Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • பாரதத்துக்குப் பெருமை சேர்த்த வீரத் துறவி!

    பாரதத்துக்குப் பெருமை சேர்த்த வீரத் துறவி!

    -மேகலா இராமமூர்த்தி

    கொல்கத்தாவிலுள்ள சிம்லா நகரைச் சேர்ந்த புகழ்பெற்ற வழக்கறிஞரான விஸ்வநாத தத்தர், புவனேஸ்வரி தேவி இணையருக்குத் தவப்புதல்வராய், 1863ஆம் ஆண்டு, ஜனவரி 12இல் பிறந்தவர் நரேந்திரநாத் தத்தா எனும் இயற்பெயர் கொண்ட சுவாமி விவேகானந்தர். இளமையில் நரேன் என்ற பெயரில் அவர் அனைவராலும் அழைக்கப்பட்டார்.  

    குழந்தைப்பருவத்திலேயே மிகச் சிறந்த நினைவாற்றல் கொண்டவராக விளங்கினார் நரேன். சிறுவயதிலிருந்தே அவருக்கு தியானத்தின்மீது மிகுந்த நாட்டம் இருந்தது. பகுத்தறிவுடனேயே எதனையும் அணுகும் போக்கு இயல்பாகவே அவரிடம் அமைந்திருந்தது.

    நரேன் சிறுவனாக இருந்தபோது நடந்த நிகழ்விது…

    நரேனின் தந்தை புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த காரணத்தால் அவர்கள் வீட்டுக்குப் பலரும் வருவார்கள்; போவார்கள். அவர்களிடமெல்லாம் சிறுவன் நரேன், எவ்வித வேறுபாடுமின்றிக் கலந்து பழகுவார். வங்காள வழக்கப்படி அவர்கள் புகைக்க புகையிலை அல்லது ஹூக்கா (Hookah) தயாரித்துக் கொடுப்பார். அங்குவரும் பல்வேறு சாதியினரும் புகைப்பிடிக்கத் தனித்தனிக் குழாய்கள் இருந்தன. சாதி என்பது நரேனுக்கு அப்போது புரியாத புதிராகவே இருந்தது.

    “ஏன் ஒவ்வொரு சாதியினருக்கும் புகைப்பதற்குத் தனித்தனிக் குழாய்கள்? ஒருவர் புகைத்ததில் இன்னொருவர் புகைத்தால் குழாய் வெடித்துவிடுமா?” என்றெல்லாம் எண்ணமிட்டபடி இருப்பார். இதைச் சோதித்து அறிய, எல்லாக் குழாய்களின் மூலமாகவும் ஒருமுறை புகையிழுத்துப் பார்த்தார். ஒன்றும் ஆகவில்லை! அப்போது அங்குவந்த அவருடைய தந்தையார் ”என்னப்பா செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்க, ”ஒன்றுமில்லை…சாதிப் பிரிவினைகளை உடைத்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன்!” என்றாராம் சிறுவன் நரேன். அவருடைய தந்தை சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாராம்.

    பள்ளிப்படிப்பை முடித்த நரேன், கொல்கத்தாவிலிருந்த மாநிலக் கல்லூரியில் ஓராண்டு காலம் படித்தார். அடுத்த ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) சேர்ந்தார். அந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள் நரேனின் அறிவுக்கூர்மையைக் கண்டு வியந்தனர். கல்லூரி முதல்வரான ஹேஸ்டி (William Hastie) நரேனைப் போன்றதொரு மாணவனை நான் பார்த்ததே இல்லை என்று பாராட்டினார்.

    உயர்ந்த கருத்துக்கள் குறித்துத் தம் நண்பர்களிடமும் தம்மைவிட வயதில் பெரியவர்களிடமும் விவாதம் செய்வது நரேனின் வழக்கம். தர்க்கரீதியான வாதங்களை முன்வைப்பதிலும் நரேனுக்கு இணை அவரே. இந்தக் காலக்கட்டத்தில் சமயம் தொடர்பான விஷயங்களில் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. எனவே பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தார். ”இறைவன் என்றொருவன் இருக்கின்றானா? இல்லையா? இருக்கின்றான் என்றால் யாரேனும் அவனைப் பார்த்திருக்கிறார்களா?’ என்பன போன்ற வினாக்கள் அவர் மனத்தில் எழத்தொடங்கின. அவை குறித்தே அல்லும் பகலும் சிந்திக்கலானார். தம் வினாக்களுக்கு விடைதேடி, அறிஞர்கள் பலரை அணுகியும் நிறைவான விடை அவருக்குக் கிடைக்கவில்லை.

    அப்போது தம்முடைய ஆசிரியர் ஹேஸ்டியின் மூலம் கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள தக்ஷிணேஸ்வரத்தில் அமைந்துள்ள காளிகோயிலின் பூசாரியான இராமகிருஷ்ணரைப் பற்றிக் கேள்விப்பட்ட நரேன், அவரைத் தம் நண்பர்களுடன் சென்று சந்தித்தார். நரேனைத் தனியறைக்கு அழைத்துச்சென்ற இராமகிருஷ்ணர் நீண்ட பிரிவுக்குப் பின் நெருங்கிய நண்பரைச் சந்திப்பதுபோல் நரேனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். தம் கையாலேயே நரேனுக்கு இனிப்புகள் ஊட்டிவிட்டார். இராமகிருஷ்ணர் நரேனைத் தொட்டதும் முற்றிலும் புதியதோர் அனுபவத்தை அடைந்தார் நரேன்.

    இராமகிருஷ்ணர் நரேன்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தம்மை நாடிவரும் பிற பக்தர்களிடம் நரேனைப் பற்றிப் பேசும்போது, ”பக்தர்கள் எல்லாரும் நட்சத்திரத்தைப் போன்றவர்கள்; ஆனால் நரேன் சூரியனைப் போன்றவன். அவன் ஒரு முக்தியடைந்த ஆன்மா; பிறருக்கு உதவுவதற்காகவே பிறவியெடுத்தவன்” என்று பெருமிதத்தோடு குறிப்பிடுவார்.

    1884ஆம் ஆண்டு தொடக்கத்தில் நரேனின் தந்தையான விஸ்வநாத தத்தர் மறைந்தார். நரேனின் வாழ்வில் அஃது ஒரு சோதனையான காலக்கட்டமாக அமைந்தது. அப்போது, இராமகிருஷ்ணரும் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஆகவே தம் எதிர்காலப் பணிகளை மேற்கொள்ள அவர் நரேனைத் தயார்செய்ய ஆரம்பித்தார். 1886ஆம் ஆண்டு ஆகஸ்டு 16ஆம் நாள் இராமகிருஷ்ணர் மறைந்தார். துக்கத்தில் ஆழ்ந்த நரேன் உள்ளிட்ட இராமகிருஷ்ணரின் சீடர்கள் சில காலம் கழித்துச் காசிப்பூர் எனும் ஊரில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து மடம் அமைத்தனர். அதுதான் இராமகிருஷ்ண இயக்கத்தின் முதல் மடமாகும்.

    அந்த இளஞ்சீடர்கள் முறையாகத் துறவறம் மேற்கொண்டு புதிய பெயர்களை ஏற்றனர். ஆனால் நரேன் தனக்கென்று பெயர் எதனையும் அப்போது வைத்துக்கொள்ளவில்லை. ஒரே இடத்தில் தங்கியிருக்க விரும்பாமல் காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் அவர் பயணம் மேற்கொண்டார்.

    ஒரு சமயம் மவுண்ட் அபுவில் (Mount Abu) கேத்திரி (Khetri) சமஸ்தான மன்னர் அஜித் சிங்கைச் சந்தித்தார் நரேன். மன்னரின் விருப்பத்திற்கிணங்க கேத்திரிக்குச் சென்றார். நரேனிடம் ஈடுபாடுகொண்ட மன்னர் அஜித் சிங், நரேனின் சீடரானார்.  பின்பு அங்கிருந்து புறப்பட்ட நரேன் மைசூர் வந்தார்; அங்கிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர ரகுநாத சேதுபதியைச் சந்தித்தார். நரேனின் அறிவாற்றலைக் கண்டு வியந்த பாஸ்கர சேதுபதியும் நரேனின் சீடரானார்.

    அப்போது அமெரிக்காவில் நடைபெறவிருந்த அனைத்துச் சமய மாநாட்டை (Parliament of the World’s Religions) பற்றிய தகவலறிந்தார் நரேன். அதில் தாம் கலந்துகொள்ள வேண்டும் என்பது தம்முள் நிறைந்திருக்கும் குருதேவர் இராமகிருஷ்ணரின் விருப்பம் என்பதை உணர்ந்த அவர், அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். இராமநாதபுரத்திலிருந்து குமரிக்கும் அங்கிருந்து சென்னைக்கும் பயணம் மேற்கொண்டார். அங்கே துடிப்புமிக்க இளைஞர்கள் பலர் அவரைப் பின்பற்றத் தயாராக இருந்தனர். அவர்கள் மத்தியில் சொற்பொழிவுகள் ஆற்றினார். அவர் அமெரிக்கா செல்வதற்கு அவ்விளைஞர்கள் நிதி திரட்டத் தொடங்கினர்.

    அதே சமயம் கேத்ரி மன்னர் அஜித் சிங்கின் அழைப்பு வந்தது நரேனுக்கு. அமெரிக்கப் பயணத்திற்கான பயணச்சீட்டு வாங்குவது முதற்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்தார் மன்னர். ‘விவேகானந்தர்’ என்ற பெயரை நரேனுக்குப் பரிந்துரைத்தவரும் அவரே. அதுமுதல் நரேன் விவேகானந்தர் ஆனார். பின்னர் அந்தப் பெயரிலேயே தம் வாழ்நாள் முழுவதும் அவர் அழைக்கப்பட்டார்.

    1893ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி சிகாகோ மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பம்பாயிலிருந்து கப்பலில் பயணமானார்  விவேகானந்தர். கப்பல் கனடாவின் வான்கூவர் (Vancouver) நகரை அடைந்தது; அங்கிருந்து தொடர்வண்டி மூலம் சிகாகோவை அடைந்தார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் திங்கட்கிழமை அனைத்துச் சமயங்களின் மாநாடு சிகாகோவில் தொடங்கியது. ஹால் ஆப் கொலம்பஸ் (Hall of Columbus) எனும் பெரிய கட்டடத்தில் அது நடாத்தப்பட்டது.

    அஃது ஒரு மாபெரும் நிகழ்ச்சியாதலால் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்தது. விவேகானந்தரின் நெஞ்சு இனந்தெரியாத உணர்ச்சியால் அப்போது படபடத்தது. எனவே மாநாட்டுத் தலைவர் அவரைப் பேசப் பலமுறை அழைத்தும் தயக்கத்துடன் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் விவேகானந்தரைக் கேட்காமலேயே அவர் பெயரை மேடையில் அறிவித்துவிட்டார் தலைவர். இனி ஒன்றும் செய்யமுடியாது; பேசித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் பேச எழுந்தார் விவேகானந்தர்.

    அரங்கிலிருந்தவர்களைப் பார்த்தார். ”அமெரிக்கச் சகோதரிகளே! சகோதரர்களே…!” என்று பேச்சைத் தொடங்கினார். அவரால் அந்த வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. எப்போதும் “Ladies and Gentlemen!” என்ற விளிப்பையே கேட்டுப் புளித்துப் போயிருந்த மேற்குலக மக்களின் செவிகளுக்கு அவ்வாஞ்சையான அழைப்பு ஓர் பரவசத்தை ஏற்படுத்திவிட்டது. உணர்ச்சிவயப்பட்டவர்களாய் மக்கள் கைதட்ட ஆரம்பித்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் எழுந்துநின்று உற்சாக ஆரவாரமும் வாழ்த்தொலியும் எழுப்பியதால் அவை அடங்கப் பல நிமிடங்களாயின!

    அனைவரும் அமைதியானதும் விவேகானந்தர் கம்பீரமாகத் தம் பேச்சைத் தொடங்கினார். ”எல்லா மதங்களும் உண்மையே! எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே இந்து மதத்தின் கொள்கை” என்ற கருத்தை முன்வைத்தார் அவர். மாநாட்டுக்கு வந்திருந்த மற்ற சொற்பொழிவாளர்கள் அனைவரும் தத்தமது மதத்தைப் பற்றி மட்டுமே பேசினர். ஆனால் விவேகானந்தரோ அனைத்து மதங்களில் இருக்கும் உண்மைகளையும் மதக் காழ்ப்பின்றிப் பேசினார்.

    கிறித்தவப் பார்வையாளர்கள் மிகுதியும் கலந்துகொண்ட, பதினேழு நாள்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற, அந்தச் சமய மாநாட்டில் செப்டம்பர் 20 அன்று விவேகானந்தர் முன்வைத்த சில துணிச்சலான கருத்துக்களாவன:

    ”கிறித்தவர்களாகிய நீங்கள் நல்ல விமரிசனங்களை ஏற்றுக்கொள்ளும் இயல்புடையவர்களாகையால் என்னுடைய சிறிய விமரிசனத்தைத் தவறாகக் கருதமாட்டீர்கள் என்றெண்ணி உங்கள்முன் வைக்கின்றேன். நீங்கள் உங்கள் மதத்தைப் பரப்பும் நோக்கில் இந்தியாவுக்கு மதபோதகர்களை ஆர்வத்தோடு அனுப்புகிறீர்கள்! ஆனால் எம் மக்களோ அங்கே கொடும் பஞ்சத்திலும் கடும் பசியிலும் துடித்து ஆயிரக்கணக்கில் மடிந்துகொண்டிருக்கின்றார்கள்.

    அவர்களின் பசிபோக்கவும் பஞ்சம்நீக்கவும் நீங்கள் எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, இந்தியாவெங்கும் தேவாலயங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களுக்குத் தேவை பசிதீர்க்கும் உணவு; ஆனால் நீங்கள் தருவதோ பயனற்ற கற்களை! பசியில் துடித்துக்கொண்டிருப்பவனிடம் மதபோதனை செய்வதைவிடவும் பெரிய குற்றம் வேறெதுவுமில்லை; பஞ்சத்தில் அடிபட்டு நெஞ்சுவெந்து கொண்டிருப்பவனிடம் தத்துவத்தைப் போதிப்பதைவிடப் பேரவலம் வேறெதுவுமில்லை!

    ஐயன்மீர்! எங்கள் இந்தியாவில் போதுமான மதங்கள் ஏற்கனவே இருக்கின்றன. எனவே எங்களுக்கு மதம் தேவையில்லை. ஆதலால் எங்கள் ஆன்மாவுக்கு நீங்கள் நல்வழிகாட்ட முயல்வதைவிட எங்கள் வயிற்றுப்பசிக்கு உணவிடுதலே உடனடித் தேவையும் நல்ல சேவையுமாகும். நான் இங்குவந்ததுகூட ஏழ்மையில் துயருறும் எம் மக்களுக்கு உங்களிடம் உதவி வேண்டித்தான்! ஆனால் கிறித்தவ பூமியில் வாழுகின்ற கிறித்தவர்களிடம் எம் இந்திய மக்களுக்கு உதவிபெறுவது எத்துணைக் கடினமானது என்பதையும் நான் உணர்ந்தே இருக்கின்றேன்!” என்று மொழிந்துவிட்டு இந்திய வேதாந்தக் கருத்துக்கள் குறித்துப் பேசலானார்.

    பத்திரிகைகள் அவரது உரைகளை வெகுவாய்ப் புகழ்ந்து எழுதின. சிறந்த பேச்சாளர் ஒருவருக்கு இருக்கவேண்டிய வெண்கலக்குரல், மொழிவளம், சிந்தனைகளை அழகாய் வகைப்படுத்தி அடுக்கும் திறம் ஆகியவற்றோடு கம்பீரத் தோற்றமும் கொண்டிருந்த இளந்துறவி விவேகானந்தர் உலகம் விரும்பும் பேச்சாளராக மிளிர்ந்ததில் வியப்பேதுமில்லை.

    மாநாடு முடிந்த பின்னர், மக்களின் அழைப்பிற்கிணங்க அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சொற்பொழிவுகள் ஆற்றினார் அவர். 1895 செப்டம்பரில் இங்கிலாந்து சென்றார். அங்கும் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவருக்கு நண்பர்களும் சீடர்களும் பெருகினார்கள்.  அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மார்கரெட் எலிசபெத் நோபில் (Margaret Elizabeth Noble) எனும் இளம்பெண். இவர்தாம் பின்னாளில் ’சகோதரி நிவேதிதை’யாக (Sister Nivedita) புகழ்பெற்றவர். மகாகவி பாரதியின் ஞானகுருவாக விளங்கியவரும் இவரே!

    இங்கிலாந்து அல்லாமல் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார் விவேகானந்தர். சில ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பின் தாயகம் திரும்பினார். 1897 ஜனவரி 15ஆம் நாள் கொழும்புத் துறைமுகத்தில் வந்திறங்கினார். அங்கே அந்த வெற்றித் திருமகனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு மக்களால் அளிக்கப்பட்டது. அங்கிருந்து பாம்பனை அடைந்தார். இராமநாதபுரம் அரசர் பாஸ்கர ரகுநாத சேதுபதி உள்ளிட்ட பலர் அங்கே விவேகானந்தரைப் பேரன்போடும் பெருமகிழ்ச்சியோடும் வரவேற்றனர்.  அவரை இரதத்தில் ஏற்றி, இரதத்தின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு, பாஸ்கர சேதுபதியும் பிறரும் அதனை இழுத்துச் சென்றனர். இவ்வியத்தகு செயலை அறிகின்றபோது விவேகானந்தரின் அறிவாற்றலால் நமக்குப் பெருமிதமும், இராமநாதபுரம் மன்னரின் தன்னடக்கத்தாலும் பணிவாலும் நெகிழ்ச்சியும் ஏற்படுகின்றன!

    பிறகு கொல்கத்தாவுக்குச் சென்ற விவேகானந்தர், ஆலம்பஜார் (Alambazar) என்ற இடத்தில் இயங்கிக்கொண்டிருந்த இராமகிருஷ்ண மடத்தில் ஏனைய துறவிகளோடு தங்கினார். அப்போது, ஒரு துறவி என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து அவர் மற்ற துறவிகளுக்குப் போதித்தார். வழிபாடு, தியானம், இறைவனை அறியும் முயற்சி இவை மட்டுமே ஒரு துறவிக்குரிய செயல்கள் ஆகா. துறவியானவன் மக்கள் தொண்டில் தன்னைக் கரைத்துக்கொள்வது, பள்ளிகள், மருத்துவமனைகள் நடத்துவது போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்தியப் பெண்களுக்கு உதவ வேண்டும் என்பது விவேகானந்தரின் நெடுநாளைய இலட்சியம். இந்தியப் பெண்கள் நற்குணங்கள் நிரம்பியவர்களாக இருந்தும் கல்வியறிவு பெற்றவர்களாகவும், வெளியுலகில் செயலூக்கத்துடன் இயங்குபவர்களாகவும் இல்லையே என்று வருந்திய அவர், பெண்களுக்குக் கல்வி அளிப்பதன் மூலமே இக்குறைகளைக் களையமுடியும் என்று உறுதிபடக் கூறிவந்தார். சகோதரி நிவேதிதை பெண்களுக்கான பள்ளி ஒன்றைத் தொடங்கி விவேகானந்தரின் இந்த எண்ணத்தை ஈடேற்றினார். இன்று அந்தப் பள்ளி நல்ல வளர்ச்சிபெற்றுப் பெண்கள் முன்னேற்றத்துக்கான பல சீரிய பணிகளை ஆற்றிவருகின்றது.

    1899இல் மீண்டும் ஒருமுறை மேனாட்டுப் பயணம் மேற்கொண்ட விவேகானந்தர் அங்கே பல இடங்களில் தம்முடைய வேதாந்தக் கருத்துக்களைப் பரப்பினார். ஆயிரத்துத் தொள்ளாயிரமாவது ஆண்டு (1900) டிசம்பர் 9-இல் பேலூர்(Belur) மடத்தை வந்தடைந்தார். அவருடைய உடல்நிலை அப்போதே நலிவுகாணத் தொடங்கிவிட்டது. எனினும் அதனைப் பொருட்படுத்தாது சொற்பொழிவுகளும் சீடர்களுக்கு வகுப்புகளும் தொடர்ந்து நடத்திவந்தார். மக்கள் தொண்டையும் அவர் நிறுத்தினாரில்லை.

    தம்முடைய முடிவு நெருங்குவதை அகக்கண்ணில் கண்டார் விவேகானந்தர். தம் மரணத்துக்கு மூன்று நாள்களுக்குமுன் சுவாமி பிரேமானந்தருடன் பேலூர் மடத்தில் உலவிக்கொண்டிருந்த அவர், ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி, “நான் என் உடலை விட்டவுடன் அதை இந்த இடத்தில் தகனம் செய்!” என்று சொல்லியிருக்கின்றார். இன்று அதே இடத்தில்தான் சுவாமி விவேகானந்தரின் திருக்கோயில் எழுப்பப்பட்டிருக்கின்றது என்பது அறியத்தக்கது.

    1902ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள், வீரமும் விவேகமும் மிக்க ஞானத் துறவியான விவேகானந்தர் இம்மண்ணுலகில் வாழ்ந்த இறுதிநாளாகும். அன்றிரவு தியான நிலையிலேயே அவர் தம் பொன்னுடலை நீத்தார். மக்களிடையே ஆன்ம விழிப்பையும் வேதாந்தத்தையும் விளங்கவைக்க வந்த அந்த அறிவுச்சுடர் முப்பத்தொன்பது ஆண்டுகளிலேயே ஒளியவிந்து அடங்கியது இந்திய மக்களின் தவக் குறைவே!

    எனினும் அந்த வீரத்துறவி விட்டுச்சென்றிருக்கும் அற்புதமான அறிவுரைகள் நமக்கு, குறிப்பாக, இளைய சமுதாயத்துக்கு நல்வழிகாட்டுவனவாக அமைந்திருக்கின்றன; அவற்றில் ஓரிரண்டை அறிந்துகொள்வோம்!

    1. என் அருமை மாணவர்களே! கல்லூரிப் படிப்பு முடிந்ததும் மக்கள் தொண்டில் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். விலைமதிப்பற்ற செல்வமும் புதையலும் உங்களுக்குக் கிடைத்தால்கூட இந்தத் தொண்டில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அது ஈடில்லை.

    2. நமது குற்றங்களைச் சுமத்துவதற்கு வேறொருவர் இருக்கும்வரை நாம் நம்முடைய பலவீனங்களையும் தவறுகளையும் மெதுவாகத்தான் புரிந்துகொள்கிறோம். மனிதர்கள் பொதுவாகத் தங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதே தங்கள் குற்றங்களைச் சுமத்துகிறார்கள். இல்லாவிட்டால் விதி என்பார்கள். நம் விதிக்கு நாமே காரணம்! நாம் விதைத்ததைத்தான் நாம் அறுக்கிறோம். நமக்குக் கிட்டும் பழியாகட்டும் புகழாகட்டும், அதற்கு வேறுயாரும் பொறுப்பல்லர்!

    அறிவும் ஆற்றலும் துடிப்பும் துணிச்சலும் கொண்ட நூறு இளைஞர்கள் தம்மோடு இருந்தால் போதும்! இவ்வுலகையே புரட்டிப்போட்டு விடலாம் என்று நம்பினார் விவேகானந்தர்.

    பொருள்பொதிந்த அருள்வாழ்வை வாழ்ந்துகாட்டியதோடல்லாமல் கருத்தாழமிக்க அறிவுரைகளையும் நமக்கு வழங்கிச் சென்றிருக்கின்றார் விவேகானந்தர். அந்தப் பேரருளாளரின் நன்மொழிகளை – பொன்மொழிகளைக் கற்றுக் கடைப்பிடிப்போம்! வாழ்வில் உயர்வோம்!

    *****

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. சுவாமி விவேகானந்தரின் வரலாறும் அறிவுரைகளும் – ராமகிருஷ்ண மடம் & ராமகிருஷ்ண மிஷன், பேலூர் மடம்.

    2. https://en.wikipedia.org/wiki/Parliament_of_the_World%27s_Religions

    3. https://en.wikipedia.org/wiki/Religion_not_the_crying_need_of_India

     

    Share
  • தச்சர் பற்றிய கல்வெட்டு

    தச்சர் பற்றிய கல்வெட்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    பதினெண் விஷயத்தார் எனப்படுகின்ற விஸ்வகர்மா சாதியான தச்சர் ஆற்றிய கோவில் பணிகள் பற்றி சில கல்வெட்டுக் குறிப்புகள் உள. இவர்கள் கோவில் அருகிலேயே நான்மாடத் தெருவிலேயே வாழ்ந்ததற்கான சான்றுகளை இக்கல்வெட்டுகள் நம் கண்முன்னே வைக்கின்றன. அவை குறித்த ஒரு பார்வை கீழே.

    நாகபட்டினம் மாவட்டம், செம்பியன் மாதேவி ஊரில், கைலாசநாதர் கோவிலின் சண்டிகேசுவரர் சன்னதிக்கு வடக்கு சுவர், 47 வரிக் கல்வெட்டு  சாய்வுக் கோடுகளாக.

    ஸ்வஸ்தி ஸ்ரீ கோற்சடையபந் / மர்திரிபுவனச் சக்கரவத்திகள் / வீரபாண்டிய தேவர்க்கு 9 ஒ / ன்பதாவது செம்பியன் மா / தேவிச் சருப்பேதி மங்கலத்து / உடையார் கைலாசமு / டையார் கோயில் தான / த்தார் _ _ _ _ / த் தச்சர் சாமுதாயம் பண்ணி / உத்தம வேதப் பெருமா / ஆசாரியனுக்கு இன்னாய / னார் திருமடைவிளாகத்து / தெற்கில் திருவீதியில் உவ / ச்சன் திருவகம்பாம _ _ ராய / ன் மனைக்கு கிழக்கு மனை ஒன் / று விட்டு இதன் கிழக்கு மனை ஒ / ன்றுக்கு

    ற் கெல்லை மொண்ணை / நாயகப்பிச்சன் மனைக்கு / மேற்கு நடுவுப்பட்ட மனை ஒ / ன்றுக்கு மனை நீளம் கோல் / மூன்று.  இக்கோல் மூன்றுக்கு / ம் இத்தால் உள்ள புழைக்க / டை உண்ணீள மறுதியாக / _ _ _ _ கொண்டு இருக்கும் / _ _ _ _ பாகா / யமும் மற்றும் / எற்பேர்பட்ட / னவும் இவனுக்கு சந்திராதி / த்தவரையும் [விற்]றொற்றித்  / திரவியங்களுக்கு மு(ரி)த்தாவு / தாகவும் இப்படி சம்மதித்து / புரட்டாசி மாத  முதல் திய / தி இ(ன்)று னூறென்ற பெ / ருமாள் [திருக்கா]_ _ _ _

    இருந்து குடுத்தோம் / உத்தம வேதப் பெருமா / ள் ஆசாரியனுக்கு தான / த் தாரோம். இப்படிக்கு / திருச்சிற்றம்பல பட்டன் எ / ழுத்து. இவை  வீதிவிடங் / கப்பட்டர் எழுத்து. இக்கோ / யில் ஸ்ரீ மா(ய்)யேசுரக் / கண்காணி / காலகால தே / வர் எழுத்து. இக்கோயி(ல்) க் / கணக்கு பொய்கைக்குடை  / யான் கணக்கு பொன்னன் / _ _ _ லக் க[ண]க்கு எழுத்து.

    தானத்தார் – ஸ்தானத்தார் ஆகிய கோயில் பொறுப்பாளர்கள்; சாமுதாயம் – சாதியர்; பண்ணி – ஏற்பாடு செய்து, arrange; உவச்சன் – இசைக் கருவிக் கலைஞன்; புழைக்கடை – கொல்லைப்புறம்; அறுதியாக – முடிய; மகேசுவரக் கண்காணி – சிவனடியார் கண்காணி.

    விளக்கம்: சடையவர்மன் திரிபுவன வீரபாண்டியனின் 9- ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1345) நாகை மாவட்டம் செம்பியன் மாதேவி என்னும் ஊரில் அமைந்த கைலாசநாதர் கோவிலுக்கு தச்சர் சாதிமார் உத்தமவேதப் பெருமாள் என்னும் தச்சனை கோவில் தச்சு வேலைக்கு ஏற்பாடு பண்ணிக் (arrange) கொடுத்தனர். இக்கோவில் பொறுப்பு அதிகாரிகள் உத்தம வேதப் பெருமாள் ஆசாரிக்கு இக்கோவிலைச் சூழ்ந்த திருவீதியில் இசைக் கலைஞன் திருவகம்பாம__ராயன் வீட்டிற்கு கிழக்கே அமைந்த வீட்டிற்கு ஒரு வீடு தள்ளி கிழக்கே உள்ள ஒரு வீட்டைத் தந்தனர். இந்த வீட்டின் எல்லையை கூறி விட்டு, இதன் நீளம் மூன்று கோல் அளவினது, இதன் கொல்லைப்புற உள் நீளம் முடியும் வரையான இடம் இவனுடையது. இதை இவன் விற்றுக்கொள்ளவோ ஒத்திக்கு (lease) விடவோ செய்யலாம். இதற்கு ஒப்புக் கொண்டு புரட்டாசி மாதம் முதல் நாளான இன்று உத்தம வேதப் பெருமாள் ஆசாரிக்கு கொடுத்தோம் என்று கோவில் பொறுப்பாளர் கையொப்பமிடுகின்றனர்.  இக்கல்வெட்டு மூலம் கோவிலில் பணி செய்பவருக்கு கோவில் சார்பில் வீடு வழங்கப்பட்டது என்பது தெரிகின்றது. இசைக் கலைஞர் போன்றோர் கோவிலைச் சூழ்ந்த தெருவில் வாழ்ந்த நிலைமையை நோக்கும்  போது மேல் சாதிக்காரான பிராமணர், வெள்ளாளர் மட்டுமே கோவில் ஊரில் வாழ்ந்தனர் மற்ற கைவினை சாதியார் பிடாகையான உள்கிராமங்களில் ஒதுக்கப்பட்டு ஏற்றத் தாழ்விற்கு உள்ளாயினர் என்ற சாந்தினி பீ, J.S. கிரேவால் போன்ற சிலரது கூற்றைத் தவறு எனக் காட்டுகின்றது.

    பார்வை நூல்: நாகபட்டின மாவட்டக் கல்வெட்டுகள், பக்கம் 85 – 86, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

    தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுதமங்கலம் சோமனாத சுவாமி கோவிலின் முதல் பிரகாரம் கிழக்குச் சுவரில் உள்ள 5 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜாதிராஜ தேவர்க்கு யாண்டு 3 நாள் 192 னால் 
    2. _ _ _ விலை கொண்டு புகுந்த கல்தச்சரில் முளைத்தான் ஆன சண்டேசுரப்
    3. [பெருந்தச்சனும் இ]வன் அகமுடையாள் சொன்னவாரறிவாளும் இவள் மகன் நல்லானான 
    4. _ _ _ ருந்தச்சனும் இவன் தம்பி உலகனும் இவன் தம்பி யம்பலவனும் இவன் தம்பி
    5. _ _ _ _ ன நங்கைப் பனை ஆண்டாளும் மடவடிமை.

    மட அடிமை – மடைபள்ளி அடிமை; புகுந்த – கோவிலை அடைந்த

    விளக்கம்: திரிபுவனச் சக்கரவத்திகள் என்ற பட்டம் முதன்முதலாக முதற் குலோத்துங்கனுக்கு ஏற்பட்டதைக் கருதி இது சோழ வேந்தன் மூன்றாம் இராஜராஜனின் 3-ம் ஆண்டு ஆட்சியின் போது (கி.பி. 1219) அச்சுதமங்கலம் சோமனாதர் கோவிலார் 192 காசு கொடுத்து முளைத்தான் என்ற சண்டேசுர பெருந்தச்சனையும் இவன் மனைவி சொன்னவாரறிவாளையும் மகன் நல்லான் பெருந்தச்சன், இன்னொரு மகன் உலகன், இன்னொரு மகன் அம்பலவன், பெயர் சிதைந்துள்ள இன்னொரு மகன், தங்கை பனை ஆண்டாள் ஆகிய 5 ஆடவரும் 2 பெண்டிரும் மடைப்பள்ளி வேலைக்கு  அடிமைகளாக வாங்கப்பட்டு கோவில் புகுந்தனர் என்கின்றது இக்கல்வெட்டு.

    கோவில் அடிமைகளாக வாங்கப்பட்ட அடிமைச் செய்திகளை தாங்கிய கல்வெட்டுகள் இது போல சில உள. அவற்றொடு இக்கல்வெட்டை ஒப்பிட்டு ஆய்ந்தால் இத்தச்சன் குடும்ப வறுமை நிலை அல்லது கடன் தொல்லை காரணமாக குடும்பத்தோடு விற்றுக்கொண்டான் என ஊகிக்க முடிகின்றது. மக்கள் ஏன் இப்படி கோவிலுக்குத் தம்மை விற்றுக் கொண்டனர் என்றால் இதனால் கோவிலுக்கு அடிமையாக விற்கப்பட்டவர் கோவில் பணியாளாகிப் போகிறார். அதன்படி அவர்களுக்கு கோவிலில் வழங்கப்படும் இரு பொழுதுச் சோறு கிடைப்பதுடன் தங்கும் வசதி ஆகியனவும் கிட்டுகின்றது. அதோடு பிரிந்து போய்விடாமல் குடும்பத்தாரொடு ஒன்றாக வாழ முடிகின்றது. இந்த அடிமைத்தனம் எவ்வளவு காலத்திற்கு? அதில் இருந்துவிடுபட முடிந்ததா? என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் இதுவரை அறியப்பட வில்லை.  இந்த அடிமைத்தனம் ஒருவகையில் அவர்களுக்கு கிடைக்கும் உடனடி விடுபாடு (relief) என்பதை நம்மால் உணர முடிகின்றது.

    மேலும் சில அடிமைக் கல்வெட்டுகளை அறிய சொடுக்குங்கள்

    https://groups.google.com/d/msg/vallamai/TPdzGwj03sw/pgM-gAzyAgAJ

    https://groups.google.com/d/msg/vallamai/1Fn_eB9DWKk/MlaXDkXDAgAJ

    பார்வை நூல்: நன்னிலம் கல்வெட்டுக்கள், தொகுதி 2, எண் 270/1978, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், ஆலந்தூர் சிவன் கோவில் மேற்கு குமுதத்தில் பொறிக்கப்பட்ட 3 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு முப்பத்தாறாவது  இரும்பேடு கீழ் _ _ _ நாற்ப்பேரெல்லையுள் நாலு _ _ _
    2. ஒரு கூறாய் ஆடியனமார் _ _ _ கொட கூறாய் தச்சர்க்குப்  புதுக்குப்புறம்  ஸ்ரீ வேலி விஷ்ணுக்ரஹப் பெருந்தச்சினு தேவனும் பலதேவனும் ஒரு கூறாய் பெருந்தச்சனுக்கு நன்செய் காற் கூறு
    3. ம் மூர் தேவனுக்கு ஒரு கூறும் பலதேவனுக்கு ஒரு கூறும் ஆக நாற்பெரெல்லையிலுமுள்பட விளை நிலத்துள் நாலிலொன்றும்  இத்தச்சனு _ _ _

    ஸ்ரீவேலி – கோவில் நிலம், புதுக்குப்புறம் – கட்டடத்தை சீர்செய்து புதுப்பித்ததற்கான நிலம்.

    விளக்கம்: சோழன் முதற் பராந்தகனின் 36 –ம் ஆட்சி ஆண்டில் (பொ.ஆ. 942) வந்தவாசி ஆலந்தூர் சிவன் கோவிலில் கட்டடம் கட்டியதற்காக இரும்பேடு கிராமத்தின் கிழக்கில் நாற்பேரெல்லையுள் பட்ட நிலத்துள் நாலில் ஒரு கூறை (1/4) ஆடியனமார் கொடையாகவும், கட்டடம் புதுப்பித்ததற்காக பெருந்தச்ச தேவனுக்கும் பலதேவனுக்கும் ஒரு பங்கும், நன்செய் நிலத்தில் பெருந்தச்சனுக்கு 1/4 பங்கும் மூர் தேவனுக்கு ஒரு பங்கும் பலதேவனுக்கு ஒரு பங்கும். இப்படி நாற்பேரெல்லை உடைய விளை நிலத்தில் 4 ல் ஒர் பங்கு இந்த தச்சனுக்கு கொடுக்கப்பட்டதாகத் தெரிகின்றது. கல்வெட்டு ஆங்காங்கே சிதைந்துள்ளது எனவே தெளிவான பொருளை கொள்ள முடியவில்லை. இதன் மூலம் தச்சர் விளை நிலங்களையும் கோவில் பணிக்காகப் பெற்றனர் எனத் தெரிகின்றது.

    பார்வை நூல்: தமிழ்நாடு கல்வெட்டுகள் தொகுதி XIII, திருவண்ணாமலை மாவட்ட கல்வெட்டுகள் 2, பக். 124. தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

    தச்சர் பற்றி மேலும் சில கல்வெட்டுகளை காண சொடுக்குங்கள்

    https://groups.google.com/d/msg/vallamai/arn7n2ljNjc/urDDtXKiCgAJ

    Share
  • திருக்குடமுழுக்கில் வடமொழி-திருமுறைகள் சொல்வதென்ன?

    திருக்குடமுழுக்கில் வடமொழி-திருமுறைகள் சொல்வதென்ன?

    -மரபின் மைந்தன் முத்தையா
     
    தஞ்சைப் பெருவுடையார் திருக்கோவில் திருக்குடமுழுக்கு பற்றிய விவாதங்கள் வளர்ந்துகொண்டே போகின்றன. ஆலயத்தோடும் ஆன்மீகத்தோடும் அணுவளவும் தொடர்பில்லாத பலரும் அன்றாடம் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதில் தம் நிலைப்பாடு என்னவென்பதை ஆன்மீக ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரும் அறிவிக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.
     
    தொடர்பில்லாதவர்கள் துள்ளிக் குதிப்பதும் தொடர்புள்ளவர்கள் தள்ளி நிற்பதும் தமிழ்ச் சூழலுக்கு புதிதல்லவே!
     
    மாமன்னன் இராஜராஜன் கட்டிய ஆலயம் என்பதால் அவனிடமிருந்தே தொடங்குவோம். இன்று பல்லோரும் ராஜராஜன் தமிழ் மன்னன். ஒரு தமிழ் மன்னன் கட்டிய தமிழ்க் கோயில். அங்கே திருக்குடமுழுக்கு தமிழில் நடைபெற வேண்டும் என்றெல்லாம் வாதங்களை வைக்கிறார்கள்.
     
    ராஜராஜன் தமிழ் மன்னனாக இருக்கலாம். ஆனால் அவருடைய ஆன்மீக குரு யாரென்று பார்த்தால் சதுரானன பண்டிதர் என்ற பெயருடைய காளாமுகச் சைவர் . அதேபோல அவருடைய மகன் ராஜேந்திர சோழனின் குரு யார் என்று பார்த்தால் லகுலீச பண்டிதன் என்னும் காளாமுகச் சைவர்.
     
    சொல்லப் போனால் ராஜராஜன் காலத்திற்கு முன்னரே திருமுறைகள் பாடக் கூடியவர்களுக்கு கல்வெட்டுகள் உண்டு. (திருமுறைகளை ராஜராஜன் கண்டெடுத்ததாக உமாபதிசிவம் பெயரில் ஒரு புராணம் வழங்கி வருகிறதே தவிர, அது அவரால் எழுதப்பட்டது அல்ல என்றுதான் ஆறுமுக நாவலர் உள்ளிட்ட ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்). எனவே இராஜராஜன் காலத்துக்கு முன்பிருந்தே ஆலயங்களில் திருமுறைகள் ஓதப்பட்டன.
     
    ஆனால் ராஜராஜன் காலத்தில் தேவார மூவர் திருநாமங்கள் கூட, தீக்ஷா நாமம் தரப்பட்டு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. திருநாவுக்கரசு அகோர சிவன், ஞானசம்பந்தன் வாமதேவ சிவம் என்றெல்லாம் சமய ஆச்சாரியர்கள் திருநாமங்கள் பின்னால் தீக்ஷா நாமம் சேர்க்கும் அளவு ராஜராஜன் வடமொழி சார்ந்தவனாக இருந்திருக்கிறான். எனவே அவர் எழுப்பிய ஆகம முறைப்படியான ஆலயத்தில் அந்த மரபு சார்ந்த முறையிலேயே திருக்குடமுழுக்கு நடைபெற வேண்டும்.
     
    இரண்டாவதாக சைவர்களுக்கு உயிர்நாடியாக விளங்கக் கூடியவை திருமுறைகள். குறிப்பாக தேவாரம் திருவாசகம் ஆகியவை. அவை சமஸ்கிருதத்தை முழுமையாக ஒப்புக்கொள்கின்றன. திருமுறைகள் முழுவதிலும் வேதங்களும் வடமொழியும் சிறப்பிக்கப்படுவது கண்கூடு.
     
    “வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண்
    வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்”
     
    என்றும்
     
    “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்”
     
    என்றும் சிவபெருமான் சிறப்பிக்கப்படுகிறார்.
     
    இன்று பலரும் வடமொழி என்பது தமிழ்நாட்டில் சைவ மரபுக்கு முரணானது என்பது போல ஒரு பிம்பத்தை வலிந்து கட்டமைக்கிறார்கள். தமிழ்ச் சைவர்களின் மேல் வரிச் சட்டம் ஆகிய திருமுறைகள் அவ்வாறு நமக்குச் சொல்லவில்லை. எனவே சமஸ்கிருதம் அந்நிய மொழி என்பது நாத்திகவாதிகள் கொண்டுவரும் பொய்யான பரப்புரை ஆகும்.
     
    ஆகமங்கள் என்பவை ஆலயங்கள் எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி மட்டும் பேசுபவை அல்ல. ஆகமங்கள் இறைவனால் அருளப்பட்டவை. அவை ஆழமான ஆன்மீக அறிவியல். மேலும் இன்று சிலர் திருக்குடமுழுக்கு நிகழும்போது சொல்லப்படும் மந்திரங்கள் புரிய வேண்டும் என்கிறார்கள். எல்லோருக்கும் புரியும் விதமாய் அமைய அவை வாய்பாடுகள் அல்ல. அவை மிக நுட்பமான ஒலி ஒழுங்குகளும் முத்திரைகளும் கூடிய தொன்மையான ஞானக் கலை.
     
    வடமொழியில் மந்திரங்கள் சொல்லி திருக்குடமுழுக்கு நடத்துவதால் தமிழ் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் ஆன்மீகம் என்பதையே அறியாதவர்கள் சொல்வது. காலங்காலமாகவே ஆலய வழிபாட்டு மரபில் தமிழ் என்பது இரண்டாம் மொழி அல்ல. இணைமொழி.
     
    “இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்”
     
    என்று ஆலயச் சூழலை மணிவாசகப் பெருமான் வர்ணிக்கிறார். இங்கே இருக்கு என்பது ரிக்வேதம் ஆகிய சாஸ்திரத்தையும் தோத்திரம் என்பது தமிழில் ஓதப்படும் திருமுறைகளையும் குறிக்கும்.
     
    ஆலயங்களில் தமிழ் அர்ச்சனை தாராளமாகச் செய்யலாம். ஆனால் திருக்குடமுழுக்கு என்பது ஆலயத்தில் இருக்கிற விக்கிரகத்துக்கு இருக்கும் சக்தியைப் புதுப்பிக்கும் மெய்ஞான விஞ்ஞானம். அந்த மந்திரங்களின் பொருளைக் காட்டிலும் அது ஏற்படுத்தும் அதிர்வுகள் தான் மிகவும் முக்கியம்.
     
    ஆகமங்கள் என்பவற்றை “வந்தவை” என்று பொருள். எனவே தமிழிலிருந்து வடமொழிக்கு வந்தது என்பதாக திரு. சத்தியவேல் முருகனார் போன்றவர்கள் சொல்லி வருகிறார்கள். சிவபெருமானிடமிருந்து வந்தது என்றுதான் அதற்குப் பொருள்.
     
    சிவபெருமான் வேதங்களை திருவாய் மலர்ந்தருளியதைப் போலவே ஆகமங்களையும் அருளினார் என்கிறார் திருமூலர்.
     
    “வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
    ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உன்னுக”
     
    என்பது திருமந்திரம்.
     
    ” ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க”
     
    என்பது சிவபுராணம்.
     
    எனவே ஆகமங்கள் என்பவை, வழிபாட்டு நெறியின் உயிர் நாடி. அவற்றை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.
    —————————————————————
    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா
    Share
  • டாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்

    டாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்

    சுப்ரபாரதிமணியன்

    திருப்பூரில்  கனவு அமைப்பு நடத்திய ஒருநாள் திரைப்பட விழாவில் டாலர் சிட்டி, இன்ஷா அல்லாஹ் ஆகிய படங்கள், 24.1.2020 அன்று திரையிடப்பெற்றன. இதில் டாலர் சிட்டி பற்றிய அறிமுகம் இங்கே.

    டாலர் சிட்டி ஆவணப் படம் – இயக்குநர் ஆர்.பி. அமுதன் – 77 நிமிடங்கள்

    பனியன் தொழிலாளி, கைத்தறி நெசவுத் தொழிலாளி, விசைத்தறித் தொழிலாளிகள், பனியன் உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் பார்வையில் – அவர்களின் நேர்காணல்கள் மூலம் இப்படம் சொல்லப்பட்டிருக்கிறது. திருப்பூர் நொய்யல் பற்றியும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் பல படங்கள் வந்துள்ளன. ஆனால் தொழில்ரீதியான ஆவணப்பட இயக்குநர் ஒருவரிடமிருந்து திருப்பூரைப் பற்றிய படமாக இதைக் கொள்ளலாம்.

    தலித் முதிய பெண் ஒருவரின் பார்வையில் இப்படம் தொடங்குகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்  திருப்பூரில் இருந்த சாதிய அடுக்குகள், அது இன்றும் நகர வளர்ச்சியில் மறைந்துள்ளதை வெளிப்படுத்துகிறார். 1000 கோடி மதுச் சரக்கு விற்பனையாகும் ஊர். கஞ்சாப் பூங்கா,  பொழுதுபோக்கிற்குத் திரைப்பட அரங்குகள், உற்பத்தியாளர்கள் பார்வை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ’25 ஆண்டுகளாக பின்னலாடைத் தொழிலில் வேலை நிறுத்தமே இல்லை’ என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர்.

    போடப்படும் சம்பள ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று தொழிற்சங்கத் தலைவர்கள் சொன்னாலும்  போராட்டங்கள் ஆதி காலத்து மே தின விழா  முதல் சாதாரண கூலி உயர்வு வரைக்கும் என்று நீண்டு வருவது காட்டப்பட்டிருக்கிறது. ஒரு பனியன்  தொழிலாளியின் தினப்படி வாழ்க்கை மெதுவாகக் காட்டப்படுகிறது. வீட்டில் இருந்துகொண்டு பனியன் சம்பந்தமான வேலை செய்யும் ஒரு பெண்ணின் தினப்படி வாழ்க்கை (வீடு, பனியன் பிரிக்கும் வேலை, அலர்ஜி, ஆத்துமா, சுகாதாரமின்மை) மெதுவாகக் காட்டப்படுகிறது. ஆனால் திருப்பூர் தொழில் வளர்ச்சி, கூலி இவையெல்லாம் அடிப்படை உரிமைகளை விட பெரிதாகப்பட்டுவிடுகிறது தொழிலாளர்களுக்கு.

    மேதினக் கொண்டாட்டம் போதும் தங்களின் உரிமைகளை பறைசாற்றிக் கொள்ள. எதிர்காலம் பற்றிய கணிப்பில் 1 லட்சம் கோடி ரூபாய் அந்நிய சொலவாணி, மற்றும் எதிர்காலத்தில் தொழிற்கொள்கைகளைக் கடைப்பிடிக்காமல் போனால் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளுமே இங்கிருப்பர் என்று ஒரு முதலாளி சொல்கிறார். பழைய திருப்பூராகும் என்று பயமுறுத்துகிறார். ஆனால் வேலை, சமூகப் பாதுகாப்பின்மையை  மையப்படுத்தி தொழிலாளர் குரல்கள்  தொனிப்பதைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டக் கால நிலைமை அவர்களின் வாழ்நிலையைச் சரியாகக் காட்டுகிறது. இயக்கமில்லாமல் நிற்கும்  விசைத்தறி மனத்தை உறுத்துகின்றது. (போராட்டக் காலக் கஞ்சித் தொட்டிச் சம்பவங்கள் பேச்சில்லாமல் பலவற்றை உணர்த்திப் போகின்றன).

    நெசவாளர்களின் சுதந்திரமான தொழில் நிலை கதர் முதற்கொண்டு சொல்லப்பட்டிருக்கிறது. பனியன், பின்னலாடை, விசைத்தறி போன்றவற்றில் இளைஞர்கள் காட்டப்படுகையில் நெசவு தொழில் மட்டும் வயதானவர்கள் மூலம்  சொல்லப்படுகிறது.  நெசவை இளைய தலைமுறை கை விட்டிருப்பதை அது காட்டுகிறது. பனியன் தொழிலாளி வீட்டுக் கண்ணாடிப் புட்டி மீன், முதலாளி வீட்டு வாஸ்து 50 ஆயிரம் ரூபாய் தொட்டி மீன், கேட்பாரற்றுக் கிடக்கும்  நெசவுப் பாவடிக் கற்கள்… அபாரமான குறியீடுகள்.

    சமூக நீதி, மெய்யான நாகரீகம் என்று தொழிலாளர்களுக்குக் கோரும் பார்வையில் தென்படும்  இடதுசாரித்தனம் மே தினக் கூட்டம், ஊர்வலம்  முதற்கொண்டு மோடி பற்றிய விமர்சனம் வரை நீள்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் ‘Rise and raise of Tiruppur’ என்ற படத்தின்  பல பகுதிகள் இப்படத்தை ஆக்கிரமித்துள்ளது. அதிகாரம் செலுத்துகிறவர்கள் தமது அதிகாரத்தின் மூலமாகவோ அல்லது ஆதிக்கம் செலுத்துகிறவர்களை மூளை சலவைச் செய்வதன் மூலமோ மட்டும் ஒடுக்குவதில்லை. ஒடுக்கப்படுபவர்களுக்கும் தேவையான ஏதோ ஒன்று கிடைப்பதாலேயே ஒடுக்குமுறைகள் சம்மதமாகின்றன. சுரண்டலுக்கு ஒத்திசைவு  கூடி விடுகிறது  என்ற அந்தோனி கிராம்சியின் கருத்து நாசூக்காகச் சொல்லப்படுகிறது. சுரண்டலுக்கு ஒத்திசைவாக தொழிலாளிகளின் போக்கு அதிர்ச்சி தருகிறது. ஒடுக்குமுறைகள் இதனால் சாதாரணமாகின்றன. வன்முறை மூலம் மட்டும் அல்ல, ஒத்த கருத்தின் மூலம் ஆதிக்கம் உருவாக்கப்படுகிற ஆபத்தை பின்னலாடைத் தொழிலை முன் வைத்து இப்படம் சொல்கிறது.

    இதில் பின்னாலாடைத் தொழிலைக் காப்பாற்ற வேண்டிய, முன்னேற்ற வேண்டிய ஒத்த கருத்தாகும். குஜராஜ் மாதிரியில் இருக்கும் பேரமைதி பற்றிப் பலர் பேசுகிறார்கள். அந்நிய செலவாணியை முன்வைத்து  இவ்வகை ஒத்த கருத்துடன் திருப்பூர் அதற்கு முன்பே உருவாகி வளர்ந்து நிற்பது தெரிகிறது. தொழில் பாதுகாப்பின்மை தெரிகிறது. தொழிலாளர் நலன் புறக்கணிக்கப்பட்டே செல்கிறது. உழைப்பு அந்நியமாகும் நிலை விரிந்திருக்கிறது. எவ்வளவு பெரிய மோசடியும் கடுகாகிறது. அடிமாட்டுத் தொழிலாளர்கள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

    விவசாயம் புறக்கணிக்கப்பட்டு, திருப்பூர் போன்ற நகரங்கள் விரிவாகிக்கொண்டே  இருக்கின்றன. வெற்றுச் சம்மதங்கள் அபாயகரமானவை. தொழிலுக்குக் குந்தகம் வந்துவிடக்கூடாது என்ற கூட்டு எண்ணம் வியாபார நியதிகளுக்கும் கூட ஒத்து வராது என்று  குற்றம் பேசும் விமர்சனப் பார்வை இதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. தொழிலாளி, முதலாளி, தொழிற்சங்கம் முதற்கொண்டு எல்லோருமே அன்னியச் செலவாணியை குறிக்கோளாக வைத்துச் சமரசமாக இயங்கும் ஊரின் அசலான தன்மை இதில் தெரிகிறது.

    காலாவதியான மார்க்சியம், காணாமல் போன காந்தியம்.. இவற்றையெல்லாம் தூக்கிப் பிடிப்பதாய்க் கிண்டல்கள் எழுகின்றன. கூட்டுக் களவாணித்தனம்: தொழிற்சங்க உணர்வு இல்லாத தொழிலாளி, சுரண்டலுக்குப் பேர் போன முதலாளி, சந்தா வசூலிக்கிற தொழிற்சங்கம் முதற்கொண்டு எல்லாருக்குமே அன்னிய செலவாணிதான் குறிக்கோள். எல்லாரும் சேர்ந்து செய்கிற  திருப்பூர் கூட்டுக் களவாணித்தனம் என்று கடுமையாகவும் இதைப் பார்க்கலாம்.

    உலகச் சந்தையை முன்வைத்துப்  பின்னலாடை உற்பத்தி அதன் தொழிலாளிகளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பதைக் காட்டுகிறது. இது குறித்த தொழிலாளி, மக்களின் மவுனம் வளர்ச்சிக்கும் தொழிலாளர் நலனுக்குமான இடைவெளியைக் காட்டுகிறது. சிவப்புக்கொடிகளின் பட்டொளி வீசும் காட்சிகள் படத்தின்  ஆரம்பத்திலும் இறுதியிலும் அஞ்சலி போல் அமைந்துவிடுகிறன. சேரிகள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. பின்னலாடையிலே  சுமங்கலித் திட்டக் கொடுமை வந்துவிட்டது. இடம் பெயர்ந்து வந்த வேற்று மாநிலத் தொழிலாளர்கள்… பாரீசின் சொகுசுத்தனம், ஆப்பிரிக்காவின் வறுமை இரண்டும் இங்கு சேர்ந்திருக்கிறது. வட மாநில பெண்களின் உழைப்புச் சுரண்டல், வார இறுதிகளில் அவர்கள்  விபச்சாரத்துக்கு பயன்படுகிற நிலை போன்றவை சொல்லப்படாதது குறையாக பலர் முன்வைக்கிறார்கள். இவற்றை முன்வைத்தே திருப்பூரைப் பற்றி இருபத்தைந்து ஆவணப் படங்களாவது எடுக்க பல பிரச்சினைகள் தலை விரித்து ஆடுகின்றன. ஆர்பி அமுதனின் முந்தைய 20 ஆவணப் படங்களின் நேரடித்தன்மை போல் இதில் இல்லை. ஆனால் ஒரு தொழில் நகரைக் காப்பாற்றும் ஆதிக்கச் சக்திகளின் மாயக் குரல்களின் கலவையை மறைமுகமாக அடங்கிய குரலில்  கேட்க வைக்கிறார்.

    Share
  • குடமுழுக்கின் நோக்கமும் பயனும்!

    குடமுழுக்கின் நோக்கமும் பயனும்!

     -மேகலா இராமமூர்த்தி

    பிற்காலச் சோழமன்னர்களில் பேரோடும் புகழோடும் விளங்கியவன் மாமன்னன் முதலாம் இராசராசன். இவன் காலத்திலும் இவனைத் தொடர்ந்துவந்த இவனுடைய மகனான முதலாம் இராசேந்திரன் காலத்திலும் தமிழரின் மறமும் மாண்பும் பண்பாட்டுச் சிறப்பும் கடல்கடந்த நாடுகளிலும் விளக்கமுற்றன. போராற்றலோடு கலைகளைப் பேணும் பேராற்றலும், சைவசமயப் பற்றும் மிக்கவனாய்த் திகழ்ந்திருக்கின்றான் இராசராசன். அவனுடைய சைவப் பற்றுக்குச் சான்றாக வானளாவி நிற்கின்றது தன்னுடைய தலைநகரான தஞ்சை மண்ணில் அவன் எழுப்பியிருக்கும் இராசராசேச்சுரம் எனப்படும் பெருவுடையார் கோயில்.

    ஆறடி உயரமும் ஐம்பத்து நான்கடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார் (பீடம்), இருபத்துமூன்றரை அடி உயரம் கொண்ட இலிங்கம் ஆகியன தனித்தனியாகக் கருங்கற்களால் செதுக்கப்பட்டுப் பெருவுடையார் கோயிலின் கருவறையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே மிகப்பெரிய இலிங்கத் திருமேனி இக்கோயிலிலுள்ள இலிங்கத் திருமேனியே ஆகும். இதற்கடுத்த பெரிய இலிங்கத் திருமேனி முதலாம் இராசேந்திர சோழன் எடுப்பித்த கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் உள்ளது. பெருவுடையார் கோயிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ஒரே கல்லாலான நந்தி 19 அடி நீளமும், 12 அடி உயரமும் கொண்டதாகப் பெருவுடையாருக்கேற்ற பெருநந்தியாய்த் திகழ்கின்றது. இந்நந்தி பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாகத் தெரிகின்றது. சோழர்காலத்தில் அமைக்கப்பட்ட நந்தி தற்போது திருச்சுற்று மாளிகையில் உள்ளது.

    கோயில்களுக்கென்று ஆகம விதிகள் வகுக்கப்பட்டு அவற்றின்படியே கோயில் நிகழ்வுகள், பூசனைகள் நடைபெறுவது  வழக்கமாயிருந்துவருகின்றது. தஞ்சைக் கோயிலைப் பொறுத்தவரை அது மகுடாகமத்தின்படிக் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

    மகுடாகமம் என்றால் என்ன?

    சிவன் கோயில்களைப் பொறுத்தவரை, முதலில் கோயிலின் வெளிக்கட்டமைப்பை நிறுவி அதன் பின்னரே கருவறையில் இலிங்கத் திருமேனியைப் பிரதிட்டை செய்து இறைசக்தியை நிறுவுவது வழக்கம். இதற்கு மாறாக இலிங்கத் திருமேனியை முதலில் பிரதிட்டைசெய்து பின்னர்க் கோயிலின் வெளி அமைப்பை உருவாக்குவது மகுடாகம முறை எனப்படும். தில்லை நடராசர் திருக்கோயில், திருவாரூர் தியாகேசப் பெருமான் திருக்கோயில் போன்றவை மகுடாகம முறையில் கட்டப்பட்டவை என்றும் இவற்றைக் கண்ட மாமன்னன் இராசராசனும் இதே அமைப்பில் தன்னுடைய பெருவுடையார் கோயிலை அமைத்தான் என்றும் கூறப்படுகின்றது. கல்வெட்டாய்வாளரும் எழுத்தாளருமான குடவாயில் திரு. பாலசுப்பிரமணியன், வரலாற்றார்வலரான முனைவர் க. சங்கரநாராயணன் போன்றோர் பெருவுடையார் கோயில் மகுடாகமத்தின் அடிப்படையில் கட்டப்பட்டதே என்று  உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

    இத்துணைச் சிறப்புவாய்ந்த பெருவுடையார் கோயிலுக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் நாள் திருக்குடமுழுக்கு நிகழவிருக்கின்றது. 1997க்குப் பிறகு இருபத்துமூன்று ஆண்டுகள் கழித்து நிகழவிருக்கும் குடமுழுக்கு இஃது என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தருணத்தில் கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்படுவதன் நோக்கமென்ன என்பதை நாம் சிந்தித்துப்பார்ப்பது பொருத்தமாயிருக்குமெனக் கருதுகின்றேன். அதற்கு முன்னதாக இறை வழிபாட்டில் சிறப்பிடம் பெறுகின்ற மந்திரங்கள் குறித்தும் அவற்றின் மகிமை குறித்தும் சிறிது அறிந்துகொள்வோம்.

    ஒலியிலிருந்தே இந்நிலவுலகம் தோன்றியிருக்கின்றது. உலகின் தோற்றத்துக்கு ஆதாரமாக அறிவியல் சுட்டும் பெருவெடிப்பே (big bang) பேரொலியுடன் நிகழ்ந்ததுதானே? ஆதியில் தோன்றிய அவ்வொலியை (Primordial sound) ’ஓம்’ என்ற பிரணவ ஒலியாக அடையாளப்படுத்துகின்றது இந்திய ஆன்மிகம்.

    ஒலிக்கூட்டங்களால் உருவானவையே ஆற்றல் வாய்ந்தவையாகக் கருதப்படும் மந்திரங்கள். நாம் பயன்படுத்தும் எல்லாச் சொற்களுக்கும் எழுத்துக்களுக்கும் அதிர்வெண்கள் (frequencies) உண்டு. வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட எழுத்துக்களை இணைத்துச் சொற்களாக்கும்போது அவை மிகுஅதிர்வொலியின் (ultrasonic sound) பயனை அளிக்கும் மந்திரங்களாக மாறுகின்றன. இவ்வாறு உருவாக்கப்பட்டவையே ஓம் நமச்சிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் சரவணபவ, புத்தம் சரணம் கச்சாமி போன்ற மந்திரங்கள்.

    எல்லா எழுத்துக்களுக்கும் அதிர்வெண்கள் இருக்கும்போது நாம் ஏன் எல்லாச் சொற்களையும் மந்திரங்களாகக் கருதாமல் ஒருசிலவற்றை மட்டும் மந்திரங்கள் என்கிறோம் என்றோர் ஐயம் நம்முள் இப்போது எழலாம்.

    எல்லா எழுத்துக்களும் அதிர்வெண்கள் உடையவையே எனினும் ’நிறைமொழி மாந்தர்’ என்று தொல்காப்பியரும் வள்ளுவரும் குறிப்பிடும் சான்றோர்கள் தம் பேராற்றலால் சில சொற்களை உருவாக்கி இவை மந்திரங்கள் ஆகக்கடவன என்று ஆணையிட்டு அவற்றை அத்தகுதிக்கு உரியனவாக்கியிருக்கின்றார்கள். இவற்றையே நாம் தமிழில் மறைமொழிகள் என்கிறோம்.

    நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
    மறைமொழி தானே மந்திரம் என்ப
    . (தொல் – 1484) என்பது தொல்காப்பியம்.

    இம்மறைமொழிகளில் அந்நிறைமொழி மாந்தர்கள் தம் அருளாற்றலையும் சேர்த்தே செலுத்துவதால் அவை கூடுதல் பலம் பொருந்தியவையாக மாறிவிடுகின்றன. இவற்றை நாம் மறைமொழிகள் என்றுரைக்கக் காரணம், சாதாரணமாகப் பார்க்கும்போது இவற்றின் ஆற்றல் நமக்குப் புலப்படுவதுமில்லை; புரிவதுமில்லை என்பதனாலேயே.

    திருக்கோயில்களின் அடிப்படைத் தத்துவமும் இதுபோன்றதே!

    கோயில் கருவறையில் நிறுவப்பட்டிருக்கும் தெய்வப் படிமங்கள், ஏதோ தேவலோகத்திலிருந்து ’ஸ்பெஷலாக’த் தருவிக்கப்பட்ட கற்களால் செய்யப்பட்டவை அல்ல! அவையும் பூலோகத்தில் கிடைக்கும் சாதாரணக் (கருங்)கற்களினால் செய்யப்பட்டவையே!

    அப்படியாயின் கோயிலின் வாயிலில் கிடக்கும் படிக்கல்லும் கருவறைக்குள் இருக்கும் தெய்வப் படிமக் கல்லும் ஒன்றுதானே? பின்பு ஏன் நாம் படிக் கல்லை மிதிக்கிறோம்? தெய்வப்படிமக் கல்லை  மதிக்கிறோம்; துதிக்கிறோம் என்றொரு வினா எழுவது இயல்பே!

    மனிதர்கள்கூட வெளித்தோற்றத்துக்கு இரு கால்கள், இரு கைகள், இரு கண்கள், ஒரு முகம் என ஒத்த அமைப்புடையவர்களாகத்தான் தோன்றுகிறார்கள். அதற்காக அறிவில், ஆற்றலில், பண்பில், பயனில் அனைவரும் ஒன்று என்று கூறிவிடமுடியுமா? முடியாதே! அதுபோல், வெளியிலிருக்கும் படிக்கல்லும் உள்ளேயிருக்கும் படிமக்கல்லும் நம் ஊனப்பார்வைக்குக் கற்களாகவே தெரிந்தாலும் அவையிரண்டும் ஆற்றலில் ஒன்றல்ல!  

    ஆம், கருவறைக்குள் தெய்வப் படிமங்களைப் பிரதிட்டை செய்வதற்கு முன்பாக அந்தந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்கள் அடங்கிய சக்கரங்களை எழுதி அடியில் புதைப்பார்கள்; அவற்றின் மீதுதான் அத்தெய்வப் படிமங்களை நிறுவுவார்கள். [சக்கரங்களின் சிறப்பை – ஆற்றலைத் திருமந்திரத்தின் நான்காம் தந்திரம் விரிவாகப் பேசுகின்றது; அதனைப் படித்தால் அவை குறித்த தெளிவு கிடைக்கும்.] இவ்வாறுதான் கல்லாலான கருவறைப் படிமங்கள், அருளாற்றல் மிகுந்த தெய்வங்களாக மாறுகின்றன.

    இவற்றின் தெய்வீக ஆற்றலை மேலும் கூட்டுவதற்குத்தான் பன்னிரு ஆண்டுகட்கு ஒருமுறை திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றொரு விதியை வகுத்திருக்கின்றார்கள். [இவ்விதி பல கோயில்களில், பெருவுடையார் கோயில் உட்பட, பின்பற்றப்படுவதில்லை என்பது வேறு விஷயம்.]

    குடமுழுக்கிற்கு முன்னதாக வேள்விச்சாலை அமைத்து அதில் கோயிலிலுள்ள ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு கடம்(குடம்) வைத்து, அதனுள் நீர் நிரப்பி, மாவிலைத் தோரணம் கட்டி, தர்ப்பைப்புல், தேங்காய் முதலியன வைத்து அத்தெய்வத்தை எழுந்தருளச் செய்வதற்கு (ஆவாஹனம்) மந்திரங்கள் செபிப்பார்கள். ஐந்துநாள், ஏழுநாள் என்று இவ்வாறு தொடர்ந்து மந்திரங்களைச் செபித்து அந்நீரை இறையாற்றல் பெற்ற மங்கல நீராக மாற்றுவார்கள். இவ்வாறு இறையாற்றல் ஏற்றப்பட்ட நீரைக் குடமுழுக்கன்று கருவறையிலுள்ள மூலவர் படிமத்துக்கும், அம்மூலவர் அமர்ந்திருக்கும் கோயில் கலசத்துக்கும் அபிடேகம் செய்வார்கள். இதனால் கருவறையில் இருக்கும் தெய்வப் படிவத்தின் ஆற்றல் மேலும் கூடும் என்பது அருளாளர்களின் கருத்து.

    மந்திரம் செபிக்கப்பட்ட மங்கல நீரைத் தெய்வப் படிவங்களின்மீது விடுவதால் அவற்றின் இறையாற்றல் அதிகரிப்பதனை நாம் கார்களின் மின்கலத்துக்கு மின்னாற்றல் ஏற்றும் செயலோடு (charging the car battery) ஒப்பிடலாம்.  கார்களின் மின்கலமானது உலோகத் தகடுகள், அமிலம் (sulfuric acid) மற்றும் தண்ணீர் சேர்ந்த கலவையில் அமுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதனால் மின்கலத்துக்கு மின்னாற்றல் கிடைத்துவிடுமா என்றால் இல்லை. அது இயங்கும் தன்மையற்ற dead batteryயாகத்தான் இருக்கும். மின்கலத்துக்கு மின்னாற்றல் வரவேண்டுமானால் அதனைப் பல மணிநேரங்கள் (at least 24 hours) மின்சாரத்தில் வைத்து மின்னாற்றலை ஏற்ற வேண்டும்.

    இதுபோன்றதுதான் வலிமைவாய்ந்த மந்திரங்களைப் பல மணிநேரங்கள் செபித்துக் க(கு)டத்து நீருக்குள் இறையாற்றலை ஏற்றி அந்த ஆற்றலைத் தெய்வப் படிமங்களுக்குக் குடமுழுக்கின் வாயிலாகக் கடத்துவதும்! மின்கலம் மின்னாற்றல் பெற மின்சாரம் தேவை! சாதாரண நீர் இறையாற்றல் செறிந்த மங்கல நீராக மாற நிறைமொழி மாந்தர்கள் உருவாக்கிய மந்திரமொழிகள் தேவை!

    கோயில் கோபுரங்களின் அழகைக் கூட்டுபவை அவற்றின் மீதிருக்கும் கலசங்கள். அந்தக் கலசங்களில் பல்வகை தானியங்களையும் நிரப்பி வைப்பர்.  ஒவ்வொரு குடமுழுக்கின்போதும் பழைய தானியங்கள் அகற்றப்பட்டுப் புதியவை நிரப்பப்படும். பஞ்சம் வரும் காலங்களில் இத்தானியங்களை எடுத்து விதைக்கப் பயன்படுத்தும் வழக்கங்கூட நம் மக்களிடையே இருந்திருக்கின்றது எனும் செய்தி வியப்பளிப்பதோடு நம் முன்னோர்களின் புத்திக்கூர்மையையும் புலப்படுத்துவதாயுள்ளது.

    இக்கோபுரக் கலசங்கள் தூல வடிவில் இறைவனைக் குறிக்கின்றன என்பது மூத்தோர் வாக்கு.  ஆக, தூல வடிவாய் இருக்கின்ற கோபுரங்களுக்கும், சூக்கும வடிவாய் இருக்கின்ற தெய்வப் படிமங்களுக்கும் மங்கல நன்னீராட்டி அவற்றின் ஆற்றலை அதிகப்படுத்துவதே  குடமுழுக்கின் அடிப்படை நோக்கமாகும்.

    நிறைவாக ஒன்று! மந்திரங்கள் மகத்தான ஆற்றல் வாய்ந்தவை. இவற்றில் வடமொழி தென்மொழி என்ற பேதமில்லை. வடமொழி மந்திரங்களுக்கு மட்டுமே இருப்பதாக நம்மில் சிலர் நம்பும் தெய்வீக ஆற்றல் தென்மொழியாகிய தமிழுக்கும் உண்டு!

    அதனாலன்றோ… 

    ”காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
    ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
    வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
    நாதன் நாமம் நமச்சி வாயவே.”
      என்று நமச்சிவாய மந்திரத்தின் மகிமையை விதந்தோதினார் காழிப்பிள்ளையார்.

    எனவே தமிழ்நாட்டுக் கோயில்களுக்குக் குடமுழுக்குச் செய்யும்போது தமிழில் மந்திரங்களை ஓதுவதே சிறப்பாக இருக்கும்; கடவுளர்க்கும் உவப்பாக இருக்கும்!

    *****

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. TVA_BOK_0010769_இராசராசேச்சுரம்.pdf

    2. https://ta.wikipedia.org/wiki/குடமுழுக்கு

    3. மந்திரங்கள் – பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் – கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017

    4. https://shaivam.org/thirumurai/third-thirumrai/999/thirugnanasambandar-thevaram-namashivaya-pathigam-kadhalaki-kasinthu

    5. http://tamil.webdunia.com/article/special-astro-predictions/in-the-cgopura-kalasam-putting-grains-reason-for-using-it-118062800016_1.html

     

    Share
  • மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு

    மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    நீரும் நீர் சார்ந்த நெய்தல் திணை வாழ் மக்களான மீனவர் எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும் தமது இயலுமைக்கு தகுந்தபடி கோயில் தொண்டு புரிந்துள்ளனர் என்பதற்கு சில கல்வெட்டுச் சான்றுகள் உள. இக்கல்வெட்டுகளில் மீனவர் ‘சிவன்படவர்’ என்று குறிக்கப்படுகின்றனர். இதன் மற்றொரு வடிவம் தான் ‘செம்படவர்’ என்பது. மீனவர் தீண்டத்தகாத மக்கள் பிரிவினர் அல்லர் என்பது குறிப்பிடத்தக்கது. 63 நாயன்மாருள் ஒருவரான அரிபத்த நாயனார் ஒரு சிறந்த சிவபக்தர். இவர் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த ஒரு மீனவத் தலைவர். இவருக்காக திருக்குவளை சிவன் கோவிலில் சிலை நிறுவி அமுதுபடி செய்வதற்காக ஆலன் என்ற மீனவர் காசு கொடுத்த செய்தி இடம் பெற்றுள்ளது. இனி கல்வெட்டும் அதன் விளக்கமும் கீழே.

    நாகபட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், தியாகராச சுவாமி கோவிலின் மகாமண்டப வடக்கு, மேற்கு ஜகதிப்படை வெட்டப்பட்ட 19 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள்

    2. ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 4

    3. வது மார்கழி மாதத்தொரு நாள் உ

    4. டையார் திருக்கோளிலி உடை

    5. யார் கோயிலில் முன்னாளில் சிவ[ன்]

    6. படவரில் ஆலன் எழுந்தருளிவித்த

    7. அதிபத்த நாயனார்க்கு திருப்படி மா

    8. ற்றுக்கு இவன் தன் சாதியார் பக்க

    9. ல் இரந்து பெற்ற காசாய்

    10. காலசேரி ஐய்யனையப் பட்டன்

    11. மகன் தாமோதரபட்டன் பக்கல்

    12. நெல் பொலிசைக்கு குடுத்த காசாய்

    13. இவன் ஒடுக்கின காசு 2100. இக்கா

    14. சு இரண்டாயிரத்தொரு நூறும்

    15. கைக்கொண்டு திருப்படி மாற்றுக்

    16. கு நாள் ஒன்றுக்கு இருநாழி அரிசி

    17. அமுதபடிக்கு அளப்போமாகவு

    18. ம் நாங்கள் இப்படி செய்வோ

    19. மாக ஸம்மதித்தோம்.

    திருப்படி மாற்றுக்கு – படையல் சோறு ஆக்குவதற்கான பண்டம்; பக்கல் – இடம், ஐந்தாம் வேற்றுமை; இரந்து – கெஞ்சி கேட்டுப் பெற்ற அல்லது பிச்சை எடுத்துப் பெற்ற; ஒடுக்கின – கட்டிய, paid

    விளக்கம்: சோழவேந்தன் மூன்றாம் ராசராசனின் 4-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1219) நாகை மாவட்டம் திருக்கோளிலி என்னும் திருக்குவளை தியாகராச சுவாமி கோவிலில் ஆலன் என்ற மீனவன் சில ஆண்டுகள் முன்பு மார்கழி மாதத்தே ஒரு நாள் தான் எழுந்தருளச் செய்த அதிபத்த நாயனார் படிமைக்கு படையல் செய்வதற்கான அரிசிக்கு வேண்டிய நெல்லைப் நாள்தோறும் பெறும் ஏற்பாடாக தன் சாதி மீனவர்களிடம் பிச்சை எடுத்துப் பெற்ற 2100 காசுகளை வட்டிக்குவிட்டு அந்த வட்டிப்பணத்தில் (பொலிசை) இதனை மேற்கொள்ளும் வகையில் காலசேரி ஐய்யனையப் பட்டன் மகன் தாமோதரப் பட்டனிடம் கொடுத்தான். இந்த 2100 காசுகளைப் பெற்றுக் கொண்டு நாள் ஒன்றுக்கு இருநாழி அளவு அரிசியை அளந்து அமுதுபடிக்காக இட்டு படையல் ஆக்கி படையல் காட்டுவோம் என்று ஒப்புக் கொண்டார்அவர். இது கோவில் சிவபிராமணர் சார்பில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஆகும். இதில் இடம்பெறும் சிவன்படவர் ஆலன் அகநாட்டு மீனவராஅல்லது கடற்கரை மீனவரா என்று தெரியவில்லை.

    பார்வை நூல்: நாகபட்டின மாவட்டக் கல்வெட்டுகள், பக்கம் 93 – 94, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

    கரூர் மாவட்டம், கரூர் வட்டம், திருமுக்கூடலில் உள்ள 36 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோராசகேசரி பன்மரான

    2. திரிபுவனச் சக்கரவத்திகள்

    3. ஸ்ரீவீரபாண்டிய தேவற்கு

    4. யாண்டு 15-வது தட்டையூர்நாட்டு

    5. திருமுக்கூடல் ஆளுடைய நாயனார்க்கு

    6. இரண்டுகரைநாட்டு சிவன்படவரோம்

    7. தென்கரை அல்லூர்

    8. பெருவழிக்கு மேற்குள்ள

    9. சிவன்படவரோம். மேற்கு முடிகொண்டத்துக்கு

    10. கிழக்கு உள்ள சிவன்படவரும்

    11. வடகரை சென்னகர் முறியான

    12. பெரியவளவன் பரத்தலைக்கு

    13. மேற்குள்பட்ட சிவன்படவரும்

    14. மேற்கு மணப்பள்ளி உள்பட கிழக்குள்ள

    15. சிவன்படவரோம் இந்நாட்டு

    16. உள்ப்பட்ட சிவன்படவரோம்

    17. இத்திருமுக்கூடல் ஆளுடைய நாயனாற்க்கு

    18. ஆறாம் திருநாளுக்கும்

    19. ஆளுடைய பிள்ளையாரை எழுந்தருள

    20. பன்னவும் சாத்துப்படிக்குப் பூச்சுப்படி

    21. அமுதுபடி கறியமுது உப்பமுது

    22. மிளகமுது நெய்யமுது பால் அமுது

    23. அடைக்காய் அமுது இலையமுது

    24. பந்தம் திருவிளக்கெண்ணை திருப்பள்ளித்தாம

    25. உள்ளிட்ட வற்கத்துக்கு பணம் 20. இப்பணம் இருபதும்

    26. திருநாள்கள்தோறும் குடுக்கக்கடவோமாகவும்

    27. தூபம் தீபம் கொம்பு திருச்சின்னம் இவையும் எங்கள்

    28. தன்மமாக இடக்கடவோமாகவும் இவை தாழ்வுபட்டால்

    29. மண்கலந்தும் வெண்கலம் எடுவித்தும் தடுத்துவந்த்தும்

    30. வீரபத்திரர்கள் வெட்டிக் கொண்டும் தண்டக்கடவார்களாகவும்

    31. இத்தண்டவந்தவர்களுக்கு சோறு பாக்கு இட்டு உபசரிக்கக்கடவோமாகவும்

    32. இன்நாட்டில் சிவன்படவர் ஒருகுடி இருக்கிலும்

    33. நாடு சோறு போட்டுப் பணம் தண்டி வந்து ஒருகடவோமாகவும்

    34. இப்படி சம்மதித்து கல்வெட்டிக் குடுத்தோம்

    35. உடையார் திருமுக்கூடல் ஆளுடைய நாயனார்க்கு இரண்டுகரை நாட்டு

    36. சிவன்படவரோம். இந்த தன்மம் மாற்றினார் உண்டாகில் வழி எழுச்சமறுவான்.

    பெருவழி – நெடுஞ்சாலை, highway; முறி – நகர்பகுதிஅல்லது சேரி; சாத்துப்படி – திருமேனி அலங்காரம்; திருப்பள்ளித் தாமம் – திருமேனிக்கு சாற்றும் மாலை; திருச்சின்னம் – ஊதுகுழலுள்ள இசைக்கருவி; அச்சம் – வாரிசு.

    விளக்கம்: கொங்கு பாண்டியனான வீரபாண்டியனின் 15-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1280) தட்டையூர் நாட்டில் அமைந்த திருமுக்கூடல் இறைவர்க்கு இரண்டுகரை ஊர்களிலும் வாழும் மீனவரான சிவன்படவர் இதாவது, தென்கரையிலுள்ள அல்லூர் நெடுஞ்சாலைக்கு மேற்கில் வாழும் சிவன்படவரும் மேற்கே முடிகொண்டத்துக்கு கிழக்கில் வாழும் சிவன்படவரும் அதேபோல் வடகரையில் சென்னகர் பகுதியான பெரியவளவன் பரத்தலைக்கு மேற்கில் அடங்கிய சிவன்படவரும் அதேபோல் மேற்கு மணப்பள்ளிக்கு உட்பட்ட கிழக்குப்பகுதியில் வாழும் சிவன்படவரும் ஆகியோர் உள்ளிட்ட இந்த நாட்டுச் சிவன்படவர் யாவருமாக இத்திருமுக்கூடல் இறைவர்க்கு ஆறாம் உற்சவ நாளில் ஆளுடையபிள்ளையாரை (ஞானசம்பந்தர்) எழுந்தருளச் செய்து திருமேனி அலங்காரத்திற்கும், பூசனைப்படி, அமுது படையல், பொறியல், உப்புச்சோறு, மிளகுச்சோறு, நெய்ச்சோறு, பால்சோறு, பாக்குச் சோறு, வெற்றிலை, தீப்பந்தம், விளக்கேற்ற எண்ணெய், திருமேனிக்கு சாற்றப்படும் மாலை ஆகிய செலவினங்களுக்கு இருபது பணம் ஒவ்வொரு ஆண்டின் உற்சவத்தின் போதும் கொடுப்போம் என்றும, இஃது அல்லாமல் தூபம், தீபம், கொம்புஊதல், திருச்சின்னம் எனும் ஊதுகுழல் இசைக்கருவியை ஆர்த்தல் ஆகியனவும் எங்கள் தர்மமாகச் செய்வோம் என்றும் இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தால் வீரபத்திரர்கள் வெட்டிக் கொண்டும், மண்கலந்தும், வெண்கலம் எடுத்தும், தடுத்து வந்தும் அப்பணத்தை திரட்டிக் கொள்ளலாம் என்றும், இப்படி திரட்டுபவர்களுக்கு சோறுபோட்டு வெற்றிலைப் பாக்கு கொடுத்து உபசரிப்போம் என்றும் இந்நாட்டில் ஒரேஒரு சிவன்படவர் வாழ்ந்தாலும் சோறுபோட்டு பணத்தை திரட்டி வந்து செலுத்துவோம் என்றும் இரண்டுகரைநாட்டு வாழ் சிவன்படவரும் திருமுக்கூடல் இறைவர்க்கு கல்வெட்டி உறுதி அளித்தோம். இந்த தர்மத்தை மாற்றுகின்றவன் ஏழு தலைமுறைக்கு பிள்ளை இல்லாமல் போகுவானாக என்று கூறுகின்றனர். இவர்கள் அகநாட்டு மீனவர்கள் ஆவர்.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக். 301. A.R.I.E.p 1917. B.No. 197 ஆசிரியர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்

    Share
  • சிகரம் சாய்ந்தது!

    சிகரம் சாய்ந்தது!

    முனைவர் ஔவை நடராசன்

    நான் சென்னைக்கு வந்த 1955ஆம் ஆண்டிலிருந்து எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமாகத் தெரிந்த கொள்கைக் கோமான் – நீதி வேந்தர் – பு.ரா.கோகுலகிருஷ்ணன் அவர்களின் மறைவைப் பழுத்த கனி உதிர்ந்தது போலத்தான் என்று எழுதிவிட முடியாது.
     
    பழுத்த அந்த மாமரம், ஆயிரம் கனிகளைத் தந்த பயன்மரமாகும். ஏ.எல்.முதலியார் குடும்பத்தை உலகம் காணாத இரட்டையர் குடும்பம் என்பார்கள் ஆனால் தமிழினத்தில் மூன்று கிளைகளாகப் பூத்துக் கனிந்த அறிவார்ந்த புகழ்ச் செல்வங்கள் என்ற பெருமை நீதி வேந்தர் குடும்பத்தைத்தான் சாரும்.
     
    பேரறிஞர் அண்ணாவின் மனங்கனிந்த மூவராக – மருத்துவ மேதை பாலகிருஷ்ணன், பொறியியல் திலகம் இராதாகிருஷ்ணன், நீதிச் சிகரம் கோகுலகிருஷ்ணன் ஒளிர்ந்தார்கள் .
     
    நாம் கண்ணாரக் காண வாய்த்த மூவேந்தர்கள் எனலாம். தமிழ்க்கடல் பள்ளியகரம் நீ.க. அவர்களின் மருகர் தான் டாக்டர் பாலகிருஷ்ணன். பள்ளியகரம் பிள்ளை அவர்கள், நீதியரசர் கோகுலகிருஷ்ணனைப் புகழ்ந்து பேசாத நாளில்லை. மூவரும் ஒரே இல்லத்தில் ஜெனரல் பேட்டர்ஸ் சாலையிலும் பிறகு அடையாற்று வளமனையிலும் வாழ்ந்த காலங்கள் நம் இமைகளை நனைக்கின்றன.
     
    அந்த வளமனைக்கு வராத தலைவர்கள் இல்லை. தந்தை பெரியார் முதல், தமிழ்ப்புலவர் அனைவரும் வந்து விருந்தருந்தியதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.
     
    சௌந்தரம் அம்மையார் அவர்களின் வளர்ப்பு மகன் போல நான் இருந்த போது, நீதியரசர் என்னைத் தழுவி, “அம்மாவுக்குப் பிடித்த பிள்ளை” என்ற சொல்லை எந்த நாளும் காக்க வேண்டும் என்று ஒரு முறை சொன்னார்.
     
    அம்மாவோ “மகனே!  இவர் என் தம்பி” என்று நீதியரசரைச் சுட்டிக் காட்டினார். நீதியரசர் இனமானம் காக்கும் நெடுந்தூணாக நின்று இலக்கியம், இசை, கலை, கல்வி, பண்பாடு ஆகிய பல்வேறு நிலைகளில் மாபெரும் பணிகளை வெற்றியோடு நிறைவேற்றினார்.
     
    இனிமையான குரலில் – கவினார்ந்த தமிழை – கடல்மடை திறந்தது போல் உரையாற்றுவார்.
     
    அவரால் தொடங்கப்பட்டதே “மணவழகர் மன்றம்.” ,அவர் வெகுண்டு எவரும் பார்த்ததில்லை. பரிவின் பிழம்பாக வாழ்ந்தார். அவர் விரல் பிடித்து என்னை மணவழகர் மன்றப் படியில் நடக்க வைத்தார். கல்லூரிப் படிப்பை நான் முடித்தபோதே “சென்னை பல்கலைக்கழகத்தில் உன்னைச் சேர்த்து விடுகிறேன் – உன் மாமனாரும் – வருங்கால மனைவியும் எனக்கு மிக வேண்டியவர்கள். நான் பிள்ளை வீட்டுக்காரனா – பெண் வீட்டுக்காரனா என்று தெரியவில்லை” என்று பேசியதை நினைத்தால் இன்றும் என் கண்கள் கலங்குகின்றன .
     
    நான் அப்போலோவில் இதய மருத்துவத்தில் இருந்த போது, தொலைபேசியில் என்னை வினவியதை மறப்பதில்லை. ஆண்டுதோறும் தமிழிசைச் சங்க விழாவில் நான் அவரைக் காண்பது வழக்கம்.
     
    மருத்துவர் இராம்குமார் இல்ல அழைப்பிதழ் என் எதிரில் இருக்கிறது. நீதியரசர் திருப்பெயரைக் கண்டு அவ்வளவு மகிழ்ந்தேன்.
     
    எப்படி ஆறுதல் கொள்வது!
     
    மூவர் வாழ்வும் முடிந்துவிட்டது.
    மூவேந்தரால் வளர்ந்தது தானே முத்தமிழ்!
    Share
  • அணிநடை அன்னம்!

    அணிநடை அன்னம்!

    -மேகலா இராமமூர்த்தி

    பண்டைத் தமிழர்கள் நிலத்தையும் பொழுதையும் வாழ்வின் முதற்பொருளாய்க் கருதியவர்கள். மாவொடும் புள்ளொடும் மகிழ்ச்சியாய் வாழ்ந்தவர்கள். பூக்களையும் அவற்றைச் சுற்றிவந்த பல வண்ண ஈக்களையும் இரசித்தவர்கள். இயற்கையோடு பிணக்கமில்லா இணக்க வாழ்வு அவர்களுடையது. அந்த இன்ப வாழ்வின் பிரதிபலிப்பை அற்றைத் தமிழ்ப் புலவோரின் தீந்தமிழ்ப் பாடல்கள் தெற்றெனப் புலப்படுத்துவதே இதற்குத் தக்க சான்றாகும்.

    பறவைகள் குறித்த பழந்தமிழ்ப் பாடல்களை ஆராய்ந்தால், காக்கை, குருவி, குருகு, கூகை, மயில், குயில், அன்னம், அன்றில் எனத் தம் வண்ணத்தாலும் வனப்பாலும் எண்ணங் கவர்ந்த பல்வேறு பறவைகளைப் புலவர்கள் நுணுகி ஆராய்ந்து அவற்றின் இயல்புகளை மிகையின்றிப் பதிவு செய்திருக்கின்றார்கள். இப்பறவைகளில் அன்னம் குறித்து நம் புலவர்களின் எண்ணவோட்டம் என்ன என்று ஒருசிறிது ஆராய்வோம் ஈண்டு!

    நீர்நிலைகளில் வாழும் இயல்புடையது அன்னப்புள். வெள்ளை, கறுப்பு, சாம்பல், இவற்றின் கலவை ஆகிய நிறங்களில் அவை காட்சிதரும். வாத்தும் அன்னமும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த பறவைகளே. ஆம், அன்னம் என்பது பட்டைத்தலையுடைய பெரிய அளவிலான வாத்துதான் (Bar-headed goose). ஆனால் அன்னத்தின் நடையில் இருக்கும் நளினமும் கவர்ச்சியும் வாத்திடம் கிடையாது!

    இந்த ’நடை’ வேறுபாட்டைக் கவனித்த புலவர்கள் அன்னத்தின் அழகிய நடையைப் பெண்டிரின் நளின நடைக்கு உவமைக்கியிருக்கிறார்கள். அழகை எங்குக் கண்டாலும் எவற்றினிடத்துக் கண்டாலும் அதனைப் பெண்ணொடு பொருத்திப் பார்ப்பது என்பது ஆண்களின் உளவியலாகவே அன்றுதொட்டு இன்றுவரை தொடர்கின்றது. அதற்குப் புலவர்கள் மட்டும் விலக்காவரோ?

    புகழேந்திப் புலவர் இயற்றிய புகலரு சிறப்புடைய நளவெண்பாவில் ஒரு நயமான காட்சி…

    நிடத நாட்டரசனாகிய நளன் சோலையில் உலவிக்கொண்டிருக்கின்றான். அப்போது வெண்ணிற அன்னம் ஒன்று செந்நிறப் பாதங்களோடு ஆங்கே தோன்றிற்று. அதன் தோற்றப் பொலிவில் சிந்தை பறிகொடுத்த நளன் அதனைப் பிடித்துவருமாறு தன் சேடிப் பெண்களை ஏவ, மயிலொத்த சேடியர் ஒயிலாக ஓடிச்சென்று அவ் அன்னத்தைப் பிடித்துவந்து அரசன்முன் பணிவாக வைத்தனர்.

    பிடிபட்ட அன்னமோ அரசன் தன்னை என்ன செய்யப்போகிறானோ என்று அஞ்சி நடுங்கியது. நளன் அதனிடம், ”அஞ்சாதே மட அன்னமே! உன்னுடைய அணி நடையையும் வஞ்சிக்கொடி அனைய மங்கையரின் மணி நடையையும் ஒப்பிட்டுப் பார்த்து இவற்றில் சிறந்த நடை எது என்று தெளியும் பொருட்டே உன்னைப் பிடித்துவரச் சொன்னேன்; வேறொன்றுமில்லை” என்று உண்மைசாற்றி அதனைத் தேற்றுகின்றான்.

    அஞ்சல் மடஅனமே உன்றன் அணிநடையும்
    வஞ்சி அனையார் மணிநடையும் – விஞ்சியது
    காணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டு
    மாணப் பிடித்ததார் மன்
    .  (நளவெண்பா – 34)

    அன்னத்தின் நடையைக் கண்ணகி நல்லாளின் கவின் நடைக்கு உவமைகாட்டுகின்றார் சிலம்பின் ஆசிரியர் இளங்கோவடிகள். அக்காட்சியைக் காண்போம்!

    புகாரிலிருந்து மதுரைக்குப் பொருள்தேடிப் பயணமான கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகள் எனும் சமணத்துறவியின் துணையோடு மதுரை மூதூரை அடைகின்றனர். அங்கே பூக்களையே ஆடையாய்ப் போர்த்துச் செல்லுகின்றாள் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி.
    அவ் அருங்காட்சியைக் கண்ட அன்னநடைப் பெண்ணாள் கண்ணகியும், ஐயனான கோவலனும், ”இது புனல் ஆறன்று; பூம்புனல் ஆறு” என்று அதனைத் தொழுதனர் என்கிறார் அடிகள்.

    புனல்யா றன்றிது பூம்புனல் யாறென
    அனநடை மாதரும் ஐயனுந் தொழுது…
    (சிலப் – மதுரைக்காண்டம்: 174-175)

    அழகிய அன்னப்புள்ளைத் தம் உள்ளத்தை உரைக்கும் காதல் தூதாக விடுத்த பாடல்கள் தமிழிலக்கியத்தில் பல உள. ’தூது’ என்பது ஒரு தனிச்சிற்றிலக்கிய வகையாக வளர்ச்சியடைந்தது பதினான்காம் நூற்றாண்டில்தான் எனினும், அதன் தொடக்கத்தைச் சங்க நூல்களிலேயே நாம் காணமுடிகின்றது.

    அன்னச்சேவலைத் தம் ஆருயிர்த் தோழனான சோழ மன்னனிடம் தூது விடுக்கும் பிசிராந்தையாரின் புறப்பாட்டு இது!

    அன்னச் சேவ லன்னச் சேவல்…
    ….குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
    வடமலைப் பெயர்குவை யாயி னிடையது
    சோழநன் னாட்டுப் படினே கோழி
    உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
    வாயில் விடாது கோயில் புக்கெம்
    பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்
    ஆந்தை யடியுறை யெனினே மாண்டநின்
    இன்புறு பேடை அணியத்தன்
    நன்புறு நன்கல நல்குவ னினக்கே
     (புறம் – 67)

    ”அன்னத்தின் சேவலே! (ஆண் அன்னமே) நீ குமரித்துறையிலே அயிரை மீனை வயிறார உண்டுவிட்டு இமயத்தை நோக்கிப் பறக்கின்றனையா? அப்படியாயின், இவ்விரு பகுதிகட்கும் இடையிலுள்ள சோழநாட்டுக்குச் செல்வாயானால், ஆங்கே உறையூர் எனும் ஊர் உளது. நீ அங்குச் சென்றால் அங்குள்ள அரண்மனையின் உயர்ந்த மாடத்தில் தங்க வேண்டும்; ஆனால் அங்கு வாயிற் காவலர்கள் இருப்பர். எனவே அவர்களுக்கு உன் வரவை உணர்த்தாது நேரே அரண்மனைக்குள் செல்! அங்கே எம் மன்னனாகிய பெருங்கோக் கிள்ளி இருப்பான். அவன் காதில் விழுமாறு நான் பிசிராந்தையாரின் அடிக்கீழ் வாழ்பவன் என்று சொல்! அப்புறம் பார்! உன் மதிப்பு மிக்க பேடை பூணுதற்கு நல்ல அணிகலன்களையெல்லாம் அள்ளித் தருவான் அவன்!” என்று கோப்பெருஞ்சோழனுக்கும் தனக்கும் இருந்த நட்பின் பெட்பினை அன்னச்சேவலிடம் அன்பொடு கூறி அதனை அவன்பால் தூதுவிடுக்கிறார் ஆந்தையார்.

    அன்னப்பறவைகள் வானில் விரைந்து பறக்கும் தன்மையன. அதனால் வினைமுடித்துத் திரும்பும் தலைமகன் ஒருவன் தன் தேர்ப்பாகனிடம், ”பாக! வானில் பறந்துசெல்லும் அன்னப்பறவைகள்போல் குதிரைகளை விரைந்து செலுத்து! அழகிய மையுண்ட கண்களையும், செழித்த கூந்தலையும், சிறு நுதலையும் உடைய என் தலைவியை நான் இப்பொழுதே காணவேண்டும்!” என்று துரிதப்படுத்தும் அழகிய பாடல் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

    …வயங்குசிறை அன்னத்து நிரைபறை கடுப்ப
    நால்குடன் பூண்ட கானவில் புரவிக்
    கொடிஞ்சி நெடுந்தேர் கடும்பரி தவிராது
    இனமயில் அகவுங் கார்கொள் வியன்புனத்து
    நோன்சூட் டாழி ஈர்நிலம்துமிப்ப
    ஈண்டே காணக் கடவுமதி பூங்கேழ்ப்
    பொலிவன அமர்த்த உண்கண்
    ஒலிபல் கூந்தல் ஆய்சிறு நுதலே.
      (அகம் – 334 – மதுரைக் கூத்தனார் – பிற பாட பேதங்கள்: மதுரைக் கடாரத்தனார்; மதுரைக் கந்தரத்தனார் ; மதுரைக் கோடரத்தனார்.)

    நடையழகிற்கும், விரைந்து பறக்கும் திறனுக்கும் மட்டுமன்றி மென் தூவிகளாலும் (இறகுகள்) சிறப்புடையன அன்னங்கள். அம்மென் தூவிகளை அன்றைய தமிழர் தம் பஞ்சணைகட்குப் பயன்படுத்தியமையைச் சங்க நூல்கள் அறியத்தருகின்றன.

    நெடுநல்வாடையில் போர்மேற்சென்ற அரசனைப் பிரிந்து தனித்திருக்கும் கோப்பெருந்தேவியின் பாண்டில் எனும் வட்டக் கட்டிலின் அமைப்பையும் அழகையும் விவரிக்கவரும் நல்லிசைப் புலவர் நக்கீரனார்,

    ”துணையைப் புணர்ந்தபோது உதிர்ந்த அன்னங்களின் தூவியை இணைத்து உருவாக்கப்பட்ட பஞ்சணையை மேன்மையுண்டாக விரித்து, அதன்மேல் தலையணை சாயணை முதலிய அணைகளை இட்டுவைத்து, நன்கு கஞ்சியிட்டுக் கழுவப்பட்டு, மலரிதழ்களை அகத்தே வைத்து மணமேற்றப்பட்ட தூய மடி விரிக்கப்பட்ட படுக்கையைத் தாங்கிய கட்டில் அது” என்று அதன் சிறப்பை நம்கண்முன் நிறுத்துகின்ற காட்சி படித்தின்புறத்தக்கது.

    மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
    துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி
    இணையணை மேம்படப் பாயணை யிட்டுக்
    காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
    தோடமை தூமடி விரித்த சேக்கை
    (நெடுநல்வாடை : 131-135)

    ”துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த
    இணையணை மேம்படத் திருந்து துயில்”
    என்று அன்னத்தூவியால் அமைந்த அணையை ஆசிரியர் இளங்கோவும் சிலப்பதிகாரத்தில் காட்டுகின்றார்.

    எத்துணை இரசனையோடு உலகியல் இன்பங்களைத்

    துய்த்திருக்கின்றான் அற்றைத் தமிழன் என்பதற்குச் சான்றுகள் இவை!

    அன்னத்தைப் பற்றிப் புலவர்கள் பதிவுசெய்திருக்கும் கருத்துக்கள் அனைத்துமே உண்மை என்று கொள்ளுதற்கில்லை. அவற்றில் உண்மையல்லாக் கற்பனைகளும் கலந்திருக்கவே செய்கின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான் அன்னம் பாலையும் நீரையும் பிரித்துப் பாலை மட்டும் பருகும் எனும் கருத்து.

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்தநிலையில் வைத்துப் போற்றப்படும் நாலடியார், அன்னப் பறவை பாலையும் நீரையும் பிரித்துப் பாலை மட்டும் பருகும் தெளிந்த செயலைப்போல் நீங்களும் கற்கத் தக்கனவற்றைக் கற்றிடுங்கள்; அத்தகுதியற்றவற்றை விலக்கிடுங்கள் என்று அறிவுறுத்துகின்றது.

    கல்வி கரையில கற்பவர் நாள்சில
    மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
    ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
    பாலுண் குருகின் தெரிந்து
    (நாலடியார் – 135)

    அன்னத்திற்கு இத்தகு பண்புண்டு என்பதைப் பறைசாற்ற இதுவரை அறிவியல் சான்றாதாரங்கள் ஏதும் கிட்டவில்லை. அல்லவற்றை நீக்கி நல்லவற்றைக் கைக்கொள்ளுதற்கு மனிதனுக்கு வழிகாட்டப் புராணங்கள் மேற்கொண்ட ’ஹம்ச க்ஷீர நியாயம்’ எனும் ஒரு கற்பனை முயற்சியே இஃது என்று கொள்வதில் பிழையில்லை.

    அன்னப்பறவை குறித்த மற்றோர் உண்மை, மேலைநாட்டு அன்னப்பறவையான சுவானும் (swan) நம் நாட்டு அன்னப்பறவையான பட்டைத்தலை வாத்தும் (Bar-headed goose) ஒன்றல்ல என்பதே. இவ்விரண்டையும் ஒன்றென எண்ணி நாம் மயங்குதற்கு, இரவிவர்மா போன்ற புகழ்வாய்ந்த இந்திய ஓவியர்களும் காரணம் எனலாம். தம்முடைய மேற்கத்தியத் தாக்கத்தால் மேல்நாட்டு சுவானை இந்திய அன்னம் என்று கருதுமாறு அவர் வரைந்ததன் விளைவு, இந்தியர் பலரும் நம் நாட்டு அன்னப்பறவை எது என்று கேட்டால் மேனாட்டு அன்னத்தைத்தான் அடையாளம் காட்டுகின்றார்கள் என்று கருத்துத் தெரிவிக்கின்றார் சூழலியல் ஆர்வலரும் எழுத்தாளருமான, திரு. சு. தியடோர் பாஸ்கரன்.

    இந்தியப் பறவைகள் குறித்த நம்முடைய புரிந்துகொள்ளும் அறிவை மேம்படுத்திக் கொள்ளுதலே இவைபோன்ற குழப்பங்களுக்கு விடைகொடுக்கும். அதற்கு நாம் செய்யவேண்டியது, கணினியோடு கழிக்கும் நேரத்தில் சிறிதைக் குறைத்துக் கானுயிர்களோடு களிக்கவும் நேரம் ஒதுக்குதலே ஆகும். இயற்கையோடு கை கோப்போம்! இன்பத்தை அள்ளிச் சேர்ப்போம்!

    *****

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/174630-11.html

    2. புறநானூறு –- ஔவை சு. துரைசாமிப் பிள்ளை உரை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை – 18

    3. அகநானூறு – நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு, ரா. வேங்கடாசலம் பிள்ளை உரை, வெளியீடு – பாகனேரி
    வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார்.

    4. புகழேந்திப் புலவரின் நளவெண்பா –  கழகப்புலவர், செல்லூர்க்கிழார்,
    திரு.செ.ரெ. இராமசாமிப்பிள்ளை அவர்கள் எழுதிய உரையுடன்.

     

     

     

    Share
  • 35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ்

    35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ்

    கலைமாமணி வீ.கே.டி. பாலன்

    எமது நிறுவனம் “மதுரா” 35ஆவது ஆண்டில் காலடி வைக்கிறது …❗

    ஒரு பரவசத்துடனும், சிறிது பெருமிதத்துடனும், நிறைய நன்றிக் கடனோடும் திரும்பிப் பார்க்கிறேன்.

    1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி திருச்செந்தூரை விட்டு without ticketஇல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கியவன் நான்.

    வேலை கிடைக்காது 6, 7 மாதத்தில், ஒரு மனநோயாளியாக ஒட்டிய வயிறோடும் கிழிந்த ஆடையுடனும் எழும்பூர் ரயில்வே நிலைய பிளாட்பாரத்தில் வாழ்ந்து திரிந்தவன்.

    அமெரிக்க தூதராலய வாசலில் விசா பெற வாசலில் இடம் பிடித்துக் கொடுத்து ரூ. 2/= பெற்றுக்கொண்டதே எனது முதல் வருமானம்.

    அதிலிருந்து கிடைத்த வளர்ச்சியில் 1986 ஜனவரி 17இல் 58, மண்ணடி தெரு, சென்னையில் ரூ. 10, 000/= முன்பணத்தில் ரூ. 1, 000/= வாடகையில் மதுரா டிராவல்ஸ் சர்வீஸ் உதயமானது.

    ஆயிரம் ஆயிரம் அவமானங்கள், ஆயிரம் ஆயிரம் தோல்விகள் எங்குத் திரும்பினாலும் இதுவே எனது வாழ்க்கை. இதுவே எனது அனுபவம். அவமானமும் தோல்விகளும் சிலரை அடியோடு அழித்துவிடும். எனக்கோ அவையே உரமாக அமைந்தன.

    இன்று மதுரா டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட், தமிழகத்தின் முன்னணி நிறுவனம் என்பதனையும் தாண்டி, உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது.

    சுற்றுலாப் பயணத் துறையின் அத்தனை உயரிய அங்கீகாரங்கள் பெற்றிருந்தும், அவற்றையும் தாண்டி, தமிழக அரசின் “கலைமாமணி” விருதும் கிடைத்தது நான் பெற்ற பேறு.

    அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற 10ஆவது உலகத் தமிழாராச்சி மாநாடு உட்பட பல உலக மாநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயண முகவராகச் சிறப்பாக பணியாற்றியுள்ளோம்.

    25க்கும் மேற்பட்ட நாடுகளில் 1500க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு 250க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளையும் இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தியுள்ளோம் என்பதில் பேருவகை அடைகிறோம்.

    என்னை ‘உழைப்பால் உயர்ந்தவர்’ என்று பொதுவெளியில் பாராட்டும் போது கொஞ்சம் கூசித்தான் போகிறேன். என் மனசாட்சி “யார் உழைப்பால் நீ உயர்ந்தாய் ” என என்னைக் கேட்கிறது. திறந்த மனத்தோடு இப்போது பதில் சொல்கிறேன் “என் ஊழியர்களின் உழைப்பால்தான் நான் உயர்ந்திருக்கிறேன்”.

    சில நேரத்தில் ‘படிப்படியாக உயர்ந்தவர்” என்று கூட என்னைப் பாராட்டுவதுண்டு. அப்போதும் என் மனசாட்சி என்னை நோக்கிக் கேட்கும். “யார் படிகளாக இருந்தார்கள்?” என்று. இப்போது பதில் சொல்கிறேன். அமரர் திருமதி சந்திரா ராமகிருஷ்ணன், அமரர் முருகேசு அண்ணன், அமரர் அண்ணன் பாலகிருஷ்ணன், திரு. M. K. M.புஹாரி, இம்பீரியல் அமரர் மாப்பிள்ளை முதலாளி, அமரர் S சீர்காழி கோவிந்தராஜன் ஐயா, அமரர் TM.சௌந்தரராஜன் ஐயா, திருமதி. P. சுசீலா அம்மா, திரு. B. H. அப்துல் ஹமீது, திரு. அப்துல் ஜபார், திரு. ராமசாமி, திரு. கோவை நந்தன், ஸ்விஸ் மூர்த்தி, லண்டன் சிவா, அமரர் புஸ்பராஜா, திரு. S. செல்வநாயகம், திரு. K. செல்வராஜ், திரு. K V நாராயணன், திருமதி. கற்பகம் கணேசன், திரு. ராஜசேகரன், அமரர் விக்ரமன், அமரர் சேஷாத்ரி நாதன் (UBI) ,திரு. அழகுராஜன், திரு. S. அனந்த நாராயணன், திரு. S. குமார், திருமதி. ராதா, திருமதி. ஆரிபா, திருமதி. சியாமளா, திருமதி. பாண்டீஸ்வரி, திருமதி. தீபா மற்றும் என் வாழ்வின் அத்திவாரம் என் அன்பு மனைவி சுசீலா, மற்றும் என் உயிரினும் மேலான வாடிக்கையாளர்கள்.

    உங்கள் ஆசியோடும் அன்போடும் தொடர்கிறோம் எங்கள் பணியை. நன்றி. வணக்கம்.

    இவ்வண்ணம்,

    கலைமாமணி VKT பாலன், தலைவர், மதுரா டிராவல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்
    Cell. No. +91 98410 78674
     
    மற்றும் ஶ்ரீஹரன் பாலன்
    Cell.No. +91 98410 78675
    Share
  • பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு

    பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு

    -முனைவா் அரங்க. மணிமாறன்
    முதுகலைத் தமிழாசிரியா்

    அரசு மேனிலைப்பள்ளி-   பரமனந்தல்
    செங்கம் – 606710.
    பேசி 9943067963.

    *****

    தனிமனித உணா்வுகளைப் பாடுபொருளாகக் கொண்டு விளங்கியவை சங்கப்பாடல்கள். மனித மனங்களில் படிந்துகிடந்த தீயொழுக்க அழுக்குகளைப் போக்கி நல்லொழுக்கக் கருத்துகளை பொருண்மையாகக் கொண்டவை நீதிநூல்கள். ஒப்பற்ற தலைவனின் வீரதீரங்களை வெளிப்படுத்தியவை காப்பியங்கள். தொன்மக் கருத்துகளை புராண இதிகாசங்கள் வெளிப்படுத்தின. புலவா்களின் மதிநுட்பங்களைச் சிற்றிலக்கியங்கள் வெளிக்காட்டின. பாரதியார் போன்ற புலவா்கள் விடுதலை கீதங்களை இசைத்தனா். பிற்காலப் புலவர்களும் படைப்பாளிகளும் சமுதாயவியலுக்கு முக்கியத்துவம் அளித்தனா்.

    பேரறிஞர் அண்ணாதுரை:

    “எல்லாத்துறையும் அண்ணாத்துரையே” எனும்படி அரசியல், பொருளாதாரம், மேடைப்பேச்சு, இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் தமது ஆளுமையால் கோலோச்சியவா் பேரறிஞர் அண்ணா.

    “அண்ணாவின் கதைகளைக்கொண்டு அக்கால நாடக உலகம், மேடைப்பேச்சு விஷயங்கள், வணிகர்களின் நடைமுறைகள், தம் இறுதிநாளில் இருந்த ஜமீன் பரம்பரை நடவடிக்கைகள் செல்வந்தர்களின் வழக்கங்கள் உள்ளிட்டவற்றை அறியலாம்” 1 என்கிறார் பேரா. பெருமாள் முருகன்.

    தமது சிந்தனை, பேச்சு, எழுத்து, செயல்பாடுகள் அனைத்திலும் போலி மதவாத எதிர்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை விதைப்பு, சமுதாயத்திலும் அரசியலிலும் உள்ள சீர்கேடுகளை வெளிக்காட்டுதல், புராணப் புளுகுகளை தோலுரித்தல் ஆகியவற்றின் மூலம் மக்கள் அனைவரும் பேதங்களின்றி வாழ்ந்து அனைத்து உரிமைகளையும் பெற்று வாழவேண்டும் என்ற அவருடைய பொதுவுடைமைச் சிந்தனை வெளிப்படுத்துவதைப்பற்றி டாக்டா் மா. தியாகராஜன்,

    “இவரின் சிறுகதைகள் அரசியல், சமுதாயம், ஆணாதிக்கம், பெண்ணடிமை, சாதிக்கொடுமைகள், ஏழ்மையின் நிலை, அதைப் போக்குவது எங்ஙனம் என்ற தீர்வைக் கொண்டனவாகவே உள்ளன” 2 என்று தமது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

    அத்தகைய பொருண்மைகள், சமுதாய விழிப்புணர்வுக் கருத்துகளாக வெளிப்படுவதை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    பத்திரிகை தர்மம் வேண்டும்:

    இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக (FOURTH ESTATE) விளங்குவது இதழியல் துறையாகும். இதழியல் மக்களுக்கு அறிவிக்கிறது, பொது அறிவை ஊட்டுகிறது, வழிநடத்துகிறது. எனவே செய்திகளை வழங்கும்போது நடுநிலையோடும் உண்மையானதுமான செய்திகளை வெளியிடவேண்டும். தனிநபரின் வாழ்வுக்கும் புகழுக்கும் இழுக்கு ஏற்படாவண்ணம் செயல்பட வேண்டும்.

     “சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்ததொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி”3  எனும் திருவள்ளுவரின் சான்றோர் இலக்கணம் இதழியல் துறைக்கும் பொருந்தும்.

    ஆனால் இன்றைய இதழியலாளா்கள் போட்டி நிறைந்த உலகியலில்  தங்கள் இதழ்களை மக்கள் அதிகம் படிக்கவேண்டும், விற்பனையாகவேண்டும் என்ற வியாபாரப் போட்டியினால் பயனற்ற – உண்மையற்ற – தனிநபரின் பாதிப்புகளைக் கவனத்தில் கொள்ளாத செய்திகளைக் கற்பனை, வருணனை கலந்து விற்பனை நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வெளியிடுகின்றனர். இதழ்களின் விற்பனையைக் கொண்டே அவற்றின் தரமும் வளர்ச்சியும் புகழும் அளவிடப்படுகிறது.

    தந்தை பெரியாரிடம் சென்று ஒருவா் தாம் பத்திரிகை ஒன்றைத் தொடங்கவிருப்பதாகக் கூறி வாழ்த்துப்பெற வந்தபோது “சோத்துக்கு என்ன செய்யப் போற?” எனக் கேட்டாராம். படிப்பதற்கு நையாண்டியாக இருந்தாலும் இதழியல் உலகின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நன்கு அறிந்த பழுத்த அனுபவத்தின் வெளிப்பாடாக இக்கூற்று அமைவதை அறியலாம்.

    நல்ல நோக்கோடு செயல்படும் இதழ்கள் சில, கவர்ச்சிகர இதழ்களின் நடுவே காணாமல் போகின்றன. இவற்றை நன்கு அனுபவமாக உணா்ந்த அண்ணா தமது ’கொக்கரக்கோ’ சிறுகதையில் சுந்தரம் தன் நண்பரிடம் தான் ‘கொக்கரக்கோ’ என்ற பெயரில் இதழ் நடத்துவதாகவும் அதில் ’வீரா் வெல்லிங்டன்!’  ’மனிதனுக்கு ஒரு தலை போதுமா?’ ’ஹிட்லர் பட்லரானால்’ உள்ளிட்ட தலையங்கங்கள் எழுதி இதழை வளா்த்த கதைகளைக் கூறுகிறார்.

    “கேள் சங்கரா! சுற்றி வளைத்துப் பார்த்தேன் திடீரென்று ஒரு யுக்தி கிளம்பிற்று. எடுத்தேன் பேனாவை ஹிட்லர் பட்லரானால்? என்று கேள்வி ஒன்று கிளப்பினேன். விற்பனை பலத்தது. 32 பி.ஏ க்களை நிருபா்களாகவும் பார்சல் குமாஸ்தாக்களாகவும் வைத்துக்கொண்டேன்.” என்றும்

    “கருணைப்பிள்ளை நர்த்தனம்
    பரதநாட்டியம் ஒரு பழங்கலை”4
    என்றும் செய்தி வெளியிட்டதாகக் கூறுகிறார்.

    இதழ்நடத்தி நட்டமடைந்து புத்தி பேதலித்த சுந்தரம்வழி இதழியலின் நிலைகளை வெளிப்படுத்தியுள்ளார் அண்ணா.

    உழைப்பாளர் உயரவேண்டும்:

    ஊருக்குச் சோறுபோடும் விவசாயி பட்டினி கிடக்கிறான். துணிநெசவு செய்துதரும் நெசவாளி கந்தையை உடுத்துகிறான். அனைவருக்கும் வீடுகட்டித் தரும் தொழிலாளி கூரைவீட்டில் குடியிருக்கிறான். இத்தகு முரண்பாடுகளுக்குக் காரணமென்ன?

    ஒரு பொருளை உற்பத்தி செய்பவனுக்கும் நுகர்வோருக்குமிடையில் இருக்கும் இடைத்தரகர்கள் இதற்குக் காரணம். அவா்களின் சுயநலத்தினால் பொருட்களின் உற்பத்தி விலை பன்மடங்கு உயா்ந்துவிடுகிறது. வாழ்வின் அடிப்படைத் தேவையான பொருட்களுக்கும் ஏற்படும் இவ்விலையுயா்வு ஏழை நடுத்தர வா்க்கத்தினரைப் பாதிப்பதை தமது ’சரோஜா ஆறணா!’ சிறுகதையில் வெளிப்படுத்தியுள்ளார் அண்ணா.

    ’சரோஜா ஆறணா!’ என நடுத்தெருவில் ஒருவன் கூவிக்கூவி விற்றதும் நாயகனுக்கு கோபம் வந்து காலம் எவ்வளவு கெட்டுவிட்டது? பெண்ணை நடுத்தெருவில் விலைகூவி விற்பதா? எனச் சண்டைக்குச் செல்கிறான். கூவியவனுக்கும் இவனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நாயகனை அடித்துவிடுகிறான். நடுத்தெருவில் ஒரு பெண்ணை விலைகூறியதைத் தட்டிக்கேட்டதற்கு அடித்தீரே! எனக் கேட்டதற்கு, “இது நூல்மார்க்கெட் தம்பி! சரோஜா மில் நூல் விலை 44-6-0 என்பதையே தான் சரோஜா ஆறணா என்று விற்றதாகக் கூறுகிறான். அதனைத்தொடரும் உரையாடல்களில் உற்பத்தி விலைக்கும் நுகர்வோர் பெறுகின்ற விலைக்குமிடையேயான மலையளவு வேறுபாட்டையும் ஏழைகள் அவற்றை அதிக விலைகொடுத்து வாங்கித் துய்க்க வேண்டிய நிலையையும் விளக்கியுள்ளார்.

    “இன்றைக்கு இருக்கும் விலை நாளைக்குக் கிடையாது. மணிக்கு மணி தந்தி வருகிறது! இடையிலே இருந்து பலா் இலாபமடிக்கின்றனா். ஆா்டா் கொடுப்பவருக்கு நூல் பேல் தேவையில்லை. ஆனால் பணம் இருக்கிறது. வியாபார சூட்சுமம் இருக்கிறது. 200 பேல் வாங்குவார். ஒரு வாரத்திலே 40 என்று விலை ஏறிவிடும். அவா் இலாப சாட்டு ஏறும்”5 என்று வியாபார உலகின் நிலையை அண்ணா விளக்கியுள்ளார். இன்றைய சுயநல உலகில் பொருளாதாரப் பற்றாக்குறையால் பெற்ற பிள்ளையை விற்க வேண்டிய நிலையையும் இக்கதை விளக்குகிறது.

    மூடநம்பிக்கை ஒழிப்பு:

    போலி மதவாதிகளையும், பொய், புரட்டுகளைக் கூறி மக்களை ஏமாற்றி அதில்தன் வயிறு பிழைக்கும் வஞ்சகா் கூட்டத்தினரையும், திரைப்படத்துறையில் உள்ள சில சுயநலவாதிகளையும் ’பேய் ஓடிப் போச்சு’ சிறுகதையில் வெளிப்படுத்தயுள்ளார் அண்ணா.

    “பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் உள்ளிட்ட மூடநம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஏற்றத்தாழ்வு, சுரண்டலை அம்பலப்படுத்துவது ஆகியவையே அவரது கருத்துநிலைகள்”6 என்கிறார் பேரா. பெருமாள் முருகன்.

    செங்கோடனின் மகள் செல்லாயிக்குத் திருமணம் நிச்சயித்திருந்த வேளையில் பேய் பிடித்துவிடுகிறது. அதனால் செங்கோடன் வருந்துகிறான். வேலனின் அப்பா கோவிந்தன் குடிகாரனாக இருந்தாலும் வேலனின் நற்குணங்களை அறிந்து செங்கோடன் தன் பெண்ணைக்  கொடுக்க முன்வருகிறான். ஆனால் செல்லாயிக்குப் பேய் பிடித்து அதனால் தன் இயல்பு மாறிவிட்டதைக் கண்டு செல்லாயியைத் திருமணம் செய்துகொள்ள முடியாது எனத் திருமணத்தை நிறுத்திவிடுகிறான். இதனால் மிகுந்த வருத்தமடைந்த செங்கோடன் பூசாரி பொன்னனிடம் அழைத்துச் செல்கிறான் தன் மகளை. அவன் பல்வேறு சடங்குகளைச் செய்து பேயை விரட்டுவதாகக் கூறி அவனிடம் பணத்தைக் கறந்துவிடுகிறான். ஆனால் செங்கோடன் எதிர்பார்த்தது போலவே பேய் விலகிவிடுகிறது. செல்லாயி நலம் பெற்றுவிடுகிறாள்.

    “அண்ணே பூசாரி பொன்னனை நான் என்னமோன்னு எண்ணிக்கிட்டுக் கிடந்தேன். இப்பத் தெரியுது அவன் இலேசுபட்டவனில்லைங்கற விஷயம்.”7

    திரைப்பட இயக்குநர் சிங் கிராமத்துக் காதல் திரைப்படத்தை எடுக்க கிராமத்திற்கு வருகிறார். அதில் தெருக்கூத்தில் ஆா்வமிக்க வேலனையும் அவனைத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட செல்லாயியையும் மடியில் படுக்கவைத்து ஆப்பிளைக் கடிக்க வைத்துப் படமாக்கி பின்பு அதைச் செல்லாயி திரைப்பட நாயகனுக்கு ஊட்டிவிடுவதாக மாற்றி எடிட்டிங் செய்து வெளியிடுகின்றார். இதனால் வேலனுக்கும் செல்லாயிக்கும் சண்டை ஏற்பட்டுத் திருமணம் தடைசெய்யப்படுகிறது. செல்லாயி பேய் பிடித்தவளாகிறாள். இறுதியில் உண்மைதெரிந்து வேலன் இயக்குநரை அடித்துவிடுகிறான். தான் செய்த தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து விளக்கமளிக்கிறார் இயக்குநர். வேலனும் தன் தவறான புரிதலுக்கு வருந்துகிறான்.

    இயக்குநரின் சுயநலம் செல்லாயி மனத்தைப் பேதலிக்கச் செய்து திருமணத்தை நிறுத்திப் போலி பூசாரி பொன்னனின் வருமானத்திற்கு வழிகோலுவதை இச்சிறுகதை விளக்குகிறது.

    சமத்துவம் மலர வேண்டும்:

    மனிதா்களில் சிலா் சாதி மத பேதமற்ற சமத்துவவாதிகளைப் போல நடிக்கின்றனா். உண்மையில் அப்படி இல்லை. மாமன் மச்சான் உறவு கொண்டாடும் இருவேறு சாதியினா் தன் பெண்ணைத் தன் சாதிவிட்டு நட்புக்காக, உறவுக்காகத் திருமணம் செய்து கொடுப்பதில்லை. அங்கே தன்சாதி தலைதூக்கி நிற்கிறது. வேற்றுமையில் ஒற்றுமைகாணும் பாரததேசத்தில் ஒற்றுமை உண்மையாகவா உதட்டளவிலா என்ற கேள்விக்குறியை ’1938-1940 ஒரு வசீகர வரலாறு’ சிறுகதையில் எழுப்பியிருக்கிறார் அண்ணா.

    ”அண்ணாவின் கதைகளின் இன்னொரு தனித்தன்மை இக்கதைகளில் வரும் விதவை மறுமணம், பொருந்தா மணம், பாலியல் சுரண்டல் என இவா் கையாண்டுள்ளவை முக்கியமானவை”8 எனும் பேரா. பெருமாள் முருகன் கூற்றுப்படி இக்கதையில் விதவை மறுமணத்தை ஆதரித்து எழுதியுள்ளார் அண்ணா.

    சொக்கலிங்கம் செட்டியார் கடையில் நாயுடு வகுப்பைச் சேர்ந்த கண்ணுசாமி வேலை செய்கிறான். காலை கடையைத் திறந்ததிலிருந்து மாலை கடையை பூட்டிச் சாவியை ஒப்படைப்பது வரை அவனை நம்பி அனைத்தையும் ஒப்படைக்கிறார். அவனும் மிகுந்த நற்பண்பும் நம்பிக்கையும் உடையவனாக இருக்கிறான். செட்டியார் அவனை மெச்சித் தன் குடும்பத்தில் ஒருவனாகவே கருதுகிறார். செட்டியாரின் மகள் கலியாணி திருமணமான சில காலத்திலேயே கணவன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட அவள் விதவையாகிறாள். கண்ணுசாமி, செட்டியாரின் மனத்தை மட்டுமில்லாது கலியாணியின் மனத்தையும் கவா்கிறான்.

    விஷயமறிந்த செட்டியார் அவன் சம்பளத்தைக் குறைக்கிறார்; வசைபாடுகிறார். வேலையை விட்டே நிறுத்திவிடுகிறார். கலியாணியும் கண்ணுசாமியும் உடன்போக்குச்சென்று திருமணம் செய்துகொண்டு ஆண்மகவைப் பெற்றெடுக்கின்றனா்.

    சாதி ஒன்றையே பெரிதெனக் கொண்டு நோயாளிக்குத் திருமணம் செய்து வைக்கிறார் செட்டியார். விதவையான தன் மகளைக் கண்ணுசாமி காதலிக்கும்போது சாதியைக் காரணம் காட்டித் திருமணத்திற்கு மறுக்கிறார். 1938-இல் தங்கமானவன், சாது 1939-இல் அவனே தறுதலை போக்கிரி! இது செட்டியாரின் கணக்கு என்பதை, “அவா் கணக்குப்படி பார்த்தால் 1938-இல் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக இருந்த கண்ணுசாமி 39-இல் நயவஞ்சகனாகிவிட்டான்” 9 என்று சாதிவேறுபாட்டின் கொடுமையையும், “தாலி இழந்தவளுக்குக் கல்யாணமா என்று தாத்தா காலத்துக் கதை பேசாதே. தாலி! கட்டுவதற்கு ஆள் இருக்கும்வரை தாலியை இழப்பது என்ற பதத்திலே பொருள் ஏது?”10

    என்று விதவைகளின் துயரம், இளம் வயதில் வாழ்விழந்த இளம் விதவைகளுக்கு மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும் என்ற மகாத்மா காந்தி, தந்தை பெரியார் போன்றோரின் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பதாக இச்சிறுகதை அமைந்துள்ளது.

    “பெண்ணியச் சிந்தனைகள், அவர்களின் முன்னேற்றம் குறித்த கருத்துகள் அவரது சிறுகதைகளில் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிகிறது”11 என்ற டாக்டா் மா. தியாகராஜனின் கருத்து இங்குப் பொருத்தமாகிறது.

    உழுதபவனுக்கு நிலம் சொந்தம்:

    “அண்ணா தமிழ்ச்சிறுகதைகளை உன்னத நிலையில் வைக்க வேண்டும் என்பதற்காக எழுதியவா் அல்லா். அவருடைய நோக்கம் கருத்துப் பிரசாரம் என்பது தெளிவு”12 என்கிறார் பேரா. பெருமாள் முருகன்.

    நம்நாட்டில் உழைப்பவன் ஒருவன்; உழைப்பின் பலனைப் பெறுபவன் ஒருவன் என்ற வினோதமான நியாயம் நிலவுகிறது.

    “உழுதவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும்!” என்ற பொதுவுடைமைச் சித்தாந்தத்தை ’செவ்வாழை’ சிறுகதையில் அண்ணா படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

    பண்ணையாரிடம் வேலை செய்யும் செங்கோடன் தன் நிலத்தில் செவ்வாழைக்கன்றை நட்டு வளா்க்கிறான். வாழை வளரும் காய் காய்க்கும் பழமாகும் உண்டால் மிக இனிக்கும் எனக் கரியன் உள்ளிட்ட தன் பிள்ளைகளுக்குச் சொல்லிச் சொல்லி ஆசை வளா்க்கிறான். குழந்தைகளும் ஏக்கத்தோடு வாழை கனிகொடுக்கும் காலத்தை எதிர்நோக்கியிருக்கின்றனா்.

     “பாடுபட்டோம் பலனைப் பெறப் போகிறோம். இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை. செவ்வாழைக்காக நாம் செலவிட்ட உழைப்பு, பண்ணையாரின் நிலத்துக்காகச் செலவிட்ட உழைப்பிலே நூற்றுக்கு ஒரு பாகம் கூட இராது. ஆனால் உழைப்பு நம்முடையதாகவும் வயல் அவருடையதாகவும் இருந்ததால் பலனை அவா் அனுபவிக்கிறார்.” 13 என்ற எண்ணவோட்டம் அவன் மனதிலே ஓடுகிறது.

    காலத்தைப் போலவே செவ்வாழையும் கனிந்தது. அதைச் சுவைக்கக் காத்திருந்த வேளையில் பண்ணையாரின் மருமகள் பிறந்தநாள் விழா பூசைக்குச் செவ்வாழை தேவைப்படுகிறது.

    பண்ணையாரின் தேவைக்காக இத்தனை நாளாய் தன் சொத்து என வளா்த்த செவ்வாழைக் குலையைத் தன் பிள்ளைகளின் ஆசைகளைப் பாழாக்கிக் கனத்த மனத்துடன் செங்கோடன் வெட்டித் தருகிறான். பிள்ளைகள் ஏமாற்றமடைகின்றனா். பூசைக்குப் போக மீதமான பழங்கள் கடைத் தெருவில் விற்பனைக்கு வருகின்றன. கரியன் அதை வாங்கியாவது தின்ன ஆசைப்படுகிறான். அவன் கையில் இருப்பதோ காலணா ஆனால் பழத்தின் விலை ஓர் அணா. கையில் இருந்த காசுக்கு வறுத்த கடலையை வாங்கிக் கொறித்துக்கொண்டே செல்கிறான்.

    “உழைப்பவனுக்கே நிலம் சொந்தம். பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும் காலம் எப்போதாவது வருமா?”14 என்று அவன் சிந்திக்கிறான். வாழைமரம் மட்டும் பார்வதிப் பாட்டியின் பாடையில் கட்டப்படுகிறது எனச் சாரமற்றுப் போன உழைப்பாளியின் வாழ்வை சித்திரிக்கிறார் அண்ணா.

    உழைப்பவன் ஒருவன் உழைப்பின் பலனைப் பெறுபவன் இன்னொருவன் என்ற இழிநிலை மாறவேண்டும். உழைப்பவனுக்கே உழைப்பின் பலனும் நிலமும் சொந்தமாகவேண்டும் என்ற பொதுவுடைமைக் கொள்கையை அண்ணா இக்கதையில் அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

    பொதுவுடைமைச் சுதந்திரம் வேண்டும்:

    முதலாளித்துவ நாடுகளின் வியாபாரத் தந்திரங்கள் எவ்வாறு சாமானிய மனிதனைப் பாதிக்கின்றன என்பதைப் “பொங்கல் பரிசு” சிறுகதையில் வெளிப்படுத்தியுள்ள அண்ணா, உலக முதலாளியின் கையிலுள்ள நூலின் அசைவினால் அடிமை நாடுகள் ஆட்டம் காணுவதை இக்கதையில் படம் பிடித்துக்காட்டியுள்ளார்.

    கதைநாயகன் தன் முதலாளிக்குப் பொங்கல் பரிசுவேண்டி எழுதும் நீண்ட கடிதம், அவன் கண்டனக் கடிதம் பெற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்படிச் செய்துவிடுகிறது. பன்னாட்டு முதலாளியின் நிறுவனத்தில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்க வேண்டி ஒப்பந்தங்களும் திட்டங்களும் சலுகைகளும் அளிக்கின்றன.

    “ஒவ்வொரு துறையிலும் அமெரிக்கா நுழைந்து இலாப வேட்டை ஆடப் புதுப்புது (தொழில்) கம்பெனி நடத்துகிறது. அமெரிக்காவுக்கு இந்தியாவின் கலை – கலாசாரம் கல்வி குழந்தைகள் நிலைமை ஆகியவை பற்றிய அக்கறை துளியும் இல்லை. தங்கள் நாட்டுச் சரக்கை இந்தியாவில் விற்கும் நோக்கம்தான் அதிகமாகிவிட்டிருந்தது.”15 என்று தமது கதையில் எடுத்துக்காட்டுகிறார்.

    பன்னாட்டு நிறுவன அசைவுக்குக் கல்வி அமைச்சரும், கல்வி அதிகாரியும், பள்ளி நிர்வாகமும் சேர்ந்து சாதாரணத் தொழிலாளிக்கு கொடுக்கும் அழுத்தம் மேற்கூறிய நிலைமைக்கு ஆளாக்குகிறது என முதலாளித்துவ நாடுகளின் வியாபாரத் தந்திரங்களை இச்சிறுகதையில் விளக்கியுள்ளார் அண்ணா.

    ’காலிழந்தவன்’ சிறுகதையில் ஊனம் உடலில் இருந்தாலும் அது உள்ள உறுதியைக் குலைக்கவிடக்கூடாது. மனத்தின் உறுதியே மகத்தானது என்பதை அண்ணா உணர்த்துகிறார்.

    முடிபுகள்:

    1.தனது கதை விவரிப்புத் திறனால் சமுதாயத்திலுள்ள கவனிக்கப்படாத பொருண்மைகளையும் சிறக்கச் செய்துள்ளார் அண்ணா.

    2.அவா் பின்பற்றிய கொள்கைகளுக்குக் கதை வடிவம் கொடுத்துச் சிறக்கச் செய்துள்ளார்.

    3.சமுதாயம், அரசியல், இதழியல், எழுத்துத் துறைகளில் தான் பெற்ற அனுபவங்களை அவர் அழகாகக் கதையாக்கும் திறன் வியக்கத்தக்கதாக உள்ளது.

    4.ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் இதழ்கள் வியாபார நோக்கமின்றி உண்மையாகவும் நடுநிலையாகச் செய்திகளை வழங்கிச் சமுதாய வளா்ச்சிக்கு உதவ வேண்டும் என வலியுறுத்துகிறார்.

    5.உழைப்பாளியின் வியா்வைக்கு ஏற்ற ஊதியம் கிடைத்திட வேண்டும். உற்பத்தியாளனுக்கும் நுகா்வோருக்குமான இடைவெளி குறைந்து இடைத்தரகரின்றி உற்பத்தியாளனின் பொருள் நுகர்வோருக்கு நேரடியாகக் கிடைத்திட வேண்டும். உழைக்காமல் இடைத்தரகராய்க் கொழிக்கின்ற உன்மத்தம் நீங்க வேண்டும்.

    6.திரைத்துறையில் இருக்கின்ற சுயநலத்துக்காகப் பிறன்நலத்தைக் கெடுக்கின்ற நிலைமாறவேண்டும்.

    7.போலி மதவாதிகளின் சுயநலத்திற்காக அவா்களின் பொய் புரட்டுகளை நம்பி ஏமாறக்கூடாது. போலிச் சடங்குகள் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு மக்கள் பலியாகக் கூடாது. மதங்களின் பெயரால் நடக்கும் பொய் புரட்டுக்களைத் தெளிந்து விழிப்புணர்வு பெறவேண்டும்.விதவைகள் மறுமணம் செய்துகொண்டு வாழ வழிவகை செய்யப்பட வேண்டும்.

    8. உழைப்பவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும். உழைப்பாளியின் உழைப்பைச் சுரண்டும் தீயபோக்கு மாறி உழைப்பவனே உயர்ந்தவன் என்ற நிலை உருவாக வேண்டும்.

    9. உலக நாடுகளிடையே ஆண்டான் அடிமைப்போக்கும் பிற நாடுகளை ஆட்டுவிக்கும் போக்கும் நீங்கவேண்டும். உடற்குறை இருந்தாலும் உள்ளக்குறையின்றி தன்னம்பிக்கையோடு வாழ்ந்து சாதனைகள் புரிய வேண்டும் என்பன உள்ளிட்ட சிந்தனைகளைத் தமது சிறுகதைகளில் பேரறிஞர் அண்ணா வெளிப்படுத்தியுள்ளார் என்பது ஆய்ந்தறியப்பட்டது.

    முதன்மை ஆதாரம்:

    “அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்”
    பாரத் பதிப்பகம்
    மாங்காடு சென்னை- 122.
    முதற்பதிப்பு-2013.

    அடிக்குறிப்புகள்:

    1. பேரா. பெருமாள் முருகன் – அண்ணா சிறுகதைகள் பலமும் பலவீனமும் (கட்டுரை) – நடப்பு.காம் (இணைய பக்கம்)- சனவரி-08 -2015-01:46:37am.
    2. முனைவா் மா. தியாகராஜன்- பேரறிஞர் அண்ணா – சிறுகதைகளில் பெண்ணியம் – சிங்கப்பூர் – 558286 தமிழ்த்தோட்டம் இணையப் பக்கம். சனவரி TUESDAY 22,2013 10:41 am
    3. திருக்குறள் இல்லறவியல்(நடுவுநிலைமை) குறள் எண் 118 ப.25 – கழக வெளியீடு. திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை 1-1959.
    4. சி.என் அண்ணாதுரை-”அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்” கொக்கரக்கோ சிறுகதை ப.8 – பாரத் பதிப்பகம் மாங்காடு சென்னை- 122. முதற்பதிப்பு-2013.
    5. மேற்குறித்த நூல் – சரோஜா ஆறணா சிறுகதை ப.16
    6. பேரா. பெருமாள் முருகன் – அண்ணா சிறுகதைகள் பலமும் பலவீனமும் (கட்டுரை) – நடப்பு.காம் (இணைய பக்கம்)- சனவரி-08 -2015-01:46:37am.
    7. சி.என். அண்ணாதுரை- ”அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்” பேய் ஓடிப்போச்சு சிறுகதை ப.21 – பாரத் பதிப்பகம் மாங்காடு சென்னை- 122. முதற்பதிப்பு-2013.
    8. பேரா. பெருமாள் முருகன் – அண்ணா சிறுகதைகள் பலமும் பலவீனமும் (கட்டுரை) – நடப்பு.காம் (இணைய பக்கம்)- சனவரி-08 -2015-01:46:37am.
    9. சி.என் அண்ணாதுரை – ”அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்”- 1938-1940 ஒரு வசீகர வரலாறு சிறுகதை ப.46 – பாரத் பதிப்பகம் மாங்காடு சென்னை- 122. முதற்பதிப்பு-2013.
    10. மேற்குறித்த நூல்- மேற்குறித்த சிறுகதை ப.52
    11. முனைவா் மா. தியாகராஜன்- பேரறிஞர் அண்ணா-சிறுகதைகளில் பெண்ணியம்-சிங்கப்பூர் – 558286 தமிழ்த்தோட்டம் இணையப் பக்கம். சனவரி TUESDAY 22,2013 10:41 am
    12. பேரா. பெருமாள் முருகன் – அண்ணா சிறுகதைகள் பலமும் பலவீனமும் (கட்டுரை) – நடப்பு.காம் (இணைய பக்கம்)- சனவரி-08 -2015-01:46:37am.
    13. சி.என் அண்ணாதுரை – ”அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்”- செவ்வாழை சிறுகதை பக் 68-69 – பாரத் பதிப்பகம் மாங்காடு சென்னை- 122. முதற்பதிப்பு-2013.
    14. மேற்குறித்த நூல்- மேற்குறித்த சிறுகதை ப.69.
    15. மேற்குறித்த நூல்- பொங்கல் பரிசு சிறுகதை ப.78.

    Share
  • மங்கலம் தரும் பொங்கலோ பொங்கல்!

    மங்கலம் தரும் பொங்கலோ பொங்கல்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    முன்னாள் தமிழ்மொழி கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    “தை பிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். புலம் பெயர்ந்த நாட்டினில் வாழுகின்ற எங்களின் பிள்ளைகளுக்கு இந்த மொழியின் அர்த்தம் என்னவென்று தெரியவே மாட்டாது. அவர்கள் தையைப் பற்றியோ அல்லது தையில் வருகின்ற பொங்கலைப் பற்றியோ எண்ணிப் பார்ப்பதே இல்லை. வயது வந்தவர்களான நாங்கள்தான் வருஷா வருஷம் தவறாமல் பொங்கலைப் பொங்கி வருகின்றோம். நாங்கள் பொங்கலைப் பொங்கி மகிழ்வது முக்கியம் தான். அதே வேளை எங்களின் பிள்ளைகளுக்கும் பொங்கலைப் பற்றி நாங்கள் தெளிவு படுத்துதலும் முக்கியமானது என்பதை நாங்கள் அனைவரும் மனத்தில் இருத்துவது மிகவும் அவசிய மானதே.

    புலம் பெயர்ந்த நாட்டில் வாழுகின்ற பிள்ளைகள் அங்குள்ள சூழலுக்கு ஏற்பவே தங்களை மாற்றிக்கொள்ளுகிறார்கள். அவ்வாறு மாறும் வேளை என்பது மிகவும் முக்கியமானதாகும். உணவில் மாறலாம். உடையில் மாறலாம். உழைப்பில் மாறலாம். ஆனால் உள்ளத்தில் தங்களின் பண்பாடு, கலாசாரம் பற்றிய எண்ணங்களை மட்டும் மாற்றாமல் அவர்கள் இருப்பதுதான் மிகவும் முக்கியமாகும். பண்பாடு, கலாசாரம், இவற்றினை உணர்த்துபவையே எங்களின் விழாக்களும் கொண்டாட்டங்களும். பண்பாட்டினை நிலைநிறுத்தும் மிகவும் முக்கிய நிகழ்வாக அமைவதுதான் “தைப்பொங்கல்” எனலாம். 

    தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம்? இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறது? இந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன? இவையெல்லாம் புலம் பெயர்ந்த நாட்டில் வாழுகின்ற எங்கள் பிள்ளைகளுக்குச் சரிவரத் தெரியாது. நாங்களும் அதைப்பற்றி விளக்கிச் சொல்லுவதும் கிடையாது. பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும்.

    உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள், உழைப்புக்கு உதவிடும் விலங்குகள், உழைப்புக்கு உதவிடும் கருவிகள் கவனத்தில் கொள்ளபடுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான்  தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்று எங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

    உலகிலே  உயிர்வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங் காலமாக இருந்து வருகிறது என்பதை எங்கள் பிள்ளைகளின் மனதில் இருத்துவதும் முக்கியமான பொறுப்பாகும். இவையாவும் தைப்பொங்கலுடன் இணைகின்றன என்பதுதான் இங்கு சுட்டப்பட வேண்டிய அவசியமான அம்சம் எனலாம்.

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம்  கொண்டு வருகின்ற பொருட்களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப்படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப்படுகின்றன. விவசாயத்தைச் செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறது. விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப்படுகின்றன. இதனால் தைப்பொங்கல் என்பது நன்றியினை நவில்கின்ற பெருவிழா என்பதை நாங்கள் எங்களின் பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.

    நகரத்தில், புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் செய்யப்படும் விவசாயமோ, அதன் முறைகளோ, அங்கு விலங்குகள் விவசாயத்துக்கு உதவும் விதமோ, விவசாயத்துக்குப் பயன் படுத்தப்படும் ஏர் போன்ற கருவிகளோ தெரிவதற்கு உரிய வாய்ப்பு இல்லைதான். அவர்களுக்கு அவற்றினைப் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கும் பொழுதுதான் தைப்பொங்கலின் போது செய்யப்படும் மரபார்ந்த விஷயங்களை அவர்களின் மனத்தில் பதியச் செய்யக் கூடியதாக இருக்கும்.

    தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து, மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து, குடும்பத்தில் உள்ளவர்கள் “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமையாதது.

    கலப்படம் இல்லாமல் யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசி, பால், சர்கரை, கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழை, மாவிலை, இவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள் எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவை தைப்பொங்கலில் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை என்பதை எங்களின் பிள்ளைகளை உணரச் செய்யவேண்டும்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக்கொள்ளலாம். வருடத்தின் தொடக்கமாய் வரும் தையினை மங்கலகரமாக வரவேற்க வேண்டுமென்று எண்ணிப் பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமா? வருடத் தொடக்கத்தில் மனத்தில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழ வைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா?

    பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்துப் பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம், உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனத்திலுள்ள பொறாமை வஞ்சகம், பொய், கபடு, சூது, வாது, இவற்றையெல்லாம் ஞானம் என்னும் தீயில் பொசுக்கி மனத்தைத் தூய்மை ஆக்கி, புத்தாடை உடுத்து, புதுப்பொங்கலைச் சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாத்பரியம் எனலாம்.

    பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும், பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் காணும் பொங்கல் அமைகிறது. உற்றார் உறவினரை, பெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த்தினை, ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப் பொங்கல், போகித் திருநாள், காணும் பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரத்தில் வாழ்கின்றவர்களுக்கோ,  புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி, தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைத்தான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம். மாடிக் குடியிருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரிதாபமாகவே இருக்கும்.

    உழைப்பினை மையமாக்கி, தொழிலினை மையமாக்கி, அந்தஸ்தினை மையமாக்கி அன்னிய நாட்டினில் வாழும் எங்கள் தமிழர்களின் தைப்பொங்கல் சற்று சறுக்கிய தைப்பொங்கலாகவே அமைவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. சொந்த ஊரினில் தைப்பொங்கல் கொண்டாடுவதற்கும்  குடியேறிய அன்னிய நாட்டில் தைப்பொங்கல்  கொண்டாடுவதற்கும் வித்தியாசங்கள் காணப்பட்ட போதிலும் தைப்பொங்கலைக் கொண்டாடி மகிழ்வதில் தமிழர்கள் பின்னிற்கவில்லை என நினைக்கையில் பெருமிதம் கொள்ளத்தான் வேண்டும்.

    சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – கிறிஸ்தவராயினும், இந்துக்களாயினும், தைப்பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். சமயச் சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய் தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா!

    நன்றி நவிலும் விழா! உழைப்பாளரின் உன்னத விழா! கூட்டுறவின் விழா! மதபேதமற்ற மகோன்னத விழா! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள் !

    Share
  • பல்கலைப் புலவர் – கா. சுப்பிரமணியப் பிள்ளை

    பல்கலைப் புலவர் – கா. சுப்பிரமணியப் பிள்ளை

    -மேகலா இராமமூர்த்தி

    1888ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் நாள் திருநெல்வேலியைச் சார்ந்த காந்திமதிநாதப் பிள்ளை, மீனாட்சியம்மை இணையருக்கு மகனாய்ப் பிறந்தார் கா. சுப்பிரமணியப் பிள்ளை.

    திருநெல்வேலியில் இருந்த திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றில் தமது கல்வியைத் தொடங்கிய அவர், பின்னர் அருகிலிருந்த தொடக்கப் பள்ளியில் தம் படிப்பைத் தொடர்ந்தார். 1906ஆம் ஆண்டில் மெட்ரிக்குலேசன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேறினார்.

    1908ஆம் ஆண்டில் சென்னை மாகாணக் கல்லூரியில் பயின்று கலை உறுப்பினர் (Fellow of Arts) தேர்வில் வெற்றிபெற்றார். அதேவேளையில் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடாத்திய புலவர் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சியுற்றார். 1910ஆம் ஆண்டில் வரலாற்றைச் சிறப்புப் பாடமாய்ப் படித்து இளங்கலைப் பட்டம் பெற்றார். 1913ஆம் ஆண்டு ஆங்கில இலக்கியத்திலும், 1914ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்திலும் தேறி முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.

    பின்னர், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று சட்டத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களையும் பெற்றார். இவருடைய உறவினர்களில் முதன்முறையாக எம். எல். பட்டம் பெற்றவர் இவரே என்பதால், உறவினர்கள் இவரை எம். எல். பிள்ளை என்றே அடையிட்டு அழைத்தனர்.

    அக்காலத்தில், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ’தாகூர் சட்ட விரிவுரையாளர்’ பரிசு அமைத்திருந்தார்கள். சட்டக்கலை குறித்துச் சிறப்பான சொற்பொழிவுகள் 12 நிகழ்த்துவோருக்கு அப்பரிசு வழங்கப்பட்டு வந்தது. 1925இல் கல்கத்தா பல்கலைக்கழகம் சென்று ’குற்றங்களின் நெறிமுறைகள்’ (Principles of Criminology) என்ற தலைப்பில் பன்னிரு உரைகள் நிகழ்த்தி அப் பரிசினை வென்ற ஒரே தமிழர் கா.சு. பிள்ளையவர்களே என்பது குறிக்கத்தக்கது.

    சென்னை சட்டக்கல்லூரியில் ஒன்பது ஆண்டுக் காலம் பேராசிரியராய்ப் பணியாற்றினார் பிள்ளை.  சென்னையில் இருந்த காலத்தில், மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகத்தை ஏற்படுத்தினார். சில காலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராய்ப் பணியாற்றினார். நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன் இருவரும் பிள்ளையிடம் மாணாக்கர்களாய்ப் பயின்றவர் ஆவர்.

    நெல்லை திரும்பியவர், ’தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூலை எழுதினார். இன்றளவும் அது குறிப்பிடத்தக்கதொரு நூலாய்த் திகழ்ந்துவருகின்றது. இரண்டு பகுதிகளாக வெளிவந்த அந்நூலில் இடம்பெற்ற சில அரிய செய்திகளாவன:

    1. தூணில் கடவுள் வழிபாடு செய்யும் மரபு தமிழரிடம் இருந்தது. (மணிமேகலையில் வருகின்ற கந்திற்பாவையை ஈண்டு நாம் நினைவுகூரலாம்.)

    2. தமிழக நெய்தல் நில மக்கள் ஆரிய வருண வழிபாட்டைக் கைக்கொண்டிருந்தனர் எனல் பொருந்தாது.

    3. தொல்காப்பியப் பாயிரம் கூறும் நான்மறை என்பது ரிக், யசுர், சாம அதர்வண வேதங்கள் அல்ல. தமிழிலேயே நான்கு மறைகள் தோன்றின. அகத்தியம், பன்னிரு படலம் போலப் பண்டைக் காலத்திலேயே அவை அழிந்தன.

    4. திருக்குறளின் காலம் கிமு 5-ஆம் நூற்றாண்டாகலாம். அதற்குப் பிறகே கலித்தொகை, சிலப்பதிகாரம் போன்றவை தோன்றியிருக்கவேண்டும்.

    சங்கப் பாக்களுக்கு நயம் சொல்லிக்கொண்டிராமல், பெயரமைவுகள், ஊர்ப்பெயர்கள், காலம், அரசர்க்கும் புலவர்க்குமான உறவு போன்ற பற்பல செய்திகளைத் தம் தமிழிலக்கிய வரலாற்றில் கா. சு. பிள்ளை ஆய்வு நோக்கில் எடுத்தியம்பியுள்ளமை போற்றத்தக்கது.

    ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் தொடர்ந்து எழுதிவந்த பெருமைக்குரியவரான பிள்ளையவர்கள்,  திருநெல்வேலியிலிருந்து வெளிவந்த ’மணிமாலை’ என்ற இதழிலும் இலக்கியச் செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

    மறைமலையடிகள் மீதும் அவரின் கொள்கைகள் மீதும் மாறாக் காதல் கொண்டவர் கா.சு. பிள்ளை. அடிகளைப் போலவே மணிவாசகர் தேவார முதலிகளுக்கு முற்பட்டவரென்றும் கி.பி. 3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்றும் கருத்துக்கொண்டவராகத் திகழ்ந்த பிள்ளை, அதனைத் தமிழிலக்கிய வரலாற்றின் இரண்டாம் பகுதியிலும் அதன்பின் வந்த நூல்களிலும் குறிப்பிட்டிருக்கக் காண்கின்றோம்.

    அதற்கு அவர் முன்வைக்கும் சான்றுகளாவன:

    வரகுணனும் அவனுக்குப் பின் மணிவாசக அடிகள் காலத்தில் அரிமர்த்தனனும் பாண்டிய நாட்டை அரசாண்டரெனத் தெரிகின்றது. போர் புரிவதில் வல்லவனாய் எட்டாம் நூற்றாண்டுக் கல்லெழுத்துக்களில் பேசப்பட்ட வரகுணன் வேறொருவன்.

    வரகுணன் என்பது வடமொழிப் பெயராதலின், அப்பெயருடைய மன்னன் 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றுரைத்தல் தவறு. கடைச்சங்க மன்னனாகக் குறிக்கப்பெறும் உக்கிரப் பெருவழுதி என்ற சொற்றொடரில் ’உக்கிர’ என்பது வடமொழியாதல் காண்க. வரகுணன் என்ற பெயரைத் தமிழ் எனக்கொள்வாரும் உளர். கி.பி. 3ஆம் நூற்றாண்டில் மலையாளக் கரைக்கு வந்த கிறித்தவப் பாதிரிமார்கள் மாணிக்க வாசக அடிகளைக் குறித்துத் தம் நாட்டினருக்கு எழுதியுள்ள கடிதங்கள் அடிகளின் காலம் மூன்றாம் நூற்றாண்டே என்பதைப் பறைசாற்றுகின்றன.

    பிள்ளையவர்கள் தாம் எழுதிய ’தமிழர் சமயம்’ எனும் நூலில் தந்திருக்கும் பல செய்திகள் தமிழ்கூறு நல்லுலகம் அறிந்து பயன்கொள்ளத்தக்கவை. அவற்றில் சில:

    1. ஒரு காலத்தில் தமிழர்க்குள் சடங்கில்லாமல் மணவாழ்க்கை தொடங்கி நடத்தப்பெற்றது. மணமக்களின் ஒத்த உளக்காதலே இல்லறத்துக்கு அடிப்படையாய் அமைந்திருந்தது. பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் மணச்சடங்கு முறைகள் சமுதாயத் தலைவர்களால் ஏற்படுத்தப்பட்டன.

    2. பருத்தியுடை இந்திய நாட்டில்தான் முதன்முதலில் வழக்கத்தில் வந்தது. சிந்தம் (சிந்து என்பதன் திரிபு) என்ற பெயரால் அது மேலை ஆசிய நாடுகளுக்குச் சென்றது. மூங்கில்தாள் போன்ற மெல்லிய உடைகள் பண்டைக் காலத்தில் ஐரோப்பாவுக்கு மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட்டன.

    3. மெல்லிய பஞ்சினால் படுக்கைகள், தலையணைகள் தயார் செய்வதும், புல்லினால் மிக மெல்லிய பாய்கள் நெய்வதும் பண்டைத் தமிழர் தொழிலே. கச்சணிதல் பண்டைத் தமிழ் நூல்களிலெல்லாம் பேசப்படுவதால் தமிழ்ப்பெண்டிர் மேலாடை இன்றியிருந்தனர் என்பது தவறான செய்தி.

    4. தமிழர்கள் கோட்டைகளும் கொத்தளங்களும் கட்டிப் பெரிய வீடுகளில் வாழ்ந்தனர். ரிக் வேதத்தில் தசியூக்கள் பெரிய அரண்மனைகளில் வசித்தனரெனவும் அவர்களுடைய அரண்மனைகளுக்கு நூறு வாசல்கள் இருந்தனவென்றும் பேசப்படுகின்றது.

    5. எழுநிலை மாடங்கள் என்பனவே பிற்காலத்துக் கோபுரங்களாயின. (இடஞ்சிறந்து உயரிய எழுநிலை மாடத்து – அடி: 86 என முல்லைப்பாட்டில் வருதல் காண்க.) ஆயிரங்கால் மண்டபங்கள் அக்காலத்தில் இருந்தபடியே இக்காலத்திலும் காணப்படுகின்றன. தென்னாட்டிலுள்ள பெரிய கோயில்கள்போலப் பெருங் கட்டடங்களை வடநாட்டிற் காண்டல் அரிது. சிந்து நாகரிகக் காலத்திலேயே கோயில்கள் இருந்தமையால் புத்தர் காலத்திற்குப் பின்தான் கோயில்கள் ஏற்பட்டனவென்பது பிழை.

    6. பல்லாயிர ஆண்டுகளாகக் கட்டட அமைப்பிலும் வடிவங்கள் செதுக்குஞ் சிற்பவேலையிலும் தலைசிறந்து விளங்கிய தமிழர் உயர்ந்த தத்துவக் கருத்துக்களைப் பொதுமக்களுக்கு விளக்கிக் காட்டுவதற்காகப் பல்வகைத் தெய்வ வடிவங்களையும் அவற்றிற் சேர்க்கப்படும் படைக்கலங்களையும் வகுத்தமைத்தனர். தென்னாட்டுக் கற்சிற்பங்களில் காணப்படும் பதுமைகள் மத்திய அமெரிக்காவிலுள்ள மெக்சிகோவில் தோண்டியெடுக்கப்பட்ட பிம்பங்களை ஒத்திருக்கின்றன என்கிறார் எச்.ஜி. வெல்ஸ் (Herbert George Wells) எனும் ஆங்கில எழுத்தாளர் தம்முடைய ’உலக வரலாற்றின் சுருக்கம்’ (A Short History of the World) எனும் நூலில்.

    பிறப்பைப் பற்றிய உயர்வு தாழ்வு தமிழர் வழிபாட்டில் இல்லை என்பதைக் காசியில் யாவரும் வருண வேறுபாடின்றிச் சிவபெருமானைப் பூசிக்கும் வழக்கத்தினின்று நாம் அறிந்துகொள்ளலாம்.  காசியின் நடைமுறை வழிபாட்டினர்க்கு வசதி தாராதாகலின், நல்லொழுக்கமும் கள், ஊன் விலக்குமுடைய அறிஞர் எக்குலத்தவராயினும் பூசனை முறையறிந்து அன்பாய்ப் பூசிக்கக் கூடுமாயின் அவரை ஆலயத்தில் அர்ச்சகராய் நியமித்துக் கொள்ளுதல் நலம். இப்போது ஆலயங்களின் குருக்களாய் உள்ள ஆதிசைவ மரபினர் தமிழப் பார்ப்பனரே ஆவர். அவர்கள் சிவன்முகத்து அருள்பெற்ற அந்தணரெனவும், சுமார்த்த பிராமணர் அயன் முகத்துதித்த பிராமணர் எனவும் கருதப்படுவதுடன் பின்னையோர் கோயில் பூசனைக்கு உரியரல்லர் என்றும் ஆகமம் விதிக்கின்றது.

    ஆதிசைவர் தமிழ்நாட்டிலே தோன்றிப் பொதியின் மலைக்குத் தெற்கிலுள்ள பெருஞ்செல்வமென்னும் மகேந்திர மலையில் தவமியற்றித் திருவருள் பெற்ற ஐந்து தமிழ் முனிவர்களின் வழித்தோன்றல்களாவர். அவர்கள் இக்காலத்தில் தம்மை இன்னார் என்றறியாது சுமார்த்த மதநெறியைத் தழுவி நடக்க முயலுகின்றனர் என்று ஆதிசைவருக்கும் சுமார்த்த பிராமணருக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்தும் கா.சு. பிள்ளை, தமிழர் கோயில்களில் தமிழ்ப் பாடல்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்; பிறமொழிப் பாடல்களுக்கு அத்துணை அவசியமில்லை. தேவாரம், திருவாசகம், திருவாய்மொழிப் பாடுவோர் தக்க இயல் இசைப் பயிற்சி உடையோராய் இருத்தல் வேண்டும். உள்ளம் உருகும்படிப் பாடும் திறனுடையோர்க்குப் பரிசளித்தல் வேண்டும் என்று தம் சிந்தனைகளை முன்வைக்கின்றார்.

    ”தமிழர் என்பவர் யார்?” என இன்றுவரை சர்ச்சைக்குரியதாய் விவாதிக்கப்படும் வினாவிற்கு, “தமிழைத் தாய்மொழியாக உடையவர் தமிழர். தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழைத் தாய்மொழி எனக் கருதாதவர் தமிழர் ஆகார். தமிழ்நாட்டில் பிறவாதிருந்தும் தமிழைத் தாய்மொழிபோல் போற்றுபவரைத் தமிழர் எனல் இழுக்காகாது. தமிழ் நாகரிகத்தை உயர்ந்தது எனக் கருதுபவரும் தமிழரே!” என அன்றே வரையறுத்து விடையிறுத்துள்ளார் கா. சுப்பிரமணியப் பிள்ளை.

    ’பல வித்வான்கள் பாடிய தனிப்பாடல் திரட்டு’ என்ற தலைப்பில் இரு பகுதிகளாக வந்துள்ள கா.சு. பிள்ளையின் நூல், சிறந்த உரையாசிரியராகவும் திகழ்ந்தவர் அவர் என்பதற்குச் சான்று பகர்கின்றது.

    Principles of criminology, Lectures on the Indian Penal Code முதலிய சட்டநூல்கள், மாந்த வரலாறு, இலக்கிய வரலாறு, சைவ சமயக் குரவர்கள் வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள் குறித்த விளக்கம் எனப் பல்துறைசார்ந்த அறுபதுக்கும்  மேற்பட்ட நூல்களைக் கா.சு. பிள்ளை எழுதியுள்ளார். இவை வெறும் தகவல்தரும் நூல்களாக இல்லாமல், கற்பாரின் சிந்தனைக்கு விருந்து படைப்பனவாகவும், சீர்திருத்தக் கருத்துக்கள் நிறைந்தனவாகவும் மிளிர்வது இவற்றின் தனிச்சிறப்பாகும்.

    பல்கலைப் புலவராகவும், நுண்மாண் நுழைபுலம் மிக்க சான்றோராகவும் விளங்கிய கா.சு. பிள்ளையவர்கள், தம் இறுதிக்காலத்தில் வாத நோயினால் பாதிக்கப்பட்டு 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் தம்முடைய 56ஆம் அகவையிலேயே இயற்கை எய்தியமை வருந்தத்தக்கது.

    எனினும், தமிழின் கருவூலமாகவும் சைவத்தின் திருவுருவாகவும் விளங்கிய நற்றமிழர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, நெல்லை மண்ணுக்குப் பெருமை சேர்த்த நல்லறிஞர் வரிசையில் என்றும் நிலைத்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. செந்தமிழ்ச் செம்மல்கள் – முனைவர் அ. அறிவுநம்பி, சித்திரம் வெளியீடு, 15, கலைவாணி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி – 8.

    2. தமிழர் சமயம் – கா. சுப்பிரமணியப் பிள்ளை, எம்.ஏ., எம்.எல்., தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

    3.https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/center-page-articles/2016/nov/05/தமிழுக்குத்-தொண்டுசெய்த-பிள்ளை-2592655.html

    Share
  • உங்கள் குழந்தைகளுடன் ஒரு நாள் பயணம் செல்ல உகந்த இடம்

    உங்கள் குழந்தைகளுடன் ஒரு நாள் பயணம் செல்ல உகந்த இடம்

    லெ. சொக்கலிங்கம்,
    காரைக்குடி.

    அறிமுகம் 

    நண்பர்களே! சமீபத்தில் சென்னை சென்று இருந்தேன்.

    மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய மியூசியம் ரயில்வே மியூசியம்.

    எங்கு உள்ளது? எப்படி பார்க்கலாம்?

    நண்பர்களே! சென்னை வில்லிவாக்கம் பகுதியில் பெரம்பூர் அருகே ரயில்வே தொழிற்சாலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மிகவும் அழகான அருமையான பல்வேறு தொழில்நுட்பங்களை (லெ. சொக்கலிங்கம், காரைக்குடி) விளக்கக்கூடிய மாணவர்களுக்கு அதிகமாக பயனுள்ள தகவல்களை தரக்கூடிய ஒரு அருங்காட்சியமாகும்.

    நீங்கள் உள்ளே நுழைந்தவுடன் ஆர்ட் கேலரி பார்க்கச் சொல்கிறார்கள் .

    இந்திய ரயிலின் உலக அளவிலான வளர்ச்சி :

    ரயில்வே துறையின் வளர்ச்சி, ரயில்களின் வளர்ச்சி, உலக அளவிலும் இந்திய அளவிலும் உள்ளவற்றை வரிசைப்படுத்தி உள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் (லெ. சொக்கலிங்கம், காரைக்குடி ) எப்படி எல்லாம் வளர்ச்சி அடைந்து உள்ளது என்கிற தகவல்களை மிக எளிதாக அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் வரிசைப்படுத்தி உள்ளார்கள். இரண்டாவதாக ரயில் தொழில்நுட்பத்துடன் கூடிய இன்ஜின்கள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பக் கூறுகள் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலே சொன்ன தகவல்களை காட்சிப்படுத்தி தனித்தனியாக பிரித்து வைத்துள்ளார்கள்.

    பெரியவர்களையும் குழந்தைகளுக்கும் ரயில்

    கல்லூரி மாணவர்கள் குழுவாக சென்றால், பள்ளி மாணவர்கள் குழுவாக சென்றால், ரயில் அருங்காட்சியகத்தில் மிக அழகாக விரிவாக விளக்கி கூறுகிறார்கள். மற்றவர்கள் செல்லும்பொழுது தாங்களாக கேட்டால் மட்டுமே விளக்கங்கள் பெற இயலும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்ல கூடிய ட்ரைனும் குழந்தைகளுக்காக ஒட்டப்படுகிறது. குழந்தைகளும் பெரியவர்களும் அதில் ஏறிச் செல்லலாம். அவ்வாறு தாங்கள் ஏறிச் செல்லும் பொழுது மிகப்பழமையான நடைமுறையில் உள்ள பல்வேறு ரயில்களும் அங்கே வரிசையாக காட்சிக்கு நிற்க வைக்கப்பட்டு இருக்கிறது. ரயில்களை ஒவ்வொன்றாக நீங்கள் ஆழமாக ரசித்து ரசனையுடன் காண இயலும். அதற்கான விளக்கங்களும் அங்கே வைக்கப்பட்டுள்ளன.

    ஸ்கிராப் பொருள்களில் இருந்து கலை நயமிக்க பொருள்கள் :

    ரயில் நிலையத்தில் உள்ள பழைய பொருள்கள் மூலமாக பல்வேறு வடிவங்களில் காட்சிப் பொருட்கள் மிக அழகாக தயார் செய்யப்பட்டு உள்ளன. அவற்றைப் பார்க்கும்போது நமக்கே மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. வெஸ்ட் பொருள்களில் இருந்து நல்ல அழகான கலை நயம் மிக்க பொருள்கள் தயார் செய்ய இயலும் என்பதனையும் அங்கே காண்பிக்கிறது. ரயில் என்னென்ன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள், எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்கிற தகவல்களும் அங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

     

    ஆச்சரியப்படுத்தும் ட்ரெயின் கேலரி

    ட்ரெயின் கேலரி என்று ஒரு அறை வைத்துள்ளனர். அந்த அறையின் உள்ளே ட்ரெயினில் பயன்படுத்தக் கூடிய பொருள்கள் பல்வேறு வகையான பொருட்களை வரிசைப் படுத்தி உள்ளார்கள். பழங்காலத்து ட்ரெயின் தொடர்பான பல பொருள்களை அங்கே வரிசைப்படுத்தி உள்ளது  பார்க்கும்போது நமக்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. இந்த ரயில் பொருட்கள் அனைத்தும் நமக்கு பல்வேறு புதிய விஷயங்களை கற்றுத் தருகிறது என்பதே உண்மை. இதன் தொடர்ச்சியாக அந்த அறையினுள்ளே பழங்காலத்தில் பயன்படுத்திய தொலைபேசி, ரயில் நிலையங்களுக்கு இடையில் மட்டுமே பேசக்கூடிய தொலைபேசிகளும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவற்றைக் காணும்போது நமக்கு பல்வேறு புதிய தகவல்களை கற்றுத்தருகிறது. சிறுசிறு ரயில்களை எலக்ட்ரிக்கல் மூலமாக தொடர்பு படுத்தி எவ்வாறு செல்லும்போது இன்னொரு ட்ரெயின் செல்லும் என்பதையும், டிராபிக்கில் எவ்வாறு கதவுகள் அடைக்கப்படுகிறது, சிக்னல் எவ்வாறு காண்பிக்கப்படுகிறது, போன்ற தகவல்களை இளம் மாணவர்கள் உட்பட அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஆர்வமுடன் கவனிக்கும் வகையிலும் வரிசைப்படுத்தி நமக்காக ஓட்டி காண்பிக்கின்றனர். சிறு குழந்தைகள் அந்த இடத்தை விட்டு நகர மனமில்லாமல் ஆர்வத்துடன் அதனைப் பார்த்துக் கொண்டுள்ளனர். பெரியவர்களும் அதனை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு உள்ளனர் அந்த சிறு சிறு டிரெயின்கள் அழகாக வட்டமிட்டு வண்ண விளக்குகளுடன் செல்லும்பொழுது நமக்கு பல்வேறு விஷயங்களை கற்றுத் தருகிறது. பொதுவாக நாம் ரயில் நிலையங்களுக்கு செல்லும் பொழுது ட்ராக்கில் ஏதோ கட்டி உள்ளனர் என்று நினைக்கின்றோம். ஆனால் ரயில் ட்ராக்குகளில் நான்கு அடுக்குகள்  பயன்படுத்தபடுகிறது. முதல் நிலை இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை என்று நான்கு விதமான தளங்கள் அதில் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ட்ரெயின் கேலரியில் முன்பாக மிக அழகான ஒரு ஸ்கிராபிக் தயாரிக்கப்பட்ட பொம்மை அமைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ ஊஞ்சல் உட்பட பல விளையாட்டு பொருள்கள் :

    சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை விளையாடி மகிழும் வகையில் பல்வேறு விதமான விளையாட்டு உபகரணங்களும் அங்கே  வைக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் முழுவதும் நீங்கள் முழுவதுமாக அங்கே செலவிடலாம் .காலையில் உணவைக் கட்டிக் கொண்டு அங்கே சென்று விட்டால் மாலை வரை நீங்கள் உள்ளே இருக்கலாம். நன்றாக விளையாடிவிட்டு ட்ரெயின் கேலரியை ஆர்வம்தீர  பார்த்து விட்டும் நமது சாப்பாட்டை நாம் சாப்பிடலாம்.

    ட்ரெயின் என்ஜினை காணும் அருமையான வாய்ப்பு :

    ட்ரெய்னில் எவ்வாறெல்லாம் நிலக்கரியை எடுத்து மற்றொரு பக்கம் போடுகிறார்கள் என்பதை அந்த ட்ரெயின் உள்ளேயே சென்று நாம் காணமுடியும். பொதுவாக நாம் ரயிலைதான் தான் பார்க்கிறோம். இன்ஜின்கள் எவ்வாறெல்லாம் உள்ளது என்பதை நாம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை .ஆனால் இங்கே அந்த வாய்ப்புகள் நமக்குத் தரப்பட்டிருக்கிறது. மிக அழகாக நாம் அவற்றைக் காணக் கூடியநிலையில் இருக்கின்றோம். இது ஒரு மிகப்பெரிய அருமையான வாய்ப்பு. மேலும் பழங்காலத்திலிருந்து நமது இந்தியாவில் செல்ல கூடிய அனைத்து விதமான ரயில்களையும் நாம் அங்கே காண முடிகிறது. பஸ்ட் கிளாஸ் ஏசி முதல் கடைசி நிலை வரை எவ்வாறு ரயில்  பெட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது, இன்ஜின்கள் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை எல்லாம் எளிதாக பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. அந்த காலத்தில் ரயில்கள் எப்படி எல்லாம் ஓடியது என்கிற தகவலும் உண்டு. அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நமக்குத்தான் (லெ. சொக்கலிங்கம், காரைக்குடி ) நேரமும் காலமும் அதிகமாக வேண்டும். அதுதான் உண்மை கால் வலிக்கும் போது நாம் ஆங்காங்கே ஓய்வு  எடுத்துக் கொள்வதற்கு சிமெண்ட் பலகைகளை அமைக்கப்பட்டுள்ளன .

    காண்போரை பரசவப்படுத்தும் மூவி தியேட்டர் :

    மூவி தியேட்டர் என்று ஒன்று வைத்துள்ளனர். இந்த மூவி தியேட்டரை நீங்கள் (லெ. சொக்கலிங்கம், காரைக்குடி) சென்று கேட்டால் மட்டுமே அவர்கள் போட்டு காண்பிக்கிறார்கள். ஏனென்றால் சில தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதால் குறைந்தது இருபது பேர் இருந்தால் அந்த மூவி தியேட்டரில் ரயில் வாழ்க்கை வரலாறை போட்டு காண்பிக்கிறார்கள். ட்ரெயின் எவ்வாறெல்லாம் வளர்ச்சி அடைந்தது, அதனுடைய வளர்ச்சியின் தன்மைகள் என்ன என்பதையெல்லாம் மிக அழகாக படத்தில் காண்பித்துள்ளனர். மிக அருமையான ஒரு தியேட்டர். ஒலி ஒளி அமைப்பு மிக அருமை. காட்சிகளும் மிக அருமை. அதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகளும் அருமை. ஊட்டி டிரெயின் பற்றி நாம் பலமுறை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அதனை நேரடியாக இங்கு படத்தில் காண முடிகிறது. அதற்கான அமைப்புகள் என்ன என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர். பார்க்கும் போதே நமக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. பழங்காலத்தில், பழங்காலம் என்றால் சில காலங்களுக்கு முன்பாக டிரெயின் வரும்பொழுது ஒரு வட்ட வடிவமான ஒரு குச்சியை தயார் பண்ணி அதனுள்ளே ஸ்டேஷன் மேலாளர் டெலிபோனில் பேசி விட்டு ஒருபால் போன்ற பொருளை எடுக்கின்றார். உதாரணமாக C 17 என்கிற பால் எடுத்து அதனை அந்த வட்டவடிவ கூண்டில் கட்டி அதை வரும் ட்ரெயினில் ஒரு ஆளை வைத்து கொடுக்கின்றனர். இரவு நேரங்களில் தீப்பந்தம் எரியவிட்டு அதனை கட்டி விடுகிறார்கள். அப்போது அந்த ட்ரெயின் வேகமாக செல்லும்போது அது தட்டி விட்டு செல்கிறது .தட்டி விட்டால் அந்த ட்ரெயின் அந்த நிலையத்தை கடந்து விட்டதாக அர்த்தம் ஆக எடுத்துக் கொள்கிறார்கள் .மேலும் உலகத்திலேயே முதன்மையான இந்திய ரயில் தொழிற்சாலை பற்றி மிகத் தெளிவாக கொடுத்துள்ளனர் .அதுவும் அது சென்னையில் அமைந்துள்ளது நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை என்று கூறலாம்.

    பழங்காலத்தில் செயல்பட்ட டார்ஜிலிங் ரயில் தொடர்பாகவும் மிக அழகாக ஒரு காட்சியை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒளியும் ஒளியும் மிகவும் அருமை. புதிய காலத்திற்கான பல்வேறு நாடுகளில் உள்ள ரயில்கள் தொடர்பாகவும், சுற்றுலா ரயில்கள் தொடர்பாகவும், பல்வேறு தகவல்கள் ஒலி ஒளி காட்சிகள் காண்பிக்கப்படுகிறது. கனடா, லண்டன், அமெரிக்கா, ஈகுவடார் இன்னும் பல்வேறு நாடுகளின் உடைய ரயில்களின் வடிவமைப்புக்கள் இங்கே காட்சிப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் செல்லக்கூடிய பல்வேறு இரயில்களின் குறிப்பாக சுற்றுலா ரயில்களின் வடிவமைப்பதிலும், அழகான ஒளி ஒலி அமைப்புடன் காண்பிக்கப்படுகிறது .இப்படியெல்லாம் டிரெயின்கள் இருக்கிறது என்கிற தகவலும் நாம் அங்கேயே தெரிந்துகொள்ள முடிகிறது.

    பிளாஸ்டிக் விழிப்புணர்வு :

    இந்த ஒலி-ஒளி காட்சி நிறைவாக பிளாஸ்டிக் விழிப்புணர்வு மிக அருமையாக எடுத்து வைக்கப்படுகிறது .இரண்டு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய ஒளி ஒலி கண்காட்சியில் நாம் குடிக்கும் தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் பிளாஸ்டிக் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை நம் ஆழ் மனதில் பதியுமாறு எடுத்துரைக்கின்றனர். இது மிகப்பெரிய பாராட்டுக்குரிய விஷயம் ஆகும்

    ICF  உள்ளே கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள் :

    ICF  உள்ளே எவ்வளவு வேலை வாய்ப்புகள் உள்ளன, என்னென்ன மாதிரியான செயல்பாடுகள் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்கிற தகவலை எல்லாம் தெளிவாக கொடுக்கிறார்கள்.

    பெண்களே ரயில் பெட்டி தயாரிக்கும் மகிளா யூனிட் :

    ஒரு யூனிட்டிற்கு மகிளா யூனிட் என்று பெயர் வைத்து முற்றிலும் பெண்களே இயக்கக்கூடிய, தயாரிக்கக் கூடிய ஒரு யூனிட் அங்கே ரயில் பெட்டி தொழிற்சாலையில் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். ரயில் பெட்டி தொழிற்சாலை தயாரிக்கும் பணியில் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் பல்வேறு விதமான சலுகைகளையும் வசதிகளையும் செய்து கொடுத்து உள்ளனர். ஒவ்வொரு குடியிருப்பு மிக அருமையாக கட்டமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளின்  வடிவமைப்பு மிகவும் நேர்த்தியாக உள்ளது. நமக்கான பல்வேறு வாய்ப்புகள் அங்கே காணப்படுகிறது. விளையாட்டில் திறமையாக இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ரயில்வே தொழிற்சாலை மக்களுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகிறது. குறிப்பாக மூன்று கல்யாண மண்டபங்கள், சமுதாயப் பணிகள் என்று பல்வேறு விதமான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்க்கும் பொழுது இவ்வளவு வேலை வாய்ப்புக்கள் உள்ளன என்கிற தகவலையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

    ரயில்  உணவு :

    நீங்கள் (லெ. சொக்கலிங்கம், காரைக்குடி) உள்ளேயே சாப்பிடுவதற்கு மகாராஜா ரயில் போன்ற வடிவத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் சென்னை மியூசியம் என்று ஒரு ரயில் உணவகம் அமைத்துள்ளனர். ரயில் உணவகத்தில் நான்வெஜ் தான் முழுவதுமாக உள்ளது. கொஞ்சம் விலை அதிகமாக உள்ளது. ஆனால் உணவின் தரம் கொஞ்சம் குறைவாகவே உள்ளது. இடையிடையில் நீங்கள் டீ சாப்பிடுவதற்கு வேறு உணவுகள் சாப்பிடுவதற்கும்  பல்வேறு விதமான ஸ்னாக்ஸ்  சாப்பிடுவதற்கும் கேண்டீன் ஒன்றும் உள்ளது. நீங்கள் உள்ளே செல்வதற்கு வாங்கும் டிக்கெட் விலையில் கேன்டீனில் உள்ளே சாப்பிட 10 ரூபாய் அதற்கான டோக்கன் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகமாக வேண்டுமானால் நீங்களே உணவுகளை காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டு கொள்ள வேண்டும் .திங்கள்கிழமை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் உணவகத்தில் நீங்கள் அமர்ந்து சாப்பிடும் பொழுது ரயிலில் இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றன. அதற்கு அவர்கள் உள்ளே போய் உட்கார்ந்து சாப்பிடுவது போன்று  பார்த்துவிட்டு வரலாம்.

    ரயில் மியூசியம் தோழர்களுக்கு நன்றி :

    இந்த நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நண்பர்களுக்கும். ஒரு நாள் முழுவதற்குமான பொழுதுபோக்கு, தொழிற்சாலை பிரிவுத் தகவல்கள், வேலைவாய்ப்புத் தகவல்கள், சுற்றுலா தகவல்கள், பொழுதுபோக்கு தகவல்கள், குடும்பத்துடன் கொண்டாட கூடிய தகவல்கள், என பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய ரயில் மியூசியத்திற்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    எங்கிருந்து எங்கு சென்றோம்?

    நண்பர்களே நாங்கள் அடையாரில் இருந்து நண்பர் ஆனந்த் அவர்களின் காரில் வில்லிவாக்கம் பெரம்பூர் அருகே உள்ள ஐசிஎப் தொழிற் சாலைக்கு சென்றோம் .அனைத்து அணிகளையும் பார்த்துவிட்டு மீண்டும் மாலை ஐந்து முப்பது மணி அளவில் பெரம்பூரில் கிளம்பி பெசன்ட் நகர் பீச்சுக்கு சென்று விட்டோம் .அங்கு ஒரு மணி நேரம் இருந்து விட்டு இரவு உணவை ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டை அடைந்தோம். காலை முதல் இரவு வரை ஒரு நாள் முழுவதும் சுற்றுலாவுக்கு செல்லக்கூடிய மிக அருமையான இடம் ஐசிஎப் ரயில்வே மியூசியம் ஆகும்.

    நண்பர் ஆனந்துக்கு நன்றி:

    ஒத்துழைப்பு நல்கிய நண்பர் ஆனந்த் அவர்களுக்கும் ,அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் .ரயில்வே மியூசியத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் ஊழியர்களும் மிக நல்ல முறையில் நம்மை அனுசரித்து நமக்கு வேண்டிய பல்வேறு தகவல்களையும் பொறுமையுடன் எடுத்துரைத்தனர் .அது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் ஆகும் .

    ரயில் ம்யூஸியத்தின் உள்ளே உள்ள காட்சிகளை வீடியோவாக காண:

    1) https://www.youtube.com/watch?v=Ibmv7XgCKJk

    2)  https://www.youtube.com/watch?v=Aq4nOKAtFA8

    3) https://www.youtube.com/watch?v=e7cM6PDL0cQ

    4) https://www.youtube.com/watch?v=Rc77d6tBGfI

    5) https://www.youtube.com/watch?v=EOUa3XrEJEo

    பட விளக்கம் : சென்னை ரயில் மியூசியத்தில் ஒரு நாள் முழுவதும் பயனுள்ள வகையில் சுற்றி பார்க்கும் இடங்களை சுற்றி பார்த்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்

    Share
  • வாழ்க்கையை அதன் போக்கில் விடு

    வாழ்க்கையை அதன் போக்கில் விடு

    பாஸ்கர் சேஷாத்ரி

    முப்பது வருஷங்களுக்கு முன் புது வருட வேலைக்கு செல்லும் நாள் வந்தால் ஒரு வருத்தம் கவ்வும். சின்ன வயது. எல்லோருக்கும் விடுமுறை எனும்போது நமக்கு மட்டும் அலுவலகம் என்ற சிந்திப்பு தான் காரணம்.

    அப்போது விற்பனை பிரதிநிதி வேலை. நாள் கிழமை நேரம் காலம் எல்லாம் இல்லை. எப்போதும் பிழைப்பு என்ற புத்தி உள்ளே ஊறிய நேரம். வழக்கமான கைப்பெட்டி ஒரு ஷூ என எல்லாத் தகுதிகளும் கொண்ட ஒரு சேல்ஸ்மேன். 

    அது ஒரு மிக்சி கம்பெனி. பெரிய கடை வாசலில் மாலை நேரங்களில் ஒரு டெமோ நடக்கும். பகல் நேரங்களில் மீட்டிங் என பரபரப்பான நேரங்கள் அவை. டெமோ நடக்கும் போது ஒரு மேஜையில் மிக்சி வைத்து அரைத்துக் காட்ட வேண்டும். சட்னி முதல் மஞ்சள் வரை அதனைச் சடுதியில் அரைத்து, வருபவர்களுக்குக் காட்டும் போது, கிட்டத்தட்ட ஒரு மேஜிக் ஷோ போல இருக்கும். பெண்கள் அங்கேயே உடனே வாங்குவார்கள். சிலர் பதிவு செய்து செல்வார்கள். வசீகரமான மாலைகள் அவை. இதில் சலிப்பு போகும்.

    விற்பனைப் பிரதிநிதிகள் தன்னம்பிக்கை உடையவர்கள். இல்லாமல் இருந்தாலும் தொழில் அதனைக் கற்றுக் கொடுத்துவிடும். இதனை எந்தப் படிப்பும் சொல்லிக் கொடுக்க முடியாது.

    அனுபவம் பெரிய பாடம். அதுவும் பெரிய கடை வாசலில் எல்லோரும் குழுமி இருக்க, ஒருவர் திறம்பட வேலை செய்து பாராட்டுப் பெறும்போது ஏற்படும் நெகிழ்வும் சந்தோஷமும் எந்தப் பணமும் கொடுக்காது. கைத்தட்டல் தான் இல்லை. மண்டையில் இந்த நேரங்களில் தான் கனம் ஏறும். ஒரு கர்வம் தலை தூக்கும். திமிர் பெருகும். இது கிட்டத்தட்ட வித்யா கர்வம்.

    அதே துறையில் கிடைக்கும் தோல்வி அதனைச் சமன்படுத்தும். கிட்டத்தட்ட நான் எந்தக் கடைக்கு சென்றாலும் ஒரு ஹீரோ போலக் கருதப்படுவேன். ஓரளவுக்கு நல்ல உடை, நுனி நாக்கு ஆங்கிலம், கொஞ்சம் தொழில் திறன் என்று கொஞ்சம் இருக்கவே இவ்வளவு மரியாதையா என யோசிப்பேன்.

    பிரபலத்திற்கு ஏங்காத மனசு உண்டா? இவை எல்லாமே ஒரு எண்ணூறு ரூபாய் சம்பளத்திற்கு. இன்று பிளம்பரின் ஒரு நாள் கூலி இது. எங்குச் சென்றாலும் பஸ் தான். கையில் சூட்கேஸ் சுமையை வைத்துக் கொண்டு ஒவ்வோர் இடமாகச் சென்று பேசிய காலம் அது. அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தவுடன் எப்போது புத்தாண்டு பிறக்கும் என்ற ஆசை துளிர் விட ஆரம்பித்தது.

    துக்கம் போய் இப்போது எதிர்நோக்கும் ஏக்கம். இதன் அடிப்படை தொழில் நேசிப்பு, அங்கீகாரம், உழைப்பு, பேருக்கு அலையும் புத்தி, முன்னுக்கு வர வேண்டும் என்ற சிந்தனை.

    அடிநாதத்தில் ஒரு வாழ்க்கை பயம். இங்கு எல்லாமே வழக்கொழிந்து போகவே பிறக்கிறது. இது வாழ்க்கைச் சுழற்சியின் இயல்பு. பிரயாணத்தில் நிற்றல் இல்லை. கற்றல் மூச்சு. அது தானியங்கி. வாழ்க்கையை அதன் போக்கில்தான் விட வேண்டும் போல இருக்கிறது. நாம் அதனைப் பயிற்சி நாய் போல மாற்றிக்கொண்டு இருக்கிறோம்.

    Share
  • ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் – ஒரு நோக்கு

    ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் – ஒரு நோக்கு

    மகாதேவஐயர்  ஜெயராமசர்மா 
    B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , Dip . in . com , M.Phil Edu ,SLEAS
    மேனாள் தமிழ் மொழி கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியாவில் தமிழர்கள்

    பல இடங்களிலிருந்தும் தமிழர்கள் புலம்பெயர்ந்து கங்காரு நாடு என்று சிறப்பித்து அழைக்கும் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். இங்கு தமிழர்கள் வருகை எப்படி அமைந்தது என்பதை அறிந்து கொண்டால்த்தான் தமிழர்கள் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் எந்தவகையில் தங்களின் அக்கறையைச் செலுத்தினார்கள் என்று அறிவதற்கு பொருத்தமாக இருக்கும் என்னும் காரணத்தால் தமிழரின் வருகை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.

    நியூசிலாந்தின் தலைநககரமான வெலிங்டனில் உள்ள நூதனசாலையில் வெண்கல மணி ஒன்று இருக்கிறது. இந்தமணி வில்லியம் கொலன்சோ என்பவரால் நியூசிலாந்தின் நோர்த்லாண்ட் என்னும் இடத்தில் 1836 இல் கண்டுடெடுக்கப்பட்டது. அந்த மணியின் அடியில் இருபத்து மூன்று எழுத்துக்கள் சுற்றிவர இருக்கிறது. இவ்வாறு இருக்கும் எழுத்துக்கள் தமிழ் எழுத்தாக இருப்பதுதான் இங்கு மிகவும் முக்கியம் எனலாம். இதனால் இதனைத் தமிழ் மணி என்று அழைக்கலாம்.  இந்த மணியின் அடிப்பாகத்தில் “முகைய்யதின் வகுசுவின் கப்பல் மணி” என்ற கருத்தில் அதிலுள்ள வார்த்தைகள் அமைந்துள்ளன. கி.பி 200 இலிருந்து இன்று வரை எக்காலத்தைச் சேர்ந்ததாகவும் இதில் காணப்படும் எழுத்துக்களை அடக்கலாம் என்று Archaeological Survey of India கருதுகிறது. இங்கு காணப்படும்

    ‘முகைய்யதின்’ என்னும் பெயரைக் கொண்டு இஸ்லாமியா செல்வாக்கு வந்திருக்க இடமுண்டு எனக் கொண்டால் இந்த மணி கி.பி 1500 தொடக்கம் 1600 வரையானகாலப் பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் கருதமுடிகிறது. அதே வேளை சோழர் காலத்தில் வெண்கலத்தாலான பொருட்கள் மிகவும் சிறப்புப் பெற்றிருந்தன. நியூசிலாந்தில் ஓக்லண்டில் வசிக்கும் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தைச் சேர்ந்த டாக்டர் ராசநாதன் கருத்துப்படி இம்மணியானது சோழர் காலத்தைச் சேர்ந்ததேஎன்றும் – சோழர்களால்த்தான் இம்மணியை இங்கு கொண்டுவரும் ஆற்றல் இருந்திருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக 1994 இல் தெரிவித்திருக்கிறார்.

    தமிழர்கள் குடியேற்றமானது கங்காரு நாட்டில் 1778 இலிருந்து ஆரம்பமாகியதுஎன அறியமுடிகிறது. இப்படியான குடியேற்றமானது 1837, 1838 ஆம் ஆண்டுகளில் அதிகமாக நடந்திருக்கிறது. கிழக்கிந்திய கம்பனியைச் சேர்ந்த ஆங்கிலேயர்களால் தமிழர்கள் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் என்று அறியமுடிகிறது. 1901 க்குப் பின்னர் தமிழர் குடியேற அனுமதி இல்லாமல் போய்விடுகிறது. 1965 இலிருந்து தமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்குகிறார்கள். ஆரம்பத்தில் வந்தவர்கள் திறமைஅடிப்படையில் தொழில் செய்ய அனுமதிபெற்றே வந்திருக்கிறார்கள். குடியுரிமை பெற்று வாழலாம் என்னும் வாய்ப்பு 1970 ஆம் ஆண்டு வந்ததால் தமிழர்களின் குடியேற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட நாட்டுச் சூழல் காரணமாக பெருமளவில் தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்துசேருகிறார்கள். 2009 ஆம் ஆண்டுக்குபின்னர் படகுகள் மூலமாகவும் தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் வந்துவிடுகிறார்கள்.

    ஏனைய உலக நாடுகளைவிட ஆஸ்திரேலியா வளத்தாலும் இடத்தாலும் பெரியது. அரசியல் ரீதியிலும் நூறுசத விகிதம் ஜனநாயகத்தைப் பேணும் நாடாகவும் விளங்குகிறது. இதனால் மனித மாண்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் உயர்வான பண்பாடும் இங்கு காணப்படுகிறது. இதனால் பலரும் இங்கு குடியேறி வாழ்வதற்குப் பெருவிருப்பத்தோடு இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    கங்காரு நாடு எனப்போற்றப்படும் ஆஸ்திரேலியாவில் ஆறு மாநிலங்களும் இரண்டு மண்டலங்களும் என மொத்தம் எட்டு சமஷ்டி அரசாட்சிப் பிரிவுகள் காணப்படுகின்றன. இந்தநாட்டினது சனத்தொகை ஏறக்குறைய இரண்டு கோடி எனலாம். இந்தச் சனத்தொகை கிட்டத்தட்ட இலங்கையின் சனத்தொகையினை ஒத்ததாகும். ஆனால் இலங்கையைவிட ஆஸ்திரேலியா நிலப்பரப்பளவில் ஐம்பத்திரண்டு மடங்கு பெரியது என்பது முக்கியமாகும்.

    ஆஸ்திரேலியாவில் கூடுதலாகத் தமிழர்கள் வாழுமிடமாக சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தையே கொள்ளலாம். இங்கு தமிழர்களின் மொத்த எண்ணிக்கையில் நான்கில் மூன்றுக்கும் அதிகமானோர் வாழுகிறார்கள் என்பது நோக்கத்தக்கது. அதற்கடுத்ததாக மெல்பேணைத் தலைநகரமாகக் கொண்ட விக்டோரியாவைக் குறிப்பிடலாம். மேற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா (அடிலெயிட்) தலைநகரமான கன்பரா, வட மண்டலமான டார்வின், தஸ்மேனியா (ஹோபார்ட்) ஆகிய மாநிலங்களிலும் தமிழர்கள் வாழுகிறார்கள்.

    இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், பீஜி, தென் ஆபிரிக்கா, போன்ற இடங்களில் இருந்தெல்லாம் தமிழர்கள் காலத்துக்குக் காலம் வந்து குடியேறி இருக்கிறார்கள். வேலைக்காகவும், படிப்புக்காகவும், நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாகவும், வர்த்தகம் செய்யும் நோக்காகவும், என பல்வித நோக்கங்களால் தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறி உள்ளார்கள் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களுக்கும் இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்கும் வேறுபாடுகள் நிறையவே இருக்கின்றன.

    இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள் நாட்டுப் பிரச்சினை காரணமாக வந்தவர்கள் அல்லர். அவர்கள் படிப்பாலும் தொழிலாலுமே இங்கும் வந்திருக்கிறார்கள். ஆனால் இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் பலர், பல இழப்புகளைச் சந்திந்த பின்பே, இருக்க முடியாமல் உயிரினைக் காப்பாற்றி, மிச்சமிருக்கும் காலத்தை வாழ எண்ணி வந்தவர்கள் எனலாம். இதனால் இந்த இருவகைத் தமிழர்களின் சிந்தனை, செயற்பாடுகள் வேறு வேறாய்  இருப்பதையும் இங்கு கொள்ள முடிகிறது. இவர்களைவிட இன்னொரு வகைத் தமிழர்களாக, சிங்கப்பூர், மலேசியத் தமிழர்கள் விளங்குகின்றார்கள். பீஜி, மொரிசியஸ், தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பெயரளவில் தமிழர்களே அல்லாது அவர்கள் தமிழ் தெரியாத தமிழர்களாக இங்கு இருக்கிறார்கள்.

    ஏறக்குறைய எண்பதினாயிரம் தமிழர்கள் வாழ்ந்தாலும் குடிசன மதிப்பீட்டுப்படி ஐம்பதாயிரம் என்று கணக்குச் சொல்கிறது. குடிசன மதிப்பீட்டினை எடுக்கும்பொழுது வீட்டில் பேசும் மொழி தமிழ் என்றும் குறிப்பிடாமல் விடப்படுவதனால் இந்தக் குறைபாடு ஏற்பட்டு, தமிழரின் சரியான தொகை வராமல் இருக்கிறது என்பது முக்கியக் குறிப்பு எனலாம்.

     ஆஸ்திரேலியாவில் தமிழ் அமைப்புகள்

    தமிழர்கள் சேருமிடமெல்லாம் கலகலப்பும் இருக்கும். கலவரங்களுக்கும் குறைவிருக்காது. பண்பாடு கலாசாரம் என்பவற்றைக் காக்க வேண்டும் என்பதற்காகவே எப்படியோவெல்லாம் உழைப்பார்கள். அப்படி உழைக்கும் பொழுதில் அவர்களுக்கிடையே ஏற்படும் ஒவ்வாத தன்மைகளாலும், கருத்து முரண்பாடுகளாலும் தொடங்கவிருக்கும் அமைப்பு, பல அமைப்புகளாய், பல பெயர்களில் உருப்பெற்று வருவதை எல்லா இடங்களிலும் காணுகிறோம். இப்போட்டி சரியானதா, பிழையானதா என்பதற்கு அப்பால், இப்போட்டியினால் பல தமிழ் அமைப்புகள் உருவாகும் நிலை வருவது மகிழ்ச்சியானதுதானே! இப்படி ஒரு நிலை கங்காரு மண்ணிலும் தமிழர்கள் மத்தியில் காணப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டவே இப்படியாக விளக்கும் நிலை ஏற்பட்டது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

    அமைப்புகளுக்குள் போட்டி. தனிமனித ஆளுமைக்கிடையிலான போட்டி என்று இப்போட்டி, பல அமைப்புகளின் தோற்றத்துக்கு வழிவகுத்து விட்டதையே காண முடிகிறது. என்றாலும் தமிழ் அமைப்புகள் பல, நல்ல முறையில் செயலாற்றி வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஏறக்குறைய எண்பதினாயிரம் தமிழ் மக்கள் வாழுகின்ற கங்காரு மண்ணில் நூற்றுக்கு அதிகமான சங்கங்கள் இருக்கின்றன. தமிழ் மக்களின் ஒன்றுகூடலுக்கும், தாயக மண்ணின் துயர் துடைக்கும் நோக்கத்துக்குமாக ஆரம்பத்தில் இச்சங்கங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் ஏற்பட்ட மனோபாவங்களின் விளைவால் சங்கங்கள், அமைப்புகள் பிளவுக்கு ஆளாகின என்பதும் நோக்கத்தக்கதே.

    டாக்டர் ஆர். சிவகுருநாதன் தலைமையில் “இலங்கைத் தமிழர் சங்கம்” சிட்னியில் நிறுவப்பட்டது, இச்சங்கம் 1982 முதல் “ஈழத் தமிழர் கழகம்” என்று இன்றுவரை இயங்கி வருகிறது. சிட்னி “தமிழ் மன்றம்” 1978இல் ஆரம்பிக்கப்பட்டது. விக்டோரியா மாநிலத்தில் பேராசிரியர் எலியேசர் அவர்களால் 1978இல் “விக்டோரியா இலங்கைத் தமிழ்ச் சங்கம்” தொடங்கப்பட்டது. பின்னர் இச்சங்கம் 2000ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதியில் அப்போதைய தலைவர் சட்டத்தரணி பாடுமீன் சு. ஶ்ரீ கந்தராசா தலைமையில் “விக்டோரியா ஈழத் தமிழ்ச் சங்கம்” என்று பெயர் மாற்றம் செய்ய்யப்பட்டது.

    1979இல் மேற்கு ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கம், 1986இல் “இலங்கைத் தமிழர் சங்கம்” 1990 குயின்ஸ்லாந்து ஈழத் தமிழர் சங்கம், 1983 கன்பரா தமிழ்ச் சங்கம், 1983 தெற்கு ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கம், 1984 தென் துருவத் தமிழ்ச் சம்மேளனம், இவ்வாறு சங்கங்கள் இருக்கின்ற வேளை சிட்னி, விக்டோரியா போன்ற இடங்களில் மேலும் பல சங்கங்கள் தோற்றம் பெற்றுத் தமிழ்ப் பணிகள், சமூகப் பணிகள் ஆற்றி வருகின்றன.

    சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் – ஆஸ்திரேலிய பட்டதாரிகள் சங்கம், மெல்பேணைத் தலைநகராகக் கொண்ட விக்டோரியா மாநிலத்தில் – ஆஸ்திரேலிய தமிழர் ஒன்றியம், விக்டோரியா தமிழ் கலாசாரக் கழகம், மெல்பேண் தமிழ்ச் சங்கம், விற்றல்சீ தமிழ்ச் சங்கம், ஆஸ்திரேலிய தமிழ் கலை இலக்கியச் சங்கம், கே சீ தமிழ் மன்றம் என்றும் தமிழ்ச் சங்கங்கள் இருந்து பணியாற்றி வருகின்றன. இவற்றைவிட மூத்த பிரஜைகளுக்கான சங்கங்கள், பல மாநிலங்களில் அமைந்து செயலாற்றி வருகின்றன. 1987ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விக்டோரியா மூத்த பிரஜைகள் சங்கமே கங்காரு மண்ணில் முதலில் அமைக்கப்பட்டது என்னும் பெருமையைப் பெற்றுக்கொள்கிறது. இப்படிப் பல சங்கங்கள். தமிழர் அமைப்புகள் தொடங்கப்பட்டதற்குக் காரணங்கள்தான் என்னவாக இருக்கும் என்பதை மேலோட்டமாக ஆரம்பத்தில் கண்டோம். ஆனால் அப்படியான சிந்தனைகள் காலவோட்டத்தில் விரிவடைந்து தமிழர் கலை, கலாசாரம், தமிழ் மொழி வளர்ச்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கின்றன.

    ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம்

    ஆஸ்திரேலியாவில் தமிழரின் பரம்பல். அதனால் அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட தமிழ் அமைப்புகள் இவற்றுக்கும் குழந்தை இலக்கியத்துக்கும் என்னதான் தொடர்பு இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? தமிழர்கள் பலவகையினராய் பல நாடுகளில் இருந்து பல தேவைகளுக்காக வந்தாலும் – தமிழ் பேசும் தமிழர்களும் அவர்களது சிந்தனையும் தங்களின் மொழிமீதும், தங்களின் பண்பாடு மீதும், மாறாத பற்றுடன் இருந்தது – இருக்கிறது என்பதைத்தான் ஆஸ்திரேலியாவில் அவர்களது செயற்பாடுகளினால் கண்டுகொள்ள முடிகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமெனலாம். இலக்கு + இயம் என்பதுதான் இலக்கியம் ஆகிறது என்பதை இங்குள்ள தமிழ் பேசும், தமிழை நேசிக்கும், தமிழைச் சுவாசிக்கும் அத்தனைத் தமிழர்களும் நம்புகிறார்கள்.

    தமிழ்ப் படைப்பாளிகள் பலர் இங்கு இருக்கிறார்கள். தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ் சஞ்சிகைகள் பல, இங்கிருக்கின்றன. தமிழ் விழாக்கள், தமிழ்ப் போட்டிகள், விவாத அரங்குகள், நாட்டிய நிகழ்ச்சிகள் யாவும் இங்கு இடம்பெறுகின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம் இங்குள்ளவர்கள் தமிழை மறக்காமல் அதன் வழியில் செல்லுகிறார்கள் என்பதே.

    குழந்தை இலக்கியம் என்பது ஆணிவேரை ஒத்ததாகும். எழுதுவதற்கு மிகவும் சிரமமான இலக்கியம் எது என்றால் அது “குழந்தை இலக்கியமே” குழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொண்டால்தான் அது சாத்தியமாகும். குழந்தைகளின் இலக்கியம், இலக்கிய வகைகளிலே மிகவும் முக்கியமானதாகும். சிறிய வயதிலே படிக்கும் பழக்கம் இருந்தால்தான் பெரியவர்கள் ஆன பின்பும் படிப்பார்கள். பெரியவர்களின் இலக்கியத்துக்குக் கூட அடித்தளம் “குழந்தை இலக்கியமே”. ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதில் குறிப்பிட்ட படைப்பாளர்களே ஈடுபடுகிறார்கள். குழந்தைகளுக்கான படைப்புகளை ஒரு முக்கியப் பணியாக நினைத்தே அவர்கள்  படைக்கின்றார்கள்.

    சிறுகதைகள், நாடகங்கள், பாடல்கள், இறுவெட்டுகள், என்ற வகையிலும் நாட்டிய நாடகங்கள், நடனங்கள், வில்லுப்பாட்டுகள், என்ற வகையிலும் குழந்தைகளுக்கான படைப்பு முயற்சிகள் இங்கு அமைந்து காணப்படுகின்றன. தமிழைத் தங்களின் பிள்ளைகள் மறவாமல் இருக்க வேண்டும் என்று தமிழ்ப் பெற்றோர்கள் பலர் விரும்பும் காரணத்தால் ஆஸ்திரேலியாவில் தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பமாகின. ஆங்கிலத்தையே மொழியாகக் கொண்ட ஆஸ்திரேலியாவில் வளரும் தங்கள் பிள்ளைகள், ஆங்கிலத்தையே முதல் மொழியாகப் பயிலும் நிலை இருப்பதனால் நாளடைவில் தாய் மொழியான தமிழையும், பண்பாட்டையும் மறந்துவிடுவார்களோ என்னும் ஏக்கமும் பயமும் பெற்றோர் பலரிடம் இங்கு அடிமனத்தில் வேரூன்றி இருக்கிறது. அதனால் எப்படியும் அவர்களுக்குத் தாய் மொழியான தமிழினைக் கற்றிடும் நிலையினை ஏற்படுத்த எடுத்த முயற்சியாய் அமைந்தனவே இங்கு இருக்கும் தமிழ்ப் பள்ளிகள் ஆகும்.

    தமிழ் அமைப்புகள் பலவும் தமிழர்கள் வாழும் மாநிலங்களில் தமிழ்ப் பள்ளிகளை ஆரம்பித்திருக்கின்றன. அப்பள்ளிகள் வார இறுதி நாட்களில் மட்டுமே இயங்குகின்றன. அங்கு பாலர் வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழகத்து முன் தேர்வுக்குமான பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பல்கலைக்கழகத்து முன்தேர்வுக்குத் தமிழ்  ஒரு பாடமாக எடுக்க, ஆஸ்திரேலிய அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பது நல்லவொரு வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் பெற்றோர்கள் பலர், தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கு ஆர்வத்துடன் அனுப்பி வைக்கிறார்கள். இப்பள்ளிகளிலே ஆடல், பாடல், கதை சொல்லல், நாடகம் என்று குழந்தை இலக்கியம், தன்னையறியாமலேயே வளர்ந்து வருகிறது.

    குழந்தை இலக்கியம் என்று தெரியாமலேயே அங்கிருக்கும் ஆசிரியர்கள் குழந்தை இலக்கியத்தினைப் பல்வேறு வகைகளில் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். இங்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் எவருமே ஆசிரியப் பணி ஆற்றியவர்கள் அல்லர். ஒரு சிலரே ஆசிரியராக இருந்து அனுபவம் பெற்றவர்கள். ஏனையோர் வைத்தியராகவும், பொறியியலாளராகவும், தொழில்நுட்பவியலாளராகவும், கணக்காளராகவும் இருக்கிறார்கள்.

    இவர்களுக்குக் குழந்தை இலக்கியம் என்றால் என்ன என்பது தெரியாது. ஆனால் இவர்கள் குழந்தை இலக்கியத்தைக் கற்பிப்பதில் தம்மை அறியாமலே ஈடுபடுகிறார்கள்.

    ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் பற்றி எழுதவோ அல்லது பேசவோ தொடங்குவதாய் இருந்தால் அம்பி என்னும் அம்பிகைபாகரை உச்சரிக்காமல் தொடங்கவே இயலாது. அந்த அளவுக்கு ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தமக்கென ஒரு தனியான இடத்தினை அவர் ஏற்படுத்தி வைத்துள்ளார். அம்பி தாய்மொழிப் பற்று மிக்கவர். சமூக அக்கறை கொண்டவர். அடுத்த  தலைமுறையினரான குழந்தைகளை மனமிருத்தினார். அதனால் அவரின் குழந்தைகள் பற்றிய சிந்தனை, சிறப்பினைப் பெற்றது எனலாம்.

    ஆரம்பத்தில் சிறுகதை எழுதியவர் பின்னர் கவிஞராகவே மலர்ந்தார். கவிஞராகவே இருக்கவே ஆசையும் கொண்டார். தமிழ்நாட்டில் குழந்தை இலக்கியம் என்றதும் எல்லோர் நினைவிலும் வந்து நிற்பவர் கவிமணி அவர்களே. அம்பியையும் ஈழத்துக் கவிமணி என்றுதான் அழைக்கின்றனர். அந்த அளவுக்கு குழந்தைகளிடம் பற்றும் பாசமும் கொண்டு அவர்களுக்காக கவிதை இலக்கியத்தை வளர்த்து நின்றார். கணித ஆசிரியராய் இருந்தவரின் எண்ணத்தில் குழந்தைகள் இலக்கியம் கருக்கொண்டது என்றால் அந்த அளவுக்கு அம்பியின் ஈடுபாடு குழந்தைகள் பால் மிக்கிருந்தது என்றுதான் கருதமுடிகிறது.

    குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பதற்கு கடின உழைப்பு. பொறுமை, சொற்களஞ்சிய அறிவு மிகவும் முக்கியம் ஆகும். குழந்தைகளின் கவிதைகள் அவர்களின் நாட்டப் பொருட்களை மையமாகக் கொண்டிருக்கவும் வேண்டும். வீண் சொற்களையோ, வர்ணனைகளையோ, குழந்தைப் பாடல்கள் கொண்டிருப்பது கூடாது. இவற்றையெல்லாம் மனமிருத்தியே கவிஞர் அம்பி அவர்கள் குழந்தை இலக்கியத்தைப் படைத்தார். இவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் குழந்தைகளுக்கான கவிதைகளையும் தந்திருக்கிறார். ஆஸ்திரேலிய தமிழ்க்குழந்தைகள் தமிழில் பேச வேண்டு. பேசிப் பேசி மகிழ வேண்டும் என்பதே அவரின் பேரவாக இருந்தது. இந்த எண்ணத்தை மனமிருத்தியே ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தைக் கட்டி எழுப்புவதில் அம்பி அவர்கள் பெரும்பங்கு வகித்தார் என்பதை இங்கு வாழும் தமிழர்கள் அனைவருமே ஒரு மனதாக ஏறுக்கொள்ளுவார்கள்.

    “கொஞ்சும் தமிழ்”, “பாலர் பைந்தமிழ்” என்னும் கவிதை நூல்களை குழந்தை இலக்கியமாய் அளித்திருக்கிறார். இவரின் அணுகு முறை ஆஸ்திரேலிய குழந்தைகளை மனமிருத்தியதுதான் என்பதே இங்கு முக்கியமாகும். சூழலுக்கு ஒவ்வாத விடயங்களை யார் படைத்தாலும் அஃது பொருத்தம் அற்றதாகவே ஆகிவிடும். அப்படிப் பாடிஅமைப்பதை விட படைக்காமலே இருந்திடலாம். நீண்ட கால ஆசிரியப்பணி. பல நாடுகளில் ஆசியப்பணி. புலம் பெயர் நாடுகளில் உள்ள பிள்ளைகளின் உள்ளக்கிடக்கை இவற்றை எல்லாம் மிகவும் உன்னிப்பாகாகக் கவனத்தில் கொண்ட  காரணத்தினால்த்தான் அம்பி அவர்களின் குழந்தை இலக்கியம் ஆஸ்திரேயாவில் முக்கியத்துவம் மிக்கதாக அமைகின்றது எனலாம்.

    “நீங்கள் இனிய தமிழ் வேச வேண்டு. பேசிப் பழக வேண்டும். இனிமையாக பேசி மகிழவேண்டும். நீங்கள் இனிய பாடல்கள் பாட வேண்டு. பாடப் பழக வேண்டும். இனிமையாகப் பாடி மகிழ வேண்டு. நீங்கள் பாடல்கள் பாடி ஆட வேண்டும். பாடி ஆடி மகிழ வேண்டும். பெற்றோரையும் மற்றோரையும் மகிழ்வித்தல் வேண்டும். நீங்கள் பாடி ஆடும்போது அபிநயம் செய்து மகிழ வேண்டும். அபிநயம் செய்யப் பழக வேண்டும். அபிநயத்தால் எல்லோரையும் மகிழ்வித்தல் வேண்டும். நீங்கள் பாடி ஆடி அபிநயஞ் செய்து மகிழும்போது அறிந்த சொற்களின் பொருளை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். புதிய சொற்களையும் அறிதல் வேண்டும். புதிய சொற்களுடன் அறிவு வளர்ச்சியும் பெறுதல் வேண்டும்.” என்று – ” கொஞ்சும் தமிழ் பாடல்கள்” நூலில் அம்பி அவர்கள் தனது மனத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    அம்பியின் பாடல்கள் தனித்துவம் மிக்கன. குழந்தைகளின் நாவில் உச்சரிக்கக் கூடிய எளிய தமிழ், அவர்களின் சிந்தையில் பதியக் கூடிய ஓசை நயத்துடனான சொற்கோலங்கள். இதனால் குழந்தைகள் அந்நியப்பட்டு விடாமல் பாடலுடன் நெருங்கி ஒட்டுற வாடுகின்றனர். இதுவேதான் “அம்பி” என்னும் குழந்தை இலக்கியப் படைப்பாளருக்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள முக்கியத்துவம் எனலாம். வினா விடை முறையிலே பல பாடல்களை அமைத்திருக்கிறார். அங்கு குழந்தைகளின் உளவியலை அவர் நன்கு அறிந்து எழுதியிருக்கிறார் என்பதையே காணமுடிகிறது. ஆஸ்திரேலிய குழந்தைகளை மனமிருத்தி

    “அம்பி மழலை” என்னும் குழந்தை இலக்கிய நூலை ஆக்கியிருக்கிறார். கங்காரு ஆஸ்திரேலிய நாட்டின் அடையாளம். அதனை சிறியவர் முதல் பெரியவர்வரை விரும்பி இரசிப்பார்கள். இந்த நாட்டில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு விளங்காத விலங்குகளை அறிமுகப்படுத்தவோ அல்லது அவை பற்றி சொல்லுவதோ பொருத்தம் அற்றது என்பதை அம்பி அவர்கள் தெரிந்து காரணத்தால் “ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி அருமையான சின்னக்குட்டி” என்று பாடாமல்

       முன் இரண்டு காலைத் தூக்கி
       முன்னே பாய்ந்து செல்குவேன்

       பின் இரண்டு காலில் துள்ளி
       பாய்ந்து பாய்ந்து செல்லுவேன்

       சின்னக்குட்டியை வயிற்று பையில்
       செருகிக் கொண்டு செல்லுவேன்

       என்னைப் போன்ற அன்னை யாரோ
       என்று கேட்டுச் செல்லுவேன்

       என்னைத் தெரியுமா – என்
       பெயரைத் தெரியுமா?    

       என்று கங்காரு பற்றி குழந்தைகளுக்கு காட்டுகிறார் அம்பி.

    “கொஞ்சும் தமிழ்” அழகிய வண்ணப்படங்களுடன் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியமாய் வந்திருக்கிறது. அத்துடன் “பாலர் பைந்தமிழ்” படைப்பும் சேர்ந்துவிட்டது.

    “தமிழில் சிறுவர் இலக்கியம் இல்லாமை பெருங்குறையாகும். சிறுவர் இலக்கியத்தில் நாம் பின்தங்கி விட்டோம். அத்துறையில் “அம்பி யுகம் ” ஆரம்பமாகி விட்டது என்று நாம் பெருமையும் பூரிப்பும் அடைய வேண்டும்.” என ஈழத்து அறிஞர் அஸீஸ் அவர்கள் குறிப்பிடுகிறார்.

    “ஆஸ்திரேலியச் சிறுவருக்கு மட்டுமல்ல புலம் பெயர்ந்து பிறமொழிச் சூழல்களில் வளரும் எல்லாச் சிறுவருக்கும் ஏற்ற வகையில் அம்பியின் பாடல்கள் அமைகின்றன” என்று கலாநிதி. கவிஞர் கந்தவனம் குறிப்பிடுகிறார். இப்படி பலரும் அம்பியின் குழந்தை இலக்கியம் பற்றி விதந்தே நிற்கிறார்கள். தற்பொழு தொண்ணூறு அகவை கடந்து ஆஸ்திரேலிய மண்ணில் அம்பி அவர்கள் வாழுகிறார்கள் என்பது குழந்தை இலக்கியத்துக்கே பெருமை எனலாம். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளைபோல், இன்று ஆஸ்திரேலிய கவிமணியாய் வாழும் அம்பி ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் முக்கிய இடத்தினை வகிக்கிறார் என்பதுதான் உண்மை.

    அம்பிக்கு அடுத்த நிலையில் குழந்தை இலக்கியத்தை கையில் எடுத்தவர் என்னும் வகையில் வானொலிமாமா என்று எல்லோராலும் அழைக்கப்படும் திரு நா. மகேசன் அவர்கள் விளங்குகிறார்கள். கணக்காளராக வேலை பார்த்தாலும் இவர் இதயத்தில் குழந்தைகள் பற்றிய சிந்தனையே கருக்கொண்டு இருந்தது எனலாம். இலங்கை வானொலியில் “சிறுவர் மலர்” என்னும் நிகச்சியைத் தொகுத்து வழங்கி பிரபல்யம் அடைந்தமையால் அவரை  “வானொலி மாமா” என்று அழைக்கும் அளவுக்கு செல்வாக்கினைப் பெற்றுவிட்டார். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியா வந்தபின்பும் அவர் வானொலி மாமா ஆகவே இருக்க விரும்பினார்.

    ஆஸ்திரேலியாவில் வாழும் குழந்தைகளை மனதில் வைத்து அவர்களுக்காக பாடல்கள், நாடகங்கள், கதைகள், என்று தனது ஆளுமையை வெளிப்படுத்தி பயனுறச் செய்தார். சிறுவர்களுக்காக பாடல்கள் எழுதினார்.  “பாட்டும் கதையும்” என்று கதைப்பாடல் நூலையும். சிறுவர் கவியரங்கக் தொகுதியாய் “நாகடக்கவியரங்கு நூலையும், “ஒளவை வந்தாள்” என்னும் மாணவர் மேடை நாடக நூலையும், தந்ததோடு நின்றுவிடாமல் சிறுகதையாக சிறுவர்களுகாக ” ஆஸ்திரேலியாவில் ஆத்திசூடி” என்னும் அருமையான நூலையும் தந்திருக்கிறார். அதுமட்டுமன்றி “திருவிழா” என்னும் சிறுவர் சைவசமய நாவலையும் தந்து சிறப்பித்து இருக்கிறார்.

    “ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ்ச் சிறுவர்களோடு பழகியபோது அவர்களின் தமிழ் ஆர்வத்தை உணர்ந்தேன். ஆர்வம் இருப்பினும் அவர்களது வாழ்க்கை நிலை அவர்களின் தமிழ் அறிவுக்கும் – தமிழ் நாட்டுச் சூழல் அறிவுக்கும் தடையாகவே இருந்தது.

    ஆத்திசூடி வாக்கியங்களை ஆஸ்திரேலியச் சூழலில் பொதிந்து கதைகளாக தந்தால் இங்குவாழும் சிறுவர்கள் விளங்கிக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று கருதினேன். பல நண்பர்கள் இதை ஆதரித்து எழுதும்படி தூண்டினார்கள். அதன் விளைவுதான் “அவுஸ்திரேலியாவில் ஆத்திசூடி” என்று இக்கதை நூலின் முன்னுரையில் வானொலிமாமா மகேசன் கூறுவது மனமிருத்த வேண்டிய விடயம் எனலாம்.

    பன்னிரண்டு கதைகள் இதில் இடம் பெறுகின்றன. அறச்சாலைப் பெண் – (அறஞ்செய விரும்பு) , பூங்காவில் புகுந்தவன் – (ஆறுவது சினம்) புத்தகம் போயிற்றே – (இயல்வது கரவேல்) கண்தானம் – (ஈவது விலக்கேல்), குத்துச் சண்டை – (உடையது விளம்பேல்) மோட்டார் ஓட்டுநர் – (ஊக்கமது கைவிடேல்), கல்வியா செல்வமா – (எண் எழுத்து இகழேல்), மதிய உணவு – (ஏற்பது இகழ்ச்சி), தமிழ்க் கிழவர் – (ஐயம் இட்டுண்), வாழைப்பழத் தோல் – (ஒப்புர ஒழுகு), அறிவுச் சக்கரம் – (ஓதுவது ஒழியேல்),  பரிசளிப்பு விழா – (ஒளவியம் பேசேல்) என்னும் வகையில் ஒளைவையின் ஆத்திசூடியை விளக்கும் பாங்கில் அமைந்திருபதுதான் இதன் சிறப்பு எனலாம். வானொலி மாமாவாய் ஆகிவிட்ட மகேசன் அவர்கள் ஆஸ்திரேலியாவிலே இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும் இன்பத்தமிழ் வானிலியில் “சிறுவர் மலர்” நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் என்பதும் மனங்கொள்ளப் படவேண்டிய முக்கிய அம்சம் எனலாம். அம்பியும் வானொலிமாமா மகேசனும் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றனர் என்பது மிக மிக முக்கியமானதாகும்.

    பச்சையப்பன்கல்லூரியில் அறிஞர் மு. வ. அவர்களிடம் கல்வி கற்று இலண்டனில் பக்தி இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று பல உயர் பதவிகளை வகித்த ஆ. கந்தையா அவர்கள் இன்று எம்மிடையே இல்லாது விட்டாலும் அவரும் குழந்தை இலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்தி அவர்களுக்காக “மழலை அமுதம்” என்னும் குழந்தைப் பாடல் நூலையும், “கங்காரு தாவித் தாவி ஓடுவதேன்”, வால் நீண்டது எப்படி” என்னும் சிறுவருக்கான நூலினையும் தந்திருக்கின்றார். ஆஸ்திரேலியாவில் சிட்னியில் வாழ்ந்து அங்கேயே தனது வாழ்க்கைப் பயணத்தை நிறைவு  செய்த தமிழ் ஆராய்ச்சி அறிஞரான முனைவர் ஆ. கந்தையா அவர்களும் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுவிட்டார் என்பது உண்மையான விடயமாகும்.

    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநராக விளங்கிய ஜெயராமசர்மா அவர்கள் அவுஸ்திரேலிய குழந்தைகளை மனமிருத்தி பல கவிதைகளையும் இசைப்பாடல்களையும் தந்திருக்கிறார். பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அநேகமானவர்கள் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடிவருகின்றனர். இதனை அவதானித்த ஜெயராமசர்மா அவர்கள் இங்குள்ளவர்கள் பிறந்தநாள் விழாவில் பாடத்தக்க வகையில் குழந்தைகளை வாழ்த்தி குழந்தைகளின் இலகுவான மொழிநடையிலேயே “தமிழில் பிறந்தநாள் வாழ்த்து” பாடியிருக்கிறார். அதனை பலரும் விரும்பி இப்பொழுது தங்கள் வீடுகளில் பிறந்தநாளின் பொழுது குழந்தைகளை வாழ்த்திப் பாடிவருவது குறிப்பிடத்தக்கதாகும். மெல்பேணின் தென்கிழக்குப் பகுதியில்

    கேசி தமிழ் மன்றத்தத்தால் “இளவேனில்” என்னும் சஞ்சிகை சிறுவர்களை மையப்படுத்தியே வெளிவருகிறது. ஆஸ்திரேலியாவில் சிறுவர்களை மையப்படுத்தி வெளிவரும் சஞ்சிகை இதுவாகவே இருக்கிறது. இச்சஞ்சிகையில் ஜெயராமசர்மா குழந்தைகளுக்காக கவிதைகளை எழுதி வருகிறார். அதனைப் படித்த குழந்தைகள் ஆர்வமாய் வாசித்து சுவைக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். “குருவிக்கூடு” , ²உயர்ந்திடுவோம் வாழ்வினிலே”, ²அழகுதமிழ் பேசிடுவோம்” ஆகிய பாடல்களை இளவேனில் தாங்கி பல குழந்தைகளின் மனதில் இருத்தியே வைத்திருக்கிறது.

    “உணர்வுகள்” என்னும் கவிதை நூலினை ஜெயராமசர்மா அவர்கள் ஆஸ்திரேலியாவில் வெளியிட்டார். அதில் மொழி என்னும் பகுதியில் குழந்தைகளுக்கான பல கவிதைகள் இடம் பெறுகின்றன. “புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யிருக்கிறது. தமிழ் மொழியை அழிந்துவிடாமல் காப்பாற்றக் குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் பாடல்கள் பலவற்றை அடுத்துவரும் “மொழி”  என்னும் பிரிவிலே காண்கிறோம் என்று “ஞானம்” சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் திரு. ஞானசேகரன் ஜெயராமசர்மாவின் உணர்வுகள் கவிதை நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    “அன்னைத் தமிழ்மொழிமீது அலாதி கொண்டு பிள்ளைகட்கு தமிழ் மொழிமேல் மோகம்வர யாத்த கவிதை சொல்லனைத்தும் சுகம்தரவே சுந்தரக் கவிதையென்பேன். “மாண்மிகு அம்மாவை மம்மியென்றழைக்கலாமோ?” அருமை வரிகளிட்டு அவசியக் கருத்தை அசத்தியிருக்கின்றீர்” என்று கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தை (பம்மல்) நிறிவியவரும் அதன் பொதுச் செயலாளருமான காவிரி மைந்தன் “உணர்வுகள்” கவிதை நூலில் “சுவைத்தவர்கள் சொல்லுகிறார்கள்” பகுதியில் தனது மனக்கிடக்கையினை வெளிப்படுத்தி இருக்கிறார். கவிதைகளுடன் ஜெயராமசர்மாவால் சிறுவருக்காக ‘மலர்கள்”, “சிரிப்பு” “பொங்கல்”, என்னும் நாட்டிய நாடகங்களும் – “மாமா வருகிறார்”, “நல்ல காலம்” ஆகிய வில்லுப்பாட்டும் படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ஆஸ்திரேலியாவின் குழந்தை இலக்கியத்தில் நாடகம் என்னும் சொல்லினை உச்சரித்தால் அங்கு நிச்சயமாய் வந்து நிற்பவர் மாவை நித்தியானந்தன் அவர்கள்தான். விக்டோரிய மாநிலத்தில் பல தமிழ் பள்ளிகள் இருந்தாலும் மாவை நித்தியால் தொடங்கப்பட்ட “பாரதி பள்ளி” கற்பித்தல், ஒழுங்கமைப்பு, ஆசிரியர் கட்டமைப்பு, தமிழ் ஆர்வம், யாவற்றிலும் முன்னிற்கிறது என்பதுதான் அதன் விசேடம் எனலாம். இருபத்து ஐந்து வருடமாக இயங்கிவரும் இப்பள்ளியில் தமிழ் கற்க பல மாணவர்கள் விரும்பி வருகிறார்கள். அந்த அளவுக்கு நித்தி அவர்கள் நல்ல ஆசிரியராய் நல்ல நிர்வாகியாய் தமிழின்மீது ஆராக் காதல் கொண்டவராய் விளங்குகிறார்.

     “பாப்பா பாரதி” என்னும் இறுவெட்டு இங்குள்ள சிறுவர்களை மையப்படுத்தி முதலில் வெளிவந்த மிகவும் சிறந்த குழந்தை இலக்கிய படைப்பு எனலாம். இதுவரை மூன்று பாகங்கங்களில் “பாப்பா பாரதி” இறுவெட்டு வந்திருக்கிறது. இங்குள்ள சிறுவர்களின் மனங்களில் நித்தியின் இம்முயற்சி பதிந்திருக்கிறது – வெற்றி பெற்றிருக்கிறது என்பதையே காட்டுகிறதல்லவா? சிறுவர்களுக்கென்றே “சட்டியும் குட்டியும்”, “நாய்க்குட்டி ஊர்வலம்”, “சின்னச் சின்ன நாடகங்கள்”, என்னும் நாடக நூல்களையும் நித்தி தந்திருக்கிறார்கள். ஐந்து வயதுமுதல் பத்துவயது வரையும், எட்டு வயது முதல் பதின்மூன்று வயது வரையும், பின் பதின்மூன்று வயதுக்கு மேற்பட்டோர் என்று தனது நாடகங்களை நித்தி அவர்கள் வகுத்துத் தந்திருக்கிறார். வயதுகளைக் குறிப்பிட்டு எழுதியதால் அவ்வவ் வயதினருக்கு ஏற்ற சொற்களை அங்கே அவர் முக்கியத்துவப்படுத்தி இருப்பது அவரிடம் காணப்பட்ட  குழந்தைகளின் உளவியல் அறிவு என்றேதான் கருதமுடிகிறது.

    “சிறுவருக்காக எழுதுவது என்றுமே எனக்கு மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக இருந்திருக்கிறது. கணிசமான காலமாக நான் எழுத்துத் துறையில் ஈடுபட்டு அது தரும் ஆத்ம திருப்தியை அனுபவித்து வந்திருந்தாலும், நூல் வெளியீட்டீல் அக்கறை செலுத்தவில்லை. இப்பொழுது எனது சிறுவர் நாடகங்கள் தொகுப்புகள் வெளிவர உள்ளன. அவற்றில் இது முதலாவது. இத்தொகுப்புகள் வயதின் அடிப்படையில் அமைய உள்ளன.

    வளர்ந்தோருக்கான நாடக முயற்சிகளில் ஈடுபட்டிருந்த எனது ஆர்வம் சிறுவர் நாடகத்தின் பால் திரும்பியதற்கு புலப்பெயர்வு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. குழந்தைகள் தமிழ் கற்கவென 1994 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் பாரதி பள்ளியை ஆரம்பித்தேன். இது குழந்தைகள் பற்றிய அறிவையும், அவர்களை விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள எனக்கும் ஒரு பள்ளியாயிற்று. ஒவ்வொரு வருடமும் இருநூற்றுக்கு மேற்பட்ட ஆங்கிலத்தை முதன் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்குத் தமிழிற் பேசி நடிக்க பயிற்றுவித்து அவர்களை மேடையில் காண்பது ஒரு தேவையாக இருந்தது. இருந்து வருகிறது.

    இந்த நாடகங்களை எழுதுகையில் சொற்சிக்கனம், எளிமை, வயதுக்கேற்ற சொற்கோவை ஆகிய அம்சங்களில் கவனம் சுலுத்த முயன்றுள்ளேன். பாடல்களும் ஓசை நயத்துடன் கூடிய வார்த்தைக் கோலங்களும் இந் நாடகங்களில் முக்கியத்துவம் பெறுவதையும் காணமுடியும். இந்த நாடகங்கள் யாவும் பாரதி பள்ளியில் முதல் மேடையேற்றம் கண்டவை. அத்துடன் சிறுவர் சிறுமியரை நன்கு கவர்ந்தமையுமாகும். தமிழிலுள்ள சிறுவர் நாடகத்தின் அகலமும் ஆழமும் மேலும் விரிதல் வேண்டும். வகை வகையான தன்மையில் வித்தியாசப்படும், கலைத்துவம் மிக்க நாடகப் பிரதிகள் பல்வேறு வயதினருக்கும் தேவைப்படுகிறது. இந்தத் தேவைக்கான ஒரு துளி பங்களிப்பாக எனது நாடகத் தொகுப்புகள் அமையுமாயின் அதுவே நான் அடைய விரும்புவதாகும், என்று மாவை நித்தியே குறிப்படுவது இங்கு நோக்கத்தக்கதாகும்.

    வானொலி மாமாவாக மகேசன் அவர்கள் இருப்பதுபோல வானொலி மாமியாக புவனா இராஜரட்ணம் அவரகள் ஆஸ்திரேலியாவில் விளங்குகின்றார். சிறுவர் நாடகங்களை எழுதினார். இசைப்பாடல், நாட்டியப்பாடல், வில்லுப்பாடு என்று இவரின் ஆளுமை ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் இடம் பெற்றது எனலாம். இவரின் வழியிலே ராணி தங்கராசா அவர்கள் மாண வர்களை மையப்படுத்தி நாடகங்கள் எழுதி இயக்கியும் உள்ளார்.இவர்களுடன் திரு சந்திரகாசன் அவர்களும் வந்து நிற்கிறார். இவரும் சிறுவர் நாடகத்தை வளர்பத்தில் பெரும் ஊக்கமுடையவராக விளங்குகின்றார்.

    மெல்பேண் மணி என்று அழைக்கப்படும் கனகமணி அவர்கள் நாடகங்கள், கதைகள், இசைப்பாடல்கள், கவிதைகள், வானொலிச் சித்திரங்கள் என்று பன்முகமாக தன்னை வெளிப்படுத்தி நிற்கிறார். இவரின் “சிறுவர் கதம்பம்”

    “மணியாரம்” என்னும் பல்சுவைக் கதம்ப மாலை “பாசத்தின் வலிமை” என்னும் நூலில் இடம்பெறும் நாடகங்கள் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் இணைந்து கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

    முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் சிறுவர்களுக்காக பல கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். அவர் ஒரு சிறந்த ஊடகவிலாளராக இருக்கின்ற காரணத்தால் ஆஸ்திரேலிய குழந்தைகளின் மனநிலையினை நன்கு அறிந்து வைத்து அதற்குத் தகுந்தாற் போல தனது பங்களிப்புக்களை வழங்கிவருகிறார் எனலாம். இங்குள்ள சிறார்கள் கணனியிலேயே தங்களின் பொழுதினை செலுத்திவருவதைக் கண்ணுற்ற முனைவர் சந்திரிகா அவர்கள்

    “சிறுவருக்கான கணனி” என்னும் நூலினை ஆக்கிக் கொடுத்திருக்கிறார். “வர்ணம்” என்னும் பெயரில் ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு நல்ல ஒரு கதை நூலினையும் கொடுத்திருக்கிறார். அண்மையில் முனைவர் சந்திரிகா அவர்களினால் “கொசுவீட்டில் பாயசம்” என்னும் வர்ணப்படங்கள் கொண்ட கதை நூல் தொகுத்து வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் முனைவர் சந்திரிகாவும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    யசோதரா பாரதி சிங்கராயர் பல்மருத்துவர். ஆனால் நடனம், இசை, யாவற்றையும் கற்றுத் தேர்ந்தவர். ஈழத்தில் வாழ்ந்த புகழ்பூத்த தமிழ் புலவர் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரின் பேரனின் மகளாவார். இவரின் தந்தையார் சோமசுந்தர பாரதியும் பல்மருத்துவராவார். அதேவேளை இவர் ஒரு வரகவியாகவும் விளங்குகிறார். வாழையடி வாழையென தமிழும் இவர்களுடன் இணைந்தே வந்து கொண்டிருக்கிறது. மருத்துவம் படித்தாலும் மருத்துவத்தில் ஈடுபடாமல் குழந்தைகளை மனமிருந்தி – அவர்களுக்கு தமிழ் கற்பிப்பதிலும், தான் கற்ற இசையை , நடனத்தை, கற்பிப்பதிலும் தன்னை ஈடுபடுத்தி ஆத்மதிருப்தி அடைகின்றார் என்றுதான் சொல்லல் வேண்டும்.

    1997 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த இவர் சிட்னியிலேயே வாழ்ந்து வருகிறார். சிட்னியிலுள்ள தமிழ் பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்கு நடனம், நாட்டிய நாடகம், என்று தனது பணியினை மேற்கொண்டு வெற்றியும் ஈட்டி உள்ளார். இவரால் 400 க்கு மேற்பட்ட சிறுவர் நாட்டிய நடன நிகழ்ச்சிகள் மேடையேற்றப் பட்டிருக்கின்றன. மூன்று வயது தொடக்கம் பதினாறு வயது வரைக்குமான குழந்தைகளை மையப்படுத்தி இவரின் செயற்பாடுகள் இன்றும் சிட்னியில் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

     “பரா ஒலம்பிக் 2000” சிட்னியில் நடைபெற்ற வேளை 68 குழந்தைகளை நடன நிகழ்வும், கிருஷ்ண அவதாரங்களைக் காட்டும் நாட்டிய நாடகமும் இவரின் ஆற்றலை யாவரும் அறியப் பண்ணியது எனலாம். 6 வயது தொடக்கம் 10 வயதுவரையுள்ள  52 குழந்தைகளை வைத்து வீதியிலே காவடி நடனம் ஆடச்செய்து யாவரையும் பிரமிக்க வைத்தார். “கார்த்திகை மாலை”,  “சுனாமி”, “கிருஷ்ண வதாரம்”, என்பன ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்துக்கு வலுச் சேர்க்கும் பாங்கில் அமைந்திருக்கின்றன என்பதுதான் உண்மையெனலாம்.

     “புலம்பெயர்ந்த ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள குழந்தைகள் தொலைக் காட்சிகளைப் பார்ப்பதும், வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபட்டு அதனையே வெறித்துப் பார்த்துக்கொண்டும் கெடும் குழந்தைகள் எண்ணிக்கை கூடுதலாகவும், பெற்றோரின் பங்கெடுப்பு குடும்பநேரங்களில் குறைந்தபடியாலும் , பல வித்தியாசங்களை உணர்ந்தேன். இந்த நிலையை நாட்டியங்கள், நாட்டிய நாடகங்கள், மூலம் மாற்றி என்னிடம் பயிலும் மாணவர்கள் மத்தியில் வெற்றியும் கண்டுள்ளேன். நடனப் பயிற்சியின் முன் கதையாக அந்த நடனக் காட்சிகளை சொல்லிக் கொடுப்பேன். பெற்றோர் சில பேருக்கும் கதைகள் பல சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது.இதனால் குழந்தைகள் அந்தக் கதைகளை தாங்களாகவே ஆராய்ந்து படிக்கும் ஆர்வம் தூண்டப்படுகின்றது. என்னைச் சில பேர் கேட்பார்கள் – நல்ல பாட்டிமாதிரி கதை சொல்லிக் கொடுக்கிறீர்கள் என்று ….. அது எனக்கு பெரிய திருப்தியைக் கொடுக்கும். ஆம் நான் அந்த பாட்டியின் இடைவெளியை நிரப்பும் திருப்திதான் அது. இவ்வாறு யசோ அவர்கள் தன்னுடை அனுபவத்தை வெளிப்படுத்தி நிற்கிறார். இவரின் இப்படியான முயற்சிகள் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்துக்கு நல்லதோர் பக்க பலம் என்றே எண்ண முடிகிறது.

    மாத்தளைச் சோமு அவர்கள் நாடறிந்த நல்ல எழுத்தாளர். இவர் பல படைப்புகளை சிறுவர் அல்லாதவர்க்கே வழங்கி வந்திருக்கிறார் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவருள்ளும் ஒரு குழந்தைகள் உலகம் இருந்திருக்கிறது என்பதை இவரின் குழந்தை களுக்கான கவிதைகளும், குட்டிக்கதைகளும், காட்டி நிற்கின்றன. ஆஸ்திரேலியாவில் சிட்னியில் வாழும் இவர் “தமிழ் ஓசை” என்னும் சஞ்சிகையின் ஆசிரியராக விளங்குகிறார். சுட்டி விகடன், தினமணி – சிறுவர் கதிர், ரத்தினமாலா போன்ற பத்திரிகையில் குழந்தைகளுக்கான கவிதைகள், குட்டிக்கதைகளை எழுதிக்கொண்டு வருகிறார். “ஆஸ்திரேலிய ஆதிவாசிக்கதைகள்”  என்று ஒரு கதை நூலினை 2012 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வெளியிட்டார். இக்கதைகள் பெரியவர்களுக்கு என்று படைக்கப்பட்ட போதும் – இதில் ஏறத்தாள பத்துக்கதைகள் சிறுவர்களுக்கு ஏற்றனவாக இருக்கிறது என்று மாத்தளைச் சோமுவே கூறுகின்றார். இந்தியப் பத்திரிகைகளில் இவரின் குழந்தைகள் பற்றிய படைப்புகள் வெளிவந்தாலும் – அவைகள் அனைத்துமே ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்துக்கும் வலு சேர்க்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது என்பதுதான் முக்கியமாகும். தான் குழந்தைகளுக்காக படைத்த அனைத்தையும் தொகுத்து விரைவில் நூலாக வெளியிட இருபதாகவும் என்னிடம் தெரிவித்தார்.

    மாத்தளைச் சோமு அவர்களைப் போல நல்ல எழுத்தாளர்தான் திரு முருகபூபதி அவர்கள். இவர் மெல்பேண் நகரில் வாழ்கிறார். இவரும் சிறுவர்கள் அல்லாதவர்க்கே பலவற்றையும் படைத்தளித்தார். என்றாலும் தனது சிறிய பராயத்தில் தனது பாட்டி தனக்குச் சொன்ன கதைகளை அவரால் மறந்துவிடவே முடியவில்லை. பாட்டிகள்தான் உண்மையில் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகள் என்பதை முருகபூபதி நம்பினார். அதனால் புலம்பெயர்ந்த ஆஸ்திரேலிய நாட்டில் வளரும் எங்களின் தமிழ்க் குழந்தைகளை மனமிருத்தி “பாட்டி சொன்ன கதைகள்” என்னும் சிறுவருக்கான கதை நூலினை வெளியிட்டுவைத்தார். பன்னிரண்டு கதைகள் கொண்ட இந்தக் கதைநூல் இங்குள்ள சிறுவர்கள் படித்து பயன் பெற உதவியாய் அமைகிறது.

    இவர்களின் வழியிலே உஷா ஜவகர் அவர்களும் இணைந்து கொள்ளு கின்றார். “குறும்பபுக்கார இளவரசியும் கனிவான தேவதையும்”, “மாயக்கிழவியின் மந்திரம்”, “அதிசய உயினங்களைப் பற்றிய அரிய செய்திகளும் கதைகளும்”, ஆகிய நூல்களை அளித்து ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தனக்கு ஒரு அடையாளத்தை இவர் எடுத்துக் கொள்ளுகிறார் எனலாம். வர்ணப் படங்கள். பெரிய எழுத்துக்கள். பளிச்சிடும் காகிதம். கவர்ச்சியான வசனங்கள். குழந்தைகள் மனம்விரும்பும் தலைப்புகள். இவைகள் அனைத்துமே உஷா ஜவகர் அவர்கள்  குழந்தைகளின் உளவியலை நன்கு தெரிந்தவர் என்பதையே காட்டுகிறது எனலாம்.

    “பாப்பா பாரதி” என்னும் இசைவடிவான இறுவெட்டு ஆஸ்திரேலிய குழந்தைகளுக்காக வெளிவந்து பல ஆண்டுகள் கடந்து நிற்கும் நிலையில் 2013 ஆம் ஆண்டில் “மலரும் மொட்டுகள்” என்னும் இசைவடிவான இறுவெட்டு வெளிவந்திருக்கிறது. சங்கீத பூஷணம் திருமதி பொன்னம்மா சத்தியமூர்த்தி அவர்களின் நெறியாள்கையில் இது வெளிவந்திருக்கிறது.

    சிறுவர்களுக்காக வெளிவந்த பாடல்களுக்கும், புதிய பாடல்களுக்கும் இசைவடிவம் கொடுத்து சிறுவர்களின் அபிநயத்துடன் வெளிவந்திருப்பதே மிகவும் சிறப்பான அம்சம் எனலாம்.” ஆஸ்திரேலியாவில் வளருகின்ற குழந்தைகளுக்கு நல்லறிவையும், நமது கலாசாரத்தையும், ரசனையுடன் புரிந்து கொள்ளவும், தாய்மொழியான தங்கத் தமிழை வளர்த்துக் கொள்ளவும் நல்ல சிறுவர் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு மெட்டு அமைத் திருக்கின்றார்.” என்று இசை இறுவெட்டு பற்றி ஆஸ்திரேலியாவின் மிருதங்க வித்துவான் திரு ரவி ரவிச்சந்திரா விதந்து பாராட்டியமை மனங் கொள்ளத் தக்கது எனலாம்.

    புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வந்தாலும் தங்களின் வருங்கால சந்ததிகளை தங்களின் மொழி, பண்பாடு, மறவாமல் வளரப்பண்ணல் வேண்டும் என்னும் அவா இங்குள்ள தமிழ்ப் படைப்பாளிகள் அனைவரிடமும் மேலோங்கி இருக்கிறது என்பதையே இதுவரை நாம் பார்த்தோம். எவ்வளவுதான் இலக்கியப் படைப்புகள் படைத்தாலும் – குழந்தைகளுக்கான இலக்கியம் வளர்ச்சியடையாவிட்டால் அங்கு பூரணத்துவம் வந்துவிடாது என்பதை ஆஸ்திரேலிய படைப்பாளர்கள் முழுமையாகவே நம்புகிறார்கள். இதனால் குழந்தை இலக்கியத்தை எப்படியெல்லாம் ஆஸ்திரேலியாவில் மேலும் வளர்ச்சி அடையச் செய்யலாம் என்று சிந்தித்தும் செயலாற்றிக் கொண்டுமே இருக்கிறார்கள். அந்தவகையில் ஆஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தினுள் இன்னும் பல புதிய படைப்பாளிகளும், ஆர்வலர்களும் இணைந்து கொள்ள காத்திருக்கிறார்கள் என்னும் இனிப்பான நல்ல செய்தினை வழங்கி நிற்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.

    Share