Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • மகாத்மா காந்தியும் மாவீரன் பகத் சிங்கும்

    மகாத்மா காந்தியும் மாவீரன் பகத் சிங்கும்

    ஜோதிர்லதா கிரிஜா

    மாவீரன் என்று அழைக்கப்படும் பஞ்சாப் மாநில இளைஞர் பகத் சிங்  1931 ஆம் ஆண்டில், மார்ச் 23 ஆம் நாளில் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த இங்கிலாந்து அரசால் தூக்கிலிடப்பட்டார். மகாத்மா காந்தி மனம் வைத்திருந்தால் பகத் சிங்கின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று இன்றளவும் கம்யூனிஸ்ட் தோழர்கள் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். இதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பது உண்மையான வரலாற்றை யறிந்தவர்களின் நிலைப்பாடாகும். இதைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னால், பகத் சிங் பற்றிய வரலாற்றை அறிய வேண்டியது முக்கியம்.

    பகத் சிங்  லயால்பூர் எனும் ஊரில் 1907இல் பிறந்தார். இவருடைய தந்தை சர்தார் கிஷன் சிங், தாய்மாமன்கள் இருவர் ஆகியோர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களாவர். எனவே,  சிறு வயதிலிருந்தே பகத் சிங்கின் உள்ளத்தில் ஆங்கிலேயர்கள்பால் எதிர்ப்பு உணர்ச்சி தோன்றிவிட்டது.

    தம் பன்னிரண்டாம் வயதில் வெள்ளைக்காரர்கள் புரிந்த ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் நடந்த இடத்தை அவை நடந்த சிறிது நேரத்துக்குப் பின் அங்கு சென்று பார்த்ததில் வெள்ளைக்காரர்கள் மீதான அவரது ஆத்திரம் அதன் உச்சத்தைத் தொட்டது. பின்னாளில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, முக்கியப் புரட்சியாளராகி, நவ்ஜவான் பாரத் சபா, கீர்த்தி கிசான் கட்சி போன்ற புரட்சி இயக்கங்களோடு பகத் சிங் தொடர்புகொண்டதில் வியப்பு இல்லை.

    அவர் சிறு வயதிலேயே ஐரோப்பியப் புரட்சி இயக்கங்கள் பற்றிப் படித்து, அதன் பின் பொது உடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டார். மிக இளம் வயதிலேயே ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பு எனும் புரட்சி இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் ஆனார்.  ஒரு சமயம் இங்கிலாந்து அரசால் சிறையில் அடைக்கப்பட்ட போது, இங்கிலாந்துக் கைதிகளைப் போன்றே இந்தியக் கைதிகளும் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகச் சிறையில் 63 நாள்கள் போல்  உண்ணா நோன்பிருந்து அனைத்திந்திய கவனத்தையும் கவர்ந்தார்.

    இவ்வாறு, இந்தியாவில் விடுதலைப் போராட்ட இயக்கம் அதன் உச்சத்தில் இருந்த போது, வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக, இங்கிலாந்து அரசு சைமன் கமிஷன் எனும் குழுவை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது. நம் நாட்டின் அப்போதைய அரசியல் நிலைமை பற்றிய அறிக்கையைச்  சமர்ப்பித்தலே அதன் பணியாகும்.  ஆனால் அதில் ஓர் இந்தியர் கூட இடம் பெற்றிருக்கவில்லை. எனவே, இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இக்குழுவை அறவே புறக்கணித்தன.  அந்தக் குழு  1928, அக்டோபரில் லாகூருக்கு வந்த போது,  அதற்கு எதிர்ப்புக் காட்டும் வண்ணமாக, பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லாலா லஜ்பத் ராய்,  மகாத்மா காந்தி வழியில் ஓர் அமைதி ஊர்வலத்தை நடத்தினார். ஆனால், ஜேம்ஸ் ஸ்காட் எனும் வெள்ளை அதிகாரியின் உத்தரவுப்படி, அமைதியான அந்த ஊர்வலக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினார்கள்.  அந்த அதிகாரி தாமே லாலா லஜ்பத் ராயைத் தாக்கினார். இதன் விளைவாய்க் கடுமையாய்க் காயப்படுத்தப்பட்ட அவர், ‘ என் மீது விழுந்த ஒவ்வோர் அடியும் ஆங்கிலேய ஆட்சியின் சவப் பெட்டியின் மீது அடிக்கப்பட்ட ஆணியாகும்’ என்று அறிவித்தார். ஆனால், காயங்களின் விளைவாக அவர் உடல்நலக் குறைவுற்று 1928 நவம்பரில் காலமானார்.

    இந்தக் கொடுமைக்குப் பழிவாங்க முடிவெடுத்த பகத் சிங்,  புரட்சியாளர்களான ராஜ்குரு, சுக் தேவ், சந்திரசேகர ஆசாத் ஆகிய நண்பர்களைக் கூட்டாளிகளாய்த் தம்முடன் அந்த வேலைக்காக இணைத்துக்கொண்டார்.  1928 டிசம்பர் 17ஆம் நாளில் பகத் சிங், ராஜ்குருவுடன் ஒரு பெரிய மரத்தின் பின் மறைவாக நின்றுகொண்டார். ஜெயகோபால் எனும் மற்றொரு நண்பர், எதிரே இருந்த ஒரு கல்லூரி வளாகத்துள் சைக்கிளுடன் நின்றுகொண்டார்.  எதிரில் இருந்த காவல் நிலையத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு வெள்ளை அதிகாரி தம் பைக்கைக் கிளப்பவிருந்த கணத்தில் ஜெயகோபால் ஜாடை காட்ட, பகத் சிங் அவரைச் சில முறை சுட்டார். அவர் இறந்து வீழ்ந்தார். பின்னர் பகத் சிங்கும் ராஜ்குருவும் கல்லூரிக்குள் ஓடினார்கள். எனினும் ஒரு காவலரால் இருவரும் துரத்தப்பட்டார்கள்.  ஆனால், சந்திர சேகர ஆசாத் அவரைச் சுட்டுக் கொன்றார். இதற்குள் பகத் சிங்கும் ராஜ் குருவும் தத்தம் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றனர்.

    இருப்பினும் சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளை அதிகாரி ஜேம்ஸ் ஸ்காட் அல்லர். சாண்டர்ஸ் எனும் வேறோர் அதிகாரி. லாகூர் நகரம் முழுவதும் உடனேயே காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. ஆனால் பகத் சிங்கும் அவருடைய தோழர்களும் வெவ்வேறு மாறு வேடங்களில் தப்பிச் சென்றுவிட்டனர்.

    பின்னர் பகத் சிங், தம் நண்பன் பதுகேஷ்வர் தத்துடன் இணைந்து, தில்லி மத்திய சட்ட மன்றத்தில் இந்திய நலனுக்கு எதிரான இரண்டு மசோதாக்கள் ஏப்ரலில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது, அங்கே சென்று சில தடவைகள் சுட்டதுடன், இங்கிலாந்துக்கு எதிரான துண்டு அறிக்கைகளையும் அங்கே பறக்கவிட்டார்.  யாரும் சாகாத போதிலும், சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டன. வாயால் பேசினால் வெள்ளைக்காரர்களுக்குப் புரியவில்லை என்பதோடு அவர்கள் காதிலும் விழுவதில்லை என்பதால்,  வெடிகுண்டு மொழியில் பேசியதாகப் பகத் சிங் அறிவித்தார். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.

    இதற்கிடையே லாகூரில் இயங்கிவந்த வெடிகுண்டுத் தொழிற்சாலை, வெள்ளைக்கார அரசாங்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. பகத்சிங்கின் கூட்டாளிகளில் சிலரே பகத்சிங்கின் நடவடிக்கைகள் பற்றி அரசுக்குத் தெரிவித்துவிட்டதன் விளைவு, இது.

    இது மட்டுமல்லாது, காவல்துறை  அதிகாரி சாண்டர்ஸைச் சுட்டுக் கொன்றவர்கள் பகத்சிங்கும் அவருடைய நெருங்கிய தோழர்களுமே என்பதையும் அவர்கள் அரசாங்கத்துக்குத் தெரிவித்தார்கள்.  இதனால், பகத் சிங்குடையவும் அவர்தம் நண்பர்களுடையவும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் தீர்மானமும் வெள்ளை  அரசால் நிறைவேற்றப்பட்டது.

    அதன் பின் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியினர் மகாத்மா காந்தியை அணுகி, பகத் சிங்கின் சார்பில் வெள்ளை அரசோடு அவரை வாதிடக் கோரினர்.  சாண்டர்ஸை அவர்கள் கொன்றதை அஹிம்சாவாதியான காந்தி ஆதரிக்கவில்லைதான். எனினும், வைசிராய் இர்வினைச் சந்தித்த அவர் வாய்மொழியாக மட்டுமின்றி அவர்கள் பால் கருணை காட்டக் கோரி ஒரு கடிதமும் கொடுத்தார்.   “அந்த இளைஞர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என்றும், தூக்குத் தண்டனைக்குப் பதிலாக நாடுகடத்தும் தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கொடுக்குமாறும் காந்தி தமது விண்ணப்பத்தில் கேட்டுக்கொண்டிருந்தார். தமது வேண்டுகோளை ஏற்று வைசிராய் இர்வின் செயல்பட்டார் என்ற செய்தியை, கராச்சியில் அடுத்து நடக்கவிருந்த காங்கிரஸ் மாநாட்டில் தாம்  தெரிவிக்க வாய்த்தால் மக்கள் மகிழ்ச்சியடைவர் என்பதும் அவரது எண்ணம்.

    ஆனால், அவரது வேண்டுகோளைப் பரிசீலிப்பதாய்ச் சொன்ன வைசிராய் இர்வின், மரண தண்டனைக்கென்று குறிக்கப்பட்டிருந்த நாளுக்கும் முன்னதாகவே அவர்களைப் பஞ்சாப் அரசு இரகசியமாய்த் தூக்கிலிட்டதைக் கண்டும் காணாதவராய் இருந்துவிட்டார். காந்தி அது பற்றி அவரை வினவியபோது அது பஞ்சாப் அரசாகையால் தம்மால் தலையிட இயலவில்லை என்று சாமர்த்தியமாய்க் கைவிரித்துவிட்டார். அனைத்திந்தியாவுக்கும் வைசிராயாக இருந்தவரின் கட்டளைக்கு மாநில அரசு கட்டுப்படாதா என்ன? எப்பேர்ப்பட்ட ஏமாற்றுவேலை இது?

    இப்படித்தான் நடந்ததென்பதற்கான ஆவணங்கள் இருந்த நிலையிலும் கம்யூனிஸ்டுகள், பகத்சிங்கின் தூக்குத் தண்டனையைத் தடுக்க எவ்வித முயற்சியையும் காந்தி எடுக்கவில்லை என்று அவரைப் பழி சொல்லுவது நியாயந்தானா? இன்றளவும் கம்யூனிஸ்டுகள் அப்படியே தான் பரப்புரை செய்துகொண்டும் கட்டுரைகள் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். மகாத்மா காந்தி, எந்தக் குற்றவாளியையும் தூக்கில் போடக் கூடாது எனும் கொள்கையுடையவராவார். கடவுள் கொடுத்த உயிரைப் பறிக்கும் வேலை கடவுளுடையது மட்டுமே எனும் கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தவர்.  அப்படி இருக்கும் போது, பகத் சிங்கையும் அவருடைய நண்பர்களையும் தூக்கில் போடுவதை அவர் ஆதரித்து மவுனமாக இருந்திருப்பாரா?

    வேறு சிலர், பகத்சிங்கின் சார்பில் அவர் உண்ணாவிரதம் இருந்திருக்கலாமே என்று வாதிடுகிறார்கள். அவர் அஹிம்சாவாதி. கொலை செய்வதைச் சிறிதும் ஆதரிக்காதவர். அப்படிப்பட்ட கொள்கையுடையவர் கொலைகாரர்களுக்குப் பரிந்து உண்ணாவிரதம் இருப்பாரா என்ன? இதைப் பற்றியும் சிந்தித்துப் பாராமல் அவரைக் குற்றம் சொல்லுகிறார்களே!

    மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயைத் தூக்கில் போட, அன்றைய அரசு முடிவு செய்த போது, காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அவரது கொள்கைக்கு அது மாறானதென்பதால், நாதுராம் கோட்சேக்கு ஆயுள் தண்டனை மட்டுமே அளிக்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதிலிருந்தே காந்தியின் நிலைப்பாட்டைக் கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டாமா?

    இனியாகிலும், பகத் சிங்கைப் பொறுத்த வரையில், காந்தி அடிகளின் நற்பெயருக்கும் மனிதாபிமானத்துக்கும் களங்கம் விளைவிக்கும் வண்ணமாய்ப் பேசுவதையும் எழுதுவதையும் பொதுவுடைமைத் தோழர்கள் நிறுத்திக்கொள்வார்களா?

    Share
  • கடல் அலை அடிப்பில் மின்சக்தி உற்பத்தி, கடல் நீரைக் குடிநீராய் மாற்றி

    கடல் அலை அடிப்பில் மின்சக்தி உற்பத்தி, கடல் நீரைக் குடிநீராய் மாற்றி

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    சூரிய மின்சக்தி சேமிக்க,
    நூறு மெகாவாட் பேராற்றல் உடைய
    ஓரரும் பெரும் மின்கலம்
    தாரணியில் உருவாகி விட்டது
    வாணிபப் படைப்புச் சாதனமாய்!
    பசுமைப் புரட்சிச் சாதனையாய்
    சூழ்வெளித் தூய புது எரிசக்தி!
    மீள்சுழற்சிக் கனல்சக்தி!
    பரிதிக் கனலும், கடல் அலையடிப்பும்
    பிரபஞ்சக் கொடை வளமாய்
    தாரணிக்கு வற்றாத அளவில்
    வாரியம்  அனுப்பும் மின்சக்தி!
    கடல்நீரைக் குடிநீராக்கின்
    குடிநீருக்கும் பஞ்ச மில்லை!
    வானூர்தி விண்ணில் பறக்குது!
    பரிதி சக்தியால்!
    எரி வாயு இல்லாமல் பறக்கும்!
    பகலிலும் இரவிலும் பறக்கும்!
    பசுமைப் புரட்சியில் உதித்தது!
    பாதுகாப்பாய் இயங்குவது!
    நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில்
    நான்கு காற்றாடி உந்துது!
    பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்
    பரிதிச் சக்தி அளிக்கும்!
    ஒற்றை விமானி ஓட்டுவது!
    ஒருநாள் பறந்த ஊர்தி
    இருபது நாட்கள் தொடர்ந்து பறந்து
    அட்லாண்டிக் கடலைக் கடந்து,
    அகில உலகினைச் சுற்றி இறங்கியது!
    நூறாண்டுக்கு முன் பறந்த
    ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்
    வரலாற்று முதன்மை பெறுவது !

    TIDAL ENERGY TECHNOLOGY PRESENTED BY:- SOUMYA RANJAN DAS SNEHASIS PANDA SATYABRATA NAYAK SITUPARNA SAHU BADRI NARAYAN SAHU

    “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

    முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

    “2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

    டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

    See the source image

    சூழ்வெளித் தூய பசுமைப் புரட்சி மீள்சுழற்சி எரிசக்தி வளங்கள்

    சூரியனின் கதிர்க்கனலும், கடலின் அலை ஆற்றலும் உள்ளவரை உலக மானிடருக்கு எரிசக்தி தேவைக்கும், குடிநீர் உற்பத்திச் செழுமைக்கும் பஞ்சம் ஏற்படாது.  பெருமளவில் கதிர்ச்சக்தியில் மின்சாரம் எடுத்துச் சேமிப்பதிலும், கடல்நீரில் உப்பு நீக்கிக் குடிநீர் ஆக்குவ திலும் சவாலான தேவைகள் உள்ளன.  முதற்கண் அவற்றுக்கு பொறியியல் நுணுக்கமும், மலிவான, மின்சார /  யந்திர சாதனங்களும் தேவை.  சாதனங்களை விற்கும்  வணிக பூர்வமான தொழிற் துறை அமைப்புகள் தேவை.  சூரியக் கதிர்க் கனல் மின்சக்திச் சாதனங்கள்  இப்போது கிடைக்கின்றன.  ஆனால் மலிவாகக் கடல் அலை அடிப்புகள் ஆற்றல் மூலம், மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில் நுணுக்கம் மேலை நாடுகளில் துவக்கம் ஆனது போல், முப்புறம் கடல் சூழ்ந்த இந்தியாவில் இதுவரை ஆரம்பமாக வில்லை.  கடற்கரை ஊர்களில் மின்சக்தி உற்பத்தி செய்யவும், உப்பு நீக்கி  குடிநீர் தயாரிக்கவும், இப்போது நம் கைவசம் திறமை இருந்தும், பயன்படாமல் காத்திருப்பது கடல் அலை அடிப்பு ஆற்றல் மின்சக்தி.

    ++++++++++++++++++++++

    https://www.youtube.com/watch?v=7ZN5CthZhvghttps://youtu.be/7ZN5CthZhvghttps://youtu.be/bEfrtAOMuvkhttps://youtu.be/KehkHkV7nL4https://youtu.be/fGfadMRyFXIhttps://youtu.be/7r9tQV3tMoI

    +++++++++++++++++++

    https://youtu.be/fnSZCOtuDgs
    https://greengarageblog.org/19-top-advantages-and-disadvantagesof-wave-energy-and-power-

    உலக நாடுகளில் உள்ள கடல் அலை அடிப்பு மின்சார நிலையங்கள்.

    கடல் அலை அடிப்பு ஆற்றல் பண்ணைகள் [Wave Forms]  விரல் விட்டு எண்ணும் வகையில் 2018 இல் இருப்பவை : நான்கு. பிரிட்டன், போர்ச்சுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா.  முதன் முதலில் 2000 ஆண்டு தேசீய மின்வட இணைப்பில் [National Power Grid] மின்சாரம் அனுப்பியது பிரிட்டன்.  2007 பிப்ரவரியில் 3 மெகாவாட் சிற்றளவு கடல் அலை அடிப்பு நிலையம் 4 மில்லியன் பவுண்ட் [5.2 மில்லியன் டாலர்] செலவில் ஸ்காட்லாண்டில் அனுமதி பெற்றது. பிறகு கார்ன்வாலில் [இங்கிலாந்து] 20 மெகாவாட் நிலையம் நிறுவகமானது.  பிறகு அது 40 மெகாவாட் ஆற்றல் பெருகும் நிலை பெற்றது.

    போர்ச்சுகல் நாட்டில் 2008 இல் 2.25 மெகாவாட் கடல் அலை ஆற்றல் நிலையம் இயங்கத் தொடங்கியது.  ஆஸ்திரேலியாவில் 19 மெகாவாட் கடல் அலை ஆற்றல் நிலையம் AU$ 66.5 மில்லியன் செலவில் 2015 ஆண்டுகளில்  இயங்க ஆரம்பித்தது.  அமெரிக்காவில் முதன்முதலில் 45 டன் கடல் அலை ஆற்றல் மாற்றி நிறுவகம் [45 ton Wave Energy Converter] ஆனது.

    2016 அறிக்கைப்படி, அமரிக்க நாட்டின் இருபுறக் கடல் அலை அடிப்பு ஆற்றல் அளவு எதிர்பார்ப்பு, ஆண்டுக்கு  2640 டெராவாட் ஹவர்ஸ்  [terawatt-hours].  [one terawatt = 10^12 watts =[1000 gegawatts].  அதாவது 1 terawatt-hour மின்சார ஆற்றல் 93,000 அமெரிக்க வீடுகளுக்கு ஓராண்டு பரிமாறும்.

    கடல் அலை ஆற்றல் உற்பத்தி செய்வது எளிதாகத் தெரிந்தாலும்  அவற்றை அமைப்பதிலும் சிக்கல்கள், இடர்ப்பாடுகள் உள்ளன,  கடல் அலை அடிப்புகள், கடல் அலை உயர்ச்சிகள் [Waves & Tides] சூரிய – சந்திர நகர்ச்சிக்கு ஏற்ப அனுதினம் மாறுபவை.  உப்புக் கடல் நீர் தீவிரமாய் உலோகங்களில் துரு ஏற்றுவது.  பருவநிலை மாறுபாட்டில், ஆண்டுதோறும் சூறாவளி, பெருமழை, சுனாமி, ஹர்ரிக்கேன் தாக்கிப் பேரிடர்  விளைவிப்பவை.

    “இன்றுள்ள [2004] உலக ஜனத்தொகை 6 பில்லியனில் 3 பில்லியன் மக்கள் கட்டுப்பாடுள்ள அல்லது பற்றியும் பற்றாத நீர் வசதியுடன் வாழ்கின்றனர்!  உலக மக்கள் தொகையில் 33% போதிய சுகாதாரப் புழக்க நீரின்றியும், 17% மாசுக்கள் மண்டிய நீரைப் பயன்படுத்தியும் வருகிறார்! 2025 ஆண்டுக்குள் ஜனப்பெருக்கு 8 பில்லியனாக ஏறி, அவர்களில் ஒரு பில்லியனுக்கு மட்டுமே போதிய நீர் வசதி இருக்கப் போகிறது!  இரண்டு பில்லியனுக்கு மாசு மறுவற்ற நீர் வசதி வாய்க்கப் போவதிலை!  ஐந்து பில்லியன் மக்களுக்குச் சுகாதார நலனுக்குப் பயன்படும் புழக்கநீர் கிடைக்கப் போவதில்லை! இந்த பிரச்சனை களுக்குத் தீர்வு வழிகளைக் காண நாம் யாவரும் ஒன்று சேர்ந்து பணிபுரிய வேண்டும்”.

    நீர்ப் பற்றாக்குறையை நிவிர்த்திக்க வழிமுறைகள்

    ஜனாதிபதி மேலும் கூறியது: “நீர்வசதிப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்ய நமக்கு உள்ளவை, சில வழிகளே! ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு! அடுத்த பெருந் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அதிர்ஷ்ட வசமாக நமக்குள்ள மூல நீர்வளம், அகில மெங்கும் 97% பேரளவில் பரவி இருக்கும் கடல்நீர்.  கடல்நீரைப் புதுநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உலகில் 7500 இப்போது இயங்கி வருகின்றன!  பிரச்சனைகள் அதிகமின்றி நீடித்து இயங்கிவரும் உப்புநீக்கி நிலையங்கள் பல உள்ளன. அவற்றில் 60% மையக் கிழக்கு நாடுகளில் எரிவாயு, எரி ஆயில் தரும் வெப்பசக்தியில் கடல்நீர் புதுநீராக ஆக்கப்பட்டு வருகிறது.  அநேக நாடுகள் நீர்ப்பற்றாக் குறையை நிவிர்த்தி செய்யக் கடல்நீரில் உப்பை அகற்றும் வழிகளைத்தான் பின்பற்றுகின்றன”.

    World’s Largest Lithium Ion Battery Banks

    மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.

    2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார்.  2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலி யாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும்  மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார்.  2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது  100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.

    Image result for Lithium Ion ResearchImage result for Solar Power Fuel Cell

    இப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும்.  அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது.  மீள்சுழற்சி  கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும்.  நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும்.  மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.

    Image result for Lithium Ion Technology

    மின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன.  அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது.  2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய்  ஏறிவிடும்  என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for Lithium Ion TechnologyImage result for Solar Power Fuel Cell

    மின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் – அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும்.  எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது.  லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட  20% கனல்சக்தி  திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு.  நேரோட் டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும்.  2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for large size 100 mw batteryImage result for Solar Power Fuel Cell

    மின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன.  சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.

    Image result for Solar Power Fuel CellSolar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    Image result for Lithium Ion Research

    1.  https://www.bing.com/videos/search?q=Electric+power+from+ocean+waves&&FORM=VDVVXX

    2.  https://www.boem.gov/Renewable-Energy-Program/Renewable-Energy-Guide/Ocean-Wave-Energy.aspx

    3.  https://www.machinedesign.com/archive/electricity-ocean-waves

    4. https://gineersnow.com/industries/marine/tidal-energy-using-ocean-waves-new-source-electric-power

    5. http://www.solardaily.com/reports/Modelling_a_future_fuelled_by_sustainable_energy_999.html  [October 31, 2018]

    6.  http://www.terradaily.com/reports/New_technologies_in_the_ocean_energy_sector_999.html  [October 31, 2018]

    7.  https://en.wikipedia.org/wiki/Wave_power  [October 19, 2018]

    8.  https://scitechdaily.com/floating-power-buoy-creates-electricity-from-ocean-waves/  [November 2, 2018]

    +++++++++++++++

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 27

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 27

    -மேகலா இராமமூர்த்தி

    நூலறிவும் வாலறிவும் நிரம்பிய அருங்குணத்தோனான மாருதி, உருசியமுக மலையேறிவந்த குரிசில்களான இராம இலக்குவரோடு அளவளாவி அவர்கள்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டவனானான். சுக்கிரீவனின் துயரத்தைத் தீர்க்க இவர்களால்தாம் இயலும் என்றுணர்ந்தவன், ”சிறுபோது இங்கே இருப்பீர்; சுக்கிரீவனை விரைந்து கொணர்கின்றேன்” என்றுகூறிச் சென்றான்.

    சுக்கிரீவனை அணுகிய அனுமன், ”வாலிக்கு வந்துசேர்ந்தான் காலன்; நாம் இடர்க்கடல் கடந்தோம்” என்று மகிழ்வோடியம்பி, இராமனின் வரலாற்றை விரிவாக அவனிடம் விளம்பத் தொடங்கினான். மாய மான் வடிவெடுத்து வந்த மாரீசனின் கதையை இராமன் முடித்ததைச் சொல்லவந்த அனுமன்,

    ”காவலனே! மானிடக் காயத்தில் (உடம்பில்) உள்ள இராமன் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலேயன்றி வேறு யாருமல்லன்! அவ் அம்மானோடு (பெருமைக்குரியவன்) நீ நட்புக் கொள்! மாய மானாக வந்த மாரீசன் மாயும்படி அவனுக்கு மா யமானாக (பெரிய யமன்; யமான் – யமன் என்பதன் நீட்டல் விகாரம்) ஆனவன் இந்த இராமன்” என்று தேர்ந்த சொற்களால் சுக்கிரீவனிடம் இராமனின் திறலுரைத்தான்.

    ஆயமால் நாகர் தாழ் ஆழியானே அலால்
    காயமான் ஆயினான் யாவனே காவலா
    நீ அம்மான் நேர்தியால் நேர்இல் மாரீசன் ஆம்
    மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான்.
    (கம்ப: நட்புக் கோட் படலம் – 3898)

    தொடர்ந்தவன்… ”நிருதர்கோனான இராவணன் மதியின்மையால் இராமன் மனைவியை வஞ்சனையால் கவர்ந்துசென்றான்; அவளைத் தேடிவந்த அம்மானுடர்களின் கிடைத்தற்கரிய நட்பு நினக்குக் கிட்டியது நின் தவப்பயனே!” என்று இராமலக்குவரின் இயல்பைத் தன் நுண்ணறிவினால் கண்டுணர்ந்த அனுமன் அதனைச் சொல்வன்மை தோன்றத் தன் தலைவனிடம் விண்டுரைக்கின்றான்.

    இச்செய்திகளால் மனமகிழ்ந்த அருக்கனின் (சூரியன்) அருமை மைந்தன் சுக்கிரீவன், தன் துணைவர்கள் உடன்வர அனுமனோடு சென்று அண்ணல் இராமனைக் காணுகின்றான். ”திருமாலே மானுடனாய் வடிவெடுத்து வந்ததுபோல் அல்லவா இவன் இருக்கின்றான்!” என்று இராமனைக் கண்டு தன்னுள் வியந்தவன், இறைவனே மானுட வடிவில் தோற்றரவு செய்திருப்பதால் மற்றுள்ள தேவர் குழுக்களையெல்லாம் மானுடம் வென்றுவிட்டது என்று தெளிந்தான்.

    இராமனுக்கு அருகில்சென்ற சுக்கிரீவன், முற்பிறவியில் நானியற்றிய நல்வினைகளாலேயே உன்னைக் காணும் பேறுபெற்றேன் என்று உபசார மொழிகள் கூறிநின்றான். அதனைக் கேட்ட இராமன், ”சவரி எனும் மூதாட்டி வழிகாட்டியதன்பேரில் நாங்கள் உன்னைத் தேடிவந்தோம்; எங்கள் கையறு துன்பம் உன்னால் நீங்குமென்று மெய்யாய் நம்புகின்றோம்” என்று தாங்கள் சுக்கிரீவனைத் தேடிவந்த காரணத்தைச் செப்பினான்.

    ஆனால் சுக்கிரீவனோ சீதையைத் தேடுதற்குத் தான் துணை செய்கின்றேன் என்று உடனடியாகச் சொல்லவில்லை. மாறாக, “என் அண்ணன் வாலி தன் தடக்கைகளை ஓங்கிக்கொண்டு என்னை இருள் நிலைபெற்ற இவ்வுலகிற்கு அப்பாலும் துரத்திவர, இம்மலையே எனக்குப் பாதுகாவல் என்று கருதி இங்கு ஒளிந்து உயிர்பிழைத்தேன்; உயிரைவிடவும் துணிவில்லாத நான் உன்னைச் சரண் புகுந்தேன்; என்னைக் காத்தலே உனக்கு தருமமாகும்!” என்று தனக்கு முதலில் உதவுமாறு இராமனிடம் இறைஞ்சுகின்றான். 

    முரணுடைத் தடக் கை ஓச்சி
         முன்னவன் பின்வந்தேனை
    இருள்நிலைப் புறத்தின்காறும் உலகு
         எங்கும் தொடர இக் குன்று
    அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்
         ஆர் உயிர் துறக்கலாற்றேன்
    சரண் உனைப் புகுந்தேன் என்னைத்
         தாங்குதல் தருமம் என்றான். (கம்ப: நட்புக் கோட் படலம் – 3912)

    எந்த உயிருமே முதலில் தன்னைப் பற்றித்தான் சிந்திக்கும்; தான்படும் தொல்லைகளிலிருந்து விடுபடவே விழையும்; விரையும். பின்புதான் மற்றவர்களின் துயருக்கு உதவத் தலைப்படும். இதுவே உயிர்களின் உளவியல். இந்த உளவியலைச் சுக்கிரீவன் பாத்திரப் படைப்பு வாயிலாக நமக்குத் தெளிவாய் உணர்த்திவிடுகின்றார் கல்வியில் வல்லவரான கம்பர்.

    சுக்கிரீவனின் நிலைகண்டு இரங்கிய இராமன், அவன் துன்பத்தை முதலில் தீர்ப்பது என்ற முடிவுக்கு வந்தவனாய், ”இம்மண்ணுலகிலும் விண்ணுலகிலும் நின்னை வருத்தியவர் என்னை வருத்தியவர் ஆவர்; தீயரே ஆயினும் உனக்கு நட்பானவர்கள் எனக்கும் நண்பரே; உன் உறவினர் எனக்கு உறவினர்; என் சுற்றத்தார் உன் சுற்றத்தார்; நீ என் இன்னுயிர் நண்பன்!” என்று கூறி அவனோடு நட்புக் கொள்கின்றான்.

    மற்றுஇனி உரைப்பது என்னே
         வானிடை மண்ணில் நின்னைச்
    செற்றவர் என்னைச் செற்றார்
         தீயரே எனினும் உன்னோடு
    உற்றவர் எனக்கும் உற்றார் உன்
         கிளை எனது என் காதல்
    சுற்றம் உன்சுற்றம் நீ என்
         இன் உயிர்த் துணைவன் என்றான். (கம்ப: நட்புக் கோட் படலம் – 3914)

    எளியோரின் நிலைகண்டு இரங்குதலும் அவர்கட்கு உதவுதலும் உயர்ந்தோர் பண்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் சுக்கிரீவனைப் பற்றியும் அவன் அண்ணன் வாலியைப் பற்றியும் முழுமையாக எதுவும் அறிந்துகொள்ளாத நிலையில் சுக்கிரீவனிடம் உன் பகைவர் எனக்குப் பகைவர்; உன் நண்பர் எனக்கும் நண்பர் என்று இராமன் வாக்குறுதி அளிப்பதை அறிவுடைய செயலாகக் கருத இயலவில்லை. ”தேறற்க யாரையும் தேராது” என்பது வள்ளுவம் அல்லவா?

    சுக்கிரீவனுக்கும் இராமனுக்குமிடையே மலர்ந்த நட்பைக்கண்டு மகிழ்ந்த குரக்குச் சேனை ஆர்த்தது; அஞ்சனைச் சிறுவனும் மேனி பூரித்தான். இராமலக்குவரோடு ஆங்குள சோலைநோக்கிச் சென்றனர் அனைவரும். சோலைபுக்கதும், இராமனும் சுக்கிரீவனும் பூக்களால் செய்த அணையில் அமர்ந்து உரையாடினர்.

    பின்னர், நீராடிவிட்டு வானரர்கள் படைத்த விருந்தை உண்டு மகிழ்ந்த இராமன், அங்கே விருந்தோம்பப் பெண்டிர் யாரும் இல்லாததைக் கண்டான். அதன்மூலம் சுக்கிரீவனும் தன் மனையாட்டியைப் பிரிந்திருக்கின்றானோ என்று ஐயப்பாடுற்றான். அதனை அறிந்துகொள்ளுமுகத்தான், ”நன்மனைக்குரிய பூவையை நீயும் பிரிந்துளாயா?” என்று வினவினான்.

    ……பொருந்து நன் மனைக்கு
         உரிய பூவையைப்
    பிரிந்துளாய்கொலோ நீயும்
         பின் என்றான். (கம்ப: நட்புக் கோட் படலம் – 3922)

    விருந்தோம்புதலை மகளிர்க்குரிய தலையாயக் கடனாக – அறனாகக் கருதியவர்கள் தமிழர்கள். கோவலனோடு மதுரையில் தங்கியிருந்த கண்ணகி, அவனைப் பிரிந்திருந்த காலத்தில், அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலுமாகிய மகளிர்க்குரிய அறங்கள் அனைத்தையும் தான் செய்யமுடியாமல் போனதுபற்றி அவனிடம் வருந்தியதை ஈண்டு எண்ணிப் பார்க்கலாம்.

    சுக்கிரீவன் நிலையை விரிவாக விளக்குவதே இராமனின் வினாவுக்கான விடையாக அமையும் எனக் கருதிய அனுமன், சுக்கிரீவனின் தமையனான வாலி பற்றி இராமனிடம் சொல்லத் தொடங்கினான்.

    நான்கு வேதங்களையும் வேலிபோல் பாதுகாக்கும் சிவபெருமானின் அருளைப் பெற்றவனும், பெருவலி படைத்தவனுமாகிய ஒருவன் இங்கே இருக்கின்றான்; அவன் பெயர் வாலி!

    திருப்பாற்கடலில் அமுதம் எடுக்க முனைந்த அமரரும் அவுணரும் முயன்று வலியற்று நின்றவேளையில் அங்குவந்த வாலி, தான் ஒருவனாகவே பாற்கடலைக் கடைந்து அமுதெழச் செய்த தோள்களை உடையவன். நிலம் நீர் காற்று நெருப்பு எனும் நான்கு பூதங்களின் ஆற்றலையும் தான் ஒருவனே பெற்றவன்.

    வாலியை எதிர்த்து யார் போருக்கு வந்தாலும் வந்தவர்களின் வலிமையில் செம்பாதி அவனுக்கு வந்துவிடும் வரத்தைச் சிவபிரானிடம் பெற்றவன் அவன். அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானை நாள்தவறாது எட்டுத் திக்கும் சென்று பணிபவன். [பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், இயமானன் (இயமான னாம்விமலா – திருவாசகம்) ஆகியோர் அட்டமூர்த்திகள் எனப்படுவர்.  இவ் எண்மரையும் திருமேனியாய்க் கொண்டவனாதலின் சிவபிரான் ‘அட்டமூர்த்தி’ எனப்பட்டான்.]

    கிட்டுவார்பொரக் கிடைக்கின் அன்னவர்
    பட்ட நல்வலம் பாகம் எய்துவான்
    எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று
    அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்.
    (கம்ப: நட்புக் கோட் படலம் – 3927)

    அந்த வாலியின் வேகத்துக்கு ஈடுகொடுத்துக் காற்றுச் செல்லாது; கந்தவேளின் வேலும் அவன் மார்பைத் துளைக்காது; அவன் வால் செல்லும் இடத்தில் இராவணனின் கோல் செல்லாது; அவனது வெற்றிக் கொடியும் செல்லாது என்றுரைக்கின்றான் அனுமன்.

    கால்செலாது அவன் முன்னர்
         கந்த வேள்
    வேல் செலாது அவன்
         மார்பில் வென்றியான்
    வால் செலாத வாய்
         அலது இராவணன்
    கோல் செலாது அவன்
         குடை செலாது அரோ.  (கம்ப: நட்புக் கோட் படலம் – 3928)

    ”இந்திரன் முதலான தேவர்களை வென்றவன் நான்” எனத் தருக்கித் திரியும் தசமுகனான இராவணனின் வீரமும் வாலியிடம் எடுபடவில்லை. அவ்வளவு ஏன்? இரணியன் மார்பைப் பிளந்த நரசிங்கமும் வாலியின் தோள்வலியின்முன் நிற்கும் திறனற்றது என்று வாலியின் இணையற்ற தோளாற்றலை இராமனுக்கு அறியத் தருகின்றான் அஞ்சனையின் அரும் புதல்வன்.

    அந்த வலிமிகு வாலி அரசனாகவும் சுக்கிரீவன் இளவரசனாகவும் இந்தக் கிட்கிந்தையை ஆட்சிசெய்து வருகின்ற காலத்தில் ஒருநாள் மயன் மகனான அரக்கன் மாயாவி, வாலியோடு போர்புரிய வந்தான். சிறிது நேரத்துக்குள்ளாகவே வாலியை எதிர்த்துநிற்க இயலாமல் ஆற்றல்குன்றித் தோற்றோடினான். பூமியில் எங்கிருந்தாலும் வாலி தன்னைத் தேடிவந்து காலிசெய்து விடுவான் என்றஞ்சிய மாயாவி புகுவதற்கரிய பிலம் (பூமிக்குள் செல்லும் சுரங்கவழி) ஒன்றிற்குள் ஓடி ஒளிந்தான்.

    வாலியும் அவனை விடவில்லை; துரத்திச் சென்றான். பிலத்தருகே வந்தவன் தம்பி சுக்கிரீவனிடம், “நான் உள்ளே சென்று மாயாவியைப் பிடித்துக் கொணர்வேன். அதுவரை அவன் வெளியில் எங்கும் தப்பிச் செல்லாவண்ணம் நீ பிலத்தின் வாயிலில் சிறிதுநேரம் காவல் இரு!” என்று கூறிவிட்டுப் பிலத்தினுள் புகுந்தான்.

    காலம் கரைந்தது; இருபத்தெட்டு மாதங்கள் கழிந்தன. ஆனால் வாலி வெளியில் வரவில்லை. ”இவ்வளவு காலமாகியும் வாலி வெளியில் வரவில்லையே…ஒருவேளை அவன் இறந்துபட்டானோ?” என்ற ஐயம் சுக்கிரீவனுக்கு ஏற்படலாயிற்று.  

    நாடோ அரசனில்லாது தாயற்ற குழவிபோல் தவித்திருந்தது. அதனைக்கண்ட நாங்கள், ”நீ அரசாட்சியை ஏற்றுக்கொள்” என்று இளவரசனான சுக்கிரீவனிடம் வேண்டினோம் என்றான் அனுமன்.

    சுக்கிரீவன் அதற்கு உடன்பட்டானா?

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • நற்றுணையாவது நமச்சிவாயவே

    நற்றுணையாவது நமச்சிவாயவே

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
    ஆஸ்திரேலியா 

    சைவசமயம், இறை வழிபாட்டினை இலகுவாக்குவதற்குப் பல சுலபமான வழிகளையெல்லாம் காட்டியிருக்கிறது. அவ்வழிகள் யாவுமே ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியமாகும். உணவின் அளவைக் குறைத்தலும், சிலவேளை தவிர்த்தலும், வாழ்வில் நல்ல ஆரோக்கியத்துக்கும் நல்ல சிந்தனைக்கும் கூட ஆதாரமாக அமையலாம் என்பதைச் சைவ சமயம் உணர்ந்த காரணத்தால் உணவினை ஒறுத்து இருப்பதை  “விரதம்” என்று உயர்வு கொடுத்து அதனுடன் தெய்வீகத்தையும் தொடர்புபடுத்தி வாழ்வியலில் முக்கிய நடைமுறை ஆக்கிவிட்டது. அந்த வகையில் சிவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவமும் பெருமையும் உடையதாகச் சைவர்களால் கருதப்படுகிறது.

    பசித்திரு – தனித்திரு – விழித்திரு. இவை தத்துவார்த்தமான பதங்களாகும். சொல்லுவதற்கு கவிதை நடை போல இருந்தாலும் உயரிய பொருளினை உள்ளடக்கி நிற்கிறது என்பதைக் கருத்திருத்த வேண்டும். பசித்திருவில் – ப, தனித்திருவில் – த, விழித்திருவில் – வி, இம்மூன்று எழுத்தையும் சேர்த்தால்  வருவது “பதவி” என்னும் சொல்லாகும். பசித்து தனித்து விழித்து இருந்தால் என்ன பதவி கிடைத்து விடும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? பதவிகளுக்கெல்லாம் உயர்ந்த பதவி அதாவது இறைவனது அருள் என்னும் பதவி, மனமாசு அகன்று மனம் மாண்புறும் பதவி, ஆணவமெனும் அழுக்கு அகன்று ஆண்டவன் நினைப்பு அகத்தில்எழுந்திடும் பதவி, என்று பல பதவிகள் எமக்கு வாய்க்கும் என்று எமது சைவசமயம் எடுத்து இயம்பி நிற்கிறது.

    சிவராத்திரி நோன்பு காலத்தில் ஆலயத்துக்குச் சென்று அரட்டை அடிப்பதோ, வீண் வம்புகள் பேசுவதோ, மற்றவரைக் குறை சொல்லுவதோ  தவிர்க்கப்பட வேண்டியதாகும். தனித்திருங்கள். புசிப்பதைத் தவிருங்கள். இறை எண்ணத்துடன் இறை புகழ் பாடி விழித்திருத்திருங்கள். இப்படி இருப்பதுதான் சிவராத்திரிக்கு நமது சமயம் கொடுக்கும் முக்கியத்துவம் எனலாம்.

    விழித்திருக்க வேண்டும் என்பதற்காக சினிமாப் படங்களைப் பார்ப்பதோ, நாடகங்களைத் தொலைக்காட்சியில் பார்ப்பதோ, சீட்டாடுவதோ, களியாட்ட விடுதிகளை நாடுவதோ, முறையல்ல. விழிப்பது முக்கிய மானதுதான். ஆனால் அந்த விழித்திருக்கும் நேரத்திலும் இறை நினைப்பாய் இருப்பதுதான் விழிப்புக்கு உரிய அர்த்தமாய் அமையும் என்பதையும் யாவரும் கருத்தில் இருத்துவது அவசியமாகும்.

    கருடபுராணம், அக்னிபுராணம், அருணாசலபுராணம், சிவராத்திரி புராணம் யாவும் சிவராத்திரியைப் பற்றி அதன் மகிமைகள் பற்றி யெல்லாம் எடுத்தியம்புகின்றன. ஆலகால விஷத்தை ஈசன் உண்ட  நிகழ்ச்சியும், அடிமுடி தேடிய பிரம்மா விஷ்ணுவுக்கு ஒளிப் பிளம்பாக காட்சி கொடுத்த சம்பவமும், அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும், கண்ணப்பர் ஈசனுக்குத் தனது கண்ணைப் பிடிங்கி அப்பியதும் அதனால் கண்ணப்பன் மோட்சம் பெற்றதும், மார்க்கண்டேயருக்காக ஈசன் எமனைக் காலால் உதைத்ததும், குபேரன் செல்வந்தனாகியதும், என்று பல அற்புதங்கள் நிகழ்ந்த தினமாக சிவராத்திரி விளங்குகிறது என்னும் நம்பிக்கை பலகாலமாக இருப்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    மாதம் மாதம் சிவராத்திரி வருகிறது. ஆனால் மாசிமாதத்தில் வருகின்ற சிவராத்திரியைத்தான் “மகாசிவராத்திரி” என்று உயர்வுடன் அனுட்டிக்கின்றோம். மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கு புராணக் கதைகளை விட அறிவியல் ரீதியான விளக்கமே அனைவருக்கும் பயனை நல்கும் அல்லவா? ஆன்மீகம் என்பது வெறும் வார்த்தை அல்ல. ஆன்மீகம் அறிவியலுடன் இணையும் பொழுதுதான் அதன் உன்னதம் உயர்வடை கின்றது. அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே எங்கள் சமயம் தன்னை நிலைநிறுத்தி வருகிறது என்பதை மறுத்துவிட முடியாது. அந்த வகையில் மாசியில் வருகின்ற சிவராத்திரி “மகா” என்னும் உயர்நிலை எய்துவதற்கு உரிய காரணத்தை அறிவது அவசியம் அல்லவா?

    ஈத்தர் என்னும் சக்தி உலகத்தை இயக்குகிறது என்று அறிவியல் சொல்லுகிறது. இந்தச் சக்தியானது உலகம் முழுவதும் , அண்டம் முழுவதும் நிறைந்தே இருக்கிறது. இந்தச் சக்தியானது பூமியை  நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறதாம்.

    பூமியானது சூரியனை சிறிய நீள்வட்டப் பாதையிலும் பெரிய நீள்வட்டப் பதையிலுமாக இரண்டு பாதையில் சுற்றி வருகிறது. இவ்வாறு பூமி சுற்றி வரும்பொழுது பெரிய நீள்வட்டப் பாதையில் இருந்து சிறிய நீள்வட்டப் பாதைக்கு மாறுகின்ற நேரம்தான் “மகாசிவராத்திரி” வரும் நேரமாக அமைகிறது. ஈத்தர் சக்தியானது எப்பொழுதுமே பூமியை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரியில் மட்டுமே  ஈத்தர் சக்தியின் அளவு அபரிதமாக இருக்கும். இப்படி அபரிதமாக இம்மாதத்தில் வருடத்துக்கு ஒருமுறை அமைவதால் இக்காலத்து வருகின்ற சிவராத்திரியை “மகாசிவராத்திரி”  என்று உயர்வுடன் போற்றும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமானதாகும் .  

    மாசிமாதத்தில் வருகின்ற ஈத்தருக்கு அதிக சக்தி காணப்படுகிறது. ஈத்தர் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகரும். பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுற்றிக் கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழுச் சக்தியும்  கிடைக்கும் நிலை இந்த மகா சிவராத்திரிக்கே வாய்க்கிறது.

    மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து கண்விழித்து முதுகை நேராக வைத்து தியானம் செய்யும் பொழுது ஈத்தர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட்  என்ற ஆனந்த சுரப்பி  மூளையை அடைந்து பல வித நல்ல ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. இந்த நேரத்தில் நமக்கு நாமே

    ஆசீர்வாதம் (Self Blessing)  செய்து கொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ (DNA) வில் கெட்ட பதிவுகளை (கர்மா) அழிக்கும் வல்லமையை உருவாக்குகிறது.

    ஈத்தர் சக்தி என்பது பகலிலும் உண்டு. இரவிலும் உண்டு. பகலில் சூரிய வெளிச்சம் காரணமாக சற்றுக்குறைவாகவே காணப்படும். ஆனால் இரவில் சூரிய வெளிச்சம் காணப்படாமையினால் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும்.

    இரவு ஒன்பது மணி தொடக்கம் அதிகாலை இரண்டு மணிவரை உடலின் இயக்கமும் வித்தியாசமாய் இருக்கும். இவ்வேளை ஈத்தர் சக்தியின் அளவும் கூடதலாகவே அமையும் நிலை காணப்படுவதால் இவ்வேளையிலே கட்டாயம் விழித்திருப்பது அவசியமாகிறது. எனவேதான் மகாசிவராத்திரியின் முக்கிய சாமமாக இந்த நேரம் எமது சமய ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

    சிவன் என்றால் மங்களம் என்பது பொருளாகும். அந்த மங்களமான சிவனைக் குறிப்பதுதான் சிவராத்திரி. எம்மை யெல்லாம் இயக்கிக் கொண்டிருக்கும் ஜீவனுக்கும் ஒரு பற்றுக்கோடு தேவையாகின்றது. அந்தப் பற்றுக்கோடாக விளங்கும் ஆற்றல்தனைத்தான் சிவன் என்கிறோம். இந்தச் சிவனை உருவமாய், அருவமாய், அருவுருவமாய் வழிபடுகிறோம். இது சிவ வழிபாட்டில் அமைந்திருக்கும் சிறப்பெனலாம்.

    சிவனுக்கு உகந்த மந்திரமாய் பஞ்சாட்சரம் மந்திரம் விளங்கு கின்றது என்று அருளாளர்கள் எடுத்து மொழிந்திருக்கிறார்கள். சம்பந்தர் தொடக்கம் மணிவாசகப் பெருமான், திருமூலர். அருணகிரி நாதர்வரை சொல்லி இருக்கிறார்கள். சைவசித்தந்தமே நமச்சிவாய என்னும் நாமத்தைப் பெரிதும் போற்றி அதற்கெனப் பல தத்துவார்த் தங்களையெல்லாம் வெளிப்படுத்தி நிற்பதையும் காணமுடிகிறது எனலாம்.

    “வேதம் நான்கினும் மெய் பொருளாவது
    நாதன் நாமம் நமச்சி வாயவே”

    “நற்ற வாவுனை நான்ம றக்கினும்
    சொல்லும் நாநமச்சி வாயவே”

    “நமச்சிவாய வாழ்க”  இந்த வார்த்தை சிவனைக் குறிக்கும் சக்தி மிக்க வார்த்தையாகும்.

    நமசிவாய என்பதற்கு – சிவனை வணங்குகிறேன் என்பது அர்த்தமாகும். இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் வாழ்வில் நலம் பெருகும். மனம் வெளிக்கும். சிவனின் அருள் என்றுமே துணையாகி நிற்கும்.

    நமசிவாய மந்திரதை உச்சரித்தால் உலக இன்பங்கள் கிடைக்கும். நலம் பெருகும்.ஞான மார்க்கத்தின் முதற்படிக்கு எம்மையெல்லாம் இட்டுச் செல்லும்.ஆகவேதான் அடியார்கள் இம்மந்திரத்தை உயிரெனப் போற்றினார்கள் என்பதை மனமிருத்தல் அவசியமாகும். சிவராத்திரியில் இந்தச் சக்திமிக்க , சித்திவழங்கும் “நமச்சிவாய” என்னும் நாமத்தை மறவாமல் மனமார நினைந்து வாயாலே உச்சரித்தால் நிச்சயம் பரம்பொருளான அந்தச் சிவனின் அருள் கிட்டுவதோடு எமது அழுக்கான மனமெல்லாம் அழுக்ககன்று ஆண்டவனின் நினைப்பு நிச்சயம் அமரும் என்பதை அனைவரும் அகமிருத்துவோம்.

    எமது சமயம் நல்ல நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த சமயமாகும். ஒவ்வொரு செயலுக்கும் சிறப்பான காரண காரியங்கள் இருக்கின்றன. அவற்றைச் சரியான முறையில் விளங்கிக் கொண்டு விட்டோமானால் மனத்தில் ஐயம் என்பது அகன்றே ஓடிவிடும். ஐயந் தெளிதல் வேண்டும். ஐயம் தெளிந்தால் ஆண்டவன் அருளும் எமக்கு வாய்த்துவிடும். சிந்தையினைத் தெளிவாக்கல் சிவன் அருள் பெற வழியாகும். சிவராத்திரி நன்னாளில் சிந்தையைத் திருத்திடச் சிவனை வேண்டுவது எமது தலையாய பணியாகும்.

    “சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே

    “சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
    நலமில னாடொறு நல்கு வானவன்
    குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே” 

    “இல்லக விளக்கது விருள் கெடுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே” 

    Share
  • பெண்கள் ஏன் குடிக்கக் கூடாது?

    பெண்கள் ஏன் குடிக்கக் கூடாது?

    ஜோதிர்லதா கிரிஜா

    ஆண்கள் செய்வதை யெல்லாம் நாங்களும் செய்வோம் என்று பெண்கள் கூறத் தலைப்பட்டால், அது அடி முட்டாள்தனமாகும். தாய்மை எனும் மகத்தான பேற்றை இயற்கை தங்களுக்கு அருளியுள்ளதன் அடிப்படையில் சிந்தித்தால் “பெண்ணுரிமை” என்பதன் பெயரால் பெண்களில் சிலர் இப்படிப் பேச மாட்டார்கள்.

    நாம் உட்கொள்ளும் உணவுகள் நம் உடல் நலத்தை மட்டுமல்லாது, நமது மனநலத்தையும் நல்ல விதமாகவோ கெட்டவிதமாகவோ பாதிக்கின்றன என்பது கண்கூடான விஞ்ஞானமாகும். கள், சாராயம், போதை மருந்துகள், புகைபிடித்தல் போன்றவையும் இந்தப் பொதுவான விதிக்கு விலக்காக இருக்க முடியாதுதானே?

    குடி ஆணையும் பெண்ணையும் பாதிப்பதில் சில வேறுபாடுகள் இருப்பதாய்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில விஷயங்களில் பெண் அதிகமான பாதிப்புக்கும், வேறு சில விஷயங்களில் ஆண் அதிகமான பாதிப்புக்கும் ஆளாவதாய்ச் சொல்லப்படுகிறது. ஆணுக்கு ஏற்படும் பாதிப்பு அவனைவிடவும் பெண் குறைவாய்க் குடித்தாலும் அவளுக்கு அதே அளவு ஏற்படுவதாய்த் தெரியவந்துள்ளது.  ஆனால் அந்தப் பாதிப்புகளிலும் சில வேறுபாடுகள் உள்ளனவாம். குடிவெறியில் கொலை செய்வது, வன்னுகர்வு செய்வது போன்றவற்றில் பெண் ஈடுபடுவதில்லை என்று சொல்லப்படுகிறது. உடலளவில் பெண் அதிகமாகவும், மனத்தளவில் ஆண் அதிகமாகவும் பாதிக்கப்படுவதாய் இதிலிருந்து நினைக்க வேண்டியுள்ளது.

    பெண் குடிப்பதால் அவளது உடல் நிலையில் ஏற்படக்கூடிய சீர்குலைவு அவள் பெறும் குழந்தைகளைக் கண்டிப்பாகப் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை எவரும் எளிதில் ஊகிக்கலாம். ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற வேண்டுமாயின், ஒரு பெண் குடிகாரியாக இல்லாதிருக்கவேண்டும். அதிலும், குழந்தையைத் தன் வயிற்றில் சுமக்கும் போது ஒரு பெண் இந்த விஷயத்தில் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. கர்ப்பமுற்றிருக்கும் போது ஒரு பெண் உட்கொள்ளும் உணவுகள் அவள் சுமக்கும் கருவையும் பாதிக்கின்றன எனும் நிலையில் அவள் தன் சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியதாகிறது. சில உணவுகள் கர்ப்பத்தையே கலைத்துவிடக் கூடியவை.  சில உணவுகள்  வேறு வகையான குறைபாடுகளைக் கருவில் உற்பத்திசெய்துவிடக் கூடியவை. எனவே கருவுற்றிருக்கும் நிலையில் ஒரு பெண் தன் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தாக வேண்டிய நிலையில் உள்ளாள். அவ்வாறு இல்லையெனில், குழந்தைகள் பிறவி யிலேயே அவற்றைப் பாதிக்கும் நோய்களுடன் மட்டுமல்லாது, பல்வேறு ஊனங்களுடனும் பிறக்கும் ஆபத்து உள்ளது. இவ்வாறு ஊனமுற்ற குழந்தைகளை உருவாக்கும் உரிமை எந்தப் பெற்றோர்க்கும் கிடையாது.

    இதைப் பற்றியெல்லாம் அறியாமல், பெண்ணுரிமை என்பதன் பெயரால் ஆண்கள் செய்யும் தவறுகளையெல்லாம் பெணகள் தாங்களும் செய்ய முற்படுவது அசட்டுத்தனம் அல்லது அறிவீனமாகும்.  ‘பெண்களும் குடிக்கத் தொடங்கிவிட்டார்களே! இது எதில் போய் முடியும்?’ என்று சிலர் கவலைப்படுகிறார்கள்.  இது நியாயமான கவலைதான். குடிகாரிகளின் எண்ணிக்கை குடிகாரர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிக, மிகக் குறைவுதான். ஆனால், இதை எண்ணி நாம் நிம்மதி யடைந்துவிடலாகாது. இந்த எண்ணிக்கை பெருகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    விதைக்கும் விதை நன்றாக முளைக்கவேண்டுமாயின் அது விதைக்கப்படும் நிலம் செழிப்புள்ள நல்ல நிலமாக இருத்தல் வேண்டும். கருவைப் பெற்றுத் தன்னுள் வைத்து வளர்க்கும் பெண்ணை நிலத்துக்கு ஒப்பிடுவார்கள்.  நிலம் மட்டுமே நல்ல நிலமாக இருந்துவிட்டால் ஆயிற்றா? அதில் விதைக்கப்படும் விதையும் சேதமடைந்ததாகவோ, சொத்தையாகவோ இருக்கலாமா? ஒரு நிலம் என்னதான் களர்நிலமாக இல்லாமல் செழிப்பானதாக இருந்தாலும், அதில் ஊன்றப்படும் விதை சொத்தையாக இருந்தால் அது முளைத்து வளருமா என்ன!

    குடியால் ஓர் ஆணுக்கு ஏற்படும் மிக முக்கியமான விளைவுகளில் ஒன்று அவனுடைய உயிரணுக்கள் பாதிக்கப்படும் என்பதாகும். குடித்துக் குடித்துச் சொத்தையான உடம்பை வைத்துக்கொண்டிருக்கும் ஓர் ஆணின் மனைவி குடிப்பவளாக இல்லாவிட்டலும் கூட, அவன் மூலம் அவள் பெறும் குழந்தை ஆரோக்கியமானதாக இருக்குமா என்ன?

    எனவே,  ‘அய்யோ! பெண்கள் இப்படிக் குடிக்க ஆரம்பித்துவிட்டார்களே!’ என்று அங்கலாய்ப்பதோடு மட்டுமல்லாமல், ஆண்களும் குடிக்காமல் இருப்பதற்கான உபதேசங்களை இவர்கள் செய்வது நடுவு நிலையான செயலாக இருக்கும். தெருவுக்குத் தெரு சாராயக் கடைகளைத் திறந்து வைத்திருக்கும் அரசையுமன்றோ இவரைப் போன்ற சீர்திருத்தவாதிகள் கண்டிக்க வேண்டும்? ஆணோ பெண்ணோ தவறிழைப்பதற்கான அத்தனை தவறுகளுக்கும் அடித்தளம் அமைத்திருக்கும் அரசன்றோ  கண்டனத்துக்கு உரியது? ஆனால், அரசுக்குத் தமுக்கு அடிப்பார்கள், அல்லது கண்டுங் காணாதிருப்பார்களே தவிர, அதற்கெல்லாம் இவர்களுக்குக் கடுகளவு துணிச்சலும் கிடையாது என்பதே கசப்பான உண்மை.

    புகை பிடிப்பதும், போதை மருந்து உட்கொள்ளுவதும் கூட ஆணின் உயிரணுக்களைப் பாதிப்பதாய்ச் சொல்லப்படுகிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் ஆரோக்கியக் குறைபாடுகளுடனோ, ஊனத்துடனோதான் பிறப்பார்கள். எனவே, தீயவற்றுக்கு அடிகோலும் அரசு, அவற்றுக்குத் துணைபோகும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரையும் இவர்களுக்கெல்லாம் துணைநிற்கும் காவல்துறையினரையும் ஒருமித்துச் சாடுவதே முறையாக இருக்கும்.

    மதுவிலக்கை அமல்படுத்த இயலாது என்பதற்கான சாக்குப் போக்குகள் ஏற்புடையனவல்ல. காவல்துறை அலுவலர்களும், ஆட்சியாளர்களும், இன்ன பிற அரசியல்வாதிகளும் ஒழுங்காகச் செயல்பட்டு நடக்க முற்படின், எதையும் சாதிக்கலாம். ஒரு பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் இருப்பின், அந்தப் பகுதியைச் சார்ந்த காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் அல்லது பணி நீக்கம் செய்யப்படுவர் என்று சட்டமியற்றினால், கள்ளச் சாராயம் எப்படி ஒழியாமலிருக்கும்? வெறும் இடமாற்றம் தண்டனையாகுமா? வேறு இடத்துக்கு மாற்றலாகிச் செல்லும் காவல்துறையினர் அங்கும் அதையேதானே செய்வர்?

    ராஜாஜி சொன்னதுதான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகிறது ‘கள்ளச் சாராயத்தைக் குடித்துவிட்டுச் செத்தாலும் சாவேனே ஒழிய, குடிப்பதை நிறுத்த மாட்டேன் என்று சொல்லுபவர்களுக்காக மதுவிலக்கை அமல் படுத்தாமல் இருக்கக் கூடாது’ என்று அன்றே அவர் சொன்னதை  நினைவுகூர்ந்து நடப்பதே அறிவார்ந்த – மனிதாபிமானம் மிக்க – நிலைப்பாடாக இருக்கும்.

    இன்று பணிப்பெண்களின் கணவன்மார்கள் அனைவருமே குடிப்பதாய்த் தெரிகிறது. புருசனுக்காகப் படையல் வைத்துக்கொண்டிருந்த பெண்கள் இன்று, ‘அவன் என்னைக்குச் செத்து ஒழியறானோ அன்னைக்குத்தான் என் கொழந்தைங்களும் நானும் நிம்மதியாயிருப்போம்’ என்று விரல் சொடுக்குகிற அளவுக்கு வெறுத்துப் போய் ஒருமையில் அவனைக் குறிப்பிட்டுப் பல்லைக் கடிக்கிறார்கள்.

    மாணவர்களில் பலரும், மாணவிகளில் சிலரும் குடிக்கத் தொடங்கியிருப்பது எதில் போய் முடியும் என்பதை மனச்சாட்சியுள்ள ஆட்சியாளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். …ஹ்ம்…மனம் என்னும் ஒன்றே  இல்லாதவர்களிடம் மனச்சாட்சியை எதிர்பார்ப்பதும் மடத்தனம்தானே?

    Share
  • பெண்களுக்கும் சமூகநீதி!

    பெண்களுக்கும் சமூகநீதி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
    ஆஸ்திரேலியா

    “பெண் நலம் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவுவது அரிது. ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலைமையைப் பொறுத்தே நிற்கும்” என்னும் திரு. வி. கவின் கூற்று யாவரும் மனமிருத்த வேண்டியதே.

    இன்று “சர்வதேச மகளிர் தினம்” உலகெங்கும் வரவேற்புப் பெற்று பெண்களின் பெருமை விதந்து பேசப்படுகின்றது என்றால் அதற்கு வித்தாக விளங்கியவர் 18ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஒரு கிராமத்தில் பிறந்த ‘கிளாரா ஜெட்கின்‘ என்னும் பெண்மணியாவார். இவர் இளம் வயது முதலே பெண்களின் உரிமை, பெண்களின் நலன், யாவற்றிலும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே இருந்தார் எனலாம். பெண் தொழிலாளர்களின் உரிமையை, பிரச்சினைகளை, மனமிருத்தி – உலகெலாம் ஒலிக்கும்படி செய்தமையால் – பெண்களின் இயக்கங்களுக்கும், அவர்களின் செயற்பாடுகளுக்கும் பெரும் உந்துதலை அளித்தது எனலாம்.

    பெண்கள் பற்றிய உரிமைப் போராட்டங்கள் என்னும் வகையில் 1789 இல் பாரீஸில் சமத்துவத்துவத்துக்காக பெண்கள் எழுந்தனர். பெண்கள் தொடர்பான வேலை நேரம், பெண்களின் வாக்குரிமை, பெண் அடிமை, விடுதலை, என்னும் கோஷங்களுடன் பேரெழுச்சியாய் அப்போராட்டம் வெடித்தது. போராட்டத்தின் முடிவில் பெண்களின் கோரிக்கைக்கு பிரான்ஸ் அரசு ஒப்புதல் வழங்கியது. வழங்கிய அந்த நாள் மார்ச் 8 – 1848 ஆகும். இந்தத் திகதியும் மாதமும் “மகளிர்க்கு உரிய தினம்” என்னும் நிலைக்கு இட்டுச் செல்ல ஏதுவாக அமைந்தது எனலாம்.

    பிரான்சில் பெண்களின் எழுச்சிபோல் 1857இல் அமெரிக்காவில் நியூயோர்க்கிலும் பெண்களின் உரிமைக்குரல் எழுப்பப்பட்டது. பெண்கள் ஒருமித்துப் போராடினால்த்தான் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்கும் என்னும் எண்ணம் பரந்து விரிந்தது.

    “சர்வதேச மகளிர் தினத்துக்கு” வித்திட்ட – கிளாரா ஜெட்கின் தலைமையில் 1919இல் ஹேகனில் அனைத்துலாகப் பெண்களுக்கான மாநாடு கூடியது. இம்மாநாட்டின் தொடர்பாக ‘சர்வதேச மகளிர் அமைப்பு‘ என்பது உருவாக்கப்பட்டது. ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க்குடன் சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் இந்த அமைப்பின் சார்பில் 1911 இல் மார்ச்சு மாதம் 19 ஆந் திகதி முதல் ‘ சர்வதேச மகளிர் தினத்தைக் “ கொண்டாடினார்கள். பெண்கள் பல நாடுகளிலிருந்து கலந்துகொண்ட இவ்வரலாற்று வேளையில்தான் – பெண்களுக்கான வாக்குரிமையினை அளிப்பதற்கு மன்னன் லூயிஸ் இணக்கம் தெரிவித்தார். இது இடம் பெற்றது மார்ச் மாதம் 8ஆம் திகதியேயாகும். பெண்களின் ஒத்துழைப்பால் இவையனைத்தும் நிகழ்ந்த அந்த நாளை “சர்வதேச மகளிர் தினமாக” ஆண்டுதோறும் கொண்டாடும் தினமாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    1917ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி ரஷ்சியாவில் சென்பீட்டர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை அடுத்து 1921 மார்ச் 8ஆம் திகதி “சர்வதேச மகளிர் தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டது.

    ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டினை “சர்வதேச மகளிர் ஆண்டாக” அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 1977இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் “சர்வதேச மகளிர் தினத்தை”  மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. அதனால் துணிந்த பெண்கள் முழு வீச்சுடன் முன்வந்து போராடிப் பெண்களுக்கான பல உரிமைகளை  வென்றெடுத்தார்கள். ஆனாலும் இன்னும் பெண்களுக்கான பிரச்சினைகள் தொடர்கின்றன.

    மனித வாழ்விலே பெண்ணின் பங்கு மிக மிக இன்றியமையாதது எனலாம். இதனை எவருமே மறுத்துவிட முடியாது. ஆனால் அப்படிப்பட்ட பெண்களை  ” பெண்கள் ” என்னும் தோற்றத்தையும் அவர்களது உடலையும் வைத்துக் கொண்டு அரங்கேறும் அவலங்கள் சொல்லமுடியாதன.

    பெண்களுக்கு வாக்குரிமை எதற்கு? பெண்களுக்கு பேசும் உரிமை எதற்கு? பெண்களுக்கு வேலைபார்க்கும் உரிமை எதற்கு? பெண்களுக்கு வீட்டை விட்டு வெளியில் செல்லும் உரிமை எதற்கு? பெண்கள் என்றால் திருமணம் செய்ய உதவும் ஒரு மனித உருவம். பிள்ளைகளைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு இயந்திரம். ஆணுக்கு இன்பத்தை அளிக்கும் ஒரு நுகர்வுப் பொருள்.இப்படியெல்லாம் எண்ணி பெண்ணினத்தை வதைத்த வரலாறு மறைக்க முடியாத வரலாறாகும்.அவற்றை யெல்லாம் உடைத்தெறிந்து போராடி பெண்கள் வந்து நிற்கும் நிலையினை இன்று உலகெங்கும் காணுகிறோம். ஆனாலும் பெண்களுக்கான அச்சம் என்னும் நிலைமட்டும் அகலவே இல்லை.

    பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் பெற்று நிற்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. இன்று பெண்களின் ஆளுமை பல்கிப் பெருகி நிற்பதையும் காணுகிறோம்.

    ஆனாலும் பெண்கள் என்னும் படைப்பால் அவர்களை நோக்கும் விதமும், அவர்களை வதைக்கும் விதமும் , சமூகத்தை விட்டு அகலவே இல்லை என்றே எண்ண முடிகிறது.

    பெண்களைப் பொறுத்தவரை சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும் எல்லோரையும் போல சமூகநீதி வழங்கப்பட வேண்டும். ஆணும் பெண்ணும் சமமென்று பேசப்படுகிறதே தவிர அவர்களது நடைமுறை வாழ்வில் சமஉரிமை கிடைப்பதில்லை. பெண்கள் பொருளாதார ரீதியாகவும், இன சமூகரீதியாகவும் பாதிக்கப்படும் நிலையினை மாற்றிட முயலுதல் அனைவரதும் தார்மீகக் கடமையாகும்.பெண்களின் பிரச்சினைகளை அணுகவும் அவற்றை அகற்றிடவும் ஆற்றல் மிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுதல் அவசியமாகும். காவல்துறையில் கூட பெண்களின் நிலை பரிதாபமாகவே காணப்படுகிறது. காவல் துறையில் உயர்பதவியில் இருக்கும் பெண்களுக்கே தக்க பாதுகாப்பு இல்லாதிருக்கிறது.

    “நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், கற்பு நிலையென்று சொல்லவந்தால் இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்“

    என்று முழக்கமிட்டுப் பெண்ணுரிமை பேசி நின்றான் புரட்சிக்கவி பாரதி. பாரதி வீர முழக்கத்தைப் படிப்பதோடு நின்று விடக் கூடாது. அதனைக் கருத்தில் இருத்தி யாவரும் செயலாக்குதல் மிக  அவசியம்.

    Share
  • செந்தமிழின் சிறப்பினைச் சகத்துக்கு உணர்த்திய அறிஞர்

    செந்தமிழின் சிறப்பினைச் சகத்துக்கு உணர்த்திய அறிஞர்

    -மேகலா இராமமூர்த்தி

    நம் அன்னைத் தமிழுக்கு தமிழ்நாட்டு அறிஞர்களேயன்றி அயல்நாட்டைச் சேர்ந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத அறிஞர் பலருங்கூட அருந்தொண்டாற்றியிருக்கின்றனர். இராபர்ட் கால்டுவெல், வீரமாமுனிவர், பிரான்சிஸ் வைட் எல்லிஸ், ஜி.யூ.போப் என்று நீளும் இவ்வரிசையில் செக் நாட்டைச் சேர்ந்த கமில் சுவெலபில்லும் (Kamil Václav Zvelebil) குறிப்பிடத்தகுந்த ஒருவராவார்.

    அண்மைக் காலம்வரை நம்மிடையே வாழ்ந்துமறைந்த அந்த மொழியியல் அறிஞர், தமிழ்மொழிக்கு ஆற்றியிருக்கும் அரும்பணிகள் பல. அவை குறித்துச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

    செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia) நாட்டில் பிராக் (Prague) மாநகரில் 1927ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் பிறந்த கமில் வாஸ்லாவ் சுவெலபில், அங்குள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் (Charles University) 1946ஆம் ஆண்டு தொடங்கி 1952 வரை ஆறு ஆண்டுகள் கல்வி பயின்றார். இந்தியவியல், ஆங்கில இலக்கியம், தத்துவம், சமஸ்கிருதம், திராவிட மொழியியல் என்று பலவற்றைப் பயின்ற அவர், 1952இல் சமஸ்கிருதத்தில் முனைவர்ப் பட்டம் பெற்றார். பின்னர் திராவிட மொழியியலில் இராண்டாவது முனைவர்ப் பட்டத்தை 1959இல் பெற்றார்.

    1952 முதல் 1970 வரை செக்கோஸ்லோவாக்கியாவில் அமைந்துள்ள கீழையியல் துறையில் (Oriental Institute of the Czechoslovak Academy of Sciences) தமிழ் மற்றும் திராவிட மொழியியல் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். கிரேக்கம், இலத்தீன், செருமன், ஆங்கிலம், உருசியன், சமஸ்கிருதம், தமிழ் முதலிய மொழிகளைக் கற்றிருந்த அவர் அவற்றோடு மலையாளம், இந்தி, பிரெஞ்சு, இத்தாலியன், போலிஷ் உள்ளிட்ட மொழிகளையும் அறிந்திருந்தார் என அறிகின்றோம்.

    1965-66இல் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்திலும் (The University of Chicago), 1967-68இல் செருமனியிலுள்ள ஹெய்டெல்பெர்க் பல்கலைக்கழகத்திலும் (Heidelberg University) வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

    திராவிடமொழித் துறையின் தலைவராய்ச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சிலகாலம் பணியாற்றிய சுவெலபில், பின்னர் அங்கிருந்து வெளியேறி 1970இல் பிரான்சில் இருந்த காலேஜ் டி பிரான்ஸ் (college de France) என்ற புகழ்வாய்ந்த கல்லூரியில் வருகைதரு பேராசிரியராய்ப் பணிபுரிந்தார். நெதர்லாந்திலுள்ள லெய்டன் பல்கலைக்கழகத்திலும் (Leiden University, The Netherlands) சில காலம் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து நெதர்லாந்திலுள்ள யூட்ரெக்ட் பல்கலைக்கழகத்தில் (Utrecht University)1992ஆம் ஆண்டுவரை திராவிட மொழிகள், தென்னிந்திய இலக்கியம் மற்றும் நாகரிகம் குறித்த துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

    முதலில் செக் நாட்டுத் தூதரகத்தில் பணிபுரிந்த தமிழன்பர் ஒருவர் வாயிலாகத் தமிழ்கற்கத் தொடங்கிய சுவெலபில், அதில் ஈடுபாடுகொண்டு வானொலி வழியாகவும், நூல்கள் வழியாகவும் தமிழை முனைந்து கற்றிருக்கின்றார்.

    பிரான்சு நாட்டைச் சேர்ந்த பியர் மீலா (Perre Meile) என்ற மொழியியல் அறிஞர் தமிழ் குறித்துப் பிரஞ்சு மொழியில் எழுதிய ’Introduction au Tamoul’ (An introduction to Tamil) என்ற நூல் வழியாகவும் சுவெலபில்லுக்குத் தமிழின் அறிமுகம் கிடைத்தது.

    தமிழை மேலும் செம்மையாகவும் சிறப்பாகவும் கற்க விழைந்த அவர், தமிழகத்திற்கு வருகைபுரிந்து பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், பேராசிரியர் மு. வரதராசனார் முதலியோரிடம் தமிழ் பயின்றார்.’தமிழ் இலக்கணத் தாத்தா’ என்று சிறப்பிக்கப்பெற்ற மகாவித்துவான் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ்பயின்ற அனுபவம் உடையவர் கமில் சுவெலபில்.

    தமிழகச் சித்தர்கள் குறித்து தாம் எழுதிய ’The Poets of the Powers’ என்னும் நூலில் தம் ஆசிரியர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்டு “எனது குரு” என்று சுவெலபில் குறிப்பிட்டிருப்பது அவரது நன்றியறிதலையும் வேணுகோபாலப் பிள்ளைபால் அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பினையும் புலப்படுத்துகின்றது.

    சிறந்த தமிழறிஞர்கள் பலரிடம் பயின்றதன் விளைவாய் நல்ல தமிழிலக்கண, இலக்கியப் புலமை வாய்க்கப் பெற்றவரானார் சுவெலபில். தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பது பாராட்டுக்குரிய செயலாகும். சுவெலபில் மொழிபெயர்த்த தொல்காப்பியம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்காப்பிய உரைவளத்தில் எடுத்தாளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

    தென்னிந்தியாவிற்குப் பலமுறை களப்பணி ஆய்வுக்காக வந்திருக்கின்றார் கமில் சுவெலபில். அவர் சென்னைக்கு வருகை தந்தபொழுதெல்லாம் நம் தமிழகத்து அறிஞர்கள் அவருக்கு வரவேற்பும் பாராட்டும் அளித்துச் சிறப்பித்துள்ளனர். சென்னை மாநிலக் கல்லூரியில் சென்னைத் தமிழ்க்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் 1962ஆம் ஆண்டு செப்டம்பர் 7இல் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழறிஞர்கள் பலர் கமில் சுவெலபில்லைப் பாராட்டிப் பேசியிருக்கின்றார்கள்.

    பேராசிரியர் மு.வரதராசனார் அவர்கள், கமில் சுவெலபில் பற்றிக் குறிப்பிடும்பொழுது ” இவர் நம்மிடையே வாழ்ந்து வருகின்ற போப்; நம்மிடையே வாழ்ந்து வருகின்ற கால்டுவெல், தமிழ்மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து வெளியிட்டிருக்கிறார். நற்றிணை, புறநானூறு நன்கு கற்றவர். சிலப்பதிகாரத்தை மொழிபெயர்த்து வருகின்றார். கல்கியின் நாவல்களையும் மொழிபெயர்த்து வருகின்றார். தாமே முயன்று தமிழ் கற்றவர். தமிழ் ஒலியே கேட்காத நாட்டில் இருந்துகொண்டு தமிழ் கற்றவர்.” என்று பாராட்டிப் பேசியுள்ளார் என்பதைச் செந்தமிழ்ச் செல்வி இதழ் வாயிலாய் அறியமுடிகின்றது. (செந்தமிழ்ச்செல்வி 37:1. பக்கம் 33).

    தமிழ் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியதோடு மட்டுமன்றி, மொழியியல் நோக்கிலும் தமிழை ஆய்வுக்கு உட்படுத்தியவர் சுவெலபில்.

    குறிஞ்சிக் கிழவனென்றும், தமிழர்களின் முப்பாட்டன் என்றும் நாம் சிறப்பிக்கின்ற முருகனிடத்துத் தனித்த ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்திருக்கின்றார் என்ற செய்தி நமக்குப் பெருவியப்பினைத் தருகின்றது. முருகனைப் பற்றி ஆங்கிலத்தில் ’திருமுருகன்’ (Tiru Murugan) எனும் நூலெழுதியிருக்கின்றார் சுவெலபில்.

    வள்ளியின் பிறப்பு வளர்ப்பு திருமண நிகழ்வுகளைக் கச்சியப்ப சிவாசாரியார் எழுதியுள்ள கந்தபுராணத்தின் அடிப்படையில் இந்நூலில் விவரித்துள்ள அவர், வள்ளி முருகன் என்பவர்கள் தெய்வங்களாய்ப் புராணங்களில் சித்திரிக்கப்பட்டாலும் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்தவை அனைத்தும் தமிழ் மரபில் இடம்பெற்றிருக்கும் களவு மற்றும் கற்பு வாழ்க்கை சார்ந்தவையாகவே இருக்கின்றன என்பதையும் ஆய்வுநோக்கில் வெளிப்படுத்தியுள்ளார்.

    ’The introduction to Tamil Literature’ என்ற தம்முடைய ஆங்கில நூலில், சங்கநூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களின் மொழிநடை, பாடுபொருள் ஆகியவற்றில் ஒத்த தன்மையைக் காணமுடிகின்றது. அரசவையில் பாடப்பட்ட சங்கப் பாடல்களின் தொடக்கமாக நாம் வாய்மொழிப் பாடல்களைக் கருதலாம் என்று குறிப்பிடுகின்ற சுவலபில்,

    சங்க நூல்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, சாதிமுறை அன்றைய தமிழ்நிலத்துக்குப் பழக்கப்படாத அந்நியத்தன்மை கொண்ட ஒன்றாகவே இருக்கின்றது. தமிழ்நிலத்தில் அதிக செல்வாக்குப் பெற்ற குடியினராக வணிகர்களும் வேளாளர்களும் அன்று இருந்தார்களே தவிர பார்ப்பனர்களும் அரசர்களும் அல்லர் என்று குறிப்பிடுகின்றார்.

    தென்னிந்தியாவின் இலக்கிய வரலாற்றை எழுதிய சுவெலபில், அதற்குச் சூட்டிய பெயர் ‘முருகனின் புன்னகை’ (The Smile of Murugan: On Tamil Literature of South India) என்பதாகும். முருகன்பால் அவருக்கிருந்த ஈடுபாட்டிற்கு இதனினும் சிறந்த சான்றுண்டோ?

    இந்நூலில் தமிழர்கள் குறித்தும் தமிழ்மரபுச் செல்வங்கள் குறித்தும் சுவெலபில் முன்வைக்கும் கருத்துக்கள் தமிழர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டியவையாகும். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே தொட்டுக்காட்ட விரும்புகிறேன்.

    ”திராவிடர்கள்…குறிப்பாகத் தமிழர்கள் உலகின் பண்பாட்டு வளத்துக்கு ஆற்றிய பங்கு மகத்தானதாகும். பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களின் வடிவமைப்பு, சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட செப்புச் சிற்பங்கள், பரதக்கலை, கர்நாடக இசை போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்திற்கும் மேலான பங்களிப்பாகத் தமிழர்கள் உலகிற்குத் தந்திருப்பது தமிழிலக்கியம் எனும் வளமாகும். அதன் செழுமையும் சிறப்பும் தமிழறியாத மக்கள் உணர்ந்தும் படித்தும் இன்புறவேண்டிய தமிழ்மரபுச் செல்வமாகும்.

    தமிழர் பண்பாட்டைப் பொறுத்தவரை, அது ஒரு பண்பாட்டு வெற்றிடத்தை நிரப்புவதற்காகவோ, இரண்டு நாகரிகங்களின் கலப்பினாலோ உருவான ஒன்று அன்று; தானாகவே முகிழ்த்த ஒன்று.

    இந்தியாவின் இரு முக்கிய மொழிகளாகக் கருதப்படுபவை தமிழும் சமஸ்கிருதமும். இவற்றில் தமிழ்மொழியானது சமஸ்கிருதத்திற்குக் காலத்தால் முற்பட்டதும் அதனைச் சாராமல் தனித்து இயங்கக்கூடியதும் ஆகும்.

    அதுமட்டுமன்று! பழங்காலம் தற்காலம் எனும் இரண்டு காலங்களுக்கும் பொருந்தக்கூடிய இலக்கிய வளமும் தமிழில் மட்டுமே இருக்கின்றது. சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய நவீன இலக்கியங்கள் வரை தமிழில் காணக்கிடைப்பது, சமஸ்கிருதத்திற்கு இல்லாத தமிழின் தனித்தன்மையை புலப்படுத்தக்கூடியதாகும். எனவே அன்றுமுதல் இன்றுவரை அறுபடாத தொடர்ச்சியுடைய மொழியென்றால் அது தமிழ் மட்டுமே.” என்கிறார்.

    தமிழர்களாகிய நாம் பெருமைகொள்ளத்தக்க செய்திகள் அல்லவா இவை?

    தமிழறிஞர் சிதம்பரநாதன் செட்டியார் அவர்களின் தொடர்பினால் தமிழ் யாப்பின்மீது ஈடுபாடு வரப்பெற்ற கமில் சுவெலபில், தமிழ்யாப்பு பற்றியும் விரிவாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். யாப்பு குறித்த சுவெலபில்லின் நூல்களை மதிப்பீடு செய்யும் வாய்ப்பைப் பெற்ற முனைவர் பொற்கோ (பொன் கோதண்டராமன்) அவர்கள், கமில் சுவெலபில் தமிழ்யாப்பு பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளார் என்று குறிப்பிடுகின்றார்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கமில் சுவெலபில்லைக் கண்டு பழகுதற்குத் தமக்கு ஒரு கிழமை வாய்ப்புக் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் நினைவுகூரும் தமிழறிஞரான தமிழண்ணல் அவர்கள், “தமிழ் இலக்கணத்தையும், சங்க இலக்கியத்தையும், தமிழ் இலக்கிய வரலாற்றையும் வரன்முறைப்படுத்தி ஆங்கிலமொழி வழியாக உலகிற்கு வெளிப்படுத்தியவர்களில் கமில் சுவெலபில் குறிப்பிடத்தக்கவர்” என்கிறார். அதுபோல் தமிழுக்கு அமைந்த செவ்வியல் பண்புகளைத் தொடக்கத்தில் சான்றுகள்வழி விளக்கியவரும் அவரே எனக் கருதுகிறார் தமிழண்ணல்.

    அறிஞர் நா. வானமாமலை அவர்கள் தமிழில் எழுதிய நாட்டுப்புறவியல் சார்ந்த பல கட்டுரைகளை ஆங்கிலத்திலும் செக் மொழியிலும் மொழிபெயர்த்துள்ளார் சுவெலபில். குறிப்பாக ’முத்துப்பட்டன் கதை’ பற்றி வானமாமலை அவர்கள் சரசுவதி ஏட்டில் எழுதிய கட்டுரைகளைக் கண்ட கமில் சுவெலபில், அக்கதையை உலகின் மிகச்சிறந்த கதைப்பாடல்களுள் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், மதன காமராசன் கதை, மயில் இராவணன் கதை இரண்டையும் ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளார். 1987இல் வெளிவந்துள்ள இந்நூல், நம் நாட்டுப்புறக் கதைப்பாடல்களையும் இதிகாசங்கள், புராணங்களையும் உலகுக்கு நன்கு அறியத்தரும் வகையில் அமைந்திருக்கின்றது. இருளர் மொழியில் வழங்கும் கதைப்பாடல்களையும் இக்கதையுடன் இணைத்து ஆராய்ந்துள்ள சுவெலபில், தமிழ் சமஸ்கிருத மொழிகளில் கிடைக்கும் விக்கிரமாதித்தியன் கதையையும் ஆய்வுசெய்துள்ளதை அறியமுடிகின்றது.

    பாரதியார் பாடல்களில் சுவெலபில்லுக்கு நல்ல பயிற்சியும் ஈடுபாடும் இருந்திருக்கின்றது. பாரதியின் இளமைக்காலம், கல்வி, காசிநகர் வாழ்க்கை, பாரதிகால இந்தியாவின் நிலை, தமிழக நிலை, பாரதியின் விடுதலை உணர்வு போன்றவற்றையும், பாரதியின் பாடல்களையும் விரிவாய் ஆராய்ந்து ’தமிழ் கல்சர்’ (Tamil culture) என்ற இதழில் சுவெலபில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரைகள் உலக மக்களுக்கு பாரதி குறித்த நல்லதோர் அறிமுகத்தைத் தந்தன.

    தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ’என் சரித்திரம்’ என்னும் நூலை, ’The Story of My Life’ எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் சுவெலபில். இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ள இந்நூல் வெளிநாட்டினருக்கு உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணிகளை அறிவிக்கும் ஆவணமாகத் திகழ்கின்றது. திராவிட மொழிகளின் ஒப்பீட்டு ஒலியியல் (Comparative Dravidian Phonology), நீலகிரிப் பழங்குடி மக்களான இருளர்களின் மொழி உள்ளிட்ட நூல்கள் அவருக்கு நிலைத்த புகழைத் தேடித்தந்தன.

    தமிழர்களின் பெருமிதமாகத் திகழும் வள்ளுவர்செய் திருக்குறளைச் செக் மொழியில் மொழிபெயர்த்துள்ளார் கமில் சுவெலபில் என்பது எண்ணி மகிழத்தக்கது.

    இவ்வாறு நூல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என 500-க்கும் மேற்பட்ட படைப்புகளை வழங்கிய சாதனையாளர் சுவெலபில். சாகித்திய அகாதெமியின் சிறப்புக் கருத்துரையாளரகவும் அவர் இருந்துள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆய்விதழ் உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்ற பெருமைக்குரியவர் அவர்.

    சுவெலபில் என்ற அவரது பெயருக்கு செக் மொழியில் ‘எதையும் சிறப்பாகச் செய்பவர்’ என்று பொருளாம். அதனை அழகுத்தமிழில் மொழியாக்கம் செய்து, ‘நிரம்ப அழகியர்’ என்ற பெயரை சுவெலபில்லுச் சூட்டினார் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரான வ. சுப்பையா பிள்ளையவர்கள்.

    எதையும் சிறப்பாகச் செய்பவர் எனும் தம் பெயருக்கேற்பத் தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றி உலக அரங்கில் தமிழின் மேன்மையையும் தமிழர் பண்பாட்டின் பெருமையினையும் வெளிச்சமிட்டுக் காட்டிய செக் நாட்டு நல்லறிஞரான கமில் சுவெலபில்லின் பணிகள் தமிழராகிய நாம் அறிந்து போற்றத்தக்கவையாகும்.

    இவரைப் போன்ற மேனாட்டு அறிஞர்கள் தமிழுக்குச் செய்திருக்கும் தொண்டுகளில் ஒரு சிறிதேனும் தமிழராகிய நாமும் நந்தமிழுக்கு – செந்தமிழுக்குச் செய்யவேண்டும் எனும் ஊக்கத்தை இப்பெருமகனாரின் வாழ்க்கைவழி நாம் பெறவேண்டும்!

    *****

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    https://en.wikipedia.org/wiki/Kamil_Zvelebil
    https://web.archive.org/web/20090317061559/http://marketaz.co.uk/Zveleb1.html
    https://tamilnation.org/literature/zvelebil.htm
    http://muelangovan.blogspot.com/2008/11/17-11-1927.html
    http://murugan.org/research/zvelebil.htm
    https://tamilnation.org/books/literature/smileofmurugan

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 26

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 26

    -மேகலா இராமமூர்த்தி

    பம்பை எனும் பொய்கையின் அழகு காண்போரைக் கவரவல்லது. அந்தப் பொய்கையில் முகங்காட்டிய மணமலி தாமரையும் வாசமிகு குவளை மலர்களும் இராமனுக்குச் சீதையின் திருமுகமாகவும் கண்களாகவும் காட்சியளித்து, அவளின் பிரிவுத்துயரால் புண்பட்ட அவன் மனத்திற்கு மருந்து தடவியதுபோல் சிறிது ஆறுதலளித்தன. அந்தப் பொய்கையை ஆழ்ந்துநோக்கிய இராமன், ”என் சீதையின் கண்களையும் முகத்தையும் காட்டிய பொய்கையே! அவளின் முழுவடிவத்தையும் காட்டமாட்டாயா? தம்மால் இயன்றதைச் செய்யாமல் உலோபம் செய்பவர்கள் உயர்ந்தவர்கள் ஆகமாட்டார்கள்!” என்றான்.

    வண்ண நறுந் தாமரை மலரும்
         வாசக் குவளை நாள்மலரும்
    புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும்
         மருந்தின் தரும் பொய்காய்
    கண்ணும் முகமும் காட்டுவாய்
         வடிவும் ஒருகால் காட்டாயோ
    ஒண்ணும் என்னின் அஃது
         உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ. (கம்ப: பம்பை வாவிப் படலம்  – 3834)

    அன்றைய இரவை பம்பைக்கு அருகிலிருந்த சோலையில் கழித்துவிட்டு, மறுநாள் சூரியன் உதித்ததும் தம் பயணத்தைத் தொடர்ந்தனர் இராமலக்குவர். காடும் மலையும் கடந்து சவரி குறிப்பிட்ட உருசியமுக மலையை அடைந்து அதன்மீது விரைவாய் ஏறினர்.

    அம்மலைமீது வசித்துவந்த குரக்கினத்தரசனான சுக்கிரீவன் அப்போது அவர்களைக் கண்டான். அவர்கள் இருவரும் தன் தமையன் வாலி ஏவலால் தன்னைக் கொல்லவருகின்ற பகைவர்களே என்றெண்ணி அச்சம் கொண்டான். விரைந்தோடி அங்குள்ள குகை ஒன்றினுள் புகுந்தான். அங்கிருந்தோரும் சுக்கிரீவன் மூலமாக இந்தப் புதியவர்களின் வரவையறிந்து அச்சமுற்று ஒளிந்தனர். குரக்கினத்தாரின் அச்சத்தையும் மருட்சியையும் கண்ட அஞ்சனை மைந்தனும் சுக்கிரீவனின் அமைச்சனுமான அனுமன், அவர்களைப் பார்த்து, ”யாரும் அஞ்சற்க!
    நான்போய் அவர்கள் யாரென அறிந்துவருகின்றேன்” எனக்கூறிப் புறப்பட்டான்.

    தன் சொந்த உருவோடு செல்லாமல் ஒரு மாணவ பிரமசாரிபோல் மானுட வடிவெடுத்துச் சென்ற அனுமன், இராமனும் இலக்குவனும் வருகின்ற வழியில் சற்றே மறைவாக நின்று அவர்களைக் கூர்ந்து கவனித்தான்.

    பிறரின் முகக்குறிப்பு க(கொ)ண்டே அவர்களின் அகத்தைப் படிக்கும் ஆற்றலாளனான அனுமன், “அறமும் நல்லொழுக்கமுமன்றிப் பிறிதொன்றையும் தம் செல்வமாகக் கொள்ளாதவராய்த் தோன்றும் இவர்கள், பெறற்கரும் அமிழ்தனைய தம் பொருளொன்றுக்கு அழிவு வந்துற்றதால் அதனையே இருமருங்கும் தேடித் துழாவுகின்றவர்களைப் போலல்லவா தோன்றுகின்றனர்!” என்று தன்னுள் எண்ணினான்.

    தருமமும் தகவும் இவர் தனம்
         எனும் தகையர் இவர்
    கருமமும் பிறிது ஓர் பொருள் கருதி
         அன்று அது கருதின்
    அரு மருந்து அனையது இடை
         அழிவு வந்துளது அதனை
    இருமருங்கினும் நெடிது
         துருவுகின்றனர் இவர்கள். (கம்ப: அனுமப் படலம் – 3859)

    அவர்களையே நோக்கிக் கொண்டிருந்த அனுமனுக்கு அவர்கள்மீது இனம்புரியாத அன்பு பெருகிற்று; தம்மிடம் நேயம்கொண்டவர்களை நெடுநாட்களுக்குமுன்பு பிரிந்து மீண்டும் சந்திப்பதைப் போன்றதோர் உணர்ச்சி ஏற்பட்டு உள்ளம் உருகிற்று. அதற்குக் காரணம் விளங்காதவனாய் அவர்கள் எதிரில்சென்று நின்றான் அவன். அவர்கள் அருகில் வந்ததும் “உங்கள் வரவு நல்வரவாகுக!” என்று அவர்களை வரவேற்றான்.

    அனுமனைக் கண்ட இராமன், ”நீ யார்? எவ்விடத்திலிருந்து வருகிறாய்?” என்று கேட்கவும், ”நீலநிறத்துக் கோல மேனியனே! செந்தாமரைக் கண்ணனே! யான் வாயுதேவனுக்கு அஞ்சனை வயிற்றில் பிறந்த மைந்தன்; என் பெயர் அனுமன்! இந்த உருசியமுக மலையில் எரிகதிர்ச்செல்வன் மைந்தனான சுக்கிரீவனுக்கு ஏவல்செய்து வாழ்ந்துவருகின்றேன். என் தலைவன் உங்களிருவரையும் யாரென அறிந்துவரச் சொன்னதால் இங்கு வந்தேன்” என்று தன்னைப் பற்றியும் தான் அங்குவந்த நோக்கத்தையும் இராமலக்குவருக்கு அறியத் தந்தான்.

    ‘புலமிக்கவரைப் புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம்’ எனும் பழமொழிக்கேற்ப அனுமனின் நயத்தகு மொழிகளால் அவனின் அறிவுக்கூர்மையை உணர்ந்த இராமன் இளவல் இலக்குவனைப் பார்த்து,

    ”வில்சுமந்த தோளனே! இவன் கல்லாத கலைகளும், வேதக் கடலும் உலகில் இல்லை எனும்படியாக இவனது சொல்லாற்றல் வெளிப்பட்டதல்லவா? இச்சொல்லின் செல்வன் யார்? நான்முகனா? விடைவலானான சிவனா?” என்று அனுமனை வியந்தும் நயந்தும் உரைத்தான்.

    இல்லாத உலகத்து எங்கும் இங்கு
         இவன் இசைகள் கூரக்
    கல்லாத கலையும் வேதக் கடலுமே
         என்னும் காட்சி
    சொல்லாலே தோன்றிற்று அன்றே
         யார்கொல் இச் சொல்லின்செல்வன்
    வில் ஆர்தோள் இளைய
         வீர விரிஞ்சனோ விடைவலானோ. (கம்ப: அனுமப் படலம் – 3870)

    பின்னர் அனுமனிடம், ”நீ குறிப்பிட்ட கவிக்குலத்து அரசனை (சுக்கிரீவன்) காணவே நாங்கள் வந்திருக்கின்றோம்; அவனிடம் எம்மை அழைத்துச் செல்வாயாக” என்றான். அதுகேட்ட அனுமன், உம்மையொத்த உத்தமர்கள் சுக்கிரீவனைக் காணவிரும்புதல் அவனுடைய செய்தவமே!” என்று மகிழ்ந்துரைத்துவிட்டு,

    ”இரவியின் புதல்வனான சுக்கிரீவன், இந்திரன் புதல்வனாகிய இரக்கமற்ற வாலி துரத்தியதால் அஞ்சி இந்த மலையில் தஞ்சம் புகுந்திருக்கின்றான்; நீங்கள் இங்கு வந்தமையால் அவன் இழந்த செல்வத்தை மீண்டும் அடைவான்” என்றான் நம்பிக்கையோடு. வாலிக்கும் சுக்கிரீவனுக்குமிடையே இருக்கும் மனவேறுபாட்டை நுட்பமாய் வெளிப்படுத்தும் வகையில் வாலியைச் சுக்கிரீவனின் அண்ணன் என்றுரைக்காது இந்திரன் புதல்வன் என்றுரைக்கின்றான் அனுமன்.  

    தொடர்ந்தவன்…”ஐயன்மீர்! எம் தலைவன் சுக்கிரீவனிடம் உங்கள் இருவரையும் பற்றிச் சொல்ல விழைகின்றேன். உங்களை யார் என்று நான் அவனிடம் விளம்பவேண்டும்? சொல்லுங்கள்! என்று பணிவோடு வினவித் தன் மதிநுட்பத்தை மீண்டும் நிரூபித்தான். 

    அப்போது இலக்குவன் இராமனின் வரலாற்றை அனுமனிடம் உரைக்கலானான். ”அறிவும் செங்கோல்திறமும் உடைய அயோத்தி மன்னன் தயரதனின் புதல்வன் இந்த ஆண்தகை. அன்னையின் ஏவலால் தனக்கு உரிமையான அரசச் செல்வத்தைத் தம்பிக்கு நல்கிவிட்டுக் கானம்சேர்ந்த இவன்பெயர் இராமன். நான் இவனுக்கு ஏவல் செய்யும் அடியவன்” என இராமனின் பிறப்புத் தொடங்கி இராவணனின் கீழ்த்தரமான புன்செயலால் அவன் மனைவி சீதை காணாமற்போனது வரை அனைத்தையும் சொல்லி முடித்தான் இலக்குவன்.

    செப்பருங்குணத்து இராமனின் பெருந்தன்மையையும் நல்லொழுக்கத்தையும் அறிந்து அவன் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் மாணி உருவில் இருந்த மாருதி (அனுமன்). நீ என் காலில் வீழ்தல் முறையில்லை என்று தடுத்த இராமனிடம், நானும் அரிக்குலத்தை (குரக்கினம்) சேர்ந்தவனே என்றுரைத்த அனுமன், தன் சொற்களை மெய்ப்பிக்கும் வகையில் மின்னலைப் போன்ற ஒளிமிகு தோற்றத்தினராகிய தயரத புதல்வர்கள் வியப்புறும்வண்ணம், வேத முதலாகிய சாத்திரங்களே வடிவெடுத்தது வந்ததோ எனும்படியாகவும் பொன்மயமான மேருமலையும் தன் தோள்களுக்கு ஒப்பாகாது எனும்வகையிலும் பேருருக்கொண்டு (விஸ்வரூபம்) நின்றான்.

    மின்உருக் கொண்ட வில்லோர்
         வியப்புற வேத நல் நூல்
    பின் உருக்கொண்டது என்னும் பெருமை
         ஆம் பொருளும் தாழ
    பொன் உருக் கொண்ட மேரு
         புயத்திற்கும் உவமை போதாத்
    தன் உருக்கொண்டு நின்றான்
         தருமத்தின் தனிமை தீர்ப்பான். (கம்ப: அனுமப் படலம் – 3883)

    தருமத்தின் வடிவினராய்த் திகழுகின்ற இராமலக்குவரின் தனிமையைத் தீர்க்கவந்தவன் ஆகையால் அனுமனைத் ’தருமத்தின் தனிமை தீர்ப்பான்’ என்று ஈண்டு விதந்தோதுகின்றார் கம்பநாடர்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

     

    Share
  • மருத்துவமனை இயங்கிய கோவில்கள்

    மருத்துவமனை இயங்கிய கோவில்கள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    ஒரு நோயாளி தங்கிப் பண்டுவம் மேற்கொள்ளும் இடம் தான் ஆதுலர் சாலை என்பது. ஆதுலர் என்றால் நோயாளி சாலை என்றால் ஆதரவு விடுதி எனப் பொருள். முடியாட்சியின் போது கோவில் மண்டபங்களே இத்தகு மருத்துவமனைகளாக இருந்தன. இப்படியான மருத்துவமனைகள் பல ஊர்களில் செயற்பட்டன. அதற்கான கல்வெட்டுச் சான்றுகள் நமக்கு சில கோவில்களில் காணக் கிடைக்கின்றன. கோவில்கள் பண்டு வழிபாட்டு இடம் என்பதோடு அல்லாமல் ஆடல் பாடல் இசைக் களமாக, வேதக் கல்விக் கூடமாக, சரசுவதி பண்டாரம் எனும் நூலகமாக, மருத்துவகமாக செயற்படும்படியாக வேந்தர், மன்னர், அரைசர், கிழார்களின் பெரும் நிதி ஆதரவினால் கட்டியெழுப்பப்பட்டன. இத்தகு மருத்துவகங்களில் சமஸ்கிருதம் அறிந்த பிராமணர் ஆயுர்வேத மருத்துவத்தையும், மங்கலக் குலத்தார் என்ற அம்பட்டர் தமிழ் மருத்துவத்தையும், அறுவை மருத்துவத்தையும் மேற்கொண்டனர். இங்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாகுபாடின்றி இலவசமாகவே மருத்துவம் அளிக்கப்பட்டது. அந்நாளில் பிணம் கையாளும் வெட்டியான்கள் தவிர்த்து வேறு எவரும் தீண்டாமைக்கு ஆட்படவில்லை. மருத்துவத்தில் ஈடுபட்டோருக்கு வைத்தியபோகம், மருத்துவக்காணி என்ற பெயரில் விளை நிலமும் வீட்டு மனையும் மானியமாகப் பலரால், ஊர்ச்சபையால் வழங்கப்பட்டன. இது பற்றிய கொடையாளர் பெயர்கள், மானியம் பெற்ற மருத்துவர் பெயர்கள் போன்றன கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அக்கால மருத்துவர் தமக்கு கொடையாக விளைநிலமும், வீட்டு மனையும் பெற்றுக் கொண்டு வாழ்க்கை முழுவதும் கட்டணம் பெறாமல் அனைவருக்கும் இலவச மருத்துவம் செய்து மக்கள் தொண்டு புரிந்தனர். ஆனால் இன்று மருத்துவம் பணம் கொழிக்கும் ஒரு முதலாளியத் தொழிலாகவே ஆகிவிட்டது. மக்கள் தம் பிள்ளைகளை பணம் சம்பாதிப்பதற்காகவே மருத்துவம் படிக்கச் வைக்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி > கீரக்களூர், திருவரங்கம், திருவாவடுதுறை, கும்பகோணம் > வேம்பத்தூர், நன்னிலம் > திருப்புகலூர், பழனி > அம்பிலிகை, கோயில் தேவராயன் பேட்டை > கும்பகோணம், திருப்பத்தூர், கூகூர், கடத்தூர், குன்றத்தூர், சிறுவாக்கம், சிதம்பரம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் ஆதுரர் சாலை பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. திருமுக்கூடல் கல்வெட்டு மருத்துவப்  பணியாளருக்கு வழங்கப்பட வேண்டிய நாள் கூலி, அதன் செயற்பாட்டை பற்றி விவரமாக பதிவு செய்கின்றது. அவற்றில் சில கல்வெட்டுகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

    நங்கை எட்டிக்கூறு “காஸ்யபன் அரையன் அரைசான ராஜகேஸரி மங்கலப் பெரையன்” உடைய மருத்துவம் செய்வதற்காக அளிக்கப்பட்ட ‘வைத்தியக் காணி’ நிலம் தவறானது எனவே காணி நிலமும், வீடும் செல்லாது எனச் சபையோரால் அறிவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் அவனுக்கு மாற்றீடாக நிலம் கிடைக்க நடந்த வழக்கைப் பற்றி திருத்துறைப்பூண்டி கீரக்களூர் கிராம அகத்தீஸ்வரர் கோயிலுள்ள இரண்டாம் இராசேந்திரனின் 11-ஆம் ஆண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பண்டு பறையரே ஊரில் மங்கல, அமங்கல நிகழ்வுகளுக்கு நாகஸ்வரம், தவில் இசைத்தனர். இதனால் மங்கலப் பறையன் எனப்பட்டனர். இவர்கள் மயிர் மழிக்கும் தொழிலுக்கு கத்தியைக் கையாள்வதால் அறுவை மருத்துவமும் செய்தனர். நங்கை எட்டிக்கூறில் வாழ்பவனும் காசியபன் எனும் பிராமண அறுவை மருத்துவனின் (அரைசு) அறுவைமனைக் கூடமான ‘ராஜகேசரி’யில் பயின்றவனுமான மங்கலப் பறையன் என்பதே இக்கல்வெட்டுத் தொடருக்கான சரியான பொருள். இதை விளக்கியோர் தப்பும் தவறுமாக படித்துப் பொருள் கூறி உள்ளனர். இதில் புழங்கும் அரையன் என்ற சொல்லை அரச பட்டமாகத் தவறாகப் பொருள் கொண்டதால் பெறையன் என படிக்க வேண்டிய இடத்தில் பே(ர)ரையன் என்று படித்துவிட்டனர். பேரரையன் என்ற சொல் அரைசனை விட பதவியில் உயர்ந்த மன்னனைக் குறிப்பது. மன்னன் இப்படி மெய்க்காவல், மருத்துவப் பணி செய்வானா? என்று சிந்திக்கவில்லை. சோழர் கால எழுத்தில் ஏகார ஓகார நெடில் குறிகளுக்கு இப்போது உள்ளது போல் இரட்டைக் கொம்பு முன் துணைக் குறி கிடையாது. அதனால் பெறையன் என்பதை பேரையன் என்று படித்துள்ளனர். இக்கல்வெட்டுக் குறிப்பு பறையர் ஊரிலும், கோவிலிலும் தீண்டாமைத் தடை ஏதுமின்றிப் போய் வந்ததற்கு ஒரு சான்று.

    கோவில்களில் இப்படிப் பல்எண்ணிக்கையில் பிராமணர்களை போற்றியதால் தான் வருணாசிரமத்தில் பிராமணர் என்ற பிரிவே உண்டாகியது. இப் பிரிவையும் மற்ற மூன்று வருணப் பிரிவையும் உண்டாக்கியவர்கள் அதிகாரமும், பெரும் படையும், செல்வக் குவையும் பெற்ற ஆட்சியாளர்களே அன்றி பிராமணர் அல்லர் என்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் நால் வருணாத்தை பிராமணரே உருவாக்கியதாக ஆங்கிலர் ஆட்சியில் பொய்ப் பரப்புரை செய்யப்பட்டு இன்று வரை பரவலாக நம்பப்பட்டு வருகின்றது. ஆனால் கல்வெட்டுச் சான்றுகள் அந்தக் கருத்தை உடைத்து எறிந்து நமக்கு உண்மையைத் தெளிவிக்கின்றன.

    சோழர், பாண்டியர் ஆட்சியில் கல்வெட்டு செப்பேடு எழுதும் ஆசாரிகள், தமிழ் மருத்துவர்கள், ஜோசியர்கள், வணிகர்கள், வரி மதிப்பீடு செய்பவர்கள் ஆகியோர் தம் தொழிலை மேற்கொள்ள எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்ற வகையில் தமிழகத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை, வாழ்க்கைத்தரம் தமிழ் வேந்தர் ஆட்சியில் மிகுந்து இருந்தது. ஆனால் பிற்பட்டு வந்த நாயக்கர் ஆட்சியில் இதன் விழுக்காடு குறைந்தது என்றால் அதற்கு தெலுங்கு ஆட்சியாளர் தானே பொறுப்பு?  ஆனால் பிராமணர் தான் பிறர் கல்வி கற்பதை தடுத்துவிட்டனர் என்று பொய் பரப்பினர். இப் பொய்களையும் கல்வெட்டுகள் பொய்யாக்கின.

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் திருமுக்கூடல் வேங்கடேச பெருமாள் கோவில் 55 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ (மெய்க்கீர்த்தி உள்ளது)

    வீரத்தனிக்கொடி தியாகக்கொடி மேற்பவர் வருகென்று நிற்ப கோத்தொழிலுரிமையிநெய்தி   அரைசு வீற்றிருந்து மேவருமனுநெறி விளக்கிய கோவி ராஜகேசரிவர்மரான முடையார் ஸ்ரீ வீரராஜேந்திர தேவர்க்கு  யாண்டு அஞ்சாவது கங்கைகொண்ட சோழபுரத்துச் சோழகேரளத் திருமாளிகையில் ராஜேந்திரசோழ மாவலி வாணராஜநில்  எழுந்தருளியிருந்து ஜயங்கொண்ட

    சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துத் தனியூர் ஸ்ரீ மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துத் திருமுக்கூடல் மஹாவிஷ்ணுக்கள் தேவதானமாய் வருகின்ற காலியூர்க் கோட்டத்துத் தேரோடு பருவூர் நாட்டு வயலைக்காவூர(க)கள் சாலைக் கிறுத்து வருகின்ற பொந் எழுபத்தைங் கழஞ்சும் இச்சாலைக்குச் சாலபோகமாய் வருகின்றபடி  (இதன் பின் இரண்டு திருவிழாவும் ஒரு வேதபாடசாலை அதன் விடுதியும் பற்றிய 7 பக்கத்திற்கு நீண்ட கல்வெட்டு இடம்பெறுகின்றது)

    _ _ _ ஆதுல சாலைக்கு வேண்டுங் கலமிருங் குசவனுக்கு  நாளொன்றுக்கு நெல் குறுணியுங்  ஆழ்வாற்குப் பரிசட்டமுஞ் ஜனனாதன் மண்டபத்திலோது _ _ _ _  ஓத்துக் கேட்பாற்கும் ஆதுலற்கும் ஒலிக்கும் ஈரங்கொல்லிக்கு(ம்) நாளொன்றுக்கு நெல் நானாழியும், ஜனனாதன் மண்டபமும் ஆதுலசாலையும் நிமந்த _ _ _ _ குந் திருமெய்காவலே திருமுக்கூடற் பெறையனுக்கு நாளொன்றுக்கு நெல் நானாழியுங் காசொன்றும், திருச்சுற்று மாளிகை புதுக்குப்புறத்துக்கு நெல் நாற்பதின் கலமுஞ்ச _ _ _

    இம்மண்டபத் துண்ணுஞ் சாத்திரர்க்குங் கிடைகளுக்கும் பணி செய்யும் பெண்டுக(ளிருவர்க்கு)ப் பேரால் நெல்லு நாநாழியாக நாளொன்றுக்கு நெல் குறுணியும் பேறாற் காசொன்றாகக் காசிரண்டும் சாத்திரர்குங் கிடைகளுக்கும் ஆதுலர்க்கும் கிடக்கப் பாயெழுபத்தைந்துக்குக் காசிரண்டும் கிடைகளுக்குஞ் சாத்திரர்க்கும் தலைக்கட்டச் சனியொன்றுக் கெண்ணெயிரு நாழியாக ஆண்டொன்றிற் சனி ஐம்பத்தொன்றுக் (கெண்ணை) னூற்றிரு நாழிக்கும் ஜநநாதன் மண்டபத்தோத்துக் கேட்பார்க்கு இராயெரியும் விளக்கொன்றுக் கெண்ணை உழக்காக ஆண்டொன்றுக் கெண்ணை தொண்ணூற்று நாழியும் இவ்வெண்ணை நூற்றுத் தொண்ணூற்றிரு நாழிக்குக் காசொன்றுக் கெண்ணை யிருபதி நாழியாக காசொன்பதைரையே யரைக்காலு ஜந நாதன் மண்டபத்(துக்கு) புதுக்குப் புறத்துக்கு  நெல் நாற்பதின் க(லமு)ம்

    ஆது(ல)ர் சாலை வீரசோழநில் வ்யாதிபட்டுக் கிடப்பார் பதிநைவர்க்குப் பேராலரிசி நாழியாக அரிசி குறுணியெழு நாழிக்கு நெல் (தூணி ஐ) ஞ் ஞாழியுரியும் வ்யாதிபட்டுக் கிடப்பார்க்கும் பலபணி நிவந்தகாறர்க்கும் கிடைகளுக்குஞ் சாத்திரர்க்கும்    வைத்தியஞ் சொல்லக் காணியாகத் தநக்குந் தந் வர்க்கத்தார்க்கும் பெற்றுடைய ஆலப்பாக்கத்து சவர்ண்ணந் கோதண்டராமந் அஸ்வத்தாம பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணியும் காசெட்டும் சல்லியக்கிரியை பண்ணுவா(னொருவ)னுக்கு நாளொன்றுக்கு நெல் குறுணியும் ஆதுலர்க்கு மருந்துகளுக்கு வேண்டும் மருந்து பறித்தும் விறகிட்டும்  பரியாரம் பண்ணுவா ரிரு(வரு)க்குப் (பேரால்) நாளொன்றுக்கு நெல் குறுணியாக நெல் பதக்கும் பேரால் காசொன்றாகக் காசிரண்டும் ஆதுலர்க்கு வேண்டும் பரியாரம் பண்ணி மருந்தடும்  பெண்டுகளிருவர்க்குப் பேரால(ரிசி  நா)  நாழியாக நாளொன்றுக்கு நெல் குறுணியும் பேறாற் காசரையாகக் காசொன்றும் ஆதுலர்க்குங் கிடைகளுக்குஞ் சாத்திரர்க்கும் வேண்டும் பணி செய்(யும் நா)விசனொருவனுக்கு நாளொன்றுக்கு நெல் நா நாழியும்

    ஆதுரசாலை வீரசோழனில் ஆண்டொன்றில்லிடு(ம்) மருந்து பிராம்யம் கடும்பூரி யொன்றும், கருங்காய் நீங்க இப்படி _ _ _ டும், வாசா ஹரீதகிப் படியிரண்டும், தசமூல ஹரீதகி படியொன்றும், பல்லாத ஹரீதகி படியொன்றும், கண்டீரம் (படி) யொன்றும், பலாகேரண்ட தைலந் தூணியும், லஸுநாகயேரண்ட தைலந் தூணியும், உத்தம கர்ணாதி தைலந் தூணியும், உ_ _ _(ப)தக்குஞ் சுக்_ _ _சா க்ருதம் பதக்கு(ம்), பில்வாதி க்ருதம் பதக்கும், மண்டூ(க)ர வடகம் இரண்டாயிரமும், த்ரவத்தி நாழியும்,  விமலை இரண்டாயிரமும், சுனெற்றி யிரண்டாயிரமும், தம்ராதி யிரண்டாயிரமும், வஜ்ர கல்பந் தூணிப் பதக்கும், கல்யாண லவணந் தூணிப் பதக்கும், இவை யடுகைக்கு வேண்டும் மருத்(து)களுக்கு நெ_ __(ரையும்) தெ_ _ _யும் உள்ளிட்டன கொள்ளவும் ஆண்டுதோறும் புராணசர்ப்பி புதைக்கப் பசுவி(ந்) நெய் பதக்கும் கொள்ளவும்(க்) காசு நாற்பதும்

    ஆதுரசாலையில் இராயெரியும் விளக்கொன்றுக் கெண்ணை யாழாக்காக நாள் முந்னூற்றறுபதுக் கெண்ணை நாற்பத்தைஞ் ஞாழிக்கு காசிரண்டே காலும் ஜந நாதன் ம_ _ _ன்பில் தன்_ _யனுக்குப் பங்குனியுத்திரந் துடங்கிப் புரட்டாதிந் திருவோணத் தளவும் பரம்பாலூறத் தண்ணீர் கொடுவந்து வை(த்துச் சாய்ப்)பான் ஒருவனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் குறுணியாக நாள் நூற்றென்பதுக்கு நெல் பதிநைங் கலமும் ஏலத்துக்கும் இலாமச்சத்துக்கும் நெல்லிரு_ _ _ பதக்கும் த_ _ _ _ண்யாகம் பண்ணின பிராமணர்க்குத் தக்ஷிணைக்கும் வெற்றிலை வெறுங்காய்க்கும் நெல் கலநே தூணியிரு நாழி முழக்(கே முச்)செவிடும் வயலைக்காவூர் காணியுடைய மாதவன் தாமயன் வர்க்கத்தார்க்குப்  புரட்டாதித் திருவோணத் திநால் குடுக்கும் பரிசட்டம் இர(ண்டு)க்குக்  காசொன்றெ யெழுமா _ _ _மூவாயிரத்திரு நூற்று நாற்பத்து முக்கலனே யிரு தூணிப்பதக்கரு நாழியுழக்கே முச்செவிட்டுக்கும் காசிருனூற் றொருபத்தரையே யிரண்டு மாவுக்கும் இக்காசுதராவிடில் காசொன்றுத் தண்டவாணியோ டொக்கும் பொன் காசு நிறைக்கால் இடுவதாகவும்

    இப்படி யாண்டு ஆறாவது நிமந்தஞ் செய்தபடி இன் – – – – – லுமிடத்து சாத்திரக் கண்காணியோடும் கிடைக் கண்காணியோடும் செல்லக்கடவதாக நிவந்தம் செய்தபடிக்கு கல்லு வெட்டுவித்தார் இன்நாடு கூறு செய்த ஆதிகாரிகள் சோழமண்டலத்து விஜைய ராஜேந்த்ர வளநாட்டு இடையள நாட்டு மீனற்குடையான்

    பசுவதி திருவரங்க தேவநாரான  ராஜேந்த்ர  மூவேந்த வேளார். பாண – – – – – ஏவக் கல்லு வெட்டுவித்தான்  ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப்  புழற் கோட்டத்  தாகுடிநாட்டு அயண்டம் பாக்கத்து இறைவேட்டிந் குமரபாசூர்க்கத்தநான வீரராஜேந்த்ர செம்பியதரையன். இந்த தந்மம் செய்வித்த தாமயனார் மகன் தாமயன் கங்கை கொண்ட சோழனான சேனாதிபதிகள் கங்கைகொண்ட சோழ தன்மபாலற்க்கும், இவர் தம்பியார் தா – – – – – – நான சேனாதிபதிகள்   வீரராஜேந்திர தன்மபாலற்குமாய்.  இது கல்லுவெட்டுவித்தான் ஜயங்கொண்ட சோழமண்டலத்து புழல் கோட்டத்து – – – – – நாட்டு ஸதுவேதி மங்கலத்து பிராமணன் மாங்களூர் நமச்சிவாய தேவன் மகன் தழுவக் குழைந்தானான அபிமான மேரு பிரம்ம மாராயன். இ தர்மம் ஸ்ரீ மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து மஹாசபையார் ரக்ஷை ஸ்ரீ.

    சாலாபோகம் – உணவுச் சாலைக்கு கொடுத்த நிலம்; ஆதுலர் – நோயாளி, வறியவர்; ஆதுலர் சாலை – உணவும் தங்கும் வசதியும் கொடுத்து பண்டுவம் செய்யும் மருத்துவகம்; பரிசட்டம் – சிலைக்கு சாற்றும் ஆடை; ஓத்து கேள் – வேதபாடம் கேள்; ஒலிக்கும் – துப்புரவாக்கும்; ஈரங்கொல்லி – வண்ணான்; நிமந்த – செலவு திட்டம்; புதுக்குப்புறம் – கட்டடம் புதுப்பிக்க வைத்த நிலம்; சாத்திரர் – வேதம் முதலான வடமொழிக் கல்வி ஆசிரியர்; கிடைகள் – வேதம் பயிலும் மாணவர் குழாம்; கிடக்கப் பாய் – உறங்கப் பாய்; தலைகட்ட – நீராட; நிவந்தக்காரர் – கோவில் ஊழியரில் அவரவர்க்கு உரிய பணிகொண்டோர்; சவர்ணன் –   எல்லா மருத்துவப் பிரிவிலும் வல்லவன், பெரு மருத்துவன், medical expert;  சல்லியக் கிரியை – கூர் ஆயுத காயத்தை ஆற்றும் மருத்துவம்; பரியாரம் – நோய்விடுபாடு, relief; நாவிதன் – மயிர் திருத்துவோன்; சாய்ப்பான் – ஊற்றுவான், இடுவான்; வர்க்கத்தார் – சார்ந்தோர், வழிவந்தோர்; முச்செவிட்டு – ஒரு முகத்தல் அளவை; தண்டவாணி – பொன்னின் மாற்று அறியும் ஆணி; கூறு செய் – வேலையை வகை செய்து நிர்வகி; மஹாசபை – பிராமண ஊர்களில் சபையின் முழுக் கூட்டம்; ரக்ஷை – பாதுகாப்பு.

    விளக்கம்:  இக்கல்வெட்டு வீரராசேந்திரனின் 5-ம் ஆட்சி ஆண்டில் (1068 AD) வெட்டப்பட்டது. மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்தில் அடங்கிய திருமுக்கூடல் பெருமாளுக்கு தேவதானமாய் காலியூர்க் கோட்டத்தின் வயலைக்காவூரார் உணவுச் சாலைக்கு தேவதானமாய் கொடுத்து வந்த 75 கழஞ்சு பொன்னை வீரராசேந்திரனின் இரண்டாம் ஆட்சி ஆண்டு முதல் கொடுக்காமல் போகவே தன் 5 – ம் ஆட்சி ஆண்டு முதல் 75 கழஞ்சு பொன்னையும் இவ்வூரால் வந்த வரியையும் இறையிலியாக வீரராசேந்திரன் வழங்கினான்.  இதன் மதிப்பு 147 கழஞ்சும்  216 -1/2 காசும் 2 மாவும் ஆகும். இது கோவிலின் பல்வேறு பணிகளுக்கும், ஆவணியில் ஒரு திருவிழாவும் கார்த்திகையில் ஒரு திருவிழாவும் கொண்டாடுதற்கும், கோவிலில் உண்டு உறைவிட வேத பாடசாலையை நடத்தவும், கோவிலின் ஜனநாதன் மண்டபத்தில் 15 படுக்கையுடன் செயற்பட்டு வந்த மருத்துவமனையை தடையின்றி நடத்திச் செல்லவும் தரப்பட்டது. வேத பாடசாலையில் 14 ஆசிரியரும் 50 மாணவரும் இருந்துள்ளனர். அவர்களுக்கு     அன்றாடப் படியாக தரவேண்டிய நெல்லின் அளவு குறிக்கப்பட்டுள்ளது.

    இம் மருத்துவமனைக்கு தேவையான கலம் வணையும் இரு குயவருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு குறுணி நெல்லும், சிலையின்  உடுப்பை, ஜனனாதன் மண்டபத்தில் வேதபாடம் கேட்கும் மாணவர், நோயாளிகள் துணியை துவைக்கும் வண்ணானுக்கு நாள் ஒன்றுக்கு நெல் நான்கு நாழியும், ஜனனாதன் மண்டபத்துக்கும், அதில் இயங்கும் மருத்துவமனைக்கும், கோவிலில் திட்டச் செலவை மேற்கொள்வோருக்கும் மெய்க்காவல் புரியும் திருமுக்கூடல் பறையனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் நான்கு நாழியும் ஒரு காசும் தரப்பட வேண்டும். இதுகாறும் பறையர்கள் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக ஊருக்குள்ளும் கோவிலுக்குள்ளும் செல்ல முடியாமல் தீண்டாமை பாராட்டி தடுத்து வைக்கப் பட்டனர் என்ற தலித்திய, பெரியாரியப் பொய்க் கூற்றை இந்தக் கல்வெட்டுவரி தகர்த்துத் தவிடு பொடியாய் ஆக்கிவிடுகின்றது. பாடிகாவல் எனும் ஊர்காவல் பணியை மேற்கொண்டோர் பெரும்பாலும் பறையரே. ஊரினுள் நுழையாமல் இப்பணியை மேற்கொள்ள இயலாது. தமிழகத்தில் சோழர், பாண்டியர் ஆட்சியில் தீண்டாமை நிலவவில்லை. அது நாயக்கர் ஆட்சியில் புதிதாக ஏற்பட்ட சமூகச் சீர்கேடு ஆகும். ஆனால் தெலுங்கர் இதற்கு பொறுப்பு ஏற்காமல் பழியை தமிழ் பிராமணர் மீது சாற்றுகின்றனர்.

    கோவிலின் திருச்சுற்றை புதுப்பித்துக் கட்ட நெல் 40 கலம் ஒதுக்கப்பட வேண்டும். இந்த மண்டபத்தில் உண்ணும் வேத ஆசிரியர்க்கும், வேதம் பயிலும் மாணவருக்கும், பணிப் பெண்கள் இருவருக்கும் ஆள் ஒருவருக்கு நெல் நான்கு நாழியாக நாள் ஒன்றுக்கு குறுணி அளவும் இருவருக்கும் ஒரு காசு என்ற வகையில் இரு காசும் தரப்பட வேண்டும். வேத ஆசிரியர், மாணவர், நோயாளிகள் படுத்து உறங்கப் பாய் 75 ஐ வாங்க 2 காசும், வேத ஆசிரியர், மாணவர் தலைக்கு தேய்க்க ஒவ்வொரு சனிக் கிழமையும் எண்ணெய் இரு நாழி என்ற கணக்கில் ஒரு ஆண்டிற்கு  51 சனிக் கிழமைக்கும் நூற்றியிரு நாழியும், ஜனனாதன் மண்டபத்தில் வேதம் கேட்கும் மாணவர்க்கு இரவில் எரியும் விளக்கு ஒன்றுக்கு எண்ணெய் உழக்கு அளவு ஆண்டு ஒன்றுக்கு 90 நாழியும், இந்த எண்ணெய் 192 நாழிக்கு  ஒரு காசிற்கு 20 நாழி என்ற மேனியில் 9-1/2 1/8 காசும், ஜனனாதன் மண்டபத்தை புதுப்பித்துக் கட்ட 40 கலம் நெல்லும் ஒதுக்கப்பட வேண்டும்.

    இம் மருத்துவமனைக்கு வீரசோழன் எனப் பெயர். இதில் நோயுற்றுக் கிடக்கும் 15 நோயாளிகளுக்கு தலைக்கு அரிசி நாழியாக குறுணி ஏழு நாழிக்கு நெல் தூணி ஐந்து நாழியும் உரியும் நோயுற்றார்க்கும், பலபணி கோவில் பணியாளருக்கும், மாணவர்க்கும், வேத ஆசிரியருக்கும், மருத்துவம் செய்யக் காணியாக தனக்கும் தன் வழிவந்தோருக்கும் பெறுவதற்கு ஆலப்பாக்கத்து பெரு மருத்துவன் கோதண்ட ராமன் அஸ்வத்தாம பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணியும் 8 காசும், ஒரு அறுவை சிகிச்சை செய்பவனுக்கு நாள் ஒன்றுக்கு குறுணி நெல்லும், நோயாளியர் மருந்துகளுக்கு தேவையான பச்சிலைகளை பறித்து வந்து அடுப்பெரித்து மருந்து ஆக்கி நோய்விடுபட  இருவருக்கு தலைக்கு நாள் ஒன்றுக்கு நெல் குறுணியாக நெல் பதக்கு அளவும் தலைக்கு ஒரு காசு என இரு காசும் தரப்பட வேண்டும். நோயாளியர்க்கு தேவைப்படும் நோய்விடுபாடு மருந்திடும் இரு செவிலிப் பெண்களுக்கு தலைக்கு நான்கு நாழியாக நாள் ஒன்றுக்கு குறுணி நெல்லும் தலைக்கு 1/2 காசு என்ற மேனியில் ஒரு காசும், வேத ஆசிரியர் மாணவர்க்கு மழித்துவிடும் நாவிதனுக்கு நாள் ஒன்றுக்கு நான்கு நாழி நெல்லும் தரப்பட வேண்டும்.

    வீரசோழன் மருத்துவமனையில் ஆண்டு ஒன்றில் இடும் மருந்தின் அளவு 1) பிராமியம் கடும்பூரி – 1 எண்ணம் 2) வாசா ஹரீதகி -2 படி 3) தச மூல ஹரீதகி – 1 படி 4) பல்லாதக ஹரீதகி – 1 படி 5) கண்டீரம் – 1 படி 6) பலாகேரண்ட தைலம் – 1 தூணி 7) லசுநாக ஏரண்ட தைலம் – 1 தூணி 8) உத்தம கர்ணாதி தைலம் – 1 தூணி 9) _ _ _ கிருதம் – 1 பதக்கு 10) பில்வாதி கிருதம் – 1 பதக்கு 11) மண்டூகர வடகம் – 2000 எண்ணம் 12) திரவத்தி – 1 நாழி 13) விமலை – 2000 எண்ணம் 14) சுனெற்றி – 2000 எண்ணம் 15) தம்ராதி – 2000 எண்ணம் 16) வஜ்ர கல்பம் – 1 தூணி 1 பதக்கு 17) கல்யாண லவணம் – 1 தூணி 1 பதக்கு தவிர இவற்றின் மேல் பூச்சு மருந்திற்கும் தேவையானவை வாங்கவும், ஆண்டுதோறும் புராண சர்ப்பி புதைப்பதற்கு பசுநெய் பதக்கு அளவு வாங்க 40 காசும் மருத்துவமனையில் இரவில் எரியும் விளக்கு ஒன்றினுக்கு எண்ணெய் ஆழாக்கு என்ற மேனி 360 நாளுக்கு எண்ணெய் 45 நாழிக்கு காசு 2-1/4 தரவேண்டும். ஜனனாதன் மண்டபத்தில் பங்குனி உத்திரம் தொடங்கி புரட்டாசித் திருவோணம் வரை பரம்பால் ஊறுவதற்கு தண்ணீர் கொண்டு வந்து ஊற்றும் ஒருவனுக்கு நாள் ஒன்றுக்கு குறுணி நெல் என்ற அளவில் 49 நாளுக்கு 15 கலம் நெல்லும், ஏலக்காய்க்கும் இலாமச்ச வேருக்கும் நெல் இரண்டு பதக்கும், த_ _ண்யாகம் செய்த பிராமணர் தட்சணையாக வெற்றிலை பாக்கிற்கு நெல் ஒரு கலனும் தூணி இரு நாழி முழக்கு மூன்று செவிடு வயலைக்காவூரில் பரம்பரை நிலம் (முதுசொம்) உள்ள மாதவன் தாமயன் வழிவந்தோர்க்கு புரட்டாசி திருவோணத்து நாளில் கொடுக்கின்ற இறைவன் ஆடைக்கு 2 காசு 7 மா _ _ _ _ 3243 கலன் 2 தூணிப் பதக்கு  6 நாழி உழக்கு 3 செவிட்டுக்கும் 210 -1/2 இரண்டு மாவிற்கு தரவேண்டும். இக் காசைத் தராவிடில் காசு ஒன்றுக்கு பொன்னின் மாற்று அறியும் ஆணியை ஒத்த அளவிற்கு பொற்காசை எடைபோட்டுத் தருவதாக ஒத்துக் கொண்டோம்.

    இப்படியே 6-ம் ஆண்டும் செலவுத் திட்டம் வகுத்தபடி செய்து _ _ _ வேதஆசிரியக் கண்காணியுடனும், மாணவர் கண்காணியுடனும் செல்வதாக கோவில் நிர்வாகத் திட்டம் செய்தவாறு கல்வெட்டு வெட்டுவித்தார் இந்நாட்டு வேலையை பகுத்து நிர்வகிக்கும் அதிகாரியான சோழமண்டலத்து விஜய ராஜேந்திர வளநாட்டின் இடையள நாடனான மீனக்குடையான் பசுபதி திருவரங்க தேவனார் ராஜேந்திர மூவேந்த வேளார். _ _ _ ஏவல் ஏற்று கல்லில் வெட்டி வைத்தான் ஜெயங் கொண்ட சோழமண்டலத்து புழற் கோட்டத்தை சேர்ந்த தாகுடி நாட்டின் அயண்டம் பாக்கத்தின் இறைவேட்டின் குமரபாசூர்க் கத்தன் வீரராஜேந்திர செம்பியதரையன். இந்த அறத்தை செய்வித்த தாமயனார் மகன் தாமயன் கங்கை கொண்ட சோழனான சேனாதிபதிகள் கங்கை கொண்ட சோழ தர்மபாலர், இவன் தம்பி தாமயனார் மகன் சேனாதிபதிகள் வீரராஜேந்திர தர்மபாலர் சார்பில் இதைக் கல்லில் எழுதினான் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தின் புழல் கோட்டத்து _ _ _ நாட்டு சதுர்வேதி மங்கலத்து பிராமணன் மாங்களூர் நமச்சிவாய தேவன் மகன் தழுவக் குழைந்தானான அபிமான மேரு பிரம்ம மாராயன். இவ் அறம் மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து ஊர் சபையோரின் பாதுகாப்பிற்கு உட்பட்டது.

    பெரு மருத்துவர் அஸ்வத்தாம பட்டன் தனது மாணவர், உறவுகள் போன்றோருடன் பணியாற்றுவதால் அவருக்கு நெல் முக்குறுணியும் 8 காசும் தரப்படுகின்றது. அறுவை மருத்துவன் சேவை சிலருக்கு மட்டுமே தேவைப்படும் என்பதால் ஒரு குறுணி நெல்லும், மருந்து ஆக்குவோருக்கு நெல் குறுணியாக ஒரு பதக்கும் ஒரு காசும் தரப்படுகின்றது. செவிலிகள் ஒரு குறுணி நெல்லும் 1/2 காசும் பெறுவது ஆகியன அவரவர் வேலைக்கு தக்கபடியே ஆகும். இதில் பாகுபாடு ஒன்றும் இல்லை.

    (பார்வை நூல் Select Inscriptions of Tamil Nadu p. (137 – 152), Tamilnadu  State Dept of Archaeology, 2006) 

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கோயில் தேவராயன் பேட்டை மச்சபுரீசுவரர் கோவில் 23 வரிக் கல்வெட்டு. 

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமன்னிவளர இருநிலமடந்தையும் பொற்ச் செயற் பாவையும் சீர்த்தனிச் செல்வியும் _ _ _ (மெய்கீர்த்தி முழுதும் உள்ளது)
    2. கோப்பரகேசரி பர்ம்மராகிய ஸ்ரீ இராசேந்திர சோழ தேவற்கு
    3. யாண்டு ஏழாவது ஆழ்வார் ஸ்ரீபராந்தகன் ஸ்ரீகுந்தவைப் பிராட்டியார் அருளிச்செய்த திருமுகத்தின் வாசகமாவது அருளிச் செய்க நித்தவினோத வளநாட்டு நல்லூர்நாட்டு பிரம்மதேயம் ராசகேசரி சதுர்வேதி மங்கலத்து சவையார்க்கு தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் சுந்தரசோழ விண்ணகர ஆதுலர் சாலைக்கு வைத்தியஞ் செய்ய முன்பு இவ்வாதுலர் சாலையில் நிவந்தஞ் செய்த நிவந்தம் இராசகேசரியால் நெல்லுப் பதக்கு நானாழியும் ஆண்டுவரை
    4. பொன் நாற்கழஞ்சும் பற்றாவிட இவை ஜயபோகத்துக்கு பற்றும் வண்ணம்
    5. இந்த ராசகேசரி சதுர்வேதி
    6. மங்கலத்து கலகரச்சேரி
    7. இராயூர் எச்சபோக கிரமவித்தநேன்
    8. ஆழ்வார் ஸ்ரீபாதம்
    9. தாங்கிகள் குந்தவைப் பிராட்டியார்
    10. பக்கல் காசுக் கொண்டு
    11. வைத்திய போகத்துக்கு மனையாக இவ்வாண்டே விற்றுக்குடுத்த மனையாவது
    12. இவ்வூர் ஸ்ரீகண்டச்சேரி மேற்கு நின்றும் எட்டாம் சட்டத்துக்குத்
    13. தெற்கு நின்றும் அஞ்சாமனையில் வடக்கடைய அரையமனையும்
    14. ஆறாம் மனையில் தெற்கடைய முக்கால்
    15. மனையும் விற்றுக் குடுத்தேன் எச்சக்கிரமவித்தனேன். ஆழ்வார்
    16. ஸ்ரீபராந்தகன் ஸ்ரீ குந்தவைப் பிராட்டியார்_ _ _ கோயிலில் மாளிகை
    17. ஆதிபூமியில் எழுந்தருளி இருந்து நம் ராசகேசரி சதுர்வேதி மங்கலத்து தன்மத்துக்கு வைத்தியபோகம் வைக்க கொண்ட நிலம்
    18. ஒன்பது மாவும் ஒன்றேகால் மனையும் சத்திரிய சிகாமணி  வளநாட்டு மருகல்நாட்டு மருகல் ஸவர்ணன் அரையன் மதுராந்தகனுக்கும் இவன்
    19. அனுவயத்தாற்கும் ராசேந்திர சோழர்க்கு யாண்டு மூன்றாவது முதல் இறையிலியே சந்திராதித்தல் வரை வைத்தியபோக காணியாகக் குடுத்தோம்
    20. என்று அருளிச் செய்யப் பெற்றான் என்று அரையன் அம்பலநான நெழுத்திநால் அரையன் மதுராந்தகனுக்கும் இவன் அன்வயத்தாற்க்கும்
    21. நாம் குடுத்தபடியும் நம்முடைய பிராமணப் படிகளும் கெல் மேல் வெட்டிவிக்க என்று அருளிச்செய்து ஆழ்வார் ஸ்ரீமுகம் வந்தமையில்
    22. கல்வெட்டுவிச்சோம் ராசகேசரி சதுர்வேதி மங்கலத்து மஹாசபையோம். பணியால் இச்சாதனம் வெட்டினேன்
    23. மதுராந்தகப் பெருந்தச்சனேன். இவை என் எழுத்து.

    திருமுகம் – அரசாணை; பற்றாகவிட – உரிமையாக அனுபவிக்க; ஜயபோகத்துக்கு –  ; எச்சபோகம் – முதுசொம், சந்ததியாக அனுபவி, ancestral property; வைத்தியபோகம் – மருத்துவம் செய்பவருக்கு ஒதுக்கப்பட்ட மானிய நிலம்; சட்டம் –  ; அருளிச் செய்- மனம்இரங்கிக் கொடு; ஆழ்வார் – இறைப் பற்றாளரை குறிக்கும் மதிப்புச் சொல்; மாளிகை ஆதிபூமியில் – கருவறை முதற் தளம்; மருகல் – குடியோன், செல்வம்; அரையன் –  அறுவை மருத்துவன்; அனுவயத்தார் – பின்வரும் கால்வழியர்; பக்கல் – இடத்து, 7ஆம் வேற்றுமையான கண்; படிகள் – நாட்செலவு பொருள்கள்; பணி -கட்டளை; சாசனம் – கல்வெட்டு ஆவணம்.

    விளக்கம்:  இது முதலாம் இராசேந்திரச் சோழனின் ஏழாம் ஆட்சிஆண்டில் (1020 AD) வெட்டப்பட்ட கல்வெட்டு. இங்கு இராசராசன் தமக்கை குந்தவைப் பிராட்டியார் தந்தை இரண்டாம் பராந்தகன் பெயரை முன்னொட்டாக பெற்று குறிக்கப்படுகிறார். குந்தவை மனம் இரங்கிக் கொடுத்த போது சொன்ன சொல் யாதெனில், “நித்தவினோத வளநாட்டின் நல்லூர் நாட்டில் அமைந்த பிரம்மதேயமான இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தின் ஊர் சபையோர்க்கு தரும் செய்தியாவது, தஞ்சாவூர் கூற்றத்தில் உள்ள தஞ்சாவூர் சுந்தரச்சோழ விண்ணகரத்தில் அமைந்த மருத்துவகத்தில் மருத்துவம் செய்வதற்கு கூலியாக முன்பு இந்த மருத்துவகத்தில் ஏற்பாடான திட்டப்படி ‘இராசகேசரி’ என்னும் அளவையால் நாள்தோறும் நெல் பதக்கு நானாழி அளவும் ஆண்டிற்கு பொன் நான்கு கழஞ்சும் உரிமையாக அனுபவிக்கத் தரப்பட்டிருந்தது. இவை இப்போது ஜெயபோகத்திற்கு உரிமையாகும் வண்ணம் விடப்பட்டதால் அதற்கு மாற்றீடாக, “இந்த இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தின் கலகரச்சேரி இராயூரில் முதுசொம் உள்ள கிரமவித்தன் என்பான் இறைவனடி பற்றும் இறையடியாரான ஆழ்வார் குந்தவை பிராட்டியிடம் காசு பெற்றுக் கொண்டு மருத்துவர் காலம் முழுதும் ஆண்டு அனுபவித்தற் பொருட்டு இவ்வாண்டு விற்ற மனையானது இந்த ஊர் ஸ்ரீ கண்டச்சேரிக்கு மேற்கில் இருந்து எட்டாவது சட்டத்துக்கு தெற்கில் இருந்து ஐந்தாம் மனையில் வடக்கே அரை மனையும், ஆறாம் மனையில் தெற்கில் முக்கால் மனையும் விற்றுள்ளான் இந்த எச்சக் கிரவித்தன் என்ற பிராமணன்”. இறையடியாரான குந்தவை பிராட்டியார் கோயிலின் கருவறைக்கு முன்னுள்ள முதல் தளத்தில் வந்திருந்து நம் இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தின் அறக்கொடையாக மருத்துவரின் உரிமையாகத் தருவதற்கு வாங்கிக் கொண்ட நிலம் ஒன்பது மாவையும் (1/2 + 3/4 =1-1/4) ஒன்றேகால் மனையையும், சத்திரிய சிகாமணி வளநாட்டின் மருகல் நாட்டுச் செல்வமான பெரு மருத்துவன் அரையன் மதுராந்தகனுக்கும் இவன் வழிவந்தோருக்கும் இராசேந்திரச் சோழனின் மூன்றாம் ஆட்சிஆண்டு (1016 AD) முதற்கொண்டே இறையிலியாக நிலவும் ஞாயிறும் நின்று நிலைக்கும் காலம் வரை மருத்துவர் உரிமைக் காணியாக மனமிரங்கிக் கொடுத்தேன் என்று சொல்லி கொடுக்கப்பட்டான் என்று அரையன் அம்பலன் ஓலை எழுத்தினால் அறுவை மருத்துவன் மதுராந்தகனுக்கும் அவன் வழிவருவோருக்கும் கொடுக்கப்பட்டது. அதோடு பிராமணர்களுக்கு கொடுத்த நாட்செலவுப் பொருள்கள் பற்றியும் கல்மேல் கல்வெட்டு ஆக்கி வைக்க வேண்டும் என்று இறையடியார் குந்தவைப் பிராட்டியாரிடம் இருந்து ஆணை வந்தமையால் கல்வெட்டாக்கி வைத்தோம் இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தின் ஊர்ச் சபையோம். கட்டளைக் கடமைக்கு இந்த ஆவணத்தை வெட்டுவித்தேன் மதுராந்தகப் பெருந்தச்சன். இது என் கையொப்பம். ஊர்ச் சபையோர் வேண்டுகோள் விடுத்ததால் இந்த மருத்துவர் கொடையை குந்தவை பிராட்டியார் தந்திருக்க வேண்டும். அதனால் கல்வெட்டில் ஊர்ச்சபையோர் குறிக்கப்படுகின்றனர். அப்போது குந்தவைக்கு 75 அகவை கடந்திருக்கும் என ஊகிக்க முடிகின்றது.

    இதே போல் குந்தவையார் 1016 A.D. இல் சவர்ணன் அரையன் சந்திரசேகரன் ஆன பாரத்துவாசி அரையன் சண்டேசுவர கருணாகர உத்தம சோழ அசலண் என்ற பெருமருத்துவனுக்கு வீடும், மருத்துவக் காணியும் கொடையாக நல்கிய செய்தி திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோவிலின் வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. (காண்க ARIEp 1923 B No 112)

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள் (பொ.ஆ. 300 – 1800), பக்.287- 288. ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம். (ARIEp 1923, B No 249).

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் கோயிலில் நாலாம் திருச்சுற்றில் உள்ள தந்வந்திரி கோயில் முன் உள்ள கற்பலகையில் உள்ள 118 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ ஸகாப்தம் 1415 ந் மேல் செல்லா நின்ற ப்ரமாதி ஸம்வத்ஸரத்து ருஷப நாயற்று பூறுவ பக்ஷத்து பஞ்சமியும் ஸோம வாரமும் பெற்ற பூசத்து நாள் திருவரங்கன் திருப்பதி இறந்த காலம் எடுத்த பெருமாள் கூடல் சக்ரவாள நம்பி ஆன உத்தமநம்பி பிள்ளை காலத்திலே பட்டாள் கொத்து அழகிய மணவாள மங்களாதராயர் புத்ரந் ஸ்ரீ நிவாஸந் ஆன ஸ்ரீரங்க கருடவாஹன பட்டர் கயிங்கரியம் ஆக ஸ்ரீ சந்த்ரபுஷ்கரணிக்கு மேல்புறமாக முன்னாள் ப்ரதாப சக்ரவத்தி காலம் துடங்கி இவருடைய பூர்வாள் கருடவாஹந பட்டர் நடத்தி வந்த ஆரோக்ய ஸாலை வாணத்திலே பிலமாகையில். இப்பொழுது ஆரோக்ய ஸாலையும் சமைப்பித்து தந்வந்தரி எம்பெருமானையும் ஏறி அருளப்பண்ணுகையில் நாள்தோறும் பெருமாள் குடினீர்அமுது செய்தருளுகிற கட்டளைக்கும் தந்வந்தரி எம்பெருமான் திருவாராதந கட்டளைக்கும் நடக்கும்படி முன்னாள் கருடவாஹந பட்டர் பெருமாளுக்கு ரங்கபோஷனை ப்ரபந்தம் பண்ணி பெருமாள் திருவுள்ளம் உகந்து திருக்கை வழக்கம் ஆகப் பல்லக்கு மான்னியம்மாகத் திருவுள்ளம் பற்றின திருமுகப்படியிலே அனுபவித்து வந்த தென்கரை திருவிடை ஆட்டம் (பா)ண்ட மங்கலத்து இராஜவிபாடன் நிலம் இருவேலியும் நாளது பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்து தந்வந்தரி எம்பெருமானுக்கு திருவிடை ஆட்டமாக ஸமர்ப்பிக்கையில் இந்த நிலம் இருவேலியும் தந்வந்தரி எம்பெருமானுக்கு திருவாராதநக் கட்டளைக்கும் குடினீர் அமுதுக்கும் கருடவாஹன பட்டர் அதிஷ்டானம் ஆக புத்ர பௌத்ர பரம்பரையாக ஆசாஞ்ரார்க்கு ஸ்தாயி ஆக நடத்தக் கடவதாவும் இந்த தர்ம்மத்துக்கு அஹிதம் நினைத்தவர்கள் கங்கைக் கரையில் கபிலயை வதைத்தவர்கள் பாபத்திலே போகக் கடவர்களாகவும் ஸுபமஸ்து.

    ஆரோக்கிய சாலை – மருத்துவகம்; கொத்து – ஊழியர் தொகுதி; கைங்கர்யம் – அறத்தொண்டு, தர்ம சேவை, இறைத் தொண்டு; பூர்வாள் – முன்னோன்; வாணம் – தீ, வேட்டு; பிலம் – குகை போல் பள்ளம்; சமைப்பித்து – உண்டாக்கி; ஏறிஅருள- எழுந்தருள, பிரதிஷ்டை செய்; குடிநீர் அமுது – மூலிகை நீர், தீர்த்தம்; கட்டளை – கோயில் சிறப்பு நடைமுறை, பூசை ஏற்பாடு; திருமுகம் – ஆணைஓலை; அதிஷ்டானம் – நிலைக்களம், location; ஆசாஞ்சரார் – வந்து போவோர்; ஸ்தாயி – விடுதி; சுபமஸ்து – நன்மையே உண்டாகுக.

    விளக்கம்: சக ஆண்டு 1415 (1493 AD) பிரமாதி ஆண்டில் திருவரங்கன் திருவரங்கத்தில் இறந்த காலம் எடுத்த பெருமாள் கூடல் சக்ரவாள நம்பி எனும் உத்தமநம்பி நிர்வகிக்கும் காலத்தில் பட்டர்களின் ஊழியர் குழுவைச் சேர்ந்த ஒருவரான அழகிய மணவாள மங்களாதராயர் மகன் சீறினிவாசன் எனும் ஸ்ரீரங்க கருடவாகன பட்டரின் அறத்தொண்டாக சந்திரன் எனப் பெயரிட்ட தாமரைக் குளத்திற்கு மேற்கே முன்னாளில் போசளன் சோமேசுவரனின் இரண்டாம் மகன் பிரதாப சக்ரவர்த்தியான வீரராமநாதன் ஆட்சிக் காலம் முதல் இவருடைய முன்னோன் கருடவாகன பட்டர் வழிவந்தோர் நடத்தி வந்த மருத்துவகம் பின்னாளில் தீக்கோளினால் பள்ளமாகி அழிந்தது. இப்பொழுது மீண்டும் இந்த ஸ்ரீரங்க கருடவாகன பட்டர் ஒரு மருத்துவகத்தை உண்டாக்கி அதில் தந்வந்தரி பெருமானை எழுந்தருளச் செய்து நாள்தோறும் பெருமாளுக்கு மஞ்சனநீரை உருவாக்குகிற கோயில் நடைமுறைக்கும், தந்வந்தரி பெருமான் பூசையை நடத்துவதற்கும், முன்னாளில் கருடவாகன பட்டர் பெருமாளுக்கு ரங்கபோஷனை பிரபந்தம் செய்து பெருமாளின் திருவுள்ளத்தை மகிழ்வித்து பிரசாதமாக, பல்லக்கு மானியமாக கொடுத்தாற் போல இறைவன் உள்ளத்தை பிடித்த போது கிடைத்த ஆணையால் தான் அனுபவித்து வந்த தென்கரையில் அமைந்த வைணவக் கோயில் மானிய நிலம் உள்ள பாண்ட மங்கலத்து இராசவிபாடன் நிலம் இரண்டு வேலியை இன்று பெருமாளுக்கு வேண்டுதல் வைத்து தந்வந்தரி பெருமானுக்கு திருவிடையாட்டமாக விட்டார். இந்நிலம் இரண்டு வேலியைக் கொண்டு தந்வந்தரி பெருமானின் பூசை நடைமுறைக்கும், தீர்த்தத்திற்கும், கருடவாகன பட்டர் நிலையென அறியப்பட்டு அவர் பிள்ளை, பேரப்பிள்ளை பரம்பரையோர் மற்றும் வந்துபோவோர்க்கு தங்கும் விடுதியாக நடத்திச் செல்லவேண்டும். இந்த அறத்தை அழிக்க நினைப்போர் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்றவர் அடைந்த பாவத்தை அடைவதாகுக. நன்மை உண்டாகட்டும்.

    ஸ்ரீரங்க கருடவாகன பட்டர் தொழிலால் அர்ச்சகர் தான் மருத்துவர் அல்லர். ஆனால் மூதாதை கருடவாகன பட்டர் மீது கொண்ட மதிப்பால் மீண்டும் மருத்துவகம் இயங்கச் செய்கிறார். போசளன் வீரராமனாதன் (1253-1295) 3-ம் ஆட்சி ஆண்டில் அவன் படைத் தலைவன் சிங்கதேவ சிங்கண்ணன் ஒரு மருத்துவகத்தை இக்கோயிலில் உண்டாக்கி 1100 வராகன் பொன் கொடுத்து விளைநிலத்தை வாங்க வைத்து அதில் மருத்துவர் கூலி, மருந்து செலவுகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறான். தனக்கு மருத்துவரும் இந்த மருத்துவகத்தின் தலைவருமான மூதாதை கருடவாகன பட்டருக்கும் பிறருக்கும் தர வேண்டிய கூலி பற்றியும் குறிப்பிடுகிறான். கொடையளிக்கும் வேந்தர் நேரடியாகத் தனது பெயரை குறிப்பிடும் மரபை கடைபிடிக்காததால் படைத்தலைவரை பணித்து இவ்வாறு நன்கொடை வழங்கச் சொல்வதை மரபாகக் கடைபிடித்தனர். பூலாங்குறிச்சி கல்வெட்டு இதற்கு ஒரு சான்று. இச் செய்தி S.I.I. 24 பக்.286-288 எண். 266 ம் கல்வெட்டில் உள்ளது. இரண்டு கருடவாகன பட்டருக்கும் உள்ள கால இடைவெளி 238 ஆண்டுகள் எனத் தெரிகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள் – 24, பக். 352-353 எண். 353

    நாமக்கல் மாவட்டம் நாமக்கல் வட்டம் கோட்டை முனியப்பன் கோவில் பரந்த பாறையில் பொறிக்கப்பட்ட இரு கல்வெட்டுகள். முதல் கல்வெட்டு 15 வரியும் இரண்டாம் கல்வெட்டு 8 வரியும் கொண்டவை.  

    ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனநச் சக்ரவத்தி கோனேரின்மை கொண்டான் அங்கவைத்யரில் ஸவனந்  பா / ரா ஸ்ரீயன் ஆதித்ததேவன் திருவம்பலப் பெருமாளான வைத்யபுரந்தரற்கு வ / ட கொங்கு ஏழூர்நாட்டு வானவன் மாதேவி  நான்கெல்லைக்குட்பட்ட  நஞ்(சை) புன்செயும் / நத்தமும் நத்தப்பாடும் வாஸ்துவும்  வாஸ்துஷேமமு(ம்) குளமும் குளப்பரிப்பும் தோட்டமும் தோ  / ட்டக்கூறும் ஆற்றங்காலும் துரவும் காடும் மலையு(ம்) மற்ரு மெப்பெற்பட்ட ஸமஸ்த ப்ரா / ப்திகளிலும் (ப)ழந் தேவதானந் திருவிடையாட்டம் பள்ளிச்சந்தம் பட்டர் களிறையி(லி) நீ / க்கியுள்ள ஸம(ஸ்த ப்ரா)ப்திகளும் எட்டாவது புரட்டாதி  மாதமுதல் உதகப்பூர்வ்வ தர்மதாந இரையிலியா / கத் தந்தோம். இத்தால் வரும் கடமை, பொந் வரி, கற்பூர வினியோகம், மரவடை, புன் பயிர், தறி இறை,செக்கிறை, தட் / டொலி, தட்டார்ப் பாட்டம், ஏர் வரி, இனவரி, இடைவரி, எரிமீன் பாட்டம், காணிக்கை, காத்திகைப்பட்டை நல்லெத்து, / நற்பசுப், பஞ்சு பிலி, ஓலை எழுத்து வினியோகம், வாசல்பேறு, இலாஞ்சினைப்பேறு, வெட்டி ஆள் தேவை, தச்சுத் தே / வை ஆனைச்சாலை, குதிரைப்பந்தி  மற்றும் எப்பேர்ப்பட்ட இறைகளும்  இன்னாள்முதல் வரியிலார் கணக் / கிலும்  கழித்து முன்னுடையாரையும் பழம்பேரையும் முதலறத் தவிர்த்துத் தமக்கு முதலடங்கலும்  / இறையிலி ஆகவும் தாநாயமந விக்கிரயங்களுக்  குரித்தாகவும் தந்தோம். இப்படிக்கு  சந்திராதித்தவற் செல்வதாகக் / கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொண்டு அனுபவித்துக் கொள்ளவும் பார்க்க. இவை இலைநல்லூருடையான் / எழுத்து. இவை சுந்தர பாண்டியப் பல்லவராயன் எழுத்து அளவு 16.  

    ஸ்வஸ்திஸ்ரீ ஏழூர்நாட்டு ஸபையாரும் நாட்டாரும் நகரத்தாரும் நாங்கூர் ஸவர்ண்ணந் / பாராஸ்ரீயன் ஆதித்ததேவன் திருவம்பல பெருமாளான வைத்ய புரந்தரர்க்கு எங்கள் / நாட்டு வானவன்மாதேவி நான்கெல்லைக்குள்பட்ட  ஸகல ப்ராப்திகளும் எட்டாவது / புரட்டாதி  மாதமுதல் பண்டுடைய்யாரையும்  பழம் பேரையும் முதலறத் தவிர்த்து இவ்வூர் ஸகல / ப்ராப்திகளும் தமக்கு உதகபூர்வ்வ தர்ம்மதானமாக ஸர்வ்வ  மாந்யமும் இறையிலி ஆகப் பெருமாள் / சுந்தரபாண்டிய தேவர் தந்தருளின திருமுகப்படியே நாங்களும் தமக்கு உதகம் பண்ணி / இறையிலி ஆகத் தந்தோம். இப்படிக்குப் பணியால் நாட்டுக்கணக்குச் (சூரிய) தேவன் / எழுத்து.         

    அங்கம் – வெட்டுகை, chopping; சவர்ணன் – பெரு மருத்துவன்; பிராப்தி – உரிமை; வைத்தியபுரந்தரன்- மருத்துவரில் இந்திரன் போன்றவன்; திருமுகம் -வேந்தனின் ஆணை.

    விளக்கம்:  வேந்தன் சுந்தர பாண்டியனின் ஆணைப்படி அவனது எட்டாம் ஆட்சி ஆண்டில் அவனிடம் பணிபுரியும் அறுவை மருத்துவர்களில் ஒருவரான நாங்கூரைச் சேர்ந்த பெருமருத்துவன் பராசர கோத்திரத்தவன் ஆதித்த தேவன் திருவம்பலப் பெருமாளான மருத்துவரில்  இந்திரன் போன்றவனுக்கு வடகொங்கின் ஏழூர் நாடான இன்றைய நாமக்கல் நகரமாம் வானவன்மாதேவியில் வைணவ, சைவ, சமண கோவில்களின் கொடைநிலங்கள், பிராமண பட்டர்கள் பெற்றுள்ள இறையிலி நிலங்கள் மற்றும் ஏற்கனவே நிலம் உடையோர், பழைய ஆள்கள் ஆகியோர் பெயரைத் தவிர்த்து பிற எல்லா நிலத்தின் உரிமையையும் தர்ம தானம் செய்யத்தக்க இறையிலியாக நீரட்டித் தந்தோம். இந்த நிலங்களில் இருந்துவரும் எல்லா வகை வரிகளும் அரசருக்கு தரவேண்டாத இறையிலியாக வரியிலார் கணக்கில்  கழித்துத் தந்தோம். இதை கல்லிலும் செப்பிலும் வெட்டிக்கொள்க என்று ஊர்சபையாரும், ஊராரும், நகரத்தாரும் ஒப்புக்கொள்ள ஊர்க்கணக்கன் இந்த ஆணையை கையெழுத்திட்டான்.

    ஒரு அறுவை மருத்துவனுக்கு ஒரு ஊரும், ஊரின் வரிவருவாயும் இறையிலியாக கொடுக்கப்படுகிறது என்றால் ஆதித்த தேவன் செய்யும்  சேவை, தொண்டு மிகப் பெரியதாகவே இருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகின்றது. யானைச் சாலை, குதிரைப்பந்தி ஆகிய சொற்களை நோக்க இவ்வூரில் சுந்தர பாண்டியனின் நிலைப் படை (reserve army) நிலை கொண்டிருந்திருக்க வேண்டும் என்று தெரிகின்றது.  இந்த படையினருக்கும்  படை விலங்குகளுக்கும் போரில், போர்ப் பயிற்சியில் காயமுறும் போது சிதைந்த உறுப்புகளை  வெட்டிஅகற்ற, தைக்க ஆதித்த தேவன் அறுவை மருத்துவம் செய்யவேண்டி இருப்பதால் இப்பெருங்கொடை பெற்றான் எனத்  தெரிக்கின்றது. பொது மக்களை விட படைப்பிரிவில் தான் அறுவை மருத்துவரின் சேவை அதிகம் தேவை.

    பார்வை நூல்: சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள், தஞ்சைப் தமிழ்ப் பல்கலை வெளியீடு,  ஆசிரியர் அ. கிருஷ்ணன், எண். 250-251, பக். 198-200  

    மயிலாடுதுறை மாவட்டம்  திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோவில் மூன்றாம் திருச்சுற்றில் தென் சுவரில் உள்ள  14 வரிக் கல்வெட்டு.

    I III. ஸ்வஸ்திஸ்ரீ [||*] பூமாலைமிடைந்து பொன் மாலைத் [திகழப் பாமாலை] மலிந்த படுமணித்திரள் புயத்திரு நிலமடந்தையொடு ஜயமகள்ளிருப்ப கநவரை மாரவன்தன[ப்பெற்]றுத் திருமகள்ளொடு தநி இருப்ப கலை மகள் சொற்றிறம் புணந்து கற்பினளாகி விருப்பொடு நாவக[த் திருப்ப திசை] தொறும் திகிரி யொடு[ஞ்] செங்கொல் நடப்ப அகில புவனமுழுதுங் கவிப்பதொரு புதுமதி போல வெண்குடை[அடி]மிசை நிழற்றக் கருங்கலி
    யொளித்து வந்பிலத்திடைக் கிடப்ப குளத்திடைத் தெலுங்க விமனநடு விலங்கல் மிசை எறவும் கலிங்க பூமியைக் கநன எரிபருகவும் ஐம்படைப் பருவத்து வெம்படை- 

    2.தாங்கி வேங்கை மண்டலத் தாங்கிநிதிருந்து வடதிசை யடிப்படுத்த[ருளி]… ழமும்… தானமுந்தழைத்து வேதமும் மெய்மை… லைசிறப்ப தநித் தநி சிற[ந்]து வந்தருளி வெற்கரும் பொற்புலி ஆனைபா… … முறைமையில் சூடி மந்நூயிர்க்கெல்லாம் மிந்நுயித்தாய் போலத் தந்நொளி பரப்பித் தநித்து   நிபரந்து மண்முழுதுங்கவிப்ப மநு நெறி வளரத் தன் கோயில் கொற்றவாசல்ப் புறத்து மணிநாவொடுங்க முரைசுகள் முழங்க விஜயமும் புகழும் மேல்மேலோங்க செழியர் வெஞ்சுரம் புக சேரலர் கடல் புக வழி தரு சி-

    3.ங்கணரஞ்சி கங்கர் திறையிட கந்நடர் வெழ்கிட கொங்கர் பொது… தந்துமககரனெ …றஞ்சி தொல்லை எழுலகுந் தொழுதெழத் தோன்றி முல்லை வா…..சங்கர இமையத்திருந்தெனப் பொருந்தி உடநிருப்பக் கங்கையொப்பாகிய தெரிவயர் திலதந தியாகபதாகை புரிகுழல் மடந்தை புநிதகுணவநிதை திருபுவனமுடையா… வரு திருவிளத்திருள்ள முழுதுமுடையாள் உடநிருப்பச் செம்பொற் வீரஸிம்ஹாஸனத்து முக்கோக்கிழாநடிகளொ

    4.டும் விற்றிருந்தருளிய கோப்பரகேசரி பற்மரான த்ரிபுவநச் சக்கிரவத்திகள் ………… ஆவது த 4 நு நாயற்று சுவ……..ரியும் த்ரயோத 3 ஸியும் திங்கட்கிழமையும் பெற்ற மூலத்து நாள் விருதராஜ [பயங்கரவளநாட்டு] மண்ணிநாட்டுப் ப் 3 ரதே 3 யம்விருதராஜபயங்கர சருப்பேதி மங்கலத்து  மஹா ஸஹையோம்  நம்மூர்த் திருப்பாற்கடலாழ்வார் கோயிலிலே தன்மி செய்து கூட்டங்குறைவறக் கூடி இருந்து உய்யக் கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு உடையார் திருவாவடுதுறை உடையார் மூலப்ருத்தியராகிய ஆதி சண்டேச் 0 வரவர தேவர்க்-

    5.கு நாங்கள் இறையிலி செய்து குடுத்த நிலமாவது இவ்விருத ராஜபயங்கர சதுர்… … குடியில் உய்யக்கொண்டார் … …[சே] நாபதிகள் இளங்கா… … இளங்காரி[க்குடையாந்] சங்கரந் அம்பலங் கோயில் கொண்டாநான அனந்தபாலர் நம்மூர்க் குடிமக்கள் பக்கல் விலை கொண்டுடையராய் இவருதாயிருந்த நிலம் சளுக்கி குலகால வாய்க்காலுக்கு மேற்கும் வடக்கு நின்றும் மூன்றாங் கண்ணாற்று திருவுலகளந்தருளினபடி நீறா 2 ப 1 ம் நாலாங் கண்ணாற்றுத் திருவுலகளந்தருளினபடி நீ2 ப 2 ம் ஐஞ்சாங் கண்ணாற்றுத் திருவுலகளந்தருளினபடி நீ 2 ம .. ஆக திரு

    6. வுலகளதெருளினபடி நீ 5 4 ப இந்நிலம் ஐஞ்செய் நாந்மாவரைக்கும் கிழ்பாற்…க்காலுக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை ஆறாங்….. ற்கெல்லை திரு….முடையார் த…. நிலத்துக்கும் துவேதை கோமபுரத்துத்து மாதவபட்டந் நிலத்துக்கும் கழுமலவாய் நீரோடு காலுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை செந்திறத்து காளிதாஸ பட்டந் நிலத்துக்கும் சேஞலூர்க் கவணியந் திருவரங்கதேவன் சிவந் நிலத்துக்கு தெற்கும் ஆன இவ்விசைந்த பெருநாந்கெல்லையுள் நடுபட்ட திருவுலகளதெருளினபடி நீ …… ஆக நிலம் ஐஞ்செய் நா-

    7.ன்மாவரையும் இந்நிலம் … … வாரவும் பெறுவதாகவும் இந்நிலத்துக்கு வந்த … … ரி யெச்சோறு கூற்[றரிசி] வெள்ளாந்வெட்டி வெலா… மற்றும் திருவாசலில் போந்த குடிமை எப்பேர்ப்பட்டதும் செய்ய … … ஸம்மதித்து இந்நிலம் இறையிலி செய்து குடுத்துக் கொள்வதான எம்மிலிசைந்த விலைப் பொருளன்றாடு நற்காசு 425 இக்காசு நாநூற்றிறுபத்தை

    8. ஞ்சுங்கொண்டு இந்நிலம் ஐஞ்… … காசு கொள்ளா இறையிலியாக இறையிலி செய்து குடுத்[தோம்] உடையார் திருவாவடுதுறை உடையார் மூலலவரத்துராகிய ஆதிசண்டேச் 0 வர தேவக்கு மஹாஸபை 4 யார் இன்நிலத்தில் உய்யக்கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு உடையார் திருவாவடுறையுடையார் கோயிலில் சிவலோக நாயகன் திருவாசலின் [முன்பால்ச்] சங்கர தேவந் அறச்சாலை ப் 3 ராஹ்மணர்க்கும் தவஸியற்க்கும் அநாதி கிரிசர்க்கும் வயிஜ்யா சா 0 ஸ்த்ரமும் ப்3ரஹடமும் ச் 0 ரகமும் வ்யாகரணமும் உருபாவதாரமும் படிப்பாக்குச் சோ[றிடவும்] திருநா-

    9. ளில் சோறிடவும் மடப்புறமாக இறையிலி செய்த நீ 34 இந்நிலம் முன்றே நா…………டக்குத் திருச்சாக்காட்டுப்பிச்சர் எடுப்பித்த அம்பலங்கோயில் கொண்டான் அனந்தபாலர் மடத்துக்கும் மடப்புறமாக இறையிலி செய்த நீ2 லி இன்நிலம் இருவேலியும் ஆக நீ5 4 பஇ இந்நிலம் ஐஞ்சே நாந்மாவரையு மிகிதிக்குறைவுள்ளடங்க இக்காசுநானூற்று இருபத்தைஞ்சுங் கொண்டு காசுகொள்ளா இறையிலியாகச் சந்த்ராதி 3 த்யவர் சா 0 ச் 0 வதிகமாக.. திகமாகச் செம்பிலுங் கல்லிலும் எழுத்து வெட்டிக் கொள்ளப் பெறுவராக இறையிலி செ-

    10.ய்து குடுத்தோம் உடையார் திருவாவடுதுறை யுடையார் முலவ்ருத்யராகிய ஆதி … … … ஸபை 4 யோம்.. இப்படி ஸபை 4 யுள்ளிருந்து பணி[த்தாந்] பிராந்தகர்சீராம பட்டர் பணியாலும் வங்கிப்புறத்துக் கோவிந்த பட்டர் பணியாலும் செந்திறத்து காலாதிர பட்[ட*]ர் பணியாலும் திருக்கடவூர் காச் 0 யபந் ஸ்ரீவைகுந்தன் திருக்கதவ பட்[ட*]ர் பணியாலும் கிராஞ்சிகிள்ளை போந்த திருநம்பிபட்[டர்*]பணியாலும் செந்திறத்து கருணாகர பட்[ட*][ர்*] பணியாலும் ஆபசரிச் சீராம பட்டர் பணியாலும் குண்டுர் முத்த ஸ்ரீபல தேவர் பட்டர் பணியாலும் குண்டூர்த் தாமோதிர பட்டர்

    11. பணியாலும் துவேதை கோவிந்த சீராமபட்டர் பணியாலும் நட[லூ]ர் திருச்சிற்ற … … … யாலும் துவேதை கொந்த அக்கிதவ பட்டர் பணியாலும் துவேதை கொதைமாத கொந்த அக்கிதவபட்டர் பணியாலும் துவேதை கோதைமாதவ பட்டர் பணியாலும் குண்டுர் இளய ஸ்ரீவாஸக தேவ பட்டர் பணியாலும் சாந்தூர் திருநம்பி பட்டர் பணியாலும் சிராஞ்சி ஸ்ரீதின் காபோந்த இளைய திருநம்பி பட்டர் பணியாலும் காரம்பிச் சேட்டு இளைய நாராயண பட்டர் பணியாலும் பணிப்பணியால் பணிகேட்டு இவ்விறையிலிப் பிராமணம் எழுதிநேன் இவ்வூர்
    கரணத்தான் கஞ்சனூருடையாந் சக்கர-

    12. க்கைய்யன் சிரீளங்கோவிநேன். இவை என்நெழுத்து இப்படிக்கு இவை … …நெழுத்து இப்படிக்கு இவைகுண்டூர் ஸ்ரீவாஸுதேவ பட்டநெழுத்து. இப்படிக்கு இவை இப்படிக்கு இவை சி….தை கோமபுறத்து நாராயணபட்டன் நெழுத்து. இப்படிக்கு இவை திருக்கடவூர் காசிபன் ஸ்ரீவைய்குந்தம் திருக்கதவபட்டநேன், இவை என்நெழுத்து. இப்படிக்கு இவை குண்டுர் ஸ்ரீ வாஸுதெவபட்டன் நெழுத்து. இப்படிக்கு இவை நடாதூர்த் திரிச் சிற்றம்பல பட்டன் நெழுத்து. இப்படிக்கு அறிவேந் துவேதை கோமபுறத்து…..ம பட்டநேன். இப்படிக்கு 

    13. இவை துவேதை கோமபுறத்து அங்ஙிதவபட்டநேந். இப்படிக்கு அறிவேன் வங்கி … … றத்து தாமோதிரபட்டந் ஸயிஞ்ஞையாதமைக்கு

    14. [இவை] கருவூருடையாந்நெழுத்து. இப்படிக்கு கிராஞ்சி இளைய திருநம்பிபட்ட … … … மோதிர பட்டநெழுத்து. இது நடாதூர் சீராம பட்டர் ஸயிஞ்ஞையாதாமைக்கு இவை கருவூருடையாந் எழுத்து. செந்திறத்து காளாதிருபட்டர் ஸ்யிஞ்ஞையாதாமைக்கு துவேதை கோமபுறத்து சீராமபட்டநெழுத்து||-

    விளக்கம்: விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்தி முதல் மூன்று வரிகளில் இடம்பெறுகிறது. விக்கிரம சோழனின் 3 ம் ஆட்சி ஆண்டில் விருதராஜபயங்கர சருப்பேதி மங்கலத்து ஊர்  சபையர் அவ்வூர் திருப்பாற்கடலாழ்வார் கோயிலில் கூடி இருந்து உய்யக் கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு உடையார்  திருவாவடுதுறை உடையார் மூலவரான ஆதி சண்டேச்வர தேவர்க்கு இறையிலி செய்து கொடுத்த நிலமாவது, “உய்யக் கொண்டார் வளநாட்டு  சேனாபதி இளங்காரிக்குடியான் சங்கரன் அம்பலன் கோயில்கொண்டான் ஆன அனந்தபாலன் முன்னம் இவ்வூர் குடிமக்களிடம் வாங்கியிருந்த 5 செய் 4 மாவரை  நிலத்தின் நான்கு எல்லைகள்  குறிக்கப்படுகின்றன. இந்நிலத்திற்கான  வரியை நீக்கி இறையிலியாக்கி அதற்கு  விலையாக  அன்றாட்டு நற்காசு 425 பெற்றுக்கொள்ளப்பட்டது. இனி இந்நிலத்தில் வரும் வருவாயைக் கொண்டு திருவாவடுதுறை இறைவன் கோயிலில் சிவலோக நாயகன் திருவாசலின் முன்புள்ள  சங்கர தேவன்  அறச்சாலை பிராமணருக்கும், தவசியருக்கும், அநாதி கிரிசர்க்கும் (கவனிப்பாரற்ற இழிந்தோர்), இவர் தவிர வைத்திய சாஸ்திரமும் பிரகடமும் சரகமும் இலக்கணமும் உருபாவதாரமும் படிக்கும் மருத்துவ மாணவருக்குச் சோறிடவும், இதுதவிர திருநாளில் சோறிடவும் மடப்புறமாக இறையிலி  நிலம் மூன்றே நாலுமா நிலம் கொடுக்கப்பட்டது.  இந்நிலம் முன்றே நாலுமாவொடு திருச்சாக்காட்டுப் பிச்சர் எடுப்பித்த அம்பலங்கோயில் கொண்டான் அனந்தபாலர் மடத்துக்கும் மடப்புறமாக இறையிலி செய்த நிலம் 2 வேலி. இந்நிலம் இருவேலியும் சேர்த்து ஆக நிலம் 5 செய்  4 மாவரை ஆகும். இந்நிலம் ஐஞ்சே நாந் மாவரையும் மிகுதிக் குறைவுள்ளடங்க அன்றாட்டு காசு நானூற்று இருபத்தை பெற்றுக் கொண்டு காசுகொள்ளா இறையிலியாகவே நிலவும் ஞாயிறும் உள்ள அளவும் நிலைப்பதாக செம்பிலும் கல்லிலும் எழுத்து வெட்டிக் கொள்க” என்று பலர் கையொப்பமிட்டது குறிக்கப்பட்டுள்ளது.  ஆக அனந்தபாலர் தந்த கொடை சோறிடுவதற்கும் அனந்தபாலர் மடத்திற்குமாக இரண்டு பகுப்பாக பிரிக்கப்பட்டுள்ளது. இறையிலிக்கு இழப்பீடாக 425 அன்றாட்டு நற்காசு பெறப்பட்டது ஏன் என்றால் சில ஆண்டுகளுக்கான வரி வருவாயை முன்கூட்டியே பெற்று அதற்கு வட்டி கணக்கிட்டால் வரிவருவாய் இழப்பு ஈடு செய்யப்பட்டதாகிறது.

    பிரகடம், சரகம், உருபாவதாரம் ஆகியன ஆயுர்வேத மருத்துவ நூல்கள் ஆகும். இதன் மூலம் திருவாவடுதுறையின் இக்கோவிலில் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையும் மருத்துவக் கல்விக்கூடமும் இயங்கிய செய்தி புலனாகிறது.

    பார்வை நூல்:  Annual report of Indian epigraphy 159 of 1925.

    இக்கல்வெட்டின் மைப்படியை தந்த இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் மைசூர்க் கிளை தொல்லெழுத் துறைக்கும், கல்வெட்டை படித்து சரிபார்த்துத் தந்த திரு. இராஜகோபால் சுப்பையாவிற்கும் நன்றிகள் பல.

    Share
  • இக்காலகட்டத்தில் காரைக்காலம்மையார் பற்றிய பெண்ணியல் நோக்கு

    இக்காலகட்டத்தில் காரைக்காலம்மையார் பற்றிய பெண்ணியல் நோக்கு

    கௌசி, ஜெர்மனி

    பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும் இன்னும்
    வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
    அறவாநீ ஆடும் போதுன்
    அடியின்கீழ் இருக்க

    உடலுக்கு அழிவு உண்டு ஆன்மாவுக்கு அழிவில்லை. நிச்சய மோட்சம் கிடைத்து இறைவன் காலடி சேர்ந்தால் அன்றி உயிர்கள் மீண்டும் மீண்டும் தம்முடைய பாவ புண்ணியங்களுக்கேற்ப பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும் என்பது இந்துமத நம்பிக்கை. உலக வாழ்க்கையை விரும்பாத அடியார்கள் மீண்டும் பிறப்பெடுப்பதை விரும்பாது மோட்சம் கிடைப்பதையே விரும்புகின்றார்கள். பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மீண்டும் பிறப்புண்டானால் சிவனடியாராகவே இருந்து உன்னை என்றும் மறவாமை வேண்டும். அதைவிட வேண்டும் நீ சிவதாண்டவம் ஆடுகின்ற போது உன்னுடைய காலடியின் கீழிருந்து நான் பாடவேண்டும் என்று இறைவனிடடம் வரம் கேட்டுப் பாடியவரே காரைக்காலம்மையார்.இவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை இக்காலகட்டத்துடன் எடுத்து நோக்குவதற்கு முன் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு பற்றி நோக்குவோம்.

    காரைக்காலம்மையார் சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்தவர். பாடல்களால் இறைவனைப் பூசித்தவர். இவர் பாடிய அற்புதத்திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை போன்ற நூல்களே பல்லவர்கால பக்தி இலக்கியங்களுக்கு அடியெடுத்துக் கொடுத்தன. நாம் வாழுகின்ற இந்த காலகட்டத்தில் இக்காரைக்காலம்மையார் வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தாலும் இப்பாடல் வரிகளின் ஆழத்தை நாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. சிறுவயதில் இருந்தே சிவனில் பக்தி கொண்டிருந்த காரைக்காலம்மையார் சிவனடியார்களைச் சிவனெனப் போற்றும் பண்புள்ளவர். அவருக்கு பரமதத்தன் என்னும் வணிகனைத் திருமணம் செய்து கொடுக்கின்றார்கள். ஒருநாள் கணவன் கொடுத்தனுப்பிய இரண்டு மாங்கனிகளில் ஒன்றை பசியோடு வந்த சிவனடியார் ஒருவருக்குக் கொடுத்து விடுகின்றார். கணவனுக்கு உணவு பரிமாறும் போது அந்த மாங்கனியில் ஒன்றை உண்ட பரமதத்தன், அதன் சுவையில் ஈர்ப்படைந்து மற்றைய மாங்கனியையும் தனக்குப் பரிமாறுமாறு கேட்கின்றான். காரைக்காலம்மையாரும் சிவனடியாருக்கு அருந்தக் கொடுத்ததை மறைப்பதற்காக இறைவனிடம் வேண்டிநிற்கின்றார். சிவபெருமானின் அருளால் காரைக்காலம்மையாருக்கு ஒரு மாங்கனி கிடைக்கின்றது. அக்கனியைக் கணவனுக்குக் கொடுத்த போது இக்கனி அதிக சுவையுடையதாக இருப்பதை பரமதத்தன் உணர்கின்றான். இக்கனியின் சுவை வேறாக இருக்கின்றதே காரணம் என்ன என்று வினவுகின்றான். இறைவன் அருளால் அம்மாங்கனி கிடைத்ததாகக் காரைக்காலம்மையாரும் சொல்லுகின்றார். உடனே பரமதத்தனும் அதனை நிரூபித்துக் காட்டும்படிக் கூறவே இறைவன் அருளால் மீண்டும் ஒரு கனி இறைவன் அருளால் கிடைக்கின்றது. ஆச்சரியம் அடைந்த பரமதத்தனும் தெய்வீகப் பெண்ணுடன் குடும்ப வாழ்க்கை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தால் காரைக்காலம்மையாரை விட்டுப் பிரிந்து மதுரைக்குச் சென்று வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து தனக்குப் பிறக்கும் குழந்தைக்கு காரைக்காலம்மையார் பெயரை வைத்து வாழுகின்றான்.

    தன்னைப் பிரிந்து சென்ற கணவனை உறவினர் துணையுடன் மதுரைக்குச் சென்று கண்ட காரைக்காலம்மையார் கணவனுக்கு உதவாத இந்த உடல் அழகு தேவையில்லை என இறைவனை வேண்டித் தசை உடம்பு நீத்து என்புடலுடன் கைலாயமலை நோக்கிப் பயணமாகின்றார். அங்கே தலையாலே நடந்து செல்வதைக் கண்ட இறைவனும் அம்மையே வருக. வேண்டும் வரம் கேள் என்று கேட்டபோது இப்பாடலில் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்கின்றார்.

    பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் மனிதனுடைய வாழ்க்கையில் சொர்க்கமும் நரகமும் அடங்கிக் கிடக்கின்றது. மனித வாழ்க்கையை விரும்பாத மனிதன் மீண்டும் பிறக்க வேண்டும் என்ற ஆசையை அடியோடு விட்டுவிடுவான். எமக்கும் மேலே ஒரு உலகம் இருக்கின்றது என்று நம்பும் மனிதர்கள் அங்கே இறைவன் குடியிருப்பதாகவும் இறைவன் காலடியில் தன்னுடைய வாழ்க்கை சென்றடைய வேண்டும் என்றும் நினைப்பார்கள். இதுவே காரைக்காலம்மையார் விரும்பிக் கேட்டதாக அறிகின்றோம். அன்ன ஆகாரமின்றி இறைவனை நினைத்து விரதமிருப்பவர்களுக்கு எலும்பை அண்டியிருக்கும் தசைப்பகுதி குறைவடைவது இயற்கையே. Magersucht என்று  ஜேர்மன் மொழியில் சொல்வார்கள். ஆக்மீக யாத்திரை செல்வதற்கு இலகுவான மெல்லிய என்புடலை காரைக்காலம்மையார் இறைவனை வேண்டிப் பெற்றிருக்கலாம்.

    கைலாய மலையை அடைந்ததாகவும் இறைவன் வரம் கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ள கதை தற்போதைய Hologram போல் அக்காலத்தில் இருந்திருக்க சந்தர்ப்பம் இருக்கின்றது. இம்முறையிலேயே திருநாவுக்கரசருக்கு சிவபெருமானின் திருநடனக் காட்சி கிடைத்தது.

    மாங்கனி கிடைக்கும் நிகழ்வு தற்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாது என்றாலும் வேண்டுதல்கள் நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாகவோ வேறு ஒரு சந்தர்ப்பத்திலோ எம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதை நாம் இக்காலப்பகுதியில் அநுபவ ரீதியாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. நாம் ஒருவருக்கு ஒரு உதவி செய்கின்ற போது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எமக்கு ஒரு உதவி தேவைப்படுகின்ற போது எங்கிருந்தோ ஒருவர் வந்து உதவி செய்வார். எவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் காரக்காலம்மையார் தன்னுடைய சிவனடியார்களைப் போற்றும் பணியைச் செய்திருக்கின்றார் என்பதை இச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. அக்காலகட்டத்தில் கணவனுக்குத் தெரியாமல் ஒரு பெண் யாருக்கும் எநத ஒரு ஆடவனுக்கும் ஏழைக்குக் கூட உணவு கொடுக்க முடியாது. அவ்வளவு சந்தேகக் கண் கொண்டு மனைவியரைப் பார்க்கின்றது மட்டுமன்றி தம்மை மீறிப் பெண்கள் எதுவும் செய்வதை ஏற்றுக் கொள்ளாத நிலையிலேயே ஆண்கள் இருந்திருக்கின்றார்கள். இதற்குச் சிலப்பதிகாரத்தில்

    “அறவோர்க் களித்தாலும் அந்தண ரோம்பலும்
    துறவோர்க் கெதிர்தலும் இழந்த என்னை” என்னும் வரிகளை நாம் காணலாம்.

    இனிமையான கனி சுவைமிக்கதாக இருந்தால் தன்னைப் போல் தன் மனைவியும் அக்கனியை உண்டு இன்பம் அனுபவிக்கட்டும் என்று நினைக்காத பரமதத்தன்கள் இக்காலப்பகுதியிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். காலங்கள் மாறலாம். காட்சிகள் மாறலாம். ஆனால், அடிப்படையில் உலகம் உருண்டு கொண்டுதான் இருக்கின்றது. வாழ்க்கை நிகழ்வுகளும் உருண்டு கொண்டுதான் இருக்கின்றன. பரமதத்தனின் அதிகாரப் போக்கை அறிந்த காரைக்காலம்மையார் தேவையில்லாத பிரச்சினையை ஏன் கொண்டு வர வேண்டும் என்று ஒரு மாங்கனியை காரைக்காலம்மையார் வாங்கி வைத்திருக்கலாம். வியாபார நிமிர்த்தம் ஒவ்வொரு நாடாகச் செல்லும் வியாபாரிகள் தங்கியிருக்கும் நாடுகளில் தம்முடைய இச்சைகளை அனுபவிப்பதற்கு ஒரு பெண் வைத்திருப்பது அந்தக்காலத்தில் வழக்கமாக இருந்தது. பரமதத்தன் தான் வியாபார நோக்கத்திற்காகச் சென்ற இடத்தில் தொடர்பு கொண்ட பெண்ணுடன் வாழ்வதற்கு இந்த மாங்கனிப் பிரச்சினை ஒரு வடிகாலாக இருந்திருக்கும்.

    இது புராணக்கதையாக இருந்தாலும் காரைக்காலம்மையார் பக்தி இலக்கியத்திற்கு முன்னோடி என்பதை நாம் அறிய வேண்டும்.

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 25

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 25

    -மேகலா இராமமூர்த்தி

    ஏன் இன்னும் இலக்குவன் மீளவில்லை? ஒருவேளை சீதையை கவர்ந்துசென்ற அரக்கர்களைக் கண்டு அவர்களோடு வெஞ்சமர் புரியத் தொடங்கிவிட்டானோ? இராவணன் என் இளவலையும் கவர்ந்துசென்று கொன்றுவிட்டானோ? என்றெல்லாம் எண்ணிக் கவன்ற இராமன், தன்னைத்தானே வாளால் குத்திக்கொண்டு மாள எத்தனித்த வேளையில், அயோமுகியால் தூக்கிச்செல்லப்பட்ட இலக்குவன் அவளின் வசிய வித்தையிலிருந்து மீண்டு, சூர்ப்பனகையின் நாசியை அறுத்து அவளைத் தண்டித்ததுபோலவே, அயோமுகியின் நாசியையும் அறுத்தான். அவள் வலிதாளாது அலறிய பேரொலி இராமன் செவிகளில் விழுந்தது.

    இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு எழுகின்ற இந்தப் பேரொலி ஏதோ ஓர் அரக்கியின் குரலாகவே இருக்கவேண்டும் என ஊகித்த இராமன், சாகும் எண்ணத்தைக் கைவிட்டு, இலக்குவனைக் காக்க விரைந்தான். அப்போது இலக்குவனே இராமனுக்கு எதிரில் வந்துவிட்டான். வந்தவன், தன்னைக் குறித்து அண்ணன் கொண்டிருக்கும் கவலையைப் போக்கும் விதத்தில், ”அண்ணா! அடியனேன் வந்துவிட்டேன்; ஆதலால் அஞ்ஞான இருள்படியாத உளமுடைய நீ வருந்தற்க!” என்று உரைத்தவண்ணம் அண்ணனின் தளிரொத்த திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். அதுகண்ட இராமன், இழந்த கண்களை மீண்டும் பெற்றதுபோல் மகிழ்ந்தான்.

    வந்தனென் அடியனேன் வருந்தல்
    வாழி நின்
    அந்தம் இல் உள்ளம் என்று
    அறியக் கூறுவான்
    சந்த மென் தளிர் புரை
    சரணம் சார்ந்தனன்
    சிந்தின நயனம்
    வந்தனைய செய்கையான். (கம்ப: அயோமுகிப் படலம் – 3724)

    நடந்த நிகழ்ச்சிகளை இலக்குவனிடம் கேட்டறிந்த இராமன், இலக்குவன் உற்ற இடர்ப்பாட்டுக்காகத் துன்பமும், அதனின்று அவன் வெற்றிகரமாய் மீண்டமைக்காக உவமையும் எய்தினான் ஒருங்கே.
    பின்னர்ச் சிறிதுநேரம் காட்டிடை ஓய்வுகொண்டனர் இருவரும். சீதையைப் பிரிந்தபின் இராமன் உண்ணவும் இல்லை; அவமானத்தின் தாக்கத்தால் உறங்கவும் இல்லை. கானத்தில் நோக்கும் திசையெல்லாம் அவனுக்குச் சானகி உருவமே தெரிந்தது. இதுவும் அரக்கர்செய் மாயையோ என உளம் நொந்தான் அவன்.

    ஒருபொருளை ஆழமாய் எப்போதும் சிந்தித்திருந்தால், அப்பொருளே எங்குநோக்கினும் காட்சியளிக்கும் என்பது உளவியல் உண்மை.
    முன்பு இராவணனும் தன் தங்கை சூர்ப்பனகை வாயிலாய்ச் சீதையின் அழகையறிந்து அவள் நினைவால் வாடி, அவளின் உருவெளித் தோற்றத்தைக் கண்டு, அது சீதைதானா என்று சூர்ப்பனகையிடம் வினவ, அவளோ இராமனையே எப்போதும் எண்ணிக்கொண்டிருந்த காரணத்தால் அவ்வுருவம் இராமனுடையது என்று விடை பகர்ந்ததைக் கண்டோம்; இப்போது இராமனின் நிலையும் அவ்வாறானது.

    கங்குல் பொழுதை மிகுந்த மனத்துயரோடு கழித்த இராமன், பொழுது புலர்ந்ததும் இளவலோடு தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஐம்பது யோசனை தூரத்தை இருவரும் நடந்தே கடந்தனர். ஒருநாள் உச்சிப்போதில் கவந்தன் எனும் அரக்கன் வதியும் இடத்தருகே வந்துசேர்ந்தனர். ஆங்கே அடுத்த சோதனை ஆரம்பித்தது அவர்களுக்கு.
    இந்தக் கவந்தன், வயிற்றிலே பெரிய வாயைக் கொண்டிருக்கும் பயங்கரமான தோற்றத்தைக் கொண்டவன். இருந்த இடத்திலிருந்தபடியே வெகுதூரத்திற்குக் கைகளை நீட்டி யானை முதல் எறும்பு வரை அனைத்துயிர்களையும் உண்ணக்கூடியவன். அவனுடைய கைகளில் இராம இலக்குவர் சிக்கினர். சீதையைக் கவர்ந்துசென்ற அரக்கர் படைதாம் தம்மை எதிர்த்து வந்திருக்கின்றதோ என்றெண்ணினான் இராமன்.

    அவ் அரக்கனின் கை அவர்களைத் தன் வாயருகே கொண்டுசெல்ல முயன்றபோது இஃது அரக்கர் சேனையன்று; பயங்கர வடிவுடைய ஓர் அரக்கனே என்று தெளிந்த இராம இலக்குவர், இன்னும் சற்றுநேரத்தில் தாமிருவரும் அவனுக்கு இரையாகப் போகின்றோம் என்பதையும் அறிந்தனர்.

    அப்போது இராமன் ஒரு முடிவுக்கு வந்தவனாய், ”இளவலே! தோகை சீதையும் எனைப் பிரிந்தனள்; தந்தை போன்றிருந்த சடாயுவும் துஞ்சினன். இவர்களையெல்லாம் காக்கத் தவறிய பெரும்பழியைச் சுமந்துகொண்டு இனியும் நான் உயிர்வாழ விரும்பவில்லை. எனவே, நான் இந்தப் பூத வடிவினனுக்கு உணவாகின்றேன்; நீ தப்பித்துச் செல்!” என்றான்.

    தோகையும் பிரிந்தனள்
    எந்தை துஞ்சினன்
    வேக வெம் பழி சுமந்து
    உழல வேண்டலேன்
    ஆகலின் யான்
    இனி இதனுக்கு ஆமிடம்
    ஏகுதி ஈண்டுநின்று
    இளவலே என்றான். (கம்ப: கவந்தன் வதைப் படலம் – 3766)

    அதைக்கேட்ட இலக்குவன், ”உமக்கு ஏதேனும் தீங்குவந்தால் உமக்கு முன்பாக நான் என்னுயிரை முடித்துக்கொள்ள வேண்டும். அப்படியிருக்க நீர் உயிர்துறக்கவும் நான் ஊர்திரும்பவும் செய்யலாம் என்றால் அச்செயல் மிக நன்று” என்றான் வேதனையோடு. தன் அன்னை சுமித்திரை இராமனுக்கு ஏதேனும் தீங்கென்றால் அவனுக்கு முன்பாக நீ மடி; உயிரை முடி என்று சொன்னதை இலக்குவன் மறக்கவில்லை என்பதை அவன் பேச்சு ஈண்டு நமக்கு உணர்த்துகின்றது.

    இராமன் துவளும்போதெல்லாம் அவனைத் தேற்றும் தம்பி இலக்குவன் இப்போதும் அப்பணியைச் செவ்வனே செய்து இராமனுக்கு உள்ள உரமூட்டினான். பின்னர் இருவரும் கவந்தனைத் தீரத்தோடு எதிர்த்து அவன் தோள்களை வெட்டி வீழ்த்தினர். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. இராமனின் ஆயுதத்தால் வெட்டுண்ட கவந்தன், கூட்டைவிட்டு நீங்கிய பறவைபோல் வானிடைத் தோன்றினான்.

    விசும்பில் நின்றபடி,
    “ஆதிப் பிரமனும் நீ
    ஆதிப் பரமனும் நீ
    ஆதி எனும் பொருளுக்கு அப்பால்
    உண்டாகிலும் நீ
    சோதிச் சுடர்ப் பிழம்பு நீ” (கம்ப: கவந்தன் வதைப் படலம் – 3787)
    என்று இராமனைப் பலபடத் துதித்தான்.

    இராம இலக்குவர் அவனை வியப்போடு நோக்கிக்கொண்டிருந்தபோது தன் வரலாற்றைக் கூறத் தொடங்கினான் அவன்.

    ”ஐயன்மீர்! நான் தனு எனும் பெயர்கொண்ட கந்தருவன் ஆவேன். முனிவர் ஒருவரின் சாபத்தால் இந்தக் கொடிய வடிவமெடுத்தேன். இப்போது உம்முடைய மலர்போன்ற கரங்களால் தீண்டப்பெற்றதால் என் சாபம் நீங்கி முந்தைய வடிவமெடுத்தேன்” என்றுரைத்தவன், ”நான் சொல்வதைக் கேட்பீர்! ஒப்பற்ற திறலுடையோராய் நீவிர் இருவரும் இருந்தாலும் சீதையைத் தேடிக் கண்டடைவதற்கு உமக்குத் துணைவலி தேவை; எனவே, உயிர்களுக்குத் தாயினும் சாலப் பரிந்து உதவுகின்ற சவரி எனும் அம்மையைச் சந்தித்து, அவள் காட்டுகின்ற வழியிற்சென்று இரலைக் குன்றத்தை (உருசியமுக பர்வதம்) அடைவீர். ஆங்கே கதிரவன்செல்வனும், பொன்வண்ணத்தவனுமாகிய சுக்கிரீவனோடு நட்பு கொள்வீர். அவன் சீதையைத் தேட உதவுவான்!” என்றுரைத்து விண்வழி ஏகினான்.

    சீதையைத் தேடி இராம இலக்குவர் பயணப்படுகின்றார்கள் என்பதைக் கவந்தன் எப்படி அறிந்தான் என்பதைக் கம்பர் தம் காப்பியத்தில் குறிப்பிடவில்லை. அவன் தேவன் என்பதால் ஒருகால் அவர்கள் சொல்லாமலேயே அவர்களைப்பற்றி அறிந்தானோ என்று எண்ணவேண்டியுள்ளது.

    கவந்தனின் வழிகாட்டுதல்படி சவரியைத் தேடிப் புறப்பட்டனர் சோதரர்கள் இருவரும். பூவுலக சொர்க்கம் என்று சொல்லும்படியான சோலைகள் சூழ்ந்த இடத்தில் அமைந்திருந்தது மதங்கர் எனும் முனிவரின் குடில். அங்குதான் சவரி எனும் வேட்டுவகுலப் பெண்மணி நெடுங்காலமாக இராமனை தியானித்துக்கொண்டும் அவன் வரவை எதிர்பார்த்துக்கொண்டும் காலங்கழித்து வந்தாள். விரைவில் அவள் இராமனைச் சந்திப்பாள் என்று தேவர்கள் சொல்லிச் சென்றிருந்தனர். ஆதலால் அந்த நன்னாளை ஆவலோடு அவள் எதிர்பார்த்திருந்த வேளையில் இராமன் அவளைத் தேடிவரவே மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்றாள் அம்மாதரசி.

    அவ் அம்மையைப் பார்த்து இராமன், ”தீதின்றி நலமாய் இருக்கின்றீரா?” என்று வினவினான். அம்மொழிகள் அமுதமென அவள் செவிகளில் பாய, இவ்வுலகப் பாசம் எனை விட்டகன்றது; பிறவியும் தொலைந்தது என்றெண்ணி உவந்தவளாய் இராம இலக்குவர் உண்ணக் கனிகள் படைத்தாள் கனிவோடு.

    அவர்கள் உண்ணுவதை மகிழ்வோடு கண்ணுற்றபடி, ”எந்தையே! நீ இங்கே வருவாய் என்ற செய்தி அறிந்தமையால் உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்; இன்றுதான் என் தவம் பலித்தது” என்றாள். அதைக்கேட்ட இராம இலக்குவர் அத் தவத்துறை அரசியை அன்புற நோக்கி, ”எம் வழிநடைத் துயர்தீர்த்த அன்னையே! நீ வாழ்க!” என்று வாழ்த்தினர்.

    இருந்தனென் எந்தை நீ ஈண்டு
    எய்துதி என்னும் தன்மை
    பொருந்திட இன்றுதான் என்
    புண்ணியம் பூத்தது என்ன
    அருந் தவத்து அரசிதன்னை
    அன்புற நோக்கி எங்கள்
    வருந்துறு துயரம் தீர்த்தாய்
    அம்மனை வாழி என்றார். (கம்ப: சவரி பிறப்பு நீங்கு படலம் – 3805)

    ”அம்மையே!” என்று காரைக்கால் அம்மையாரைச் சிவனார் விளித்ததுபோல் இங்கே பத்தியிற் சிறந்த சவரியை ”தாயே” என்று இராம இலக்குவர் விளிக்கக் காண்கின்றோம்.

    அந்த நாளை அங்கேயே கழித்தனர் சகோதரர்கள். மறுநாள் காலை அம்மாதரசி காய்கதிர்செல்வன் மைந்தனாகிய சுக்கிரீவன் வதியும் உருசியமுக மலையை அடையும் வழியை அவர்களுக்கு விளக்கமாய் எடுத்துரைத்தாள்; அதைக் கவனத்துடன் கேட்டுக்கொண்டனர் இருவரும்.

    யோகநெறியால் ஞானமடைந்தவளான சவரி, இராம இலக்குவர் அங்கிருந்து புறப்படும் முன்னரே, தன் உடலை உகுத்து வீடுபேறுற்றாள். அந்த அதியசத்தைக் கண்டு வியந்தவாறே சுக்கிரீவனைச் சந்திக்கும்பொருட்டு உருசியமுக மலைநோக்கிப் புறப்பட்டனர் இருவரும்; கணக்கற்ற ஆறுகளையும் குன்றுகளையும் கடந்து நல்வினைகளின் இருப்பிடம் என்று விளங்கித் தோன்றிய பம்பை எனும் பொய்கையை அடைந்தனர்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

    Share
  • நினைத்தேன் வந்தாய் நூறு வயது – மக்கள் திலகம் பிறந்த நாள்

    நினைத்தேன் வந்தாய் நூறு வயது – மக்கள் திலகம் பிறந்த நாள்

    பாஸ்கர்

    அது 1958 ஆம் வருடம். மருதூர் கோபாலக்ருஷ்ண மேனன் ராமசந்திரன் அந்த திரைப்படத்தில் ஒரு வசனம் பேசுவார். பட்டேனே பல துயரம், கெட்டேனா… இதை எண்ணி தான் புரட்சி கூட்டத்தில் சேர்ந்தேன்.

    அண்ணா என எம் என் ராஜம் அலறுவார்.

    கவலைப்படாதே மனோஹரி… அது ஆளை கொல்லும் ஆயுத புரட்சி அல்ல. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை என்பார்.

    என்னை நம்புகிறாயா சகோதரி?

    நான் மட்டும் இல்லை அண்ணா.. இந்த நாடே உங்களை தான் நம்பியிருக்கிறது. மக்கள் திலகம் பேசி முடிப்பார்.

    கொட்டகையில் சீழ்க்கை ஒலி பறக்கும். அவர்கள் பாஷையில் பிகில் — கொண்டு வந்த சில்லறையை இறைப்பார்கள். பூக்களை தூவுவார்கள். அவர்கள் வணங்கும் தெய்வம் அவர்.. வசனம் கண்ணதாசன் . உதவி செய்தவர் ரவீந்தர். சுமார் அஞ்சு மணி நேர படம் அது .அதனை சீவி மூன்று மணியாக்கினர். படம் மாபெரும் வெற்றி — வெற்றி பெற்றால் மன்னன், தோல்வி அடைந்தால் நாடோடி என முன்னர் சொன்னார். அன்று முதல் அவர் மன்னன். தனது பிம்பம் பற்றிய திட்டத்தை அங்குலம் அங்குலமாக செதுக்கி அவர் அடைந்த பெரிய உயரம் யாரும் அடையாதது .அவரை மலையாளி என்றார்கள், அவர் ஊர் கண்டி என கிண்டல் செய்தார்கள் ஆனால் அவர் பேசிய தமிழ் வசனம் மிக அற்புதம் . அதற்கு முன்னர் அவர் அடைந்த வெற்றி பல படங்களில் இருந்தாலும் நாடோடி மன்னன் அவரை பெரிய உச்சத்திற்கு கொண்டு சென்றது .கட்டுடல், அழகான சிரிப்பு, வசீகர முகம் – தமிழ் திரை உலகம் ஒரு மயக்கத்திற்கு தயாராகி கொண்டு இருந்தது. மன்றங்கள் முளைத்தன. பட்டுகோட்டையும், மருதகாசியும் திறந்த பேனாவை மூடவில்லை. செங்கொடி பாட்டில் தெறித்தது.

    அண்ணாதுரை அணைத்து அவரை கூட்டத்தில் காட்ட தி மு க விஸ்வரூபம். மக்கள் திலகத்திற்கு இப்பொது தான் தன் பலம் என்ன என்பது தெரிந்தது. 1972 ஆம் ஆண்டில் அதை நிரூபித்தார் தன் கட்சியை கொண்டு வருவதின் திட்டம் எப்போதோ போட்ட விதை. கருணாநிதியிடம் கணக்கு என்பது ஒரு சம்ப்ரதாய காரணம். மக்கள் திலகம் இருக்கும் வரை தி மு க எழவில்லை. காரணம் கலைஞரை காட்டிலும் அவருக்கு இருந்த பெயர். அரியணை கட்டில் ஏறிய பின்னர் அவரும் பால்டிகா பல்கேரியா என்ற ஊழல் பிரச்சனையில் மாட்டி நின்றார். ஒரு தேர்தலில் தோல்வி கண்டு பிறகு வலி உணர்ந்தார். அதற்கு பிறகு அவர் தோல்வியடையவில்லை பெற்ற வெற்றியில் செய்த பெரிய தவறு விடுதலை புலிகளுக்கு ஆதரவு கொடுத்தது. அதன் வீர்யம் மற்றும் வீச்சும் ராஜீவ் மரணம் வர தொடர்ந்து வந்தது. அன்று பிரபாகரனிடம் கோட்டையில் வைத்து கோடிக்கணக்கில் கொடுக்காமல் இருந்திருந்தால் பிரபாகரன் தன்னை பொருளாதார ரீதியாக தயார் செய்து கொண்டிருக்க மாட்டார். நாமும் ராஜீவ் காந்தியை இழந்து இருக்க மாட்டோம். தான தர்மங்களில் அவர் காட்டிய முனைப்பு, எல்லோரையும் அணைத்து செல்லும் பாங்கு, ஏழை மக்களின் அன்பு அவரை ஒரு தேசத்து ராஜாவாக்கியது. நல்ல நினைவாற்றல், கொடுத்த வார்த்தையை காக்கும் புத்தி.

    ஒரு கல்யாண பத்திரிகை கொடுக்க போனவரிடம் ஏன் விருந்துக்கு மட்டும் என்னை அழைக்கிறீர்.. கல்யாணம் எங்கே என வினவ அது ஒரு ஊரில் என்றார். ஆனால் அது உறவுகள் ஏற்பாடு என்றார். நான் உனக்கு உறவு இல்லையா என கேட்டு சொல்லி வைத்தார் போல அடுத்த மாதம் அவர் ஊருக்கு சென்று கல்யாணம் முன்னின்று நடத்தினார்.

    உடல் நலம் குன்றி இருந்த போது இந்திரா காந்தி 1984ஆம் சென்னை வந்து அவரை சந்தித்து வெளிநாடு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.. கொஞ்சம் குணமாகி நன்றி சொல்வதற்கு முன்னால் இந்திரா கொல்லப்பட்டார். மக்கள் திலகம் அடைந்த பெரிய கலக்கம் அது, மூன்று வருடங்களில் அவரும் இயற்கை எய்தினார். ஊரே புலம்பியது, தொலைகாட்சி காமிராக்கள் ஏதும் இல்லை தொண்டர்கள் சுருண்டு கலங்கினார்கள் – எல்லாம் உணர்ச்சிபூர்வமான நடத்தை எதிர்பார்ப்பற்ற செயல்கள். இவர்கள் யாரும் நடிக்கவில்லை.. பொன்னை மண் மூடியது, அவருக்கு வயது அப்போது 71.

    அன்று மாலை நான் நண்பர்களுடன் கடற்கரையில் இன்னொரு மூலையில் இருந்தேன். எல்லா துக்கமும் மனசுக்கு தான். காற்றும் அலைகளும், காகமும், மேகமும் வழக்கம் போல் தத்தமது வேலைகளை செய்ய நாங்கள் எல்லோரும் வீடு திரும்பினோம்.

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் – வாலி

    கவிஞர் வாக்கு – பொய்க்கவில்லை .

    Share
  • தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!

    தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

    “தைபிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் தொடர்ந்து வரவேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாகும். ஆனால் சென்றவருடம் பொங்கலைப் பொங்கி மகிழ்ந்த பின்னர் கண்ணூறு பட்டதுபோல் சீனாவின் சீதனம் வந்திறங்கியது. சீதனத்தின் சீரழிவால் வாழ்வே தடம்புரண்டு நிற்கும் நிலை ஆகிவிட்டது. பொங்கல் இப்பொழுது வந்து நிற்கிறது. பொங்குவதா விடுவதா? பொங்கினால் பகிர்ந்து கொடுத்து மகிழலாமா? அல்லது அவரவர் பாட்டில் வீட்டிலே பொங்கி நிற்பதா என்றெல் ல்லாம் எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

    “தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம் தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம் முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம் குத்து விளக்கேத்தி வச்சு (வைத்து) தங்கமே தங்கம் கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் ”  – என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை, மண்வாசனை தரும் பொங்கலை, உயிர்த்துடிப்பான பொங்கலை, கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டிகிறதல்லவா?  இப்படி ஒரு காலம் இருந்தது. ஆனால் அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோரினதும்  பேராவலும் ஆகும்.

    “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”

    ” உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு“ 

    “சேற்றில் கால் வைக்காவிட்டால் சோற்றில் கைவைக்க முடியாது” இவையெல்லாம் பொங்கலை மனமிருத்தும் அமுத வாக்குகள்.

    பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், அத்தனையும் சீனாவின் சீதனத்தால் நாளும் பொழுதும் சீரழியும் நிலையினைப் பற்றிய அறிவிப்புக் களை வெளிப்படுத்தியபடி இருக்கின்றன. “வாழப்பழகிக் கொள்ளுங்கள்” என்று பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே சொல்லும் அளவுக்கு பரவிய பாவி பரந்து நிற்கிறது. விலத்திப் போகவேண்டும். பாதுகாப்புடன் வாழுவோம் என்னும் நிலையில் இவ்வருடப் பொங்கல் வந்திருக்கிறது.

    பொங்கல் என்றாலே உற்சாகம் பிறந்துவிடும். புத்தாடை வாங்குவது! புதுப்பானை வாங்குவது! சர்க்கரையும், தேனும், நெய்யும், பருப்பும், பாலும் தான் முன்னால் வந்து நிற்கும். கூடவே பழங்களும், கரும்பும் சேர்ந்து விடும்! இவையெல்லாம் அனுபவித்து ஆனந்தம் அடைவதற்கு வாய்ப்பு வருமா என்பதை எண்ணியே யாவரும் சிநதனைக்குள் மூழ்கி நிற்கும் நிலை உருவாகி இருக்கிறது.

    என்றாலும் இதுவும் கடந்து போகும் என்னும் துணிவுடன் பொங்கலை மங்கலமாய் வரவேற்றிடத் துணிய வேண்டும் என்றும் ஒரு பக்கம் மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

    அப்படிச் சொல்லும் வேளையில் தைப்பொங்கலைப் பற்றி ஒரு பார்வை பார்ப்போமா? பார்த்தால் மனதின் கலக்கம் சற்று ஓய்வெடுக்கும் அல்லவா?

    தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப் படுகிறது? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம்? இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறது? இந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன?  பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும். இதுவல்ல பொங்கல்!

    உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள், உழைப்புக்கு உதவிடும் விலங்குகள், உழைப்புக்கு உதவிடும் கருவிகள் கவனத்தில் கொள்ளப்படுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான்  தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்பதை மனமிருத்தல் வேண்டும்

    உலகிலே  உயிர்வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இவையாவும் தைப்பொங்கலுடன் இணைவதால்த்தான் பொங்கல் சிறப்பான விழாவாக அமைகிறது எனலாம்.

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம்  கொண்டு வருகின்ற பொருட்களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப் படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப்படுகின்றன. விவசாயத்தை செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறது. விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப் படுகின்றன.இதனால் தைப்பொங்கல் என்பது நன்றியினை நவில்கின்ற பெருவிழா அமைகிறது என்பது முக்கிய கருப்பொருள் எனலாம்.

    தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து குடும்பத்தில் உள்ளார்கள் “பொங்கலோ பொங்கல்”  என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமை யாததாகும்.

    கலப்படம் இல்லாமல் யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசி, பால், சர்கரை, கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழை, மாவிலை, இவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள் எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவைகள் தைப்பொங்கலில் பயன் படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை எனலாம்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக் கொள்ளலாம். வருடத்தின் தொடக்க மாய்வரும் தையினை மங்களகரமாக வரவேற்க வேண்டுமென்று எண்ணி பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமா? வருடத் தொடக்கத்தில் மனதில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழ வைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா?

    பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப் படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்து பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம், உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனதிலுள்ள பொறாமை வஞ்சகம். பொய், கபடு, சூது, வாது, இவற்றையெல்லாம் ஞானம் என்னு. தீயில் பொசுக்கி மனதைத் தூய்மை ஆக்கி புத்தாடை உடுத்து புதுப்பொங்கலை சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாற்பரியம் எனலாம்.

    பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும், பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் காணும் பொங்கல் அமைகிறது. உற்றார் உறவினரை, பெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த் தினை ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப்பொங்கல், போகித்திருநாள், காணும்பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரித்தில் வாழ்கின்றவர்களுக்கோ. புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைதான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம்.மாடிக் குடி இருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரிதாப மாகவே இருக்கும்.

    சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – கிறீஸ்தவராயினும், இந்துக்களாயினும், தைப்பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். சமயச்சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய்  தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா!  நன்றி நவிலும் விழா! உழைப்பாளரின் உன்னத விழா! கூட்டுறவின் விழா! மதபேதமற்ற மகோன்னத விழா! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்!

    Share
  • கடந்து போயினும் மறந்து போகுமோ 2020?

    கடந்து போயினும் மறந்து போகுமோ 2020?

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    2019ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி சென்னையை நோக்கிய எனது பயணத்தின் முக்கிய நோக்கம், என் மனைவியின் நீண்டநாள் கனவு, தன்னுடைய பிறந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்த பின்னால் ஒருமுறையாவது ஆண்டு தொடங்கும் போது தான் பிறந்த மண்ணில் இருக்க வேண்டும் எனும் அவாவிலே எழுந்ததாகும். 28ஆம் திகதி சென்னையைச் சென்றடைந்த நாம் 31ஆம் திகதி எனது மனைவி பிறந்த ஊரான தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் உள்ள கிருஸ்ணாபுரத்தைச் சென்றடைந்து 2020இன் புத்தாண்டுப் பிறப்பை கிருஸ்ணாபுரத்தில் கொண்டாடினோம்.

    இப்படியாக ஆரம்பித்த எமது 2020இன் ஆரம்பத்தில் 2020இன் முடிவு இத்தகையதாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை, பெப்பிரவரி மாதம் நடுப்பகுதி வரை தமிழ்நாட்டில் நாம் தங்கியிருந்த சமயம், சீனாவின் வூகான் மாநிலத்தில் ஒரு புதுவித வைரஸின் தாக்கம் பற்றிக் கேள்விப்பட்டோமே ஒழிய அதன் தாக்கத்தின் முழு விஸ்தீரணத்தையும் பற்றி அறிந்திருக்கவில்லை.

    நாம் எமது விடுமுறையை முடித்துக்கொண்டு இங்கிலாந்து வந்தடைந்த நேரம்தான், இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் பரபரப்பாகிக் கொண்டிருந்தது, மேற்கு ஐரோப்பா முழுவதும் கொரோனா தனது கோரப் பிடியை ஆரம்பித்திருந்தது. அப்போது அது தனது முழுக் கோரத் தாண்டவத்தையும் இத்தாலி நகரத்தில் ஆடிக்கொண்டிருந்தது. உலகின் பல்வேறு நாடுகளும் லாக்டவுண் எனும் புதிய கட்டுப்பாட்டினைத் தமது நாட்டு மக்களின் மீது விதிக்க ஆரம்பித்திருந்தன. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், தனித்திருத்தல் போன்ற பதங்களுக்கான அழுத்தங்கள் மக்களின் மனங்களில் உறைய ஆரம்பித்தது.

    இங்கிலாந்தில் லாக்டவுண் கொண்டுவருவதைப் பற்றிய விவாதங்கள் பலமுனைகளில் இடம்பெற்றாலும் அதை அமுலாக்குவதற்குச் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பததாக கூறிய பிரதமர், தாம் விஞ்ஞானிகளின் விஞ்ஞான அறிக்கையின் அடிப்படையில் தான் முடிவுகள் எடுப்பதாகக் கூறினார். அதன் பின்பு நாடு முழுவதுமான முழு லாக்டவுண் ஒருமாத காலத்துக்கு அமுலாக்கப்பட்டது. இதனால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தைச் சமாளிக்கும் பொறுப்பு, தமிழ்நாட்டு மாப்பிள்ளையான இங்கிலாந்தின் இளம் நிதியமைச்சர் ரிஷி சுனாக் அவர்களின் கையில் விடப்பட்டது. இதுவரை இங்கிலாந்து சரித்திரத்தில் காணாத வகையில் பலவகையிலான பொருளாதார உதவிகள் அறிவிக்கப்பட்டன. இங்கிலாந்து இளவேனில் காலத்திலிருந்து வசந்த காலத்துக்குள் நுழையும் போது கொரோனாவின் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சொற்பமாகிக் கொண்டிருந்த அதேசமயம், தினசரி கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கையும் குறைந்துகொண்டு வந்தது.

    பொருளாதாரச் சீர்கேட்டைச் சரிசெய்யும் பல திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டிய தேவையிருந்தது, லாக்டவுண் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. லாக்டவுணினால் பாதிக்கப்பட்ட உணவு விடுதிகளை மீண்டும் பரபரப்பாக்குவதற்காக அரசு மக்களை உணவு விடுதிகளுக்குச் சென்று உணவருந்த ஊக்கப்படுத்தியது. ஒருமாத காலத்துக்கு வாரத்துக்கு மூன்று நாட்கள் உணவு விடுதியில் உணவருந்துவோரின் செலவின் பாதியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

    மறுபடி கொஞ்சம், கொஞ்சமாக சகஜ நிலைக்கு வாழ்க்கை திரும்பி விடும் என்று மக்கள் எண்ணத் தொடங்கினார்கள். கொரோனாவின் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதிகளைச் சற்றே மறக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஒருபுறமிருக்க, இங்கிலாந்தின் பொருளாதாரத்தைத் தாக்கவிருக்கும் மற்றொரு முக்கிய நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கொரோனா பின் தள்ளிவிட்டது என்பதுவே உண்மை. 2019 டிசம்பர் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய ஐக்கிய இராச்சிய அரசுக்கு ஒரு வருட அவகாசம் கொடுத்திருந்தது ஐரோப்பிய ஒன்றியம். இந்த ஒரு வருட காலத்துக்குள் அதாவது 2020 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வணிக ஒப்பந்தத்தை எட்டாத பட்சத்தில் இரு பகுதிகளுக்கும் இடையிலான வணிகப் பொருட்கள் மீது வரி அறவிடப்படவிருந்தது.

    கொரோனாவின் கொடும்பிடிக்குள் சிக்கியிருந்த இரு பகுதிகளுக்கு இடையில் இந்த வணிக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் அவர்களுக்கிடையிலிருந்த இடைவெளி மலையளவாக இருந்தது, அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு வரும் அவசிய தேவையிருந்தது. 2020 மே மாதம் நடைபெறவிருந்த லண்டன் மேயருக்கான தேர்தல் ஒத்திப் போடப்பட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகள் எனப் பலமுனைத் தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய இராச்சியப் பிரதமர் பொரிஸ் ஜான்சன் கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்கு உள்ளானார். ஒருவாறு வெற்றிகரமாக கொரோனாத் தாக்குதலினின்றும் மீண்டுகொண்டார்.

    இத்தனை பரபரப்புகளுக்கும் மத்தியில் பிரதமர் பொரிஸ் ஜான்சனின் காதலி, குழந்தைக்குத் தாயானார். ஆம் 2020 இங்கிலாந்துப் பிரதமரைப் பொறுத்தவரையில் ஒரு பரபரப்பு நிகழ்வுகளைத் தாங்கிய ஒரு வருடமாகவே இருந்தது.

    பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களின் சர்ச்சைக்குரிய ஆலோசகரான டொமினிக் கமின்ஸ் என்பவர், மந்திரி சபையில் பதவி வகிக்கும் பல அமைச்சர்களோடு கருத்து மோதல்கள் கொண்டிருந்தார். நாடு முழுவதும் லாக்டவுண் எனும் பிடிக்குள் சிக்கியிருந்த சமயம், கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்த டொமினிக் கமின்ஸ், இந்த லாக்டவுண் விதிகளை மீறியமை வெளிச்சத்துக்கு வந்தது. மக்களுக்கொரு நீதி, பிரதமரின் ஆலோசகருக்கு ஒரு நீதியா? என ஊடகங்களும் அரசியல் அவதானிகள் பலரும் கொதித்தெழுந்த போதும் பிரதமர் தனது ஆலோசகருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது பல அரசியல் முனைகளில் விசனத்தை ஏற்படுத்தியது.

    இப்படியாக லாக்டவுண், லாக்டவுண் தளர்வு, பிரெக்ஸிட் எனக் கரடுமுரடான பாதைகளுக்குள்ளால் பயணித்த இங்கிலாந்து, ஒருவாறு செப்டெம்பர் மாதத்துக்குள் நுழைந்தது. வழக்கமாகவே இங்கிலாந்துக் குளிர்காலத்தில் ப்ளூ எனப்படும் தீவிர ஜலதோஷம் போன்ற உபாதைகளினால் சராசரியாக 20,000 பேர் மரணிப்பார்கள். ஆனால் இம்முறை அதனுடன் இணைந்து கொரோனாவின் தாக்கமும் சேர்ந்தால் தேசிய சுகாதாரச் சேவை அல்லாடப் போகிறது எனும் கருத்து, விஞ்ஞான அவதானிகளினால் அடிக்கடி நினைவூட்டப்பட்டது. மக்களனைவரும் அவதானமாக தம்மைத் தாமே இக்கொரொனாத் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகை நடந்துகொள்ள வேண்டும் எனும் அறிவுறுத்தல் அளிக்கப்பட்டது.

    என்னே ஐக்கிய இராச்சியத்துக்கு வந்த சோதனை! கொரோனா தனது கட்டமைப்பை மாற்றி, அடுத்தவர்களைத் தொற்றிக்கொள்ளும் வீரியத்தை அதிகப்படுத்திக் கொண்டது. இதன் தாக்கம் இங்கிலாந்தில் இதுவரை கட்டுப்பாட்டுக்குள் இருந்த தொற்றின் வீரியம் விரைவாக அதிகரிக்கத் தொடங்கியது. அச்சமடைந்த ஐக்கிய இராச்சிய அரசாங்கம், நவம்பர் மாதம் கட்டுப்பாடுகளைச் சிறிது தீவிரமாக்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகை, இங்கிலாந்தின் மிக முக்கியப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் போதே வருட்த்துக்கொருமுறை உறவினர்கள், நண்பர்கள் பலரும் சந்தித்துக்கொள்வது வழக்கம். இப்பண்டிகைக் காலத்தில் கெடுபிடிகளை ஐந்து நாட்களுக்குத் தளர்த்த முடிவு செய்தது அரசாங்கம். விஞ்ஞானிகளும், அரசியல் அவதானிகள் பலரும் இதற்கு எதிரான கருத்தினைக் கொண்டிருந்தார்கள்.

    கொரோனாத் தொற்று கட்டுக்குள் அடங்காமல் அதிகரிக்கத் தொடங்கியது. வைத்தியசாலைகள் கொரோனா நோயாளிகளினால் நிரம்பி வழியத் தொடங்கியது. இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அல்லாடிய அரசாங்கம் 2021 ஜனவரி தொடக்கம் புதிய தீவிரமான லாக்டவுண் விதிகளை அறிவித்தது. இல்லங்களில் இருந்து பணிபுரியக்கூடியவர்கள் வெளியே செல்லக் கூடாது, பள்ளிகள் பெப்பிரவரி நடுப்பகுதி வரை மூடப்படும், உணவு விடுதிகளில் பார்சல்கள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பது தடை செய்யப்பட்டது.

    இதற்கிடையில் டிசம்பர் 31 ப்ரெக்ஸிட் காலக்கெடுவுக்கு முன்னால் அவசரம், அவசரமாக ஒரு வணிக ஒப்பந்தம் எட்டப்பட்டது. இவ்வொப்பந்தப் பிரகாரம் ஐக்கிய இராச்சியத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வணிகம் எதுவித இடையூறுமின்றி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டமைப்பு மாறிய கொரோனா வைரஸ், ஐக்கிய இராச்சியத்திலேயே உருவாகியது எனும் காரணத்தினால் உலகின் பலநாடுகளும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இங்கிலாந்துக்கும், தமக்குமிடையிலான விமான சேவைகளை இரத்துச் செய்தன. டிசம்பர் 22ஆம் தேதியளவில் பிரான்சு நாட்டுக்கும், ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பல ட்ரக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முடியாமல் இங்கிலாந்துக் கரையில் சுமார் இருபது மைல் நீளத்துக்கு வரிசையில் நிற்க வேண்டிய நிலையேற்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் பலர், தமது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கழிக்க முடியாத நிலைக்கு உள்ளானார்கள். பிரான்சும், இங்கிலாந்தும் பேச்சுவார்த்தைகளின் மூலம் கொரோனா வைரஸுக்கான பரிசோதனையின் பின்னால் இந்த லாரிகள் ப்ரெஞ்சு எல்லைக்குள் அனுமதிக்கப்படும் எனும் ஒரு புரிந்துணர்வை எட்டினார்கள்.

    டிசெம்பர் மாத நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசி நடவடிக்கையை இங்கிலாந்து ஆரம்பித்தது. பெப்பிரவரி நடுப்பகுதிக்கு முன்னால் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்றும் வைத்திய சுகாதாரச் சேவை பணியாளர்கள், வயோதிபர் இல்ல உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுவிடும், அதைத் தொடர்ந்து ஏப்பிரல் மாத முடிவுக்குள் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுவிடும் என்றும் 2021 அக்டோபர் மாதத்துக்கு முன்னால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுவிடும் என்ற தமது திட்டத்தை அறிவித்திருக்கிறது இங்கிலாந்து அரசு.

    இன்றைய ஐக்கிய இராச்சிய நிலவரம் பின்வருமாறு.

    கட்டமைப்பு மாறிய கொரொனா வைரஸின் தொற்று அதிகரித்த வண்ணமுள்ளது, தொற்றின் காரணமாக வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டி விட்டது. 2020 மார்ச் மாதம் அதி உச்ச நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் எண்ணிக்கை சுமார் 21,000 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதுவரை இக்கொரொனாத் தொற்றுக் கொண்டோரின் இறப்பு எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளது. நிலைமை சீராவதற்கு முன்னால் எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிலை இன்னும் தீவிரமாகும் எனவும் இரண்டு வார காலத்துக்குள் எண்ணிக்கை உச்சமடைந்த பின்னால் தான் குறைவதற்குரிய சான்றுகள் உண்டெனவும் கூறப்படுகிறது.

    அடுத்தடுத்த ஆக்கங்களில் 2020இன் சர்வதேச தாக்கங்களைப் பற்றிப் பார்ப்போம்.

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 24

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 24

    -மேகலா இராமமூர்த்தி

    பன்னசாலையில் சீதையைக் காணாது இராமனும் இலக்குவனும் கலங்கி நின்ற வேளையில் தரையில் தெரிந்த தேர்ச்சக்கரச் சுவடுகளைச் சுட்டிக்காட்டிய இலக்குவன், இவற்றை நாம் பின்தொடர்ந்து செல்வோம் என்று கூறவே இராமனும் அக்கருத்தை ஏற்று இலக்குவனோடு அச்சுவடுகளைத் தொடர்ந்து சென்றான். ஆனால் சற்றுத் தூரத்திலேயே அச்சுவடுகள் காணாமல் போய்விட்டதைக் கண்டு திகைத்தனர் இருவரும்.

    ”இனி நாம் என்ன செய்வது இளவலே?” என்று இராமன் வருந்த, ”அண்ணா! தேர்ச்சுவடு மறைந்தால் என்ன…தேர் தெற்கு நோக்கித்தான் சென்றிருக்கின்றது என்பதை நாம் அறிந்துகொண்டுவிட்டோம் அல்லவா? ஆதலால், தென் திசையிலேயே தொடர்வோம் நம் தேடலை” என்றான் இலக்குவன்.

    இருவரும் தெற்குநோக்கித் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். சற்றுத் தூரத்தில் வீணைக்கொடி முறிந்துகிடப்பதைக் கண்டனர். மேலும் சிறிது தூரம் சென்றதும் பெரிய வானவில்லைப் போன்றதும், கடலின் ஓங்கிய அலைபோல் தோற்றமளிக்கக்கூடியதுமான கொடிய வில்லொன்று முறிந்து கிடப்பதைக் கண்டனர். இவற்றையெல்லாம் முறித்தெறிந்தவன் சடாயுவாகவே இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவர்கள் தொடர்ந்து அப்பாதையில் பயணித்தனர். அங்கே அம்பறாத்தூணி, மார்புக் கவசம் என மேலும் பல பொருள்கள் உடைந்து கிடப்பதைக் கண்டனர். இன்னும் சற்றுத் தொலைவில் குண்டலங்களும் தோள்வளைகளும் சிதறிக் கிடப்பதைக் கண்ட இராமன், நம் தந்தையாகிய சடாயுவோடு சிங்கம்போன்ற வலிகொண்ட பலர் போர் புரிந்திருக்கவேண்டும் எனும் தன் ஐயத்தை வெளிப்படுத்தினான். அதனை மறுத்த சுமித்திரையின் சிங்கமான இலக்குவன், இங்கே சிந்தியுள்ள குண்டலங்களும் தோள்வளைகளும் தருபோல் நீண்ட தோள்களும் பல தலைகளும் கொண்ட இராவணனுடையவையாகவே இருக்கவேண்டும். நம் தந்தை சடாயுவோடு பொருது சீதையை நெடுந்தொலைவு கொண்டுபோனவன் அவனாகவே இருத்தல் கூடுமெனத் தீர்மானமாக உரைத்தான்.

    திருவின் நாயகன் உரைசெய
         சுமித்திரை சிங்கம்
    தருவின் நீளிய தோள் பல
         தலை பல என்றால்
    பொருது தாதையை இத்தனை
         நெறிக் கொடு போனான்
    ஒருவனே அவன் இராவணன் ஆம்
         என உரைத்தான். (கம்ப: சடாயு உயிர்நீத்த படலம் – 3594)

    இராமன் மனக்கலத்தோடு எதனையும் தெளிவாகச் சிந்திக்கவியலாது தடுமாறும் தருணங்களிலெல்லாம் இலக்குவன் புத்திக்கூர்மையோடு சிந்தித்துக் கருத்துக்களை வெளிப்படுத்துவதை இராமகாதையில் நாம் பல இடங்களில் காணமுடிகின்றது. முன்பு மாய மானை இராமன் துரத்திச்செல்ல முற்போட்டபோது, இஃது அரக்கனின் மாயை; உண்மையான மானில்லை என்று சரியாகக் கணித்துரைத்ததையும், மாரீசன் இராமன் குரலில் ஓலமிட்டபோது அதனை இராமன் குரலென்றெண்ணிச் சீதை மனங்கலங்கியபோது, இஃது இராமனின் குரலன்று; மாரீசனின் குரலே என்றுரைத்துச் சீதையைத் தேற்றியதையும் போலவே இப்போதும் சடாயுவோடு போரிட்டவர் பலரல்லர்; இராவணன் ஒருவனே என்று துல்லியமாகக் கணித்துரைக்கின்றான் நுண்மாண்நுழைபுலம் மிக்க இலக்குவன்.

    போரிட்ட சடாயுவின் நிலையறிய எண்ணிய இராமனும் இலக்குவனும் அவ்வழியே விரைந்தனர். ஆங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை மருளச் செய்தது. இராவணனோடு போரிட்டுப் புண்பட்டதால் உடலிலிருந்து குருதியானது கடல்போல் வழிய அதிலே மந்தர மலையெனக் கிடந்தான் சடாயு. அவன்நிலை கண்டு நெஞ்சழிந்து கண்ணீர்சொரிந்த இராமன், அஞ்சனமலையென அவன்மேல் வீழ்ந்து மூர்ச்சித்தான். இலக்குவன் இராமன்மீது நீர்தெளித்து அவனை மூர்ச்சை தெளிவித்தான்.

    தன்னால்தான் இத்தனை அவலங்களும் நேர்ந்தன என்றெண்ணித் தன்மீதே கோபமும் வெறுப்பும்கொண்ட இராமன், ”நெடுமரம்போல் வளர்ந்து நிற்கின்ற என்னால் யாருக்கும் எப்பயனும் இல்லை; இந்த இழிபிறப்பை நான் விரும்பவில்லை” என்று கழிவிரக்கத்தோடு புலம்பத் தொடங்கினான்.

    சிறிதே உணர்வு வரப்பெற்ற புள்ளரசன் சடாயு, மெள்ளக் கண்விழித்தான். தன்னருகில் இராம இலக்குவர் இருப்பதைக் கண்டு இற்றுப்போன தன் சிறகுகளை மீண்டும் பெற்றவன்போல் மகிழ்ந்தான்; இருவரையும் அன்போடு உச்சிமோந்தான்.

    ”வஞ்சனையால்தான் இராவணன் சீதையைக் கவர்ந்து வந்திருக்கவேண்டும் என்று என் மனம் சொல்லிற்று. ஆற்றல் பொருந்திய நீவிர் இருவரும் அருந்ததி அனைய கற்பினாளை, அஞ்சொல் மயிலைத் தனியே விட்டுச் சென்றீரா?” என்று வருத்தத்தோடும் ஒரு தந்தையின் பொறுப்புணர்வோடும் இருவரையும் கடிந்துகொண்டான் சடாயு. இது முன்னமே தெரிந்திருந்தால் நான் இன்னும் சற்று விழிப்போடிருந்து சீதையைக் காத்திருப்பேனே என்ற சடாயுவின் உளக்குறிப்பு இதில் ஒளிந்திருக்கக் காண்கின்றோம்.

    வஞ்சனையால் வந்த வரவு
         என்பது என்னுடைய
    நெஞ்சகமே முன்னே நினை
         வித்தது ஆனாலும்
    அம் சொல் மயிலை
         அருந்ததியை நீங்கினிரோ
    எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும்
         என்று உரைத்தான். (கம்ப: சடாயு உயிர்நீத்த படலம் – 3606)

    நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் சடாயுவுக்கு விளக்கினான் இலக்குவன். அதைக் கேட்ட சடாயு, இராம இலக்குவரைத் தேற்றும்பொருட்டு, ”ஊழ்வினையின் பயனால் நமக்கு நேரும் இன்ப துன்பங்களை நாம் விலக்கிவிட முடியாது. வில்வீரனே! சீதையின் பிரிவு தேவர்களின் துன்பம் தீர்தற்பொருட்டு ஏற்பட்டதேயாகும் என எண்ணுகின்றேன். மாவடுவைப் பிளந்ததுபோன்ற கண்களையும் நீண்ட கூந்தலையும் கொண்ட சீதையை இராவணன் நிலத்தோடு பெயர்த்துத் தூக்கிச் செல்வதைக் கண்ணுற்ற நான், என்னால் ஆனமட்டும் பலங்கொண்டு அதனைத் தடுத்தேன். இறுதியில் அரன் தந்த சந்திரகாசம் எனும் வாளால் அவன் என்னை வெட்டிவீழ்த்தவே ஈண்டு வீழ்ந்துவிட்டேன்” என்றுரைத்து வருந்தினான்.

    அதைக் கேட்டதும் இராமனின் சினம் எல்லை கடந்தது. தனியாக இருந்த பெண்ணொருத்தியை அறிவற்ற அரக்கன் ஒருவன் தூக்கிச்செல்லும்போது அதனைத் தடுப்பதற்கு ஏதும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்த எட்டுத் திசைகளையுடைய உலகங்களையும் தேவர்களையும் இப்போதே ஒழித்துக்கட்டுகின்றேன் என்று கர்ஜித்தான்.

    இராமனின் சினமொழிகளைக் கேட்டு வெஞ்சுடர்க் கடவுளான கதிரவன் மலைக்குப்பின் அஞ்சி மறைந்தான். திக்குகளிலுள்ள யானைகள் ஓடி ஒளிந்தன. இராமனின் கடுங்கோபம் கண்டு வீரத்திருமகன் இலக்குவனே சற்று நடுக்கம் கொண்டான்.

    ஆனால் சடாயுவோ இராமனின் கருத்தை மறுத்து, ”இராமா! செங்கையில் வில்லேந்திய நீங்கள் இருவரும் கச்சணிந்த வஞ்சியாள் சீதையை வனத்திடை தனியேவிட்டு மானின் பின்னேபோய் உங்கள் குலத்துக்கே பெரும்பழி கூட்டிக்கொண்டீர்கள். எனவே, இஃது உங்கள் குற்றமேயன்றி உலகோரின் குற்றமன்று!” என்று இடித்துரைத்தான்.

    வம்பு இழை கொங்கை வஞ்சி
         வனத்திடைத் தமியள் வைகக்
    கொம்பு இழை மானின் பின் போய்
         குலப் பழி கூட்டிக் கொண்டீர்
    அம்பு இழை வரிவில் செங்கை
         ஐயன்மீர் ஆயும்காலை
    உம்பிழை என்பது அல்லால் உலகம்
         செய் பிழையும் உண்டோ. (கம்ப: சடாயு உயிர்நீத்த படலம் – 3627)

    தந்தையை ஒத்த சடாயுவின் பொருள்பொதிந்த சொற்கள் பொங்கிய பாலில் தெளித்த நீரென இராமனின் சினத்தை உடனே அடக்கின. ”ஆம்! பிழையை நான் செய்துவிட்டு மற்றவரை நோவதென்ன?” என்று சிந்தித்தவன், அரக்கரை அழித்துச் சீதையை மீட்டலே இனிச் செய்யவேண்டியது என்று முடிவுசெய்தவனாய்ச் சடாயுவை நோக்கி, ”தந்தையே! உன் சொற்களை ஏற்று நடப்பது என் கடன்; இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றது எங்கே என உரைப்பாய்?” என்று வினவ, கடுமையாய்ப் புண்பட்டு உணர்வு குன்றியிருந்த சடாயு பதிலேதும் சொல்லாமல் உயிரை விட்டான்.

    ”என்னைப் பெற்ற தந்தையும் இறந்தான்; கானகத்தில் நான் உற்ற தந்தையும் இறந்தான்” என்று வேதனையோடு விளம்பிய இராமன், சடாயுவுக்கு ஒரு மகனைப்போல் ஈமக் கடன்கள் செய்தான். இராமகாதையில் இராமன் கைகளால் நீர்க்கடன் செய்யப்பெறும் பேறு அவனைப் பெற்ற தந்தையான தயரதனுக்குக் கிட்டவில்லை. ஆனால் எங்கோ ஒரு காட்டில் வாழ்ந்துவந்த பறவையான சடாயுவுக்குக் கிடைக்கின்றது என்பதை அறியும்போது ஊழின் போக்கை நாம் வியக்கத்தான் வேண்டியிருக்கின்றது.

    இரவு வந்தது! அது துயரத்தையும் உடன் அழைத்து வந்தது. தான் இல்லாத சமயத்தில் சீதையை இராவணன் கவர்ந்து சென்றதால் ஏற்பட்ட அவமானமும், சீதை மீதான காதலும் மாறிமாறித் துன்புறுத்த, வலிமைமிகு இரு யானைகள் இழுப்பதனால் நைந்து அறுந்துவிடும் நிலையிலுள்ள ’தேய்புரிப் பழங்கயிறு’ போலானது இராமனின் அவலநிலை.

    நீண்ட இரவு விடைபெற்றுப் போக, பொழுது புலர்ந்தது; பூக்கள் மலர்ந்தன! காளையர் இருவரும் காடுகளையும் மலைகளையும் கடந்து காரிகையாள் சீதையைத் தேடும் படலத்தைத் தொடர்ந்தனர்.

    நீண்ட நடைக்குப் பிறகு ஏற்பட்ட களைப்பைப் போக்க இலக்குவனை நீர் கொணரப் பணித்தான் இராமன். நீர்தேடிச் சென்ற இளவலைக் கண்டாள் அயோமுகி எனும் அரக்கி. அவளுக்கு அவன்மீது ஆசை பிறந்தது. பாம்புகளைக் கை வளையல்களாகவும், யாளிகளையே தாலியாகவும் அணிந்த அவள் இலக்குவன் அருகில்வந்து, எந்த ஆடவனும் தொடாத கன்னியாகிய என்னை ஏற்றுக்கொள் எழில்வீரனே என்று கெஞ்சுகின்றாள். அவன் வழக்கம்போலவே அதற்கு மசியாததால் ’மோகனை’ எனும் வசியவித்தை செய்து அவனை வானில் தூக்கிச் சென்றாள்.

    இலக்குவனைத் தூக்கிச்சென்ற அயோமுகி, மந்தரமலையைத் தூக்கிச் செல்லுகின்ற கடல்போலவும், இந்திரன் ஊர்ந்துசெல்லுகின்ற பெண்யானை போலவும், முருகன் ஊர்கின்ற மயில்போலவும் விளங்கினாள் என்று மூன்று உவமைகள்வழி கற்பனை நயந்தோன்ற அக்காட்சியை விளக்குகின்றார் கம்பர்.

    மந்தரம் வேலையில் வந்ததும் வானத்து
    இந்திரன் ஊர் பிடி என்னலும் ஆனாள்
    வெந் திறல் வேல் கொடு சூர் அடும் வீரச்
    சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள்.
    (கம்ப: அயோமுகிப் படலம் – 3701)

    இங்கே மந்தரமலை, இந்திரன், முருகன் ஆகியவை இலக்குவனுக்கு உவமைகள். மலையைச் சுமக்கின்ற கடல், இந்திரன் ஊர்கின்ற பெண் யானை, முருகன் ஊர்கின்ற மயில் ஆகியவை அயோமுகிக்கு உவமைகள்.

    நேரம் நீண்டது; நீர்கொணரச் சென்ற இளவலோ மீண்டானில்லை. இராமனின் உள்ளத்தில் அது கலக்கத்தை விளைவித்தது.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

     

    Share