உள்நோக்கத்திற்கு ஆதாரமா?

நாகேஸ்வரி அண்ணாமலை

ஒரு வாரத்திற்கு முன்னால் இப்போதைய இந்திய அரசு மதத்தின் அடிப்படையில் குடிமக்களை வேறுபடுத்துகிறது என்ற கருத்தைக் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் சொன்னேன். நான் சொன்னதற்கு ஆதாரம் இல்லை; இது பொய்யான செய்தியைப் (fake news) பரப்புவது என்று வாசகர்கள் சிலர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.  உள்நோக்கத்திற்கு ஆவண ஆதாரம் தேட முடியாது. ஆவண ஆதாரத்தில் உள்நோக்கம் வெளிப்படாது.  செயல்களைப் புரிந்துகொள்வதன் மூலம்தான் உள்நோக்கம் வெளிப்படும்.  பா.ஜ.க. அரசின் செயல்களை – மௌனங்களையும்தான் – வைத்தே என் கருத்தைச் சொன்னேன்.  இந்தக் கருத்து என்னைப்போல் சமூகச் சிந்தனை, தார்மீக உணர்வு உள்ளவர்களுக்கும் உடன்பாடே.  மற்றவர்களுக்காக என் கருத்துக்கு ஆதாரமாக இருப்பவற்றை – இது பலவாக இருந்தாலும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை வைத்து மட்டும் – சொல்கிறேன்.

குடிமக்கள் யார் என்பது ஒரு நாட்டின் தன்மையை, ஆன்மாவை விளக்கும் கேள்வி.  இதனால்தான் ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தில் இந்தக் கேள்விக்குப் பதில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. 1950 ஜனவரி 26இல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியல் சட்டத்திலும் குடிமக்களை வரையறுப்பதைக் காணலாம். இந்திய நாடு பல மதம், இனம், குடியேற்றம் ஆகியவற்றை அடக்கிய மக்களைக் கொண்ட, பன்மைத்தன்மை கொண்ட நாடு என்று நம் அரசியல் சட்டம் வரையறுக்கிறது.  அதன் வாசகம் கீழே.

Every person who was at the commencement of the Constitution (26 January 1950) domiciled in the territory of India, and (a) who was born in India, or (b) either of whose parents was born in India, or (c) who has been ordinarily resident in India for not less than five years, became a citizen of India.

இந்தச் சட்டம் அவ்வப்போது மாறிய அரசியல் கொள்கைகள், சட்டப் பிரச்சினைகளைப் பொறுத்துத் திருத்தம் செய்யப்பட்டது.  திருத்தங்களின் விபரம் இதோ:

The legislation related to this matter is The Citizenship Act, 1955, which has been amended by the Citizenship (Amendment) Acts of 1986, 1992, 2003, 2005, 2015 and 2019. The 1986 amendment restricted citizenship by birth to require that at least one parent had to be an Indian citizen. The 2003 amendment further restricted that aspect by requiring that a parent could not be an illegal immigrant. The 2003 amendment also mandated the Government of India to construct a National Register of Citizens. The 2019 amendment provided an easier path to citizenship for persecuted selected minorities, i.e. Hindus, Sikhs, Buddhists, Jains, Paris and Christians from the neighbouring Muslim-majority countries of Bangladesh, Pakistan, and Afghanistan who entered India before December 2014. (2003-இல் ஆண்டது வாஜ்பாயி தலைமையில் இருந்த பா.ஜ.க. கூட்டணி)

2019-ஆம் ஆண்டுத் திருத்தத்தை பா.ஜ. க. ஆட்சி  பாராளுமன்றப் பெரும்பான்மையை வைத்து நிறைவேற்றயது.  இது எப்படி குடிமக்களை வேறுபடுத்தி ஒதுக்குகிறது என்று பார்க்கலாம்.  இது எப்படி இந்தியாவின் ஆன்மாவையே காயப்படுத்துகிறது என்றும் காணலாம்.  குடிமக்களை வேறுபடுத்துவது, சட்டத்தின் உள்நோக்கம் பற்றியது;  சட்டத்தில் இது வெளிப்படையாக இல்லை; இருக்க முடியாது. வலதுசாரி அரசியல்வாதிகள் இந்தச் சட்டத்தின் நோக்கம் நாட்டுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவியவர்களைக் களைய வேண்டும் என்பதே என்று சொல்கிறார்கள்.  அண்மைப் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் உள்துறை அமைச்சர் அமித் ஷா இவர்களைக் கறையான்கள் என்றார்.  கறையானைப்போல நாட்டை அரிக்கிறார்கள் என்று சூசகமாகச் சொன்னார்.  இதற்கு எந்த ஆதாரமும் தரவில்லை.  கறையான்களை அழிப்பதுபோல் இவர்களை ஒழிக்க வேண்டும் என்பது சொல்லாமல் விட்ட நோக்கம். எப்படி ஒழிப்பார்கள் என்பதை இப்போது மத்திய அரசு அஸ்ஸாமிலும் மற்ற மாநிலங்களிலும் கட்டிக்கொண்டிருக்கும் சிறைச்சாலைகளிலிருந்து ஊகிக்கலாம்.

சட்ட விரோதமாக ஊடுருவியவர்கள் என்று சொல்லும்போது, அவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷிலிருந்து எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் என்ற பிம்பத்தைத் தோற்றுவிக்கிறார்கள்.  இவர்கள் இஸ்லாமியர்கள் என்று குறிப்பால் உணர்த்துகிறார்கள்.  அதோடு இவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். குடியுரிமைச் சட்டத்தின் நோக்கம் பயங்கரவாதிகளைச் சிறையில் தள்ளி, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே என்று நாடகம் போடுகிறார்கள்.  மோதி, நாட்டின் காவல் நாயகன் என்னும் பிம்பத்தை வளர்க்க இந்தச் சட்டம் ஒரு கருவி.

ஊடுருவியவர்கள் பற்றிய இந்தக் கருத்தாடலுக்கு வரலாற்றுச் சான்று இல்லை.  திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு முன்னோடியாக அஸ்ஸாம் மாநிலத்தில் குடிமக்களைக் கண்டுபிடித்தல் என்று ஒரு திட்டத்தை ஆரம்பித்தார்கள்.  அஸ்ஸாமில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று அங்குள்ள இந்துக்கள் சிலருக்கு சில காலமாக வருத்தம்.  இந்த இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகோ பங்களாதேஷ் தனிநாடாக ஆன பிறகோ வந்தவர்கள் அல்லர்.  காலனி ஆட்சியில் அஸ்ஸாமில் விவசாயத்தை வளர்த்து கல்கத்தாவுக்கு உணவு சப்ளை செய்வதற்காக காலனிய அரசு அன்றைய பிரிபடாத வங்காளத்திலிருந்து மக்கள் அஸ்ஸாமில் குடியேற ஊக்கப்படுத்தியது.  அப்படிக் குடியேறியவர்களில் இஸ்லாமியர்களும் உண்டு (ஆதாரம் New York Review  of Books என்ற புகழ்பெற்ற இதழில் (ஜனவரி 6, 2020) வெளியான Why Hindu Nationalists Trialed India’s Citizenship Law in Assam என்னும் கட்டுரை; இதை எழுதியவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்டுள்ள Many Rivers, One Sea: Bangladesh and the Challenge of Islamist Militancy என்னும் ஆய்வு நூலின் ஆசிரியர் ஜோசப் ஆல்ச்சின்.   இந்த இஸ்லாமியர்களைத்தான் பா.ஜ.க. அரசு, இவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ் குடிமக்கள்; இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் என்று நம்மை நம்பவைக்க முயல்கிறது. இவர்கள் காலனிய காலத்திலிருந்து பல தலைமுறைகளாக அஸ்ஸாமில் வாழ்பவர்கள் என்னும் வரலாற்று உண்மையை நம் கண்ணிலிருந்து மறைக்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ்,  இந்தியக் குடியுரிமைக்கு ஆவணம் காட்ட இயலாதவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்ட மக்களில் பலர் இந்துக்கள். இந்த விளைவை பா.ஜ.க அரசு எதிர்பார்க்கவில்லை.  இவர்களுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்ற குடியுரிமைச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்று ஒரு மாயையைத் தோற்றுவிப்பதற்காக, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையராக உள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதக் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுபான்மையினரை மட்டும் – இந்தச் சிறுபான்மையினரில் 90 சதவிகிதத்தினருக்கு மேல் இந்துக்கள் – இந்தியா அரவணைத்துக்கொள்கிறது என்று நம் கண்ணில் மண்ணைத் தூவப் பார்க்கிறது. இந்தச் சட்டத்தால், இந்தியக் குடியுரிமை கிடைக்காமல் போகிறவர்களில் காலனிய காலத்திலிருந்து அஸ்ஸாமில் குடியிருக்கும் இஸ்லாமியர்களே அதிகம்.  பா.ஜ.க. இந்தச் சட்டத்தின் நோக்கத்தைப் பற்றித் தரும் விளக்கத்தில் ஏராளமான ஓட்டைகள். மதக் கொடுமைக்கு ஆளான சிறுபான்மையினரே, இந்தியக் குடிமக்களாகத் தகுதி பெறுவார்கள் என்றால், இஸ்லாமியர்களுக்குள்ளேயே மேற்சொன்ன நாடுகளில் சிறுபான்மையராக இருந்து அவதிப்படும் அகமதியர்கள் போன்ற பல இஸ்லாமியச் சிறுபான்மையருக்கும் இந்தியா அடைக்கலம் கொடுக்க வேண்டும்; ஆனால், கொடுக்கவில்லை.  மியான்மாரிலிருந்துவிரட்டப்படும் ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கும் அடைக்கலம் கொடுக்க வேண்டும்; செய்யவில்லை  இவர்களெல்லாம் இஸ்லாமியர்கள் என்பதாலேயே இந்தச் சட்டத்திற்குள் கொண்டுவரப்படவில்லை. மேலும் மேற்சொன்ன இஸ்லாமிய நாடுகளையே குறிவைப்பதால், இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள அகதிகளுக்குக் குடியுரிமை கொடுப்பது பற்றி இந்தச் சட்டம் பேசவில்லை. (தமிழ் இனத்தைக் காப்போம் என்று மார்தட்டும் அ.தி.மு.க. இந்தச் சட்டத்திற்கு வாக்களிக்காதிருந்திருந்தால் இந்தச் சட்டம் ராஜ்ய சபையில் நிறைவேறியிருக்காது.) இவற்றால் இந்தச் சட்டத்தின் நோக்கம் பிற நாடுகளில் மதத்தின் சார்பில் துன்புறுத்தப்படுபவர்களுக்கு இந்தியா அடைக்கலம் தருகிறது; இந்தப் பெருந்தன்மையைக் காட்டுவதுதான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்று சொல்லித்திரிவது ஏமாற்று வேலை.

அடுத்தது, இந்திய ஜனத்தொகைப் பதிவேடு (National Population Register). இது காங்கிரஸ் ஆட்சியிலேயே (ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி) கொண்டுவரப்பட்டது.  ஆதார் அடையாள அட்டை அமலுக்கு வந்தபோது அரசின் ஏழைகளுக்கான உதவி திட்டங்களில் இருந்த ஊழல்களை ஒழிப்பதற்காக – ஒரே நபர் இரண்டு மூன்று தடவை இடம்பெறுவதைத் தடுப்பதற்காக – ஆதார் அட்டை தேவை என்று சொல்லப்பட்டது.  இதற்கான எதிர்ப்புகள் தனிப் பிரச்சினை; அதைப் பற்றி இங்கு சொல்லவில்லை.  ஆதார் அட்டையில் உள்ள குறுகிய அளவுத் தகவல்களை வலுப்படுத்த அதிகத் தகவல்களைச் சேர்ப்பதற்கு இந்தப் பதிவேடு.  இது தற்சமயம் ஒரு இடத்தில் வசிக்கும் மக்களைப் பற்றிய விபரம் தேடுவதற்கு என்று அப்போது சொல்லப்பட்டது.  இன்று இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே மக்கள் வேலைக்காக அதிக அளவில் இடம்பெயர்வதால் அவர்களைப் பற்றிய கணிப்பு தேவை என்று சொல்லப்பட்டது. இந்த வகையில் இது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஜனத்தொகைக் கணிப்பிலிருந்து (Census) வேறுபட்டது என்று வாதிடப்பட்டது.  பா.ஜ.க. அரசு காங்கிரஸ் செய்ததைத்தான் தாங்கள் தொடர்ந்து செய்கிறோம் என்பது பாதி உண்மையை மறைப்பதாகும்.  பழைய பதிவேட்டில் இல்லாத இரண்டு கேள்விகளை பா.ஜ.க. அரசு சேர்த்திருக்கிறது.  அவை குடிமகனின் தந்தை பிறந்த இடமும் தேதியும் பற்றியவை.  இவற்றைக் கேட்பதன் காரணம் தந்தை பாகிஸ்தானிலோ பங்களாதேஷிலோ பிறந்தவரா என்று தெரிந்துகொள்ளத்தான் என்று ஊகிக்க முடியும். பா.ஜ.க. தலைவர்கள் சட்டத்தில் இது இல்லை என்று திருப்பித் திருப்பிச் சொன்னாலும், பா.ஜ.க. அரசின் இஸ்லாமிய விரோதக் கொள்கையின் மூலம் (இதைப் பற்றி ஆதாரம் வேண்டுமென்றால் ஒரு புத்தகமே எழுதலாம்) இப்படி ஊகிப்பது பிரம்மவித்தை அல்ல.  முன்னோர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று இனம் கண்ட பிறகு அவர்களுக்கு என்ன நேரும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

இந்தப் புதிய கேள்விகள் எதற்கு என்று எதிர்ப்பு எழுந்தவுடன் பா.ஜ.க. அரசு முதலில் இந்தத் தகவலுக்கு ஆவணம் காட்டத் தேவையில்லை என்று பின்வாங்கியது; அடுத்து இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வது கட்டாயமில்லை என்று பல்டி அடித்தது. எதிர்ப்பு வந்தால் பின்வாங்குவது உள்நோக்கத்தைச் சந்தேகப்பட வைக்கிறது அல்லவா? கால் விரலைத் தண்ணீருக்குள் விட்டுப் பார்த்து, சுட்டால் எடுத்துவிடுவோம்; இல்லையென்றால் குட்டையைக் குழப்புவோம் என்பதைப் போன்றது இந்த நடிப்பு.

தந்தையின் பிறந்த இடம், தேதியைக் கேட்பதற்கு மேல் சென்று, தாத்தாவின் பிறந்த ஊரையும் தேதியையும் விசாவின் விண்ணப்பத்தில் இப்போதைய பா.ஜ.க. அரசு சேர்த்த்திருக்கிறது. அதாவது, வெளிநாட்டுப் பிரஜைகளாக வெளிநாடுகளில் இருக்கும் இந்திய வம்சாவளியினர் இந்தியப் பயணத்துக்காக வெளிநாட்டுத் தூதரகங்களில் விண்ணப்பித்தால் அப்பா, தாத்தா பிறந்த இடம், தேதி கொடுக்க வேண்டும்.  (ஆதாரம் புதிய விசா விண்ணப்பப் படிவம்).  இந்தத் தகவல்களைத் தருவதற்கு ஆவண ஆதாரமும் காட்ட வேண்டும்.  இவை எத்தனை பேரிடம் இருக்கும்?  ஆவணம் இல்லாவிட்டால் விசா கிடைக்காது.  இந்திய வம்சாவளியினர் ஒருவர் இஸ்லாமியராக இருந்தால் அவருடைய தந்தை, தாத்தா பாகிஸ்தானில் பிறந்திருந்தால் விசா கிடைக்கும் வாய்ப்புக் குறைவு; ஆவணச் சான்று காட்ட முடியவில்லையென்றால் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்பு அதிகம்.  இதைத்தான் என் கட்டுரையில் நண்பர் ஒருவரின் அனுபவத்தைக் வைத்து எழுதியிருந்தேன்.

இஸ்லாமிய எதிர்ப்பில் உள்ள ஒரு அம்சம் நாடு பிரிவினையானபோது இந்தியாவின் மதச்சார்பின்மையை ஏற்று இந்தியாவில் தங்க முடிவு செய்தவர்களின் நாட்டுப்பற்றைப் பற்றிய சந்தேகம்.  இவர்கள் இந்தியாவுக்குத் துரோகம் செய்யக் கூடியவர்கள் என்று ஒரு பிம்பம்.  இது எவ்வளவு மோசமானது, ஆதாரமற்றது என்று காட்டத்தான் இந்தியப் பற்றை வெளிப்படுத்தும் சில முழக்கங்கள் இஸ்லாமியர்களால் எழுதப்பட்டவை என்று எழுதினேன். இவற்றில் ஒன்றுக்கு ஆதாரம் இது.  ஜெய்ஹிந்த என்ற முழக்கம் சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்டது என்ற எண்ணம் பரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் அதை உருவாக்கியவர் ஹைதராபாத்தில் பிறந்து ஜெர்மனியில் பொறியியல் படிக்கும்போது நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து மேஜராக உயர்ந்து போரிட்ட ஒரு இஸ்லாமியர்.  அவர் பெயர் ஸைன் உல் அபிதீன் ஹாஸன் (Zain -ul Abideen Hasan). இதற்கு ஆதாரம் நரேந்திர லூதர் எழுதிய  Lengendotes of Hyderabad என்னும் ஆராய்ச்சி நூல்.  இதை நேதாஜி ஏற்றுக்கொண்டு பயன்படுத்தினார்.

பா.ஜ.க. எதிர்ப்புக் கருத்துகளுக்கு ஆதாரம் கேட்பவர்கள் மோதியிலிருந்து பா.ஜ.க.வினர் சொல்லும் பொய்களுக்கு என்ன ஆதாரம் தருகிறார்கள்? பிரதம மந்திரி சொல்வதனாலேயே அவை உண்மை என்று நினைக்கிறார்களா? “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பது குறள். இது எல்லாருக்கும் பொருந்தும். நான் சொல்வதற்கு மட்டுமல்ல; மோதியும் அமித் ஷாவும் சொல்வதற்கும்தான்.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “உள்நோக்கத்திற்கு ஆதாரமா?

 1. //உள்நோக்கத்திற்கு ஆவண ஆதாரம் தேட முடியாது. ஆவண ஆதாரத்தில் உள்நோக்கம் வெளிப்படாது. //
  தெரிந்துதான் எழுதியுள்ளாரா ?? நான் கேட்டது நடந்ததாக சொல்லப்படும் சம்பவத்திற்கு ஆதாரம் . அதைத் தவிர்த்து வேறு பலவற்றை எழுதி உள்ளார் பதிவர். அதுவும் பல பொய்கள். அஸ்ஸாம்மில் அமல்படுத்தியது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி 1971ஆம் ஆண்டு கணக்கைக் கொண்டு. நாடு முழுவதும் வரும்பொழுது அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

  அஹ்மதியா முஸ்லீம்களுக்கும் ரோஹிங்யா முஸ்லீம்களுக்கும் நாம் ஏன் அடைக்கலம் தர வேண்டும் ? இஸ்லாமிய நாடான பங்களாதேஷ், உலகின் மிகப்பெரிய நாடான சவுதி போன்றவை ஏன் அவர்களுக்கு அடைக்கலம் தர மறுக்கிறது ? இதை ஏன் பதிவர் படிக்கவில்லை இல்லை படிக்க விரும்பவில்லையா ??

  இலங்கைத் தமிழர்கள் இங்கு குடியேற விரும்பவில்லை. அவர்கள் திரும்பி தங்கள் சொந்த நாட்டிற்கு செல்லவே விரும்புகிறார்கள். இலங்கை தமிழர் மீள் குடியேற்றம் பற்றி பல ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. திரு சாஸ்திரி காலத்தில் இருந்து பல ஒப்பந்தங்கள் உள்ளன. மேலும் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை பரிசீலிக்கப்படும் என்றே திரு அமித் ஷா அவர்கள் சொல்லி உள்ளார்.

  அடுத்து இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் அனைவருக்கும் ஏதாவதொரு அடையாள அட்டை கண்டிப்பாக இருக்கும். இந்திய இஸ்லாமியர்களுக்கு CAA & NRC / NCA இவை எதன்படியும் பிரச்சனை இல்லை . முதலில் சரியான தரவுகளை தேடி படியுங்கள். தவறான தகவல்களை எழுதாதீர்கள்.

  தங்கள் தளத்தில் ஒரு கட்டுரை வெளியுடும் முன் அதன் உண்மைத் தன்மை பற்றி ஆராய்ச்சி செய்து விட்டு வெளியிடவும். இப்பொழுது இது கோர்ட்டின் முன் உள்ளது. அதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *