சேசாத்திரி ஸ்ரீதரன்

பதினெண் விஷயத்தார் எனப்படுகின்ற விஸ்வகர்மா சாதியான தச்சர் ஆற்றிய கோவில் பணிகள் பற்றி சில கல்வெட்டுக் குறிப்புகள் உள. இவர்கள் கோவில் அருகிலேயே நான்மாடத் தெருவிலேயே வாழ்ந்ததற்கான சான்றுகளை இக்கல்வெட்டுகள் நம் கண்முன்னே வைக்கின்றன. அவை குறித்த ஒரு பார்வை கீழே.

நாகபட்டினம் மாவட்டம், செம்பியன் மாதேவி ஊரில், கைலாசநாதர் கோவிலின் சண்டிகேசுவரர் சன்னதிக்கு வடக்கு சுவர், 47 வரிக் கல்வெட்டு  சாய்வுக் கோடுகளாக.

ஸ்வஸ்தி ஸ்ரீ கோற்சடையபந் / மர்திரிபுவனச் சக்கரவத்திகள் / வீரபாண்டிய தேவர்க்கு 9 ஒ / ன்பதாவது செம்பியன் மா / தேவிச் சருப்பேதி மங்கலத்து / உடையார் கைலாசமு / டையார் கோயில் தான / த்தார் _ _ _ _ / த் தச்சர் சாமுதாயம் பண்ணி / உத்தம வேதப் பெருமா / ஆசாரியனுக்கு இன்னாய / னார் திருமடைவிளாகத்து / தெற்கில் திருவீதியில் உவ / ச்சன் திருவகம்பாம _ _ ராய / ன் மனைக்கு கிழக்கு மனை ஒன் / று விட்டு இதன் கிழக்கு மனை ஒ / ன்றுக்கு

ற் கெல்லை மொண்ணை / நாயகப்பிச்சன் மனைக்கு / மேற்கு நடுவுப்பட்ட மனை ஒ / ன்றுக்கு மனை நீளம் கோல் / மூன்று.  இக்கோல் மூன்றுக்கு / ம் இத்தால் உள்ள புழைக்க / டை உண்ணீள மறுதியாக / _ _ _ _ கொண்டு இருக்கும் / _ _ _ _ பாகா / யமும் மற்றும் / எற்பேர்பட்ட / னவும் இவனுக்கு சந்திராதி / த்தவரையும் [விற்]றொற்றித்  / திரவியங்களுக்கு மு(ரி)த்தாவு / தாகவும் இப்படி சம்மதித்து / புரட்டாசி மாத  முதல் திய / தி இ(ன்)று னூறென்ற பெ / ருமாள் [திருக்கா]_ _ _ _

இருந்து குடுத்தோம் / உத்தம வேதப் பெருமா / ள் ஆசாரியனுக்கு தான / த் தாரோம். இப்படிக்கு / திருச்சிற்றம்பல பட்டன் எ / ழுத்து. இவை  வீதிவிடங் / கப்பட்டர் எழுத்து. இக்கோ / யில் ஸ்ரீ மா(ய்)யேசுரக் / கண்காணி / காலகால தே / வர் எழுத்து. இக்கோயி(ல்) க் / கணக்கு பொய்கைக்குடை  / யான் கணக்கு பொன்னன் / _ _ _ லக் க[ண]க்கு எழுத்து.

தானத்தார் – ஸ்தானத்தார் ஆகிய கோயில் பொறுப்பாளர்கள்; சாமுதாயம் – சாதியர்; பண்ணி – ஏற்பாடு செய்து, arrange; உவச்சன் – இசைக் கருவிக் கலைஞன்; புழைக்கடை – கொல்லைப்புறம்; அறுதியாக – முடிய; மகேசுவரக் கண்காணி – சிவனடியார் கண்காணி.

விளக்கம்: சடையவர்மன் திரிபுவன வீரபாண்டியனின் 9- ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1345) நாகை மாவட்டம் செம்பியன் மாதேவி என்னும் ஊரில் அமைந்த கைலாசநாதர் கோவிலுக்கு தச்சர் சாதிமார் உத்தமவேதப் பெருமாள் என்னும் தச்சனை கோவில் தச்சு வேலைக்கு ஏற்பாடு பண்ணிக் (arrange) கொடுத்தனர். இக்கோவில் பொறுப்பு அதிகாரிகள் உத்தம வேதப் பெருமாள் ஆசாரிக்கு இக்கோவிலைச் சூழ்ந்த திருவீதியில் இசைக் கலைஞன் திருவகம்பாம__ராயன் வீட்டிற்கு கிழக்கே அமைந்த வீட்டிற்கு ஒரு வீடு தள்ளி கிழக்கே உள்ள ஒரு வீட்டைத் தந்தனர். இந்த வீட்டின் எல்லையை கூறி விட்டு, இதன் நீளம் மூன்று கோல் அளவினது, இதன் கொல்லைப்புற உள் நீளம் முடியும் வரையான இடம் இவனுடையது. இதை இவன் விற்றுக்கொள்ளவோ ஒத்திக்கு (lease) விடவோ செய்யலாம். இதற்கு ஒப்புக் கொண்டு புரட்டாசி மாதம் முதல் நாளான இன்று உத்தம வேதப் பெருமாள் ஆசாரிக்கு கொடுத்தோம் என்று கோவில் பொறுப்பாளர் கையொப்பமிடுகின்றனர்.  இக்கல்வெட்டு மூலம் கோவிலில் பணி செய்பவருக்கு கோவில் சார்பில் வீடு வழங்கப்பட்டது என்பது தெரிகின்றது. இசைக் கலைஞர் போன்றோர் கோவிலைச் சூழ்ந்த தெருவில் வாழ்ந்த நிலைமையை நோக்கும்  போது மேல் சாதிக்காரான பிராமணர், வெள்ளாளர் மட்டுமே கோவில் ஊரில் வாழ்ந்தனர் மற்ற கைவினை சாதியார் பிடாகையான உள்கிராமங்களில் ஒதுக்கப்பட்டு ஏற்றத் தாழ்விற்கு உள்ளாயினர் என்ற சாந்தினி பீ, J.S. கிரேவால் போன்ற சிலரது கூற்றைத் தவறு எனக் காட்டுகின்றது.

பார்வை நூல்: நாகபட்டின மாவட்டக் கல்வெட்டுகள், பக்கம் 85 – 86, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுதமங்கலம் சோமனாத சுவாமி கோவிலின் முதல் பிரகாரம் கிழக்குச் சுவரில் உள்ள 5 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜாதிராஜ தேவர்க்கு யாண்டு 3 நாள் 192 னால் 
  2. _ _ _ விலை கொண்டு புகுந்த கல்தச்சரில் முளைத்தான் ஆன சண்டேசுரப்
  3. [பெருந்தச்சனும் இ]வன் அகமுடையாள் சொன்னவாரறிவாளும் இவள் மகன் நல்லானான 
  4. _ _ _ ருந்தச்சனும் இவன் தம்பி உலகனும் இவன் தம்பி யம்பலவனும் இவன் தம்பி
  5. _ _ _ _ ன நங்கைப் பனை ஆண்டாளும் மடவடிமை.

மட அடிமை – மடைபள்ளி அடிமை; புகுந்த – கோவிலை அடைந்த

விளக்கம்: திரிபுவனச் சக்கரவத்திகள் என்ற பட்டம் முதன்முதலாக முதற் குலோத்துங்கனுக்கு ஏற்பட்டதைக் கருதி இது சோழ வேந்தன் மூன்றாம் இராஜராஜனின் 3-ம் ஆண்டு ஆட்சியின் போது (கி.பி. 1219) அச்சுதமங்கலம் சோமனாதர் கோவிலார் 192 காசு கொடுத்து முளைத்தான் என்ற சண்டேசுர பெருந்தச்சனையும் இவன் மனைவி சொன்னவாரறிவாளையும் மகன் நல்லான் பெருந்தச்சன், இன்னொரு மகன் உலகன், இன்னொரு மகன் அம்பலவன், பெயர் சிதைந்துள்ள இன்னொரு மகன், தங்கை பனை ஆண்டாள் ஆகிய 5 ஆடவரும் 2 பெண்டிரும் மடைப்பள்ளி வேலைக்கு  அடிமைகளாக வாங்கப்பட்டு கோவில் புகுந்தனர் என்கின்றது இக்கல்வெட்டு.

கோவில் அடிமைகளாக வாங்கப்பட்ட அடிமைச் செய்திகளை தாங்கிய கல்வெட்டுகள் இது போல சில உள. அவற்றொடு இக்கல்வெட்டை ஒப்பிட்டு ஆய்ந்தால் இத்தச்சன் குடும்ப வறுமை நிலை அல்லது கடன் தொல்லை காரணமாக குடும்பத்தோடு விற்றுக்கொண்டான் என ஊகிக்க முடிகின்றது. மக்கள் ஏன் இப்படி கோவிலுக்குத் தம்மை விற்றுக் கொண்டனர் என்றால் இதனால் கோவிலுக்கு அடிமையாக விற்கப்பட்டவர் கோவில் பணியாளாகிப் போகிறார். அதன்படி அவர்களுக்கு கோவிலில் வழங்கப்படும் இரு பொழுதுச் சோறு கிடைப்பதுடன் தங்கும் வசதி ஆகியனவும் கிட்டுகின்றது. அதோடு பிரிந்து போய்விடாமல் குடும்பத்தாரொடு ஒன்றாக வாழ முடிகின்றது. இந்த அடிமைத்தனம் எவ்வளவு காலத்திற்கு? அதில் இருந்துவிடுபட முடிந்ததா? என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் இதுவரை அறியப்பட வில்லை.  இந்த அடிமைத்தனம் ஒருவகையில் அவர்களுக்கு கிடைக்கும் உடனடி விடுபாடு (relief) என்பதை நம்மால் உணர முடிகின்றது.

மேலும் சில அடிமைக் கல்வெட்டுகளை அறிய சொடுக்குங்கள்

https://groups.google.com/d/msg/vallamai/TPdzGwj03sw/pgM-gAzyAgAJ

https://groups.google.com/d/msg/vallamai/1Fn_eB9DWKk/MlaXDkXDAgAJ

பார்வை நூல்: நன்னிலம் கல்வெட்டுக்கள், தொகுதி 2, எண் 270/1978, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், ஆலந்தூர் சிவன் கோவில் மேற்கு குமுதத்தில் பொறிக்கப்பட்ட 3 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு முப்பத்தாறாவது  இரும்பேடு கீழ் _ _ _ நாற்ப்பேரெல்லையுள் நாலு _ _ _
  2. ஒரு கூறாய் ஆடியனமார் _ _ _ கொட கூறாய் தச்சர்க்குப்  புதுக்குப்புறம்  ஸ்ரீ வேலி விஷ்ணுக்ரஹப் பெருந்தச்சினு தேவனும் பலதேவனும் ஒரு கூறாய் பெருந்தச்சனுக்கு நன்செய் காற் கூறு
  3. ம் மூர் தேவனுக்கு ஒரு கூறும் பலதேவனுக்கு ஒரு கூறும் ஆக நாற்பெரெல்லையிலுமுள்பட விளை நிலத்துள் நாலிலொன்றும்  இத்தச்சனு _ _ _

ஸ்ரீவேலி – கோவில் நிலம், புதுக்குப்புறம் – கட்டடத்தை சீர்செய்து புதுப்பித்ததற்கான நிலம்.

விளக்கம்சோழன் முதற் பராந்தகனின் 36 –ம் ஆட்சி ஆண்டில் (பொ.ஆ. 942) வந்தவாசி ஆலந்தூர் சிவன் கோவிலில் கட்டடம் கட்டியதற்காக இரும்பேடு கிராமத்தின் கிழக்கில் நாற்பேரெல்லையுள் பட்ட நிலத்துள் நாலில் ஒரு கூறை (1/4) ஆடியனமார் கொடையாகவும், கட்டடம் புதுப்பித்ததற்காக பெருந்தச்ச தேவனுக்கும் பலதேவனுக்கும் ஒரு பங்கும், நன்செய் நிலத்தில் பெருந்தச்சனுக்கு 1/4 பங்கும் மூர் தேவனுக்கு ஒரு பங்கும் பலதேவனுக்கு ஒரு பங்கும். இப்படி நாற்பேரெல்லை உடைய விளை நிலத்தில் 4 ல் ஒர் பங்கு இந்த தச்சனுக்கு கொடுக்கப்பட்டதாகத் தெரிகின்றது. கல்வெட்டு ஆங்காங்கே சிதைந்துள்ளது எனவே தெளிவான பொருளை கொள்ள முடியவில்லை. இதன் மூலம் தச்சர் விளை நிலங்களையும் கோவில் பணிக்காகப் பெற்றனர் எனத் தெரிகின்றது.

பார்வை நூல்: தமிழ்நாடு கல்வெட்டுகள் தொகுதி XIII, திருவண்ணாமலை மாவட்ட கல்வெட்டுகள் 2, பக். 124. தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

தச்சர் பற்றி மேலும் சில கல்வெட்டுகளை காண சொடுக்குங்கள்

https://groups.google.com/d/msg/vallamai/arn7n2ljNjc/urDDtXKiCgAJ

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தச்சர் பற்றிய கல்வெட்டு

  1. மேலும் செய்திகளை அறிய சொடுக்குவீர் https://groups.google.com/forum/#!topic/vallamai/pqkmGSzlz14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *