செந்தமிழின் சிறப்பினைச் சகத்துக்கு உணர்த்திய அறிஞர்

0
Minolta DSC

Minolta DSC

-மேகலா இராமமூர்த்தி

நம் அன்னைத் தமிழுக்கு தமிழ்நாட்டு அறிஞர்களேயன்றி அயல்நாட்டைச் சேர்ந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத அறிஞர் பலருங்கூட அருந்தொண்டாற்றியிருக்கின்றனர். இராபர்ட் கால்டுவெல், வீரமாமுனிவர், பிரான்சிஸ் வைட் எல்லிஸ், ஜி.யூ.போப் என்று நீளும் இவ்வரிசையில் செக் நாட்டைச் சேர்ந்த கமில் சுவெலபில்லும் (Kamil Václav Zvelebil) குறிப்பிடத்தகுந்த ஒருவராவார்.

அண்மைக் காலம்வரை நம்மிடையே வாழ்ந்துமறைந்த அந்த மொழியியல் அறிஞர், தமிழ்மொழிக்கு ஆற்றியிருக்கும் அரும்பணிகள் பல. அவை குறித்துச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia) நாட்டில் பிராக் (Prague) மாநகரில் 1927ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் பிறந்த கமில் வாஸ்லாவ் சுவெலபில், அங்குள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் (Charles University) 1946ஆம் ஆண்டு தொடங்கி 1952 வரை ஆறு ஆண்டுகள் கல்வி பயின்றார். இந்தியவியல், ஆங்கில இலக்கியம், தத்துவம், சமஸ்கிருதம், திராவிட மொழியியல் என்று பலவற்றைப் பயின்ற அவர், 1952இல் சமஸ்கிருதத்தில் முனைவர்ப் பட்டம் பெற்றார். பின்னர் திராவிட மொழியியலில் இராண்டாவது முனைவர்ப் பட்டத்தை 1959இல் பெற்றார்.

1952 முதல் 1970 வரை செக்கோஸ்லோவாக்கியாவில் அமைந்துள்ள கீழையியல் துறையில் (Oriental Institute of the Czechoslovak Academy of Sciences) தமிழ் மற்றும் திராவிட மொழியியல் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். கிரேக்கம், இலத்தீன், செருமன், ஆங்கிலம், உருசியன், சமஸ்கிருதம், தமிழ் முதலிய மொழிகளைக் கற்றிருந்த அவர் அவற்றோடு மலையாளம், இந்தி, பிரெஞ்சு, இத்தாலியன், போலிஷ் உள்ளிட்ட மொழிகளையும் அறிந்திருந்தார் என அறிகின்றோம்.

1965-66இல் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்திலும் (The University of Chicago), 1967-68இல் செருமனியிலுள்ள ஹெய்டெல்பெர்க் பல்கலைக்கழகத்திலும் (Heidelberg University) வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

திராவிடமொழித் துறையின் தலைவராய்ச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சிலகாலம் பணியாற்றிய சுவெலபில், பின்னர் அங்கிருந்து வெளியேறி 1970இல் பிரான்சில் இருந்த காலேஜ் டி பிரான்ஸ் (college de France) என்ற புகழ்வாய்ந்த கல்லூரியில் வருகைதரு பேராசிரியராய்ப் பணிபுரிந்தார். நெதர்லாந்திலுள்ள லெய்டன் பல்கலைக்கழகத்திலும் (Leiden University, The Netherlands) சில காலம் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து நெதர்லாந்திலுள்ள யூட்ரெக்ட் பல்கலைக்கழகத்தில் (Utrecht University)1992ஆம் ஆண்டுவரை திராவிட மொழிகள், தென்னிந்திய இலக்கியம் மற்றும் நாகரிகம் குறித்த துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

முதலில் செக் நாட்டுத் தூதரகத்தில் பணிபுரிந்த தமிழன்பர் ஒருவர் வாயிலாகத் தமிழ்கற்கத் தொடங்கிய சுவெலபில், அதில் ஈடுபாடுகொண்டு வானொலி வழியாகவும், நூல்கள் வழியாகவும் தமிழை முனைந்து கற்றிருக்கின்றார்.

பிரான்சு நாட்டைச் சேர்ந்த பியர் மீலா (Perre Meile) என்ற மொழியியல் அறிஞர் தமிழ் குறித்துப் பிரஞ்சு மொழியில் எழுதிய ’Introduction au Tamoul’ (An introduction to Tamil) என்ற நூல் வழியாகவும் சுவெலபில்லுக்குத் தமிழின் அறிமுகம் கிடைத்தது.

தமிழை மேலும் செம்மையாகவும் சிறப்பாகவும் கற்க விழைந்த அவர், தமிழகத்திற்கு வருகைபுரிந்து பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், பேராசிரியர் மு. வரதராசனார் முதலியோரிடம் தமிழ் பயின்றார்.’தமிழ் இலக்கணத் தாத்தா’ என்று சிறப்பிக்கப்பெற்ற மகாவித்துவான் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ்பயின்ற அனுபவம் உடையவர் கமில் சுவெலபில்.

தமிழகச் சித்தர்கள் குறித்து தாம் எழுதிய ’The Poets of the Powers’ என்னும் நூலில் தம் ஆசிரியர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்டு “எனது குரு” என்று சுவெலபில் குறிப்பிட்டிருப்பது அவரது நன்றியறிதலையும் வேணுகோபாலப் பிள்ளைபால் அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பினையும் புலப்படுத்துகின்றது.

சிறந்த தமிழறிஞர்கள் பலரிடம் பயின்றதன் விளைவாய் நல்ல தமிழிலக்கண, இலக்கியப் புலமை வாய்க்கப் பெற்றவரானார் சுவெலபில். தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பது பாராட்டுக்குரிய செயலாகும். சுவெலபில் மொழிபெயர்த்த தொல்காப்பியம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்காப்பிய உரைவளத்தில் எடுத்தாளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தென்னிந்தியாவிற்குப் பலமுறை களப்பணி ஆய்வுக்காக வந்திருக்கின்றார் கமில் சுவெலபில். அவர் சென்னைக்கு வருகை தந்தபொழுதெல்லாம் நம் தமிழகத்து அறிஞர்கள் அவருக்கு வரவேற்பும் பாராட்டும் அளித்துச் சிறப்பித்துள்ளனர். சென்னை மாநிலக் கல்லூரியில் சென்னைத் தமிழ்க்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் 1962ஆம் ஆண்டு செப்டம்பர் 7இல் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழறிஞர்கள் பலர் கமில் சுவெலபில்லைப் பாராட்டிப் பேசியிருக்கின்றார்கள்.

பேராசிரியர் மு.வரதராசனார் அவர்கள், கமில் சுவெலபில் பற்றிக் குறிப்பிடும்பொழுது ” இவர் நம்மிடையே வாழ்ந்து வருகின்ற போப்; நம்மிடையே வாழ்ந்து வருகின்ற கால்டுவெல், தமிழ்மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து வெளியிட்டிருக்கிறார். நற்றிணை, புறநானூறு நன்கு கற்றவர். சிலப்பதிகாரத்தை மொழிபெயர்த்து வருகின்றார். கல்கியின் நாவல்களையும் மொழிபெயர்த்து வருகின்றார். தாமே முயன்று தமிழ் கற்றவர். தமிழ் ஒலியே கேட்காத நாட்டில் இருந்துகொண்டு தமிழ் கற்றவர்.” என்று பாராட்டிப் பேசியுள்ளார் என்பதைச் செந்தமிழ்ச் செல்வி இதழ் வாயிலாய் அறியமுடிகின்றது. (செந்தமிழ்ச்செல்வி 37:1. பக்கம் 33).

தமிழ் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியதோடு மட்டுமன்றி, மொழியியல் நோக்கிலும் தமிழை ஆய்வுக்கு உட்படுத்தியவர் சுவெலபில்.

குறிஞ்சிக் கிழவனென்றும், தமிழர்களின் முப்பாட்டன் என்றும் நாம் சிறப்பிக்கின்ற முருகனிடத்துத் தனித்த ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்திருக்கின்றார் என்ற செய்தி நமக்குப் பெருவியப்பினைத் தருகின்றது. முருகனைப் பற்றி ஆங்கிலத்தில் ’திருமுருகன்’ (Tiru Murugan) எனும் நூலெழுதியிருக்கின்றார் சுவெலபில்.

வள்ளியின் பிறப்பு வளர்ப்பு திருமண நிகழ்வுகளைக் கச்சியப்ப சிவாசாரியார் எழுதியுள்ள கந்தபுராணத்தின் அடிப்படையில் இந்நூலில் விவரித்துள்ள அவர், வள்ளி முருகன் என்பவர்கள் தெய்வங்களாய்ப் புராணங்களில் சித்திரிக்கப்பட்டாலும் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்தவை அனைத்தும் தமிழ் மரபில் இடம்பெற்றிருக்கும் களவு மற்றும் கற்பு வாழ்க்கை சார்ந்தவையாகவே இருக்கின்றன என்பதையும் ஆய்வுநோக்கில் வெளிப்படுத்தியுள்ளார்.

’The introduction to Tamil Literature’ என்ற தம்முடைய ஆங்கில நூலில், சங்கநூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களின் மொழிநடை, பாடுபொருள் ஆகியவற்றில் ஒத்த தன்மையைக் காணமுடிகின்றது. அரசவையில் பாடப்பட்ட சங்கப் பாடல்களின் தொடக்கமாக நாம் வாய்மொழிப் பாடல்களைக் கருதலாம் என்று குறிப்பிடுகின்ற சுவலபில்,

சங்க நூல்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, சாதிமுறை அன்றைய தமிழ்நிலத்துக்குப் பழக்கப்படாத அந்நியத்தன்மை கொண்ட ஒன்றாகவே இருக்கின்றது. தமிழ்நிலத்தில் அதிக செல்வாக்குப் பெற்ற குடியினராக வணிகர்களும் வேளாளர்களும் அன்று இருந்தார்களே தவிர பார்ப்பனர்களும் அரசர்களும் அல்லர் என்று குறிப்பிடுகின்றார்.

தென்னிந்தியாவின் இலக்கிய வரலாற்றை எழுதிய சுவெலபில், அதற்குச் சூட்டிய பெயர் ‘முருகனின் புன்னகை’ (The Smile of Murugan: On Tamil Literature of South India) என்பதாகும். முருகன்பால் அவருக்கிருந்த ஈடுபாட்டிற்கு இதனினும் சிறந்த சான்றுண்டோ?

இந்நூலில் தமிழர்கள் குறித்தும் தமிழ்மரபுச் செல்வங்கள் குறித்தும் சுவெலபில் முன்வைக்கும் கருத்துக்கள் தமிழர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டியவையாகும். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே தொட்டுக்காட்ட விரும்புகிறேன்.

”திராவிடர்கள்…குறிப்பாகத் தமிழர்கள் உலகின் பண்பாட்டு வளத்துக்கு ஆற்றிய பங்கு மகத்தானதாகும். பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களின் வடிவமைப்பு, சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட செப்புச் சிற்பங்கள், பரதக்கலை, கர்நாடக இசை போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்திற்கும் மேலான பங்களிப்பாகத் தமிழர்கள் உலகிற்குத் தந்திருப்பது தமிழிலக்கியம் எனும் வளமாகும். அதன் செழுமையும் சிறப்பும் தமிழறியாத மக்கள் உணர்ந்தும் படித்தும் இன்புறவேண்டிய தமிழ்மரபுச் செல்வமாகும்.

தமிழர் பண்பாட்டைப் பொறுத்தவரை, அது ஒரு பண்பாட்டு வெற்றிடத்தை நிரப்புவதற்காகவோ, இரண்டு நாகரிகங்களின் கலப்பினாலோ உருவான ஒன்று அன்று; தானாகவே முகிழ்த்த ஒன்று.

இந்தியாவின் இரு முக்கிய மொழிகளாகக் கருதப்படுபவை தமிழும் சமஸ்கிருதமும். இவற்றில் தமிழ்மொழியானது சமஸ்கிருதத்திற்குக் காலத்தால் முற்பட்டதும் அதனைச் சாராமல் தனித்து இயங்கக்கூடியதும் ஆகும்.

அதுமட்டுமன்று! பழங்காலம் தற்காலம் எனும் இரண்டு காலங்களுக்கும் பொருந்தக்கூடிய இலக்கிய வளமும் தமிழில் மட்டுமே இருக்கின்றது. சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய நவீன இலக்கியங்கள் வரை தமிழில் காணக்கிடைப்பது, சமஸ்கிருதத்திற்கு இல்லாத தமிழின் தனித்தன்மையை புலப்படுத்தக்கூடியதாகும். எனவே அன்றுமுதல் இன்றுவரை அறுபடாத தொடர்ச்சியுடைய மொழியென்றால் அது தமிழ் மட்டுமே.” என்கிறார்.

தமிழர்களாகிய நாம் பெருமைகொள்ளத்தக்க செய்திகள் அல்லவா இவை?

தமிழறிஞர் சிதம்பரநாதன் செட்டியார் அவர்களின் தொடர்பினால் தமிழ் யாப்பின்மீது ஈடுபாடு வரப்பெற்ற கமில் சுவெலபில், தமிழ்யாப்பு பற்றியும் விரிவாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். யாப்பு குறித்த சுவெலபில்லின் நூல்களை மதிப்பீடு செய்யும் வாய்ப்பைப் பெற்ற முனைவர் பொற்கோ (பொன் கோதண்டராமன்) அவர்கள், கமில் சுவெலபில் தமிழ்யாப்பு பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளார் என்று குறிப்பிடுகின்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கமில் சுவெலபில்லைக் கண்டு பழகுதற்குத் தமக்கு ஒரு கிழமை வாய்ப்புக் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் நினைவுகூரும் தமிழறிஞரான தமிழண்ணல் அவர்கள், “தமிழ் இலக்கணத்தையும், சங்க இலக்கியத்தையும், தமிழ் இலக்கிய வரலாற்றையும் வரன்முறைப்படுத்தி ஆங்கிலமொழி வழியாக உலகிற்கு வெளிப்படுத்தியவர்களில் கமில் சுவெலபில் குறிப்பிடத்தக்கவர்” என்கிறார். அதுபோல் தமிழுக்கு அமைந்த செவ்வியல் பண்புகளைத் தொடக்கத்தில் சான்றுகள்வழி விளக்கியவரும் அவரே எனக் கருதுகிறார் தமிழண்ணல்.

அறிஞர் நா. வானமாமலை அவர்கள் தமிழில் எழுதிய நாட்டுப்புறவியல் சார்ந்த பல கட்டுரைகளை ஆங்கிலத்திலும் செக் மொழியிலும் மொழிபெயர்த்துள்ளார் சுவெலபில். குறிப்பாக ’முத்துப்பட்டன் கதை’ பற்றி வானமாமலை அவர்கள் சரசுவதி ஏட்டில் எழுதிய கட்டுரைகளைக் கண்ட கமில் சுவெலபில், அக்கதையை உலகின் மிகச்சிறந்த கதைப்பாடல்களுள் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மதன காமராசன் கதை, மயில் இராவணன் கதை இரண்டையும் ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளார். 1987இல் வெளிவந்துள்ள இந்நூல், நம் நாட்டுப்புறக் கதைப்பாடல்களையும் இதிகாசங்கள், புராணங்களையும் உலகுக்கு நன்கு அறியத்தரும் வகையில் அமைந்திருக்கின்றது. இருளர் மொழியில் வழங்கும் கதைப்பாடல்களையும் இக்கதையுடன் இணைத்து ஆராய்ந்துள்ள சுவெலபில், தமிழ் சமஸ்கிருத மொழிகளில் கிடைக்கும் விக்கிரமாதித்தியன் கதையையும் ஆய்வுசெய்துள்ளதை அறியமுடிகின்றது.

பாரதியார் பாடல்களில் சுவெலபில்லுக்கு நல்ல பயிற்சியும் ஈடுபாடும் இருந்திருக்கின்றது. பாரதியின் இளமைக்காலம், கல்வி, காசிநகர் வாழ்க்கை, பாரதிகால இந்தியாவின் நிலை, தமிழக நிலை, பாரதியின் விடுதலை உணர்வு போன்றவற்றையும், பாரதியின் பாடல்களையும் விரிவாய் ஆராய்ந்து ’தமிழ் கல்சர்’ (Tamil culture) என்ற இதழில் சுவெலபில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரைகள் உலக மக்களுக்கு பாரதி குறித்த நல்லதோர் அறிமுகத்தைத் தந்தன.

தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ’என் சரித்திரம்’ என்னும் நூலை, ’The Story of My Life’ எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் சுவெலபில். இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ள இந்நூல் வெளிநாட்டினருக்கு உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணிகளை அறிவிக்கும் ஆவணமாகத் திகழ்கின்றது. திராவிட மொழிகளின் ஒப்பீட்டு ஒலியியல் (Comparative Dravidian Phonology), நீலகிரிப் பழங்குடி மக்களான இருளர்களின் மொழி உள்ளிட்ட நூல்கள் அவருக்கு நிலைத்த புகழைத் தேடித்தந்தன.

தமிழர்களின் பெருமிதமாகத் திகழும் வள்ளுவர்செய் திருக்குறளைச் செக் மொழியில் மொழிபெயர்த்துள்ளார் கமில் சுவெலபில் என்பது எண்ணி மகிழத்தக்கது.

இவ்வாறு நூல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என 500-க்கும் மேற்பட்ட படைப்புகளை வழங்கிய சாதனையாளர் சுவெலபில். சாகித்திய அகாதெமியின் சிறப்புக் கருத்துரையாளரகவும் அவர் இருந்துள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆய்விதழ் உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்ற பெருமைக்குரியவர் அவர்.

சுவெலபில் என்ற அவரது பெயருக்கு செக் மொழியில் ‘எதையும் சிறப்பாகச் செய்பவர்’ என்று பொருளாம். அதனை அழகுத்தமிழில் மொழியாக்கம் செய்து, ‘நிரம்ப அழகியர்’ என்ற பெயரை சுவெலபில்லுச் சூட்டினார் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரான வ. சுப்பையா பிள்ளையவர்கள்.

எதையும் சிறப்பாகச் செய்பவர் எனும் தம் பெயருக்கேற்பத் தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றி உலக அரங்கில் தமிழின் மேன்மையையும் தமிழர் பண்பாட்டின் பெருமையினையும் வெளிச்சமிட்டுக் காட்டிய செக் நாட்டு நல்லறிஞரான கமில் சுவெலபில்லின் பணிகள் தமிழராகிய நாம் அறிந்து போற்றத்தக்கவையாகும்.

இவரைப் போன்ற மேனாட்டு அறிஞர்கள் தமிழுக்குச் செய்திருக்கும் தொண்டுகளில் ஒரு சிறிதேனும் தமிழராகிய நாமும் நந்தமிழுக்கு – செந்தமிழுக்குச் செய்யவேண்டும் எனும் ஊக்கத்தை இப்பெருமகனாரின் வாழ்க்கைவழி நாம் பெறவேண்டும்!

*****

கட்டுரைக்குத் துணைநின்றவை:

https://en.wikipedia.org/wiki/Kamil_Zvelebil
https://web.archive.org/web/20090317061559/http://marketaz.co.uk/Zveleb1.html
https://tamilnation.org/literature/zvelebil.htm
http://muelangovan.blogspot.com/2008/11/17-11-1927.html
http://murugan.org/research/zvelebil.htm
https://tamilnation.org/books/literature/smileofmurugan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.