளே!
`நானும் அப்பாமாதிரி பெரியவனாப் போவேனா? அப்போ எனக்கும் மீசை இருக்குமா?’ என்று தினமும் நச்சரிப்பானே!
தான் அதை அனுபவிக்கவே போவதில்லை என்று உணர்ந்துவிட்டதால், அவனுக்குள் எழுந்த இனம்புரியாத தாபம்தான் அப்படி வெளிப்பட்டது என்பது காலம் கடந்தபின்தான் புரிந்தது.
“அம்மா! எனக்கு ஏன் மீசை இல்லை?”
“நீ பெரியவனாப் போனதும் முளைக்கும்,” என்ற அவள் சமாதானம் அவனுக்குப் புரியவில்லை.
வீட்டுக்கு யாராவது நண்பர் வந்தால், பின்னாலிருந்து அவருடைய அடர்த்தியான மீசையைப் பிடித்து இழுத்துவிட்டு, “இது என்னோடது!” என்று அடம்பிடித்தபோது, மரியாதைக்குறைவாக நடந்துகொண்டதற்குத் திட்டு வாங்கினான்.
விடாப்பிடியாக, அவன் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தியபோதுதான் சாந்தாவுக்குப் புரிந்தது, `தான் எப்போது பெரியவனாக ஆவது, எப்போது மீசை முளைப்பது!’ என்று அவன் அயர்ந்திருப்பது.
புருவம் தீட்டும் பென்சிலால் பாபுவின் மேலுதட்டில் ஒரு சிறு கோடு இழுத்தாள். “இதோ! மீசை!”
கண்ணாடியில் தன்னழகை ரசித்ததோடு நிற்கவில்லை பாபு. நண்பர்களுக்கும் காட்டவேண்டாமா!
தெருவிற்கு ஓடினான். அவனைவிடச் சற்று பெரியவர்களான பையன்கள் பலமாகச் சிரித்தபோது பெருமையாக இருந்தது.
“மீசை ஜோரா இருக்கே!” ஒரு சிறுவன் தன் விரலால் அதை அழுத்தித் துடைத்து அழிக்க முயற்சிக்க, அவர்கள் சிரிப்பு பலத்தது.
கண்களில் நீர் பெருக, தாயிடம் கூறி அழ ஓடி வந்தபோது..!
யமன் எருமை மாட்டின்மேல் ஏறி வருகிறானோ, என்னவோ, பாபுவுக்கு எதிரில் வேகமாக வந்த கார்தான் யமனாக ஆயிற்று.
அத்தனை துக்கத்திலும் சாந்தாவுக்கு ஓர் ஆறுதல். ஏக்கம் இல்லாமல் அவனை அனுப்பிவிட்டோம்!
`ஆண்மையின் அடையாளமாக மீசை முளைப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைய நான் இருக்கமாட்டேன்!’ என்று பாபுவுக்குச் சொல்லத் தெரியவில்லை. அதனால்தான் அவ்வளவு ஏங்கியிருக்கிறான்!
மகளுக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது பிறந்த அருமைக் குழந்தை!
பல வருடங்கள் ஆகியும், தன் பக்கத்தில் அவன் இருக்கிறானா என்று தன்னிச்சையாகத் தடவிப்பார்த்து, வெற்றிடத்தை உணர்ந்து, வெறித்த பார்வையுடன் உட்கார்ந்திருப்பாள் சாந்தா.
தாயின் துக்கம் அதீதமாகப்பட்டது சாருவுக்கு. அவளுக்குப் புரியவில்லை பெற்றவளின் வேதனை. `என்னமோ, ஒலகத்திலே யாருமே சாகாத மாதிரிதான்!’ என்று முகத்தைச் சுழித்துக்கொண்டாள்.
எப்படியாவது, தாயின் முகத்தில் மீண்டும் சிரிப்பைக் கொண்டுவர வேண்டும் என்று வெறியுடன் படிப்பில், விளையாட்டில், இன்னும் தான் ஈடுபட்ட எல்லாக் காரியங்களிலும் சிறந்தாள்.
அந்த முயற்சிகளெல்லாம் பலனளிக்காதபோது, ஏமாற்றம்தான் வந்தது. அது கோபமாக மாறியது.
“நான் எல்லாத்திலேயும் ஜெயிக்கிறேனேம்மா. அதுக்காகவாவது நீ சந்தோஷப்படக்கூடாதா?” என்றுகூடக் கெஞ்சிப்பார்த்தாள்.
பதிலுக்கு, ஒரு வரண்ட புன்னகைதான் சாந்தாவிடமிருந்து கிடைத்தது.
“எந்த துக்கமும் ஒன்றரை ஆண்டுகளுக்குமேல் நிலைப்பதில்லை”.
எவனோ ஒரு முட்டாள்தான் அப்படிச் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறான் என்று தோன்றியது அவளுக்கு.
அவனும் ஒரு பெண்ணாக இருந்து, தன் உடலின் ஒரு பாகமாக நீண்ட காலம் தங்கியிருந்ததை இழந்தால் இப்படிப் பேசியிருக்கமாட்டான்.
கையோ, காலோ, அல்லது வேறு எந்த அங்கமோ போனால் கதறுகிறார்களே!
இன்னொரு உயிர்!
அதற்கு மதிப்பே கிடையாதா?
சாந்தாவின் பேச்சு குறைந்தது. ஓயாது வேலை செய்து, தன் வேதனையை மறக்க முயன்றாள்.
மகளுக்கு மணமாகி, பேரக்குழந்தைகளுடன் பழகும்போது, `இப்படித்தானே பாபுவும்..!” என்ற நினைப்பே மேலோங்கியது.
அவர்களுக்கு அருமையான மாமா ஒருவன் இருந்ததைக் கதை கதையாகச் சொன்னாள். அப்போதெல்லாம், என்றோ மறைந்துவிட்ட மகன் தன்னுடன் இருப்பதைப்போல் மகிழ்ச்சி எழுந்தது.
அதுவும் பொறுக்கவில்லை சாருவிற்கு.
தாயின் ஏகமனமான அன்புக்காக இன்னும் அவனுடன் போட்டி போட வேண்டியிருக்கிறதே!
“முப்பது வருஷத்துக்கு மேல ஆச்சு! இன்னும் என்ன, அவனைப்பத்திப் பேச்சு?” என்று எரிந்து விழுந்தாள்.
`நான் இருக்கப்போறது இன்னும் அஞ்சு வருஷமோ, பத்து வருஷமோ! அதுவரைக்கும் பாபுவை என்கூடவே வெச்சுக்கறேனே!’ என்று கூறத் தோன்றியதை அடக்கிக்கொண்டாள் சாந்தா.
`சொன்னால் இவள் புரிந்துகொள்ளப்போகிறாளா, என்ன!’ என்ற அலட்சியம் எழுந்தது.
அத்தாயை அத்தனை காலம் காத்திருக்க விடவில்லை கோவிட் தொற்றுநோய்.
“கடைசியாக ஒருமுறை அம்மா முகத்தைப் பார்க்கக்கூட எனக்குக் கொடுத்துவைக்கவில்லையே! அனாதையாக மருத்துவ மனையில் கிடந்து போய்விட்டாளே!” ஊரடங்குச் சட்டத்தால் வீட்டைவிட்டு நகரமுடியாத சாரு கதறினாள்.
மகனுடன் மீண்டும் சேர்ந்த ஆனந்தத்தில் அந்த முகத்தில் தங்கியிருந்த புன்னகையைக் கண்டிருந்தால் என்ன நினைத்திருப்பாளோ!