வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7
தி. இரா. மீனா
அமரகுண்டத மல்லிகார்ச்சுனா
கர்நாடக மாநிலம் தும்கூரிலுள்ள தற்போதைய ’குப்பி [அமரகுண்டா]’ மல்லிகார்ச்சுனனின் ஊராகும். ’மாகுடத மல்லிகார்ச்சுனா’ என்பது இவரது முத்திரையாகும். இலிங்கப் பெருமையை உணர்த்துவது இவர் வசனத்தின் சிறப்பாகும்.
1.“உடலென்னும் நகரத்திற்கு உண்மை என்பது கோட்டையாம்
அறம் பொருள் இன்பம் வீடு என்ற காவலர்களே விழித்தெழுங்கள்
அச்சம் பெரியது ,அச்சம் பெரியது.
அறியாமையெனும் இருள் மிகப் பெரியது!
ஒன்பது வாயில்களை கவனத்தில் கொள்ளுங்கள்
ஞான விளக்கை பிரகாசமாய் எரிய விடுங்கள்
ஐந்து திருடர்கள் ஊடுருவ முயல்கின்றனர்.
கவனம், கவனம்
வாழ்க்கைச் செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்
மூலத்தின் வாயில் திறந்து
சிறந்த வழியில் நடப்பது நன்று
மகாமகிமை மாகுட மல்லிகார்ச்சுனனிடமான
அறிவுணர்வை ஒரு போதும் தவறவிடக் கூடாது”
அம்பிகர சௌடய்யா
கல்யாண் நகரத்தின் மிகச் சிறந்த மனிதர் என்று மதிப்பிடப்படும் சௌடய்யா ஹவேரி மாவட்டம் சௌடாடனபுரா கிராமத்தைச் சேர்ந்தவர். தோணி ஓட்டும் பணி இவருடையது. பெயருக்கு முன்புள்ள அடைமொழியும், எழுதியுள்ள வசனங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. மிக வெளிப்படையான பேச்சாலும், அச்சமற்ற தன்மையாலும் சரணர்கள் மத்தியில் குறிப்பிடத் தக்கவராக இருந்தார். இலிங்காய தர்மங்களைப் பின்பற்றி அதன் தத்துவங்களை வாழ்ந்து காட்டியவர். அம்பிக சௌடய்யா அவரது முத்திரை. சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் சாதிப்பிரிவினைகள், கொடுமையான ஆசாரங்கள் ஆகியவற்றை கடுமையாக எதிர்ப்பதாக அவர் வசனங்கள் உள்ளன. துங்கபத்திரா ஆற்றின் கரையோரம் அவருக்கு அமைக்கப்பட்ட நினைவிடம் தற்போது வழிபாட்டு மையமாக உள்ளது.
1. “படகோட்டி படகோட்டி என்று குறை சொல்ல வேண்டாம்
நம்பிக்கை வைத்தால் ஒரே பிறப்பில் [துடுப்பு வலிப்பு]
கரை சேர்ப்பவன் அம்பிக சௌடய்யன்”
”அங்க அழகைப் பெரிதென நினைக்கும்
மாசுடையவர்களே கேளுங்கள்;
எது அங்க அழகு?
குருவுக்கு உடல் கொடுப்பது அழகு,
இலிங்கத்திற்கு மனம் கொடுப்பது அழகு,
ஜங்கமத்துக்குப் பொருள் கொடுப்பதழகு,
சேவை விருப்பமோடு பக்திக் கடலில் நீந்துவது அழகு,
சிவனடி அடைவதே பேரழகு.
இதை விட்டுச் சம்சாரம் பெரிதென
மனைவி மக்கள் செல்வம்
என்றும் நிலையென எண்ணி
ஒரு காசும் பிறருக்குக் கொடுக்காமல்
தானே உண்டு புதைத்து வைத்து
இறுதியில் எமன்வாய் விழுந்து
நரகின் நெருப்பில் அழிவதுறுதி
இப்படி அழகற்றோர் முகம் பார்க்கலாகாதென்றான்
உண்மையான அடியானென்னும் நம் அம்பிக சௌடய்யா”
2. “நெருப்பு உண்மையெனில் அது பொய்யாம்
விறகில்லையெனில் அதிலடங்கிய நெருப்பு
சுட்டெரிக்காதென அறிந்தவனே பிராணலிங்கியென்றான்
அம்பிக சௌடய்யா”
3. “ஐயனே ,கற்களுக்காக மலைகள் தேய்ந்தன,
இலைகளுக்காக மரங்கள் தேய்ந்தன,
நீராடுவதற்காக எழுகடல்கள் தேய்ந்தன,
தூபத்திற்கு நெருப்பு தேய்ந்தது,
நறுமணத்திற்கு தென்றல் தேய்ந்தது,
வாழ்க எனும் வாழ்த்துதலில் சொற்கள் தேய்ந்தன.
எனக்கு எது? சரணர்கள்
மாமனையின் வழிபாட்டிற்கு அமர்ந்தால்
அவர்தம் காலணிகளுக்கு காவலனாவேன் என்றான்
அம்பிக சௌடய்யா”
4. “எவரோ பயிரிட்ட செடியிலிருந்து மலர்பறித்து
ஊரார் உருவாக்கிய ஏரியின் நீரெடுத்து
உலகத்தீரே பாருங்கள் என வழிபாடு செய்தால்
வழிபாட்டின் பலன் மலருக்கா? நீருக்கா?
உலகிற்கா?வழிபட்டவனுக்கா?
நானறியேன் ,நீங்கள் உரைப்பீரென்றான்
அம்பிக சௌடய்யா”
5. “ உடலிலணிந்த இலிங்கம் சிறுமை உடையதென்பார்
மலையின் மீதுள்ள இலிங்கம் போற்றுதலுக்குரியது
என்பவரைப் பாராய்!
தலையில் எதுவுமற்ற இவர்களைக் கண்டால்
கனமான காலணியால் “ பட பட” வென்று அடிப்பாயென்றான்
நம் அம்பிக சௌடய்யா”
6. “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளய்ய
காற்று உன் வசமானதல்ல
நாளை தூற்றிக் கொள்வேனெனில் இயலாது
சரணர் காற்றாக வரும்போது
உன்னைத் தூற்றிக் கொள்வாயென்றான்
நம் அம்பிக சௌடய்யா”
7. “வெல்லத்திற்கு வடிவமுண்டு இனிப்பிற்கு வடிவமுண்டோ?
அடையாளத்திற்கு வழிபாடுண்டு அறிவிற்குண்டோ வழிபாடு?
அறிவு உறுதியானால் கையிலுள்ள அடையாளம்
மறையுமென்றான் நம் அம்பிக சௌடய்யா”
8. “பூசை செய்வதேன்? கையில் வைத்துப் பூசிப்பதெதற்கு ?
ஆலயத்திற்குச் செல்வதெதற்கு ?
வறுமையான அந்தகனுக்கு அன்னமிட்டால்
மூவுலமும் போற்றும்
வறுமையால் வாடும் அந்தகனுக்கு அன்னமிடவில்லையெனில்
பூசை செய்வதால் என்ன பயனென்றான்
நம் அம்பிக சௌடய்யா”
அமுகி தேவய்யா:
சோலாப்பூரைச் சேர்ந்த தேவய்யாவின் தொழில் ஆடை நெய்வதாகும் இவர் மனைவி பெயர் வரதாணி. ”சித்த சோமநாதா” என்பது இவரது முத்திரையாகும். சரண தத்துவ வர்ணனை, இஷ்ட இலிங்க வழிபாடு ஆகியவற்றை இவர் வசனங்கள் பேசுகின்றன.
1.“ஞானத்தின் வழி அறிந்தென்ன செயல்படாத வரையில்
செயலின்றி நினைவால் மட்டும் நிறைவேறுமா?
அந்தகன் பாதையறிதான்,முடவர் நடப்பதற்கரியார்
ஒன்றில்லாமல் மற்றொன்றால் பயனில்லை
அறிவற்ற செயல் உயிரில்லாதது,செயலற்ற அறிவு
வார்த்தைகளின் வெற்றுக் கூடு
சித்த சோமநாதனோடு இணையும் சரணனுக்கு
இரண்டும் வேண்டும் “
2. ’தூசு படியாத காற்றைப் போல
மை தீண்டாத கண்மணி போல
நெய்யின் சுவையறியாத நாக்கு போல
மண் ஒட்டாத மண்வண்டு போல
சித்த சோமநாதனே!
இன்பம் பல அனுபவித்தாலும் உன் சரணர் தனித்திருப்பர்”
[ தொடரும்]
சிவனோடு பேசியவர்கள்….
அருமையான தொடர். நம் தமிழ்
சிவனடியார்கள் 63 நாயன்மார்களை நினைவூட்டலாக அமைந்துள்ளது. ஆசிரியருக்கு
மிக்க நன்றி