சிகரம் சாய்ந்தது!

முனைவர் ஔவை நடராசன்
நான் சென்னைக்கு வந்த 1955ஆம் ஆண்டிலிருந்து எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமாகத் தெரிந்த கொள்கைக் கோமான் – நீதி வேந்தர் – பு.ரா.கோகுலகிருஷ்ணன் அவர்களின் மறைவைப் பழுத்த கனி உதிர்ந்தது போலத்தான் என்று எழுதிவிட முடியாது.
பழுத்த அந்த மாமரம், ஆயிரம் கனிகளைத் தந்த பயன்மரமாகும். ஏ.எல்.முதலியார் குடும்பத்தை உலகம் காணாத இரட்டையர் குடும்பம் என்பார்கள் ஆனால் தமிழினத்தில் மூன்று கிளைகளாகப் பூத்துக் கனிந்த அறிவார்ந்த புகழ்ச் செல்வங்கள் என்ற பெருமை நீதி வேந்தர் குடும்பத்தைத்தான் சாரும்.
பேரறிஞர் அண்ணாவின் மனங்கனிந்த மூவராக – மருத்துவ மேதை பாலகிருஷ்ணன், பொறியியல் திலகம் இராதாகிருஷ்ணன், நீதிச் சிகரம் கோகுலகிருஷ்ணன் ஒளிர்ந்தார்கள் .
நாம் கண்ணாரக் காண வாய்த்த மூவேந்தர்கள் எனலாம். தமிழ்க்கடல் பள்ளியகரம் நீ.க. அவர்களின் மருகர் தான் டாக்டர் பாலகிருஷ்ணன். பள்ளியகரம் பிள்ளை அவர்கள், நீதியரசர் கோகுலகிருஷ்ணனைப் புகழ்ந்து பேசாத நாளில்லை. மூவரும் ஒரே இல்லத்தில் ஜெனரல் பேட்டர்ஸ் சாலையிலும் பிறகு அடையாற்று வளமனையிலும் வாழ்ந்த காலங்கள் நம் இமைகளை நனைக்கின்றன.
அந்த வளமனைக்கு வராத தலைவர்கள் இல்லை. தந்தை பெரியார் முதல், தமிழ்ப்புலவர் அனைவரும் வந்து விருந்தருந்தியதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.
சௌந்தரம் அம்மையார் அவர்களின் வளர்ப்பு மகன் போல நான் இருந்த போது, நீதியரசர் என்னைத் தழுவி, “அம்மாவுக்குப் பிடித்த பிள்ளை” என்ற சொல்லை எந்த நாளும் காக்க வேண்டும் என்று ஒரு முறை சொன்னார்.
அம்மாவோ “மகனே! இவர் என் தம்பி” என்று நீதியரசரைச் சுட்டிக் காட்டினார். நீதியரசர் இனமானம் காக்கும் நெடுந்தூணாக நின்று இலக்கியம், இசை, கலை, கல்வி, பண்பாடு ஆகிய பல்வேறு நிலைகளில் மாபெரும் பணிகளை வெற்றியோடு நிறைவேற்றினார்.
இனிமையான குரலில் – கவினார்ந்த தமிழை – கடல்மடை திறந்தது போல் உரையாற்றுவார்.
அவரால் தொடங்கப்பட்டதே “மணவழகர் மன்றம்.” ,அவர் வெகுண்டு எவரும் பார்த்ததில்லை. பரிவின் பிழம்பாக வாழ்ந்தார். அவர் விரல் பிடித்து என்னை மணவழகர் மன்றப் படியில் நடக்க வைத்தார். கல்லூரிப் படிப்பை நான் முடித்தபோதே “சென்னை பல்கலைக்கழகத்தில் உன்னைச் சேர்த்து விடுகிறேன் – உன் மாமனாரும் – வருங்கால மனைவியும் எனக்கு மிக வேண்டியவர்கள். நான் பிள்ளை வீட்டுக்காரனா – பெண் வீட்டுக்காரனா என்று தெரியவில்லை” என்று பேசியதை நினைத்தால் இன்றும் என் கண்கள் கலங்குகின்றன .
நான் அப்போலோவில் இதய மருத்துவத்தில் இருந்த போது, தொலைபேசியில் என்னை வினவியதை மறப்பதில்லை. ஆண்டுதோறும் தமிழிசைச் சங்க விழாவில் நான் அவரைக் காண்பது வழக்கம்.
மருத்துவர் இராம்குமார் இல்ல அழைப்பிதழ் என் எதிரில் இருக்கிறது. நீதியரசர் திருப்பெயரைக் கண்டு அவ்வளவு மகிழ்ந்தேன்.
எப்படி ஆறுதல் கொள்வது!
மூவர் வாழ்வும் முடிந்துவிட்டது.
மூவேந்தரால் வளர்ந்தது தானே முத்தமிழ்!