பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு

2

-முனைவா் அரங்க. மணிமாறன்
முதுகலைத் தமிழாசிரியா்

அரசு மேனிலைப்பள்ளி-   பரமனந்தல்
செங்கம் – 606710.
பேசி 9943067963.

*****

தனிமனித உணா்வுகளைப் பாடுபொருளாகக் கொண்டு விளங்கியவை சங்கப்பாடல்கள். மனித மனங்களில் படிந்துகிடந்த தீயொழுக்க அழுக்குகளைப் போக்கி நல்லொழுக்கக் கருத்துகளை பொருண்மையாகக் கொண்டவை நீதிநூல்கள். ஒப்பற்ற தலைவனின் வீரதீரங்களை வெளிப்படுத்தியவை காப்பியங்கள். தொன்மக் கருத்துகளை புராண இதிகாசங்கள் வெளிப்படுத்தின. புலவா்களின் மதிநுட்பங்களைச் சிற்றிலக்கியங்கள் வெளிக்காட்டின. பாரதியார் போன்ற புலவா்கள் விடுதலை கீதங்களை இசைத்தனா். பிற்காலப் புலவர்களும் படைப்பாளிகளும் சமுதாயவியலுக்கு முக்கியத்துவம் அளித்தனா்.

பேரறிர் அண்ணாதுரை:

“எல்லாத்துறையும் அண்ணாத்துரையே” எனும்படி அரசியல், பொருளாதாரம், மேடைப்பேச்சு, இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் தமது ஆளுமையால் கோலோச்சியவா் பேரறிஞர் அண்ணா.

“அண்ணாவின் கதைகளைக்கொண்டு அக்கால நாடக உலகம், மேடைப்பேச்சு விஷயங்கள், வணிகர்களின் நடைமுறைகள், தம் இறுதிநாளில் இருந்த ஜமீன் பரம்பரை நடவடிக்கைகள் செல்வந்தர்களின் வழக்கங்கள் உள்ளிட்டவற்றை அறியலாம்” 1 என்கிறார் பேரா. பெருமாள் முருகன்.

தமது சிந்தனை, பேச்சு, எழுத்து, செயல்பாடுகள் அனைத்திலும் போலி மதவாத எதிர்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை விதைப்பு, சமுதாயத்திலும் அரசியலிலும் உள்ள சீர்கேடுகளை வெளிக்காட்டுதல், புராணப் புளுகுகளை தோலுரித்தல் ஆகியவற்றின் மூலம் மக்கள் அனைவரும் பேதங்களின்றி வாழ்ந்து அனைத்து உரிமைகளையும் பெற்று வாழவேண்டும் என்ற அவருடைய பொதுவுடைமைச் சிந்தனை வெளிப்படுத்துவதைப்பற்றி டாக்டா் மா. தியாகராஜன்,

“இவரின் சிறுகதைகள் அரசியல், சமுதாயம், ஆணாதிக்கம், பெண்ணடிமை, சாதிக்கொடுமைகள், ஏழ்மையின் நிலை, அதைப் போக்குவது எங்ஙனம் என்ற தீர்வைக் கொண்டனவாகவே உள்ளன” 2 என்று தமது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

அத்தகைய பொருண்மைகள், சமுதாய விழிப்புணர்வுக் கருத்துகளாக வெளிப்படுவதை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

பத்திரிகை தர்மம் வேண்டும்:

இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக (FOURTH ESTATE) விளங்குவது இதழியல் துறையாகும். இதழியல் மக்களுக்கு அறிவிக்கிறது, பொது அறிவை ஊட்டுகிறது, வழிநடத்துகிறது. எனவே செய்திகளை வழங்கும்போது நடுநிலையோடும் உண்மையானதுமான செய்திகளை வெளியிடவேண்டும். தனிநபரின் வாழ்வுக்கும் புகழுக்கும் இழுக்கு ஏற்படாவண்ணம் செயல்பட வேண்டும்.

 “சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்ததொருபால்
கோடாமை சான்றோர்க் கணி”3  எனும் திருவள்ளுவரின் சான்றோர் இலக்கணம் இதழியல் துறைக்கும் பொருந்தும்.

ஆனால் இன்றைய இதழியலாளா்கள் போட்டி நிறைந்த உலகியலில்  தங்கள் இதழ்களை மக்கள் அதிகம் படிக்கவேண்டும், விற்பனையாகவேண்டும் என்ற வியாபாரப் போட்டியினால் பயனற்ற – உண்மையற்ற – தனிநபரின் பாதிப்புகளைக் கவனத்தில் கொள்ளாத செய்திகளைக் கற்பனை, வருணனை கலந்து விற்பனை நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வெளியிடுகின்றனர். இதழ்களின் விற்பனையைக் கொண்டே அவற்றின் தரமும் வளர்ச்சியும் புகழும் அளவிடப்படுகிறது.

தந்தை பெரியாரிடம் சென்று ஒருவா் தாம் பத்திரிகை ஒன்றைத் தொடங்கவிருப்பதாகக் கூறி வாழ்த்துப்பெற வந்தபோது “சோத்துக்கு என்ன செய்யப் போற?” எனக் கேட்டாராம். படிப்பதற்கு நையாண்டியாக இருந்தாலும் இதழியல் உலகின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நன்கு அறிந்த பழுத்த அனுபவத்தின் வெளிப்பாடாக இக்கூற்று அமைவதை அறியலாம்.

நல்ல நோக்கோடு செயல்படும் இதழ்கள் சில, கவர்ச்சிகர இதழ்களின் நடுவே காணாமல் போகின்றன. இவற்றை நன்கு அனுபவமாக உணா்ந்த அண்ணா தமது ’கொக்கரக்கோ’ சிறுகதையில் சுந்தரம் தன் நண்பரிடம் தான் ‘கொக்கரக்கோ’ என்ற பெயரில் இதழ் நடத்துவதாகவும் அதில் ’வீரா் வெல்லிங்டன்!’  ’மனிதனுக்கு ஒரு தலை போதுமா?’ ’ஹிட்லர் பட்லரானால்’ உள்ளிட்ட தலையங்கங்கள் எழுதி இதழை வளா்த்த கதைகளைக் கூறுகிறார்.

“கேள் சங்கரா! சுற்றி வளைத்துப் பார்த்தேன் திடீரென்று ஒரு யுக்தி கிளம்பிற்று. எடுத்தேன் பேனாவை ஹிட்லர் பட்லரானால்? என்று கேள்வி ஒன்று கிளப்பினேன். விற்பனை பலத்தது. 32 பி.ஏ க்களை நிருபா்களாகவும் பார்சல் குமாஸ்தாக்களாகவும் வைத்துக்கொண்டேன்.” என்றும்

“கருணைப்பிள்ளை நர்த்தனம்
பரதநாட்டியம் ஒரு பழங்கலை”4
என்றும் செய்தி வெளியிட்டதாகக் கூறுகிறார்.

இதழ்நடத்தி நட்டமடைந்து புத்தி பேதலித்த சுந்தரம்வழி இதழியலின் நிலைகளை வெளிப்படுத்தியுள்ளார் அண்ணா.

உழைப்பாளர் உயரவேண்டும்:

ஊருக்குச் சோறுபோடும் விவசாயி பட்டினி கிடக்கிறான். துணிநெசவு செய்துதரும் நெசவாளி கந்தையை உடுத்துகிறான். அனைவருக்கும் வீடுகட்டித் தரும் தொழிலாளி கூரைவீட்டில் குடியிருக்கிறான். இத்தகு முரண்பாடுகளுக்குக் காரணமென்ன?

ஒரு பொருளை உற்பத்தி செய்பவனுக்கும் நுகர்வோருக்குமிடையில் இருக்கும் இடைத்தரகர்கள் இதற்குக் காரணம். அவா்களின் சுயநலத்தினால் பொருட்களின் உற்பத்தி விலை பன்மடங்கு உயா்ந்துவிடுகிறது. வாழ்வின் அடிப்படைத் தேவையான பொருட்களுக்கும் ஏற்படும் இவ்விலையுயா்வு ஏழை நடுத்தர வா்க்கத்தினரைப் பாதிப்பதை தமது ’சரோஜா ஆறணா!’ சிறுகதையில் வெளிப்படுத்தியுள்ளார் அண்ணா.

’சரோஜா ஆறணா!’ என நடுத்தெருவில் ஒருவன் கூவிக்கூவி விற்றதும் நாயகனுக்கு கோபம் வந்து காலம் எவ்வளவு கெட்டுவிட்டது? பெண்ணை நடுத்தெருவில் விலைகூவி விற்பதா? எனச் சண்டைக்குச் செல்கிறான். கூவியவனுக்கும் இவனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நாயகனை அடித்துவிடுகிறான். நடுத்தெருவில் ஒரு பெண்ணை விலைகூறியதைத் தட்டிக்கேட்டதற்கு அடித்தீரே! எனக் கேட்டதற்கு, “இது நூல்மார்க்கெட் தம்பி! சரோஜா மில் நூல் விலை 44-6-0 என்பதையே தான் சரோஜா ஆறணா என்று விற்றதாகக் கூறுகிறான். அதனைத்தொடரும் உரையாடல்களில் உற்பத்தி விலைக்கும் நுகர்வோர் பெறுகின்ற விலைக்குமிடையேயான மலையளவு வேறுபாட்டையும் ஏழைகள் அவற்றை அதிக விலைகொடுத்து வாங்கித் துய்க்க வேண்டிய நிலையையும் விளக்கியுள்ளார்.

“இன்றைக்கு இருக்கும் விலை நாளைக்குக் கிடையாது. மணிக்கு மணி தந்தி வருகிறது! இடையிலே இருந்து பலா் இலாபமடிக்கின்றனா். ஆா்டா் கொடுப்பவருக்கு நூல் பேல் தேவையில்லை. ஆனால் பணம் இருக்கிறது. வியாபார சூட்சுமம் இருக்கிறது. 200 பேல் வாங்குவார். ஒரு வாரத்திலே 40 என்று விலை ஏறிவிடும். அவா் இலாப சாட்டு ஏறும்”5 என்று வியாபார உலகின் நிலையை அண்ணா விளக்கியுள்ளார். இன்றைய சுயநல உலகில் பொருளாதாரப் பற்றாக்குறையால் பெற்ற பிள்ளையை விற்க வேண்டிய நிலையையும் இக்கதை விளக்குகிறது.

மூடநம்பிக்கை ஒழிப்பு:

போலி மதவாதிகளையும், பொய், புரட்டுகளைக் கூறி மக்களை ஏமாற்றி அதில்தன் வயிறு பிழைக்கும் வஞ்சகா் கூட்டத்தினரையும், திரைப்படத்துறையில் உள்ள சில சுயநலவாதிகளையும் ’பேய் ஓடிப் போச்சு’ சிறுகதையில் வெளிப்படுத்தயுள்ளார் அண்ணா.

“பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் உள்ளிட்ட மூடநம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஏற்றத்தாழ்வு, சுரண்டலை அம்பலப்படுத்துவது ஆகியவையே அவரது கருத்துநிலைகள்”6 என்கிறார் பேரா. பெருமாள் முருகன்.

செங்கோடனின் மகள் செல்லாயிக்குத் திருமணம் நிச்சயித்திருந்த வேளையில் பேய் பிடித்துவிடுகிறது. அதனால் செங்கோடன் வருந்துகிறான். வேலனின் அப்பா கோவிந்தன் குடிகாரனாக இருந்தாலும் வேலனின் நற்குணங்களை அறிந்து செங்கோடன் தன் பெண்ணைக்  கொடுக்க முன்வருகிறான். ஆனால் செல்லாயிக்குப் பேய் பிடித்து அதனால் தன் இயல்பு மாறிவிட்டதைக் கண்டு செல்லாயியைத் திருமணம் செய்துகொள்ள முடியாது எனத் திருமணத்தை நிறுத்திவிடுகிறான். இதனால் மிகுந்த வருத்தமடைந்த செங்கோடன் பூசாரி பொன்னனிடம் அழைத்துச் செல்கிறான் தன் மகளை. அவன் பல்வேறு சடங்குகளைச் செய்து பேயை விரட்டுவதாகக் கூறி அவனிடம் பணத்தைக் கறந்துவிடுகிறான். ஆனால் செங்கோடன் எதிர்பார்த்தது போலவே பேய் விலகிவிடுகிறது. செல்லாயி நலம் பெற்றுவிடுகிறாள்.

“அண்ணே பூசாரி பொன்னனை நான் என்னமோன்னு எண்ணிக்கிட்டுக் கிடந்தேன். இப்பத் தெரியுது அவன் இலேசுபட்டவனில்லைங்கற விஷயம்.”7

திரைப்பட இயக்குநர் சிங் கிராமத்துக் காதல் திரைப்படத்தை எடுக்க கிராமத்திற்கு வருகிறார். அதில் தெருக்கூத்தில் ஆா்வமிக்க வேலனையும் அவனைத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட செல்லாயியையும் மடியில் படுக்கவைத்து ஆப்பிளைக் கடிக்க வைத்துப் படமாக்கி பின்பு அதைச் செல்லாயி திரைப்பட நாயகனுக்கு ஊட்டிவிடுவதாக மாற்றி எடிட்டிங் செய்து வெளியிடுகின்றார். இதனால் வேலனுக்கும் செல்லாயிக்கும் சண்டை ஏற்பட்டுத் திருமணம் தடைசெய்யப்படுகிறது. செல்லாயி பேய் பிடித்தவளாகிறாள். இறுதியில் உண்மைதெரிந்து வேலன் இயக்குநரை அடித்துவிடுகிறான். தான் செய்த தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து விளக்கமளிக்கிறார் இயக்குநர். வேலனும் தன் தவறான புரிதலுக்கு வருந்துகிறான்.

இயக்குநரின் சுயநலம் செல்லாயி மனத்தைப் பேதலிக்கச் செய்து திருமணத்தை நிறுத்திப் போலி பூசாரி பொன்னனின் வருமானத்திற்கு வழிகோலுவதை இச்சிறுகதை விளக்குகிறது.

சமத்துவம் மலர வேண்டும்:

மனிதா்களில் சிலா் சாதி மத பேதமற்ற சமத்துவவாதிகளைப் போல நடிக்கின்றனா். உண்மையில் அப்படி இல்லை. மாமன் மச்சான் உறவு கொண்டாடும் இருவேறு சாதியினா் தன் பெண்ணைத் தன் சாதிவிட்டு நட்புக்காக, உறவுக்காகத் திருமணம் செய்து கொடுப்பதில்லை. அங்கே தன்சாதி தலைதூக்கி நிற்கிறது. வேற்றுமையில் ஒற்றுமைகாணும் பாரததேசத்தில் ஒற்றுமை உண்மையாகவா உதட்டளவிலா என்ற கேள்விக்குறியை ’1938-1940 ஒரு வசீகர வரலாறு’ சிறுகதையில் எழுப்பியிருக்கிறார் அண்ணா.

”அண்ணாவின் கதைகளின் இன்னொரு தனித்தன்மை இக்கதைகளில் வரும் விதவை மறுமணம், பொருந்தா மணம், பாலியல் சுரண்டல் என இவா் கையாண்டுள்ளவை முக்கியமானவை”8 எனும் பேரா. பெருமாள் முருகன் கூற்றுப்படி இக்கதையில் விதவை மறுமணத்தை ஆதரித்து எழுதியுள்ளார் அண்ணா.

சொக்கலிங்கம் செட்டியார் கடையில் நாயுடு வகுப்பைச் சேர்ந்த கண்ணுசாமி வேலை செய்கிறான். காலை கடையைத் திறந்ததிலிருந்து மாலை கடையை பூட்டிச் சாவியை ஒப்படைப்பது வரை அவனை நம்பி அனைத்தையும் ஒப்படைக்கிறார். அவனும் மிகுந்த நற்பண்பும் நம்பிக்கையும் உடையவனாக இருக்கிறான். செட்டியார் அவனை மெச்சித் தன் குடும்பத்தில் ஒருவனாகவே கருதுகிறார். செட்டியாரின் மகள் கலியாணி திருமணமான சில காலத்திலேயே கணவன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட அவள் விதவையாகிறாள். கண்ணுசாமி, செட்டியாரின் மனத்தை மட்டுமில்லாது கலியாணியின் மனத்தையும் கவா்கிறான்.

விஷயமறிந்த செட்டியார் அவன் சம்பளத்தைக் குறைக்கிறார்; வசைபாடுகிறார். வேலையை விட்டே நிறுத்திவிடுகிறார். கலியாணியும் கண்ணுசாமியும் உடன்போக்குச்சென்று திருமணம் செய்துகொண்டு ஆண்மகவைப் பெற்றெடுக்கின்றனா்.

சாதி ஒன்றையே பெரிதெனக் கொண்டு நோயாளிக்குத் திருமணம் செய்து வைக்கிறார் செட்டியார். விதவையான தன் மகளைக் கண்ணுசாமி காதலிக்கும்போது சாதியைக் காரணம் காட்டித் திருமணத்திற்கு மறுக்கிறார். 1938-இல் தங்கமானவன், சாது 1939-இல் அவனே தறுதலை போக்கிரி! இது செட்டியாரின் கணக்கு என்பதை, “அவா் கணக்குப்படி பார்த்தால் 1938-இல் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக இருந்த கண்ணுசாமி 39-இல் நயவஞ்சகனாகிவிட்டான்” 9 என்று சாதிவேறுபாட்டின் கொடுமையையும், “தாலி இழந்தவளுக்குக் கல்யாணமா என்று தாத்தா காலத்துக் கதை பேசாதே. தாலி! கட்டுவதற்கு ஆள் இருக்கும்வரை தாலியை இழப்பது என்ற பதத்திலே பொருள் ஏது?”10

என்று விதவைகளின் துயரம், இளம் வயதில் வாழ்விழந்த இளம் விதவைகளுக்கு மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும் என்ற மகாத்மா காந்தி, தந்தை பெரியார் போன்றோரின் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பதாக இச்சிறுகதை அமைந்துள்ளது.

“பெண்ணியச் சிந்தனைகள், அவர்களின் முன்னேற்றம் குறித்த கருத்துகள் அவரது சிறுகதைகளில் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிகிறது”11 என்ற டாக்டா் மா. தியாகராஜனின் கருத்து இங்குப் பொருத்தமாகிறது.

உழுதபவனுக்கு நிலம் சொந்தம்:

“அண்ணா தமிழ்ச்சிறுகதைகளை உன்னத நிலையில் வைக்க வேண்டும் என்பதற்காக எழுதியவா் அல்லா். அவருடைய நோக்கம் கருத்துப் பிரசாரம் என்பது தெளிவு”12 என்கிறார் பேரா. பெருமாள் முருகன்.

நம்நாட்டில் உழைப்பவன் ஒருவன்; உழைப்பின் பலனைப் பெறுபவன் ஒருவன் என்ற வினோதமான நியாயம் நிலவுகிறது.

“உழுதவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும்!” என்ற பொதுவுடைமைச் சித்தாந்தத்தை ’செவ்வாழை’ சிறுகதையில் அண்ணா படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

பண்ணையாரிடம் வேலை செய்யும் செங்கோடன் தன் நிலத்தில் செவ்வாழைக்கன்றை நட்டு வளா்க்கிறான். வாழை வளரும் காய் காய்க்கும் பழமாகும் உண்டால் மிக இனிக்கும் எனக் கரியன் உள்ளிட்ட தன் பிள்ளைகளுக்குச் சொல்லிச் சொல்லி ஆசை வளா்க்கிறான். குழந்தைகளும் ஏக்கத்தோடு வாழை கனிகொடுக்கும் காலத்தை எதிர்நோக்கியிருக்கின்றனா்.

 “பாடுபட்டோம் பலனைப் பெறப் போகிறோம். இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை. செவ்வாழைக்காக நாம் செலவிட்ட உழைப்பு, பண்ணையாரின் நிலத்துக்காகச் செலவிட்ட உழைப்பிலே நூற்றுக்கு ஒரு பாகம் கூட இராது. ஆனால் உழைப்பு நம்முடையதாகவும் வயல் அவருடையதாகவும் இருந்ததால் பலனை அவா் அனுபவிக்கிறார்.” 13 என்ற எண்ணவோட்டம் அவன் மனதிலே ஓடுகிறது.

காலத்தைப் போலவே செவ்வாழையும் கனிந்தது. அதைச் சுவைக்கக் காத்திருந்த வேளையில் பண்ணையாரின் மருமகள் பிறந்தநாள் விழா பூசைக்குச் செவ்வாழை தேவைப்படுகிறது.

பண்ணையாரின் தேவைக்காக இத்தனை நாளாய் தன் சொத்து என வளா்த்த செவ்வாழைக் குலையைத் தன் பிள்ளைகளின் ஆசைகளைப் பாழாக்கிக் கனத்த மனத்துடன் செங்கோடன் வெட்டித் தருகிறான். பிள்ளைகள் ஏமாற்றமடைகின்றனா். பூசைக்குப் போக மீதமான பழங்கள் கடைத் தெருவில் விற்பனைக்கு வருகின்றன. கரியன் அதை வாங்கியாவது தின்ன ஆசைப்படுகிறான். அவன் கையில் இருப்பதோ காலணா ஆனால் பழத்தின் விலை ஓர் அணா. கையில் இருந்த காசுக்கு வறுத்த கடலையை வாங்கிக் கொறித்துக்கொண்டே செல்கிறான்.

“உழைப்பவனுக்கே நிலம் சொந்தம். பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும் காலம் எப்போதாவது வருமா?”14 என்று அவன் சிந்திக்கிறான். வாழைமரம் மட்டும் பார்வதிப் பாட்டியின் பாடையில் கட்டப்படுகிறது எனச் சாரமற்றுப் போன உழைப்பாளியின் வாழ்வை சித்திரிக்கிறார் அண்ணா.

உழைப்பவன் ஒருவன் உழைப்பின் பலனைப் பெறுபவன் இன்னொருவன் என்ற இழிநிலை மாறவேண்டும். உழைப்பவனுக்கே உழைப்பின் பலனும் நிலமும் சொந்தமாகவேண்டும் என்ற பொதுவுடைமைக் கொள்கையை அண்ணா இக்கதையில் அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

பொதுவுடைமைச் சுதந்திரம் வேண்டும்:

முதலாளித்துவ நாடுகளின் வியாபாரத் தந்திரங்கள் எவ்வாறு சாமானிய மனிதனைப் பாதிக்கின்றன என்பதைப் “பொங்கல் பரிசு” சிறுகதையில் வெளிப்படுத்தியுள்ள அண்ணா, உலக முதலாளியின் கையிலுள்ள நூலின் அசைவினால் அடிமை நாடுகள் ஆட்டம் காணுவதை இக்கதையில் படம் பிடித்துக்காட்டியுள்ளார்.

கதைநாயகன் தன் முதலாளிக்குப் பொங்கல் பரிசுவேண்டி எழுதும் நீண்ட கடிதம், அவன் கண்டனக் கடிதம் பெற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்படிச் செய்துவிடுகிறது. பன்னாட்டு முதலாளியின் நிறுவனத்தில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்க வேண்டி ஒப்பந்தங்களும் திட்டங்களும் சலுகைகளும் அளிக்கின்றன.

“ஒவ்வொரு துறையிலும் அமெரிக்கா நுழைந்து இலாப வேட்டை ஆடப் புதுப்புது (தொழில்) கம்பெனி நடத்துகிறது. அமெரிக்காவுக்கு இந்தியாவின் கலை – கலாசாரம் கல்வி குழந்தைகள் நிலைமை ஆகியவை பற்றிய அக்கறை துளியும் இல்லை. தங்கள் நாட்டுச் சரக்கை இந்தியாவில் விற்கும் நோக்கம்தான் அதிகமாகிவிட்டிருந்தது.”15 என்று தமது கதையில் எடுத்துக்காட்டுகிறார்.

பன்னாட்டு நிறுவன அசைவுக்குக் கல்வி அமைச்சரும், கல்வி அதிகாரியும், பள்ளி நிர்வாகமும் சேர்ந்து சாதாரணத் தொழிலாளிக்கு கொடுக்கும் அழுத்தம் மேற்கூறிய நிலைமைக்கு ஆளாக்குகிறது என முதலாளித்துவ நாடுகளின் வியாபாரத் தந்திரங்களை இச்சிறுகதையில் விளக்கியுள்ளார் அண்ணா.

’காலிழந்தவன்’ சிறுகதையில் ஊனம் உடலில் இருந்தாலும் அது உள்ள உறுதியைக் குலைக்கவிடக்கூடாது. மனத்தின் உறுதியே மகத்தானது என்பதை அண்ணா உணர்த்துகிறார்.

முடிபுகள்:

1.தனது கதை விவரிப்புத் திறனால் சமுதாயத்திலுள்ள கவனிக்கப்படாத பொருண்மைகளையும் சிறக்கச் செய்துள்ளார் அண்ணா.

2.அவா் பின்பற்றிய கொள்கைகளுக்குக் கதை வடிவம் கொடுத்துச் சிறக்கச் செய்துள்ளார்.

3.சமுதாயம், அரசியல், இதழியல், எழுத்துத் துறைகளில் தான் பெற்ற அனுபவங்களை அவர் அழகாகக் கதையாக்கும் திறன் வியக்கத்தக்கதாக உள்ளது.

4.ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் இதழ்கள் வியாபார நோக்கமின்றி உண்மையாகவும் நடுநிலையாகச் செய்திகளை வழங்கிச் சமுதாய வளா்ச்சிக்கு உதவ வேண்டும் என வலியுறுத்துகிறார்.

5.உழைப்பாளியின் வியா்வைக்கு ஏற்ற ஊதியம் கிடைத்திட வேண்டும். உற்பத்தியாளனுக்கும் நுகா்வோருக்குமான இடைவெளி குறைந்து இடைத்தரகரின்றி உற்பத்தியாளனின் பொருள் நுகர்வோருக்கு நேரடியாகக் கிடைத்திட வேண்டும். உழைக்காமல் இடைத்தரகராய்க் கொழிக்கின்ற உன்மத்தம் நீங்க வேண்டும்.

6.திரைத்துறையில் இருக்கின்ற சுயநலத்துக்காகப் பிறன்நலத்தைக் கெடுக்கின்ற நிலைமாறவேண்டும்.

7.போலி மதவாதிகளின் சுயநலத்திற்காக அவா்களின் பொய் புரட்டுகளை நம்பி ஏமாறக்கூடாது. போலிச் சடங்குகள் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு மக்கள் பலியாகக் கூடாது. மதங்களின் பெயரால் நடக்கும் பொய் புரட்டுக்களைத் தெளிந்து விழிப்புணர்வு பெறவேண்டும்.விதவைகள் மறுமணம் செய்துகொண்டு வாழ வழிவகை செய்யப்பட வேண்டும்.

8. உழைப்பவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும். உழைப்பாளியின் உழைப்பைச் சுரண்டும் தீயபோக்கு மாறி உழைப்பவனே உயர்ந்தவன் என்ற நிலை உருவாக வேண்டும்.

9. உலக நாடுகளிடையே ஆண்டான் அடிமைப்போக்கும் பிற நாடுகளை ஆட்டுவிக்கும் போக்கும் நீங்கவேண்டும். உடற்குறை இருந்தாலும் உள்ளக்குறையின்றி தன்னம்பிக்கையோடு வாழ்ந்து சாதனைகள் புரிய வேண்டும் என்பன உள்ளிட்ட சிந்தனைகளைத் தமது சிறுகதைகளில் பேரறிஞர் அண்ணா வெளிப்படுத்தியுள்ளார் என்பது ஆய்ந்தறியப்பட்டது.

முதன்மை ஆதாரம்:

“அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்”
பாரத் பதிப்பகம்
மாங்காடு சென்னை- 122.
முதற்பதிப்பு-2013.

அடிக்குறிப்புகள்:

 1. பேரா. பெருமாள் முருகன் – அண்ணா சிறுகதைகள் பலமும் பலவீனமும் (கட்டுரை) – நடப்பு.காம் (இணைய பக்கம்)- சனவரி-08 -2015-01:46:37am.
 2. முனைவா் மா. தியாகராஜன்- பேரறிஞர் அண்ணா – சிறுகதைகளில் பெண்ணியம் – சிங்கப்பூர் – 558286 தமிழ்த்தோட்டம் இணையப் பக்கம். சனவரி TUESDAY 22,2013 10:41 am
 3. திருக்குறள் இல்லறவியல்(நடுவுநிலைமை) குறள் எண் 118 ப.25 – கழக வெளியீடு. திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை 1-1959.
 4. சி.என் அண்ணாதுரை-”அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்” கொக்கரக்கோ சிறுகதை ப.8 – பாரத் பதிப்பகம் மாங்காடு சென்னை- 122. முதற்பதிப்பு-2013.
 5. மேற்குறித்த நூல் – சரோஜா ஆறணா சிறுகதை ப.16
 6. பேரா. பெருமாள் முருகன் – அண்ணா சிறுகதைகள் பலமும் பலவீனமும் (கட்டுரை) – நடப்பு.காம் (இணைய பக்கம்)- சனவரி-08 -2015-01:46:37am.
 7. சி.என். அண்ணாதுரை- ”அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்” பேய் ஓடிப்போச்சு சிறுகதை ப.21 – பாரத் பதிப்பகம் மாங்காடு சென்னை- 122. முதற்பதிப்பு-2013.
 8. பேரா. பெருமாள் முருகன் – அண்ணா சிறுகதைகள் பலமும் பலவீனமும் (கட்டுரை) – நடப்பு.காம் (இணைய பக்கம்)- சனவரி-08 -2015-01:46:37am.
 9. சி.என் அண்ணாதுரை – ”அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்”- 1938-1940 ஒரு வசீகர வரலாறு சிறுகதை ப.46 – பாரத் பதிப்பகம் மாங்காடு சென்னை- 122. முதற்பதிப்பு-2013.
 10. மேற்குறித்த நூல்- மேற்குறித்த சிறுகதை ப.52
 11. முனைவா் மா. தியாகராஜன்- பேரறிஞர் அண்ணா-சிறுகதைகளில் பெண்ணியம்-சிங்கப்பூர் – 558286 தமிழ்த்தோட்டம் இணையப் பக்கம். சனவரி TUESDAY 22,2013 10:41 am
 12. பேரா. பெருமாள் முருகன் – அண்ணா சிறுகதைகள் பலமும் பலவீனமும் (கட்டுரை) – நடப்பு.காம் (இணைய பக்கம்)- சனவரி-08 -2015-01:46:37am.
 13. சி.என் அண்ணாதுரை – ”அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்”- செவ்வாழை சிறுகதை பக் 68-69 – பாரத் பதிப்பகம் மாங்காடு சென்னை- 122. முதற்பதிப்பு-2013.
 14. மேற்குறித்த நூல்- மேற்குறித்த சிறுகதை ப.69.
 15. மேற்குறித்த நூல்- பொங்கல் பரிசு சிறுகதை ப.78.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு

 1. கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி
  முனைவர் அரங்க.மணிமாறன்

 2. பேய் ஓடிப்போச்சு கதை பற்றி எழுதியிருப்பதை ஒருமுறை சரிபார்க்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.