கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 26

-மேகலா இராமமூர்த்தி

பம்பை எனும் பொய்கையின் அழகு காண்போரைக் கவரவல்லது. அந்தப் பொய்கையில் முகங்காட்டிய மணமலி தாமரையும் வாசமிகு குவளை மலர்களும் இராமனுக்குச் சீதையின் திருமுகமாகவும் கண்களாகவும் காட்சியளித்து, அவளின் பிரிவுத்துயரால் புண்பட்ட அவன் மனத்திற்கு மருந்து தடவியதுபோல் சிறிது ஆறுதலளித்தன. அந்தப் பொய்கையை ஆழ்ந்துநோக்கிய இராமன், ”என் சீதையின் கண்களையும் முகத்தையும் காட்டிய பொய்கையே! அவளின் முழுவடிவத்தையும் காட்டமாட்டாயா? தம்மால் இயன்றதைச் செய்யாமல் உலோபம் செய்பவர்கள் உயர்ந்தவர்கள் ஆகமாட்டார்கள்!” என்றான்.

வண்ண நறுந் தாமரை மலரும்
     வாசக் குவளை நாள்மலரும்
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும்
     மருந்தின் தரும் பொய்காய்
கண்ணும் முகமும் காட்டுவாய்
     வடிவும் ஒருகால் காட்டாயோ
ஒண்ணும் என்னின் அஃது
     உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ. (கம்ப: பம்பை வாவிப் படலம்  – 3834)

அன்றைய இரவை பம்பைக்கு அருகிலிருந்த சோலையில் கழித்துவிட்டு, மறுநாள் சூரியன் உதித்ததும் தம் பயணத்தைத் தொடர்ந்தனர் இராமலக்குவர். காடும் மலையும் கடந்து சவரி குறிப்பிட்ட உருசியமுக மலையை அடைந்து அதன்மீது விரைவாய் ஏறினர்.

அம்மலைமீது வசித்துவந்த குரக்கினத்தரசனான சுக்கிரீவன் அப்போது அவர்களைக் கண்டான். அவர்கள் இருவரும் தன் தமையன் வாலி ஏவலால் தன்னைக் கொல்லவருகின்ற பகைவர்களே என்றெண்ணி அச்சம் கொண்டான். விரைந்தோடி அங்குள்ள குகை ஒன்றினுள் புகுந்தான். அங்கிருந்தோரும் சுக்கிரீவன் மூலமாக இந்தப் புதியவர்களின் வரவையறிந்து அச்சமுற்று ஒளிந்தனர். குரக்கினத்தாரின் அச்சத்தையும் மருட்சியையும் கண்ட அஞ்சனை மைந்தனும் சுக்கிரீவனின் அமைச்சனுமான அனுமன், அவர்களைப் பார்த்து, ”யாரும் அஞ்சற்க!
நான்போய் அவர்கள் யாரென அறிந்துவருகின்றேன்” எனக்கூறிப் புறப்பட்டான்.

தன் சொந்த உருவோடு செல்லாமல் ஒரு மாணவ பிரமசாரிபோல் மானுட வடிவெடுத்துச் சென்ற அனுமன், இராமனும் இலக்குவனும் வருகின்ற வழியில் சற்றே மறைவாக நின்று அவர்களைக் கூர்ந்து கவனித்தான்.

பிறரின் முகக்குறிப்பு க(கொ)ண்டே அவர்களின் அகத்தைப் படிக்கும் ஆற்றலாளனான அனுமன், “அறமும் நல்லொழுக்கமுமன்றிப் பிறிதொன்றையும் தம் செல்வமாகக் கொள்ளாதவராய்த் தோன்றும் இவர்கள், பெறற்கரும் அமிழ்தனைய தம் பொருளொன்றுக்கு அழிவு வந்துற்றதால் அதனையே இருமருங்கும் தேடித் துழாவுகின்றவர்களைப் போலல்லவா தோன்றுகின்றனர்!” என்று தன்னுள் எண்ணினான்.

தருமமும் தகவும் இவர் தனம்
     எனும் தகையர் இவர்
கருமமும் பிறிது ஓர் பொருள் கருதி
     அன்று அது கருதின்
அரு மருந்து அனையது இடை
     அழிவு வந்துளது அதனை
இருமருங்கினும் நெடிது
     துருவுகின்றனர் இவர்கள். (கம்ப: அனுமப் படலம் – 3859)

அவர்களையே நோக்கிக் கொண்டிருந்த அனுமனுக்கு அவர்கள்மீது இனம்புரியாத அன்பு பெருகிற்று; தம்மிடம் நேயம்கொண்டவர்களை நெடுநாட்களுக்குமுன்பு பிரிந்து மீண்டும் சந்திப்பதைப் போன்றதோர் உணர்ச்சி ஏற்பட்டு உள்ளம் உருகிற்று. அதற்குக் காரணம் விளங்காதவனாய் அவர்கள் எதிரில்சென்று நின்றான் அவன். அவர்கள் அருகில் வந்ததும் “உங்கள் வரவு நல்வரவாகுக!” என்று அவர்களை வரவேற்றான்.

அனுமனைக் கண்ட இராமன், ”நீ யார்? எவ்விடத்திலிருந்து வருகிறாய்?” என்று கேட்கவும், ”நீலநிறத்துக் கோல மேனியனே! செந்தாமரைக் கண்ணனே! யான் வாயுதேவனுக்கு அஞ்சனை வயிற்றில் பிறந்த மைந்தன்; என் பெயர் அனுமன்! இந்த உருசியமுக மலையில் எரிகதிர்ச்செல்வன் மைந்தனான சுக்கிரீவனுக்கு ஏவல்செய்து வாழ்ந்துவருகின்றேன். என் தலைவன் உங்களிருவரையும் யாரென அறிந்துவரச் சொன்னதால் இங்கு வந்தேன்” என்று தன்னைப் பற்றியும் தான் அங்குவந்த நோக்கத்தையும் இராமலக்குவருக்கு அறியத் தந்தான்.

‘புலமிக்கவரைப் புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம்’ எனும் பழமொழிக்கேற்ப அனுமனின் நயத்தகு மொழிகளால் அவனின் அறிவுக்கூர்மையை உணர்ந்த இராமன் இளவல் இலக்குவனைப் பார்த்து,

”வில்சுமந்த தோளனே! இவன் கல்லாத கலைகளும், வேதக் கடலும் உலகில் இல்லை எனும்படியாக இவனது சொல்லாற்றல் வெளிப்பட்டதல்லவா? இச்சொல்லின் செல்வன் யார்? நான்முகனா? விடைவலானான சிவனா?” என்று அனுமனை வியந்தும் நயந்தும் உரைத்தான்.

இல்லாத உலகத்து எங்கும் இங்கு
     இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே
     என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே
     யார்கொல் இச் சொல்லின்செல்வன்
வில் ஆர்தோள் இளைய
     வீர விரிஞ்சனோ விடைவலானோ. (கம்ப: அனுமப் படலம் – 3870)

பின்னர் அனுமனிடம், ”நீ குறிப்பிட்ட கவிக்குலத்து அரசனை (சுக்கிரீவன்) காணவே நாங்கள் வந்திருக்கின்றோம்; அவனிடம் எம்மை அழைத்துச் செல்வாயாக” என்றான். அதுகேட்ட அனுமன், உம்மையொத்த உத்தமர்கள் சுக்கிரீவனைக் காணவிரும்புதல் அவனுடைய செய்தவமே!” என்று மகிழ்ந்துரைத்துவிட்டு,

”இரவியின் புதல்வனான சுக்கிரீவன், இந்திரன் புதல்வனாகிய இரக்கமற்ற வாலி துரத்தியதால் அஞ்சி இந்த மலையில் தஞ்சம் புகுந்திருக்கின்றான்; நீங்கள் இங்கு வந்தமையால் அவன் இழந்த செல்வத்தை மீண்டும் அடைவான்” என்றான் நம்பிக்கையோடு. வாலிக்கும் சுக்கிரீவனுக்குமிடையே இருக்கும் மனவேறுபாட்டை நுட்பமாய் வெளிப்படுத்தும் வகையில் வாலியைச் சுக்கிரீவனின் அண்ணன் என்றுரைக்காது இந்திரன் புதல்வன் என்றுரைக்கின்றான் அனுமன்.  

தொடர்ந்தவன்…”ஐயன்மீர்! எம் தலைவன் சுக்கிரீவனிடம் உங்கள் இருவரையும் பற்றிச் சொல்ல விழைகின்றேன். உங்களை யார் என்று நான் அவனிடம் விளம்பவேண்டும்? சொல்லுங்கள்! என்று பணிவோடு வினவித் தன் மதிநுட்பத்தை மீண்டும் நிரூபித்தான். 

அப்போது இலக்குவன் இராமனின் வரலாற்றை அனுமனிடம் உரைக்கலானான். ”அறிவும் செங்கோல்திறமும் உடைய அயோத்தி மன்னன் தயரதனின் புதல்வன் இந்த ஆண்தகை. அன்னையின் ஏவலால் தனக்கு உரிமையான அரசச் செல்வத்தைத் தம்பிக்கு நல்கிவிட்டுக் கானம்சேர்ந்த இவன்பெயர் இராமன். நான் இவனுக்கு ஏவல் செய்யும் அடியவன்” என இராமனின் பிறப்புத் தொடங்கி இராவணனின் கீழ்த்தரமான புன்செயலால் அவன் மனைவி சீதை காணாமற்போனது வரை அனைத்தையும் சொல்லி முடித்தான் இலக்குவன்.

செப்பருங்குணத்து இராமனின் பெருந்தன்மையையும் நல்லொழுக்கத்தையும் அறிந்து அவன் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் மாணி உருவில் இருந்த மாருதி (அனுமன்). நீ என் காலில் வீழ்தல் முறையில்லை என்று தடுத்த இராமனிடம், நானும் அரிக்குலத்தை (குரக்கினம்) சேர்ந்தவனே என்றுரைத்த அனுமன், தன் சொற்களை மெய்ப்பிக்கும் வகையில் மின்னலைப் போன்ற ஒளிமிகு தோற்றத்தினராகிய தயரத புதல்வர்கள் வியப்புறும்வண்ணம், வேத முதலாகிய சாத்திரங்களே வடிவெடுத்தது வந்ததோ எனும்படியாகவும் பொன்மயமான மேருமலையும் தன் தோள்களுக்கு ஒப்பாகாது எனும்வகையிலும் பேருருக்கொண்டு (விஸ்வரூபம்) நின்றான்.

மின்உருக் கொண்ட வில்லோர்
     வியப்புற வேத நல் நூல்
பின் உருக்கொண்டது என்னும் பெருமை
     ஆம் பொருளும் தாழ
பொன் உருக் கொண்ட மேரு
     புயத்திற்கும் உவமை போதாத்
தன் உருக்கொண்டு நின்றான்
     தருமத்தின் தனிமை தீர்ப்பான். (கம்ப: அனுமப் படலம் – 3883)

தருமத்தின் வடிவினராய்த் திகழுகின்ற இராமலக்குவரின் தனிமையைத் தீர்க்கவந்தவன் ஆகையால் அனுமனைத் ’தருமத்தின் தனிமை தீர்ப்பான்’ என்று ஈண்டு விதந்தோதுகின்றார் கம்பநாடர்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.