பாரதத்துக்குப் பெருமை சேர்த்த வீரத் துறவி!

-மேகலா இராமமூர்த்தி
கொல்கத்தாவிலுள்ள சிம்லா நகரைச் சேர்ந்த புகழ்பெற்ற வழக்கறிஞரான விஸ்வநாத தத்தர், புவனேஸ்வரி தேவி இணையருக்குத் தவப்புதல்வராய், 1863ஆம் ஆண்டு, ஜனவரி 12இல் பிறந்தவர் நரேந்திரநாத் தத்தா எனும் இயற்பெயர் கொண்ட சுவாமி விவேகானந்தர். இளமையில் நரேன் என்ற பெயரில் அவர் அனைவராலும் அழைக்கப்பட்டார்.
குழந்தைப்பருவத்திலேயே மிகச் சிறந்த நினைவாற்றல் கொண்டவராக விளங்கினார் நரேன். சிறுவயதிலிருந்தே அவருக்கு தியானத்தின்மீது மிகுந்த நாட்டம் இருந்தது. பகுத்தறிவுடனேயே எதனையும் அணுகும் போக்கு இயல்பாகவே அவரிடம் அமைந்திருந்தது.
நரேன் சிறுவனாக இருந்தபோது நடந்த நிகழ்விது…
நரேனின் தந்தை புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த காரணத்தால் அவர்கள் வீட்டுக்குப் பலரும் வருவார்கள்; போவார்கள். அவர்களிடமெல்லாம் சிறுவன் நரேன், எவ்வித வேறுபாடுமின்றிக் கலந்து பழகுவார். வங்காள வழக்கப்படி அவர்கள் புகைக்க புகையிலை அல்லது ஹூக்கா (Hookah) தயாரித்துக் கொடுப்பார். அங்குவரும் பல்வேறு சாதியினரும் புகைப்பிடிக்கத் தனித்தனிக் குழாய்கள் இருந்தன. சாதி என்பது நரேனுக்கு அப்போது புரியாத புதிராகவே இருந்தது.
“ஏன் ஒவ்வொரு சாதியினருக்கும் புகைப்பதற்குத் தனித்தனிக் குழாய்கள்? ஒருவர் புகைத்ததில் இன்னொருவர் புகைத்தால் குழாய் வெடித்துவிடுமா?” என்றெல்லாம் எண்ணமிட்டபடி இருப்பார். இதைச் சோதித்து அறிய, எல்லாக் குழாய்களின் மூலமாகவும் ஒருமுறை புகையிழுத்துப் பார்த்தார். ஒன்றும் ஆகவில்லை! அப்போது அங்குவந்த அவருடைய தந்தையார் ”என்னப்பா செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்க, ”ஒன்றுமில்லை…சாதிப் பிரிவினைகளை உடைத்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன்!” என்றாராம் சிறுவன் நரேன். அவருடைய தந்தை சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாராம்.
பள்ளிப்படிப்பை முடித்த நரேன், கொல்கத்தாவிலிருந்த மாநிலக் கல்லூரியில் ஓராண்டு காலம் படித்தார். அடுத்த ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) சேர்ந்தார். அந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள் நரேனின் அறிவுக்கூர்மையைக் கண்டு வியந்தனர். கல்லூரி முதல்வரான ஹேஸ்டி (William Hastie) நரேனைப் போன்றதொரு மாணவனை நான் பார்த்ததே இல்லை என்று பாராட்டினார்.
உயர்ந்த கருத்துக்கள் குறித்துத் தம் நண்பர்களிடமும் தம்மைவிட வயதில் பெரியவர்களிடமும் விவாதம் செய்வது நரேனின் வழக்கம். தர்க்கரீதியான வாதங்களை முன்வைப்பதிலும் நரேனுக்கு இணை அவரே. இந்தக் காலக்கட்டத்தில் சமயம் தொடர்பான விஷயங்களில் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. எனவே பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தார். ”இறைவன் என்றொருவன் இருக்கின்றானா? இல்லையா? இருக்கின்றான் என்றால் யாரேனும் அவனைப் பார்த்திருக்கிறார்களா?’ என்பன போன்ற வினாக்கள் அவர் மனத்தில் எழத்தொடங்கின. அவை குறித்தே அல்லும் பகலும் சிந்திக்கலானார். தம் வினாக்களுக்கு விடைதேடி, அறிஞர்கள் பலரை அணுகியும் நிறைவான விடை அவருக்குக் கிடைக்கவில்லை.
அப்போது தம்முடைய ஆசிரியர் ஹேஸ்டியின் மூலம் கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள தக்ஷிணேஸ்வரத்தில் அமைந்துள்ள காளிகோயிலின் பூசாரியான இராமகிருஷ்ணரைப் பற்றிக் கேள்விப்பட்ட நரேன், அவரைத் தம் நண்பர்களுடன் சென்று சந்தித்தார். நரேனைத் தனியறைக்கு அழைத்துச்சென்ற இராமகிருஷ்ணர் நீண்ட பிரிவுக்குப் பின் நெருங்கிய நண்பரைச் சந்திப்பதுபோல் நரேனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். தம் கையாலேயே நரேனுக்கு இனிப்புகள் ஊட்டிவிட்டார். இராமகிருஷ்ணர் நரேனைத் தொட்டதும் முற்றிலும் புதியதோர் அனுபவத்தை அடைந்தார் நரேன்.
இராமகிருஷ்ணர் நரேன்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தம்மை நாடிவரும் பிற பக்தர்களிடம் நரேனைப் பற்றிப் பேசும்போது, ”பக்தர்கள் எல்லாரும் நட்சத்திரத்தைப் போன்றவர்கள்; ஆனால் நரேன் சூரியனைப் போன்றவன். அவன் ஒரு முக்தியடைந்த ஆன்மா; பிறருக்கு உதவுவதற்காகவே பிறவியெடுத்தவன்” என்று பெருமிதத்தோடு குறிப்பிடுவார்.
1884ஆம் ஆண்டு தொடக்கத்தில் நரேனின் தந்தையான விஸ்வநாத தத்தர் மறைந்தார். நரேனின் வாழ்வில் அஃது ஒரு சோதனையான காலக்கட்டமாக அமைந்தது. அப்போது, இராமகிருஷ்ணரும் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஆகவே தம் எதிர்காலப் பணிகளை மேற்கொள்ள அவர் நரேனைத் தயார்செய்ய ஆரம்பித்தார். 1886ஆம் ஆண்டு ஆகஸ்டு 16ஆம் நாள் இராமகிருஷ்ணர் மறைந்தார். துக்கத்தில் ஆழ்ந்த நரேன் உள்ளிட்ட இராமகிருஷ்ணரின் சீடர்கள் சில காலம் கழித்துச் காசிப்பூர் எனும் ஊரில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து மடம் அமைத்தனர். அதுதான் இராமகிருஷ்ண இயக்கத்தின் முதல் மடமாகும்.
அந்த இளஞ்சீடர்கள் முறையாகத் துறவறம் மேற்கொண்டு புதிய பெயர்களை ஏற்றனர். ஆனால் நரேன் தனக்கென்று பெயர் எதனையும் அப்போது வைத்துக்கொள்ளவில்லை. ஒரே இடத்தில் தங்கியிருக்க விரும்பாமல் காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் அவர் பயணம் மேற்கொண்டார்.
ஒரு சமயம் மவுண்ட் அபுவில் (Mount Abu) கேத்திரி (Khetri) சமஸ்தான மன்னர் அஜித் சிங்கைச் சந்தித்தார் நரேன். மன்னரின் விருப்பத்திற்கிணங்க கேத்திரிக்குச் சென்றார். நரேனிடம் ஈடுபாடுகொண்ட மன்னர் அஜித் சிங், நரேனின் சீடரானார். பின்பு அங்கிருந்து புறப்பட்ட நரேன் மைசூர் வந்தார்; அங்கிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர ரகுநாத சேதுபதியைச் சந்தித்தார். நரேனின் அறிவாற்றலைக் கண்டு வியந்த பாஸ்கர சேதுபதியும் நரேனின் சீடரானார்.
அப்போது அமெரிக்காவில் நடைபெறவிருந்த அனைத்துச் சமய மாநாட்டை (Parliament of the World’s Religions) பற்றிய தகவலறிந்தார் நரேன். அதில் தாம் கலந்துகொள்ள வேண்டும் என்பது தம்முள் நிறைந்திருக்கும் குருதேவர் இராமகிருஷ்ணரின் விருப்பம் என்பதை உணர்ந்த அவர், அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். இராமநாதபுரத்திலிருந்து குமரிக்கும் அங்கிருந்து சென்னைக்கும் பயணம் மேற்கொண்டார். அங்கே துடிப்புமிக்க இளைஞர்கள் பலர் அவரைப் பின்பற்றத் தயாராக இருந்தனர். அவர்கள் மத்தியில் சொற்பொழிவுகள் ஆற்றினார். அவர் அமெரிக்கா செல்வதற்கு அவ்விளைஞர்கள் நிதி திரட்டத் தொடங்கினர்.
அதே சமயம் கேத்ரி மன்னர் அஜித் சிங்கின் அழைப்பு வந்தது நரேனுக்கு. அமெரிக்கப் பயணத்திற்கான பயணச்சீட்டு வாங்குவது முதற்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்தார் மன்னர். ‘விவேகானந்தர்’ என்ற பெயரை நரேனுக்குப் பரிந்துரைத்தவரும் அவரே. அதுமுதல் நரேன் விவேகானந்தர் ஆனார். பின்னர் அந்தப் பெயரிலேயே தம் வாழ்நாள் முழுவதும் அவர் அழைக்கப்பட்டார்.
1893ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி சிகாகோ மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பம்பாயிலிருந்து கப்பலில் பயணமானார் விவேகானந்தர். கப்பல் கனடாவின் வான்கூவர் (Vancouver) நகரை அடைந்தது; அங்கிருந்து தொடர்வண்டி மூலம் சிகாகோவை அடைந்தார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் திங்கட்கிழமை அனைத்துச் சமயங்களின் மாநாடு சிகாகோவில் தொடங்கியது. ஹால் ஆப் கொலம்பஸ் (Hall of Columbus) எனும் பெரிய கட்டடத்தில் அது நடாத்தப்பட்டது.
அஃது ஒரு மாபெரும் நிகழ்ச்சியாதலால் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்தது. விவேகானந்தரின் நெஞ்சு இனந்தெரியாத உணர்ச்சியால் அப்போது படபடத்தது. எனவே மாநாட்டுத் தலைவர் அவரைப் பேசப் பலமுறை அழைத்தும் தயக்கத்துடன் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் விவேகானந்தரைக் கேட்காமலேயே அவர் பெயரை மேடையில் அறிவித்துவிட்டார் தலைவர். இனி ஒன்றும் செய்யமுடியாது; பேசித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் பேச எழுந்தார் விவேகானந்தர்.
அரங்கிலிருந்தவர்களைப் பார்த்தார். ”அமெரிக்கச் சகோதரிகளே! சகோதரர்களே…!” என்று பேச்சைத் தொடங்கினார். அவரால் அந்த வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. எப்போதும் “Ladies and Gentlemen!” என்ற விளிப்பையே கேட்டுப் புளித்துப் போயிருந்த மேற்குலக மக்களின் செவிகளுக்கு அவ்வாஞ்சையான அழைப்பு ஓர் பரவசத்தை ஏற்படுத்திவிட்டது. உணர்ச்சிவயப்பட்டவர்களாய் மக்கள் கைதட்ட ஆரம்பித்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் எழுந்துநின்று உற்சாக ஆரவாரமும் வாழ்த்தொலியும் எழுப்பியதால் அவை அடங்கப் பல நிமிடங்களாயின!
அனைவரும் அமைதியானதும் விவேகானந்தர் கம்பீரமாகத் தம் பேச்சைத் தொடங்கினார். ”எல்லா மதங்களும் உண்மையே! எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே இந்து மதத்தின் கொள்கை” என்ற கருத்தை முன்வைத்தார் அவர். மாநாட்டுக்கு வந்திருந்த மற்ற சொற்பொழிவாளர்கள் அனைவரும் தத்தமது மதத்தைப் பற்றி மட்டுமே பேசினர். ஆனால் விவேகானந்தரோ அனைத்து மதங்களில் இருக்கும் உண்மைகளையும் மதக் காழ்ப்பின்றிப் பேசினார்.
கிறித்தவப் பார்வையாளர்கள் மிகுதியும் கலந்துகொண்ட, பதினேழு நாள்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற, அந்தச் சமய மாநாட்டில் செப்டம்பர் 20 அன்று விவேகானந்தர் முன்வைத்த சில துணிச்சலான கருத்துக்களாவன:
”கிறித்தவர்களாகிய நீங்கள் நல்ல விமரிசனங்களை ஏற்றுக்கொள்ளும் இயல்புடையவர்களாகையால் என்னுடைய சிறிய விமரிசனத்தைத் தவறாகக் கருதமாட்டீர்கள் என்றெண்ணி உங்கள்முன் வைக்கின்றேன். நீங்கள் உங்கள் மதத்தைப் பரப்பும் நோக்கில் இந்தியாவுக்கு மதபோதகர்களை ஆர்வத்தோடு அனுப்புகிறீர்கள்! ஆனால் எம் மக்களோ அங்கே கொடும் பஞ்சத்திலும் கடும் பசியிலும் துடித்து ஆயிரக்கணக்கில் மடிந்துகொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் பசிபோக்கவும் பஞ்சம்நீக்கவும் நீங்கள் எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, இந்தியாவெங்கும் தேவாலயங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களுக்குத் தேவை பசிதீர்க்கும் உணவு; ஆனால் நீங்கள் தருவதோ பயனற்ற கற்களை! பசியில் துடித்துக்கொண்டிருப்பவனிடம் மதபோதனை செய்வதைவிடவும் பெரிய குற்றம் வேறெதுவுமில்லை; பஞ்சத்தில் அடிபட்டு நெஞ்சுவெந்து கொண்டிருப்பவனிடம் தத்துவத்தைப் போதிப்பதைவிடப் பேரவலம் வேறெதுவுமில்லை!
ஐயன்மீர்! எங்கள் இந்தியாவில் போதுமான மதங்கள் ஏற்கனவே இருக்கின்றன. எனவே எங்களுக்கு மதம் தேவையில்லை. ஆதலால் எங்கள் ஆன்மாவுக்கு நீங்கள் நல்வழிகாட்ட முயல்வதைவிட எங்கள் வயிற்றுப்பசிக்கு உணவிடுதலே உடனடித் தேவையும் நல்ல சேவையுமாகும். நான் இங்குவந்ததுகூட ஏழ்மையில் துயருறும் எம் மக்களுக்கு உங்களிடம் உதவி வேண்டித்தான்! ஆனால் கிறித்தவ பூமியில் வாழுகின்ற கிறித்தவர்களிடம் எம் இந்திய மக்களுக்கு உதவிபெறுவது எத்துணைக் கடினமானது என்பதையும் நான் உணர்ந்தே இருக்கின்றேன்!” என்று மொழிந்துவிட்டு இந்திய வேதாந்தக் கருத்துக்கள் குறித்துப் பேசலானார்.
பத்திரிகைகள் அவரது உரைகளை வெகுவாய்ப் புகழ்ந்து எழுதின. சிறந்த பேச்சாளர் ஒருவருக்கு இருக்கவேண்டிய வெண்கலக்குரல், மொழிவளம், சிந்தனைகளை அழகாய் வகைப்படுத்தி அடுக்கும் திறம் ஆகியவற்றோடு கம்பீரத் தோற்றமும் கொண்டிருந்த இளந்துறவி விவேகானந்தர் உலகம் விரும்பும் பேச்சாளராக மிளிர்ந்ததில் வியப்பேதுமில்லை.
மாநாடு முடிந்த பின்னர், மக்களின் அழைப்பிற்கிணங்க அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சொற்பொழிவுகள் ஆற்றினார் அவர். 1895 செப்டம்பரில் இங்கிலாந்து சென்றார். அங்கும் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவருக்கு நண்பர்களும் சீடர்களும் பெருகினார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மார்கரெட் எலிசபெத் நோபில் (Margaret Elizabeth Noble) எனும் இளம்பெண். இவர்தாம் பின்னாளில் ’சகோதரி நிவேதிதை’யாக (Sister Nivedita) புகழ்பெற்றவர். மகாகவி பாரதியின் ஞானகுருவாக விளங்கியவரும் இவரே!
இங்கிலாந்து அல்லாமல் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார் விவேகானந்தர். சில ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பின் தாயகம் திரும்பினார். 1897 ஜனவரி 15ஆம் நாள் கொழும்புத் துறைமுகத்தில் வந்திறங்கினார். அங்கே அந்த வெற்றித் திருமகனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு மக்களால் அளிக்கப்பட்டது. அங்கிருந்து பாம்பனை அடைந்தார். இராமநாதபுரம் அரசர் பாஸ்கர ரகுநாத சேதுபதி உள்ளிட்ட பலர் அங்கே விவேகானந்தரைப் பேரன்போடும் பெருமகிழ்ச்சியோடும் வரவேற்றனர். அவரை இரதத்தில் ஏற்றி, இரதத்தின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு, பாஸ்கர சேதுபதியும் பிறரும் அதனை இழுத்துச் சென்றனர். இவ்வியத்தகு செயலை அறிகின்றபோது விவேகானந்தரின் அறிவாற்றலால் நமக்குப் பெருமிதமும், இராமநாதபுரம் மன்னரின் தன்னடக்கத்தாலும் பணிவாலும் நெகிழ்ச்சியும் ஏற்படுகின்றன!
பிறகு கொல்கத்தாவுக்குச் சென்ற விவேகானந்தர், ஆலம்பஜார் (Alambazar) என்ற இடத்தில் இயங்கிக்கொண்டிருந்த இராமகிருஷ்ண மடத்தில் ஏனைய துறவிகளோடு தங்கினார். அப்போது, ஒரு துறவி என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து அவர் மற்ற துறவிகளுக்குப் போதித்தார். வழிபாடு, தியானம், இறைவனை அறியும் முயற்சி இவை மட்டுமே ஒரு துறவிக்குரிய செயல்கள் ஆகா. துறவியானவன் மக்கள் தொண்டில் தன்னைக் கரைத்துக்கொள்வது, பள்ளிகள், மருத்துவமனைகள் நடத்துவது போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியப் பெண்களுக்கு உதவ வேண்டும் என்பது விவேகானந்தரின் நெடுநாளைய இலட்சியம். இந்தியப் பெண்கள் நற்குணங்கள் நிரம்பியவர்களாக இருந்தும் கல்வியறிவு பெற்றவர்களாகவும், வெளியுலகில் செயலூக்கத்துடன் இயங்குபவர்களாகவும் இல்லையே என்று வருந்திய அவர், பெண்களுக்குக் கல்வி அளிப்பதன் மூலமே இக்குறைகளைக் களையமுடியும் என்று உறுதிபடக் கூறிவந்தார். சகோதரி நிவேதிதை பெண்களுக்கான பள்ளி ஒன்றைத் தொடங்கி விவேகானந்தரின் இந்த எண்ணத்தை ஈடேற்றினார். இன்று அந்தப் பள்ளி நல்ல வளர்ச்சிபெற்றுப் பெண்கள் முன்னேற்றத்துக்கான பல சீரிய பணிகளை ஆற்றிவருகின்றது.
1899இல் மீண்டும் ஒருமுறை மேனாட்டுப் பயணம் மேற்கொண்ட விவேகானந்தர் அங்கே பல இடங்களில் தம்முடைய வேதாந்தக் கருத்துக்களைப் பரப்பினார். ஆயிரத்துத் தொள்ளாயிரமாவது ஆண்டு (1900) டிசம்பர் 9-இல் பேலூர்(Belur) மடத்தை வந்தடைந்தார். அவருடைய உடல்நிலை அப்போதே நலிவுகாணத் தொடங்கிவிட்டது. எனினும் அதனைப் பொருட்படுத்தாது சொற்பொழிவுகளும் சீடர்களுக்கு வகுப்புகளும் தொடர்ந்து நடத்திவந்தார். மக்கள் தொண்டையும் அவர் நிறுத்தினாரில்லை.
தம்முடைய முடிவு நெருங்குவதை அகக்கண்ணில் கண்டார் விவேகானந்தர். தம் மரணத்துக்கு மூன்று நாள்களுக்குமுன் சுவாமி பிரேமானந்தருடன் பேலூர் மடத்தில் உலவிக்கொண்டிருந்த அவர், ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி, “நான் என் உடலை விட்டவுடன் அதை இந்த இடத்தில் தகனம் செய்!” என்று சொல்லியிருக்கின்றார். இன்று அதே இடத்தில்தான் சுவாமி விவேகானந்தரின் திருக்கோயில் எழுப்பப்பட்டிருக்கின்றது என்பது அறியத்தக்கது.
1902ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள், வீரமும் விவேகமும் மிக்க ஞானத் துறவியான விவேகானந்தர் இம்மண்ணுலகில் வாழ்ந்த இறுதிநாளாகும். அன்றிரவு தியான நிலையிலேயே அவர் தம் பொன்னுடலை நீத்தார். மக்களிடையே ஆன்ம விழிப்பையும் வேதாந்தத்தையும் விளங்கவைக்க வந்த அந்த அறிவுச்சுடர் முப்பத்தொன்பது ஆண்டுகளிலேயே ஒளியவிந்து அடங்கியது இந்திய மக்களின் தவக் குறைவே!
எனினும் அந்த வீரத்துறவி விட்டுச்சென்றிருக்கும் அற்புதமான அறிவுரைகள் நமக்கு, குறிப்பாக, இளைய சமுதாயத்துக்கு நல்வழிகாட்டுவனவாக அமைந்திருக்கின்றன; அவற்றில் ஓரிரண்டை அறிந்துகொள்வோம்!
1. என் அருமை மாணவர்களே! கல்லூரிப் படிப்பு முடிந்ததும் மக்கள் தொண்டில் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். விலைமதிப்பற்ற செல்வமும் புதையலும் உங்களுக்குக் கிடைத்தால்கூட இந்தத் தொண்டில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அது ஈடில்லை.
2. நமது குற்றங்களைச் சுமத்துவதற்கு வேறொருவர் இருக்கும்வரை நாம் நம்முடைய பலவீனங்களையும் தவறுகளையும் மெதுவாகத்தான் புரிந்துகொள்கிறோம். மனிதர்கள் பொதுவாகத் தங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதே தங்கள் குற்றங்களைச் சுமத்துகிறார்கள். இல்லாவிட்டால் விதி என்பார்கள். நம் விதிக்கு நாமே காரணம்! நாம் விதைத்ததைத்தான் நாம் அறுக்கிறோம். நமக்குக் கிட்டும் பழியாகட்டும் புகழாகட்டும், அதற்கு வேறுயாரும் பொறுப்பல்லர்!
அறிவும் ஆற்றலும் துடிப்பும் துணிச்சலும் கொண்ட நூறு இளைஞர்கள் தம்மோடு இருந்தால் போதும்! இவ்வுலகையே புரட்டிப்போட்டு விடலாம் என்று நம்பினார் விவேகானந்தர்.
பொருள்பொதிந்த அருள்வாழ்வை வாழ்ந்துகாட்டியதோடல்லாமல் கருத்தாழமிக்க அறிவுரைகளையும் நமக்கு வழங்கிச் சென்றிருக்கின்றார் விவேகானந்தர். அந்தப் பேரருளாளரின் நன்மொழிகளை – பொன்மொழிகளைக் கற்றுக் கடைப்பிடிப்போம்! வாழ்வில் உயர்வோம்!
*****
கட்டுரைக்குத் துணைநின்றவை:
1. சுவாமி விவேகானந்தரின் வரலாறும் அறிவுரைகளும் – ராமகிருஷ்ண மடம் & ராமகிருஷ்ண மிஷன், பேலூர் மடம்.
2. https://en.wikipedia.org/wiki/Parliament_of_the_World%27s_Religions
3. https://en.wikipedia.org/wiki/Religion_not_the_crying_need_of_India