திருக்குடமுழுக்கில் வடமொழி-திருமுறைகள் சொல்வதென்ன?

0
-மரபின் மைந்தன் முத்தையா
 
தஞ்சைப் பெருவுடையார் திருக்கோவில் திருக்குடமுழுக்கு பற்றிய விவாதங்கள் வளர்ந்துகொண்டே போகின்றன. ஆலயத்தோடும் ஆன்மீகத்தோடும் அணுவளவும் தொடர்பில்லாத பலரும் அன்றாடம் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதில் தம் நிலைப்பாடு என்னவென்பதை ஆன்மீக ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரும் அறிவிக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.
 
தொடர்பில்லாதவர்கள் துள்ளிக் குதிப்பதும் தொடர்புள்ளவர்கள் தள்ளி நிற்பதும் தமிழ்ச் சூழலுக்கு புதிதல்லவே!
 
மாமன்னன் இராஜராஜன் கட்டிய ஆலயம் என்பதால் அவனிடமிருந்தே தொடங்குவோம். இன்று பல்லோரும் ராஜராஜன் தமிழ் மன்னன். ஒரு தமிழ் மன்னன் கட்டிய தமிழ்க் கோயில். அங்கே திருக்குடமுழுக்கு தமிழில் நடைபெற வேண்டும் என்றெல்லாம் வாதங்களை வைக்கிறார்கள்.
 
ராஜராஜன் தமிழ் மன்னனாக இருக்கலாம். ஆனால் அவருடைய ஆன்மீக குரு யாரென்று பார்த்தால் சதுரானன பண்டிதர் என்ற பெயருடைய காளாமுகச் சைவர் . அதேபோல அவருடைய மகன் ராஜேந்திர சோழனின் குரு யார் என்று பார்த்தால் லகுலீச பண்டிதன் என்னும் காளாமுகச் சைவர்.
 
சொல்லப் போனால் ராஜராஜன் காலத்திற்கு முன்னரே திருமுறைகள் பாடக் கூடியவர்களுக்கு கல்வெட்டுகள் உண்டு. (திருமுறைகளை ராஜராஜன் கண்டெடுத்ததாக உமாபதிசிவம் பெயரில் ஒரு புராணம் வழங்கி வருகிறதே தவிர, அது அவரால் எழுதப்பட்டது அல்ல என்றுதான் ஆறுமுக நாவலர் உள்ளிட்ட ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்). எனவே இராஜராஜன் காலத்துக்கு முன்பிருந்தே ஆலயங்களில் திருமுறைகள் ஓதப்பட்டன.
 
ஆனால் ராஜராஜன் காலத்தில் தேவார மூவர் திருநாமங்கள் கூட, தீக்ஷா நாமம் தரப்பட்டு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. திருநாவுக்கரசு அகோர சிவன், ஞானசம்பந்தன் வாமதேவ சிவம் என்றெல்லாம் சமய ஆச்சாரியர்கள் திருநாமங்கள் பின்னால் தீக்ஷா நாமம் சேர்க்கும் அளவு ராஜராஜன் வடமொழி சார்ந்தவனாக இருந்திருக்கிறான். எனவே அவர் எழுப்பிய ஆகம முறைப்படியான ஆலயத்தில் அந்த மரபு சார்ந்த முறையிலேயே திருக்குடமுழுக்கு நடைபெற வேண்டும்.
 
இரண்டாவதாக சைவர்களுக்கு உயிர்நாடியாக விளங்கக் கூடியவை திருமுறைகள். குறிப்பாக தேவாரம் திருவாசகம் ஆகியவை. அவை சமஸ்கிருதத்தை முழுமையாக ஒப்புக்கொள்கின்றன. திருமுறைகள் முழுவதிலும் வேதங்களும் வடமொழியும் சிறப்பிக்கப்படுவது கண்கூடு.
 
“வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண்
வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்”
 
என்றும்
 
“ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்”
 
என்றும் சிவபெருமான் சிறப்பிக்கப்படுகிறார்.
 
இன்று பலரும் வடமொழி என்பது தமிழ்நாட்டில் சைவ மரபுக்கு முரணானது என்பது போல ஒரு பிம்பத்தை வலிந்து கட்டமைக்கிறார்கள். தமிழ்ச் சைவர்களின் மேல் வரிச் சட்டம் ஆகிய திருமுறைகள் அவ்வாறு நமக்குச் சொல்லவில்லை. எனவே சமஸ்கிருதம் அந்நிய மொழி என்பது நாத்திகவாதிகள் கொண்டுவரும் பொய்யான பரப்புரை ஆகும்.
 
ஆகமங்கள் என்பவை ஆலயங்கள் எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி மட்டும் பேசுபவை அல்ல. ஆகமங்கள் இறைவனால் அருளப்பட்டவை. அவை ஆழமான ஆன்மீக அறிவியல். மேலும் இன்று சிலர் திருக்குடமுழுக்கு நிகழும்போது சொல்லப்படும் மந்திரங்கள் புரிய வேண்டும் என்கிறார்கள். எல்லோருக்கும் புரியும் விதமாய் அமைய அவை வாய்பாடுகள் அல்ல. அவை மிக நுட்பமான ஒலி ஒழுங்குகளும் முத்திரைகளும் கூடிய தொன்மையான ஞானக் கலை.
 
வடமொழியில் மந்திரங்கள் சொல்லி திருக்குடமுழுக்கு நடத்துவதால் தமிழ் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் ஆன்மீகம் என்பதையே அறியாதவர்கள் சொல்வது. காலங்காலமாகவே ஆலய வழிபாட்டு மரபில் தமிழ் என்பது இரண்டாம் மொழி அல்ல. இணைமொழி.
 
“இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்”
 
என்று ஆலயச் சூழலை மணிவாசகப் பெருமான் வர்ணிக்கிறார். இங்கே இருக்கு என்பது ரிக்வேதம் ஆகிய சாஸ்திரத்தையும் தோத்திரம் என்பது தமிழில் ஓதப்படும் திருமுறைகளையும் குறிக்கும்.
 
ஆலயங்களில் தமிழ் அர்ச்சனை தாராளமாகச் செய்யலாம். ஆனால் திருக்குடமுழுக்கு என்பது ஆலயத்தில் இருக்கிற விக்கிரகத்துக்கு இருக்கும் சக்தியைப் புதுப்பிக்கும் மெய்ஞான விஞ்ஞானம். அந்த மந்திரங்களின் பொருளைக் காட்டிலும் அது ஏற்படுத்தும் அதிர்வுகள் தான் மிகவும் முக்கியம்.
 
ஆகமங்கள் என்பவற்றை “வந்தவை” என்று பொருள். எனவே தமிழிலிருந்து வடமொழிக்கு வந்தது என்பதாக திரு. சத்தியவேல் முருகனார் போன்றவர்கள் சொல்லி வருகிறார்கள். சிவபெருமானிடமிருந்து வந்தது என்றுதான் அதற்குப் பொருள்.
 
சிவபெருமான் வேதங்களை திருவாய் மலர்ந்தருளியதைப் போலவே ஆகமங்களையும் அருளினார் என்கிறார் திருமூலர்.
 
“வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உன்னுக”
 
என்பது திருமந்திரம்.
 
” ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க”
 
என்பது சிவபுராணம்.
 
எனவே ஆகமங்கள் என்பவை, வழிபாட்டு நெறியின் உயிர் நாடி. அவற்றை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.
—————————————————————
படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *