நெல்லைத் தமிழில் திருக்குறள்- 103

நாங்குநேரி வாசஸ்ரீ
103. குடி செயல்வகை
குறள் 1021
கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்
கடமையச் செய்யுததுக்கு ஒருத்தன் சொணங்காம மொனயுததக் காட்டிலும் வேற ஒசத்தியான பெரும னு ஒண்ணுமில்ல.
குறள் 1022
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் குடி
மொனைப்பு நெறைஞ்ச புத்தி ரெண்டோடையும் ஓயாத காரியஞ்செய்யுதவனோட குடும்பமும் சுத்துவட்டாரமும் ஒசத்தியடையும்.
குறள் 1023
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
தன் குடும்பத்தையும் நாட்டையும் ஒசத்துத நெனைப்புல ஓயாம மொனயுதவுனக்கு உடுப்ப வரிஞ்சு கட்டிக்கிட்டு தெய்வம் முன்ன வந்து தொணையா நிக்கும்.
குறள் 1024
சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு
தம் மக்கள் ஒசரணுங்குத நெனைப்புல வெரசலா காரியம் செய்யுதவனுக்கு முடிக்குத தெறம தன்னத்தானே வந்துபோடும்.
குறள் 1025
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
குத்தங்கொற இல்லாம மக்கள் நல்லா இருக்கணும்னு பாடுபடுதவன ஒலகத்தார் சொந்தக்காரனா நெனச்சி சுத்தி இருப்பாக.
குறள் 1026
நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்
நல்ல ஆண்மை ங்கது தான் பொறந்த வீட்டையும் நாட்டையும் சிறப்பா ஆளுத தன்மைய உண்டாக்கிக்கிடுததுதான்.
குறள் 1027
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை
போர்க்களத்துல பொறுப்ப ஏத்துக்கிட்டு எதித்து நின்னு வழிநடத்துத வீரன் கணக்கா குடிமக்களத் தாங்குத சக்தி இருக்கவனுக்கு தான் அவுகள ஒசத்துத பொறுப்பு இருக்கு.
குறள் 1028
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்
குடிமக்கள ஒசத்த நெனைக்கவனுக்கு நேரங்காலம் ஒண்ணும் கெடையாது. சொணங்கி தன் பெருமய நெனச்சி சடவா இருந்தாம்னா எல்லாம் கெட்டுப்போவும்.
குறள் 1030
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி
சங்கடம் வருத சமயம் கூட இருந்து தாங்குதவுக இல்லாத வீட்டையும் நாட்டையும் அந்தச் சங்கடம் வெட்டி சாச்சிப்போடும்.