அப்பா

பாஸ்கர் சேஷாத்ரி

கொஞ்சம் கொஞ்சமாக அப்பா போலாகிக்கொண்டு இருக்கிறேன் .
அவரைப் போல, வருவோர் போவோரை ஓரக்கண்ணால்
பார்க்கிறேன்
சம்பந்தமில்லாமல் அவ்வப்போது ம்ம் கொட்டுகிறேன்
எட்டாங்கிளாஸ் இங்கிலீஷ் எவனுக்கு வருமென்கிறேன்
பேரனிடம் அவன் அப்பனை வளர்த்த கதை சொல்கிறேன்
மருமகள் எனினும் தம்பெண் போலுண்டா என்கிறேன்.
அவரைப்போலக் காபி குடித்து டபராவை வைக்கிறேன்
ஒரு காதைக் கூர்ப்பாக்கி, தலை சாய்த்துக் கேட்கிறேன்
இட்ட உணவை அவர் போல மிச்சமின்றி வைக்கிறேன்
பலமிழிந்த கால்களுடன் அவர் போல நடக்கிறேன்
வெற்றிலையும் பாக்கும் வாழ்க்கை என நினைக்கிறேன்
சுவரோர மூலையைச் சொர்க்கமென நினைக்கிறேன்
போதுமிந்த வாழ்வுன விடுதலைக்கு ஏங்குகிறேன்
ஆனாலும் என்ன செய்ய-தூங்கிய பின் விழிக்கிறேன்.

About பாஸ்கர்

நான் சென்னை வாசி . ஆனால் வாசிப்பதில்லை . தொலை காட்சி தான் வாழ்க்கை . படித்தது பட்டம் . எல்லாம் மறந்து விட்டது . வயது அம்பத்து நான்கு . சு ரவி வாழ்ந்த மயிலை எனக்கு மூச்சு . கிரேசி மோகன் வாழும் மந்தவெளி எனக்கு சிந்து வெளி . சொந்தமாய் தொழில் . போட்டியான வாழ்க்கை . சிவாஜி பிடிக்கும் . மெல்லிசை மன்னர் என்றால் உயிர் . சுஜாதா எனக்கு பக்கத்து தெரு . பாலகுமாரன் கூப்பிடு தூரத்தில் . மணமானவன் . மனைவி தனியார் நிறுவனத்தில் பணி . விளக்கேற்றுவது நான் தான் ஒரு மகன் . கல்லூரியில் . கர்நாடக சங்கீதம் பயின்று கச்சேரியும் செய்து வருகிறான் .எழுத்து எனக்கு பிடிக்கும் .

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க