சேக்கிழார் பா நயம் – 65 (ஆதியாய் )
திருச்சி புலவர் இராமமூர்த்தி
ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவு மாகிச்
சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏகமாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி
சொற்பிரிப்பு :
ஆதி ஆய் நடுவும் ஆகி அளவு இலா அளவும் ஆகி
சோதி ஆய் உணர்வும் ஆகி தோன்றிய பொருளும் ஆகி
பேதியா ஏகம் ஆகி பெண்ணும் ஆய் ஆணும் ஆகி
போதியா நிற்கும் தில்லை பொது நடம் போற்றி, போற்றி!
சொற்பொருள் :
திருவாரூர் அடியார்களை இறைவன் எடுத்துக் கொடுத்த அடியை முதலாகக் கொண்டு ‘’திருத்தொண்டத்தொகை‘’என்றமுதல்நூலை சுந்தரர் இயற்றினார்!
அதனைச் சேக்கிழார் விளக்குகிறார். அப்போது தில்லைவாழ் அந்தணர் போற்றிய சிவப்பரம்பொருளைஇரண்டு பாடல்களால் தாமும் போற்றுகிறார். இப்பாடல்கள் மூலம் சைவ சித்தாந்தத்தின் வழியே சிவப்பரம்பொருளின் திருவருள் தோற்றத்தை சிவஞானப் பிழிவாகவே சேக்கிழார் அருளுகின்றார்.
இப்பாடலின் பதவுரை :
ஆதியாகியதுடன் நடுவும் ஆகி; அளவிலா அளவும் ஆகி – பாசஞான பசுஞானங்களால் அளந்தறியப்படாது. சிவஞானத்தால் அறியப்படும் பொருளாகி; சோதியாய் உணர்வும் ஆகி – காட்டும் அறிவாகிய ஒளியும், அது காட்டக் காண்கின்ற அறிவுமாகி; தோன்றிய பொருளும்……ஏகம் ஆகி – இருவகை மாயைகளினின்றுந் தோன்றிய எப்பொருளும் ஆகி அவையனைத்தினும் அத்துவிதமாய்க் கலந்ததொரு பொருளேயாகி; பெண்ணும் ஆய் ஆணும் ஆகி – பெண்ணும் ஆய் அதனோடு இணைந்த ஆணுமாகி; போதியா நிற்கும்…… போற்றி – போதித்து நிற்கும் தில்லையின் பொதுவிலே ஆடுகின்ற திருக்கூத்தினைப் புறத்தும் அகத்தும் இருமுறை வணங்குவோம் என்பதாகும்!
தில்லைப்பொதுமன்றத்துள் இயங்கியும் இயங்காமலும் ஆடுகின்ற இறைவன் எவ்வாறெல்லாம் ‘ஆகி’க் காட்சியளிக்கின்றார் என்பதை இப்பாடலில் உள்ள ஆகி என்ற எச்சவினை ஆறுமுறை அடுக்கி வந்து உணர்த்துகின்றது. முதலில் ‘ஆதியாய் நடுவுமாகி’ என்ற தொடரால், இறைவனின் முதல் இடை நடு என்ற முத்திறங்கள் உணர்த்தப் பெறுகின்றன! ஆதி என்பது இறைவனின் முதன்மைத் தோற்றத்தை உணர்த்துகிறது.
விளக்கம்:
தாமே அனைத்துக்கும் முதலானவர்; தம்மிலிருந்தே உலகங்கள் அனைத்தையும் தோற்றுவித்தவர், இதனைச் சிவஞானபோதம் ,
‘’அவன் அவள் அதுவென அவைமூ வினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர் ‘’
என்று தொகுத்துரைக்கின்றது. எல்லாவற்றையும் உருவாக்கிய முதற் பொருளாகவும், அனைத்தையும் சங்கரித்துத் தம்முள்ளே ஓடுக்கிக் கொள்ளும் ஈற்றுப்பொருளாகவும் இருப்பதை ‘’அந்தம் ஆதி என்மனார்‘’ என்ற தொடர் விளக்குகிறது. அனைத்துப் பொருள்களும் சங்கார காலத்தில் மறைந்து சிருட்டிக் காலத்தில் மீண்டும் அவரிடமிருந்தே தோன்றி நிற்கும் என்பதை , ‘ஒடுங்கி மலத்துளதாம்’ என்ற தொடர் விளக்கும். சிருட்டிக் காலத்திலும் மீண்டும் உருவாகும் காலத்திலும் முதலாகி நிற்பதை ‘ஆதி’ என்ற சொல்லே விளக்கும். இதனால் ‘திதி‘ என்னும் நிலைபெறுத்தல் உணரப்படும். இவை அனைத்தையும் ‘ஆதியாய் நடுவுமாகி’ என்ற தொடர் விளக்குகிறது. அழிவுக் காலத்தில் படைக்கும் பிரமனும் காக்கும் திருமாலும் பிரளயத்தில் மூழ்கி மறைவர்; அப்போது மீண்டும் அனைத்தையும் உருவாக்கி, மீண்டும் நிலைபெறுத்த இறைவன் நல்வீணை வாசிப்பார் என்பதை அப்பர் பெருமான்,
‘’பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்
இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் களேவரமுங்
கருங்கடல் வண்ணன் களேவர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின்று எம்மிறை நல்வீணை வாசிக்குமே.’’
என்று பாடினார். இதனையே திருஞானசம்பந்தர்,
‘’புவம்வளி கனல்புனல் புவிகலை உரைமறை திரிகுணம் அமர்நெறி
திவம்மலி தருசுரர் முதலியர் திகழ்தரும் உயிரவை அவைதம
பவம்மலி தொழில்அது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழுநில னினில்நிலை பெறுவரே!’’
என்று பாடுகிறார். பொருள்களை உணர்வதற்குத் தேவை அளவை எனப்படும் பிரமாணங்களாகும் இதனை ஆன்ம சிற்சக்தி என்பர். அளவைகளுள் உய்த்துணர்தல் என்பதும் ஒன்று! இதனை உள்ளத்தால் அளவிடல் என்பர். இந்த அளவீட்டில் அடங்காமல் விரிந்திருப்பதே தில்லை மன்று! அத்தகைய சிற்சக்தியால் அளந்தறியப்படுவதே இறைமை! அளவும், அளத்தலும் ஆகுபெயராய் இறைவன் அளவைக் குறித்தன. இதனைச் சிவஞானமே காட்டும்! இதனைச் சேக்கிழார் ‘’அளவிலா அளவுமாகி‘’ என்கிறார். இந்த அளவை அறிவால் அனுமானிக்கலாம். அறிகின்ற மெய்ப்பொருளாகவும் பொருளைக் கடந்து, அறிவையம் கடந்து விரிந்த சுடரும், வான்வெளியும், இடமும் அவனே என்கிறார் காரைக்காலம்மையார். இதனை,
‘’அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளும் தானே அவன்!
என்றுபாடுகிறார். எப்பொருளிலும்இரண்டறக்கலந்துசொல்லுலகம், பொருளு லகம் இரண்டிலும் வேறுபாடின்றி ஒன்றாகி நிற்பவர் அவர்! இதனைச் சேக்கிழார் ‘’பேதியா ஏகம் ஆகி ‘’ என்கிறார்.
எல்லாவுயிர்களும் ஆண், பெண் என்ற இருவகை உயிரணுக்களாய்த் தாயின் கருவில் கலந்து உருவாகி உறவாடி வளர்கின்றன. சக்தி சிவம் எனப் பிரிந்து நிற்பதே இறைத்தோற்றம்ஆகும். இதனைச் சிவஞான சித்தியார்,
‘’சத்தியும் சிவமும் ஆய தன்மையில் உலக மெல்லாம்
ஒத்துஒவ்வா ஆணும் பெண்ணும் உணர்குண குணியு மாகி
வைத்தன அளவால் வந்த ஆக்கம்இவ் வாழ்க்கை ‘’
என்று பாடுகிறது! இதனையே
‘’பெண்ணுமாய் ஆணுமாகிப் போதியாநிற்கும்’’ என்று பாடியருளுகின்றார்! இங்கே போதித்தல் என்பது இறைவனின் எல்லா நிலைகளிலும் அழியாமல் நின்று கூத்தாடும் திருநடம் ஆகும்! இதனை ஞானசாத்திரங்களும், திருமந்திரமும்‘’ திருக்கூத்து தரிசன’’மாககே கூறுகின்றன! இதனையே தில்லையம்பலக்கூத்து உணர்த்துகிறது!
பொதுவாக சித்தாந்த முறைப்படி இப்பாடலில், ஆதி என்பது பிரமனையும், நடு என்பது திருமாலையும் சோதி என்பது மறைப்புச் சத்தியாகிய மகேசுரனையும், தோன்றிய பொருளாகிய சதாசிவத்தையும் குறித்தன! சேக்கிழாரின் சைவப்பெருஞானம் விளங்கும் திருப்பாடலாக இப்பாடல் அமைந்து நம்மை ஈர்க்கின்றது!