கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 24

0

-மேகலா இராமமூர்த்தி

பன்னசாலையில் சீதையைக் காணாது இராமனும் இலக்குவனும் கலங்கி நின்ற வேளையில் தரையில் தெரிந்த தேர்ச்சக்கரச் சுவடுகளைச் சுட்டிக்காட்டிய இலக்குவன், இவற்றை நாம் பின்தொடர்ந்து செல்வோம் என்று கூறவே இராமனும் அக்கருத்தை ஏற்று இலக்குவனோடு அச்சுவடுகளைத் தொடர்ந்து சென்றான். ஆனால் சற்றுத் தூரத்திலேயே அச்சுவடுகள் காணாமல் போய்விட்டதைக் கண்டு திகைத்தனர் இருவரும்.

”இனி நாம் என்ன செய்வது இளவலே?” என்று இராமன் வருந்த, ”அண்ணா! தேர்ச்சுவடு மறைந்தால் என்ன…தேர் தெற்கு நோக்கித்தான் சென்றிருக்கின்றது என்பதை நாம் அறிந்துகொண்டுவிட்டோம் அல்லவா? ஆதலால், தென் திசையிலேயே தொடர்வோம் நம் தேடலை” என்றான் இலக்குவன்.

இருவரும் தெற்குநோக்கித் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். சற்றுத் தூரத்தில் வீணைக்கொடி முறிந்துகிடப்பதைக் கண்டனர். மேலும் சிறிது தூரம் சென்றதும் பெரிய வானவில்லைப் போன்றதும், கடலின் ஓங்கிய அலைபோல் தோற்றமளிக்கக்கூடியதுமான கொடிய வில்லொன்று முறிந்து கிடப்பதைக் கண்டனர். இவற்றையெல்லாம் முறித்தெறிந்தவன் சடாயுவாகவே இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவர்கள் தொடர்ந்து அப்பாதையில் பயணித்தனர். அங்கே அம்பறாத்தூணி, மார்புக் கவசம் என மேலும் பல பொருள்கள் உடைந்து கிடப்பதைக் கண்டனர். இன்னும் சற்றுத் தொலைவில் குண்டலங்களும் தோள்வளைகளும் சிதறிக் கிடப்பதைக் கண்ட இராமன், நம் தந்தையாகிய சடாயுவோடு சிங்கம்போன்ற வலிகொண்ட பலர் போர் புரிந்திருக்கவேண்டும் எனும் தன் ஐயத்தை வெளிப்படுத்தினான். அதனை மறுத்த சுமித்திரையின் சிங்கமான இலக்குவன், இங்கே சிந்தியுள்ள குண்டலங்களும் தோள்வளைகளும் தருபோல் நீண்ட தோள்களும் பல தலைகளும் கொண்ட இராவணனுடையவையாகவே இருக்கவேண்டும். நம் தந்தை சடாயுவோடு பொருது சீதையை நெடுந்தொலைவு கொண்டுபோனவன் அவனாகவே இருத்தல் கூடுமெனத் தீர்மானமாக உரைத்தான்.

திருவின் நாயகன் உரைசெய
     சுமித்திரை சிங்கம்
தருவின் நீளிய தோள் பல
     தலை பல என்றால்
பொருது தாதையை இத்தனை
     நெறிக் கொடு போனான்
ஒருவனே அவன் இராவணன் ஆம்
     என உரைத்தான். (கம்ப: சடாயு உயிர்நீத்த படலம் – 3594)

இராமன் மனக்கலத்தோடு எதனையும் தெளிவாகச் சிந்திக்கவியலாது தடுமாறும் தருணங்களிலெல்லாம் இலக்குவன் புத்திக்கூர்மையோடு சிந்தித்துக் கருத்துக்களை வெளிப்படுத்துவதை இராமகாதையில் நாம் பல இடங்களில் காணமுடிகின்றது. முன்பு மாய மானை இராமன் துரத்திச்செல்ல முற்போட்டபோது, இஃது அரக்கனின் மாயை; உண்மையான மானில்லை என்று சரியாகக் கணித்துரைத்ததையும், மாரீசன் இராமன் குரலில் ஓலமிட்டபோது அதனை இராமன் குரலென்றெண்ணிச் சீதை மனங்கலங்கியபோது, இஃது இராமனின் குரலன்று; மாரீசனின் குரலே என்றுரைத்துச் சீதையைத் தேற்றியதையும் போலவே இப்போதும் சடாயுவோடு போரிட்டவர் பலரல்லர்; இராவணன் ஒருவனே என்று துல்லியமாகக் கணித்துரைக்கின்றான் நுண்மாண்நுழைபுலம் மிக்க இலக்குவன்.

போரிட்ட சடாயுவின் நிலையறிய எண்ணிய இராமனும் இலக்குவனும் அவ்வழியே விரைந்தனர். ஆங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை மருளச் செய்தது. இராவணனோடு போரிட்டுப் புண்பட்டதால் உடலிலிருந்து குருதியானது கடல்போல் வழிய அதிலே மந்தர மலையெனக் கிடந்தான் சடாயு. அவன்நிலை கண்டு நெஞ்சழிந்து கண்ணீர்சொரிந்த இராமன், அஞ்சனமலையென அவன்மேல் வீழ்ந்து மூர்ச்சித்தான். இலக்குவன் இராமன்மீது நீர்தெளித்து அவனை மூர்ச்சை தெளிவித்தான்.

தன்னால்தான் இத்தனை அவலங்களும் நேர்ந்தன என்றெண்ணித் தன்மீதே கோபமும் வெறுப்பும்கொண்ட இராமன், ”நெடுமரம்போல் வளர்ந்து நிற்கின்ற என்னால் யாருக்கும் எப்பயனும் இல்லை; இந்த இழிபிறப்பை நான் விரும்பவில்லை” என்று கழிவிரக்கத்தோடு புலம்பத் தொடங்கினான்.

சிறிதே உணர்வு வரப்பெற்ற புள்ளரசன் சடாயு, மெள்ளக் கண்விழித்தான். தன்னருகில் இராம இலக்குவர் இருப்பதைக் கண்டு இற்றுப்போன தன் சிறகுகளை மீண்டும் பெற்றவன்போல் மகிழ்ந்தான்; இருவரையும் அன்போடு உச்சிமோந்தான்.

”வஞ்சனையால்தான் இராவணன் சீதையைக் கவர்ந்து வந்திருக்கவேண்டும் என்று என் மனம் சொல்லிற்று. ஆற்றல் பொருந்திய நீவிர் இருவரும் அருந்ததி அனைய கற்பினாளை, அஞ்சொல் மயிலைத் தனியே விட்டுச் சென்றீரா?” என்று வருத்தத்தோடும் ஒரு தந்தையின் பொறுப்புணர்வோடும் இருவரையும் கடிந்துகொண்டான் சடாயு. இது முன்னமே தெரிந்திருந்தால் நான் இன்னும் சற்று விழிப்போடிருந்து சீதையைக் காத்திருப்பேனே என்ற சடாயுவின் உளக்குறிப்பு இதில் ஒளிந்திருக்கக் காண்கின்றோம்.

வஞ்சனையால் வந்த வரவு
     என்பது என்னுடைய
நெஞ்சகமே முன்னே நினை
     வித்தது ஆனாலும்
அம் சொல் மயிலை
     அருந்ததியை நீங்கினிரோ
எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும்
     என்று உரைத்தான். (கம்ப: சடாயு உயிர்நீத்த படலம் – 3606)

நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் சடாயுவுக்கு விளக்கினான் இலக்குவன். அதைக் கேட்ட சடாயு, இராம இலக்குவரைத் தேற்றும்பொருட்டு, ”ஊழ்வினையின் பயனால் நமக்கு நேரும் இன்ப துன்பங்களை நாம் விலக்கிவிட முடியாது. வில்வீரனே! சீதையின் பிரிவு தேவர்களின் துன்பம் தீர்தற்பொருட்டு ஏற்பட்டதேயாகும் என எண்ணுகின்றேன். மாவடுவைப் பிளந்ததுபோன்ற கண்களையும் நீண்ட கூந்தலையும் கொண்ட சீதையை இராவணன் நிலத்தோடு பெயர்த்துத் தூக்கிச் செல்வதைக் கண்ணுற்ற நான், என்னால் ஆனமட்டும் பலங்கொண்டு அதனைத் தடுத்தேன். இறுதியில் அரன் தந்த சந்திரகாசம் எனும் வாளால் அவன் என்னை வெட்டிவீழ்த்தவே ஈண்டு வீழ்ந்துவிட்டேன்” என்றுரைத்து வருந்தினான்.

அதைக் கேட்டதும் இராமனின் சினம் எல்லை கடந்தது. தனியாக இருந்த பெண்ணொருத்தியை அறிவற்ற அரக்கன் ஒருவன் தூக்கிச்செல்லும்போது அதனைத் தடுப்பதற்கு ஏதும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்த எட்டுத் திசைகளையுடைய உலகங்களையும் தேவர்களையும் இப்போதே ஒழித்துக்கட்டுகின்றேன் என்று கர்ஜித்தான்.

இராமனின் சினமொழிகளைக் கேட்டு வெஞ்சுடர்க் கடவுளான கதிரவன் மலைக்குப்பின் அஞ்சி மறைந்தான். திக்குகளிலுள்ள யானைகள் ஓடி ஒளிந்தன. இராமனின் கடுங்கோபம் கண்டு வீரத்திருமகன் இலக்குவனே சற்று நடுக்கம் கொண்டான்.

ஆனால் சடாயுவோ இராமனின் கருத்தை மறுத்து, ”இராமா! செங்கையில் வில்லேந்திய நீங்கள் இருவரும் கச்சணிந்த வஞ்சியாள் சீதையை வனத்திடை தனியேவிட்டு மானின் பின்னேபோய் உங்கள் குலத்துக்கே பெரும்பழி கூட்டிக்கொண்டீர்கள். எனவே, இஃது உங்கள் குற்றமேயன்றி உலகோரின் குற்றமன்று!” என்று இடித்துரைத்தான்.

வம்பு இழை கொங்கை வஞ்சி
     வனத்திடைத் தமியள் வைகக்
கொம்பு இழை மானின் பின் போய்
     குலப் பழி கூட்டிக் கொண்டீர்
அம்பு இழை வரிவில் செங்கை
     ஐயன்மீர் ஆயும்காலை
உம்பிழை என்பது அல்லால் உலகம்
     செய் பிழையும் உண்டோ. (கம்ப: சடாயு உயிர்நீத்த படலம் – 3627)

தந்தையை ஒத்த சடாயுவின் பொருள்பொதிந்த சொற்கள் பொங்கிய பாலில் தெளித்த நீரென இராமனின் சினத்தை உடனே அடக்கின. ”ஆம்! பிழையை நான் செய்துவிட்டு மற்றவரை நோவதென்ன?” என்று சிந்தித்தவன், அரக்கரை அழித்துச் சீதையை மீட்டலே இனிச் செய்யவேண்டியது என்று முடிவுசெய்தவனாய்ச் சடாயுவை நோக்கி, ”தந்தையே! உன் சொற்களை ஏற்று நடப்பது என் கடன்; இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றது எங்கே என உரைப்பாய்?” என்று வினவ, கடுமையாய்ப் புண்பட்டு உணர்வு குன்றியிருந்த சடாயு பதிலேதும் சொல்லாமல் உயிரை விட்டான்.

”என்னைப் பெற்ற தந்தையும் இறந்தான்; கானகத்தில் நான் உற்ற தந்தையும் இறந்தான்” என்று வேதனையோடு விளம்பிய இராமன், சடாயுவுக்கு ஒரு மகனைப்போல் ஈமக் கடன்கள் செய்தான். இராமகாதையில் இராமன் கைகளால் நீர்க்கடன் செய்யப்பெறும் பேறு அவனைப் பெற்ற தந்தையான தயரதனுக்குக் கிட்டவில்லை. ஆனால் எங்கோ ஒரு காட்டில் வாழ்ந்துவந்த பறவையான சடாயுவுக்குக் கிடைக்கின்றது என்பதை அறியும்போது ஊழின் போக்கை நாம் வியக்கத்தான் வேண்டியிருக்கின்றது.

இரவு வந்தது! அது துயரத்தையும் உடன் அழைத்து வந்தது. தான் இல்லாத சமயத்தில் சீதையை இராவணன் கவர்ந்து சென்றதால் ஏற்பட்ட அவமானமும், சீதை மீதான காதலும் மாறிமாறித் துன்புறுத்த, வலிமைமிகு இரு யானைகள் இழுப்பதனால் நைந்து அறுந்துவிடும் நிலையிலுள்ள ’தேய்புரிப் பழங்கயிறு’ போலானது இராமனின் அவலநிலை.

நீண்ட இரவு விடைபெற்றுப் போக, பொழுது புலர்ந்தது; பூக்கள் மலர்ந்தன! காளையர் இருவரும் காடுகளையும் மலைகளையும் கடந்து காரிகையாள் சீதையைத் தேடும் படலத்தைத் தொடர்ந்தனர்.

நீண்ட நடைக்குப் பிறகு ஏற்பட்ட களைப்பைப் போக்க இலக்குவனை நீர் கொணரப் பணித்தான் இராமன். நீர்தேடிச் சென்ற இளவலைக் கண்டாள் அயோமுகி எனும் அரக்கி. அவளுக்கு அவன்மீது ஆசை பிறந்தது. பாம்புகளைக் கை வளையல்களாகவும், யாளிகளையே தாலியாகவும் அணிந்த அவள் இலக்குவன் அருகில்வந்து, எந்த ஆடவனும் தொடாத கன்னியாகிய என்னை ஏற்றுக்கொள் எழில்வீரனே என்று கெஞ்சுகின்றாள். அவன் வழக்கம்போலவே அதற்கு மசியாததால் ’மோகனை’ எனும் வசியவித்தை செய்து அவனை வானில் தூக்கிச் சென்றாள்.

இலக்குவனைத் தூக்கிச்சென்ற அயோமுகி, மந்தரமலையைத் தூக்கிச் செல்லுகின்ற கடல்போலவும், இந்திரன் ஊர்ந்துசெல்லுகின்ற பெண்யானை போலவும், முருகன் ஊர்கின்ற மயில்போலவும் விளங்கினாள் என்று மூன்று உவமைகள்வழி கற்பனை நயந்தோன்ற அக்காட்சியை விளக்குகின்றார் கம்பர்.

மந்தரம் வேலையில் வந்ததும் வானத்து
இந்திரன் ஊர் பிடி என்னலும் ஆனாள்
வெந் திறல் வேல் கொடு சூர் அடும் வீரச்
சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள்.
(கம்ப: அயோமுகிப் படலம் – 3701)

இங்கே மந்தரமலை, இந்திரன், முருகன் ஆகியவை இலக்குவனுக்கு உவமைகள். மலையைச் சுமக்கின்ற கடல், இந்திரன் ஊர்கின்ற பெண் யானை, முருகன் ஊர்கின்ற மயில் ஆகியவை அயோமுகிக்கு உவமைகள்.

நேரம் நீண்டது; நீர்கொணரச் சென்ற இளவலோ மீண்டானில்லை. இராமனின் உள்ளத்தில் அது கலக்கத்தை விளைவித்தது.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *