Advertisements
இலக்கியம்கட்டுரைகள்

அணிநடை அன்னம்!

-மேகலா இராமமூர்த்தி

பண்டைத் தமிழர்கள் நிலத்தையும் பொழுதையும் வாழ்வின் முதற்பொருளாய்க் கருதியவர்கள். மாவொடும் புள்ளொடும் மகிழ்ச்சியாய் வாழ்ந்தவர்கள். பூக்களையும் அவற்றைச் சுற்றிவந்த பல வண்ண ஈக்களையும் இரசித்தவர்கள். இயற்கையோடு பிணக்கமில்லா இணக்க வாழ்வு அவர்களுடையது. அந்த இன்ப வாழ்வின் பிரதிபலிப்பை அற்றைத் தமிழ்ப் புலவோரின் தீந்தமிழ்ப் பாடல்கள் தெற்றெனப் புலப்படுத்துவதே இதற்குத் தக்க சான்றாகும்.

பறவைகள் குறித்த பழந்தமிழ்ப் பாடல்களை ஆராய்ந்தால், காக்கை, குருவி, குருகு, கூகை, மயில், குயில், அன்னம், அன்றில் எனத் தம் வண்ணத்தாலும் வனப்பாலும் எண்ணங் கவர்ந்த பல்வேறு பறவைகளைப் புலவர்கள் நுணுகி ஆராய்ந்து அவற்றின் இயல்புகளை மிகையின்றிப் பதிவு செய்திருக்கின்றார்கள். இப்பறவைகளில் அன்னம் குறித்து நம் புலவர்களின் எண்ணவோட்டம் என்ன என்று ஒருசிறிது ஆராய்வோம் ஈண்டு!

நீர்நிலைகளில் வாழும் இயல்புடையது அன்னப்புள். வெள்ளை, கறுப்பு, சாம்பல், இவற்றின் கலவை ஆகிய நிறங்களில் அவை காட்சிதரும். வாத்தும் அன்னமும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த பறவைகளே. ஆம், அன்னம் என்பது பட்டைத்தலையுடைய பெரிய அளவிலான வாத்துதான் (Bar-headed goose). ஆனால் அன்னத்தின் நடையில் இருக்கும் நளினமும் கவர்ச்சியும் வாத்திடம் கிடையாது!

இந்த ’நடை’ வேறுபாட்டைக் கவனித்த புலவர்கள் அன்னத்தின் அழகிய நடையைப் பெண்டிரின் நளின நடைக்கு உவமைக்கியிருக்கிறார்கள். அழகை எங்குக் கண்டாலும் எவற்றினிடத்துக் கண்டாலும் அதனைப் பெண்ணொடு பொருத்திப் பார்ப்பது என்பது ஆண்களின் உளவியலாகவே அன்றுதொட்டு இன்றுவரை தொடர்கின்றது. அதற்குப் புலவர்கள் மட்டும் விலக்காவரோ?

புகழேந்திப் புலவர் இயற்றிய புகலரு சிறப்புடைய நளவெண்பாவில் ஒரு நயமான காட்சி…

நிடத நாட்டரசனாகிய நளன் சோலையில் உலவிக்கொண்டிருக்கின்றான். அப்போது வெண்ணிற அன்னம் ஒன்று செந்நிறப் பாதங்களோடு ஆங்கே தோன்றிற்று. அதன் தோற்றப் பொலிவில் சிந்தை பறிகொடுத்த நளன் அதனைப் பிடித்துவருமாறு தன் சேடிப் பெண்களை ஏவ, மயிலொத்த சேடியர் ஒயிலாக ஓடிச்சென்று அவ் அன்னத்தைப் பிடித்துவந்து அரசன்முன் பணிவாக வைத்தனர்.

பிடிபட்ட அன்னமோ அரசன் தன்னை என்ன செய்யப்போகிறானோ என்று அஞ்சி நடுங்கியது. நளன் அதனிடம், ”அஞ்சாதே மட அன்னமே! உன்னுடைய அணி நடையையும் வஞ்சிக்கொடி அனைய மங்கையரின் மணி நடையையும் ஒப்பிட்டுப் பார்த்து இவற்றில் சிறந்த நடை எது என்று தெளியும் பொருட்டே உன்னைப் பிடித்துவரச் சொன்னேன்; வேறொன்றுமில்லை” என்று உண்மைசாற்றி அதனைத் தேற்றுகின்றான்.

அஞ்சல் மடஅனமே உன்றன் அணிநடையும்
வஞ்சி அனையார் மணிநடையும் – விஞ்சியது
காணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டு
மாணப் பிடித்ததார் மன்
.  (நளவெண்பா – 34)

அன்னத்தின் நடையைக் கண்ணகி நல்லாளின் கவின் நடைக்கு உவமைகாட்டுகின்றார் சிலம்பின் ஆசிரியர் இளங்கோவடிகள். அக்காட்சியைக் காண்போம்!

புகாரிலிருந்து மதுரைக்குப் பொருள்தேடிப் பயணமான கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகள் எனும் சமணத்துறவியின் துணையோடு மதுரை மூதூரை அடைகின்றனர். அங்கே பூக்களையே ஆடையாய்ப் போர்த்துச் செல்லுகின்றாள் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி.
அவ் அருங்காட்சியைக் கண்ட அன்னநடைப் பெண்ணாள் கண்ணகியும், ஐயனான கோவலனும், ”இது புனல் ஆறன்று; பூம்புனல் ஆறு” என்று அதனைத் தொழுதனர் என்கிறார் அடிகள்.

புனல்யா றன்றிது பூம்புனல் யாறென
அனநடை மாதரும் ஐயனுந் தொழுது…
(சிலப் – மதுரைக்காண்டம்: 174-175)

அழகிய அன்னப்புள்ளைத் தம் உள்ளத்தை உரைக்கும் காதல் தூதாக விடுத்த பாடல்கள் தமிழிலக்கியத்தில் பல உள. ’தூது’ என்பது ஒரு தனிச்சிற்றிலக்கிய வகையாக வளர்ச்சியடைந்தது பதினான்காம் நூற்றாண்டில்தான் எனினும், அதன் தொடக்கத்தைச் சங்க நூல்களிலேயே நாம் காணமுடிகின்றது.

அன்னச்சேவலைத் தம் ஆருயிர்த் தோழனான சோழ மன்னனிடம் தூது விடுக்கும் பிசிராந்தையாரின் புறப்பாட்டு இது!

அன்னச் சேவ லன்னச் சேவல்…
….குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை யாயி னிடையது
சோழநன் னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
வாயில் விடாது கோயில் புக்கெம்
பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்
ஆந்தை யடியுறை யெனினே மாண்டநின்
இன்புறு பேடை அணியத்தன்
நன்புறு நன்கல நல்குவ னினக்கே
 (புறம் – 67)

”அன்னத்தின் சேவலே! (ஆண் அன்னமே) நீ குமரித்துறையிலே அயிரை மீனை வயிறார உண்டுவிட்டு இமயத்தை நோக்கிப் பறக்கின்றனையா? அப்படியாயின், இவ்விரு பகுதிகட்கும் இடையிலுள்ள சோழநாட்டுக்குச் செல்வாயானால், ஆங்கே உறையூர் எனும் ஊர் உளது. நீ அங்குச் சென்றால் அங்குள்ள அரண்மனையின் உயர்ந்த மாடத்தில் தங்க வேண்டும்; ஆனால் அங்கு வாயிற் காவலர்கள் இருப்பர். எனவே அவர்களுக்கு உன் வரவை உணர்த்தாது நேரே அரண்மனைக்குள் செல்! அங்கே எம் மன்னனாகிய பெருங்கோக் கிள்ளி இருப்பான். அவன் காதில் விழுமாறு நான் பிசிராந்தையாரின் அடிக்கீழ் வாழ்பவன் என்று சொல்! அப்புறம் பார்! உன் மதிப்பு மிக்க பேடை பூணுதற்கு நல்ல அணிகலன்களையெல்லாம் அள்ளித் தருவான் அவன்!” என்று கோப்பெருஞ்சோழனுக்கும் தனக்கும் இருந்த நட்பின் பெட்பினை அன்னச்சேவலிடம் அன்பொடு கூறி அதனை அவன்பால் தூதுவிடுக்கிறார் ஆந்தையார்.

அன்னப்பறவைகள் வானில் விரைந்து பறக்கும் தன்மையன. அதனால் வினைமுடித்துத் திரும்பும் தலைமகன் ஒருவன் தன் தேர்ப்பாகனிடம், ”பாக! வானில் பறந்துசெல்லும் அன்னப்பறவைகள்போல் குதிரைகளை விரைந்து செலுத்து! அழகிய மையுண்ட கண்களையும், செழித்த கூந்தலையும், சிறு நுதலையும் உடைய என் தலைவியை நான் இப்பொழுதே காணவேண்டும்!” என்று துரிதப்படுத்தும் அழகிய பாடல் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

…வயங்குசிறை அன்னத்து நிரைபறை கடுப்ப
நால்குடன் பூண்ட கானவில் புரவிக்
கொடிஞ்சி நெடுந்தேர் கடும்பரி தவிராது
இனமயில் அகவுங் கார்கொள் வியன்புனத்து
நோன்சூட் டாழி ஈர்நிலம்துமிப்ப
ஈண்டே காணக் கடவுமதி பூங்கேழ்ப்
பொலிவன அமர்த்த உண்கண்
ஒலிபல் கூந்தல் ஆய்சிறு நுதலே.
  (அகம் – 334 – மதுரைக் கூத்தனார் – பிற பாட பேதங்கள்: மதுரைக் கடாரத்தனார்; மதுரைக் கந்தரத்தனார் ; மதுரைக் கோடரத்தனார்.)

நடையழகிற்கும், விரைந்து பறக்கும் திறனுக்கும் மட்டுமன்றி மென் தூவிகளாலும் (இறகுகள்) சிறப்புடையன அன்னங்கள். அம்மென் தூவிகளை அன்றைய தமிழர் தம் பஞ்சணைகட்குப் பயன்படுத்தியமையைச் சங்க நூல்கள் அறியத்தருகின்றன.

நெடுநல்வாடையில் போர்மேற்சென்ற அரசனைப் பிரிந்து தனித்திருக்கும் கோப்பெருந்தேவியின் பாண்டில் எனும் வட்டக் கட்டிலின் அமைப்பையும் அழகையும் விவரிக்கவரும் நல்லிசைப் புலவர் நக்கீரனார்,

”துணையைப் புணர்ந்தபோது உதிர்ந்த அன்னங்களின் தூவியை இணைத்து உருவாக்கப்பட்ட பஞ்சணையை மேன்மையுண்டாக விரித்து, அதன்மேல் தலையணை சாயணை முதலிய அணைகளை இட்டுவைத்து, நன்கு கஞ்சியிட்டுக் கழுவப்பட்டு, மலரிதழ்களை அகத்தே வைத்து மணமேற்றப்பட்ட தூய மடி விரிக்கப்பட்ட படுக்கையைத் தாங்கிய கட்டில் அது” என்று அதன் சிறப்பை நம்கண்முன் நிறுத்துகின்ற காட்சி படித்தின்புறத்தக்கது.

மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி
இணையணை மேம்படப் பாயணை யிட்டுக்
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமை தூமடி விரித்த சேக்கை
(நெடுநல்வாடை : 131-135)

துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த
இணையணை மேம்படத் திருந்து துயில்”
என்று அன்னத்தூவியால் அமைந்த அணையை ஆசிரியர் இளங்கோவும் சிலப்பதிகாரத்தில் காட்டுகின்றார்.

எத்துணை இரசனையோடு உலகியல் இன்பங்களைத்

துய்த்திருக்கின்றான் அற்றைத் தமிழன் என்பதற்குச் சான்றுகள் இவை!

அன்னத்தைப் பற்றிப் புலவர்கள் பதிவுசெய்திருக்கும் கருத்துக்கள் அனைத்துமே உண்மை என்று கொள்ளுதற்கில்லை. அவற்றில் உண்மையல்லாக் கற்பனைகளும் கலந்திருக்கவே செய்கின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான் அன்னம் பாலையும் நீரையும் பிரித்துப் பாலை மட்டும் பருகும் எனும் கருத்து.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்தநிலையில் வைத்துப் போற்றப்படும் நாலடியார், அன்னப் பறவை பாலையும் நீரையும் பிரித்துப் பாலை மட்டும் பருகும் தெளிந்த செயலைப்போல் நீங்களும் கற்கத் தக்கனவற்றைக் கற்றிடுங்கள்; அத்தகுதியற்றவற்றை விலக்கிடுங்கள் என்று அறிவுறுத்துகின்றது.

கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து
(நாலடியார் – 135)

அன்னத்திற்கு இத்தகு பண்புண்டு என்பதைப் பறைசாற்ற இதுவரை அறிவியல் சான்றாதாரங்கள் ஏதும் கிட்டவில்லை. அல்லவற்றை நீக்கி நல்லவற்றைக் கைக்கொள்ளுதற்கு மனிதனுக்கு வழிகாட்டப் புராணங்கள் மேற்கொண்ட ’ஹம்ச க்ஷீர நியாயம்’ எனும் ஒரு கற்பனை முயற்சியே இஃது என்று கொள்வதில் பிழையில்லை.

அன்னப்பறவை குறித்த மற்றோர் உண்மை, மேலைநாட்டு அன்னப்பறவையான சுவானும் (swan) நம் நாட்டு அன்னப்பறவையான பட்டைத்தலை வாத்தும் (Bar-headed goose) ஒன்றல்ல என்பதே. இவ்விரண்டையும் ஒன்றென எண்ணி நாம் மயங்குதற்கு, இரவிவர்மா போன்ற புகழ்வாய்ந்த இந்திய ஓவியர்களும் காரணம் எனலாம். தம்முடைய மேற்கத்தியத் தாக்கத்தால் மேல்நாட்டு சுவானை இந்திய அன்னம் என்று கருதுமாறு அவர் வரைந்ததன் விளைவு, இந்தியர் பலரும் நம் நாட்டு அன்னப்பறவை எது என்று கேட்டால் மேனாட்டு அன்னத்தைத்தான் அடையாளம் காட்டுகின்றார்கள் என்று கருத்துத் தெரிவிக்கின்றார் சூழலியல் ஆர்வலரும் எழுத்தாளருமான, திரு. சு. தியடோர் பாஸ்கரன்.

இந்தியப் பறவைகள் குறித்த நம்முடைய புரிந்துகொள்ளும் அறிவை மேம்படுத்திக் கொள்ளுதலே இவைபோன்ற குழப்பங்களுக்கு விடைகொடுக்கும். அதற்கு நாம் செய்யவேண்டியது, கணினியோடு கழிக்கும் நேரத்தில் சிறிதைக் குறைத்துக் கானுயிர்களோடு களிக்கவும் நேரம் ஒதுக்குதலே ஆகும். இயற்கையோடு கை கோப்போம்! இன்பத்தை அள்ளிச் சேர்ப்போம்!

*****

கட்டுரைக்குத் துணைநின்றவை:

1. https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/174630-11.html

2. புறநானூறு –- ஔவை சு. துரைசாமிப் பிள்ளை உரை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை – 18

3. அகநானூறு – நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு, ரா. வேங்கடாசலம் பிள்ளை உரை, வெளியீடு – பாகனேரி
வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார்.

4. புகழேந்திப் புலவரின் நளவெண்பா –  கழகப்புலவர், செல்லூர்க்கிழார்,
திரு.செ.ரெ. இராமசாமிப்பிள்ளை அவர்கள் எழுதிய உரையுடன்.

 

 

 

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comment here