சேக்கிழார் பா நயம் – 66 (கற்பனை)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி,
அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று,
பொற்பு உடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி! போற்றி்
திருவாரூர் இறைவனின் திருவருளால் சுந்தரேசர் பாடிய திருத்தொண்டத் தொகையின் முதலடியில் போற்றப்பெற்ற தில்லைவாழ் அந்தணர் புராணத்தின் தொடக்கத்தில் தில்லை யம்பலவாணரின் சிறப்புக்களை சேக்கிழார் பாடினார். முதற்பாடல் இறைவனின் நிட்களத் திருமேனியாகும். இனி அடுத்தபாடலில் இறைவனின் சகளத் திருமேனியின் சிறப்பையும், திருவடிப் பெருமையையும் கூறுகிறார்.
இப்பாடலின் சொற்பொருள்
கற்பனை என்பதே சற்று சொல்லைக் கடந்த நிலையாகும். அத்தகைய கற்பனைகளைப் பற்பலவாறு செய்தாலும், அவற்றுக்கு முதற்காரணமாகிய மாயையைக் கடந்த வடிவமும், ஒளியும் கலந்த உருவமுடையவரே இறைவன். அந்த ஒளியும் தானே தோன்றிய ஒளியாகும். இதனைக் ‘’கற்பனை கடந்த சோதி‘’ என்ற தொடரால் சேக்கிழார் குறிக்கிறார். தேவாரத்தில் இதனை,
‘’இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே‘’ என்று அப்பர் பெருமானும் ,
‘’துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை,
முத்தியும் ஞானமும் வானவர் அறியா
முறைமுறை பலபல நெறிகளும் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை ‘’ என்று சுந்தரரும் பாடினர். மேலும் திருமூலர் திருமந்திரத்தில் ,
‘’கதுமெனப் பாழைக் கடந்தந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே!’’ என்று பாடுகின்றார். உமாபதி சிவாச்சாரியார்,
‘’ஆரணங்கள் முடிந்த பதத்து ஆனந்த ஒளியுலகில்
காரணம் கற்பனை கடந்த கருணைத்திரு உருவாகி‘’ என்றுபாடுகிறார். உயிர்கள் பால் வைத்த கருணையால், அக்கருணையையே திருவுருவம் ஆக்கிக் கொண்டு, தோன்றுகிறார். இதனை சிவஞான சித்தியார்,
உருமேனி, அருமேனி, அருவுருவான திருமேனி ஆகிய மூன்றும், ‘’நந்தம்கருமே னி கழிக்க வந்த கருணையின் வடிவுதானே’’ என்று கூறும்.
இறைவனின் அழகிய கோலம் இன்னதென்று உணரவும் கூறவும் இயலாத இன்பம் தரும் திருவுருவம் ஆகும். இதனைத் திருவிசைப்பா ,
பத்தியாய் உணர்வோர் அருளை வாய்மடுத்துப்
பருகுதோறு அமுதம் ஒத்து அவர்க்கே
சித்தியா விருக்கும் தேவர்காள் இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர்!’’ என்று போற்றுகிறது. மேலும் திருவுந்தியார் என்ற சாத்திரம் ,
“அகளமாய் யாரும் அறிவறிது அப்பொருள்
சகளமாய் வந்ததென்று உந்தீ, பற!
தானாகத் தந்தது என்று உந்தீ, பற! இப்பாடலில் களம் உருவத்தைக் குறித்தது. அகளம் என்பது உருவமற்றதைக் குறித்தது. சகளம் என்பது தெளிவான உருவத்தைக் குறித்தது.
இறைவன் நடனமிடும் இடம் வேதத்தின் சிரமாகிய உபநிடதம் ஆகும்; அதனையே ஞானாகாசம் என்பர். சொல்லக் கடந்து நிற்கும் ‘’சிற்பரவியோமம்‘’ என்ற வாக்கு அதனை உணர்த்தும். இதுவே சிற்றம்பலம்!
மேலும் மேற்பாட்டில் நடம் போற்றி என்று திருவடியைப் போற்றியவர் இப்பாடலில் பூங்கழலைப் போற்றுகிறார். இக்கழலைச் சிவஞானபோதம், ‘’அயரா அன்பின் அரன்கழல் செலுமே’’ என்று போற்றுகிறது. ஆகவே இப்பாடல்களில் போற்றப்பெற்ற இறைவன் தில்லை மூவாயிரவருள் முதன்மை பெற்ற ஒருவர் என்னும் உண்மை கூறப் பெறுகிறது! தம்மைத் தில்லை வாழ் அந்தணருள் முதன்மையானவர் என்று கருத வைத்து, அவர்தம் அடியார்க்கும் அடியவராக சுந்தர மூர்த்தி சுவாமிகளைக் கருதச் செய்தார்.