திருச்சி  புலவர் இராமமூர்த்தி

திருவாரூர்த் திருக்கோயிலில் தம் திருப்பாத தரிசனம் தந்த  இறைவன் சுந்தரரிடம் அடியார்களின் சிறப்பை அறிவித்துப் பாடும் முறையையயும் அருளி முதல் அடியையும் எடுத்துக்  கூறியருளினார். சுந்தரர் தேவாசிரிய மண்டபத்தில் இருந்த அடியார்கள் முன் சென்று ஒவ்வொருவரையும் வணங்கினார். பின்னர் அடியார்களின் சிறப்பை இறைவன் அருளிய  முறைப்படி  ‘’தில்லைவாழ்  அந்தணர்’’ முதலாக  ஓரடிக்கு  ஒருவராகத்  திருத் தொண்டர்களைப் போற்றி, வணங்கிப் பாடினார். தில்லை வாழ்  அந்தணர் இறைவனுக்குத் தொண்டராவதில் முதன்மை பெற்றவராவர். ஆகவே முதலில் “தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று  இறைவன் அருளிய திருவாக்கை  முதலடியாகக்  கொண்டு  பதினோர்  எண்சீர்த் திருவிருத்தங்கள் கொண்ட“ திருத்தொண்டத்தொகை” என்ற நூலை இயற்றினார். இந்நூலை முதனூலாகக் கொண்டு, திருத்தொண்டர் திருவந்தாதி என்ற வழிநூலைச் சார்ந்து நம் சேக்கிழார் சுவாமிகள் இந்தத் திருத்தொண்டர் புராணத்தை  இயற்றினார். திருஞான சம்பந்தரும் தில்லையில் சிவபெருமானை தரிசித்தபோது, தில்லைவாழ் அந்தணரை  முதலில் வைத்துக் “கற்றாங்கெரியோம்பி“ என்ற திருப்பதிகத்தைப்  பாடினார். இதனை,

“ஊழி முதல்வர்க்கு உரிமைத் தொழில் சிறப்பால்
வாழி திருத் தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே
ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும்
காழியர் தம் காவலனார் கற்றாங் கெரியோம்பி” என்று இப்புராணம் பாடுகிறது.  திருஞான சம்பந்தரின் பதிகம்.

“கற்றாங்கெரி  ஓம்பிக்  கலியை  வாராமே
செற்றார்  வாழ்  தில்லை” என்று தொடங்குகிறது. இதனைச்  சேக்கிழார்.

“தம்பெருமான்  கொடுத்தமொழி  முதலாகத்  தமிழ்மாலை
செம்பொருளால்  திருத்தொண்டத்  தொகையான  திருப்பதிகம்
உம்பர்பிரான்  தானருளும்  உணர்வுபெற  உலகேத்த
எம்பெருமான்  வன்தொண்டர்  பாடியவர்  எதிர்பணிந்தார் “

பொருள்: தமது இறைவன் எடுத்துக்கொடுத்த மொழிகளையே முதலாக வைத்துத் தொடங்கிய தமிழ்ப் பாமாலையாய்ச் செம்பொருள் கொண்டு திருத்தொண்டத் தொகையாகிய திருப்பதிகத்தை அந்த இறைவனே அருளும் உணர்வுபெறுதலால் உலகம் ஏத்துமாறு எமது தலைவராகிய வன்றொண்டர் பாடி முடித்து அத்திருக் கூட்டத்தின் முன்னர் வணங்கினார்.

விளக்கம்: தம்மை ஆட்கொண்டு பணித்த இறைவன். முன்னர்த் திருக்கயிலையிலும், பின்னர்த் திருவெண்ணெய் நல்லூரிலிருந்து திருவாரூருள் புகுந்தவரையிலும் பணிகொண்டவர். என்பதைத்  தம்பெருமான் என்ற தொடர் விளக்குகிறது. இறைவன் எடுத்துக் கொடுத்த  திருவாக்கையே “மொழி “ என்ற சொல் புலப்படுத்துகிறது. பின்வரும் பதிகங்களுக்குக்  காரணமான கைம்முதலாக இந்த மொழியே விளங்கியது என்பதைக் “கொடுத்தமொழி முதலாக“ என்ற தொடர் விளக்குகிறது. ’’தமிழ் மாலை‘’ என்ற தொடர் தமிழ்ப் பாட்டுக்களால் ஆன  மாலை  யாகிய பதிகத்தைக் குறிக்கிறது. “செம்பொருள்” என்பது பதிகத்தின் பொருளைக் குறித்தது. செம்மை சிவத்தன்மையாகிய  முத்தியைக்  குறித்தது. இதனை,

“பிறப்பென்னும்  பேதைமை நீங்கச்  சிறப்பென்னும்
செம்பொருள்  காண்ப  தறிவு “ என்ற திருக்குறளால்   அறியலாம்.  மேலும் இப்புராணம்,

“தீதுறு பிறவிப் பாசந் தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு“  என்று பாடுகிறது.

சைவசமய பரமாசாரிய மூர்த்திகளது தேவார திருவாசகங்களின்பயன் பிறவி நீங்கி வீடடைவதேயாம் என்பது ஆன்றோர் துணிபு. செம்பொருளால் என  இத்திருப் பதிகத்துக்குப் பொருள்கண்டார் ஆசிரியர். திருத்தொண்டர்களின் வரலாற்றையும், பண்புநலன்களையும் தொகுத்துக் கூறுவது திருத்தொண்டத்  தொகை.

உம்பர் பிரான் – தேவவுலகிலே அரசு வீற்றிருந்தருளிய தியாயகேசர். அவர் அருளிச்செய்த உண்மையறிவினை உண்முகமாகப் பெற்றதனாலே அதனை உலகம் ஓதி உய்யும்பொருட்டுப் பாடி என்க. மொழிஎடுத்துக் கொடுத்தருளு முன்னரே பொருள்களை உண்ணின்று உணர்த்தினார். என்பது “மன்னுசீர் அடியார் தங்கள் வழித்தொண்டையுணர நல்கி“ என இப்புராணத்தில் கூறியதனாற் பெறலாம். எனவே திருத்தொண்டத் தொகைப்பொருள் யாவும் இறைவன் அருளிய பதிஞானத்தாற் பாடியதாலும், அவனே தந்த மொழிகொண்டு பாடியதாலும் அது முற்றும் தியாகே சருடைய வாக்கேயாய்ப் பதிவாக்காகியவேதமே என்பது துணியப்பெறுதலினாலே அதன் துணைகொண்டு பாடி என்பதைப் “பெறப்பாடி “ என்ற தொடர் விளக்கும். முன்னர்ச் சென்னியுற வணங்கிய வன்தொண்டர் இப்போது  தொண்டர்களை  வணங்கினார்  என்பதை,

“உலகேத்த  எம்பெருமான்  வன்தொண்டர்  பாடியவர்  எதிர்பணிந்தார்” என்ற தொடர் விளக்குகிறது.  இனி முழுப்பாடலையும் பாடிப் பயில்வோம்,

“தம்பெருமான்  கொடுத்தமொழி  முதலாகத்  தமிழ்மாலை
செம்பொருளால்  திருத்தொண்டத்  தொகையான  திருப்பதிகம்
உம்பர்பிரான்  தானருளும்  உணர்வுபெற  உலகேத்த
எம்பெருமான்  வன்தொண்டர்  பாடியவர்  எதிர்பணிந்தார் “

இதனால் திருத்தொண்டத்தொகையின் தோற்றமும் சிறப்பும் பொருளும் நமக்குப்  புலனாகும் வகையில் சேக்கிழாரின் பாடல் திறம் அமைந்துள்ளதை உணர்ந்து மகிழ்கிறோம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *