-மேகலா இராமமூர்த்தி

பிற்காலச் சோழமன்னர்களில் பேரோடும் புகழோடும் விளங்கியவன் மாமன்னன் முதலாம் இராசராசன். இவன் காலத்திலும் இவனைத் தொடர்ந்துவந்த இவனுடைய மகனான முதலாம் இராசேந்திரன் காலத்திலும் தமிழரின் மறமும் மாண்பும் பண்பாட்டுச் சிறப்பும் கடல்கடந்த நாடுகளிலும் விளக்கமுற்றன. போராற்றலோடு கலைகளைப் பேணும் பேராற்றலும், சைவசமயப் பற்றும் மிக்கவனாய்த் திகழ்ந்திருக்கின்றான் இராசராசன். அவனுடைய சைவப் பற்றுக்குச் சான்றாக வானளாவி நிற்கின்றது தன்னுடைய தலைநகரான தஞ்சை மண்ணில் அவன் எழுப்பியிருக்கும் இராசராசேச்சுரம் எனப்படும் பெருவுடையார் கோயில்.

ஆறடி உயரமும் ஐம்பத்து நான்கடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார் (பீடம்), இருபத்துமூன்றரை அடி உயரம் கொண்ட இலிங்கம் ஆகியன தனித்தனியாகக் கருங்கற்களால் செதுக்கப்பட்டுப் பெருவுடையார் கோயிலின் கருவறையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே மிகப்பெரிய இலிங்கத் திருமேனி இக்கோயிலிலுள்ள இலிங்கத் திருமேனியே ஆகும். இதற்கடுத்த பெரிய இலிங்கத் திருமேனி முதலாம் இராசேந்திர சோழன் எடுப்பித்த கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் உள்ளது. பெருவுடையார் கோயிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ஒரே கல்லாலான நந்தி 19 அடி நீளமும், 12 அடி உயரமும் கொண்டதாகப் பெருவுடையாருக்கேற்ற பெருநந்தியாய்த் திகழ்கின்றது. இந்நந்தி பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாகத் தெரிகின்றது. சோழர்காலத்தில் அமைக்கப்பட்ட நந்தி தற்போது திருச்சுற்று மாளிகையில் உள்ளது.

கோயில்களுக்கென்று ஆகம விதிகள் வகுக்கப்பட்டு அவற்றின்படியே கோயில் நிகழ்வுகள், பூசனைகள் நடைபெறுவது  வழக்கமாயிருந்துவருகின்றது. தஞ்சைக் கோயிலைப் பொறுத்தவரை அது மகுடாகமத்தின்படிக் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

மகுடாகமம் என்றால் என்ன?

சிவன் கோயில்களைப் பொறுத்தவரை, முதலில் கோயிலின் வெளிக்கட்டமைப்பை நிறுவி அதன் பின்னரே கருவறையில் இலிங்கத் திருமேனியைப் பிரதிட்டை செய்து இறைசக்தியை நிறுவுவது வழக்கம். இதற்கு மாறாக இலிங்கத் திருமேனியை முதலில் பிரதிட்டைசெய்து பின்னர்க் கோயிலின் வெளி அமைப்பை உருவாக்குவது மகுடாகம முறை எனப்படும். தில்லை நடராசர் திருக்கோயில், திருவாரூர் தியாகேசப் பெருமான் திருக்கோயில் போன்றவை மகுடாகம முறையில் கட்டப்பட்டவை என்றும் இவற்றைக் கண்ட மாமன்னன் இராசராசனும் இதே அமைப்பில் தன்னுடைய பெருவுடையார் கோயிலை அமைத்தான் என்றும் கூறப்படுகின்றது. கல்வெட்டாய்வாளரும் எழுத்தாளருமான குடவாயில் திரு. பாலசுப்பிரமணியன், வரலாற்றார்வலரான முனைவர் க. சங்கரநாராயணன் போன்றோர் பெருவுடையார் கோயில் மகுடாகமத்தின் அடிப்படையில் கட்டப்பட்டதே என்று  உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

இத்துணைச் சிறப்புவாய்ந்த பெருவுடையார் கோயிலுக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் நாள் திருக்குடமுழுக்கு நிகழவிருக்கின்றது. 1997க்குப் பிறகு இருபத்துமூன்று ஆண்டுகள் கழித்து நிகழவிருக்கும் குடமுழுக்கு இஃது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தருணத்தில் கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்படுவதன் நோக்கமென்ன என்பதை நாம் சிந்தித்துப்பார்ப்பது பொருத்தமாயிருக்குமெனக் கருதுகின்றேன். அதற்கு முன்னதாக இறை வழிபாட்டில் சிறப்பிடம் பெறுகின்ற மந்திரங்கள் குறித்தும் அவற்றின் மகிமை குறித்தும் சிறிது அறிந்துகொள்வோம்.

ஒலியிலிருந்தே இந்நிலவுலகம் தோன்றியிருக்கின்றது. உலகின் தோற்றத்துக்கு ஆதாரமாக அறிவியல் சுட்டும் பெருவெடிப்பே (big bang) பேரொலியுடன் நிகழ்ந்ததுதானே? ஆதியில் தோன்றிய அவ்வொலியை (Primordial sound) ’ஓம்’ என்ற பிரணவ ஒலியாக அடையாளப்படுத்துகின்றது இந்திய ஆன்மிகம்.

ஒலிக்கூட்டங்களால் உருவானவையே ஆற்றல் வாய்ந்தவையாகக் கருதப்படும் மந்திரங்கள். நாம் பயன்படுத்தும் எல்லாச் சொற்களுக்கும் எழுத்துக்களுக்கும் அதிர்வெண்கள் (frequencies) உண்டு. வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட எழுத்துக்களை இணைத்துச் சொற்களாக்கும்போது அவை மிகுஅதிர்வொலியின் (ultrasonic sound) பயனை அளிக்கும் மந்திரங்களாக மாறுகின்றன. இவ்வாறு உருவாக்கப்பட்டவையே ஓம் நமச்சிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் சரவணபவ, புத்தம் சரணம் கச்சாமி போன்ற மந்திரங்கள்.

எல்லா எழுத்துக்களுக்கும் அதிர்வெண்கள் இருக்கும்போது நாம் ஏன் எல்லாச் சொற்களையும் மந்திரங்களாகக் கருதாமல் ஒருசிலவற்றை மட்டும் மந்திரங்கள் என்கிறோம் என்றோர் ஐயம் நம்முள் இப்போது எழலாம்.

எல்லா எழுத்துக்களும் அதிர்வெண்கள் உடையவையே எனினும் ’நிறைமொழி மாந்தர்’ என்று தொல்காப்பியரும் வள்ளுவரும் குறிப்பிடும் சான்றோர்கள் தம் பேராற்றலால் சில சொற்களை உருவாக்கி இவை மந்திரங்கள் ஆகக்கடவன என்று ஆணையிட்டு அவற்றை அத்தகுதிக்கு உரியனவாக்கியிருக்கின்றார்கள். இவற்றையே நாம் தமிழில் மறைமொழிகள் என்கிறோம்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப
. (தொல் – 1484) என்பது தொல்காப்பியம்.

இம்மறைமொழிகளில் அந்நிறைமொழி மாந்தர்கள் தம் அருளாற்றலையும் சேர்த்தே செலுத்துவதால் அவை கூடுதல் பலம் பொருந்தியவையாக மாறிவிடுகின்றன. இவற்றை நாம் மறைமொழிகள் என்றுரைக்கக் காரணம், சாதாரணமாகப் பார்க்கும்போது இவற்றின் ஆற்றல் நமக்குப் புலப்படுவதுமில்லை; புரிவதுமில்லை என்பதனாலேயே.

திருக்கோயில்களின் அடிப்படைத் தத்துவமும் இதுபோன்றதே!

கோயில் கருவறையில் நிறுவப்பட்டிருக்கும் தெய்வப் படிமங்கள், ஏதோ தேவலோகத்திலிருந்து ’ஸ்பெஷலாக’த் தருவிக்கப்பட்ட கற்களால் செய்யப்பட்டவை அல்ல! அவையும் பூலோகத்தில் கிடைக்கும் சாதாரணக் (கருங்)கற்களினால் செய்யப்பட்டவையே!

அப்படியாயின் கோயிலின் வாயிலில் கிடக்கும் படிக்கல்லும் கருவறைக்குள் இருக்கும் தெய்வப் படிமக் கல்லும் ஒன்றுதானே? பின்பு ஏன் நாம் படிக் கல்லை மிதிக்கிறோம்? தெய்வப்படிமக் கல்லை  மதிக்கிறோம்; துதிக்கிறோம் என்றொரு வினா எழுவது இயல்பே!

மனிதர்கள்கூட வெளித்தோற்றத்துக்கு இரு கால்கள், இரு கைகள், இரு கண்கள், ஒரு முகம் என ஒத்த அமைப்புடையவர்களாகத்தான் தோன்றுகிறார்கள். அதற்காக அறிவில், ஆற்றலில், பண்பில், பயனில் அனைவரும் ஒன்று என்று கூறிவிடமுடியுமா? முடியாதே! அதுபோல், வெளியிலிருக்கும் படிக்கல்லும் உள்ளேயிருக்கும் படிமக்கல்லும் நம் ஊனப்பார்வைக்குக் கற்களாகவே தெரிந்தாலும் அவையிரண்டும் ஆற்றலில் ஒன்றல்ல!  

ஆம், கருவறைக்குள் தெய்வப் படிமங்களைப் பிரதிட்டை செய்வதற்கு முன்பாக அந்தந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்கள் அடங்கிய சக்கரங்களை எழுதி அடியில் புதைப்பார்கள்; அவற்றின் மீதுதான் அத்தெய்வப் படிமங்களை நிறுவுவார்கள். [சக்கரங்களின் சிறப்பை – ஆற்றலைத் திருமந்திரத்தின் நான்காம் தந்திரம் விரிவாகப் பேசுகின்றது; அதனைப் படித்தால் அவை குறித்த தெளிவு கிடைக்கும்.] இவ்வாறுதான் கல்லாலான கருவறைப் படிமங்கள், அருளாற்றல் மிகுந்த தெய்வங்களாக மாறுகின்றன.

இவற்றின் தெய்வீக ஆற்றலை மேலும் கூட்டுவதற்குத்தான் பன்னிரு ஆண்டுகட்கு ஒருமுறை திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றொரு விதியை வகுத்திருக்கின்றார்கள். [இவ்விதி பல கோயில்களில், பெருவுடையார் கோயில் உட்பட, பின்பற்றப்படுவதில்லை என்பது வேறு விஷயம்.]

குடமுழுக்கிற்கு முன்னதாக வேள்விச்சாலை அமைத்து அதில் கோயிலிலுள்ள ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு கடம்(குடம்) வைத்து, அதனுள் நீர் நிரப்பி, மாவிலைத் தோரணம் கட்டி, தர்ப்பைப்புல், தேங்காய் முதலியன வைத்து அத்தெய்வத்தை எழுந்தருளச் செய்வதற்கு (ஆவாஹனம்) மந்திரங்கள் செபிப்பார்கள். ஐந்துநாள், ஏழுநாள் என்று இவ்வாறு தொடர்ந்து மந்திரங்களைச் செபித்து அந்நீரை இறையாற்றல் பெற்ற மங்கல நீராக மாற்றுவார்கள். இவ்வாறு இறையாற்றல் ஏற்றப்பட்ட நீரைக் குடமுழுக்கன்று கருவறையிலுள்ள மூலவர் படிமத்துக்கும், அம்மூலவர் அமர்ந்திருக்கும் கோயில் கலசத்துக்கும் அபிடேகம் செய்வார்கள். இதனால் கருவறையில் இருக்கும் தெய்வப் படிவத்தின் ஆற்றல் மேலும் கூடும் என்பது அருளாளர்களின் கருத்து.

மந்திரம் செபிக்கப்பட்ட மங்கல நீரைத் தெய்வப் படிவங்களின்மீது விடுவதால் அவற்றின் இறையாற்றல் அதிகரிப்பதனை நாம் கார்களின் மின்கலத்துக்கு மின்னாற்றல் ஏற்றும் செயலோடு (charging the car battery) ஒப்பிடலாம்.  கார்களின் மின்கலமானது உலோகத் தகடுகள், அமிலம் (sulfuric acid) மற்றும் தண்ணீர் சேர்ந்த கலவையில் அமுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதனால் மின்கலத்துக்கு மின்னாற்றல் கிடைத்துவிடுமா என்றால் இல்லை. அது இயங்கும் தன்மையற்ற dead batteryயாகத்தான் இருக்கும். மின்கலத்துக்கு மின்னாற்றல் வரவேண்டுமானால் அதனைப் பல மணிநேரங்கள் (at least 24 hours) மின்சாரத்தில் வைத்து மின்னாற்றலை ஏற்ற வேண்டும்.

இதுபோன்றதுதான் வலிமைவாய்ந்த மந்திரங்களைப் பல மணிநேரங்கள் செபித்துக் க(கு)டத்து நீருக்குள் இறையாற்றலை ஏற்றி அந்த ஆற்றலைத் தெய்வப் படிமங்களுக்குக் குடமுழுக்கின் வாயிலாகக் கடத்துவதும்! மின்கலம் மின்னாற்றல் பெற மின்சாரம் தேவை! சாதாரண நீர் இறையாற்றல் செறிந்த மங்கல நீராக மாற நிறைமொழி மாந்தர்கள் உருவாக்கிய மந்திரமொழிகள் தேவை!

கோயில் கோபுரங்களின் அழகைக் கூட்டுபவை அவற்றின் மீதிருக்கும் கலசங்கள். அந்தக் கலசங்களில் பல்வகை தானியங்களையும் நிரப்பி வைப்பர்.  ஒவ்வொரு குடமுழுக்கின்போதும் பழைய தானியங்கள் அகற்றப்பட்டுப் புதியவை நிரப்பப்படும். பஞ்சம் வரும் காலங்களில் இத்தானியங்களை எடுத்து விதைக்கப் பயன்படுத்தும் வழக்கங்கூட நம் மக்களிடையே இருந்திருக்கின்றது எனும் செய்தி வியப்பளிப்பதோடு நம் முன்னோர்களின் புத்திக்கூர்மையையும் புலப்படுத்துவதாயுள்ளது.

இக்கோபுரக் கலசங்கள் தூல வடிவில் இறைவனைக் குறிக்கின்றன என்பது மூத்தோர் வாக்கு.  ஆக, தூல வடிவாய் இருக்கின்ற கோபுரங்களுக்கும், சூக்கும வடிவாய் இருக்கின்ற தெய்வப் படிமங்களுக்கும் மங்கல நன்னீராட்டி அவற்றின் ஆற்றலை அதிகப்படுத்துவதே  குடமுழுக்கின் அடிப்படை நோக்கமாகும்.

நிறைவாக ஒன்று! மந்திரங்கள் மகத்தான ஆற்றல் வாய்ந்தவை. இவற்றில் வடமொழி தென்மொழி என்ற பேதமில்லை. வடமொழி மந்திரங்களுக்கு மட்டுமே இருப்பதாக நம்மில் சிலர் நம்பும் தெய்வீக ஆற்றல் தென்மொழியாகிய தமிழுக்கும் உண்டு!

அதனாலன்றோ… 

”காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.”
  என்று நமச்சிவாய மந்திரத்தின் மகிமையை விதந்தோதினார் காழிப்பிள்ளையார்.

எனவே தமிழ்நாட்டுக் கோயில்களுக்குக் குடமுழுக்குச் செய்யும்போது தமிழில் மந்திரங்களை ஓதுவதே சிறப்பாக இருக்கும்; கடவுளர்க்கும் உவப்பாக இருக்கும்!

*****

கட்டுரைக்குத் துணைநின்றவை:

1. TVA_BOK_0010769_இராசராசேச்சுரம்.pdf

2. https://ta.wikipedia.org/wiki/குடமுழுக்கு

3. மந்திரங்கள் – பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் – கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017

4. https://shaivam.org/thirumurai/third-thirumrai/999/thirugnanasambandar-thevaram-namashivaya-pathigam-kadhalaki-kasinthu

5. http://tamil.webdunia.com/article/special-astro-predictions/in-the-cgopura-kalasam-putting-grains-reason-for-using-it-118062800016_1.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *